Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
844
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்

நிலவு -01

அழகாகப்
புலர்ந்தது அந்தக் காலைப் பொழுது, மெல்ல தன் விழிகளை திறந்தாள் நயனதாரா. இரண்டு நாட்களாய் சரியாக உறக்கமில்லாததால் அவள் விழிகளில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தது கட்டிலை விட்டு இறங்கியவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். குளித்துவிட்டு தயாராகி வந்து தன் அறைக் கதவை திறக்க வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. முழு வீடும் கல்யாண பரபரப்பிலிருக்க எங்கும் உறவினர் கூட்டம். அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சியின் சாயல். ஆனால் மகிழ்ச்சியின் எல்லையில் இருக்க வேண்டியவளோ ஒரு வித குழப்பத்துடனே இருந்தாள். எதிலும் அவளால் ஒன்ற முடியவில்லை.
'இன்று மெஹந்தி, விடிந்தால் திருமணம் ஆனால்.......' எண்ணியவள் தாய், தந்தையிடம் கேட்டே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து நேராக அவர்களை தேடிச் சென்றாள். வேலைப் பரபரப்பில் இருந்த இருவரிடமும் தனியாக பேச வேண்டும் என அழைத்துக் கொண்டு அவர்களின் அறையில் சென்று உட்புறமாக தாளிட்டாள். அவளின் குழம்பிய முகத்தை கேள்வியாய் நோக்கிய இருவரையும் பார்த்து எப்படி ஆரம்பிப்பது என சில கணம் தடுமாறியவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு

"அப்பா, இ... இந்த... கல்யாணத்துல அவருக்கு... அதாவது மாப்பிள்ளைக்கு சம்மதம் தானாப்பா?" அவளின் கேள்வியில் ஒரு கணம் அதிர்ந்தனர் அவளைப் பெற்றவர்கள்.

"என்னமா ஏன் இப்படி கேட்கிறாய்? அதுவும் இப்ப போய்" அவளின் தந்தை வாசுதேவன் கேட்க

"அப்பா, எனக்கென்னவோ அவருக்கு விருப்பமில்லையோ என்று தோணுதுப்பா. நீங்களும் இதுவரை அவரை பார்த்ததுமில்ல, பேசினதுமில்ல. அதுமட்டுமில்ல எல்லாம் வேக வேகமா நடக்குற மாதிரி இருக்கு. உங்களுக்கு அப்படி எதுவும் தோணல்லையாப்பா?"

"என்னடி, என்னாச்சு அதெல்லாம் விருப்பமில்லாமலா கல்யாணம் வர வருவாங்க?" தாய் ரஞ்சனி படபடத்தார்.

"இல்லம்மா பொண்ணு பார்க்க வந்தப்போ கூட அவர் வரல்ல, அதுமட்டுமில்லை அவர் இல்லாமலே நிச்சயமும் நடந்துட்டு. அதுக்கு அவர் ஊர்ல இல்லை அதனால வர முடியல்ல என்று சொன்னாங்க அதை ஒத்துக்கலாம். ஆனால், இதுவரை ஒரு போன் கூட பண்ணல்லையே. அப்பா, எனக்கு போன் பண்ண வேணாம் உங்ககிட்டயாவது பேசிருக்கனுமா இல்லையா? நாளைக்கு கல்யாணம். ஆனால், இதுவரை அவர் யாருகிட்டையும் பேசவே இல்லையேப்பா. இந்த காலத்துல கல்யாணம் நிச்சயமான அடுத்த நிமிஷம் பேசத் தொடங்கிடுவாங்க. ஆனால் இதுவரை அவர் அப்படி எதுவுமே பண்ணல்லையேப்பா. என் ப்ரண்ட்ஸ் அவரப் பத்தி என்கிட்ட கேட்டப்போதான் எனக்கே புரிஞ்சது. அவரப் பத்தி எதுவுமே எனக்கு தெரியல்ல என்று. நீங்க சொன்னது தவிர பர்ஸனலா அவரப் பத்தி எதுவுமே எனக்குத் தெரியல்லப்பா. அதுதான் ரெண்டு மூனு நாளா கொஞ்சம் சந்தேகமா இருக்கும்மா. உண்மையிலே அவருக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம்தானா? இல்ல கட்டாயத்துல ஒத்துட்டாரா? எனக்கு ஒரே குழப்பமா இருக்குப்பா. பிடிக்காதவங்களோட எப்படி வாழ முடியும் எனக்கு பயமா இருக்கும்மா." மனதிலுள்ளதை கொட்டினாள் பெண்.

"என்ன இப்படி பேசுற, இத்தனை நாளும் வராத சந்தேகம் ஏன் இப்போ? யாரு உன்னை குழப்பி விட்டாங்க. எனக்கு படபட என்று வருதே என்னங்க இவ" நெஞ்சை அழுத்திக் கொண்டு ரஞ்சனி கேட்டாள்.

"அம்மாடி இது தான் விஷயமா? அதுதான் சம்மந்தியம்மா சொன்னாங்களே. மாப்பிள்ள தம்பி நாட்டிலே இல்ல வேல விஷயமா வெளி நாட்டுக்கு போயிருக்காரு. கல்யாணத்துக்கு முதல் நாள்தான் வருவாரென்றும் உன்கிட்டத்தானேம்மா சொன்னாங்க."

"அதில்லப்பா இந்த காலத்துல தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறியிருக்கு நெனச்சா பேசலாமேப்பா. என் ப்ரண்ட்ஸூம் அதைத்தான் சொல்லுறாங்க. நான் அவர்கிட்ட பேசவே இல்லை என்று சொன்னப்போ அவங்க நம்பவே இல்லை. அடுத்த கிரகத்துலையா இருக்காரு இல்லையே துபாய்லதானே இருக்காரு என்று கேலி பண்ணுறாங்க. கட்டாய கல்யாணம் என்றால் தானாம் இப்படி மாப்பிள்ளைங்க செய்வாங்களாம். இல்லை என்றால் எல்லாம் ஓகே ஆன அடுத்த கணமே போன் நம்பர் வாங்கிப் பேசத் தொடங்கிடுவாங்கலாமே. அவர் அப்படி எதுமே பண்ணல்லையேப்பா. அப்போ அவருக்கு இஷ்டமில்லை என்றுதானே அர்த்தம். எனக்கென்னவோ சந்தேகமாயிருக்குப்பா?" விழிகளில் கலக்கத்துடன் குழந்தை போல் பேசியவளை பார்த்த வாசுதேவன் அவளுக்குப் புரியும் வண்ணமாக எடுத்துக் கூறினார்.

"இங்கப்பாரும்மா உனக்கே தெரியும் இந்த கல்யாணம் வெறும் ரெண்டு வாரத்துல நிச்சயமாகியிருக்கு. நிச்சயமாகும் போதும் அந்த தம்பி ஊரிலே இல்ல. வேலை விஷயமா ரொம்ப பிஸியா இருக்கார் என்றும் சம்மந்தியம்மா சொன்னாங்க இல்ல. அதனால கூட பேசாம இருந்திருக்கலாம். ஆனால் எனக்கொரு சந்தேகம்..........? வாசுதேவன் கேள்வியாய் இழுக்க என்ன என்பது போல் அவரை ஏறிட்டாள் பெண்.

"எனக்கென்னவோ உன் விருப்பம் வேற போல இருக்கே. அந்த தம்பி உன்னோட பேசவில்லை என்ற கவலை போல இருக்கே" என கிண்டல் செய்ய

"போங்கப்பா அப்படி எல்லாம் ஒன்றுமில்ல" என வெட்கியவள் மீண்டும் தன் மனதைக் குடையும் கேள்வியிலேயே நின்றாள்.

"அதில்லைப்பா......"

"போதும் இதோட நிறுத்திக்கோ. நானும் கொஞ்ச நாளா பார்க்குறேன், எதையோ யோசிச்சுகிட்டே சுத்திட்டிருக்க. கல்யாண பயம் என்று நினைச்சேன் இப்போதானே புரியுது தேவையில்லாம குழப்பிட்டிருக்க என்று. இதுக்கெல்லாம் உன் ப்ரண்ட்ஸ் தான் காரணமா? யாராவது எதையாவது சொன்னா அப்படியே நம்பிடுவாயா? இப்படி இருந்தா எல்லோரும் உன்னை ரொம்ப லேசா ஏமாத்திடுவாங்க. அவங்களுக்கு சூழ் நிலை தெரியல்ல. உனக்கு தெரியுமில்ல. நீயும் குழம்பி எங்களையும் குழப்பாத. சும்மா கண்டத நினைக்காம போய் கல்யாணப் பொண்ணா லட்சணமா இரு. எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு, நாளைக்கு கல்யாணம் இப்ப போய் இப்படி கேட்டுட்டு இருக்க இது மாப்பிள்ள வீட்டுல யார் காதுலையாவது விழுந்தா ஏன் உங்க அத்தைங்களே போதுமே. அத இத பேசி கல்யாணத்த நிறுத்திட. அதுக்கு நீ வழி வைக்காதே. என்ன சொல்லுறது புரியுதா?" ஏதேனும் காரணத்தால் திருமணம் நின்று விடுமோ என்ற பயத்தில் கோபமாக குறுக்கிட்ட ரஞ்சனியை லேசாக கண்களில் நீர்த்திரையிட ஏறிட்டாள் பெண். மகளின் முகத்தைப் பார்த்ததும் கோபம் தணிய

"இங்கப்பாரும்மா இந்த காலத்துல ஒரு பொண்ணப் பார்க்க வந்துட்டு கல்யாணம் கூடிவராம போனாலே அந்த பொண்ணுக்கு இன்னொரு வரன் அமையிரது கஷ்டம், நாளைக்கு கல்யாணத்தை வச்சுகிட்டு இப்போ வந்து இப்படிப் பேசினால் என்னம்மா செய்யுற. சரி அந்த தம்பிக்கு விருப்பமா? இல்லையா? என்று எப்படி அவங்களுட்டேயே கேட்க முடியும் அதுவும் கடைசி நேரத்துல. அதையே தப்பா எடுத்து கல்யாணத்தை நிறுத்திட்டாங்க என்றால் என்ன பண்ணுறது? அப்பாவும் எவ்வளவு செலவு பண்ணிருக்காரு இதுக்கு மேல கடன் வேற, எல்லாமே வீணாகிடும்மா. தயவு செஞ்சு உன்கிட்ட கெஞ்சிக் கேட்டுக்கிறேன் ஏதாவது பண்ணி கல்யாணத்தை நிறுத்திடாதேம்மா. நீ மட்டுமா எங்களுக்கு? உனக்குப் பின்னாடி இன்னொருத்தி இருக்கா அவளையும் பார்க்கனுமில்லை. அதைவிடு அதுக்குப் பிறகு உன்னோட நிலமை. எனக்கெல்லாம் கல்யாணமாகும் போது எங்கப்பாம்மா சம்மதமா என்று கூட கேட்கல்லை. உங்கப்பாவை பார்க்காமத்தான் கட்டிக்கிட்டேன் தெரியுமா? அவருக்கு புடிக்குமா புடிக்காதா என்று கூட எனக்கு தெரியாது. நாங்க வாழல்ல. இன்னைக்கு வரைக்கும் சந்தோசமாத்தானே இருக்கிறோம். நீ புத்திசாலிப் பொண்ணும்மா நிச்சயமா மருமகனைப் புரிஞ்சு நல்ல ஒரு வாழ்க்கைய உன்னால அமைச்சுக்க முடியும். எல்லாத்தையும் விடு நாங்க உனக்கு தப்பா எதுவும் செய்வோமா? யாராவது எதையாவது பேசினால் அதை தூக்கி தூரப்போடு. உன் ப்ரண்ட்ஸ்கிட்ட நானே வந்து பேசிக்கிறேன். கண்டதையும் யோசிக்காம நிம்மதியா இரும்மா என் ராசாத்தியில்ல" தாய் கூற அப்போதும் கலங்கியவளாய்

"இல்லம்மா என் ப்ரண்ட்ஸை ஒன்றும் சொல்லாதீங்க. அவங்க காரணமில்லம்மா. அவங்க சொல்லுறதும் சரிதானே. என்னவோ என் மனசுக்கும் தோணிக்கிட்டே இருக்கு அவருக்கு விருப்பமில்லையோ என்று அதான் அத தெளிவு படுத்திட்டா நிம்மதி தானேம்மா அதுதான்...." என அவளும் அவள் பிடியில் நிற்க

கண்களில் கண்ணீருடன் பேசும் பெண்ணைப் பார்த்தவர்கள் இதனை தெளிவு படுத்தாவிட்டால் மகள் நிம்மதியாக இருக்க மாட்டாள் என்பதை புரிந்து கொண்டார்கள். ஆனால் இப்போது மாப்பிள்ளைக்கு கல்யாணத்துல சம்மதமா? என்று எப்படி நேராக கேட்க முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினார் வாசுதேவன். சில மணி நேரங்களில் ஒரு முடிவெடுத்தவராக தன் கைப்பேசியில் மணமகனின் தாய் காயத்ரியின் இலக்கங்களை அழுத்தினார் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

"வணக்கம் சம்மந்திம்மா நான் வாசு. எப்படி இருக்கீங்க மத்தவங்க நல்லா இருக்கிறாங்களா?"

"வணக்கம் அண்ணா நாங்கள் எல்லோரும் ரொம்ப நல்லாயிருக்கிறோம். நீங்க எப்படி இருக்கீங்க, அண்ணி நல்லாயிருக்காங்களா என் மருமக எப்படியிருக்கா?"

"நாங்களும் நல்லாகிருக்கோம். மாப்பிள்ள ஊருக்கு வந்துட்டாங்களா? நான் அவர் கூட கொஞ்சம் பேசனுமே"

"இல்லைண்ணா. இன்னும் வரல்ல"

"என்ன இன்னுமில்லையா? நாளைக்கு கல்யாணம் இப்போ வரைக்கும் வரல்ல என்றால்......?" தன் மகளின் சந்தேகம் சரிதானோ என அந்த தந்தைக்கு தோன்றியது. சட்டென்று முடிவெடுத்தவராய் தன்னை திடப்படுத்திக் கொண்டு

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும் சம்மந்தியம்மா மாப்பிள்ளைக்கு இந்த கல்... கல்யாணத்துல....... சம்மதம் தானே" நேரடியாகவே கேட்டு விட மறுமுனையில் சிறு அமைதி அதில் கலங்கியவர் பல ஹலோக்களை சொல்லிவிட்டார்.

"என்னம்மா எதுவும் பேசாம இருக்கீங்க."

"எ...என்ன அண்ணா இப்படிக் கேட்குறீங்க. என்னாச்சு....... என் மகனுக்கு சம்மதந்தான்..." பதட்டமானார் காயத்ரி

"ஒன்றுமில்லை, நாளைக்கு கல்யாணம். மாப்பிள்ளை இன்னும் ஊருக்கு வரல்லை அதுதான்......" சந்தேகமாய் இழுக்க

"தம்பி இரவே கொழும்புக்கு வந்துட்டு. அங்க கொஞ்ச வேலையிருக்கு முடிச்சுட்டுதான் ஊருக்கு வெளிகிடுறதா சொன்னான். இந்நேரம் அநேகமா வெளிக்கிட்டிருக்கனும். நான் போன் பண்ணிட்டு உங்களுக்கும் சொல்லுறேன்"

சரி சம்மந்தி மாப்பிள்ளையோட நம்பர கொடுங்க அவர்கிட்ட நானும் பேசிடுறேன் அது தானேம்மா முறையும் கூட." மீண்டும் மறுமுனையில் ஒரு அமைதி

"அது..... வந்து...."

"என்னம்மா, கொஞ்சம் தயங்கி தயங்கி பேசுறீங்க ஏதாவது பிரச்சனையா? உண்மையிலே உங்க மகனுக்கு இதுல சம்மதம் தானா?" சற்று அழுத்திக் கேட்டார்.

"சம்மதம் தான் அவன் சம்மதிச்ச பிறகுதான் பொண்ணு பார்க்க உங்க வீட்டுக்கே வந்தோம்."

"நீங்க சொல்லுறது உண்மை தானே நம்பலாமா?"

"நூறு வீதம் என்னை நம்பலாம் அண்ணா"

"சரி சம்மந்தி உங்களை நம்புறேன். மருமகனோட நம்பர்"

"உங்க போனுக்கு அனுப்பி வைக்கிறேன்"

"அப்படியா?"

"ஓம். அனுப்பிடுறேன்."

"நன்றிம்மா"

"அப்படியா? ரொம்ப சந்தோசம் சரி சம்மந்தி நான் வச்சுடுறேன்."
என்றவர் அழைப்பைத் துண்டித்து விட்டு மகள் புறம் திரும்பினார். அவரையே பார்த்துக் கொண்டிருத்தவளிடம்

"இங்கப்பாரும்மா மாப்பிள்ளைக்கு கல்யாணத்துல முழு சம்மதம் தான்." என்றவர் காயத்ரி சொன்னதை மகளிடம் கூற

"எத வச்சுப்பா அவருக்கு சம்மதம் தான் என்று சொல்லுறீங்க." அப்போதும் சந்தேகத்துடனே கேட்க

"சம்பந்தியாம்மாட்ட நேராத்தானே கேட்டேன் நீயும் கேட்டுட்டுத்தானே இருந்த மாப்பிள்ளை கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன பிறகுதான் அவங்க உன்னப் பார்க்கவே வந்திருக்காங்க. நீ உன்னைக் குழப்பிக்காம போம்மா கல்யாணப் பொண்ணா சந்தோசமா இருடா" அப்போதும் அவள் மனது தெளிய மறுத்தது. ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு அவளை ஆட் கொண்டது.

"நீங்க அவர் நம்பரைக் கேட்டும் அத்தை ஏன்ப்பா கொடுக்கவில்லை"

"இல்லையேம்மா அவங்க என் போனுக்கு நம்பர அனுப்புறதா சொல்லிருக்காங்க. அனுப்பிடுவாங்க. நீ சொன்னதுல நானும் கொஞ்சம் குழம்பிட்டேன் ஆனாலும் அவங்ககிட்ட நேரடியா கேட்ட பிறகுதான் உண்மையிலே மனசுக்கு நிம்மதியா இருக்கு. நீயும் எதப்பத்தியும் யோசிக்காம போம்மா விழா இருக்குல்ல கொஞ்சம் ஓய்வெடும்மா." அவள் தலையை தடவியவாறே வாசுதேவன் கூறினார்.
ஆனாலும் அவள் முகம் தெளியவில்லை. சின்னதாய் இன்னும் குழப்பம் ஒட்டிக் கொண்டு தான் இருந்தது.

"இப்படி குழம்பின முகத்தோட இருந்தா எல்லோரும் என்ன ஏதுன்னு விசாரிக்க தொடங்கிடுவாங்க. என் ராசாத்தியில்ல, உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே முடியும் கவலைப்படாதே. சரி வாம்மா வந்து கொஞ்சம் ஓய்வெடு பின்னேரம் மெஹந்தி விழா இருக்குல்ல அப்புறம் முகம் பார்க்க சகிக்காதுடாம்மா. வாம்மா இதெல்லாம் தூக்கி போட்டுட்டு நிம்மதியா இரு. மாப்பிள்ளைக்கு உன்னப் புடிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்குறாரு." என்ற ரஞ்சனி, கவலையுடன் நின்ற கணவனிடம் தான் பார்த்துக் கொள்வதாக கண்ணைக் காட்டி விட்டு மகளை அழைத்துக் கொண்டு அவள் அறைக்குசென்றார்.

வளரும்.....

Share your comments here

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்

நிலவு - 02

வாசுதேவனின் அழைப்பைத் துண்டித்த காயத்திரிக்கோ சிறு பதட்டம் தொற்றிக் கொண்டது. 'இந்தப் பையன் அவங்களோட பேசியிருந்தா இப்படி அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்காதோ. அவன் மருமகளோடதும், சம்மந்தியோடதும் போன் நம்பர் கேட்டான் நான் தான் கொடுக்கல்லையே. பயம் எங்க கல்யாணத்த நிறுத்திடுவானோ என்ற பயம். முடியாதுன்னு சொன்னவனை என் கடைசி ஆயுதத்தை பயன்படுத்தி சம்மதிக்க வச்சிருக்கேன். எத்தனை தடைகள் எவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் இந்த கல்யாணம் முடிவாயிருக்கு. இப்போ இது வேற கடவுளே எந்தத் தடையும் வந்திடாம இந்த கல்யாணத்த நல்லபடியா முடிச்சுக் கொடுங்க'. என்று வேண்டிக் கொண்டவரின் கைகள் தானாக மகனின் எண்களை அழுத்தியது. அந்தப்பக்கமிருந்து கேட்ட ஆதித்யவர்த்தனின் கம்பீரமான குரலில் தன்னிலை அடைந்தவர்,

"ஹலோ என்னப்பா வெளிக்கிட்டாச்சா?"

"ஓம் அம்மா, அநேகமாக மூனு மணி போல வந்திடுவேன் என்று நினைக்குறேம்மா."

"சங்கரும் உன் கூட வாரான் தானே"

"ஓம் அம்மா அவனும் என்கூடத்தான் வாரான்."

"சரிப்பா நான் சொன்னதை மறக்கமா வாங்கினாயா?" காயத்ரி கேட்க சிறு அமைதிக்குப்பின்

"ம்.....சங்கர விட்டு வாங்கிட்டேன்." சுரத்தே இல்லாமல் கூறினான் அவர் மைந்தன்.

"நான் உனக்கு பிடிச்ச மாதிரி வாங்க சொன்னா சங்கர விட்டு வாங்கிருக்க. அது உன் மனைவிக்கு நீ கொடுக்கப் போற முதல் பரிசு நிச்சயமா உன் தெரிவா இருக்கனுமென்று தான் உன்னைப் பார்த்து வாங்க சொன்னேன். எனக்கு வாங்கத் தெரியாமலா உன்கிட்ட சொன்னேன். நல்ல புள்ளப்பா நீ, உனக்குத்தான் அறிவில்லை அவனுக்குமா இல்லை?" சற்று கோபம் கலந்த வருத்தத்துடன் காயத்ரி கூற

"ஏன்ம்மா இந்தக் கல்யாணமே என் விருப்பப்படியா நடக்குது எல்லாம் உங்க விருப்பம் தானே. இதுல அது மட்டும் என் விருப்பமா இருந்து என்ன செய்ய." அவனும் கோபமாக பதிலளிக்க பதறிப் போனார் காயத்ரி.'இப்போதான் பொண்ணு வீட்டுல நூறு வீதம் நம்ப சொன்னோமே இவன் என்ன இப்படி பேசிட்டிருக்கான் கடவுளே இது என்ன சோதனை.' உள்ளூற பரிதவித்தவாறே

"என்னப்பா சொல்லுற நீ சம்மதிச்ச பிறகுதானே...."

"ஆமாம்மா நான் சம்மதிச்ச பிறகுதான், ஆனால் நான் எப்படி சம்மதிச்சேன் என்று உங்களுக்கு மட்டும்தானே நல்லாத் தெரியும். நான் அந்த பொண்ணோட போன் நம்பர் கேட்டேன் கொடுத்தீங்களா? இல்லை அவங்க அப்பா நம்பர் கேட்டேன் அதையாவது கொடுத்தீங்களா? எங்க கல்யாணத்த நிறுத்திடுவேனோ என்று பயம். நான் கட்டிக்கப் போற பொண்ணுக்கிட்ட பேசுறதையும் நீங்கதான் தீர்மானிப்பீங்க இல்ல. அதுவும் உங்க விருப்பம்தான். ஆனால் பரிசு மட்டும் என் விருப்பத்தோட தெரிவு செஞ்சு நான் வாங்கனுமா?" தாயின் மனதை படித்தது போல் கூற அவன் குரலில் வெளிப்பட்ட கோபத்தில் அமைதி காத்தார் காயத்ரி.

"என்னம்மா, கதைக்காம இருக்கீங்க நான் சொல்றது நூறு வீதம் உண்மை என்று உங்க மனசாட்சிக்கு தெரியும். அதுதான் இந்த அமைதி சரி அதவிடுங்க நான் வேலை விசயமாக துபாய்க்குப் போகப் போறேன் என்று தெரிஞ்சு அந்த நாளாப் பார்த்து பொண்ணு பார்க்கப் போனீங்க நாளைக்கு கல்யாணம் இதுவரை நான் கட்டிக்கப் போறவளோட குரலைக் கூட கேட்கல்ல இப்போ கூட உங்களுக்கு அவ நம்பர தரனும் என்று தோணல்ல இல்ல." பொரிந்தவன் மறுமுனையில் இன்னும் அமைதி நீடிக்க தலைகீழா நின்னாலும் இவங்க பேசப் போறதுமில்ல, நம்பர் கொடுக்கப் போறதுமில்ல என்று புரிந்தவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டான். தன் கோபத்தை தணித்தவனாக

"இப்போ கதைக்க மாட்டீங்களே. சரி சரி சங்கர் ஒன்னும் வாங்கல்ல நான்தான் வாங்கினேன். சும்மாதான் சொன்னேன். இப்போ சந்தோசமா? நான் கேட்டதை நீங்க செய்யாட்டியும் நீங்க சொன்னதை நான் செஞ்சுட்டேன். ஹெப்பி" அவன் கேட்க மெலிதாக சிரித்த காயத்ரி.

"ஆதி, இங்கப்பாருப்பா போன் நம்பர் தானே தந்துட்டாப் போச்சு. முதல்ல நீ ஊருக்கு நல்லபடியா வந்து சேரு அதுக்குப் பிறகு மருமக நம்பர் தாரேன் நீ தாராளமா கதைச்சிக்கோ. இப்போ நான் போனை வைக்கிறேன்" பயணத்திலிருப்பவனிடம் மேலே பேசி வார்த்தையை வளர்க்காமல் கவனமாக வந்து சேருமாறு கூறி அழைப்பை துண்டித்தார் ஆதியின் அன்னை. 'புத்திசாலி காரியத்துல கண்தான்' என்று தாயை மனதில் மெச்சினான் அவரின் மைந்தன்.

உண்மையில் தன்னால் நிறுத்த முடியாத திருமணத்தை பெண் வீட்டார் மூலமாகவோ அல்லது மணப்பெண் மூலமாகவோ நிறுத்துவதற்காகத்தான் திருமணம் நிச்சயமானது முதல் தந்தை, மகள் யாராவது ஒருவருடைய அலைபேசி இலக்கத்தை தாயிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் காயத்ரி ஆதித்யவர்த்தனுக்கே தாயல்லவா. தாயறியாத சூலுமுண்டோ தனயனின் எண்ணமறிந்தே இதுவரை அவர்கள் எண்களை கொடுக்காமல் வைத்திருந்தார். ஆனால் இவர்களின் திட்டத்தை விட இறைவனின் திட்டம் வலியதல்லவா. வாசுதேவன் மூலமாக ஆதித்யாவின் எண்ணம் நிறைவேறியது. ஆம் அவன் கைகளில் மாமனாரின் எண்கள் மட்டுமன்றி மணப்பெண்ணின் எண்களும் கிடைத்தன.

காயத்ரி அழைப்பைத் துண்டித்ததும் சிறிது நேரம் அலைபேசியையே வெறித்திருந்தான் ஆதித்யா. அவனை அழைத்தும் பதிலில்லாமல் போக தோள்களை தொட்டு லேசாக உலுக்கினான் அவன் உயிர் நண்பன் சங்கர்.

"என்னடா ஆச்சு அம்மா பேசினதும் உன் முகமே மாறிடுச்சு அதுவும் அவங்க கூட சண்டை வேற போடுறாய். பாவம்டா அவங்க இந்த நாளுக்காக எவ்வளவு காலமா காத்திட்டிருக்காங்க. ஏன்டா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லையா?"

"ஏன் உனக்குத் தெரியாதா என் விருப்பத்தைப்பற்றி?" ஆதித்யாவிடமிருந்து நறுக்கென வந்தது கேள்வி.

"தெரியும் மச்சான் ஒன்னு தப்புன்னா எல்லாம் தப்பாயிருக்கனும் என்று அவசியமில்லைடா பழசையெல்லாம் விட்டுத்தள்ளு"

"சரி அதைவிடு இந்த ஊருக்கே வாழ்நாளுக்கும் வரக்கூடாது என்று இருந்தேன்டா ஆனால் அம்மாவோட வேலையைப் பார்த்தாயா? கொழும்பில் ஒருபொண்ணு இல்லாமல்தான் இந்த ஊருலேயே பொண்ணு பார்த்திருக்காங்க அதுவுமில்லாமல் கல்யாணத்தையும் இங்கேயே வச்சுட்டாங்க. இந்த ஊருல வேண்டாம் கல்யாணத்தைக் கொழும்புலே வச்சுக்கலாம் என்றால் கேட்டாங்களா? இங்கதான் கல்யாணம் நடக்கனும் என்று ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க என்னால மீறமுடியல்லை. இதுல அந்த கிப்ட் நீதான் வாங்கின என்று ஒரு வார்த்தைக்கு சொன்னா அதுக்கு கோவிச்சுட்டு் பேசாம இருக்காங்க, அதுமட்டுமில்லை எனக்குத்தான் அறிவில்லையாம் உனக்குமா இல்லை என்று கேட்குறாங்கடா?"

"அடப்பாவிகளா? உங்க பிரச்சனைக்குள்ள நான் எங்கடா வந்தேன் எல்லாம் எந்நேரம்" சங்கரோ முகத்தை அழுவது போல வைத்துக் கொள்ள அவன் தலையில் ஒரு கொட்டு வைத்த ஆதி

"அதைவிடு இப்ப அதுவா முக்கியம் என் பிரச்சினைக்கு வா"

"அதுசரி என் தலை உருண்டா உனக்கென்ன.... சரி சரி முறைக்காதே நீ மேலே விசயத்தை சொல்லுடா"

"பொண்ணு நம்பர் கேட்டா கல்யாணத்தை நிறுத்திடுவேனோ என்ற பயத்துல தரமாட்டேங்குறாங்க எல்லாம் சேர்ந்து எரிச்சலா வருது. இப்படியே இந்த ஊருக்குள்ள வராமலே எங்கென்றாலும் ஓடனும் போல இருக்கு." எரிச்சல்பட்டான் ஆதித்யா.

"என்ன ஆதி இப்படி சொல்லிட்டிருக்கிறாய் எப்பவும் சொல்லுறதைத்தான் இப்பவும் சொல்லுறேன் ஊர் உனக்கு என்னடா பண்ணிச்சு எத்தனை வருஷம் கழிச்சு இங்கு வாராய் சொந்த மண்ணுடா ஏதோ ஒன்று தப்பானால் ஊரையே ஒதுக்குவாயா? நம்ம ஊர் எவ்வளவு அழகுடா பச்சைபசேல் என்ற வயல் அழகான கடற்கரை சுத்தமான காற்று உன்மேல உயிரையே வச்சிருக்குற பாட்டிம்மா சுத்தியும் நம்ம சொந்தக்காரங்க இதெல்லாம் கொழும்புல உனக்கு கிடைச்சிடுமா சொல்லு மச்சான்? எல்லாத்துக்கும் மேல இது ஒரு ட்வரிஸ்ட் பிளேஸ்டா அவனவன் பிஸினஸ் டென்ஸன போக்க நம்ம ஊருக்கு வாரான் நீ என்னடா என்றால் சொந்தமா எல்லாமிருந்தும்.."

" மச்சான் பேசாம நீ ஒரு ட்வரிஸ்ட் கைடா ஆகிடு நல்லா விளம்பரப்படுத்துற" ஆதித்யன் கிண்டல் செய்ய அவனை முறைத்த சங்கரோ

"சரி அதைவிடு நீ இந்த ஊருல மொத்தமா செட்டில் ஆகப் போறதா சொல்லி நல்ல தரமான ஒரு ட்வரிஸ்ட் சொகுசு ஹோட்டலை கட்டினாய் ஞாபகமிருக்கா கட்டியதுக்கு எப்பவாவது நீ வந்திருக்கிறாயா அது எப்படி நடக்குது என்றாவது உனக்கு தெரியுமா? அதை மொத்தமா பாட்டி தலையில கட்டிட்டு உனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லாத மாதிரி இருக்குற பாவம் அவங்க."

"அதுக்கும் எனக்கும் ஏன் சம்மந்தமில்லை என்று உனக்கு தெரியுமில்லை மச்சி நீயே இப்படி கேட்குறாய் நியாயமாடா?"

"தெரியும் தெரியும் நல்லாத் தெரியும் சரி அதைவிடு இப்போதைய பிரச்சனைக்கு வா அம்மா பயந்ததுலேயும் தப்பில்லையே மச்சி நீ அதுக்குத்தானே அதாவது கல்யாணத்தை நிறுத்தத்தானே நம்பர் கேட்ட" சங்கர் சரியாக அவனை நாடி பிடிக்க,

"கண்டுபிடிச்சுட்டாயே கிளவர் போய். உண்மைதான் இந்தக் கல்யாணத்தை நிறுத்த எவ்வளவோ முயற்சி செஞ்சேன் ஆனால் எங்கம்மா என்னை விட ரொம்ப உசார்டா அதுக்கான அத்தனை வழிகளையும் அடச்சுட்டாங்க.
அவங்க போன் நம்பர் தராதது மட்டுமில்லைடா பொண்ணு பார்க்கப் போனால் அந்தப் பொண்ணுகிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்திக்கலாம் என்று நினைச்சேன்டா ஆனால் இந்த அம்மா கரெக்டா அதையும் புரிஞ்சுக்கிட்டு நான் வேலை விஷயமா தூபாய் போகப் போற நாளாப் பார்த்து என்னை அந்தப் பக்கம் அனுப்பிட்டு இந்தப்பக்கம் அவங்க போயிட்டாங்கடா அப்போதும் ஒரு நம்பிக்கை இருந்துச்சு ஊருக்கு வந்த பிறகு பொண்ணுகிட்ட பேசிக்கலாம் என்றிருந்தேன் அதிலேயும் மண்ணள்ளிப் போட்டுட்டாங்க நான் வந்து சேரும் போது கல்யாண நாளா இருக்குற மாதிரி பார்த்துகிட்டாங்க என்னால எதையும் செய்ய முடியாம பண்ணிட்டாங்க மச்சி, எங்கம்மா வெரி ஸ்மார்ட் என்ட் கிளவர் இல்லை. கல்யாணமே பண்ணிக்கக்கூடாது என்று வைராக்கியமா இருந்தேன் ஆனால் எங்கம்மாவோட பிடிவாதம் வென்றிடுச்சு. முழுக்க முழுக்க அம்மாக்காக மட்டும்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்.
எங்கம்மாக்காக நான் என்ன என்றாலும் செய்வேன்டா"

"அப்போ அம்மாக்காக என்றால் உனக்கு விருப்பம் இல்லையா? பிடிக்காம எப்படிடா ஒருத்தி கூட வாழ முடியும் அது உன்னையும் ஏமாற்றி அந்த புள்ளையையும் ஏமாத்துற மாதிரியில்லை? தப்புடா உன்னை நம்பி வார புள்ளைய ஏமாத்திடாதே அது என்ன தப்பு பண்ணிச்சுடா? பாவம்டா சின்ன புள்ளை வேற" -சங்கர்

"அப்படியா அப்போ தொட்டில்ல போட்டு ஆட்ட வேண்டியதுதானே எதுக்கு கல்யாணம் பண்ணித் தாராங்க"

"டேய் நான் என்ன சொல்லுறேன் என்று உனக்கு விளங்கிட்டு ஆனால் என் கேள்விக்கு பதில் சொல்லாம தப்பிக்க என்னை கிண்டல் பண்ணிட்டிருக்கிறாய். பதில் சொல்லுடா" சங்கர் அதட்ட

"என்ன கேள்வி.... சரி சரி முறைக்காதே மச்சான் என் வாழ்க்கையில ஒரு கல்யாணம்தான் ஒரு மனைவிதான் என் பொறுப்பில இருந்தும் கொடுத்த வாக்குல இருந்தும் நான் தவறமாட்டேன். ஆனால் அந்த பொண்ணு நல்ல மனைவியா எங்கவீட்டுக்கேத்த மருமகளா மொத்தத்துல ஒரு நல்ல பொண்ணா இருக்குறவரைக்கும்தான் நானும் நல்ல கணவனா நல்லவனா இருப்பேன் அதுல ஏதும் தவறு நடந்தால் பிறகு நான் வேறமாதிரி இருப்பேன்" உறுதியாக விழுந்தன அவன் வார்த்தைகள், அதில் சற்று ஆடித்தான் போனான் சங்கர்.

"சரி மச்சான் போனதெல்லாம் போகட்டும் அம்மா நிச்சயமா உனக்கு ஏற்றமாதிரி தான் பொண்ணு பார்த்திருப்பாங்க.
இனியாவது உன் வாழ்க்கை நல்லா இருக்கட்டும். எனக்கும் மனசு சொல்லுதுடா இந்த பொண்ணுதான் உனக்கு ஏத்தவ என்று. எதையும் யோசிக்காம நிம்மதியா இருடா எல்லாம் நல்லபடியா நடக்கும்." நண்பனின் வார்த்தையில் மனது அமைதியடைய சீட்டில் பின்பக்கமாக தலையை சாய்த்தவன் அப்படியே கண்களை மூடிக்கொண்டான். அவனுள் ஆயிரம் எண்ண அலைகள் உருவாகிக் கொண்டிருந்தன. அவனைப் பார்த்த சங்கரோ அவன் கைகளை ஆதரவாக வருட அவன் கண்களிலிருந்து அவனையறியாமலே இரு சொட்டு விழிநீர் கன்னத்து வழியே இறங்கி சங்கரின் கைகளில் விழுந்தது. நண்பனின் மனநிலையை அறிந்தவன் கண்களும் லேசாக கலங்க அமைதியாகவே வண்டியை ஓட்டினான்.

ஆதித்யனிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்த காயத்ரி சில மணி நேரங்களை கடத்தி விட்டே மீண்டும் வாசுதேவனுக்கு அழைத்து மகன் ஊருக்கு வந்து கொண்டிருக்கும் விடயத்தைக் கூறி தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தார்.

***************************************

தாயுடன் அறைக்குள் நுழைந்த நயன தாரா முகத்தில் மெல்லிய முறுவலை பூசிக் கொண்டு தாயை நோக்கி தான் ஓய்வெடுத்துக் கொள்வதாகவும் அவரை தன் வேலையைப் பார்க்குமாறும் வெளியே அனுப்பி கதவினை உட்புறமாக தாளிட்டு விட்டு கட்டிலில் விழுந்தவள் விழிகளோ விட்டத்தையே வெறித்திருக்க அவளுள் ஒரு போர்களமே நடந்து கொண்டிருந்தது.

'உண்மையில் இவருக்கு என்னைப் புடிச்சிருக்கா? இந்த கல்யாணத்துல விருப்பம்தானா? அப்பாம்மா சொல்லுறது உண்மையா? இல்ல என் ப்ரண்ட்ஸ் சொல்லுற மாதிரி கட்டாயத்துல ஒத்துக்கிட்டாரா? கடவுளே.........'
விடை தெரியாக் கேள்வியில் மனதோடு போராடியவள் மனத்திரையில் அவளுக்கு திருமணம் நிச்சயமான நிகழ்வுகள் படமாக ஓடின.

ஆதித்யாவின் எண்ணம் நிறைவேறி திருமணம் நிறுத்தப்படுமா? இல்லை நயனாவின் குழப்பம் நீங்கி திருமணம் நல்லபடியாக நடந்தேறுமா?

வளரும்....

Please share your comments here

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு
- 03

நயனதாரா அவள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவள் தாயும் தந்தையும் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவாறே வர இவளை பார்த்தவர்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர். அதனை மனதில் பதித்தவாறே உள் நுழைந்தவளிடம்

"நயனி கை கால் கழுவிட்டு வாம்மா உனக்கு டீ கொண்டு வாரேன்" என்று சமையலறையில் நுழைந்து கொண்டார் ரஞ்சனி. தந்தையும் தொலைக்காட்சியில் பார்வையை பதித்துக் கொள்ள கண்களால் தங்கையைத் தேட அங்கு அவளைக் காணாது தன் அறை நோக்கிப் போனாள் நயனி. ப்ரெஷாகி வெளியே வந்தவள் தந்தை பக்கத்தில் அமர அவளிடம் தேநீர் கோப்பையை நீட்டினார் ரஞ்சனி. தேநீரைப் பருகும் போது தாய் தந்தை இருவரும் கண்களால் சைகை செய்து கொள்வது ஓரப் பார்வையில் விழுந்தது. தன்னிடம்தான் ஏதோ பேச நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவள் எதுவும் கேளாது அவர்கள் வாயாலே வரட்டும் என காத்திருந்தாள். ரஞ்சனி கண்ணைக் காட்ட வாசுதேவன் பேச்சை ஆரம்பித்தார்.

" நயனி உன்கிட்ட கொஞ்சம் பேசனும் அம்மா." என்ற தந்தையைக் கேள்வியாய் நோக்கினாள் பெண்.

"உனக்கொரு வரன் வந்திருக்கு நல்ல குடும்பம், படிச்ச அழகான மாப்பிள்ளை பிஸ்னஸ் பண்ணுறார் சும்மா இல்லை வெளிநாட்டுக் கம்பனிகளோட ஒப்பந்தம் செய்ற அளவு பெரிய கம்பனி வச்சிருக்கிறார் எக்கச்சக்க வசதி சொந்த ஊர் இதுதான், இப்போ கொழும்புல வசிக்குறாங்க. எல்லாத்துக்கும் மேல நம்மளுக்கு தெரிஞ்சவங்களோட குடும்பம். உன் ப்ரெண்டு காவியா இருக்காயில்லை அவளோட பெரியம்மா மகன்தான். அவர் பேரு ஆதித்யவர்த்தன்." தந்தை கூறிக் கொண்டிருக்கும் போதே

"இப்போ என்னப்பா அவசரம்..... இப்போதானே வேலைக்கும் சேர்ந்தேன் கொஞ்ச நாள் போகட்டுமே. குறைந்தது இன்னும் இரண்டு வருஷம் ப்ளீஸ்ப்பா" - நயனி

"என்னடாம்மா உனக்கு விருப்பமில்லையா? இல்லை உன் மனசுல வேற ஏதாவது.....?" வாசுதேவன் மேலே கேட்க முடியாமல் இழுக்க

"என்னப்பா இழுக்குறீங்க என்ன கேட்கவறீங்க சுத்தி வளைக்காம நேராவே கேளுங்க. எனக்கு ஒன்றும் விளங்கல்ல" தந்தை கூறவருவது புரியாதவளாய் கேட்க

"அதுவா நீ யாரையாவது லவ் பண்ணுறையா என்று கேட்குறாங்க. இது கூட விளங்காத மக்கா நீ?" இவர்கள் பேசுவதை தனதறையுள் இருந்துகேட்டுக் கொண்டிருந்த உதயா கூறிக் கொண்டு வெளியே வர

"ஏய் வாயாடி உன்னைப் போகாதே என்று சொன்னா அதுக்குள்ள ஓடி வந்துட்ட." கூறியவாறே உதயாவின் பின்னே
வாசுவின் மூத்த மகள் அமுததாராவும் வர அவளைத் தொடர்ந்து வந்த இரண்டாவது மகள் சித்ரதாரா

"வந்ததுமில்லாம பெரிய மனுஷி போல என்ன கதைச்சிட்டிருக்கா பார்த்தீங்களா அக்கா?"

"ஓம் சித்து நயனிக்கே விளங்காதது இந்த வாண்டுக்கு விளங்கிடுச்சு பார்த்தாயா? படிப்பைத் தவிர மற்ற எல்லாத்துலையும் மூக்கை நுழ" அமுதா கூற

"நீங்க எல்லோரும் இங்கதான் இருக்கீங்களா உள்ள என்ன செய்துகிட்டிருந்தீங்க? ஓ... அப்போ இது விஷயம் எல்லோருக்கும் தெரியுமா?"

"யெஸ் மகாராணி, சரி ஃபெஸ்ட் அப்பாவுடைய கேள்விக்கு பதில் சொல்லு?" உதயா கேட்க

"நீ முதல்ல படபடவென்று கதைக்காம இரு அவ சொல்லுவா. என்ன நயனி அப்படி ஏதாவது இருக்கா..." ரஞ்சனி அழுத்தமாக கேட்க

"ஐயோ அம்மா அப்படி எதுவுமில்லை. இப்போ எதுக்கு என்றுதான். காவியா ஃபெமிலியை மட்டுந்தான் தெரியும் இவங்களைப் பத்தி தெரியாதே. " கூறிய நயனியிடம் வாசு ஏதோ பேச வாயெடுக்க அவரைத் தடுத்த ரஞ்சனி

"அவங்கள பத்தி எல்லாம் விசாரிச்சுட்டோம் அவங்க ஃபெமிலியில மொத்தம் ஆறு பேர் அப்பா ராகவன், அம்மா காயத்ரி, மாப்பிள்ளைக்கு மூனு அக்கா இருக்காங்க, மூனு பேருக்கும் கல்யாணமாயிடுச்சு மாப்பிள்ளை தான் கடைசி. இரண்டாவது அக்கா மட்டும்தான் இவங்க கூட கொழும்புல இருக்கிறாங்க. மத்தவங்க இரண்டு பேரும் வெளிநாட்டுல இருக்குறாங்க. அத்தோட அப்பாவழிப் பாட்டியும் இவங்க கூட தான் இருக்காங்க. எங்கள் எல்லோருக்கும் சம்மதம் உன்னோட சம்மதம் கேட்டுட்டு அவங்கள பொண்ணு பார்க்க வரச் சொல்லலாமென்று இருக்கோம். நீ என்னம்மா சொல்லுற?"

"என்ன அமைதியா இருக்க?" அமுதா கேட்க

"இல்லைக்கா இப்போ அவசரமா என்று யோசிக்குறேன்"

"அப்போ எப்பம்மா கல்யாணம் கட்டிக்கப் போற" சித்ரதாராவும் தன் பங்குக்கு கேட்க

"உனக்கு ஓகே இல்லாட்டி சொல்லு நான் கட்டிக்க ரெடி மாப்பிள்ளை சும்மா ஹீரோ மாதிரி இருக்காரு. என்ன சொல்லுற நான் கட்டிக்கிடவா" உதயா கேலியாகக் கேட்க

"உனக்கு புடிச்சா கட்டிக்கோ" நயனியும் பதிலுக்கு விளையாட்டாய் கூற

"ஐயோ எவ்வளவு முக்கியமான விஷயம் போய்கிட்டு இருக்கு. நீங்க என்னடா என்றால் விளையாடிட்டிருக்கீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. நயனி இங்கப்பாரும்மா இது நல்ல வரன் நம்ம வசதிக்கு நெனச்சுக் கூட பார்க்க முடியாத வரன். வசதிய விட நல்ல குடும்பம். ஊருல இருக்குறவங்க எல்லோரும் தனலட்சுமி அம்மா வீட்டுல சம்மந்தம் வச்சுக்குறதுக்கு நான் நீ என்று போட்டி போட்டுட்டு இருக்காங்க. அப்படிப்பட்டவங்க நம்ம வீடு தேடி வந்து கல்யாணம் பேசுறாங்க. சரி எங்க எல்லோரையும் விட உன் ப்ரண்டு வீடு பத்தி உனக்குத்தான் நல்லாத் தெரியுமே அவங்க எப்படிபட்டவங்க என்றும், வசதி அந்தஸ்துப் பார்க்காம நல்லாப் பழகுவாங்க ரொம்ப நல்லவங்க என்றும் நீதானே சொல்லுவ. இதை விடனுமா? அது மட்டுமில்ல உனக்கு பிறகு உதயா வேற இருக்கா. எல்லாத்தையும் யோசிச்சா எங்களுக்கு சம்மதம் இனி நீதான் சொல்லனும்." ரஞ்சனி கூற அதையே வாசுதேவனும் ஆமோதிக்க சகோதரிகளும் பலவிதமாக எடுத்துக் கூற சிறிது நேரம் யோசித்தவள் தந்தையிடம் திரும்பி

"நீங்க சொல்லுறது சரிதான்ப்பா. பாட்டிம்மா ரொம்ப நல்லவங்க. அவங்க மட்டுமில்லை அங்கே இருக்குறவங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்கதான். பாட்டிம்மாவோட மகள் குடும்பம் என்றால் நிச்சயமா அவங்களும் நல்லவங்களாத் தான் இருப்பாங்க. தனம் பாட்டி வீட்டுல கல்யாணம் பண்ணுறதுக்கு நான் கொடுத்து வச்சவதான். சரிப்பா, உங்கள் எல்லோருக்கும் சம்மதமென்றால் எனக்கும் முழு சம்மதம்தான்." என்றவளிடம்

"என் தங்கம், சரி நாங்க தனலட்சுமி அம்மாகிட்ட சொல்லிடுறோம் அநேகமாக ரெண்டு,மூனு நாள்ல அவங்க பெண் பார்க்க வருவாங்க. இந்தாம்மா இது மாப்பிள்ளை போட்டோ" என்று கூறி ஒரு கவரைக் கொடுத்தாள் ரஞ்சனி. தன் அறையினுள் நுழைந்தவள் அதனை பிரித்துப் பார்க்க மயங்கித்தான் போனாள். உண்மையில் ஆதித்யவர்த்தன் ஆண்மையின் இலக்கணமாக இருந்தான். முதல் பார்வையிலே அவளுக்கு அவன் மேல் காதல் பூத்தது போட்டோவையே உற்றுப் பார்த்திருந்தவள் நெற்றியை சுருக்கினாள். 'இவரை எங்கோ பார்த்திருக்கிறேனே கொஞ்சம் ஒல்லியா இதைவிட வயசும் கொஞ்சம் குறைவா பார்த்திருக்கேனே... ஆனால் நியாபகம் வரமாட்டங்குதே.' பலவாறு யோசித்தும் விடை காணாதவள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டாள்.

மறுநாள் தன் உயிர் தோழி தாரணிக்கு அழைப்பை ஏற்படுத்தியவள் தனக்கு திருமணம் நிச்சயமான விடயத்தைக் கூற அவளோ அகமகிழ்ந்து போனாள் மாப்பிள்ளை பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் கேட்டுத் துளைத்தெடுத்தாள்.

"ஹேய், நம்ம காவியா இருக்கா இல்லை அவளோட பெரியம்மா மகன். பேரு ஆதித்யவர்த்தன்." என மணமகன் பற்றி அனைத்து விவரங்களையும் கூற தன் தோழிக்கு வந்த அதிஷ்டத்தை எண்ணி மகிழ்ந்தவள் கடவுளுக்கு மனதார நன்றி சொன்னாள்.

"சரிடி நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க. கட்டாயம் வந்துடு. வராமவிட்ட கொன்றுடுவேன்" நயனியின் மிரட்டலில் சிரித்த தாரணி

"கட்டாயம் வருவேன் நான் இல்லாம உன்னைப் பொண்ணு பார்த்துட்டு போயிடுவாங்களா? நீ கூப்பிடாட்டியும் நான் வருவேன். சரிடி நாளைக்கு சந்திக்கலாம் பாய்"

"ஓகேடி கொஞ்சம் நேரத்தோட வந்துடு. பாய்" அழைப்பைத் துண்டித்தவள் தன் மணவாளனின் புகைப்படத்தில் பார்வையைப் பதித்தவள் கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கினாள்.

மறுநாள் பெண் பார்க்கும் ஏற்பாடு தாரணியும் நேரத்தோடே வந்தாள் நயனியை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தவள் நயனியின் சகோதரி உதயாவுடன் சேர்ந்து தன் தோழி தயாராவதற்கு உதவி செய்தாள். நயனதாரா அழகான மெஜன்தா வண்ண புடவை உடுத்தி அதற்கேற்ப அணிகலன்களையும் அணிந்து முடியை பின்னலிட்டு மல்லிகைச் சரத்தையும் சூடியவள் முகத்திற்கு லேசான ஒப்பனையும் செய்ய தேவதை போல் ஜொலித்தாள். மணமகனின் பெற்றோர், சகோதரிகள், இருவழிப்பாட்டிகள், சித்தி, அத்தை, மச்சாள்மார் என அவர்கள் குடும்பத்து முக்கிய உறவினர்கள் மட்டும் பெண் பார்த்து முடிவு செய்ய வந்தார்கள். அவர்களுடன் வர வேண்டிய நம் நாயகனோ முக்கிய வேலை காரணமாக திடீரென்று வெளிநாடு பறந்து விட்டான். அதற்காக வருத்தத்துடன் சிறு மன்னிப்பை வேண்டினார் அவனின் தாய் காயத்ரி. வந்தவர்களுக்கு அவளை பிடித்து விட அப்போதே பூ வைத்து தட்டு மாற்ற காவியாவோ எல்லையில்லா மகிழ்ச்சியில் தன் தோழியை அணைத்துக் கொண்டாள்.

"என்னப்பா வாசு உன் மகளுக்கு என்ன செய்யப் போற என்று இங்க சபையில வச்சே பேசிடு" அங்கிருந்த வாசுவின் உறவுப் பெரியவர் ஒருவர் கொடுக்கல் வாங்கல் பற்றி ஆரம்பித்தார்.

"சம்மந்தி என் மூத்த மகள்களுக்கு வீடு, ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தான் கொடுத்து கல்யாணம் பண்ணினேன். அது போல இந்த வீடு நயனிக்குத்தான் அதுக்குப் பக்கதுல இருக்குற வெறும் வளவு என் கடைசி மகள் உதயதாராவுக்கு, இரண்டு ஏக்கர் நிலமும் தந்துடுறோம் அதோட கொஞ்சம் நகையும் வச்சிருக்கேன் கல்யாணச் செலவு மொத்தத்தையும் நாங்களே செய்யுறோம் இவ்வளவு தான் என்னால முடியும் சம்மந்தி" வாசுதேவன் கூற

"வாசு மகளுக்கு செய்யப் போறதை சொல்லிட்டான் தனம்மா உங்க பேரனுக்கு என்ன எதிர்பார்க்குறீங்க?" என அந்த பெரியவர் காயத்ரியின் அன்னை தனலட்சுமியை நோக்கிக் கேட்க,

"இங்கபாருங்க அண்ணா சீதனம் வாங்கித்தான் கல்யாணம் பண்ணனும் என்றால் கொழும்பிலேயே ஒரு பொண்ணைப் பார்த்து முடிச்சிருப்போம். எக்கச்சக்க சீதனத்தோட எத்தனையோ பொண்ணு வந்திச்சு, ஆனால் ஊரு சொந்தம் விட்டுப் போகக் கூடாது நம்ம குடும்பத்துக்கும் ஏத்த மாதிரி இருக்கெனுமென்றுதான் இங்க வந்தோம். சீதனம் வாங்குறது தப்பு என்று நினைக்குறவ நான், இவருக்கும் அது அறவே பிடிக்காது அப்படிபட்ட நாங்களே சீதனம் வாங்குவோமா? நீங்க எதுவும் செய்ய வேண்டாம் எங்க மருமகளைத் தந்தாலே போதும் கல்யாணம் முடிஞ்சு நாங்க கூடவே எங்க மருமகளையும் கூட்டிட்டு போயிடுவோம் பிறகு எதுக்காக வீடும் காணியும் எதுவும் வேண்டாம் அண்ணா. கல்யாண செலவும் நாங்களே பார்த்துக்குறோம் ஏன் என்றால் எங்கள் ஒரே மகனுடைய கல்யாணம் அதனால எங்க மருமகளுக்கு ஒவ்வொன்றும் நாங்களே பார்த்து செய்யனும் என்று ஆசைப்படுகிறோம்" தனலட்சுமியை முந்திக் கொண்டு கூறிய காயத்ரி தன் கணவனைப் பார்த்து

"நான் சொல்லுறது சரிதானேங்க?" எனக் கேட்க

"நூறுவீதம் சரிம்மா. எங்க வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளைத்தான் தேடினோமே தவிர அவ கூட வார சொத்தை இல்லை. வாசுதேவன் எங்களுக்கு உங்க மகளை மட்டும் தந்தால் போதும். வேறெதுவும் வேண்டாம். காயு சொன்ன மாதிரி கல்யாணச் செலவு மொத்தமும் எங்களோடதுதான்." ஆதித்யனின் தந்தை ராகவன் உறுதியாகக் கூற நெகிழ்ந்துதான் போனார் வாசுதேவன்.

