Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கைக் கோர்த்து

Siva Bharath

New member
Messages
1
Reaction score
0
Points
1
அந்தி மறைந்து இருள் எட்டி பார்த்த நேரம். அரைகுறை நிலா வானில் தொங்கியது. அதன் அழகைப் பார்த்து, சுற்றி இருந்த நட்சத்திரங்கள் யாவும் கண் சிமிட்டியது. நான் கடலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். என் கால்கள் மணலில் பாதி புதைந்து, மீண்டும் வெளிவந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அரை மைல் தூரம் நடக்க வேண்டி இருந்தது, அலைகளை காண.

மெரினா கடற்கரை போன்ற ரம்மியமான தோற்றமளிக்கா விட்டாலும், ஆங்காங்கே தள்ளு வண்டி கடைகளில் குண்டு பல்புகள் தொங்கியது. பல ஜோடிகள் ஆங்காங்கே, சமூக இடைவெளி பின்பற்றாமல் நெருங்கி உக்கார்ந்து, கடலை போட்டு கொண்டிருந்தார்கள். அலைகள் ஆக்ரோஷமாக கரையை தொடர்ந்து அடித்தது. என்னை போலவே, பல அடிகளை அந்த கரைகள் தாங்கிக் கொண்டேயிருக்கிறது.

கடற்கரையில் இருந்து சற்று தூரத்தில், நானும் எனக்கான இருக்கையை அமைத்துக் கொண்டேன். அந்த ஈர மணல் என் உடம்பின் உஷ்ணத்தை குறைத்தது. ஆனால் அதன் வீரியம் என் மண்டை சூட்டை தணிக்க வல்லது அல்ல. நான் தனியாக அமர்ந்திருப்பதை சிலர் வேற்றுமையுடன் நோக்கினர். ஆனால் அங்கு அமர்ந்திருந்த ஜோடிகளில் எத்தனை பேர் உண்மை காதலர்கள் என்று யாருக்கும் தெரியாது.

அங்கே மணலை தழுவிக்கொண்டு வீசிய தென்றல், கடல் காற்றுடன் கலந்து , என் தலைமுடி மடிப்பை கலைத்தது . அதில் மயங்கி இருந்த என்னை , என் கைபேசியின் அழைப்பு ஒலி எழுப்பியது. “ சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. “ என்ற பாடலின் பல்லவி ஒலிக்கும் போதே, அது என் தோழி பல்லவி தான் என்று உணர்ந்தேன். அதை எடுத்து, என் கட்டை விரலால் அதில் துடித்து கொண்டிருந்த பச்சை நிற முத்திரையை , தடவி மேலேற்றினேன், தொடர்பு தொடங்கியது.

பல்லவி தன் பரிசுத்த குரலில் பேசினாள். “டேய் வந்துட்டேன். எங்கே இருக்கிற?”

“என்‌ பைக் நிருத்தி இருக்குற இடம் பாத்தியா… அதுல இருந்து நேரா வா…. ஒருத்தன் தனியா உக்கார்ந்து இருக்கான்”.

பல்லவி “பாவம்.. நா போய் அவனுக்கு கம்பெனி கொடுக்குறேன்” என்று கூறி தொலை தொடர்பைத் துண்டித்தாள்.

சில வினாடிகளில், இருளில் இருந்த எனது முதுகில் ஒரு பேரொளி வீசியது. “முத்து” என்ற குரல் கேட்கவும், திரும்பினேன். கைபேசியின் மின்னல் ஒளி என் கண்களை கூசச் செய்தது. அந்த ஒளி அணைக்கப்பட்டு என் தோழியின் சிரிப்பின் ஒளி வீசியது. சிறு புன்னகையுடன், அவளை வரவேற்றேன்.

இன்று வாடாமல்லி கலர் சுடிதார் அணிந்திருக்கிறாள். எப்போதும் போல கால்களில் கொலுசு , வலக்கையில் நேரம் பார்ப்பதற்கு சிரமம் தரும் வகையில் சிறிய கைக்கடிகாரம், தோளின் குறுக்கே இட்டு ஒரு பக்கம் தொங்கிய பை ( உள்ளே முக்கியமாக ஒன்றும் இருக்காது). சுருண்ட ஷால், காற்றில் பறக்கும், கட்டாத முடி.

தன் காலணிகளை பக்கத்தில் வீசி விட்டு , என் தோள்களை பிடித்து கொண்டு, மணல் மெத்தையில் விசாலமாக உட்கார்ந்து கொண்டாள். அவளிடம் எப்போதும் இருக்கும் புன்னகையும் துள்ளலும் இருந்தது. இன்னும் ஓரிரு வருடங்களில் திருமணம் முடிக்கும் நிலையிலும், அவளது குழந்தைத் தனம் அவளிடம் இருந்து விலக அடம் பிடித்தது. இருப்பினும் அதுவே என்னை கவர்ந்திழுத்தது.

அந்நேரத்தில், அருகே ஒளிந்து கொண்டு, காத்திருந்தவன் போல ஒரு கடலைக்காரன் எங்களை நோக்கி நடந்து வந்து, “கடல.. கடல.. “ என்று கூவினான். உடனே நான் அவளை பார்த்தேன், அவள் கண்கள் ‘வேண்டாம்’ என்றது.

நான் அந்த கடலைகாரனை அருகில் அழைத்து, “ஒன்னு..” என்று கூறி 20 ருபாயை கொடுத்தேன். ஒரு சிறிய பொட்டலம் தந்தான். அதில் மொத்தம் 30 கடலைகள் இருக்கலாம். அதை பல்லவியிடம் கொடுத்தேன். சிறு தயக்கத்துடன் பெற்று கொண்டாள்.

கடலைகாரன் அடுத்த ஜோடிகளுக்கு தொந்தரவு கொடுக்க சென்றான்.
பல்லவி, ” ஏய்! நான்தான் வேணாம்னு கண்ணை காமிச்சனே. நீ பாக்கலையா?” என்றாள்.

“ பார்த்தேன். கண்ணை இல்ல. உன் மனச…. வாங்கினேன்!”

அதை புரித்து கொண்டே, “வரவர.. நீ சினிமா ஹீரோ மாதிரி பேசுற “ என்றாள். முதல் கடலையை எடுத்து என் வாய் அருகே நீட்டினாள். நான் என் வாயை திறக்க, அதை வாய்க்குள் வீசினாள். நான் அதை மென்று கொண்டே “போதும். நீ சாப்பிடு” என்றேன். மௌனம் குடி கொண்டது.

சில கடலைகளை உண்ட பிறகு, அவள் மௌனத்தை கலைத்தாள். “என்ன வேலையில எதாவது பிரச்சனையா?“ என்று வினவினாள்.

“ உனக்கு எப்படி… “ ஆச்சர்யமுற்றேன்.

“ நீ மட்டும் தான் மனச பாப்பியா? “
அவளை சிறு குழந்தை போல் நினைத்திருந்த எனக்கு, அவளின் மன-வளர்ச்சி இப்போது புரிந்தது.

“வழக்கம் போல தான். வேலையில தப்பு பண்ணிட்டேன், நிறைய திட்டு கெடச்சுது “ சோகமாக.

“உனக்கு என்னதான்பா பிரச்சனை! எப்போமே தப்பு வருது. நீ இன்சீனியரிங் தானே படிச்ச? “

அப்போது என் மனதில், என் கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும், சில வினாடிகளில் அலசினேன். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நாம் வாழ்வில் சங்கடங்களை சந்தித்தால், ஏற்படும் வலியின் சிரிப்பு, என் உதட்டில் உதித்தது…

“உனக்கே தெரியும் எனக்கு பிடிக்காம, வீட்டில் சொன்னதுக்காக தான் இன்சீனியரிங் படிச்சேன்… நான் முழுமனதுடன் ஏற்காத விஷயம் அது. அப்புறம் எப்படி அதுல தப்பு வராம இருக்கும். “

“அப்போ உனக்கு பிடிச்ச வேலையை தேடு.. அதுல உன் திறமைய காட்டு” என்று தயக்கமின்றி கூறினாள்.

“எனக்கு படிச்சது ஃபோட்டகிராபி தான். அதுல எப்படி… “ என்று இழுத்தேன்.

“ஏன் உனக்கு அதுல தான் ஆர்வமும், திறமையும் இருக்குன்னா, நீ அதுல சுலபமா சாதிக்கலாம்” என்றாள் இயல்பாக .

“ஆகலாம், ஆனா அதுக்கு சில வருஷம் ஆகும், அது வரை உங்க அப்பா உனக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருப்பாரா?“

“ நீ ஒன்னும் வேலை செய்யாம ஊர சுத்த போரது இல்லயே.. உழைக்க தான போற… அதுக்கு என்ன? இங்க பாரு.. முத்து, நீ நல்லவன், திறமைசாலின்னு ‌எனக்கு தெரியும். நான் இப்ப கூட உன்னுடன் வர தயாரா இருக்கேன். இதுல எங்க அப்பா சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை.” என்றாள் மிக எளிமையாக.

என் மனதில் ஒரே நேரத்தில் சந்தோஷம், ஆச்சரியம், சோகம், பச்சாதாபம் போன்ற உணர்ச்சிகள் தோன்றி ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொண்டிருந்தது.

அதை மேலும் தூண்டிவிடும் விதமாக அவள் “ பணம் தான் பிரச்சினைனா .. நான் வேலைக்கு போறேன் இல்ல… நர்ஸ் வேலைல அந்த அளவுக்கு சம்பளம் இல்லைனாலும் நம்ம சந்தோஷமா வாழ, அது போதும். அதுக்குள்ள நீ வளர்ந்து வந்துருவ . அப்புரம் நாம வாழ்க்கை பூரா நிம்மதியா வாழலாம்.” என்றாள்.

இதை கேட்ட எனக்கு இதயம் உருகி கண்களில் நீர் நிரம்பியது.அதை அணை போட்டு தடுக்க முடியவில்லை.
நான் அழுவதை அவளிடம் காட்ட விரும்பாமல், என் முகத்தை அவள் மடியில் புதைத்தேன். தென்றல் இலைகளை தழுவுவது போல, அவள் கை என் தோளை தடவியது. என் கண்ணீர் அவள் ஆடையை நனைத்தது.

மீண்டும் ஒரு கடலையை எடுத்து என் வாய் அருகே கொண்டு வந்தாள். இப்போது என் வாயை திறக்காமல், அவள் கையில் எச்சில் பட, கடலையை கடித்து சுவைத்தேன்.

இப்போது என் மனம் தெம்படைந்ததை உணர்ந்த அவள், ‌என் தலையில் முத்தமிட்டாள். நான் எழுந்து அமர்ந்து, ” என் வாழ்க்கையில நிறைய கஷ்டங்களை பார்த்துருக்கேன் , அப்போ எல்லாம் ஏன் கடவுள் நமக்கு இப்படி பன்னுறாருன்னு யோசிப்பேன். இப்போ புரியுது உன்ன மாதிரி ஒரு பொன்ன குடுக்குறதுக்கு தான்னு. உனக்குக்காக இன்னும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கலாம். “ என்று காற்று கலந்த குரலில் கூறினேன்.

”எல்லா கஷ்டமும் இன்னையோட முடிஞ்சுதுன்னு நெனச்சுக்கோ. நாளையில் இருந்து உனக்கு பிடிச்சதை செய்.. நான் இருக்கேன்” என்று கூறி என் தோளில் சாய்ந்தாள், என் தோழி.

இப்போதுதான் என் தோளில் எந்த சுமையும் இல்லை என்று உணர்ந்தேன். அன்னாந்து வானத்தை பார்த்தேன், இப்போது அதே அரைகுறை நிலா, அழகாக தெரிந்தது.

சுற்றி இருந்த ஜோடிகள் கிளம்ப ஆரம்பித்தனர். வண்டி கடைகள் தள்ளப்பட்டது. ”நேரமாச்சு போலாமா?” என்றேன்.

“அலையில கால் நனைச்சுட்டு போலாம்”

எழுந்து சமுத்திரத்தை நோக்கி நடந்தோம். இப்போது அலைகள் கரையை தடவிச்சென்றதாகவே எனக்கு தெரிந்தது. முழங்கால் துணியை, முக்காலுக்கு மேல் எழுப்பிக் கொடண்டோம். கடல் நீர் எங்கள் கால் பாதங்களை சுற்றி பதமாய் தொட்டது.

கடலின் தூரத்தை பார்த்தேன். அது மிக நீளமானது, எனினும் அதற்கும் முடிவு உண்டு. அதுபோல வாழ்க்கையும் நீளமானது, அதற்கும் ஒரு முடிவு உண்டு. அதற்குள் நாம் பிடித்ததை செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.

இந்த இடம் இவ்வளவு இருளாய் இருப்பினும், வானில் இருக்கும் ஒற்றை நிலா தன் அழகை வெளிப்படுத்தி, இந்த இடத்தையும் அழகாக்குகிறது. அதுபோல தான், என் வாழ்க்கை எவ்வளவு இருண்டு போனாலும்.. என் பல்லவியின் அன்பு ஒன்றே என் வாழ்வை அழகாக்கும்.

நாளையே என் காமெராவை கையில் எடுக்க போகிறேன்.

திரும்பி எங்கள் வண்டி இருக்கும் இடத்திற்கு நடந்து வந்தோம் . எங்கள் கைகள் கோர்த்துக் கொண்டது. இப்போது என் கால் மணலில் மூழ்கியதாக தெரியவில்லை, நான் அவளிடம் மூழ்கியதால்!​
 

New Threads

Top Bottom