Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம்-1 : பூகம்பம்

நாற்பத்தாறாம் அத்தியாயம்

புலிகேசியின் காதல்

வறண்ட மலைப் பிரதேசங்களையும் அடர்ந்த வனப் பிரதேசங்களையும், நீர் வற்றி வெண்மணல் பரந்த நதிகளையும் கிளி கொஞ்சும் மாந்தோப்புக்கள் சூழ்ந்த அழகிய கிராமங்களையும் கடந்து வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் இடைவிடாது பிரயாணம் செய்து கொண்டு போனார்கள். சில சமயம் வஜ்ரபாஹு வீர ரஸம் செறிந்த பாரத யுத்தக் கதைகளைப் பரஞ்சோதிக்குக் கூறுவான். அர்ச்சுனனுடைய வில் தொழில் திறன்களையும், அபிமன்யுவின் அசகாய சூரத்தனத்தையும், பீமனுடைய கதாயுதம் நிகழ்த்திய விந்தைகளையும் பற்றி வஜ்ரபாஹு சொல்லும் போதெல்லாம் பரஞ்சோதிக்கு ரோமாஞ்சம் உண்டாகும். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தானும் பாண்டவர்களின் கட்சியில் நின்று வீரப் போர் செய்வதாக எண்ணிக் கொள்வான். அவனையறியாமலே அவனுடைய கைகள் வில்லை வளைத்து நாணேற்றும்; பகைவர் மீது வேலை வீசும்; வாளைச் சக்கராகாரமாய்ச் சுழற்றும்.

இன்னும் சில சமயம், வஜ்ரபாஹு ஆழ்ந்து யோசனை செய்யத் தொடங்கி விடுவான். அப்போது பரஞ்சோதி கேட்கும் கேள்விகளுக்கு அவன் விடை சொல்லமாட்டான். மேடு, பள்ளம், காடு, தண்ணீர் என்று பாராமல் குதிரையை நாலு கால் பாய்ச்சலில் விடுவான். அவன் பின்னோடு பரஞ்சோதி குதிரையைச் செலுத்திக் கொண்டு செல்வதே பெரும் பிரயத்தனமாயிருக்கும். இன்னும் சில சமயம் வஜ்ரபாஹு வாதாபி சைனியத்தின் படையெடுப்பைப் பற்றியும் பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் பேரபாயத்தைப் பற்றியும் பேசுவான். அப்போதெல்லாம் அவனுடைய தொனியில் கவலை நிறைந்திருக்கும். அமைதி குடி கொண்ட அழகிய கிராமங்களின் ஓரமாக அவர்கள் போகும்போது, "ஆஹா! இந்தக் கிராமங்களுக்கெல்லாம் இன்னும் கொஞ்சநாளில் என்ன கதி நேரப் போகிறதோ, தெரியவில்லையே?" என்று சொல்லுவான்.

நீண்ட கிளைகளை நாலாபுறமும் பரப்பிக் கொண்டு குளிர்ந்த நிழல் தந்து நின்ற விசாலமான ஆலமரங்களையும், பசுமையான தென்னந் தோப்புக்களையும் பார்க்கும்போதெல்லாம் வஜ்ரபாஹு பெருமூச்சு விடுவான். "மறுபடியும் நாம் இந்தப் பக்கம் வரும்போது கண் குளிரும் இந்தப் பசுமையைக் காண்போமா?" என்பான். இந்த அதிசயமான கவலைக்குக் காரணம் என்னவென்று பரஞ்சோதி வற்புறுத்திக் கேட்டபோது வஜ்ரபாஹு கூறினான்; "அப்பனே! நீ அந்த வாதாபி சைனியத்தின் பாசறையை முழுவதும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்தேன்! அந்த பிரம்மாண்டமான யானைப் படையையும் நினைத்து, இந்தப் பசுமையான மரத்தோப்புகளையும் பார்த்தால், எனக்கு கண்ணில் ஜலம் வருகிறது. ஒரு யானை ஒரு நாளில் எவ்வளவு ஆகாரம் சாப்பிடும், தெரியுமா?" "தெரியாது, ஐயா!" "ஆறு மரக்கால் அரிசி, ஒன்பது தார் வாழைப்பழம், இருபத்தைந்து தேங்காய், ஓர் ஆலமரத்தில் பாதி இவ்வளவையும் சாப்பிட்ட பிறகு யானையின் பசி அடங்காது!" "அம்மம்மா!" என்றான் பரஞ்சோதி.

"இவ்வளவுக்கும் மேலே யானைப்பாகனுக்கும் அதன் வயிற்றில் இடம் இருக்கும்! ஆனால் யானைகள் சைவ விரதம் கொண்டவையாகையால் யானைப்பாகனைச் சாப்பிடுவதில்லை!" பரஞ்சோதி சிரித்துவிட்டு, "வாதாபிப் படையில் அப்படி எத்தனை யானைகள் இருக்கின்றன?" என்று கேட்டான். "பதினையாயிரம் யானைகள், அப்பனே! பதினையாயிரம் யானைகள்! இவ்வளவு யானைகளும் ஒரு தடவை காஞ்சிநகர் வரையில் வந்துவிட்டு திரும்பினால் போதும்! அவை வந்துபோன வழியெல்லாம் பசுமையென்பதே இல்லாமல் பாலைவனமாய்ப் போய்விடும்." "காஞ்சி நகரம் வரையில் வாதாபி சைனியம் வந்துவிடும் என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அது ஏன்?"

"பதினையாயிரம் யானைகளையும் ஐந்து லட்சம் காலாட் படைகளையும் யாரால் தடுத்து நிறுத்த முடியும் தம்பி? கடவுளே பார்த்து நிறுத்தினால்தான் நிறுத்தியது!" "காஞ்சிக் கோட்டையை ஏன் அவ்வளவு பத்திரப்படுத்தினார்கள் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது" என்று பரஞ்சோதி சொன்னதைக்கேட்டு வஜ்ரபாஹு ஏளனக் குரலில் சிரித்தான். "ஏன் சிரிக்கிறீர்கள், ஐயா?" என்று பரஞ்சோதி கேட்டான். "காஞ்சிக் கோட்டையை ரொம்பவும் பத்திரப்படுத்தி இருப்பதாகத்தான் ஒரு காலத்தில் நான் கூட நினைத்தேன். ஆனால் அந்த எண்ணம் எவ்வளவு தவறு என்று இப்போது தெரிகிறது." "ஏன்? கோட்டைக்குப் பத்திரம் போதாதா?" என்று பரஞ்சோதி கேட்டான். இரகசியச் சுரங்க வழியாகத் தன்னை நாகநந்தி வௌியேற்றியது அவன் ஞாபகத்துக்கு வந்தது.

"வாதாபி யானைகள் சாராயத்தைக் குடித்துவிட்டு வந்து காஞ்சிக் கோட்டையின் கதவுகளை மோதும்போது கோட்டைக் கதவுகள் எப்படி நொறுங்கிச் சின்னா பின்னமாகப் போகின்றன என்பதை நினைத்தால் சிரிப்பு வருகிறது" என்றான் வஜ்ரபாஹு. "இதென்ன விந்தை? யானைகள் சாராயம் குடிக்குமா என்ன?" "யானைகளை மாமிச பக்ஷணிகளாகச் செய்ய முடியவில்லை. ஆனால் மதுபானம் செய்யப் பழக்கியிருக்கிறார்கள். வாதாபி சைனியத்தில் ஆயிரக்கணக்கான வண்டிகளில் பெரிய பெரிய சால்களில் சாராயம் கொண்டு வருகிறார்கள். யானைகளைச் சாராயம் குடிக்கச் செய்து கோட்டைக் கதவுகளை முட்டச் செய்யப்போகிறார்களாம்!" "இது என்ன அநாகரிக யுத்தம்" என்றான் பரஞ்சோதி. "யுத்தமே அநாகரிகந்தான், தம்பி!" என்றான் வஜ்ரபாஹு.

"எல்லா யுத்தத்தையும் அநாகரிக யுத்தம் என்று சொல்ல முடியுமா? நாட்டைக் காப்பதற்காக மகேந்திர சக்கரவர்த்தி நடத்தும் யுத்தம் அநாகரிக யுத்தமா?" என்றான் பரஞ்சோதி. "மகேந்திர சக்கரவர்த்தியின் பெயரை மட்டும் என் காது கேட்கச் சொல்லாதே! தேசப் பாதுகாப்பை அசட்டை செய்து விட்டு ஆடலிலும் பாடலிலும் அவர் காலம் கழித்ததை நினைத்தால் எனக்குக் கோபம் கோபமாய் வருகிறது!"

பரஞ்சோதி வஜ்ரபாஹுவின் முகத்தைச் சற்றுக் கவனமாய்ப் பார்த்துவிட்டு, "அப்படியானால், காஞ்சிக் கோட்டையைப் பாதுகாக்கவே முடியாது என்று நினைக்கிறீர்களா?" என்றான். "வாதாபி சைனியம் நேரே காஞ்சிக்கு வந்துசேர்ந்தால் காஞ்சிக் கோட்டையைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது!" "அப்படி வந்து சேராதல்லவா?" "அதன் பொருட்டுத்தான் ஓட முயன்றவன் முதுகில் வேலை எறிந்து கொன்றேன். நாகநந்தி கொடுத்ததாகப் புலிகேசியிடம் ஓர் ஓலை கொடுத்திருக்கிறேன். அதைப்பற்றிப் புலிகேசிக்குச் சந்தேகம் தோன்றாதிருந்தால் காஞ்சியைத் தப்புவிக்கலாம்." "நீங்கள் கொடுத்த ஓலையில் என்ன எழுதியிருந்தது, ஐயா?"

"தம்பி! அந்த விஷயத்தைப்பற்றி நீ கேளாமலிருந்தால் நான் பொய் சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படாது!" என்று முன்னொரு தரம் பரஞ்சோதி கூறிய வார்த்தைகளை வஜ்ரபாஹு இப்போது திருப்பிக் கூறினான். பரஞ்சோதி சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "ஐயா! நீங்கள் கொடுத்த ஓலையின் பலனாகச் சளுக்க சைனியம் காஞ்சிக்கு வராமல் வாதாபிக்கே திரும்பிப் போய் விடுமா?" என்று கேட்டான். "அப்பனே! காஞ்சி என்ற பெயரைக் கேட்டதும் புலிகேசியின் கண்களில் தோன்றிய ஆசை வெறியை நீ பார்த்திருந்தாயானால் இவ்விதம் கேட்டிருக்க மாட்டாய். என்னை அச்சுத விக்கிராந்தனுடைய சந்ததியில் வந்தவனாக நினைத்துக்கொண்டே புலிகேசி தன்னுடைய மனத்தை நன்றாக திறந்து காட்டினான்..." "அது யார் அச்சுதவிக்கிராந்தன்?" என்று பரஞ்சோதி குறுக்கிட்டுக் கேட்டான். எந்த விஷயத்தையும் ஐயந்திரிபறத் தெரிந்து கொள்வதில் அவனுக்கு அடங்காத ஆசை ஏற்பட்டிருந்தது.

"பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் மத்தியில் இருநூறு வருஷத்துக்கு முன் தனி அரசு செலுத்திய அச்சுதக் களப்பாளனைப் பற்றி நீ கேட்டதில்லையா? அந்த அச்சுதக் களப்பாளனின் வம்சம் நான் என்றதும் புலிகேசி நம்பி விட்டான். 'நீ காஞ்சி நகர் பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டான். 'பார்த்திருக்கிறேன்' என்றேன்; காஞ்சிநகர்க் காட்சிகளை விவரமாக வர்ணிக்கும்படி சொன்னான். நான் அவ்விதமே காஞ்சியை வர்ணித்தபோது, புலிகேசியின் முகத்தில் தோன்றிய பரபரப்பைப் பார்க்க வேணுமே! எலியைப் பார்த்த பூனையின் கண்களில் தோன்றும் ஆசைவெறி புலிகேசியின் கண்களிலும் அப்போது தோன்றியது. இராவணன் சீதையைப் பார்த்து என்ன சொன்னான் தெரியுமா தம்பி! 'என்னிடம் நீ ஆசை கொள்கிறாயா? அல்லது உன்னைக் காலைப் போஜனத்துக்குப் பலகாரமாகச் செய்து சாப்பிட்டு விடட்டுமா?' என்றானாம். அதுபோல புலிகேசி காஞ்சி நகரைக் கட்டி ஆள ஆசைப்பட்டாலும் படுவான்; அல்லது அதை அக்கினிக்கு இரையாக்க விரும்பினாலும் விரும்புவான். புலிகேசியின் காதல் விபத்திலிருந்து காஞ்சிமா தேவியைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வஜ்ரபாஹு கூறிவிட்டு நெடிய மௌனத்தில் ஆழ்ந்தான்.
 
நாற்பத்தேழாம் அத்தியாயம்

பிரயாண முடிவு

சூரியாஸ்தமன சமயத்தில் ஒரு மலைப் பாதையின் முடுக்குத் திரும்பியதும் பல்லவ சைனியம் தண்டு இறங்கியிருக்கும் பாசறை தென்பட்டது. பல்லவ சைனியத்தைப் பார்த்தவுடனேதான் வஜ்ரபாஹுவின் கவலைக்கு எவ்வளவு தூரம் காரணம் உண்டு என்பதைப் பரஞ்சோதி உணர்ந்தான். வாதாபி சைனியத்துக்கும் பல்லவ சைனியத்துக்கும் அவ்வளவு மலைக்கும் மடுவுக்குமான தாரதம்மியம் இருந்தது. "தம்பி? பார்த்தாயா?" என்றான் வஜ்ரபாஹு. "பார்த்தேன், ஐயா!" "இன்னமும் நீ நம்புகிறாயா, பல்லவ சைனியம் ஜயிக்கும் என்று?" "கட்டாயம், ஜயிக்கும் ஐயா! சந்தேகமே இல்லை!" என்று பரஞ்சோதி அழுத்தந்திருத்தமாகச் சொன்னான். "அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாயே, எதனால் சொல்கிறாய்."

"பல்லவ சைனியத்தின் பட்சத்தில் தர்ம பலம் இருக்கிறது. அதோடுகூட, மகேந்திர சக்கரவர்த்தியும் இருக்கிறார்!" "ஏது ஏது, மகேந்திர சக்கரவர்த்தியிடம் உனக்கு அபார நம்பிக்கை இருக்கிறதே?" என்றான் வஜ்ரபாஹு. "ஆம், ஐயா!" "பல்லவ சக்கரவர்த்தியை நீ பார்த்திருக்கிறாயா, தம்பி?" "முன்னம் இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆயனச் சிற்பி வீட்டில் புத்த விக்கிரகத்துக்குப் பின்னால் நான் ஒளிந்திருந்தபோது ஒரு தடவை பார்த்தேன். இன்னொரு தடவை காஞ்சியில் நடு ராத்திரியில் மாறுவேடத்தில் பார்த்தேன். அப்போது சக்கரவர்த்தி கிட்டத்தட்டத் தங்களைப் போலத்தான் இருந்தார்! தங்களைப் போலவே பெரிய மீசையும் வைத்திருந்தார்."

"ஆமாம்! நான்கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்; மகேந்திர சக்கரவர்த்தி சில சமயம் மாறுவேடம் பூண்டு ஊர்சுற்றுவது உண்டு என்று. சக்கரவர்த்தியை நான் என்றும் என்னைச் சக்கரவர்த்தி என்றும் கூடச் சிலர் சந்தேகப்பட்டிருக்கிறார்கள்." "எனக்கு அம்மாதிரியெல்லாம் சந்தேகம் கிடையாது ஐயா!" "அது போகட்டும், வாதாபி சைனியம், பல்லவ சைனியம் இரண்டையும் நீ பார்த்திருக்கிறாய். தம்பி! இன்னமும் பல்லவ சைனியத்தில் சேருவதற்கு இஷ்டப்படுகிறாயா?"

இஷ்டப்படுவது மட்டுமல்ல; பல்லவ சைனியத்திலே சேரத் துடித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே நாம் பேசிக் கொண்டு நிற்கும் நேரமெல்லாம் வீண் போவதாகவே நினைக்கிறேன்." "அப்படியானால், எனக்கு விடைகொடு!" "என்ன? என்னை இங்கே விட்டுவிட்டா போகிறீர்கள்?" "ஆமாம்; நான் முதலில் போய்ப் பல்லவ சக்கரவர்த்தியைப் பார்த்து உன்னைப்பற்றிச் சொல்கிறேன். அவர் இஷ்டப்பட்டால் உன்னை அழைத்து வரச் செய்வார். அது வரையில் நீ பாசறைக்கு வௌியிலேதான் காத்திருக்க வேண்டும்." "சக்கரவர்த்தி பாசறையில் இருக்கிறாரா? காஞ்சியிலிருந்து கிளம்பியவரைப் பற்றி அப்புறம் செய்தியே இல்லை என்றீர்களே!" "இதற்குள்ளே ஒருகால் வந்திருக்கலாமல்லவா?"

"ஐயா! சக்கரவர்த்தியை நான் ஒரு தடவை நேரில் பார்க்க விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்!" என்று பரஞ்சோதி ஆர்வத்துடன் சொன்னான். "எதற்காகச் சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு அவ்வளவு ஆவலுடன் இருக்கிறாய்?" என்றான் வஜ்ரபாஹு. "காஞ்சிக் கோட்டையைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்புவிக்கும்படி கேட்டுக் கொள்வதற்குத்தான்!" "ஓகோ! மதயானையின் மீது வேல் எறிந்த வீரன் அல்லவா நீ? சிவகாமி சுந்தரியைக் காப்பாற்றியது போல் காஞ்சி சுந்தரியையும் காப்பாற்ற விரும்புகிறாய் போலிருக்கிறது! உன்னைப் போன்ற மகா வீரனை, தாளம் போட்டுக் கொண்டு பாசுரம் பாடுவதற்கும் கல்லுளியை வைத்துக் கொண்டு கல்லைச் செதுக்குவதற்கும் உன் மாமா அனுப்பி வைத்தாரே! அது எவ்வளவு பெருந்தவறு?" "சிற்பக் கலை தெய்வீகக் கலை, ஐயா!"

"போதும் போதும்! அப்படியெல்லாம் சொல்லித்தான் மகேந்திர சக்கரவர்த்தி பல்லவ சாம்ராஜ்யத்தை இந்தக் கதிக்குக் கொண்டு வந்து விட்டார். சக்கரவர்த்தியிடம் நானும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளப்போகிறேன். 'மலையைக் குடைவது, பாறையைச் செதுக்குவது முதலிய காரியங்களை எல்லாம் நிறுத்துங்கள். பல்லவ ராஜ்யத்திலுள்ள அவ்வளவு சிற்பிகளையும் ஏவி ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரத மண்டபம் கட்டச் சொல்லுங்கள். அந்த மண்டபங்களில் ஒவ்வொரு நாளும் ஜனங்கள் கூடிக்கேட்கும்படியாக மகாபாரதம் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன்." "இதெல்லாம் எதற்காக?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"இந்த யுத்தத்தை மகேந்திர சக்கரவர்த்தியாலும் பல்லவ வீரர்களாலும் மட்டும் ஜயித்து விடமுடியாது. பல்லவ நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் வீரமும் பௌஷ்யமும் அடைய வேண்டும். உயிரைத் திரணமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்." வஜ்ரபாஹு பரஞ்சோதியைப் பிரிந்து செல்வதற்கு முன்னால் அவனை அன்புடன் தழுவிக்கொண்டு, "தம்பி! எனக்கு ஒரு மகன் இருக்கிறான்; அவனுக்கும் உன்னுடைய வயதுதான். நீங்கள் இருவரும் சேர்ந்தீர்களானால் எவ்வளவோ அரும் பெரும் காரியங்கள் செய்யலாம்!" என்றான். பரஞ்சோதி, நாத் தழுதழுக்க, "ஐயா! சிறு பிராயத்தில் நான் என் தந்தையை இழந்தேன்! என்னையும் உங்கள் புதல்வனாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்!" என்று கூறினான்.

வீரன் வஜ்ரபாஹு பாசறைக்குள் புகுந்து சென்ற பிறகு பரஞ்சோதிக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகத் தோன்றியது. சக்கரவர்த்தியிடமிருந்து தன்னை அழைத்து வரும்படி எப்போது ஆக்ஞை வருமென்று அவன் ஆவலுடன் காத்திருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பல்லவ சைனியத்தின் பாசறையில் ஒரு பெரிய கலகலப்பு ஏற்பட்டது. திடீரென்று பல ஆயிரம் வீரர்களின் குரல்கள் எழுப்பிய ஜயகோஷம் வானவௌியையெல்லாம் நிரப்பி மலை அடிவாரம் வரை சென்று எதிரொலி செய்தது. சங்கங்களும் முரசங்களும் பேரிகைகளும் சேர்ந்து முழங்கிய பேரொலி வானமுகடு வரையில் சென்று முட்டித் திரும்பியது. பாசறையின் வாசலில் நின்று காவல் புரிந்த வீரர்களைப் பரஞ்சோதி தயக்கத்துடன் நெருங்கி, பாசறைக்குள்ளே மேற்கூறிய கோலாகலத்தின் காரணம் என்னவென்று கேட்டான். அதற்கு, "மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்து விட்டார்!" என்று குதூகலமான மறுமொழி கிடைத்தது.

முதல் பாகம் முற்றிற்று
 

New Threads

Top Bottom