Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


"இனிதா மோகன்-மாறாத நேசம்!_கதை திரி"

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
401
Reaction score
114
Points
93
Hi friends,
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்💐பொங்கல் அன்று என் புதிய கதை "மாறாத நேசம் ! முதல் யூடி போடுகிறேன்.
நாளை கதையின் டீசர்(முன்னோட்டம்) பதிவிடுகிறேன்..வழக்கம் போல் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
401
Reaction score
114
Points
93
Hi friends,
மாறாத நேசம்!

நாயகன்: சீர்மதியன்

நாயகி: தண்மதி


டீசர்(முன்னோட்டம்)


சீர்மதியன் பண்ணையிலிருந்து இருசக்கர வாகனத்தில் தாய் சொன்னதையே அசைபோட்டபடியே திரும்பி வந்து கொண்டிருந்தான்.


அப்போது அவனின் சிந்தனையை கலைத்தது வெள்ளி சலங்கையை உதிர்த்து விட்டாப் போல் சிரிப்பொலி ! சிந்தனை கலைந்து பார்த்தவனின் பார்வையில், இடை வரை ஆடிய பின்னலில் அணிவகுத்து நின்ற மல்லிகைச் சரமும் , அதை சூடியிருந்தவளின் அன்ன நடையும், அவனின் கவனத்தை ஈர்த்தது.


பார்த்தவுடனேயே அவனுக்கு அவள் யார் என்று தெரிந்து விட்டது. அவனது தூக்கத்தை இடைவிடாமல் கெடுக்கும் அவனின் மாமன் மகள் 'தண்மதி ' தான் !


அவளின் வானர கூட்டத்துடன் பேசி சிரித்த படி சென்றவளின் குறுக்கே, தன் வண்டியை அவள் வழியை மறித்து நிறுத்தினான்.


தண்மதியோ, யார் குறுக்கே வண்டியை நிறுத்துவதென்று நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கே சீர்மதியனைக் கண்டதும் அவள் சொல்ல முடியாத கோவத்துடன் முகம் இரத்தமென சிவக்க..பற்களை நறநறவெனக் கடித்த படி,


"எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி வழி மறித்துக் கொண்டு நிற்பீங்க.." என்று கோபமாக கத்தினாள்.


அவனோ, அவளின் கோபத்தை துளியும் மதிக்காமல் " ம்ம்..! உன் தாத்தன் போட்ட சோத்தில் வந்த திமிர் .." என்றான் நக்கலாக,


அவளோ, " மரியாதையாக வழி விடுங்கள்! இல்லை நடப்பதே வேறு.." என்றவளிடம்,


"என்ன செய்வே ?"என்று அவளின் ஆத்திரத்தை மேலும் கிளப்பினான்.


அவளும் , அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பதை போல்.. "என் அண்ணனுக்கு மட்டும் இது தெரிந்தால் ? உங்களைக் கண்ட துண்டாம வெட்டி போட்டுறுவாங்க.. ஞாபகம் வச்சுக்கோங்க.."


" யாரு உங்கண்ணன் என்னை வெட்டுவானா? அவனே ஒரு வெத்து வேட்டு! அவன் என்னை வெட்டற வரைக்கும் என் கை என்ன பூ பறிக்குமா? இந்த பூச்சாண்டி காட்டற வேலை எல்லாம் வேறு யாருகிட்டயாவது வச்சுக்கோ !" என்றவனிடம்,


தன் அண்ணனை சொன்ன கோபத்தில், " எங்க அண்ணனையா வெத்து வேட்டுங்கிறீங்க..? மாடு மேய்க்கிற உனக்கே இத்தனை திமிர் இருந்தா ! எங்க அண்ணாவுக்கு எத்தனை திமிர் இருக்கும்.." என்று ஆத்திரத்தில் அவனை ஏகவசனத்தில் பேசியவள், குறுக்கே வண்டியில் நின்ற அவனைச் சுற்றிக் கொண்டு.. ஒதுங்கி நின்று இவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தோழிகளிடம், " வாங்க டீ போலாம்.." என்று கூறியபடி நடையே வேகமாக்கினாள்.


சீர்மதியன் அவளின் வார்த்தைகளைக் கேட்டு எரிமலையாய் குமரியவன்.. "போடி போ.. இந்த மாட்டுக்காரன் தான், உனக்கு மூக்கனாங்கயிறு போடப் போறேன் பார்த்துட்டே இரு.." என்று ஆத்திரத்தில் கத்தினான்.


தண்மதியோ, அவன் சொன்னதற்கு நடந்து கொண்டே " அது இந்த ஜென்மத்தில் நடக்காது..கனவு காணதே.." என்றபடி வேகமாக நடந்தாள்.
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
401
Reaction score
114
Points
93



மாறாத நேசம்!


அத்தியாயம் 1


மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல்,பாதை முழுவதும் பனியால் மூடி இருள் கவிழ்ந்திருந்த மண் சாலையில்! தன் இருசக்கர வாகனத்தின் ஒளியால், காற்றைக் கிழித்துக் கொண்டு, தன்னுடைய பால்பண்ணையை நோக்கிச் சீறிப் பாய்ந்தான் சீர்மதியன்.


தன் தாய் 'பொன் மணியின்' பெயரையும்,தந்தை 'கோவழகனின் பெயரையும் சேர்த்து 'கோமணி' என்ற பெயரில் பால்பண்ணையை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் பத்து நாட்டு மாடுகளுடன் ஆரம்பித்தான்.


இப்போது நூறு மாடுகளுடன் விரிவடைந்து சிறப்பாக வளர்ந்திருக்கிறது.அதற்கு காரணம், அவனுடைய கடின உழைப்பு மட்டுமே!


உரிய நேரத்தில் , பாலைக் கறந்து அருகில் இருக்கும், நகரங்களில் பசுமை அங்காடிகளுக்கு கொடுத்து வருகிறான்.


இயற்கை முறையில் விளைந்த தீவனங்களை மட்டுமே! மாடுகளுக்கு உணவாக கொடுப்பதால், அவனுடைய பண்ணைப் பால் நல்ல அடர்த்தியாகவும்,ருசியாகவும் இருந்தது.



அதனாலேயே 'கோமணி' பாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதுமட்டுமின்றி மீதமாகும் பாலின் ஆர்டரைப் பொறுத்து வெண்ணெய்,நெய்,பன்னீரும் தாயாரித்து உபரியாக விற்பனை செய்கிறான்.


இத்துடன் மாட்டுச் சாணம், கோமியம் என்று எதையும் வீணாக்காமல் விற்பனை செய்கிறான்.பஞ்சகவ்யம் தாயரித்தும் விற்பனை செய்கிறான்.அவனைப் பொருத்தவரை பசு ஒரு அட்சயப் பாத்திரம் போல்..


கோவழகனோ, மகன் சீர்மதியன் பால் பண்ணை வைக்கிறேன் என்று கூறிய போது விருப்பமில்லாமல் தான் சம்மதித்தார்.ஆனால் ,இந்த ஐந்து வருடங்களில் அவனுடைய அசுரவளர்ச்சியைக் கண்டு அவரே பெற்றவராக பெருமை பட்டுக் கொண்டார்.


மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் , அவனோ இளங்கலை விலங்கியல் மட்டுமே படித்துவிட்டு, பிடிவாதம் பிடித்து பால் பண்ணை வைத்தான். முதலில் வருத்தப்பட்டாலும் இப்போது மகனின் வளர்ச்சியில் வியந்தார்.


மகனுக்கு பார்த்து.. பார்த்து, சீர்மதியன்! என்று பொருளுணர்ந்து தமிழ் பெயரை வைத்தார். சீர்மதியன் பெயருக்கு சிறப்பான அறிவு உடையவன் என்று பொருள் .அந்த பெயருக்கு ஏற்றப் போல் நுட்பமான அறிவும்,நன்நெறியும் ஒருச் சேர பெற்றிருந்தான்.


