'லூசு, நாலு மணிக்குப் போய் எதுக்கு அலாரம் வச்சிருக்கா?' எனத்தன் மனைவியை மனதில் அர்ச்சித்துக்கொண்டே அவன் படுத்திருக்க, அந்நேரம் அடித்த குளிர் காற்றில், என்னைக் காப்பாற்று விக்ரமா! என்று அவன் மார்பில் பதுங்கினாள் அதிதி.
அசைவில் அவளின் விழிப்பை அறிந்தவன் அவளின் காதில், "ஏன் நாலு மணிக்கு அலாரம் வச்சிருக்க?" எனக் கேட்க,
அடித்துப் பிடித்து எழுந்தவள், "நாலு மணி ஆகிடுச்சா?" என்றாள்.
"எப்பவோ ஆகிடுச்சு. இப்போ மணி அஞ்சு." எனவும்,
"ஐயோ! என்னங்க நீங்க?" என பதறி எழுந்தவள், வேகமாய் குளியலறை சென்று திரும்பவும், தானும் குளியலறைக்குள் புகுந்தான் விக்ரமன்.
பதினைந்து நிமிடங்களில் குளித்து முடித்து கையில்லாத வெள்ளை பனியனும், கறுப்பு நிற ட்ரவுசரும் அணிந்து தலையை துவட்டிக்கொண்டே வெளியில் வந்தான்.
அவன் ஐந்தரை மணி வைகறைக் காற்றில் நடுங்கியபடியே முந்தானை மடிப்பை எடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த தன் மனைவியை அணுகி, "பொறுமையா எடு. ஏன் இப்படி பதட்டப்படுற?" எனும் போதே வார்த்தையை பாதியில் நிறுத்தினான்.
ஆம், அவன் அப்போது தான் கவனித்தான் அவளது முன்புற முரசுகொட்டும் அழகை.
அவன் பார்வையின் பொருள் அறிந்தவள் ரவிக்கையின் தோள்பட்டையை மேலேற்றி விட்டுக்கொண்டே, "இல்லங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அத்த இந்த சேலையைக் கொடுத்தாங்க. அந்த டெய்லர் அக்கா நிறைய ஆர்டர் இருக்குனு ப்ளவுஸ் தைக்க முடியாதுனு சொன்னப்போ, ராதாம்மா தான் கட்டாயப்படுத்தி தைக்க வச்சாங்க. நல்லா டிசைன் வச்சு, பாசிமணி எல்லாம் கோர்த்து தச்சவங்க என் சட்டை அளவுக்கு தைக்காம வேற யாரு சட்டை அளவுக்கோ தச்சு வச்சுட்டாங்க. அதான் முன்னாடி கழுத்து இவ்வளவு இறங்கிப் போச்சு. பின்னாடி இருக்க கயித்த இறுக்கிக் கட்டி விடுங்க. ப்ளீஸ்! அப்போ தான் முன்னாடி இறங்காது" எனத் திரும்பி நின்றாள்.
அவளின் பேச்சில் சுதாரித்தவன், "எப்பப் பார்த்தாலும் உனக்கு மூணு முடிச்சு போடுறதே எனக்கு வேலையாப் போச்சு" என சலித்துக்கொண்டே, அந்த மூன்று முடிச்சுகளைப் போட்டுவிட்டான்.
பின், தன்னை நோக்கி திரும்பியவளிடம், "இன்னைக்கு நீ எங்க இருந்தாலும் என்னோட கண்ணு உன்னை கண்டுபிடிச்சிடும்டி" என்றான்.
அதற்கு வெட்கப்பட்டவளைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தவன், "ஏன்னா உன் புடவை கலர் அப்படி. பஞ்சு மிட்டாய் கலர்ல ஒரு புடவை. கண்ணை அப்படியே தக தகனு பறிச்சு எரிக்குதுல" எனவும், எக்கி அவன் தலையில் குட்டி வைத்தவள் வேகமாக கிளம்பி கீழே சென்றாள்.
கீர்த்தியின் அறையில் கீழே படுத்து கை கால்களை உதறி அழும் ப்ரஜீனைக் கண்டு பதறி அவள், "என்னாச்சு கீர்த்திக்கா? ஏன் ப்ரஜூ இப்படி தரைல படுத்து அழறான்?" எனக் கேட்க,
நிஹாரிகாவுக்கு பட்டுப்பாவாடை அணிவித்துக் கொண்டிருந்தவள், "ஆங்? ஐயாவுக்கு அவரு போடுற பச்சை சட்டைக்கு மேட்ச்சா பச்சை ஜட்டி தான் வேணுமாம் அதிதி. அதைப் போட்டப்புறம் தான் துரை இந்த வேஷ்டியைக் கட்டுவாராம்" என அந்த சிறிய வேஷ்டியை தன் மகனை நோக்கி தூக்கியெறிந்தாள் கீர்த்தி.
அவனைத் தூக்கிய அதிதி, "இப்போ உன் பச்சை ஜட்டியை யாருடா பார்க்கப் போறாங்க? நீ இந்த சின்ன வேஷ்டியத்தானே கட்டப் போற? எந்த ஜட்டிய போட்டா என்ன?" எனக் கேட்கவும்,
அவள் தோளில் முகம் புதைத்திருந்தவன், "ம்? போங்க சித்தி. எனக்கு அந்த பச்சை ஜட்டி தான் வேணும்" என ஒற்றை காலில் பிடிவாதமாய் நின்றான்.