அவள் 7
ஆனால் இதைக் கேட்டபின் பிரபவ்வுக்கும் சிறு சந்தேகம் வந்தது.
"டேய்! இவன் லவ் பண்ணாம இருந்துருக்கலாம். ஆனா, எப்பவும் இருக்க முடியுமா? இதுவரை அவனுக்கான பொண்ண பாக்காம இருந்திருக்கலாம்! ஒருவேள இப்ப பாத்துருக்கலாம்ல!" என்று தன் சந்தேகத்தைக் கூறிட அவனை குழப்பத்துடன் பார்த்தார்கள்.
"என்னடா சொல்ற? ஏதோ கதைல வர மாதிரி சொல்ற! வரவர நீயும் மாறிட்டு இருக்கியே! சரியில்லயே..." என்று நாகவ் சந்தேகப் பார்வையுடன் அவனைப் பார்த்துக் கூறிட, அவனை பொய்யாக முறைத்தான், பிரபவ்.
"டேய்! ஒண்ணும் புரியலடா! நீ சொல்றது" என்று ராம் பிரபவ்விடம் கேட்க, அவனுக்கு விளக்கமளித்தான்.
"என்ன சொல்ல வரேன்னா..இவன் லவ் பண்றானா இல்லையான்னு நமக்குத் தெரியாது. ஆனா, இவன் இப்படி டிஸ்டர்ப்டா இருக்கிறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு. அது ஒரு பொண்ணாவும் இருக்கலாம்னு சொல்றேன்" என்று விளக்கிட, அதைக் கேட்ட ராம், "ஓஓஓ.." என்று சொன்னான்.
இதைக் கேட்ட நாகவ் ராமிடம், "இப்ப மட்டும் புரிஞ்சுதா?" என்று கேட்டிட, ராம் பல்லைக் காட்டியபடி, "ஈஈஈ இல்ல!" என்று கூறி சிரித்திட, மற்றவர்களும் சிரித்தனர்.
"அதான!! உனக்கு இதுலாம் புரிஞ்சாதான ஆச்சரியம். சரியான காக்கி போட்ட சாமியாருடா நீ! லவ்வும் வராது! லவ்வ பத்தி பேசினாலும் புரியாது உனக்கு! பின்ன எதுக்கு நீ இதுல கேள்வி கேக்குற?" என்று விஜய் ராமை கழுவி ஊத்தினான்.
"டேய்!! விடுங்கடா! எனக்கு இது புரியவே வேணாம். ஆள விடுங்க! நான் இப்டியே இருந்துக்கறேன். முதல்ல அவன பாருங்க! இங்க போரே நடக்குது! ஆனா, அவன் எதுவும் தெரியாம இருக்கான் பாரு!" என்று ராணாவைக் காட்டி திசை திருப்பி தப்பித்தான், ராம்.
அவர்களும் ராணாவைப் பார்த்து அவனிடம் சென்று, அவன்முன் கையை நீட்டி சொடுக்கிட, தன்னிலைப் பெற்றவன் அவர்களை என்ன? என்பதைப் போல் பார்த்திட, அவர்கள் இவனை முறைத்தனர்.
"என்னங்கடா? என்னய மொறச்சிட்டு இருக்கீங்க?! எதுக்கு?" என்று கேள்வி கேட்டிட, அவர்கள் நால்வரும் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகப் பார்த்தனர்.
"டேய்...சத்தியமா நாங்க எதுக்கு மொறைக்கிறோம்னு கூடவா தெரியல உனக்கு??" என்று அப்பாவியாகக் கேட்டான், நாகவ்.
"அடச்சீ! தெரியாமதான கேக்குறேன். சொல்லுங்கடா!" என்று இவனும் அவர்களைக் கேள்வியாகப் பார்த்தான்.
"எப்டி தெரியும்? நீதான் இந்த உலகத்துலயே இல்லயே..! இங்க உன்னய வச்சு ஒரு பட்டி மன்றமே நடந்து முடிஞ்சாச்சு! ஆனா, இது எதுவுமே தெரியாத அளவுக்கு நீ ஏதோ உலகத்துல இருந்துட்டு, நாங்க வந்து மொறைக்கிறதுகூட எதுக்குனு தெரியாம கேட்குறியேடா!!? இதெல்லாம் ரொம்ப டூமச்டா!!" என்று ராம் பொய்யான ஆதங்கத்தில் பேசித் தீர்த்தான்.
இதைக் கேட்டதும் விசயம் புரிந்த ராணா அமைதி காத்திட, அவனைப் பார்த்து, "டேய் ராணா!! சீரியஸா எதுவும் பிரச்சினையா?? பிசினஸ்ல எதுவும் பிராப்ளம் மாறி இல்லையேடா! தென், எதுக்கு இப்டி யோசனைல இருக்க?" என்று உண்மையாகக் கேட்டான், பிரபவ்.
"அப்டிலாம் எதுவும் இல்லடா! பிரபா" என்று சுருக்கமாகக் கூறி முடிக்க, அதனை ஏற்க அவனது மனம் மறுத்தது.
"எப்பவுமே நீ இவ்ளோ சீரியஸா யோசனையில இருக்க மாட்ட! அப்டி இருந்தா அதுக்கு பின்னாடி ஏதோ பெரிய விசயம் வச்சுருப்ப. இப்டித்தான் பிசினஸ் எதிரிங்கள அழிக்கிறதுக்கும் யோசிப்ப. ப்ளான் போடுவ. ஆனா, அதெல்லாம் ஜஸ்ட் எ மினிட்ல பண்ற ஆளு நீ. இப்ப அப்டி தெரியலயே..இது ஏதோ வேற தாட் மாறி இருக்கே!" என்று அவனது செயல்பாட்டை நன்கறிந்து அவனுக்கு பொறுமையாக விளக்கிக் கூறிக் கேட்டுக் கொண்டிருக்க, விஜய் இடைமறித்தான்.
"நீ ஏன்டா இவ்ளோ சுத்தி வளச்சு கேக்குற?? நேரா கேளுடா. டேய்! ராணா, நீ லவ் பண்றியோ! அதனாலதான் இப்டி யோசனையிலேயே இருக்கியோனு பிரபாக்கு சந்தேகமாடா. நீயே என்னனு விசாரிச்சிக்கோ! நான் நாளைக்கு வரேன்டா. பாய்டா!" என்று கூறி விஜய் விலகிச் செல்ல எத்தனிக்க, அதனைப் புரிந்துகொண்ட மற்ற இருவரும் இவனை பிடித்துக் கொண்டனர்.
அவர்களை விஜய் பாவமாகப் பார்த்திட, "என்னடா! நீ மட்டும் நைஸா எஸ்கேப் ஆக பாக்குறியா! முடியாது..விடமாட்டோம்! என்ன நடந்தாலும் சேர்ந்தே தான் இருக்கணும். ஓகேவா?" என்று அவனிடம் கிண்டலாகக் கூறி சிரித்தனர், ராமும் நாகவ்வும்.
அதைப் பாவமாகப் பார்த்தவன், "டேய்! எல்லாரும் சேர்ந்து இருக்க
இங்க என்ன கல்யாணமாடா நடக்கப்போது?! அவனுக்கு கோபம் வந்தா கருமாதி பண்ணிடுவான்டா. உங்க மூணு பேருக்கு எதுவும்னா ஹாஸ்பிடல் கூட்டி போக ஆள் வேணும்ல! அதுக்குத்தான் நான் இப்ப போறேன். அவன் காண்டாகுறதுக்குள்ள விடுங்கடா!!" என்று பயந்துபடி கூறினான், விஜய்.
"அது அவன்கிட்ட லவ்வ பத்தி பேசுமுன்ன யோசிச்சிருக்கணும். பிரபாவே மெதுவா பேசி என்னன்னு கேட்ருப்பான். அவன் ஏதோ பேசி முடிக்கிறதுக்குள்ள நீயா கிளப்பி விட்டுட்டேல!! இப்ப பேசி ஒண்ணும் ஆகப்போறதில்ல. இருடா கம்முனு!!" என்று ராம் கூறி அவனைப் பிடித்து வைத்துக் கொண்டான்.
இங்கே ராணா கோபம் கொள்வான் என்று எண்ணியவர்களுக்கு அவனது அமைதி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ,
"அப்டிலாம் எதுவும் இல்லடா. எனக்கு அந்த பேர கேட்டாலே பிடிக்காதுனு உங்களுக்கே தெரியும்ல! அப்றம் எதுக்கு இப்டி ஒரு கேள்வி?" என்று அமைதியாகத் தொடங்கியவன் வார்த்தையில் காட்டத்தைக் காட்டி கூறி முடித்தான்.
அதைக் கேட்டவர்கள் அமைதியாகிட, "அப்ப என்னதான்டா விசயம்? சொன்னாதான தெரியும்!" என்று பிரபவ் கேட்டான்.
"ஹே! பெருசா ஒண்ணும் இல்ல. இது ஜஸ்ட் வேற ஒரு விஷயம். அத டைம் வரும்போது நானே உங்ககிட்ட சொல்றேன். அதுவர என்னய எதுவும் கேக்காதீங்க. டென்ஷன் ஆகாம ரிலாக்ஸ்டா இருங்கடா! ச்சில் ப்ரோஸ்!!" என்று அவன் மிகச் சாதாரணமாகக் கூறி சகஜமாக பேச, அதைக் கேட்டவர்களும் அந்த விசயத்தை பெரிது படுத்தாமல் அவனுடன் சேர்ந்து அந்த தருணத்தை சந்தோசமாகக் கழித்தனர்.
****************************************
ராணாவின் தந்தையின் தொழில் பங்கீட்டாளர்களாக இருந்தவர்கள் நான்கு பேரும் இவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். எந்த அளவுக்கு என்றால்? ஒரே குடும்பமாக வாழ்ந்தவர்கள் தங்களுக்குப் பிறந்த புதல்வர்கள் சசோதரர்களாகவே வளரவேண்டும் எனக் கருதி ஐவர் புதல்வர்கள் பெயரின் பின்னும் தேவ் என்ற இரண்டாம் பெயரைச் சேர்த்து வைத்தனர். ஆதலால் இளையவர்கள் ஐவரும் வளரும்போதே நண்பர்களாக இருந்தாலும் சகோதரர்களின் பிணைப்பு அவரிகளிடம் இருந்தது.
பிரபவ் தேவ், கட்டட கலை அவன் வேட்கையான போதிலும்(passion) புகழ் பெற்ற தொழிலதிபதிர்கள் வரிசையில் இவனது பெயரும் உண்டு. சிறு வயதிலேயே தாய் தந்தையின் அன்பில் திழைத்து வளர்ந்தவன். இவன் கல்லூரி படிப்பு முடியும் சமயத்தில் தந்தை விபத்தில் இறந்துவிட, மொத்தமாக இடிந்துபோன அவனுக்கு ஆறுதலாக இருந்து அவனைத் தேற்றியது அவனது தாயும் அவன் நண்பர்களும் தான். அவர்கள்தான் இவன் உயிரென நினைப்பவன்.
கம்பீரமான தோற்றமும் அழகும் கொண்டவன். புன்னகை ததும்பும் முகம். அனைவரின் மனதையும் தன் அன்பினால் வெல்பவன். அன்பான இதயமும் எதையும் பொறுமையுடன் சிந்தித்து செயல்படும் புத்திசாலித்தனமும் கொண்டவன்.
ஆனால், தாய்க்கும் நண்பர்களுக்கும் ஏதேனும் என்று வந்தால் பொறுமை காற்றில் பறந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அனைவரையும் மதிக்கும் குணம். ஆனால், இவனின் கோபம் தூங்கும் எரிமலை போல்தான். எதிரிகளிடம் எப்போது வெடிக்குமென்றே தெரியாது. மொத்தத்தில் ராணாவுக்கு நேரெதிர். ஆனாலும் இவனுக்கு ராணாவைத்தான் அதிகம் பிடிக்கும்.
ராம் தேவ், உதவி காவல் ஆணையர்(ACP) பொறுப்பில் இருக்கிறான். காவல் அதிகாரிக்கேற்ற கட்டுக்கோப்பானத் தோற்றமும் ஆளை எடைபோடும் பார்வையும் கொண்டவன். கோபக்காரன். நண்பர்களிடத்தில் பாசக்காரன். தந்தையையும் நண்பர்களுமே அவனுக்கு உலகம். காதல், திருமணம் இவற்றில் ஆர்வம் இல்லாதவன்.
இவன் தாய் உடல்நலம் சரியில்லாமல் சில வருடங்கள் முன் இறந்துவிட, அவனுடைய தந்தை மன வருத்தத்தில் வியாபாரப் பொறுப்புகளை இவனிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். ஆனால், வியாபாரத் தொழிலில் நாட்டம் இல்லாததாலும் காவல்துறை மீது கொண்ட ஆர்வத்தாலும் அதை ஏற்க மறுத்து காவல்துறை அதிகாரி ஆனான். இவனது சார்பில் இவன் தந்தையின் தொழிலில் இவனது நண்பர்களே உதவியாக இருந்தனர்.
நாகவ் தேவ், வசீகரத் தோற்றமும் எப்போதும் புன்னகை பூக்கும் முகமும் கொண்டவன். கோபம் வருவது அரிது. எல்லாரிடமும் சகஜமாக பழகும் குணமுடையவன். படித்ததும் பிடித்ததும் மென்பொறியியல் தான். தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர். தந்தை தாயின் ஒரே செல்ல மகன். நண்பர்களுக்காக எதையும் செய்பவன். அவர்களை இவனில் பாதியாய் நினைப்பவன்.
விஜய் தேவ், ஆணழகன். வசீகரிக்கும் புன்னகையால் அனைவரின் மனதையும் எளிதில் வென்றிடுவான். எல்லாரிடமும் எளிதில் நட்பு பாராட்டும் குணம். முக்கியமாக பெண்களிடம்.
விரும்பியே மருத்துவம் படித்து இருதய நிபுணர் ஆனான். சொந்தமாக மருத்துவமனையும் நிறுவி மக்களுக்கு முடிந்தவரை சேவை செய்து வருகிறான். பல வருடங்களுக்கு முன்பே தாயை இழந்தவன் தந்தையின் செல்லத்திலே வளர்ந்ததால் எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாத இளைஞனாய் மாறியிருந்தான். நண்பர்களை மட்டுமே உறவென நினைத்து வாழ்பவன்.
தேவ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் என்பது இவர்கள் ஐவரின் சொந்த பங்கீட்டிலும் தொடங்கப்பட்டது தான். இதன் காரண கர்த்தா ராணா தான். இதற்கு யோசனை தந்து நிறுவியனும் இவன்தான். இதில் அனைத்துத் துறைகளிலும் நிறுவனத்தை நிறுவி ஐவரும் பொறுப்பேற்றனர்.
ராணா ஆடைகள் சார்ந்த நிறுவனத்தையும், பிரபவ் கட்டுமான நிறுவனத்தையும், நாகவ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தையும், விஜய் மருத்துவமனையையும், ராமின் சார்பில் விளையாட்டுக்குத் தேவையானப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் நிறுவி வெற்றிக்கரமாக நிர்வகித்து வருகின்றனர்.
நண்பர்களே சகோதரர்களாக ஒற்றுமையுடனும் தொழிலில் வெற்றிக்கரமாகவும் திகழ்வதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஐவரும் குணத்தில் வேறுபட்டவர்களாக இருந்தபோதிலும் மனதினாலும் நட்பினாலும் அன்பினாலும் ஒன்றுபட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் எப்போதும் எந்நிலையிலும் விட்டுக்கொடுத்திடாதவர்கள்.
*******************************************
மறுநாள் தன் நிறுவனம் சென்ற ராணா, அலுவலர் ஒருத்தியை அழைத்து சில விஷயங்களைக் கூறி அதை முடிக்கும்படி கட்டளையிட்டு அனுப்பினான்.
புது வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகியிருக்க அவர்களுக்கு இந்த வீடு நன்றாகவே பழகிவிட்டிருந்தது. இந்த வாரம் முழுவதும் காவ்யாவுக்கு குமட்டல் அதிகமாக இருந்தது. மருந்து சாப்பிட்டுவர சற்று குறைந்திருந்தது. ஆனால், அவளுக்கு மனபாரம் அதிகமாகியிருந்தது.
வீட்டுக்குள்ளயே அடைந்திருப்பது கூண்டுக்குள் அடைபட்டிருப்பது போல் தோன்றியது அவளுக்கு. அவளால் அவள் தோழிகளும் அதே நிலையை அனுபவிப்பதை அவளால் இதற்குமேலும் தாங்க முடியவில்லை.
காலைப்பொழுது, தோழிகள் ஐவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தன்னுடைய ஈமெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்த அனுயா, காவ்யாவின் மெயில்களையும் பார்க்க, ஒருநொடி அப்படியே நிறுத்திவிட்டாள்.
அதன்பிறகு, தன்னை சுதாரித்துக் கொண்டு காவ்யாவுக்கு வந்த மெயிலை அவர்களை அழைத்துக் காட்டிட, அவர்களும் சங்கடத்திற்கு உள்ளாகினர். என்ன? என்று காவ்யா அருகில் வந்து விசாரிக்க, அவளிடம் மெயிலைக் காட்டினர். அது அவள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வந்த செய்தி. காவ்யாவை விரைவில் வந்து பணியைத் தொடர அழைப்பு விடப்பட்டிருந்தது. அதற்கான கால அவகாசமாக இன்னும் இரண்டு நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
அதைப் படித்த காவ்யாவின் மனதினுள் ஒரு நிம்மதி பரவியது. ஆனால், அவள் தோழிகளோ வருத்தத்தில் இருந்தனர். அவள் என்ன முடிவெடுக்கப் போகிறாள்? என்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"என்னடி! இப்டி அனுப்பிருக்காங்க? இப்பவே வர சொல்லிருக்காங்க! அப்டி என்ன தல போற காரியமாம்?! உனக்கு உடம்பு சரியில்லனு தான் எப்பவோ மெயில் அனுப்பியாச்சுல! இப்ப இப்டி உடனே வர சொல்லிருக்காங்க!" என்று ரம்யா பொறிந்து தள்ளிக் கொண்டிருக்க, அவளை மற்றவர்கள் விநோதமாகப் பார்த்தனர்.
"அடியே!! அவ லீவ் எடுத்து கிட்டதட்ட ஒன்ற மாசம் ஆகுது. பின்ன வர்க் பண்ற கம்பெனில கேக்க மாட்டாங்களா? அவங்க கரெக்டா தான் அனுப்பிருக்காங்க. நம்மதான் மறுபடி பெர்மிஷன் கேட்டு மெயில் அனுப்ப மறந்துட்டோம். நீ விட்டா அவங்கமேல கேஸே போடுவ போலயே!" என்று சரண்யா நிதர்சனத்தைக் கூற, மற்றவர்களும் ஆமோதித்தனர்.
"எப்படியோ! இப்ப வர சொல்லிருக்காங்க. அதுக்கு என்ன பண்ணலாம்னு பாருங்க! இப்ப இவ இருக்க நிலமையில ஆபீஸ் அனுப்புறது சரியில்லனு தோணுது" என்று தன்யா கூற, அதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த காவ்யாவைப் பார்த்த அனுயா,
"நீங்களா எதுக்கு இவ்ளோ யோசிச்சுட்டு இருக்கீங்க? முதல்ல காவ்யா என்ன நினைக்கிறானு கேட்போம். அப்றமா எதுனாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம்" என்று கூறி காவ்யாவிடம் திரும்பினாள். மற்றவர்களும் அவளைக் கேள்வியாகப் பார்த்தனர்.
அமைதியாய் இருந்த காவ்யா அவர்களை நிமிர்ந்து பார்த்துப் பேசத் தொடங்கினாள். "நான் வேலைக்குப் போறேன்! நாளைக்கே!" என்று கூறுவதைக் கேட்டு அவர்களும் அதிர்ந்தனர்.
"என்னடி சொல்ற!? நாளைக்கேவா?! உன்னய வேலைக்கு அனுப்பவா வேணாமானு நாங்க பேசிட்டு இருக்கோம்! நீ இப்டி சொல்ற?! இப்ப நீ இருக்க நிலமையில எதுக்கு?" என்று அக்கறையாக ரம்யா கேட்டிட,
"எனக்கு ஒண்ணும் இல்லடி. நான் வீக்கா இருக்கேன் இருக்கேன்னு சொல்லி இப்டியே வீட்டுக்குள்ளயே அடஞ்சிருந்தா என் மனசும் சேர்ந்து வீக்காயிடும். ஏற்கனவே நான் ரொம்ப வீக்காயிட்டேன். இதுக்கு மேலயாச்சும் கொஞ்சம் வெளிலவர நினைக்கிறேன். வேலைக்குப் போறேன்டி. ப்லீஸ்!" என்று பொறுமையாகக் கூறி முடித்தாள்.
அவள் கூறியதைக் கேட்ட மற்றவர்களும் சிறிது யோசித்தனர். அதன்பிறகு, அவள் வேலைக்குச் செல்ல அவர்களும் சம்மதித்தனர். இதனால் அவள் மனநிலை சற்று மாறுபட வாய்ப்பிருக்கிறது மற்றும் இது அவளுக்கும் ஒரு மாறுதலாக
இருக்கும் என்பதற்காக மட்டுமே சம்மதித்தனர்.
"சரிடி! நீ இவ்வளவு தூரம் சொல்ற. அதுக்காக சம்மதிக்கிறோம்"
"ஆனா நிறைய கண்டிஷன்ஸ் இருக்கு! அதுக்கு ஒத்துகிட்டாதான் விடுவோம்!"
"ஆமா! உன்னய நீ அங்க நல்லா பாத்துக்கணும்! ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணி வேல பாக்கக்கூடாது!"
"இனி நீ உன் ஸ்கூட்டில போக வேணாம். கார் அரேன்ஜ் பண்ணிக்கலாம். ஓகேவா!" என்று நால்வரும் வரிசையாகக் கூறியதைக் கேட்டு ஒருநொடி வாயைப் பிளந்தேவிட்டாள், காவ்யா.
"அடிப்பாவிங்களா!! எந்த கேப்லடி இவ்வளவும் யோசிச்சீங்க!? வரிசையா இவ்ளோ ரூல்ஸா?!!" என்று அதிர்ச்சியில் கூறிட, அவளைப் பார்த்துப் புன்னகைத்த நால்வரும்,
"அதெல்லாம் அப்டித்தான்! ஸேப்டி ஃபஸ்ட் டா செல்லம்! சோ, அதுலாம் நாங்க எப்பவுமே மைண்ட்ல வச்சிருப்போம்" என்று சரண்யா இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு கூறிட, அதைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட்டனர்.
"இதுக்கேவா..இன்னும் நிறைய இருக்கு! இதுக்கு நீ ஃபஸ்ட் ஓகே சொன்னாதான் அடுத்தடுத்து ப்ரொசீட் பண்ண முடியும்" என்று ரம்யாவும் கூறிட பெருமூச்சொன்றை விட்டாள், காவ்யா. அவர்களது அன்பில் மூச்சடைத்துதான் போனாள்.
"இங்க பாருங்க! நீங்க சொல்ற எல்லா கண்டிஷன்களையும் நான் ஃபாலோ பண்ணுவேன். ஓகேவா! ஆனா ஒண்ணு மட்டும் வேணா! கார்லாம் வேணாம்! அதுக்காக நான் ஸ்கூட்டில போகமாட்டேன். நான் பஸ்ல போயிக்கிறேன். ஓகேவா!" என்று கூறிமுடித்து அவர்களைப் பார்க்க,
"என்ன காவி இது? பஸ்லாம் செட்டாகாது இப்ப உனக்கு. ஏற்கனவே உனக்கு வாமிட் வருது. இதுல பஸ்ல போனா இன்னும் மோசமாயிடும். அதெல்லாம் வேணாம்!" என்று அனுயா உறுதியாக மறுத்திட, அவளை சமாதானம் செய்தாள், காவ்யா.
"இங்க பாரு அனு! என்னவோ நான்தான் உலகத்துலயே ப்ரெக்ணன்டா இருக்க மாறி நீங்க நடந்துக்கிறீங்க. ஏன் என்னமாறி இருக்க எத்தனையோ பேரு பஸ்ல போகலயா?? அதனால எதுவும் ஆகிடாது. அப்படியே ஆனாலும்கூட நான் பாத்துக்கறேன். இதுக்கு மேலயும் நீங்க என்னய பத்தியே எப்பவும் யோசிச்சிட்டே கவலப்பட்டுட்டு இருக்காதீங்கடி. ப்லீஸ்!!" என்று அவள் கூறியதை கேட்ட நால்வரும் அவளை முறைத்தனர்.
"ஏய்! என்னடி? முதல்ல பேசுனதுகூட ஏத்துக்கலாம். ஆனா, கடைசில என்ன சொன்ன? உன்னய நினச்சு கவலப்படக்கூடாதா!? அத சொல்றதுக்கு உனக்கு பர்மிஷன் இல்ல. புரியுதா!" என்று ரம்யா கோபமாகக் கூறிட,
"ஆமா! ஒருவேள நாங்க உன் நிலமையில இருந்தாக்கூட நீ இப்டித்தான் பேசுவியா? எங்கள கவனிக்காம இருப்பியா? சொல்லு!" என்று தன்யா கேட்டிட, தலைகுனிந்த காவ்யா,
"இல்ல!" என்று மெதுவாகத் தலையசைத்துக் கூறினாள்.
"அப்றம்!! எங்கள மட்டும் எதுக்கு அப்டி இருக்க சொல்ற? உனக்கு மட்டும் எங்கமேல பாசம் அக்கறை எல்லாம் இருக்கலாம். ஆனா, எங்களுக்கு இருக்கக்கூடாதோ?" என்று அனுயா சற்று கோபமாகப் பேசியதைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில், அனுயா சாதாரணமாக கோபம் கொள்ளும் ஆளில்லை. ஆனால், நட்பென்று வந்துவிட்டால் அவள் மாறிவிடுவாள். காவ்யாவின் வார்த்தைகள் ஏற்படுத்திய காயமே அவளை இப்படி கோபம் கொள்ளச் செய்திருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்.
"சாரிடி! நான் அப்டி மீண் பண்ணி சொல்லல. நீங்க ரொம்ப பயப்பட வேணாம்னு தான் அப்டி சொன்னேன். சாரிடி. ப்லீஸ்..." என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கும் அவளை அவர்களால் எப்படி மன்னிக்காமல் இருக்கமுடியும்?! அவளைக் கட்டிக்கொண்டனர்.
"நீ இப்டி பேசினதுல பழைய காவ்யா தெரிஞ்சா. ரொம்ப நாளைக்கப்றம் இப்டி நீ தைரியமா பேசி பாக்குறோம். சீக்கிரமே நீ பழையபடி மாறிடுவனு நம்பிக்கை வந்துடுச்சு. நீ நினச்ச மாறியே பஸ்லயே போ. இப்ப சந்தோசமா?!" என்று அனுயா கூறிட, காவ்யாவும் புன்னகைத்து தலையை ஆட்டினாள்.
"ஆனா..இனி இப்டி பேசக்கூடாது! பேசுன... அப்றம் என்ன பண்ணுவேன்னே தெரியாது! பாத்துக்க!" என்று ரம்யா பொய்யாக மிரட்ட,
"ஓஓ..என்ன பண்ணுவீங்களாம் மேடம்?" என்று சரண்யா ஆர்வமாக கேட்க,
"அதான் தெரியாதுனு சொன்னேன்ல! அப்றம் என்ன கேள்வி?! அவளே சும்மா இருக்கா! நீ எடுத்துக் கொடுக்கிறியா?!" என்று சரண்யாவிடம் பொய்க் கோபத்தில் பொறிந்து தள்ளினாள், ரம்யா. அதைக் கண்ட அனைவரும் சிரிக்க, நிலைமை சற்று சீரானது.
மாலை வேளையில் தோழிகள் ஐவரும் சேர்ந்து பால்கனியில் அமர்ந்து தேனீர் அருந்திக்கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். காவ்யா அதிகம் பேசாமல் அவர்கள் பேசுவதை கவனித்த வண்ணம் இருந்தாள். காலையில் அவளிடம் இருந்த சிறய உற்சாகம் இப்போது காணப்படவில்லை. இதை தன்யா கவனித்துக் குறித்துக் கொண்டாள்.
தோழிகள் சிறிது நேரத்திற்குப் பின் வீட்டுக்குள் செல்லப்போக, காவ்யா அங்கேயே சிறிதுநேரம் இருப்பதாகக் கூற, அவர்களும் சரி என்றுவிட்டுச் சென்றனர், தன்யாவைத் தவிர.
தன்யாவும் உடனிருப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தாள். இங்கே காவ்யா அவளை சாதாரணமாகப் பார்த்துவிட்டு வானத்தையும் மரங்களையும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்க, தன்யா தன் பேச்சை ஆரம்பித்தாள்.
காவ்யா! என்றழைக்கத் திரும்பியவள், தன்யாவைப் பார்க்க,
"இன்னும் எத்தன நாளைக்கு எங்கள
ஏமாத்துறேனு உன்ன நீயே கஷ்டப்படுத்திக்கப் போற??" என்று அவளைப் பார்த்துக் கேள்வி கேட்க, காவ்யாவோ புரியாமல் அவளைப் புருவம் சுருக்கிக் கேள்வியாய்ப் பார்த்தாள்.
"நான் என்ன சொல்றேன்னு உனக்குப் புரியலையா?? இல்ல புரிஞ்சும் புரியாத மாறி பாக்குறியா காவி?!" என்று தன்யா கேட்க,
"ஹே! தனு, என்னடி இப்டி சொல்ற? நிஜமாவே எனக்கு நீ என்ன சொல்றனு புரியல! நான் எதுக்கு உங்கள ஏமாத்தப்போறேன்?! நீங்கதானடி எனக்கு எல்லாமே!! அப்டி இருக்கும்போது உங்கள எதுக்கு ஏமாத்தணும்?!" என்று கவலையாகக் கேட்டிட,
"அதத்தான் நானும் கேட்குறேன்! காவி. எங்கள ஏமாத்த நினைக்கலைன்னா எங்ககிட்ட இருந்து எதுவும் மறைக்கவும் கூடாதுல! அப்ப எதுக்காக உன்னோட கஷ்டத்த உனக்குள்ளயே மறச்சு வச்சுக்கற? நாங்க வருத்தப்படக்கூடாதுனா?" என்று தன்யா அவளைப் பார்த்துக் கேட்டிட , அவள் மௌனம் காத்தாள்.
"என்ன நினைச்சிட்டுருக்க நீ? நீ சொல்லாம எல்லாத்தையும் உனக்குள்ளயே வச்சுகிட்டா எங்களால கண்டுபிடிக்கவே முடியாதுன்னா? எனக்கு எல்லாம் தெரியும்!" என்று சற்று கோபமாகக் கூறிட, காவ்யா அவளை அதிர்ந்து நோக்கினாள்.
"ஆமா! நீ அன்னைக்கு தூக்கத்துல அலறுனியே! எழுந்தப்றம் உனக்கு எதுவும் நியாபகம் இல்லாதமாறி
காட்டிகிட்ட. ஆனா, உனக்கு நியாபகம் இருந்துச்சுன்னும் தெரியும்! நீ பாத்ரூம்குள்ள போய் அழுததாலதான் உன் முகம் வீங்குச்சுன்னும் தெரியும்!" என்று கூறியதைக் கேட்டவளோ அவளை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.
காவ்யா வேலைக்குச் செல்வதாக எடுத்த முடிவு சரியா?? அவளுக்கு அங்கே ஏதேனும் ஆபத்து காத்திருக்குமா?? ராணா திட்டம் எதுவும் தீட்டுகிறானா??
❤வருவாள்❤...