சீர்மதியன் பெற்றவர்கள் மீது மட்டுமின்றி தன் தமக்கை 'தூயமுல்லை' மீதும் அளவுகடந்த அன்பு கொண்டவன்.


திருமணமான தூயமுல்லைக்கு தாய், தந்தை என்ன சீர் செய்தாலும் ,தானும் தன் பங்குக்கு குறைவில்லாமல் செய்வான்.அதுவும் அக்கா மகள் 'ஏந்திழை' என்றால் அவனுக்கு உயிர்.


தன் அக்காவின் கணவர் கனியமுதனிடம் பெரும் மரியாதையும்,பாசமும் கொண்டவன்.


கோவழகனுக்கு மகனின் நற்குணங்கள் பெரும் மகிழ்ச்சியை கொடுப்பது மட்டுமின்றி, தான் இல்லையென்றால் கூட மகள் தூயமுல்லைக்கு சகோதரனாக,பேத்தி ஏந்திழைக்கு நல்ல தாய்மாமனாக மகன் இருப்பான் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கையும் ,நிம்மிதியும் எப்போதும் அவருக்கு இருந்தது.


சீர்மதியன் பண்ணையை நெருங்கும் போதே காவலாளி 'வீரய்யன்' ஓடோடி வந்து கேட்டை திறந்து விட்டார்.அவரிடம் சிறு தலை அசைப்புடன் வண்டியை நிறுத்திவிட்டு ,நேராக பால் கறக்கும் இடம் நோக்கிச் சென்றான்.


பால் கறப்பதற்கு நவீன இயந்திரங்கள் இருப்பதால் பெரிதாக கஷ்டம் இல்லை. வேலையாட்களே , அதைப் பார்த்துக் கொள்வார்கள்.இருந்தாலும் தினமும் அதிகாலையே சீர்மதியன் பால் பண்ணைக்கு வந்து விடுவான்.


'உடையவன் பாராத பயிர் உருப்படாது' என்ற பழமொழி சொல்லுவார்கள்! அது போல், அவன் கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழிலை யாரை நம்பியும் விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.


வேலையை முடித்துவிட்டு பால்பண்ணையிலிருந்து,வீட்டுக்கு சென்றவனை பொன்மணி இன்முகத்துடனேயே வரவேற்றார்.


மகனிடம், "சீரா.. சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, என்னைக் கொஞ்சம் பெருமாள் கோவில் கூட்டிட்டு போறியா?"என்றபடியே தட்டை வைத்து, மகனுக்கு சுடச்சுட இட்லியையும்,சாம்பாரையும் பரிமாறினார்.


சீர்மதியன் கைகளை கழுவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தவன், "இன்னைக்கு சனிக்கிழமை கூட இல்லையே? பெருமாள் கோவிலில் என்ன விஷேசம் மா.."என்றான்.


"என்ன சீரா.. இன்னுமா உனக்கு புரியலை..உங்க பாட்டி வரச் சொல்லியிருப்பாங்க அது தான்.." என்று கூறியபடியே மகன் அருகில் வந்து அமர்ந்தார் கோவழகன்.


"ஓ..!அதுவா சங்கதி..என்ன வில்லங்கம் வரப்போகுதோ தெரியலையே.." என்றபடி சாப்பிட்டான் சீர்மதியன்.


" ஏம்ப்பா அப்படி சொல்றே..?"என்ற பொன்மணியிடம்,


"அம்மா ! பாட்டி எப்போ உங்களைப் பார்த்தாலும், ஏதாவது ஒரு பிரச்சினை வருதே அதனால் சொன்னேன்.."


"என்னமோ போப்பா ..பாட்டியாவது பேசறாங்களேன்னு நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கேன்.." என்று பெருமூச்சு விட்ட மனைவியிடம்,


"மணிம்மா.. நீ வருத்தப்படாதே, எல்லாம் ஒரு நாள் சரியாகும்.."என்றார் கோவழகன்.


கணவனின் வார்த்தைகளை பொன்மணி ஆமோதிப்பது போல் , "அந்த நாளுக்காகத் தான், நானும் தவம் கிடக்கிறேன். நான் கண்ணை மூடுவதற்குள் அது நடந்து விடாதா? என்று ஏங்கித் தவிக்கிறேன்.." என்று கலங்கிய குரலில் கூறியவரிடம்,


"அம்மா இது என்ன பேச்சு.. அவர்கள் பேசாததால், இப்போ என்ன குடியா முழ்கீருச்சு.. எப்ப பார்த்தாலும் அதையே நினைச்சு உடம்பைக் கெடுத்துக் கொள்வது.." என்று தாயைக் கடிந்து கொண்டான் சீர்மதியன்.


தன் பிரியத்திற்குரிய மனைவியிடம் மகன் கடிந்து கொள்வதை காணப் பொறுக்காமல், "விடுப்பா .. நீயும் அவளை புரிந்து கொள்ளாமல் பேசினால் எப்படி? எல்லாம் ஒரு நாள் சரியாகும்.. "என்றார் கோவழகன் பொறுமையாக!


தந்தை சொல்லுக்கு மறு வார்த்தை பேசாமல், சீர்மதியனும் அமைதி காத்தான்.


மகனின் அமைதி அவரையும் வருத்தியது.உடனே , "சீரா நீ போய் அம்மாவை கோயிலில் இறக்கிவிட்டுட்டு.. அப்படியே, போய் மணியகாரைப் பார்த்துட்டு வா! அவர் மகள் கல்யாணத்திற்கு பால் வேண்டுமென்று கேட்டு இருந்தார்.நீ போய் விசாரிச்சுட்டு வாப்பா.." என்று மகனின் மனநிலையை மாற்றினார்.


சீர்மதியனோ தந்தையிடம் தலையை ஆட்டிவிட்டு தாயை அழைத்துக்கொண்டு கோவிலை நோக்கி விரைந்தான்.


அவர்கள் இருவரும் சென்றபின்.. கோவழகன் வாசலில் இருந்த சாய்வு நாற்காலியில் கண்களை மூடிச் சாய்ந்து கொண்டு, பழைய நினைவுகளை சிறு வலியுடன் அசைப்போட்டார்.


அவரின் மனதிற்குள் பல சம்பவங்கள் காட்சியாக ஓடியது.


கோவழகன் கடந்த இரண்டு வருடங்களாக, வீட்டில் தான் ஓய்வெடுத்து வருகிறார். சீர்மதியன் பால்பண்ணை வைத்து அதில் ஓரளவு வருமானம் வர ஆரம்பித்ததுமே, தந்தை வேலைக்கு செல்வதை கட்டாயப்படுத்தி தடுத்து விடடான்.


கோவழகன் பக்கத்தூரில் இருந்த அரிசி ஆலைகளுக்கு கணக்கு எழுதும் கணக்காளராக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். ஓய்வில்லாத உழைப்பு.


எந்த கெட்ட பழக்க பழக்கமும் இல்லாத ஒழுக்க சீலர்! வாங்கும் சம்பளத்தில் தனக்கென்று ஒத்த ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல் மனைவியிடம் அப்படியே கொடுத்து விடுவார்.


பொன்மணியும் அவருக்கு ஏற்ற குணவதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டார். வீட்டில் ஓய்வாக இருக்கும் போது, தன் தாயிடம் விருப்ப பட்டு , 'ஊறுகாய்' போடக் கற்றுக் கொண்டதை வீணாக்காமல் கேட்பவர்களுக்கு, எல்லா வகையான ஊறுகாய் போட்டுக் கொடுத்து அதன் மூலமும் சிறு வருவாய் ஈட்டினார்.


கோவழகனுக்கு முதலில் மனைவியின் செயலில் விருப்பமில்லாவிட்டாலும், அவரின் ஆர்வத்தைக் கண்டு அமைதியானார். ஆனால், அவரின் மனம் மட்டும் எப்படி வளர்ந்தவள்! தன்னால் இங்கே வந்து கஷ்டப்படுகிறாளே ! என்று ஊமையாய் அழுதது.


பொன்மணி கணவனைப் போல் எல்லாம் தன் நிலைகண்டு வருந்தவில்லை.விருப்பப்பட்டு அமைத்துக் கொண்ட வாழ்க்கையை விருப்பமாகவே வாழ்ந்தார்.


கணவனின் வருமானத்தையும், ஊறுகாய் வியாபாரத்தில் வந்த சிறு வருமானத்தையும் வைத்து மிக அழகாக குடும்பம் நடத்தினார்.இரு பிள்ளைகளையும் விருப்பப்பட்டதை படிக்க வைத்ததுடன் ,மகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணத்தையும் முடித்தார்.


மருமகன் கனியமுதனும் தன் கணவரைப் போலவே குணசீலன் தான்.அரசாங்க வங்கியில் மேலாளராக வேலை பார்க்கிறார்.மகனுக்கும் நல்லபடியாக திருமணத்தை முடித்து விட்டால் அவர் கடமை தீரும்.


ஆனால், என்ன அவருக்குள் இருக்கும் ஆசை மட்டும் நிறைவேறும் நாளுக்காக காத்துக் கிடக்கிறார்.


மனைவியின் ஆசை நிறைவேற வேண்டுமென்று, கணவனாக கோவழகனுக்குள்ளும் அந்த எண்ணம் எந்நேரமும் புழுவாக அரித்துக் கொண்டே இருந்தது.


அவரைப் பொருத்தவரை மகன் சீர்மதியனை நினைத்தாலே ! கொஞ்சம் பயமாக இருந்தது. எந்ந நேரம் அந்த குடும்பத்துடன் என்ன‌ சண்டையை இழுத்துக் கொண்டு வருவானோ? என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் இருந்தார்.


இளங்கன்று பயமறியாது என்பதைப் போல் ,அவனின் வேகமும்,கோபமும் அவரை பெரும் கவலைக்குள் தள்ளியது.


என்ன தான் தன் வார்த்தையை மகன் மதித்தாலும், இந்த ஒரு விசயத்தில் மட்டும் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருவதை அவரால் தடுக்க முடியவில்லையே? என்று மனம் போன திசைக்கு பயணித்தவர் ஒரு நெடிய பெருமூச்சை விட்டு தன்னை சமன் படுத்திக் கொண்டார்.


சீர்மதியனோ, தாயை கோவிலில் இறக்கி விட்டு விட்டு தன் வேலையை பார்க்கச் சென்றான்.


பொன்மணியோ, கோவிலுக்குள் தன் தாயை தேடியபடியே தெய்வத்தை கும்பிட்டு முடித்தார்.கோவில் மண்டபத்தில் ஓர் ஓரமாக சென்று அமர்ந்து கொண்டு, தாயுக்காக காத்து இருந்தார்.


சிறிது நேரத்தில், அருகில் "பொன்னு.." என்ற தாயின் குரலில் பூவாய் மலர்ந்த முகத்துடன் திரும்பி பார்த்தார்.


அங்கே தூயநாச்சி , பச்சை வண்ணப் பட்டுப்புடவையில், மஞ்சள் பூசிய முகத்தில் நெத்தி நிறைய குங்குமத்துடன் அழகு சிலையாக நின்றிருந்தார்.


தாயைக் கண்டதும் சிறுகுழந்தையைப் போல், துள்ளிக் கொண்டு எழுந்த மகளை ஆரத்தழுவிக் கொண்டார் தூயநாச்சி.


"அம்மா எப்படி இருக்கீங்க..? அப்பா நல்லா இருக்காரா..?அண்ணா அண்ணி பசங்க எல்லாரும் சவுக்கியமா ? "என்று மூச்சு விடாமல் பேசிய மகளிடம்.


"போதும்..போதும் ..கொஞ்சம் மூச்சு விட்டுத் தான் பேசேண்டி ..எல்லாரும் நல்லா இருக்காங்க. அங்க மாப்பிள்ளே, என் பேராண்டி எல்லாம் நல்லா இருக்காங்களா?முல்லை பேசினாளா ?"என்ற அன்னையிடம்,


"எல்லாம் நல்லா இருக்காங்க மா..முல்லை காலையில கூட பேசினாள்.இரண்டாவது குழந்தை உண்டாகி இருக்கா.." என்று சொன்ன மகளிடம்,


" அப்படியா ரொம்ப சந்தோஷம் மா.. காலையிலேயே நல்ல விஷயம் சொல்லிட்டே.. இனி எல்லாம் நல்லாதாகவே நடக்கும்.." என்று கூறியவர் தன் பிரசாத தட்டிலிருந்த சர்க்கரைப் பொங்கலை எடுத்து மகளின் வாயில் ஊட்டினார்.


மார்கழி மாதம் என்பதால் கோவிலில் கொஞ்சம் கூட்டம் இருக்கத் தான் செய்தது.பக்கத்து ஊர் என்பதால் இவர்களை யாருக்கும் அதிகமாக தெரியாது.இதே உள்ளூர் என்றால் யாராவது மகளுடன் பேசுவதை பார்த்ததுவிட்டு போய் தன் கணவரிடம் வத்தி வைக்கவும் வாய்ப்பிருக்கு!


அதனால் தான் ,மகளை எப்போது பார்க்க வேண்டுமென்றாலும் இந்த கோவிலுக்கு வரச் சொல்லிவிடுவார் தூயநாச்சி.


என்ன தான் தொழில்நுட்பம் முன்னேறி இருந்தாலும், போனில் இந்த மாதிரி மகளை நேரில் கண் குளிர கண்டு பேசமுடியாதே..அதுவும் இல்லாமல் வீட்டில் இரண்டு வில்லன்களை வைத்துக் கொண்டு நிம்மதியாக ஒரு வார்த்தை கூட பேசமுடியாது.


'மகளுடன் பேசுவது மட்டும் தன் கணவன் அருமை நாயகத்துக்கு தெரிந்தால், வீடு ரெண்டாகிவிடும்..' என்று மனதிற்குள் நினைத்தவர். கூட்டம் அதிகம் இல்லாத இடமாக பார்த்து, கோவில் மண்டபத்தில் மகளுடன் அமர்ந்து கொண்டவர், தான் பேச வந்த விசயத்தை மகள் காதில் போட்டார்.


பொன்மணியோ, தாய் சொன்ன விசயத்தைக் கேட்டு விழி அசையாமல் அதிர்ச்சியில் உறைந்தார்.


மகளின் திகைப்பைக் கண்டு கொள்ளாமல், மகளை உலுக்கி நிகழ்வுக்கு கொண்டு வந்த தூயநாச்சி , "நான் சொன்னதை நீ சீராவிடம் சொல்லு ..மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்.." என்று மகளுக்கு தைரியம் சொல்லிச் சென்றார்.


பொன்மணியோ ,திரும்ப அழைக்க வந்த மகனிடம் தாய் சொன்னதை தயக்கத்துடனேயே கூறினார்.


சீர்மதியனோ, பதிலேதும் சொல்லாமல் யோசனையுடனே வீட்டில் பொன்மணியை இறக்கி விட்டுவிட்டு, பால் பண்ணைக்கு செல்லுவதாக கூறிச் சென்றான்.


மகன் பதிலேதும் சொல்லாது பொன்மணிக்கு சிறு ஏமற்றமாக இருந்தாலும், மகனின் மீது இருந்த நம்பிக்கையில் அமைதியானார்.


மனதிற்குள், 'எல்லாம் நல்லபடியாக நடந்தால் பிரிந்த குடும்பம் சேருவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு..' என்று எண்ணினார்.



சீர்மதியன் பண்ணையிலிருந்து இருசக்கர வாகனத்தில் தாய் சொன்னதையே அசைபோட்டபடியே திரும்பி வந்து கொண்டிருந்தான்.


அப்போது அவனின் சிந்தனையை கலைத்தது வெள்ளி சலங்கையை உதிர்த்து விட்டாப் போல் சிரிப்பொலி ! சிந்தனை கலைந்து பார்த்தவனின் பார்வையில், இடை வரை ஆடிய பின்னலில் அணிவகுத்து நின்ற மல்லிகைச் சரமும் , அதை சூடியிருந்தவளின் அன்ன நடையும், அவனின் கவனத்தை ஈர்த்தது.


பார்த்தவுடனேயே அவனுக்கு அவள் யார் என்று தெரிந்து விட்டது. அவனது தூக்கத்தை இடைவிடாமல் கெடுக்கும் அவனின் மாமன் மகள் 'தண்மதி ' தான் !


அவளின் வானர கூட்டத்துடன் பேசி சிரித்த படி சென்றவளின் குறுக்கே, தன் வண்டியை அவள் வழியை மறித்து நிறுத்தினான்.


தண்மதியோ, யார் குறுக்கே வண்டியை நிறுத்துவதென்று நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கே சீர்மதியனைக் கண்டதும் அவள் சொல்ல முடியாத கோவத்துடன் முகம் இரத்தமென சிவக்க..பற்களை நறநறவெனக் கடித்த படி,


"எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி வழி மறித்துக் கொண்டு நிற்பீங்க.." என்று கோபமாக கத்தினாள்.


அவனோ, அவளின் கோபத்தை துளியும் மதிக்காமல் " ம்ம்..! உன் தாத்தன் போட்ட சோத்தில் வந்த திமிர் .." என்றான் நக்கலாக,


அவளோ, " மரியாதையாக வழி விடுங்கள்! இல்லை நடப்பதே வேறு.." என்றவளிடம்,


"என்ன செய்வே ?"என்று அவளின் ஆத்திரத்தை மேலும் கிளப்பினான்.


அவளும் , அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பதை போல்.. "என் அண்ணனுக்கு மட்டும் இது தெரிந்தால் ? உங்களைக் கண்ட துண்டாம வெட்டி போட்டுறுவாங்க.. ஞாபகம் வச்சுக்கோங்க.."


" யாரு உங்கண்ணன் என்னை வெட்டுவானா? அவனே ஒரு வெத்து வேட்டு! அவன் என்னை வெட்டற வரைக்கும் என் கை என்ன பூ பறிக்குமா? இந்த பூச்சாண்டி காட்டற வேலை எல்லாம் வேறு யாருகிட்டயாவது வச்சுக்கோ !" என்றவனிடம்,


தன் அண்ணனை சொன்ன கோபத்தில், " எங்க அண்ணனையா வெத்து வேட்டுங்கிறீங்க..? மாடு மேய்க்கிற உனக்கே இத்தனை திமிர் இருந்தா ! எங்க அண்ணாவுக்கு எத்தனை திமிர் இருக்கும்.." என்று ஆத்திரத்தில் அவனை ஏகவசனத்தில் பேசியவள், குறுக்கே வண்டியில் நின்ற அவனைச் சுற்றிக் கொண்டு.. ஒதுங்கி நின்று இவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தோழிகளிடம், " வாங்க டீ போலாம்.." என்று கூறியபடி நடையே வேகமாக்கினாள்.


சீர்மதியனுக்கோ, அவளின் வார்த்தைகளை கேட்டு எரிமலையாய் குமரியவன். "போடி போ.. இந்த மாட்டுக்காரன் தான், உனக்கு மூக்கனாங்கயிறு போடப் போறேன் பார்த்துட்டே இரு.." என்று ஆத்திரத்தில் கத்தினான்.


தண்மதியோ, அவன் சொன்னதற்கு நடந்து கொண்டே " அது இந்த ஜென்மத்தில் நடக்காது..கனவு காணதே.." என்றபடி வேகமாக நடந்தாள்.


அவனோ, 'அதையும் பார்போமடி..' என்று மனதிற்குள் குமறியவன்.மதியம் தன் தாய் சொன்னதைக் கேட்டு குழப்பத்தில் இருந்தவன், இந்த நொடி என்ன செய்ய வேண்டுமென்று தெளிவான முடிவெடுத்தான்.



காலம் என்ன வைத்து காத்து இருக்கோ..?யாருக்கு யாரோ? யார் அறிவார்?


நேசம் தொடரும்..


Hi friends,
அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துகள்! மாறாத நேசம் முதல் அத்தியாயம் போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்








 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
401
Reaction score
114
Points
93
மாறாத நேசம்!

அத்தியாயம் 2

தண்மதியின் மனது எரிமலையாய் குமறிக் கொண்டிருந்தது. அம்மன் கோவிலில் தெய்வத்தை வணங்கிவிட்டு மனநிறைவுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தாள்.

ஆனால் ,அவளின் மகிழ்ச்சியயை சில நொடிகளிலேயே வேரோடு பிடிங்கி எரிந்து விட்டானே படுபாவி.

சீர்மதியன் சின்ன வயதிலிருந்தே இப்படித் தான்! அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவளின் நிம்மதியை குழிதோண்டிப் புதைத்து விட்டுத் தான், மறுவேலை பார்ப்பான் அந்த ராட்சசன்.

'அவளின் நிம்மதியை கெடுப்பதில் அப்படி என்ன தான் சந்தோஷமோ ! தெரியவில்லை அந்த அரக்கனுக்கு..' என்று மனதிற்குள் அவனை திட்டித் தீர்த்தபடியே வீட்டிற்குள் நுழைந்தவள், எதிரில் வந்த தன் அண்ணன் முறைவழுதியை கவனிக்கவில்லை.

ஆனால், வழுதி தங்கையின் முகத்தில் தெரிந்த கோபத்தை கண்ட நொடியே உணர்ந்து கொண்டான். உடனே தன்னை கவனிக்காமல் போனவளை தடுத்து நிறுத்தி, "தணு என்னடமா ஆச்சு?முகமே சரியில்லையே..?"என்று அக்கறையாக விசாரித்தான்.

தன் அண்ணனின் குரலில் தான், தண்மதி சுற்றுப்புறத்தையே உணர்ந்தாள். உடனே, "அதெல்லாம் ஒண்ணுமில்லைண்ணா..லேசா தலைவலி அது தான் .. வேறொன்றுமில்லை.." என்றவள் ,அதற்கு மேல் அங்கே நிற்காமல் வீட்டுக்குள் சென்றாள்.

தன் அண்ணனைப் பற்றி அவள் நன்கு அறிவாள். இன்னும் சில நொடி நின்று பேசினாலே போதும், அவள் வாயாலேயே நடந்தவற்றை சொல்ல வைத்துவிடுவான். அதனாலேயே தண்மதி, பேச்சை வளர்க்காமல் தப்பித்தால் போதுமென்று உள்ளே ஓடி வந்துவிட்டாள்.

ஏற்கனவே சீர்மதியனை கண்டால் அவனுக்கு ஆகவே ஆகாது.பார்க்கும் போதெல்லாம் இருவரும் ஏதாவது ஒரு சண்டையை இழுத்துக் கொண்டு தான் வருவார்கள்.இதில் இது வேறு தெரிந்தால் அவ்வளவுதான்! என்று மனதிற்குள் பெருமூச்சு விட்டபடியே தன் பாட்டி தூயநாச்சியை தேடிச் சென்றாள்.

வழுதி, போகும் தங்கையை பார்த்தபடியே அசையாமல் சில நொடி நின்றான்.தன் தங்கை பொய் உரைத்து சென்றது அப்பட்டமாகவே தெரிந்தது.ஏதோ நடந்திருக்கிறது என்று சரியாக ஊகித்தான்.

முறைவழுதிக்கும்,சீர்மதியனுக்கும் எதில் ஒற்றுமை இருக்கோ? இல்லையோ? ஆனால், கோபத்தில் மட்டும் இருவரும் தராசில் வைத்தால் சமமாக இருப்பார்கள்.

தங்கை மீது அலாதி பாசம் வைத்திருப்பவன்.தங்கை தன்னிடம் மறைத்தாலும், அதை அறிந்து கொள்ள உந்திய மனதை அப்போது அடக்கினான்.

யோசனையுடனேயே தண்மதியின் நெருங்கிய தோழி மணிச்சுடரிடம் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்.தங்கை எப்போதும் மணிச்சுடருடன் தான் கோவிலுக்கு போவாள் என்பதை நன்கு அறிவான்.

தண்மதியும்,மணிச்சுடரும் சிறு வயதிலிருந்தே தோழிகள்.வசதியிலும் தங்களுக்கு இணையானவள்.அதனால் தான் ,தண்மதியை மணிச்சுடருடன் தன் தாத்தா அருமைநாயகம் பழக விட்டு இருக்கிறார்.வசதி குறைவாக இருந்தால் பழக விடுவாரா அவர்?

என்ன தான் ஊர் பஞ்சாயத்து தலைவராக தாத்தா 'அருமைநாயகம்' இருந்தாலும்,பழமையில் ஊறியவர். சாதியையும், அந்தஸ்தையும் உயர்வாக எண்ணக் கூடியவர்.

அவர்கள் வீட்டில் தாத்தா அருமைநாயகம் வைத்துதான் சட்டம். அப்பா செம்பியனும் ,அம்மா பூந்தாழையும் அவர் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டார்கள்.

தாத்தாவின் கண்காணிப்பில் தான் முறைவழுதியும் தண்மதியும் வளர்ந்தார்கள். தாத்தா, பாட்டி என்றால் இருவருக்குமே கொள்ளை பாசம். அதுவும் தாத்தா மீது தனி மரியாதை உண்டு .அதற்கு காரணம் செம்பியன் தான்.அவரும் தந்தை சொல்லுக்கு மறு வார்த்தை பேச மாட்டார். அதே போல் தன் பிள்ளைகளையும் பேச விடமாட்டார்.

அருமைநாயக்ததிற்கு சீர்மதியனைக் கண்டாலே ஆகாது.அதனாலேயே சிறுவயதிலிருந்தே சீர்மதியனைக் கண்டால் அண்ணன்,தங்கை இருவருக்கும் ஆகவே ஆகாது.

சீர்மதியன் பார்க்கும் போதெல்லாம் தன்னுடனும், தன் தாத்தாவுடன் வம்பிழுத்துக் கொண்டே தான் இருப்பான். எப்போதும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதில் அவன் பங்கு இல்லாமல் இருக்காது.

இன்றும் தங்கையின் முகமாற்றத்திற்கும், சீர்மதியனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் அவன் மனதை ஆட்கொண்டது.

வழுதி அதே யோசனையுடனேயே, தன் வேலையைப் பார்க்க வெளியில் சென்றான்.கும்பிடப் போனத் தெய்வம் குறுக்கே வந்தது போல் வழியில் மணிச்சுடரை கண்டான்.

நடந்ததை அறியும் ஆவலில் அவளை நிறுத்தி, எதார்த்தமாக கேட்பது போல் கேட்டு, அனைத்தையும் அறிந்து கொண்டான்.

மணிச்சுடர் கூறியதைக் கேட்டு அவன் மனம் எரிமலையாய் வெடித்தது . அவள் கூறி முடித்ததும் சீர்மதியனை கொன்று விடும் ஆத்திரத்தில் அவன் பண்ணையை நோக்கி சீறிப்பாயும் வெள்ள நீர் போல் பறந்தான்.

சீர்மதியனும் சரியாக தன் வேலைகளை முடித்து விட்டு, மனதிற்குள் தண்மதி பேசியதைப் பற்றி எண்ணிய படியே வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அப்போது அசுர வேகத்தில் அவனின் வாகனத்தின் குறுக்கே தன் வாகனத்தை வழி மறித்து நிறுத்திய வழுதி. அடங்கா கோபத்துடன் வண்டியிலிருந்து இறங்கி புயல் வேகத்தில் சீர்மதியன் சட்டையைப் பிடித்தான்.

சீர்மதியனுக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை.அடுத்த நொடியே தன்னை சுதாரித்துக் கொண்டு, தன் சட்டையைப் பிடித்திருந்த வழுதியின் கைகளை ஒரு நக்கல் சிரிப்புடன் விலக்கினான்.

வழுதி அவனின் சிரிப்பைக் கண்டு கண்கள் இரத்தமெனச் சிவக்க ,அடக்க முடியாத ஆத்திரத்துடன் " டேய்.."என்று பற்களை நற..நறவெனக் கடித்தான்.

சீர்மதியன் அவன் கோபத்தை சட்டை செய்யாமல்.."கூல் மச்சான் கூல்..இவ்வளவு கோபம் உடம்புக்கு ஆகாது. நீ நல்லாயிருந்தாத் தானே நாளைக்கு என் குழந்தைகளுக்கு முறைமாமன் சீர் செய்ய முடியும் .."என்று அவனின் கோபத்தை மேலும் வானளவு உயர்த்தினான்.

வழுதி அவனின் நக்கல் பேச்சினைக் கேட்டு கோபத்தில் கை நரம்புகள் புடைக்க.." ஏண்டா உன் தகுதிக்கு என் தங்கச்சி கேட்குதா? குருடனுக்கு கொம்புத் தேனுக்கு ஆசையா..?ஏண்டா உனக்கும்,உன் அப்பனுக்கும் ஊர்ல வேறே பொண்ணுங்களே கிடைக்கலையா?எங்க வீட்டு பொண்ணுக மேலையே தான் கண்ணா?" என்றான்.

சீர்மதியன்‌ தன் தந்தையை சொன்னதும் கோபத்தில் ராட்சனாக மாறியவன்.வழுதியின் குரல்வளையை எட்டிப் பிடித்து அழுத்தியபடியே.."என் அப்பாவைப் பற்றி இனி ஒரு வார்த்தை பேசினே.. !உன் உயிர் உடம்பில் இருக்காது.. ஞாபகம் வச்சுக்கோ.." என்று கண்களில் அனல் பறக்க பற்களை கடித்தபடி வார்த்தைகளை துப்பினான்.

வழுதியால் பேசவே முடியலை.அவன் தன் குரல்வளையத்திலிருந்த சீர்மதியனின் கைகளின் அழுத்தத்தை தாங்க முடியாமல், சீர்மதியனின் கைகளை விலக்க போராடிக் கொண்டிருந்தான்.

வழுதியை அதிகம் சோதிக்காமல் கைகளை எடுத்த சீர்மதியன்.. "இது வெறும் ட்ரெய்ல் தான்..இனி தேவை இல்லாமல் பேசி வாங்கி கட்டிக்காதே.." என்றபடி வண்டியை நகர்த்தினான்.

வழுதிக்கு சீர்மதியனின் தன் குரல்வளையத்தை பிடித்தது மிகுந்த அவமானத்தைக் கொடுத்தது.இவனை சும்மா விடவே கூடாது என்ற கோபத்தில் அவனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன்.. "மாடு மேய்கிறவனுக்கு, ‌என் தங்கை கேட்கிறதா..?நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது. உன் அப்பனிடம் ஏமாந்தது போல் உன்னிடம் ஏமாறுவேன்னு நினைச்சு கனவு காணதே.." என்று சாவல் விட்டான்.

சீர்மதியன் வழுதியின் வார்த்தைகளைக் கேட்டு நகர்த்திய வண்டியை திரும்பவும் ஒரு வட்டமடித்து அவன் முன் நிறுத்தி.. "இப்பத் தான் நீ சரியான ஆம்பிளை. சாவல்டா மச்சா.. வர தை மாசக் கடைசியில், உன் தங்கச்சிக்கு இந்த மாட்டுககாரன் மூக்கானங்கயிறு போடுவேன்.அதுக்கு உன் குடும்பமே வந்து ஆசிர்வாதம் பண்ணுவீங்க..பண்ண வைப்பேன்.எங்கூட கை கோர்வை போட ரெடியா இரு என் ஆசை மச்சானே .."என்றவனிடம்,



"அது! கனவிலும் நடக்காது .."என்று எல்லை கடந்த சினத்துடன் வழுதி கத்தினான்.

"பார்க்கலாம்.. பார்க்கலாம்.."என்ற சீர்மதியன் அசுர வேகத்தில் தன் வண்டியில் பறந்தான்.

வழுதி வேகமாக போகும் அவனைப் பார்த்துக் கொண்டே "இச்சே.." என்று அடக்க முடியாத கோபத்தை காற்றில் தன் கால்களை உதைத்து தீர்த்துக் கொண்டான்.

இது எதுவும் தெரியாமல் தண்மதி தன் பாட்டியிடம் "பாட்டி வர..வர..உன் ஆசைப் பேரனின் அட்டகாசம் தாங்க முடியலை..இன்னைக்கு நான்‌ கோவிலுக்கு போய்ட்டு வரும் போது என்ன ஆச்சு தெரியுமா..?" என்று நடந்தவற்றை பாட்டியிடம் கொட்டித் தீர்த்தாள்.

பேத்தி சொன்னதைக் கேட்டு தூயநாச்சி வாயைப் பிளந்தவர்.. "அட எம்பேரன்‌‌ அப்படியா சொன்னான்.ஆனாலும், அவனுக்கு தைரியம் கொஞ்சம் ஜாஸ்தி தான்." என்று ஆச்சரியப்பட்டவரிடம்,

"பாட்டி.. நான் என்ன சொல்றேன் ..நீங்க என்ன‌ சொல்றீங்க.. அந்த ஆளை நான் கல்யாணம் செய்வேனா? அது கனவிலும் நடக்காது. அவன் தகுதிக்கு நான் கேட்குதா?தாத்தா கிட்ட மட்டும் சொன்னால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா..?" என்று தன் கோபத்தை எல்லாம் வார்த்தைகளில் வடித்து கொட்டித் தீர்த்தாள்.

நாச்சியோ, அவள் பேசும் வரை பொறுமையாக கேட்டவர்.. "தணு நீ பேசறது கொஞ்சம் கூட சரியில்லை.முறை பசங்கன்னு இருந்தா.. இந்த மாதிரி பேசறது சகஜம் தான்.. அதுக்காக இப்படி அவனை மட்டம் தட்டி பேசுவீயா? இது கொஞ்சம் கூட சரியில்லை வாயை அடக்கிப் பழகு.." என்று தன் கோபத்தை குரலை உயர்த்தாமலேயே வார்த்தையில் அழுத்திச் சொன்னார்.


பாட்டியின் கோபத்தைக் கண்டு தண்மதி "உங்களுக்கு எப்போதும் அந்தப் பேரன் தான் ஓசத்தி.. அவன் என்ன‌ செய்தாலும் நாங்க ஒண்ணும் சொல்லக் கூடாது.."என்றவள் கோபமாக தன் அறைக்குச் சென்றாள்.

தண்மதி சொன்னது போல் அவருக்கு தன் மகள் வழிப் பேரன் சீர்மதியன் மீது எப்போதும் ஒரு தனிப் பாசம் உண்டு. அது அந்த குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் நன்கு தெரியும்.அதற்காக வழுதியிடமும்,தண்மதியிடமும் பாசம் இல்லை என்று சொல்ல முடியாது.

இவர்கள் கூடவே இருக்கிறார்கள். சீர்மதியனோ எல்லா உரிமையும் இருந்தும், தள்ளி இருப்பதால் அவன் மீது சற்று கூடுதல் பாசம்.அவனைப் பாட்டியாக அருகில் வைத்து சீராற்ற முடியவில்லையே. என்ற ஏக்கம் ஒரு புறம் அவருக்கு எப்போதும் உண்டு.

முள்ளை முள்ளால் எடுப்பது போல்.. ஒரு கல்யாணத்தில் பிரிந்த உறவை இன்னொரு கல்யாணத்தில் சேர்த்து விடலாம் என்று அவரின் மனம் துடியாய் துடித்தது.

தன் கணவனுக்கு பயந்து இத்தனை நாள் அமைதியாக ஆசையை அடக்கிக் கொண்டு இருந்தவர்.இப்போது பேத்தி விசயத்தில், எப்படியாவது தண்மதியை சீர்மதியனுக்கு திருமணம் புரிந்து கொடுத்து குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டுமென்று எண்ணினார்.

தான் கண்ணை மூடுவதற்குள் இரு குடும்பத்தையும் சேர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணம் சமீபகாலமாக அவர் மனதில் புழுவாக அரித்துக் கொண்டே இருந்தது.

சீர்மதியன் சென்று வெகு நேரம் கழித்துத் தான் வழுதி வீட்டிற்கு போனான்.சீர்மதியனின் பேச்சும் ,செயலும் அவனை அடிபடட் வேங்கையாக உருமாற்றி இருந்ததது.எப்படியாவது அவனை பழிவாங்க வேண்டுமென்று அவன் மனம் துடித்தது.

இங்கே வழுதி அவனைப் பற்றியே யோசித்து கொண்டிருக்க.. அங்கே அவனின் சிந்தனையின் நாயகனோ அண்ணனையும்,தங்கையையும் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தான்.

யார் யாரை வெல்லுவார்களோ? காலத்தின் கைகளில்!


நேசம் தொடரும்..


Hi friends,
மாறாத நேசம் அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
401
Reaction score
114
Points
93
Hi friends

சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெற்றிகரமாக எங்கள் புத்தகம் வெளிவந்துவிட்டது.

என் நேரடி புத்தகம்

இனிதா மோகன் _அன்பின் அழகியல்!

மேகலா பழனியப்பன்_ பூஞ்சிட்டு


என் கதை அன்பின் அழகியல்! புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிக மென்மையான காதல் கதை.நிச்சயமாக பீல் குட் ஸ்டோரியாக இருக்கும்..

நாயகன் :திறலன்

நாயகி : ஆரிசை

நிச்சயமாக உங்கள் மனதை மென்மையாக வருடிச் செல்வார்கள்.

மேகலா பழனியப்பனின் பூஞ்சிட்டு பற்றி சொல்ல வேண்டும் என்றால் வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா..பூஞ்சிட்டை படிங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி..பூஞ்சிட்டு உங்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருப்பாள்.

இந்த முறை எங்கள் சாகப்தம் பதிப்பகத்தின் மூலம் வெளியாகி இருக்கும் இரு புத்தகங்களும் உங்களை மென்மையாக வருடிச் செல்வார்கள்..

நாளை மற்றும் நாளை மறுநாள் புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 150,151ப்ரியா நிலையத்தில் எங்கள் இருவரின் புத்தகம் கிடைக்கும் தோழமைகளே..

புத்தக கண்காட்சி செல்ல முடியாதவர்கள் வெளியூரில் இருப்பவர்கள் சகாப்தம் பதிப்பகத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். புத்தகம் வேண்டுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

8883872909


நன்றி

அன்புடன்

இனிதா மோகன்



 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
401
Reaction score
114
Points
93
Hi friends,
மாறாத நேசம் அடுத்த அத்தியாயம் இன்று மாலை போடுகிறேன் ..😊தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
401
Reaction score
114
Points
93
மாறாத நெஞ்சம்!


அத்தியாயம் 3



தன் அன்னையிடம் பாட்டி கூறிய விசயத்தில் சீர்மதியனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், அண்ணனும், தங்கையும் மாட்டுக்காரன் என்று கேவலமாக அவனைப் பேசி..பேசி அவர்கள் அறியாமலேயே , அவனின் மனதிற்குள் தேவையில்லாத வன்மத்தை வளர்த்திருந்தார்கள்.


தண்மதியை அவனுக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடிக்கும்.அதனாலேயே அவன் மனதிற்குள் அவனையும் அறியாமல், அவள் மீது நேசம் வந்து ஒட்டிக் கொண்டது. ஆனால், சமீபகாலமாக அதை அவளே வெந்நீர் ஊற்றி கருக்கிக் கொண்டிருந்தாள்.


பொன்மணிக்கும், தன் அன்னை கூறியதில் அவ்வளவாக உடன்பாடு இல்லாவிட்டாலும்,இரு குடும்பம் சேர்வதற்கு இதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்தார். அதுவும், தன் தந்தையை நினைத்தால் இப்போது கூட அவள் மனம் சில்லிட்டது.


ஆனால்,அதே சமயம் தன் கணவரை நினைத்தால் தான், கொஞ்சம் கவலையாக இருந்தது. நிச்சயமாக அவர் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார் என்பது நன்கு தெரியும். இருந்தாலும், தன் அன்னை கொடுத்த நம்பிக்கையில் பொன்மணியும் கொஞ்சம் தைரியமாக இருந்தார்.


மார்கழி மாதக் கடைசியில் ஊர் கூடி ,வழக்கம் போல் பஞ்சாயத்து தலைவர் அருமைநாயகம் ஆலோசனையின் பேரில் ,அந்த வருடமும் எப்போதும் போல் தை திருநாள் அன்று ஊர் பொங்கல் விழாவும்,அடுத்த நாள் மாட்டுப்பொங்கலன்று சல்லிக் கட்டும் , நடத்தலாம் என்று அனைவராலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.


சல்லிக் கட்டு நடத்துவது என்பது சாதாரண காரியம் இல்லை .அதற்கான அனுமதியை முறைப்படி பெற்று தான் நடத்த முடியும். அந்த வேலையை இந்த வருடம் அருமைநாயகம் தன் பேரன் வழுதியிடம் ஒப்படைத்து இருந்தார்.


அருமைநாயகமும் வருடா..வருடம், நடக்கும் சல்லிக் கட்டை மிக ஆவலாக எதிர்பார்ப்பார்.அதற்கு காரணம்..அவரும் சல்லிக் கட்டு காளை வளர்த்துகிறார். ஆனால் , அவருடைய காளை 'வீராவை' இதுவரை யாரும் அடக்கியதில்லை.


அதில் அருமைநாயகத்திற்கு மிகவும் பெருமை தான்.இந்தவருடமாவது யாராவது தன் காளையை அடக்குகிறார்களா? பார்ப்போம் என்று கர்வத்துடன் வீடு வந்தார்.


தன் காளையை அடக்கி தன் குடும்பத்தையே ஒருவன் ஆட்டி படைக்க நினைத்திருக்கிறான் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.


யானை வரும் முன்னே. மணியோசை வரும் பின்னே என்ற பழமொழிக்கு ஏற்ப கூட்டத்தை முடித்து விட்டு ,வீட்டிற்குள் நுழைந்தவர் , வேலை ஆட்களை அதட்டி மிரட்டியபடியே உள்ளே வந்து மகன் செம்பியன் அருகில் அமர்ந்தார்.


அவர் வரும் சத்தம் கேட்டவுடன் மருமகள் பூந்தாழை குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கி குடித்து விட்டு, " எங்கேம்மா உன் அத்தை.." என்று மனைவியை காணாமல் கேட்டார்.


"அத்தை பின்கட்டில் வத்தல் காயப் போட்டுட்டு இருக்காங்க மாமா.. "என்றபடி காலி சொம்பை வாங்கி கொண்டார் பூந்தாழை.


"ஓ!சரி .."என்றவர் மகனிடம் திரும்பி, "ஏப்பா தென்னை மரத்துக்கு மருந்தடிக்க ஆள்வரேன்னு சொன்னாங்களே.. வந்தாங்களா?"


"வந்தாங்கப்பா..அவுங்களை அனுப்பிட்டு, இப்பத் தான் வீட்டுக்கு வந்தேன்.." என்ற மகனிடம் வரவு செலவு கணக்கைப் பற்றி பேச ஆரம்பித்தார்.


பூந்தாழையோ, காலிச் சொம்பை சமையலறையில் வைத்து விட்டு, மாமியாரைத் தேடி பின்கட்டுக்குச் சென்றாள்.


கண்ணும் கருத்துமாக கொத்தவரங்காய் வத்தலை வெள்ளைத் துணியில், ஒன்றோடொன்று ஒட்டாமல் பரப்பிக் கொண்டிருந்த நாச்சியின் அருகில் சென்று .


"அத்தே மாமா வந்துட்டார்.. உங்களை காணோம்ன்னு கேட்டார் .."என்றவளிடம்,


"இதோ வரேன் .."என்றவர், பாத்திரத்தில் மீதமிருந்த வத்தலையும் கொட்டி பரப்பி விட்டு, கணவனைத் தேடி வீட்டிற்குள் சென்றார்.


உள்ளே சென்றவரின் காதுகளில் கணவர், "தம்பி இந்த தடவையும் யாரும் நம்ம வீராவை அடக்க போவதில்லை பாரு.." என்று பெருமையாக சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தது கேட்டது.


அதைக் கேட்டதும் நாச்சி, 'ம்ஹூம் நல்லா சிரிங்க..சிரிங்க..உங்க கர்வத்தை அடக்க எம்பேரன் வரப் போறான் பாருங்க..' என்று மனதிற்குள் கருவிக் கொண்டார்.


என்ன தான், கணவன் மேல் அளவுகடந்த பாசமிருந்தாலும், தன் மகளை இத்தனை வருடமாக தள்ளி வைத்திருக்கும் கணவன் மீது நாச்சிக்கு தாளா முடியாத கோபம் இருந்தது. ஆனால், அதை கணவரிடம் காட்ட முடியாமல் மனதிற்குள்ளேயே பொருமிக் கொள்வார்.


சில சமயம் தூயநாச்சிக்கு ,மகன் செம்பியன் தான் ஆறுதல் சொல்வான். மருமகள் பூந்தாழை எல்லா விசயத்திற்கும் மாமியாருக்கு சப்போட்டாக இருந்தாலும், பொன்மணி விசயத்தில் மட்டும் எப்போதும் கொஞ்சம் விலகியே இருப்பாள்.


அதற்கு காரணம் பொன்மணியின் திருமணம் என்பதால் , தூயநாச்சியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.


ஊர் கூட்டத்தில் சல்லிக்கட்டு நடத்துவது பற்றிய செய்தி வந்தததிலிருந்தே, சீர்மதியன் நிலையில்லாமல் தவித்தான்.


பாட்டி சொல்வது போல் செய்யலாமா? அப்பாவுக்கு தெரிந்தால் ஒத்துக் கொள்வாரா? என்று தன் மனதோடே போராடிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.


பொன்மணியோ, மகனைக் கண்டதும், "சீரா நாளைக்கு போய் முல்லையையும் ,மாப்பிள்ளையையும் பார்த்துட்டு அப்படியே பொங்கலுக்கு அழைத்துட்டு வரலாம்ன்னு இருக்கோம். . நீயும் வரீயா?" என்றார்.


" ஓ..! அப்படியா..சரி வரேன் மா..அந்த வாலுக்குட்டியையும் பார்த்து ரொம்ப நாளாச்சு.."என்று தன் அக்கா மகள் ஏந்திழையைப் பற்றிச் சொன்னான்.



"சரிப்பா.. முல்லைக்கு தலைச்சுற்றலும், வாந்தியும் அதிகமாக இருக்கும் போல்..பேசாம பாப்பாவை நாம கூட்டிட்டு வந்து, ஒரு பத்து நாள் இங்க வச்சுட்டா.. அவ கொஞ்சம் ரெஸ்ட்டாவது எடுப்பா..இந்த குட்டியும் அவளை பாடப்படுத்தறா.."


"ம்..!சரிம்மா..கூட்டிட்டு வந்தரலாம்..அப்பா எங்கே மா ..?"


"அவர் இன்னைக்கு ஏனோ நேரமாவே தலைவலிக்கதுன்னு படுத்துட்டார்ப்பா ..நீ கை கழுவிட்டு சாப்பிட வா .. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்ற தாயிடம் பதட்டமாக.


"ஏன்? என்னாச்சு... நான் முதலே அப்பாவை பார்த்துட்டு வந்துட்டு சாப்பிட்டுக்கிறேன்.."என்றபடி தந்தையை தேடிச் சென்றான்.


கோவழகனோ, தங்கள் அறையில் மரக்கட்டலில் ,ஒரு கையை நெற்றியில் வைத்தபடி படுத்திருந்தார்.


தந்தை படுத்து இருந்த நிலையை பார்த்ததுமே , சீர்மதியனுக்கு அவர் இன்னும் உறங்கவில்லை என்று நன்றாக தெரிந்தது.


உடனே அவர் அருகில் சென்று அமர்ந்து,நெற்றி மீதிருந்த அவர்கையை மென்மையாக பற்றினான்.


மகனின் ஸ்பரிசம் பட்டவுடன் திடுக்கிட்டு விழித்த கோவழகன் , "சீரா வந்துட்டீயாப்பா...இவ்வளவு நேரம் ஆகிடுச்சா..சாப்டீயா?"என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டார்.


சீர்மதியனோ,அவரின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து மென்மையாக மூடிக் கொண்டு, "என்னாச்சுப்பா..அம்மா உங்களுக்கு தலைவலின்னு சொன்னாங்க..எதையாவது நினைத்து கவலைப்படறீங்களா?"


"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா.. மார்கழி மாசம்! பனி ரொம்ப ஜாஸ்தியா இருக்குல்ல அது தான் .. காத்து நல்லா இருக்குன்னு, கொஞ்ச நேரம் நேத்து திண்ணையிலே படுத்தேன்.அது ஏதோ சேருல போல.."


"ம்..!தைலம் தேச்சு விடவாப்பா.."


"இப்ப தான் அம்மா தேச்சு விட்டா..நீ இன்னும் சாப்பிடலையா?"


"இல்லைங்க ..நீங்க படுத்துருக்கீங்கன்னு சொன்னதும்.. உங்களை பார்த்துட்டு வந்து சாப்பிடறேன்னு வந்துட்டான்.." என்றார். மகனை சாப்பிட கூப்பிட வந்த பொன்மணி.


"ஓ..!போப்பா..போய் முதலில் சாப்பிடு..நேரங்காலமில்லாமல் உழைக்கிறவன், வயத்துக்கு வஞ்சனை செய்யாமல் சாப்பிடு..அப்பா எங்க போகப் போறேன்.."


"உங்க முகமே சரியில்லையே..ரொம்ப தலை வலிக்குதாப்பா?"


"இல்ல..இல்ல..லேசான வலி தான்.. நீ போய் சாப்பிட்டு தூங்குப்பா..காலையில் நேரமா எந்திருக்கனுமே.." என்றவரிடம், தலையாட்டிவிட்டு கதவு வரை வந்தவன்.


மீண்டும் தந்தையிடம் சென்று ,அவர் கைகளை அழுத்தமாக பிடித்தபடியே.."அப்பா எதையும் மனசில போட்டு குழப்பிக்காதீங்க எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்.‌ நான் இருக்கேன் என்பதை எப்போதும் மறந்துடாதீங்க."என்றவன்,அதை உணர்த்துவது போல் அவரின் கைகளை மீண்டும் ஒரு முறை அழுத்தி விட்டு சென்றான்.


தந்தை,மகன் பாசத்தை பார்த்தபடியே நின்ற பொன்மணிக்கும் கண்களில் நீர் கோர்த்தது.


மகன் போவதையே இமைக்காமல் பார்த்தபடி படுத்திருந்தவரின் விழியும்,மனமும் நிறைந்தது.


மகன் என்று தலை எடுத்தானோ! அன்றிலிருந்து, இன்று வரை அவரை கண்ணும் கருத்துமாகத் தான் பார்த்துக்கிறான்..ஆனால், என்ன? தன் மாமனார் வீட்டு ஆட்களிடம் மட்டும் முரட்டுத்தனமா நடந்து கொள்வது தான், அவருக்கு பெரும் கவலை.


அதுவும் வழுதியும்,இவனும் அடிக்கடி மல்லுகட்டிக் கொள்வது அவருக்கு பெரும் சங்கடத்தை கொடுத்தது. மகன் என்ன தான் அவரிடம் மறைத்தாலும், ஊரிலிருப்பவர்கள் யாராவது அதை அவரிடம் வந்து மெனக்கெட்டு சொல்லத் தான் செய்கிறார்கள்.


இதுவரை அரசல் புரசலாக கேட்டு வந்தவர்..நேற்று நேரிலேயே பார்த்துவிட்டார்.மாலை நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு திரும்பி வரும் போது இருவரும் எதிரும்,புதிருமாக நிற்பதைக் கண்டார்.இத்தனை நாள் மற்றவர் சொல்வதை மட்டும் தான் கேட்டு இருந்தார். ஆனால், இன்று நேரில் பார்க்கவும் அதிர்ச்சியில் சிலையாக நின்றார்.



அவர் திகைப்பிலிருந்து மீண்டுவருவதற்குள் சீர்மதியன் தன் வாகனத்தில் வேகமாக சென்று விட்டான்.


வழுதியும் கோபத்தில் கத்திவிட்டு சென்றான்.இருவருமே இவரைக் கவனிக்கவில்லை.


அவர்கள் இருவரும் சென்ற பின் கூட ,மூச்சு விட மறந்தவராக கோவழகன் சில மணித்துளிகள் அசையாமல் அங்கேயே நின்றிருந்தார்.


அதுவும் தன் மகன் சொன்னது அவருக்கு மனதிற்குள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது.


தன்னால் ஏற்பட்ட பிரச்சினை! ‌இன்னும் முடியவில்லை.இதில் மகன் மட்டும், சொன்னது போல் தண்மதியை மணந்தால்? ஜென்ம பகைமாகுமே! என்று பயந்தார்.


இதை பற்றி மனைவியிடமும் அவரால் சொல்ல முடியாது. ஒரு சில முறை என்னால் தான் இத்தனை பிரச்சினை என்று எதார்த்தமாக சொல்லி வருந்திய போது.. பொன்மணி கோபித்துக் கொண்டார்.


என்னை விட உங்களுக்கு அந்த வீட்டு உறவு தான் பெரிசா என்று.. ?ஆனால், அவர் நிலையை எப்படி சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் பேசும் மனைவியிடம் அதன் பிறகு அதை பற்றி பேசுவதையே நிறுத்தி விட்டார்.


இப்போது தொடர்கதையை போல் ,மகனும் அந்த வீட்டு பெண்ணின் மீது ஆசைப்படுவது அவருக்கு பேர் இடியாக இருந்தது.அதை விட மகன் பழிவாங்க அந்த பெண்ணை மணமுடிக்க நினைக்கிறானோ ? என்று அவர் மனம் சந்தேகம் கொண்டது.


எதுவாக இருந்தாலும் இரண்டு நாள் போகட்டும்.. அதன் பிறகு மகனிடம் பக்குவமாய் பேசலாம் என்று நினைத்தார்.


விதியின் விளையாட்டை யார் அறிவார்.. அனைத்தும் காலத்தின் கைகளில்.


Hi friends,
எல்லாரும் எப்படி இருக்கீங்க காலையில் சொன்ன மாதிரி இன்று மாறாத நெஞ்சம்! அத்தியாயம்( 3 ) போட்டு விட்டேன் .படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
விரைவில் அடுத்த யூடியுடன் வருகிறேன்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Latest posts

New Threads

Top Bottom