Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழலுரு - யாழ் மொழி

Messages
93
Reaction score
14
Points
8
அடர்ந்த காரிருள், தன் கோர முகத்தை உலகிற்கு பறைசாற்றி கொண்டிருந்த அந்த நாளின், இறுதி ஜாமம் நிறைவுறும் நேரம், மையிருட்டு சுற்றிலும் பரவிக் கிடக்க, ஆந்தையின் அலறல் சத்தமும், வண்டுகளின் மெல்லிய ர்ர்ர்ர்ர்ர்.......என்ற ரீங்கார ஒலியும், உஸ்..... உஸ்..... என்ற காற்றடிக்கும் சத்தத்தையும் தவிர, ஜன சஞ்சாரம் இல்லாத இரவு வேளை.



அவள் கார் குழலின் கருமையை, இருட்டு முழுவதுமாக அடைத்திருந்தது.




நண்பர்களுடன் நள்ளிரவில் சுடுகாடு சென்று பிணத்துடன் செல்பி எடுத்து வருகிறேன் என சொல்லிய போது இருந்த துணிவெல்லாம், எங்கோ..... துண்டைக் காணோம், துணியைக் காணோம், என அவளை விட்டு தூர ஓடி இருந்தது.



பிரச்சனையை இழுத்துவிட்ட நண்பர்களையும் சவாலை ஏற்றுக் கொண்ட தன்னையும் மனதிற்குள் கடித்தபடி, தட்.... தட்.... ஷு சத்தத்துடன், இதயம் வேகமாக துடிக்க, முகம் முழுவதும் வியர்வையில் குளித்து இருக்க, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இடுகாட்டின் வாசலை அடைந்திருந்தாள் மதுவந்தி, கொஞ்ச நஞ்சம் இருந்த துணிவு எல்லாம் இப்போது துணியைக் கொண்டு துடைத்ததை போன்று முழுவதும் காணாமல் போயிருந்தது.




மெதுவாய் சுடுகாட்டின் கதவருகே நின்று, சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டவள், கண்களுக்கு தொலைவில் மேடை போன்று இருந்த ஒரு அமைப்பில் மஞ்சள் நிற ஒளியாய் அனல் எரிந்துகொண்டிருந்தது தெளிவாய் புலனானது, அந்த மஞ்சள் நிற ஒளிக் அருகில் இருபுறமும் பல பிணங்கள் புதைக்கப்பட்ட அதன்மீது கல்லறைகள் எழுப்பப்பட்டு இருப்பது அவளின் கண்களுக்கு இப்பொழுது முன்பை விட தெளிவாகத் தெரிந்தது.



கதவைத் திறந்து சுடுகாட்டின் அருகே நெருங்க நெருங்க, அவள் கண்களின் கரு விழிகள் இரண்டும் இன்னும் விரிந்தன, கைகளில் மெல்லிய நடுக்கம் பரவி உடல் முழுவதும் துணுக்குற்றது, உடலின் மயிர்க்கால்கள் எல்லாம் நடுக்கத்தில் குத்திட்டு நிற்க, உடைகள் எல்லாம் தெப்பலாக, வியர்வையில் குளித்திருந்தாள் மதுவந்தி.




மண்ணோடு வேரோடி போயிருந்த தன் கால்களை அசைத்து, கனல் வந்த திசையை நோக்கி மெதுவாக அடியெடுத்து வைக்க, இதயம் தடக்.....தடக்.....என தாளம் தப்பி ஒலித்தது.



நடந்து கொண்டு இருந்த அவளின் பயத்தை இன்னும் கூட்டும் விதத்தில் சுடுகாட்டின் மறுபுறத்தில், "ஆ... ஆ ....ஆ ....ஆ...", என்ற சத்தத்துடன் ஒரு பெண்ணின் அலறல் ஒலி கேட்க, உயிரை கையில் பிடித்துக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள் மதுவந்தி .



இருபுறமும் பார்வையை சுழல விட்ட, அவளின் கண்களில் சிக்கியது அந்த காட்சி.



முகமூடி அணிந்த ஒரு உருவம் எதிரில் இருந்த பெண்ணின் கழுத்தை ஒரு கையால் இறுக்கியபடி, மறு கையால், அவள் வயிற்றில் கத்தியை இறக்கும் காட்சி, "ஏய்....., என்ன செய்யுற....", என கத்திக்கொண்டே, அவ்விடம் நோக்கி விரைய, அதற்குள் செந்நிற குருதி அந்தக் கத்தியின்று நிலத்தை தழுவி இருந்தது.



சுற்றிலும் இருட்டாக இருந்ததால் கொலைகாரனின் முகம் அவளுக்கு நிழல் உருவாக தான் தெரிந்தது, இவளின் குரல் கேட்டதும் அந்தக் கொலைகாரன் தப்பித்தால் போதுமென்று கத்தியை அந்தப் பெண்ணின் உடலிலிருந்து உருவிக்கொண்டு கொலை நடந்த திசைக்கு எதிர் திசையில் ஓட ஆரம்பித்திருந்தான்.




கொலையுண்ட பெண் , நிலத்தில் சரிந்து விழ, இவளும் "ஏய்....., நில்லு...., யார் நீ....", என கத்திக்கொண்டே கொலைகாரனின் பின்பு விரைந்தாள்.



கட்டை உருவம் கொண்ட அவனின் வேகத்திற்கு, மெல்லிய உருவம் கொண்ட மதுவந்தியால் ஈடுகொடுக்க முடியாமல் போக, கொலைகாரன் காற்றோடு கரைந்து காணாமல் போனான்.



மேல் மூச்சி வாங்கியபடி, அவனை தேடியவள், கொலைகாரன் அவளின் பார்வையில் சிக்காமல் போக, கொலை செய்யப்பட்ட பெண்ணின் நிலை அறிய, கொலை நடந்த திசையை நோக்கி விரைந்தாள் மதுவந்தி.



நாலாபுறமும் பார்வையைச் சுழல விட்டுக்கொண்டே யாரேனும் மனிதர்கள் தென்படுகிறார்களா, என பார்த்தபடி கொலை நடந்த இடத்தை அவள் அடைந்த பொழுது, கொலையுண்ட பெண்ணின் சடலம் காணாமல் போயிருந்தது.



தலையில் கை வைத்தபடி, " என்ன சுத்தி என்ன நடக்குது..., இப்ப தான் என் கண்ணு முன்னாடி ஒருத்தன் அந்த பெண்ணை கத்தியால் குத்தினான்..., அவனை துரத்திக் கொண்டு போனால் அவன் ஏதோ மாயாவி போல மறைந்து விட்டான்....., கொலை நடந்த இடத்துக்கு வந்து பார்த்தால் அந்த பொண்ணோட டெட் பாடி காணலை, யார்????இதையெல்லாம் செய்வது...., இதுவரை என் கண் முன்பு நடந்தது எல்லாம், கனவா...., இல்லை..., நிஜமா...., இல்லை என்னோட பிரமையா....", எனக்கு குழம்பி நின்றாள் மதுவந்தி.




சுற்றிலும் மனித தடயம் இல்லாமல் போக, "சரி... விஷயத்தை போலீஸாகவது சொல்வோம்....", என நினைத்து தன் தொலைபேசியில் போலீசை தொடர்பு கொள்ள முயற்சிக்க, அதுவும் சிக்னல் இல்லை என கையை விரித்தது.



முன்பை விட மூன்று மடங்கு பயமும் திகிலும் அவள் முகத்தில் குடிகொள்ள, அதே நேரத்தில் அவள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் உள்ள மரத்தில் இருந்து ஏதோ ஒன்று, தொப்......என்ற சத்தத்துடன் அவள் மேலேயே விழுந்தது.



துள்ளிக் குதித்தபடி தன் மேலே விழுந்த பொருளை தட்டிவிட்டு, இரு அடிகள் பின்னால் நகர்த்தவள், என்ன விழுந்தது, என திரும்பிப் பார்க்க,



தன் கண் முன்பு இருந்த பொருளை பார்த்து ஆ.. ஆ...ஆ...ஆ..ஆம்..அ...... என்ற அலறலுடன் இதயமே வெளியில் வந்து விழுந்து விடுவது போல முகம் வெளிறி இரு அடிகள் பின் அடைந்தாள்.



அவள் கண் முன்பு இருந்தது, சற்று நேரத்திற்கு முன்பு மனிதனின் உடலில் துண்டிக்கப்பட்டு குருதி வடிந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்த ஒரு இடது கை.



அவள் பயம் கொண்டு இரு அடிகள் பின்னடையும் பொழுதே, அந்தக் கைகள், அவள் பின்னடையும் திசையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.



"வேண்டாம்.... வேண்டாம்....", என்றபடி இரு கைகளையும், தலையையும் அசைத்தபடி 10 அடிகள் தள்ளி சென்று, தொப்....என்ற ஒலியுடன் மூச்சையுற்றாள் மதுவந்தி.



கட்.....



இயக்குனரின் கட் வார்த்தையை கேட்டு, மூச்சையுற்று இருந்தவள், இதுவரை எதுவுமே நடவாதது போன்று உடையில் இருந்த மணலை தட்டி விட்டபடி, இயக்குனர் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.



"ஷார்ட் ரொம்ப நல்லா வந்திருக்கு மேடம், இந்த சீனை தியேட்டரில் பார்க்கும் பொழுது, தியேட்டர் முழுவதும் அலறும் சத்தம் கேட்கும்....", என இயக்குனர் சொல்லி முடிக்க அனைவரும் அடுத்த காட்சியை படமாக்க தயாரானார்கள்.
 

Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
ஐயோ.. நான் இத படிக்க ஆரம்பிச்சதும் என்னடா நைட் ஆரம்பிச்சுட்டோம்னு பயந்துட்டேன். கொஞ்சமா இருந்தாலும் அந்த உணர்வை நல்லா குடுத்துட்டிங்க 👌👌👌. நான் அடுத்த எபியை காணோம்னு தேடுறேன் 😁
 
Messages
93
Reaction score
14
Points
8
நன்றி மா
ஐயோ.. நான் இத படிக்க ஆரம்பிச்சதும் என்னடா நைட் ஆரம்பிச்சுட்டோம்னு பயந்துட்டேன். கொஞ்சமா இருந்தாலும் அந்த உணர்வை நல்லா குடுத்துட்டிங்க 👌👌👌. நான் அடுத்த எபியை காணோம்னு தேடுறேன் 😁
 

New Threads

Top Bottom