Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL அருவிக்கரைக் கோயில் - Tamil Novel

Status
Not open for further replies.

5 - அன்று…​

பல ஒற்றர்கள் ஏவப்பட்டார்கள். சித்தர் குறிப்பிட்ட மாலாலயத்தைத் தேடிக் கண்டுபிடிக்க.

மிகவும் உற்சாகமாக அவர்களைப் பணியில் ஏவிய ஜடாவர்மனும் ஸ்ரீவல்லபரும் நாளாக, ஆக மனந்தளர்ந்தார்கள். காடுகளில் எங்கு தேடியும் அப்படி ஒரு ஆலயத்தின் சுவடுகளே இல்லை என்பதைத் தவிர, பாழடைந்த அந்த ஊரைப் பற்றியோ, நித்திலவல்லி, செண்பகா என்ற பெயர்களையோ, யாரும் அறிந்திருக்கவில்லை.

"சிவபாத சித்தரையே மீண்டும் கேட்கலாமா? உத்தேசமாக எந்தத் திசையில் ஆலயம் உள்ளது என்பதுபோன்ற குறிப்புகளை அவர் கொடுத்தாலும் போதுமே" என்றார் ஸ்ரீவல்லபர் கவலையோடு.

"அவர் திரிகூடமலைக்குச் செல்லப் போவதாகக் கூறினார் மாமா. அங்குள்ள காடுகளில்தான் அவரைத் தேடவேண்டும்" என்றான் ஜடாவர்மன்.

"சரி, ஒற்றர்களை அனுப்புவோம்" என்றார் ஸ்ரீவல்லபர்.

ஜடாவர்மப் பாண்டியன் சிரித்துவிட்டான். "மாமா, நாம் பேசுவது சிவபாத சித்தரைப் பற்றி என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஒரு படையையே அனுப்பினாலும், அவருக்கு விருப்பம் இல்லையெனில் அவர் கண்ணில் தென்படவே மாட்டார்" என்றான்.

"இப்போது என்ன செய்வது? தொடர்ந்து தேடுவதற்கு ஏற்பாடுகள் செய்யலாமா? நம் ஆதுரசாலைகளையும் வைத்தியர்களையும் தயார்நிலையில் வைக்க நாம் திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்படுத்தவும் வேண்டும்…"

"நான் ஒன்று சொல்லட்டுமா, மாமா?" என்றான் ஜடாவர்மன்.

"என்ன இது அனுமதி கேட்டுக் கொண்டு? மன்னர் பெருமான் கட்டளையிடுங்கள்."

"ஆகட்டும். கட்டளையே இடுகிறேன். நீங்கள் இன்றிலிருந்து இந்தத் தேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பை முழுவதுமாக வகிக்க வேண்டியது. நம் ஆதுரசாலைகளை விரிவாக்கித் தயார்நிலையில் இருத்தும் பொறுப்பையும் உங்களிடமே அளிக்கிறேன்" என்று ஜடாவர்மன் சொன்னதைக் கேட்டதும் துடித்துப் போனார் ஸ்ரீவல்லபர்.

"என்ன அரசே! தாங்கள் ஆட்சியைத் துறக்கப் போகிறீர்களா? அது கோழைகளின் செயலன்றோ? அதற்குள் மனமுடைந்து போகலாமா?" என்று தவிப்புடன் கேட்டார்.

"முடிதுறக்கப் போவதாக யார் சொன்னது? என்னை நீங்கள் அவ்வளவு பொறுப்பில்லாதவனாகவா மாமா வளர்த்திருக்கிறீர்கள்?" என்று ஜடாவர்மன் கேட்டதும்தான் நிம்மதியானார் ஸ்ரீவல்லபர்.

"அமைச்சர் பெருமானே, நான் திரிகூட மலைக்குச் சென்று மீண்டும் சிவபாத சித்தரைச் சந்திக்க இயலுமா என்று பார்க்கப் போகிறேன். மனமார வேண்டினால் அவர் என் முன் தோன்றுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் மூலம் ஆலயம் இருக்குமிடத்தை அறிந்து அங்குள்ள பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டு நான் நகரம் திரும்புகிறேன். அதன்பின் ஆலயக் குடமுழுக்கை நடத்திவிடலாம்" என்று விளக்கினான் ஜடாவர்மன்.

ஸ்ரீவல்லபர் தயங்கினார். "அதற்கு நீங்கள் தனியாகச் செல்ல வேண்டுமா அரசே? நானும் உடன் வருகிறேனே" என்றார்.

"அமைச்சரே! பேரிடர் ஒன்று வெகுவேகமாகப் பாண்டிய மண்டலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நான் தங்களைத் தவிர வேறு யாரையும் நம்பித் தேசத்தை விட்டுச்செல்ல இயலாது."

"சரி, உடன் நம் தளபதியையும், சில வீரர்களையுமாவது…"

"இல்லை, தளபதி உங்களுக்குத் தேவை. வீரர்களை அழைத்துச் சென்று காட்டில் கூட்டம் போட்டேனென்றால் சித்தர் என் முன்னால் வர மாட்டார். நான் தனியாகத்தான் இந்த முயற்சியில் இறங்க வேண்டும்" என்றான் ஜடாவர்மப் பாண்டியன்.

ஸ்ரீவல்லபர் பெருமூச்செறிந்தார்.

****

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வேண்டிய உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, தன் மனைவியர், மக்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஜடாவர்மன் சில நாட்களிலேயே மதுரையைவிட்டுக் கிளம்பிவிட்டான்.

அன்றிரவு தளபதி வெற்றிவேலர் ஆரோக்கியத்துறை அமைச்சரைச் சந்தித்தார்.

"மன்னர் தங்களிடம்தான் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். ஏதேனும் பிரத்யேகக் கட்டளைகள் பிறப்பித்துள்ளாரா?" என்று விசாரித்தார்.

அமைச்சர் சற்றே தயங்கினார். பிறகு "ஆதுரசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாகவும், வைத்தியர்கள் பலரையும் ஆதுரசாலைகளில் சேர்க்கும்படியும், அனைத்து மருந்துகளையும் தயார்நிலையில் வைக்கும்படியும் உத்தரவிட்டார்" என்றார்.

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஏதோ நோய்த்தொற்று நம் பாண்டிய மண்டலத்தைப் பீடிக்கப் போகிறது என்றல்லவா காண்கிறது?' என்றார் வெற்றிவேலர் யோசனையுடன்.

"ஆ… மாம். அவர் ஏதும் சொல்லவில்லை, ஆனால் அப்படித்தான் ஊகிக்கத் தோன்றுகிறது" என்றார் அமைச்சர்.

"என்ன, வெற்றிவேலரே, வெகுநேரமாக ஆரோக்கிய மந்திரியிடம் தனித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? அது அத்தனை ஆரோக்கியம் இல்லையே" என்றவாறே உள்ளே நுழைந்தார் ஸ்ரீவல்லபர்.

'இந்தப் பாண்டிய நாட்டைப் பிடித்த ஆபத்தான கிருமி இவன்தான். புகை நுழையாத இடத்தில்கூட இவன் நுழைந்துவிடுவான்' என்று எண்ணி, ஸ்ரீவல்லபரை ஒரு குரோதப் பார்வை பார்த்தார் தளபதி. உடன் மிகவும் கஷ்டப்பட்டு அதனை மாற்றிக் கொண்டு, வலிந்து ஒரு புன்னகை புரிந்தார்.

"மன்னர் அவருக்கு ஏதேனும் விசேஷக் கட்டளையிட்டுள்ளாரா என்று கேட்டேன், அவ்வளவே! அப்படி ஏதேனும் இருந்தால், நம் படைகளும் அவருக்கு உதவலாமே என்றுதான்…"

"ஏன், ஆரோக்கிய மந்திரி ஏதேனும் போரில் ஈடுபட்டிருக்கிறாரா?" என்று கேலியாகக் கேட்டார் ஸ்ரீவல்லபர்.

"முதன் மந்திரிக்குத் தெரியாமல் அப்படியெல்லாம் இந்தத் தேசத்தில் நடைபெற்றுவிடுமா?" என்று திருப்பினார் தளபதி. "ஏதேனும் நோய்த்தொற்று பரவுவதாக மன்னர் கூறினாரா என்றுதான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்."

"அப்படியா மந்திரியாரே? என்னிடம் அப்படி ஒன்றும் மன்னர் சொல்லவில்லையே? தங்களிடம் சொல்லியுள்ளாரா?" என்று ஆரோக்கிய மந்திரி பக்கம் திரும்பினார் ஸ்ரீவல்லபர்.

இவர்கள் சொற்போரில் அகப்பட நானா கிடைத்தேன் என்று தவித்த ஆரோக்கிய மந்திரி "இல்லை. மன்னர் ஆதுரசாலைகளைத் தயாராக வைக்கச் சொன்னாரேயன்றி, நோய்த்தொற்று எதுவும் வரப் போவதாகக் குறிப்பாகச் சொல்லவில்லை" என்றார்.

"அவர் சொல்லாதபோது நாமாக இல்லாததை ஊகிப்பது தவறன்றோ?" என்று கேட்டார் ஸ்ரீவல்லபர் புன்னகை மாறாமல்.

"ஆம்" என்று சொல்லிவிட்டு அவருக்கும் தளப்திக்கும் வணக்கம் செலுத்தி, விட்டால் போதுமென்று வெளியேறினார் ஆரோக்கிய மந்திரி.

******

ஒரு மௌனம். ஸ்ரீவல்லபரும் வெற்றிவேலரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

"வெற்றிவேலரே! மன்னர் இப்போது தலைநகரத்தில் இல்லை. மிக முக்கியமான காரியத்திற்காக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் வதந்திகளைப் பரப்புவது தவறு என்று பழுத்த அனுபவமுள்ள தங்களுக்கு நான் சொல்லிப் புரிய வேண்டிய அவசியம் இல்லை…" என்று மௌனத்தைக் கலைத்தார் ஸ்ரீவல்லபர்.

"முக்கியமான காரியம்! இரகசியமான காரியமும் போலிருக்கிறது! இல்லையெனில் முதன்மந்திரியும் மன்னரும் மட்டுமே பேசி இப்படிப்பட்ட அவசர முடிவு எடுப்பார்களா?" என்றார் வெற்றிவேலர்.

"அதிலிருந்தே உங்களுக்கு விஷயம் புரிந்திருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அதனை ஆராய்வதில் பலனென்ன? காரியம் இரகசியமென்றால் அதனை யாரிடம், எப்போது தெளிவுபடுத்துவது, அல்லது இரகசியமாகவே வைத்திருப்பது என்பதை முடிவெடுக்கும் முழு உரிமையும் மன்னருக்குத்தான் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார் ஸ்ரீவல்லபர் தண்மையாக.

"உரிமை! யார் கொடுத்த உரிமை அது? மன்னன் எதேச்சதிகாரமாகச் செயல்படலாம் என்று எந்தச் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது? மந்திராலோசனை செய்யாமல் மன்னன் ஒரு முடிவெடுக்கலாம் என்றோ, அதனைச் செயல்படுத்தலாம் என்றோ இந்த மன்னருக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்? சொல்லுங்கள் அமைச்சரே!" என்று உறுமினார் வெற்றிவேலர்.

ஸ்ரீவல்லபர் ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் வெற்றிவேலரே தொடர்ந்தார். "ஸ்ரீவல்லபரே! நம் பாண்டிய மண்டலத்தின் முந்தைய மன்னரின் பட்டமகிஷிக்குக் குழந்தைகள் இல்லை. எதிர்பாராதவிதமாகச் சேரர்களுடனான போரில் நம் மன்னர் அகால மரணமடைந்தார். ஆனால் அப்போது போரில் நாம் வென்றிருந்தோம். வீரத்தால் நம்மைப் பணியவைக்க முடியாதபோது மன்னர் மரணமடைந்ததைக் காரணம் காட்டிச் சேரநாடு நம் பாண்டிய மண்டலத்தை அடிமைப்படுத்த முயன்றது. அப்போது தாங்கள்தாம், மந்திரி மண்டலம் என்னை மன்னனாகத் தேர்ந்தெடுத்த பின்னரும்கூட, இரண்டு வயதே நிரம்பியிருந்த ஒரு பச்சிளம் பாலகனை, மன்னரின் இரண்டாவது மனைவியின் மகனை மன்னனாக அரியாசனத்தில் அமர்த்தினீர்கள். அவனுக்குக் கல்வியும் போர்க்கலையும் கற்பித்து அவனை நல்ல மன்னனாக்கினீர்கள். அதுவரை தாங்களே இந்தத் தேசத்தை நிர்வகித்தும் வந்தீர்கள்…"

"அந்தக் கோபம் – வெற்றிவேலரை நான் மன்னனாகவிடவில்லை என்ற கோபம் – இன்னமும் அவரைவிட்டு நீங்கவில்லை போலிருக்கிறது!" என்று இப்போதும் குரலை உயர்த்தாமலே கூறினார் ஸ்ரீவல்லபர்.

"அதனை நான் எப்போதோ மறந்துவிட்டேன் என்பது அமைச்சருக்கே தெரியும். என் சிந்தனை எப்போதும் இந்தத் தேசத்தின் நன்மையைக் கோரியே இயங்குகிறது. பண்டு நான் மன்னனாக விரும்பியதும் அதற்காகவே! தலைமுறை தலைமுறையாகப் பாண்டிய சிம்மாசனத்திற்கு விசுவாசமானவர்கள் என் குடும்பத்தினர். ஆனால் அதற்காக, ஆபத்து நேர்ந்திருக்கும் சமயத்தில் அரியணைப் பொறுப்புகளைத் துறந்து ஓடுகிறவர்…"

"…எச்சரிக்கிறேன், தளபதியாரே! மன்னர் எங்கு போயிருக்கிறார், எதற்காகப் போயிருக்கிறார் என்று தெரியாமல் ஏதேதோ சொல்லாதீர்கள்!" என்றார் ஸ்ரீவல்லபர். இன்னமும்கூட அவர் குரல் உயரவில்லையாயினும் அதில் கோபத்தின் அனல் தெரிந்தது.

"தெரியாததால்தானே சொல்கிறேன்! தெரிந்துவிட்டால் ஏன் சொல்லப் போகிறேன்?" என்றார் தளபதி.

"மன்னர் தன்னைப் பற்றியும் தன் செயல்களைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னாலே விசுவாசமாயிருப்போம், அவர் சொல்லவில்லையெனில் அதுவும் ஏதோ காரணத்திற்காகத்தான் என்பதை உணர மாட்டோம் என்று சொல்வது என்ன விசுவாசமோ தெரியவில்லை! என்றாலும் தளபதி, நீர் மன்னனுக்கு நன்மையைக் கருதியே இந்த உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நம்பி, தங்களிடம் சொல்கிறேன். அரசியல் விவகாரங்களில் இரகசியம் காக்க வேண்டியதன் அவசியத்தைத் தளபதிக்கு நான் போதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்…"

தளபதி ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவுமில்லை. 'மேலே சொல்லுங்கள்' என்பதுபோல் முகபாவம் காட்டினார்.

"தளபதியாரே, சிறிதுகாலத்திற்கு முன்பு சிவபாத சித்தரைச் சந்தித்தார் மன்னர். அவர் நம் பாண்டிய மண்டலத்தின் சுபிக்ஷத்திற்கு வேண்டி, ஒரு சிவாலயத்தைக் கண்டுபிடித்து அதற்குக் குடமுழுக்குச் செய்யக் கட்டளையிட்டுள்ளார். சித்தர் குறிப்பிட்ட சிவாலயத்தைப் பற்றிய குறிப்புகளை அவரிடம் கேட்டு வருவதற்காக, திரிகூட மலைக் காடுகளுக்குச் சென்றிருக்கிறார். விஷயம் அவ்வளவுதான். மதுரையில் திருவிழாக்காலம் தொடங்குவதால் ஆரோக்கிய மந்திரியைக் கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் விஷயம்" என்றார் ஸ்ரீவல்லபர்.

"இதற்கு இத்தனை இரகசியம் காக்க வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லையே" என்றார் வெற்றிவேலர் சந்தேகமாக.

"நாம் கண்டுபிடிக்க முயலும் சிவாலயத்தின் குறிப்புகள் இரகசியமான ஓரிடத்தில் இருக்கின்றன. அவ்விடத்தில் ஆபத்துகள் அதிகம். மன்னர் அவற்றைத் தனியாகவே சந்திக்க விரும்புகிறார். யாரையும் ஆபத்திற்கு ஆளாக்க அவர் விரும்பவில்லை" என்றார் ஸ்ரீவல்லபர்.

வெற்றிவேலர் புன்னகைத்தார். "இளம்வயது. சாகஸங்களைத் தேடிச் செல்லத்தான் தோன்றும்" என்று ஒப்புக்கொண்டார்.

ஸ்ரீவல்லபர் நிம்மதிப் பெருமூச்செறிந்தார்.

*****

"முதன்மந்திரி சொன்ன கதையை நீங்கள் நம்புகிறீர்களா, அப்பா?" என்று கேட்டான் சுபாங்கன்.

"நானென்ன, சிறு குழந்தைகூட அதை நம்பாது. பாண்டிய நாட்டை நோக்கி ஏதோ உற்பாதம் வந்துகொண்டிருக்கிறது என்று ஊகிக்கிறேன். அது ஏதேனும் நோய்த்தொற்றாக இருக்கலாம். அதை வெளியே சொல்லிவிட்டால், மன்னனுடைய ஆட்சியை மக்கள் குறைகூறுவார்களே என்றுதான் மன்னனும் மந்திரியும் உண்மையை மறைக்கிறார்கள்" என்றார் வெற்றிவேலர். "உற்பாதம் நிகழ்ந்தபிறகு, அதற்குப் பரிகாரம் தேடித்தான் மன்னர் நாட்டைவிட்டுச் சென்றிருந்தார் என்று சொல்லிவிடலாமே!"

"அடப்பாவிகளா! இப்போது நாம் என்ன செய்வது, அப்பா?" என்று கேட்டான் சுபாங்கன்.

"மகனே! உன்னை மன்னனாக்குவதற்குச் சிறந்த வாய்ப்பு இது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆபத்து நேரத்தில் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் மன்னர் என்பதை மக்கள் புரிந்துகொள்ளுமாறு நாம் நம் ஆட்களைக் கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். மன்னன் நாட்டிற்குத் திரும்பி வரவே கூடாது. அப்படியே வந்தாலும், மக்கள் அவனை அரியணையிலிருந்து இறக்க வேண்டும்."

"இரண்டும் நடக்கவில்லையென்றால்?"

"அவன் இறக்க வேண்டும்."

(தொடரும்)
 

6 - இன்று…​

"வாவ்! எங்க கோவைக்கு அருகில் வருகிற க்ளைமேட் இங்கேதான். ஸெட்டில் ஆனா இங்கேதான் ஆகணும்" என்றான் தர்மா, தென்காசியை அடைந்ததும்.

"இப்போ ரொம்பக் கச்சடா ஊராகிடுச்சு, கூட்டம் ஜாஸ்தி. அதுக்குத் தகுந்த சுத்தம், ஏற்பாடுகள் இல்லே" என்றான் வசந்த்.

"இது ஒரு மீட்டிங் ப்ளேஸ் – முக்கியமான ஜங்க்ஷன். கேரளாவிலிருந்து ஷாப்பிங் வரவங்க, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து குற்றாலத்திற்கு வர டூரிஸ்ட்ஸ் – கூட்டம் அதிகமாத்தான் செய்யும்" என்றான் தர்மா.

இவர்கள் பேசி முடிப்பதற்குள் ஆனைப்பாலம் தாண்டி மேலகரம் கிராமத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். அதனைக் கடந்ததும் வலப்புறம் போன பாதையில் திரும்பினார்கள். சிறிதுநேரம் பயணத்திலேயே வந்துவிட்டது திருவிலஞ்சிக் குமரன் கோயில்.

கோயிலின் முன்னால் இருந்த பெரிய வெளியில் கார் நின்று தர்மா, தன்யா, தர்ஷினி இறங்கி, வெகுநேரம் வாய்பேசாது பிரமித்து நின்றார்கள்.

"என்ன? என்னாச்சு மக்களே?" என்று கேட்டான் வசந்த். ராஜி புரிந்தவளாய்ப் புன்னகைத்தாள்.

"வயல்களும் தென்னந்தோப்புகளும் காற்றும்… கூடவே கோயிலும்… அழகான வீடுகளும்…" என்று மனதின் பரவசத்தைச் சொல்ல இயலாமல் தடுமாறினான் தர்மா.

"சென்னை மக்களுக்கு இதெல்லாம் புதுசாத்தான் இருக்கும்" என்றாள் ராஜி. "இங்கேயே பிறந்து வளர்ந்தா…"

எல்லோரும் இயற்கையை ரசிப்பதிலிருந்து திரும்பி அவளை உற்றுப் பார்த்தார்கள்.

"அப்பவும் புதுசாத்தான் இருக்கும்" என்று முடித்தாள்.

"வெல் செட் ராஜி" என்று பாராட்டினான் தர்மா.

வசந்த் ராஜியைத் திரும்பிப் பார்த்தான்.

உன் அப்பாவின் ஜாடை தெரியும் முகம் உனக்கு. பேரழகான உடலமைப்பு என்றோ கவர்ச்சியான உடைகள் என்றோ சொல்லிவிட முடியாது. பெரிதான கவரக்கூடிய குரலமைப்போ, அசர அடிக்கும் பேச்சோ கிடையாது. பிறகு ஆண்கள் எதனால் உன்னிடம் கவரப்படுகிறார்கள்? எப்படி உன்னோடு இயல்பாகப் பேசுகிறார்கள்? வெகுநாட்கள் தெரிந்தவர்கள்போல் பழகுகிறார்கள்? உன்னிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது, நீயறியாமலே!

நீ கள்ளங்கபடில்லாமல் இருக்கலாம், ஆண்கள் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை பெண்ணே! இந்தத் தர்மா… பார்வைக்கு நல்லவனாகத் தெரிகிறான். ஆனால் அவனைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கவனம் வேண்டும் கண்ணம்மா! எல்லாரோடும் ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணிக்கறது கொரோனாவுக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கும் நல்லது.


மனதில் மட்டும் இவ்வாறான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க, முகம் மட்டும் ராஜியைப் பார்த்துப் புன்னகைத்தது.

