கவிதை 2:
கைம்பெண்
ஆணென்பதையும் மறந்து
சுற்றி சுற்றி வந்தாயடா
என் மனதை கவர,
உன் வித்தைகளின் பிடியில்
சிக்காமல் லாவகமாய்
தள்ளி சென்றபோதும்
விடாமல் உன்னை
நுழைத்து கொண்டாய்
என் மனதில்...
எனக்குள்ளே போராட்டங்கள் பல
உன்னை எதிர்த்தும் ஆதரித்தும்
நடந்து கொண்டே தான் இருந்தது
இருந்தும் வென்று விட்டாய்
என் மனதை...
அதோடு நிற்காமல்
வீடேறி பெண் கேட்டு
பல சோதனைகளை கடந்து
மணவறையில் மங்கையென்னை
கைப்பிடித்தாய் அன்பே!
இக்கணம் முதல்
என்னை முழுதும் ஆட்கொண்டவள்
நீ மட்டும் தானடி சகியே
என் சரிபாதியே! என்றாய்.
முன்பிருந்ததை விட பலமடங்கு
உன் கெஞ்சலும் கொஞ்சலும்
நாளுக்கு நாள் என்னிடம் வளர்ந்து
உன் அன்பை மழையாய்
பெய்தாயடா...
என்னை உன் ஆயுள் முழுதும்
சுமப்பேன் என்று
உள்ளங்கையில் தாங்கினாயே!
ஆகாயத்தில் சுகமாய்
உன் அணைப்பில்
கட்டுண்டு இருந்த என்னை
நொடிதனில் சுவாசமற்ற
மலராய் மாற்றியது
உன் எதிர்பாரா மரணம்.
என்னை சுற்றி
இருள்மட்டும் சூழ்ந்திருக்க
அதில் மின்மினியாய்
உன் நினைவுகள் மட்டும்
சுழன்று கொண்டிருக்க,
காதிருந்தும் செவிடானேன்
கண்ணிருந்தும் குருடானேன்
வாயிருந்தும் ஊமையானேன்
இறுதியில் நீ இல்லாமல்
என்
உயிர் இருந்தும் பிணமானேன்.
தங்கத்தின் ரதமாய் இருந்த
மகனை முழுங்கிவிட்டாள் பாதகி
என ஊர் ஏச,
பெற்றவர்களும் உறவினர்களும் தூற்ற,
உயிர் உள்ளவரை உன்னுடன்
இருப்பேன் என்றாயே!
ஒருவேளை
நீ இல்லையென்றால்
அதன்பிறகு என்ன செய்யவேண்டும்
என்றும் கூறாமல் சென்றதேனோ?
உன் தீண்டலின் இனிமையில்
என் மேனி இன்னும் தகிக்கின்றது...
கெஞ்சல்களின் மொழியில்
உன் விழிகள் என்னை எரிக்கின்றது...
உன்
கொஞ்சல்களின் நினைவில்
தீயாய் சூழ்கிறது என் மனம்...
உயிர்விடும் முன்
என்னோடு வா என்றிருந்தால்
விட்ருப்பேன் இம்மேனியோடு
என் உயிரையும் சேர்த்து...
நீ இல்லாமல் வெறும்
கூடாய் நிற்கின்றதே
என் செய்வேன் அன்பே !
தர்ஷினிசிம்பா