Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம்-1 : பூகம்பம்

முப்பத்தாறாம் அத்தியாயம்

வாகீசரின் ஆசி

அகத்துறைப் பாடல் ஒன்றுக்கு அபிநயம் பிடிக்கும்படி ஆயனர் பணித்ததும், நாவுக்கரசரின் திருவாரூர்த் தாண்டகத்திலிருந்து ஓர் அருமையான பாடலைப் பழம்பஞ்சரம் என்னும் பண்ணிலே அமைத்துச் சிவகாமி பாடினாள். ஒரு கன்னிகை முதன் முதலிலே இறைவனுடைய திருநாமத்தைச் செவியுறுகிறாள். அப்போது அவளுடைய உள்ளத்தில் அரும்பும் பக்திக் காதலானாது. பின்னர் படிப்படியாக வளர்ந்து பெருங்கனலாகிக் கொழுந்து விட்டெரிகிறது. இந்த வரலாற்றை அற்புதமான முறையில் வர்ணிக்கும் அத்திருப்பாடல் பின்வருமாறு: "முன்னம் அவனுடைய நாமம்கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள் பெம்மான் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங்கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!"

பாடலை ஒரு முறை முழுவதும் பாடிவிட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள் சிவகாமி. அப்போது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்து பெண் உள்ளத்தில் அரும்பி மலர்ந்த காதல் உணர்ச்சியே ஓர் உருக்கொண்டு அவர்கள் முன்னால் நிற்பதுபோல் தோன்றியது. முதன் முதலில் ஓர் இளம் கன்னிகையில் இதயத்தில் காதல் உதயமாகும்போது அதனுடன் பிறக்கும் நாணங்கலந்த இன்பப்பெருக்கை அவர்கள் கண்முன்னால் பார்த்தார்கள். காதல் வளர்ந்து வரும் ஆரம்ப தினங்களில் காதலனுடைய பெயரைக் கேட்கும் போதும், அவனுடைய இருப்பிடம் முதலிய வரலாறுகளை அறியும்போதும், அவனுடைய குணாதிசயங்கள் வர்ணிக்கப்படும்போதும் பெண் இதயத்தில் பொங்கித் ததும்பும் ஆனந்த குதூகலத்தையும் அதனால் அவளுடைய மேனியில் ஏற்படும் அதிசயமான மாறுதல்களையும் பிரத்தியட்சமாகப் பார்த்தார்கள். நாளடைவில் அந்தக் காதல் முற்றும்போது, எப்படி அது சித்தப்பிரமையின் சுபாவத்தை எய்திக் காதலியைப் பித்துப் பிடித்தவளாக்குகிறது என்பதையும், அந்த நிலையில் காதலுக்காகவும் காதலனுக்காகவும் பெண்ணானவள் எப்பேர்ப்பட்ட தியாகங்களையெல்லாம் செய்யச் சித்தமாகி விடுகிறாள் என்பதையும் கண்டார்கள். பெற்று வளர்த்த அன்னையையும் அப்பனையும் விட்டு விட்டுக் காதலனோடு புறப்படவும் காதலுக்குத் தடையாக நிற்கும் சமூக ஆசாரங்களையெல்லாம் புறக்கணித்து ஒதுக்கவும், ஊராரின் நிந்தனைகளையெல்லாம் பொறுத்துக்கொள்ளவும் எவ்வாறு அந்தப் பெண் மனம் துணிகிறாள் என்பதையும் நேருக்கு நேரே பார்த்தார்கள்.

வாக்கினால் விவரிக்க முடியாத மேற்சொன்ன உணர்ச்சிகளையெல்லாம் பெண் உள்ளத்தில் படிப்படியாகக் காதல் முதிர்ந்து வரும் அபூர்வ பாவங்களையெல்லாம், சிவகாமி அபிநயத்தில் காட்டிவந்தபோது, சபையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, "இது சாமானிய மனித வர்க்கத்துக்குரிய காதல் அல்ல - அண்ட பகிரண்டங்களுக்கெல்லாம் இறைவனாகிய எம்பெருமானுக்கே உரிய தெய்வீகக் காதல்!" என்று தோன்றியது. அவ்வளவுடன் நின்று விடவில்லை. காதல் பரிபூரணமடைவதற்கு இன்னும் ஒருபடி மேலே போக வேண்டியிருக்கிறது. காதலி தனக்காக இவ்வளவெல்லாம் தியாகங்களைச் செய்ய சித்தமாயிருந்தும், அந்தத் தெய்வக் காதலன் திருப்தியடையவில்லை. மேலும் அவளைச் சோதனைக்குள்ளாக்க விரும்பித் திடீரென்று ஒரு நாள் மறைந்து விடுகிறான். இதனால் சோகக்கடலிலே மூழ்கிய காதலி வௌியுலகை அடியோடு மறந்துவிடுகிறாள். தன்னையும் மறந்து விருகிறாள். தன் பெயரைக்கூட மறந்து விடுகிறாள். "உன் பெயர் என்ன?" என்று யாரேனும் கேட்டால், காதலனின் திருநாமத்தைச் சொல்லுகிறாள்! அத்தகைய மன நிலைமையில் மறுபடியும் தெய்வக் காதலன் அவள் முன்னால் தோன்றும்போது, காதலியானவள் தான் செய்யாத குற்றங்களுக்காகத் தன்னை மன்னித்து விடும்படி கோரி அவனுடைய திருப்பாதங்களில் பணிகிறாள்!

படிப்படியாக மேற்கூறிய உணர்ச்சிகளையெல்லாம் முக பாவத்திலும் கண்களின் தோற்றத்திலும் அங்கங்களின் அசைவிலும் சைகைகளிலும் காட்டிக் கொண்டு வந்த சிவகாமி, கடைசியில், "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!" என்ற அடியைப் பாடிவிட்டுக் கூப்பிய கரங்களுடன் அடியற்ற மரம்போலத் தரையில் விழுந்தாள்! உடனே சபையில் "ஹா! ஹா ஹா!" என்ற குரல்கள் எழுந்தன. 'சிவகாமி!' என்று கூவிக்கொண்டு ஆயனர் எழுந்தார். எழுந்து அவள் கிடந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து மாமல்லரும் பரபரப்புடன் சென்றார். ஆயனர் சிவகாமி கிடந்த இடத்துக்கு அருகில் தரையில் உட்கார்ந்தார். அவருடைய அங்கங்கலெல்லாம் பதறின. அதைப் பார்த்த மாமல்லர், தரையில் உதிர்ந்து கிடக்கும் மென்மையான மலர்களை அடியார் ஒருவர் இறைவனுடைய அர்ச்சனைக்காகப் பொருக்கும் பாவனையுடனே சிவகாமியைத் தமது இரு கரங்களாலும் மிருதுவாக எடுத்து ஆயனரின் மடியின்மீது இருத்தினார்.

அதற்குள்ளாக அங்கிருந்தவர்களில் பலர் எழுந்து ஓடிவந்து அம்மூவரையும் சுற்றிக்கொண்டார்கள். சிலர் "தண்ணீர்! தண்ணீர்!" என்றார்கள். சிலர் "விசிறி! சிவிறி!" என்றார்கள். "வழியை விடுங்கள்!" என்று ஒரு குரல் கேட்டது. நாவுக்கரசர் பெருமான் தமது ஆசனத்திலிருந்து எழுந்து சிவகாமியின் அருகில் வந்தார். ஆயனரின் மடியில் தலை வைத்து உணர்வின்றிப் படுத்திருந்த சிவகாமியின் முகத்தை அவர் கருணை ததும்பும் கண்களினால் பார்த்தார். தமது திருக்கரத்தில் கொண்டு வந்திருந்த திருநீற்றை அவளுடைய நெற்றியில் இட்டார்.

சற்று நேரம் அந்த மண்டபத்தில் ஊசி விழும் சத்தம் கேட்கும்படியான மௌனம் குடிகொண்டிருந்தது. காலை நேரத்தில் கருங்குவளையின் இதழ் விரிவது போல சிவகாமியின் கண்ணிமைகள் மெதுவாகத் திறந்தன. திறந்த கண்கள் நாவுக்கரசரின் திருமுகத்தை முதலில் தரிசித்தன. தந்தையின் மடியில் படுத்தபடியே சிவகாமி இரு கரங்களைக் கூப்பி அம்மகாபுருஷரைக் கும்பிட்டாள். "நீ மகராஜியாய் இருக்க வேணும், குழந்தாய்!" என்று வாகீசப் பெருமான் ஆசி கூறினார்.

அந்த ஆசியைக் கேட்ட சிவகாமியின் பவள நிற இதழ்களில் புன்னகையின் ரேகை தோன்றியது. அது தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தில் செவ்வாம்பல் பூவானது வெட்கத்தினால் தயங்கித் தயங்கி மடலவிழ்வதுபோல் இருந்தது. பின்னர் அவளுடைய கருவிழிகள் இரண்டும், எதையோ தேடுவதைப்போல் அங்குமிங்கும் அலைந்து, கடைசியில் குமார சக்கரவர்த்தியின் திருமுகத்தைப் பார்த்ததும் அங்கேயே தங்கி விட்டன. "அடிகள் எனக்குக் கூறிய ஆசி மொழி தங்கள் செவியில் விழுந்ததா?" என்று அக்கண்கள் மாமல்லரைக் கேட்டதுடன், அவருடைய குற்றங்களையெல்லாம் மறந்து மீண்டும் அவருடன் சிநேகமாயிருக்கச் சித்தமாயிருப்பதையும் தெரியப்படுத்தின.

மறுபடியும் நாவுக்கரசரின் திருக்குரல் கேட்கவே சிவகாமி பூரண சுய உணர்வு வந்தவளாய் சட்டென்று எழுந்து நின்றாள். இவ்வளவு பேருக்கு நடுவில் தான் மூர்ச்சையாகி விழுந்ததை எண்ண அவளுக்குப் பெரிதும் வெட்கமாயிருந்தது. வாகீசர் கூறினார்: "ஆயனரே! பரதக் கலையின் சிறப்பைக் குறித்து நான் படித்தும் கேட்டும் அறிந்திருக்கிறேன். ஆனால் அதனுடைய பூரண மகிமையையும் இன்றுதான் அறிந்தேன். என்னுடைய வாக்கிலே வந்த பாடலில் இவ்வளவு அனுபவமும் இவ்வளவு உணர்ச்சியும் உண்டென்பதை இதற்கு முன்னால் நான் அறியவில்லை. தங்கள் குமாரியினால் பரத சாஸ்திரமே பெருமையடையப் போகிறது. உண்மையாகவே அது தெய்வக் கலையாகப் போகிறது. தில்லைப் பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும் இறைவனுக்கே அர்ப்பணமாக வேண்டிய அற்புதக் கலை இது!...

இவ்விதம் சுவாமிகளின் திருவாயிலிருந்து வௌியான அருள் மொழிகளை அனைவரும் ஆவலுடன் பருகிக் கொண்டிருந்த சமயத்தில் வீதியில் குதிரையொன்று விரைவாக வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் மடத்தின் வாசலில் வந்து நின்றது. உடனே குமார சக்கரவர்த்தி மடத்தின் வாசற்படியை நோக்கிச் சென்றார். வாகீசர் அங்கே சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்து, "நீங்களும் போகலாம்" என்று சமிக்ஞையால் கூற, எல்லாரும் தயக்கத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

மாமல்லர் வாசற்படியின் அருகில் நின்று ஏவலாளன் ஒருவனுடன் ஏதோ பேசிவிட்டு, உள்ளே வந்தார். நாவுக்கரசரை நோக்கிக் கைகூப்பி, "சுவாமி! மதுரையிலிருந்து தூதர்கள் ஏதோ அவசரச் செய்தியுடன் வந்திருக்கிறார்களாம் நான் விடைபெற்று கொள்கிறேன்" என்றார். "அப்படியே, குமார சக்கரவர்த்தி! தந்தைக்குச் செய்தி அனுப்பினால், அவருடைய அபிப்பிராயப் படியே நான் தென் தேசத்துக்கு யாத்திரை போவதாகத் தெரியப்படுத்தவேணும்!" என்றார். "ஆகட்டும் சுவாமி" என்று மாமல்லர் கூறி, ஆயனரைப் பார்த்து, "சிற்பியாரே! துறைமுகம் போய்ச் சேர்ந்ததும், சிவகாமியின் சௌக்கியத்தைப் பற்றிச் செய்தி அனுப்புங்கள். சில காரணங்களினால் நான் கொஞ்ச காலத்துக்குக் காஞ்சியை விட்டு வௌிக்கிளம்ப முடியாமலிருக்கிறது" என்றார்.

இவ்விதம் பேசி வருகையில் மாமல்லர் அடிக்கடி சிவகாமியை நோக்கி அவளிடம் நயன பாஷையினால் விடைபெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால், சிவகாமியோ ஆயனரின் பின்னால் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள். எனவே, சிவகாமியிடம் சொல்லிக் கொள்ளாமலே மாமல்லர் புறப்பட வேண்டியதாயிற்று. போகும்போது, நாவுக்கரசர் பெருமான் அங்கிருப்பதைக்கூட அவர் மறந்து 'தட்' 'தட்' என்று அடிவைத்து நடந்து சென்றதானது, ஆத்திரங்கொண்ட அவருடைய மனநிலையை நன்கு பிரதிபலித்தது. சற்றுநேரத்துக்கெல்லாம் வாசலில் குதிரைகளின் காலடிச் சத்தமும், ரதத்தின் சக்கரங்கள் கடகடவென்று உருண்டோடும் சத்தமும் கேட்டன. சிவகாமிக்கு அப்போது தன் உயிரானது தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வௌியில் சென்று ரதத்தின்மேல் ஏறிக் கொண்டு செல்வதுபோல் தோன்றியது.

நாவுக்கரசரிடம் முடிவாக விடை பெற்றுக் கொண்டு ஆயனரும் சிவகாமியும் புறப்பட வேண்டிய நேரம் வந்த போது, பெருமான் ஆயனருக்குச் சமிக்ஞை செய்து அவரைப் பின்னால் நிறுத்தினார். முன்னால் சென்ற சிவகாமியின் காதில் விழாதபடி மெல்லிய குரலில் பின்வருமாறு கூறினார்: "ஆயனரே! உமது புதல்விக்குக் கிடைத்திருக்கும் கலை அற்புதக் கலை; தெய்வீகக் கலை. அதனாலேயே அவளைக் குறித்து என் மனத்தில் கவலை உண்டாகிறது. இத்தகைய அபூர்வமான மேதாவிலாசத்தை இறைவன் யாருக்கு அருளுகிறாரோ, அவர்களைக் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்குவதும் உண்டு. உமக்குத்தான் தெரியுமே? இந்த எளியேனை ஆட்கொள்வதற்கு முன்னால் இறைவன் எத்தனை எத்தனை சோதனைகளுக்கெல்லாம் ஆளாக்கினார்..."

சற்று முன்பு வரையில் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஆயனர் மேற்கூறிய மொழிகளைக் கேட்டுத் தலையில் இடி விழுந்தவர் போல் பதறி, "சுவாமி! இதென்ன சொல்கிறீர்கள்? மகா புருஷராகிய தாங்கள் எங்கே? அறியாப் பெண்ணாகிய சிவகாமி எங்கே? அவளுக்கு ஏன் சோதனைகள் வரவேண்டும்? தங்களுடைய திருவாக்கில் இப்படி வந்துவிட்டதே! என்றார். "ஆயனரே! இரைந்து பேச வேண்டாம் சிவகாமிக்கு இது தெரிய வேண்டியதில்லை. ஆனால் நீர் முன் ஜாக்கிரதையாக இருப்பது நலம். உமது அருமைக் குமாரியைப் பார்க்கும்போது அவளுக்கு ஏதோ பெரிய துக்கம் நேரப்போகிறது என்று என் உள்ளம் சொல்லுகிறது. ஆஹா! இத்தகைய வருங்கால திருஷ்டியை இறைவன் எதற்காக எனக்கு அளித்தார்!" என்று கூறி வருகையில் நாவுக்கரசரின் கண்களில் கண்ணீர் மல்கிற்று.

"ஆனாலும் நீர் தைரியமாக இருக்கவேண்டும். இந்த உலகில் பணி செய்து கிடப்பதே நமது கடன். நம்மைத் தாங்கும் கடன் கருணை வடிவான இறைவனுடையது. உமது பணியைச் செய்து கொண்டு நீர் நிம்மதியாக இரும். எத்தனை சோதனைகள் நேர்ந்தாலும் மனம் கலங்க வேண்டாம். அன்பர்களுக்கு முதலில் எவ்வளவு துன்பங்களை அளித்தாலும் முடிவில் இறைவன் ஆட்கொள்வார்." இவ்விதம் கூறிவிட்டு நாவுக்கரசர் பெருமான் மடத்துக்குள்ளே சென்றார். அன்று மாலை அந்தத் திருமடத்துக்குள்ளே பிரவேசித்தபோது உள்ளம் நிறைந்த குதூகலத்துடன் பிரவேசித்த ஆயனச் சிற்பியாரோ, இப்போது இதயத்திலே பெரியதொரு பாரத்துடன் வௌியேறினார். அபூர்வமான வேலைப்பாடுகளுடன் அவர் சிலை வடிவமாக்கிக் கொண்டிருந்த பெரியதொரு பாறாங்கல்லைத் தூக்கி அவருடைய இதயத்தின் மேலே யாரோ வைத்துவிட்டது போலிருந்தது.
 
முப்பத்தேழாம் அத்தியாயம்

கண்ணபிரான்

முன் அத்தியாயத்தில் கூறியபடி, இதயத்தில் பெரிய பாரத்துடனே மடத்தின் வாசற்பக்கம் வந்து ஆயனர், தம் உள்ள நிலையை வௌிக்குக் காட்டாமல் சமாளித்துக் கொண்டு, சிவகாமியைப் பார்த்து, "குழந்தாய்! இப்பொழுதே நாம் ஊருக்குத் திரும்பிவிடலாமல்லவா?" என்று கேட்டார். "கமலியைப் பார்த்துவிட்டுக் காலையில் போகலாம் அப்பா!" என்று சிவகாமி மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கடகடவென்ற சத்தத்துடன் இரட்டைக் குதிரை பூட்டிய ரதம் ஒன்று அங்கே நின்றது. அதை ஓட்டி வந்த சாரதி ரதத்தின் முன் தட்டிலிருந்து குதித்து வந்து, மடத்து வாசலில் ஆயனரும் சிவகாமியும் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான். அவன் நல்ல திடகாத்திர தேகமுடையவன் பிராயம் இருபத்தைந்து இருக்கும்.

"ஐயா! இங்கே மாமல்லபுரத்திலிருந்து ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள் சிவகாமி அம்மையும் வந்திருக்கிறார்களாமே, நீங்கள் கண்டதுண்டோ?" என்று அவன் கேட்டான். "ஓகோ! கண்ணபிரானா? எங்களை யார் என்று தெரியவில்லையா, உனக்கு?" என்றார் ஆயனர். "அதுதானே தெரியவில்லை? இந்தச் சப்பை மூக்கையும் இந்த அகலக் காதையும் எங்கே பார்த்திருக்கிறேன்? நினைவு வரவில்லையே?" என்று கண்ணபிரான் தன் தலையில் ஒரு குட்டுக் குட்டிக் கொண்டு யோசித்தான். "என் அப்பனே! மண்டையை உடைத்துக் கொண்டு எங்கள் மேல் பழியைப் போடாதே! கமலி அப்புறம் எங்களை இலேசில் விடமாட்டாள். நீ தேடி வந்த ஆயனச் சிற்பியும் சிவகாமியும் நாங்கள்தான்" என்றார் ஆயனர்.

"அடாடாடா! இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா? எனக்கும் சந்தேகமாய்த் தானிருந்தது. ஆனால் 'கண்ணாற் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்' தீர விசாரிப்பதே மெய் என்று கும்பகர்ணனுக்கு ஜாம்பவான் சொன்ன பிரகாரம்.. இருக்கட்டும்; அப்படியென்றால், நீங்கள் தான் ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள் சிவகாமியுமாக்கும் ஆனால், உங்களில் ஆயனச் சிற்பி யார்? அவருடைய மகள் யார்?" என்று விகடகவியான அந்த ரதசாரதி கேட்டு விட்டு, அந்திமாலையின் மங்கிய வௌிச்சத்தில் அவ்விருவர் முகங்களையும் மாறி மாறி உற்றுப் பார்த்தான். சிவகாமி கலகலவென்று நகைத்துவிட்டு, "அண்ணா! நான்தான் சிவகாமி; இவர் என் அப்பா; நாம் நிற்பது பூலோகம்; மேலே இருப்பது ஆகாசம்; உங்கள் பெயர் கண்ணபிரான்; என் அக்கா கமலி. இப்போது எல்லாம் ஞாபகம் வந்ததா? அக்கா சௌக்கியமா? இன்று இராத்திரி உங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணியிருந்தோம்" என்றாள். "ஓஹோ! அப்படியா? கும்பிடப்போன தெய்வம் விழுந்தடித்துக் குறுக்கே ஓடிவந்த கதையாக அல்லவா இருக்கிறது? நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தீர்களா?" "ஆமாம்; வரலாமா? கூடாதா?" "ஒருவிதமாக யோசித்தால், வரலாம்; இன்னொரு விதமாக யோசித்தால் வரக்கூடாது." "அப்பா! நாம் ஊருக்கே போகலாம்; புறப்படுங்கள்!" என்று கோபக் குரலில் சிவகாமி கூறினாள்.

"அம்மா! தாயே! அப்படிச் சொல்லக்கூடாது கட்டாயம் வரவேண்டும். நான் இன்றைக்கு வீட்டைவிட்டுக் கிளம்பிய போது கமலி என்ன சொன்னாள் தெரியுமா? 'இதோ பார்! இன்றைக்கு நாவுக்கரசர் மடாலயத்துக்கு ஆயனச் சிற்பியார் வருகிறாராம். அவருடன் என்னுடைய தோழி சிவகாமியும் வந்தாலும் வருவாள். இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டுதான் இராத்திரி நீ வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும்' என்றாள். நான் என்ன சொன்னேன் தெரியுமா? 'அவர்கள் பெரிய மனுஷாள், கமலி! நம்மைப் போன்ற ஏழைகள் வீட்டுக்கு வருவார்களா? வந்தால்தான் திரும்பிப் போவார்களா?' என்றேன். அதற்குக் கமலி 'நான் சாகக் கிடக்கிறேன் என்று சொல்லி அழைத்துவா!' என்றாள்..."

"அடாடா! கமலிக்கு ஏதாவது உடம்பு அசௌக்கியமா, என்ன?" என்று ஆயனர் கவலையுடன் கேட்டார். "ஆம், ஐயா! ஒரு வருஷமாகக் கமலி அவளுடைய தோழியைப் பார்க்காமல் கவலைப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிராணனை விட்டுக் கொண்டிருக்கிறாள். முக்கால் பிராணன் ஏற்கனவே போய்விட்டது. மீதியும் போவதற்கு நீங்கள் வந்தால் நல்லது." "அப்படியானால், உடனே கிளம்பலாம் அதற்குள்ளே இங்கே ஜனக்கூட்டம் கூடிவிட்டது" என்றாள் சிவகாமி.

உண்மையிலே அங்கே கூட்டம் கூடிவிட்டது. நகரத்தில் அந்த நெருக்கடியான பகுதியில் ஆயனரும் சிவகாமியும் அரண்மனை ரத சாரதியுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி ஜனக்கூட்டத்தைக் கவர்ந்து இழுத்ததில் ஆச்சரியம் என்ன? ஆயனரையும் சிவகாமியையும் கண்ணபிரான் தான் கொண்டு வந்திருந்த ரதத்தில் ஏறிக்கொள்ளும்படிச் செய்தான். காஞ்சி மாநகரின் விசாலமான தேரோடும் வீதிகளில் இரண்டு குதிரை பூட்டிய அந்த அழகிய அரண்மனை ரதம் பல்லவ ராஜ்யத்தின் சிறந்த ரத சாரதியினால் ஓட்டப்பட்டு விரைந்து சென்றது.

ரதம் போய்க் கொண்டிருக்கையில் சிவகாமி "அண்ணா! உங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்று நான் சொன்னதற்கு "இன்னொரு விதத்தில் யோசித்தால் வரக்கூடாது என்று சொன்னீர்களே! அது என்ன?" என்று கேட்டாள். "தங்கச்சி! மடத்திலிருந்து குமார சக்கரவர்த்தியை அழைத்துப் போனேனல்லவா? அரண்மனை வாசலில் அவர் இறங்கியதும் என்னைப் பார்த்து, 'கண்ணா! ரதத்தை ஓட்டிக் கொண்டு மடத்துக்குப் போ! அங்கே ஆயனரும் அவர் மகளும் இருப்பார்கள்; அவர்களை ரதத்தில் ஏற்றிக்கொண்டு போய் மாமல்லபுரத்தில் விட்டுவிட்டு வா! அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காதே!' என்று கட்டளையிட்டார். குமார சக்கரவர்த்தி அவ்விதம் கட்டளையிட்டிருக்கும்போது, நம்முடைய வீட்டுக்கு அழைத்துப் போகலாமா என்று யோசித்தேன்" என்றான் கண்ணபிரான்.

"சுற்றி வளைத்துப் பீடிகை போடாமல் உங்களால் ஒன்றும் சொல்ல முடியாதே?" என்று சிவகாமி கேட்டாள். "முடியாது தங்கச்சி, முடியாது! அதற்குக் காரணமும் உண்டு. முன்னொரு காலத்தில் நான் சின்னக் குழந்தையாயிருந்தபோது..." "நிறுத்துங்கள்! நான் அதைக் கேட்கவில்லை. அவசரமாகக் குமார சக்கரவர்த்தி மடத்திலிருந்து போனாரே, ஏதாவது விசேஷமான செய்தி உண்டோ என்று கேட்டேன்." "மதுரையிலிருந்து தூதுவர்கள் வந்திருக்கிறார்கள்." மதுரையிலிருந்து தூதர்கள் என்றதும் சிவகாமிக்குத்தான் முன்னம் கேள்விப்பட்ட திருமணத் தூது விஷயம் ஞாபகம் வந்தது. எனவே, "தூதர்கள் என்ன செய்தி கொண்டு வந்தார்கள்?" என்று கவலை தொனித்த குரலில் கேட்டாள். "அந்த மாதிரி இராஜாங்க விஷயங்களையெல்லாம் நான் கவனிப்பதில்லை, தங்கச்சி!" என்றான் கண்ணபிரான்.

அதைக் கேட்ட ஆயனர், "ரொம்ப நல்ல காரியம், தம்பி! அரண்மனைச் சேவகத்தில் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நமக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைக் காதிலேயே போட்டுக் கொள்ளக்கூடாது" என்றார். அப்போது ரதம் தெற்கு ராஜவீதியில் அரண்மனையின் முன் வாசலைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. வீதியின் ஒரு பக்கத்தை முழுவதும் வியாபித்திருந்த அரண்மனையின் வௌி மதிலையும், முன் வாசல் கோபுரத்தையும், அதைக் காவல் புரிந்த வீரர்களையும் உள்ளே தெரிந்த நெடிய பெரிய தாவள்யமான சுவர்களையும், படிப்படியாகப் பின்னால் உயர்ந்து கொண்டுபோன உப்பரிகை மாடங்களையும் சிவகாமி பார்த்தாள். தன்னையும் தன்னுடைய இதயத்தைக் கவர்ந்த சுகுமாரரையும் பிரித்துக் கொண்டு இத்தனை மதில் சுவர்களும் மாடகூடங்களும் தடையாக நிற்கின்றன என்பதை எண்ணி ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள்.
 
முப்பத்தெட்டாம் அத்தியாயம்

கமலி

காஞ்சி மாநகரில் சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனைக்குப் பின்புறத்தில் விஸ்தாரமான பூந்தோட்டம் இருந்தது. பூந்தோட்டத்தின் பின்புறமதிற்சுவரையொட்டிச் சில சிறு கட்டிடங்கள் இருந்தன. அவற்றில் சில குதிரை லாயங்கள்; சில ரதங்களை நிறுத்தும் கொட்டடிகள்; மற்றவை ரதசாரதிகளும் தோட்டக்காரர்களும் வசித்த வீடுகள். அந்த வீடுகளில் ஒன்றுக்கு முன்னால், கண்ணபிரான் ஓட்டிக்கொண்டு வந்த ரதம் நின்றது. ரதத்தின் சத்தத்தைக் கேட்டு, வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பெண் குதூகலமாகக் குதித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

"கமலி! யாரை அழைத்து வந்திருக்கிறேன், பார்!" என்று சொல்லிக்கொண்டே கண்ணபிரான் ரதத்திலிருந்து குதித்தான். அதே சமயத்தில் ரதத்திலிருந்து சிவகாமி இறங்குவதைப் பார்த்த கமலி, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று சிவகாமியை ஆர்வத்துடன் கட்டிக்கொண்டாள். அப்போது வீட்டிற்குள்ளேயிருந்து ஒரு பெரியவர் வந்தார். "அப்பா! யார் வந்திருக்கிறார் பாருங்கள்!" என்றான் கண்ணபிரான். அந்தப் பெரியவர் உற்றுப் பார்த்துவிட்டு, "வாருங்கள், ஐயா!" என்று சொல்லிக்கொண்டு ஆயனரின் அருகில் சென்றார். பெரியவரும் ஆயனரும் பேசிக்கொண்டே வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். கமலியும் சிவகாமியும் உள்ளே போனார்கள்.

சிவகாமியும் கமலியும் குழந்தைப்பிராயத்திலிருந்து தோழிகள். ஆயனர் காஞ்சியில் இருந்த காலத்தில் அவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் கமலியின் பெற்றோர்கள் வசித்தார்கள். சிவகாமி குழந்தையாயிருந்தபோதே, அவளைக் காட்டிலும் ஒன்றரை வயது மூத்தவளான கமலி சிவகாமியைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, "தங்கச்சி!" என்று அருமையாக அழைத்துச் சீராட்டுவாள். குழந்தை சிவகாமியும், "அக்கா! அக்கா!" என்று மழலைச் சொல்லில் குழறுவாள்.

இவ்வாறு ஆரம்பித்த அக்குழந்தைகளின் சிநேகமும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஆயனர் காட்டுக்குள்ளே சென்று வீடு கட்டிக்கொண்டு வசிக்கத் தொடங்கிய பிறகு கமலி அடிக்கடி அங்கு வந்து மாதக்கணக்கில் தங்கியிருப்பாள். சிவகாமி ஆட்டம் பயிலும் போதெல்லாம் கமலி அவள் எதிரில் இருந்து இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பாள். அவளுடைய ஆட்டத் திறமையைப் பாராட்டுவாள். "என் தங்கச்சிக்கு இணை ஈரேழு பதினாலு உலகத்திலும் கிடையாது!" என்பாள். ஆயனருக்கு அடுத்தபடியாகச் சிவகாமிக்கு ஆட்டக் கலையில் ஊக்கமளித்தவள் கமலி என்று தான் சொல்லவேண்டும்.

கமலியின் தகப்பனார் காஞ்சியில் பெயர்பெற்ற குதிரை வியாபாரி. அரேபியா முதலான வௌி தேசங்களிலிருந்து அவர் குதிரைகள் தருவிப்பார். மாமல்லபுரத்துத் துறைமுகத்தில் கப்பலில் வந்து குதிரைகள் இறங்கும். அவற்றைக் காஞ்சிக்குக் கொண்டு வருவார். முதலில் அரண்மனைக் குதிரைலாயத்தின் தலைவரும் பல்லவ சைனியத்தின் குதிரைப் படைத் தலைவரும் வந்து, புதிதாகத் தருவிக்கப்பட்ட குதிரைகளைப் பார்ப்பார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டதுபோக மற்றக் குதிரைகளைத்தான் பொது ஜனங்களுக்கு விற்கலாம்.

இதன் காரணமாக, அரண்மனைக் குதிரை லாயத்தின் தலைவர் அடிக்கடி கமலியின் தந்தையைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்கு வருவதுண்டு. சில சமயம் அவருடன் அவருடைய மகனும் வருவான். அந்த வாலிபன் பெயர்தான் கண்ணபிரான். தந்தைமார்கள் இருவரும் குதிரைப் பரிவர்த்தனை விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கையில், மகனுக்கும் மகளுக்கும் இடையே இருதய பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்தது. இரு குடும்பத்தாருக்கும் விஷயம் தெரிந்தபோது, கண்ணபிரானுக்கும் கமலிக்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள். இது நடந்து வருஷம் ஒன்றரை ஆயிற்று. இந்த ஒன்றரை வருஷமும் சிவகாமியும் கமலியும் சந்திக்கவில்லை என்றாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் நினையாத நாள் கிடையாது.

இரவு உணவு அருந்திய பின்னர், ஆயனரும் அரண்மனையின் அசுவபாலரும் வாசல் திண்ணையில் காற்றோட்டமாகப் படுத்துக் கொண்டு யுத்த நிலைமையைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். வீட்டுக்குள்ளே அரண்மனைப் பூந்தோட்டத்தை அடுத்திருந்த அறையில் சிவகாமியும் கமலியும் படுத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் யுத்தத்தைப் பற்றிப் பேசவில்லை. கமலியின் இல்வாழ்க்கைதான் அவர்கள் சம்பாஷணையில் முக்கிய விஷயமாக இருந்தது. இடையிடையே 'கலீர்' 'கலீர்' என்று அவர்கள் குதூகலமாகச் சிரிக்கும் சத்தம் கேட்டது.

இரவு ஒன்றரை ஜாமத்துக்குமேல் ஆனபோது, வாசல் திண்ணையிலிருந்து ஆயனர், "அம்மா! சிவகாமி! உதயத்திற்கு முன்னால் நாம் புறப்பட வேண்டும் பேசியது போதும் தூங்கு!' என்றார். கமலியும் சிவகாமியும் உடனே கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்தார்கள். சிறிது நேரம் ஆனதும், சிவகாமி தூங்கி விட்டதாக எண்ணிக்கொண்டு கமலி சத்தம் செய்யாமல் எழுந்திருந்து அந்த அறையின் ஒரு பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு அடுத்த அறைக்குள் சென்றாள்.

சிவகாமி கண்களை மூடிக்கொண்டிருந்தாளே தவிர உண்மையில் தூங்கவில்லை. அவளுடைய உள்ளத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் அலைமேல் அலை எறிந்து தோன்றிக் கொண்டிருந்தன. கமலிக்குக் கண்ணபிரான்மேல் காதல் உண்டான நாளிலிருந்து அவள் தன்னுடைய அந்தரங்கத்தையெல்லாம் சிவகாமியிடம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆரம்பத்திலிருந்தே கமலியின் காதல் ஆனந்தமாயிருந்தது. எவ்விதத் துக்கமோ வேதனையோ அவள் மனத்தில் ஏற்பட்டதில்லை. அந்த நாட்களில் அவளுடைய பேச்சு ஒரே குதூகலமாகவும் எக்களிப்பாகவுமே இருந்து வந்தது.

கல்யாணத்திற்குப் பிறகு அந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கையும் அவ்விதமே குதூகலமாயிருக்கிறதென்பதை இப்போது சிவகாமி தெரிந்துகொண்டாள். ஆனால், தன்னுடைய காதல் மட்டும் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கவேண்டும்? அதில் எத்தனை வேதனை? எத்தனை ஆத்திரம்? எத்தனை கோபதாபம்? கமலியின் குதூகலமான காதலுக்கும், தன்னுடைய வேதனை மயமான காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப்பார்க்கப் பார்க்க தனக்குத் தகுதியில்லாத இடத்தில் காதலைச் செலுத்தியது தான் தன்னுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று சிவகாமிக்குத் தோன்றியது.

அவரோ பெரிய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்துக்கு உரியவர்; நாமோ கல்லில் உளியினால் வேலை செய்யும் சிற்பியின் மகள். அவருடைய காதலுக்கு நாம் ஆசைப்படுவது பெரிய பிசகுதான். ஆனால் இந்தப் பிசகுக்குக் காரணம் யார்? இந்த ஏழைச் சிற்பியின் மகளைத் தேடிக்கொண்டு அவர் தானே வந்தார்? ஒரு கவலையுமின்றிக் காட்டில் துள்ளி விளையாடும் மானைப்போல் குதூகலமாக ஆடிப்பாடிக் கொண்டிருந்த அபலைப் பெண்ணின் உள்ளத்தில் அவர் தானே ஆசைத்தீயை மூட்டினார்? ஆஹா! அந்த ஆசையானது இப்போது இப்படிப் பெருநெருப்பாய் மூண்டு விட்டதே? உடம்பையும் உள்ளத்தையும் இப்படித் தகிக்கின்றதே?

சற்று நேரம் புரண்டு பார்த்தும் தூக்கம் வராமற்போகவே, சிவகாமி படுக்கையை விட்டு எழுந்தாள். அந்த அறையின் பின்புறச் சுவரிலிருந்த பலகணியின் மாடத்தில் உட்கார்ந்தாள். அவள் எதிர்பார்த்தபடியே பலகணியின் வழியாகப் பங்குனி மாதத்து இளந்தென்றல் ஜிலுஜிலுவென்று வந்து கொண்டிருந்தது. அது சும்மா வரவில்லை அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்த செண்பக மரங்களில் நுழைந்தும், மல்லிகைச் செடிகளின் மீது தவழ்ந்தும் அந்த மலர்களின் இன்ப நறுமணத்தை அளாவிக் கொண்டு வந்தது. அவ்விதம் செண்பகமும் மல்லிகையும் கலந்து உண்டான சுகந்தமானது சிவகாமியின் உள்ளத்தில் ஏதோ தௌிவில்லாத பழைய ஞாபகங்களை உண்டாக்கிற்று. எத்தனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் ஜன்ம ஜன்மாந்தரங்களில் இதே விதமான நறுமணத்தை அவள் நுகர்ந்தது போலவும், அந்தக் காலங்களிலும் இதே விதமான இன்ப வேதனை அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது போலவும், மங்கிய நினைவுகள் உண்டாயின. தனது அன்பைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆருயிர்க் காதலன் தனக்கு வெகு சமீபத்தில் இருந்தும் அவனை அடைய முடியாதிருப்பது போலவும், இருவருக்கும் இடையில் இன்னதென்று தெரியாத இடையூறுகள் முளைத்துப் பெரிய கரிய நிழல் உருவங்கள் எடுத்து நிற்பதுபோலவும் மனத்தில் பிரமைகள் உண்டாயின.
 
முப்பதொன்பதாம் அத்தியாயம்

கமலியின் மனோரதம்

விவரிக்க முடியாத இன்பத்தையும் வேதனையையும் ஒருங்கே தந்த மேற்கூறிய நிழல் நினைவுகளைப் பொறுக்க முடியாமல், பின்புறக் கதவை ஓசைப்படாமல் மெதுவாய்த் திறந்து கொண்டு பூந்தோட்டத்துக்குள் பிரவேசித்தாள். அப்போது இரவில் மூன்றாம் ஜாமம் நடந்துகொண்டிருந்தது. பிறைச் சந்திரன் விரித்த இளம் நிலவின் மோகன ஒளியில் அந்தப் பூந்தோட்டம் கனவு உலகத்தில் காணும் ஒரு காட்சி போல் தென்பட்டது.

பூந்தோட்டத்தில் உலாவி வர எண்ணிப் புறப்பட்ட சிவகாமி, வீட்டுச் சுவரோரமாகச் சற்றுத் தூரம் சென்றபோது, பேச்சுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். கமலியும் கண்ணபிரானும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த அறையின் பின்புறப் பலகணி வழியாக அவர்களுடைய பேச்சுத் தௌிவாகக் கேட்டது. அந்தப் பக்கம் போகமல் திரும்பிவிடவேண்டுமென்று எண்ணிய சிவகாமியின் செவியில் "மாமல்லர்" "குமார சக்கரவர்த்தி" என்ற வார்த்தைகள் விழுந்தன. பிறகு அவளுடைய கால்கள் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டன. பலகணியின் அருகில் சுவர் ஓரமாக நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள்.

"மாமல்லருக்குப் பெண் கொடுக்கிறேன் என்று பாண்டிய மன்னர் தூது அனுப்பியதில் என்ன ஆச்சரியம்? பூலோகத்திலுள்ள ராஜ ராஜாக்கள் எல்லாம் நான் முந்தி, நீ முந்தி என்று அவருக்குப் பெண் கொடுக்கப் போட்டியிடமாட்டார்களா?" என்றாள் கமலி. "மாமல்லருக்குச் சீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று மகாராணிக்கு ஆசை. மூன்று தேசத்து ராஜாக்களுக்குத் திருமணத் தூது அனுப்ப வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள்ளே இந்த யுத்தம் வந்து விட்டதால் அது தடைப்பட்டுப் போயிற்று. இப்போது பாண்டிய ராஜாவே தூது அனுப்பியிருப்பதில் மகாராணிக்கு அசாத்திய சந்தோஷம்!" என்றான் கண்ணபிரான்.

"சரி; அப்புறம் என்ன நடந்தது?" என்று கமலி கேட்டாள். "அரண்மனையில் மாமல்லரை விட்டேன் உடனே, தாயாருக்கும் பிள்ளைக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது!.." "சண்டையா! எதற்காக?" "குமார சக்கரவர்த்தியிடம் 'கல்யாணம்' என்று யாராவது சொன்னாலே, அவருக்குப் பிரமாதமான கோபம் வந்து விடுகிறது. 'இதற்குத்தானா இவ்வளவு அவசரமாகக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்? போர்க்களத்திலிருந்துதான் ஏதோ செய்தி வந்திருக்கிறதாக்கும் என்று நினைத்தல்லவா ஓடி வந்தேன்?' என்று அவர் மகாராணியிடம் கோபமாகப் பேசினார்...! கமலி! உனக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா? மிகவும் முக்கியமான இரகசியம் கேட்டால் பிரமித்துப் போவாய்!" என்றான் கண்ணன்.

"பெண்பிள்ளைகளிடம் இரகசியம் சொல்லக் கூடாது என்று உனக்குத் தெரியாதா, கண்ணா?" என்றாள் கமலி. "ஓஹோ! நீ பெண்பிள்ளையா? மறந்து போய்விட்டேன்!" என்று கண்ணன் நகைத்துக் கொண்டே கூறினான். "ஆமாம்! நீ ஆண்பிள்ளை என்பதையும் மறந்து போய் விடுவாய்! யுத்தம் வருகிறதல்லவா?" "யுத்தம் வரட்டும்! அப்போது தெரிகிறது யார் ஆண்பிள்ளை, யார் பெண்பிள்ளையென்று! நீ என் காலில் விழுந்து, 'கண்ணா! யுத்தத்துக்குப் போகாதே!' என்று கதறப் போகிறாய். நான் உன்னை உதறித் தள்ளிவிட்டுப் போகப் போகிறேன்...."

"அப்படியா நினைத்துக்கொண்டிருக்கிறாய் உன் மனத்தில்? யுத்தம் கிட்டி வரும்போது நீ போகாவிட்டால் நானே உன்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளமாட்டேனா?... கல்யாணம் ஆன பிறகு நீ இப்படிப் பயங்கொள்ளியாகப் போனதைப் பார்த்துவிட்டுத்தான் குமாரச் சக்கரவர்த்தி 'கல்யாணம்' என்றாலே எரிந்து விழுகிறார் போலிருக்கிறது!" "இப்படித்தானே நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்? யுத்தம் வந்திருக்கிறபடியால் குமார சக்கரவர்த்தி கல்யாணம் வேண்டாம் என்கிறார் என்றுதான் எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; பிசகு கமலி, பெரும் பிசகு!" "எது பிசகு, கண்ணா?"

"எல்லாரும் நினைத்துக்கொண்டிருப்பது பிசகு. மாமல்லர் கல்யாணப் பேச்சை வெறுப்பதற்கு வேறு காரணம் இருக்கிறது. அது பெரிய இரகசியம் அதிலும் உன் தங்கச்சி சிவகாமியைப் பற்றிய இரகசியம் கமலி!" "என்ன? என்ன? என் தங்கச்சியைப்பற்றி எனக்குத் தெரியாத இரகசியம் என்ன இருக்கிறது? ஏதாவது இசை கேடாகச் சொன்னாயோ, பார்த்துக்கொள்!" "இசைக்கேடு ஒன்றுமில்லை; பெருமையான விஷயந்தான்!... சொன்னால், எனக்கு என்ன தருகிறாய்?" "சொல்லிவிட்டுக் கேள்! பொருளைப் பார்த்து விட்டல்லவா விலையைத் தீர்மானிக்க வேண்டும்?" என்றாள் கமலி. "அப்புறம் ஏமாற்றக்கூடாது, தெரியுமா? பல்லவ சாம்ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி, வீரத்தில் அர்ஜுனனையும், அழகில் மன்மதனையும் ரதம் ஓட்டுவதில் கண்ணபிரானையும் ஒத்தவரான மாமல்ல நரசிம்மர், உன்னுடைய தங்கச்சி சிவகாமியின்மேல் காதல் கொண்டிருக்கிறார், கமலி!" "ஆ!: என்னும் சத்தம் மட்டுந்தான் கமலியின் வாயிலிருந்து வந்தது. அவள் ஆச்சரியத்தினால் திகைத்து விட்டாள்.

வௌியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிவகாமியின் நெஞ்சில் அந்த 'ஆ!' சத்தமானது கூரிய அம்பைப்போல் புகுந்தது. தன்னிடம் இவ்வளவு ஆசையும் நம்பிக்கையும் வைத்துள்ள அருமைத் தோழியிடம் தனது அந்தரங்கத்தை வௌியிடாமல் இத்தனை நாளும் ஒளித்து வைத்திருந்தது பற்றி அவள் வெட்கினாள். அறைக்குள்ளே சம்பாஷணை மேலும் தொடர்ந்து நடந்தது. "கமலி! நான் சொன்ன செய்தி உனக்கு அதிசயமாயிருக்கிறதல்லவா?" என்று கண்ணபிரான் கேட்டான்.

"அதிசயம் என்ன? நம்முடைய குமார சக்கரவர்த்தி புத்திசாலி என்றுதான் அடிக்கடி நான் சொல்லியிருக்கிறேன்? அதனால்தான் அவருக்கு என் தங்கச்சியின் மேல் மனம் சென்றது" என்று கமலி சமத்காரமாக விடை சொன்னாள். "ஓஹோ! அப்படியா? நீயும் உன் தங்கையும் சேர்ந்து பேசிக்கொண்டுதான் இந்த வேலை செய்தீர்கள் போலிருக்கிறது! உன்னுடைய வலையில் என்னை நீ போட்டுக் கொண்டாய்! உன் தங்கச்சி மாமல்லரையே வலை போட்டுப் பிடித்துவிட்டாள்!"

"என்ன சொன்னாய்?" என்று கமலி கம்பீரமாகக் கேட்டு விட்டு மேலும் சொல்லம்புகளைப் போட்டாள்.. "நானா உன்னைத் தேடி வந்து என்னுடைய வலையில் போட்டுக் கொண்டேன்? நானா வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் உன்னைத் தொடர்ந்து வந்து கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, 'கண்ணே! பெண்ணே! நீ கருணை செய்யாவிட்டால் நான் உயிரை விடுவேன்!' என்று கதறினேன்? நானா 'என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கெஞ்சினேன்?..." "இல்லை, கமலி, இல்லை! நீ உன்னுடைய கண்ணாகிற வலையை வெறுமனே விளையாட்டுக்காக விரித்தாய்! அதிலே நானாக ஓடிவந்துதான் அகப்பட்டுக் கொண்டேன்!"

"நம்முடைய கதை இருக்கட்டும் மாமல்லருக்கும் என் தங்கைக்கும் நேசம் என்கிற விஷயம் உனக்கு எப்படித் தெரிந்தது? அதைச் சொல்லு!" என்றாள் கமலி. "ஆ! பாம்பின் கால் பாம்புக்குத் தெரியாதா, என்ன? கள்ளனுக்குத் தெரியாதா கள்ளனின் சமாசாரம்? நான் உன்னை உன் தகப்பனார் வீட்டில் அந்தக் காலத்தில் என்னமாய்ப் பார்த்தேன்! ஞாபகம் இருக்கிறதா? அம்மாதிரியே உன் தங்கையை இப்போது மாமல்லர் ஆர்வத்தோடு பார்க்கிறார்." "இவ்வளவுதானா?" "இன்னும் என்ன வேண்டும்? நாவுக்கரசர் மடத்தில் அபிநயம் பிடித்தானதும் உன் தங்கை மூர்ச்சையாகி விழுந்து விட்டாள் என்று சொன்னேனல்லவா? உடனே மாமல்லர் ஓடிவந்து சிவகாமியைத் தூக்கி ஆயனர் மடியின்மீது வைத்தார். கமலி அப்போது அவருடைய கைகளும் தேகமும் எப்படிப் பதறின தெரியுமா? இதுவரையில் எனக்குக் கொஞ்சம் சந்தேகமாயிருந்தது. இன்றைக்குத் தான் சர்வ நிச்சயமாயிற்று."

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது. விம்மலுடன் அழுகை வரும்போலிருந்தது. சமாளித்துக்கொண்டு மேலும் நடந்த சம்பாஷணையைக் கேட்டாள். "இவ்வளவு கூர்மையாய்க் கவனித்தாயே; நீ ரொம்பப் புத்திசாலிதான்! மாமல்லரும் பாக்கியசாலிதான்!" என்றாள் கமலி. "மாமல்லர் பாக்கியசாலி என்றா சொல்கிறாய்? இதனால் ஏற்படப் போகிற சங்கடங்களையெல்லாம் நினைத்தால்..." "சங்கடம் என்ன வந்தது?"

"குமார சக்கரவர்த்தியின் கல்யாணம் என்றால், நம்முடைய கல்யாணத்தைப்போல் என்று நினைத்துக் கொண்டாயா? எத்தனை எத்தனையோ யோசனைகள் செய்வார்கள்..." "கண்ணா! என் தங்கையை மட்டும் சாமானியமான பெண் என்று நினைத்தாயா? தமயந்தியை மணந்துகொள்ளத் தேவலோகத்திலிருந்து தேவர்கள் வந்ததுபோல் சிவகாமியைத் தேடிக் கொண்டு வரமாட்டார்களா? ஏதோ தமயந்தி மனம் வைத்து நள மகாராஜனுக்கு மாலையிட்டாள்!.." "ஆனால் தமயந்தி அரண்மனையில் பிறந்த ராஜ குமாரியாச்சே, கமலி!" "என் தங்கை ஆயிரம் ராஜகுமாரிகளுக்கு இணையாவாள். கண்ணா! நீ வேணுமானாலும் பார்! என்னுடைய மனோரதம் ஒருநாள் கட்டாயம் நிறைவேறப் போகிறது!" "அது என்ன மனோரதம் கமலி?"

"இந்த யுத்தமெல்லாம் முடிந்த பிறகு, மாமல்லருக்கு மகுடாபிஷேகம் நடக்கப் போகிறது. தங்க ரதத்தில், நவரத்ன சிங்காசனத்தில் அமர்ந்து நரசிம்ம சக்கரவர்த்தி இராஜவீதிகளில் பவனி வருகிறார். அவருக்குப் பக்கத்தில், தேவேந்திரனுக்கு அருகில் இந்திராணியைப் போல் என் தங்கை சிவகாமி அமர்ந்திருக்கிறாள். தங்க ரதத்தின் முன் தட்டில் நீ ஜம் என்று உட்கார்ந்து ரதத்தை ஓட்டிக்கொண்டு வருகிறாய். நான் அரண்மனைக் கோபுர வாசலில் மேல் மாடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ரதம் அரண்மனை வாசலில் வந்து நின்றதும் கூடைகூடையாக மல்லிகை மலர்களையும் சண்பகப் பூக்களையும் அவர்கள்மேல் கொட்டுகிறேன். நடுவில் உன் தலையிலும் ஒரு கூடைப் பூவைக் கவிழ்க்கிறேன் இப்படி நடக்கவேண்டும் என்பதுதான் என் மனோரதம், கண்ணா!" "கமலி, உன் மனோரதம் நிறைவேறினால் எனக்கும் அளவில்லாத சந்தோஷந்தான்" என்றான் கண்ணன். சிவகாமி திரும்பித் தன்னுடைய அறைக்குள்ளே சென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள். இருதயத்தின் அடிவாரத்திலிருந்து பொங்கி வந்த விம்மலையும் அழுகையையும் ஆனமட்டும் முயன்றும் அவளால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.

இரவு நாலாவது ஜாமத்தில், விழிப்புமில்லாமல் நித்திரையுமில்லாமல் அரைத் தூக்க நிலையில் சிவகாமி படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும்போது, முன்னர் அவள் மனக் கண்முன் தோன்றிய நிழல் தோற்றங்கள் உருவம் எடுக்க ஆரம்பித்தன. ஒரு செண்பக மரத்தின் கிளையில் இரண்டு புறாக்கள் உட்கார்ந்து ஒன்றோடொன்று கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் தீப்பட்டு எரியத் தொடங்குகின்றன. ஆண் புறாவானது பெண் புறாவைப் பார்த்து, "நீ இங்கேயே இரு; நான் திரும்பி வந்து உன்னைக் காப்பாற்றுகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் பறந்து செல்கிறது. அது போன வழியையே பெண் புறா பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் புறா திரும்பி வருமா? வந்து, பெண் புறாவைத் தப்பவைக்குமா? இதை அறிய முடியாதபடி பெண் புறாவை நாலாபுறமும் புகை வந்து சூழ்ந்துவிடுகிறது. அந்த நேரத்தில் அவ்விதம் புகையினால் சூழப்பட்டிருப்பது பெண் புறா அல்ல தானே என்று சிவகாமி பிரமையுறுகிறாள்.

கற்பனை உலகக்காட்சி மாறுகிறது மல்லிகைத் தோட்டத்தில் ஆணும் பெண்ணுமாக ஒரு கலைமானும் ஒரு புள்ளிமானும் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன. விளையாட்டின் இடையே புள்ளிமானானது மல்லிகைப் புதருக்கு அருகில் மறைந்து நிற்கிறது. மல்லிகைப் புதரில் பூத்துச் சிரித்திருந்த வெள்ளி மலர்களுக்கும், புள்ளிமானின் மீது அள்ளித் தௌித்திருந்த வெள்ளிப்பொட்டுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் கலைமான் புள்ளிமானைத் தாண்டிக் கொண்டு அப்பால் போகிறது. அதைக் கண்டு புள்ளிமான் சிரிக்கிறது. இப்படி அவை விளையாடிக் கொண்டிருந்தபோது சற்றுத் தூரத்தில் ஒரு மல்லிகைப் புதரில் இரண்டு பிரகாசமான நட்சத்திரங்கள் ஜொலிப்பதைக் கண்டு அதிசயித்தது. பிறகு, அவை நட்சத்திரங்கள் அல்ல, - அனல் கட்டிகள் என்று தோன்றியது. பின்னர், அந்த இரண்டு அனல் கட்டிகளும், ஒரு பெரிய புலியின் இரண்டு கண்கள்தான் என்று தெரியவே, பெண் மானின் சகல நாடியும் ஒடுங்கிவிட்டது. கலைமானைக் கூவி அழைக்க அது முயன்றது. ஆனால், அதன் தொண்டையிலிருந்து சத்தமே உண்டாகவில்லை. மேலே என்ன ஆயிற்று? புள்ளிமான் தப்பித்துச் சென்றதா? கலைமானுடன் சேர்ந்ததா? அதுதான் தெரியவில்லை. அத்தகைய பயங்கர அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்த பெண்மான் உண்மையில் மான் அல்ல. தானே அந்த மான் என்று மட்டும் சிவகாமிக்கு அந்தக் கணத்தில் தெரிய வந்தது.
 
நாற்பதாம் அத்தியாயம்

கட்டாயப் பிரயாணம்

மகேந்திர விடுதியிலிருந்து அதிகாலையில் கிளம்பிய பரஞ்சோதி அன்று பகலெல்லாம் பிரயாணம் செய்து, வடபெண்ணையுடன் பாபாக்கினி நதி கலக்கும் இடத்திலுள்ள புத்த விஹாரத்தைச் சூரியாஸ்தமன நேரத்தில் அடைந்தார்கள். விஹாரத்தின் வாசலில் புத்த பிக்ஷு ஒருவர் நின்று கொண்டிருந்தார். மாலை நிறத்து மஞ்சள் வெயிலில் பிக்ஷுவின் காவி உடையானது தங்க நிறமாகப் பிரகாசித்தது. பரஞ்சோதி குதிரையிலிருந்து இறங்கிப் பிக்ஷுவை அணுகியதும், அவர் இவனை என்னவோ கேட்டார். அவர் பேசிய பாஷை பரஞ்சோதிக்குப் புரியவில்லை. ஆனாலும் தான் யார் என்பதை விசாரிக்கிறார் என்று ஊகித்துக் கொண்டு தமிழிலேயே, தான் நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவதாகவும் தன்னை இவ்விடம் தங்கி வழி கேட்டுக் கொண்டு போகும்படி நாகநந்தியடிகள் பணித்தார் என்றும் கூறினான்.

நாகநந்தி என்று கேட்டதும் அந்தப் பிக்ஷுவின் முகத்தில் மாறுதல் காணப்பட்டது. சமிக்ஞையினால் "கொஞ்சம் இங்கேயே இரு!" என்று பரஞ்சோதிக்குச் சொல்லிவிட்டு, பிக்ஷு உள்ளே சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம் அவர் திரும்பிவந்து பரஞ்சோதியை விஹாரத்துக்குள் அழைத்துச் சென்றார். அந்தப் பௌத்த விஹாரம் காஞ்சியில் பார்த்த இராஜ விஹாரத்தைப் போலக் கல், மரம், சுண்ணாம்பினால் கட்டப்பட்டதல்லவென்பதையும், குன்றிலே குடைந்து காஞ்சி இராஜ விஹாரத்தைப் போல் இது அவ்வளவு பெரிதாக இல்லை; அவ்வளவு விலையுயர்ந்த பூஜாத்திரவியங்களும் இங்கே காணப்படவில்லை. ஆனால் விஹாரத்தின் அமைப்பு முறை அதே மாதிரி இருந்தது. நடுவில் பிக்ஷுக்கள் கூடிப் பிரார்த்தனையும் தியானமும் செய்வதற்குரிய சைத்யமும் அதன் பின்பக்கத்துப் பாறைச் சுவரில் பிரம்மாண்டமான புத்தர் சிலையும் இருந்தன. அந்தப் புத்தர் சிலையும், சிலைக்கு மேலே கவிந்திருந்த போதி விருட்சமும், புத்தர் மீது புஷ்பமாரி பொழிந்து கொண்டிருந்த கந்தர்வ வடிவங்களும், - எல்லாம் பாறையில் குடைந்து அமைக்கப்பட்டிருந்தன. அலங்கார தீபங்கள் வரிசை வரிசையாக ஒளிர்ந்தன. புத்தபகவானுக்கு எதிரில் பலவித வர்ண மலர்கள் தனித் தனிக் கும்பலாகக் குவிக்கப்பட்டுக் கண்ணைக் கவரும் காட்சியளித்தன. புஷ்பங்களின் நறுமணத்துடன் அகிற்புகையின் வாசனையும் சேர்ந்து சிந்தையை ஒருமுகப்படுத்த உதவி செய்தது.

சைன்யத்துக்கு இருபுறத்திலும் புத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கும் மாணாக்கர்கள் கல்வி பயில்வதற்கும் உரிய குகை அறைகள் குடையப்பட்டிருந்தன. ஒரு பக்கத்தின் கோடியில் மச்சுப்படிகள் போன்ற படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்தப் படிகளின் வழியாகப் பரஞ்சோதியைப் பிக்ஷு அழைத்துச் சென்றார். கீழேயுள்ள அறைகளைப்போல் மேலேயும் பாறையில் குடையப்பட்ட அறைகள் காணப்பட்டன. அவற்றில் விசாலமான அறை ஒன்றில் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த பெரிய புத்த பிக்ஷுவிடம் பரஞ்சோதி அழைத்துச் சென்று விடப்பட்டான்.

அந்த விஹாரத்தின் தலைமைப் பிக்ஷு அவர்தான் என்பதைப் பரஞ்சோதி ஊகித்துக்கொண்டு அவரைக் கை கூப்பி வணங்கினான். "புத்தம் சரணம் கச்சாமி," "தர்மம் சரணம் கச்சாமி," "சங்கம் சரணம் கச்சாமி" என்று தலைமைப் பிக்ஷு கூறி மூன்று முறை புத்தபகவானுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, பரஞ்சோதியைப் பார்த்துத் தமிழ்ப் பாஷையில் "குழந்தாய்! நீ யார்? என்ன காரியமாக வந்தாய்? யார் உன்னை அனுப்பினார்கள்?" என்று கேட்டார். பரஞ்சோதி நாகநந்தியடிகள் தன்னை ஓலையுடன் அனுப்பி வைத்ததுபற்றி விவரமாகக் கூறினான். நாகநந்தி கொடுத்தனுப்பிய ஓலை எங்கே? அந்த ஓலையை நான் பார்க்கலாமா?" என்று பிக்ஷு கேட்டார். "மன்னிக்க வேண்டும் ஓலையை சத்யாச்ரயரைத் தவிர வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாதென்று நாகநந்தியடிகளின் கட்டளை" என்றான் பரஞ்சோதி. சத்யாச்ரயர் என்ற பெயரைக் கேட்டதும் பிக்ஷுவின் முகத்தில் ஒரு மர்மமான புன்னகை தோன்றியது. அதைப் பரஞ்சோதி கவனித்தானாயினும் அதன் பொருளை அறிய முடியவில்லை.

"நாகநந்தியடிகள் என்ன கட்டளையிட்டாரோ, அவ்விதமே செய். இன்றிரவு இங்கேயே படுத்துக்கொள். ஸரீ பர்வதத்துக்குப் போகும் வழியெல்லாம் இப்போது அபாயம் நிறைந்ததாயிருக்கிறது. இன்று ராத்திரியே அவ்விடத்துக்குப் போகும் வீரர்கள் சிலர் இங்கே வரக்கூடும். அவர்களுடன் சேர்த்து அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உனக்கு வழி காட்டுவதுடன் பத்திரமாகவும் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள்!" என்று ஆசார்ய பிக்ஷு கூறி, இன்னொரு பிக்ஷுவைப் பார்த்துச் சமிக்ஞை செய்தார். அவர் பரஞ்சோதியை அங்கிருந்து அழைத்துச் சென்று உணவருந்தச் செய்த பிறகு, கீழே ஓர் அறையில், அவன் படுத்துக் கொள்வதற்கு இடம் காட்டினார். சென்ற இரவில் நல்ல தூக்கம் இல்லாமையாலும் நெடுந்தூரப் பிரயாணத்தினாலும் களைப்புற்றிருந்த பரஞ்சோதி இன்று படுத்தவுடன் நிம்மதியாகத் தூங்கலானான்.

தோளைப் பிடித்து யாரோ குலுக்குவதறிந்து பரஞ்சோதி திடுக்கிட்டுக் கண் விழித்தான். முதல்நாள் அவனை மடத்துக்குள் அழைத்து வந்த பிக்ஷுதான் அவனை எழுப்பிக் கொண்டிருந்தார் பக்கத்தில் பெரிய பிக்ஷுவும் நின்றார். "தம்பி! நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவோர் புறப்படுகிறார்கள் நீயும் கிளம்பு" என்றார் பெரிய பிக்ஷு. பரஞ்சோதி அவசரமாக எழுந்து தலைமாட்டில் வைத்திருந்த ஓலைக் குழாயை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பிக்ஷுக்களைப் பின்தொடர்ந்து மடத்தின் வாசலுக்கு வந்தான்.

அங்கே அவனுடைய குதிரையைத் தவிர இன்னும் ஆறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் அருகில் ஆஜானுபாகுவான வீரன் ஒருவனும் நிற்பதைக் கீழ் வானத்தில் தோன்றிய பிறைமதியின் மங்கிய நிலவொளியில் பரஞ்சோதி கண்டான். "இந்த வீரர்கள் அவசர காரியமாக ஸரீ பர்வதத்துக்குப் போகிறார்கள். இவர்களுடன் போனால் குறுக்கு வழியாக வெகு சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிடலாம்" என்று பெரிய பிக்ஷு கூறினார். "மனத்தில் காரணம் தெரியாத தயக்கத்துடன் பரஞ்சோதி குதிரைமீது ஏறினான். குதிரைகள் வடபெண்ணை நதிக்கரையோடு மேற்குத் திசையை நோக்கி விரைந்து சென்றன.
 

New Threads

Top Bottom