அத்தியாயம் 3:
சுவடிகளை வாசித்துக்கொண்டே வந்தார் விந்தையன். அவரது முகத்தில் மகிழ்ச்சி, ஆர்வம், என அனைத்தும் போட்டி போட்டன. அப்படி என்ன தான் அந்தச் சுவடிகள் தெரிவிக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள தித்தன் அவசரப்பட்டான். மரியாதை கருதி வாயே திறக்காமல் அமைதி காத்தான். ஏறத்தாழ அரை மணி நேரம் சென்ற பின் விந்தையன் சுவடிகளைக் கீழே வைத்தார்.
"தித்தா! மிகவும் நல்ல செய்தி கிடைத்துள்ளதப்பா! நமது செண்பகப் பொழில் பெரும் பெருமை பெறப்போகிறது" என்றார்.
காதில் தேன் பாய்வது போலத் தோன்ற நண்பனை நோக்கினான் தித்தன்.
"சற்று விவரமாகச் சொல்லுங்களேன் ஐயனே" என்றான் வேலன்.
"சொல்கிறேன் அப்பா! இந்தச் சுவடியில் இப்போது பிறந்துள்ள இளவசரன் சடையவர்மனின் சாதகப் பலன் இருக்கிறது. அதன் படி அவன் தெற்குப்பகுதியில் மலையை அடுத்துள்ள இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு நல்லாட்சி புரிவான் என்றும், அவனுக்கு உற்ற துணையாக இங்கே இரு தினங்களுக்குள் பிறந்த பாலகன் ஒருவன் உதவுவான் என எழுதப்பட்டுள்ளது."
இரு நண்பர்கள் மற்றும் சிவநேசன் மௌனமாக இருந்தனர். அவர்களுக்குப் புரியவில்லை என தெரிந்து கொண்டார்.
"எனக்கு இருக்கும் ஆர்வத்தில் எனக்குத் தெரியும் அத்தனையும் உங்களுக்கும் தெரியும் என எண்ணிப் பேசி விட்டேன். விளக்கமாகச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.
மூவரும் பணிவோடு கேட்கத் தயாரானான்ர்கள்.
"மன்னர் குலக் குழந்தைகள் பிறக்கும் போது, பொதுப்பலன் சுவடிகள் சொல்வதும்., பிறந்த குழந்தையின் சாதகப் பலனும் பெரும்பாலும் ஒன்று போலவே அமையும். ஆனால் மிகவும் சில சமயங்களில் தெய்வ அருள் இருக்கும் போது இப்படி வேறு பாடாக அமைவதும் உண்டு. உதாரணமாக விக்கிரமாதித்தனின் சாதகம் 1000 ஆண்டு வாழ்வான் என இருந்தது. அவனது அமைச்சன் பட்டியோ 2000 ஆண்டுகள் வாழ்வான் என இருந்தது. விதியை மதியால் வெல்லலாம் என உணர்ந்த பட்டி, நாடாறு மாதம் காடாறு மாதம் என வாழ்ந்தான். அதாவது சாதகத்தில் அவன் தலைநகரம் உச்சையினியில் வாழும் ஆண்டுகள் 1000, அப்படிப் பார்க்கும் பது அவன் 1000 ஆண்டுகள் மட்டுமே அங்கே வாழ்ந்தான். இது தான் விதியை மதியால் வெல்வது" என்றார் விந்தையன்.
அவரது பேச்சு குழப்பத்தைக் கூடியதே அன்றிக் குறைக்கவில்லை. மேலும் மௌனம் காத்தனர் மூன்று இளைஞர்களும்.
"இப்போது, அதே போல இரு சுவடிகளும் வெவ்வேறு பலன்களைச் சொல்கின்றன. அப்படியானால் இம்முறையும் விதியை மதியால் வெல்ல முடியும் என்பதற்கான நிமித்தம் தான் இது. இதனை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். பொதுப்பலனின் படி இளவசரன் சடைய வர்மனால் மதுரையில் வாழ முடியாது. ஆனால் அவனது சாதகப் பலன் படியோ அவன் தெற்கு நோக்கி வந்து மலையை ஒட்டிய இடத்தில் பெரிய நகரை உருவாக்குவான் என்றிருக்கிறது. இப்போது புரிகிறதா?" என்றார்.
தித்தன் புரிந்து கொண்டான். ஆனால் வேலனுக்கும் சிவநேசனுக்கும் புரியவில்லை.
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இளவரசர் சடைய வர்மரை நாம் இங்கு அழைத்து வந்து செண்பகப்பொழிலை அவரது தலை நகரமாக கொள்ளச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்கள். அப்படித்தானே ஐயனே?" என்றான் தித்தன்.
"அப்படித்தான் என கூற முடியாது. ஏனெனில் இதில் பல அரசியல் கலைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன."
"ஆனால் ஐயனே! ஓலையில் இன்னொரு குழந்தை துணையாக இருக்கும் என எழுதியிருப்பதாகச் சொன்னீர்களே? அது பற்றிக் கூறுங்களேன்" என்றான் வேலன்.
"ஆம்! அதுவும் மிகவும் முக்கியம். எப்போதும் அரசரகள் பிறக்கும் போது அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பனாகவும், அமைச்சனாகவும் விளங்க இருக்கும் குழந்தையும் பிறக்கும் அல்லது ஏற்கனவே பிறந்திருக்கும். முன்னாட்களில் அவை சேனாதிபதியின் வீட்டிலோ, அமைச்சரின் வீட்டிலோ தலை நகரத்திலேயே தான் பிறந்திருக்கும். அப்படிப்பட்ட குழந்தையை அடையாளம் கண்டு இளவரசனோடு சேர்த்து வளர்ப்பார்கள். ஆனால் இம்முறை அந்தக் குழந்தை செண்பகப் பொழ்லில் தான் பிறந்திருக்கிறது என ஓலைகள் கூறுகின்றன மக்களே" என்றார்.
தித்தனுக்கு பெரும் பரபரப்புத் தோன்றியது. ஐயன் சொல்வதைப் பார்த்தால், அது ஏன் என் மகனாக இருக்கக் கூடாது? அவன் பிறந்த வேளை தானே எனக்கு குரு நாதர் அகத்தியரின் தரிசனம் கிடைத்தது?
"ஐயா! அந்தக் குழந்தையை எப்படி அடையாளம் காண்பது?" என்றான் தித்தன்.
"ஓலையில் உள்ள குறிப்பின் படி அந்தக் குழந்தை கடந்த இரு தினங்களுக்குள்ளாகப் பிறந்திருக்க வேண்டும், சூரியனின் முதல் கிரணங்கள் தரையைத் தொடும் நேரம் அக்குழந்தை பூமிக்கு வந்திருக்கும். அது தவிர அக்குழந்தையின் சாதக அமைப்பும் விளக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தெரிந்து அப்படி யாருக்காவது ஆண் குழந்தை பிறந்திருக்கிறதா?" என்றார் விந்தையன்.
வேலனும் சிவனேசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"ஐயனே! இதோ தித்தனுக்கே கூட நேற்று தான் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்த நேரம் தான் எங்களுக்கு குரு நாதர் அகத்தியர் தரிசனம் கொடுத்து அருள் செய்தார்" என்றான் வேலன் மகிழ்ச்சியோடு.
ஒரு நிமிடம் விந்தையன் தித்தனைக் கூர்ந்து நோக்கினார். அவரது முகம் புன்னகைக்குப் போயிற்று.
"எல்லாமே ஈசன் செயல்! நாம் தேடும் குழந்தை, உன் மகனாகவே இருக்கலாம் தித்தா! எதற்கும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவன் சாதகம் வேண்டுமே எனக்கு? இருக்கிறதா உன்னிடம்?" என்றார்.
"மன்னிக்க வேண்டும் ஐயனே! குழந்தையே நேற்று தான் பிறந்தான். அதற்குள் அவன் சாதகத்தை எப்படிக் கணிப்பது?"
"கவலை வேண்டாம்! நீ சென்று உன் வீட்டுப் பெரியவர்களிடம் குழந்தை பிறந்த நாழிகை, பொழுது எல்லாம் வாங்கி வா. நானே கணித்து விடுகிறேன். " என்றார்.
"இப்போதே சென்று வாங்கி வருகிறேன் ஐயனே" என்று எழப் போன தித்தனை கை காட்டி அடக்கினார் விந்தையன்.
"இல்லை! இன்னமும் நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. ஆகையால் உன் நண்பன் வேலனை அனுப்பு. அவன் சென்று நான் கேட்ட விவரங்களை வாங்கி வரட்டும்." என்றார்.
"இதோ! இப்போதே புறப்பட்டு விட்டேன் ஐயனே" என்று எழுந்தான் வேலன்.
"உன்னை புறந்தள்ளுவதாக எண்ணாதே வேலா! நீ தொரும்பி வந்தவுடன் உன் நண்பன் உன்னிடத்தில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வான். நேர விரயத்தைத் தடுக்கவே இந்த ஏற்பாடு" என்றார்.
"புரிந்தது ஐயனே" என்று வணங்கி விட்டு வெளியேறினான் வேலன்.
சிவநேசனையும் தித்தனையும் ஏறிட்டார் விந்தையன்.
"மக்களே! விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் இப்போது அரசியல் என்ற சுழலில் சிக்க இருக்கிறீர்கள். ஆகையால் எப்போதும் திட மனத்துடன் இருங்கள். உங்களது விசுவாசம் எப்பக்கம் என்பதை இப்போதே தீர்மானித்துக்கொள்ளுங்கள்." என்றார்.
"ஐயா! எப்போதும் என் விசுவாசமும் அன்பும் பாண்டிய நாட்டிற்கு தான். அதில் ஐயமே இல்லை" என்றான் தித்தன். அதனை அப்படியே வழி மொழிந்தான் சிவனேசன்.
"நல்லது! தித்தா! விதியை மதியால் வெல்ல வேண்டும் எனக் கூறினேன் அல்லவா? அதற்கான நேரம் இப்போதே வந்து விட்டது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நாம் தலை நகர அரசியலில் பங்கு கொள்ள வேண்டும். நீயும் சிவநேசனும் அதற்குத் தயாரா?" என்றார்.
துணுக்குறான் தித்தன்.
"ஐயனே! நானா? தலை நகர அரசியலில் தலையிடுவதா? அது பெரும் ஆபத்தல்லவா? அதுவும் போக நான் போர்க்கலை தான் பயின்றேனே தவிர, அரசியல் தந்திரம் பயிலவில்லையே? அப்படி இருக்க நான் எப்படி....?"
"உன் தயக்கம் புரிகிறது இளைஞனே! ஆனால் இதைச் செய்ய தகுதியானவன் நீ தான். உனக்குத் துணையாக சிவநேசன் இருப்பான். அவ்வப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்."
"உத்தரவு ஐயனே"
"மிகவும் முக்கியமான விஷயம். சேர நாட்டு ஒற்றர்கள் நம் பகுதியில் மிக அதிகம். நாம் இப்போது பேசிய விஷயங்கள் கொஞ்சம் கூட வெளியில் தெரியக் கூடாது. நீங்கள் இருவரும் அரசியலில் ஏதோ காய் நகர்த்தப் போவதாகத் தெரிந்தால் உங்கள் உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம்.."
"நாங்கள் தயாராக இருக்கிறோம் ஐயனே!"
"உங்களை விலை பேசக் கூட ஆட்கள் வரக்கூடும். பொன்னாசை, பெண்ணாசை இவற்றைத் துறந்து நம் நாட்டின் நலமே பெரிதென்று நீங்கள் செயல்பட வேண்டும்."
"அப்படியே செய்கிறோம் ஐயனே" என்றான் தித்தன்.
"உன் நண்பன் வேலனிடம் விஷயத்தைச் சொல்லலாம். அவன் நம்பத்தகுந்தவன் தான் என்றாலும் முழு விவரங்களைச் சொல்ல வேண்டாம். புரிகிறதா?" என்றார்.
இரு இளைஞர்களும் தலையை ஆட்டினர்.
சிந்தனை வயப்பட்டான் தித்தன்.
"இன்று காலை வரை நான் எந்தப் பொறுப்பும் இல்லாத சாதாரண காவலன். ஆனால் இப்போதோ? ரகசிய வேலையில் ஈடுபட வேண்டும் என்கிறார் குரு நாதர். இதனை நான் செவ்வனே செய்தாக வேண்டும். இல்லையென்றால் பாண்டிய நாட்டின் வருங்காலமே கேள்விக்குறியாகி விடும். சேர ஒற்றர்கள் வேறு இருக்கலாம் என்கிறார் ஐயன். அவர்களைச் சமாளிக்க வேண்டும். நேருக்கு நேராக மோதினால் என் ஈட்டிக்கும், வாளுக்கும் அவர்கள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள். ஆனால் உறங்கும் நேரம் தாக்கினால் என்ன செய்ய? ஆகையால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலனிடம் எந்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்கிறார் ஐயன். ஆனால் எனக்கே நாம் என்ன செய்யப் பகிறோம் எனத் தெரியவில்லையே?" என எண்ணிக்கொண்டான்.
"எங்கே உன் கவனம் தித்தா?" என்றார் ஐயன்.
"இல்லை ஐயனே! நான் செய்யப் போகும் செயல் எத்தனை முக்கியமானது என சிந்தித்துக்கொண்டிருந்தேன்."
"நல்ல விஷயம் தான். செய்யப் போகும் செயலின் தீவிரம் புரிந்தால் தான் செயல் சிறப்பாகும்."
"ஐயனே! நான் எப்போது கிளம்ப வேண்டும்?"
"இன்றைக்கு வியாழக் கிழமை. நாளை அல்லது மறு நாள் நானே உங்களை அழைக்கிறேன். அது வரையில் கவனமாக இருங்கள்"
"சரி ஐயனே"
மேலும் சில முக்கிய விவரங்களைக் கூறினார் விந்தையன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரம் வேலன் கையில் துணி முடிச்சோடு வந்தான்.
"ஐயனே! தித்தன் மகன் பிறந்த நேரம், நாழிகை எல்லாமே இருக்கிறது" என வணங்கிக் கொடுத்தான்.
"சரி! நீங்கள் மூவரும் வெளியில் காத்திருங்கள். நான் சாதகம் கணிக்க எப்படியும் ஒரு நாழிகையாவது ஆகும். நானே அழைக்கிறேன்." என்றார்.
மூவரும் வணங்கி விட்டு வெளியில் வந்தனர். சற்று தொலைவில் ஒரு மருத மரம் தன் வேர்களை வெளியில் நீட்டி ஆசனம் போல அமைத்திருந்தது. அதில் சென்று அமர்ந்து கொண்டான் வேலன். அவனைத் தொடர்ந்து சென்றான் தித்தன்.
"தித்தா! ஐயன் என்ன சொன்னார்?"
"என்னையும், சிவனேசனையும் மதுரை செல்லுமாறு கூறியிருக்கிறார். அநேகமாக ஞயிற்றுக்கிழமை கிளம்பலாம் என நின்னைக்கிறேன்."
"மதுரைக்கா? என்ன விஷயம்?"
"அது இன்னமும் எங்களுக்கே தெரியவில்லை" என்றான் சிவநேசன் அவசரமாக.
"அப்படியா தித்தா?"
தித்தன் எதுவும் பேசாமல் மௌனம் சாதித்தான்.
"ஓ! என்னிடம் சொல்லக் கூடாத ரகசியமோ?" என்றான் வேலன் கசப்பாக.
"அப்படி இல்லை நண்பா! எதுவுமே இன்னமும் நிச்சயமாகாத நிலையில் உன்னிடம் நான் என்னவென்று சொல்ல?" என்றான் தித்தன் சங்கடமாக.
"ஹூம்! இப்போது நீ பெரிய மனிதன் ஆகி விட்டாய் அல்லவா? கேவலம் சாதாரண காவலன் என் நட்பு உனக்குத்தேவையில்லை போல. சரி! உன்னிஷ்டப்படியே செய்" என்று சொல்லிக் கிளம்பினான்.
"எங்கே செல்கிறாய் வேலா?"
"உன்னைத்தவிரவும் எனக்கு உண்மையான நண்பர்கள் உண்டு தித்தா! புதிது வந்தவுடன் பழையதை மறக்கும் நண்பன் நானில்லை! நான் என் பழைய நண்பர்களைக் காணத்தான் செல்கிறேன். " என்றான் வேலன்.
"தித்தனை தவறாக நினைக்காதே வேலா! அவன் பாவம் என்ன செய்வான்? ஐயன் அவனது வாயைக் கட்டிப் போட்டு விட்டார். அதற்காக நீ அவனது நட்பைத் தூக்கியெறியாதே! தித்தனைப் போல ஒரு நண்பன் கிடைக்க மாட்டான்."
"உண்மை தான் வேலா! இனி அவன் உன் நண்பன். நான் போகிறேன்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். குற்றுச் செடிகளை விலக்கியபடி நடந்து செல்லும் நண்பனை வேதனையோடு பார்த்தான் தித்தன்.
"இனி அவனை நாம் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் தித்தா" என்றான் சிவநேசன்.
"ஏன்?"
"அவனுக்கு ஏதோ சந்தேகம் தோன்றி விட்டது! நாம் ஏதோ ரகசிய வேலையில் ஈடுபடப் போகிறோம் என்று ஊகித்திருப்பான். இனி அவனை சேர ஒற்றர்கள் தொடர்பு கொள்வார்கள். ஆகையால் தான் கண்காணிக்க வண்டும் என்று சொன்னேன்."
"சேசே! என்ன வார்த்தை சொல்லி விட்டாய் சிவனேசா! என் நண்பன் சேர ஒற்றனில்லை. எனக்கு நன்றாகத் தெரியும்."
"நானும் அவனை சேர ஒற்றன் எனச் சொல்லவில்லை தித்தா! அவர்கள் வேலனைத் தொடர்பு கொள்வார்கள் என்றேன் அவ்வளவு தான். கேள்! வேலன் இப்போது உன் மீது கடுங்கோபத்தில் இருக்கிறான். அதை விசிறி விட்டால் போதும். அதோடு பொன்னும் பொருளும் தருவதாகச் சொல்வார்கள். இது போதாதா ஒருவன் துரோகியாக மாற?"
"ஐயனின் சீடன் என்பதால் உன்னை விடுகிறேன். என் நண்பன் வேலன் ஒரு போதும் அப்படிச் செய்ய மாட்டான். இனி ஒரு முறை அவனைப் பற்றித் தவறாகப் பேசினால் நம் நட்பு உடைந்து போகும். எச்சரிக்கிறேன்." என்றான் தித்தன் கண்களில் சினம் பொங்க.
"உன்னை எச்சரிக்க வேண்டியது என் கடமை. பிறகு உன் இஷ்டம்" என்றான் சிவனேசன்.
மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான் தித்தன்.
"என் வாழ்க்கை ஏன் இப்படி ஆகி விட்டது? சிறு வயதிலிருந்து ஒன்றாக உண்டு உறங்கி விளையாடி மகிழ்ந்த என் நண்பன் வேலன் என்னை விட்டுச் சென்று விட்டானே? நான் அப்படி என்ன தவறு செய்தேன்? எப்படியாவது அவனைக் கண்டு பேசி சமாதானம் செய்ய வேண்டும். நிச்சயம் அவன் எனக்கு துரோகம் செய்ய மாட்டான். ஆகையால் அவனிடம் உண்மையைக் கூறுவதால் தவறு எதுவும் நிகழாது. இன்று மாலையே அவனை சந்தித்துப் பேசுகிறேன்." என்று உறுதி செய்து கொண்டான்.
இருவரும் மௌனமாகவே அமர்ந்திருந்தனர். சற்று நேரத்தில் விந்தையைன் அழைக்கும் ஒலி கேட்க எழுந்தார்கள்.
"உன் மகன் தான் அந்தத் துணைவன் தித்தா! வருங்கால மன்னருக்கு உற்ற துணையாக இருந்து அத்தனை அரிய செயலையும் செய்ய தூண்டு கோலாக இருக்கப் போகும் அமைச்சன் இவன் தான். " என்றார்.
மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான் தித்தன். பேச்சே வரவில்லை.
"தித்தா! உன் மகனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய்?"
"இன்னமும் பெயரிடவில்லை ஐயனே"
"ஓ! என் மூலம் தான் அது நடக்க வேண்டும் என ஈசன் திருவுளம் கொண்டான் போலும். மிக்க நன்று! இவனால் நம் செண்பகப் பொழில் ஊரே மாறப் போகிறது. ஆகையால் அவனுக்கு செண்பகப் பொழிலன் எனப் பெயர் சூட்டுகிறேன். நாளை நீ பெயர் சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய் தித்தா! நானே முன்னின்று நடத்தி வைக்கிறேன்;" என்றார் விந்தையன்.
மகிழ்ச்சி மிகுந்து இருந்தாலும் நண்பன் வேலனின் செயலால் சிறு வேதனை தோன்ற தன் வீடு நோக்கி நடந்தான் தித்தன்.
அங்கே செண்பகப் பொழிலின் மற்றொரு மூலையில் மலைக்குகை ஒன்றில் ஒரு சில மர்ம நபர்களோடு ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தான் வேலன்.