Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம்-1 : பூகம்பம்

முப்பத்தோராம் அத்தியாயம்

வைஜயந்தி

வழித் துணையாகக் கிடைத்த இந்த வீரன் எந்த மயூரசன்மனைப்பற்றிக் கூறி வந்தானோ அதே மயூரசன்மனைக் குறித்து ஏற்கெனவே புத்த பிக்ஷு கூறியிருந்தது பரஞ்சோதியின் ஞாபகத்தில் இருந்தது. ஆனால், அவர் கூறிய வரலாறு இவ்வளவு ரஸமாக இல்லை. அந்த வரலாற்றை அவர் கூறியதன் நோக்கமும் பரஞ்சோதிக்குப் பிடிக்கவில்லை. "அந்த மயூரசன்மனைப் போல் ஒரு வேளை நீயும் ஆனாலும் ஆகலாம்!" என்று புத்த பிக்ஷு கூறியது பரஞ்சோதியின் உள்ளத்தில் அருவருப்பைத்தான் உண்டு பண்ணிற்று. ஏன்? மயூரசன்மன் பேரிலேயே அவனுக்கு அருவருப்பு உண்டாக அது காரணமாக இருந்தது.

ஆனால், இப்போது மயூரசன்மன் செய்த வீரப் போரையும் உடம்பில் முப்பத்தாறு காயங்களுடன் அவன் பல்லவ மன்னனின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டதையும் அறிந்ததும், அவன் மீது பரஞ்சோதியின் மரியாதை பன்மடங்கு வளர்ந்தது. "அப்பேர்ப்பட்ட வீரன் பல்லவ மன்னனுக்குச் சரணாகதி அடைய மறுத்துத்தான் இருப்பான். அரசனுக்கு எதிராகக் கலகம் செய்பவர்களைப் பூமியில் புதைத்து யானையின் காலால் இடறச் செய்வதுதானே வழக்கம்! பல்லவ ராஜாவும் அப்படிச் செய்து விட்டாராக்கும்!" என்று பரஞ்சோதி மனக்கசப்புடன் கூறினான்.

"இல்லை, தம்பி, இல்லை! சாதாரணமாய் அங்க, வங்க, கலிங்க, காஷ்மீர, காம்போஜ தேசங்களின் ராஜாக்களாயிருந்தால் அப்படித்தான் செய்திருப்பார்கள். ஆனால் காஞ்சி பல்லவ மன்னர்களின் காரியங்கள் ஒரு தனிப் போக்காக இருக்கும்.." "பல்லவ மன்னர் என்ன செய்தார்?" "மயூரசன்மனை மன்னித்ததோடு, அவனுடைய வீரத்தை மெச்சி அவன் ஸ்தாபித்த ராஜ்யத்தை அவனுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். அவரே நேரில் சென்று மயூரசன்மனுக்கு முடிசூட்டி விட்டு வந்தார்!" "அப்படியா?" என்று பரஞ்சோதி தன் உண்மையான வியப்பைத் தெரிவித்துவிட்டு, "அதைக் குறித்து மயூரசன்மன் நன்றி பாராட்டினானா?" என்று கேட்டான்.

"மயூரசன்மன் மட்டுமில்லை அவன் ஸ்தாபித்த கதம்ப வம்சத்தில் பிறந்தவர்கள் எல்லாரும் சென்ற இருநூறு வருஷத்துக்கு மேலாகப் பல்லவர்களுக்குக் கப்பம் செலுத்திக் கொண்டு நன்றியுடன் இருந்து வந்தார்கள். கிருஷ்ணை - துங்கபத்திரை நதிக்கரை ஓரமாய் அவர்களுடைய இராஜ்யமும் பெருகி வந்தது. கொஞ்ச காலத்துக்குப் பிறகு வைஜயந்தி பட்டணத்தில் தங்கள் தலைநகரை ஸ்தாபித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆபத்து நேர்ந்த சமயங்களில் பல்லவ மன்னர்களும் வேண்டிய உதவி புரிந்து வந்தார்கள். இருபது வருஷத்துக்கு முந்தி புலிகேசியின் சிற்றப்பன் மங்களேசன் கதம்ப ராஜ்யத்தின் மீது படையெடுத்த செய்தி தெரியுமோ இல்லையோ?" "தெரியாதே? அது என்ன விஷயம்?" என்று பரஞ்சோதி ஆவலுடன் கேட்டான்.

"ஆமாம்; நீ சிறுபிள்ளை உனக்கு எப்படி அது தெரிந்திருக்கும்? இப்போது ராட்சஸ ஸ்வரூபம் கொண்டு பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறானே, இந்தப் புலிகேசியும் இவனுடைய தம்பிமார்களும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, இவர்களுடைய சிற்றப்பன் மங்களேசன் என்பவன் வாதாபி ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அவனுக்குத் திடீரென்று அயல் நாடுகளைக் கைப்பற்றிப் பெரிய சக்கரவர்த்தி ஆகவேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. துங்கபத்திரையைக் கடந்து கதம்ப ராஜ்யத்துக்குள் பிரவேசித்தான். வைஜயந்தி நகரம் வரையில் வந்து அந்த நகரத்தை முற்றுகை போட்டுவிட்டான். அப்போது வடக்கு மண்டலத்துப் பல்லவ சைனியந்தான் கதம்ப ராஜாவின் ஒத்தாசைக்குச் சென்றது. வைஜயந்தி பட்டணத்துக்கு அண்மையில் பெரிய யுத்தம் நடந்தது.." "யுத்தத்தின் முடிவு என்ன ஆயிற்று?"

"கேட்பானேன்! வீர பல்லவ சைனியந்தான் ஜயித்தது. சளுக்கர்கள் தோற்றுப் பின்வாங்கி ஓடினார்கள். ஆஹா! அப்போது மட்டும் அந்தச் சளுக்கர் படையைப் பல்லவ சைனியமும் பின் தொடர்ந்துபோய் அடியோடு நிர்மூலம் செய்திருந்தால், இப்போது இந்த யுத்தமே வந்திருக்காது!" என்றான் அவ்வீரன். அந்தப் பழைய வரலாறுகளையெல்லாம் அறிந்து கொள்ளுவதில் பரஞ்சோதிக்கு ரொம்பவும் சுவாரஸ்யமாயிருந்தது. யுத்தங்களைப் பற்றியும் அவை நடந்த முறைகளைப் பற்றியும் வெற்றி தோல்விகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள அவனுக்கு மிகவும் ஆவலாயிருந்தது. நிலா இல்லாத முன்னிரவில் வழிப்பிரயாணத்தின் அலுப்புத் தெரியாமலிருப்பதற்கும் அது ஏதுவாயிற்று.

"தோல்வியடைந்து ஓடிய சளுக்க சைனியத்தைப் பல்லவ சைனியம் ஏன் தொடர்ந்து போகவில்லை?" என்று அவன் கேட்டான். "அதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம் என்னவென்றால், வைஜயந்தி பட்டணத்துக்கு அருகில் நடந்த யுத்தத்தில் பல்லவ சைனியம் ஒரு பெரிய நஷ்டத்தை அடைந்தது. பல்லவ சேனாதிபதி அந்தப் போரில் உயிர் துறந்தார்!" பரஞ்சோதியின் நினைவு சட்டென்று வேறு பக்கம் திரும்பியது.

"ஐயா! அந்த வீர பல்லவ சேனாதிபதியின் பெயர் என்ன?" என்று அவன் கேட்டான். "நீ கேள்விப்பட்டதில்லையா? சேனாதிபதி கலிப்பகைதான் இப்போதுள்ள கலிப்பகையாரின் மாமன்..." "கேள்விப்பட்டிருக்கின்றேன், அந்த வீர புருஷரை மணம் செய்து கொள்வதாக இருந்த திலகவதியாரைப் பற்றியும் கேட்டிருக்கிறேன்" என்று பரஞ்சோதி பக்தி பரவசத்துடன் கூறினான். "உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே! நீ பெரிய சைவன் போலிருக்கிறதே!" என்றான் அவ்வீரன்.

"ஆம், ஐயா! என் உற்றார், உறவினர் எல்லாரும் சைவர்கள். திருநாவுக்கரசு அடிகளைத் தரிசிப்பதற்கென்றே நான் கிளம்பிக் காஞ்சிக்கு வந்தேன்..." என்று கூறிப் பரஞ்சோதி சட்டென்று நிறுத்தினான். "அப்படியா, தம்பி! நானும் சைவன்தான் திருநாவுக்கரசரை நீ காஞ்சியில் தரிசிக்கவில்லையா?" "இல்லை!" "ஏன்?" "அதற்குள் இந்த வேலை வந்து விட்டது." "எந்த வேலை?"

பரஞ்சோதி சற்று நிதானித்து, "ஐயா! என்னுடைய வேலை என்ன என்பது பற்றி நீங்கள் ஒன்றும் கேட்காவிட்டால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது!" என்றான். "ஆஹா! நீ வெகு புத்திசாலிப் பிள்ளை!" என்றான் அவ்வீரன். பிறகு சொன்னான், "தம்பி! உன் மாதிரியே எனக்கு ஒரு புதல்வன் இருக்கிறான். உன் வயதேதான் அவனுக்கும் இந்தப் பிரயாணத்தில் என்னோடு தானும் வர வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தான். நான் கூடாது என்று தடுத்துவிட்டேன். அதனால் அவனுக்கு என் பேரில் கோபம்.."

இப்படிப்பட்ட ஒரு வீரத் தந்தையைப் பெற்ற அதிர்ஷ்டசாலியைக் குறித்துப் பரஞ்சோதியின் மனத்தில் சிறிது பொறாமை உண்டாயிற்று. அந்தத் தகாத எண்ணத்தைப் பரஞ்சோதி மறக்க முயன்றவனாய், "ஐயா! வைஜயந்தி யுத்தத்தைப் பற்றி கூறி இடையில் நிறுத்திவிட்டீர்களே! அந்தப் போரில் சேனாதிபதி கலிப்பகை உயிர் துறந்ததாகச் சொன்னீர்கள். ஆனால், பல்லவ சைனியத்துக்கு வேறு சேனாதிபதி கிடைக்கவில்லையா? தோற்று ஓடிய சளுக்கர்களைத் தொடர்ந்து பல்லவ சைனியம் ஏன் போகவில்லை?" என்று கேட்டான். "விசித்திரசித்தர் என்று பட்டப்பெயர் பெற்ற காஞ்சி சக்கரவர்த்தியை நீ பார்த்திருக்கிறாயா, தம்பி?" என்று பொருத்தமில்லாமல் கேட்டான் அவ்வீரன். பரஞ்சோதி மௌனம் சாதித்தான். அவனுடைய மௌனத்தைப் பாராட்டி அவ்வீரன் தலையை ஆட்டிவிட்டு மேலே சொல்லுகிறான்.

"விசித்திரசித்தர் அந்தக் காலத்தில் மிகமிக விசித்திரமான எண்ணங்களைக் கொண்டிருந்தார். உலகத்தில் யுத்தம் என்பதே கூடாது. பகைமையும் துவேஷமும் இருக்கக் கூடாது. எல்லா ஜனங்களும் சிற்பம் முதலிய கலைகளில் ஈடுபட்டு ஆடல் பாடல்களில் ஆனந்தமாய்க் காலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அவர் மனத்தில் குடிகொண்டிருந்தன. நமக்கு இருக்கிற இராஜ்யம் போதும் அதிகம் என்னத்திற்கு என்ற வைராக்கியத்தையும் கொண்டிருந்தார். அப்பேர்ப்பட்ட சமயத்தில் புலிகேசியினிடமிருந்து சமாதானக் கோரிக்கையும் கிடைக்கவே, யுத்தத்தை நிறுத்தும்படி கட்டளை போட்டு விட்டார்." "புலிகேசி எப்போது அரசன் ஆனான்?"

"சிற்றப்பன் மங்களேசன், ராஜ்யத்தின் மேலுள்ள ஆசையினால், புலிகேசியையும் அவன் தம்பிகளையும் சிறையில் போட்டிருந்தான். மங்களேசன் வைஜயந்தியின் மேல் படையெடுத்தபோது புலிகேசியும் அவன் தம்பிமார்களும் சிறையிலிருந்து தப்பி வௌியே வந்து விட்டார்கள். தோல்வியடைந்து திரும்பிய மங்களேசனைக் கொன்று விட்டு வாதாபி மன்னனாகப் புலிகேசி முடி சூட்டிக்கொண்டான். உடனே காஞ்சிச் சக்கரவர்த்திக்குச் சமாதானத் தூது அனுப்பினான். நாகசர்ப்பத்துடன் சமாதானம் செய்து கொண்டதுபோல் அந்தப் பாதகனுடன் மகேந்திர சக்கரவர்த்தியும் அப்போது சமாதானம் செய்து கொண்டார். அதனுடைய விபரீதப் பலனை இப்போது அனுபவிக்கிறார்." "என்ன விபரீதப் பலன்?"

"விபரீதப் பலன் என்னவா? புலிகேசியின் சைனியங்கள் இந்த யுத்தத்தில் வைஜயந்தியைக் கைப்பற்றிக் கொண்டு மேலேறி வருகின்றன என்று உனக்குத் தெரியாதா? இன்னொரு பயங்கரமான செய்தி கேள்விப்படுகிறேன். வைஜயந்தி பட்டணத்தைக் கைப்பற்றியவுடனே, புலிகேசி அந்த நகரிலிருந்த செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்து, நகரையே கொளுத்தும்படியாகக் கட்டளையிட்டான் என்று தெரிகிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை ஒருவேளை உண்மையாயிருந்தால்?.." "இருந்தால்..?" "உண்மையாயிருந்தால், 'காஞ்சி மகேந்திரவர்மருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்,' என்றுதான் சொல்லுவேன். உலகத்தில் ராஜாக்களும் சக்கரவர்த்திகளும் 'போரிலே புலி' என்றும், 'சண்டையிலே சிங்கம்' என்றும் பட்டப்பெயர் வாங்குவார்கள். காஞ்சி சக்கரவர்த்தி 'சித்திரகாரப் புலி' என்று பட்டம் பெற்றிருக்கிறார் அல்லவா? அவருக்கு இதெல்லாம் வேண்டியதுதானே!"

பரஞ்சோதி மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தான். வைஜயந்தி பட்டணம் எரிக்கப்பட்ட செய்தி அவன் மனத்தைக் கலக்கியிருந்தது. சற்றுப் பொறுத்து அவ்வீரன், "தம்பி! எங்கே போகிறாய், என்ன காரியமாகப் போகிறாய் என்று உன்னை நான் கேட்கவில்லை. ஆனால், இன்று ராத்திரி எங்கே தங்குவதாக உத்தேசம் என்று சொல்லுவதில் உனக்கு ஆட்சேபம் ஒன்றும் இராதே?" என்றான். "இந்த மலையைத் தாண்டியதும் அப்பால் ஒரு மகேந்திர விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். அதில் தங்கலாமென்று எண்ணியிருந்தேன். இருட்டுவதற்கு முன்னால் மகேந்திர விடுதிக்குப் போய்ச் சேர்ந்து விடலாமென்று நினைத்தேன்." "ஆ! அதோ பார் வௌிச்சத்தை! நீ சொன்ன மகேந்திர விடுதி அந்த வௌிச்சம் தெரிகிற வீடுதான். நானும் இன்றிரவு அங்கேதான் தங்கப் போகிறேன்" என்றான் அவ்வீரன்.
 
முப்பத்திரண்டாம் அத்தியாயம்

கும்பகர்ணன்

பிரயாணிகள் இருவரும் விடுதியை நெருங்கியபோது, அங்கே ஆயத்தமாகக் காத்திருந்த வீரர்கள் நால்வர் கையில் உருவிய கத்திகளுடன் பளிச்சென்று முன்னால் வந்து "நில்!" என்றார்கள். விடுதியின் வாசலில் நின்ற இன்னொரு வீரன் கையில் பிரகாசமான தீவர்த்தியைப் பிடித்துக் கொண்டிருந்தான். அதன் ஒளியில் மற்ற நால்வருடைய கையிலும் இருந்த கத்திகள் மின்னித் திகழ்ந்தன.

அப்போது அந்தக் குதிரை வீரன் தன் அங்கியினுள்ளிருந்து ஏதோ ஓர் அடையாளத்தை எடுத்துக் காட்டவே, அந்த வீரர்கள் நால்வரும் சிறிது மரியாதையுடன் ஒதுங்கி நின்று அவனுக்கு வழி விட்டுப் பின்னால் வந்த பரஞ்சோதியை அணுகினார்கள். குதிரை வீரன் திரும்பிப் பார்த்து, "அவனும் என்னுடன் வருகிறான்!" என்று சொல்லவே, பரஞ்சோதிக்கும் அவர்கள் வழி விட்டார்கள். மூத்த பிரயாணி, விடுதித் தலைவனிடமும் மேற்சொன்ன அடையாளத்தைக் காட்டி, "நாங்கள் இருவரும் இன்று இரவு விடுதியில் தங்க வேண்டும்; குதிரைகளுக்கும் தீனி வேண்டும்" என்றான்.

விடுதி தலைவன் மற்ற வீரர்களைப் போலவே மரியாதையுடன் "அப்படியே ஐயா!" என்று மறுமொழி கூறினான். இதெல்லாம் பரஞ்சோதிக்கு மிக்க வியப்பை அளித்தது. அந்த வீரன் ஏதோ பெரிய இராசாங்க காரியமாகப் போகிறான் என்றும் பரஞ்சோதி ஊகித்துக் கொண்டான். ஒருவேளை பல்லவ சைனியத்தைச் சேர்ந்த பெரிய தளபதியாகக் கூட அவன் இருக்கலாம் என்றும் சந்தேகித்தான். தான் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கும் காரியம் ஒருவிதமாக முடிந்த பிறகு, இந்த வீரன் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து இவனுடைய சிநேகிதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பரஞ்சோதிக்கு உண்டாயிற்று.

இருவரும் உணவு அருந்தியபோது, அவ்வீரன் பரஞ்சோதியைப் பார்த்து, "தம்பி வைஜயந்தி யுத்தத்தைப் பற்றி உனக்குச் சொன்னேனல்லவா? அந்தக் காலத்தில் எனக்குக் கிட்டத்தட்ட உன் வயதுதான் இருக்கும். அப்போது ஒரு தடவை நான் இந்த விடுதியில் தங்கியிருக்கிறேன். அன்றிரவு எனக்கு ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது!" என்றான். "அது என்ன?" என்று பரஞ்சோதி ஆவலுடன் கேட்டான்.

"தம்பி! இத்தனை நேரமும் நாம் ஒருவர் பெயரை ஒருவர் தெரிந்து கொள்ளாமலே பேசிக் கொண்டிருக்கிறோம். என் பெயரைத் தெரிவிப்பதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. எனக்கு என் தாய் தந்தையர்கள் இட்ட பெயர் வஜ்ரபாஹூ. ஆனால், என் சினேகிதர்கள் என்னைக் கும்பகர்ணன் என்று அழைப்பார்கள். தூங்கினால் அப்படித் தூங்குவேன். இன்று போலவே அன்றைக்கும் நாளெல்லாம் பிரயாணம் செய்திருந்தபடியால் அசந்து தூங்கி விட்டேன் அப்போது என்ன நடந்தது தெரியுமா?" "ஏதாவது பிசாசு சொப்பனம் கண்டு உளறியடித்துக் கொண்டு எழுந்தீர்களாக்கும்!" என்று பரஞ்சோதி குறும்பாகக் கூறினான்.

அதைக் கேட்ட வஜ்ரபாஹூ நகைத்து விட்டு, "இல்லை இல்லை! அதைவிட ஆபத்தான விஷயம்! வீடு இடிந்து என் மேலே விழுந்துவிட்டது போல் சொப்பனம் கண்டு கண்ணை விழித்துப் பார்த்தபோது, ஐந்தாறு தடியர்கள் என்மேல் உட்கார்ந்து அமுக்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டுபேர் என் இடுப்பைத் தடவிக் கொண்டிருந்தார்கள் என்னத்திற்காகத் தெரியுமா?" "ஐயா! என்னை ஞானதிருஷ்டியுள்ளவன் என்று நினைத்துக் கொண்டீர்களா? தாங்கள் சொல்லாவிட்டால் எனக்கு எப்படித் தெரியும்?" என்றான் பரஞ்சோதி. "நல்லது, தம்பி! நான் சேனாதிபதி கலிப்பகையாருக்குக் கொண்டுபோன ஓலையைத் தஸ்கரம் செய்வதற்காகத்தான். என் இடுப்பில் அந்த ஓலை இருக்குமென்று அந்த முரடர்கள் எண்ணினார்கள்!" "ஆஹா!" என்றான் பரஞ்சோதி அவனை அறியாமல் அவனுடைய வலது கை இடுப்பைத் தொட்டுப் பார்த்தது. இது ஒரு கணந்தான் மறுகணம் கை பழைய நிலையை அடைந்தது. ஆனால், அந்த ஒரே கணநேரச் செய்கையை வீரன் வஜ்ரபாஹுவின் தீவிரமான கண்கள் கவனிக்காமல் போகவில்லை. "அப்புறம் என்ன ஆயிற்று, ஐயா! அந்த முரடர்களுக்குத் தாங்கள் கொண்டுபோன ஓலை கிடைத்ததா?" என்று பரஞ்சோதி கேட்டான். "ஓலை கிடைக்கவில்லை என்னுடைய கை முஷ்டியினால் தலைக்கு ஏழெட்டுக் குட்டுக்கள் கிடைத்தன! பெற்றுக்கொண்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென்று ஓட்டம் பிடித்தார்கள்!"

பரஞ்சோதி சிரித்துவிட்டு, "அந்த முட்டாள்களுக்கு நன்றாய் வேண்டும்! உங்களுடைய கும்பகர்ணத் தூக்கத்தைக் கலைத்தார்கள் அல்லவா? யாராவது ஒருவன் தனியாக வந்து இடுப்பைத் தடவியிருந்தால் ஒருவேளை ஓலை கிடைத்திருக்கும்" என்றான். "அப்போதும் கிடைத்திராது" என்றான் வஜ்ரபாஹு. "ஏன்? நீங்கள்தான் கும்பகர்ணன் மாதிரி தூங்குவேன் என்று சொன்னீர்களே?" "உண்மைதான், தம்பி! ஆனால், ஓலை இடுப்பில் இருந்தால் தானே கிடைக்கும்?" "பின் வேறு பத்திரமான இடத்தில் அதை வைத்துக் கொண்டிருந்தீர்களா?"

"ஆமாம், அக்கினி பகவானிடமே ஒப்படைத்து விட்டேன்." "இதென்ன? நல்ல தூதராயிருக்கிறீர்களே? ஓலையை நெருப்பிலே போட்டுவிட்டு எதற்காகப் பிரயாணம் செய்தீர்கள்?" "ஓலையை நெருப்பிலே போடுவதற்கு முன்னால் அதைப் படித்து விஷயத்தை மனத்தில் பதிய வைத்துக்கொண்டேன்." "ஓஹோ! இராஜாங்க தூதர்கள் அப்படிக் கூடச் செய்யலாமா என்ன?" "சமயோசிதமாகக் காரியம் செய்யத் தெரியாதவன் இராஜாங்க தூதுவனாக இருக்கவே அருகனில்லை, தம்பி! இம்மாதிரி அபாயம் ஏதாவது நேரலாமென்று நான் எதிர் பார்த்தேன். எனவே, முன் ஜாக்கிரதையாகக் காரியம் செய்தேன், அதற்காகச் சக்கரவர்த்தியிடமிருந்து எனக்கு வெகுமதியும் கிடைத்தது."

இதையெல்லாம் கேட்ட பரஞ்சோதியின் உள்ளம் பெரிதும் குழப்பத்துக்கு உள்ளாயிற்று. இரவில் விடுதிகளில் தங்க நேர்ந்தால், மற்றவர்கள் படுக்கும் அறையில் படுக்கக் கூடாது என்று புத்த பிக்ஷு எச்சரித்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. நல்லவேளையாக அன்றிரவு படுத்துக்கொள்வதற்கு அவனுக்குத் தனி அறையே கொடுத்தார்கள். வஜ்ரபாஹுவும், "தம்பி! இனி மேல் உன் வழி வேறு; என் வழி வேறு. நான் அதிகாலையில் எழுந்து போய்விடுவேன். உன்னை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. எப்போதாவது உதவி தேவையிருந்தால் என்னிடம் வரத் தயங்காதே!" என்று சொல்லி விடைபெற்றுப் படுக்கச் சென்றான்.

பரஞ்சோதி படுத்துக்கொள்ளும்போது, வஜ்ரபாஹு கூறிய அனுபவம் அவனுக்கு ஞாபகம் இருந்தபடியால், அயர்ந்து தூங்கி விடக்கூடாது என்றும், ஏதாவது சத்தம் கேட்டால் பளிச்சென்று எழுந்துவிட வேண்டுமென்றும் மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டான். ஆனால், வாலிபப் பருவமும், நாளெல்லாம் பிரயாணம் செய்த களைப்பும் சேர்ந்து, படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவனை நித்திரையில் ஆழ்த்திவிட்டன. எனினும் அவனுடைய தூக்கம் அமைதியான தூக்கமாக இருக்கவில்லை. பயங்கரமான கனவுகள் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன. செந்நிறப் புரசம் பூக்கள் நிறைந்த பிரதேசத்தில் ஆவி வடிவத்துக் குதிரை வீரர்களுக்கு மத்தியில் தானும் ஓர் ஆவி வடிவமாகி ஓயாது சுற்றி அலைந்து கொண்டிருந்ததாக அவனுக்குத் தோன்றியது. அலைந்து அலைந்து களைத்துப் போன பிறகு ஒரு மலைக்குகையில் அவன் போய்ப் படுத்துக் கொள்கிறான். கனவிற்குள் தூங்குவதாகக் கனவு காண்கிறான்! ஆனால், அந்தத் தூக்கத்திலும் நினைவு இருந்துகொண்டிருக்கிறது. கண்கள் மட்டும் மூடியிருக்கின்றன. பிசாசுகள் ஒன்று மாற்றி ஒன்று வந்து அவனுடைய இடுப்பைத் தடவுகின்றன. 'நல்ல வேளை ஓலை இடுப்பில் இல்லை! தலைக்கு அடியில் வைத்துக் கொண்டிருக்கிறோம்' என்று தோன்றுகிறது. கண்ணைத் திறந்து பார்த்தால் அந்தப் பிசாசுகள் ஓடிவிடுமென்று அவன் எண்ணுகிறான். ஆனால், எவ்வளவு முயன்றும் கண்களைத் திறக்கவே முடியவில்லை.

அப்புறம் எங்கேயோ வெகு தூரத்தில் ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு காணப்படுகிறது. அதை அழைத்துக் கொண்டு ஒரு கரும் பிசாசு அவனை நோக்கி வருகிறது. அருகே, அருகே, அவை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன! கொள்ளிவாய்ப் பிசாசின் வாயிலுள்ள தீயின் ஒளியினால் அவனுடைய மூடியுள்ள கண்கள் கூசுகின்றன. கடைசியில், அந்த ஒளியின் கடுமையைப் பொறுக்க முடியாமல் கண்ணிமைகள் திறந்து கொள்கின்றன.

ஆனால், எதிரில் வந்தவை கொள்ளிவாய்ப் பிசாசும் இல்லை; கரும் பிசாசும் இல்லை என்பதை அவனுடைய திறந்த கண்கள் தெரிவிக்கின்றன. வீரன் வஜ்ரபாஹுவும், அவனுக்குப் பின்னால் கையில் விளக்கு ஏந்திக் கொண்டு அந்த விடுதியின் தலைவனுந்தான் வந்து கொண்டிருந்தார்கள்! பரஞ்சோதி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அவனுடைய வலது கை அருகில் தரையில் கிடந்த வேலைப் பற்றியது.
 
முப்பத்து மூன்றாம் அத்தியாயம்

ஓலைத் திருட்டு

வஜ்ரபாஹு சாவதானமான குரலில், "தம்பி பொறு! வேலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாகப் பொறுமையைக் கைப்பற்று. நாங்கள் பேய் பிசாசு இல்லை; 'பிசாசு சொப்பனம் கண்டீரா?' என்று என்னைப் பரிகாசம் செய்தாயே? நீ பிசாசு சொப்பனம் கண்டு அலறிய அலறலில் இந்த விடுதியிலுள்ள எல்லாரும் அல்லவா எழுந்திருக்க வேண்டியதாயிற்று?" என்றான். பரஞ்சோதி தான் அத்தகையை கனவு கண்டது உண்மை என்ற எண்ணத்தினால் வெட்கமடைந்து ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். பிறகு, "பொழுது விடிந்து விட்டதா? புறப்படலாமா?" என்று கேட்டுக்கொண்டு எழுந்தான்.

"அழகுதான்! இப்போது அர்த்த ராத்திரி. விடுதியில் பத்திரமாய்ப் படுத்திருக்கும்போதே இப்படிப் பயந்து உளறுகிறவன், நடு நிசியில் தனி வழியே எப்படிப் போவாய்? அப்படிப் போவதாயிருந்தால், 'அம்மா!' அம்மா!' என்று கனவிலே அலறினாயே, அந்தப் புண்ணியவதி எங்கே இருக்கிறாள் என்றாவது சொல்லி விட்டுப் போ! பிள்ளையின் கதியைப்பற்றி அன்னைக்குச் செய்தியாவது சொல்லி அனுப்புகிறோம்" என்றான் வஜ்ரபாஹு.

இந்த வார்த்தைகள் எல்லாம் கூரிய முட்களைப் போல் பரஞ்சோதியின் உள்ளத்தில் சுரீல் சுரீல் என்று தைத்தன. "நீங்கள் நேற்றுச் சாயங்காலம் பயங்கரமான கதைகளைச் சொன்னீர்கள் அல்லவா? அதனால்தான் சொப்பனம் காணும்படி ஆயிற்று" என்று பரஞ்சோதி சமாதானம் சொன்னான். "போகட்டும்! இனிமேலாவது சற்று நேரம் நிம்மதியாய்த் தூங்கு. இந்தத் தீபம் இங்கேயே இருக்கட்டும்" என்றான் வஜ்ரபாஹு என்னும் வீரன். அவ்விதமே தீபத்தை வைத்துவிட்டு வஜ்ரபாஹுவும் விடுதித் தலைவனும் அங்கிருந்து சென்றார்கள்.

அவர்கள் போன பிறகு பரஞ்சோதி கண்களை மூடிக்கொண்டு தூங்கப் பார்த்தான் ஆனால் தூக்கம் வரவே இல்லை. புரண்டு புரண்டு படுத்தான்; எழுந்து உட்கார்ந்தான்; மறுபடியும் படுத்தான் அப்படியும் தூக்கம் வரவில்லை. அவர்கள் வைத்துவிட்டுப் போன தீபம் ஒரு பக்கம் அவனுடைய கண்களைக் கூசச் செய்தது. விளக்கை அணைத்து விடலாமா என்று ஒருகணம் நினைத்தான். உடனே, வேறு ஒரு நினைவு பளிச்சென்று தோன்றியது. எழுந்து உட்கார்ந்து தலைமாட்டில் துணியைச் சுற்றி வைத்திருந்த மெல்லிய சிறு மூங்கிற் குழாயை எடுத்தான். அதற்குள்ளிருந்த ஓலைக் கற்றையை வௌியில் எடுத்துத் தீபம் வைத்திருந்த இடத்துக்கு அருகிலே சென்று உட்கார்ந்தான்.

ஓலையைப் பிரித்து வைத்துக்கொண்டு உற்றுப் பார்த்தான். ஆகா! என்ன ஏமாற்றம்! அதில் ஏதோ எழுதியிருந்தது! மிக நெருக்கமாக எழுதியிருந்தது! ஆனால், என்ன எழுதியிருந்தது? அது தான் தெரியவில்லை. அதில் எழுதி இருந்தது தமிழ் எழுத்து அல்ல. சமஸ்கிருதமோ, பிராகிருதமோ, பாலி பாஷையோ தெரியவில்லை. ஆகா! கல்வி ஒருவனுக்கு எவ்வளவு அவசியமானது! தாய்ப் பாஷை ஒன்று மட்டும் தெரிந்தால்கூடப் போதாது, ஒரு தேசத்தில் வழங்கும் மற்ற பாஷைகளும் தெரிந்திருக்க வேண்டும். இத்தனை காலமாகக் கல்வி பயிலாமல் தமிழைக் கூட நன்றாய்ப் பயிலாமல் காலம் கழித்துவிட்டதை நினைத்துப் பரஞ்சோதி அப்போது வருத்தப்பட்டான்.

இத்தனை காலம் கழித்துக் காஞ்சிக்குக் கல்வி பயிலுவதற்காகக் கிளம்பி வந்தோமே? அதாவது நடந்ததா? நாம் வந்த சமயத்தில்தானா இந்த யுத்தக் குழப்பங்கள் எல்லாம் வர வேண்டும்? இந்த ஆபத்தான காரியம் நம் தலையிலேயா அமர வேண்டும்? இப்படி எண்ணமிட்டுக் கொண்டேயிருந்தபோது பரஞ்சோதிக்குத் தூக்கம் வருகிறாற்போல் இருந்தது. கண்ணிமைகள் கனத்துத் தாமாகவே மூடிக்கொள்ளப் பார்த்தன. தீபத்தடியிலிருந்து எழுந்து ஏற்கெனவே படுத்திருந்த மேடைக்குப் போகப் பரஞ்சோதி எண்ணினான். ஆனால், அந்த எண்ணத்தை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. தூக்க மயக்கம் அவனை மீறி மேலோங்கிற்று. அப்படியே தரையில் படுத்தான் சிறிது நேரத்தில் நினைவற்ற நிலையை அடைந்தான். அவன் கையிலிருந்து நழுவிய ஓலை தரையில் கிடந்தது.

சற்றுப் பொறுத்து அறைக் கதவு மெதுவாகத் திறந்தது. வஜ்ரபாஹு ஓசைப்படாமல் உள்ளே வந்தான். தரையில் கிடந்த ஓலைச் சுருளை எடுத்துக்கொண்டு அறையின் கதவை மீண்டும் சாத்திவிட்டு வௌியேறினான். வௌியேறிய வஜ்ரபாஹு இரண்டு மூன்று அறைகளைக் கடந்து சென்று விடுதியின் ஒரு மூலையில் இருந்த பெரிய அறைக்குள் புகுந்தான். அங்கே குத்துவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் உட்கார்ந்து பரஞ்சோதியிடமிருந்து அபகரித்துக்கொண்டு வந்திருந்த ஓலையைக் கவனமாகப் படிக்கலானான்.

முதலில் சற்று நேரம் அவன் ஏட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய புருவங்கள் நெரிந்தன; நெற்றி சுருங்கியது. சில சமயம் மேலே நிமிர்ந்து கூரையை நோக்கியவண்ணம் யோசித்தான். சில சமயம் கையை நெரித்துக் கொண்டு பூமியை நோக்கிய வண்ணம் சிந்தித்தான். சற்றுநேரம் தீபத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். கடைசியாக, அவனுடைய முகம் பளிச்சென்று மலர்ந்தது. உடனே, விரைவாகவும் உற்சாகத்துடனும் அந்த ஓலைக்கட்டிலிருந்து நாலு ஏடுகளையும் படித்து முடித்தான்.

பிறகு, பக்கத்தில் வைத்திருந்த வெற்று ஓலையில் நாலு எடுத்து அதே அளவில் கத்திரித்து வைத்துக்கொண்டு எழுதத் தொடங்கினான். துரிதமாக எழுதி முடித்துப் பரஞ்சோதி கொண்டு வந்திருந்த ஓலையையும் இதையும் ஒப்பிட்டு நோக்கினான். பரஞ்சோதியின் ஓலையை அவ்விடமே பத்திரப்படுத்தி வைத்துவிட்டுத் தான் எழுதிய ஓலையுடனே பரஞ்சோதியின் அறையை நோக்கிச் சென்றான். அங்கே பரஞ்சோதி இன்னும் தீபத்துக்குப் பக்கத்தில் மயங்கிக் கிடப்பதையும் தீபம் அணையும் தறுவாயில் இருப்பதையும் பார்த்தான். அறையில் அப்போது இலேசான புகை ஒருவித அபூர்வமணம் கமழ்ந்து கொண்டிருந்த புகை சூழ்ந்தது. மூக்கைத் துணியினால் மூடிக் கொண்டு வஜ்ரபாஹு அவ்வறைக்குள் நுழைந்தான். ஓலை முன்னே கிடந்த இடத்திலேயே தான் கொண்டு வந்த ஓலையைப் போட்டுவிட்டுத் தீபத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த திரியை உள்ளுக்கு இழுத்து எண்ணெயில் நனைத்து அணைத்தான் இவ்வளவும் அதி சீக்கிரமாகச் செய்துவிட்டு மறுகணமே அந்த அறையைவிட்டு வௌியேறினான்.

மீண்டும் தன்னுடைய அறைக்குச் சென்று வஜ்ரபாஹு பரஞ்சோதியிடமிருந்து தான் அபகரித்த ஓலையை இன்னொரு தடவை நன்றாகப் படித்துப் பார்த்துவிட்டு, அதை ஏடு ஏடாக எடுத்து விளக்கின் ஜுவாலையில் காட்டித் தகனம் செய்தான். அப்படித் தகனம் செய்து கொண்டிருந்த போது அவனுடைய உள்ளம் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தது என்பதை அவனுடைய முகக்குறி காட்டியது. நாலு ஏடுகளையும் எடுத்துச் சாம்பலாக்கிய பிறகு, இன்னும் நாலு வெற்று ஏடுகளை எடுத்து எழுத்தாணியினால் எழுதத் தொடங்கினான். முன்போல் இம்முறை இவன் வேகமாகவும் இடைவிடாமலும் எழுதவில்லை. இடையில் நிறுத்தி நிறுத்தி யோசித்து எழுதினான். அவன் எழுதி முடித்து ஓலை ஏடுகளைக் குழாயில் போட்டபோது, பலபலவென்று கிழக்கு வெளுத்தது. உச்சி வானத்துக்குச் சற்று மேற் காணப்பட்ட பாதி மதி பிரகாசத்தை இழந்து பாண்டு வர்ணம் அடைந்து கொண்டிருந்தது. விண்மீன்களும் ஒளி குன்றத் தொடங்கின. பட்சிகளின் தனிக் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட்கலாயின.

பரஞ்சோதி கண்விழித்துப் பார்த்தபோது, அறைக்குள்ளே பலகணி வழியாக உதய நேரத்தின் இளம் வௌிச்சம் வந்து கொண்டிருந்தது. அருகில் தரையில் கிடந்த ஓலையை அவன் ஆர்வத்துடன் தாவி எடுத்துக்கொண்டு அதை உடனே குழாயில் போட்டு இடுப்பிலும் செருகிக்கொண்டான். முதல்நாள் இரவில் அவன் பயங்கரக்கனவு கண்டது, வஜ்ரபாஹுவும் விடுதித் தலைவனும் வந்து விளக்கு வைத்து விட்டுப் போனது, தூக்கம் பிடியாமல் விளக்கண்டை வந்து ஓலையைப் படிக்கத் தொடங்கியது. கண்ணைச் சுற்றிக் கொண்டு தூக்கம் வந்தது ஆகிய எல்லாம் அவனுடைய நினைவுக்கு வந்தன. இன்னமும் அவன், தலை இலேசாகச் சுற்றிக்கொண்டிருந்தது. வயிற்றிலும் கொஞ்சம் சங்கடம் இருந்தது.

ஏதோ ஓர் அபூர்வமான வாசனை அவ்வறையில் சூழ்ந்திருப்பதையும் அவன் உணர்ந்தான். ஆனால், இதிலெல்லாம் அவனுடைய கவனம் அதிக நேரம் நிற்கவில்லை. "ஓலையைத் தரையில் போட்டு விட்டு இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமே, என்ன அசட்டுத்தனம்!" என்கிற எண்ணத்தினால் ஏற்பட்ட வெட்கம் மற்ற நினைவுகளையெல்லாம் போக்கடித்தது. அதே சமயத்தில் குதிரையின் காலடிச் சத்தம் காதில் விழவே, விழுந்தடித்து எழுந்திருந்து வாசற்புறம் சென்றான். அங்கே விடுதித் தலைவனும் காவலர்களும் நின்று சற்றுத் தூரத்தில் போய்க் கொண்டிருந்த குதிரையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் கண்டான். "ஓஹோ! வஜ்ரபாஹுவா போகிறார் அதற்குள்ளே புறப்பட்டு விட்டாரா?" என்று பரஞ்சோதி வினவியதைக் கேட்டு அவர்கள் அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்.

குதிரை கண்ணுக்கு மறைந்த பிறகு, "ஐயா! வஜ்ரபாஹு என்கிறவர் யார்? உங்களுக்குத் தெரியுமா?" என்று பரஞ்சோதி காவலர்களைப் பார்த்துக் கேட்டான். "உன்னைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றல்லவா நினைத்திருந்தோம்!" என்று காவலர்களில் ஒருவன் கூறினான். "இன்னாரென்று தெரியாமலா நேற்றிரவு அவருக்கு அவ்வளவு மரியாதை செய்தீர்கள்?" "காரணமில்லாமல் மரியாதை செய்யவில்லை அவரிடம் சிங்க முத்திரை போட்ட இலச்சினை இருந்ததே, உனக்குத் தெரியாதா?" "சிங்க இலச்சினை என்றால் அதில் என்ன விசேஷம்?" "வெகு முக்கியமான இராஜாங்கக் காரியமாகப் போகிறவர்கள் சிங்க இலச்சினை வைத்திருப்பார்கள்!"

காவலர்களில் ஒருவன், "அவர் யாராக இருக்கும்?" என்று மற்றவர்களைப் பார்த்துக் கேட்டான். "அமைச்சர்களில் ஒருவராயிருக்கலாம்" என்றான் ஒருவன். "சேனாதிபதி கலிப்பகையை நீக்கிவிட்டு வேறொரு சேனாதிபதியைச் சக்கரவர்த்தி அனுப்பப் போவதாகக் கேள்வி. புதிய சேனாதிபதியாக இருந்தாலும் இருக்கலாம்" என்றான் ஒருவன். "சேனாதிபதியை மாற்றுவதற்கு என்ன காரணம்? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான் விடுதித் தலைவன். "வேறு காரணம் வேண்டுமா, என்ன? வாதாபி சைனியம் வடபெண்ணையை நெருங்கிவிட்டதாகக் கேள்வி. அப்படி இருக்க, நம் சேனாதிபதி வடக்கு மண்டலத்துச் சைனியத்தை இருந்த இடத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது போதாதா?"

"சக்கரவர்த்தியிடம் யோசனை கேட்கச் சேனாதிபதி கலிப்பகை காஞ்சிக்கே போயிருக்கிறாராமே?" "அதனால்தான் சக்கரவர்த்திக்குக் கோபமாம். 'நீர் சேனாதிபதி பதவி வகித்தது போதும்' என்று சொல்லி விட்டாராம்!" இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த பரஞ்சோதி, "ஐயா! என் குதிரை எங்கே? நானும் கிளம்ப வேண்டும்" என்றான். பரஞ்சோதியைப் பற்றி அவர்கள் இன்னும் சிறிது விசாரித்து விட்டு, "நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டார்கள். "வடபெண்ணைக் கரையிலுள்ள பௌத்த மடத்துக்குப் போகவேண்டும். இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்?" என்று பரஞ்சோதி வினவினான்.

அவர்கள் வஜ்ரபாஹு சென்ற திசையைக் காட்டி, "இந்த வழியே போனால் உச்சி வேளையில் வடபெண்ணையைச் சேரலாம். அங்கிருந்து கரையோடு மேற்கே போக வேண்டும். போனால் பாபாக்னி நதி வடபெண்ணையுடன் கலக்கும் இடத்தில் பௌத்தமடம் இருக்கிறது!" என்று கூறி அவனுடைய குதிரையையும் கொடுத்தார்கள். பரஞ்சோதி குதிரைமீதேறிக் கிளம்பியபோது, அடடா! வஜ்ரபாஹுவும் இதே வழியில் போகிறவராயிருக்க, சற்று முன்னாலேயே எழுந்து அவருடனே கிளம்பாமல் போனேனே! அவருடன் போயிருந்தால் வழிப் பிரயாணம் எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்? களைப்பே தெரியாமல் கதை கேட்டுக் கொண்டே ஆனந்தமாய்ப் பிரயாணம் செய்திருக்கலாமே? என்று எண்ணமிட்டான்.
 
முப்பத்து நாலாம் அத்தியாயம்

மடாலயம்

பரஞ்சோதிக்கு, முன் அத்தியாயங்களில் கூறிய ஆச்சரியமான அனுபவங்கள் நேர்ந்து கொண்டிருந்த அதே தினம் மாலை நேரத்தில், காஞ்சி மாநகரில் அவனைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. பல்லவ குலம் தழைக்க வந்த குமார சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மரும் சைவந் தழைக்க வந்த திருநாவுக்கரசு சுவாமிகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். மாமல்லபுரத்திலிருந்து திரும்பிவந்த அன்றிரவு மகேந்திர சக்கரவர்த்தி தம் செல்வப் புதல்வரை அழைத்துக் கொண்டு மாறுவேடத்துடன் கோட்டைக்கு வௌியே சென்றார். குதிரைகளை ஒரு மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு மங்கலான நட்சத்திர வௌிச்சத்தில் மதிலைச் சூழ்ந்திருந்த அகழியின் கரையோரமாக அவர்கள் நடந்து சென்றார்கள்.

திடீரென்று அகழியில் படகு செலுத்தும் சத்தம் கேட்டு நரசிம்மர் அளவிறந்த வியப்புக்கு உள்ளானார். அவரைச் சத்தம் செய்யவேண்டாமென்று சமிக்ஞை காட்டினார் மகேந்திரர். இருவரும் அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டார்கள். "ஆம்; படகு ஒன்று அகழியில் சென்று கொண்டிருந்தது. அதை ஓட்டியவன் சத்தம் அதிகமாகக் கேளாதபடி சர்வ ஜாக்கிரதையாகத் துடுப்புகளைப் போட்டுக் கொண்டிருந்தான். படகு அக்கரையில், அதாவது, மதில் ஓரத்தில் போய் நின்றது. அதிலிருந்து இருவர் இறங்கினார்கள். அந்தச் சிறு படகை அவ்விருவருமாக இழுத்துக் கரையேற்றினார்கள். மதிலின் பக்கத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த ஒரு புதரின் மறைவில் அதைத் தள்ளினார்கள்.

மதிலண்டை சென்று அவர்கள் நின்றது ஒரு கணம்! அடுத்த கணத்தில் இருவரும் மாயமாய் மறைந்தார்கள். ஒரு பிரம்மாண்டமான சிலந்திப் பூச்சியானது தன் அருகில் வந்த இரண்டு கொசுக்களை ஒரு நொடியில் நாக்கை நீட்டி விழுங்கி விட்டு பழையபடி சலனமற்றிருப்பது போல், அந்தக் காஞ்சிக் கோட்டையானது தன்னை நெருங்கிய இருவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுங்கிவிட்டு மறுபடியும் அசைவற்றிருப்பது போலத் தோற்றமளித்தது. இதையெல்லாம் பார்த்ததனால் குமார சக்கரவர்த்திக்கு உண்டான பிரமிப்பு நீங்குவதற்கு முன்னால், அங்கு இன்னொரு வியப்பான சம்பவம் ஏற்பட்டது. பக்கத்திலிருந்த வேறொரு புதரிலிருந்து ஓர் ஆள் திடீரென்று கிளம்பி வந்தான். அவன் சக்கரவர்த்திக்குத் தண்டம் சமர்ப்பித்து விட்டுப் பணிவுடன் நின்றான். அவனைப் பார்த்துச் சிறிதும் வியப்புறாத மகேந்திரர், "சத்ருக்னா! இந்தச் சுவரிலுள்ள கதவு எங்கே திறக்கிறதென்று ஊகிக்கிறாய்?" என்று கேட்டார். "இராஜ விஹாரத்தில் புத்தர் சிலைக்குப் பின்னால் திறக்கலாம், சுவாமி!" என்றான் சத்ருக்னன்.

"சுவரில் கதவு வைத்தவன் மிகவும் கெட்டிக்காரனாக இருக்கவேண்டும்; இல்லையா?" "கதவு வைத்தவனைக் காட்டிலும் மேலே வர்ணம் பூசியவன் கெட்டிக்காரன் பிரபு! பட்டப்பகலில் இவ்விடமெல்லாம் வந்து பார்த்தேன் கதவு ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை." "ரொம்ப நல்லது சத்ருக்னா! நாளைக்கு நான் வட திசைக்குப் பிரயாணப்படுகிறேன்." "பிரபு! நானும் ஆயத்தமாயிருக்கிறேன்." "இல்லை; நீ என்னுடன் வரவேண்டாம், மறு கட்டளை பிறக்கும் வரையில் இந்த நாகநந்தியை நீ தொடர வேண்டும்.." "தொண்டை நாட்டை விட்டு அவர் போனால்.." "அப்போதுந்தான்.." "சோழநாடு, பாண்டியநாடு சென்றால்..." "பின்னோடு போகவேண்டும் யாரிடமாவது பிக்ஷு ஓலை ஏதாவது அனுப்பினாரானால்..?" "என்ன செய்யவேண்டுமென்று தெரியும், சுவாமி! ஆனால் செங்காட்டங்குடி வாலிபனிடம் அவர் அனுப்புகிற ஓலை?" "அதை நான் பார்த்துக் கொள்கிறேன் எந்த முகாந்திரத்தினாலும் நாகநந்தியைத் தவறவிடக்கூடாது. ஏதாவது விசேஷம் இருந்தால் எனக்குச் செய்தியனுப்ப வேண்டும்." "ஆக்ஞை, பிரபு!"

சக்கரவர்த்தியும் நரசிம்மரும் அங்கிருந்து அரண்மனைக்குத் திரும்பியபோது, "இராஜ விஹாரத்தை உடனே மூடிக் கோட்டை மதிலிலுள்ள துவாரத்தையும் அடைத்துவிட வேண்டாமா?" என்று மாமல்லர் கேட்டார். "கூடாது குழந்தாய், கூடாது அதற்குக் காலம் வரும்போது செய்யலாம். இப்போது பகைவர்களின் சூழ்ச்சிகளை அறிவதற்கு அந்த இரகசியக் கதவு நமக்கு உதவியாக இருக்கும்" என்று சக்கரவர்த்தி மறுமொழி கூறினார்.

சக்கரவர்த்தி வடதிசைக்குப் பிரயாணமான பிறகு, காஞ்சிக் கோட்டைக்குள்ளே மாமல்லருக்குப் பொழுது போவது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது. ஆயனர் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் புத்த பிக்ஷுவும் பரஞ்சோதியும் ஒளிந்திருந்ததை மகேந்திரர் ஊகித்தறிந்தது, மதில் சுவரில் இருந்த இரகசியக் கதவை அவர் கண்டுபிடித்தது முதலிய காரியங்களினால் சக்கரவர்த்தியிடம் குமாரருக்கு ஏற்கெனவே இருந்த மதிப்பு பன்மடங்கு அதிகமாகியிருந்தது. ஆகவே, காஞ்சிக் கோட்டைக்கு வௌியே போகக் கூடாது என்ற தந்தையின் கட்டளையை மீறும் எண்ணமே அவருக்கு உதிக்கவில்லை.

ஆனால், இராஜ்யத்தில் பெரிய பெரிய காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மகத்தான யுத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தபோது, கோட்டைக்குள்ளே ஒரு காரியமுமின்றி அடைந்து கிடப்பது அவருக்குப் பரம சங்கடத்தை அளித்தது. கழுக்குன்றத்தில் பல்லவ சைனியங்கள் திரண்டு கொண்டிருக்கின்றனவே, அங்கே போய்ப் படைகளைப் பார்க்கவாவது தந்தையிடம் அனுமதி பெறாமல் போனோமே என்று மாமல்லர் ஏக்கமடைந்தார். அப்பால் மாமல்லபுரம் போகவும் அவரிடம் அனுமதி பெற்றிருந்தால்...?" ஆம்; எத்தனையோ எண்ணங்களுக்கிடையில் சிவகாமியைப் பற்றிய நினைவும் மாமல்லருக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அவள் தீட்டிய தாமரைக்கும் மானுக்கும் மத்தியில் தாம் வரைந்திருந்த வேலை அவள் பார்த்தாளோ, இல்லையோ? பார்த்திருந்தால், அதன் பொருளைத் தெரிந்து கொண்டிருப்பாளோ? அதனால் திருப்தியடைந்திருப்பாளோ?

தந்தையிடம் நாம் வாக்குக் கொடுத்திருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியாதல்லவா? ஆதலின், தன்னைப் பார்க்க வரவில்லையே என்று அவளுக்குக் கோபமாகத்தான் இருக்கும். அவள்தான் இங்கு ஏன் வரக்கூடாது?... ஆனால் அவள் எப்படி வருவாள்? ஆயனருக்குத்தான் தந்தை அவ்வளவு கடுமையான கட்டளையிட்டிருக்கிறாரே, வேலையை விட்டுவிட்டு அவர் வரமுடியாதல்லவா?" இவ்விதம் குமார சக்கரவர்த்தியின் உள்ளம் பலவித சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது. செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாதபடியால் அவருடைய மனவேதனை அதிகமாயிற்று.

இந்த நிலைமையில் திருநாவுக்கரசு சுவாமிகள் காஞ்சிக்குத் திரும்பி வந்துவிட்டார் என்று அறிந்ததும் மாமல்லர் அவரைத் தரிசித்துவிட்டு வரலாமென்று எண்ணினார். சுவாமிகளிடம் தெரிவிக்கும்படிச் சக்கரவர்த்தி கூறியிருந்த செய்தி ஒன்று இருந்தது. எனவே, ஒரு நாள் மாலை ஏகாம்பரேசர் திருக் கோயிலுக்கருகிலிருந்த நாவுக்கரசர் மடாலயத்துக்கு அவர் சென்றார். நாவுக்கரசர் குமார சக்கரவர்த்தியை அன்புடன் வரவேற்றுத் தாம் சென்றிருந்த ஸ்தலங்களின் மகிமையைப் பற்றிக் கூறினார். சக்கரவர்த்தி வடநாடு சென்றிருப்பது பற்றியும், பல்லவ இராஜ்யத்தில் யுத்தம் வந்திருப்பதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பின்னர் சுவாமிகள் கூறினார்" "மாமல்லரே! சக்கரவர்த்தியிடம் ஒரு விஷயம் தெரிவித்துக் கொள்ள எண்ணியிருந்தேன். அவர் இல்லாதபடியால் தங்களிடம் சொல்லுகிறேன். இந்த இடத்திலிருந்து நமது மடத்தை அப்பாற்படுத்தித் திருமேற்றளியில் அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஏகாம்பரர் கோயில் நகருக்கு மத்தியிலே இருப்பதால் இங்கே அமைதி கிட்டுவதில்லை. மேலும், இங்கே நம்முடைய சீடர்களுக்கும் பக்கத்திலுள்ள கடிகை ஸ்தானத்தில் வடமொழி பயிலும் மாணாக்கர்களுக்கும் ஓயாமல் வாக்குவாதமும் போட்டியும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆரியம், தமிழ் இரண்டையும் அளித்த எம்பெருமான் ஒருவரே என்று அவர்களுக்கு எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. இளங்காளைப் பருவமல்லவா? அப்படித்தான் கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். ஏகாம்பரநாதர் கோயிலில் கூட்டம் போட்டிருக்கும் காபாலிகர்களின் தொல்லையும் பொறுக்க முடியவில்லை. அதனால் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கும் இறைவன் சந்நிதிக்குப் போய்விடலாமென்று பார்க்கிறேன். இவ்விடத்தைக் காட்டிலும் அங்கே அமைதியாயிருக்கிறது."

சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்த குமார சக்கரவர்த்தி கூறினார்; "சுவாமி! முன்னால் ஏகாம்பரர் கோவிலிலிருந்து இந்தக் கபாலிகர்களையெல்லாம் துரத்திவிட வேண்டுமென்று சொன்னேன். தாங்கள் தான் வேண்டாம் என்கிறீர்கள். தங்கள் விருப்பத்தின்படி திருமேற்றளியில் மடத்தை அமைத்துக் கொள்வதில் ஆட்சேபமில்லை. ஆனால், சக்கரவர்த்தி தங்களிடம் தெரிவிக்கச் சொன்ன விஷயத்தைத் தெரிவிக்கிறேன். பிறகு, தங்கள் உசிதம் போல் செய்யலாம். யுத்தம் தொண்டை நாட்டுக்கே வந்துவிடலாமென்றும், இந்தக் காஞ்சி நகரம் முற்றுகைக்கு உள்ளாகலாமென்றும் பல்லவேந்திரர் கருதுகிறார். யுத்தம் ஒருவிதமாக முடியும் வரையில் தாங்கள் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் தீர்த்த யாத்திரை செல்வது நலம் என்ற அவருடைய அபிப்பிராயத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தச் சொன்னார். அதுவரையில் நமது மடத்தை மூடி வைத்துவிடுவது உசிதம் என்றும் சக்கரவர்த்தி கருதுகிறார். இதைப்பற்றி யோசித்து தங்கள் சித்தம்போல் முடிவு செய்யலாம்."

நாவுக்கரசர் சிறிது நேரம் சிந்தனை செய்துவிட்டு, "சக்கரவர்த்தியின் யோசனை எனக்கும் சம்மதமாகத்தான் இருக்கிறது. ஆனால், முன்னமே தெரியாமல் போயிற்று. திருமேற்றளியில் மடத்திருப்பணி ஆரம்பிப்பதற்காக ஆயனரை வரும்படி நான் சொல்லியனுப்பியிருக்கிறேன்... ஒரு விதத்தில் அதுவும் நல்லதுதான். நீண்ட யாத்திரை கிளம்புவதற்கு முன்னால் ஆயனச் சிற்பியாரை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போகலாம்" என்றார்.

ஆயனர் வருகிறார் என்று கேட்டதும் மாமல்லரின் உள்ளத்தில் குதூகலம் உண்டாயிற்று. "ஆயனர் எப்போது வருவார், சுவாமி?" என்று ஆர்வத்துடன் கேட்டார். "ஒருவேளை இன்று மாலையே வரக்கூடும்" என்று நாவுக்கரசர் பெருமான் கூறியதும், ஆயனர் வரும்வரையில் தாமும் அங்கே இருப்பது என்று மாமல்லர் தீர்மானித்துக் கொண்டார். "சுவாமி! திருச்செங்காட்டங்குடியிலிருந்து தங்களுக்கு ஓலை கொண்டுவந்த வாலிபனை ஆயனர் நாகார்ஜுன பர்வதத்துக்கு அனுப்பியிருக்கிறாரே, தெரியுமா?" என்று கேட்டார். "அது என்ன? எனக்கு ஒன்றும் தெரியாதே?" என்று சுவாமிகள் சொல்ல, நரசிம்மர் பரஞ்சோதியைப் பற்றித் தாம் அறிந்திருந்த விவரங்களைக் கூறினார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, வாசற்புறமிருந்து உள்ளே ஒரு சீடன் விரைவாக வந்து, "ஆயனர் வருகிறார்!" என்று அறிவிக்க, எல்லாருடைய கண்களும் வாசற்புறம் நோக்கின.
 
முப்பத்தைந்தாம் அத்தியாயம்

இரண்டாவது அரங்கேற்றம்

திருநாவுக்கரசு அடிகளுக்கு அப்போது ஏறக்குறைய ஐம்பத்தைந்து பிராயமிருக்கலாம். அப்பெருமானுடைய பொன் வண்ணத் திருமேனி முழுவதும் தூய வெண்ணீறு பூசியிருந்தது. அவருடைய கழுத்தையும் மார்பையும் ருத்திராட்ச கண்டிகைகளும் தாழ்வடங்களும் அலங்கரித்தன. சிரசிலும் கரங்களிலும் அவ்வாறே ருத்திராட்சங்கள் பொலிந்தன. காதுகளிலும் ருத்திராட்ச குண்டலங்கள் இலங்கின. இடையில் தூய வெண் துகில் உடுத்தியிருந்தார். அவருடைய திருமுகத்தில் ஞான ஒளி வீசிற்று. இறைவனை நினைந்து இடையறாது கண்ணீர்விட்ட அவருடைய கண்களில் பேரருள் ததும்பிற்று. கோயில் பிரகாரங்களில் புல் செதுக்குவதற்கான உழவாரப்படை அந்தத் தொண்டர் சிகாமணியின் திருத்தோளில் சாத்தப்பட்டிருந்தது.

திருநாவுக்கரசர் காஞ்சியில் அமைந்திருந்த சைவத் திருமடத்துக்கு அதிபராக விளங்கியபோதிலும், அவ்வப்போது ஸ்தல யாத்திரை சென்று திரும்புவது வழக்கம். தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலும் உள்ள பல சிவ ஸ்தலங்களுக்கு அவர் சென்று சிவாநந்தமும் தமிழின்பமும் ததும்பும் தெய்வத் திருப்பதிகங்களைப் பாடினார். சென்ற இடங்களிலெல்லாம் ஜனங்கள் அவரைச் சிவிகையில் ஏற்றி ஊர்வலம் நடத்திச் சிறப்பாக வரவேற்றார்கள். அவர் சென்ற ஒவ்வொரு ஸ்தலத்திலும் கோயில் பிரகாரங்களில் முளைத்திருக்கும் புல்லை அவர் தம் கையில் பிடித்த உழவாரப்படையினால் செதுக்கிச் சுத்தம் செய்தார். இந்தச் சிவகைங்கரியத்தை ஆயிரக்கணக்கான மக்கள் அதிசயத்துடன் பார்த்தார்கள். அதுமுதல் தங்கள் ஊர்க் கோயில்களைப் புதுப்பித்துச் சுத்தமாக வைத்திருக்கத் தீர்மானித்தார்கள்.

வாகீசப் பெருமானுடைய திருவாக்கினால் தத்தம் ஊரிலுள்ள கோயிலுக்கு மகிமை உண்டாக வேண்டும் என்று ஜனங்கள் விரும்பினார்கள். "எங்கள் ஊருக்கும் விஜயம் செய்யவேண்டும். எங்கள் ஊர்க் கோயிலைப் பற்றியும் பாடி அருள வேண்டும்" என்று அவரிடம் வேண்டிக் கொண்டார்கள். அவ்விதம் அப்பெருமான் பாடிய பாடல்களை அந்தந்த ஊர்க்காரர்கள் ஓலைச் சுவடிகளில் எழுதிக் கொண்டு பெறுதற்கரிய பேறு அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தார்கள்.

இத்தகைய மகிமை வாய்ந்த நாவுக்கரசர் எழுந்தருளியிருக்கும் இடங்களில் ஜனங்கள் அருளொளி விளங்கிய அவருடைய திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் அவருடைய திருவாக்கிலிருந்து எப்போது, என்ன அமுத வார்த்தை வருமோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டும் இருப்பார்கள். அங்ஙனமிருக்க, இன்று அவருடைய சொந்த மடாலயத்தில் அவரிடம் பக்தி பூண்டு தொண்டு செய்யும் சீடர்கள்கூட, "ஆயனர் வருகிறார்!" என்ற சொல்லைக் கேட்டதும் ஒருமுகமாக வாசற்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள் என்றால், அதிலிருந்து மக்களின் உள்ளத்தில் ஆயனச் சிற்பியார் எப்பேர்ப்பட்ட இடம் பெற்றிருந்தார் என்று ஊகித்து அறியலாம். அங்கிருந்தோர் எல்லாரையும்விட நாவுக்கரசரின் அருகில் வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியின் உள்ளத்திலேதான் அதிகப் பரபரப்பு உண்டாயிற்று; 'இதோ ஆயனர் வருகிறார்!' என்ற வார்த்தைகளைக் கேட்டதும், 'ஒருவேளை அவருடன் சிவகாமியும் வருவாளோ!' என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றிக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று. அடுத்த கணத்தில், 'அவள் எதற்காக இங்கு வருகிறாள்?' என்ற எண்ணம் மனச் சோர்வை உண்டாக்கியது. இவ்விதம் அவர் மாறி மாறிக் கிளர்ச்சியும் சோர்வும் அடைவது அதிக நேரம் நீடித்திராதபடி இதோ ஆயனர் வாசற்படியண்டை வந்து விட்டார்! ஆகா! என்ன 'ஜல் ஜல்' சத்தம்; பாத சரத்தின் ஒலிபோல் இருக்கிறதே! அதோ, ஆயனருக்குப் பின்னால் வரும் பெண்? சந்தேகமென்ன சிவகாமியேதான்!

குமார சக்கரவர்த்தியின் கண்கள் சிவகாமியின் முகத்தை நோக்கின. சிவகாமியின் கண்களும் முதன்முதலில் மாமல்லரின் ஆவல் ததும்பிய கண்களைத்தான் சந்தித்தன. வாடியிருந்த சிவகாமியின் முகத்தில் ஒருகணம் புதுமலர்ச்சி காணப்பட்டது. ஆனால், ஒருகண நேரந்தான்! அடுத்த கணத்தில் அந்தச் செந்தாமரை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. தலை குனிந்து பூமியை நோக்கிய வண்ணம் சிவகாமி தன் தந்தையைப் பின் தொடர்ந்து அந்த மண்டபத்திற்குள்ளே நுழைந்தாள்.

நயன பாஷையில் நடைபெற்ற மேற்படி நாடகத்தை வேறு யாரும் கவனியாத வண்ணம் மண்டபத்துக்குள் அப்போது பெரும் கலகலப்பு ஏற்பட்டிருந்தது. பணிவுக்குப் பெயர்போன நாவுக்கரசர் பெருமான், ஆயனர் மண்டபத்துக்குள்ளே நுழைந்ததும் தானும் ஆசனத்தை விட்டு எழுந்து நாலு அடி நடந்து எதிர்கொண்டு, "வரவேணும்! சிற்ப சக்கரவர்த்தியே! வரவேணும்!" என்று உபசரித்து அழைத்தார். ஆயனர் இதைக் கண்டதும் விரைந்து முன்னால் வந்து, "அபசாரம்! அபசாரம்" என்று கூறி கொண்டே திருநாவுக்கரசரின் திருப் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். நாவுக்கரசர் ஆசனத்தைவிட்டு எழுந்தபோது அவருடன் எழுந்த சீடர்கள், நாவுக்கரசரும் ஆயனரும் அமர்ந்த பிறகு தாங்களும் தத்தம் இடத்தில் அமர்ந்தார்கள்.

எல்லாரும் உட்கார்ந்த பிறகும் சிவகாமி மட்டும் ஆயனருக்குப் பின்னால் தலைகுனிந்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அப்போதுதான் அவளைப் பார்த்த நாவுக்கரசர், "ஆகா! இந்தப் பெண் யார், ஆயனரே? தங்கள் குமாரி சிவகாமியா?" என்று கேட்க, ஆயனர் "ஆம், அடிகளே! தங்களைத் தரிசிக்கப் போகிறேன் என்று சொன்ன போது சிவகாமி 'நானும் வருகிறேன்' என்றாள்! அழைத்துக் கொண்டு வந்தேன்" என்றார். "மிக்க சந்தோஷம் உங்கள் குமாரியைப் பார்க்க வேண்டுமென்று நானும் மிக்க ஆவலாயிருந்தேன். நடனக் கலையிலே அவள் அடைந்திருக்கும் அபூர்வத் தேர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சமீபத்தில் அரங்கேற்றம் நடந்ததாமே? நான்தான் அச்சமயம் இல்லாமற் போய்விட்டேன்" என்று நாவுக்கரசர் கூறினார்.

"எனக்கும் அது மிக வருத்தமாயிருந்தது, சுவாமி! அன்று சிவகாமியின் நடனத்தைப் பார்த்துவிட்டு ருத்ராச்சாரியார் பிரமித்துப் போய்விட்டார். சிற்பம், சித்திரம், சங்கீதம் ஆகிய கலைகளுக்கெல்லாம் நடனக்கலைதான் ஆதாரம் என்பதை அன்றைக்குத்தான் அவர் ஒத்துக்கொண்டார். 'சிவகாமியின் நடனத்தைப் பார்த்த பிறகு சங்கீதக் கலையில் நான் கற்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறதென்பதை அறிந்தேன்' என்று சபை நடுவில் வாய்விட்டுச் சொன்னார்..."

இவ்விதம் ஆயனர் கூறியபோது அவருடைய குரலிலும் முகத்திலும் பெருமிதம் கொந்தளித்தது. அப்போது வாகீசர், "ஆயனரே! சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய தெய்வக்கலைகளுக்கு ஆதாரமும் நடனந்தான்! அண்ட பகிரண்டங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் பெருமான் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயில்கிறார் அல்லவா?" என்று திருவாய் மலர்ந்தார். இதுவரை மௌனமாக இருந்த குமார சக்கரவர்த்தி, "சுவாமி! நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைப் பற்றிய தங்களுடைய பாடல் ஒன்றுக்கு, அன்று ஆயனர் மகள் அபிநயம் பிடித்தாள்; தாங்கள் அதை அவசியம் பார்க்க வேண்டும்!" என்றார்.

"ஆம், சுவாமி! தங்களுடைய மூன்று திருப்பாடல்களுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பதாயிருந்தாள். ஆனால், ஒரு பாடலுக்குத்தான் அபிநயம் பிடிக்க முடிந்தது. அரங்கேற்றம் நடுவில் நின்ற செய்தி கேட்டிருப்பீர்களே!" என்று ஆயனர் கூறியபோது, அதனால் ஏற்பட்ட வருத்தம் இன்னும் அவருக்குத் தீரவில்லையென்று தோன்றியது. "கேள்விப்பட்டேன், ஆயனரே! யுத்தத்தினால் சிவகாமியின் அரங்கேற்றம் மட்டுந்தானா தடைப்பட்டது? இன்னும் எத்தனையோ காரியங்கள் தடைபடும் போலிருக்கின்றன. உம்மை நான் அழைத்த காரியம் கூட அப்படித்தான்!" என்று வாகீசப் பெருமான் கூறினார். "சுவாமி! என்ன காரியமாக என்னை வரச்சொல்லிப் பணித்தீர்கள்?" என்று ஆயனர் கேட்டார்.

"நமது திருமடத்தை இந்த ஏகாம்பரர் சந்நிதியிலிருந்து திருமேற்றளிக்குக் கொண்டு போக வேண்டுமென்று விரும்பினேன். இந்த இடம் நகரின் மத்தியில் இருப்பதால் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு உகந்ததாயில்லை. ஆனால் திருமேற்றளியில் அமைதி குடிகொண்டிருக்கிறது. கோயிலைச் சுற்றியுள்ள நந்தவனத்தில் மல்லிகை மலர்களும் கொன்றை மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. சந்தடி கூச்சல் ஒன்றும் கிடையாது. இறைவனைத் துதிப்பதற்கும் தமிழ் பயில்வதற்கும் திருமேற்றளி தக்க இடம்."

"பெருமானே! திருமேற்றளி இறைவன் மீது பாடல் ஏதாவது பாடப் பெற்றதோ?" என்று ஆயனர் கேட்க, நாவுக்கரசர் தமது சீடர்களைப் பார்த்தார். உடனே ஒரு சீடர் திருமேற்றளிப் பதிகத்திலிருந்து பின்வரும் பாடலைப் பாடினார்: "செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியிற் கரை யிலாத காஞ்சிமா நகர்தன் னுள்ளார் எல்லியல் விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே!" மேற்கண்ட பாடலைச் சீடர் இனிய குரலில் உருக்கமாய்ப் பாடிவந்தபோது நாவுக்கரசர் பெருமானின் கண்களில் நீர் ததும்பி நின்றது. திருமேற்றளிக் கோயிலில் மல்லிகையும் கொன்றை மலரும் சூடிச் சூரியனைப்போல் ஜோதிமயமாக விளங்கிய சிவபெருமானை மீண்டும் அகக் கண்ணால் அவர் நேருக்கு நேரே தரிசித்துப் பரவசமடைந்தவராகத் தோன்றினார். அந்தக் காட்சியை அங்கிருந்த மற்றவர்கள் பார்த்துப் பரவசமடைந்திருந்தார்கள்.

பாடல் முடிந்து சிறிது நேரம் வரையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பின்னர், நாவுக்கரசர் பரவச நிலை நீங்கித் தம்மைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தார். உடனே ஆயனர், "அடிகளே! தாங்கள் உண்மையிலேயே நாவுக்கரசர்தான். தங்களுடைய திருவாக்கு அப்படி மகிமை வாய்ந்திருக்கிறது. தங்களுடைய பாடலில் இடம் பெற்று விட்டபடியால் இந்தக் காஞ்சி நகருக்கும் இதிலுள்ள திருமேற்றளிக்கும் இனி அழிவென்பதே இல்லை. தங்கள் விருப்பத்தின்படி திருமேற்றளியில் மடாலயத்திருப்பணியை மேற்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் துறைமுகப்பட்டினத்தில் ஒரு முக்கியமான திருப் பணியைத் துரிதமாகச் செய்து முடிக்கும்படி சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். எதை முதலில் செய்வது என்று குமார சக்கரவர்த்தி ஆக்ஞை இடவேண்டும்" என்று கூறி, மாமல்லரை நோக்கினார்.

ஆயனருடைய கேள்விக்கு மாமல்லர் மறுமொழி கூறுவதற்குள், நாவுக்கரசர் சொல்லுவார்: "அதற்கு இப்போது அவசியமேயில்லை. சிற்பியாரே! தாங்கள் வரும்போதுதான் சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தை மாமல்லர் எனக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார். யுத்தம் முடியும் வரையில் என்னைச் சிஷ்யர்களுடன் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் உள்ள ஸ்தலங்களைத் தரிசித்து வரும்படி சக்கரவர்த்தி யோசனை கூறியிருக்கிறார். எனக்கும் வெகுகாலமாக அந்த ஆசை உண்டு. காஞ்சிக் கோட்டை ஒரு வேளை பகைவர் முற்றுகைக்கு இலக்கானாலும் ஆகலாம், அம்மாதிரி சமயங்களில் என் போன்ற துறவிகள் விலகியிருப்பதே நல்லது."

இவ்விதம் நாவுக்கரசர் கூறியதைக் கேட்ட நரசிம்மவர்மர் "அடிகளே! தாங்கள் இப்போது கூறிய அபிப்பிராயம் போற்றத்தக்கது. அதைச் சமண முனிவர்களும் புத்த பிக்ஷுக்களும் ஒப்புக் கொண்டு அரசியல் விஷயங்களில் தலையிடாமல் நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றார். புத்த பிக்ஷு என்ற வார்த்தையைக் கேட்டதும் ஆயனருக்குச் சுருக்கென்றது. அதோடு பரஞ்சோதியைப் பற்றிய நினைவும் வந்தது. "அடிகளே! ஒரு விஷயம் தெரிவிக்க மறந்துவிட்டேன். தங்களுடைய மடாலயத்தில் சேர்ந்து தமிழ் கற்பதற்காக ஒரு பிள்ளை சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடியிலிருந்து வந்தான். திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து தங்களுக்கும் எனக்கும் அவன் ஓலை கொண்டு வந்திருந்தான். சித்திரக்கலை சம்பந்தமான ஒரு மகா இரகசியத்தை அறிந்து வருவதற்காக அவனை வடக்கே ஸரீ பர்வதத்துக்கு அனுப்பியிருக்கிறேன்...."

"அவ்வளவு தூரமா அனுப்பியிருக்கிறீர்கள்? அங்கேயெல்லாம் யுத்தம் நடக்கும் இடமாயிற்றே? சிறு பிள்ளை என்று சொன்னீர்கள்?" என்று நாவுக்கரசர் சிறிது கவலையுடன் கேட்டார். "சிறு பிள்ளையாயிருந்தாலும் மகா வீரன் சுவாமி!" என்று ஆயனர் கூறி, அரங்கேற்றத்தன்று மதயானை மீது அவன் வேல் எறிந்ததை விவரித்தார். கடைசியாக, "பரஞ்சோதி திரும்பி வந்ததும் உடனே தங்களிடம் அனுப்பிவிடுகிறேன், சுவாமி!" என்றார் ஆயனர். "வேண்டாம் ஆயனரே! அவன் திரும்பிவரும் போது நான் எங்கே இருப்பேனோ, தெரியாது. எப்போது அவன் உங்கள் தொண்டில் ஈடுபட்டானோ, உங்களுடைய சீடனாகவே இருக்கட்டும். சிற்பக்கலை பயிலும் பேறு இலேசில் கிடைக்கக் கூடியதா? என்றும் அழிவில்லாத ஈசனுக்கும் என்றும் அழியாத கற்கோயில்களை அமைக்கும் கலையை காட்டிலும் சிறந்த கலை உலகில் வேறென்ன உண்டு...?"

ஆயனர் அப்போது குறுக்கிட்டு, "அடிகளே! சிற்பக் கலையைக் காட்டிலும் சிறந்த கலை வேறொன்று இருக்கிறது. எங்களுடைய கற்கோயில்கள் சிதைந்து உருத்தெரியாமல் அழிந்து போகலாம். ஆனால் தங்களுடைய கவிதைக் கோயில்களுக்கு ஒருநாளும் அழிவில்லை; கற்பகோடி காலம் அவை நிலை பெற்றிருக்கும்" என்றார். அப்போது குமார சக்கரவர்த்தி, "சற்று முன்னால் பேசி முடிவு செய்ததை இரண்டு பேரும் மறந்துவிட்டீர்களே? எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலையல்லவா?" என்று சொல்லவே, அங்கிருந்த எல்லாருடைய முகத்திலும் புன்னகை பூத்தது. ஆனால், சிவகாமி மட்டும் குனிந்த தலை நிமிராமலிருந்தாள்.

நாவுக்கரசர், "நல்லது, குமார சக்கரவர்த்தி! நாங்கள் மறந்து தான் போய்விட்டோம்! எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலைதான். தில்லையம்பலத்தில் ஆடும் பெருமான் முன்னால் நிற்கும் போது உள்ளமானது பொங்கிக் கவிதை வெள்ளமாய் வருவது போல் மற்ற மூர்த்தங்களுக்கு முன்னால் நிற்கும்போது வருவதில்லை!" என்று கூறிவிட்டு, ஆயனரைப் பார்த்து, "சிற்பியாரே! தங்கள் புதல்வியின் நடனத்தை நான் பார்க்க வேண்டாமா? தென்னாட்டுக்கு யாத்திரை சென்றால் திரும்பி எப்போது வருவேனோ தெரியாது. நாடெல்லாம் புகழும் சிவகாமியின் நடனக் கலையைப் பார்க்காமல் போக எனக்கு மனமில்லை. ஒரே ஒரு பாடலுக்கு அபிநயம் பிடித்துக் காட்டினாலும் போதும்!" என்றார்.

ஆயனர், "சுவாமி! சிவகாமிக்கு அத்தகைய பாக்கியம் கொடுத்து வைக்கவேண்டுமே?" என்று கூறி, தமக்குப் பின்னாலிருந்த சிவகாமியைத் திரும்பிப் பார்த்தார். அவள் முகமலர்ச்சியின்றித் தலை குனிந்த வண்ணம் இருப்பதைக் கண்டதும் ஆயனருக்குச் சிறிது வியப்பு உண்டாயிற்று. இதையெல்லாம் கவனித்த மாமல்லர், "ஒருவேளை நான் இங்கு இருப்பதால் சிவகாமி ஆட விரும்பாமலிருக்கலாம். சுவாமி விடை கொடுங்கள்! போய் வருகிறேன்!" என்று நாவுக்கரசரைப் பார்த்துக் கூறினார்.

இந்த வார்த்தை காதில் விழுந்ததும் சிவகாமி பளிச்சென்று துள்ளி எழுந்து, நடனத்துக்கு ஆயத்தமாக நின்று, "அப்பா! எந்தப் பாடலுக்கு அபிநயம் பிடிக்க வேண்டும்!" என்று கேட்டது அழகிய மான்குட்டி ஒன்று குயிலின் குரல் பெற்று அமுதத் தமிழ் மொழியின் மழலை பேசுவதுபோல் தொனித்தது. "பூவணத்துப் புனிதனார் முதலில் தோன்றட்டுமே!" என்று ஆயனர் பெருமிதம் தோன்றக் கூறினார். நாவுக்கரசர், கலை அரசர், இளவரசர் ஆகிய மூன்று மன்னர்களின் முன்னிலையில் சிவகாமியின் நடனக் கலை அரங்கேற்றம் இரண்டாவது முறை ஆரம்பமாயிற்று.

மந்த மாருதத்தில் மிதந்து வரும் தேன் வண்டின் ரீங்காரம் போன்ற குரலில் சிவகாமி பின்வரும் திருத் தாண்டகத்தைப் பாடிக்கொண்டு, அதன் பொருளுக்கேற்ப அங்கங்களின் சைகைகளினாலும் முகபாவத்தினாலும் அபிநயம் பிடித்தாள். பாடலில் ஒவ்வொரு வரியிலும், 'தோன்றும்' 'தோன்றும்' என்று வந்த போது, சிவகாமியின் பாதரசங்கள் 'ஜல்' 'ஜல்' என்று தாளத்துக்கிசைய ஒலித்தன. "வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணிதோன்றும் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வைதோன்றும் எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்துதோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க் கே." இந்த தெய்வீகமான பாடலைப் பாடிக்கொண்டு சிவகாமி அதன் பொருளுக்கேற்ப அபிநயம் பிடித்தபோது, அங்கிருந்தவர்கள் எல்லாரும் தங்களை மறந்தார்கள். தாங்கள் இருக்குமிடத்தை மறந்தார்கள். அங்கு நடப்பது என்ன என்பதையும் மறந்தார்கள்.

சற்று முன்னால் நாவுக்கரசரின் சீடர் பாடியபோது அவர்களுடைய செவிகளில் இனிய தமிழ்ச் சொற்கள் நின்றன. அவர்களுடைய கண்கள் நாவுக்கரசரை நோக்கின. அப்பாடலை அவர் அனுபவித்து உருகுவதைப் பார்த்து அவர்கள் மனமும் கசிந்தன. சிவகாமி அபிநயம் பிடித்தபோது அவர்களுடைய கண்கள் நாவுக்கரசரை நோக்கவில்லை. குமார சக்கரவர்த்தியையோ, ஆயனச் சிற்பியாரையோ அவர்கள் காணவில்லை. அந்த மடாலயத்தின் சுவர்களோ, தூண்களோ அவற்றில் அமைந்திருந்த சிற்பங்களோ, சித்திரங்களோ அவர்கள் கண்ணில் படவேயில்லை.

அவர்கள் கண்முன்னால் பாடி ஆடி அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த சிவகாமியைக்கூட அவர்கள் பார்க்கவில்லை? பின் அவர்கள் யாரை அல்லது எதனைப் பார்த்தார்கள்? சாக்ஷாத் சிவபெருமானையே தங்கள் கண் முன்னால் தத்ரூபமாக நேருக்கு நேரே பார்த்தார்கள்! அவருடைய கரத்தில் தோன்றிய திரிசூலத்தையும், அவருடைய வளர் சடைமேல் இயங்கும் இளமதியையும் பார்த்தார்கள்.

அவருடைய திருமிடற்றில் கொன்றை மாலையைப் பார்த்தார்கள். காதிலே வெண் குழையைப் பார்த்தார்கள். திருநீறு பொழியும் திருமேனி முழுவதையும் பார்த்தார்கள். அந்தத் தெய்வீகக் காட்சியில் தங்களை மறந்தார்கள்; இந்தப் பூவுலகையே மறந்தார்கள். பூவுலகிலிருந்து கைலாசத்துக்கு அவர்கள் போய்விட்டார்கள். பாட்டும் அபிநயமும் நின்ற சிறிது நேரத்துக்குப் பிறகு தான் எல்லாரும் சுய உணர்வு பெற்றுப் பூவுலகிற்கு வந்து சேர்ந்தார்கள்.

சுய உணர்ச்சி தோன்றியதும், அனைவருடைய கவனமும் இயல்பாக நாவுக்கரசர்பால் சென்றது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகி வெண்ணீறு அணிந்த திருமேனியை நனைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். இத்தனை நேரமும் பாவனைக் கண்ணால் தாங்கள் தரிசித்துக் கொண்டிருந்த சிவபெருமான் இந்த மகான்தானோ என்று அவர்களில் பலர் எண்ணினார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் நாவுக்கரசர் தழுதழுத்த குரலில், 'ஆயனரே! திருக்கயிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானைத் தங்கள் குமாரி எங்கள் முன்னால் பிரத்தியட்சமாகத் தோன்றச் செய்துவிட்டாள்!" என்றார். ஆயனரும் கண்களில் ஆனந்தக் காண்ணீர் ததும்ப, "எல்லாம் தங்கள் ஆசீர்வாதந்தான், சுவாமி!" என்று கூறி சிவகாமியைப் பார்த்து, "இன்னும் ஒரு பாட்டுக்கு அபிநயம் பிடிக்கிறாயா, அம்மா! இது அகத்துறைப் பாடலாக இருக்கட்டுமே!" என்றார்.
 

New Threads

Top Bottom