ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்
அத்தியாயம் - 04
மறுநாள் நிச்சயதார்த்தம் சிறியளவில் வீட்டில் நடந்தாலும் சற்று ஆடம்பரமாகவே நடந்தது. வீடு முழுதும் மாவிலைத் தோரணங்களாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இருதரப்பிலும் முக்கியமான உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் அவர்களை வரவேற்று அமர வைத்த பின்னர் ஐயர் பெண்ணை அழைத்து வரச் சொல்ல தாரணியும் உதயாவும் நயனதாராவை அழைத்து வந்தனர். அழகான டிசைனர் ஹாப் சாரி அதற்கேற்ப அணிகலங்களில் தேவதையாக மின்னினாள் பெண். அவளை மனையில் அமர்த்த நிச்சய ஓலை படிக்கப்பட்டதுடன் திருமணத்திற்கான நாளும் நேரமும் குறிக்கப்பட்டது. பின் இரு வீட்டாரும் வெற்றிலை, பூ, பழம், தேங்காய் வைத்த தாம்பூலத் தட்டுக்களை மாற்றிக் கொண்டனர். மாப்பிள்ளை வீட்டார் தட்டில் வைத்துக் கொடுத்த பட்டுப் புடவையையும் அதற்கு பொருத்தமாய் ரவிக்கையையும் நயனிக்கு நேர்த்தியாய் உடுத்திவிட்டாள் தோழி தாரணி. மாம்பழ வண்ணம் அவளின் நிறத்துக்கு இன்னும் கூடுதல் அழகைக் கொடுத்தது. முடியை அரை வாசியாய் பிரித்து ஒரு கிளிப்பை மாட்டியவள் ஒற்றையாக மல்லிகைச் சரத்தை சூடி நெற்றிச்சுட்டியையும் வைத்தாள். காதுகளில் ஜிமிக்கி அசைந்தாட மெல்லிய சங்கிலி கழுத்தை சுற்றியிருக்க அவளின் மெல்லிடையை ஒட்டியாணம் அலங்கரித்தது. பொருத்தமாய் வளையல்களையும் கைகளில் அடுக்கி விட்டு நயனியை ஏற இறங்க பார்த்த தாரணி அவளை ரசித்தவாறே
"சும்மா தேவதை மாதிரி இருக்கடி ஐயோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கே." என்றவளின் கூற்றில் வெட்கப்பட்ட நயனியை கண்ணாடி முன் நிற்க வைத்து அவள் அழகை காண வைத்தவள் அவளை அழைத்துக் கொண்டு வந்து அமர வைக்க காயத்ரி லாக்கெட்டுடன் இணைந்த தங்கச் சங்கிலியை தன் மருமகளின் சங்கு கழுத்தில் அணிவித்தார் இனிதே நிறைவேறியது நிச்சயதார்த்தம். ஆதித்யா பக்கத்தில் இல்லாதது மட்டுமே அனைவருக்கும் ஒரு குறையாக இருந்தது. அதுவே நயனிக்கும் சிறு வருத்தத்தை கொடுத்தது.
விருந்துபசாரங்கள் முடிந்து மற்றைய விருந்தினர்கள் கலைய மேற்கொண்டு கல்யாண வேலைகளை பற்றி பேச இரு வீட்டின் முக்கிய உறுப்பினர்கள் மட்டும் கூடி அமர்ந்தனர். அனைவருடைய முகங்களிலும் நிச்சயம் நல்லபடியாக நிறைவேறிய திருப்தி இருந்தது. ஆனால் ரஞ்சனியின் முகத்தில் அவ்வப்போது மட்டும் சிந்தனைக் கோடுகள் எழுந்தன. இதனை கவனித்து கொண்டிருந்தார் காயத்ரி. ராகவன்தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.
"சம்மந்தி நல்லபடியாக நிச்சயம் முடிஞ்சிடுச்சு. கல்யாண ஏற்பாடுகள் பற்றிப் பேசிடலாமே. அநேகமா நாளைக்கு ஊருக்கு போயிடுவோம் அங்கேயும் கொஞ்சம் முக்கியமான வேலைகள் இருக்கு. முடிச்சிட்டு இனி கல்யாணத்துக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னதான் வருவோம் அதனால இப்பவே ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிட்டா நல்லதுதானே."
"ஓம் சம்மந்தி இன்னும் இரண்டு கிழமை தானே இருக்கு கல்யாணத்துக்கு நமக்கு நாளும் காணாது. பாத்திருக்கும்போதே நாள் போயிடும் கடைசி நேரம் வரை வச்சிருக்க வேண்டாம். நாங்களும் அதைப்பற்றி பேசனும் என்று நினைச்சோம்." வாசுதேவன் கூற இவர்களின் பேச்சினை கேட்டிருந்த காயத்ரி எதேர்ச்சையாய் ரஞ்சனியைப் பார்க்க அவரின் முகம் சோகமாக இருந்தது.
"அண்ணா கொஞ்சம் இருங்கோ" என்று
ஆண்களின் பேச்சின் இடையே புகுந்த
காயத்ரி மெதுவாக ரஞ்சனியின் பக்கத்தில் வந்து தோள்களில் கை வைக்க அவரைக் கேள்வியாய் நோக்கினார் ரஞ்சனி.
"ரஞ்சனி என்ன ஒரு மாதிரி இருக்கீங்க. முதல்ல ஒரு விசயம் சொல்லிங்கோ உங்களுக்கு இந்த நிச்சயதார்த்தம் எல்லாம் திருப்திதானே" அவரின் கேள்வியில் சிறிது தடுமாறியவர்.
"எல்லாம் திருப்திதான் ஆனால்.... ஒரே ஒரு குறை மாப்பிள்ளையும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக மனசுக்கும் திருப்தியாக இருந்திருக்கும். அதுதான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாக இருக்கு" ரஞ்சனி ஒருவாறு மனதிலிருந்த சஞ்சலத்தைக் கூற
"அதுதான் எங்களுக்கும் வருத்தம். ம்.... என்ன செய்ய அவன்தான் ஊரிலேயே இல்லையே." தனலட்சுமி சொல்ல
"அதுதான் நானும் கேட்கிறேன் எதுக்காக இவ்வளவு அவசரமா என் பேரனுமில்லாம செய்றீங்க. அவன் வந்த பிறகு நிச்சயதார்த்ததையும் அடுத்து ஒன்றோ இரண்டோ மாசத்துல கல்யாணத்தையும் வச்சிக்கிடலாம் தானே. இப்போ பார்த்தையளா பொண்ணுடைய அம்மாவுக்கு லேசான மனச்சுணக்கம் இதெல்லாம் தேவையா?" ராஜேஸ்வரி எல்லாம் அறிந்திருந்த போதும் சந்தர்ப்பத்தை விடாது குட்டையைக் குழப்ப நினைக்க
"ராஜி ஒரு தரம் சொன்னால் உனக்கு விளங்காதாம்மா. நீ தேவையில்லாத கதைகளைக் கதைக்காம இரு அது போதும்." தனலட்சுமியும் அவருக்கு கொட்டு வைக்க கப் என்று வாயை மூடிக்கொண்டார்.
"அதுசரி எங்களுக்கும் கொஞ்சம் கவலைதான். ரஞ்சனி, அதனாலதான் நாங்க ஒரு முடிவெடுத்திருக்கோம். அகிலாப்பா நீங்களே சொல்லுங்கோ." காயத்ரி தன் கணவனை நோக்கிக் கூற
"வாசுதேவன், இன்றைக்கு நம்ம புள்ளையளோட கல்யாணத்தை உறுதிப்படுத்ததான் எங்க மகனில்லாமலே இந்த நிச்சயத்தை செய்தோம். கல்யாணத்துக்கு முதல் நாள் தான் ஆதி நாட்டுக்கு வருவான். ஊருக்கு வந்து சேர இரவாகிடும் என்று நினைக்குறேன். அதனால முதல் நாள் சாத்தியம் இல்லை. அதுக்காகத்தான் கல்யாணத்தன்றைக்கு காலையிலேயே பொண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றி நிச்சயம் பண்ணிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். நீங்க என்ன சொல்லுறீங்க?" ராகவன் கேள்வியில் சிறிது யோசித்த வாசுதேவன் தன் மனையாளை கேள்வியாய் நோக்கினார். அதில் தன் கணவனின் சம்மதத்தைப் புரிந்து கொண்டவர்
"அது சரிங்க சம்மந்தி, பத்தரைக்குத்தான் கல்யாணத்துக்கு நேரம் குறிச்சிருக்கோம். அப்போ நிச்சயத்தை எப்போ பண்ணுறது. அதுவும் நல்ல நேரத்துலதானே செய்ய வேணும் அன்றைக்கு நிச்சயமும் பண்ணி கல்யாணமும் பண்ண நேரம் போதுமா? சடங்கு சம்பிரதாயம் எல்லாம் நிறைய இருக்கில்லையா? அதனாலதான் கேட்கிறேன்." ரஞ்சனி தன் சந்தேகத்தைக் கேட்க
"ரஞ்சனி, நாம குறிச்ச நாள்ல மூன்று முகூர்த்த நேரம் இருக்கு. நம்ம மதிய விருந்தோட செய்யுறதாலதான் பத்தரை முகூர்த்தத்துக்கு கல்யாணத்தைக் குறிச்சிருக்கோம். மற்றையது காலையில ஆறிருந்து ஏழுக்கு இருக்கு. ஆனால் இரண்டு முகூர்த்தத்துக்கும் இடையில நிறைய நேரம் இருக்குது. அதனால அந்த நேரம் அவ்வளவா சரிப்படாது. மற்றது ஒன்பதுக்கு இப்போ அதுதான் மிச்சமாக இருக்கிறது. அதனால ஒன்பது மணி முகூர்த்தத்துலையே நிச்சயம் பண்ணிக்கலாம். என்ன சொல்லுறீங்க?" காயத்ரி தன் யோசனையைக் கூற
"நல்ல யோசனை சம்மந்தியம்மா. ரொம்ப சந்தோசம் எங்களுக்குப் பூரண சம்மதம்." வாசு பதிலளிக்க
"ஓம் சம்மந்தி இப்போதான் மனசுக்கு திருப்தியாக இருக்கு. நன்றி சம்மந்தி"
ரஞ்சனியும் நெகிழ்ந்து கூற
"அத்தோட தனம்மா உங்களுகிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கப் போறேன் மறுக்கக் கூடாது. கல்யாண செலவு முழுக்க உங்களோடதுதான் என்று சொல்லிட்டீங்க. தயவு செய்து நிச்சயத்தை மட்டுமாவது நான் செய்கிறேனே மாட்டேன் என்று மட்டும் சொல்லிடாதீங்கோ அம்மா. உங்க அளவுக்கு பெரிய அளவில் இல்லாட்டியும் என் வசதிக்கு ஏற்ப சிறப்பாகவே என்னால செய்ய முடியும். என் மகளுக்கு செய்யாம விட்டால் என் மனசுக்கு வாழ் நாளுக்கும் நிம்மதி இருக்காது. " பீடிகையுடன் ஆரம்பித்த வாசுதேவன் கெஞ்சலாக முடிக்க அவரின் மனதறிந்து அதற்கு மட்டும் ஒப்புக் கொண்டார் தனலட்சுமி.
"சரி இப்போ கல்யாண ஏற்பாடுகளைப் பேசிடலாம். இங்கே எங்களுக்கு சொந்தமா ஒரு ஹோட்டல் இருக்கு. ஹோட்டல் நித்திலம் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்குறேன் அதிலேயே பெரிய திருமண மண்டபமுமிருக்கு. அங்கேயே கல்யாணத்தை வச்சுகலாம் என்று நினைக்குறோம். இல்லை உங்களுக்கு கோயில்ல வைக்கனுமா உங்க ஐடியா எப்படி?" ராகவன் ஆரம்பிக்க
"ஹோட்டல் நித்திலம் தெரியும் ஆனால் அது உங்களுடையது என்று இன்றைக்குத்தான் தெரியும். சரி சம்மந்தி நீங்க என்ன சொல்லுறீங்களோ அதையே செஞ்சிடலாம். எனக்கு வேறெந்த ஐடியாவும் இல்லை." - வாசுதேவன்
"அப்போ அங்கேயே நிச்சயம், கல்யாணம் இரண்டையும் வச்சுக்கலாம். அத்தோட சாப்பாடும் அங்கேயே ஏற்பாடு பண்ணிக்கலாம். வரவேற்பு மறுநாள் செய்யலாமா?." - காயத்ரி
"உங்களுக்கு எப்படி வசதியோ அப்படிச் செய்ங்கோ. எங்களுக்கு எதென்றாலும் சம்மதம்." இது ரஞ்சனி
"நீங்க என்ன சொல்லுறீங்க. எப்போ வரவேற்பு வச்சுக்கலாம்" கணவனிடம் கேட்க அவரோ தனலட்சுமியை நோக்கி
"அத்தை நீங்க சொல்லுங்கோ." என்றார்.
"அம்மாடி..... ஒரு விசயத்தை பட்டென்று முடிக்காம மாத்தி மாத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க. சரி உங்களுக்கான விசயம் எல்லாம் கதைச்சு முடிச்சிட்டையல்தானே. இப்போ நான் சொல்லுறதைக் கேளுங்கோ. நம்ம ஹோட்டல்ல தான் கல்யாணம். காலையில ஒன்பதுக்கு நிச்சயம் அதுக்கு முன்ன ஹோட்டல் பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவிலுக்கு போய் பொண்ணு மாப்பிள்ளை பேருல பூஜை ஒன்று செய்யனும். பத்தரைக்கு கல்யாணமுகூர்த்தம் அத்தோட மதிய விருந்து. இவங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு கிழமையில ஊருக்கு போயிடுவாங்க. வரவேற்புக்கு நமக்கு நாள் இல்லை. கல்யாணம் முடிஞ்ச பிறகு ஆயிரம் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இருக்கு. அதனால அன்றைக்கு பின்னேரமே வரவேற்பையும் வச்சுடலாம். வரவேற்பு மண்டபத்துல இல்லை ஹோட்டல் வளாகத்துல இரவுணவோட ஆயத்தப்படுத்திக்கலாம். அந்த நாள் முழுக்க என் பேரனோட கல்யாண விழாதான் திருவிழா மாதிரி நடக்கும் இந்த ஊரே அதைக் கொண்டாடனும். இவ்வளவுதான் விசயம் என்ன விளங்கிட்டா? இப்படி பட்டென்று முடிவெடுக்காம உனக்கென்ன எனக்கென்ன என்று சும்மா சவ்வு மாதிரி இழுத்துகிட்டு இருக்கீங்க." தனலட்சுமி மொத்தமாய் ஒரு முடிவெடுக்க மற்றையவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.
வந்தவர்கள் விடை பெற்ற பின் தன் தோழியிடம் வந்தாள் தாரணி,
"ஏய் நயனி சும்மாவே தேவதை மாதிரி இருக்க உன் கழுத்துக்கு இந்த செயின் இன்னும் சூப்பரா இருக்குடி. ப்பா... இந்த அழகைப் பார்க்க ஆதித்யா இல்லாம போயிட்டாரே."
"அதுதான்டி என் வருத்தமும் அவரும் இருந்து இந்த நிச்சயம் நடந்திருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்குமில்லை. ஹ்ம்..... அந்த பாக்கியம் எனக்கு கல்யாணத்தன்றைக்குத்தான் போல" பெருமூச்சு விட
"கொஞ்சம் பொறுத்துக்கோ மை பியூட்டி இன்னும் ட்டூ வீக்ஸ் தானே உன் ஹேன்ட்ஸம் உன்கிட்டையே வந்துடுவாங்க. அதுவும் மொத்தமா ஸோ டோன்ட் வொரி பீ ஹாப்பி" சிரித்துக் கொண்டே சொன்ன தாரணியின் முதுகில் ஒரு தட்டுத் தட்டியவள்
"ச்ச்சு சும்மா இருடி லூசு மாதிரி உளராம போடி போய் உன் வேலையப் பாரு"
"சரியில்லடி இப்போவே துரத்திவிடுற கல்யாணமான பிறகு சொல்லவே வேணாமாக்கும் சரிங்க மேடம் நேரமாச்சு நான் என் வேலையப் பார்க்குறேன் நீங்க உங்க வேலையை அதாவது கனவுல ஆதியுடன் டூயட் பாடுற வேலையைப் பாருங்க மேடம்" என தாரணி கூற நயனியோ அவளுக்கு விரல் நீட்டி பத்திரம் காட்ட இருவரும் சிரித்துக் கொண்டனர் தாரணியும் விடை பெற்று தன் வீடு நோக்கி சென்றாள். நயனியும் நிச்சய உடை மாற்றி சாதாரண உடைக்கு வந்தவள் தாரணி சொன்னது போல் ஆதியின் போட்டோவை கையில் வைத்து கனவுலகில் மிதந்தாள். இதுவரை பல ஆண்களைக் கடந்து வந்த போதும் ஏன் எத்தனை காதல் மொழிகளைக் கேட்ட போதும் பல காதல் கடிதங்களைப் பார்த்த போதும் எவன் மேலும் வராத காதல் ஆதித்யவர்த்தனை பார்த்த நொடியில் அவன் மேல் வந்தது. அதுவும் பித்துப் பிடிக்கும் அளவிற்கு அவன் மேல் காதல் கொண்டாள். எண்ணிடலங்காத கனவுகளையும் வளர்த்துக் கொண்டாள். அவளுள் வயலின்கள் மெல்லிசையை வாசிக்க இதமான பாடல்களும் ஒலிக்கத் தொடங்கின.
" ............மன்மதனே நீ கவிஞன்தான் மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல்ல
உன்னைக் கண்ட நொடி ஏனோ
இன்னும் நகரல்ல
உந்தன் ரசிகையே நானும் உனக்கேன் புரியவில்லை.
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை. இருபது வருடம் உன்னைப் போல் எவனும் என்னை மயக்கவில்லை.......
நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்.......
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக் கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா?
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ.....
நண்பனே எனக்கு காதலனானால்
அதுதான் சரித்திரமோ........
மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும்
மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும்
வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கறைக்கு உந்தன் பெயரை வைக்கோ
அடிமை சாசனம் எழுதித் தருகிறேன்
என்னை ஏற்றுக் கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக் கொள்ளு.............."
சாதனா சர்க்கம் பாட ஆதித்யனை நினைத்தவளாய் துயில் கொள்ளத் தொடங்கினாள் பாவை.
நிச்சயமான அடுத்த நாளே நயன தாரா வேலையையும் விட்டு விட்டாள். காலையும் மாலையும் தன் மணவாளனின் போட்டோவே கதியாகிப் போனாள்.
இப்படியே ஒரு வாரம் கழிய ஒருநாள் அவள் திருமண விசயம் கேள்வியுற்ற அவள் உடன் பயின்றவர்கள் அவளைக் காண வந்தனர் அன்றுதான் அவளின் குழப்பம் ஆரம்பமானது. அவளின் வருங்கால கணவனின் போட்டோவைப் பார்த்தவர்கள் அவனின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கினர் அவனைப் பற்றி துளைத்தைடுக்கத் தொடங்கினார்கள். அவர் வெளிநாட்டுக்கு போயிருப்பதால், தான் இதுவரை அவனைப் பார்க்கவுமில்லை அவனிடம் பேசவுமில்லை என்று கூற அவர்களோ நம்ப மறுத்தார்கள். அவனின் அழகிலும் செல்வ நிலையிலும் நயனிக்கு வந்த அதிஷ்டத்திலும் சிறு பொறாமை கொண்ட சில தோழிகள் அவளை காயப்படுத்த
"உண்மையிலே மாப்பிள்ளைக்கு சம்மதம்தானா? கட்டாய கல்யாணமோ? மாப்பிள்ளை இல்லாமல் நிச்சயதார்த்தம் நடந்திருக்கு கல்யாணம் வேற அவசர அவசரமா நடக்குது. இந்த காலத்துல இருக்குற தொழில் நுட்பத்திற்கு அடுத்த கிரகத்துக்கு போனாக் கூட பேச முடியும் போல ஆனால் பாரு வெளிநா.....ட்டுக்குப் போனதால இதுவரை பேசவே இல்லையாம் நம்புற மாதிரியா இருக்கு?" என தேவிகா என்பவள் ஆரம்பிக்க அவளுக்கு சிலர் பக்க வாத்தியம் வாசித்தனர். அப்போதுதான் அவனைப் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியவில்லை என்ற உண்மை உறைத்தது அவர்கள் கூறுவதிலுள்ள உண்மையும் புரிந்தது. உள்ளே மனம் வாடிய போதும் தோழிகளிடம் காட்டிக் கொள்ளாது தன் தந்தை வருங்கால கணவனைப் பற்றி தன்னிடம் கூறியவற்றை சொல்லி ஒருவாறு பேசி சமாளித்தாள். அன்றிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை அவளின் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. காதல் கொண்ட மனது குழப்பத்தைத் தீர்த்து தன்னவனுக்கும் தன் மேல் காதல் உண்டு என்ற விடையைக் காண தவியாய் தவித்தது. இதுவரை அவளின் குழப்பம் தீராமலிருக்கவே தன் உயிர்த் தோழிக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.
"சொல்லுங்க கல்யாணப் பொண்ணு இந்த காலை நேரத்துல உங்களுக்கு எங்க ஞாபகம் வந்திருக்கு" மறுமுனையில் தாரணியின் உற்சாக குரல் கேட்டதும் லேசான விசும்பலுடன்
"ஹலோ தாரு... உன்கூட கொஞ்சம் பேசனும்ப்பா நீ ப்ரீயா இருக்கியா?" அவளின் குரலிலுள்ள வித்தியாசத்தை உணர்ந்த தாரணியோ கேலியைக் கைவிட்டு விட்டு சற்றுப் பதட்டமாக
"என்னாச்சுப்பா, உன் குரலே சரியில்லையே என்ன விசயம்?"
தன் தோழிகள் வந்ததிலிருந்து இன்று காலை வரை நடந்த அனைத்து விடயத்தையும் ஒப்பித்தாள் நயனதாரா.
"நீ என்ன லூசா? உனக்குத்தான் தேவிகாவப் பத்தி நல்லாத் தெரியுமில்லை அவ ஒரு பொறாம புடிச்சவ ஸ்கூல் டேய்ஸ்லையே இப்படித்தான் எதாவது பண்ணிகிட்டே இருப்பா அவளுக்கு மத்தவங்க கொஞ்சம் நல்லா இருந்தாலே புடிக்காது. ஆதித்யா வேற பார்க்க ஹேன்ட்ஸம்மா இருக்காரு அதுமட்டுமா ரொம்ப பெரிய பணக்காரங்க வேற எப்படி வயிறு காயும் சொல்லு அவளெல்லாம் ஒரு ஆளுன்னு அவ சொன்னத நம்பி அப்பம்மாகிட்ட வேற போய் கதைச்சிருக்க உன் தொல்லை தாங்காம அவங்க உன் மாமியார்கிட்ட கதைச்சிருக்காங்க காயத்ரியம்மா நல்லவங்க என்றதாலதான் எதுவும் தப்பா எடுத்துக்கல்ல. இதுவே வேற யாராவதுன்னா யோசிக்க மாட்டாயா?" படபடத்தாள் தாரணி.
"என்னை என்ன பண்ணச் சொல்லுற வேற வழியில்லாமத்தான் அப்பம்மாகிட்ட போய் கதைச்சேன். அத்தைகிட்டையும் கேட்டு கிளியர் பண்ணியாச்சுத்தான் இருந்தும் ஒரு குட்டிக் குழப்பம் அதுக்குத்தான் உனக்கு போன் பண்ணினேன்." - நயனி
"உனக்கு அறிவே இல்லைடி இப்படி ஒரு குழப்பம் என்றால் நீ முதல்ல என்கிட்ட சொல்லிருக்கலாமே. எதுக்கு டி அப்பம்மாவ டென்ஸன் படுத்தின. எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து சொல்லுற, நீ உண்மையாவே லூசு தான்டி"
"ஏசாதப்பா, சரி அதைவிடு தேவி பொறாம புடிச்சவதான் ஆனால் அவ சொல்லுறதுலையும் ஒரு உண்மையிருக்கில்லை"
"ஐயோ என்னால முடியல்லடா சாமி. மீண்டும் முதல்ல இருந்தாடி நான் மட்டும் இப்போ உன் பக்கத்துல இருந்தா உன் தலையில நங் என்று கொட்டிப் போட்டுடுவேன். இங்கப்பாரு ஆதித்யா வெளிநாட்டுக்கு ட்ரிப் ஒன்னும் போகல்லையே வேலை விசயமாத்தானே போயிருக்கார். அவருக்கு என்ன பிஸியோ"
"உண்மையாவே அவருக்கு சம்மதம் இருக்குமாடி அவருக்கும் என் மேல கா... விருப்பம் இருக்குமாடி"
" அம்மா சொன்ன மாதிரி சம்மதமில்லாம கல்யாணம் வரை வரமாட்டாங்க நீ ஒன்னும் குழப்பிக்காதே. அதை விடு
இப்போ என்னமோ சொல்ல வந்துட்டு மாத்தி சொன்னாயில்லை ம்.... அது கா...தல் இருக்குமா என்று தானே சொல்ல வந்த?"
"அப்படியில்லைடி விருப்பமிருக்குமா என்றுதான் கேட்க வந்தேன். சும்மா ஓட்டாத"
"சரிம்மா நீ சொன்னா நம்பத்தான் வேணும். இருக்கும் இருக்கும் காதல்.... கட்டாயம் இருக்கும். சரி நிச்சயமா இந்தக் குழப்பத்துல ஒழுங்கா தூங்கிருக்க மாட்ட இப்போ கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு. ஈவினிங் ஃபங்ஷன் வேற இருக்கில்லை. நான் லன்ச் முடிச்சிட்டு நேரத்தோடவே வாரேன் டி."
"ஓகேடி உன்கிட்ட பேசின பிறகு தான் கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கு எனக்கும் ரொம்ப டயர்டாத்தான் இருக்கு முழுசாத் தூங்கி ரெண்டு நாளாச்சுப்பா நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் சீக்கிரம் வந்துடுப்பா பாய்"
"பாய் டி" அழைப்பைத் துண்டித்தாள் தாரணி.
பாதிக் குழப்பத்தை பெற்றோர் தீர்க்க மொத்தத்தையும் தன் உயிர்த்தோழி போக்க அவர்களின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டவளாய் கடவுளிடமும் ஒரு வேண்டுதலை வைத்தவள் மனது லேசாகத் தெளிய இரண்டு நாட்களாய் தூங்காதது வேற உடலை வாட்ட அப்படியே அடித்துப் போட்டது போல் உறங்கிவிட்டாள்.
வளரும்.....
Please share your comments here👇
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com