"என்னப்பா ராகவா மருமகள்தான் புரியாம கதைக்குறா என்றால் நீயுமா? நம்ம அந்தஸ்த்துக்கு அவர் சொன்னதே போதாது இதுல நீங்க என்னடா என்றால் எதுவும் வேணாமென்று சொல்லிட்டிருக்கீங்க போதாக்குறைக்கு கல்யாணச் செலவு மொத்தத்தையும் நீங்களே பார்க்குறதாய் சொல்றீங்க என்ன இது? ஏன்ப்பா ராகவா உன் பொண்டாட்டிக்குத்தான் விளங்குதில்லை நீயாவது சொல்ல வேண்டாம். நீயும் அவகூடச் சேர்ந்துகிட்ட" காயத்ரியின் மாமியார் ராஜேஸ்வரி முழங்க

"இதுல என்னம்மா தப்பிருக்கு?" ராகவன் கேட்க

"என்ன தப்பா? நம்ம கௌரவமென்ன அந்தஸ்தென்ன என் ஒரே பேரனுக்கு இங்க வந்து பொண்ணெடுக்கிறதே தப்பு இதுல வீசின கை வெறுங்கையோட பொண்ணெடுக்க நினைக்குறீங்க இது தப்பில்லை?" ராஜேஸ்வரியின் கொடும் வார்த்தையில் வாசுவின் குடும்பத்தார் பதட்டப்பட

"ராஜி, என்ன பேச்சு இது? புள்ளைய பெத்தவங்க பேசிட்டிருக்குறாங்க இல்லை. அவங்க பார்த்துப்பாங்க எதுக்காக தேவையில்லாத வார்த்தைகளை கொட்டுற. இதுதான் நீ நம்ம குடும்ப கௌரவத்தைக் காப்பாத்துற லட்சணமா. முதல்ல நீ கொஞ்சம் அமைதியா இரு எல்லாம் நல்லபடியாக நடக்கும்" தனலட்சுமி ராஜேஸ்வரியை அதட்டிய பின்பே வாசுவும் ரஞ்சனியும் நிம்மதியாயினர்.

"மன்னிச்சிடுங்கோ அண்ணி நம்ம புள்ளைக்கு கௌரவமிருக்காதில்லை அதுக்குத்தான் சொன்னேன்....." ராகமாய் இழுத்தார் ராஜேஸ்வரி அவரை கை கொண்டு அடக்கியவர்.

" வாசு, ராஜேஸ்வரி இந்தமாதிரி கதைச்சதுக்கு முதல்ல மன்னிச்சிடுப்பா. காயத்ரியும் மருமகனும் சொல்லுறதுதான் சரி அதைத்தான் நானும் சொல்ல நினைச்சேன். எங்க வீட்டு மகாலட்சுமியா வரப்போறவகிட்ட நாங்க வீடு காணிய எதிர்பார்க்கல்ல வாசு. குடும்பத்துக்கு ஏத்தவளா என் பேரனை புரிஞ்சுட்டு அவனை நல்லபடியா பார்த்துட்டாளே போதும். அதுக்காகத்தான் உங்க வீட்டுல பொண்ணு எடுக்கிறோம். வாசு உன் மகள்களை நீ் நல்லபடியா வளர்த்திருக்க. எனக்கு எப்போதுமே நயனி மேல ஓர் ஆசை, ஈர்ப்பு ஏன் ஒரு வகைப் பாசம் என்றே சொல்லலாம். அவ காவியா கூட வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவளைப் பக்கத்துல இருக்க வச்சு கதைச்சுக்கிட்டே இருப்பேன். நயனி எங்க வீட்டு பொண்ணா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று தோன்றும். அந்த சமயத்துலதான் என் மகள் காயத்ரி போன் பண்ணி ஆதி கல்யாண விசயம் பேசினா என் ஆதிக்கு நயனிதான் பொருத்தமா இருப்பா என்று தோணிச்சு உடனே என் மகள்கிட்ட சொல்லிட்டு போட்டவும் அனுப்பினேன் அவளுக்கும் இந்த தங்கத்தை புடிச்சிருச்சு. அதான் உடனே பார்க்க வந்துட்டோம் பொண்ணு பார்க்குறது ஒரு சம்பிரதாயத்துக்காகத் தான் ஆனால் நாங்க முடிவே பண்ணிட்டோம் எங்க வீட்டு மகாலட்சுமி நயனிதான் என்று. நீயே சொல்லுப்பா எங்க வீட்டுப் பொண்ணுகிட்ட நாங்களே சீதனம் வாங்கினா நல்லாவா இருக்கும் சொல்லு. அத்தோட எங்க பரம்பரையில் இந்தத் தலைமுறையின் ஒரே ஆண் வாரிசுக்குக் கல்யாணம். அதுவும் பல வருஷத்துக்குப் பிறகு நடக்குது. இந்த ஊரே மெச்சுற மாதிரி நடக்க வேண்டாம். அதுமட்டுமில்லை இது தனலட்சுமி வீட்டுக் கல்யாணம் என் ஒத்தப் பேரனோட கல்யாணம் அதனால மொத்த செலவும் எங்களுடையதுதான் என்ன புரிஞ்சுதா வாசு?" தனலட்சுமி பாட்டி கேட்க

"ரொம்ப சந்தோசம் அம்மா என் மகள் மேல நீங்க வச்ச அன்பையும் என் வளர்ப்புல நீங்க வச்ச நம்பிக்கையையும் நினைத்து மனம் பூரிப்படையுது. ஆனாலும்...... அதில்லைம்மா, என்ன இருந்தாலும் என் மகளுக்கு செய்ய வேண்டியது என் கடமையில்லையா மத்தப் புள்ளைங்களுக்கு செஞ்சுட்டு நயனிய மட்டும் எப்படி எதுவுமில்லாம விடுறது அதான் மனசு ஒப்பமாட்டேங்குது. அத்தோட கல்யாண செலவுல நானும் கொஞ்சமாவது பங்கெடுத்துக்கனும் என்று நினைக்கிறேன் பொன் வைக்குற இடத்துல பூவையாவது வைக்க ஆசைப்படுகிறேன் தயவு செஞ்சு அதுக்கு நீங்க ஒத்துகிடனும்" அவர் கெஞ்சலாய் கூற சற்று நேரம் யோசித்த காயத்ரி

"சரி அண்ணா நீங்க உங்க மகளுக்கு செய்யனும் என்று ஆசைப்படுறீங்க. செய்ங்க ஆனால் இந்த வீடு காணி எல்லாம் வேண்டாம். எப்படியும் கடைசி மகளுக்கு வீடு கட்டனுமில்லை இந்த வீட்டை அவளுக்கு கொடுத்திடுங்க நயனியோட வாழ்க்கை இங்கே இல்லை ஊருக்கு வந்தா தங்குறதுக்கு அரண்மனை மாதிரி எங்கம்மா வீடிருக்கு ஒன்னுக்கு மூனு கூடப் பொறந்தவங்க இருக்காங்க பிறகு எதுக்கு அத்தோட அந்த காணியையும் உதயாவுக்கே கொடுத்திடுங்கோ அண்ணா. நீங்க நயனிக்கு உங்க சொத்தா ஏதாவது கட்டாயம் கொடுக்கனும் என்று நினைச்சா அந்த வெறும் வளவை மட்டும் கொடுங்கோ. கல்யாணத்துல நீங்க என்ன செய்ய நினைக்குறீங்களோ எங்கம்மாகிட்ட கலந்துகிட்டு செய்ங்க" காயத்ரி கூற வாசுதேவனும் மகிழ்ந்து அவருக்கு நன்றி கூறினார். ஆனால் தனலட்சுமி அதற்கு மொத்தமாக மறுத்துவிட்டார். அதனை வேறு வகையில் ஈடுகட்ட வாசுதேவனும் முடிவெடுத்துக் கொண்டார்.

மகனின் மனம் மாறிடுமோ என்ற பயத்தில் அவசர அவசரமாக தேதிகளையும் குறித்துக் கொண்டார்.

"திருமணத்தை உறுதிப் படுத்துற மாதிரி நாளைக்கு சின்னதா வீட்டுல வச்சு நிச்சயம் பண்ணிக்குவோம், இரு வாரங்களில் கல்யாணத்தை வச்சுக்குவோம் நாங்க நாள் திகதி எல்லாம் பார்த்து குறிச்சுட்டுத்தான் வந்திருக்கோம்." காயத்ரி கூற மாப்பிள்ளை இல்லாது நிச்சயமா? இரண்டு வாரத்தில் திருமணமா? என தயங்கிய வாசுதேவன் தம்பதியரை ஏதேதோ சமாதானம் கூறி சம்மதிக்க வைத்தனர் காயத்ரியும் தனலட்சுமியும். நடப்பதை எல்லாம் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி. நயனியை தனக்கு பக்கத்தில் அமர்த்திக் கொண்ட காயத்ரி அவளிடம் தன் மகனும் பெண் பார்க்க வர இருந்ததாகவும் திடீரென்று வேலை விசயமாய் வெளிநாடு போயிருப்பதாகவும், வேலைப் பளு காரணமாக திருமணத்துக்கு முதல் நாள் தான் நாடு திரும்புவான் என்றும் கூறினார். பின்னர் சிறிது நேரம் அவளைப் பற்றியும் அவளின் விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் கேட்டவர் தன் மகனைப் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் அனைவரும் விடை பெற்றுக் கிளம்ப மறுநாளைக்கான நிச்சய ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினர் வாசு தம்பதியர். நம் நாயகியோ மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தாள். ஆம் நம் நாயனைச் சைட் அடிக்கும் வேலைதான்.

வளரும்.....

Please share your comments here👇

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்

அத்தியாயம் - 04


மறுநாள் நிச்சயதார்த்தம் சிறியளவில் வீட்டில் நடந்தாலும் சற்று ஆடம்பரமாகவே நடந்தது. வீடு முழுதும் மாவிலைத் தோரணங்களாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இருதரப்பிலும் முக்கியமான உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் அவர்களை வரவேற்று அமர வைத்த பின்னர் ஐயர் பெண்ணை அழைத்து வரச் சொல்ல தாரணியும் உதயாவும் நயனதாராவை அழைத்து வந்தனர். அழகான டிசைனர் ஹாப் சாரி அதற்கேற்ப அணிகலங்களில் தேவதையாக மின்னினாள் பெண். அவளை மனையில் அமர்த்த நிச்சய ஓலை படிக்கப்பட்டதுடன் திருமணத்திற்கான நாளும் நேரமும் குறிக்கப்பட்டது. பின் இரு வீட்டாரும் வெற்றிலை, பூ, பழம், தேங்காய் வைத்த தாம்பூலத் தட்டுக்களை மாற்றிக் கொண்டனர். மாப்பிள்ளை வீட்டார் தட்டில் வைத்துக் கொடுத்த பட்டுப் புடவையையும் அதற்கு பொருத்தமாய் ரவிக்கையையும் நயனிக்கு நேர்த்தியாய் உடுத்திவிட்டாள் தோழி தாரணி. மாம்பழ வண்ணம் அவளின் நிறத்துக்கு இன்னும் கூடுதல் அழகைக் கொடுத்தது. முடியை அரை வாசியாய் பிரித்து ஒரு கிளிப்பை மாட்டியவள் ஒற்றையாக மல்லிகைச் சரத்தை சூடி நெற்றிச்சுட்டியையும் வைத்தாள். காதுகளில் ஜிமிக்கி அசைந்தாட மெல்லிய சங்கிலி கழுத்தை சுற்றியிருக்க அவளின் மெல்லிடையை ஒட்டியாணம் அலங்கரித்தது. பொருத்தமாய் வளையல்களையும் கைகளில் அடுக்கி விட்டு நயனியை ஏற இறங்க பார்த்த தாரணி அவளை ரசித்தவாறே

"சும்மா தேவதை மாதிரி இருக்கடி ஐயோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கே." என்றவளின் கூற்றில் வெட்கப்பட்ட நயனியை கண்ணாடி முன் நிற்க வைத்து அவள் அழகை காண வைத்தவள் அவளை அழைத்துக் கொண்டு வந்து அமர வைக்க காயத்ரி லாக்கெட்டுடன் இணைந்த தங்கச் சங்கிலியை தன் மருமகளின் சங்கு கழுத்தில் அணிவித்தார் இனிதே நிறைவேறியது நிச்சயதார்த்தம். ஆதித்யா பக்கத்தில் இல்லாதது மட்டுமே அனைவருக்கும் ஒரு குறையாக இருந்தது. அதுவே நயனிக்கும் சிறு வருத்தத்தை கொடுத்தது.
விருந்துபசாரங்கள் முடிந்து மற்றைய விருந்தினர்கள் கலைய மேற்கொண்டு கல்யாண வேலைகளை பற்றி பேச இரு வீட்டின் முக்கிய உறுப்பினர்கள் மட்டும் கூடி அமர்ந்தனர். அனைவருடைய முகங்களிலும் நிச்சயம் நல்லபடியாக நிறைவேறிய திருப்தி இருந்தது. ஆனால் ரஞ்சனியின் முகத்தில் அவ்வப்போது மட்டும் சிந்தனைக் கோடுகள் எழுந்தன. இதனை கவனித்து கொண்டிருந்தார் காயத்ரி. ராகவன்தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.

"சம்மந்தி நல்லபடியாக நிச்சயம் முடிஞ்சிடுச்சு. கல்யாண ஏற்பாடுகள் பற்றிப் பேசிடலாமே. அநேகமா நாளைக்கு ஊருக்கு போயிடுவோம் அங்கேயும் கொஞ்சம் முக்கியமான வேலைகள் இருக்கு. முடிச்சிட்டு இனி கல்யாணத்துக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னதான் வருவோம் அதனால இப்பவே ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிட்டா நல்லதுதானே."

"ஓம் சம்மந்தி இன்னும் இரண்டு கிழமை தானே இருக்கு கல்யாணத்துக்கு நமக்கு நாளும் காணாது. பாத்திருக்கும்போதே நாள் போயிடும் கடைசி நேரம் வரை வச்சிருக்க வேண்டாம். நாங்களும் அதைப்பற்றி பேசனும் என்று நினைச்சோம்." வாசுதேவன் கூற இவர்களின் பேச்சினை கேட்டிருந்த காயத்ரி எதேர்ச்சையாய் ரஞ்சனியைப் பார்க்க அவரின் முகம் சோகமாக இருந்தது.

"அண்ணா கொஞ்சம் இருங்கோ" என்று
ஆண்களின் பேச்சின் இடையே புகுந்த
காயத்ரி மெதுவாக ரஞ்சனியின் பக்கத்தில் வந்து தோள்களில் கை வைக்க அவரைக் கேள்வியாய் நோக்கினார் ரஞ்சனி.

"ரஞ்சனி என்ன ஒரு மாதிரி இருக்கீங்க. முதல்ல ஒரு விசயம் சொல்லிங்கோ உங்களுக்கு இந்த நிச்சயதார்த்தம் எல்லாம் திருப்திதானே" அவரின் கேள்வியில் சிறிது தடுமாறியவர்.

"எல்லாம் திருப்திதான் ஆனால்.... ஒரே ஒரு குறை மாப்பிள்ளையும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக மனசுக்கும் திருப்தியாக இருந்திருக்கும். அதுதான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாக இருக்கு" ரஞ்சனி ஒருவாறு மனதிலிருந்த சஞ்சலத்தைக் கூற

"அதுதான் எங்களுக்கும் வருத்தம். ம்.... என்ன செய்ய அவன்தான் ஊரிலேயே இல்லையே." தனலட்சுமி சொல்ல

"அதுதான் நானும் கேட்கிறேன் எதுக்காக இவ்வளவு அவசரமா என் பேரனுமில்லாம செய்றீங்க. அவன் வந்த பிறகு நிச்சயதார்த்ததையும் அடுத்து ஒன்றோ இரண்டோ மாசத்துல கல்யாணத்தையும் வச்சிக்கிடலாம் தானே. இப்போ பார்த்தையளா பொண்ணுடைய அம்மாவுக்கு லேசான மனச்சுணக்கம் இதெல்லாம் தேவையா?" ராஜேஸ்வரி எல்லாம் அறிந்திருந்த போதும் சந்தர்ப்பத்தை விடாது குட்டையைக் குழப்ப நினைக்க

"ராஜி ஒரு தரம் சொன்னால் உனக்கு விளங்காதாம்மா. நீ தேவையில்லாத கதைகளைக் கதைக்காம இரு அது போதும்." தனலட்சுமியும் அவருக்கு கொட்டு வைக்க கப் என்று வாயை மூடிக்கொண்டார்.

"அதுசரி எங்களுக்கும் கொஞ்சம் கவலைதான். ரஞ்சனி, அதனாலதான் நாங்க ஒரு முடிவெடுத்திருக்கோம். அகிலாப்பா நீங்களே சொல்லுங்கோ." காயத்ரி தன் கணவனை நோக்கிக் கூற

"வாசுதேவன், இன்றைக்கு நம்ம புள்ளையளோட கல்யாணத்தை உறுதிப்படுத்ததான் எங்க மகனில்லாமலே இந்த நிச்சயத்தை செய்தோம். கல்யாணத்துக்கு முதல் நாள் தான் ஆதி நாட்டுக்கு வருவான். ஊருக்கு வந்து சேர இரவாகிடும் என்று நினைக்குறேன். அதனால முதல் நாள் சாத்தியம் இல்லை. அதுக்காகத்தான் கல்யாணத்தன்றைக்கு காலையிலேயே பொண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றி நிச்சயம் பண்ணிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். நீங்க என்ன சொல்லுறீங்க?" ராகவன் கேள்வியில் சிறிது யோசித்த வாசுதேவன் தன் மனையாளை கேள்வியாய் நோக்கினார். அதில் தன் கணவனின் சம்மதத்தைப் புரிந்து கொண்டவர்

"அது சரிங்க சம்மந்தி, பத்தரைக்குத்தான் கல்யாணத்துக்கு நேரம் குறிச்சிருக்கோம். அப்போ நிச்சயத்தை எப்போ பண்ணுறது. அதுவும் நல்ல நேரத்துலதானே செய்ய வேணும் அன்றைக்கு நிச்சயமும் பண்ணி கல்யாணமும் பண்ண நேரம் போதுமா? சடங்கு சம்பிரதாயம் எல்லாம் நிறைய இருக்கில்லையா? அதனாலதான் கேட்கிறேன்." ரஞ்சனி தன் சந்தேகத்தைக் கேட்க

"ரஞ்சனி, நாம குறிச்ச நாள்ல மூன்று முகூர்த்த நேரம் இருக்கு. நம்ம மதிய விருந்தோட செய்யுறதாலதான் பத்தரை முகூர்த்தத்துக்கு கல்யாணத்தைக் குறிச்சிருக்கோம். மற்றையது காலையில ஆறிருந்து ஏழுக்கு இருக்கு. ஆனால் இரண்டு முகூர்த்தத்துக்கும் இடையில நிறைய நேரம் இருக்குது. அதனால அந்த நேரம் அவ்வளவா சரிப்படாது. மற்றது ஒன்பதுக்கு இப்போ அதுதான் மிச்சமாக இருக்கிறது. அதனால ஒன்பது மணி முகூர்த்தத்துலையே நிச்சயம் பண்ணிக்கலாம். என்ன சொல்லுறீங்க?" காயத்ரி தன் யோசனையைக் கூற

"நல்ல யோசனை சம்மந்தியம்மா. ரொம்ப சந்தோசம் எங்களுக்குப் பூரண சம்மதம்." வாசு பதிலளிக்க

"ஓம் சம்மந்தி இப்போதான் மனசுக்கு திருப்தியாக இருக்கு. நன்றி சம்மந்தி"
ரஞ்சனியும் நெகிழ்ந்து கூற

"அத்தோட தனம்மா உங்களுகிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கப் போறேன் மறுக்கக் கூடாது. கல்யாண செலவு முழுக்க உங்களோடதுதான் என்று சொல்லிட்டீங்க. தயவு செய்து நிச்சயத்தை மட்டுமாவது நான் செய்கிறேனே மாட்டேன் என்று மட்டும் சொல்லிடாதீங்கோ அம்மா. உங்க அளவுக்கு பெரிய அளவில் இல்லாட்டியும் என் வசதிக்கு ஏற்ப சிறப்பாகவே என்னால செய்ய முடியும். என் மகளுக்கு செய்யாம விட்டால் என் மனசுக்கு வாழ் நாளுக்கும் நிம்மதி இருக்காது. " பீடிகையுடன் ஆரம்பித்த வாசுதேவன் கெஞ்சலாக முடிக்க அவரின் மனதறிந்து அதற்கு மட்டும் ஒப்புக் கொண்டார் தனலட்சுமி.

"சரி இப்போ கல்யாண ஏற்பாடுகளைப் பேசிடலாம். இங்கே எங்களுக்கு சொந்தமா ஒரு ஹோட்டல் இருக்கு. ஹோட்டல் நித்திலம் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்குறேன் அதிலேயே பெரிய திருமண மண்டபமுமிருக்கு. அங்கேயே கல்யாணத்தை வச்சுகலாம் என்று நினைக்குறோம். இல்லை உங்களுக்கு கோயில்ல வைக்கனுமா உங்க ஐடியா எப்படி?" ராகவன் ஆரம்பிக்க

"ஹோட்டல் நித்திலம் தெரியும் ஆனால் அது உங்களுடையது என்று இன்றைக்குத்தான் தெரியும். சரி சம்மந்தி நீங்க என்ன சொல்லுறீங்களோ அதையே செஞ்சிடலாம். எனக்கு வேறெந்த ஐடியாவும் இல்லை." - வாசுதேவன்

"அப்போ அங்கேயே நிச்சயம், கல்யாணம் இரண்டையும் வச்சுக்கலாம். அத்தோட சாப்பாடும் அங்கேயே ஏற்பாடு பண்ணிக்கலாம். வரவேற்பு மறுநாள் செய்யலாமா?." - காயத்ரி

"உங்களுக்கு எப்படி வசதியோ அப்படிச் செய்ங்கோ. எங்களுக்கு எதென்றாலும் சம்மதம்." இது ரஞ்சனி

"நீங்க என்ன சொல்லுறீங்க. எப்போ வரவேற்பு வச்சுக்கலாம்" கணவனிடம் கேட்க அவரோ தனலட்சுமியை நோக்கி

"அத்தை நீங்க சொல்லுங்கோ." என்றார்.

"அம்மாடி..... ஒரு விசயத்தை பட்டென்று முடிக்காம மாத்தி மாத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க. சரி உங்களுக்கான விசயம் எல்லாம் கதைச்சு முடிச்சிட்டையல்தானே. இப்போ நான் சொல்லுறதைக் கேளுங்கோ. நம்ம ஹோட்டல்ல தான் கல்யாணம். காலையில ஒன்பதுக்கு நிச்சயம் அதுக்கு முன்ன ஹோட்டல் பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவிலுக்கு போய் பொண்ணு மாப்பிள்ளை பேருல பூஜை ஒன்று செய்யனும். பத்தரைக்கு கல்யாணமுகூர்த்தம் அத்தோட மதிய விருந்து. இவங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு கிழமையில ஊருக்கு போயிடுவாங்க. வரவேற்புக்கு நமக்கு நாள் இல்லை. கல்யாணம் முடிஞ்ச பிறகு ஆயிரம் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இருக்கு. அதனால அன்றைக்கு பின்னேரமே வரவேற்பையும் வச்சுடலாம். வரவேற்பு மண்டபத்துல இல்லை ஹோட்டல் வளாகத்துல இரவுணவோட ஆயத்தப்படுத்திக்கலாம். அந்த நாள் முழுக்க என் பேரனோட கல்யாண விழாதான் திருவிழா மாதிரி நடக்கும் இந்த ஊரே அதைக் கொண்டாடனும். இவ்வளவுதான் விசயம் என்ன விளங்கிட்டா? இப்படி பட்டென்று முடிவெடுக்காம உனக்கென்ன எனக்கென்ன என்று சும்மா சவ்வு மாதிரி இழுத்துகிட்டு இருக்கீங்க." தனலட்சுமி மொத்தமாய் ஒரு முடிவெடுக்க மற்றையவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.

வந்தவர்கள் விடை பெற்ற பின் தன் தோழியிடம் வந்தாள் தாரணி,

"ஏய் நயனி சும்மாவே தேவதை மாதிரி இருக்க உன் கழுத்துக்கு இந்த செயின் இன்னும் சூப்பரா இருக்குடி. ப்பா... இந்த அழகைப் பார்க்க ஆதித்யா இல்லாம போயிட்டாரே."

"அதுதான்டி என் வருத்தமும் அவரும் இருந்து இந்த நிச்சயம் நடந்திருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்குமில்லை. ஹ்ம்..... அந்த பாக்கியம் எனக்கு கல்யாணத்தன்றைக்குத்தான் போல" பெருமூச்சு விட

"கொஞ்சம் பொறுத்துக்கோ மை பியூட்டி இன்னும் ட்டூ வீக்ஸ் தானே உன் ஹேன்ட்ஸம் உன்கிட்டையே வந்துடுவாங்க. அதுவும் மொத்தமா ஸோ டோன்ட் வொரி பீ ஹாப்பி" சிரித்துக் கொண்டே சொன்ன தாரணியின் முதுகில் ஒரு தட்டுத் தட்டியவள்

"ச்ச்சு சும்மா இருடி லூசு மாதிரி உளராம போடி போய் உன் வேலையப் பாரு"

"சரியில்லடி இப்போவே துரத்திவிடுற கல்யாணமான பிறகு சொல்லவே வேணாமாக்கும் சரிங்க மேடம் நேரமாச்சு நான் என் வேலையப் பார்க்குறேன் நீங்க உங்க வேலையை அதாவது கனவுல ஆதியுடன் டூயட் பாடுற வேலையைப் பாருங்க மேடம்" என தாரணி கூற நயனியோ அவளுக்கு விரல் நீட்டி பத்திரம் காட்ட இருவரும் சிரித்துக் கொண்டனர் தாரணியும் விடை பெற்று தன் வீடு நோக்கி சென்றாள். நயனியும் நிச்சய உடை மாற்றி சாதாரண உடைக்கு வந்தவள் தாரணி சொன்னது போல் ஆதியின் போட்டோவை கையில் வைத்து கனவுலகில் மிதந்தாள். இதுவரை பல ஆண்களைக் கடந்து வந்த போதும் ஏன் எத்தனை காதல் மொழிகளைக் கேட்ட போதும் பல காதல் கடிதங்களைப் பார்த்த போதும் எவன் மேலும் வராத காதல் ஆதித்யவர்த்தனை பார்த்த நொடியில் அவன் மேல் வந்தது. அதுவும் பித்துப் பிடிக்கும் அளவிற்கு அவன் மேல் காதல் கொண்டாள். எண்ணிடலங்காத கனவுகளையும் வளர்த்துக் கொண்டாள். அவளுள் வயலின்கள் மெல்லிசையை வாசிக்க இதமான பாடல்களும் ஒலிக்கத் தொடங்கின.

" ............மன்மதனே நீ கவிஞன்தான் மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல்ல
உன்னைக் கண்ட நொடி ஏனோ
இன்னும் நகரல்ல
உந்தன் ரசிகையே நானும் உனக்கேன் புரியவில்லை.

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை. இருபது வருடம் உன்னைப் போல் எவனும் என்னை மயக்கவில்லை.......

நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்.......

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக் கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா?

ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ.....
நண்பனே எனக்கு காதலனானால்
அதுதான் சரித்திரமோ........

மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும்
மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும்
வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கறைக்கு உந்தன் பெயரை வைக்கோ

அடிமை சாசனம் எழுதித் தருகிறேன்
என்னை ஏற்றுக் கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக் கொள்ளு.............."

சாதனா சர்க்கம் பாட ஆதித்யனை நினைத்தவளாய் துயில் கொள்ளத் தொடங்கினாள் பாவை.

நிச்சயமான அடுத்த நாளே நயன தாரா வேலையையும் விட்டு விட்டாள். காலையும் மாலையும் தன் மணவாளனின் போட்டோவே கதியாகிப் போனாள்.

இப்படியே ஒரு வாரம் கழிய ஒருநாள் அவள் திருமண விசயம் கேள்வியுற்ற அவள் உடன் பயின்றவர்கள் அவளைக் காண வந்தனர் அன்றுதான் அவளின் குழப்பம் ஆரம்பமானது. அவளின் வருங்கால கணவனின் போட்டோவைப் பார்த்தவர்கள் அவனின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கினர் அவனைப் பற்றி துளைத்தைடுக்கத் தொடங்கினார்கள். அவர் வெளிநாட்டுக்கு போயிருப்பதால், தான் இதுவரை அவனைப் பார்க்கவுமில்லை அவனிடம் பேசவுமில்லை என்று கூற அவர்களோ நம்ப மறுத்தார்கள். அவனின் அழகிலும் செல்வ நிலையிலும் நயனிக்கு வந்த அதிஷ்டத்திலும் சிறு பொறாமை கொண்ட சில தோழிகள் அவளை காயப்படுத்த

"உண்மையிலே மாப்பிள்ளைக்கு சம்மதம்தானா? கட்டாய கல்யாணமோ? மாப்பிள்ளை இல்லாமல் நிச்சயதார்த்தம் நடந்திருக்கு கல்யாணம் வேற அவசர அவசரமா நடக்குது. இந்த காலத்துல இருக்குற தொழில் நுட்பத்திற்கு அடுத்த கிரகத்துக்கு போனாக் கூட பேச முடியும் போல ஆனால் பாரு வெளிநா.....ட்டுக்குப் போனதால இதுவரை பேசவே இல்லையாம் நம்புற மாதிரியா இருக்கு?" என தேவிகா என்பவள் ஆரம்பிக்க அவளுக்கு சிலர் பக்க வாத்தியம் வாசித்தனர். அப்போதுதான் அவனைப் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியவில்லை என்ற உண்மை உறைத்தது அவர்கள் கூறுவதிலுள்ள உண்மையும் புரிந்தது. உள்ளே மனம் வாடிய போதும் தோழிகளிடம் காட்டிக் கொள்ளாது தன் தந்தை வருங்கால கணவனைப் பற்றி தன்னிடம் கூறியவற்றை சொல்லி ஒருவாறு பேசி சமாளித்தாள். அன்றிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை அவளின் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. காதல் கொண்ட மனது குழப்பத்தைத் தீர்த்து தன்னவனுக்கும் தன் மேல் காதல் உண்டு என்ற விடையைக் காண தவியாய் தவித்தது. இதுவரை அவளின் குழப்பம் தீராமலிருக்கவே தன் உயிர்த் தோழிக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

"சொல்லுங்க கல்யாணப் பொண்ணு இந்த காலை நேரத்துல உங்களுக்கு எங்க ஞாபகம் வந்திருக்கு" மறுமுனையில் தாரணியின் உற்சாக குரல் கேட்டதும் லேசான விசும்பலுடன்

"ஹலோ தாரு... உன்கூட கொஞ்சம் பேசனும்ப்பா நீ ப்ரீயா இருக்கியா?" அவளின் குரலிலுள்ள வித்தியாசத்தை உணர்ந்த தாரணியோ கேலியைக் கைவிட்டு விட்டு சற்றுப் பதட்டமாக

"என்னாச்சுப்பா, உன் குரலே சரியில்லையே என்ன விசயம்?"

தன் தோழிகள் வந்ததிலிருந்து இன்று காலை வரை நடந்த அனைத்து விடயத்தையும் ஒப்பித்தாள் நயனதாரா.

"நீ என்ன லூசா? உனக்குத்தான் தேவிகாவப் பத்தி நல்லாத் தெரியுமில்லை அவ ஒரு பொறாம புடிச்சவ ஸ்கூல் டேய்ஸ்லையே இப்படித்தான் எதாவது பண்ணிகிட்டே இருப்பா அவளுக்கு மத்தவங்க கொஞ்சம் நல்லா இருந்தாலே புடிக்காது. ஆதித்யா வேற பார்க்க ஹேன்ட்ஸம்மா இருக்காரு அதுமட்டுமா ரொம்ப பெரிய பணக்காரங்க வேற எப்படி வயிறு காயும் சொல்லு அவளெல்லாம் ஒரு ஆளுன்னு அவ சொன்னத நம்பி அப்பம்மாகிட்ட வேற போய் கதைச்சிருக்க உன் தொல்லை தாங்காம அவங்க உன் மாமியார்கிட்ட கதைச்சிருக்காங்க காயத்ரியம்மா நல்லவங்க என்றதாலதான் எதுவும் தப்பா எடுத்துக்கல்ல. இதுவே வேற யாராவதுன்னா யோசிக்க மாட்டாயா?" படபடத்தாள் தாரணி.

"என்னை என்ன பண்ணச் சொல்லுற வேற வழியில்லாமத்தான் அப்பம்மாகிட்ட போய் கதைச்சேன். அத்தைகிட்டையும் கேட்டு கிளியர் பண்ணியாச்சுத்தான் இருந்தும் ஒரு குட்டிக் குழப்பம் அதுக்குத்தான் உனக்கு போன் பண்ணினேன்." - நயனி

"உனக்கு அறிவே இல்லைடி இப்படி ஒரு குழப்பம் என்றால் நீ முதல்ல என்கிட்ட சொல்லிருக்கலாமே. எதுக்கு டி அப்பம்மாவ டென்ஸன் படுத்தின. எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து சொல்லுற, நீ உண்மையாவே லூசு தான்டி"

"ஏசாதப்பா, சரி அதைவிடு தேவி பொறாம புடிச்சவதான் ஆனால் அவ சொல்லுறதுலையும் ஒரு உண்மையிருக்கில்லை"

"ஐயோ என்னால முடியல்லடா சாமி. மீண்டும் முதல்ல இருந்தாடி நான் மட்டும் இப்போ உன் பக்கத்துல இருந்தா உன் தலையில நங் என்று கொட்டிப் போட்டுடுவேன். இங்கப்பாரு ஆதித்யா வெளிநாட்டுக்கு ட்ரிப் ஒன்னும் போகல்லையே வேலை விசயமாத்தானே போயிருக்கார். அவருக்கு என்ன பிஸியோ"

"உண்மையாவே அவருக்கு சம்மதம் இருக்குமாடி அவருக்கும் என் மேல கா... விருப்பம் இருக்குமாடி"

" அம்மா சொன்ன மாதிரி சம்மதமில்லாம கல்யாணம் வரை வரமாட்டாங்க நீ ஒன்னும் குழப்பிக்காதே. அதை விடு
இப்போ என்னமோ சொல்ல வந்துட்டு மாத்தி சொன்னாயில்லை ம்.... அது கா...தல் இருக்குமா என்று தானே சொல்ல வந்த?"

"அப்படியில்லைடி விருப்பமிருக்குமா என்றுதான் கேட்க வந்தேன். சும்மா ஓட்டாத"

"சரிம்மா நீ சொன்னா நம்பத்தான் வேணும். இருக்கும் இருக்கும் காதல்.... கட்டாயம் இருக்கும். சரி நிச்சயமா இந்தக் குழப்பத்துல ஒழுங்கா தூங்கிருக்க மாட்ட இப்போ கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு. ஈவினிங் ஃபங்ஷன் வேற இருக்கில்லை. நான் லன்ச் முடிச்சிட்டு நேரத்தோடவே வாரேன் டி."


"ஓகேடி உன்கிட்ட பேசின பிறகு தான் கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கு எனக்கும் ரொம்ப டயர்டாத்தான் இருக்கு முழுசாத் தூங்கி ரெண்டு நாளாச்சுப்பா நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் சீக்கிரம் வந்துடுப்பா பாய்"

"பாய் டி" அழைப்பைத் துண்டித்தாள் தாரணி.

பாதிக் குழப்பத்தை பெற்றோர் தீர்க்க மொத்தத்தையும் தன் உயிர்த்தோழி போக்க அவர்களின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டவளாய் கடவுளிடமும் ஒரு வேண்டுதலை வைத்தவள் மனது லேசாகத் தெளிய இரண்டு நாட்களாய் தூங்காதது வேற உடலை வாட்ட அப்படியே அடித்துப் போட்டது போல் உறங்கிவிட்டாள்.

வளரும்.....

Please share your comments here👇

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 05


திருகோணமலை மாவட்டம் இயற்கைத் துறைமுகத்துடன் இராணுவ, வர்த்தக மற்றும் புராண வரலாற்றுப் பின்புலமாகக் கொண்ட இயற்கையான அழகுக்காட்சிகளுடன் இலங்கையின் கிழக்குக்கரையில் அமைந்ததொரு அழகு நகரமாகும். இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் மீன்பிடி. விவசாய பயிர்ச் செய்கையாக நெல் பிரதானமாக செய்யப்படுகிறது. கந்தளாய்க்குளம், பரவிபன்குளம் போன்ற பல குளங்களும் காணப்படுகின்றன. அதனால் தங்குதடையின்றிக் கிடைக்கும் நீர்ப்பாசனத்தால் விளைந்து நிற்கும் வயல்வரப்புகள், பெரிய காடுகள் பசுமையான சூழலை உருவாக்குகின்றது. இம் மாவட்டம் பல்வேறு வகையான இயற்கை, செயற்கை வளங்களைக் கொண்டமைந்த பிரதேசமுமாகும்.
இது மீன்பிடித் துறைமுகமும் நங்கூரமிடலும் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி, ஆழமற்ற கடல் மீன்பிடி ஆகியவற்றைக் கொண்ட நீண்ட கடற்கரையையும் கொண்டுள்ளது. அழகான மார்பிள் கடற்கரை, அரிசிமலை கடற்கரை, நீண்ட நிலாவெளி கடற்கரை அதிலிருந்து பதினைந்து நிமிட படகுச்சவாரி மூலம் சென்று கடலினுள் அமைந்துள்ள கடல்படு திரவியங்கள், பல்வகை நிறமீன்கள், கடல்வாழ் உயிரினங்களை பார்க்கக் கூடிய புறாமலைத்தீவு, பல தட்பவெப்பநிலை கொண்ட கன்னியாவின் ஏழு வெந்நீர் ஊற்றுக்கள் போன்ற சுற்றுலாத்தலங்களையும் சிவபக்தனான இராவணனால் கட்டடப்பட்ட திருக்கோணேஸ்வரர் கோயில், ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் அத்துடன் இன்னும் சில இந்துஸ்தலங்களையும் திரியாய் விகாரை, வெல்கம் விகாரை போன்ற பௌத்தஸ்தலங்களையும் கன்னியா முஸ்லிம் பள்ளிவாயல் கத்தோலிக்க கிறிஸ்தவ புனிதஸ்தலங்கள் போன்ற மதஸ்தலங்களையும் களப்புகளின் வலையமைப்பு, பலமான இணைப்புடைய வீதிவலையமைப்பு, முன்னேற்றகரமான பொருளாதார உட்கட்டமைப்பு போன்றவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இப்படியான ஒரு அழகு நிறைந்த திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை என்ற ஊர்தான் ஆதித்யவர்த்தனின் சொந்த ஊர் அதுவே நம் நாயகியும் பிறந்த ஊர். இந்த ஊரிலே செல்வ செழிப்பு நிறைந்த குடும்பங்களுள் ஆதியின் குடும்பமும் ஒன்று. ஊர்மக்கள் மத்தியில் ஆதியின் தாத்தா பாட்டியான தனசேகர், தனலட்சுமி தம்பதியருக்கு இன்று வரை நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அரண்மனை போன்ற வீடும் பல ஏக்கர் நிலங்களும் தோட்டம் தொறவுகளும் இன்னும் சில வீடு வளவுகளும் ஒரு பெரிய கால்நடைப் பண்ணையும் அத்துடன் சில மீன்பிடி படகுகளும் தனசேகர், தனலட்சுமியின் மொத்தச் சொத்து. இதில் மூன்றாம் தலைமுறையின் ஒரே ஆண்வாரிசுதான் நம் நாயகன் ஆதித்யவர்த்தன்.

ஊரை நெருங்கிக் கொண்டிருந்தது வண்டி, சுற்றிலும் பார்வையை ஓட்டினான் ஆதித்யவர்த்தன். ஏழு நெடு ஆண்டுகள் கடந்து இந்த ஊருக்குள் மீண்டும் பிரவேசிக்கின்றான். தன் இறுதி மூச்சுவரை வரக்கூடாது என்று சபதம் கொண்ட இந்த ஊருக்குள் தன் தாயின் பிடிவாதத்தால் மீண்டும் வர வேண்டிய தன் நிலையை மிகவும் வெறுத்தான். பழைய நிகழ்வுகள் அவனுள் காட்சியாய் எழ இன்னும் அது ஆறாத ரணமாகவே இருந்தது. அவன் முகம் கோபத்திலும் அவமானத்திலும் சிவக்கத் தொடங்கியது. அவனை அடிக்கொரு முறை பார்த்துக் கொண்டு வந்த சங்கரும் தன் நண்பனின் வலியை உணர்ந்து கொண்டான். தன் தலையை உதறி வேண்டாத அந்த நினைவுகளைக் கலைத்த ஆதியின் விழிகள் வெறுமையாக காட்சி தர

"டேய் மச்சி ப்ஃரீயா விடுடா. நாளைக்கு உனக்கு கல்யாணம், முதல்ல மனசுல இருக்குற கண்ட குப்பையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு சந்தோசமா லைஃப்பை ஸ்டார்ட் பண்ணுடா நடந்த கெட்டதெல்லாம் மறந்துடு உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாத்தான் நடக்கும்."

"என்ன மச்சான் நீ சொல்றதைப் பார்த்தால் இவ்வளவு நாளும் நான் கெட்டவன் போலவும் இப்போ திருந்தி நல்லவனான மாதிரியும் சொல்லிட்டிருக்க."

"ஐயோ அப்படியில்லடா அந்தப் பொண்ணப் பார்த்தா நல்லவ மாதிரித்தான் இருக்குடா அதான் உன் வாழ்க்கை சந்தோசமாயிருக்கும் என்று சொன்னேன்."

"இப்போதானேடா சொன்ன என் நல்ல மனசுக்கு நான் நல்லா இருப்பேன் என்று அப்படியே பிளேட்ட மாத்துறாய் அந்த நல்லவளாலதான் நான் நல்லா இருப்பேன் என்று. போட்டோவில பார்த்து உனக்கு அவ குணம் தெரிஞ்சிடுச்சா? லூசு இங்கப்பாரு வெள்ளையும் சொள்ளையுமா அப்பாவி மாதிரி போஸ் குடுத்தா இவளுங்கெல்லாம் நல்லவளாகிடுவாங்களா? பார்க்க அப்பாவியாக இருந்ததுகளுடன், பழகிய பிறகுதானே தெரியுது எல்லாம் வெளிவேஷம் என்று அதை நம்பி நாமளும் வாழ்க்கையை ஒப்படைக்கப் போறோம். இந்த பொம்பளைங்க எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். எனக்குத்தான் அறிவில்லைடா வலிக்க சூடுபட்டும் புத்தியில்லாம திரும்பவும் அதே தப்பை பண்ணுறேன் இல்லையா?"

"அம்மா உனக்கு தப்பான எதையும் செய்யமாட்டாங்க. விசாரிக்காமலா இதை ஏற்பாடு பண்ணிருப்பாங்க அதுவும் இது தனம் பாட்டி பார்த்த வரன் ஸோ நிச்சயமா அந்தப் பொண்ணு நல்லவளாத்தான் இருப்பாடா. இங்கப்பாரு அப்போ நீயாப் போய் சூடு வாங்கிக்கிட்ட ஆனால் இப்போ....." சீரியசாக ஆரம்பித்த சங்கர் கிண்டலாய் இழுக்க,

"அதைத்தான் நானும் சொல்லுறேன் இப்போ அம்மா பார்த்தாலும் சூடு சூடுதான்டா லூசுப் பயலே. சாகனுமென்று முடிவெடுத்தாச்சு நம்ம விழுந்தா என்ன? இல்லை யாராவது புடிச்சு தள்ளிவிட்டா என்ன? எல்லாமே ஒன்றுதான்டா மக்கு மரமண்ட" ஆதித்யா திட்ட

"டேய் முதல்ல இப்படி ஏசுறதை நிப்பாட்டு. உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் எத்தனை முறை கேட்டாலும் சொல்லுவேன் ஒன்று தப்பா இருந்தால் எல்லாம் தப்பா இருக்கனும் என்று அவசியமில்லை. அதேமாதிரி அம்மாவும் பாட்டியும் உனக்கு நிச்சயமாக தப்பானதைத் தெரிவு செஞ்சிருக்கமாட்டாங்க. முக்கியமாக பாட்டி அவங்க உன் மேல நிறைய பாசம் வச்சிருக்காங்க. அவங்க உனக்கு ஏற்றமாதிரித்தான் பார்த்திருப்பாங்க." சங்கர் மிக நம்பிக்கையாகக் கூற

"இப்போ நானும் நீ சொல்லுற மாதிரி அந்த ஒரு நம்பிக்கையிலதான் இருக்கேன் பார்க்கலாம்" ஆதி கூற தன் நண்பனின் வாழ்வு சிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டியவனாக காரை ஊரை நோக்கிச் செலுத்தினான் சங்கர்.

அப்போது ஆதியின் கைப்பேசி இசைத்தது அதில் ஒளிர்ந்த எண் புதியதாக இருக்க யாராக இருக்கும் என்று சிந்தித்தவனாக அழைப்பை ஏற்க மறுமுனையில் வாசுதேவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவனின் நலன் பற்றியும் பிரயாண சௌகரிகங்கள் பற்றியும் விசாரித்தவர் சிறிது நேரம் பேசிவிட்டு தன் மகள் நயனதாராவின் அலைபேசி இலக்கங்களையும் அவனுக்கு கொடுத்தவர் கவனமாக வந்து சேருமாறு கூறி அழைப்பைத் துண்டித்தார். அப்போதே நயனிக்கு அழைத்து பேசி திருமணத்தை நிறுத்த நினைத்தவனிடம்

"என்ன மச்சான் அம்மாக்காக என்ன வேணுமென்றாலும் செய்வேன் என்று சொன்ன இப்போ இப்படி பண்ணுறாய்?"

"மச்சி நானா கல்யாணத்தை நிறுத்தினால் தானே அம்மா மனசை கஷ்டப்படுத்திய மாதிரி அதுவே பொண்ணு வீட்டுல நிறுத்திட்டா ஏன் பொண்ணே நிறுத்திட்டா."

"அப்போதும் அம்மா வருத்தப்படுவாங்கடா. இவ்வளவு பார்த்து செஞ்ச அம்மாக்கு இப்போ திடீரென்று அந்த பொண்ணு கல்யாணத்தை நிறுத்தினால் அதுக்கு நீதான் காரணம் என்று தெரியாமலா இருக்கும். அவங்கதானே உன் மாமனாருக்கும் நம்பர் கொடுத்திருப்பாங்க உன் மேல் தான் சந்தேகம் வரும் சரி அதைவிடு ஒரு பொண்ணுக்கு கல்யாணம் நின்றால் மறுபடியும் கூடி வாரது கஷ்டம்டா. அவங்க நடுத்தர வர்க்கத்துக்காரங்க இதனால எவ்வளவோ பிரச்சினை வரும் ப்ளீஸ்டா புரிஞ்சுக்கோ. முதல்ல அந்த பொண்ணு கல்யாணத்தை நிறுத்துமா அதை யோசித்தாயா? அம்மா உனக்கு தப்பான எதையும் செய்ய மாட்டாங்க. அத்தோட ஒரு பெண்ணோட வாழ்க்கையை அழிச்ச பாவம் உனக்கு வேணாம்டா" அவன் கால்களில் விழாத குறையாக கெஞ்சிக் கொஞ்சி ஒருவாறு புரிய வைத்து அவன் நயனியுடன் பேசுவதைத் தடுத்திருந்தான் சங்கர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த காயத்ரியை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த தனலட்சுமி இவளுக்கு என்னாச்சு என்று எண்ணியவராய்

"என்னம்மா வாசக் கதவுக்கிட்ட நிக்குற பிறகு ரோட்டுல போய் பார்க்குற நானும் பார்த்துட்டே இருக்கேன் அரை மணி நேரமா இதைத்தான் பண்ணிட்டு இருக்க என்னாச்சு என்ன விசயம்?"

"இல்லைம்மா நேரம் மூனரை தாண்டிடிச்சு இந்த ஆதி மூனு மணிக்கே வந்திடுவேன் என்று சொன்னான் இன்னும் வரல்லை கொஞ்சம் பயமாயிருக்கு அதான் பார்த்துட்டிருக்கேன்."

"நானும் ஆதி வந்துட்டானா என்று கேட்கத்தான் வந்தேன். சரி போன் பண்ணிப் பாரேன்."

"பண்ணாம இருப்பேனா? ஓஃப் பண்ணிருக்குமா. சங்கருக்கும் பண்ணினேன் அவன் போனும் ஓஃப்லதான் இருக்கு எனக்கு பயமாயிருக்கு"

"பயப்படாதே வந்திடுவாங்க போன்ல சார்ஜ் இல்லாம இருக்கும். சரி கனகாகிட்ட சொல்லி வார புள்ளைங்களுக்கு சாப்பிட ஏதாவது ரெடி பண்ணி வைக்கச் சொல்லு போ. அப்படியே எனக்கும் ஒரு டீ கொண்டு வாம்மா." உள்ளே பதட்டமிருந்தாலும் மகளிடம் காட்டாது சாதாரணமாகவே பேசி அவரை உள்ளே அனுப்பியவர் இப்போது வெளி கேட்டையே பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

சிறிது நேரத்தில் திறந்து கிடந்த கேட்டின் வழியே உள் நுழைந்தது அந்த வெளிநாட்டுக் கார் . காரைக் கண்டதும் தன் மகளை உரக்க அழைத்தவாறே வாசலை நோக்கி விரைந்தார் தனலட்சுமி. காரிலிருந்து இறங்கிய ஆதித்யவர்த்தனைக் கண்டதும்

"ஐயா, என் ராசா எத்தனை வருஷமாச்சுடா இந்த ஊருக்கு நீ வந்து, நான் போறதுக்குள்ள நீ வரோனுமென்று நினைச்சேன் வந்துட்டடா என் தங்கமே"
என தன் பேரனை அணைத்துக் கொண்டார் தனம்.

"பாட்டீ..... என்ன இப்படி சொல்லுறீங்க" அவனும் பாட்டியை அணைத்தவாறே கவலையாக கூற

"என்ன பாட்டி இது, கல்யாண வீட்டுல போய் எதையோ பத்தி பேசிட்டிருக்கீங்க" சங்கரும் கேட்க

"என்னம்மா பேச்சிது நல்ல நேரத்துல அபசகுணமா பேசிட்டிருக்கீங்க." ஆரத்தி தட்டுடன் வந்த காயத்ரி அம்மாவைக் கடிந்து கொண்டு வந்தவர்களுக்கு ஆரத்தி சுற்றி அவர்களை உள் அழைத்துச் சென்றவர் அவர்களுக்கு டீயும் சூடாக வடை, சமோசா மற்றும் பிஸ்கட் கொடுத்து உபசரித்தார்.

"என்ன ஆதி, உங்க இரண்டு பேரோட போனுக்கும் என்னாச்சு எவ்வளவு நேரமா ட்ரை பண்ணிட்டிருக்கிறேன். மூனு மணிக்குள்ள வந்திடுவேன் என்று சொன்ன இப்போ மணி நாலு ஏன் இவ்வளவு லேட் என்னாச்சுப்பா ஏன் இவன் நேரா ஊருக்கு வராம வேற எங்கேயாவது கூட்டிட்டு போயிட்டானா என்னடா சங்கர் அப்படித்தானா?"

"ஓமோம் இந்த பயல் செய்திருப்பான்." தனலட்சுமியும் கூற

"பாட்டி நீங்களுமா? அம்மா சும்மா ஏன் என் தலையை புடிச்சு ஆட்டுறீங்க. உங்களுக்கும் உங்க மகனுக்கும் என்னை வம்பிலுக்கல்லை என்றால் தூக்கமே வராதில்லை. போதாக்குறைக்கு இப்போ பாட்டிம்மாவும் சேர்ந்துகிட்டீங்க. டேய் சங்கர் உன் பாடு திண்டாட்டம்தான்." சங்கர் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளஅவன் பேசிய விதத்தில் மற்றையவர்கள் சிரிக்க

"வரும் வழியில லேசான மழை கொஞ்சம் ட்ராபிக்காவும் இருந்துச்சு மெல்லவே வரலாம் என்று வந்தோம் அதனாலதான் கொஞ்சம் லேட் போன்ல சார்ஜ் இல்லை அது ஓப் ஆகிட்டுது. அதனாலதான் பிறகு உங்களுக்கிட்ட சொல்ல முடியாம போச்சும்மா." ஆதித்யா பதிலளிக்க

"அப்படித்தான் இருக்கும் என்று நினைச்சேன். இருந்தாலும் கொஞ்சம் டென்ஸனாயிடுச்சு"

"அது சரி அப்பா எங்கே?"

"அப்பா கொஞ்சம் வெளியில வேலையிருக்கு என்று போயிருக்காரு இனி வார நேரந்தான்." கூறிக் கொண்டிருக்கும் போதே உள் நுழைந்த ராகவன் ஆதித்யனை கட்டியணைத்து வந்த இருவரிடமும் நலன் விசாரித்தார் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சங்கர் வீட்டுக்கு செல்வதாகக் கூறி விடை பெற்றான். ஆதித்யன் வந்து விட்டதை அறிந்த மற்றைய சொந்தங்கள் எல்லோரும் ஹோலில் குமிய அவரவர்கேற்ப அனைவரிடமும் நலன் விசாரித்து கொஞ்ச நேரம் பேசி விட்டு தன் பாட்டியின் ஆஸ்தான இடமான ஊஞ்சலில் அமர பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்ட தனலட்சுமியின் மடியில் தன் தலையை சாய்த்துக் கொண்டான் அவர் பேரன்.

அவனின் தலையை தடவியவாறே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு பயணக்களைப்பு காரணமாக சற்று ஓய்வெடுக்கப் போவதாக கூறிவிட்டு தனதறையை நோக்கிப் போன ஆதித்யனை பின் தொடர்ந்தார் காயத்ரி.
அவனுடன் சேரந்து அறையினுள் நுழைந்த தாயிடம் 'என்ன' என்பது போல் புருவங்களை உயர்த்த

"ஆதி, இன்றைக்கு மெஹந்தி விழா இல்லையா அதனால ஆறு மணி போல பொண்ணு வீட்டுக்குப் போக போறோம். அநேகமா எட்டு,ஒன்பது மணிக்குள்ளே வந்திடுவோம். நீயும் இன்னும் பொண்ணைப் பார்க்கல்ல இல்லையா உனக்கும் பார்க்கனும் பேசனும் என்று ஆசை இருக்கும் தானே இப்போ நீ ரெஸ்ட் எடு, நாங்க வந்த பிறகு சங்கரையும் கூட்டிட்டு நீ வாங்கி வந்த கிப்ட்டையும் எடுத்துட்டு போய்வாப்பா சரியா?" தாய் கூற அதிசயத்தைக் கண்டது போல் கண்களை விரித்து

"பரவாயில்லையேம்மா உங்க மகனுக்கும் ஆசை,விருப்பம் எல்லாமிருக்கு என்று உங்களுக்கு தெரியுதே ஆச்சரியமாயிருக்கு" என்றான்.

"என்னப்பா இப்படி சொல்லுற நான் உன் அம்மாப்பா. உன்னை புரிஞ்சுக்காம இருப்பேனா நான் உனக்கு நல்லதை மட்டும் தான் நினைப்பேன்ப்பா"

"அப்படியா அப்போ இதுவரை நான் கேட்ட இரண்டு நம்பர்களையும் இன்னும் ஏன் தரத் தோன்றவில்லை உங்களுக்கு. இதுதான் நீங்க என்னைப் புரிஞ்சிகிட்ட லட்சணமா?"

'வாசு அண்ணனுக்கு நம்பர் கொடுத்தும் இன்னும் அவர் பேசவில்லையா? அதுவும் நல்லதுதான் நாளையப் பொழுதைக் கடக்கும் வரை பேசாமலே இருக்கட்டும்' உள்ளூர நினைத்துக் கொண்டார் காயத்ரி

"என்ன அம்மா பதிலையே காணல்லை என்ன யோசிக்குறீங்க" மகன் கேட்க சிந்தனை கலைந்தவராய்

"ஐயோ அப்படி இல்லைடா. சரி சம்மந்தி, மருமகள் இரண்டு பேரோட நம்பரும் என் போன்லதான் இருக்கு போன் ரூம்ல இருக்கு கொண்டு வந்து தாரேன் அப்படி பார்க்காதேப்பா."

"நம்பர் தராம இருக்க என்ன ஒரு சாட்டு, சரி நீங்க ஒன்றும் தர வேண்டாம் என் மாமனார் என்கிட்ட பேசினாரு என் வருங்கால மனைவியோட நம்பரையும் எனக்கு கொடுத்துட்டாரு. ஆனாலும்மா நீங்க நினைத்தை சாதிச்சுட்டீங்க இல்லை. அவருக்கும் கடைசி நேரத்துலதான் நம்பரைக் கொடுத்திருக்கீங்க இல்லை. கிளவர் மம்மி வெரி கிளவர் லேடி நீங்க. சான்ஸே இல்லம்மா உங்களுக்கு நிகர் நீங்க மட்டுந்தான்."

"டேய் தம்பி இப்படி சொல்லாதடா ஒரு கொலைக் குற்றவாளி மாதிரி கதைச்சிட்டிருக்க, நீ மட்டும் ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருந்தா நான் ஏன்டா இந்த மாதிரி பண்ணப் போறேன். நான் உன் அம்மாடா உன்னுடைய நலத்துக்குத்தானேடா செய்வேன். தயவு செஞ்சு என்னைப் புரிஞ்சுக்கோடா. " என்று அவனிடம் கெஞ்சும் போதுதான் அவன் கூறியது மனதில் பட்டது

' வாசு அண்ணன் பேசிட்டாரா ஐயோ இவன் என்ன சொன்னானோ? அப்போ கல்யாணம்..... என் மாமனார் என்று சொன்னானில்லை அப்படியென்றால் மனசார சம்மதிச்சிட்டானா? இவன் என்ன நினைக்குறான் 'என்று அறிய அவன் முகத்தை ஏறிட 'என்ன' என்பது போல் புருவம் உயர்த்தியவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. அவன் முகத்தில் புன்னகையைப் பார்த்த பின் அப்பாடா என்று காயத்ரி ஆறுதலடைய அதற்கு அடுத்த வேட்டு வைத்தான்.

"சரி சரி உங்களைப் புரிஞ்சுக்கிறேன். ஆனால் என்னால பொண்ணு வீட்டுக்கு போக முடியாது" சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கூற

"ஏன் ஆதி ஏன் முடியாது" காயத்ரி பதட்டமாக

"இல்லைம்மா எனக்கு நைட் ஸூம்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு நான் இருந்து செய்ய வேண்டியது வரவேண்டிய கட்டாயம் என்றதால அந்த மீட்டிங்க இப்படி அரேன்ஞ் பண்ணிருக்கேன். கட்டாயம் அட்டன்ட் பண்ணி ஆகனும் ஸோ நைட் கஷ்டம்மா முடிஞ்சா கட்டாயம் போறேன்ம்மா. இல்லையென்றால் மொத்தமா நாளைக்கே பார்த்துக்கலாம்."

"அடப்பாவி அதுக்காக இப்படியா சீரியசா சொல்லுவ ஒரு நிமிசம் பயந்துட்டேன் போடா இப்பதான் நிம்மதியா இருக்கு இந்த கல்யாணம் முடியும் வரை எனக்கு நிம்மதியே இல்லை." அவர் பேச்சில் சிரித்தவன்

"ம்..... ஒரு வேலை பண்ணுங்கோம்மா நீங்களே இந்த கிப்டையும் கொடுத்திட்டு வந்திடுங்கோ. ஒரு வேளை போக முடியாம போச்சென்றால் கொடுக்க முடியல்லையே என்று நீங்க பீஃல் பண்ணுவீங்க அதுக்காகத்தான் சொல்லுறேன்.''

"நீ சொல்வதும் சரிதான் சரி நீ முதல்ல எனக்கு அந்த கிப்டைக் காட்டுப்பா" மகனும் அதனை தாயிடம் காட்ட அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.

"நயனிக்கு இது சூப்பரா இருக்கும். பரவாயில்லைப்பா உன் பொண்டாட்டிக்கு நல்லாத்தான் பார்த்து வாங்கியிருக்க. அது சரி நான் உன்னுடைய வாட்ஸ்அப்க்கு நிச்சய போட்டோ எல்லாம் அனுப்பியிருந்தேனே பார்த்தாயாப்பா?"

"இல்லைம்மா அங்கே வேலை கடும் பிஸி இரவு பகலா வேலை முடிச்சதாலதான் இன்றைக்காவது வர முடிஞ்சது."

"இப்போவாவது பாருடா என் மருமகள் நயனி சும்மா தேவதை மாதிரி இருக்கா. அவளை பார்த்த அப்படியே அசந்துடுவ. சரி சரி கிப்டைக் கொடு."
கிப்டை வாங்கிக் கொண்டவர் முடிந்தால் கட்டாயம் போக வேண்டும் என்ற உறுதியையும் வாங்கிக் கொண்டு அவனை ஓய்வெடுக்கக் கூறி அவ்விடத்திலிருந்து அகன்றார். கட்டிலுக்கு வந்தவன் வாட்ஸ்அப்பை இயக்கச் செய்து நாளை தன் பாதியாகப் போபவளின் புகைப்படத்தில் பார்வையைப் பதித்தான்.

'ம்... பார்க்க நல்லாத்தான் இருக்கா. அம்மா நம்புற மாதிரி நல்லவளா இருந்தால் சரிதான் இல்லை என்றால் அவ பாடு திண்டாட்டந்தான்.' தனக்குள் எண்ணியவனாய் மீண்டும் படத்தில் பார்வையை பதித்தவன் முகத்தில் சிந்தனை ரேகைகள், அவனுள் பல கேள்விகள் எழுந்தன. அவன் உதடுகள் 'பம்ளிமாஸ்' என மெல்ல முணுமுணுத்தன.

"ஏன் எனக்கு இந்த பொண்ணோட கண்களையும் கன்னத்தையும் பார்க்கும் போது என் குட்டி பம்ளிமாஸ் ஞாபகத்துக்கு வாரா. முதல்முதலா இவ போட்டோவைப் பார்த்த போதும் இப்படித்தானே தோணிச்சு. ம்.....என் பம்ளிமாஸ் இப்போ எப்படி இருப்பாளோ. அவளை ஒரு தடவையாலும் பார்க்கனும் போல இருக்கு. அவளும் இப்போ பெரிய பொண்ணாயிருப்பா இல்லை. ஏய் என் செல்ல பப்பு எங்கடி இருக்க. என்ன பண்ணிட்டிருக்க நான்தான் நடந்த குழப்பத்துல உன்னை மறந்துட்டேன். நீயும் உன்னோட இந்த செல்ல மாமாவை மறந்துட்டாயா? மறந்திருப்ப எத்தனை வருடங்கள் கடந்துவிட்டது.' நயனியின் புகைப்படத்தில் பார்வை பதிந்திருந்த போதும் மனதோடு தன் பம்ளிமாஸூடன் மானசீகமாகப் பேசிக் கொண்டிருந்த ஆதித்யவர்த்தன் மனது முழுக்க அந்த பம்ளிமாஸே நிறைந்திருக்க அப்படியே உறங்கிப் போனான்.

வளரும்.....

உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிர👇👇👇

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 06

காயத்ரியின் ஏற்பாட்டில் பியூட்டி பார்லரிலிருந்து வந்த பெண்ணின் கைவண்ணம் அவள் அழகுக்கே மேலும் அழகு சேர்க்க ஆகாய வண்ணத்தில் அழகிய வேலைப்பாடமைந்த லெஹங்காவுடன் பொருத்தமாய் ஆபரணங்களையும் அணிந்து அப்சரஸாகவே மின்னினாள் நயனதாரா. அவளைப் பார்த்த அவள் தோழிகளோ அசந்தே விட்டார்கள்.

"ஏய் நயனி, சூப்பரா இருக்கடி" தாரணி கூற

"காசு இருந்தால் எல்லாம் பண்ணலாம் தான். பெஸ்ட் பியூர்டிஸியனை அதுவும் கொழும்புல இருந்தே கொண்டு வந்திருக்காங்க உன் அத்தை. அவங்க போட்ட மேக்கப்ல சும்மா தேவதை மாதிரியில்ல இருக்க" அவளை வஞ்சப்புகழ்ச்சி செய்த தேவிகாவின் கண்களில் பொறாமை எட்டிப் பார்த்தது.

"இங்கப்பாரு தேவி, மேக்கப் போடாமலே அவ தேவதைதான் இப்போ இன்னும் கொஞ்சம் தூக்கலா அழக்கா இருக்கிறா என் செல்ல நயனி" என்றாள் ரதி.

"ஆ... அதைத்தான் நானும் சொல்லுறேன். என்னமோ நயனி அழகே இல்லை மேக்கப்ல மட்டும் தான் அழகா இருக்குறா என்று சொன்ன மாதிரி அலட்டிக்குற." தேவிகா கடுகடுக்க

"தேவி, என்ன இப்படி சொல்லுற உனக்கு நயனி மேலே பொறாமையா? நீ எப்பவும் இப்படித்தான் இல்லை. நல்லா கதைக்குறாப் போல மனசைக் கஷ்டப்படுத்துற. நீ கதைக்கும் போது நல்லாக் கதைக்குற மாதிரித்தான் இருக்கும் ஆனால் ஊன்றி கவனிச்சாத்தான் தெரியும் அதில் இருக்குற குத்தல்,நக்கல் எல்லாம். கொஞ்சம் வாய மூடிக்கிட்டிரு" ஏற்கனவே அவளுடன் கோபத்தில் இருந்த தாரணி பொரியத் தொடங்கினாள்.

அப்போது அங்கு வந்த வாசு மகளை அழைக்க மற்றையவர்கள் தாரணியை அமைதிப்படுத்த நயனியோ தந்தையிடம் சென்று என்னவென கேட்க

"என்னம்மா இன்னும் குழம்பிக்கிட்டுத் தான் இருக்கிறாயா? நயனிம்மா சம்மந்தியம்மா நம்பர் அனுப்பினாங்க. நான் மாப்பிள்ளைகிட்ட அப்போவே பேசிட்டேன் அவரு ஊருக்கும் வந்துட்டாரு. நீ பிஸியா இருந்தாய் நானும் கொஞ்சம் வேலையாக இருந்துட்டேன் அதான் உன்னோட சொல்ல முடியல்லம்மா. அவர் உன்னோட பேசுவாரென்று நினைக்கிறேன் அவருக்கு உன் நம்பரையும் கொடுத்திருக்கேன். அவர் அழைக்கும் போது புதிய நம்பர் என்று நினைத்து பதிலளிக்காம விட்டுடுவ அதனால நீயும் அவர் நம்பரை உன் போன்ல பதிஞ்சுடும்மா. இப்போவாவது அவருக்கு முழு சம்மதமென்று புரிஞ்சிடுச்சா இனி இதை நினைச்சு வருந்தாதே" என்று கூற அவளும் சரி எனத் தலையை ஆட்டினாள். ஆதியின் எண்களை அவளுக்கு சொல்ல அதனை தன் கைப்பேசியில் பதிவேற்றிக் கொண்டாள். மீண்டும் அவள் தன் தோழிகளிடம் செல்ல லொக் செய்யப்படாத போனில் தவறுதலாக அவள் கை பட்டு ஆதித்யாவுக்கு அழைப்பு சென்றது. ஆனால் அது நயனியின் கெட்ட நேரமோ இல்லை ஆதித்யாவின் நல்ல நேரமோ அவள் அதனை கவனிக்கவில்லை. நயனியின் எண்ணிலிருந்து அழைப்பு வரக் கண்டவன் அழைப்பை ஏற்று பல ஹலோக்கள் சொன்ன பொழுதும் அவள் புறமிருந்து எந்த பதிலுமில்லை. ஆனால் பல பேச்சுக் குரல்கள் கேட்க தவறுதலாக அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கட் செய்ய போனான் ஆதித்யா. அப்போது அவன் பெயர் அவர்கள் பேச்சில் அடிபட அப்படியே காதில் வைத்து கேட்க ஆரம்பித்தான்.

"நயனி, ஆதித்யாவோட போட்டோ பார்த்ததுமே கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாயா?" தேவிகா கேட்க இவள் அடங்க மாட்டாளா என்பது போல் பார்த்தாள் தாரணி.

"இல்லையே. ஒத்துகிட்டப் பிறகு தான் போட்டோவே பார்த்தேன்." முதன்முதலாய் கேட்ட நயனதாராவின் குரல் அவன் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தது.
'குரல் நல்லாத்தான் இருக்கு' தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"ஆதித்யாவும் நீயும் பேர்பக்ட் மெச்டி. ஜாடிக்கேத்த மூடிதான் போ" என தாரணி கூற

"உண்மைதான் அவரு ஹேண்ட்ஸ்ஸம் பாய் என்றால் நீ பியூட்டிஃபுல் கேர்ள் டி. சூப்பர் ஜோடி." ஆர்த்தியின் கூற்றை சைந்தவியும் ஆமோதிக்க

"உன் ஆளு ஆதித்யா கொடுத்து வச்சவருடி செம்மையா இருக்க" ராகவி கண்ணடிக்க

"ராகவி சொல்லுவது சரிதான்டி உண்மையிலே சூப்பரா இருக்க. நான் மட்டும் ஆம்பிளையா இருந்தா உன்னைத்தான் கட்டிக்குவேன் தெரியுமா? அப்படி இருக்கடி." என அவளை அணைத்துக் கொண்டாள் வானதி.

"இங்கேயும் சேம் ஃபீலிங் டி" ரதியும் தன் பங்குக்கு மறுபுறம் அணைக்க

"போதும் நிறுத்தங்கடி ரொம்பத்தான் ஓட்டுறீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு." அழகாக வெட்கப்பட்டாள் நம் நாயகி. இவர்களின் பேச்சை சிறு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தவன் மனத்திரையிலும் அவள் வெட்கப்படுவது போல் ஒரு பிம்பம் தோன்றி மறைய அவன் முகத்தில் புன்னகை மேலும் விரிந்தது.

தோழிகளின் பேச்சில் வெட்கப்பட்ட நயனியைப் பார்க்கப் பார்க்க தேவிகாவிற்கு உள்ளம் கொதிக்கத் தொடங்கியது. மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தாள்.

"ஏய், அவரைவிட இவள்தான் ரொம்ப கொடுத்து வச்சவ. பார்த்த இல்ல போட்டோவிலே ரொம்ப ஹேன்ட்ஸம்மா இருக்காரு நேருல எப்படி இருப்பாரு.
அதை விடு அழகு இல்லை என்றாலும் எக்கச்சக்க சொத்து இருக்கு. கை நிறைய காசு, கார், பங்களா வீடு, ஹைபை வாழ்க்கை. அழகா முக்கியம் காசுதான் முக்கியமில்ல நயனி. அதுதான் நீ ஆளப் பார்க்காமலே ஓகே சொல்லிட்டாயாக்கும். ஆனால் உன் அதிஷ்டம் ஆளும் சூப்பரா இருக்காரு காசும் எக்கச்சக்கமா வச்சிருக்காரு. நீ அதிஷ்டக்காரிதான் போ." என்ற தேவிகாவின் பொறாமை கொண்ட உள்ளம் நயனியை வம்புக்கிழுத்தது. அவ்வளவு நேரமும் சிறு புன்னகையுடன் கேட்டிருந்தவன் பணம் பற்றி வந்ததுமே முகத்தில் லேசாக கோபக் கனல் எரியத் தொடங்கியது. ஆனாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு நயனியின் பதிலுக்காக காத்திருந்தான். நயனி தேவிகாவின் மனதை புரிந்து கொண்டாள். 'தாரணி சொன்னது எவ்வளவு உண்மை. அவ வேலையை ஆரம்பிச்சுட்டா இவளால் தான் இவ்வளவு நாளும் நிம்மதியில்லாம நானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக்கிட்டு இருந்தேன். இப்பவும் குழப்புறதுகென்றே கதைச்சிட்டிருக்கா இப்படியே விட்டால் சரி வராது இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும். இவளெல்லாம் மற்றவங்க மனசைக் கஷ்டப்படுத்தி குளிர் காயுற ரகம். இவளோட கதைக்கு நான் ரியக்ட் பண்ணினால் நிச்சயமா இவ சந்தோசப்படுவா அதுக்கு விடக்கூடாது. அவ பாணியிலே போய்த்தான் அவளை அடக்கனும்' தனக்குள்ளே சிந்தித்தவள் ஏதோ பேச வாயைத் திறந்த ரதியையும் தாரணியையும் அடக்கி விட்டு

"இல்லையா பின்னே அழகு யாருக்கு வேணும் தேவி. நீ சொல்லுறது நூறு வீதம் உண்மை. காசு தான் முக்கியமில்லையா. கார் பங்களா யாருக்கு கசக்கும் சொல்லு. விரும்பின ட்ரெஸ், நகை, அப்பப்போ ஸோப்பிங். நீ சொன்ன மாதிரி ஹை...பை... வாழ்க்கை. இதுக்கெல்லாம் காசுதானே வேணும். ஸோ காசுதான் எல்லாமே சரியா தேவி என்னடி நீங்கெல்லாம் என்ன சொல்லுறீங்க?" அவன் தலையில் நெருப்பைக் கொட்டுகிறோம் என்று தெரியாமலே அவள் மற்றவர்களை கேட்க அவர்களும் நயனியின் எண்ணம் புரிந்தவர்களாய் தேவியை கடுப்பேற்ற

"ஓம்டி நீ சொன்னா கரெக்ட் தான். காசுதான் காசு மட்டுந்தான் முக்கியம் இந்த அழகெல்லாம் எந்த மூலைக்கு.
காசு பணம் துட்டு் மணி மணி......."
நயனியின் பதிலிலும், தோழிகளின் பேச்சிலும் கோரஸாக வேறு பாடிக் கடுப்பேற்ற தான் நினைத்தது நடக்காமல் தேவியின் முகம் சொத்தென்று ஆகிவிட்டது. கேட்டுக் கொண்டிருந்தவனோ கொதி நிலைக்குப் போனான். இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நயனின் அக்கா மகன் ஆகாஷ் கார் என்ற வார்த்தையில் அவளின் பக்கத்தில் வந்தவன்

"சித்தி, அங்கிள்ட்ட நிறைய்ய காரிருக்கா? எத்தனை கார்? எனக்கு வாங்கி தருவீங்களா? அங்கிள்ட்ட பிக் ஹவுஸூமிருக்கா?" என்று கேள்விகளை அடுக்க அவனை கைவளைவில் வைத்தவள்

"என் ஆகாஷ் குட்டிக்கு இல்லாத காரா? அங்கிள்ட்ட நிறைய்ய காரிருக்கு எல்லாமே என் ஆகாஷ் கண்ணாக்குத்தான். அங்கிள்ட்ட சொல்லி எல்லாத்தையும் நம்ம வாங்கிடலாம். பிக் ஹவுஸூமிருக்கு எல்லாமே என் குட்டிக்குத் தான் என்ன ஓகேவா?" என கேட்க

"அப்போ சித்தி உங்களுக்கு?"
அவனின் கேள்வியில் அவன் நெற்றியில் முத்தமிட்டவள்

"சித்திக்கும் ஆகாஷூக்கும் தான்டா"

"அப்போ அம்மா,அப்பாக்கு? பவிப் பாப்பாக்கு சித்தும்மாக்கு? உதய் சித்திக்கு பாட்டி தாத்தாக்கெல்லாம் இல்லையா சித்தி?

"பெரிய மனுஷா அங்கிள்ல எல்லாமே நம்ம எல்லோருக்கும்தான்டா போதுமா? விட்டுடா முடியல்ல" என கை கூப்ப கிளுக்கிச் சிரித்தவன் அவளுக்கு ஒரு முத்தத்தை பதித்து விட்டு ஓடினான். இங்கே கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யாவோ 'ஆமாம்டி நான் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கேன் நீ் வந்து உன் குடும்பத்துக்கு அப்படியே வாரி வழங்கத்தான் பாரு. பண பைத்தியங்கள் எல்லாமே ஒன்றுதான் காசு மட்டும் தான் இந்த மேனாமினிக்கிகளுக்கு முக்கியம்
சே இந்த அம்மா போயும் போயும் பணப்பிசாசத்தான் எனக்கு பார்க்கனுமா? அம்மாவை எப்படி நம்பினேன் ஏன் இப்படி பண்ணினாங்க. ஹா... இந்த கல்யாணம் நடந்தாத்தானே' பற்களை நறநறவென கடித்தவன் மீண்டும் பேச்சுக்கள் தொடர அதைக் கவனிக்கத் தொடங்கினான்.

"நான் சொன்னதுதான் உண்மையில்லையா? நயனி உன்கிட்ட இதை எதிர்பார்க்கல்லடி. எப்படி அப்பாவி மாதிரி இருப்ப என்றைக்குமே நீ காசை ஒரு பொருட்டா மதிக்க மாட்டாய். குணம் மட்டும் தான் முக்கியம் என்று நினைப்ப அதனாலேயே உன்னை எல்லோருக்குமே பிடிக்கும் ஆனால் பாரு இப்போ நீயும்.... காசு மனிஷனை மாத்திடுமில்ல பணக்காரியா வாழப்போகிறாய் என்ற எண்ணமே உன்னையும் மாத்திடுச்சு." தேவிகா மீண்டும் கூற மற்றவர்கள் கடுப்பானார்கள். அவர்களை பார்வையால் அடக்கிவிட்டு தேவிகாவின் புறம் திரும்பிய நயனி

"ஓம் மாத்திடும் காசு தானே இங்க எல்லாமே. மாறுவதுல தப்பில்லையே. இப்போ நீ என்ன தெரிஞ்சுக்கனும்? என்று நினைக்குற" நேரடியாகவே நயனி கேட்க

"ஏன் நயனி நீ இப்படி கதைக்குறாய், இதெல்லாம் ஆதிக்குத் தெரிந்தால் என்ன செய்வ. உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவானா? உன் காசுக்காகத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டேன் என்று ஆதிக்கிட்ட நேரடியா உன்னால சொல்ல முடியுமா? இல்லை உன் அழகை வச்சு அவனை மயக்கிடலாம் என்று நினைக்குறாயா? சொல்லு நயனி, மற்றவர்கள் மாதிரி உனக்கும் காசுதான் முக்கியம் என்றும் ஒத்துக்கோ என்ன?" தேவியின் கேள்வியில் அவளை நிமிர்ந்து பார்த்த நயனி எழுந்து நின்று மார்புக்குக்கு குறுக்கே இரு கைகளையும் கட்டிக் கொண்டாள் அவளின் தோரணை தேவியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. நயனதாராவிற்கு அவ்வளவு சுலபமாக கோபம் வராது வந்து விட்டால் அவள் தோரணை அப்படியே மாறிவிடும்.

"உன் பிரச்சனை என்ன? காசுதான் முக்கியமென்று ஏற்கனவே உன்கிட்ட சொல்லியாச்சே. அத நேரடியா சொல்லனுமா? ஓகே, அதுக்குத்தான் இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். இல்லாட்டி என் வீட்டை விட்டு இவ்வளவு தூரம் போய் கல்யாணம் கட்டிக்கிட்டு இருக்க எனக்கென்ன தலையெழுத்தா? இந்தக் கல்யாணம் காசுக்காக மட்டுந்தான் வேற எதுக்காகவும் இல்லை. இப்ப உனக்குத் திருப்தியா என் வாயால இப்படிச் சொல்லனுமென்று நினைச்சுத் தானே நல்ல நாள் அதுவுமா விழா நேரத்துல போய் மனசை நோகடிக்கிற மாதிரி இவ்வளவு கதைச்சிக்கிட்டு இருக்க இப்போ நானே ஒத்துகிட்டேன். உனக்குப் போதுமா? இல்லை மைக் போட்டு ஊருக்கே சொல்லனுமா? என்ன செய்யனும் தேவி சொல்லு அத்தோட அவருக்கிட்ட என்ன கதைக்கனும் எப்படி நடந்துக்கனும் அழகைக் காட்டனுமா இல்லையா? என்று எனக்குத் தெரியும் அதை நான் பார்த்துக்கிறேன். அதைப்பற்றி நீ கவலைப்படாதேம்மா. என்னம்மா சொன்னதெல்லாம் விளங்கிட்டுதோ எனி டவுட்? " தேவியை லெப்ட், ரைட் வாங்கிய நயனியை பார்த்து மற்றையவர்கள் சத்தமாகச் சிரித்தனர். நயனி கூறிய வார்த்தைகளில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஆதித்யாவோ கைப்பேசியை அணைத்து கட்டிலில் விசிறி அடித்தான்.

அப்போது அவளை அழைத்துப் போக அறையில் நுழைந்த நயனியின் சகோதரிகள் சித்ரதாராவும் அமுததாராவும் தங்கையின் அழகில் மெய் மறந்தனர்.

"நயனி அழகா இருக்கடா" சித்ரதாரா கூற

"ஊர் கண்ணெல்லாம் இன்றைக்கு உன் மேலதான் விழப் போகுது. கட்டாயம் சுத்திப் போடனும்" அமுததாரா அவள் முகத்தை வழித்து நெட்டி முறித்து கொண்டாள்.

