Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
கூத்தும் கொண்டாட்டமுமாய் ஒரு வாரம் கழிந்த நிலையில் காஷ்மீர் புறப்பட்டான் வீரப்பாண்டியன்.


அப்போது திடீரென அவனுக்கு தலை சுற்றுவது போலிருக்க அதனை சாதாரண தலைவலியென நினைத்துக் கொண்டு, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான். தான் அப்போதே மருத்துவமனை சென்றிருந்தால் தன் இறப்பை அவன் தடுத்திருக்கலாமோ என்னவோ?


கிளம்பும் முன் தன் மனையாளிடம், "மும்பைல இருக்க உன் தம்பி ஹரியை அலமேலு கல்யாணத்துல பார்த்தப்போ, இங்க பண்ணைபுரத்துல வந்து தங்கிக்கோனு சொன்னேன். அவனும் சரிங்க மாமானு சொன்னான். அலமேலு போயிட்டால்ல? இனி ராதா உனக்கு கொஞ்சம் ஒத்தாசையாயிருப்பா" என்று சொல்லிவிட்டு இராணுவத்துக்கு செல்லத் தயாரானான்.


நாச்சியம்மையால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.


“மாமா, என்னால முடியல" எனக் கதறவும் அவளை அணைத்துக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றவன்,


"ஏய் ரவுடி! ஏன்டி இப்படி அழுது என்னை பலவீனமாக்குற? நான் என்ன பந்து விளையாடவா அங்கப்போறேன்? உயிர் போறதெல்லாம் அங்க சகஜம். இதெல்லாம் எதிர்பார்த்து தானே போறேன்? ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனாலும்.."


"மாமா.." எனப் பதறி அவனின் வாயை மூடினாள் நாச்சியம்மை.


அவளின் கையை அகற்றியவன், "ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனாலும் அங்க இருக்கற பத்து பேரோட தலையை மண்ணுல சாய்ச்சிட்டு தான் என் உயிர் போகும். எனக்கப்புறம் நீ தான் இந்த வீட்டைப் பார்த்துக்கணும். எந்த ஒரு நிலையிலயும் தவறான முடிவு எடுத்துறாத. என் உயிர் போனாலும் உயிரோட இருக்கும் போது உன்கூட இருக்க முடியலையேனு ஏக்கத்துல உன்னையே தான் சுத்தி சுத்தி வரும்" என தன் இறப்பை முன்பே அறிந்த ஞானி போல் பேசினான்.


"இப்படியெல்லாம் பேசாதீங்க மாமா எனக்கு பயமாயிருக்கு" என அவன் நெஞ்சில் விழுந்து விக்கி விக்கி அழுதாள் நாச்சியம்மை.


"சரி, சரி, என் பம்பரமிட்டாய் இல்ல? சீனிமிட்டாயில்ல?" எனக் கொஞ்சி சமாதானப்படுத்தி இறுதியாக பல நாட்களுக்குத் தாங்கும்படியாக முத்தம் ஒன்றையும் வைத்துவிட்டே புறப்பட்டான்.


அவன் சுவைத்த சீனிமிட்டாயின் சுவை உள்நாக்கு வரை தித்தித்தது.


மறுபுறம் தன்னை முத்துப்பாண்டியன் தேனிலவிற்கு பட்டணம் அழைத்துச் செல்வான் என்ற ஆசையிலிருந்த அலமேலுமங்கைக்கு தற்போது அவன் வயலுக்கு அழைத்து வந்ததும் ஏமாற்றமாக இருந்தது.


"என்ன மாமா கல்யாணம் முடிஞ்சு ஹனிமூனுக்கு ஊட்டி, கொடைக்கானல்னு கூட்டிட்டு போவீங்கன்னு பார்த்தா, உங்க தோட்டத்து வீட்டுல தங்கியிருக்கலாம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க? ஆனா, இந்த இடமும் குடிலைச் சுத்தி தோட்டம்னு நல்லாத்தான் இருக்கு" என்றதும்,


"அம்முலு இங்கயிருக்க தோட்டத்துல பயிர் மகசூலை அதிகரிக்கிற விதமா, குறைஞ்ச செலவுல இராசயனப்பொருட்கள் எதுவும் கலக்காத உரத்தை நான் பயன்படுத்தியிருக்கேன். கூடவே குறைஞ்ச அளவு மட்டுமே தண்ணீரை உறிஞ்சக்கூடிய பயிரையும் கண்டுபிடிக்க, ஆராய்ச்சி அறை கட்டியிருக்கேன். அந்த ஆராய்ச்சியில ஒரு நாள் வெற்றியும் அடைவேன் பாரேன். ஒவ்வொரு நாளும் நம்ம இந்தியாவுல வறட்சியினால எவ்வளவு விவசாயிங்க தற்கொலை செஞ்சு இறந்துப் போறாங்கத் தெரியுமா? என்ன போரடிக்கிறேனா?" என்றதும், மையமாக தலையசைத்தாள் அலமேலு.


அவன் பாவம் பார்க்கவில்லை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
"அதான் இங்க வந்தா விளைநிலத்தோட நம்ம பருவத்தையும் பயிர் செய்யலாம்னு உன்னை என்னோட கூட்டிட்டு வந்துட்டேன்" எனத் தான் எப்போதும் இயற்கைக்கு நண்பன் என்பதை நிரூபித்தான்.


அவர்களின் மனப்பூர்வமான தாம்பத்யத்தில் திருமணம் முடிந்த மூன்றாம் மாதம் அலமேலுமங்கை கர்ப்பமாக அவளை நடக்க சம்மதிக்கவில்லை நாச்சியம்மை.


அனைவரும் சந்தோசமாகயிருந்தது அந்த விதிக்கு பொறுக்கவில்லையோ என்னவோ, இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டையே நடுநடுங்க வைக்கும் செய்தி ஒன்று வந்தடைந்தது.


எதிரி நாட்டுடன் நடந்த போரில் நாட்டுக்காக சண்டையிட்டு, தன் இன்னுயிரை நீத்துவிட்டார் வீரப்பாண்டியன் என்பது தான் அந்த அதிர்ச்சி செய்தி.


அவன் உடல் வரும் போதே அவனின் உடலை பற்றின பரிசோதனை விபரங்களும் வர, அதில் சம்பந்தப்பட்ட ஒரு உருவம் மட்டும் நைசாக அந்த விபரங்களை அனைவரின் கண்களிலும் இருந்து மறைத்து வைத்தது.


தற்போது அந்த பிரேத பரிசோதனை விபரம் தான் விக்ரமனுக்கு அவனின் துப்பறிவாளரின் மூலம் கிடைத்தது.


வீரப்பாண்டியனின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதும் தன் தமக்கைக்காக தன் இருப்பிடத்தை செங்குளத்திலிருந்து பண்ணைபுரத்திற்கு மாற்றிக்கொண்டாள் அலமேலுமங்கை.


முதலில் இனி தனக்கு வாழ்க்கையே இல்லையென பித்துப்பிடித்தாற் போல் திரிந்த நாச்சியம்மை பின், தன் கணவனின் வார்த்தையைக் காப்பாற்ற அனைத்துப் பொறுப்புகளையும் கையிலெடுத்துக் கொண்டாள்.


அவளுக்கு உதவியாக அவள் மகன்களை தன் மகன்கள் போலவே உடனிருந்து பார்த்துக் கொண்டாள் அலமேலுமங்கை.


நாச்சியம்மைக்கு வீட்டிலிருந்த ஒரே சந்தோஷம் தன் பிள்ளைகளும், அடிக்கடி குறும்பு செய்து தன்னை சிரிக்க வைக்கும் தன் தங்கை அலமேலுவும் தான்.


தன் கவலைகளை மறக்கும் விதமாக தன்னை சமூக சேவையிலும் ஈடுபடுத்திக் கொண்டாள் நாச்சியம்மை. முத்துப்பாண்டியனும் தன் அண்ணிக்கு உறுதுணையாக நின்றான்.


ஒன்பதாம் மாத இறுதியில் அனைவரையும் துன்பக் கடலிலிருந்து மீட்கவென தங்க விக்ரகமாக பிறந்தான் விக்ரமப்பாண்டியன்.


நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்க சரியாக ஏழு வருடங்கள் கழித்து மறுபடியும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது விதி.


பண்ணைபுரத்தின் தெற்குப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தப் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க வேண்டும் என அரசை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினார் நாச்சியம்மை.


இறுதியில் அவரின் விடாமுயற்சியால் மக்களுக்கு தண்ணீரும் கிடைக்க, மக்களிடையே அவர் பெயரின் மதிப்பும் உயர்ந்தது.


மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு தீர்க்குமாறும் பலமுறை அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினார் நாச்சியம்மை. அதில் அனைவரும் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.


ஒருமுறை எப்போதும் போல் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவரிடம் தன் அன்னையைப் பற்றி புகார் கடிதம் வாசித்தான் விக்ரமப்பாண்டியன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
"நாச்சூம்மா அம்முலு இன்னைக்கு எனக்குத் தராம சிக்கன் சாப்ட்டுட்டாங்க." என்று போட்டுக் கொடுத்தான்.


'பயபுள்ள என்னை எப்படி போட்டுக் கொடுக்கிறான் பாரு?' என தனக்குள்ளேயே புலம்பிய அலமேலு வெளியே தைரியமாக,


"ஐயோ! நாச்சூக்கா இன்னைக்கு சனிக்கிழமை. பெருமாளுக்கு விரதம். நான் எதுவுமே சாப்பிடல. இவன் பொய் சொல்றான்" என அவனை அடிக்கப் பாய்ந்தாள்.


அவரோ, "அலமு, உனக்கு எத்தனை தடவை சொல்றது? உன்னைப் பார்த்து தான் சின்னப்பசங்களும் கெட்டுப்போறாங்கனு" என திட்டவும்,



பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு, “சாரிக்கா” என்றாள்.


அதற்கு மேலும் கோபமாக இருப்பது போல் நடிக்க முடியாமல் சிரித்துவிட்டார் நாச்சியம்மை.


"என்னவோ செய். ஆனா, என் பிள்ளையை அடிக்கிற வேலையை மட்டும் வச்சிக்கிறாத" என்று விக்ரமனை அவள் கையிலிருந்து காப்பாற்றி தன்னறைக்கு அழைத்துச் சென்றார்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
எனது நாவலை புத்தகமாகப் பெற விரும்புவோருக்கு,

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 18



ஊர் மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தான் செய்யும் சமூக சேவையை பெரிய பதவியிலிருந்தால் இன்னும் சிறப்புற செய்யலாம் என நினைத்து, சங்கரப்பாண்டியனை எதிர்த்து பண்ணைபுரத்துத் தொகுதியில் போட்டியிட தயாரானார் நாச்சியம்மை.


ஆனால், தான் எடுத்த அம்முடிவினால் தன் தங்கையையும் கொழுந்தனையும் தான் பறிகொடுக்கப் போவதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.


சட்டமன்றத் தேர்தலில் பெண்சிங்கத்தின் தோரணையுடன் சுயேட்சை வேட்பாளராக சங்கரப்பாண்டியனை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தார் நாச்சியம்மை.


அதனைத் தொடர்ந்த நாட்களில், தன் மனைவி மற்றும் மகனுடன் தன் சொந்த ஊரான செங்குளத்திற்கு வந்திருந்தான் முத்துப்பாண்டியன்.


தன் சொந்தபந்தங்களுடன் குலாவிவிட்டு பின், தன் மனைவி மகனுடன் தோட்டத்து வீட்டிற்குச் சென்றான்.


தன் பயிர்களை ஆய்வு செய்யும் பகுதியை அடைந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.


அவன் பல வருடங்களாக மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்பாராத விதமாய் அன்று பலன் கிடைத்திருந்தது.


ஆம், குறைந்த அளவு நீரினை மட்டுமே உறிஞ்சி அதிக அளவு மகசூல் தரும் பயிரை கண்டறிய, பல முறைகளில் நெல்மணிகளை பயிரிட்டிருந்தான். அதில் ஒரு குறிப்பிட்ட முறையில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் மட்டும் அசுர வளர்ச்சியை அடைந்திருந்தது. அதனைக் கண்டு தான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய் நின்றான்.


இனி தண்ணீர் பற்றாக்குறையால் எந்தப் பயிரும் பாழாகாது, எந்த கயிறும் இனி விவசாயிகளின் கழுத்தை நெரிக்காது என்று நினைத்தவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.


நேராக தன் குடிலுக்குச் சென்றவன் தன் ஆராய்ச்சிக் குறிப்பை ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்து பத்திரப் படுத்திவைத்தான்.


