Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
நான் இரண்டாவதாக எழுதி முதலாவதாக புத்தகமாக வந்தது 'காதலா! காதலா!' நாவல். இந்நாவல் நாளை காதலர் தினத்திலிருந்து ரீரன் செய்யப்படும்🙂

இந்நாவலின் நாயகன் அக்னிமித்ரன் ஒரு ஆன்டிஹீரோ என்று கூட சொல்லலாம்😉
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
வணக்கம் மெலடிஸ்,
உங்களுக்கு மூன்று நாயகர்கள் கொண்ட கதை பிடிக்குமா? அதில் இருவர் ஆன்டிஹீரோவாக இருந்தால் பிடிக்குமா? கருப்பாக இருப்பதால் தனது அன்னையினாலேயே ஒதுக்கி வைக்கப்படும் நாயகன் கொண்ட கதை பிடிக்குமா? பிசினஸ்மேன், போலீஸ் ஆபிசர், சினிமா ஹீரோயென்று மூன்று துறைகளில் கலக்கும் நாயகர்கள் கதை? அப்ப இது தான் உங்களுக்கான நாவல்.

இதுவொரு ரீரன் கதை.

கதையின் தலைப்பு: காதலா! காதலா!

எழுத்தாளர் உங்கள் ஷிவானி செல்வம்
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 1


அந்த பரபரப்பான காலைவேளையில் மக்கள் அனைவரும் தங்கள் வேலைகளுக்குச் செல்ல நொடிக்கொருமுறை, இப்போது வந்துவிடாதா? அப்போது வந்துவிடாதா? என இரயில் வரும் வழியின் மேல் விழி வைத்து பார்த்திருந்தனர்.


ஏதோ ஓர் ஊரை சென்றடைய வேண்டிய முகவரி ஒட்டப்பட்ட பெட்டிகளை பலர் தங்களது சிம்மாசனங்களாய் மாற்றி அமர்ந்திருக்க, சிலர் இரயில் என்ஜின்களிலிருந்து வரும் ஆயிலின் மணத்தையும், பல இரயில்கள் கடந்து சென்றதால் தண்டவாளங்களிலிருந்து எழும் துர்நாற்றத்தையும், சுவாசிக்க இயலாமல் முகத்தை அஷ்ட கோணலாக்கி அமர்ந்திருந்தனர்.


அந்த பெட்டி சிம்மாசனங்களில் காலியாகயிருந்த ஒன்றில் தனது துணையாள் பூர்ணிமாவை அமர வைத்து, டி.டி.ஆர் கையிலிருக்கும் காத்திருப்போர் பெயருக்கான பட்டியலில், முதல் ஆளாக நின்றிருந்தான் நீதிதாசன். ஆம், அது இணைய வசதி அதிகமில்லாத தொண்ணூறுகளின் காலகட்டம்.


நீதிதாசன் தி கிரேட் தாசன் அண்ட் கோ கம்பெனியின் ஒரே உரிமையாளன். தன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே சென்னைக்கு வந்து, சிறிய அளவில் விலங்குகளின் தோல்களினால் தயாரிக்கப்படும் கைப்பை தொழிற்சாலையை கட்டமைத்தவன், தன் கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் அசுரவேகத்தில் முன்னேறினான்.


நான்கே வருடங்களில் அவனின் தொழில் வளர்ச்சி உச்சத்தை எட்ட பாராட்டுகளும், திருமண விண்ணப்பங்களும் அவனுக்கு குவிந்த வண்ணமிருந்தன. ஆனால், அவன் அவை அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்தான்.


காரணம் பெண்களிடம் அதிகளவில் பேசியிராதவனுக்கு, காலை முதல் மாலை வரை தன்னறையிலிருந்து தனக்கு வேண்டியதை எல்லாம் பார்த்துப் பார்த்து செய்யும் தன் காரியத்தரிசி பூர்ணிமாவின் மேல் ஒரு பிடித்தம் உண்டாகியிருந்தது.


செய்யும் அனைத்து வேலைகளிலும் நவீனத்தையும், நேர்த்தியையும் வெளிப்படுத்தும் பூர்ணிமா, அழகின் மறு சொரூபம் என்றே கூறலாம்.


சுண்டினால் ரத்தம் வரும் என்பார்களே? அப்படி ஒரு நிறம். நடந்தால் ரம்பையும் தோற்கும் நளினம். அவள் தன் அழகின் மேல் மிகுந்த கர்வம் கொண்டிருப்பவளும் கூட.


எப்பேர்ப்பட்ட அழகனும் பணக்காரனும் தன் அழகில் மயங்கி தன் காலடியில் வந்து விழுவான் என்கிற இறுமாப்பில் இருந்தவளுக்கு, திடீரென ஒருநாள் நீதிதாசன் தன் திருமண விருப்பத்தை தெரிவித்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.


கருமை நிற கண்ணனாய் இருக்கும் நீதிதாசனுக்கும், அப்சரசாய் ஜொலிக்கும் தனக்கும் ஒரு துளி கூட பொருத்தமில்லை என அவள் மனதில் நினைத்தாலும், சிறு வயதிலிருந்தே அன்னை தந்தையின் அரவணைப்பு கிட்டாமல் அனாதை விடுதியில் வளர்ந்ததால் பணத்தின் அருமையை மட்டும் நன்றாக தெரிந்திருந்தாள். அதனால், அவனை திருமணம் செய்யவும் சம்மதித்தாள்.


தான் அழகி என்ற காரணத்தினால் தான் தனக்கு மனைவி என்கிற அந்தஸ்தை நீதிதாசன் கொடுக்க முன் வந்துள்ளான் என உறுதியாக நம்பினாள் பூர்ணிமா.


நீதிதாசன் முதலில் அவளின் அழகில் மயங்கியே அவளை நோக்கி ஈர்க்கப்பட்டாலும், நாள்போக்கில் அவளின் குணநலன்களையும் கண்டபின்பே அவளை தன் மனைவியாக்க முடிவெடுத்தான். இதை பூர்ணிமா அறியாமல் போனது விதியின் குற்றமோ?


திருநெல்வேலி ஜில்லாவின் கடைக்கோடி பகுதியில் உள்ள களக்காடு என்னும் கிராமத்தில் தான் நீதிதாசனின் பெற்றோர் வசித்தனர். தங்களின் மகனுக்கு பெண் கொடுக்க நான் நீ என போட்டிப்போட்டுக்கொண்டு வரும் தங்கள் உறவினர்களை எல்லாம் அடக்கி வைத்து நீதிதாசனின் சம்மதத்திற்காக காத்திருந்தனர்.


ஆனால், அவனோ பூர்ணிமாவை அழைத்து வந்து நான் இவளைத் தான் திருமணம் செய்வேன் என ஒற்றைக் காலில் நின்றான். அதில் பெரியவர்கள் இருவரும் மனக்கிலேசம் கொண்டனர்.


அவனின் தந்தை திருநீலகண்டன், "ஏலேய்! இந்த அனாதைக்கழுதை தான் உனக்கு வேணும்னா இப்பவே இந்த வீட்டை விட்டு வெளியப்போவே. எங்க மவனா எங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கறதுனா மட்டும் இந்த வீட்டுக்குள்ள இருவே." என கறாராக சொல்லிவிட,


அவன் தாய் மரகதமும், “எய்யா அப்பா சொல்றதை கேளுயா” என்று பரிதவித்தார்.


அவனோ தன்னை நாடி வந்தவளை கைவிட மனமில்லாமல், அவளை தன் வீட்டிற்கு எதிர்புறம் உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, ஒரு ஓரமாக நின்ற வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் கயிற்றை அவிழ்த்து வந்து, அவளின் கழுத்தில் கட்டினான்.


இதனை வீட்டு வாயிலில் நின்ற மரகதமும், நீலகண்டனும் ஆத்திரத்துடன் வேடிக்கைப் பார்க்க, தாலி கட்டிய கையுடன் அவளை அவர்களிடம் அழைத்துச் சென்றவன், "யாரைப் பார்த்து அனாதைக் கழுதைனு சொன்னீங்கப்பா? இப்போ இவ என் பொண்டாட்டி, இந்த ஊரு பெரிய மனுஷன் திருநீலகண்டனோட ஒரே மருமவ. இவளுக்கு நான் இருக்கேன். இப்பவும் நான் உங்க மொவன் தாம்போ. நான் உங்களுக்கு தொடர்ந்து போன் பண்ணிட்டு தான் இருப்பேன். உங்களுக்கு எப்ப பேசத்தோணுதோ அப்போ நீங்க எங்கிட்ட பேசிக்கிடுங்க. இப்ப நாங்க போயிட்டு வர்றோம்." என பூர்ணிமாவின் கரம் பிடித்து அழைத்துச் சென்றான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
நீதிதாசனின் செயலில் கொந்தளித்திருந்தவர்களுக்கு மூன்று மாதம் கழித்து பூர்ணிமா கருவுற்றிருப்பதாக செய்தி வர, புது வரவை எண்ணி பூரித்துப் போயினர்.


ஆனாலும் தாங்களாக அங்கு செல்ல அவர்களது தன்மானம் இடம் கொடுக்காததால், அங்கு செல்லத் துடிக்கும் தங்கள் மனதை அடக்கி வைத்தனர்.


ஐந்து மாதம் கழித்து மறுபடியும் வந்த தொலைபேசி அழைப்பில், இரு கருவினை சுமந்திருக்கும் பூர்ணிமாவிற்கு இது எட்டாம் மாதம் என்பதால் அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகளை பற்றி சொல்லி வருத்தப்பட்டான் நீதிதாசன்.


தற்போது அவள் பலவீனமடைகிறாள் எனவும், தான் உடனிருந்து கவனிக்க முடியாமல் திண்டாடி வருவதாகவும் அவன் சொல்ல, மனமிறங்கியவர்கள், "நாங்க அங்க வர முடியாதுலேய். வேணும்னா உன் பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு நீ இங்க வா. நாங்க அவளை பார்த்துக்கிடுதோம்." எனக் கூறினர்.


அதில் மகிழ்ச்சியடைந்த நீதிதாசன் உடனே தன் பூமா செல்லத்தைக் கூட்டிக்கொண்டு திருநெல்வேலி செல்ல ஆயத்தமானான்.


ஆனால், ஏற்கனவே நீதிதாசனின் பெற்றோர்கள் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிய அவமானத்தில் இருந்த பூர்ணிமா, நான் அங்கு வர மாட்டேன் என பிடிவாதம் செய்தாள்.


"பூமா பிடிவாதம் பிடிக்காத. உனக்கு பிரசவம் பார்த்து பக்குவம் செய்ய இங்க ஆளில்ல, புரிஞ்சிக்கோ. என்னாலயும் எப்பவும் உன் கூடவே இருக்க முடியாது. என் வொர்க் ப்ரசர் பத்தித்தான் உனக்கு தெரியுமே? ஜஸ்ட் ட்ரை டு அண்டர்ஸ்டான்ட்மா. எங்கம்மா இதுவரை எத்தனை பிரசவம் பார்த்திருக்காங்கத் தெரியுமா? அவங்க உன்னையும் நல்லா பார்த்துக்குவாங்க" என பல பசப்பு வார்த்தைகளை கூறி பூர்ணிமாவை சம்மதிக்க வைத்தான்.


அவர்கள் திருநெல்வேலிக்கு காரில் செல்ல முடிவெடுத்து கிளம்பும் நேரத்தில், சாதிக் கலவரத்தால் சாலைகளில் செல்லும் வாகனங்களையெல்லாம் சிலர் வழி மறித்து தீ வைத்து கொழுத்திவிடுவதாக தகவல் கிடைக்க, வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் ரயிலில் செல்ல முடிவெடுத்தான்.


தற்போது தன் மனைவியுடன் இரயில் நிலையத்தை வந்தடைந்து, தேநீருக்காக கடையில் வரிசையிலும் காத்திருந்தான்.


ஒரு வழியாக காகிதக்கப்புகளை ஏந்தியபடி பூர்ணிமாவிடம் வர, சினுங்கினாள் அவள்.


"அத்தான் இதுக்கு தான் சொன்னேன் நான் அங்க வரமாட்டேனு. பாருங்க விதி கூட என்னை அங்க போகவிடாம தடுக்குது. அங்க போனதுக்கப்பறம் உங்க அம்மாவும் அப்பாவும் சேர்ந்து என்னை என்னப்பாடு படுத்தப் போறாங்களோ? எனக்கு பயமா இருக்கு அத்தான். நம்ம அங்கப் போக வேணாம்" என்றாள்.


அவனோ எரிச்சல்பட்டான்.


“ஆரம்பிச்சிட்டியா? மறுபடியும் என்னை கெஞ்ச வைக்காத பூமா, ப்ளீஸ்” என கடுகடுத்தவன், ‘கடவுளே சீக்கிரம் ரயிலை அனுப்பி வை’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டான்.


அப்பயணம் அவன் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தபின், அவர்கள் தலைவிதியையே மாற்றியமைக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தால், நீதிதாசன் இப்படி வேண்டியிருக்க மாட்டானோ என்னவோ?


முகத்தை தாங்கலாய் வைத்திருந்தவள் தன் பெருத்த வயிற்றை பிடித்துக்கொண்டு பெருமூச்சு வாங்க, அவளைப்போலவே கர்ப்பிணிப்பெண்ணாய் குத்துமதிப்பாக ஆயிரம் உயிர்களை தன்னுள் சுமந்துக்கொண்டு, ஆடி அசைந்து நடைமேடை எண் ஒன்றில் வந்து நின்றது அனந்தபுரி எக்ஸ்ப்ரெஸ்.


இருவருக்கும் ஒரு வழியாய் இருக்கைகள் கிடைக்கப்பெற, சொகுசாய் சென்று அமர்ந்து கொண்டனர். பல வகை மனிதர்களுடன் உண்டான உரையாடல்களுடன் இனிதாய் அப்பயணமும் நிறைவு பெற, இரயில் திருநெல்வேலியை வந்தடைந்தது.


"ஹல்வா ஹல்வஹல்வா ஹல்வா" என்னும் இனிமையான ராகம் நிறைந்த பல குரல்கள் அவர்களின் செவிகளை சென்றடைந்தன.


ஹல்வாவில் இரண்டு பாக்கெட்டுகளை வாங்கியவர்கள் திருநீலகண்டன் அனுப்பியிருந்த காரில் களக்காட்டை நோக்கி பயணமாகினர்.


ஒரு மணிநேரப் பயணத்திற்கு பின்பு வீட்டையடைய மாலை ஐந்து மணியாக, வாசலை அடைந்தவர்களை ஆரத்தி சுற்றி வரவேற்றனர் திருநீலகண்டன்-மரகதம் தம்பதியர்.


உள்ளே சாமரம் வீசி வரவேற்றவர்களை மிதப்பாக பார்த்த பூர்ணிமா வார்த்தைக்கு மட்டும், "நல்லாயிருக்கீங்களா?" என்று கேட்டாள்.


"எங்களுக்கென்னமா? நீ சொகமாயிருக்கியா தாயி?" என பதிலுக்கு வாஞ்சையுடன் விசாரித்தார் மரகதம்.


"ம்" என்றவள், "எனக்கு ரொம்ப அசதியாயிருக்கு. என் ரூம் எங்க?" எனக்கேட்டு அதற்குள் புகுந்து கொண்டாள்.


அங்கிருந்த முதலிரண்டு நாட்களும் மரகதம் தன்னிடம் பேசினால் மட்டும், ஆம் இல்லை என ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தவள், மற்ற நேரங்களில் ஒரு வேலையும் செய்யாமல் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டாள்.


இரு கருவினை சுமந்திருப்பவள் என்பதால், மரகதமும் அவளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.


இரண்டு நாட்கள் கழித்து நீதிதாசன் சென்னை புறப்பட, இவ்வளவு நேரம் எங்கு தான் வைத்திருந்தாள் இவ்வளவு கண்ணீரையும் என எண்ணுமளவிற்கு, முதல் பிரிவில் உண்மையாகவே அழுது தீர்த்தாள் பூர்ணிமா.


"வேண்டாம் அத்தான் போகாதீங்க. எனக்கு பயமாயிருக்கு. ப்ளீஸ் அத்தான். என் கூடவே இருங்க." என கதறி அழ, திருநீலகண்டனின் கண்ணசைவில் பூர்ணிமாவின் அருகில் சென்றார் மரகதம்.


"அட! நீ என்ன தாயி புதுசா பண்ணிக்கிட்டிருக்கா? ஒரு மூணு மாசம் அதுக்கு போய் இப்படி கண்ணீர் வடிக்குதியே? மொத நாள் உன்னை பார்த்தப்போ எங்களுக்கு தெரியாம இப்படி காதல் பண்ணிக்கிட்டு வந்து நிக்குதானேனு தான் தாயி நாங்க அப்படி கோபப்பட்டு பேசினோம். மத்தபடி இப்ப எங்க மனசுல ஒன்னுமில்ல தாயி. வடக்கால நிக்க அந்த பகவதியம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லுதேன் தாயி. உன்னை என் மொவளைப் போல பார்த்துக்கிடுதேன்" என உறுதிமொழி தர, நம்பிக்கையுடன் அவளை அங்கு விட்டுவிட்டு, சென்னை நோக்கிப் புறப்பட்டான் நீதிதாசன்.
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
ஆனால், பூர்ணிமாவின் குறுக்குப்புத்தி அவர்களை நம்பவில்லை.


அவன் சென்றவுடன் பெரியவர்களோ பூர்ணிமாவின் அத்தான் என்ற அழைப்பை நினைத்துப் பார்த்து மனம் குளிர்ந்துபோயினர். பரவாயில்லை கொஞ்சமாவது அவனுக்கு மரியாதை கொடுக்கிறாள் என மனதில் நினைத்துக்கொண்டனர்.


அவளை அவ்வாறு கூப்பிட வைக்க நீதிதாசன் தலைகீழாக தண்ணீர் குடித்தக் கதையை மூத்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை பாவம்!


ஒன்பதாம் மாதத் தொடக்கத்தில் ஒரு மாலை நேரம் எதிரே உள்ள பகவதியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு, வீட்டுக்குள் நுழையப் போன பூர்ணிமாவின் முதுகுத்தண்டில் மின்னல் வெட்ட, அங்கேயே நிலைக்கதவைப் பிடித்துக்கொண்டு, அம்மாவென அலறினாள்.


அவளின் குரலில் சமையலறையிலிருந்து பதறி வெளியே வந்த மரகதம், அவளை மெதுவாக அவளின் படுக்கையறைக்கு அழைத்துச் சென்று கைத்தேர்ந்த மருத்துவராய் அனைத்து முதலுதவிகளையும் செய்தார்.


அறைக்கு வெளியே மரகதம் கேட்ட அனைத்தையும் கொடுத்துக்கொண்டு பதட்டத்துடன் நின்றிருந்த திருநீலகண்டன் வேகமாக வரவேற்பறையை அடைந்து தனது தொலைபேசியில் எண்களைச் சுற்றி காத்திருந்தார்.


இணைப்பு கிடைத்தவுடன் பூர்ணிமாவிற்கு பிரசவ வலி வந்த விஷயத்தை நீதிதாசனுக்கு அவர் தெரிவிக்க, உடனே அங்கிருந்து திருநெல்வேலி கிளம்பினான் மைந்தன்.


அந்திமாலை இருள் சூழ்ந்த கருக்கல் வேளையில் அனைத்து பறவைகளும் தங்கள் கூட்டினை அடைய வேகமாகச் சென்று கொண்டிருக்க, தங்கள் அன்னையின் கருவறைச் சுவற்றை முட்டிக்கொண்டு தங்கள் கூட்டினை விட்டு வெளியே வர துடித்தனர் இரு அக்னிக்குஞ்சுகள்.


வருங்காலத்தில் இரு துருவங்களாய் மாறி தங்கள் துறைகளில் கோலோச்சவிருந்தவர்களும் அவர்களே.


பகவதியம்மனின் அருள் வேண்டியடித்த கோவில் மணியின் ஓசை பூர்ணிமாவின் கதறல் ஒலியுடன் சேர, அவள் கருப்பையிலிருந்து நழுவி விழுந்தனர் அந்த இரண்டு சிங்கக்குருளைகளும்.


முதலில் ரத்த கோலத்தில் வெளிவந்த கறுப்பு தங்கமானவன் அழுகைக்கு மாறாய் புன்சிரிப்புடனிருக்க, பல பிரசவங்களில் கண்டிராத இந்த விந்தையைக் கண்டு மரகதத்திற்கு புல்லரித்தது.


அடுத்து வந்தவனோ அறையே அதிரும்படியான அழுகையுடன் தன் சிவந்த மேனி மேலும் சிவக்க முக்கிமுக்கி கனைத்தான்.


இரு குழந்தைகளையும் ஈன்றவள் மயக்கத்தில் கிடக்க, ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு வெளியே வந்த மரகதம், திருநீலகண்டனிடம் காண்பித்து, "நம்ம குடும்ப வாரிசு" என்றார்.


கறுப்பு தங்கத்தை கையில் வாங்கி கொஞ்சியவர் பூர்ணிமாவின் அறைக்குள் நுழைந்து மற்றொருவனை பார்த்தார்.


மரகதம் தன் வியப்பிலிருந்து மீளாதவராக, "இவன் அவக் குடும்ப வாரிசு போல? செவப்பா இருக்கான். ஒரே அழுகை வேற. இவிய அழவே இல்ல. ஆச்சரியமாயிருக்கு எனக்கு" என்று கூறிக் கொண்டிருக்க, அனைத்தையும் மயக்கத்திலும் கேட்டுக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.


சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தவளிடம் குழந்தையை நீட்டி பால் கொடுக்கச் சொல்ல, அவரின் கையிலிருந்த கறுநிறக் கண்ணனைப் பார்த்து முகத்தைச் சுளித்தவள், "இது என் குழந்தை தானா?" எனக் கேட்டாள்.


எந்தத் தாயும் கேட்கத் துணியாத கேள்வி அது.


‘பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்.
சாம்பல் நிறத்தொரு குட்டி
கரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரம் அன்றோ?
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை.
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!’

எனும் பாரதியின் பாடல் வரிகளை பூர்ணிமா அறியாமல் போனதை யார் குற்றமென்று சொல்ல?


தொடரும்...
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom