Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீயென நானும் நானென நீயும் 4

Messages
4
Reaction score
0
Points
1
அடுத்து வந்த நாட்களில் விடாமுயற்சியோடு வேலைகளை தொடர்ந்தாள் தேன்மொழி. ஓரளவு நன்றாகவே எல்லாம் நடைபெற்றது. ஆனால் வேறு விதங்களில் பிரச்சினைகள் தலைதூக்கின.
வெளியில் யாராவது இவளிடம் வலிய வந்து பேசுகையில் செய்வதறியாது தவிப்பாள். சந்தோஷிற்கு பழக்கமானவர்களை இவளுக்கு எப்படி தெரியும்? அவர்கள் கேட்பதற்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வதும், அவர்கள் சொல்வதை கேட்டு 'ஆமாம்' போடுவதுமாக ஒரு வழியாக சமாளித்து வந்தாள்.
பகல் வேளையில் தமிழோடு சேர்ந்து வயலில் சாப்பிடுகையில் ஒரு நாள் சிறு வயது நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தான் இவளிடம். "மச்சான்... நீ கூட பத்தாவது படிக்கும் போது ஒரு பொண்ணு பின்னாடி சுத்தினியே... அவ ஒரு நாள் உன்னை அண்ணான்னு கூப்பிட்டுட்டாளே... செம்ம பல்பு மச்சான் அது..." என்று அடக்க முடியாமல் வயிற்றைப் பொத்திக் கொண்டு சிரிக்க, அவள் பீறிட்டு வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்க படாத பாடு பட்டாள். ஏனெனில் சந்தோஷ் இந்த இடத்தில் இருந்தால் எப்படி நடந்து கொள்வான் என்பதை மனதில் இருத்தி அதன்படி நடந்து கொள்ள எத்தனித்தாள்.
"அவ பேரு கூட என்னவோ... ம..." என்று இவளைக் கேள்வியாக நோக்க, "எனக்கு நினைவில்ல" என்றவளை, "டேய் மச்சான் நடிக்காதடா... பர்ஸ்ட் லவ்வ யாராவது மறப்பாங்களா... சும்மா சொல்லுடா" என்று உந்த, 'இவன் வேற... அடேய்... அந்த சந்தோஷ் யாரை லவ் பண்ணான்னு எனக்கு எப்படி டா தெரியும்... யாரை வேணாலும் சமாளிச்சுக்குவேன்... ஆனா இவன் நினைவு மீட்டியே உயிர வாங்குறான்...' என மனதுக்குள் அவனை நன்றாகத் திட்டியவள், சமாளிக்கும் விதமாக ஏதோ வாய்க்கு வந்த பெயரை தட்டி விட்டாள்.
"ம்ம்... மச்சான்... அப்புறம் ஒரு நாள்... " என்று அடுத்த நினைவுலகத்தில் காலடி எடுத்து வைக்கப் போனவனை "அத இன்னொரு நாள் பேசிக்கலாம்... இப்ப சாப்பிட்டு வேலையப் பாரு" என்று கூறி அவனை திசை திருப்பி விட்டாள்.
இப்படியே இரு வாரங்கள் உருண்டோடியது. சந்தோஷை குடும்பத்தாரின் நினைவு வாட்டியது. இன்னொருவர் உருவத்தில் வாழும் இந்த வாழ்க்கை முடிவுரையா தொடர்கதையா என தெரியாமல் குழம்பினான். யாரிடம் போனால் இதற்கெல்லாம் விடை கிடைக்கும் என தெரியவில்லை. இந்த இரண்டு வாரங்களில் அவனை சுற்றி நடக்கும் அனைத்தையும், அனைவரையும் கவனித்துக் கொண்டு தானிருந்தான். எல்லாம் இயல்பாகவே இருந்தது. சந்தேகிக்கும் படி எதுவும் புலப்படவில்லை.
இந்த இடைப்பட்ட நாட்களில் சில மாற்றங்களையும் நிகழ்த்தியிருந்தான் சந்தோஷ். வலிய போய் தேன்மொழியின் தாய் தந்தையிடம் உரிமையாக பேசினான். விடுமுறை நாட்களில் அடம்பிடித்து குடும்பமாக வெளியே எங்காவது சென்று நேரம் செலவழித்தான். அவர்கள் மீது தேன்மொழி வைத்திருக்கும் பாசத்தை தேன்மொழியின் நிலையிலிருந்து வெளிப்படுத்தினான். பிள்ளைகளின் ஏக்கத்தை பெற்றவர்கள் புரிந்து கொண்டனர். அங்கே ஒரு அன்பான குடும்பம் அழகாக மலரத் தொடங்கியது.
ஒரு நாள் சந்தோஷிற்கு அடி வயிற்றில் தீவிரமான வலியெடுக்கவே, தன்னில் நிகழ்ந்த சில மாற்றங்களை கண்டு ஆடிப் போனான். பயத்தில் உடலெல்லாம் நடுங்கியது. பெண்களுக்கு வரும் மாதவிடாய் தான் அவனை இந்தளவுக்கு ஆட்டம் காணச் செய்தது. அதைப் பற்றி தெரிந்திருந்த போதிலும், அனுபவப்படுகையில் அந்த ஆண்மகன் பதறித் தான் போனான்.
மூன்று நாட்களாக வலி உயிரை வாங்க, வயிற்றை பொத்திக் கொண்டு, அறைக்குள்ளேயே அடைந்திருந்தான்.
பல நேரங்களில் அவன் விழிகளிலிருந்து சில கண்ணீர் முத்துக்கள் உருண்டோடியது. அது தாங்க முடியாத வலியால் வந்த கண்ணீரா அல்லது பெண்களின் கஷ்டத்தையும், மனோபலத்தையும் நினைத்து வெளிப்பட்ட கண்ணீரா என்பதை அவனே அறிவான். அவன் வாழ்நாளில் இப்படிப்பட்ட வலியை ஒரு போதும் சந்தித்ததில்லை என்பதே உண்மை. அவன் மனதில் பெண்களை பற்றிய நல்லெண்ணம் பல மடங்கு கூடிக் கொண்டே சென்றது. வலியோடே தூங்கிப் போனவனுக்கு ஒரு விசித்திரமான கனவு வந்தது. அங்கு தேன்மொழிக்கும் அதே கனவு.
இருவரும் புதுமையான ஒரு உலகத்திலே எதிரெதிரே நின்றிருந்தார்கள். மஞ்சள் நிறத்தில் பஞ்சு போன்ற மேகத்தின் மீது இருந்தார்கள். சுற்றுமுற்றும் இருந்த இரம்மியம் மனதை இதமாக்கவே, அதில் இலயித்துப் போய் இருந்தவர்கள் "சந்தோஷ்... தேன்மொழி... உங்களை ஆழ் மன உலகத்திற்கு வரவேற்கிறேன்"
என கணீரென்று ஒலித்த குரலில் சுற்றுமுற்றும் பார்வையை சுழல விட்டார்கள். அங்கு யாரும் இல்லை. "உங்கள் மனதின் கேள்விகளுக்கான அனைத்து விடைகளும் இங்கே தான் கிடைக்கப் போகிறது. மனம் திறந்து பேசுங்கள்" என்று விட்டு அந்தக் குரல் மறைந்தது.
"நீங்க யாரு... இது என்ன இடம்... என்னோட இந்த நிலைமைக்கு என்ன காரணம்..." என ஒரு சேர கேட்டவர்களுக்கு நெடு நேர சிரிப்பை பதிலாக அளித்தது அக் குரல்.

தொடரும்...



💐💐💐விடிவெள்ளி💐💐💐
 
Top Bottom