Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 19



ஏற்கனவே கட்சியில் உள்ள பெரிய தலைகள் எல்லாம், இந்தத் தேர்தலில் சங்கரப்பாண்டியன் தோற்றால் அதைவிட கேவலம் எதுவுமில்லை எனவும், அதிலும் ஒரு பெண்ணிடம் தோற்றால் ஆணென்ற அடையாளத்திற்குரிய மீசையையே எடுத்துவிட வேண்டியது தான் எனவும் ஏற்றி விட்டிருந்ததால், தன் முன் நின்ற நாச்சியம்மையையும் முத்துப்பாண்டியனையும் விரோதிகளை போல் முறைத்துக் கொண்டிருந்தார் சங்கரப்பாண்டியன்.


பிரபு தன் பற்ற வைக்கும் வேலையை துவங்கினான்.


"என்ன நாச்சியம்மை தேர்தல்ல நிக்கிறாப் போலயிருக்கு? புருஷன் செத்துட்டான்னா, புள்ளக்குட்டிகளோட ஆஃப் பண்ணின மிஷின் மாதிரி வீட்டுல கிடக்கறது தான் பொறுப்பான ஒரு பொம்பளைக்கு அழகு. அதை விட்டுட்டு உனக்கு எதுக்குமா இந்த வேண்டாத வேலை எல்லாம்?" என்றான் நக்கலாக.


"ஹேய்! யார்கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சு பேசு. இல்ல பேசவே முடியாத மாதிரி பண்ணிடுவேன்" என முத்துப்பாண்டியன் பிரபுவை மிரட்டவும், வரம்பு மீறிப்பேசினான் அவன்.


"மரியாதையா? அவளுக்கென்ன, உனக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன்டா. எல்லாம் பொம்பளப் பின்னாடி போய் கூட்டமா நிக்கிறீங்களேடா. நீங்களும் சேலை கட்டிக்கிட்டு வர வேண்டியது தானே? என்ன கட்டிக்க சேலையில்லையா? நான் வேணும்னா வாங்கித் தரவா?" என்றதும், கோபமடைந்த முத்துப்பாண்டியன் பட்டென்று பதிலடி கொடுத்தான்.


"நாங்க எதுக்குடா சேலை கட்டிட்டு வரணும்? இந்தப் பெரிய மனுசனோட குடும்பத்துக்கே நல்லா ஜிங்ஜாங் போட்டுட்டு திரியுறியே, நீ தான் உன் கையில ஜால்ராவை தூக்கிக்கிட்டு வரணும்" என்றதும், தன் ஆட்களிடம் கண்ணைக் காட்டிய பிரபு முத்துப்பாண்டியனை அடிக்குமாறு அவர்களை ஏவிவிட்டான்.


அவர்களும் வேல் கம்புடன் அவனை அடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனியாளாக நின்று அடித்து நொறுக்கினான் முத்துப்பாண்டியன்.


இரு தரப்பினருக்கிடையேயும் கலகம் வெடிக்க, அந்த இடமே போர்க்களமானது.


இன்னும் அதிக அடியாட்கள் வருவதைப் பார்த்து பயந்து போன நாச்சியம்மை சங்கரப்பாண்டியனிடம் கெஞ்சி நின்றார்.


"ஐயா, உங்க ஆளுகளை சண்டப்போட வேணாம்னு சொல்லுங்க. மொதல்ல தப்பா பேசினது அவங்க தான். எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லுங்கய்யா" என்றார்.


"என் குலம் என்ன? அந்தஸ்து என்ன? நேத்து முளைச்ச காளான் நீ. என்னையே எதிர்த்து நிற்கறியா? உனக்கு எவ்வளவு தைரியம்? என்னது? என் ஆளுங்க தான் தப்பாப் பேசினாங்களா? சரியாத்தானே பேசினாங்க? பிரபு சரியாத் தானே கேட்டிருக்கான்? வீட்ல இருக்க வேண்டிய மெஷின் நீ. எதுக்காக அரசியலுக்கு வந்த? ஒருவேளை சம்பாதிக்கற காசுப் பத்தலையோ?" என்று குத்தலாய் கேட்டார்.


இதில் பிரபுவும் அவருடன் கூட்டு சேர்ந்துக் கொண்டான்.


"சரியா சொன்னீங்க மாமா. பணம் சம்பாரிக்கத் தான் இவங்க அரசியலுக்கு வந்திருக்காங்க. அது தெரியாம இந்த சேரி பயலுகளும் இவங்களை தலையில தூக்கி வச்சி கொண்டாடுறானுக. எளிமையா பணம் சம்பாரிக்க நான் ஒரு வழி சொல்லவா நாச்சியம்மா? உன் புருஷன் வேற மண்டைய போட்டுட்டான்ல?" என நாச்சியம்மையை மேலிருந்து கீழ்வரை பார்வையால் அளந்தான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
தன்னை அனல் மேல் நிற்க வைத்தது போல் துடிதுடித்துப் போனார் நாச்சியம்மை.


அந்நேரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிரவுவை 'பளார்' என காது ஜவ்வு கிழிய அறைந்திருந்தான் முத்துப்பாண்டியன்.


உடன் பிரவுவின் கைகளை பின்னால் மடக்கிப் பிடித்துக்கொண்டு "அறைங்க அண்ணி" என்றும் ஊக்கினான்.


நாச்சியம்மை யோசிக்கவெல்லாம் இல்லை. பளார் பளார் என்று இரண்டு அப்புவிட்டார்.


கையுடனே சங்கரப்பாண்டியனையும் பார்த்து, "இதுவரை உங்களை நல்ல மனுஷனு தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா நீங்க பெண்ணை இழிவா நினைக்கற, தரம் தாழ்ந்த மிருகக் கூட்டத்தைச் சேர்ந்தவர்னு இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன். இதுக்காகவாவது நான் இந்த தொகுதியில நின்னு ஜெயிச்சிக் காட்டுறேன்" என்று அவரிடம் சவால் விட்டார்.


"யாருக்கிட்டடி சவால் விடுற?" என சங்கரப்பாண்டியன் நாச்சியம்மையை அடிக்க கை ஓங்க, முத்துப்பாண்டியன் இடையில் புகுந்து அவரின் ஓங்கிய கையை தடுத்துப் பிடித்து கீழே தள்ளிவிட்டான்.


வயோதிகத்தால் சமநிலை தவறி தொப்பென்று கீழேப்போய் விழுந்தார் சங்கரப்பாண்டியன்.


இவ்வளவு நேரம் தன் தந்தைக்காக வெளியே நின்று காத்திருந்த உதயச்சந்திரன், கூச்சல் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த சமயம் பார்த்தது முத்துப்பாண்டியன் தள்ளிவிட்டு கீழே விழுந்த சங்கரப்பாண்டியனை தான்.


தந்தையை ஒருவன் அடிக்க தனயன் பார்த்துக் கொண்டிருப்பானா என்ன?


கோபத்தில் புயலாய் புறப்பட்டவன் முத்துப்பாண்டியனின் சட்டைக் காலரை கொத்தாகப் பற்றி கீழேத் தள்ளி உருள ஆரம்பித்தான்.


நாச்சியம்மை மிரண்டு போய் இதனைப் பார்த்திருக்க, தேர்தல் ஆணைய அலுவலர்களின் தகவலால் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.


இரு தரப்பினரையும் பிரித்து வைத்த காவல் துறையினர், இனி எந்த தகராறும் செய்யக்கூடாது எனப்பேசி, கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்தனர்.


வெளியே வந்த முத்துப்பாண்டியனை அனைவரின் முன்பும், உதயச்சந்திரன் ஒற்றை விரல் காட்டி எச்சரித்தான்.


"என் அப்பாவையே அடிச்சிட்டல்லடா? உன் குடும்பத்தையே உரு தெரியாம அழிக்கிறேனா இல்லையானு பாரு. உன் சாவு என் கையால தான்டா" என தொடை தட்டினான்.


பயந்து நடுங்கி நின்றிருந்த நாச்சியம்மையிடம் முத்துப்பாண்டியன், "விடுங்க அண்ணி, மக்களுக்கு நல்லது செய்யணும்னு வந்தாலே இப்படித்தான் நாலு பேர் இடைஞ்சல் பண்ணுவானுங்க. இவனுக மிரட்டலுக்கெல்லாம் பயந்தா வாழ முடியாது" என தெம்பூட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.


அன்றைய நாள் சாயுங்காலம் தன் சக்கர நாற்காலியில் படுத்திருந்த சங்கரப்பாண்டியன், தன்னை முத்துப்பாண்டியன் அறைந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.


அப்பொழுது அவரின் அறைக்குள் நுழைந்த பிரபுவும் உதயச்சந்திரனும் அவரையேப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
உதயச்சந்திரன் "அப்பா" என்று அவரின் கை தொடவும் நினைவுக்கு வந்தவர்,


"அவனை ஏதாவது செய்யணும்டா. அப்போ தான் என் மனசு ஆறும். அவ்வளவு பேர் முன்னாடியும் என்னை அசிங்கப் படுத்திட்டான்டா. அவனை ஏதாவது செய்யணும். பிரபு, உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ கேளு தர்றேன். ஆனா, இந்தத் தேர்தல்ல நான் தான் ஜெயிக்கணும். அதுவும் அமோக வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிச்ச வெற்றியா இருக்கணும். இனி எல்லாப் பொறுப்பையும் உன்கிட்ட ஒப்படைக்கறேன். அவனை ஏதாவது செய்" என மறுபடியும் சொன்னதையே சொல்லிக்கொண்டு கண்மூடி சாய்ந்தார்.


கண்ணுக்குள் முத்துப்பாண்டியன் அவரை தள்ளிவிட்ட காட்சியே ஓடிக் கொண்டிருந்தது.


வீட்டைவிட்டு வெளியேறிய பிரபு இது தான் சமயம் என்று உதயச்சந்திரனை மதுபானவிடுதிக்கு அழைத்துச் சென்றான். அவனை மூக்குமுட்டும் அளவுக்கு குடிக்க வைத்தான்.


போதையில் இருந்தவனிடம், "மச்சான், மாமா சொன்ன மாதிரி அவளையும் அவனையும் ஏதாவது பண்ணனும் மச்சான்" எனக்கூற, உதயச்சந்திரன் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் தூரத்தில் வெறித்துக் கொண்டிருந்தான்.


தன் அடுத்த வார்த்தைத் தூண்டிலை வீசினான் பிரபு.


"நம்ம வேலு சொல்றான் மச்சான். இதேயிது எங்கப்பனை எவனாவது என் கண்ணு முன்னாடி இப்படி அடிச்சிருந்தா, இந்நேரம் அவன் அடிச்ச கையவே வெட்டியிருப்பேனு. ஒரு அப்பனுக்கு பொறந்த எவனாயிருந்தாலும் அப்படி தான் செய்வானு சொல்றான் மச்சான். அப்போ நீங்க.." என இழுக்கவும்,


மேசையிலிருந்த பாட்டில்களையெல்லாம் கீழே தள்ளிவிட்டு எழுந்த உதயச்சந்திரன், பிரவுவின் சட்டைக் காலரைப் பற்றி, "என்னடா சொன்ன?" எனக் கண்கள் சிவப்பாகி உறுமினான்.


"அய்யோ மச்சான்! நான் எதுவும் சொல்லல. வேலு சொன்னதை தான் சொன்னேன்" என உயிர் பயத்தில் உளறினான் பிரபு.


அவன் காலரை விட்டு நாற்காலியில் அமர்ந்தவன் தான் தெளிவாய் இருப்பது போல் கேள்விகேட்டான். "சரி, இப்போ நான் என்ன செய்யனும்?" என்று.


தான் எதிர்பார்த்த வார்த்தை அவனின் வாயிலிருந்து வந்த மகிழ்ச்சியில், "ஒண்ணுமில்ல மச்சான். உங்க அப்பாவை அறைஞ்ச அவன் கையை மட்டும் வெட்டணும்" என நைச்சியமாக கூறினான் பிரபு.


தள்ளாடியபடியே வேகமாக எழுந்தவனை, "அய்யோ! இப்போ இல்ல மச்சான். நாளைக்கு" என கைத்தாங்கலாக அவர்களின் அரிசி குடவுனுக்கு அழைத்துச் சென்றான்.


அரிசிக்குடவுனில் ஏற்கனவே சங்கரப்பாண்டியனின் விசுவாசிகள் நால்வர் கூடியிருக்க, போதையிலிருந்தவனை அவர்களிடம் அழைத்துச் சென்று, "இதோ நம்ம சந்திரனே சொல்லிட்டான். அவனை வெட்டிருங்க" என்றான்.


என்னது அவன் உயிரையே எடுக்கணுமா? என அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, சூழ்ச்சி பண்ணினான் பிரபு.


சுயநினைவிழந்து கிடக்கும் உதயச்சந்திரனிடம், "மச்சான் நீங்க தானே சொன்னீங்க அவனை வெட்டணும்னு?" என அவன், அவன் கையை வெட்ட வேண்டும் என்று சொன்னதை மாற்றித் திரித்துக் கேட்டான்.


போதையிலிருந்த உதயச்சந்திரனும் "ஆமா வெட்டனும்" என்று உளறினான்.


"சரிங்கய்யா, உங்கக் கை கரைபட வேணாம். நாங்களே நம்ம முருகேசனை வச்சி முடிச்சிடுறோம்" என அவனின் விசுவாசிகள் கூறவும், பிரபு தான் காரியம் சாதித்த நிம்மதியில் சந்திரனை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
உதயச்சந்திரனின் விருப்பப்படி சங்கரப்பாண்டியனின் விசுவாசிகள் முத்துப்பாண்டியனை ஒரேடியாக தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர். அதன்படி மறுநாள் அவன் செல்லும் காரை, லாரி வைத்து தூக்கவும் ஏற்பாடு செய்தனர்.


மறுநாள் காலையில் தங்கள் திருமணநாள் என்பதால் வீட்டிலுள்ள அனைவரிடமும் வாழ்த்துப் பெற்று, தங்கள் குலதெய்வக் கோவிலுக்கு புறப்பட்டனர் முத்துப்பாண்டியனும் அலமேலுமங்கையும்.


விக்ரமனை அவர்கள் அழைக்க அவன் தன் அண்ணன்மார்களுடன் விளையாடப் போவதாகக் கூறி, வர மறுத்துவிட்டான். எனவே, அவனை வீட்டில் விட்டுவிட்டு தாங்கள் மட்டும் செல்ல முடிவெடுத்தனர்.


அவர்கள் பண்ணைபுரத்திலிருந்து கிளம்பும் நேரத்தில், இனி தன் பெற்றோரை தான் காணப்போவதில்லை என்பதை அறியாத விக்ரமன் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கையசைத்து வழியனுப்பி வைத்தான்.


வேண்டாம்! செல்ல வேண்டாம்! என விக்ரமனின் கையாட்டல் மூலம் விதி அவர்களுக்கு சொல்ல நினைத்ததோ?


காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, "ஏன்டி அம்முலு எப்பப் பார்த்தாலும் கோவில் குளம்னு அலையுறதையே வேலையா வச்சிருக்க? வீட்ல இருந்தாலாவது ஏதாவது ரெடி பண்ணலாம். கோவிலுக்கு போய் நாம என்ன செய்யப்போறோம்?" என அமைதியாய் வரும் தன் மனைவியை வம்புக்கிழுத்தான் முத்துப்பாண்டியன்.


"ம்? புளியோதரை கிண்டி பூசாரிக்கு தராம சாப்பிடப்போறோம். போகும்போதே வாயைக் கிளறாதீங்க மாமா. பேசாம வாங்க." என்றவள் சலித்துக் கொள்ளவும்,


"ஹேய்! கோவிலுக்குப் போய் என்ன செய்யப்போறோம்? ஒழுங்கா சொல்லு?" என விடாமல் கேட்டவனிடம்,


"ச்சோ! நம்ம ரெண்டு பேரோட பேருக்கும் அர்ச்சனை பண்ணிட்டு, அப்படியே அக்கா தேர்தல்ல ஜெயிக்கணும்னு சிறப்பு பூஜையும் செய்யப்போறோம் மாமா. நேரா ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க." என அவனின் கவனச் சிதறலை சுட்டிக் காட்டினாள்.


"புருஷன் கூட ஒன்றாவடி சண்டை போட்டுட்டு பிள்ளை வரம் கிடைக்க மரத்துல தொட்டில் கட்டுறது. இருக்கற மரத்தையும், குளத்தையும் அழிச்சிட்டு மழை வரணும்னு சாமிக்கு பூஜை செய்றது. திருப்பதிக்குப் போய் கட்டு கட்டாப் பணம் போடுறது. ஆனா, வீட்டுக்கு வர பிச்சைக்காரனுக்கு ஒத்தப் பருக்கை சோறு போடுறது கிடையாது. உங்களையெல்லாம் என்ன தான்டி பண்றது? உங்க அக்கா தேர்தல்ல ஜெயிக்கணும்னா கை வலிக்க சுவத்துல போஸ்டர் ஒட்டு. அந்தத் தொகுதியில கஷ்டப்படுறவங்களுக்குப் போய் உங்க அக்கா பேரைச்சொல்லி உதவி பண்ணு. கட்சிப் பொறுப்புகளை கூட சேர்ந்து கவனி. அதை விட்டுட்டு சிறப்பு பூஜை செஞ்சா அண்ணி ஜெயிச்சிடுவாங்களா?" என்றவனின் கழுத்தை நெறிப்பது போல் கைகளை கொண்டு சென்றவள்,


"நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க மாமா. நாளைலயிருந்து உங்களுக்கு வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு கட்." எனவும், மந்தகாசம் புரிந்தான் முத்துப்பாண்டியன்.


"பரவாயில்ல அம்முலு. அதுக்குப் பதிலா முருங்கைக்காய் குழம்பு, முருங்கைக்காய் கூட்டுனு வச்சி சரிகட்டிடு" என்றான்.


"அய்யோ! கோவிலுக்கு போகும் போது எப்படி பேசுறீங்க மாமா?" என்று சிணுங்கியதும்,


"ஹேய்! நான் அந்த குழம்புக்கு பதிலா இந்த குழம்பு வைனு தான் சொன்னேன். என் மனசுல எந்தத் தப்பும் இல்லப்பா. நீ தான் தப்புத் தப்பா யோசிக்கிற." என்று அவள்பக்கம் திருப்பி விட்டான்.


"போங்க மாமா. என்ன தான் நம்மளோட வெற்றிக்குக் காரணம் உழைப்பா இருந்தாலும் நம்மை மீறின சக்தி ஒன்னு இருக்கு மாமா. அதை மொதல்ல நம்பணும்" என்று தன் விளையாட்டுத் தனத்தை கை விட்டவள் தீவிரமாகக் கூறினாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
"நானும் அந்த சக்தியை நம்புறேன் அம்முலு. ஆனா, அந்த சக்தியை மட்டுமே பெருசுனு சொல்லிக்கிட்டு, மக்களை ஏமாத்தி பிரச்சினை செஞ்சிக்கிட்டு இருக்கிறவங்களைத் தான் நம்பாதனு சொல்றேன்." என்றவன் திரும்பிப் பார்க்க, ஜீவனற்றுக் கிடந்தாள் அம்முலு.


அவளைக் கண்டு திடுக்கிட்டவன், அம்முலு என்றழைக்க வாயைத் திறக்க முயல, சட்டென்று ஏதோவொன்று அவனின் தொண்டையை வந்து கவ்வியது.


கண்கள் இருட்டாகி சுயநினைவிழந்தவனின் கைகள் மட்டும் தானாக காரை ஓட்டிக் கொண்டிருந்தது.


பாதை மாறிய காரானது சாலையோரமாய் நின்றிருந்த லாரியின் மீது மோதி தூக்கியெறியப்பட்டது.


ஏற்கனவே இவ்வுலகை விட்டு தங்கள் ஜீவக்கூட்டிலிருந்து இணை பிரியாமல் பறந்து சென்ற இரு காதல் பறவைகள், தூரமாய் நின்று அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தன.


பின், தங்களுக்கு வந்த ஆணையை ஏற்று கரம் கோர்த்து மேகப்படிகளில் வானேறிச் சென்றனர்.


மறுபுறம் வீட்டில் தன் மகன்களுடன் கேரம் விளையாடிக் கொண்டிருந்த நாச்சியம்மையோ விசயமறிந்து, அதில் தான் கேட்ட செய்தியை ஜீரணிக்க முடியாமல், நெஞ்சைப் பிடித்து நிலத்தில் சரிந்தார்.


அவரின் அலறலில் தங்கள் அறையிலிருந்து ஓடி வந்த ராதாவும், ஹரியும் வீழ்ந்துக் கிடந்தவரை கரம் தாங்கி என்னவாகிற்று என விசாரித்தனர்.


அவர் கூறிய செய்தியில் தாங்களும் கலங்கி நின்றவர்கள் பின், அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் முன் நின்று செய்தனர்.


இதில் தன் அன்னை தந்தையை கேட்டழும் விக்ரமனை சமாளிக்க முடியாமல் திணறித்தான் போனார் நாச்சியம்மை.


நாச்சியம்மை பிரம்மை பிடித்தது போல் விக்ரமனுடன் தன்னறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க, அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட பிரபு தன் ஆட்கள் மூலம் அனைவருக்கும் பணம் கொடுத்து சங்கரப்பாண்டியனை தேர்தலில் ஜெயிக்க வைத்தான்.


ஆம், பணநாயகத்தால் ஜனநாயகம் கொல்லப்பட்டது.


அவர் எம்.எல்.ஏவாக பதவியேற்ற இரண்டு நாட்கள் கழித்து நாச்சியம்மையைக் காண வந்த காவல் துறையினர், அலமேலுவும் முத்துப்பாண்டியனும் கார் விபத்தில் இறக்கவில்லை, திட்டமிட்டு தான் கொல்லப்பட்டுள்ளார்கள் எனக்கூற, அச்செய்தியில் திகைப்பூண்டை மிதித்தாற் போலானார் நாச்சியம்மை. யார்? எப்படி? என கேள்விகளிலேயே ரௌத்திரம் காட்டினார்.


காவலதிகாரி விரிவாக சொன்னார். "முத்துப்பாண்டியனோட கார் ஒரு லாரி மேல மோதியிருந்ததுமா. அந்த லாரியோட டிரைவரை விசாரிச்சப்போ, மொதல்ல அவன் நான் இந்த விபத்தை செய்யலைனு சொன்னான். பின்னாடி நீ ஏன்டா அந்த வழில வந்தனு அடிச்சு விசாரிச்சப்போ தான் எம்.எல்.ஏவோட பையன் உதயச்சந்திரன் முத்துப்பாண்டியன் மேல உள்ள விரோதத்துல அவரை கொல்லச் சொன்னார்னு சொன்னான். ஸோ, இது ஒரு திட்டமிட்ட கொலைமுயற்சி. நீங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா நாங்க ஆக்ஷன் எடுக்க வசதியா இருக்கும்." என்றார்.


அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த நாச்சியம்மை, "அய்யோ! உரு தெரியாம அழிச்சிருவேனு அன்னைக்கே சொன்னானே பாவி. சொன்ன மாதிரியே செஞ்சுட்டானே. நான் இப்போ என்ன பண்ணுவேன் கடவுளே? டேய்! உங்களை சும்மா விடமாட்டேன்டா. நான் இப்போ எப்படி கதறுறேனோ அதே மாதிரி உங்களையும் ஒருநாள் கதற வைப்பேன்" என பொங்கி வந்த ஆத்திரத்தில் திரௌபதியாய் சூளுரைத்தார்.


முதல்வேலையாய் காவலர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி, புகார் எழுதிக் கொடுத்தார். அதன்படி உதயச்சந்திரனை கைது செய்த காவல்துறையினர் தங்களிடமிருந்த ஆதாரத்தை காண்பித்து, அவனுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தனர்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
அவனுக்கு தண்டனை வழங்கிய நேரத்தில் நீதிமன்றத்தில் தன் குடும்பத்துடன் நின்றிருந்த சங்கரப்பாண்டியனை பார்த்து, மண்ணள்ளி தூற்றியபடியே சபதம் செய்தார் நாச்சியம்மை.


"ஐயா பெரிய மனுஷா! தேர்தல்ல ஜெயிச்சிட்டோம்னு ரொம்ப சந்தோசப்பட்டுக்காத. உன் குடும்பத்தோட நிம்மதியை அழிக்காம ஒரு நாளும் நான் ஓய மாட்டேன்." என்றார்.


அவரின் அந்த குரோதத்தில் நடுங்கித்தான் போனார் சங்கரப்பாண்டியன்.


ஆனால், முழுதாய் இருபது வருடங்கள் கழித்தே பண்ணைபுரத்தில் தன் காலடித் தடத்தைப் பதித்தார் நாச்சியம்மை.


தன் மகன் சிறை சென்ற நாளிலிருந்தே சங்கரப்பாண்டியனுக்கு சரியான தூக்கமில்லை.


என் வார்த்தைகளால் தான் சந்திரன் இப்படி முருகேசனைக் கொண்டு முத்துப்பாண்டியனை கொலை செய்தானா? என் ஆணவத்தால் தான் இரு உயிர்கள் போய்விட்டதா? என் மகன் வாழ்க்கையை நானே அழித்துவிட்டேனா? என மனம் வெதும்பித் துடித்தார்.


அதன்பின் தன் தவறுகளுக்கு பிராயசித்தமாய், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் மரியாதையாய் நடத்த ஆரம்பித்தார். தன் எம்.எல்.ஏ பதவியிலிருந்து மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். மனம் ஒரு குரங்கு என்பது உண்மை தானோ?


சிறையில் தன்னைக் காண வந்த பிரபுவிடம் பரிதாபமாய் கேட்டான் உதயச்சந்திரன்.


"அன்னைக்கு என்ன நடந்துச்சி பிரபு? நான் எப்போ முத்துப்பாண்டியனை வெட்டச் சொன்னேன்?" என போதையில் தான் கூறியதனைத்தையும் மறந்துவிட்டு கேட்டான்.


"அய்யோ மச்சான்! நீங்க தான் அவனை வெட்டி வீசப்போறேனு போதையில கத்தி அரிவாளையெல்லாம் தூக்குனீங்க. நான் தான் உங்களை சமாதானப்படுத்தி அரிசி குடவுனுக்கு கூட்டிட்டுப் போனேன். அங்க இருந்தவங்கக்கிட்ட நீங்க தான் அவனை வெட்டிருங்கனு சொன்னீங்க. அதை தான் அந்தப் பயலுகளும் கோர்ட்டுல சொன்னானுக." என்றதும்,


"ஆமா எல்லாரும் நீங்க தான்யா அவனை கொல்ல சொன்னீங்கனு சொன்னதால தான் எங்கப்பாக்கிட்ட கூட நடந்த எதையும் சொல்லாம, நான் தான் ஆள் வச்சி தூக்க ஏற்பாடு பண்ணினேனு மட்டும் சொன்னேன் பிரபு" என்று வேதனைகொண்டான் உதயச்சந்திரன்.


"மச்சான், அவனுக உங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் முருகேசனை வச்சி முத்துப்பாண்டியனைத் தூக்க ஏற்பாடு பண்ணியிருக்கானுக. ஆனா, முருகேசனோட லாரி பாதியிலேயே பிரேக்டவுனாகி நின்னுடுச்சாம். அதாவது நம்ம முருகேசன் போய் மோதல. அந்தக் காரா வந்து தான் லாரியில மோதியிருக்கு. ஆனா, இந்தப் போலீஸ்காரப் பயலுக வேற யார்கிட்டயோ செமத்தியா காசு வாங்கிக்கிட்டு, கேஸை இப்படி முடிச்சி விட்டானுக" எனத் தான் வருத்தப்படுவதை போல் நடித்தான்.


"உண்மையா பிரபு?" என வினவியவனிடம், பிரபு மேற்கொண்டு எதையும் விளம்ப விரும்பாமல் அமைதியாய் நின்றான்.


விரக்திப் புன்னகை சிந்திய உதயச்சந்திரன், "இது என் குடிப்பழக்கத்துக்கு கிடைச்ச பரிசு பிரபு. அவனை கொல்லணும்னு நெனச்சதுக்கு கிடைச்ச பரிசு." எனத் தான் சிறை தண்டனையை ஏற்க தயாராகி விட்டதை அறிவித்து விட்டு, திரும்பி நின்று கொண்டான்.


உதயச்சந்திரனை உள்ளே அனுப்பியாகிற்று. இனி சங்கரப்பாண்டியனை இசக்கி பின், தனது தங்கச்சி புருஷன் ஈஸ்வரை பதவியில் ஏற்றிவிட வேண்டியது தான் என்று சிந்தித்துக் கொண்டே சிறையை விட்டு வெளியே வந்த பிரபு, ரோட்டைக் கடந்து செல்லும் போது, டிரைவர் ஒருவரின் குடிபோதையில் தள்ளாடியபடியே வந்த தண்ணி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரலோகம் போனான்.


இது தான் தெய்வம் நின்று கொல்லும் என்பதோ?




தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
நாவல் பிடிச்சிருந்தா கமெண்ட், லைக் செய்ய மறக்கவேண்டாம் காஜூகத்லீஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 20



பண்ணைபுரத்திலிருந்து செங்குளத்திற்கு இடம் பெயர்ந்த நாச்சியம்மை தன் மொத்த வெறியையும் தொழிலில் காட்டினார்.


மும்பையிலுள்ள தொழில்கள் முழுவதையும் தன் தம்பியை நிர்வகிக்கச் சொன்னவர், தமிழ்நாடு முழுவதும் தான் ஆட்சி செய்தார்.


இவ்வளவு நாள் ஆள்விட்டு பார்த்துக் கொண்டிருந்த தொழில்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வந்தவர், தொழிலில் என்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என மீசை முறுக்கிய ஆண்களையே மிரளும்படி செய்தார்.


வீட்டில் யாரையும் பண்ணைபுரத்து கதையைப் பற்றி பேச அனுமதியாதவர், விக்ரமனை வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி படிக்க வைத்தார்.


விடுமுறைக்கு மட்டும் வீட்டிற்கு வருபவனிடம் அன்பை வாரி வாரி இரைத்தார். ஆயினும் யாருடனும் ஒட்டாத தன்மையுடனே வளர்ந்து வந்தான் விக்ரமன்.


சங்கரப்பாண்டியனை கூனிக்குறுகி நிற்க வைக்க வேண்டும் என்ற வன்மத்தை மனதில் மேலும் மேலும் வளர்த்திருந்த நாச்சியம்மை, சங்கரப்பாண்டியனுக்கு தெரியாமலேயே அவரின் தொழில்கள் ஒவ்வொன்றாய் கைப்பற்றினார்.


இறுதியில் அவரின் செல்லப்பெயர்த்தியின் மேல் தன் பார்வையை பதித்து சங்கரப்பாண்டியன் மற்றும் உதயச்சந்திரன் ஆகிய இருவரையுமே ஒரு சேர வீழ்த்த திட்டம் தீட்டினார்.


ஆனால், அந்த திட்டத்தில் எதிர்பாராத விதமாய் விக்ரமனை இணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.


வெளிநாட்டில் வேலை பார்ப்பவன் இந்த பொம்மை கல்யாணத்தையெல்லாம் பெரிதாக எண்ணமாட்டான் என நினைத்து, அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்.


ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி அதிதியின் மேல் நிஜமாய் நேசம் கொண்டான் விக்ரமப்பாண்டியன்.


எந்த உண்மையையும் விக்ரமனிடம் கூற விரும்பாத நாச்சியம்மை, திருமணம் நடந்த இரவில் அவனை தன்னறைக்கு அழைத்து, "நான் ஏன் இந்தப் பொண்ணை உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிருக்கேனு நேரம் வரும் போது சொல்றேன் விக்ரமா. ஆனா, அதுவரை நீ அந்தப் பொண்ணைப் பத்தியும் அவக் குடும்பத்தைப் பத்தியும் வெளிய விசாரிக்கக் கூடாது. அவளைப் பத்தின விபரத்தை மட்டும் நாளைக்கு கண்ணன்கிட்ட சொல்லி கொண்டு வர சொல்றேன். இந்த நாச்சூம்மா எது செஞ்சாலும் நம்ம குடும்பத்தோட நன்மைக்காகத் தான் செய்வேனு என்னை நம்புறல்ல விக்ரமா?" என அவனிடம் தாலிக்கட்டுவதற்கு முன்பு கேட்ட அதே கேள்வியை மறுபடியும் கேட்கவும்,


"நான் உங்களை நூறு சதவீதம் நம்புறேன் நாச்சூம்மா" என அருகில் வந்து ஆதரவாய் கைகளைப் பற்றினான் விக்ரமன்.


அவனிடம் அவர் இன்னொரு கோரிக்கையையும் வைத்தார்.


"இனி நீ தனி மனுஷன் இல்ல விக்ரமா. குடும்பஸ்தனாகிட்ட. உங்கிட்ட இருக்க அந்த குடிப் பழக்கத்தையும் சிகரெட் பழக்கத்தையும் நீ விட்டுடனும்." என்றதும்,


"என்னது சிகரெட் குடிக்கக்கூடாதா? அது மட்டும் கொஞ்சம் கஷ்டமாச்சே" என ஒற்றைக் கண்ணை சிமிட்டியவனை, அடிப்பேன் என கைக்காட்டினார் நாச்சியம்மை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
சிரித்துக்கொண்டே தன் தாய் தந்தை புகைப்படத்தை வணங்கியவன், "இன்னும் பத்து மாசத்துல உங்க அலமு மறுபடியும் உங்கக்கிட்டயே வந்து தொந்தரவு கொடுக்கப்போறா நாச்சூம்மா. அவளை சமாளிக்கத் தயாராகுங்க" என்று உல்லாசமாய் கூறிவிட்டு அதிதியைத் தேடி மாடிக்குச் சென்றான்.


பல தருணங்களில், ஏன் இந்தத் திருமணம் நமக்கு நடைபெற்றது? என யோசிக்க முயற்சிப்பவளிடம், தனக்கே தெரியாத விடையை அவளிடம் எப்படி கூறுவதென சாதூரியமாய் பேச்சைப் மாற்றி அவளை திசை திருப்பி விடுவான் விக்ரமன்.


அம்முலுவுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, விக்ரமனை அழைத்த நாச்சியம்மை தனது விரோதிகளை வீழ்த்த இது தான் சரியான நேரம் என கணக்கிட்டு, அனைத்து உண்மைகளையும் அவனிடம் கூறி, அதிதியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற தனது எண்ணத்தையும் கூற, விக்ரமனுக்கு சிறிது நேரம் ஒன்றும் ஓடவில்லை.


அனைத்தையும் கேட்டு மௌனம் காத்தவன் பின், என்னால் முடியாது நாச்சூம்மா என்றான்.


அவனின் இந்த மறுப்பை சற்றும் எதிர்பாராதவர் நெடுஞ்சாண் கிடையாய் அவன் காலில் விழுந்தார்.


"முதலும் கடைசியுமா நான் உன்கிட்ட கேட்கறது இது தான் விக்ரமா. நீ எதுவும் பண்ண வேணாம். அவளை இந்த வீட்டை விட்டு வெளியப் போன்னு ஒரு தடவை சொன்னா மட்டும் போதும்." என்றார் கெஞ்சலாக.


வளர்த்த பாசத்தில் அவர் சொல்லைத் தட்ட முடியாதவனும் அவர் சொன்னதை செய்ய பாடாதபாடுபட்டான்.


கிளிப்பிள்ளையாய் அவர் சொன்னது போல் வீட்டை விட்டு வெளியேப்போ என சொன்னால் மட்டும் உடனே அவள் சென்று விடுவாளா என்ன? அவன் அவளின் காதலை சந்தேகிப்பதாய் கூறியபோது கூட, மறுபடியும் என் அன்பை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று தான் கேட்டாள் அதிதி?


ஆதலால், அக்கணம் வெளியேறாமல் தன்னை சோதிப்பவளை வெளியேற்ற பொய்யாய் தாய்ப்பாலில் குற்றத்தை கண்டுபிடித்தான் விக்ரமன்.


அவளின் ஒழுக்கத்தை சந்தேகிப்பதாய் கூறியவுடன் வீறு கொண்டு, நீ வேண்டாம் என அவனை தூக்கியெறிய தயாரானாள் அதிதி.


வெளியே கிளம்பிய அதிதியையும், தொங்கிய முகத்துடன் நின்ற சங்கரப்பாண்டியனையும் கண்ட நாச்சியம்மைக்கு இவ்வளவு நாட்கள் எட்டாத வெற்றி கனி கையில் கிட்டியது போல் இருந்தது.


ஆனால், அவரின் மகிழ்ச்சியை துணி கொண்டு துடைக்க வீறிட்டழுதாள் அவரின் செல்ல ராட்சசி அலமேலுமங்கை.


பகையுணர்வு சற்றுத் தணிந்து அவர் சந்தோசமாய் இருந்ததற்கு காரணமே மீண்டும் தன் தங்கையின் சிரிப்பைப் பார்த்தது தான்.


ஆனால், இப்போது அதிதி அம்முலுவை அவரிடம் தராமல் தானே வைத்துக்கொள்ள, அவள் மேல் ஏற்கனவேயிருந்த கோபக்கனல் கொழுந்து விட்டெரிந்தது அவருக்கு.


அம்முலுவிற்காக ரொம்பவே ஏங்கினார் நாச்சியம்மை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
*

அனைத்தையும் நினைத்துப் பார்த்த நாச்சியம்மை, கண்களில் ஓடிய கண்ணீரை தடயமின்றி அழுந்தத்‌ துடைத்தார்.


மணி ஒன்று எனக்காட்ட, மறுபடியும் கண்களை மூடி தூங்க முயற்சி செய்தார்.


விக்ரமன் கொலையாளியை போலீசில் மாட்டிவிட தக்க ஆதாரங்களை சேகரிக்க வேண்டி இருந்ததால், தினமும் தன் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு வர வெகுநேரம் எடுத்துக் கொண்டான்.


அந்த வாரத்தில் ஒரு நாள் காலையில் தன் பெட்டியில் தனக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உடைகளை எல்லாம் அடுக்கிக்கொண்டு, வீட்டிலுள்ள யாரிடமும் கூறாமல், அலைபேசியை அணைத்து அலமாரிக்குள் போட்டு விட்டு, காஷ்மீர் புறப்பட்டுவிட்டான்.


காஷ்மீர் சென்றவனுக்கு அங்குள்ள இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் வீரப்பாண்டியனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க இரண்டு நாட்கள் எடுத்தது.


அங்கிருந்த நாட்களில் நாற்புறம் சூழ்ந்திருந்த சுவரும் பனிமலையாய் மாற, அவனின் இரத்தத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் அதிதி என்று ஜபித்து, அவனை தவமிருக்கும் மாமுனியாய் உணரச் செய்தது.


அம்மலைப்பகுதியின் காட்டுமல்லிச் செடியிலிருந்து வரும் நறுமணமும் மஞ்சள் பூசிய அம்மயிலின் மன்மத வாசனைகளை நினைவூட்ட மறை கழண்டவனானான்.


அவளுடன் இணைந்த தருணங்களை எல்லாம் இப்போது நினைத்து தனிமையில் சிரித்தான்.


அவளின் தேக வெப்பத்தை தன் நினைவில் கொண்டுவந்து கொண்டுவந்தே அங்கிருந்த இரண்டு நாட்களும் உயிர் பிழைத்தான்.


விதை இப்புவியில் உயிர்கொள்ள காலம் தேவைப்படுவது போல், உள்ளிருக்கும் அவன் காதல் உயிர்கொள்ளவும் காலம் தேவைப்பட்டது. அது அழகாய் உணர்த்தியது அவர்களின் கண்ணாமூச்சி காதலை.


பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்கியவன், நேரே துபாயில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருக்கும் முருகேசனை சந்திக்கச் சென்றான்.


அவன் தான் தன் பெற்றோரின் கார் மோதிய லாரிக்குச் சொந்தக்காரன் என்று அவனை சந்திக்கச் சென்றான்.


காலை பத்து மணியளவில் அவனை சந்திக்க அப்பாலைவனத்தில் மணலில் பாதம் புதைய புதைய நடந்து சென்றான். அங்கு கானல் நீர் தெரிவது வியப்பல்ல. ஆனால், அதிதிதாசனுக்கு கானல் நீராய் ரதியானவளின் வட்ட முகம் தெரிந்தது வியப்பு தானே?


முருகேசனிடம் முதலில் என்ன நடந்தது என விசாரித்தவன் பின், ஒவ்வொன்றாக அவன் கூற ஆரம்பிக்கவும், தன் கேமராவில் ஒளிப்பதிவு செய்தான்.


"இங்கப் பாருங்க தம்பி, நான் எந்தத் தப்பும் செய்யல. முத்துப்பாண்டியனையும் அவரோட மனைவியையும், நான் லாரி ஏத்திக் கொல்லவே இல்ல. பாதி தூரத்துலயே என் லாரி ப்ரேக்டவுனாகி நின்னுருச்சி. அப்போ அந்தக் கார் தான் என் லாரி மேல வந்து மோதுச்சு. அதுல அடிச்ச அடியில தான் எனக்கு ஒரு பக்க காது கேட்காமப் போயிருச்சி. அன்னைக்கு போலீஸ்காரங்க என்னை அடிச்சி மிரட்டி தான், நான் கார் மேல லாரியைக் கொண்டு மோதின மாதிரி பொய் வாக்குமூலம் எழுதி வாங்கினாங்க. அது மூலமா உதயச்சந்திரன் ஐயாவுக்கும் தண்டனை வாங்கி கொடுத்தாங்க.. இத நான் பிரபு ஐயாக்கிட்ட ஏற்கனவே சொன்னேன். ஆனா, அப்போ அவரு அதை கண்டுக்கவே இல்ல. யார்கிட்டயும் மூச்சுவிடாத சொல்லிட்டாரு. நானும் என் பத்து வருஷ கடுங்காவல் தண்டனை முடிஞ்சதும் குடும்ப கஷ்டத்தால இங்க துபாய்க்கு வந்துட்டேன். இதை நீங்க எங்க வந்து சொல்லச் சொன்னாலும் நான் சொல்லுவேங்க." என முருகேசன் கூறிய வாக்கு மூலத்தை காணொளியாக பதிவு செய்த விக்ரமன், இரவில் அவனுடனேயே விருந்தில் கலந்துகொண்டான்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom