5 - அன்று…
பல ஒற்றர்கள் ஏவப்பட்டார்கள். சித்தர் குறிப்பிட்ட மாலாலயத்தைத் தேடிக் கண்டுபிடிக்க.மிகவும் உற்சாகமாக அவர்களைப் பணியில் ஏவிய ஜடாவர்மனும் ஸ்ரீவல்லபரும் நாளாக, ஆக மனந்தளர்ந்தார்கள். காடுகளில் எங்கு தேடியும் அப்படி ஒரு ஆலயத்தின் சுவடுகளே இல்லை என்பதைத் தவிர, பாழடைந்த அந்த ஊரைப் பற்றியோ, நித்திலவல்லி, செண்பகா என்ற பெயர்களையோ, யாரும் அறிந்திருக்கவில்லை.
"சிவபாத சித்தரையே மீண்டும் கேட்கலாமா? உத்தேசமாக எந்தத் திசையில் ஆலயம் உள்ளது என்பதுபோன்ற குறிப்புகளை அவர் கொடுத்தாலும் போதுமே" என்றார் ஸ்ரீவல்லபர் கவலையோடு.
"அவர் திரிகூடமலைக்குச் செல்லப் போவதாகக் கூறினார் மாமா. அங்குள்ள காடுகளில்தான் அவரைத் தேடவேண்டும்" என்றான் ஜடாவர்மன்.
"சரி, ஒற்றர்களை அனுப்புவோம்" என்றார் ஸ்ரீவல்லபர்.
ஜடாவர்மப் பாண்டியன் சிரித்துவிட்டான். "மாமா, நாம் பேசுவது சிவபாத சித்தரைப் பற்றி என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஒரு படையையே அனுப்பினாலும், அவருக்கு விருப்பம் இல்லையெனில் அவர் கண்ணில் தென்படவே மாட்டார்" என்றான்.
"இப்போது என்ன செய்வது? தொடர்ந்து தேடுவதற்கு ஏற்பாடுகள் செய்யலாமா? நம் ஆதுரசாலைகளையும் வைத்தியர்களையும் தயார்நிலையில் வைக்க நாம் திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்படுத்தவும் வேண்டும்…"
"நான் ஒன்று சொல்லட்டுமா, மாமா?" என்றான் ஜடாவர்மன்.
"என்ன இது அனுமதி கேட்டுக் கொண்டு? மன்னர் பெருமான் கட்டளையிடுங்கள்."
"ஆகட்டும். கட்டளையே இடுகிறேன். நீங்கள் இன்றிலிருந்து இந்தத் தேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பை முழுவதுமாக வகிக்க வேண்டியது. நம் ஆதுரசாலைகளை விரிவாக்கித் தயார்நிலையில் இருத்தும் பொறுப்பையும் உங்களிடமே அளிக்கிறேன்" என்று ஜடாவர்மன் சொன்னதைக் கேட்டதும் துடித்துப் போனார் ஸ்ரீவல்லபர்.
"என்ன அரசே! தாங்கள் ஆட்சியைத் துறக்கப் போகிறீர்களா? அது கோழைகளின் செயலன்றோ? அதற்குள் மனமுடைந்து போகலாமா?" என்று தவிப்புடன் கேட்டார்.
"முடிதுறக்கப் போவதாக யார் சொன்னது? என்னை நீங்கள் அவ்வளவு பொறுப்பில்லாதவனாகவா மாமா வளர்த்திருக்கிறீர்கள்?" என்று ஜடாவர்மன் கேட்டதும்தான் நிம்மதியானார் ஸ்ரீவல்லபர்.
"அமைச்சர் பெருமானே, நான் திரிகூட மலைக்குச் சென்று மீண்டும் சிவபாத சித்தரைச் சந்திக்க இயலுமா என்று பார்க்கப் போகிறேன். மனமார வேண்டினால் அவர் என் முன் தோன்றுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் மூலம் ஆலயம் இருக்குமிடத்தை அறிந்து அங்குள்ள பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டு நான் நகரம் திரும்புகிறேன். அதன்பின் ஆலயக் குடமுழுக்கை நடத்திவிடலாம்" என்று விளக்கினான் ஜடாவர்மன்.
ஸ்ரீவல்லபர் தயங்கினார். "அதற்கு நீங்கள் தனியாகச் செல்ல வேண்டுமா அரசே? நானும் உடன் வருகிறேனே" என்றார்.
"அமைச்சரே! பேரிடர் ஒன்று வெகுவேகமாகப் பாண்டிய மண்டலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நான் தங்களைத் தவிர வேறு யாரையும் நம்பித் தேசத்தை விட்டுச்செல்ல இயலாது."