பின், குடிலை விட்டு வெளியே வந்து தன் மனைவியையும் மகனையும் தேடினான். அவர்கள் தூரத்திலிருந்த ஆலமரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள்.


"அம்முலு!" என்று கத்திக்கொண்டே அவர்களை நெருங்கியவன் தன் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள, அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.


முத்துப்பாண்டியனும் வார்த்தைகளால் புரிய வைக்க முயலவில்லை. தன் உணர்ச்சியை அவர்களுக்கு கடத்தவேண்டி தானே அவர்களின் ஊஞ்சலை தள்ளிவிட்டு ஆனந்தமடைந்தான்.


சிறிது நேரத்திலேயே அந்த ஊஞ்சல் ஆட்டம் சலித்து விட, பனைவோலை காத்தாடியை ஒரு கையிலும், நுங்கு வண்டியை மறுகையிலும் பிடித்துக்கொண்டு காற்றிருக்கும் திசையை பார்த்து ஓட ஆரம்பித்தான் விக்ரமன்.


அவன் ஓடியதும் ஆலமரத்தடியில் புடவையின் தலைப்பை காற்றில் அலையென மிதக்கவிட்டிருந்த தன் மனைவியை ஆசையுடன் நெருங்கினான் முத்துப்பாண்டியன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
அவளை உரசிக்கொண்டு அருகில் அமர்ந்தவன் தொலைவில் விளையாடும் தன் மகன் மேல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே, "அம்முலு யூ ஆர் மை லைஃப். ஐ காண்ட் இமாஜின் மை லைஃப் வித்தவுட் யூ" என சொல்ல திருதிருத்தாள் அலமேலு.


கூடவே, "என்ன வேணும் மாமா?" என்ற கேள்வியுடனே எழுந்து நின்றாள்.


அவளின் கையைப் பிடித்திழுத்து மடியில் விழச்செய்தவன், "ம்? நீதான் வேணும்" என அவளின் பூவிதழை விரலால் வருட, சரியாக அப்பாவென்று கத்திக்கொண்டு ஓடி வந்தான் விக்ரமன்.


இருவரும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் விலகியமர்ந்து, "என்னடா?" என ஏகக்காலத்தில் குரல் கொடுத்தனர்.


"அப்பா இந்த வண்டியை மாட்டிக் கொடுங்க" என்று சக்கரம் கழன்ற நுங்கு வண்டியை அவனிடம் நீட்டினான் விக்ரமன். சக்கரம் தயாரானதும் மறுபடியும் தன் மண்புழு வேட்டைக்குச் சென்றுவிட்டான்.


விளையாடும் அவனையே பார்த்திருந்த அலமேலுவிடம், "பின்னாடி நம்ம விக்கி பெரிய ஆளா வருவான் இல்ல அம்முலு?" என்றவன் கேட்கவும்,


"பின்னாடி என்ன மாமா, இப்போவே அவன் பெரிய மனுஷ வேலையெல்லாம் பார்க்கறானே" என அங்களாய்த்துக் கொண்டாள் அலமேலு.


"அப்படி என்ன பண்ணினான் என் புள்ள?" என்றவன் சுவாரசியமாய் கேட்க,


"ஆமா, பெரிய புள்ள. சரியான தொல்ல மாமா இவன். உங்கப் புள்ளைய நீங்க தான் மெச்சிக்கனும். இவன் டீச்சரம்மா இவனைப் பத்தி என்ன சொல்றாங்க தெரியுமா? உங்கப் பையனுக்கு வயசுக்கு மீறின ஃபீலிங்ஸ் எல்லாம் வருது. நீங்க உடனே டீசியை வாங்கிக்கோங்கனு சொல்றாங்க" என்றதும் விளக்கெண்ணெய் குடித்தது அவன் முகம்.


"அப்படி அவன் என்ன பண்ணினானு கேட்டியா?" என்றான் ஆர்வம் தாங்காமல்.


"கேட்டேனே. அந்த கருமத்தை என் காதால கேட்டேனே. அவன் கிளாஸ்ல இருக்கற குட்டி குட்டி பொம்பளப் பசங்களையெல்லாம் கிளாஸுக்கு வெளில தூக்கிட்டுப் போய் விடுறானாம் மாமா. அந்தப் புள்ளைங்களும் விக்கி விக்கினு இவன் பின்னாடி தான் சுத்துதுங்களாம். வருங்காலத்துல இப்படி யாரை கடத்தி கொண்டுவரப்போறானோ தெரியல." என கண்ணை உருட்டி உருட்டிக் கூறினாள் அலமேலு.


"இதுல என்னடி இருக்கு? சின்ன புள்ளைங்களுக்கு உதவியிருக்கான் என் பையன். என்னை மாதிரியே சேவை செய்றதுல இறங்கியிருக்கான். இதுல என்ன தப்பிருக்கு?" எனத் தன் அணில் வால் மீசையை நீவிவிட்டுக்கொண்டே பெருமை பேசினான் முத்துப்பாண்டியன்.


"ஹுக்கும், சரி அதை விடுங்க. இதைக் கேளுங்க. அவனோட கிளாஸ் மிஸ்ஸோட பொண்ணைப் பார்த்து தினமும் கண்ணடிக்கிறானாம் மாமா. அதான் அந்த டீச்சர் காண்டாகி தினமும் வார்ன் பண்ணி அனுப்புறாங்க" எனத்தன் மகனின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி முத்துப்பாண்டியனை விழி பிதுங்கச் செய்தாள் அலமேலு.


பின், அவனைப் பார்க்க பாவமாக இருந்ததோ என்னவோ, "விடுங்க மாமா. இதுல விக்கியாவது தன் டீச்சரோட பொண்ணைப் பார்த்து தான் கண்ணடிச்சான். ஆனா, இந்த கௌதமன் பயபுள்ள அந்த டீச்சரையேப் பார்த்து கண்ணடிச்சிருக்கான்." என்றதும், குபீரென சிரித்துவிட்டான் முத்துப்பாண்டியன்.


அவனைப் பார்த்து முறைத்தவள், "இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா மாமா?" எனக் கேட்க, முத்துப்பாண்டியன் ஆர்வமானான்.


"யாருன்னு சொல்லு அம்முலு. உடனே வேலையை விட்டு தூக்கிடலாம்" என்றான்.


"ஹான்! அப்படினா உங்களை தான் மாமா தூக்கனும். எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? பசங்க முன்னாடி என்னைப் பார்த்து கண்ணடிக்காதீங்க, தூக்காதீங்கனு? அதைப் பார்த்து தான் இந்தப் பயலுக இப்படியெல்லாம் பண்றானுக" என முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டவளை ஆசையாகக் கண்டவன்,


"ஏன் அம்முலு இப்படி டென்ஷன் ஆகற? பாரு உன் முகமெல்லாம் எப்படி செவந்து போயிடுச்சின்னு. அப்புறம் மாமாவுக்கு மூடாகுமா இல்லையா?" என்று கூறிக்கொண்டே நெருக்கியவனை தோளில் அடித்தவள்,


"மாமா நான் என்ன சொல்லிட்டிருக்கேன்? நீங்க என்ன பேசிட்டிருக்கீங்க?" என விலகி அமர்ந்தாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
"ஏய்! நானே அங்க இங்கனு அலைஞ்சிட்டு இப்போ தான் நிம்மதியா இருக்கலாம்னு இங்க வந்திருக்கேன். இங்கயும் ஏன் இப்படி பஞ்சாயத்தைக் கூட்டுற? சின்னப் பசங்க தானே கூப்பிட்டு சொன்னா கேட்டுக்குவாங்க. நான் அவனுகளை கண்டிச்சு வைக்கிறேன். போதுமா?" என்றபடியே அவளின் மடியில் படுத்தான்.


நெடுநாட்களுக்குப் பிறகு தன்னருகாமையைத் தேடும் தன் தலைவனின் தலையை கோதியவள், "ஏன் மாமா உங்களுக்கும் அக்காவுக்கும் இந்த வேண்டாத வேலை? நம்ம தொழிலை பார்க்கவே நேரமில்லாம அலைஞ்சிட்டு இருக்கோம். இதுல தொழில்ல நஷ்டம்னு வர்றவங்களுக்கு வேற கடன் அது இதுனு கொடுத்து வட்டி பிசினஸ் பண்றீங்க. கேட்டா நான் நியாய வழியில போறவனு வியாக்யானம் பேசுறீங்க. இப்படி பல பிசினஸை இழுத்துக்கிட்டு இப்போ அரசியலும் தேவை தானா?" என்று வெகு நாட்களாக தன் கணவனின் அருகாமையை தேடியவளாய் ஆதங்கத்தில் கேட்டாள் அலமேலு.


"அம்முலு உனக்கு சண்டை போட ஆளில்லையா?" என்று கிறக்கமாகக் கேட்டான் அவன்.


சம்பந்தமில்லாமல் பேசியவனை வில்லிப் பார்வை பார்த்தாள் அவள்.


"இல்ல? வீட்டுல உனக்கு சண்டைபோட ஒரு குட்டிப் பாப்பா இல்லைல்ல? அதான் இப்படியெல்லாம் எதை எதையோ மனசுல போட்டு குழப்பிக்கற. உனக்கு சண்டை போட ஒரு ஆள் ஏற்பாடு பண்ணிடலாமா?" என்று அலமேலு என்ன ஏதென்று யோசிக்கும் முன் அவளை அலேக்காக கைகளில் அள்ளிக்கொண்டு குடிலுக்குச் சென்றான்.


அவளின் வலிமிகு வலிமிகா இடங்களை அறிந்தவனுக்கு வேலையொன்றும் கடினமாக இருக்கவில்லை.


அவளின் தேக வீணையை வாசித்து முடித்த முத்துப்பாண்டியன் அங்கேயே வசிக்க இடமும் தேட, தன் மாமாவின் ஒவ்வொரு தேடலுக்கும் இசைந்து கொடுத்தவள் அவனின் ஆராய்ச்சியை முடித்து வைக்கும் பொருட்டு, தன் நெஞ்சிலேயே வசிக்க இடம் தந்தாள்.


சிறிது நேரத்திலேயே குடிலைவிட்டு வெளியில் வந்தவள் தன் மகனைத் தேட, பம்புசெட் தண்ணீர் தொட்டிக்குள் கால்களை தொங்கப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தான் விக்ரமன். அவனுடன் சேர்ந்து தானும் குழந்தையாய் குதூகலித்தாள் அலமேலு.


தன் அக்காவின் முன் சனிக்கிழமை அசைவம் சாப்பிட முடியாதென அங்குத் தங்கியிருந்த நாளில் அசைவமே முதன்மை உணவாய் கொண்டு விரும்பிச் சாப்பிட்டாள்.


இரண்டு நாட்களுக்குப் பின், பண்ணைபுரம் திரும்பிய முத்துப்பாண்டியன் உடனே தன் ஆராய்ச்சிக் குறிப்புடன் சென்னை நோக்கிப் புறப்பட்டான்.


தனது பேராசிரியரிடம் தன் ஆராய்ச்சிக் கட்டுரையை காண்பித்து வாழ்த்தும் பெற்றான்.


ஆனால், இந்திய அரசிடமிருந்து அவனின் ஆராய்ச்சிக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை.


அதனை எப்படியோ மோப்பம் பிடித்த வேற்றுநாடுகள் முத்துப்பாண்டியனிடம் கெஞ்சியும் மிரட்டியும் காரியம் சாதிக்கப் பார்த்தனர். ஆனால், இறுதியில் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
தோற்றும் தங்கள் முயற்சியிலிருந்து பின் வாங்காத சில சமூகவிரோதிகள், முத்துப்பாண்டியனிடமுள்ள குறிப்பைக் கைப்பற்ற, அவனை கொலை செய்யவும் திட்டமிட்டனர்.


எங்கள் வேலையை நீ எந்த சிரமமுமின்றி முடித்துக் கொடுத்தால் பல கோடிகளை உன் வங்கிக்கணக்கில் ஊதியமாகப் பெறலாம் என ஒருவனுக்கு ஆசையும் காட்டினர். பின்விளைவுகளை யோசித்துப் பாராத அந்தப் பணப்பேயும் அவர்களின் திட்டத்திற்கு ஒப்புதல் தந்தது.



*


நாச்சியம்மை தேர்தலில் தன்னை எதிர்த்து நிற்பதையறிந்த சங்கரப்பாண்டியனுக்கு, அது எப்படி போயும் போயும் ஒரு பெண் என்னை எதிர்த்து போட்டியிடலாம்? என்ற, தான் ஆண் என்ற கர்வம் தலைதூக்க ஆரம்பித்தது.


அதற்கு தூபம் போடும் விதமாய் பிரபுவின் பேச்சுக்களும் அமைந்தன.


நாச்சியம்மையும் சங்கரப்பாண்டியனும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தபின், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இரு தரப்புக்கும் தங்களுக்குரிய சின்னத்தை தேர்ந்தெடுக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தது தேர்தல் ஆணையம்.


தங்கள் அணியின் தேர்தல் சின்னத்தை தேர்ந்தெடுக்க செல்லவிருந்த காலையில், "அம்முலு, இதை பத்திரமா பார்த்துக்கோ. இதுல தான் அந்த பயிரைப் பத்தின முக்கியமான குறிப்புகள் எல்லாம் இருக்கு" என்று கொடுத்துவிட்டு வெளியே கிளம்ப தயாரானான் முத்துப்பாண்டியன்.


அவனிடம் தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டாள் அலமேலு.


"இதை எதுக்கு மாமா நாம இவ்வளவு பத்திரப்படுத்தி வைக்கணும்? மத்த நாடுகளுக்குத்தான் கொடுத்தா என்ன?" என்றாள்.


அதற்கு காட்டமாக பதிலளித்தான் முத்துப்பாண்டியன்.


"ஆமா, இப்படி சொல்லி சொல்லி தான் நம்ம நாட்டுலயிருக்க ஒவ்வொரு மருத்துவ குணம் வாய்ந்த தாவரத்தையும், குறைந்த லாபத்துக்கு அடுத்த நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணிக்கிட்டு ஒண்ணுமில்லாம அடிமைகளா உட்கார்ந்திருக்கோம். வெறும் மூன்றாம் தர பொருட்கள்‌ மட்டும் தான் நமக்கு கிடைக்குது. ஏற்கனவே நம்ம நாட்டுக்குள்ள வணிகம் செய்றோம்னு வந்தவனுக நம்ம நாட்டுலயிருந்து எடுத்துட்டுப்போன மஞ்சளைக் கூட அவனுக நாடு தான் கண்டுபிடிச்சானுகனு உரிமம் வாங்கிட்டானுக. இந்த லட்சணத்துல இந்தப் பயிரையும் கொடுத்தா அதுலயும் லாபம் சம்பாதிக்கத் தான் பார்ப்பானுக. அது எனக்குப் பிடிக்கல. நம்ம நாட்டுக்கு மட்டுமே என் கண்டுபிடிப்பு பயன்படணும்னு நெனக்கிறேன்." என்று அவளுக்கு புரியும்படி விளக்கினான்.


பின், அந்தக் குறிப்பை நிலைப்பேழைக்குள் வைத்து பூட்டிவிட்டு, ஆயிரம் முறை பத்திரம் சொல்லி வெளியே நாச்சியம்மையை காண சென்றான்.


முத்துப்பாண்டியன் நாச்சியம்மையுடன் தேர்தல் வேலையாக வெளியே சென்றவுடன், கட்டிலின் அடியில் கிடந்த தன் மகனின் சட்டையை எடுக்க உள்ளே புகுந்தாள் அலமேலு.


அவள் அதனை எடுத்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து அவள் அறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.


அமைதியாக அடியிலிருந்து உள்ளே வருவது யார் என்று கவனிக்கத் துவங்கினாள் அலமேலு.


அவளின் இருப்பை அறியாமல் உள்ளே வந்த உருவமானது நேராக நிலைப்பேழையை நோக்கிச் சென்றது.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
பின், அதனுள் இருந்த ஆராய்ச்சிக் குறிப்பை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்ட நேரம், கட்டிலின் அடியிலிருந்து வெளிப்பட்டாள் அலமேலு.


அவ்வுருவம் அவளைக் கண்டு அரண்டு பின்வாங்க, அதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள் அலமேலு.


பின், தன்னால் இயன்ற அளவு பல புத்திமதிகளை சொல்லி அவ்வுருவத்தை அனுப்பி வைத்தாள்.


அலமேலு செய்த பெரிய தவறு அவ்வுருவம் யாரென்று தன் கணவனிடம் சொல்லாமல் விட்டது தான்.


இரு வேட்பாளர்களும் தங்கள் சின்னத்தை தேர்ந்தெடுத்து வெளியே வர, தன் வாய் என்னும் அற்புத விளக்கைக் கொண்டு பூதத்தை கிளப்பி விடத் தயாரானான் பிரபு.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க ரசமலாய்ஸ்🙂
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom