Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கணம் மாறிய போது

அடுத்த நாள் பெட்டி எடுத்து கொண்டு, அவள் தனது குடும்பத்தினருடன் வருகை தர, ராம் கோபத்தின் உச்சிக்கே சென்றான். உள்ளே விருந்து சமைத்து கொண்டிருந்த லட்சுமியிடம்



"என்ன இதெல்லாம் ?" என்று காய, லட்சுமி சாவதானமாக



"வடை, பாயாசம். வேணுமா ?" வினவ, ராம்



"ஹா ஹா பெரிய காமெடி, சிரிச்சிட்டேன். இதெல்லாம் என்ன ? நேத்து எதோ அவள சமாதானம் செய்ய சொன்னீங்க பார்த்தா ! அவ நிஜமாவே வந்து இருக்கா ! எனக்கு பிடிக்கல" என்று எதிர்ப்பை காட்ட, லட்சுமி நக்கலாக



"சோ அதான் சார் வந்து ராகவ் கிட்ட, முதலில் பொண்ணு, ஊசி பின்னு வசனம் பேசிட்டு, அப்பறம் அவ அப்பா தவறி போன பிறகு, அவ இப்படி சோகமா இருக்கறது எனக்கு பிடிக்கலே, அவ கண்ணுல ஆனந்த கண்ணீர் தான் வரணும், அப்பறம் என்னவோ சொன்னானே ஹான்..உனக்கு இங்க வலிக்குதாமே, அவ இப்படி இருக்கறது பார்த்தா" என்று அவன் நெஞ்சை குத்தி காண்பிக்க, ராம்



"ஒரு மண்ணும் இல்ல, ராகவ் பொய் சொன்னான். சும்மா ஏதாச்சும் சொல்லிக்கிட்டு, அவளை கிளம்ப சொல்லுங்க" என்று கத்த, லட்சுமி



"நீ வாக்கு தவறலாம், ஆனா நான் இல்ல, அவ என்கூட தான் இருப்பா, உனக்கு கஷ்டமா இருந்தா, வேற வீடு பார்த்துகிட்டு போறோம் " என்றும் அவர், ராமபத்ரனின் அன்னை என்று நிரூபிக்க, ராமால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவனுக்கு காதலை ஒத்துக்கொள்ள முடியாது இருக்க காரணம் இருக்கிறது, அவள் நிலையோ வேறு மாதிரி.



என்னத்தான் லட்சுமி அவளை நன்றாக பார்த்து கொண்டாலும், ராமை அவள் நேருக்கு நேர் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், தனது அறைக்குள் முடங்கி விடுவாள். கொச்சியில் இருந்தே தந்தையின் நிறுவனத்தை கண்காணித்து விட்டு, சற்று நேரம் ஓய்வாக தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்க, ராம் வீட்டினுள் நுழைந்தான்.



அவனை கண்டவுடன், அவள் தொலைக்காட்சியை அணைத்து விட்டு, தன் அறைக்குள் ஓடி ஒளிய , ராமா கடுப்பில்

"நான் பூதம் பேய் பிசாசு இல்ல" என்றான் சத்தமாக. அதற்கு லட்சுமி மறுமொழி வேறு



"அதை விடடா நீ ! ஸ்ட்ரிக்ட் ஆபீசர்" என்று வாரிவிட , ராம் அவளது அறை வாயிலில் நின்று



"மாளவி! இப்போ நீ வரியா ! நான் உள்ள வரணுமா !" என்று மிரட்ட, மாளவி எதற்குடா வம்பு என்று வெளியே செல்ல, அவள் கையை பிடித்து, ரிமோட்டை கொடுத்து



"ஒரு கம்பெனி எம் டி, கொஞ்சம் கெத்தா இரு அண்ட் ஐ டோன்ட் ஈட் ஹ்யுமன்ஸ்" என்று கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.





முன்பு அவளது ஒதுக்கம், அவன் அன்று லட்சுமியிடம் பேசியதை கேட்டது தான். அந்த ரிமோட் சம்பவத்துக்கு பின், கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் சகஜமாக பழக ஆரம்பித்தாள். ஒருநாள், அவனது பக்கத்து வீட்டு குழந்தையுடன் சிரித்து பேசி மகிழ, அதை பார்த்தவன் முகத்தில் அழகாய் ஒரு புன்னகை. அதை கண்ட லட்சுமி அவன் நெஞ்சை சுட்டி காண்பித்து



"என்னடா இங்க இப்போ சரியாச்சா?" என்று மடக்கவும், அவன்



"நான் ரூமுக்கு போறேன்" என்று தப்பித்து விட்டான். இலைமறைகாயாக அவனும் தன்னை அறியாது தனதன்பை உணர்த்த, புரிந்து கொள்ள வேண்டியவள் மெல்ல மெல்ல அவனை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.



"ஏன் அத் ..ஆன்டி ! அவர் சின்ன வயசில் இருந்தே போலீஸ் ஆகணும்னு இருந்தாரா" என்றும் அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவள் முயற்சி செய்ய, லட்சுமி



"அத்தேன்னு கூப்பிடு ! பின்னாடி அப்படி தானே கூப்பிட தான் போறே! அவனுக்கு போலீஸ் ஆகணும்னு ட்ரீம் இல்ல, வெறி. அதான் அவனுக்கு அவன் வேலைன்னா அப்படி ஒரு பக்தி" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, அழைப்பு மணி அடிக்க, லட்சுமி திறக்க, உள்ளே அடாவடியாக ஆருஷ் நுழைந்தான்.



ஆருஷ், ஆகாஷின் அண்ணா. அவனுக்கு மாளவி மீது சமீபமாக ஒருதலை காதல். சுப்பிரமணியன் அவளுக்கு வரன் தேட ஆரம்பிக்க, அவன் தானே அவளை மணக்கிறேன் என்று முன்வந்தான். ஆனால் சுப்பிரமணியன் சம்மதிக்கவில்லை. ஏனென்றால் ஆருஷை சட்ட விரோத வேலைகள் செய்வது மட்டுமல்ல, பெண்கள் சகவாசமும் உண்டு. ஆருஷின் தந்தை இவன் பக்கம். முன்பு இவர்கள் குடும்பம், சுப்பிரமணியத்தை கிட்டத்தட்ட மிரட்டி தான் ஆகாஷுடன் அவளது நிச்சியத்தை முடித்தனர். சுப்பிரமணியம் வேறு வழி இல்லாது, தாய் இல்லா பெண்ணான மாளவியிடம் இந்த மிரட்டல் பற்ற எல்லாம் கூறாது தான் நிச்சியம் செய்தார். மாளவியால் இதை தாங்க முடியாது என்று அறிவார். எப்படியாவது இந்த நிச்சியம் நின்றால் நல்லது என்று எண்ணியவருக்கு, கடவுள் ராமபத்ரன் ரூபத்தில் வந்தார்.



மும்பையில் ராம் செய்த என்கவுண்டரில் மாண்ட அந்த 'சிவிலியன்' ஆகாஷ் தான். அந்த ஆப்பிரிக்காரர்களுடன் வியாபாரம் பேச, ஆகாஷ் மற்றும் ஆருஷ் முதலில் வருவதாக இருந்தது, ஆனால் அங்கே காவல்துறை இருக்கின்றனர் என்ற செய்தி கிடைத்தவுடன், ஆருஷ் அந்த ஆப்பிரிகர்களை தொடர்பு கொள்ள, அவர்கள் வெளியே வரும்முன் தான் ராம் என்கவுன்டர் ஆரம்பிக்க, உணவகத்தை விட்டு வெளியேறி விட்டனரா என்று பார்க்க ஆகாஷ் அங்கே நுழைய, அவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். அவனை சுடும் போது, ட்ரிக்கரை ராம் மற்றும் அந்த ஆப்பிரிக்கன் பிடித்து இருந்தனர், யார் அழுத்தினர் என்று கூற இயலவில்லை. ஆனால் ஒரு குடிமகன் இந்த துப்பாக்கி சூட்டில் சுட்டு கொல்லப்பட்டான் என்று அது வேறு விதமாக பிரச்சனை ஆக, ராம் மனித உரிமை மீறல் என்ற பேரில் சஸ்பெண்ட் செய்ய பட்டான்.



ஆனால் இறந்தவனிடம் எப்படி துப்பாக்கி இருந்தது, அவன் ஏன் அங்கு வந்தான் என்ற கேள்விகளும் வந்தன.எல்லாவற்றுக்கும் மேல், அந்த ஆப்பிரிக்காரனுக்கு வந்த அழைப்பில் இருந்த அந்த இந்திய எண், ஆகாஷிடமும் இருந்தது. ஆகையால் அவன் வரவில் சந்தேகம் வந்தது. பாழும் பணம் முன் எல்லாம் தவிடுபொடியாக, ஆகாஷ் ஒரு அப்பாவி என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரம் ராமின் வழக்கறிஞர் ட்ரிக்கரை ராம் தான் அழுத்தினான் என்பதற்கு சாட்சிகள் இல்லை என்று வாதாடி, அவனது பதவி நீக்கத்தை ரத்து செய்தார்.



இது துப்பாக்கி சூடு செய்திகளில் வந்தபோது, அவனது ஜாயின்ட் கமிஷனர் தலைமையில் ஒரு படை என்று தான் குறிப்பிடப்பட்டதே ஒழிய, அவன் பெயர் வரவில்லை. நீதிமன்ற வழக்கை பற்றிய செய்தியில் அவன் பெயர் வந்திருந்தது. மாளவியிடம், இந்த செய்தி கூறிய தருணம், அவள் அயல்நாட்டிற்கு படிப்பதற்காக பயணம் செய்து கொண்டிருந்தாள்.



அவளிடம் அவனுக்கு விபத்து என்று கூறிவிட்டார், சுப்பிரமணியம். அவள் ஆகாஷின் தந்தையிடம் பேச, அவர் ஆகாஷ் அந்த உணவகத்திற்கு எதேச்சையாக செல்லும் போது, நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்துவிட்டான் என்று சொல்ல, அவள் எதற்கு அங்கே சென்றான் என்ற கேள்வியை மீண்டும் கேட்டாள்.



ஏனென்றால் அவளும், ஆகாஷுடன் துப்பாக்கி சூடு நடக்கும்முன் அந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சென்று விட்டனர். அன்று அவளுக்கு விமான பயணம் வேறு. படிப்பு முடிந்த பின் திருமணம் என்று பேசியிருந்தனர். துப்பாக்கி சூடு நடந்த போது, அவள் விமானநிலையத்தில் இருந்தாள். ஆகாஷின் தந்தை அவளிடம், அவன் தனது உடமைகளில் ஒன்றை அங்கேவிட்டு விட்டான், அதை மீண்டும் எடுக்க சென்றபோது, துப்பாக்கி சூட்டில் அவன் மரித்தான் என்று கூற, அவள் சந்தேகம் தீராது தந்தையிடம் துருவி துருவி விசாரித்தாள்.



அவர் தான் ஆகாஷின் குடும்பம் செய்யும் சட்ட விரோத வேலைகள் பற்றி சொல்லிவிட்டு எம்மாதிரியான நிலையில் அவள் நிச்சியம் நடைபெற்றது என்றும் கூற, அவளுக்கு, அசாத்தியமான கோபம் வந்தது. என்றாவது ராமபத்ரனை பார்த்து நன்றி சொல்ல வேண்டுமென்று தீர்மானித்து கொண்டாள். சிறிது காலம், வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு திரும்பினாள். அப்போது அவளுக்கு வேறு வரன் பார்க்க ஆரம்பிக்க, ஆருஷ் தொல்லை செய்ய ஆரம்பித்தான்.





எப்படி இவர்களிடம் இருந்து தப்பிக்க என்று பார்த்த போது தான், ராமபத்ரனுக்கு வரன் பார்ப்பதை அறிந்துகொண்டு சுப்பிரமணியன் இதை பெண் பார்க்கும் படலம் வரை கொண்டு சென்றார். ஆனால் மாளவிக்கு இது பிடிக்கவில்லை. ஒருவரை தன் சுயநலத்திற்காக கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கவில்லை. அதை தான் அன்று பெண் பார்க்கும் படலம் போது கூற முயன்றாள். அவன் கேட்கவில்லை, அடுத்த நாளும் கூற வர அவளுக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பின் சுப்ரமணியனின் கொலை, மாலாவின் கடத்தல் என்றெல்லாம் போக, அவளுக்கு இதில் மீண்டும் ராமபத்ரன் மூக்கை நுழைத்து வீணாக மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தீர்மானமாக நம்பினாள்.அதுவும் ஒரு நல்ல காவல்துறை அதிகாரி இவர்களிடம் சிக்கிக்கொண்டு பலியாக விரும்பவில்லை.



ஆனால் இன்று ராமபத்ரன் அவர்களை நேருக்கு நேர், யுத்த களத்தில் சந்திக்கும் நாள் வந்துவிட்டது. வீட்டினுள் அடாவடியாக நுழைந்த ஆருஷ், லட்சுமியை தள்ளிவிட்டு மாளவியை இழுத்துக்கொண்டு சென்றனர். ராம்மிடம் விஷயம் தெரிவிக்கப்பட, அவன் வேகமாக வீடு அடைந்தான். லக்ஷ்மிக்கு நெற்றியில் காயம், அவரை மருத்துவமனை அழைத்து சென்ற போது அவனுக்கு ஓர் அழைப்பு.



"என்ன பெரிய பருப்பா நீ! உன் வீட்டில் இருந்தே அவளை தூக்கிட்டேன் பார்த்தியா?" என்று அசிங்கமாக ஆருஷ் பேச, ராமபத்ரன் ஒன்றும் பேசாது அவனை பேசவிட்டான். கடைசியில் ஒன்றே ஒன்று மட்டும் தான் ராம் அவனிடம் கூறினான்



"வெயிட் அண்ட் வாச்" என்று கூறிவிட்டு, இந்த அழைப்பு எங்கிருந்து வருகிறது என்று கண்டெடுத்தான். சற்று நேரத்தில் அவன் அங்கே.



துப்பாக்கி சூடு அங்கும் இங்கும் நடக்க, ஒரு கட்டத்தில் ராம்மின் குண்டுகள் தீர்ந்து போன நிலையில், ஆருஷ் கையில் துப்பாக்கி இவனை குறிபார்த்து நிற்க, அந்த திக்திக் நொடியில், ஆருஷ் ட்ரிக்கரை அழுத்த, தன் கட்டுக்களை ஒருவாறு அவிழ்த்து கொண்டு மாளவி, தன்னுயிர் காத்து, ஊரை காக்கும் காவலனை காக்க



"நோ…" என்று அலறியபடி ஓட, குண்டு காற்றை கிழித்தது. எல்லாம் ஸ்தம்பித்த நிலையில், ராம் கீழே விழுந்தான். அதன் பின்…





கொச்சின் பதிவு அலுவலகம்



"எல்லாம் ரெடியா?" என்று கேட்டபடி பதிவாளர் உள்ளே நுழைய, அழகான கசவு புடவையில் மிளர, ராம் வேட்டி சட்டையில் ஆண்மையின் இலக்கணமாக மிளிர்ந்தான். ராம்மின் கடவுள் நம்பிக்கை எல்லாம், பள்ளியிலேயே காற்றில் பறந்து விட்ட ஒன்று. அவன் தந்தையை அவர் எதிரிகள் வெட்டி சாய்த்த போது, அவன் கடவுள் நம்பிக்கை வெட்டி சாய்க்கப்பட்டது. ஒரு நேர்மையான நீதிபதி அவர், பிரபலமான அரசியல் புள்ளி கொலை செய்ததற்கு தூக்கு தண்டனை வழங்க, அது அவரையும் காவு வாங்கி விட்டது.



நியாயம் செய்ததற்கு இந்த அநியாயம் என்றால், கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை கொண்டு விட்டான். ஆகையால் திருமணம் பதிவு திருமணம் மட்டுமே. லட்சுமியின் அதட்டலுக்காக, பதிவு திருமணம் கழிந்து தாலி கட்டினான்.



கொசுறாக "உங்களால் தான் கோல்ட் விலை குறைய மாட்டேங்குது" என்று சத்தமும் போட்டான்.



இருவர் திருமணம் முடிந்து, அவர்கள் தனிமை நேரம் முன், லட்சுமி சென்னைக்கு கிளம்ப, ராம் இதை முற்றிலும் எதிர்பார்க்காதவன்,



"என்னை இப்படி தனியா விட்டு போனா, நான்.." என்று ஆரம்பிக்க, லட்சுமி



"கல்யாணம் செஞ்சாச்சு. இனி உன் பாடு, உன் பொண்டாட்டி பாடு" என்று எஸ் ஆக, மாளவி நக்கலாக



"கொச்சின் ஏசிபி! கொஞ்சம் கெத்தாக இருங்க. ப்ளஸ் ஐ டோன்ட் ஈட் ஹ்யுமன்ஸ்" என்று அவன் பாட்டை அவனுக்கு திரும்பி படிக்க, ராம் வழமைக்கு மாறாக ஒன்றும் பேச முடியாது நின்றான்.



முதலிரவில் இருவருக்கும் பதட்டம். இனி இருவர் மட்டும். ஓரளவு ஒருத்தரை ஒருவர் அறிவர். ஆனால் அவன் கோபம், இவள் தயக்கம் என்று நேரெதிர் குணங்கள் நிறைய இருவருக்கும் உண்டு. வாழ்வு இனி எப்படியோ என்ற கவலை.



"ஒன்னு சொல்லணும்" என்று இருவருமே ஒரே நேரத்தில் ஆரம்பிக்க, ராம்



"நீ முதலில் சொல்லு" என்று விட்டுக்கொடுத்தான்.



"ஐ நீட் சம் டைம்" என்று பட்டென்று சொல்லிவிட்டாள்.



"ஷ்யூர்" என்று இயல்பாக கூறிவிட்டு வெளியே சென்று படுக்க எத்தனிக்க, அவள்



"எங்க போறீங்க ஏசிபி! இங்கே படுங்க" என்று அவனிடம் பழக்க தோஷத்தில் ஏசிபி என்று விளிக்க, அவன்



"ராம்" என்று திருத்தினான். நாக்கை கடித்து கொண்டவள்,



"ம்ம். உங்க பேர் கொஞ்சம் ஒல்ட் பேஷண்ட். எப்படி கூப்பிடனு தெரியல" என்று குரல் எழும்பாது தயங்க, அவன் அவள் முகத்தை கையில் ஏந்தி



"ராம், தமிழில் ரெண்டு லெட்டர் தான்." என்று காதலை கண்ணில் தேக்கி கேட்க, அவள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல்,



"ராம்" என்று விளிக்க, அவள் குரலில் தன் பெயர் கேட்டவுடன், தன்னை தொலைத்து அவள் இதழ்களில் சரண் புகுந்தான். முதல் தீண்டல், தடுமாற்றங்களை தாண்ட, ஒரு கட்டத்தில் அவள் கோரிக்கை நினைவுக்கு வர, இதற்கு மேல் நல்லதில்லை என்று அவன், இதழ் பிரிந்தான். அவன் காதலின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாது அவள் இருக்க, ராம்,



"மாளவி! அழகான சஹானா ராகத்தோட குட்டி தங்கச்சி. இப்படி எல்லாம் என்னை பார்த்தா, பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை" என்று கண் சிமிட்ட, மாளவி வெட்கம் அடைந்து தலையை தாழ்த்திக் கொள்ள, அவள் முகத்தை நிமிர்த்தியவன்



"அம் நாட் அ ரொமான்டிக் பெர்சன். முரட்டு போலீஸ் மேன். உனக்காக என்னால முழுசா என்னை மாதிக்க முடியாது. சில நாள், நான் வீட்டுக்கு வராம இருக்கலாம். உனக்கு மிரட்டல் போன் கால்ஸ் வரலாம். என் உயிருக்கு.." என்று சொல்லுமுன் அவன் வாயை தன் கைகளால் பொத்தி,



"நான் தினம் பொக்கே அண்ட் சாக்லேட்ஸ் எதிர்பார்க்கிற பொண்ணு இல்ல. தட்ஸ் நாட் ரொமான்ஸ் டு மி. உங்க உயிரை மதிக்காது நீங்க அன்னிக்கி எனக்காக வந்து, குண்டடி பட்டு" என்று அவன் சட்டையை பிரித்து, ஆருஷ் அவனை சுட்ட இடத்தை காண்பித்தாள். ஆம், இடையே புகுந்து அவனுக்கு பதில் குண்டுகளை தன் மேல் தாங்க வந்தவளை தள்ளிவிட்டு குண்டினை தன் வலது மார்பில் தாங்கினான்.



அதில் மாளவி வெறி வந்தாற்போல் ஆருஷின் கையில் இருக்கும் துப்பாக்கியை மதிக்காது, அவனை கையில் கிடைத்த பொருள் கொண்டு தாக்க, ராம் ஒருவாறு எழுந்து, ஆருஷ் கையில் இருந்து மாளவியின் தாக்குதல் காரணம் நழுவிய துப்பாக்கியை பற்றியவன் அவனை வீழ்த்தினான், ஒரேடியாக.



அதன் பின், ரத்தப்போக்கில் அவனும் வீழ்ந்தான். மருத்துவமனை, அறுவை சிகிச்சை, வீடு என்று ஒருவாறு தன்னிலை அடைந்தவன், அவளை மணக்க சம்மதம் கோரி மணந்தும் கொண்டான்.



"உங்க உயிர், என்னோட பிராபெர்டி கூட, அதை நீங்க கண்டிப்பா பத்திரமா பார்த்துக்கணும். அம் யூ" என்று அவன் இதழ்களை அவள் முற்றுகை இட, இருவரும் பரிபூரண சதி-பதி ஆயினர்.





ஒரு கணம் அவன் வாழ்வை தடம் புரள செய்ய



அதே கணம் அவளை தடம் புரளாது வழி நடத்த



கணங்கள் மாறிய போது



வாழ்வு பாதை மாறி



காதல் வெளிச்சத்தில்



கரை சேர்ந்தது.
 
ஹலோ மக்களே,
திஷி ஹியர். என்னோட சிறு கதை போட்டுட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்கு, எந்த கதா பாத்திரம் பிடிச்சு இருக்கு, எந்த இடம் ரசித்து படிச்சீங்க ன்னு சொன்னா, மகிழ்வேன்.

எனக்கு லட்சுமியின் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அண்ட் அவங்களும் ராம் பேசும் இடங்கள்.

உங்களுடைய பிடித்ததை கண்டிப்பா சொல்லுங்க

வெயிட்டிங்

திஷி
 

New Threads

Top Bottom