"சரி, உடன் நம் தளபதியையும், சில வீரர்களையுமாவது…"
"இல்லை, தளபதி உங்களுக்குத் தேவை. வீரர்களை அழைத்துச் சென்று காட்டில் கூட்டம் போட்டேனென்றால் சித்தர் என் முன்னால் வர மாட்டார். நான் தனியாகத்தான் இந்த முயற்சியில் இறங்க வேண்டும்" என்றான் ஜடாவர்மப் பாண்டியன்.
ஸ்ரீவல்லபர் பெருமூச்செறிந்தார்.
****
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வேண்டிய உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, தன் மனைவியர், மக்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஜடாவர்மன் சில நாட்களிலேயே மதுரையைவிட்டுக் கிளம்பிவிட்டான்.
அன்றிரவு தளபதி வெற்றிவேலர் ஆரோக்கியத்துறை அமைச்சரைச் சந்தித்தார்.
"மன்னர் தங்களிடம்தான் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். ஏதேனும் பிரத்யேகக் கட்டளைகள் பிறப்பித்துள்ளாரா?" என்று விசாரித்தார்.
அமைச்சர் சற்றே தயங்கினார். பிறகு "ஆதுரசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாகவும், வைத்தியர்கள் பலரையும் ஆதுரசாலைகளில் சேர்க்கும்படியும், அனைத்து மருந்துகளையும் தயார்நிலையில் வைக்கும்படியும் உத்தரவிட்டார்" என்றார்.
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஏதோ நோய்த்தொற்று நம் பாண்டிய மண்டலத்தைப் பீடிக்கப் போகிறது என்றல்லவா காண்கிறது?' என்றார் வெற்றிவேலர் யோசனையுடன்.
"ஆ… மாம். அவர் ஏதும் சொல்லவில்லை, ஆனால் அப்படித்தான் ஊகிக்கத் தோன்றுகிறது" என்றார் அமைச்சர்.
"என்ன, வெற்றிவேலரே, வெகுநேரமாக ஆரோக்கிய மந்திரியிடம் தனித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? அது அத்தனை ஆரோக்கியம் இல்லையே" என்றவாறே உள்ளே நுழைந்தார் ஸ்ரீவல்லபர்.
'இந்தப் பாண்டிய நாட்டைப் பிடித்த ஆபத்தான கிருமி இவன்தான். புகை நுழையாத இடத்தில்கூட இவன் நுழைந்துவிடுவான்' என்று எண்ணி, ஸ்ரீவல்லபரை ஒரு குரோதப் பார்வை பார்த்தார் தளபதி. உடன் மிகவும் கஷ்டப்பட்டு அதனை மாற்றிக் கொண்டு, வலிந்து ஒரு புன்னகை புரிந்தார்.
"மன்னர் அவருக்கு ஏதேனும் விசேஷக் கட்டளையிட்டுள்ளாரா என்று கேட்டேன், அவ்வளவே! அப்படி ஏதேனும் இருந்தால், நம் படைகளும் அவருக்கு உதவலாமே என்றுதான்…"
"ஏன், ஆரோக்கிய மந்திரி ஏதேனும் போரில் ஈடுபட்டிருக்கிறாரா?" என்று கேலியாகக் கேட்டார் ஸ்ரீவல்லபர்.
"முதன் மந்திரிக்குத் தெரியாமல் அப்படியெல்லாம் இந்தத் தேசத்தில் நடைபெற்றுவிடுமா?" என்று திருப்பினார் தளபதி. "ஏதேனும் நோய்த்தொற்று பரவுவதாக மன்னர் கூறினாரா என்றுதான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்."
"அப்படியா மந்திரியாரே? என்னிடம் அப்படி ஒன்றும் மன்னர் சொல்லவில்லையே? தங்களிடம் சொல்லியுள்ளாரா?" என்று ஆரோக்கிய மந்திரி பக்கம் திரும்பினார் ஸ்ரீவல்லபர்.
இவர்கள் சொற்போரில் அகப்பட நானா கிடைத்தேன் என்று தவித்த ஆரோக்கிய மந்திரி "இல்லை. மன்னர் ஆதுரசாலைகளைத் தயாராக வைக்கச் சொன்னாரேயன்றி, நோய்த்தொற்று எதுவும் வரப் போவதாகக் குறிப்பாகச் சொல்லவில்லை" என்றார்.
"அவர் சொல்லாதபோது நாமாக இல்லாததை ஊகிப்பது தவறன்றோ?" என்று கேட்டார் ஸ்ரீவல்லபர் புன்னகை மாறாமல்.
"ஆம்" என்று சொல்லிவிட்டு அவருக்கும் தளப்திக்கும் வணக்கம் செலுத்தி, விட்டால் போதுமென்று வெளியேறினார் ஆரோக்கிய மந்திரி.
******
ஒரு மௌனம். ஸ்ரீவல்லபரும் வெற்றிவேலரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.
"வெற்றிவேலரே! மன்னர் இப்போது தலைநகரத்தில் இல்லை. மிக முக்கியமான காரியத்திற்காக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் வதந்திகளைப் பரப்புவது தவறு என்று பழுத்த அனுபவமுள்ள தங்களுக்கு நான் சொல்லிப் புரிய வேண்டிய அவசியம் இல்லை…" என்று மௌனத்தைக் கலைத்தார் ஸ்ரீவல்லபர்.
"முக்கியமான காரியம்! இரகசியமான காரியமும் போலிருக்கிறது! இல்லையெனில் முதன்மந்திரியும் மன்னரும் மட்டுமே பேசி இப்படிப்பட்ட அவசர முடிவு எடுப்பார்களா?" என்றார் வெற்றிவேலர்.
"அதிலிருந்தே உங்களுக்கு விஷயம் புரிந்திருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அதனை ஆராய்வதில் பலனென்ன? காரியம் இரகசியமென்றால் அதனை யாரிடம், எப்போது தெளிவுபடுத்துவது, அல்லது இரகசியமாகவே வைத்திருப்பது என்பதை முடிவெடுக்கும் முழு உரிமையும் மன்னருக்குத்தான் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார் ஸ்ரீவல்லபர் தண்மையாக.
"உரிமை! யார் கொடுத்த உரிமை அது? மன்னன் எதேச்சதிகாரமாகச் செயல்படலாம் என்று எந்தச் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது? மந்திராலோசனை செய்யாமல் மன்னன் ஒரு முடிவெடுக்கலாம் என்றோ, அதனைச் செயல்படுத்தலாம் என்றோ இந்த மன்னருக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்? சொல்லுங்கள் அமைச்சரே!" என்று உறுமினார் வெற்றிவேலர்.
ஸ்ரீவல்லபர் ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் வெற்றிவேலரே தொடர்ந்தார். "ஸ்ரீவல்லபரே! நம் பாண்டிய மண்டலத்தின் முந்தைய மன்னரின் பட்டமகிஷிக்குக் குழந்தைகள் இல்லை. எதிர்பாராதவிதமாகச் சேரர்களுடனான போரில் நம் மன்னர் அகால மரணமடைந்தார். ஆனால் அப்போது போரில் நாம் வென்றிருந்தோம். வீரத்தால் நம்மைப் பணியவைக்க முடியாதபோது மன்னர் மரணமடைந்ததைக் காரணம் காட்டிச் சேரநாடு நம் பாண்டிய மண்டலத்தை அடிமைப்படுத்த முயன்றது. அப்போது தாங்கள்தாம், மந்திரி மண்டலம் என்னை மன்னனாகத் தேர்ந்தெடுத்த பின்னரும்கூட, இரண்டு வயதே நிரம்பியிருந்த ஒரு பச்சிளம் பாலகனை, மன்னரின் இரண்டாவது மனைவியின் மகனை மன்னனாக அரியாசனத்தில் அமர்த்தினீர்கள். அவனுக்குக் கல்வியும் போர்க்கலையும் கற்பித்து அவனை நல்ல மன்னனாக்கினீர்கள். அதுவரை தாங்களே இந்தத் தேசத்தை நிர்வகித்தும் வந்தீர்கள்…"
"அந்தக் கோபம் – வெற்றிவேலரை நான் மன்னனாகவிடவில்லை என்ற கோபம் – இன்னமும் அவரைவிட்டு நீங்கவில்லை போலிருக்கிறது!" என்று இப்போதும் குரலை உயர்த்தாமலே கூறினார் ஸ்ரீவல்லபர்.
"அதனை நான் எப்போதோ மறந்துவிட்டேன் என்பது அமைச்சருக்கே தெரியும். என் சிந்தனை எப்போதும் இந்தத் தேசத்தின் நன்மையைக் கோரியே இயங்குகிறது. பண்டு நான் மன்னனாக விரும்பியதும் அதற்காகவே! தலைமுறை தலைமுறையாகப் பாண்டிய சிம்மாசனத்திற்கு விசுவாசமானவர்கள் என் குடும்பத்தினர். ஆனால் அதற்காக, ஆபத்து நேர்ந்திருக்கும் சமயத்தில் அரியணைப் பொறுப்புகளைத் துறந்து ஓடுகிறவர்…"
"…எச்சரிக்கிறேன், தளபதியாரே! மன்னர் எங்கு போயிருக்கிறார், எதற்காகப் போயிருக்கிறார் என்று தெரியாமல் ஏதேதோ சொல்லாதீர்கள்!" என்றார் ஸ்ரீவல்லபர். இன்னமும்கூட அவர் குரல் உயரவில்லையாயினும் அதில் கோபத்தின் அனல் தெரிந்தது.