*****

"இது செல்வகுமார், இது பழனி, இது ஆண்டனி" என்று அறிமுகம் செய்தான் வசந்த். "இவங்க தர்மா, தன்யா, தர்ஷினி."

"உங்களைப் பற்றி வசந்த் சொன்னான்" என்றான் செல்வகுமார். "நான் ஹிஸ்டரி ப்ரொஃபஸர். பழனி ஆர்க்கியாலஜிஸ்ட். ஆண்டனி கோயில் ஆகமங்களில் எக்ஸ்பர்ட்" என்றான்.

"வசந்த் – கட்டுமானம், சிலை அமைப்பு இதில் எக்ஸ்பர்ட்" என்று சேர்த்துக்கொண்டாள் ராஜி.

"ராஜிக்கு எப்போதும் வசந்த் பற்றித்தான் கவலை" என்றான் ஆண்டனி.

"அப்படித்தானே இருக்கணும்" என்று சிரித்தார் பழனி. அந்தக் குழுவில் அவர் மட்டுமே நடுத்தர வயதாய்த் தெரிந்தார்.

"எப்போதும் உள்ளது சரி சார், ஆனா இங்கே வந்தாச்சுன்னா கொஞ்சம் நம்ம ப்ராஜக்ட் பற்றிக் கவலைப்பட்டா தேவலை எல்லோரும்" என்றான் செல்வகுமார்.

"இல்லைடா, அப்படி ப்ராஜக்ட் பற்றி மட்டும் கவலைப்படறது நீங்க செய்யலாம், ஆனா எங்களுக்கு நம்ம எல்லாரோட சேஃப்டியைப் பற்றிய கவலையும் இருக்கு" என்றாள் ராஜி.

அங்கிருந்த கலகலப்பான சூழ்நிலை சட்டென்று கலைந்து ஒரு இறுக்கம் பரவியது.

வசந்த் சுதாரித்துக் கொண்டான். "செல்வா, எல்லாருக்கும் காப்பி போடு. நான் நம்ம கெஸ்ட்களுக்குத் தங்கற இடத்தைச் சுற்றிக் காண்பிக்கறேன்" என்றான்.

*****

பெரிதாகச் சுற்றிப் பார்க்க ஒன்றுமில்லை.

இவர்கள் வந்த கார்கள் ஒரு வீட்டின் பின்புறம் அனுமதி பெறப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தன. தங்குவதற்கு அந்த வீட்டின் மாடியிலேயே சிறிய ஹால், ஆஸ்பெஸ்டாஸ் போட்டு. அதிலேயே சிறிய பாகம் தடுக்கப்பட்டு, பாத்ரூம் வசதிகள்.

ஒரு கேரவான் கோயிலுக்கு முன்னாலேயே நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஆய்வுக்கூடத்திற்கான வசதிகள்.

கோயிலைச் சாங்கோபாங்கமாக, நிதானமாகத் தரிசனம் செய்தார்கள். அப்போது இந்தக் கோயிலை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த காரணங்களை வசந்த் விளக்கிச் சொன்னான். தர்மா, தன்யா, தர்ஷினி கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள்.

கோயிலைவிட்டு வெளியே வந்தபோது கோயிலுக்கு எதிரேயிருந்த வெளியில் தேரடிக்குப் பின்னால் ஒரு ஷீட்டை விரித்துக் கொண்டிருந்தான் ஆண்டனி. அதில் எல்லோரும் அமர்ந்தவுடன் செல்வகுமாரும் ராஜியும் காப்பிக் கோப்பைகளுடன் வந்தார்கள்.

"ஸோ, மூலிகைகள் இருக்கற சிவாலயத்தைப் பற்றிய குறிப்புகள் இங்கே இருக்கும்ன்னு நினைக்கறீங்க" என்றாள் தர்ஷினி, இதுவரை சொல்லப்பட்ட எல்லாவற்றையும் கவனமாகக் குறிப்பெடுத்தவாறே.

"ஆக்சுவல்லி, ஜடாவர்ம பாண்டியனுக்கு அடையாளம் காட்டப்பட்ட கோயில் ஒன்று, அவனாக அடையாளங்களைக் குறித்துவைத்த கோயில் ஒன்று. இரண்டு கோயில்களில் எது இந்தக் கோயில் என்று தெரியலை. ஆனால் செப்பேட்டில் கிடைத்த ஆதாரங்கள்படி…" என்று ஆரம்பித்து மறுபடியும் எல்லாவற்றையும் விளக்கினான் வசந்த்.

காப்பியைக் குடித்ததும் மற்ற எல்லோரும் கோயிலை நோக்கிப் போய்விட்டார்கள். வசந்தும் ராஜியும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள்.

"நாங்க தேட வேண்டியது என்னன்னு இப்போ நல்லா புரிஞ்சுதா?" என்று கேட்டான் வசந்த்.

"அது நல்லா புரிஞ்சது. நாங்க தேட வேண்டியது என்னன்னுதான் புரியலை" என்றாள் தன்யா.

"எங்க வொர்க்கிலே ஹெல்ப் பண்ண…"

"வசந்த், ப்ளீஸ். டோண்ட் இன்சல்ட் அவர் இண்டலிஜென்ஸ்" என்றான் தர்மா புன்னகைத்து.

வசந்த் ராஜியை முறைத்தான். பிறகு "நாங்க முதன்முதலில் வரும்போது எங்களோடு செல்வகுமார் வரலை. வேறு ஒரு ஹிஸ்டரி புரொஃபஸர் வந்திருந்தார்" என்றான்.

"அவருக்கு என்னாச்சு?" என்றாள் தன்யா.

"தலையில் அடிபட்டுக் கோமாவில் கிடக்கார். பத்து நாளாச்சு."

"ஆக்ஸிடெண்ட் இல்லை" என்றாள் ராஜி.

"அது தெரியும்" என்பதுபோல் அவளைப் பார்த்தாள் தன்யா. பிறகு மறுபடி வசந்தை ஏறிட்டாள். "ஆக, எங்க வேலை – செக்யூரிட்டி டீடெய்ல், இல்லையா?"

"அப்படிச் சொல்ல முடியாது. நாங்க தேடற விஷயத்தைச் சீக்கிரம் கண்டுபிடிக்கணும் என்கிறதுதான் முதல் ப்ரையாரிட்டி. இங்கே வந்து கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு, நாங்க நினைச்சதைக் கண்டுபிடிக்க முடியலை. நடுவிலேயே இந்த ப்ரொஃபஸர் தாக்கப்பட்ட மேட்டர். அது அவரோட எதிரிகள் யாரோ செய்தது, பர்சனல் மேட்டர்னுதான் போலீஸ் சொன்னாங்க. இருந்தாலும் மற்ற டீம் மெம்பர்ஸ் மனதில் ஒரு பயம் இருக்கும் இல்லையா? அதான்…"

"மாரல் சப்போர்ட்?"

"அதேதான்."

"ஓகே" என்றாள் தன்யா, முழுவதுமாக ஒப்புக்கொள்ளாதவளைப் போல்.

அப்போது "வசந்த்! கொஞ்சம் இங்கே உடனே வா" என்று பழனி சார் பரபரப்பாகக் கூப்பிடும் சப்தம் கேட்டது.

(தொடரும்)
 

7 அன்று…​

ஒரேநாளில் திரிகூடமலைக் காடுகளை அடைந்துவிட்டான் ஜடாவர்மன்.

உடல் கெஞ்சிற்று, ஓய்வுக்கு. மனம் "இந்த மலையின் அழகை நின்று பாரேன்" என்று கெஞ்சிற்று. குதிரை தன் கண்களால் தன் களைப்பைக் காட்டிக் கெஞ்சிற்று.

கிராமத்தில் தங்கிவிட்டு மறுநாள் காடுகளுக்குச் செல்லலாம் என்ற சிந்தனையே அவனுக்கு வரவில்லை. மாலை மங்குவதற்குள் அவன் காடுகளுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.

ஒரு நீர்நிலையை அடைந்து அங்கே குதிரையை நிறுத்தினான். அதன் அருகிலேயே இருந்த பெரிய மரத்தின்மேல் அன்று இரவு படுத்து உறங்குவது என்று நிச்சயித்துக் கொண்டான்.

திடும்மென்று அந்த மரத்தின் பின்னாலிருந்து ஒருவர் வெளிவந்தார். "ஆரப்பா அது?" என்றார். அடர்ந்த காடுகளுக்கிடையில் ஒரு மனிதனைக் கண்டதில் அவர் ஒன்றும் பயந்ததுபோல் தெரியவில்லை.

"வணக்கம். தாங்கள் வைத்தியர்போல் காணப்படுகிறீர்கள்" என்றான் ஜடாவர்மன், அவர் கையிலிருந்த மூட்டையிலிருந்து வெளியே தெரிந்த மூலிகைகளைக் கண்டதும்.

"வைத்தியர் அப்படித்தான் காணப்படுவார். நீ கூடத்தான் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவனைப்போல் காணப்படுகிறாய்" என்றார் அவர்.

ஜடாவர்மன் சிரித்துக் கொண்டான். "முக்கியமான ராஜகாரியமாக வந்திருக்கிறேன்" என்று மட்டும் அவரிடம் சொன்னான். தன்னை யாரென்று அவர் தெரிந்து கொள்ளவில்லை என்பது அவனுக்கு ஆறுதலாக இருந்தாலும், ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொண்டுவிட்டாரே என்று வியப்பாகவும் இருந்தது.

"நல்லது இரவில் காட்டைக் கடந்து பிரயாணம் செய்ய மாட்டாய் என்று நினைக்கிறேன். இஷ்டமிருந்தால் என்னோடு வந்து என் வீட்டில் தங்கலாம்."

"இல்லை ஐயா, நான் வந்ததே காட்டுக்குத்தான். இங்கேயே தங்கிக் கொள்கிறேன்.

வைத்தியர் ஜடாவர்மனை வியப்புடன் ஏறிட்டார். "நீயும் மூலிகை பறிக்க வந்தாயா?"

"அது போன்று ஒரு வேலை" என்று மட்டும் குறிப்பிட்டான் மன்னன்.

"சரி, காட்டின் விளிம்பில்தான் என் வீடு உள்ளது. இரவு தங்கிக் கொண்டு காலை விடிந்ததும் வரலாமே" என்று மீண்டும் வலியுறுத்தினார் வைத்தியர்.

"ஐயா, தங்கள் கருணை உள்ளத்திற்கு நன்றி. ஆனால் இந்த அன்பை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையிலிருக்கிறேன். நான் தேடிவந்தது ஒருவேளை இரவில் அகப்பட்டதென்றால்? வேலை முடியும்வரை இங்கிருந்து செல்ல இயலாது" என்றான் ஜடாவர்மன் உறுதியாக.

"ஊஹும், நீ மூலிகைகளைத் தேடி வந்தவன்போல் தோன்றவில்லை. மூலிகை வைத்தியனுக்கு எந்த மூலிகை எப்போது அகப்படும் என்று நன்றாகவே தெரியும்" என்றார் வைத்தியர்.

"நான் மூலிகை தேடி வந்தேன் என்று எப்போது சொன்னேன்" என்றான் ஜடாவர்மன் புன்னகையுடன்.

"உண்மை, சொல்லவில்லைதான். நல்லது. இந்தா, இதனைப் பெற்றுக் கொள். இதனையாவது மறுக்காதே" என்றவாறே ஒரு மூட்டையை அளித்தார் வைத்தியர்.

"என்ன ஐயா இவை? எனக்கு மூலிகைகள் வேண்டாம்" என்றான் ஜடாவர்மன்.

"அரும்பாடுபட்டுத் தேடியெடுத்த மூலிகைச் செல்வங்களை அவற்றுக்கு அவசியமில்லாத உனக்கு அளிப்பதற்கு எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை" என்றார் வைத்தியர். "இது உணவு. நீ உணவருந்தவில்லை என்பது உன் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. இந்தக் குளத்து நீர் வேண்டாம், வேறு எங்கேனும் நீர்நிலைக்கருகில் அமர்ந்து உண்டுவிட்டு உன் வேலையைப் பார். வயதானவன் சொல்லும் இதையாவது கேட்டுக்கொள், எதிர்த்து வாதாடாதே" என்றார் வைத்தியர்.

ஜடாவர்மன் கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. தடுமாறிக் கொண்டு நன்றி கூறியவன், அவர் அளித்த உணவு மூட்டையை வாங்கிக் கொண்டான். "இந்த மனவளமல்லவா மண்ணின் வளமாக விகசிக்கிறது! இவர்களுக்கு வரவிருக்கும் நோய்க்கிருமியால் எவ்வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது. உயிரைக் கொடுத்தேனும் இந்த உத்தமர்களைக் காக்க வேண்டும்" என்று மனதிற்குள் உறுதிபூண்டான்.

அவனுடைய நன்றியை லட்சியம் செய்யாமல் "வருகிறேன்" என்று தடியை ஊன்றிக் கொண்டு கிளம்பிவிட்டார் வைத்தியர்.

திடீரென்று நினைத்துக் கொண்டவன்போல் பாண்டியன் "ஐயா" என்று அழைத்தான்.

"என்ன வேண்டும்?" என்று திரும்பினார் வைத்தியர்.

"இங்கே மலையில் சித்தர்கள் நடமாட்டம் உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டான்.

"ஓ! சித்தர்களைத் தேடி வந்தவனா நீ? சரிசரி, இந்தக் காட்டில் இராத்தங்கப் போவதாக நீ சொன்னதுமே நான் புரிந்து கொண்டிருக்க வேண்டும்" என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்பவரைப் போல் மொழிந்தவர் அவனை உற்று நோக்கினார். "திரிகூடமலை என்றுமே சித்தர் பூமிதானே" என்றார்.

"தாங்கள் பார்த்திருக்கிறீர்களா என்பதே என் கேள்வி."

"சிலமுறை பார்த்திருக்கிறேன்."

"யாருடனாவது பேசியிருக்கிறீர்களா?"

"சித்தர்களோடு நாம் பேச முடியாது, தம்பி! அவர்கள்தாம் நம்முடன் பேசுவார்கள், நமக்கு ப்ராப்தமிருந்தால்" என்றார் வைத்தியர்.

பாண்டியன் புரிந்ததைப் போன்று தலையை ஆட்டினான். "என் கேள்வி என்னவென்றால், சித்தர்களுள் ஒருவரை நாம் அவசியம் சந்திக்க வேண்டுமெனில், அதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? அவரை அழைப்பதற்கு ஏதேனும் முறை இருக்கிறதா…"

அந்த இருளிலும் வைத்தியரின் பார்வை ஊசிபோல் குத்த, ஜடாவர்மன் நிறுத்தினான். "சித்தர்களை நீ சந்திக்க முடியாது, ப்ராப்தமிருந்தால் அவர்கள் உன்னைச் சந்திப்பார்கள் என்று இப்போதுதானே சொன்னேன்? நீயும் தெரிந்த விஷயம்போல் தலையாட்டினாயே?"

"வைத்தியர் ஐயா, என் நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். மிக, மிக முக்கியமான, அவசரமான காரணத்திற்காய் நான் சித்தர் ஒருவரைச் சந்தித்தாக வேண்டும். இந்தக் காட்டைப் பற்றித் தெரிந்தவர் நீங்கள். சித்தர் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதி எது? சித்தர்களை அழைப்பதற்கு மந்திரம் ஏதேனும் இருக்கிறதா? இவை போன்ற தகவல்களையே தெரிந்துகொள்ள விரும்பினேன்" என்றான் ஜடாவர்மன்.

வைத்தியர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு, "என் பின்னால் வா" என்று சொல்லிவிட்டுக் காட்டின் உள்ளே வேகமாகச் சென்றார். அடர்ந்த செடிகொடிகளுக்கு இடையில் குதிரையையும் பிடித்துக் கொண்டு அவருக்குப் பின்னால் போக ஜடாவர்மன் திணறினான்.

சிறிதுதூரம் சென்றதும் மரங்களுக்கு இடையில் சிறிய வெளி காணப்பட்டது. அங்கே ஒரு லிங்கம் இருந்தது. லிங்கத்தைச் சுற்றிலும் யாரோ கற்களைக் கொண்டு மூன்றடி உயரத்தில் சிறிய சுவர் கட்டியிருந்தார்கள்.

"இங்கேயே காத்திரு. இந்த ஆலயத்திற்குச் சித்தர் பெருமக்கள் வருவதுண்டு. உனக்கு அதிர்ஷ்டமிருந்தால் உன் கண்ணில் அவர்கள் தெரியலாம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் காட்டில் நுழைந்து மறைந்தார் வைத்தியர்.

*****

ஜடாவர்மன் கற்சுவற்றுக்கு வெளியே அமர்ந்தான். நீளநீளச் சுவாசங்களால் தன் உடலையும் மனத்தையும் சாந்திப்படுத்தினான்.

மிக மெல்லியதாய்ச் "சலசல"வென்ற சப்தம் அவன் காதுகளுக்கு எட்டவே, அந்தத் திசையில் சென்று அருகிலேயே சிறிய வாய்க்கால் ஒன்றைக் கண்டான். அதன் தூய தெள்ளியதான நீரைப் பருகி, அதன் அருகிலேயே அமர்ந்து வைத்தியர் தந்த உணவையும் அருந்தினான். பிறகு மீண்டும் ஆலயத்தின் அருகில் வந்து அமர்ந்துவிட்டான்.

பொழுது விடிந்தது. காலை உணவுக்கு வாய்க்கால் நீரையே அருந்திவிட்டு ஆலயத்திற்கு வந்துவிட்டான். இப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. ஆலயத்திற்குச் சித்தர்கள் யாரும் வரவில்லை, அவன் கண்ணிலும் எந்த நடமாட்டமும் தென்படவில்லை.

நான்காம் நாள் காலை அவன் துயில் நீங்கியபோது, அவனுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், சிவலிங்கத்திற்கு இரவில் பூஜை நடந்திருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. மலர்கள் கிடந்தன. லிங்கத்திற்கு வஸ்திரம் சார்த்தப்பட்டிருந்தது. நிவேதன அன்னப் பருக்கைகள் ஓரிடத்தில் தெரிந்தன.

இரவில் சித்தர்கள் இங்கு வந்திருந்திருக்கிறார்கள்! பூஜை நடத்தியிருக்கிறார்கள்! பாவி நான், ஏதும் அறியாதவனாய் உறங்கியிருக்கிறேன்.

ஜடாவர்மன் அங்கும் இங்கும் பித்துப்பிடித்தவன்போல் ஓடினான். எங்கானும் சித்தர்களின் காலடி தெரிகிறதா, எவ்விடத்திலாகினும் அவர்கள் சென்ற பாதையின் அறிகுறி தெரிகிறதா என்று தேடினான்.

என்ன செய்கிறேன் நான்? ஆலயத்தை ஒட்டியே இருந்திருக்கிறேன், அவர்கள் வந்துபோனதை என்னால் அறிய முடியவில்லை. மண்ணிலும் காற்றிலும் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்?

ஜடாவர்மன் ஒருமுறை தன் தலையை உதறினான். சித்தர்கள் மனம் வைக்காமல் தான் அவர்களைக் காண்பது என்பது நடவாத காரியம் என்பதை ஆணித்தரமாகத் தனக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டான்.

ஜடாவர்மன் லிங்கத்தின் அருகேயே வந்து அமர்ந்தான். பசி, தூக்கம் பாராது திருவைந்தெழுத்தை ஜபிக்கலானான். நீரருந்துவதையும் நிறுத்திவிட்டான்.

ஐந்து நாட்கள் கழிந்தன. ஜடாவர்மன் பாதி மயக்க நிலைக்குப் போய்விட்டான். மனம் மாத்திரம் திருவைந்தெழுத்தை சதா உருப்போட்டுக் கொண்டிருந்தது.

இரவி மறைந்தான். இரவு உதித்தது. பால்போன்ற ஒளி படர்ந்தது. மயங்கியிருந்த ஜடாவர்மன் ஏனோ சட்டென்று விழித்துக் கொண்டான்.

ஆஹா!

அன்று முழுநிலவு போலும். அதன் தங்க ஒளியில் காடு சுவர்க்கம் போன்று காட்சியளித்தது.

"டக், டக்" என்ற காலடியோசைகள் ஜடாவர்மனுக்குக் கேட்கவாரம்பித்தன. யாரோ வருகிறார்கள்!

இந்தச் சிந்தனை ஜடாவர்மன் உள்ளத்தில் தோன்றி மறைவதற்குள் மரங்களுக்கிடையில் உருவங்கள் காணப்பட்டன. ஜடாவர்மன் சுதாரிப்பதற்குள் அங்கே பத்து, பதினைந்து பேர் கூடிவிட்டார்கள். ஆ! சித்தர்கள் அன்றோ!

வந்தவர்கள் அவனைச் சட்டை செய்யவும் இல்லை. நேராக லிங்கத்தை நோக்கி நடந்தார்கள். பூஜைப் பொருட்களைச் சுற்றிலும் பரப்பினார்கள். ஒருவர் ஜடாவர்மன் கண்ட வாய்க்காலுக்குச் சென்று குடத்தில் நீர் கொணர்ந்தார்.

பாலாபிஷேகமேபோல் வானில் பௌர்ணமிச் சந்திரன் பிரகாசிக்க, சித்தர்கள் சிவபெருமானுக்குச் சாங்கோபாங்கமாகப் பூஜைகளை நடத்தினார்கள். மந்திரச் சப்தம் தவிர வேறு பேச்சுகளே இல்லை.

பூஜை நிறைவடைந்ததும் ஒரு சித்தர் எல்லோருக்கும் பிரசாதங்களை வழங்கினார். ஒதுங்கி நின்றுகொண்டிருந்த ஜடாவர்மனுக்கும்கூட அவை வழங்கப்பட்டன.

சித்தர்கள் ஒவ்வொருவராகக் கோயிலுக்கு அடுத்திருந்த வெளியில் ஓரிடத்திற்குச் சென்று அங்கிருந்து மறைந்தார்கள். அந்த அற்புதக் காட்சியைக் கண்டு பேச்சிழந்து நின்றான் ஜடாவர்மன்.

"என்ன பாண்டியா! என்னைத் தேடி வந்தாய், என்னைக் காணாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான் ஜடாவர்மன். அங்கே சிவபாத சித்தர் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

(தொடரும்)
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom