உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 30
சில நிகழ்வுகள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும் ! அப்படித் தான் திகழொளி ,மிகன் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.
மிகன், திகழொளி வாழ்க்கையை துரோகத்தால் தன்னால் முடிந்தளவு கெடுத்த நீரனுக்கு உடல் நலம் சீராக பத்து நாள் ஆனது.
ஒருவழியாக நீரன் மருத்தவமனையிலிருந்து வீடு திருமபினான்.வீடு வரும் வரை மிகன் ,திகழொளிப் பற்றி எதுவும் நினைக்கவில்லை..
நாம் பிழைப்போமா? என்ற பெரும் பயமே அவனை சூழ்ந்திருந்தது. அதனால், எதைப்பற்றியும் அவன் சிந்திக்கவில்லை..
ஆனால் ,வீட்டிற்கு வந்த அன்றே வெறிச்சோடிக் கிடந்த திகழொளியின் வீடு அவனின் கவனத்தை ஈர்த்தது.
மிகனுடன் எப்போது தனிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவன் ,அது கிடைத்தவுடன் திகழொளிப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டான்.
நீரன் மனதிற்குள் தான் நினைத்தது நடந்து விட்டது என்று மகிழ்ந்தான்
வீட்டுப் பெரியவர்களும் விஷயம் கேள்விப் பட்டதும் நொந்து போனார்கள்.மிகனிடம் தனித்தனியாக விசாரித்தவர்களால் அவனை கடிந்து கொள்ளத் தான் முடிந்தது.
உலகமாறனுக்கு அன்று தான் மகனின் நேசமே தெரியவந்தது.மகனின் நிலையை நினைத்து சொல்லிடங்கா துக்கத்தை மனதிற்குளேயே வைத்து குமறினார்.
உண்மை தெரிந்த மணியரசியோ எதையும் காட்டிக் கொள்ளாமல் தவித்தார்.புத்திர பாசம் அவரின் வாயை அடைத்தது.
மிகனோ, நடைபிணமாக இருந்தான்.அவனால், அங்கே இருக்க முடியாமல் வேலைக்கு மாற்றால் வாங்கிக் கொண்டு புனே சென்றான்.
ஒருவனின் சூழ்ச்சியால் இருவரின் வாழ்க்கையும் நரகமானது.
மணியரசியோ, அதன்பிறகு தான் வெகு தீவிரமாக மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தார்.
கணவருடன் கலந்தாலோசித்து மகனின் கெட்ட பழக்கங்களை நீக்க மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார்.
உலகமாறனுக்கும், மிகனுக்கும் இது எதுவும் தெரியாது. அவர் மகன் வெளியூர் சென்ற பின் தன் அலுவலக வேலை உண்டு தான் உண்டு என்று தன் வட்டத்தை மிகவும் சுருக்கிக் கொண்டார்.
மிகனோ, தந்தையிடம் தினமும் பேசுவான்..தன் அத்தை வீட்டாரிடம் வாரம் ஒரு முறை பேசுவான்.
மிகன் அடிக்கடி ஊரூக்கு வராவிட்டாலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து இரண்டு நாள் மட்டும் தங்கி தந்தையை பார்த்துச் செல்வான்.
நாள்கள் இப்படியே நகர்ந்து கொண்டிருந்தது. மணியரசியோ, மகனின் மனநிலை கொஞ்சம் சீரானதும், மகனுக்கு திருமணம் செய்து வைக்கனும் என்று முடிவு செய்து கணவனுடைய தூரத்து சொந்தத்தில் பெண்ணும் பார்த்தார்.
தங்களைவிட வசதி குறைவாக இருந்தாலும், மணியரசிக்கு கயல்விழியை ரொம்ப பிடித்திருந்தது.
நீரனும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக திருமணத்தை மிக எளிமையாக முடித்தார்.
மிகனும், திருமணத்திற்கு வந்து கலந்து கொண்டான்.அவன் மனமோ எப்படியோ நீரன் பழையதை மறந்து நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்தது.
நீரனுக்கு திருமணம் முடிந்த பின் உலகமாறன் மெதுவாக மகனிடம் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
மிகன் தன் மனதை எதையும் பெரியவர்களிடம் காட்டிக் கொண்டதே இல்லை..அதனால் அவன் திகழொளியை மறந்து விட்டான் என்று பெரியவர்களும் நினைத்திருந்தனர்.
ஆனால், அவன் தான் மறக்கவே இல்லையே.. அவனுள் ஓர் உயிராக கலந்துவிட்டவளை எப்படி மறப்பான்.
தந்தை திருமணத்தை பற்றி கேட்டாலே மிகன் ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்து வந்தான்.
இப்படியே நாள்கள் நகர கயல்விழி கருவுற்றாள். நீண்ட நாள்கள் கழித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
நீரனோ தன்னால் இருவரின் வாழ்வு போனதே என்று சிறிதும் குற்றயுணர்வு இல்லாமல் நிம்மதியாக அவன் வாழ்வை வாழ்ந்தான்.
கயல்விழிக்கு ஏழு மாதம் ஆனாதும், சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தினார்கள்.
எல்லாமே நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது.
ஆனால் விதி வழியது என்பது பொய்யல்ல.. நன்றாக சென்று கொண்டிருந்த நீரனின் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.
கயல்விழிக்கு சரியான நேரத்தில் பிரசவ வலி வரவும் அவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த கயல்விழிக்கு பிரசவகால ஜன்னி கண்டது.அது அவளின் உயிரையே பறித்து விட்டது.
ஒரே நாளில் மணியரசியின் குடும்பத்தை அந்த நிகழ்வு புரட்டிப் போட்டது.பச்சை குழந்தையை வைத்துக் கொண்டு செய்வதிறியாமல் அழுது கரைந்தார்.
நீரனும் உடைந்து போனான்.விஷயம் கேள்விப்பட்டு உடனே விமானம் பிடித்து ஊரூக்கு வந்த மிகன் தான் எல்லாருக்கும் முடிந்தளவு ஆறுதலாக இருந்தான்.
மணியரசியோ, கயல்விழியின் குடும்பத்தாரிடம் குழந்தையை தராமல் தானே வளர்ப்பதாக சொல்லிவிட்டார்.
ஏற்கனவே கஷ்டத்தில்ருக்கும் அவர்களை மேலும் கஷ்டத்தில் தள்ள அவர் விரும்ப வில்லை..
குழந்தையை கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் தன் கவலைகளை மனதிற்குள் அடக்கிக் கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டார்.
நீரனோ, மறுபடியும் தன் பழைய வாழ்க்கையை தேர்ந்தெடுத்தான்.பழைய படி குடி ,போதைப் பழக்கம் என்று தன் உலகில் மூழ்கினான்.
தன் குழந்தையைக் கூட கண்டுகொள்ளவில்லை..மிகன் தான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஊரூக்கு வந்துவிடுவான்..
தன் அத்தை குடும்பத்துக்கும், குழந்தைக்கும் பெறும் துணையாக இருந்தான். அவன் தான் குழந்தைக்கு மகிழினி என்று பெயர் சூட்டினான்.
மிகனோ ஒரு நாள் நீரன் கெட்டு சீரழிந்து போவதை காண முடியாமல் அவனைக் கண்டித்தான்.
ஆனால் ,அவனோ" மிகா என்னால் எதையும் மறக்க முடியலைடா ..கிடைத்த வாழ்வை எப்படியோ வாழ்ந்தேன். ஆனால் எனக்கு அதுவும் நிலைக்கவில்லை..எல்லாத்தையும் மறக்கத் தான் நான் குடிக்கிறேன்.." என்று வியாக்கியானம் பேசினான்.
"டேய் மனசை தேத்திக்கோடா.. உனக்கு ஒரு குழந்தை இருக்கு..அதுக்காகவாவது நீ நல்லா இருக்கனும் டா..அதை நல்லபடியா வளர்க்கும் பொறுப்பு உனக்கு இருக்குடா.." என்ற மிகனிடம்..
"புத்திக்கு அது புரியுது! ஆனால் ,மனதிற்கு புரியவில்லையே நான் ஆசைப்பட்டவளை கல்யாணம் செய்ய முடியலே .. சரி இது தான் தலை எழுத்து என்று கயலுடன் வாழ்ந்தால் அந்த வாழ்வும் நிலைக்கலே.."என்று தன் தப்புக்கு நியாயம் சொன்னான்.
மிகனோ, என்ன சொல்வதென்றே தெரியாமல் மெளனமாக நின்றான்.
நீரனோ, தொடர்ந்து, "ஒருவேளை நான் திகழொளியை கல்யாணம் செய்திருந்தால், நல்லா இருந்திருப்பேன் தானே மிகா..ஏன்டா அவளுக்கு என்னைப்பிடிக்காமல் போச்சு.." என்று நாடகமாடினான்.
திகழொளியின் பேரை எடுத்தால் தான் மிகன் எதைப்பற்றியும் பேசமாட்டான் என்று அவனை நன்கு புரிந்து வைத்திருந்த நீரன்.
அப்போதும் தன் கொடூர புத்தியைக் காட்டினான்.
நீரன் நினைத்தது போல் திகழொளி பெயரை கேட்டபின் மிகன் நீரனிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டான்.
ஆனால் மகழினியின் மீது உயிராக இருந்தான்.தாயும் இல்லை..தந்தையும் ஒழுங்கில்லை என்றான பின் குழந்தை மீது அளவுகடந்த பாசத்தைப் பொழிந்தான்.
எல்லா கெட்டதும் முடிவுக்கு வர ஒரு நேரம் வரும் என்பது போல நீரனுக்கும் நேரம் வந்தது.
அந்த நேரம் அவனுடைய உயிரைப் பறித்தது.
ஒரு நாள் இரவு அளவுக்கதிகமான குடி போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நீரன்! போதை மயக்கத்தில் எதிரில் வந்த லாரியில் மோதியவன் சம்பவ இடத்திலேயே தன் உயிரை விட்டான்.
விஷயம் கேள்விப்பட்டு மிகன் ஓடோடி வந்தான்.இடிந்து போய் உட்கார்ந்து இருந்த மணியரசிக்கும், காஞ்சித்துரைக்கும் மகனாக முன் நின்று அனைத்தும் செய்தான்.
தன் தங்கையின் நிலையை காணமுடியாமல் உலகமாறனும் நொறுங்கி போனார்.
சோகத்தில் புத்திர சோகம் தான் பெரியது.அதிலிருந்து மீண்டுவருவது என்பது பெரிய சவால் தான்.
மணியரசியோ, கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தார் . அதற்கு காரணம் மிகனும், மகிழினியும் ஒரு புறம் என்றால் மிகப்பெரிய காரணம் நீரன் தான்.
அவனின் மோசமான குணமும், நடவடிக்கையுமே ஒரு கட்டத்தில் அவன் போய் சேர்ந்ததே பராவாயில்லை என்று நினைக்கும் அளவு அவர் மனம் வெறுத்துப் போய் இருந்தது.
மகனின் வாழ்க்கையை சீர்படுத்த அவரும் என்னென்னவோ செய்தார்.ஆனாலும் எதுவும் நிலைக்கவில்லை..
தன் அண்ணன் மகனின் வாழ்க்கையை கெடுத்ததை கூட தெரிந்திருந்தும், புத்திர பாசத்தில் மிகனிடம் எதையும் சொல்லாமல் மகனுக்காவே அமைதியாக இருந்தார்.
எப்படியாவது அவனை சீர்படுத்த மறுவாழ்வு மையம் வரை அழைத்துச் சென்று அவன் வாழ்வை மாற்ற போராடினார்.
ஆனால், அவனோ கடைசிவரை திருந்தவே இல்லை..கயல் இறந்ததும் இது தான் சாக்கு என்று மறுபடியும் கெட்டு அழிந்தான்.
அது மட்டுமா? அவனை தட்டிக்கேட்ட தன் அண்ணன் மகனிடம் வேண்டுமென்றே திகழொளியை மீண்டும் இழுத்து வச்சு பேசி அவன் வாயை அடைத்ததை கேட்டவருக்கு மனசு சுத்தமாக வெறுத்து விட்டது.
எதர்ச்சியாக மகனை காணச் சென்றவருக்கு மிகனிடம் மகன் பேசியதை கேட்கும் சூழ்நிலை அமைந்தது.
மனதார விரும்பிய இருவரை பிரித்தது பத்தாதென்று இப்போதும் மகன் எப்படி நடகமாடுகிறானே என்று நினைத்தவருக்கு எல்லாமே வெறுத்து விட்டது..
இன்றுவரை பெற்ற மகனாக தங்களுக்கு எதுவுமே செய்ததில்லை.ஆனால் தான் பெறாத அண்ணன் மகன் தான் தங்களை இன்றும் பார்த்துக் கொள்கிறான் என்று நினைத்தவருக்கு மனசாட்சியே அவரை கொல்லாமல் கொன்றது.
அதனால் தான் வேகமாக அவர் மகனின் இழப்பில் இருந்து மீண்டார்.இனி மகிழினிக்காகவும், மிகனுக்காவும் வாழ வேண்டும். என்று முடிவெடுத்தார்.
காஞ்சித்துரையுமே, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டார்.
என்ன தான் மகன் மீது வெறுப்பு வந்த போதும் சில சமயம் மணியரசி மகனை நினைத்து உடைந்து தான் போவார்.ஆனால் ,அப்பொழுது எல்லாம் மகிழினி தான் அவருக்கு ஆறுதலாக இருந்தாள்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே.. மனம் ஒரு முறை இல்லாவிட்டாலும் ஒரு முறை ஏங்கித் தான் தவிக்கும்.
எப்படியோ மனதிற்குள் அனைத்து துக்கத்தையும் அடக்கிக் கொண்டு பேத்திக்காக வாழ்ந்தனர்.
மிகனையும், நீரனின் இறப்பு புரட்டிப் போட்டது. அவன் வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்று கலங்கித் தவித்தான்.
திகழொளியைப் பற்றி நீரன் சொன்னது அவனுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஒருவேளை திகழொளியை திருமணம் செய்திருந்தால் நீரன் நல்லா வாழ்ந்திருப்பானோ! என்று அவன் மனம் சந்தேகப்பட்டது.
நீரன் வாழ்க்கை இந்த திகழொளியால் தான் வீணானது என்று வழக்கம் போல் அவளையே தவறாக நினைத்தான்.
அவன் மனதில் அந்த கோவத்தின் தீ இன்று வரையில் குறையவே இல்லை..
உண்மை தெரியும் போது தான் அவனின் நிலை என்னாகுமோ..?
ஆனாலும் ,அவனால் திகழொளியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..
புனேவில் இருந்து மும்பை மாறிய போதும் அவனிடம் எத்தனையோ பெண்கள் தங்கள் காதலை சொன்னார்கள்.
ஆனால் அவனுள் சரிபாதியாக மாறியவளைத் தவிர வேறு யாரையும் அவனால் நினைத்து பார்க்க முடியவில்லை..
அவனோ ,திகழொளியை நினைக்காத நாள் இல்லை .ஒவ்வொரு நாளும் தன் மனதுடனேயே போராடி களைத்துப் போனான்.
இப்பிடியே அவன் வாழ்வும் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் தான் அவன் மாற்றலாகி மீண்டும் தன் ஊரூக்கே வந்தான்.
அங்கே எதிர்பாராமல் தன்னவளை சந்தித்தான்..அவளைப் பார்க்கும் பொழுது எல்லாம் அவளை கடித்து குதறியவன், அவளை ஏற்கவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் அனுதினமும் தனக்குள்ளேயே போராடினான்.
காதல் கொண்ட மனசு அவளைத் தான் திருமணம் செய்யவேண்டும் என்று எண்ணியது.ஆனால் அவள் துரோகம் செய்து விட்டாள் என்ற நினைவு வரும் போது அவளை பழிவாங்கத் துடித்தது.
இரண்டு மனதுடன் போராடியவன்.தீர்வாக அவளை திருமணம் புரிந்து அவள் தப்புக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
அவனால் அவளை வேறு ஒருவருடன் திருமணகோலத்தில் பார்க்க முடியாது..
அவள் தனக்கு மட்டுமே என்ற எண்ணமே அவளை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று அவளையே திருமணம் செய்ய வைத்தது.
ஆனால் அது அவனுக்கே இப்போது தண்டனையாக மாறியது.
மனதாக விரும்பியவளை ஏற்கவும் முடியாமல் ,தள்ளி வைக்கவும் முடியாமல் துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறான்.
திகழொளியோ, தான் மனதார விரும்பியவன்னுடனேயே தன் வாழ்வு இணைத்து விட்டது என்று நிம்மதி அடைய முடியாமல் ,காரணமே இல்லாமல் அனு தினமும் அவனுடைய கோபத்தில் பொசுங்கிக் கொண்டு இருக்கிறாள்.
விடியும் வரை தூங்காமல் மிகனும்,திகழொளியும்
பழைய நிகழ்வுகளை அசை போட்டபடியே படுத்திருந்தனர்..
இருவருக்கும் பழைய நினைவுகளின் ஞாபகங்கள் பச்சைப் புண்ணாக வலித்தது.
உறங்காத இரவுகளின் மிச்சம் காலையில் அவர்களின் விழிகளில் சிவப்பாக மிளிர்ந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்தில் மனைவியுடன் பொருந்திக் கொண்டிருந்தவன் பழைய நினைவுக
ளின் வலிகளால் மீண்டும் மனைவியிடம் கோபத்தை காட்டத் தொடங்கினான்.
ஆனால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடிவு வந்து தானே தீரும்..அவர்கள் பிரச்சினையும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
தொடரும்..
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 30 பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி புதன்கிழமை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்