"தெரியாததால்தானே சொல்கிறேன்! தெரிந்துவிட்டால் ஏன் சொல்லப் போகிறேன்?" என்றார் தளபதி.
"மன்னர் தன்னைப் பற்றியும் தன் செயல்களைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னாலே விசுவாசமாயிருப்போம், அவர் சொல்லவில்லையெனில் அதுவும் ஏதோ காரணத்திற்காகத்தான் என்பதை உணர மாட்டோம் என்று சொல்வது என்ன விசுவாசமோ தெரியவில்லை! என்றாலும் தளபதி, நீர் மன்னனுக்கு நன்மையைக் கருதியே இந்த உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நம்பி, தங்களிடம் சொல்கிறேன். அரசியல் விவகாரங்களில் இரகசியம் காக்க வேண்டியதன் அவசியத்தைத் தளபதிக்கு நான் போதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்…"
தளபதி ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவுமில்லை. 'மேலே சொல்லுங்கள்' என்பதுபோல் முகபாவம் காட்டினார்.
"தளபதியாரே, சிறிதுகாலத்திற்கு முன்பு சிவபாத சித்தரைச் சந்தித்தார் மன்னர். அவர் நம் பாண்டிய மண்டலத்தின் சுபிக்ஷத்திற்கு வேண்டி, ஒரு சிவாலயத்தைக் கண்டுபிடித்து அதற்குக் குடமுழுக்குச் செய்யக் கட்டளையிட்டுள்ளார். சித்தர் குறிப்பிட்ட சிவாலயத்தைப் பற்றிய குறிப்புகளை அவரிடம் கேட்டு வருவதற்காக, திரிகூட மலைக் காடுகளுக்குச் சென்றிருக்கிறார். விஷயம் அவ்வளவுதான். மதுரையில் திருவிழாக்காலம் தொடங்குவதால் ஆரோக்கிய மந்திரியைக் கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் விஷயம்" என்றார் ஸ்ரீவல்லபர்.
"இதற்கு இத்தனை இரகசியம் காக்க வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லையே" என்றார் வெற்றிவேலர் சந்தேகமாக.
"நாம் கண்டுபிடிக்க முயலும் சிவாலயத்தின் குறிப்புகள் இரகசியமான ஓரிடத்தில் இருக்கின்றன. அவ்விடத்தில் ஆபத்துகள் அதிகம். மன்னர் அவற்றைத் தனியாகவே சந்திக்க விரும்புகிறார். யாரையும் ஆபத்திற்கு ஆளாக்க அவர் விரும்பவில்லை" என்றார் ஸ்ரீவல்லபர்.
வெற்றிவேலர் புன்னகைத்தார். "இளம்வயது. சாகஸங்களைத் தேடிச் செல்லத்தான் தோன்றும்" என்று ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீவல்லபர் நிம்மதிப் பெருமூச்செறிந்தார்.
*****
"முதன்மந்திரி சொன்ன கதையை நீங்கள் நம்புகிறீர்களா, அப்பா?" என்று கேட்டான் சுபாங்கன்.
"நானென்ன, சிறு குழந்தைகூட அதை நம்பாது. பாண்டிய நாட்டை நோக்கி ஏதோ உற்பாதம் வந்துகொண்டிருக்கிறது என்று ஊகிக்கிறேன். அது ஏதேனும் நோய்த்தொற்றாக இருக்கலாம். அதை வெளியே சொல்லிவிட்டால், மன்னனுடைய ஆட்சியை மக்கள் குறைகூறுவார்களே என்றுதான் மன்னனும் மந்திரியும் உண்மையை மறைக்கிறார்கள்" என்றார் வெற்றிவேலர். "உற்பாதம் நிகழ்ந்தபிறகு, அதற்குப் பரிகாரம் தேடித்தான் மன்னர் நாட்டைவிட்டுச் சென்றிருந்தார் என்று சொல்லிவிடலாமே!"
"அடப்பாவிகளா! இப்போது நாம் என்ன செய்வது, அப்பா?" என்று கேட்டான் சுபாங்கன்.
"மகனே! உன்னை மன்னனாக்குவதற்குச் சிறந்த வாய்ப்பு இது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆபத்து நேரத்தில் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் மன்னர் என்பதை மக்கள் புரிந்துகொள்ளுமாறு நாம் நம் ஆட்களைக் கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். மன்னன் நாட்டிற்குத் திரும்பி வரவே கூடாது. அப்படியே வந்தாலும், மக்கள் அவனை அரியணையிலிருந்து இறக்க வேண்டும்."
"இரண்டும் நடக்கவில்லையென்றால்?"
"அவன் இறக்க வேண்டும்."
(தொடரும்)