நாச்சியம்மையைக் கண்டு, பார் என் பேத்தியை என தன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே கண்களில் மெச்சுதலோடு தன் குடும்பத்துடன் வெளியேறினார் சங்கரப்பாண்டியன்.
இது நாள்வரை பிள்ளைப்பூச்சியாக இருந்தவள் இன்று பாம்பாய் படமெடுத்து சீறுவதைக் கண்டு அதிர்ந்து போய் நின்றிருந்த நாச்சியம்மை, என்ன செய்வது? என்று முழித்துக்கொண்டே தன்னறைக்குள் சென்றார்.
மாலைப் போட்டிருந்த தன் கணவர், தங்கை மற்றும் கொழுந்தனின் புகைப்படத்துக்கு முன்னே அமர்ந்து, 'நீங்க தான் எனக்கு வழிகாட்டனும்' என இரு துளி கண்ணீரையும் சிந்தினார்.
ஹாலிலிருந்த கூட்டம் கலைந்து செல்லவும் விக்ரமனும் தன் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.
நடு இரவில் குடி போதையில் வீடு வந்து சேர்ந்தவன் கண்டது கண்களில் கண்ணீர் தடம் பதிந்து உறங்கும் அதிதியையும், அவள் பக்கத்தில் உறங்கும் தன் அம்முலுவையும் தான்.
தள்ளாடியபடியே வந்தவன் சிறிது நேரம் அவள் முகத்தையேப் பார்த்திருந்து பின் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
குளியலறையில் கேட்ட சத்தத்தில் விழித்துக்கொண்ட அதிதி எழுந்தமர்ந்தாள்.
குளித்து முடித்து வெளியே வந்தவன் படுக்கையில் அமர்ந்திருந்தவளை கண்டுகொள்ளாமல் நேரே குழந்தையின் மறுபுறம் படுக்கச் சென்றான்.
அதனை தடுக்க நினைத்தவள், "நான் அம்முலுவோட கட்டில்ல படுத்துக்கிறேன்" என அறிவிப்பாக கூறவும்,
கேள்வியாக பார்த்தவனிடம், "ப்ச் நீங்க அந்த சோபாவுல படுத்துக்கங்க" என அவன் முகம் பாராமல் கூறினாள்.
தன் சினத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், "நீ வேணும்னா உன் கற்பை காப்பாத்த சோபாவுல போய் படுத்துக்கோ. நான் எதையும் காப்பாத்துணுங்கற அவசியமில்ல" என குழந்தையின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டான்.
அவனை முறைத்துக்கொண்டே அவளும் திரும்பி படுத்துக் கொண்டாள்.
மறுநாள் காலையில் அவளிடம் எதுவும் பேசாமல் அலுவலகத்திற்கு கிளம்பி கீழே சென்றுவிட்டான் விக்ரமன்.
அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, அதிதியும் குழந்தையை தொட்டிலில் கிடத்தி தூங்கவைத்து விட்டு, தொட்டிலின் மேலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆன் செய்து, ஐபோன் அளவில் இருந்த ஸ்கிரீனை தூக்கிக்கொண்டு குழந்தையின் நிலையை அதில் பார்த்துக்கொண்டே கீழே டைனிங் டேபிளை வந்தடைந்தாள்.
நிஹாரிகா அமர்ந்திருந்த நாற்காலியின் அருகில் அமர்ந்து ஜானகியம்மாளை தனக்கு பரிமாறுமாறு உத்தரவிட்டாள்.
"கொலைகாரன் மகளுக்கெல்லாம் என் வீட்டுல சாப்பாடு கிடையாது." என்று சீறினார் நாச்சியம்மை.
"கொலைகாரன் மகளுக்கு சாப்பாடு இல்லையா? சரி அப்போ உங்க அலமுவோட அம்மாவுக்கு சாப்பாடு இருக்கா? இன்னும் கொஞ்ச நேரத்துல அவ பசில அழுவாளே? நீங்க கொடுக்குற புட்டிபாலையும் என் பொண்ணு குடிக்க மாட்டா. அவ சும்மா அழுதாலே உங்களால சமாதானப்படுத்த முடியாது. இதுல பசில வேற அழுதா?" என கிண்டலாகக் கேட்கவும்,
விக்ரமன் ஜானகியம்மாளிடம், "அவளுக்கு பரிமாறுங்க" என்றுவிட்டு நாச்சியம்மையைப் பார்க்க, அவர் அதியையை கண்களால் எரித்துக் கொண்டிருந்தார்.