Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
ஊஞ்சல்
அத்தியாயம் 10
தன் அங்கம் எதிலும் பொட்டு தங்கம் இல்லாமல் ஏழ்மையை அடையாளமாக போர்த்தி தன் எதிரே நின்றிருந்த செண்பாவை நிமிர்ந்து பார்த்தார் சக்ரவர்த்தி .
அடக்கி வைத்த அழுகையை அணை உடைந்த வெள்ளமாக கண்களில் பெருக விட்ட செண்பா " ஐயா ! என் புருசன் கை கால் விளங்காம கட்டிலே கதின்னு படுத்த படுக்கையாகிடக்காரு. பீமூத்திரமெல்லாம் நான் தான் அள்ளறேன். குடும்பம் கஷ்ட ஜீவனமா இருக்குங்கய்யா. ஐயா பாத்து ஏதாவது பண்ணனும்." என்றாள் கண்களில் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இழையோட.
"இங்க என்ன கொட்டியாகிடக்குது. வந்து கேட்கிறவங்களுக்கு எல்லாம் அள்ளி தர " என்றார் சக்ரவர்த்தி வெற்று சுவரை வெறித்தபடி.
"உங்களுக்காக எம் புருசன் எவ்வளவோ பண்ணியிருக்காரு. அதையெல்லாம் கொஞ்சம் நினைச்சு பாருங்க" என்றாள் செண்பர். அந்த எவ்வளவோ என்ற வார்த்தை பிரயோகம் சற்று அழுத்தமாக உச்சரிக்கப்பட்டதாக சக்ரவர்த்திக்கு தோன்றியது. இல்லைவெற்று பிரம்மையோ என்று கூட அவருக்கு தோன்றியது.
"சரி. அழுவாத! அவன் ஒன்னும் சும்மா எதையும் செய்யலை. எல்லாத்துக்கும் பணம் வாங்கிட்டுத்தான் செய்தான். சிலதுக்கு பேசுனதுக்கு மேலயே கொடுத்திருக்கேன். பிஸ்கட் போடுற கையை நாய் கடிச்ச மாதிரி அவனும் சில சமயம் என்கிட்ட ருந்து மிரட்டிபிடுங்கி இருக்கான்" என்றார் சக்ரவர்த்தி .
"இப்ப எதுனா கொடுங்கள் புண்ணியமா போகும் "
"இந்தா! இப்போதைக்கு இவ்வளவுதான் இருக்கு. வாங்கிட்டு போ. அப்புறம் குஞ்சப்பனிடம் கொடுத்து விடுகிறேன்." என்ற சக்ரவர்த்தி கோட் பாக்கெட்டிலிருந்த பணத்தை கத்தையாக எடுத்து நீட்டினார். அவர் கண்களுக்கு மதிப்பில்லா வெற்று பேப்பர் தான் அது. செண்பாவுக்கோ அது மதிப்பு மிகுந்த பொருள். பணம் தான் ஒருவர் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது.? குபேரனின் வாகனம் மனிதனாம். வாகனத்தை மாற்றிக் கொண்டே இருப்பது அவனுடைய இயல்பு. அவர் கையிலிருந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அவள் வெளியேறினாள்.
அவள் வெளியே போவதை உறுதி செய்து கொண்டவர் "குஞ்சப்பா " என்றார்.
"அய்யா" என்றபடி வந்து நின்றவளிடம் "இனிமே இவளை உள்ளே விடாதே. நான் ஊருல இல்லைன்னு சொல்லி அனுப்பி விடு. சாப்பாட்டை மாடிக்கு கொண்டு வா" என்றார். பேப்பரை படித்து முடித்தவர் அதை மடித்து டீப்பாயில் வைத்து விட்டு மாடிப்படி ஏறி மேலே அவர் அறைக்கு சென்றார்.
பேஸ்டை பிதுக்கி பிரஸ்ஸில் வைத்து பல் விளக்கியவர் வாஷ் பேசினில் நுரையைதுப் பி விட்டு நிமிர்ந்த போது அவர் பின்னால் அவன் நின்று கொண்டிருந்தான். அதே நிர்சலனமற்ற விழிகளோடு அவரை பார்த்து மெல்ல சிரித்தான்.
அவருக்கு குபீரென வியர்த்தது. இரண்டு நாள் நிம்மதியாக இருந்தார். எங்கோ காணாமல் போயிருந்தவன் இப்போது திரும்பவும் வந்து விட்டான். அதுவும் பட்டபகலில்.
அவர் " குஞ்சப்பா! அவன் திரும்ப வந்துட்டான்!”என்று அலறினார். அவர் கையிலிருந்த பிரஷ் நழுவி விழுந்தது.
தடதடவென மாடிப்படி ஏறி ஓடி வந்த குஞ்சப்பன் அவரைத் தவிர அறையில் யாரையும் காணாமல் திகைத்து நின்றான்.
அவனைப் போலவே அவரும் திகைப்போடு தான் நின்று கொண்டிருந்தார்.