"ஓம் அக்கா கண்டிப்பா எங்க நயனிக்கு சுத்திப் போட்டிடுங்க. ஊர் கண்ணென்ன எங்க ஆசைக் கண்ணு ஏன் உங்க பாசக் கண்ணு கூட அவ மேலதான் விழுந்திருக்கும். இங்க நிறைய பொறாமைக் கண்ணுங்களும் இருக்கு. பிறகு நாளைக்கு மாப்பிள்ள சேரோட காதல் கண்ணுமில்ல சேர்ந்து விழும் அப்போ கண்டிப்பா சுத்திப் போடத்தான் வேணும்." என அவள் தோழிகள் கூற வெட்கத்தில் சிவந்தாள் பெண். அதனையும் அவர்கள் கேலி செய்தனர்.
பொறாமைக் கண் என தன்னைத்தான் கூறுகிறார்கள் என புரிந்து கொண்ட தேவி இன்னும் கடுப்பாகி அவ்விடத்தை விட்டு வெளியேற எத்தனிக்கையில் அவள் கைகளை பிடித்துக் கொண்ட நயனி

"தேவி நில்லு எங்க போறாய்? நான் உன்னை நோகடிக்குறதுக்காக கதைக்கல்ல. நீ நல்லதா கதைக்குற மாதிரி கதைச்சு மத்தவங்க மனசை நோகடிச்சிட்டு இருக்க. இந்த குணத்தை மாத்திக்கோ அது உனக்கும் நல்லதில்லை மற்றவங்களுக்கும் நல்லதில்லை. இந்த பழக்கம் உன் வாழ்க்கையை அழிச்சிடும்மா. நீ என்னோட ப்ரண்டு நீ நல்லாயிருக்கனும் என்றுதான் நான் நினைப்பேன். அழிஞ்சு போக நினைக்க மாட்டேன். உனக்குப் புரியனும் என்றதுக்குத்தான் அந்த மாதிரி கதைச்சேன். மற்றப்படி நீ சொன்னது உண்மைதான் நான் என்றைக்குமே காசுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் அது என் வாழ் நாளுக்கும் நடக்காது. பணக்காரங்க என்று இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கல்ல என் அப்பாம்மாக்காக ஒத்துக்கிட்டேன். அவங்க பார்த்த வரன் என்றதுக்காக ஒத்துக்கிட்டேன். அத்தோட அவரோட போட்டோவைப் பார்த்த பிறகு மனசார எனக்காகவும் ஒத்துக்கிட்டேன். மற்றப்படி எந்த தப்பான எண்ணமும் எனக்கில்லை. நீ செய்ற தப்பு உனக்கு விளங்கனும் என்றதுக்காகத் தான் அந்த மாதிரி கதைச்சேன். உன் மனசை புண்படுத்தியதுக்கு தயவு செய்து என்னை மன்னிச்சுக்கோ." நயனி கூற

"நயனி நிறுத்து ஏன் நீ இவ்வளவு விளக்கம் கொடுக்குற போதாக்குறைக்கு மன்னிப்பு வேற கேற்குற இவளுக்கு எங்க அதெல்லாம் விளங்கப் போகுது எல்லாம் வேஸ்ட்." தாரணி கோபம் கொள்ள

"என்னை மன்னிச்சிடு நயனி ப்ளீஸ் டி. ஐம் சோரி உன் மனசும் குணமும் தெரிஞ்சே நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது அதுவும் ஃபங்ஸனை வேறு வச்சுக்கிட்டு. உனக்கு கிடைச்ச வாழ்க்கையைப் பார்த்து பொறாமையில கதைச்சுட்டேன் என்று நினைக்குறேன். என்னை மன்னிச்சுக்கோடி நயனி." என்றவாறே கண்களில் நீர் வழிய அவளை அணைத்துக் கொண்டாள் தேவிகா. நயனியும் அவளை அணைத்துக் கொண்டு சமாதானப்படுத்த

"இங்க என்னதான் நடக்குது. மன்னிப்பெல்லாம் கேட்டுக்குறீங்க என்னாச்சு ஒன்றும் விளங்கல்லை." சித்ரா கேட்க

"ப்ரண்ட்ஸ் எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் அது உங்களுக்கு விளங்க வேண்டாம் ஓகேக்கா." நயனியின் பதிலில் சித்ரா அவளை முறைக்க

"சரி, சரி அங்க மாப்பிள்ள வீட்டிலயிருந்து வந்துட்டாங்க. நயனிய அம்மா அழைச்சிட்டு வர சொன்னாங்க இதெல்லாம் பிறகு கதைச்சுக்கலாம் இப்போ வாங்க போகலாம்." என்று அமுததாரா அழைக்க

தோழிகள் புடைசூழ தாரகை கூட்டத்தின் நடுவே வெண்ணிலவாய் வந்த நயனதாராவைக் கண்ட ரஞ்சனியின் கண்கள் லேசாக கலங்கியது. மகளை லேசாக அணைத்தவர் தன் அழகு மகளின் குழப்பம் விலகி அவள் வாழ்வு நிறைவாக அமைய கடவுளிடம் மானசீகமாக வேண்டிக் கொண்டார். பூக்களால் அலங்கரித்திருந்த ஊஞ்சலில் அவளை அமர வைக்க காயத்ரி அவளுக்கு மஞ்சள், சந்தனம் பூசி குங்குமம் வைத்து விழாவினை ஆரம்பிக்க தனலட்சுமியும் தன் பங்குக்கு மஞ்சள் சந்தனம் வைத்தவர் கற்கள் பதித்த தங்க வளையல்களை அவள் கைகளில் அணிவித்தார். மேலும் சில சுமங்கலிப் பெண்களும் நலங்கு வைக்க காயத்ரி மாப்பிள்ளையின் சகோதரிகளையும், உறவிலுள்ள சகோதரி முறையான பெண்களையும் அழைக்க அவர்கள் எல்லோரும் நயனாவிற்கு மஞ்சள், குங்குமம் வைத்தனர். பிரத்யேகமாக அழைக்கப்பட்டிருந்த மெஹந்தி டிசைனர் மணப்பெண்ணுக்கு மருதாணியை அவள் கைகளில் அழகாக வைக்கத் தொடங்கினார் உறவிலுள்ள இளம் பெண்கள் பாட்டும் நடனமுமாய் விழாவை மெருகேற்ற களை கட்டியது மெஹந்தி விழா.

நிச்சயதார்த்தத்துக்கு வராத தன் மற்ற இரு பெண்களையும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி விட்டு நயனிக்கு அருகே அமர்ந்து கொண்டார் காயத்ரி. அவளிடம் ஒரு பெட்டியை நீட்டியவர் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்

"இது என் மருமகளுக்கு என் மகனோட முதல் பரிசு" என்றார். அவரை நிமிர்ந்து பார்த்தாள் நயனி அவள் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்

"ஆதித்யன் வந்துட்டான்மா இப்போ கொஞ்சம் முன்னாடி தான் வந்தான். உனக்காக அவனே பார்த்து வாங்கி வந்தான். நியாயமா இதை அவன்தான் உன்கிட்ட கொடுத்திருக்கனும் ஆனால், அவனுக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கும்மா அவன் வாரது சந்தேகம் அதனாலதான் நான் கொண்டு வந்தேன்." என்று கூற அந்தக் கணம் அவன் சம்மதத்தினை வாய்மொழியாகக் கேட்டது போல் தோன்ற, அலைக்கழித்த அவள் மனது ஆறுதலடைந்தது.

இங்கே இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யவர்த்தனோ தலையிலே தணலைக் கொட்டியது போல் கோபத்தின் உச்சியிலிருந்தான்.
'சே இவளைப் போய் என் செல்ல பம்ளிமாஸோட ஒப்பிட்டேனே, என்னைச் சொல்லனும். காசுப்பைத்தியம் இவளெங்கே என் பப்பு எங்க சே' அதுதான் அவன் கோபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மணப்பெண்ணிடம் பேசி எப்படியாவது திருமணத்தை நிறுத்திடத் துடித்தவனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்த கதையாய் அந்த வாய்ப்பை நயனதாராவே அவனுக்குக் கொடுத்தாள். அவனும் அதனை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தான்.

"அம்மா........" வீடே அதிரும்படி கத்த பதறி ஓடி வந்தார் அந்த வீட்டு வேலையாள் கனகா. அவன் முன் வந்தவர்

"தம்பி அம்மா வீட்டுல இல்லைங்க. பொண்ணு வீட்டுக்குப் போயிருக்காங்க. அங்க மெஹந்தி விழா நடக்குதில்ல.

'ரொம்ப முக்கியம் அந்த காசுப்பேய்க்கு.' என்று வாய்க்குள் முணு முணுத்தவன்

"சரி நீங்க போங்க அம்மா வந்ததும் ஒரு நிமிஷம் கூட தாமதிக்காம உடனே என் ரூமுக்கு வரச் சொல்லுங்க."

"சரிங்க தம்பி"

அவர் சென்றதும் கூண்டுப் புலி போல் தன் அறையில் நடை பயின்றான். அவன் தலைக்குள் பல சிந்தனைகள், இறுதியாக வும் உறுதியாகவும் ஒரு முடிவை எடுத்தவன் அதனை செயற்படுத்த தன் தாயின் வருகைக்காக வெறி கொண்ட வேங்கை போல் காத்திருந்தான் ஆதித்யவர்த்தன்.

விழா முடிந்து அனைவரும் சென்ற பின் உடையை மாற்றி குளித்து விட்டு இரவு உடைக்கு வந்தவள் தாயின் கட்டாயத்தால் இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு தூங்கப் போவதாகக் கூறி தன் அறைக்குள் நுழைந்தாள் மனதோ முற்றிலுமாக குழப்பங்கள் நீங்கி தெளிந்திருந்தது. அதன் காரணத்தை எண்ணியவள் உதட்டோரம் மெல்லிய புன்னகை மலர மாமியார் கொடுத்த தன் மணவாளனின் முதல் பரிசை திறந்து பார்த்தாள். அதில் ஒற்றை அடுக்காய் வெண் கற்கள் பதித்த அழகான ஆரமும் அதனுடன் காதணியும் மிளிர்ந்தன. அதனை தன் கழுத்தில் அணிந்து கொள்ள அது அவளுக்கு கனகச்சிதமாய் பொருந்தியிருந்தது. பிடிக்காத ஒருவனால் இவ்வளவு பொருத்தமாக ஒன்றை வாங்க முடியுமா? நிச்சயமாக முடியாது. தன்னை எந்த அளவு அவனுக்குப் பிடித்திருக்கிறது என்பதை அவன் பரிசில் உணர்ந்தவள் சிறகுகள் இல்லாமல் வானத்தில் பறந்தாள். மகிழ்வுடனே நாளைய கனவுகளுடன் துயில் கொள்ள ஆரம்பித்தாள் நயனதாரா.

நயனாவின் கனவு நனவாகுமா? இல்லை ஆதித்யவர்த்தன் அவன் எடுத்த முடிவால் அவள் கனவை கலைத்திடுவானா?

வளரும்.....

கருத்துக்களை பதிவிட

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்

நிலவு - 07

அப்போதுதான் வீட்டினுள் நுழைந்தார் காயத்ரி அவரிடம் வந்த கனகாவோ

"அம்மா, நீங்க வந்ததும் தம்பி உங்களை உடனே ரூமுக்கு வரச்சொன்னார்." பதட்டமாகக் கூறிய கனகாவிடம்

"என்ன விசயம் கனகாக்கா இவ்வளவு பதட்டப்படுறீங்க என்னாச்சு?"

"தெரியல்லை அம்மா ஆனால் தம்பி கடும் கோபமா இருக்குற மாதிரி இருந்துச்சு. உடனே போங்கம்மா" கனகா சொல்லி முடிக்க இப்போது காயத்ரியையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. 'இப்போ என்ன பிரச்சனையோ' எண்ணியவராய் அவன் அறையினுள் நுழைய அதைக் கூட கவனிக்காது குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் அவர் மைந்தன். அவன் முகமோ கற்பாறையாக இறுகியிருக்க அதைப் பார்த்த தாயின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

வீட்டினுள் நுழைந்த காயத்ரியிடம் கனகா சிறு பதட்டத்துடன் எதையோ பேச காயத்ரியும் பதட்டமாகி ஆதித்யனின் அறையை நோக்கிப் போவதை ஓர் உருவம் பார்த்துக் கொண்டிருந்தது. காயத்ரியின் பதட்டம் அதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 'இவ என்னை என்ன பாடுபடுத்திருப்பா. ஏதோ பிரச்சனை போல இருக்கே அதுவும் ஆதியால சூப்பர். அம்மா மகன் பிரச்சனையில நாம குளிர் காஞ்சிடனும். இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது. முதல்ல என்ன விசயம் என்பதைப் பார்ப்போம்' எண்ணியவாறு காயத்ரியை பின் தொடர்ந்து வந்த அந்த உருவம் யாருமறியாமல் கதவருகே நின்று ஒட்டுக் கேட்கத் தொடங்கியது.

"ஆதி என்னை வரச் சொன்னாயாம் கனகாக்கா சொன்னாங்க என்ன விசயம்ப்பா?"

"உடனே இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்கோ." அவர் தலையில் குண்டைத் தூக்கிப் போட வெளியே கேட்டுக் கொண்டிருந்த உருவமோ 'அட சக்கை விசயம் அப்படிப் போகுதோ' தனக்குள் சந்தோசப்பட

"என்ன?" அதிர்ந்து கூவினார் காயத்ரி

"தமிழ்ல தானே சொல்லுறேன். இந்த கல்யாணம் நடக்காது உடனே எல்லாத்தையும் நிறுத்துங்கோ" திட்டமாக கூறியவனின் முகத்திற்கு நேரே வந்து

"என்னடா இப்படி சொல்லிட்டிருக்கே இப்படி ஏமாத்திட்டாயேடா? உன்கிட்ட கேட்டுத்தானே எல்லா ஏற்பாடும் பண்ணினேன். இப்படி கடைசி நேரத்துல கழுத்தறுக்கத்தான் நான் சொல்லும் போதெல்லாம் தலையைத் தலையை ஆட்டினாயா நானும் நம்பிட்டேனே? பொண்ணு வீட்டுல அவ்வளவு தரம் கேட்டாங்களே உங்க மகனுக்கு விருப்பமா உங்களை நம்பலாமா? என்று நானும் அவங்களுக்கு வாக்குக் கொடுத்தேனே. நூறு வீதம் என்னை நம்பலாமென்று. இப்போது நான் என்ன செய்வேன் கடவுளே. கொடுத்த வாக்கை காப்பாத்த முடியாத பாவி ஆகப் போகிறேனே. எல்லோரும் என்னைப் பார்த்து கேள்வி கேட்பாங்களே எவ்வளவு பெரிய அவமானம்" இடையில் பல தரம் குறுக்கிட்ட மகனையும் கவனிக்காது புலம்பிக் கொண்டிருந்தார் காயத்ரி. அவராகவே புலம்பலை நிறுத்துவார் எனப் பொறுத்துப் பார்த்தவன் முடியாமல் போக 'அம்மா' என்று ஒரு அதட்டல் போட்டான் காயத்ரியின் வாய் கப்பென்று மூடிக் கொண்டது.

"நான் கழுத்தறுத்தேனா? நீங்க நல்லதுதான் செய்வீங்க என்று நினைச்சேன் என்னை நீங்க ஏமாத்திட்டீங்க. நியாயமா நான்தான் புலம்பனும். முதல்ல நான் என்ன சொல்ல வாரேன் என்று கேளுங்கோ அதுக்குப் பிறகு நான் எடுத்த முடிவு சரியா? தவறா? என்றும் சொல்லுங்கோ. நீங்க நினைக்குற மாதிரி காத்திருந்து கடைசி நேரத்துல கழுத்தறுக்கல்லை. உங்களுக்கே தெரியும் உங்களாலதான் நான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் என்று. சரி அதைவிடுங்க நான் இந்த முடிவை எடுக்க ஒரு முக்கிய காரணம் இருக்கு."

"என்ன காரணம் என்று தெரிஞ்சுக்கலாமா?" காயத்ரி கேட்க அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை அந்த உருவமும் காதை தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது.

"அம்மா நீங்க பார்த்த பொண்ணு சரியில்லை. சரியான காசுப்பைத்தியம் நான்தான் சொன்னேனே எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. நான் கல்யாணம் பண்ணாததுக்கு ஒரு காரணம் சொன்னேன் ஞாபகமிருக்கா? இந்த பொம்பளைங்க எல்லாம் காசைத்தான் முக்கியமா நினைப்பாங்க மனசையோ மனிஷனையோ இல்லை என்று ஆனால் நீங்க உங்களோட ஒப்பிட்டு அதை இதைப் பேசி என்னைக் கரைச்சுட்டையல் நானும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். நிச்சயமா நீங்க சொன்ன மாதிரித்தான் பொண்ணு பார்ப்பீங்க என்று தப்பா கணிச்சுட்டேன்ம்மா. ஆனால் இதுல உங்க தவறும் எதுவுமில்லை. ஏனென்றால் அவ அவளோட அழுக்கு மனசைக் காட்டியிருக்க மாட்டா. நாடகக்காரி. காசுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குற அந்த மாதிரி ஒரு பொண்ணு எனக்கு மனைவியா முக்கியமா உங்களுக்கு மருமகளா வேண்டவே வேண்டாம். அதனாலதான் சொல்லுறேன் இப்போ சொல்லுங்கோ என் முடிவு தவறா? உடனே இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்கோ."

"முடியாதப்பா இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது அதோட உன் முடிவும் தவறுதான். எடுத்தோம் கவுத்தோம் என்று முடிவெடுக்கிறாய் முதல்ல என்ன நடந்ததென்று முழுசாச் சொல்லு அதுக்கு பிறகு உன் முடிவு சரியா பிழையா என்று சொல்லுகிறேன்." தாய் கூற அன்று மாலையில் நடந்த அனைத்து விடயங்களையும் ஒப்புவித்தான் மகன். கதவுக்கு வெளியே கேட்டுக் கொண்டிருந்த உருவமோ மகிழ்ச்சியின் உச்சத்திலிருக்க ஆதி கூறியதைக் கேட்ட காயத்ரியோ.

"நீ எதையோ தப்பா விளங்கியிருக்கிறாய். நிச்சயமா நயனி காசை மட்டும் மதிக்கிற பொண்ணு இல்லை. மனிஷனை மட்டுமில்லை மனசையும் மதிக்கிற பண்பான குடும்பத்துல வளர்ந்தவ. நீ நினைக்கிற மாதிரி நிச்சயமா தப்பானவ இல்லை அப்படிபட்ட தப்பான பொண்ணை உனக்கு இந்த அம்மா பார்ப்பேனா? என்னை விடு உன் மேல உயிரே வச்சிருக்குற பாட்டி பார்ப்பாங்களா? அவங்க உனக்காக தேர்ந்தெடுத்த பொண்ணுதான் நயனி. அவங்க தெரிவு தப்பா இருக்குமா புரிஞ்சுக்கோ"

"அம்மா, இதை எனக்கு வேற யாராவது சொல்லிருந்தா மீள் பரிசீலனை செய்யலாம் ஆனால் கேட்டது என் காதுகள் அல்லவா?"

"காதுகள் என்ன நம் கண்களே சில நேரங்களில் பொய் சொல்லும். காட்சிப்பிழை என்று சொல்லுவாங்க தெரியுமாப்பா நாம் பார்த்தது ஒன்றாக இருக்கும் ஆனால் நடந்தது வேறாக இருக்கும் அதுபோலத்தான். நீதான், உன் காதுகளால் தான் கேட்டாய் ஆனால் அதன் பின்னணி வேறாகவும் இருக்கலாம் இல்லையா? அதுக்காகத்தான் சொல்லுறேன் அவசரப்பட்டு தப்பான ஒரு முடிவெடுக்காதே. நாளைக்கு விடிந்தால் உன் கல்யாணம் நிச்சயமாக நடக்கும். அதுல எது வித மாற்றமுமில்லை மணமகனாய் தயாராக இரு. இது வேண்டுகோள் இல்லை என் கட்டளை. என்ன புரிஞ்சதா?" வெளியே நின்ற உருவமோ ' ஏய் காயத்ரி அவன்தான் முடியாதென்று சொல்லுறானில்லை பிறகு ஏன் இவ்வளவு கட்டாயப்படுத்துற' தனக்குள் பேசிக் கொண்டது. மகனிடம் கறாராகக் கூறிய காயத்ரி அறையை விட்டு வெளியேற எத்தனிக்கையில்

"அம்மா, அவ்வளவு சொல்லியும் உங்க முடிவுல பிடிவாதமாக இருக்கீங்க இல்லையா?" மகனும் கோபமாக கேட்க

"ஒரு பெண்ணோட வாழ்க்கை சீரழிய என் மகன் காரணமாக இருக்கக் கூடாது அவ்வளவுதான்" காயத்ரியிடமிருந்து உறுதியாக வந்தது பதில்

"மணமேடைக்கு நான் வரவில்லை என்றால்?" அவனும் பிடிவாதமாக நிற்க

"நீ வருவ கட்டாயம் வருவ. நீ கல்யாணமே பண்ணிக்கமாட்டேன் என்று சொன்னதுக்கு ஒரு விசயம் சொன்னேன் ஞாபகமிருக்கா? அது நடக்கும். அப்போ நீ வந்துதானே ஆகனும்." பிடிவாதத்தில் நான் உன் தாய் என்று காட்டினார்.

"அம்மா என்ன கதை கதைக்குறீங்க. மிரட்டுறீங்களா?"

"இல்லைப்பா, நடக்கப் போற விசயத்தைச் சொல்லுறேன். அப்போ கட்டாயம் வந்துதானே ஆகனும். உன்னைத் தாலி கட்டுற கடைசி நிமிஷம் வரை எதிர்பார்ப்பேன். அப்படியில்லை என்றால்.... சரி இதுக்கு மேல உன் விருப்பம்"

'என்ன காயத்ரி என் ஆதியை எதையோ சொல்லி மிரட்டுகிறாயா? மிரட்டு உன்னால முடிஞ்சளவு மிரட்டு ஆனால் நாளைக்கு இந்தக் கல்யாணம் நடக்காது இந்த கல்யாணத்தை ஆதி நிறுத்துறானோ இல்லையோ நான் கட்டாயமாக நிறுத்திடுவேன். ஆதி சொன்ன கதையே போதுமே அதை வச்சு எனக்குச் சாதகமா எப்படி காயை நகர்த்தலாம் என்று நான் பார்த்துக்கிறேன். கல்யாணத்தை நிறுத்த இவ்வளவு நாளும் எத்தனை வழிகளை யோசிச்சும் எல்லாத்தையும் நீதான் காயத்ரி முறியடிச்ச எதுவும் நடக்காம போச்சு. இனி எப்படி இதை நிறுத்தனுமென்று எனக்குத் தெரியும். இந்தக் கல்யாணம் நடக்கப் போறதில்லை நான் இருக்குற வரை அதை நடக்க விடவும் மாட்டேன். பார்த்துடலாம் காயத்ரி நீயா நானா என்று.' தனக்குள் சபதமெடுத்துக் கொண்ட உருவம் பற்களை நறநறவென கடித்தது.

தாயின் கூற்றில் அதிர்ந்தவன் அவர் முகத்தை ஏறிட அதில் தெரிந்த உறுதியைக் கண்டு ஒருகணம் திடுக்கிட்டான் மைந்தன். சிறிது நேரம் சிந்தித்தவன் தன்னை சமநிலைப் படுத்த கண்களை மூடித் திறந்தான் பின் தாயை நேராக நோக்கி

"சரி அம்மா சரி நீங்க சொல்லுற மாதிரி அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்குறேன். இனிமேல் இப்படி எல்லாம் கதைக்கக் கூடாது." கடைசியில் தாயின் பிடிவாதமே வென்றது.

'பாவி கடைசியில ஆதியை ஒத்துக்க வச்சிட்ட இல்லை. ஆனால் நான் விடமாட்டேன். ம்..... சரி நீ சொன்ன மாதிரி இந்தக் கல்யாணம் நடக்கும். ஆனால்..... நீ ஆசைப்பட்டது மாதிரி இல்லை நான் ஆசைப்பட்ட மாதிரி. உன்னால என்னை ஒன்றும் பண்ண முடியாது. நாளைக்கு இருக்கு உனக்கு. அப்போ என்னை பற்றி் நல்லாத் தெரிஞ்சுக்குவ.'

"ரொம்ப சந்தோசம் பிறகு இன்னுமொரு விசயம் கல்யாணம் பண்ணிக்கொள்றதோட உன் கடமை முடியல்லை. உன்னை நம்பி வார பொண்ணைக் கடைசி வரை நல்லபடியா சந்தோசமா வச்சுக்கிறதுல தான் என்னோட வளர்ப்பும் பூர்த்தியாகும் நானும் நிம்மதியா இருப்பேன். அதோட இந்த விசயம் நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்கட்டும் வேற யாருக்கும் தெரிய வேண்டாம் என்ன விளங்கிட்டா?" தாய் கேட்க மகன் சரி என தலையை ஆட்டினான்.

'ஐயோ பாவம், இது வேறு யாரோட காதுல விழுந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் உங்க நேரம் என்னோட காதுல விழுந்துடுச்சே. கவலைப்படாதேம்மா இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்' கேட்டுக் கொண்டிருந்த உருவமோ மர்மப் புன்னகையை சிந்தியது.

"சரி நேரமாகுது சாப்பாடு எடுத்து வைக்குறேன் சாப்பிட வாப்பா" காயத்ரி அழைக்க

"எனக்குப் பசிக்கல்லை சாப்பாடு வேண்டாம்" வேகமாக வந்தது பதில்.

"இங்கப்பாருப்பா சாப்பாடு எடுத்து வைக்குறேன் நீ வந்து சாப்பிடுற நீ வரல்லை என்றால் நானும் சாப்பிட மாட்டேன். சாப்பிடல்லை என்றால் என்னால குளிசை போட முடியாது அதுக்குப் பிறகு என்னாகும் என்று நான் சொல்லத் தேவையில்லை."

"என்னம்மா நீங்க எதுக்கெடுத்தாலும் மிரட்டிக்கிட்டு இருக்கீங்க. இது சரியில்லை அம்மா"

"அதெல்லாம் எனக்குத் தெரியும் நீ முதல்ல சாப்பிடவா"

"சரி போய் எடுத்து வைங்கோ வாரேன்"

"லேட் பண்ணாதே சீக்கிரம் வந்துடு நான் காத்திட்டிருக்கேன்." கூறிக் கொண்டே அறையிலிருந்து காயத்ரி வெளியேற கதவருகே நின்ற அந்த உருவமும் அவசரமாக அடுத்த அறைக்குள் சென்று மறைந்தது.

ஆதியின் அறையிலிருந்து வந்த காயத்ரியை அழைத்தார் தனலட்சுமி.

"என்னம்மா வந்து இவ்வளவு நேரமாகியும் உடுப்புக் கூட மாத்தாம ஆதி ரூம்ல இருந்து வாராய் என்ன மருமகளைப் பார்க்க போகச் சொல்லிட்டு வாராயா? அவனோட மீட்டிங் எல்லாம் முடிஞ்சிடுச்சா மருமக வீட்டுக்குப் போக வெளிக்கிட்டானா நேரம் போயிட்டே இதுக்குப் பிறகு எப்படிப் போற, அது சரியில்லையே? அவன்கிட்ட நான் போய் கதைக்கட்டுமா?" தனலட்சுமி கேள்விகளை அடுக்க 'ஐயோ அவன் கல்யாணத்தையே நிறுத்த சொல்லுறான் இந்த அம்மா மருமகள் வீட்டுக்கு போறதைப் பற்றிப் பேசுறாங்களே. இப்போது இவங்க போனால் அவன் இருக்குற மனநிலையில எதையாவது சொல்லிடுவான் இவங்களுக்கும் எல்லாம் தெரிஞ்சுடுமே. இந்த விசயம் யாருக்கும் தெரியக் கூடாது.' ஆதி அறைக்குச் செல்லத் திரும்பிய தாயைத் தடுத்தவள்

"ஐயோ அம்மா எத்தனை கேள்வி ஒவ்வொன்றா கேட்கலாமில்லையா? சரி உங்க இத்தனை கேள்விக்கும் உங்க பேரனோட ஒரே பதில் அவனுக்கு இன்னும் வேலை முடியல்லையாம் நாளைக்கே பார்த்துக்கலாம் என்று சொல்லிட்டான். நீங்க போக வேண்டாம் கொஞ்சம் வேலையாக இருக்கிறான்" என்று தாயை போக விடாமல் சாமர்த்தியாமாகத் தடுத்தார்.

"ஓ... அதுதான் சரி நேரமும் பத்தாகுது இதுக்கு பிறகு போறது முறையுமில்லை. சரி காயு நாங்கள் எல்லோரும் சாப்பிட்டாச்சு நீயும் ஆதியும் தான் இன்னும் சாப்பிடல்லை. இரண்டு பேரும் சீக்கிரம் சாப்பிட்டுட்டு படுங்கோ காலையில நேரத்தோட எழும்பனுமில்லையா உனக்குத்தான் ஆயிரம் வேலையிருக்கே போம்மா" கூறிய தனலட்சுமி தனதறையை நோக்கிப் போனார். ஆதித்யனுக்கும் தனக்குமாக சாப்பாட்டை எடுத்து வைக்கத் தொடங்கினார் காயத்ரி. அப்போது ஆதியத்தனும் வர அவனை அமர வைத்து பரிமாறியவர் தனது தட்டிலும் போட்டுக் கொண்டார். ஆனால் இருவர் மனங்களும் இருந்த நிலைக்கு சாப்பாடு இறங்க மறுத்தது. இருவரும் பேச்சின்றியே சாப்பிட்டோம் என்ற பெயரில் கொறித்துவிட்டு எழுந்தனர். உண்டு முடித்த ஆதித்யன் தனது அறையை நோக்கிப் போக அவனை அழைத்த காயத்ரி

"ஆதி, அம்மாவை மன்னிச்சிடுப்பா அப்படிப் பேசியதுக்காக. அம்மா உனக்கு எப்போதும் நல்லதை மட்டும்தான் நினைப்பா என்பது என்றைக்கும் உனக்கு ஞாபகமிருக்கட்டும். உன் மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் கண்டதையும் யோசிக்காம நிம்மதியாக தூங்குப்பா காலையில நேரத்தோட எழும்பனுமில்லையா?" அவரிடம் விடை பெற்றவன் தன் அறைக்குள் சென்று கட்டிலில் விழ நினைவுகள் மீண்டும் மாலை நிகழ்வுகளையே அசைபோட்டது. அவனுக்கு தாயின் கூற்றியில் உடன்பாடு இல்லை. கேட்டது அவன் காதுகளல்லவா? தாயை சரி செய்ய முடியாது என்பதைப் புரிந்தவனாய் தாரமாய் வரப் போகும் பெண்ணிடம் அதற்கு ஒரு ஒப்பந்தத்தைப் போட நினைத்தான். அது அவளின் பேராசைக்கான தண்டனை எனவும் எண்ணிக் கொண்டான். ஆனால் திருமணம் என்பது ஈருடலாய் அறிமுகமாகி ஓருயிராய் இணைவது மட்டுமல்ல இரு மனங்களின் சங்கமம் என்பதையும் வரப் போகும் பெண்ணுக்கும் மனம் என்று ஒன்று உண்டு் என்பதையும் மறந்தான்.

அறையினுள் நுழைந்த உருவம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு திரும்ப அங்கே ராஜேஸ்வரி அம்மா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் அவரை அவசரமாக தட்டி எழுப்பியது அந்த உருவம் கண்களை திறந்த ராஜேஸ்வரியோ முகத்தை முழுதாய் மூடியிருந்த உருவத்தைப் பார்த்துக் கத்தத் தொடங்க அவர் வாயை கைகளால் பொத்தி கத்தவிடாமல் செய்து தன் முந்தானையை விலக்கி முகத்தைக் காட்ட

"அடிப்பாவி ஷனா நீயா? என்னடி இந்த நேரத்தில முகத்தை மூடிக்கிட்டு பேய் மாதிரி சுத்திட்டிருக்க" ராஜேஸ்வரி கடுகடுக்க

"நானேதான். ஏய் கிழவி பேய்கீய் என்று ஓவராக் கதைச்ச கொன்றுடுவேன். வாயை மூடிக்கிட்டு நான் சொல்லுறதை மட்டும் கேளு"

"யாரைப் பார்த்து கிழவி என்று சொல்லுற" ராஜேஸ்வரி ஆரம்பிக்க உதட்டில் விரல் வைத்து பேசாமலிருக்குமாறு சைகை செய்த அந்த ஷனா பக்கத்திலிருந்த கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அவரின் எதிரே அமர்ந்தாள்.

"இங்கப்பாரு பாட்டி ஆதிக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமே இல்லை. ஆனால் இந்தக் காயத்ரி அவனை மிரட்டி சம்மதிக்க வச்சிருக்கா. " என்று நடந்த அனைத்தையும் ராஜியிடம் கூறி

"இனி இந்தக் கல்யாணம் எப்படி நிக்கப் போகுது என்று மட்டும் பாரு பாட்டி. உன் பேரனுக்குப் பொண்டாட்டி அந்த நயனி இல்லை இந்த ஷனாதான். அன்றைக்கு நான் கண்ட கனவு பலிக்கப் போகுது என் செல்ல ராஜேஸ்வரி. "

"கனவா.....? சும்மா கற்பனைக் கோட்டை கட்டாதே முதல்ல என்ன கனவு கண்ட பலிக்குறதுக்கு"

"என்ன கிழவி இப்படிக் கேட்டுட்ட உனக்கு ஞாபகமில்லை. உன் பேரன் அதான் என் அன்பு அத்தான் முதன்முதலா கல்யாணத்துக்கு சம்மதிச்சப்போ எனக்கு வந்துச்சே ஒரு கனவு கொஞ்சம் ஞாபகப்படுத்திப்பாரு." என்றவள் தன் சுட்டு விரலை வட்டமாக சுருள் போல் சுற்றிக்காட்ட

"என்னடி பண்ணுற ஏன் இப்படி கொயில் சுத்துற என்னடி ஆச்சு உனக்கு பைத்தியம் கீத்தியம் புடிச்சிடுச்சோ?"

"ஃபிளாஸ் பேக் பாட்டி ஃபிளாஸ் பேக் அதான் உனக்கு இப்படி விரலால கொயில் சுத்திக் காட்டுறேன். பாட்டி படத்துல எல்லாம் இப்படித்தானே வரும் அதான்"

"சோக்கு அடிக்கிறாயா? லூசுப் புள்ளை."

"சரி சரி வா பாட்டி நம்ம ஃபிளாஸ் பேக் போகலாம் அன்றைக்கு நடந்ததைக் கொஞ்சம் மீட்டிப் பாரு நான் கண்ட கனவு பலிக்குமா இல்லையா? என்று உனக்கு இப்போ விளங்கிடும்" என்ற பேத்தியுடன் சேர்ந்து அந்நாளின் நினைவுகளுக்குச் சென்றார் ராஜேஸ்வரி.

அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு படுக்கைக்கு வந்த காயத்ரிக்கு உறக்கம் வர மறுத்தது மனம் மிகவும் கணத்திருந்தது. மகனுக்கும் தனக்குமிடையில் நடந்த சம்பாஷனையே திரும்பத் திரும்ப ஞாபகம் வர தூக்கம் மொத்தமாக அவரிடமிருந்து விடை பெற்றது. அவர் சிந்தனை முழுக்க மகனிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியது முதல் இரவு நடந்த நிகழ்வுகளிலே மூழ்கிக் கிடந்தது.

காயத்ரியின் நினைவுகளும் அன்றைய நாட்களுக்கே போயின.

வளரும்.....

கருத்துக்களை பகிர

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 08

அடிக்கொரு முறை மாடிப்படியைப் பார்ப்பதும் சமையலறைக்குள் சென்று தன் வேலையை முடிப்பதுமாக இருந்த மருமகளின் செய்கை புரியாமல் தன் அறையிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
அலுவலகத்திற்கு தயாராகி வந்த ஆதித்யன் சாப்பிட அமர அவனுக்கு ரொட்டியையும் சம்பலையும் வைத்த காயத்ரி அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டார். அவர் அமர்ந்ததுமே தாய் தன்னுடன் பேச நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட ஆதித்யன்,

"என்னம்மா என்ன விஷயம் என்னோட என்ன பேசனும்?" எனக் கேட்க தன் மகனின் புரிதலை உணர்ந்து லேசாக உணர்ச்சி வசப்பட்டவர் தன்னை சமாளித்துக் கொண்டு

"ஆதி அம்மா உனக்கு எப்பவும் நல்லதை மட்டும் தான் செய்வேன் என்பதை நீ முழுசா நம்புகிறாயாப்பா?" பீடிகையுடன் ஆரம்பித்த தாயை கேள்வியாய் நோக்கினான் மைந்தன்.

"இல்லப்பா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கனும் என்று என் மனசு துடிக்குதுடா. நீயும் இப்போதைக்கு எதுவும் வேணாமென்று தட்டிக் கழிக்கிற உனக்கும் வயசு ஏறிட்டே போகுது. இம்போ நானிருக்கேன் எனக்கு பிறகு உன்னை யார் பார்த்துப்பாங்க? நான் இருக்கும் போதே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன் என்றால் நானும் நிம்மதியா இருப்பேனில்ல. அதான் பொண்ணு பார்க்கலாம் என்று....." தயக்கமாக இழுத்த தாயை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாது உணவினை உண்டு முடித்தான். பின் கைகளை கழுவியவன் தாயருகே வந்து அமர்ந்தான்.

"இப்போ சொல்லுங்க என்ன பிரச்சனை உங்களுக்கு எனக்கு கல்யாணமே வேண்டாமென்று சொல்லிட்டிருக்கேனில்ல திரும்பத் திரும்ப கல்யாணம் கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்தினால் என்ன அர்த்தம்மா. என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்கலாமில்லையா? நான் இப்படியே இருந்துடுறேன் என் தொழில் என் வீடு என் குடும்பம் நீங்கன்னு சந்தோசமா இருந்துட்டுப் போறேம்மா எனக்கு இந்த பொண்ணுங்க மேலே நம்பிக்கையே இல்லை. காசுக்காக எதையும் செய்ற கூட்டம் அவளுங்களுக்கு காசு மட்டும் தான் முக்கியம் மனசில்லை. எனக்கு இந்த பொண்ணுங்களோட சகவாசமே வேணாம்மா"

"போதும்டா நானும் பொண்ணுதான் உன் கூட பொறந்தவளுங்களும் பொண்ணுங்கதான். எப்பவாச்சும் நாங்க காசுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்திருக்காயா?" கோபமாக கேட்க

"நீங்கல்லாம் எப்படிப்பட்டவங்க என்று தான் தெரியுமே. அதுவும் அக்காளுங்க உங்க வளர்ப்பு அவங்க காசை விட மனிசனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் உங்களலெல்லாம் சொல்லல்லம்மா புரிஞ்சுக்கோங்க." மகன் கெஞ்ச

"நீ சந்திச்ச பொண்ணுங்கள வச்சு எல்லோரையும் எடை போடாதே. காச விட மானம் மரியாத மனச மட்டும் பார்க்குற பொண்ணுங்களும் இந்த உலகத்துல இருக்காங்கப்பா. அப்படிப்பட்ட நல்ல குடும்பத்துப் பொண்ணத்தான் இந்த அம்மா உனக்கு கட்டி வைப்பேன் நீ மட்டும் சரி என்று சொல்லுப்பா. நான் இதுவரை உன்கிட்ட எதுவும் கேட்டதில்லை இப்போ முதல் தடவையா உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் கல்யாணத்துக்கு ஒத்துக்கோப்பா." இவ்வாறே ஆதித்யா மறுக்க காயத்ரி கெஞ்ச அப்போதும் அவன் தன் பிடியிலேயே நிற்க காயத்ரி அழுது கூடப் பார்த்தார் தாய் கண்களில் கண்ணீரைக் கண்டவன் பதறிய போதும் அவன் பிடிவாதத்திலிருந்து தவறவில்லை. காயத்ரியும் போர் முறையை மாற்றினார்.

"சரி இது தான் உன் முடிவில்லையா? அப்போ என் முடிவையும் கேட்டுக்கோ. உனக்கு ஒரு நாள் டைம் அதுக்குள்ள கல்யாணத்துக்கு சம்மதிக்குற இல்ல உங்கம்மாவுக்கு காரியம் செய்ய தயாரா இரு. நீ சம்மதிக்கல்ல என்றால் இதுதான் நீ என்னைப் பார்க்குறது கடைசியா இருக்கும்" உறுதியாகக் கூறியவர் அங்கிருந்து நகர அதிர்ந்தெழுந்தவன் தாயின் கைகளைப் பற்றிக் கொண்டு

"இப்போ என்னம்மா நான் கல்யாணம் பண்ணிக்கனும் அவ்வளவு தானே நீங்க பொண்ணு பாருங்க. யாரென்றாலும் எனக்கு ஓகே. இனிமேல் இப்படி தப்பா பேசாதீங்க." கூறியவன் கடகடவென்று வெளியேறி அலுவலகத்துக்குச் சென்று விட்டான். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜேஷ்வரி காயத்ரியிடம் வந்து

"ஆதி கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டானில்லை சசிகலாவை வரச் சொல்லட்டா?"

"அத்தை என்ன சொல்லுறீங்க. சசி எதுக்கு எனக்கொன்றும் விளங்கல்ல."

"விக்‌ஷனா தான் இந்த வீட்டு மருமகளா வரனும். அவளிருக்கும் போது வெளியே ஏன் பொண்ணு தேடனும். அவள விட ஆதிக்கு பொருத்தமானவ யாரு. சசிய வரச் சொல்லுறேன் கதைச்சு சீக்கிரம் திகதியைக் குறிங்கோ."

"இல்ல அத்தை தப்பா எடுத்துக்காதீங்க. உறவுக்குள்ளே வேண்டாம் அவனும் அதை விரும்ப மாட்டான்."

"என்ன மருமகளாரே இது என் பேரனோட விருப்பமா இல்லை உங்க விருப்பமா? இப்போ நீங்க ரெண்டு பேரும் கதைச்சதை நானும் கேட்டுட்டுத்தான் இருந்தேன். அவன்தான் தெளிவா சொன்னானே. உங்க விருப்பம் யாரென்றாலும் எனக்கு ஓகே என்று. நாம முடிவு பண்ணிடுவோம் ஷனாதான் இந்த வீட்டுக்கு மருமகள் என்று என்ன சொல்லுற?"

"இல்லை அத்தை அவன் என் விருப்பம் என்று சொன்னாலும் வாழப் போறது அவன்தான். அவன்கிட்ட கேட்காம எப்படி? அவன் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்காததாலதான் இப்படி கதைக்க வேண்டியதா போச்சு ஆனால் நிச்சயமா அவன் பொண்ணு பார்த்து ஓகே சொன்னாத்தான் கல்யாணமே அவன் இதை விரும்ப மாட்டான். அத்தோட உறவுக்குள்ள கல்யாணம் கட்டிக்கிட்டால் வரும் சந்ததிக்கு அது நல்லதில்லை."

"அப்படியா? நீயும் உன் புருஷனும் உறவுதானே நீங்க கல்யாணம் பண்ணி நல்லபடியா புள்ளை குட்டி என்று சந்தோசமா இல்லை. உங்க எந்தப் புள்ளை குறையோட இருக்கு. அதுமட்டுமில்ல நம்ம குடும்பத்துக்குள்ளே பெரும்பாலும் உறவுக்குள்ளதானே கட்டிருக்கினம். யாருக்கு என்ன ஆச்சு எல்லோரும் நல்லாத்தானே இருக்கீனம். சும்மா அளக்காத மருமகளே. உனக்கு விருப்பமில்லாததால தான் இப்படி கதைச்சிட்டிருக்கிறாய்"

"அதில்லை அத்தை உங்க ஆசை தெரிஞ்சுதான் நான் ஒரு டாக்டரைப் போய் பார்த்தேன் அவங்க ஒரு விசயம் சொன்னாங்க. அத்தை மகனும் மாமன் மகளும் கல்யாணம் கட்டிக்கிட்டால் அதுல வார சந்ததிக்கு தாக்கம் குறைய இருக்குமாம் ஏன் எதுவும் இல்லாமல் கூட போகுமாம். நானும் உங்க மகனும் மாதிரி நல்லா யோசிச்சுப்பாருங்க நம்ம குடும்பத்துல உள்ளவங்களும் பெரும்பாலும் அந்த முறையில தான் கட்டிருக்காங்க. ஆனால் அத்தை மகளும் மாமன் மகனும் கட்டிக்கிட்டால் அது அவ்வளவு நல்லதில்லையாம் வரப்போற சந்ததிக்கு தாக்கமும் கூட இருக்குமாம் அதுமட்டுமில்லை தொடர்ந்து உறவுக்குள்ளே கட்டிக்கிட்டாலும் அடுத்து வார சந்ததிக்கு அது பிழையாகிடுமாம். நீங்க சொன்ன மாதிரி நம்ம குடும்பத்துல உறவுக்குள்ள கட்டிக்கிட்டாங்க தான் ஆனால் ஒன்றை மறந்துட்டீங்க உங்க மாமாவோட மகன்தானே கதிரவன் மாமா அவரைத்தானே உங்க அக்கா பத்மாவதி அத்தை கல்யாணம் பண்ணிகிட்டாங்க. லலிதாவ யோசிச்சீங்களா? அவளுக்கு குட்டைக் கால் கை அத்தோட குழந்தையும் இல்லை. அதுமட்டுமில்ல எங்க புவனா அத்தையோட மகன் ரமேஷ் மச்சானுக்கு அவரோட அத்தை மகள் தானே ராதா அக்கா. அந்த முறை கட்டிக்கிட்டதால தான் நந்தனுக்கு கால் ஊனமாயிடுச்சு அந்த காலத்துல இப்ப மாதிரி அறிவு வளர்ச்சியோ தொழில் நுட்பமோ இல்லாததால கடவுளோட கோபப் பார்வை தண்டனை என்று கடவுள் மேல பழியைத் தூக்கிப் போட்டுட்டோம் இப்போ அப்படி எல்லாம் இல்லை. தெரிஞ்சே ஒரு தப்பை செய்யலாமா சொல்லுங்கோ அத்தை?" எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராஜேஸ்வரி பிடிவாதமாக இருந்தார். தன் மருமகளிடம் எப்படிப் பேசினால் காரியம் நடக்கும் என்று அறிந்தவராய் அவரின் ஆட்டத்தை ஆரம்பித்தார்.

"அதுசரி என் மகன் சரியாக இருந்திருந்தால் நான் உன்கிட்ட கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. எப்போ எல்லாப் பொறுப்பும் உனக்கிட்ட வந்ததோ அப்போ இருந்து நீதானே குடும்பத் தலைவி நீதானேம்மா முடிவெடுப்பே நான் உன்னோட ஒட்டி வாழுறவ. நீ சொன்னாக் கேட்டுத்தான் ஆகனும். இல்லை என்றால் இங்கே இருந்து போக வேண்டியிருக்கும் இது நானும் என் வீட்டுக்காரரும் வாழ்ந்த வீடு இங்க இருந்து போறதானால் என்னோட பிணந்தான் போகனும். அதனாலதான் நான் என் மகள்கூட போய் அவ வீட்டுல வாழாம இங்க இருக்கேன் என்று உனக்கும் நல்லாத் தெரியும் காயத்ரி. எனக்கு இதெல்லாம் தேவைதான் எல்லாம் என் நேரம் கடவுளே சீக்கிரமா என்ட உசுரை எடுத்துடுப்பா யாருக்கும் தொல்லையில்லாம போய் சேர்ந்துடுறேன். இருந்தாத்தானே எல்லா ஆசையும் வருது. அது சரி நான் ஆசைப்பட்டதெல்லாம் நடக்குமா? இல்லையே இந்த வீட்டம்மா நினைச்சதுதான் நடக்கும்."

"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க அத்தை. நான் எப்பவாவது அந்த மாதிரி நடந்திருக்கிறேனா? அகிலாப்பாவால முடியல்லை அதனால வீட்டுப் பொறுப்பை நானும், தொழிலை என் மகனும் பார்த்துக்குறோம் இது தப்பா அத்தை? இத்தோட இந்த மாதிரி கதைக்குறதை நிப்பாட்டுங்கோ. இதுவே கடைசியா இருக்கட்டும். சரி இப்போ நான் என்ன செய்யனும்?"

"அவன் தான் புருஷன் என்று என் பேத்தியும் ஆசைய வளர்த்துகிட்டா இப்ப போய் அது நடக்காது ஆதி உனக்கில்லை வேறு பொண்ணு பார்க்கப் போறோம் என்று சொன்னா நல்லாவா இருக்கும் நீயே சொல்லு காயு. அவ சின்னப் புள்ள தாங்குவாளா? நீ ஆதிகிட்ட கதைச்சுப்பாரு. நீ சொன்னா கட்டாயம் விக்‌ஷனாவைக் கட்டிப்பான். அவன் மறுத்தாலும் கொஞ்சம் எடுத்துச் சொல்லு இப்போ கதைச்ச மாதிரி கட்டென்ட் ரைட்டா கதை. அவன்தானே சொன்னான் யாரென்றாலும் ஓகே என்று."

"அவனே இப்போதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான். இத சொன்னா மொத்தமா முடியாதென்று சொல்லிடுவானே." மீண்டும் ஏதோ பேச வாயெடுத்த ராஜேஸ்வரியிடம்,

"அத்தை இப்போ ஒன்றும் கதைக்க வேணாம். சரி அத்தை உங்களுக்காக அவன்கிட்ட கதைச்சுப் பார்க்குறேன் ஆனால் இப்போ இல்லை நேரம் பார்த்து நான் கதைக்குறேன்." மனசேயில்லாமல் ஒத்துக் கொண்டார் காயத்ரி.

"நல்லது காயும்மா ஆனால் காலத்தை இழுத்தடிக்காம சீக்கிரம் கதைச்சிடு என்ன?"

" சரி அத்தை அத்தோட அவன் ஒத்துக்காட்டி நிச்சயமா இது நடக்காது அதை நீங்க ஏத்துக்கிடனும். சரியா?" கறாராகப் பேசியவர் அவ்விடம் விட்டு அகன்றார்.

***************************************

வாசலிலே மாவிலைத் தோரணங்களும் இரு மருங்கிலும் வாழை மரங்களும் தென்னோலை அலங்காரமும் பூரண கும்பமும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் மனதை அள்ளியது.

சர்ரென்று கார் ஒன்று வழுக்கிக் கொண்டு வந்து மண்டபத்தின் முன்னால் நிற்க அதிலிருந்து தன் குடும்பத்துடன் இறங்கினாள் அவள். வந்தவளை இரண்டு சுமங்கலிகள் ஆலம் சுற்ற உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிட்டார் அவள் அத்தை. அவள் பாட்டி அவளின் மணக் கோலத்தைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட தாயோ மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தார். மணப் பெண் தோழிகளோ அவளை மண்டபத்துள் அழைத்துச் செல்ல அவளை வரவேற்றது மணமக்களின் பெயர் தாங்கிய பலகை. அதில் மணமகன் பெயரிடத்தில் ஆதித்யவர்த்தன் என்றும் மணமகள் பெயரிடத்தில் விக்‌ஷனா என்ற தனது பெயரையும் சேர்த்துப் பார்த்தவள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தாள். மணமகனின் பெயரை தன் கரம் கொண்டு வருடியவள் அதனை சிறிது நேரம் ரசித்தாள்.

'மருமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா' பாடல் ஒலிக்க அவளை சுற்றி ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர் அவள் தோழிகள் மணமகனின் சகோதரிகளும் இணைந்து கொள்ள கல்யாண மண்டபம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமானது.

அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் அமர்ந்து அவன் மணமகனாய் சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபட மணப்பெண்ணாய் அவளை அழைத்துச் சென்று அவனருகே அமர்த்த மேளதாளங்கள் முழங்க ஐயர் மந்திரம் சொல்லி மங்கள நாணை அவள் அத்தானின் கைகளில் கொடுக்க அதனைப் பெற்றுக் கொண்டவன் அவள் கழுத்தில் அணிவிக்கப் போகும் போது......
ஒலி எழுப்பியது அவள் அலைபேசி

'சே... இந்த நேரத்துல யாரு சிவ பூசைக் கரடி மாதிரி சரியாக தாலி கட்டும் போது யாரா இருந்தாலும் என் அத்தானின் கைத்தாலி வாங்கிய பிறகுதான் எல்லாமே' எண்ணியவளாய் அவன் புறமாய்த் திரும்ப மீண்டும் இடைவிடாது அடிக்கத் தொடங்கியது அவள் கைப்பேசி. பட்டென்று கண்களைத் திறந்தாள் விக்‌ஷனா ஒரு கணம் எதுவும் விளங்காது சுற்றுமுற்றும் பார்த்தவள் 'அட இவ்வளவு நேரமும் கண்டது கனவா?' நினைத்தவள் அலைப்பேசியை இயக்க மறுமுனையில் அவளின் பாட்டியின் குரல் மிகவும் உற்சாகமாய் ஆனால் ஷனாவோ பொரியத் தொடங்கினாள்.

"என்ன பாட்டி நீ விடிஞ்சும் விடியாமலும் கோல் எடுத்திருக்கிற சே எவ்வளவு நல்ல கனவைக் கலைச்சுட்ட தெரியுமா? போ பாட்டி" சலித்துக் கொண்டாள் பேத்தி.

"என்ன கண்ணு படுத்துட்டு இருந்தாயா? விடிஞ்சி ரொம்ப நேரமாயிடுச்சுடி என் செல்லக்கண்ணு. கல்யாணமானா இம்பட்டு நேரம் படுக்க முடியாது தெரியுமோ?"

"பாட்டி வளவளக்காம முதல்ல எடுத்த விசயம் என்ன என்று சொல்லு"

"ஏன் சலிச்சுக்கிற நான் சொல்லப் போற விசயத்தைக் கேட்டால் அப்படி சந்தோசப்படுவ"

"அப்படி என்ன பெரிய சந்தோசம் நான் கண்ட கனவை விடவா?"

"அப்படி என்ன பெரிசாக் கண்டுட்ட உன் கனவெல்லாம் தூக்கிக் குப்பையில போட்டுட்டு நிஜத்துக்கு வா"

"இப்படிச் சொல்லாத பாட்டி. அந்தக் கனவைச் சொன்னா நீ அப்படியே உச்சி குளிர்ந்துடுவ தெரியுமா? அப்படி என்ன கனவு என்றுதானே கேட்கப் போற இரு இரு நானே சொல்லிடுறேன். என் அத்தானுக்கும் எனக்கும் கல்யாணமாகுற மாதிரி கனவு கண்டேன் பாட்டி. தாலிக்கட்டுறதுக்குள்ள நீ வந்து கெடுத்து போட்ட"

"அடியேய் நான் என்னடி செஞ்சேன். சரி அதைவிடு ஆனாலும் நீ சரியாத்தான் கண்டிருக்க"

"என்ன சொல்லுற பாட்டி? எனக்கு எதுவும் விளங்கல்லை."

"உன் அத்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான். உன் அத்தை அவன்கிட்ட கதைச்சு சம்மதிக்க வச்சுட்டா. நீ கண்ட கனவு பலிக்கப் போகுது சந்தோசமா கண்ணு."

"ஐயோ பாட்டி நீ மட்டும் பக்கத்துல இருந்த அப்படியே உன்னைக் கட்டிப் பிடிச்சு கிஸ் பண்ணிடுவேன் தெரியுமா?"

"உன் கிஸ்ஸூம் வேணாம் ஒரு பஸ்ஸூம் வேணாம் அதை உன் அத்தானுக்கே கொடு."

"சரி பாட்டி இப்போ நீ வச்சிடு வச்சிடு உன் கிட்ட கதைக்க எனக்கு நேரமில்லை." படபடத்தவள்,

"முதல்ல வெளிக்கிட்டு இங்கே....." ராஜேஸ்வரி பேசிக் கொண்டிருக்கும் போதே பட்டென்று போனைக் கட் செய்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

'அடிப் பாவி பொண்ணே இப்படியா கதைச்சிட்டிருக்கும் போது பாதியில வைச்சிடுவ.' தனக்குள் புலம்பியவர் தனது வேலையை கவனிக்கச் சென்றார்.

காலை உணவு உண்டு கொண்டிருந்த குமரேசன் அடர் நீல ஜீன்ஸூம் சிவப்பு முழுக்கை டீசேர்ட்டும் அணிந்து முகத்தில் முழு ஒப்பனையுமாய் தலை முடி காற்றில் பறக்க தயாராகி வந்த மகளைப் பார்த்து

"அட ஆச்சரியமா இருக்கே ஏய் சசி அவசரமா வா. வானத்தைப்பாரு மழை வரப்போகுதோ என்று?" கணவனின் கேள்வி புரியாது சமயலறையிலிருந்து வந்த சசிகலா

"என்ன உளறிக்கிட்டு இருக்கீங்க. மழை வரப்போகுதா? ஒன்பது மணிக்கே வெயில் வெளுத்துக்கட்டுது இதுல எங்கயிருந்து மழை வாரது. உங்களுக்கு நட்டுக் கழன்டுட்டா?" கணவனிடம் பொரியத் தொடங்கினார் சசிகலா.

"எனக்கு ஏசினது போதும் முதல்ல அங்கப் பாரு உன் மகளை." அவர் கை நீட்டிக்காட்டிய திசையில் பார்த்த சசியோ ஆவென வாயைப் பிளந்தார்.

"அட நீங்க சொல்லுறது உண்மைதான். ஏய் ஷனா எங்கடி வெளிக்கிட்ட இவ்வளவு சீக்கிரம் எழும்பி குளிச்சு எங்கயோ போக வெளிக்கிட்டருக்க. மழைகிழை வரப்போகுது" தாயும் ஆச்சரியப்பட

"எங்கம்மா வெளிக்கிட்ட சாப்பிட வாம்மா?" குமரேசன் அழைக்க

"அப்பா எனக்கு இப்போ சாப்பிட எல்லாம் நேரமில்லை." விக்‌ஷனா பேசிக் கொண்டே தன் ஹை ஹீல்ஸை அணிய

"என்னம்மா, முகத்துல ஒளியடிக்கிது என்ன விஷயம்?" தந்தை விசாரிக்க அவளை ஊன்றிக் கவனித்த தாயும் ஆம் போட

"அப்பா, அம்மா கடும் முக்கியமான ஒரு விசயம் அத்தை வீடு வரை போயிட்டு வாரேன்."

"என்னம்மா விசயம்?" இருவரும் கோரசாக கேட்க

"அம்மா நான் ஒரு கனவு கண்டேன்மா"

"உன் கனவுதான் தெரியுமே எப்ப பாரு உன் அத்தான் நினைப்புத்தான் அதோடேயே படுத்தா அவன்தான் கனவுலையும் வருவான் இது ஒரு பெரிய விசயம் என்று கதைக்க வந்துட்டா அதுக்கும் நீ அத்தை வீட்டுக்குப் போறதுக்கும் என்ன டீ சம்மந்தம்?" தாய் சலித்துக் கொள்ள

"பெரிய விசயந்தான் மா கனவுக்கும் நான் போறதுக்கும் சம்மந்தமுமிருக்கு. கனவுல அத்தானுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்குதும்மா. அதுமட்டுமில்லை அம்மா அத்தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாரு. பாட்டி கோள் பண்ணிச்சு. இப்போ அதுக்காகத்தான் அங்கே போறேன்" கூற

"உண்மையாவா சொல்லுறாய்? அதுமட்டும் நடந்தால் வேறெதுவும் தேவையில்லையே." பெற்றவர்கள் மகிழ அவர்களிடம் விடை பெற்று தன் காரை இயக்கி சிட்டாய்ப் பறந்தாள் அந்த மாடர்ன் மங்கை.

வளரும்.....

Please share your comments here👇👇

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 09


வாசலில் கேட்ட காரின் ஹோர்ன் சத்தத்தில் 'இந்த நேரத்துல யாரு' என்றவாறே சமலறையிலிருந்து எட்டிப்பார்த்தார் காயத்ரி. காரிலிருந்து இறங்கியவளைக் கண்டதும்
'ஓ அதுக்குள்ள சொல்லியாச்சா. என்ன ஒரு வேகம். அட இந்த மகாராணிக்கு இன்றைக்கு நேரத்தோடேயே விடிஞ்சிருக்கே. ஆச்சரியமாயிருக்கு.' எண்ணியவர் மீண்டும் சமலறைக்குள் புகுந்து கொண்டார். வாய் முழுக்க பல்லாக உள் நுழைந்த விக்‌ஷனாவோ

"அத்தை, அத்தை பாட்டி ஏய் ராஜி பாட்டி ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க வெளியே வாங்க" அழைக்க அவளின் சத்தத்தில் அறையிலிருந்து வாய் கொள்ளாச் சிரிப்புடன் வந்தார் ராஜேஸ்வரி

"அட ஷனாக் கண்ணு வந்துட்டாயாம்மா. வா வா என் தங்கத்தை சீக்கிரமாக கல்யாணக் கோலத்துல இந்தப் பாட்டி பார்க்கப் போறா." அவளை உச்சி முகர்ந்தவாறே கூற இதனை சமயலறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த காயத்ரிக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

"பாட்டி அத்தை எங்கே?"

"அவ குசினியிலதான் இருப்பா, இரு கூப்பிடுறேன் காயு காயும்மா எங்க இருக்க?" அன்பொழுக அழைத்தார் ராஜேஸ்வரி.

'அப்பா என்ன ஒரு பாசாங்கு ஐயோ வேலையாகனுமென்றால் இந்த அத்தையோட கதை பேச்சு நடவடிக்கை எல்லாம் என்னம்மா மாறுது என்ன ஒரு நடிப்பு சே...' தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருக்க மீண்டும் அவளை ராஜேஸ்வரி அழைக்க 'இதோ வந்துட்டேன்' என்றவாறே முன்னறைக்குச் சென்ற காயத்ரியின் தோள்களைப் பிடித்துக் கொண்டு அவரை வட்டமாகச் சுற்றிய விக்‌ஷனா மிகுந்த மகிழ்ச்சியுடன்

"அத்தை ரொம்ப சந்தோசமான விசயம் நடந்திருக்கில்ல என் அத்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்களாமே என்னால நம்பவே முடியல்லையே எப்படியோ எங்க கல்யாணம் நடந்தாப் போதும் அத்தை. எவ்வளவு சீக்கீரம் அத்தானுகிட்ட எங்க கல்யாண விஷயம் கதைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கதைச்சிடுங்கோ அத்தை. இதுக்கு மேல காத்திட்டிருக்கவும் முடியாதில்லையா? அப்பா அம்மாவும் அவசரப்படுத்துறாங்க. உங்களுக்கும் அப்படித்தான் அதனால இன்றைக்கே அவரோட கதைச்சி திகதியைக் குறிங்கோ ஓகே என் செல்ல அத்தை. அதுமட்டுமில்லை அத்தை இப்பெல்லாம் அத்தான் தான் என் கனவு முழுக்க, இன்றைக்கும் எனக்கு ஒரு அழகான கனவு வந்துச்சு அத்தை........ " விக்‌ஷனா மேலும் ஏதேதோ பேசிய போதும் எதுவும் காயத்ரியின் காதில் விழவில்லை. அவள் கூறிய 'இன்றைக்கே கதைச்சு திகதியை குறிங்கோ' என்ற வார்த்தைகளிலே மனம் சுற்றத் தொடங்கியது. ஆனால் அவர் மனதோ 'கடவுளே இது நடக்காம நீதான் காப்பாற்றனும்' என உள்ளம் மருகி வேண்டிக் கொண்டிருந்தார்.

"என்ன காயத்ரி எதுவும் கதைக்காம சிலை மாதிரி நிக்குறாய் அவ முகத்துல எவ்வளவு சந்தோசம் இருக்குப் பாரு வாயைத் தொறந்துதான் சொல்லேன்மா என் மகன் கிட்ட இன்றைக்கே கதைக்குறேன் என்று, உன் வாயால கேட்டா என் பேத்தி மனசு திருப்தி பட்டுக்குவாயில்லை" ராஜேஸ்வரியும் கூற

"அத்தை நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் சந்தர்ப்பம் பார்த்து கதைக்குறேன் என்று இப்போதான் ஒரு வழியா கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கேன் இன்றைக்கே போய் ஷனாவை கட்டிக்க என்று சொல்ல முடியாது கொஞ்ச நாள் போகட்டும் " என்று அப்போதைக்கு அவ்விருவரையும் சமாதானப்படுத்தினார். ஆனால் விக்‌ஷனா அதில் சமாதானப்படுவதாய் இல்லை.

"கொஞ்ச நாளா சரி அத்தான் இப்போ எங்கே அத்தை? அவருகிட்ட நானே கதைக்குறேன் இதுக்கு எதுக்கு நாள் பார்த்துட்டு இருக்கீங்க. கடகடென்று வேலையை முடிக்காம இழுத்தடிச்சிட்டிருக்கீங்க" அதிகாரமாய் கூறியவாறே ஆதியின் அறையை நோக்கி முன்னேறினாள் ஷனா.

"ஷனா நில்லு இங்கப்பாரும்மா ஆதி வீட்டுல இல்லை அவன் ஒபிஸூக்குப் போயிட்டான். நான்தான் சொல்லுறேனில்லையா நாலஞ்சு நாள் கழிச்சு நானே கதைக்குறேன் என்று. ஆனால் ஒரு கண்டிஷன் அவன்கிட்ட கதைக்கக்கூடிய சந்தரப்பம் என்றால் மட்டுந்தான் கதைப்பேன் அதுவரை நீ பொறுத்துக் கொள்ளனும் சரியா?" காயத்ரி கட்டென்ரைட்டாக பேசிய போதும் அதிலும் தனக்கு சாதகமாக ஒன்றை பற்றிக் கொண்டவள்

"சரி அத்தை உங்களை நம்புறேன் ஆனால் உங்களுக்கு நாலஞ்சில்லை இரண்டு நாள் தான் டைம் அதுக்குள்ள கதைக்கல்ல என்றால் பிறகு நான் போய் கதைச்சிடுவேன் ஓகே" மிரட்டலாக கூறியவள் காயத்ரி மறுத்துப் பேச இடமளிக்காது மடமடவென்று காரில் ஏறி பறந்துவிட்டாள். அன்றிரவே மகனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தும் வேண்டுமென்றே அதை தவிர்த்தார் காயத்ரி.

இப்படியே இரண்டு நாள் கடக்க இரண்டாம் நாள் ஆதி வேலை முடிந்து வரும் நேரத்துக்கு ஒரு அரை மணி முன்னதாக காயத்ரியின் வீட்டுக்கு வந்து நின்றாள் விக்‌ஷனா. கார் சாவியை கையில் சுழற்றியவாறே உள் நுழைந்தளைக் கண்ட காயத்ரியோ உதட்டைப் பிதுக்கினார். தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு் சிறிதும் நகராமல் தன் வேலையில் கவனம் செலுத்தினார்.

"என்ன அத்தை நான் வந்தும் வா என்று ஒரு வார்த்தை கூப்பிடாம வேலையா இருக்கீங்க?" அவள் கேட்டும் பதிலளிக்காது தன் வேலையை முடித்து விட்டுத் தலையை நிமிர்த்தியவர்

"வாம்மா நீ வந்தது நல்லாவே தெரியும் ஆனால் எழும்பி வந்து உன்னை வரவேற்க முடியாத நிலமை என்ன செய்ய நீதான் பார்க்குறாயே கணக்கு பார்த்துட்டிருக்கேன் அதைவிட்டுட்டு நிமிர்ந்தா எல்லாம் கெட்டுட்டும். முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். நீதானே வந்த, வழமையா வார நீதானேம்மா ஒருநாள் வா என்று கூப்பிடாட்டி வராமத்தான் போயிடுவாயா?" அவளை சமாதானப்படுத்துவது போல் குத்தலாகப் பேசினார் காயத்ரி அதை புரிந்து கொண்டு உள்ளூர கடுகடுத்தாலும் வெளியே பல்வரிசை தெரிய சிரித்தாள் விக்‌ஷனா.

"நீங்க ஏன் அத்தை என்னை வரவேற்கனும் அதை எல்லாம் நான் எதிர்பார்க்கல்ல. இது என்னோட மாமா வீடு இது எனக்கு மாப்பிள்ளையா வரப்போறவரோட வீடு ஏன் இது என்னோட வீடு. இனி நீங்க கவலைப்படத் தேவையில்லை அத்தை இந்தக் கணக்கெல்லாம் நான் பார்த்துக்குவேன் நீங்க ஹாயா ரெஸ்ட் எடுத்துக்கலாம். அதுமட்டுமில்ல மாசம் முதலாம் திகதி ஆனால் உங்க எகௌன்ட்டுக்கு காசு டான் என்று வந்துடும் உங்களுக்கு விருப்பப்பட்ட மாதிரி செலவழிச்சுட்டு நீங்களும் மாமாவும் சந்தோசமா இருக்கலாம். இந்த டென்ஸனெல்லாம் இனி உங்களுக்கு வேணாம் என்ன சரியா அத்தை?" ஷனா அளந்து கொண்டிருக்க கடுப்பானார் காயத்ரி. அவளை நேராகப் பார்த்து

"என்ன சொல்லவாறாய் ஷனா கல்யாணத்துக்குப் பிறகு உன் தயவுலதான் நாங்க இருக்கனும் என்று சொல்லுறாயா? இங்கப்பாரு அதுக்கு அவசியமில்லை. அத்தோட இன்னொரு விஷயம் என் மகன்கிட்ட நான் இன்னும் கதைக்கல்ல அளவுக்கதிகமா கற்பனையை வளர்த்துக்காதேம்மா அவன் முடிவு வேற என்றால் பிறகு தாங்கிக்கொள்ள மாட்டாய் கவலைப்படுவ அதுக்காகத்தான் சொல்லுறேன். தேவையில்லாம கனவு கண்டுக்கு கஷ்டப்பட வேணாம் என்ற நல்ல எண்ணத்துல சொல்லுறேன்." கூறியவர் தன் அறைக்குள் நுழைய அவரைப் பின் தொடர்ந்த விக்‌ஷனா காயத்ரி முன் வந்து கைகளைக் கட்டிக் கொண்டு அவரையே உற்றுப் பார்த்தவள் காயத்ரியின் கைகளைப் பற்றி ஹோலுக்கு நடுவே அழைத்து வந்தாள்.

"பாட்டி பாட்டி ஏய் ராஜேஸ்வரி கூப்பிடுறது காது கேக்கல்லையா கெதியா இங்க வா பாட்டி" கத்தி அழைக்க அவளின் கத்தலில் அறையிலிருந்து என்னமோ ஏதோ என்று பதறி வந்தவர் தன் மருமகளின் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்டு தன்னை கத்தி அழைத்துக் கொண்டிருந்த பேத்தியையும் கைகளை விடுவிக்க முயற்சித்துக் கொண்டிருந்த காயத்ரியையும் கண்டவர்
'ஐயோ இவளே எல்லாத்தையும் கெடுத்திடுவாள் போல. ஏற்கனவே இந்த காயத்ரிக்கு விருப்பமில்லை. இந்த ஷனா செய்யுற வேலைய வச்சு கல்யாணம் பண்ணாம விட்டுவாளே அடி லூசு ஷனா என்ன பண்ணிக்கிட்டிருக்க' எண்ணியவர் பாய்ந்து அவர்கள் பக்கத்தில் வந்தார் வந்த வேகத்தில் தன் மருமகள் மேலிருந்த பேத்தியின் கைகளை பிரித்தெறிந்தார்.

"என்னடி என்ன காரியம் பண்ணிட்டிருக்க அவ உனக்கு மாமியாராகப் போறவ இப்படி கையப் புடிச்சு இழுத்துட்டிருக்க அறிவில்லை உனக்கு" கத்தத் தொடங்கினார் ராஜேஸ்வரி.

"அவங்க என்ன சொன்னாங்க என்று தெரிஞ்சா நீங்களும் என்னை மாதிரித்தான் பண்ணுவீங்க" பதிலுக்கு கத்தினாள் பேத்தி.

"காயத்ரி அப்படி என்ன செஞ்சுட்டா?"

"ஹா.. உன் பேரனுக்கு என்னை கட்டி வைக்க மாட்டாங்களாம். என்னை கனவு காண வேணாம் என்று சொல்லுறாங்க. நான் கனவு காணக் கூடாதா? என் அத்தான் எனக்குத் தான் அவரை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவர்தான் என் மாப்பிள்ளையா வரவேணும் என்று தவமிருக்கேன் ஒரு வருஷமில்லை ரெண்டு வருஷமில்லை எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து, உசுருக்குசுரான என் அத்தானை விட்டுடுவேனா? இப்போ சொல்லு பாட்டி இவங்களை என்ன செய்யலாம். ஆனாலும் உண்மையிலே இவங்க பாவம் இவங்களுக்குத் தெரியல்லை. இவங்களுக்கு நான்தான் மருமகள் இவங்க மகனுக்கு நான் மட்டுந்தான் பொண்டாட்டி. அதுசரி பாட்டி விடியக் காலையில கண்ட கனவு பலிக்குமில்ல." திமிருடன் கூறியவளைப் பார்த்து முகம் சுழித்த காயத்ரி அவளின் கடைசிக் கேள்வியில் பதட்டமானார்.

"எ...ன்ன கனவு?"

"ஆ... முந்தநாள் தான் முழுசா சொன்னேனே. அதுக்குள்ள மறந்துடுச்சா சரி பரவாயில்லை இன்னொரு தரம் சொல்லுறதுல எனக்கும் சந்தோசம்தான்"

"அளக்காம முதல்ல என்ன கனவென்று சொல்லு?" அதட்டினார் காயத்ரி.

"அதுவா மாமியாரே என் செல்ல அத்தான் என் கழுத்துல தாலி கட்டுறாங்க. அதுமட்டுமில்லை நீங்கதான் எனக்கு ஆரத்தி எடுத்து என்னை முத்தமிட்டு உள்ள அழைக்குறீங்க. மொத்தக் குடும்பமும் சேர்ந்து ஒரே ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம்தான் மாமியாரே அத்தோட நான் கண்ட நேரம் அதிகாலைப் பொழுது மாமியாரே உங்களுக்கே தெரியும் விடியக் காலை கனவு பலிக்குமென்று. உங்களுக்கு போனஸா இன்னொரு விசயமும் சொல்லுறேன் உங்க மகன் கல்யாணத்துக்கு சம்மதிச்ச அன்றைக்குத்தான் எனக்கு இந்தக் கனவும் வந்துச்சு. அன்றைக்கே அத்தனையும் உங்ககிட்ட சொன்னேன் ஆனால் அதைவிட பெரிய சந்தோசமா அத்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சது உங்களுக்கு பட இது பின்னுக்கு தள்ளுப்பட்டுட்டு் போல அவ்வளவுதான் இப்போ தெளிவா விளங்கிருக்குமே உங்க மகனோட பாதி நான்தான் அதனால இன்றைக்கே கதைச்சு முடிங்க அதுவும் இப்போவே அத்தான் வேலை முடிஞ்சு வந்த உடனே என்ன விளங்கிட்டா? " அவள் எகத்தாளமாக கூற
'அடிப்பாவி என்னம்மா புளுகுற ஒன்பது மணி உனக்கு அதிகாலையாடி அதுமட்டுமில்ல உன் அத்தான் உனக்குத் தாலி கட்டவேயில்லையே அதைத்தான் உன் பாட்டி கெடுத்துட்டாளே. இப்போ சொல்லு அது பலிக்குமா' இடித்துரைத்த உள் மனதை அடக்கியவள் மீண்டும் காயத்ரியிடம் வம்பு செய்யத் தொடங்கினாள். இதில் எல்லாம் அதிக நம்பிக்கை கொண்ட காயத்ரிக்கோ பதட்டம் தொற்றிக் கொள்ள கடவுளைச் சரணடைந்தாள்.

ஆதித்யனின் கார் வாசலில் வந்து நின்றதும் விக்‌ஷனா பரவசமானாள். காரைப் பார்க் செய்து விட்டு் உள் நுழைந்தவன்

"அம்மா எனக்கொரு டீ அனுப்புங்க"

கூறியவாறு நேராக தனதறைக்குச் சென்றான். ஆனால் அவனுக்காக ஹோலில் காத்திருந்த விக்‌ஷனாவை அவன் சிறிதும் கவனிக்கவில்லை. இது காயத்ரிக்கு மகிழ்ச்சியைத் தர விக்‌ஷனாவிற்கோ எல்லோர் முன்னும் மிகுந்த அவமானமாக இருந்தது. ஆனாலும் அதனை வெளிக் காட்டாமல் தன்னை சுதாகரித்துக் கொண்டாள். காயத்ரி போட்டுக் கொடுத்த டீயை ஆதியின் அறைக்கு எடுத்துச் சென்ற மரகதத்தை தடுத்து விட்டு தானே அவன் அறைக்கு கொண்டு சென்றாள் ஷனா. அவள் அறையினுள் நுழைய அப்போது அவன் பைல்களில் மூழ்கிக் கிடக்க ஆள் அரவம் கேட்டு தலையை நிமிர்த்தாமல்

"மேசையில வச்சுட்டுப் போங்க மரகதம்மா"

"நான் ஒன்றும் மரகதமில்லை" பட்டென்று வந்த பதிலில் தலை நிமிர்த்தியவன்

"அட நம்ம விக்‌ஷ் எப்ப வந்த?"

"நான் வந்து ரொம்ப நேரமாயிடுச்சு சேருக்குத்தான் பார்க்க நேரமில்லை."

"சோரி் விக்‌ஷ் ஒரு அவசர வேலை அதான் எதையும் கவனிக்கல்லை"

"அத்தான் என்னை அப்படிக் கூப்பிடாதே. ஒன்று விக்‌ஷனா என்று கூப்பிடு இல்லை ஷனா என்று கூப்பிடு இந்த மாதிரி வேணாம் அத்தான்."

"அதென்னமோ உன்னை விக்‌ஷ் என்று கூப்பிட்டாத்தான் உள்ளம் கிளுகிளுன்று இருக்கு"

"ஆனால் அது எனக்கு அறவே பிடிக்காது அத்தான். இனி அப்படிக் கூப்பிடாதே. ஒன்று செய் அத்தான் யாரும் கூப்பிடாத நீ மட்டும் கூப்பிடனும் என்று நான் ஆசைப்படுற மாதிரி ஸ்பெஷல்லா ஒரு பெயர் வச்சுக் கூப்பிடு. என்ன ஓகேவா அத்தான்." இவ்வாறாக இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தின் பின் ஆதித்யன் ஃப்ரஸாவதற்கு குளியலறையில் நுழைய ஷனா காயத்ரியிடம் வந்தவள் அவனிடம் பேசுமாறு நச்சரிக்கத் தொடங்கினாள்.

"இப்போதானே வந்தான் முதல்ல அவன் ஃப்ரஸ்ஸாகி வரட்டும் மெல்லக் கதைச்சுக்கலாம்." காயத்ரி அழுத்தமாக கூற அப்போதைக்கு பாட்டியும் பேத்தியும் அமைதியாயினர்.

நேரம் நகரத் தொடங்கியது ராஜேஸ்வரியும் விக்‌ஷனாவும் மீண்டும் காயத்ரியைத் துளைக்கத் தொடங்கினர். அவர்களின் தொல்லை தாங்காது இன்றுடன் இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தார். ஆனால் உள்ளூர சிறு பயமிருந்த போதும் மகன் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்தது அது தந்த திடத்துடன் அவன் அறையை நோக்கி மெல்ல அடிகளை எடுத்து வைத்தார்.

மகனிடம் சென்றவர் அவன் எங்கோ செல்லத் தயாரிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்

"ஆதி எங்கப்பா வெளிக்கிட்ட?"

"ஒரு பிஸ்னஸ் டின்னர் இருக்கு அதுக்குப் போகனும் அதுக்காகத்தான் ரெடியாகிட்டு இருக்கேன். என்னம்மா விசயம் என்னோட ஏதோ கதைக்க வந்திருக்கீங்க போல. இப்படி வந்து இங்க இருந்து சொல்லுங்கோ" தாயை கட்டிலில் அமரத்தியவன் தானும் அவர் அருகிலே அமர்ந்தான் கடவுளிடம் வேண்டிக் கொண்டுதான் மெல்ல ஆரம்பித்தார் காயத்ரி.

"ஆதி உனக்கு ஷனாவைக் கல்யாணம் கட்டி வைக்கலாம் என்று ஒரு யோசனை நீ என்ன சொல்லுறாய்?" எங்கே தன் நம்பிக்கை பொய்த்து திருமணத்துக்கு ஒப்புக்கொண்டிடுவானோ என்று பயந்து கொண்டே கேட்க ஒரேயடியாக மறுத்துவிட்டான் ஆதித்யன்.

"நீங்க சொன்னதுக்காக ஒத்துகிட்டேன். ஆனால் இந்த சொந்தத்துக்குள்ளே கல்யாணம் மட்டும் மொத்தமா வேண்டாம். விக்‌ஷைத்தான் கட்டிக்கனும் என்றால் எனக்கு கல்யாணமே வேண்டாம். நான் அவளை அந்த மாதிரி பார்க்கவே இல்லை. எனக்கு அவள் என் அத்தை மகள் அவ்வளவுதான். அத்தோட அக்காளுங்க மாதிரி விக்‌ஷ் என் உடன்பிறவா தங்கச்சி அப்படித்தான் நினைக்கிறேன் எப்படிம்மா அவளை கட்டிக்கிட முடியும் அதுக்கு வாய்ப்பே இல்லை." மகனின் வார்த்தைகளில் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டு கடவுளுக்கு மனசார நன்றி செலுத்தினார்.

"சரிப்பா இது உன் ஆச்சியோட ஆசை இதுல எனக்கும் அவ்வளவு உடன்பாடு இல்லை. ஆனால் ஒருவேளை உனக்கு இருந்துட்டா அதுக்காகத்தான் கேட்டேன். நான் உனக்கு வெளியிலேயே பொண்ணு பார்க்குறேன்ப்பா"

"சரிம்மா நீங்க என்ன என்றாலும் செய்ங்கோ இப்போ நான் அவசரமாக போயாகனும்" என்றவன் தாயிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியேறினான். அவன் சென்ற மறுநிமிடம் ராஜேஸ்வரியும் ஷனாவும் காயத்ரியை பிடித்துக் கொண்டனர். நடந்ததை கூற இருவரும் நம்ப மறுத்ததோடு காயத்ரிதான் ஏதோ செய்திருக்கிறார் அதனால்தான் ஆதி சம்மதிக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தினர். விக்‌ஷனாவோ எல்லையில்லாக் கோபத்தோடு் கத்தத் தொடங்கினாள். அவளுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் புரிந்து கொள்வதாய் இல்லை.

"என்ன அவருக்கு நான் தங்கச்சியா? நல்லாயிருக்கே ஒன்றா ரெண்டா எத்தனை வருஷம் அத்தான்தான் என் புருஷன் என்று வாழ்ந்துட்டேன். ஆனால் அவருக்கு நான் தங்கச்சா. முதல்ல என்னைக் கட்டிக்க சொல்லுங்க பிறகு கட்டிலுக்கு வரட்டும் தங்கச்சியா? பொண்டாட்டியா? என்று நான் புரிய வச்சுக்கிறேன். என்ன சொல்லுறது விளங்கிட்டா அத்தை?"

" சீச்சீ... என்ன பொண்ணு நீ? உனக்கு வெக்கமில்லையா அத்தைக்கிட்ட கதைக்குற மாதிரியா கதைக்குற. இங்கப்பாரு ஏற்கனவே சொல்லிட்டேன் அவன் ஒத்துகிட்டாத்தான் கல்யாணம் என்று இப்போ அவன் ஒத்துக்கிடல்லை. அதனால நான் எதுவும் செய்ய முடியாது. இதுக்கு மேலேயும் அவன் பின்னாடி சுத்தாம உனக்கென்று ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பாரு. நான் சசிக்கிட்ட கதைக்குறேன்."

"நான் வேற மாப்பிள்ளை பார்க்கனுமா அத்தை? ஓ..... இதுக்குத்தான் சொன்னீங்களா கனவு காணாதே என்று. வெல் பிளே அத்தை வெல் பிளே. நீங்க ஜெயிச்சுட்டீங்க என்று மட்டும் நினைக்காதீங்க என் அத்தானை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். அவருக்கு நான்தான் பொண்டாட்டி. நான் மட்டும்தான். பார்த்துக்கலாம் அத்தை எப்படி இன்னொரு பொண்ணு பார்க்குறீங்க என்று. அப்படிப் பார்த்தாலும் அது கல்யாணம் வரை போகாது. இந்த விக்‌ஷனாவை யாரென்று நினைச்சீங்க விட்டுவேனா என் அத்தானை இன்னொருத்திக்கு." சபதம் கொண்டவளாய் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.

வளரும்.....

கருத்துகளுக்கு 👇👇👇

 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom