Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
நம்ம ஹீரோஸ் பொறந்‌துட்டாங்க ஜிகர்தண்டாஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 2



பூர்ணிமாவின் கேள்வியில் திடுக்கிட்ட மரகதம், "என்ன கேள்வி கேக்குதா தாயி? இது உன் குழந்தை இல்லாம ஊரான் வீட்டு குழந்தையா? மொதல்ல அழறவனுக்கு பாலைக்கொடு" என மிரட்ட, பேசாமல் குழந்தையை வாங்கிக்கொண்டு அவர் கூறியபடி பால் கொடுக்கத் தொடங்கினாள்.


ஒருபுறம் அவள் பால் கொடுத்துக் கொண்டிருந்தாலும் மறுபுறம் அவளின் விரல்கள் அருகில் படுக்க வைக்கப்பட்டிருந்த சிவந்த மேனியனையே மெதுவாக வருடிக்கொண்டிருந்தன.


மனம் முழுவதும், ‘இவன் நம்ம வீட்டு வாரிசு. அவன் அவள் வீட்டு வாரிசு’ என மரகதம் கூறியவைகளே ஓடிக்கொண்டிருந்தன.


ஆனால், இக்கணத்திலிருந்து தான் செய்யப்போகும் தவறுகள் பிற்காலத்தில் தன் மகன் ரூபத்தில் தன்னையே வருத்தும் என்பதை அவள் முன்கூட்டியே அறிந்திருந்தால் சுதாரித்திருப்பாளோ?


மறுநாள் காலையில் நாலரை மணிக்கே விழித்த புறாக்குஞ்சுகள் தங்கள் இருப்பை ஊராருக்கு உணர்த்த உச்சஸ்தாயில் கத்தினர். திடுதிடுவென எழுந்தமர்ந்தாள் பூர்ணிமா.


"அய்யோ! ஏன்டா இப்படி கத்துறீங்க?" என திட்டிக்கொண்டே, பஞ்சுப்பொதியனை மட்டும் தூக்கி பால் கொடுத்தாள்.


விழித்து லேசாக தலையை மட்டும் தூக்கி எட்டிப் பார்த்த மரகதம், "இப்படி ரெண்டு பேரும் அழும் போது ஒரு புள்ளைக்கு மட்டும் தனியா பால் கொடுக்கக்கூடாது தாயி. ரெண்டு பேருமே அழுதானுவல்லா? ரெண்டு பேருக்கும் ரெண்டு பக்கமும் பால் கொடுக்கனும்" என அவளின் அருகில் வந்து, இரண்டு தலையணைகளை அவளின் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக வைத்து, குழந்தைகளின் தலைப்பகுதியை அவளின் தனங்களை நோக்கியும், உடல் பகுதியை தலையணைகள் தாங்குமாறும் வைத்து, அவளின் கைகள் இரண்டையும் குழந்தைகளின் தலைப்பகுதியும் உடற்பகுதியும் ஒரே நேர்கோட்டில் வருவது போல் பிடிக்கச்சொல்லி, பால் கொடுக்கச் சொன்னார்.


பூர்ணிமாவும் திணறியபடியே அவர் கூறியவைகளை செய்தாள்.


மரகதம் விடியக்காலை ஐந்தரை மணிக்கு வீட்டின் முற்றத்தை பெருக்கித் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருக்க, அவரருகில் மூச்சு வாங்க நின்றான் நீதிதாசன்.


அரக்க பரக்க கையில் பொம்மைகளுடன் ஓடி வந்திருந்தவன், தன் அன்னையிடம் பூர்ணிமா மற்றும் குழந்தைகளைப் பற்றி விசாரித்தான்.


பின், "பூமா!" என்று கத்திக்கொண்டே அவளிருக்கும் அறைக்குள் புக, தொட்டிலுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இரு குழந்தைகளில், கருநிற கண்ணனையே அவளின் விழிகள் வெறித்துக் கொண்டிருந்தன.


அவனின் குரல் கேட்டு திரும்பியவள் மெதுவாக நிமிர்ந்தமர்ந்தாள்.


அருகிலிருந்த குழந்தைகளைக் கூட கவனிக்காமல் அவளருகில் வந்தவன் சோர்ந்து களைத்து ஏதோ போலிருந்தவளின் கன்னங்களை பற்றிக்கொண்டு, பூமா என மென்மையாக அழைக்க, அவளின் விழிகளிலிருந்து கண்ணீர் ஆறாக ஓடின.


"என்னம்மா ரொம்ப வலிச்சிச்சா? இவனுக உன்னை ரொம்பப் படுத்திட்டானுகளா?" என குழந்தைகளின் புறம் திரும்பியவன் ஒரு கணம் அதிர்ந்து பின், அதிக உற்சாகத்துடன் கருப்பாக இருந்தவனை மட்டும் கையில் ஏந்தி முத்தமிட்டு கொஞ்சிக் கொண்டிருந்தான்.


அதனைப் பார்த்து தன் முகத்தை சுளித்தபடி, "ஏன் அவனைப் பார்த்து மட்டும் அப்படி சந்தோசப்படுறீங்க?" எனக் கேட்டவளை, குறும்பாகப் பார்த்தான்.


"ம்? இந்த கருப்பனைசாமி எங்க குலதெய்வம்லா? அதான்" எனக்கூற, அதைப் பார்த்து முறைத்தவளை கண்டு வாய்விட்டு சிரித்தவன் பின்பு தும்பையனை தூக்கிக் கொஞ்சினான்.


அதன் பின், தன்னையும் தன் ஆண்மையையும் கௌரவித்தவளை நோக்க, அவளோ மறுபடியும் அந்த கரிமேட்டுக்கருவாயனையே வெறித்துக் கொண்டிருந்தாள்.


"ரொம்ப கஷ்டப்பட்டியா பூமா?" என அவளின் கன்னங்களைத் தாங்கி நெற்றியிலும், உதட்டிலும் முத்தம் பதித்தவனிடம்,


"ம், ஆமா ரொம்ப கஷ்டப்பட்டேன் நீங்க இல்லாம." என அவனின் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டாள்.


எங்கே இந்த கருநிற குழந்தை நமக்கு வேண்டாம் என்று சொன்னால், நீதிதாசன் தன்னை வெறுத்துவிடுவானோ எனப் பயந்தவள், வெளியே எதையும் கூறாமல் தன் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டாள்.


பத்திய உணவுகள், குழந்தை பராமரிப்பு என பார்த்து பார்த்து செய்த மரகதமும், திருநீலகண்டனும் தங்கள் பேரன்களை தரையில் கிடத்த சம்மதிக்கவில்லை.


சிறியவர்கள் சிறிதாய் முகம் சுருக்கினாலும், பெரியவர்கள் இருவரும் வெகுவாய் பதறிப்போனார்கள்.


அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா, தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாள்.


வெள்ளையனை மட்டும் கைகளில் தூக்கி கொஞ்சுபவள் கருப்பனை முற்றிலுமாய் தவிர்த்தாள்.


பசியில் அவன் அழுதால் கூட கொஞ்ச நேரம் அழவிட்டே பசியாற்றினாள். மரகதம் யாராவது உடனிருந்தால் மட்டுமே உடனே தூக்கிப் பசியாற்றினாள்.


எல்லாவற்றிலும் ஒரு தலை பட்சமாகவே நடந்து கொண்டிருந்தாள். இது யாருக்கும் தெரியாது என்றவள் நினைத்துக் கொண்டிருக்க, அவளுக்குத் தெரியாமல் மரகதம் உன்னிப்பாய் அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.


நேரடியாகவே ஒரு நாள் அவளிடம், "ஏம்ட்டி ஒரு கண்ணுல வெண்ணையும், ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்குதா? ரெண்டு பேரும் நீ பெத்தவனுவ தான?" என்று ஆத்திரமாகக் கேட்க, அவள் அலட்சியமாய் பதிலளித்தாள்.


"ஆமா, ரெண்டு பேரும் எனக்கு பிறந்தவனுக தான். ஆனா அதுல ஒருத்தன் மட்டும் தானே என் குடும்ப வாரிசு? அதான் இப்படியெல்லாம் பண்றேன். வாரிசு பத்தியெல்லாம் நீங்க தானே சொன்னீங்க? இதோ அட்டக்கறுப்புல இருக்கறவனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல. தயவு செஞ்சு அவனை என் கண்ணுல காட்டாதீங்க. பால் கூட நான் தனியா ஒரு டம்ளர்ல பிழிஞ்சி வச்சிடுறேன்." என மனசாட்சியே இல்லாமல் கூறி முகத்தை திருப்பிக்கொண்டாள்.


அவள் பேச்சில் ஒரு நொடி ஆடிப்போய் நின்ற மரகதம், "ஏட்டி என்ன பேச்சு பேசுதா நீ? இது எம்மவனுக்கு மட்டும் தெரிஞ்சதோ உன் கொண்டை முடிய ஆஞ்சி புடுவான் ஆஞ்சி" என மிரட்டினார்.


அவள் அசரவில்லை.


"போங்க இப்பவே போய் போன் போட்டு உங்க புள்ளைக்கிட்ட சொல்லுங்க. நான் வேணும்னா டயல் பண்ணித் தரவா? அவருக்கிட்ட சொல்றதால எனக்கு ஒரு பாதிப்பும் இல்ல. இந்தா என் வீட்டு வாரிசை மட்டும் தூக்கிட்டு நான் பாட்டுக்க போய்ட்டே இருப்பேன். அப்பறம் உங்க புள்ளைக்கிட்ட டைவோர்ஷும் வாங்கிட்டு நிம்மதியா ஒரு மூலையில கிடப்பேன்.” என்றதும், விதிர்த்துப்போனார் மரகதம்.


"அட கிறுக்கி! நீயெல்லாம் ஒரு பொம்பளையா? உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுட்டி. இப்படி பச்சை மண்ணைப்போய் பழிக்கியே. வாய் தவறி சொன்ன வார்த்தைக்காட்டி இப்படி பண்ணுதா? ரெண்டு மவராசனும் எம் பேரனுவ தாம்ட்டி. உம் புத்திக்கு நீ விளங்கவே மாட்டட்டி" எனப் பழித்த மரகதம் அங்கிருந்து செல்லத் திரும்ப, திருநீலகண்டான் உக்கிரமாக நின்றிருந்தார்.


அவர் அவரிடம், "கேட்டியலா கதைய? உம்ம மருமொவா என்ன சொல்லுதானு?" எனக் கேட்க, ஆமெனத் தலையை ஆட்டியவர் பளாரென அவரின் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.


"இந்த விஷயம் மட்டும் நீதிதாசன் காதுக்கு போனதோ ரெண்டு பேரையும் கொன்னு போட்டிருவேன்." என்று அடிக்குரலில் மிரட்டினார்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
முந்தானையில் மூக்கை சிந்திக்கொண்டே அவ்வறையை விட்டு வெளியேறினார் மரகதம்.


அச்சம்பவத்திற்கு பின் பெரியவர்கள் இருவரும் எதற்கும் அவளிடம் கலந்து கொள்ளவில்லை.


இப்படியே நாட்கள் செல்ல, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் நாளும் வந்தது.


நீதிதாசன் தன்னிரு புதல்வர்களுக்கும் ஒரே போல் பெயர் தேர்வு செய்து வந்திருக்க, கார்மேகக் கண்ணனுக்கு மட்டும் ‘நர்மதன்’ என்னும் பெயரை வைத்தே ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்தனர் மரகதம்-திருநீலகண்டன் தம்பதியர்.


வீட்டில் பிறக்கும் முதல் குழந்தைக்கு சங்கரன் கோவில் நாகம்மையை நினைவில் கொண்டு, ‘ந’ வரிசையில் பெயரிட்டால் குலம் தழைக்கும் என்பது அவர்களது குலவழக்கம்.


பல கலந்துரையாடல்களுக்குப் பின் நீதிதாசனின் தேர்வில் வெள்ளையனுக்கு அசோகமித்ரன் எனவும், கருப்பனுக்கு நர்மதன் என்கிற அக்னிமித்ரன் எனவும் பெயர் சூட்டப்பட்டது. அனைவரும் திருப்தி.


குழந்தைகள் பிறந்து மூன்று மாதமானதும் நீதிதாசன் சென்னையில்
குழந்தைகளிருவரையும், பூர்ணிமாவால் தனியே பார்த்துக்கொள்ள இயலாது என தன் பெற்றோரையும் துணைக்கழைக்க, "எங்க உசிரு இந்த மண்ணுல தான்வே போகணும்" எனக் கூறியவர்கள் உடன் வர மறுத்துவிட்டனர்.


பின், வேறு வழியில்லாமல் தன் மனைவி மக்களுடன் சென்னை நோக்கி பயணமானான் நீதிதாசன்.


சென்னைக்கு சென்றவுடன் பூர்ணிமாவின் தோழிகள் சிலர் அவளின் குழந்தைகளை காண வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களிடம் தூங்கிக் கொண்டிருந்த தன்னிரு புதல்வர்களையும் காட்டினாள் பூர்ணிமா.


அவர்களில் பூர்ணிமாவின் நெருங்கிய தோழியும் சினிமா நடிகையுமான கல்பனா, "பூர்ணிமா என்னடி இது? உன் குழந்தை தானா இது? இவ்வளவு கருப்பா அசிங்கமா இருக்கு. இது உன் குழந்தைனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கடி. ரெண்டு குழந்தை பெத்தாலும் நீ இன்னும் சிக்குனு அழகா தான்டி இருக்க. ஆனா உனக்கு போய் இப்படி ஒரு குழந்தையா?" என முகத்தை அஷ்ட கோணலாக்க, பூர்ணிமாவுக்கு அக்னிமித்ரனின் மேல் வெறுப்பு உண்டானது.


அவனால் தான், தான் தன் தோழிகளின் முன் அவமானப்பட்டு நிற்பதாகக் கருதினாள் அவள்.


வந்தவர்களில் பலர் அசோகமித்ரனை மட்டுமே அதிகமாய் தூக்கி கொஞ்சி விட்டுச்செல்ல, உள்ளே கொதித்துக் கொண்டிருந்தவள் எப்படியாவது அக்னிமித்ரனை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தாள்.


உடனே யோசனை ஒன்றும் உதயமாக அதனை செயல்படுத்த விரைந்தாள்.


அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய நீதிதாசன் தன் டையைத் தளர்த்தி, "பூமா" என கட்டிலில் அமர்ந்திருந்தவளின் தோளில் முகம் புதைக்க, கல்லாய் சமைந்தாள்.


அம்மாற்றத்தை கவனித்து நீதிதாசன் காரணம் கேட்க, மடைதிறந்த வெள்ளமாய் அனைத்தையும் கொட்டினாள்.


"என்னால ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்க முடியல அத்தான். ப்ளீஸ் என் நிலைமையைப் புரிஞ்சுக்கோங்க. ஒருத்தனை சமாதானப்படுத்தி தூங்க வச்சா அடுத்தவன் அழ ஆரம்பிச்சிடுறான். ஒவ்வொரு விஷயத்தையும் ரெண்டு பேருக்கும் பார்த்து பார்த்து செஞ்சு எனக்கு ரொம்ப டயர்டாகுது. பாருங்க கண்ணை சுத்தி டார்க் சர்க்கிள்ஸ் கூட வந்திருச்சி. இன்னைக்கு காலைலயிருந்து நான் பல்லு கூட விளக்கல தெரியுமா? இவனுங்களை வச்சுக்கிட்டு என்னால முடியல." என உண்மையையும், மனதில் உள்ள வன்மத்தையும் கலந்து கூறினாள்.


"சரி, சரி, இனி நான் என் முக்காவாசி நேரத்தை உன் கூடவே செலவு பண்ற மாதிரி என்னோட எல்லா செடுயூல்ஸையும் மாத்தி அமைச்சிடுறேன் பூமா. போதுமா?" எனக் கூறவும்,


‘ஐயோ! காரியம் கெட்டுச்சி’ என மனதில் நினைத்தவள், "இல்ல வேண்டாம் அத்தான். நான் சொல்ல வந்ததே வேற. நீங்க ரெண்டு பசங்கள்ல ஒருத்தனை உங்க அப்பா அம்மா கிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்றீங்களா? அந்தக் குழந்தை வளர்ந்து விவரம் தெரிஞ்சதும் நம்ம இங்க கூட்டிட்டு வரலாம். என்னால முடியலத்தான்" என அவனின் நெஞ்சில் விழுந்து விம்ம, அவளின் தலையில் நாடியை பதித்தவன் சற்று யோசித்தான்.


பின், ஒரு முடிவெடுத்தவனாக ஆறுதல் கூறினான்.


"ஹேய் பூமா! என்னாச்சு உனக்கு? பசங்களை பார்த்துக்க முடியல. அவ்வளவு தான? அதுக்குப்போய் இப்படி குழந்தை மாதிரி அழற? சரி விடு. நீ சொன்ன மாதிரியே ஒருத்தனை அம்மா அப்பாகிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லலாம். ஹாப்பியா?" எனக்கேட்க, தன் சந்தோஷத்தை தன் அணைப்பின் இறுக்கத்தில் காட்டினாள் பூர்ணிமா.


அவள் சொல்படி அக்னிமித்ரனை தன் பெற்றோரிடம் சேர்ப்பித்தான் நீதிதாசன். மரகதமும் திருநீலகண்டனும் தங்கள் பேரனை மனமுவந்து வாங்கிக்கொண்டனர்.


எங்கே தங்கள் பேரனை பூர்ணிமா கவனிக்காமல் விட்டு விடுவாளோ என பயந்திருந்தவர்களுக்கு இப்போது தான் நிம்மதியாகயிருந்தது.


இருவரும் திருநெல்வேலி ஜில்லாவிற்கே ராசா போல் பார்த்து கொண்டனர் தங்கள் பேரனை.


நாட்களும் அதன் போக்கில் நகர்ந்தன.


வருடத்திற்கு இருமுறை தன் மனைவி மகனுடன் களக்காட்டிற்கு வரும் நீதிதாசன் இரண்டு நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்பி விடுவான்.


அப்போது வெறும் சம்பிரதாயத்திற்கு மட்டும் அக்னிமித்ரனுக்கு முத்தம் கொடுக்கும் பூர்ணிமா, அதன்பின் அவனை நெருங்குவதையே தவிர்த்து விடுவாள்.


நீதிதாசனுக்கு இது தெரியவில்லை எனினும், மரகதமும் திருநீலகண்டனும் இதனை நன்றாகவே புரிந்து வைத்திருந்தனர். ஆகையால், முடிந்த அளவு அக்னிமித்ரன் பூர்ணிமாவை நெருங்காமல் பார்த்துக் கொண்டனர். அவள் ஏதாவது கூறி தங்கள் பேரன் மனமுடைந்துவிடுவானோ எனப் பயந்தனர்.


இவள் தான் இப்படியெனில் அக்னிமித்ரனுக்கும், அசோகமித்ரனுக்கும் இடையேயும் எந்தவொரு பாச ஒட்டுதலும் இல்லாமலிருந்தது.


சிறு வயதிலிருந்தே அக்னிமித்ரனை கெட்டவனாக சித்தரித்து அசோகமித்ரனிடம் பூர்ணிமா கூறியிருந்ததால், அந்த சொற்கள் அனைத்தும் அந்த பிஞ்சின் மனதில் பசுமரத்தாணிப் போல பதிந்திருந்தன.


களக்காட்டிற்கு வரும் நேரமெல்லாம் அக்னிமித்ரனை அசோகமித்ரன், "பிளாக்கி" என்றழைத்து வம்பிழுக்க, இருவருக்குமிடையில் வெடிக்கும் கலகத்தில், பெரியவர்கள் தான் அவர்களை அடக்க முடியாமல் திணறிப் போவார்கள்.


இப்படியான நிலையில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் கருத்தரித்தாள் பூர்ணிமா.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
நம்ம ஹீரோஸோட பாசமலர் பொறக்க ரெடியாகிட்டா பால்பாயாசம்ஸ்🙂

உங்களுக்கு இந்தக் கதை பிடிச்சிருந்தா மறக்காம உங்க ப்ரெண்ட்ஸுக்கு லிங் ஷேர் செய்யவும் வெல்லக்கட்டீஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 3



பூர்ணிமா கருவுற்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைந்த நீதிதாசன்,
"இந்த முறை எனக்கு பொம்பளப்புள்ள தான் வேணும் பூமா" எனக் கேட்டுக்கொண்டே அவளின் மூக்கோடு மூக்கு உரச, அவனிடமிருந்து விலகினாள் பூர்ணிமா.


"இந்த குழந்தை நமக்கு வேண்டாம் அத்தான். இவ்வளவு வருசம் கழிச்சி குழந்தையானு எல்லாரும் கிண்டல் செய்வாங்க. நம்ம யாருக்கும் தெரியாம இந்தக் குழந்தையை கலைச்சிடலாம்" என்றாள்.


நீதிதாசனுக்கு ஆத்திரம் தலைக்கேறினாலும், அவளின் குணமறிந்து கனிவாகப் பேசினான்.


"இல்ல, கண்டிப்பா எனக்கு இந்தக் குழந்தை வேணும் பூமா. பிளீஸ்" எனத் தன் அன்பால் அவளை கட்டுப்படுத்தி பிள்ளையை பெற்றுக் கொடுக்க சம்மதிக்க வைத்தான்.


இம்முறையும் பூர்ணிமா பிரசவத்திற்காக திருநெல்வேலிக்கு சென்றிருந்தாள். ஒன்பது வயது நிரம்பியிருந்த அசோகமித்ரன் அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனின் படிப்பு கெடக்கூடாதென அவனை நீதிதாசனுடன் சென்னையிலேயே விட்டுவிட்டு திருநெல்வேலிக்கு தான் மட்டும் வந்திருந்தாள்.


மரகதம் தன் பேரனிடம், "உனக்கு தங்கச்சி பொறக்கப்போறா அக்னி. உன் அம்மை வயித்துல ஒரு பாப்பா இருக்கா" என சொல்ல, மண்பானையை கவிழ்த்து வைத்தது போல் உருண்டிருந்த தனது அன்னையின் மணிவயிற்றை ஆர்வமாக பார்த்தான் அவன்.


பூர்ணிமா தன்னுடன் பேசாவிடினும் அவ்வப்போது அவளையே பார்ப்பது, தூங்கும் போது அவளை நெருங்கி அவள் வயிற்றில் முத்தமிடுவது என்று பாசத்தை வாரியிறைத்துக் கொண்டிருந்தான்.


காலையில் தன் பேரனுக்கு காய்ச்சிய பாலில் நாட்டு முட்டையை அடித்து கொடுத்த மரகதம், தன் மருமகளுக்கு குங்குமப்பூ கலந்த பாலைக் கொடுக்கச் செல்ல, அவரை தடுத்த அக்னிமித்ரன், "பாட்டி எங்கம்மைக்கு மட்டும் பாலுல என்ன கலந்து கொடுக்குதா?" என சந்தேகமாகக் கேட்டான்.


"அது குங்குமப்பூ மக்கா" என்றார் மரகதம்.


"என்னது குங்குமப்பூவா? இந்த பூவுலயிருந்து தான் குங்குமம் வருதா பாட்டி?" என்றவன் மறுகேள்வி கேட்க,


அவன் கேள்வியில் திகைத்தவர், "இல்ல மக்கா. அது மஞ்சள்ல இருந்து வருது. இது ஒரு பூவு. இது குங்கும கலர்ல இருக்குல்லா? அதான் இது பேரு குங்குமப் பூவுனு வச்சுருக்காவ" என விளக்கமாகக் கூறினார்.


"ஓ! அப்படியா? அந்தப் பூவ ஏன் பாட்டி அம்மாவுக்கு கொடுக்குதா?” என்றதும்,


"இதை பால்ல போட்டு குடிச்சா வயித்துலயிருக்க உன் தங்கச்சி நல்லா செவப்பா பொறப்பா மக்கா. அதான்" என்றதும்,


"ஓ! அப்போ ஏன் பாட்டி நான் எங்கம்மை வயித்துல இருக்கப்போ நீ எனக்கு இதை கொடுக்கல? கொடுத்திருந்தா நானும் அசோகா மாதிரியே வெள்ளையா பொறந்திருப்பேம்லா?” என்றதும், மாட்டிக்கொண்டது போல் விழித்தார் மரகதம்.


ஆனால், அவர்கள் பேசுவதையெல்லாம் ஒற்றுக்கேட்டுக் கொண்டிருந்த பூர்ணிமா வெடுக்கென்று பேசினாள்.


“அதெல்லாம் உங்கப்பா டப்பா டப்பாவா வாங்கிக் கொடுத்தாருடா. ஆனா அச்சு அப்படியும், நீ இப்படியும் தான் பொறக்கணும்னு என் தலையில எழுதியிருக்கு. அதான் எதுவும் வேலை செய்யாப்போச்சு. இப்ப எல்லாம் புரிஞ்சிடுச்சா? துரை இப்ப ஸ்கூலுக்கு கிளம்பறீங்களா?" என நக்கலாகக் கேட்டதும், மரகதம் முகத்தைத் தூக்கினார்.


"புள்ளைக்கிட்ட போய் எப்படி பேசறாப் பாரு?" என்று அவளை மரகதம் வில்லிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, பூர்ணிமா கூறியதில் அக்னிமித்ரன் தலைகுனிந்தபடியே பள்ளிக்கு புறப்பட்டான்.


அங்கு பள்ளியிலோ கடைசி வரிசையில் அமர்ந்திருந்த தன் உயிர் நண்பர்கள் விஜி மற்றும் மொக்கையிடம் காலையில் தங்கள் வீட்டில் நடந்த தனைத்தையும் கூறினான்.


அதில் விஜி என்றழைக்கப்படும் விஜய்குமார், "ஏலேய் அக்னி! அதை குடிச்சா உங்க பாப்பா அருந்ததில வர அனுஷ்கா அக்கா மாதிரி கலரா பொறப்பாலாலேய்? எங்களுக்கு அந்த பூவை காட்டுலேய் பார்க்கணும்" என்றதும், வேறு வழி இல்லாமல் அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான்.


யாருமில்லாத சமயமாய் பார்த்து சமையலறைக்கு அழைத்துச் சென்று அந்த குங்குமப்பூவை காண்பித்தவன், அதிலிருந்த சில காய்ந்த துணுக்குகளை எடுத்து தின்று பார்க்கக் கொடுத்தான்.


விஜய்குமார் முகத்தை சுளித்து, "லேய் இது கசக்குதுலேய்" என அருகிலிருந்த காசிப் பானையிலிருந்து இரண்டு டம்ளர் நீரைக்கோரி பருக,


அக்னிமித்ரன் சிரித்துக்கொண்டே பூஸ்ட் பாட்டீலில் இருந்து சாக்லேட் மாவையும், டப்பாவிலிருந்து முந்திரி, கிஸ்மிஸ் பழத்தையும் எடுத்து அவர்களின் கையில் தின்னக் கொடுத்தான்.


வேக வேகமாய் தின்றவர்கள் தங்கள் சட்டைப்பைகளுக்குள்ளும் பூஸ்ட்டை அடைத்துக் கொண்டனர்.


குங்குமப்பூவைப் பார்த்துவிட்டு வெளியே செல்லப்போனவர்கள், திறந்து கிடந்த கதவின் வழியே, தன் அறையில் ஒரு பக்கமாய் சாய்ந்து படுத்து குறட்டைவிட்டுக் கொண்டிருந்த பூர்ணிமாவைக் கண்டனர்.


அவளின் அறைக்குள் நுழைந்த விஜய்குமார், "இந்த பெரிய முட்டை வயித்துக்குள்ள தான் உங்க பாப்பா இருக்காளா அக்னி?" என வினவ,


"ஆமாலேய், இதுக்குள்ள தான் இருக்கா" எனத்தன் அன்னையின் சேலைத் தலைப்பை விலக்கி பழக்க தோஷத்தில் முத்தம் பதித்தான்.


அதனைப் பார்த்த மொக்கை என்கிற மோகன், "ஏலேய் அக்னி உங்க பாப்பா செவப்பா தாம்லேய் பொறக்கப்போறா" என மெதுவாக கிசுகிசுத்தான்.


"எப்படிலேய் சொல்லுதா?" என சந்தேகமாய் கேட்டான் அக்னிமித்ரன்.


"உங்க அம்மை வயிறு நல்லா செவப்பா இருக்குதுலா? அதாம்லேய் சொல்லுதேன்.
நம்ம கற்பகவல்லி அக்கா இருக்காவல்லா? அவிய வயிறு கருப்பா இருந்ததால தான் அவிய பாப்பாவும் கருப்பா பொறந்துச்சு.” எனவும்,


"அப்படியாலேய்? அப்போ நானும் அசோகாவும் பொறக்கறப்போ எங்கம்மையோட வயிறு என்ன கலருலலேய் இருந்திருக்கும்?" எனத்தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டான்.


தன் நாடியில் ஆட்காட்டி விரல் வைத்து யோசித்த மோகன், "ஹான்! அப்ப உங்கம்மையோட வயிறு ஒரு பக்கம் கருப்பாவும், ஒரு பக்கம் செவப்பாவும் இருந்திருக்கும்லேய். உங்கப்பா அந்தப்பூவை உங்கம்மைக்கு கொடுக்கறப்ப, அந்த அசோகா உன்னை தள்ளி விட்டுட்டு மொத்தப் பூப்பாலையும் அவனே குடிச்சிருப்பாம்லேய். அதான் நீ கருப்பாயிருக்கா" என்றதும், தன்னையறியாமலேயே அசோகமித்ரன் மீது விரோதத்தை வளர்த்துக் கொண்டான் அக்னிமித்ரன்.


சிறு சிறு கோபங்கள் தானே வன்மமாய் உருவெடுக்கும்?


"ஏலேய் அக்னி, நானும் உங்க பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கவாலேய்?" எனக்கேட்ட மோகன், அனுமதி வாங்கியவுடன் பூர்ணிமாவின் அருகில் சென்று அவள் வயிற்றில் முத்தம் பதித்தான்.


மோகன் முத்தம் கொடுத்தப்பின் விஜய்குமாரும், "நானும் முத்தம் கொடுக்குதேம்லேய்" எனத் தன் கண்களை சுருக்கிக் கேட்டான்.


"சரி கொடு" என்றதும், அவன் முத்தம் பதிக்க, திடீரென உள்ளிருந்து யாரோ அடித்தது போல் இருந்தது.


உடனே நிமிர்ந்து தன் நண்பர்களை பார்த்தவன், "ஏலேய் உள்ள ஏதோ அசையுதுலேய்" எனக் கூற, உடனே தனது பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது அக்னிமித்ரனுக்கு.


"அது எங்க பாப்பா உன்னை காலால எட்டி உதைக்குதாலேய்" என சிரித்துக்கொண்டே அவன் வெளியேற, உடன் வந்த விஜய்குமார் விழி பிதுங்கினான்.


"எதுக்குலேய் உங்க பாப்பா என்னை மட்டும் உதைக்குதா?" என அழாக்குறையாக கேட்டான்.


உடனே அக்னிமித்ரனின் மூளை வருங்கால தொழிலதிபனாய் பலவற்றை கணக்குப்போட்டது.


"ஏலேய் விஜி, நேத்து நீ எனக்கு சேமியா ஐஸ் வாங்கித் தராம நீ மட்டும் தின்னுட்டால்லா? அதை நான் எங்க பாப்பாக்கிட்ட சொன்னேன். அதாம்லேய் அவா உன்னை அடிக்குதா" என்றதும்,


"ஓ அப்படியா? அதான் அவா என்னை அடிக்குதாளா? சரிலேய், நாளைக்கு மதியம் நான் உனக்கு சேமியா ஐஸ் வாங்கித் தரேன் என்ன? நீ என்னை அடிக்க வேணாம்னு உன் பாப்பாக்கிட்ட சொல்லிரு" எனவும், வேகமாக தலையாட்டினான் அக்னிமித்ரன்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom