Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீயென நானும் நானென நீயும்

Messages
4
Reaction score
0
Points
1
நள்ளிரவு நேரத்தில் சாளரத்தின் அருகே கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு இருளை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஒருத்தி.
சில்லென்ற குளிர்காற்று, இரவிற்கே உரித்தான ஆழ்ந்த அமைதி, மேகங்களுக்குள் மறைந்தும் வெளிவந்தும் நீந்தி விளையாடும் வட்ட நிலா- இவை எதையும் இரசிக்கும் மனநிலை அவளுக்கு இல்லை போலும். சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் அவள்.
பதினாறு வயது தான் இருக்கும். அவள் இருக்கும் அறையின் ஒவ்வொரு பொருளிலும் பணக்காரத்தனம் நிரம்பி வழிந்தது. இந்த வயதில், இவ்வளவு இருந்தும் அப்படி என்ன சோகம் இருந்து விட முடியும் அவளுக்கு? ஒரு வேளை அந்த வயதிற்கே உரிய பருவக்கோளாறினால் இருக்குமோ என்று பார்த்தால் நிச்சயமாக அப்படி எதுவும் இல்லை. இல்லாவிட்டால் பரீட்சையில் கோட்டை விட்டு விட்டாள் போலும் என்று பார்த்தால் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த அவளது பரீட்சை முன்னேற்ற அறிக்கையில் பதிந்திருந்த குண்டு எழுத்துக்கள் சொல்லாமல் சொல்லியது அவள் படிப்பிலும் சோடை போகவில்லை என்பதை. அதில் அவளது பெயர் தேன்மொழி என பெரிய எழுத்துக்களில் மின்னிக் கொண்டிருந்தது.
இருட்டிலிருந்து விழிகளை மெல்லப் பிரித்து கடிகாரத்தை காண அது பதினொன்று ஐம்பது என காட்டியது. இன்னும் சற்று நேரத்தில் நிகழவுள்ளவற்றை ஊகித்துக் கொண்டவளின் மனதில் வெறுமையே குடிகொண்டிருந்தது. எழுந்து வந்து மெத்தையில் விழுந்தவள் போர்வையை இழுத்துப் போர்த்தி கண்களை மூடிக் கொண்டாள். ஆனால் உறக்கம் அவளைத் தழுவவில்லை. இன்றிலிருந்து சரியாக பதினாறு வருடங்களுக்கு முன் அப்படியொரு சம்பவம் நிகழாமலே இருந்திருக்கலாம். இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவேயில்லை என ஊமையாக அழுதவள் அப்படியே உறங்கிப் போனாள்.
இவள் இருக்கும் இடத்திலிருந்து பல மைல்கள் தூரத்தில் எங்கோ இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் கட்டாந்தரையில் பாய் விரித்து ஆழமான உறக்கத்தில் இருந்தான் சந்தோஷ். படுத்தவுடன் உறக்கம் தழுவிக் கொள்வது ஒரு வரம். அந்த வரம் அவனுக்கு எப்பொழுதும் வாய்த்தது. பகல் முழுக்க கடின உடல் உழைப்பிலேயே மூழ்கியிருப்பவனுக்கு படுத்ததும் தூக்கம் வருவதில் எந்த அதிசயமும் இல்லையே. நாளையோடு அவன் இந்த உலகத்திற்கு வந்து இருபத்தொரு ஆண்டுகள் முடியப் போகிறது. ஆனால் அது பற்றிய நினைவு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் இவனுக்கோ, அந்த
வீட்டில் உள்ள மற்றவர்களுக்கோ இல்லை போலும்.
அங்கு சரியாக பன்னிரண்டு மணிக்கு தேன்மொழியின் அறைக்கதவை திறந்து கொண்டு வந்த மூவர் அவளை சுற்றி நின்று,
"ஹேப்பி பேர்த் டே டு யூ...
ஹேப்பி பேர்த் டே டு யூ...
ஹேப்பி பேர்த் டே டியர் தேனு...
ஹேப்பி பேர்த் டே டு யூ..." என சத்தமாக பாட, பதறியடித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தவள் மலங்க மலங்க விழித்தாள். தன்னை சுற்றியும் கண்களை ஓட விட்டவளுக்கு உலகமே புதியதாய் தெரிந்தது. ஐந்து நட்சத்திர ஹோட்டலின் தரத்தில் இருந்த அந்த அறையை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். இதற்கு முன் இப்படியெல்லாம் படங்களில் மட்டுமே கண்டிருக்கிறாள். அருகில் நின்ற ஒரு சிறு பெண்ணின் கையில் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட பெரிய கேக் இருந்தது. மற்ற இருவரில் ஒருவர் ஆண், மற்றவர் பெண். நடுத்தர வயதில் இருந்தார்கள். கண்களை கசக்கிக் கொண்டவள் "நீங்க யாரு? நான் எங்கே இருக்கேன்?" என்று கேட்டவளை விநோதமாக பார்த்தவர்கள் பின் சிரித்துக் கொண்டு "என்ன தூக்கக் கலக்கத்துல இருக்கிறியா? ஏதாவது கனவு கண்டியா?" என்றவர்கள் "நாங்க உன் மம்மி டேடி, இது உன் தங்கச்சி. கேக் கட் பண்ணு" என்று சொல்ல, 'ஒரு வேளை நான் கனவு காண்கிறேன் போல. நிஜத்தில் தான் இந்த வாழ்க்கை அமையவில்லை. கனவிலாவது அனுபவிப்போமே' என நினைத்தவள் கேக்கை வெட்டி அவர்களுக்கு ஊட்டி விட, அவர்களும் இவளுக்கு ஊட்டி விட்டு அறையை விட்டு அகன்றார்கள்.
அந்த அறையையே கண்களால் துலாவியவள் 'நான் இது போன்ற ஒரு பணக்கார வாழ்க்கையை தானே வாழ விரும்புகிறேன். இன்றாவது எனக்கு இப்படியொரு அழகான கனவு வந்ததே' என நினைத்துக் கொண்டிருக்க, தூக்கம் கண்ணைக் கட்டியது. 'என்ன இது... கனவுக்குள் தூக்கம் போல. அப்படியே உண்மையாக வாழ்வது போலவே இருக்கிறதே' என்றவளை உறக்கம் அணைத்துக் கொண்டது.
பறவைகளின் கீச்சிடல் இன்னிசையென காதில் ஒலிக்க, இளங்காலை தென்றல் சாளரம் வழியாய் சாமரம் வீச, பூக்களின் வாசம் வந்து நாசியை வருடிச் செல்ல கண் மூடி படுத்திருந்த சந்தோஷிற்கு மெதுவாய் விழிப்பு தட்டியது. இந்த அனுபவங்கள் அத்தனையும் அவனுக்கு புதியதாய் இருந்தது. கண்களை திறவாமலே ஆழமாக மூச்செடுத்து, செவிகளை கூர் தீட்டி அணு அணுவாய் அனுபவித்துக் கொண்டிருந்தான் அந்த இதமான சூழ்நிலையை.
பின் மெதுவாக விழிகளை திறந்தவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். தான் காண்பது கனவா நனவா என்று புரியாமல் கண்களை கசக்கிக் கொண்டான். மறுபடியும் அதே காட்சி தான் கண் முன் தோன்றியது. சிறியதொரு அறை, பூசப்படாத சுவர், மேலே பொருத்தப்பட்டிருந்த பழைய மின்விசிறி மிக மிக மெதுவாக இயங்கிக் கொண்டிருக்க, தரையில் விரிக்கப்பட்டிருந்த பண் பாயின் மீது அமர்ந்திருந்தான் அவன். குழப்பத்தில் தலையைப் பிடித்துக் கொண்டவனுக்கு ஏதோ வித்தியாசமாகப் பட, தலை முடியை தொட்டுப் பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்தான். 'ஐயோ என் நீளமான கூந்தல் எங்கே போச்சு?' என பதறி எழுந்தவன் "யாராவது இருக்கிறிங்களா?" என உரக்கக் கத்தினான். செவியில் ஒலித்த தன் குரலை கேட்டு ஆடிப் போனான். 'ஏன் என் குரல் ஆம்புளயோட குரல் போல கேக்குது?'
அறையில் கண்களை சுழல விட்டவன் மூலையில் இருந்த கண்ணாடியின் முன் போய் நின்றான். இதயத் துடிப்பு பல மடங்கு அதிகரிக்க உச்சகட்ட அதிர்ச்சியில் மயங்கி சரிந்தான்.
தொடரும்...
💐💐💐விடிவெள்ளி💐💐💐
 

New Threads

Top Bottom