Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீயென நானும் நானென நீயும் 3

Messages
4
Reaction score
0
Points
1
சிறு வயதிலிருந்தே மனம் விட்டு பேச யாருமில்லாமல் தவித்தவள் தன் கவலை, சந்தோஷம், ஏக்கம் என எல்லாவற்றையும் கவிதைகளால் செதுக்கி வைத்திருந்தாள் தேன்மொழி. நாட்குறிப்பின் பக்கங்களில் ஆங்காங்கே சிதறிவிட்டிருந்த விழிநீர் தடங்களும் இல்லாமலில்லை.

படித்து முடிந்து நிமிர்ந்த சந்தோஷின் மனதிலும் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு செல்வந்தனாக வாழ தான் ஆசை. அவனுடைய அந்த ஆசைக்கு பின்னால் சில காரணங்கள் உண்டு.

தாய், தந்தை, சந்தோஷ், இரு தங்கைகள் என வாழ்ந்த அழகான குடும்பம் அவனுடையது. சந்தோஷ் படிப்பில் நல்ல கெட்டி. அவனுக்கென உயர்ந்த இலட்சியங்களை வகுத்து வைத்திருந்தான். அவனுக்கு பதினாறு வயது இருக்கையில் அவன் தந்தை காலமானார். அவருடைய சம்பாத்தியத்திலேயே வாழ்க்கை நடத்திய குடும்பம் வெகு விரைவிலேயே கஷ்டநிலைக்குத் தள்ளப்பட்டது. பன்னிரண்டாவதோடு படிப்பை நிறுத்தியவன் தன் குடும்பத்தை தூக்கி நிறுத்தும் தூணாக ஆகிப் போனான். அல்லும் பகலும் மாடாக உழைத்தான். அவர்களுக்கென இருந்த சிறிய அளவிலான வயலிலிருந்து வருமானம் ஈட்டுவதில் வெற்றியும் கண்டான். குடும்பத்தை ஓரளவு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்ட போதிலும், படிப்பை பாதியில் விட்ட ஏக்கம் அவன் ஆழ் மனதில் இருக்கவே செய்தது. ஒரு வேளை செல்வ செழிப்போடு வாழ்ந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதோ என எண்ணுவான். தன் தங்கைகளுக்கு தன் நிலைமை வந்து விடக்கூடாது என்ற வைராக்கியத்தோடு உழைப்பில் தன்னை முழுமையாக புதைத்துக் கொண்டான். இராத்தூக்கத்தை தவிர அவனுக்கு ஓய்வென்பதே கிடையாது.


எத்தனை துன்பம் வந்த போதிலும் அவன் துவண்டு போனதில்லை. தாயும், தங்கைகளும் அவன் மேல் வைத்திருக்கும் அன்புக்கு முன் அவனுக்கு துன்பமெல்லாம் ஒன்றுமேயில்லை. எத்தனை தடை வந்தாலும் தகர்த்தெறியும் அளவுக்கு அவர்களது பாசம் அவனுக்கு யானை பலத்தை அளித்துக் கொண்டிருந்தது.


இங்கு பலரின் கவலைகளுக்கு முக்கிய காரணமே இல்லாதவற்றை நினைத்து ஏங்குவது தான். ஒருவனிடம் உள்ளது அடுத்தவனிடம் இருப்பதில்லை. இவனிடம் இருப்பது முன்னையவனிடம் இருப்பதில்லை. எல்லாம் கிடைக்கப்பெற்றவர் என்று இந்த உலகில் ஒருவரும் கிடையாது. தன்னிடம் இருப்பவற்றை வைத்து திருப்தியடைவதில் தான் மகிழ்ச்சியின் இரகசியமே ஒளிந்துள்ளது. இவை தான் சந்தோஷின் சிந்தனையிலும் ஓடிக் கொண்டிருந்தது.


அடங்காத பசி வயிற்றைக் கிள்ள அறையை விட்டு வெளியே வந்தவன் சுற்றிலும் பார்வையை ஓட விட, சாப்பாட்டு மேசையில் இரவு கேக் கொண்டு வந்த சிறு பெண் இருப்பதை கண்டு, இவள் தான் தேன்மொழியின் தங்கை என்பதை ஊகித்துக் கொண்டான்.


அங்கு பணியாளர்கள் உணவு பரிமாற தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து "குட் மோனிங் கனி" என்றான் சிறு புன்னகையுடன். அவன் செய்கையை ஏதோ உலக அதிசயம் போல் பார்த்தாள் எட்டு வயதேயான கனிமொழி. தன்னிடம் தேவைக்கு மட்டும் ஓரிரு வார்த்தை முத்துக்களை உதிர்க்கும் அவள் தமக்கை என்றுமில்லாத திருநாளாக இன்று சிரித்துப் பேசினால் அது அதிசயம் தானே. "என்ன இப்பிடி முளிக்கிறே, ஸ்கூல் போகணும்ல, சாப்பிட்டு ரெடியாகு மா" என்று புன்னகை முகமாகவே கேட்டவனை கண்டு தன் கைகளை கிள்ளிக் கொண்டாள். "அக்கா நிஜமாவே நீங்க தானா பேசுறிங்க? முன்னாடி என் கூட சிரிச்சு பேசவே மாட்டிங்க... அதனால எனக்கு உங்க கூட சிரிச்சு பேச பயம்..." என்றவளை கண்டு பரிதாபமாக இருந்தது சந்தோஷிற்கு.


பெற்றோரின் பாசத்திற்காகவே ஏங்கிய தேன்மொழி அவளது பாசத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தங்கையை கூட புரிந்து கொள்ள தவறி விட்டாள். "முட்டாள் பெண்" என அவளை மனதுக்குள் அர்ச்சித்தவன், கனிமொழியுடன் உற்சாகமாக அரட்டையடித்துக் கொண்டே சாப்பிட்டான்.


கனிமொழியோடு பள்ளிக்கூடம் சென்றவன் தேன்மொழியின் வகுப்பை ஒருவாறாக கண்டுபிடித்து போய் அமர்ந்தான். 'இருபத்தொரு வயசில பள்ளிக்கூடம் போற ஜீவன் நானா தான் இருப்பேன்... என்ன விதியோ...' என பெருமூச்சு விட்டவன் பாடங்களை கவனித்து எல்லாவற்றையும் எழுதிக் கொண்டான்.


வகுப்பில் இருந்த ஒரு பையனின் பார்வை ஆர்வமாக இவன் முகத்தில் படிய அதை கண்டுகொண்டவன் 'ஓஹ்... துரை சைட்டடிக்குறாரு... இவ உடம்புல இருந்துக்கிட்டு இன்னும் நான் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்குமோ' என மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.


முதல் நாள் காய்ச்சலால் சந்தோஷின் வீட்டிலேயே அடைந்திருந்தாள் தேன்மொழி. அவர்களின் கவனிப்பில் நெகிழ்ந்திருந்தவளுக்கு தன் வீட்டு எண்ணமே வரவில்லை. அடுத்த நாள் காலை சந்தோஷின் நண்பன் தமிழ் வந்து வயலுக்கு போக கூப்பிடவே வேறு வழியில்லாமல் அவனோடு சென்றாள் சந்தோஷின் உருவத்தில் இருந்த தேன்மொழி.


அங்கு போய் வயலையும், போவோர் வருவோரையும் சுவாரஷ்யமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை "டேய் சந்தோஷ், என்னடா வயலையே பார்க்காதவன் மாதிரி வாயை பிளந்து நிக்கிற... வந்து வேலைய பாரு" என தமிழ் குரல் கொடுக்க, 'என்னது வேலையா... நமக்கு தான் வயல் வேலைனா என்னன்னு கூட தெரியாதே... இப்ப என்ன பண்றது...' என யோசித்தவள் தமிழ் செய்தவற்றையெல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்து விட்டு அவ்வாறே செய்ய முயற்சித்தாள். ஆனால் வயல் வேலை ஒன்றும் அவ்வளவு சுலபமில்லையே. எல்லாவற்றையும் தாறுமாறாக செய்தவளை கண்டு கொண்ட தமிழுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.


வீடு வந்து சேர்ந்தவளுக்கு மிகவும் அசதியாக இருந்தது. உடம்பெல்லாம் வலித்தது. ஆனாலும் தாங்கிக் கொண்டாள். அவளுக்கு இந்த வீட்டு மனிதர்களையோ இந்தக் கிராமத்தையோ விட்டு செல்ல மனது வரவில்லை. மனதின் வலியை விட உடலின் வலி எவ்வளவோ பரவாயில்லை. வலிகளை தாங்கிக் கொண்டு வாழ முடிவெடுத்தாள். முழு குடும்பமே சந்தோஷின் உழைப்பில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டவள் தன்னால் இந்த குடும்பம் பாதிக்கப்படக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக குடும்ப பாரத்தை ஏற்கத் தயாரானாள்.


சந்தோஷின் அறையின் ஒரு மூலையில் இருந்த அலுமாரியை ஆராயத் தொடங்கினாள். அது முழுவதும் புத்தகங்களும், சஞ்சிகைகளும், நாளிதழ்களும் நிரம்பி வழிந்தது. பெரும்பாலானவை விவசாயம் பற்றிய குறிப்புகளை தாங்கியிருப்பதை கண்டவள் உலகம் மறந்து உற்சாகமாக அவற்றுள் மூழ்கினாள். விவசாயத்தில் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பின்னாலுள்ள நுணுக்கங்களையும் விளக்கங்களையும் தெரிந்து கொண்டாள். விவசாயம் எனும் கடலின் ஆழத்தில் மூழ்கி முத்தெடுக்க முடிவெடுத்தாள். ஒரே நாளில் எல்லாம் கைப்படுவது சாத்தியமில்லை தான். இருப்பினும் முழு நம்பிக்கையோடும் தைரியத்தோடும் அடியெடுத்து வைக்கையில் தடைக்கற்கள் கூட படிக்கற்களாக மாறிப் போவது உண்மை தானே.


தேன்மொழியின் எண்ணம் நிறைவேறுமா? அவள் இங்கேயே , இப்படியே இருந்து விட முடியுமா?


தொடரும்...

💐💐💐விடிவெள்ளி💐💐💐
 

New Threads

Top Bottom