இப்பொழுது
தன் இருகைகளையும் மார்புக்கு மத்தியில் கட்டிக் கொண்டு தலையை சரித்து கண்களில் குறும்பு பொங்க தன் எதிரில் இரு கைகளையும் நீட்டி வழியை மறைப்பது போல் நின்றிருந்தவனையே பார்த்திருந்தாள் அவள். அவளுக்கு எதிரில் நின்றிருந்தவனோ ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக் கொண்டு நின்றான். காபி ஷாபின் உள்ளிருந்து வாசல் வரை ஓடி வந்ததுக்கு ஒலிம்பிக்கில் ஓடிய ரேஞ்சிற்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான்.
பாவையவளின் பார்வையில் குறும்போடு மையலும் சேர்ந்துக் கொள்ள உதடுகள் விஷம புன்னகை பூக்க அவனுக்கு வெட்கம் அழையா விருந்தாளியாய் வந்து சேர்ந்தது. தலையை ஒரு கையால் கோதிக் கொண்டு “ஊப்” என்று வாயைக் குவித்து ஊதி தன்னை சமநிலை படுத்திக் கொண்டான்.
அவளோ அவன் என்ன சொல்ல வருகிறான் தெரிந்தும் அவன் வாயால் கேட்கும் ஆசையில் ‘என்ன?’ எனும் விதமாக தலையை சரித்த வாக்கிலே மேலும் கீழுமாக ஆட்டினாள். அவளின் குறும்பு புரிந்தவனது இதழ்களும் புன்னைகையை சிந்தின.
“ இரண்டு நிமிசத்துக்கு முன்னாடி ஒருத்தி என்னை அவளோட பார்வையால மயக்கிட்டா… மனசு சொல்லுது காலம் பூரா அவகிட்ட மயங்கியே கிடக்கலாம்னு… என்ன சொல்லுற மயங்கவா? வேண்டாமா?” அவனுடைய ட்ரேட் மார்க் ஆப்சன் கேட்கும் கேள்வியுடன் தான் பேச்சை முடித்தான்.
அவளது இரண்டு வருட காதலும் அவனது இரண்டு நிமிட காதலும் சந்தித்துக் கொண்டன.
“இதுக்கு நான் பதில் சொல்லனுமா? இல்ல அப்படியே கிளம்பனுமா?” அவனுக்கு தானும் சளைத்தவள் அல்ல என்பது போல் பேசினாள் அவள்.
அவனும் இரு கைகளை கட்டிக் கொண்டு அவளையே கூர்ந்து பார்க்க சில நொடிகளுக்கு பின் இருவரும் சிரித்து வி்ட்டனர். அவர்களது சிரிப்பு சப்தத்தை தாண்டி துப்பாக்கியிலிருந்து குண்டு வெளி வரும் ஒலியும் கண்ணாடி உடையும் சப்தமும் கேட்டது.
##########
ஒரு மணி நேரத்திற்கு முன்பு…
கடற்கரையை பார்த்தவாறு பிரெஞ்ச் ஸ்டைலில் அமைந்த காபி ஷாப் அது. மெர்லின் காபி ஷாப். வாசலில் முன்புறம் அழகிற்காக இரு புறமும் நன்றாக வளர்க்கப்பட்ட பசுமையான செடிகள், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் சுவற்றிற்கு வர்ணம் , அசத்தலான இன்ட்டீரியர் என பக்கா ஹைடெக் காபி ஷாப் அது. அதுவும் ஒரு புறம் சுவர் இருக்க மறுபுறம் சுவருக்கு பதிலாய் கண்ணாடிகள் இருக்கும்.
“ஹே சாரி சாரி கைஸ்…” என்றபடியே லேட்டாக வந்து அமர்ந்தான் அவன்.
லேட்டாக வந்தவனை அவனது நட்பு பட்டாளம் முறைத்து தள்ள அவளோ மொச்சோவில் முழுகிக் கொண்டிருந்தாள்.
“அதான் சாரி சொல்லிட்டேன்ல அப்பறம் என்னடா?” என்று சலித்துக் கொண்டான் அவன்.
“எங்கள வர சொல்லிட்டு நீ லேட்டா வந்தா கொஞ்சுவாங்களாடா?” என கடுப்பாக கேட்டான் காதில் கடுக்கன் போட்டவன்.
“எனக்காக யாரும் வெயிட் பண்ண மாதிரி தெரியலையே?” என தன் ஸ்லீவை சுருட்டிக் கொண்டு அவளை பார்த்தான்.
அனைவரும் ஆர்டர் செய்ததை தொட கூட இல்லாது அவனுக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் மட்டும் மோச்சாவை குடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அவன் சொல்லி காட்டிய பிறகு கூட மோச்சாவை கீழே வைக்கும் எண்ணமெல்லாம் அவளுக்கு வரவில்லை. பதிலாக ஒவ்வொரு துளியாக ரசித்து பருகி கொண்டிருந்தாள் அவள். அதை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. நிலமை கலவரமாக மாறும் முன் சமாளிக்க வேண்டி போனிடெயில் போட்ட ஒருத்தி
“சரி அதை விடு… நீ ஏன் லேட்டா வந்த அத முதல்ல சொல்லு?” என்றாள்.
“ப்ச்ச்… லேட்டாகிடுச்சு…” என்றான் படு அலட்சியமாக அவன்.
அவன் ஏதோ அவர்களது முறை பொண்ணு எனும் ரேஞ்சிற்கு அவனை அனைவரும் முறைத்து தள்ளினர். அனைவரும் என்றாள் அவளை தவிர, போனிடெயில்காரி, ஜீன்ஸ் போட்டவள், கடுக்கன் போட்டவன், பிரெஞ்ச் பியர்ட் வைத்தவன், ரோலக்ஸ் வாட்ச்காரன் என அனைவரும் தான்.
அவர்கள் எல்லாரும் கல்லூரி தோழமைகள் அவளைத் தவிர. போனிடெயில்காரியின் பள்ளி கால தோழி இவள். இரண்டரை வருடங்களுக்கு முன்பு தான் இவர்களது கேங்கில் இணைந்தாள். இவள் வந்ததிலிருந்து அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு உண்டு. அவனது மேனரிசம், ஆளுமையான பெர்ஸ்னாலிட்டி, உயரம் எல்லாத்தின் மீதும் இருந்த ஈர்ப்பு எப்பொழுது காதலனாது என அவளுக்கு தெரியாது. ஆனால் அவள் அதை உணர்ந்து வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. காதல் எந்தநொடி வந்ததோ கள்ளதனமும் மிச்சமீதியின்றி அவளிடம் வந்து ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு அவனிடம் பேசக்கூட முடியாது கூச்சம் வந்து ஒட்டிக் கொண்டது.
இரண்டு வருடமாய் ஊருக்கும் நட்புக்கும் தெரியாமலே காதல் பயிரிட்டுக் கொண்டிருந்தாள் அவள். அந்த மக்கு மடசாம்பிராணி (அவள் வைத்த பெயர்) இதை எதையும் தெரியாது ஒதுங்கி போகிறாள் என்று வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
“யூ *****, என் பேன்டை இப்பிடி வேஸ்ட் பண்ணிட்டியே…” என சகட்டு மேனிக்கு வார்த்தைகளை ரோலக்ஸ் வாட்ச் காரன் அள்ளி தெளித்துக் கொண்டிருந்தான்.
அவனின் நினைவில் இருந்தவள் நிமிர்ந்து பார்க்க ரோலக்ஸ் வாட்ச்காரனது சான்டல் நிற பேன்டில் பச்சை நிறத்தில் எதுவோ ஊற்றிக்கிடந்தது. பேரர் தன்னால் இயன்ற அளவிற்கு மன்னிப்புகளை கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஹேய்… கொஞ்சம் அடங்கு… குழந்தை குறுக்க வந்ததால தான் தெரியாம கொட்டி விட்டாரு பேரர்… ஓவரா பண்ணாதா… நீங்க போங்க…” என ரோலக்ஸ் வாட்ச்காரனிடம் ஆரம்பித்து அந்த பேரரிடம் முடித்தாள் ஜீன்ஸ் போட்டவள்.
“ஏய்… என் பேன்ட்ல அவன் ஜீசை கொட்டியிருக்கான் *** மாதிரி பேசுற நீ…” என ஜீன்ஸ் போட்டவளையும் கெட்ட வார்த்தையால் அர்ச்சித்தான் ரோலக்ஸ் வாட்ச்காரன். அருவருத்து போனாள் ஜீன்ஸ் போட்டவள்.
யாரும் எதிர்பார்க்கா நேரத்தில் போனிடெயில்காரி அவன் கன்னத்தில் ‘சப்’பென்று ஒரு அடிவிட்டாள்.
“சாரி சொல்லுடா…” என்று ரோலக்ஸ்காரனிடம் சொன்னாள் போனிடெயில்காரி.
போனிடெயில்காரி அடித்ததில் கடுக்கன் போட்டவன் அவனுக்கே அடி விழுந்தது போல கன்னத்தில் கையை வைத்துக் கொண்டான். பிரெஞ்ச் பியர்ட்காரன் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான். அவனோ திறந்த வாயை மூடாமல் பார்த்தான். ஜீன்ஸ் போட்டவளோ கொஞ்சம் அதிர்ச்சியாகவும் கொஞ்சம் சிரிப்பாகவும் பார்த்தாள். அவள் மட்டும் ‘இதெல்லாம் சாதாரணமப்பா’ எனும் ரேஞ்சிற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எவனோ ஒருத்தன் தன் பிளாக்கலர் லெதர் ஜாக்கெட்டை உதறிவிட்டு அவர்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு போனான்.
“அறிவுகெட்ட”
அடுத்து என்ன ரோலக்ஸ்காரன் கூறியிருப்பானோ போனிடெயில்காரி மீண்டும் விட்டாள் ஒரு பட். பொறி கலங்கிவிட்டது ரோலக்ஸ் வாட்ச்காரனுக்கு.
“எதுக்குடி அடிக்கிற?” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போனிடெயில்காரியை அடித்துவிடும் ஆவேசத்துடன் கேட்டான் ரோலக்ஸ் வாட்ச்காரன். கண்களில் தீப்பொறி இல்லை இல்லை அக்னி குண்டமே கொழுந்து விட்டு எரிந்தது.
“பேசுறது தப்பான வார்த்தை… கொஞ்சம் கூட தப்பா பேசுறோமேன்ற கூச்சமே இல்ல… இதுல நெஞ்ச நிமித்திக்கிட்டு என் அடிச்சேனு கேக்குற…” என்றாள் போனிடெயில்காரி வார்த்தைகளில் ஏற்ற இறக்கங்கள் கொடுத்து.
“நான் ஒண்ணும் தப்பாலாம் பேசல… எல்லாரும் சொல்லுற வார்த்தை தான் சொன்னேன்...” மிதமிஞ்சிய கோபம் ரோலக்ஸ் வாட்ச்காரனிடம்.
“அதானே…” ஒத்து ஓதினான் கடுக்கன் போட்டவன்.
போனிடெயில்காரி அவனை முறைக்க ‘உனக்கு இது தேவையா?’ என்பது போல் பிரெஞ்ச் பியர்ட் வைத்தவன் வாயை பொத்திக் கொண்டு சிரித்தான்.
“எல்லாரும் தப்பு பண்ணறாங்கனு நாமளும் தப்பு பண்ணலாமா? எல்லாரும் புதைகுழில விழுந்தா நாமளும் கூட சேந்து விழலாமா?” என கூர்ப்பார்வையுடன் கேட்டாள் போனிடெயில்காரி. எல்லாரும் மௌனப்பிள்ளையாராகி விட்டனர்.
“ஹேய் விடுப்பா…” என்றான் அவன் அந்த அமைதியா குலைத்து.
ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள் அவள். அவன் இவளை முறைப்பது கடைக்கண் வழியே தெரிந்தது.
“என்ன டா விட சொல்லுற… என்ன விடனும்…” என்றாள் கோபமாக போனிடெயில்காரி.
அந்த டேபிளில் இருந்த எல்லோரும் அவளை தான் பார்த்தனர்.
“இவள உடலோட ஒரு பாகத்தை கொச்சையா சொல்லி திட்டறான்… எப்படி விட சொல்லற?” என ஜீன்ஸ் போட்டவளை சுட்டி காட்டி சீறினாள் போனிடெயில்காரி.
“அது வந்து… வந்து… நான்… அப்பிடி… நான் மீன்… பண்ணல…” தயக்கத்திலே வார்த்தைகளை தந்தியடித்தான் ரோலக்ஸ் வாட்ச்காரன்.
“சரி நீ இவள மீன் பண்ணல அப்போ அவன மீன் பண்ணி தான் சொன்னியா?? ஹீம்ம்ம்…” என அங்கே புன்னகையுடன் யாருக்கோ சர்வ் பண்ணிக் கொண்டிருந்த பேரரை காட்டி கேட்டாள் போனிடெயில்காரி.
“ஹே அவன் என் பேன்ட்ல…” என ரோலக்ஸ் வாட்ச்காரன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் குறுக்கிட்டாள் போனிடெயில்காரி.
“அவன் உன் பேன்ட்ல வேணும்னு கொட்டல தெரியாம தான் கொட்டினான்… அப்படியே அவன் பர்பஸ்புல்லா பண்ணியிருந்தாளும் நீ அவன தான் திட்டியருக்கனும் அவனோட அம்மாவ இல்ல…” என்றாள் போனிடெயில்காரி.
###########
முக்கால் மணி நேரத்திற்கு பிறகு…
லெதர் ஜாக்கெட்டை போட்டவன் தன் எதிரில் அலங்கார பதுமை போல அனார்கலி சுடிதாரில் அமர்ந்திருந்தவளிடம் அலட்சியமாக பேசிக் கொண்டிருந்தான்.
“நீ சொன்ன மாதிரி அந்த தறுதலை இங்க வருவானா?” என பத்தாவது முறையாக கேட்க
“வருவான்… வருவான்… வருவான்… வந்தே தொலைவான்…” என கோபத்தை குரலில் காட்டாதிருக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள் அலங்கார பதுமை அனார்கலி சுடிதார். வந்த அரை மணி நேரத்தில் பத்து தடவை ஒரே கேள்வியை மாடுலேசன் மாற்றி மாற்றி கேட்டாள் எப்படி இருக்கும் அனார்க்கலி சுடிக்கு.
“ஆமா உனக்கு எப்படி தெரியும்?” என பப்பரக்காவென உட்கார்ந்தவாறே லெதர் ஜாக்கெட்காரன் கேட்டான்.
“காட் டேம்… உன்னலாம் எப்பிடி வேலைல சேத்தாங்க…” என குரலை தணித்து வெப்பத்தை கூட்டி கேட்டாள் அனார்க்கலி சுடி.
“சொன்னா நீயும் வந்து சேரப்போறியா??” என்றான் லெதர் ஜாக்கெட்.
கண்களில் பற்றிக் கொண்ட தீயுடன் கையில் வைத்திருந்த காப்பச்சினோவை அவன் மூஞ்சியில் ஊற்றினாள் என்ன என யோசித்தாள் அனார்கலி.
“கையிலிருக்க காப்பிய என் மூஞ்சில ஊத்தலாம்னு தோணுதா??” அனார்கலியின் முக உணர்வுகளை படித்தபடியே கண்களிலில் இருந்த கூலிங் கிளாஸை ஆள் காட்டி விரலால் மூக்கில் இறக்கி வைத்தபடி கேட்டான் அந்த லெதர் ஜாக்கெட்காரன்.
“இல்ல… உன்ன மாதிரி ஒருத்தன படைச்ச கடவுள் என் கையில கிடைச்சா அவரு மேல ஊத்தலாம்னு நினைக்கறேன்..” என புசுபுசுவென மூச்சு வாங்க கூறினாள் அனார்க்கலி சுடிதார்.
அவன் கண்ணாடியை தூக்கி விட்டுக் கொண்டு ஜம்பமாக அவளை கூலிங் கிளாசினூடே பார்த்தான்.
“உன்ன படைக்கும் போது கடவுள் என்ன மோட்ல இருந்தாரு??” வாய் சும்மா இருக்க மாட்டாது கேட்டாள் அனார்கலி சுடிதார்.
“சக்கர பொங்கல சாத்வீகமாக சாப்புட்டு இருக்கும் போது எவனோ அவருக்கு கொத்து பரோட்டாவும் சால்னாவும் பார்சல் பண்ணிட்டான்… அந்த கடுப்புல இருக்கும் போது என்னை படைச்சிருப்பாரு போல…” என அநாசயகமாக சொன்னான் அந்த லெதர் ஜாக்கெட் காரன்.
“யூ… யூ… சீரியஸ்லி…” என டேபிளில் இருந்த போர்க்கை எடுத்து லெதர் ஜாக்கெட்காரனை குத்துவது போல் வந்தாள் அனார்க்கலி சுடி.
“என் மூஞ்சி என்ன லாவா கேக்கா போர்க்க தூக்கிட்டு வர்ற…” என்றான் விடாது.
சம்பந்தா சம்பந்தமிலலாது பேசும் அவனை ‘ஆஆஆ..’ என வாயை பிளந்து கொண்டு கையில் போர்க்கோடு மார்டன் காளியாத்தாவாக காட்சியளித்தாள் அனார்க்கலி சுடி.
அவர்களது டேபிளை கடந்து சென்ற இருவர் அவளது போசை பார்த்துவிட்டு நமட்டு சிரிப்புடன் அவளுக்கு பின் இருந்த டேபிளில் சென்று அமர்ந்தனர்.
லெதர் ஜாக்கெட்காரனது அத்தனை புலன்களும் அலெர்ட் ஆனது.
###########
ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களுக்கு முன்…
தன் அம்மாவின் கையைும் அப்பாவின் கையையும் கோர்த்துக் கொண்டு ஜாலியாக வந்தான் அந்த குட்டிப் பையன். எப்பொழுதும் வீட்டிலிருந்தாள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் தன் பெற்றோர் இன்று அதியசமாக ஒன்றாய் சேர்ந்து அவனை வெளியில் கூட்டிக் கொண்டு வந்ததில் அவனுக்கு ஏக சந்தோசம்.
குட்டி பையன் அவனது அன்னையை பார்த்து புன்னகைக்க புடவை அணிந்த அந்த பெண்ணும் மந்தகாசமாய் குட்டி பையனை பார்த்து சிரித்தாள். அவன் தந்தை முகத்தை பார்க்க டீ சர்ட் அணிந்திருந்த அவனோ பாறை முகத்துடன் காணப்பட்டான்.
ஒரு டேபிளை பார்த்து மூவரும் அமர்ந்தனர். குட்டிப்பையனுக்கு மட்டும் பைனாப்பிள் கேக்கை ஆர்டர் செய்தனர் கூடவே சாக்கலேட் மில்க்சேக்கையும். அது வந்து சேரும் வரை டீ சர்ட்காரனும் புடவைகாரியும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் இருவரும் அவர்களது மகனான குட்டி பையனிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
குட்டிப் பையன் தனக்கு பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்யாமல் அவர்கள் விருப்பத்திற்கு ஆர்டர் செய்த பெற்றோரை நினைத்து வருந்திக் கொண்டிருந்தான். டீசர்ட் காரன் குட்டி பையனுக்கு மில்க் ஷேக் தான் பிடிக்கும் என நினைத்து ஆர்டர் செய்ய புடைவைகாரி ‘தான் தான் அவனின் அம்மா, எனக்கு தான் அவனை பற்றி எல்லாம் தெரியும்’ என மிதப்பாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே பைனாப்பிள் கேக்கை ஆர்டர் செய்தாள். உண்மையில் இரண்டுமே குட்டி பையனுக்கு பிடிக்காதவைகள் தான்.
“சாப்பிடு கண்ணா..” என கனிவோடு புடவைகாரி சொல்ல
“நீ மில்க்ஷேக் குடி டா..” என்றான் டீசர்ட்காரன் தோரணையாக.
இருவரது கண்களிலும் மின்னல் வெட்டியது. என்ன செய்வதென்று புரியாது விழித்த குட்டி பையன் கேக்கை ஒரு வாயும் மில்க்ஷேக்கை ஒரு வாயும் வைத்தான். அப்படி அவன் செய்யவில்லை என்றால் பொது இடம் எனக் கூட பாராது இருவரும் அடித்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என அந்த குட்டி பையனுக்கு தெரியும்.
அடல்ட் என்பவர்கள் எல்லோரும் ஈகோ என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டு சிறுபிள்ளைதனமாக நடந்துக் கொள்ள குழந்தைகள் எல்லாம் இப்பொழுது பெரிய மனுச தன்மையுடன் நடந்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
இருவரும் கண்களால் ஏதோ பேசிக் கொள்ள கேக்கை அளைந்து கொண்டிருந்தான் குட்டி பையன்.
‘நீ சொல்லு…’ என புடவைகாரி கண்களால் டீசர்ட்காரனுக்கு சைசை செய்ய அதையெல்லாம் புறந்தள்ளியவனாக கையை கட்டிக் கொண்டு திமிருடன் அமர்ந்திருந்தான் அந்த டீசர்ட்காரன்.
“எனக்கு பாத்ரும் வருது.. நான் போய்டு வரேன்…” என சேரில் இருந்து குதித்து கீழே இறங்கி இருவர் கூப்பிடுவதும் கேட்காது ஓடினான் குட்டி பையன். தன்னை பயப்பட செய்வது போல் தான் ஏதோ சொல்லப் போகிறார்கள் இருவரும் என யூகித்து ரெஸ்ட்ரூம்மிற்கு செல்கிறேன் என ஓடிவிட்டான் குட்டிப் பையன்.
குட்டிப் பையன் திடீரென நாற்காலியில் இருந்து குதித்து ஓடி வருவதை எதிர் பார்க்காத பேரர் குட்டிப் பையன் வந்து மோதவும் நிலை தடுமாறி கையில் வைத்திருந்த ஜீஸை அருகில் இருந்தவர் மீது கொட்டி விட்டான். இது எதையும் அறியாமல் மூன்றாம் உலகப்போரை ஆரம்பிப்பதற்கான அடுத்தக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கினர் டீசர்காரனும் புடவைகாரியும்.
“நீ ஏன் அவன்கிட்ட சொல்லல…” என எரிந்து விழுந்தாள் புடவைகாரி.
“நீ ஏன் சொல்லல…” என அவளை திருப்பி கேட்டான் டீசர்ட்காரன்.
“பெத்த புள்ளகிட்ட எந்த அம்மாவாச்சும் உன் அப்பாவும் நானும் டிவோர்ஸ் வாங்கிகப் போறோம்னு சொல்ல முடியுமா?” என்றாள் கனல் விழிகளுடன் புடவைக்காரி.
“அப்போ அப்பா மட்டும் சொல்லலாமா?” என திடமாய் கேட்டான் டீசர்ட்காரன்.
அடுத்த பத்து நிமிடத்திற்கு காரசாரமான விவாதம் இருவருக்கிடையே நடைபெற
“ச்சீ… உன்கூட மனுசன் பேசுவானா?” என்றுவிட்டு புடவைகாரி வேகமாக எழுந்து செல்ல அவனுக்கு மான ரோசம் இல்லையா? அவனும் கிளம்பி விட்டான்.
காதல் எனும் மந்திர வார்த்தையில் கட்டுண்டு அக்னி சாட்சியாய் பெற்றோர் உற்றார் ஆசிர்வதிக்க காதலில் திளைத்து பிள்ளையும் பெற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள் ஈகோவை விருந்தாளியாக அழைக்க காதல் எனும் வீட்டின் உரிமைக்காரி ஏதோவொரு மூலையில் முடங்கிக் கொண்டாள்.
குட்டி பையன் நியாபகம் யாருக்கும் இல்லை போலும் இருவரும் கிளம்பி விட்டனர். வாஸ்ரூம் சென்ற குட்டி பையன் திரும்ப அந்த இடத்திற்கே வந்து அமர்ந்தான் தனியாக. சுற்றும் முற்றும் பார்த்தாலும் தன் அன்னையும் தந்தையும் இருப்பதற்கான சுவடுகள் இல்லாமலிருக்கவே பயத்துடன் அமர்ந்திருந்தான் குட்டிப் பையன்.
#############
55 நிமிடங்களுக்கு முன்…
கையில் ஜீஸ் கிளைசை வைத்துக் கொண்டு வந்த பேரர் எதிரில் ஒரு குட்டிப் பையன் தீடிரென ஓடி வந்து இடிக்கவும் சமாளிக்க முடியாது கையிலிருந்த ஜீசை அருகில் இருந்த டேபிளில் அமர்ந்திருந்தவன் மீது கொட்டிவிட்டான்.
‘ஹைய்யோ போச்சு… எல்லாம் போச்சு…’ என அவன் நினைக்கையிலே அந்த ரோலக்ஸ் வாட்ச் அணிந்தவன் இவனை திட்ட ஆரம்பித்தான். அதுவும் அவன் தரங்கெட்ட வார்த்தைகள் உபயோகிக்கவும் என்னவோ போல் ஆகி விட்டது பேரருக்கு.
ரோலக்ஸ் வாட்ச்காரன் திட்டும் பொழுது ஒரு நொடி கூனி குறுகி போய் விட்டான் பேரர். சில சமயங்கள் பலர் கையை கூட நீட்டுவர் ரோலக்ஸ் வாட்ச்காரன் வார்த்தையை நீட்டினான்.
சிலபல மன்னிப்புகளை கேட்டு பேரர் அவ்விடம் விட்டு நீங்கினான். இப்படி பலரிடம் ஏச்சு பேச்சு வாங்கி இந்த வேலையை செய்ய வேண்டுமா எனத் தோன்றிய நொடி இவனது வருமானத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் வீடு நியாபகம் வர அழுகையை அடக்கிக் கொண்டு வேலையை ஆரம்பித்தான்.
###########
50 நிமிடங்களுக்கு பின்…
தலையில் ஸ்பைக் வைத்த ஒருவனும் ப்ரேம்லெஸ் கண்ணாடி போட்ட ஒருவனும் ஒன்றாக காபி ஷாப்பினுள் நுழைந்தார்கள். ஸ்பைக் வைத்தவன் மார்டன் இளைஞனையும் ப்ரேம்லெஸ் கண்ணாடி போட்டிருந்தவன் ஐ.டி இளைஞனையும் நியாபகப் படுத்தினர். இருவரும் ஆளுக்கொரு பானத்தை ஆர்டர் கொடுத்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஸ்பைக் வைத்தவன் ப்ரேம்லெஸ் கண்ணாடிகாரனை பார்த்து கேள்வியாக கண்ணசைக்க ப்ரேம்லெஸ் கண்ணாடி அணிந்தவன் “ஆம்” என்பது போல் கண்ணை மூடி திறந்தான்.
காபி வந்ததும் குடித்துவிட்டு பில் பே பண்ணும் பொழுது பர்சை எடுத்த ப்ரேம்லெஸ் கண்ணாடி அணிந்தவன் தன் கிரிடிட் கார்டை எடுத்து பேரரடிடம் கொடுத்து விட்டு யாரும் அறியாதவாறு தன் பர்சில் இருந்த பாதி கிழிந்த நோட்டினை எடுத்து டேபிளின் மீது வைத்தான்.
அந்த நோட்டினை எடுத்து தன்னுடைய நோட்டுடன் பொருத்தி சீரியல் நம்பர் சரியாக இருக்கா என சரிபார்த்த ஸ்பைக் வைத்தவன் தன்னிடம் இருந்த சிறிய பென்டிரைவை எதிரில் இருந்தவனிடம் நீட்டினான்.
ப்ரேம்லெஸ் கண்ணாடி அணிந்தவன் மிகப்பெரிய தீவிரவாத கும்பல் ஒன்றில் அலுவல் புரிகிறான். ஸ்பைக் வைத்தவன் ஆயுதங்களை சப்ளை செய்யும் க்ரூப்பில் தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றான்.
இப்பொழுது இருவரும் செய்துக் கொண்டது பணப்பரிவர்தன முறை ஆகும். கிழிந்த நோட்டானது பெரிய அளவினான பணத்தினை அடைய சின்ன சாவி போன்றது. அந்த குட்டி பென்டிரைவில் அவர்கள் விற்கும் ஆயுதங்களுக்கான அத்தனை விசயங்களும் இருக்கும்
இவர்களை கண்காணிக்க தான் லெதர் ஜாக்கெட்காரன் வந்தது. எஸ் அவன் ஒரு சி.பி.ஐ.காரன். அலங்காரப் பதுமை அனார்கலி சுடிதார் லெதர் ஜாக்கெட்காரனுக்கு இன்பர்மேசன் தரும் ஆள். மற்றவர்களுக்கு தன் மேல் சந்தேகம் வந்து விடக் கூடாதென்று தான் அனார்கலியை அராத்துகலியாக மாற்றிக் கொண்டிருந்தான்.
##############
45 நிமிடங்களுக்கு முன்…
போனிடெயில்காரி பேச்சை கேட்டு அனைவரும் விக்கித்து போய் நின்றனர்.
“ஏய்… அவன் எங்க பேரரோட அம்மாவ தப்பா பேசினான்…” என தனது நண்பனுக்காக சப்போர்ட்டுக்கு வந்தான் பிரெஞ்ச் தாடிக்காரன்.
“அவன் சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம்?” என அமர்த்தலாக கேட்டாள் போனிடெயில்காரி.
பின் டிராப் சைலன்ஸ் அந்த டேபிளிலில்.
“இப்போ புரியுதா?” எனக் கேட்டாள் போனிடெயில்காரி.
“அவன் இங்க வேலை பாக்குறான்றதுக்காக நீ அவன் அம்மாவ கேவலமா மீன் பண்ணுற வார்த்தைய சொல்லி திட்டுறத அவன் பொறுத்துட்டு போகணும்னு அவசியம் கிடையது…”
“நம்ம முன்னோர்கள்லாம் யாரையாச்சும் திட்டனும்னா கூட நாசம் அற்று போ னு தான் டா திட்டினாங்க… இப்போலாம் நீங்க எப்படி பேசறிங்க…” கோவமா நிதானமா என பிரித்தறிய முடியாத குரலில் பேசி முடித்தாள் போனிடெயில்காரி.
“சும்மா எங்களையே குறை சொல்லாத… எங்கள விட பொண்ணுக தான் இது மாதிரி நிறைய பேசறிங்க…” என வெட்டி வீம்புகாக சொன்னான் ரோலக்ஸ் வாட்ச்காரன்.
“பொண்ணுங்களா? எந்த பொண்ணுங்க அப்பிடி பேசறாங்க?” என கோபமாய் கேட்டு வந்தாள் ஜீன்ஸ் போட்டவள்.
‘அடப்போங்கடா… இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை…’ என்றவாறு மொபைலை நோண்டிக் கொண்டிருந்தாள் அவள். அவளை முறைத்தவாறே இருந்தான் அவன்.
“குழாயடி பக்கம் போய் பாரு… எப்படி பேசுறாங்கனு அப்போ தெரியும்…” என நக்கல் தெரிக்க கூறினான் கடுக்கன் போட்டவன்.
“இரண்டு பக்கமும் தப்பு இருக்கு டா… அவங்க பேசறதும் தப்பு தான் நீங்க பேசறதும் தப்பு தான்…” என மின்ட் ஜீசை ஒரு மிடறு விழுங்கியவாறே கூறினாள் போனிடெயில்காரி.
அங்கு இருந்த அனைவரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஏய்… என்ன நீ அப்படியும் பேசுற இப்படியும் பேசுற??” குழம்பி போய் கேட்டான் பிரெஞ்ச் பியர்ட்காரன்.
“யார் பண்ணினாலும் தப்பு தப்பு தான் டா…” என்றாள் போனிடெயில்காரி.
“பக்கம் பக்கமா பெமினிசம் பேசுவனு நினைச்சா டக்குனு கவுத்திடியேடி…” என்றான் அவன்.
“ஹாஹாஹா… அடேய்… ஹாஹாஹா… பெமினிசம்லாம் பெரிய வார்த்தை டா… எனக்கு இது தப்புனு பட்டதால தான் சொன்னேன் அவ்வளவு தான்… என்னை பொருத்த வரைக்கும் மாந்தர் தன்னை இழிவு படுத்தும் செயலை கெட்ட வார்த்தையிலிருந்து முதலில் ஒழிப்போம் டா…” என்றாள் போனிடெயில்காரி.
அனைவரும் கை தட்ட ஆங்கிலேய பாணியில் குனிந்து அதை பெற்றுக் கொண்டாள் போனிடெயில்காரி.
“ஓ.கே கைய்ஸ் நான் கிளம்பறேன்… பை..” என பொதுவாக அனைவருக்கும் சொல்லியவாறே கிளம்பினாள் அவள்.
“போ போ… காத்து வரட்டும்…” என்றான் அவன்.
அவன் சொன்னது காதிலே விழாதது போல அவள் கிளம்பி சென்றாள் அவள். கொலை வெறியே வந்தது அவனுக்கு. அவனும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான் இரண்டு வருடமாக இவன் என்ன சீண்டினாலும் பதிலே இருக்காது ஒரு பார்வையை மட்டும் வீசி விட்டு செல்வாள். எப்படியாவது அவளை பேச வைத்து விட வேண்டுமென்று அவன் குட்டிக்கரணம் அடிக்காத குறை தான். அவளின் மௌன மொழி அவனுக்கு புரியாததாலே அவளின் மீது அத்தனை காண்டு அவனுக்கு.
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். வாசல் வரை சென்றவள் திரும்பி அவனை பார்த்தாளே ஒரு பார்வை, என்ன பார்வை, காதல் பார்வை, உயிர் பார்வை. உச்சி மண்டையில் அடித்தாற் போன்று புரிந்தது அவனுக்கு. இரண்டு வருடங்களாய் இப்படி தானே பார்க்கின்றாள்.
நாற்காலியில் இருந்து எழுந்தவன் அவள் கிளம்பும் முன்னே பிடிக்க ஓடினான். முன்னால் சென்றுக் கொண்டிருந்த இருவரை இடித்து தள்ளிவிட்டு ஓடினான்.
“சாரி பாஸ்…” என்று பின்னால் திரும்பி கத்திவிட்டு ஓடிப்போய் அவளின் முன்னே இரு கைகளையும் மறித்தாற் போல நின்றான்.
###########
இப்பொழுது…
நேரம் போய் கொண்டே இருந்தாலும் தன் பெற்றோரை காணவில்லையே என பயந்து போய் அமர்ந்திருந்தான் குட்டிப் பையன்.
வந்த வேலை முடிந்ததென கிளம்பி விட்டனர் ஸ்பைக் வைத்தவனும், பிரேம்லெஸ் கண்ணாடி போட்டவனும்.
லெதர் ஜாக்கெட்காரன் அவர்கள் இருவரும் வந்ததிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஸ்பைக் வைத்தவனும், ப்ரேம்லெஸ் கண்ணாடி போட்டவனும் மாற்றிக் கொண்ட ரூபாய் நோட்டும் பென் டிரைவ்வும் லெதர் ஜாக்கெட்காரனது கூரிய பார்வையிலிருந்து தப்பவில்லை. அவர்கள் எழவும் சிறிது இடைவெளி விட்டு அவனும் எழுந்து விட்டான் உடன் அனார்க்கலி சுடியும் தான்.
அவளது ஒற்றை பார்வையில் அவளது காதலையும் தன்னுள் திரையிட்டு இருந்த காதலையும் ஒரு நொடியில் உணர்ந்தவன் அவள் முன்னே நின்றுக் கொண்டிருந்தான். இதனை ஆச்சர்யத்துடனும் குழப்பத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர் மற்ற நால்வரும்.
ஸ்பைக் முடிகாரனையும் ப்ரேம்லெஸ் கண்ணாடிக்காரனை இடித்து தள்ளிவிட்டு அவன் முன்னே செல்ல இருவரும் நிலை தடுமாறினார். பிரேம்லெஸ் கண்ணாடிகாரன் குனிந்து விழுந்ததில் அவன் சர்ட் பாக்கெட்டில் இருந்த பென்டிரைவ் கீழே விழுந்தது. அதை ப்ரேம்லெஸ் கண்ணாடிக்காரன் எடுக்கும் முன் லெதர் ஜாக்கெட்காரன் ஓடிப்போய் அதை எடுத்தான். அதில் என்ன இருக்கின்றது என அவனுக்கு சத்தியமாய் தெரியாது. ஆனால் அதில் இருக்கும் சின்ன விசயம் கூட அவனுக்கு உதவும் என்ற எண்ணத்தில் தான் அதை எடுத்தான். அதில் அந்த ஸ்பைக் வைத்தவனும் ப்ரேம்லெஸ் கண்ணாடி காரனும் அதிர்ச்சி அடைந்தனர்.
இருவரும் லெதர் ஜாக்கெட்காரனை பிடிக்க அவன் தன் ஜாக்கெட்டை கழட்டி விட்டு நழுவி விட்டான். தனது இடுப்பில் எப்பொழுதும் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து அவர்கள் முன்னே நீட்டினான் முன்பு லெதர் ஜாக்கெட் அணிந்திருந்தவன் .
“ஐயம் பிரம் சி.பி.ஐ… போத் ஆவ் யூ அண்டர் அரெஸ்ட்…” என லெதர் ஜார்கெட்காரன் தன் முன் இருந்த இருவரிடமும் சொன்னான்.
உடனே ப்ரேம்லெஸ் கண்ணாடிகாரன் தன் சாக்ஸ்கடியில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனக்கு அருகில் இருந்த குட்டி பையனை இழுத்து அவன் தலையில் வைத்தான். ஸ்பைக் வைத்தவனும் தன் பங்குக்கு உடலில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனுக்கு அருகில் நின்ற போனிடெயில்காரியை இழுத்து தலையில வைத்தான். அந்த இடமே சில நிமிடங்களில் கலவரமானது.
“மரியாதையா அந்த பென்டிரைவை கொடுத்துடு??? ம்ம்ம்… இல்லனா இவங்க ரெண்டு பேரோட உயிரும் அவ்ளோ தான்…” என ப்ரேம்லெஸ் கண்ணாடி போட்டவன் உறும பொது மக்கள் இருக்கும் இடத்தில் தான் செய்த மடத்தனத்தை எண்ணி நொந்தான் சற்று முன்பு வரை லெதர் ஜாக்கெட் அணிந்திருந்தவன்.
லெதர் ஜாக்கெட்காரன் இப்பொழுது அந்த பென்டிரைவை அவர்களிடம் கொடுத்து விட்டாலும் அவர்கள் பொதுமக்கள்ளை அப்படியே விட்டு விடுவார்கள் என நம்ப முட்டாளில்லை. பென்டிரைவையும் தன்னிடம் வைத்துக் கொள்ள வேண்டும் அதே சமயம் அவர்கள் பிடியில் இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும். ஏதாவது செய்தே செய்தே ஆக வேண்டும். நொடியில் யோசித்தாக வேண்டும் ஏனெனில் அவனுக்கு நேரம் கிடையாது.
அப்பொழுது அனார்க்கலி சுடி சட்டென யாரும் யூகிக்கும் முன் தன் துப்பட்டாவினை முறுக்கி ப்ரேம்லெஸ் கண்ணாடி அணிந்தவனை நோக்கி வீசினாள். துப்பட்டாவின் நுனியில் இருந்த மணி வேலைபாடுகள் சுளீரென ப்ரேம்லெஸ் கண்ணாடி அணிந்தவனை தாக்க முகத்தை திருப்பினான் அவன். அந்த நொடி நேர கேப்பில் பாய்ந்து சென்று அவன் கையிலே இருந்த துப்பாக்கியினை பிடுங்க முயன்றாள். குட்டிப் பையனும் திமிறி அதே நேரத்தில் அவன் கைப்பிடியில் இருந்து தப்பி விட்டான்.
அனார்க்கலி சுடியின் செயலில் கவனம் கலைந்த ஸ்பைக் முடிக்காரன் திரும்பி பார்க்க அந்த நொடிப் பொழுதை தனதாக்கிக் கொண்ட முன்பு லெதர் ஜாக்கெட் அணிந்திருந்தவன் ஸ்பைக் வைத்தவன் கையிலிருந்து துப்பாக்கியை பிடுங்க முயன்றான். அந்த போராட்டத்தில் போனிடெயில் அணிந்தவள் ஸ்பைக் வைத்தவன் கையை கடித்து தன்னை விடுவித்துக் கொள்ள மீதி இருவரும் சண்டையிட்டுக் கொள்கையில் துப்பாக்கி குண்டு வெடித்தது.
யார் துப்பாக்கியை இயக்கினார்கள் எனத் தெரியவில்லை. ஏனெனில் இவருவரது கைகளும் துப்பாக்கியின் ட்ரிக்கரில் இருந்தது.
##############
(இனி நிகழ்பவை துப்பாக்கி சூட்டிற்கு பிறகு)
30 நிமிடங்களுக்கு பிறகு…
ப்ரேம்லெஸ் கண்ணாடி அணிந்தவனையும் ஸ்பைக் வைத்தவனையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அனார்க்கலி சுடி லெதர் ஜாக்கெட் அணிந்தவனிடம் (இப்பொழுது அணிந்துக் கொண்டான்) ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். நண்பர்கள் குலாம் அவனையும் அவளையும் ஓட்டித் தள்ளிக் கொண்டிருந்தனர்.
குட்டிப் பையன் தான் எங்கு செல்வதென்றே தெரியாது அழுது கொண்டே அங்கேயே அமர்ந்திருந்தான். சிரித்துக் கொண்டே அவன் பக்கம் திரும்பிய ஜீன்ஸ் போட்டவள் சுற்றும் நோட்டம் விட்டாள்.
“ஹேய் யாரை தேடுற??” என போனிடெயில்காரி கேட்டாள்.
“அங்க பாரு டி அந்த குட்டி பையன் ரொம்ப நேரமா தனியா உக்காந்துக்கான்… அவன் பேரெண்சை கூட காணம்…” என்றாள் ஜீன்ஸ் போட்டவள்.
“சரி வா போய் பாப்போம்…” என போனிடெயில்காரி சொல்ல இருவரும் சேர்ந்து குட்டிப்பையனது டேபிளுக்கு சென்றனர்.
“ஹேய் கண்ணா ஏன் டா அழற?? அப்பா அம்மா எங்க??” என்றாள் ஜீன்ஸ் போட்டவள் குட்டிப்பையனிடம்.
“தெ… தெ…ரியல… எங்..க.. போனாங்க… தெரியல… ச… ச…ண்ட… வரும்னு தெரிஞ்சி… எ…ன்… என்ன விட்டுட்டு… போ… போய்டாங்க.. போல…” என தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே சொன்னான்.
###########
30 நிமிடங்களுக்கு முன்….
துப்பாக்கியிலிருந்து வெளி வந்த குண்டு யாரையும் தாக்காது கண்ணாடியை துளைத்துக் கொண்டு சென்றிருந்தது. அதன் பின் முன்பு லெதர் ஜாக்கெட் அணிந்திருந்தவன் எப்படியோ தன் பராக்கரமத்தை காட்டி அடக்கியிருந்தான். அனார்கலி சுடி தன் துப்பட்டாவால் ப்ரேம்லெஸ் கண்ணாடி அணிந்தவனை மடக்கியிருந்தாள். சுற்றி இருந்தோரும் அதன் பின் வந்து உதவ போலீசாருக்கு கால் செய்தனர். அவனும் அவளும் உடல் நடுங்க தங்களது நண்பர்களை பார்க்க உள்ளே ஓடி வந்தனர்..
#############
ஒரு மணி நேரம் இருபது நிமிடங்களுக்கு பின்…
லெதர் ஜாக்கெட்காரன் போலீசாரோடு கிளம்ப அனார்க்கலி சுடி அவள் வழியை பார்த்து சென்றிருந்தாள்.
தனித்தனியாக வீடு போய் சேர்ந்த டீசர்ட்காரனும் புடவைகாரியும் குட்டிப்பையன் தங்களுடன் இல்லாதை கண்டு மீண்டும் சண்டை பிடிக்க அப்பொழுது வந்த போன் காலில் அடித்து பிடித்து மெல்பெர்ன் காபி ஷாப்பை நோக்கி சென்றனர்.
அழுது கொண்டே இருந்த குட்டிப் பையனை நண்பர்கள் குலாம் சமாதானப் படுத்தி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது டீசர்ட்காரனும் புடவைகாரியும் வந்து தங்கள் மகனை காணத தவிப்பை கொஞ்சி தீர்த்துக் கொண்டனர். அவர்கள் கொஞ்சி முடிக்கும் வரை அமைதியாய் இருந்த போனிடெயில்காரி அதன் பின் இருவரையும் வெளு வெளுயென வெளுத்து வாங்கினாள். குழந்தை வளர்ப்பு பத்தி ஒரு மூச்சு க்ளாஸ் எடுத்தாள் இருவருக்கும்.
காலில் விழாக் குறையாக இருவரும் போனிடெயில்காரியிடம் மன்னிப்பு கேட்டு குட்டிப் பையனை தங்களோடு அழைத்து சென்றனர். அப்பொழுது கூட ‘இவள் பையனை ஒழுங்காக பார்த்துக் கொள்ளாததால் தானே கண்டவரிடமெல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு…” என டீசர்காரனும் இதையே பால் மாற்றி புடவைகாரியும் யோசித்தனர். இருவருக்கும் நல்ல புத்தியை கொடுக்க வேண்டுமென கடவுளிடம் நாம் வேண்டிக் கொள்ள மட்டும் தான் முடியும்.
அதன் பின் நண்பர்கள் அனைவரும் புறப்பட்டனர். அப்பொழுது ரோலக்ஸ் வாட்ச்காரன் அங்கு உடைந்திருந்த கண்ணாடிகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்த பேரரை நோக்கி சென்றான்.
குனிந்து உடைந்த கண்ணாடிகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்த பேரரின் தோள் மீது கை வைத்தான் ரோலக்ஸ் வாட்ச்காரன். பேரர் அவசர அவசரமாய் எழ
“ரிலாக்ஸ் நண்பா… முன்னாடி தேவையில்லாம வார்த்தையை விட்டுட்டேன்… என்னை மன்னிச்சிருங்க…” என்றுவிட்டு தன் நண்பர்களோடு போய் இணைந்தான். அனைவரும் சிரிப்புடன் அவனை பார்க்க
“இப்ப போய் மன்னிப்பு கேக்கலனா இவளுங்க பெண் உரிமை, பெண் புரட்சினு மறுபடியும் முதல்ல இருந்து மூச்சு பிடிக்க பேசுவாளுங்க இரண்டு பேரும் அதான்டா…” என போனிடெயில்காரியையும் ஜீன்ஸ் போட்டவளையும் கை காட்டி கண் சிமிட்டி புன்னகைத்தபடியே சொன்னான் ரோலக்ஸ் வாட்ச்காரன்.
“டேய்… உன்ன என்ன பண்ணறோம் பாரு டா…” என கத்திக் கொண்டே சிரிப்பும் சிறு முறைப்புமாய் போனிடெயில்காரியும் ஜீன்ஸ் போட்டவளும் ரோலக்ஸ் வாட்ச்காரனை துரத்த பிரெஞ்ச் பியர்டுகாரனும் கடுக்கன் போட்டவனும் அவர்களை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனும் அவளும் கண்களில் காதலுடன் உதடுதளில் புன்னகையுடன் இரு கைகளையும் கோர்த்தவாறு சென்றனர்.
பல தரப்பட்ட மனிதர்களையும் அவர்களது சந்தோசம், துக்கம், கண்ணீர், கோபம் என கலவையான உணர்வுகளை பார்த்து நின்ற மெர்லின் காபி ஷாப் இன்றைய புது அனுபவத்தோடு அமைதியாக நின்றது.