பொதிகையின் மைந்தன்...
அத்தியாயம் 1:
மாலை மயங்கும் நேரம். கோடையின் சூரியன் தன் உக்கிரத்தை முழுவதும் காட்டும் சித்திரை மாதம். ஆனாலும் செண்பகப் பொழில் பெயருக்கேற்ப எழில் சூழ்ந்து குளிர்ந்து காணப்பட்டது. ஊரில் எல்லையில் பொதிகை மலை ஓங்கி உயர்ந்து நான் மிகவும் பழைமையானவன் என்று சொல்லி பெருமிதத்தோடு நின்று கொண்டிருந்தது. பகல் முடிந்து இரவின் ஆதிக்கம் தொடங்கப் போவதன் அறிகுறியாக பறவைகள் மரங்களில் ஒடுங்கின. வண்டுகள் மற்றும் இரவு நேர விலங்குகளின் குரல்கள் மெல்ல ஒலிக்க ஆரம்பித்தன. சித்திர நதி அருவியாகப் பெருகி விழும் இடத்தில் சற்றே ஒதுங்கினாற் போல நின்று கொண்டு இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தான் தித்தன். கட்டிளம் காளை. முகத்திலும் மார்பிலும் வீரத் தழும்புகள். ஆனால் இப்போது முகத்தில் எரிச்சல், கோபம் என எல்லாம் கலந்து காணப்பட்டது. தித்தன் இரவு நேரக் காவலன். அவனது முன்னோர்கள் பாண்டிய மன்னர்களின் கீழே படைத்தலைவர்களாகவும், தளபதிகளாகவும் பணி செய்தனர். அவர்கள் ஈட்டிய புகழ் இன்னமும் மங்காமல் இருக்கிறது. ஆனால் அத்தகைய முன்னோர்களின் வழி வந்தவன் வெறும் இரவு நேரக் காவலன்.
குளிர்ந்த அருவி நீரை கைகளால் அள்ளித் தன் தலையில் தெளித்துக்கொண்டான் தித்தன். மனதின் நெருப்பு ஆறுமா அத்தனை எளிதில்? நேரம் ஆக ஆக இருள் பரவத்தொடங்கியது. அந்த அடர்ந்த காட்டின் பல விதமான ஒலிகள் எதுவும் அவனை அச்சம் கொள்ளச் செய்யவில்லை. மனதில் பல விதமான எண்ணங்கள் தோன்ற குற்றால நாதர் கோயிலை நோக்கினான். விளக்கு ஏற்றப்பட்டதன் அடையாளத்தையே காணோம். நாற்புறத்திலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
"சே! நாடு ஏன் இப்படி ஆகி விட்டது? மக்கள் அனைவரும் பயத்திலும் அச்சத்திலுமே இருக்க வேண்டியதாகி விட்டதே? மதுரையில் பாண்டிய மன்னர்கள் செங்கோலோச்சிய போது செண்பகப் பொழில் எவ்வளவு உயர்வாக இருந்ததாக பாட்டன் மும்மாடன் எப்போதும் கூறுகிறார். ஆனால் இப்போது மதுரைப் பாண்டியர்களுக்கு மதுரையை தக்க வைத்துக்கொள்வதற்கே பெரும் போர் செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் கூட சில சமயம் தோற்றும் போய் விட்டார்களாம். செய்திகள் காதில் படுகின்றன. சோழர்களும், சேரர்களும் இதே நிலையில் தான் உள்ளனர். அவரவர் தலை நகரங்கள் மட்டுமே எல்லை என ஆகி விட்ட அவலம். அதனால் பிற இடங்களில் எப்போதும் கொள்ளையர்களின் அட்டகாசம். பகலிலேயே பெண்கள் தனியாக எங்கும் செல்ல முடியாத நிலை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட பெண்கள் கல்விச்சாலைகளில் கற்றார்களாம், போர்ப்பயிற்சி செய்தார்களாம். ஆனால் இப்போது அவர்கள் தங்களின் கற்புக்கு பயந்து வெளியில் வருவதே இல்லை. பாவம்! கல்யாணி. அவளுக்கு கல்வி கற்பதிலும், கவிதை புனைவதிலும் எத்தனை ஆர்வம்? ஆனாலும் அவளால் எதிலும் ஈடுபட முடியவில்லை. காலம் அப்படி இருக்கிறது எனச் சொல்லி அவளை எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். பாவம்! முதலிரவில் எத்தனை ஆர்வமாகக் கேட்டாள், உங்களுக்கு தமிழ்க்கவிதையில் ஆர்வம் உண்டா என? நான் விழித்ததும் அவள் முகமே மாறி விட்டது. நான் ஒரு காவலன், வாள் பயிற்சி ஈட்டிப் பயிற்சி செய்தவன். என்னிடம் கவிதைச் சுவையை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனாலும் மகிழ்ச்சியோடிருக்க முயன்றாள் பாவம்! அவளுக்கு யாப்பிலக்கணம் கற்க வேண்டுமாம். எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டும்" என சிந்தித்தபடி நின்றிருந்தான்.
சற்று தொலைவில் அவனது யாரோ தீவட்டியை ஏந்தி வருவது தெரிந்தது. சட்டென தயாரானான். வருபவர் கொள்ளையர்களில் ஒருவனாகவும் இருக்கலாமே?
"நான் தான் தித்தா! ஈட்டியை எறிந்து விடாதே" என்று குரல் கொடுத்துக்கொண்டே வந்தான் தித்தனின் நண்பன் வேலன்.
"வா! எங்கே இன்னமும் காணவில்லையே எனப் பார்த்தேன். கொள்ளையர்கள் குறித்து ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்றான் தித்தன்.
"சென்ற முறை அவர்கள் செண்பகப் பொழிலில் நுழையும் முன்னரே நீயும் நானும் சேர்ந்து தாக்கியதில் பலரும் படுகாயம் அடைந்து விட்டனர். அதில் இருவர் இறந்தே போய் விட்டனர் எனக் கேள்விப்பட்டேன். ஆகையால் இன்னும் இரு மாதங்களுக்கு கொள்ளையர் தாக்குதல் இருக்காது. "
"நல்லது! ஆனாலும் நாம் அலட்சியமாக இருக்க வேண்டாம். கொல்லம் வழியாகக் கூட சில கொள்ளையர்கள் வரலாம். ஆகையால் எச்சரிக்கையோடு இருப்போம்" .
"நீ சொல்வதும் சரி தான். ஆனால் இப்போது கேரளத்தில் மழை துவங்கி விட்டதாம். ஆகையால் அங்கிருந்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு தான்."
நண்பனின் பேச்சைக் கேட்டதும் சற்றே ஆசுவாசப்பட்டவனாக கையில் இருந்த ஈட்டியை கீழே வைத்து விட்டு பாறை ஒன்றின் மீது அமர்ந்து கொண்டான் தித்தன். அவனைத் தொடர்ந்து வேலனும் மற்றொரு பாறையில் அமர்ந்து கொண்டான்.
"எப்போதும் பதற்றத்துடனே இருக்கிறாயே? அது ஏன் நண்பா?" என்றான் வேலன்.
நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டான் தித்தன்.
"உனக்குப் பதற்றமில்லையா வேலா? நம் நாடும் ஊரும் இப்படி இருக்கிறதே என உனக்குப் பதற்றமில்லையா? நம் வீட்டுப் பெண்கள் பயமின்றி நடமாட வேண்டும், அவர்கள் விருப்பப்படி கல்வி கற்கவும் வேண்டும் என உனக்கு ஆசையில்லையா?"
"இல்லாமல் என்ன தித்தா? என் தங்கை! அறிவில் மிகவும் சிறந்தவள். கணக்குக் கற்க வேண்டும் என விரும்புகிறாள். பக்கத்து ஊரில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இருக்கிறார். ஆனால் அவளை அங்கே தங்க வைக்கவோ, தினமும் அவளை அங்கே அனுப்பவோ இயலவில்லையே? எந்த நேரத்தில் கொள்ளையர்கள் அல்லது கெடு மதி படைத்த கூட்டத்தார் பெண்களைக் கவர்ந்து செல்வார்கள் என்று நினைத்தால் பயமாக அல்லவா இருக்கிறது?"
"இப்படிப் பேசுவது நன்றாகவா இருக்கிறது? நாம் ஆண் மக்கள்! பெண்களைக் காப்பாற்ற இயலாமல்ம் வீட்டுக்குள் பூட்டி வைக்கிறோமே என வெட்கித்தலை குனிகிறேன் நான். ஹூம்! மீண்டும் எப்போது மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி நிலையாக மலருமோ தெரியவில்லை!"
சற்று நேரம் உரையாடல் இன்றிக் கழிந்தது.
"உன் மனைவிக்கு இப்போது பேறு காலம் அல்லவா?" என்றான் வேலன்.
"ஆம்! தன் அன்னையின் வீட்டில் இருக்கிறாள் அவள். எப்போது பிரசவம் ஆகுமென்று தெரியவில்லை."
"ஆண் குழந்தையாகப் பிறக்கும். கவலை வேண்டாம்"
"இதில் நான் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன? ஆணோ? பெண்ணோ? எதிர்காலம் நன்றாக இருந்தால் போதும்."
மீண்டும் மௌனம் சூழ்ந்தது அந்த இடத்தை.
"வேலா! பேசாமல் நான் மதுரைக்குச் சென்று விடலாமா என யோசிக்கிறேன். நேராக மன்னரின் படையிலேயே இடம் பெறலாம் அல்லவா? இரவுப்பொழுதில் இப்படி கொள்ளையர்களை விரட்டும் அவலம் இல்லையே?"
நகைத்தான் வேலன்.
"உனக்கு இன்னமும் மதுரையின் நிலை தெரியவில்லையே எனத்தான் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது போர் அறங்கள் எதுவும் கடைப்பிடிக்க படுவதில்லை. வடக்கிலிருந்து வரும் பெரும் படையினர் இரவில் கூடத் தாக்குதல் நடத்துகிறார்களாம். அது போன்ற கோழைகளோடு மோதுவதற்கு, கொள்ளையர்களோடு மோதுவது நல்லது எனத் தோன்றுகிறது."
"அப்படியா? இரவில் கூடவா தாக்குதல்? உனக்கு எப்படித் தெரியும்?"
"என் ஒன்று விட்ட சகோதரன் மதுரை காலாட்படையில் இருக்கிறான். அவன் ஒரு வாரம் முன்பு தான் மதுரையை விட்டு வந்து செண்பகப் பொழிலில் வாழத்தொடங்கினான். அவன் சொன்ன செய்திகள் தான் இவை."
"அப்படியானால்? இனி நம் வருங்காலம்?"
"கடவுள் விட்ட வழி! வேறு என்ன சொல்வது?"
"இல்லை! நிச்சயம் கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார். இப்படியே விட எனக்கு மனதில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை"
நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது இருளில் யாரோ நடந்து செல்லும் ஒலி கேட்டது. சட்டென சுதாரித்து வேலை குறி பார்த்தான் தித்தன். மீண்டும் வேறு புறமிருந்து சத்தம் கேட்க அங்கு திரும்பினான் வேலன்.
"யாராக இருக்கும்? இந்த இருளிலும் தடையில்லாமல் நடப்பது போலல்லவா இருக்கிறது?" என்றான் தித்தன்.
"எனக்கும் அப்படித்தான் தோன்றியது. வேலெறிந்து பார்ப்போமா?"
"வேண்டாம் எனத் தோன்றுகிறது வேலா! இந்த மலை பல சித்தர்களும் முனிவர்களும் வாழும் இடம் என பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இன்று முழு நிலவு வேறு. யாரேனும் சித்த புருஷர்கள் அருவியில் நீராட வந்திருக்கலாம். "
மீண்டும் நகைத்தான் வேலன்.
"சித்த புருஷர்கள், முனிவர்கள் வாழ்ந்த மண்ணா இது? இந்த நிலைமைக்கு ஆட்பட்டு விட்டது? எல்லாமே பொய்யோ எனத் தோன்றுகிறது" என்றான் வேலன்.
"அல்ல அப்பனே! எதுவுமே போய்யல்ல! அதுவும் உண்மை என்றால் இதுவும் உண்மை தானே?"
குரல் கேட்டுத் துள்ளி எழுந்தனர் இரு நண்பர்களும்.
"யார் பேசியது? முன்னால் வாருங்கள்! நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம்" என்றான் வேலன் சத்தமாக.
"அதை நானல்லவா சொல்ல வேண்டும்? எங்கோ பார்க்கிறீர்களே? என்ன இன்னமுமா தெரியவில்லை?" மீண்டும் குரல் ஒலிக்க சுற்று உற்றும் பார்த்தனர். அருவிக்கரையில் தாடியும் மீசையும் புனைந்த ஒருவர் நீராடிக்கொண்டிருப்பது போலப் பட்டது.
"வேலா! அதோ பார்! அருவியில் வயதான மனிதர் ஒருவர் நிற்பது போலத் தோன்றுகிறது. அவர் தான் பேசியிருப்பாரோ?" என்றான் தித்தன்.
"இருக்கலாம் தித்தா! அவரைப் பார்த்தால் சிறந்த ஞானி போலத் தோன்றுகிறது. இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறார்?"
"தெரியவில்லை! போய்க் கேட்போம்"
இரு நண்பர்களும் நிலவின் வெளிச்சத்தில் அருவி நோக்கி முன்னேறினார்கள். சற்றே குட்டையான பருத்த உருவமும் கொண்ட ஒருவர் தனது கையில் இருந்த பாத்திரத்தில் நீர் முகந்து கொண்டிருந்தார்.
"வாருங்கள் நண்பர்களே! நான் நீராடி முடித்து விட்டேன். அதோ அங்கே போய்ப் பேசலாமா?" என்றார் அந்த மனிதர்.
"ஐயா! உங்களைப் பார்த்தால் மிகவும் சாதுவான மனியதர் போலத்தெரிகிறது. இந்தக் காட்டில் கொடுமையான விலங்குகள் நடமாட்டம் உள்ளது. அது மட்டுமல்ல கொள்ளையர்களும் கூட வரலாம். ஆகையால் நீங்கள் இப்போதே உங்கள் வீட்டுக்குச் சென்று விடுங்கள்" என்றான் வேலன்.
"வன விலங்குகள் என்னை ஒன்றும் செய்ய மாட்டா! கொள்ளையர்கள்! என்னிடம் என்ன இருக்கிறது கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு" என்றார் அந்த மனிதர். பேசியபடி நடக்க அவர் பின்னால் தித்தனும் வேலனும் அவர்களை அறியாமல் நடந்தனர்.
அவர்கள் நடக்க நடக்க அழகான சமவெளி போல தெரிந்தது ஒரு இடத்தில். முழு நிலவின் வெளிச்சத்தில் அந்தத் தரையில் இருந்த புற்கள் அழகாகக் காட்சியளித்தன. அதன் நடுவே சிறு குடில் போல அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் அவர்களை அழைத்துச் சென்றார் அந்த குட்டையான மனிதர்.
"வாருங்கள் இளைஞர்களே! உள்ளே வந்து அமருங்கள்" என்றார் அந்தப் பெரியவர்.
"என்ன ஐயா இது? நாங்கள் தினமும் இங்கே வருகிறோம்? ஆனால் உங்கள் குடிலைக் கண்டதே இல்லையே?" என்றான் தித்தன்.
"இன்று தான் நான் வந்தேன்."
"எப்படித் தனியாக குடிலை சில மணி நேரங்களுக்குள் நிர்மாணித்தீர்கள்?"
"இது என்ன பெரிய வேலையா? சில கம்புகளை நட்டு மேலே கூடாரத் துணி போர்த்தினால் ஆயிற்று. அமருங்கள்! உங்களுக்கு உணவளிக்க என்னிடம் எதுவுமே இல்லையே?" என்றார் அந்த மனிதர்.
"பரவாயில்லை ஐயா!" என்றான் வேலன்.
"ஐயா! இந்த இரவு நேரத்தில் அருவியில் குளிர்ந்த நீரில் நீராடியிருக்கிறீர்களே? சூடாக ஏதாவது உணவு எடுத்துக்கொள்ளுங்களேன்! இல்லையென்றால் குளிர் காய்ச்சல் வரலாம்." என்றான் தித்தன்.
"உன் அக்கறைக்கு நன்றி அப்பா! என்னிடம் சில கிழங்குகள் உள்ளன. ஆனால் நெருப்பு...." என்றார் அவர்.
"கவலை வேண்டாம் ஐயா" என்று அவரிடம் சொல்லி விட்டு வேகமாகச் செயல்பட்டான் தித்தன். நன்கு காய்ந்த குச்சிகளை எடுத்து வந்து குவித்தான். தன் மடியிலிருந்த சிக்கி முக்கிக் கல்லைத் தேய்த்து நெருப்பு உண்டாக்கினான். அந்த நெருப்பில் கங்குகள் உருவாக அவற்றைத் தனது ஈட்டியால் சற்றே தள்ளினான். அவை இப்போது கண கணவென எரிந்தன. அந்த மனிதர் குடிலுக்குள் சென்று பனங்கிழங்குகளையும், வள்ளிக்கிழங்குகளையும் எடுத்து வந்தார். அவற்றைக் கங்கில் போட கிழங்குகள் வேகும் மணம் சூழ்ந்தது அந்த இடத்தை. சிறிது நேரத்தில் வெந்த கிழங்குகளையும் சூடான வெந்நீரையும் அம்மனிதருக்குக் கொடுத்தான் தித்தன்.
"அருமையாக இருக்கிறதப்பா! பசித்த வயிற்றுக்கு நல்ல உணவு" என்று சுவைத்து உண்டார் அந்தப் பெரியவர்.
"ஐயா! தாங்கள் யார்? இந்த வனப்பகுதியில் பயமின்றி இருக்கிறீர்களே? உங்களது சொந்த ஊர், உறவினர், குடும்பம்...." என இழுத்தான் வேலன்.
"நான் ஒரு தமிழ்ப்புலவனப்பா! என்னைக் குறுமுனி என்றும் சொல்வார்கள். சிறிது வானியலும் தெரியும். தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமே என் ஊர் தான். தமிழ் பேசுபவர்கள் அனைவருமே என் உறவினர் தான்." என்றார்.
"ஐயா! நீங்கள் தமிழ்ப் புலவரா? அப்படியானால் இங்கிருந்து நீங்கள் செல்லவே கூடாது. என் மனைவி தமிழ் கற்க விரும்புகிறாள். அவளுக்கு எங்கள் வீட்டிலேயே தங்கி கல்வி கற்பிக்க வேண்டும். தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றான் தித்தன் அவசரமாக.
"அது என்னால் இயலாது. ஆனால் உனக்கு வழி காட்ட என்னால் முடியும்."
"உம்...! யாரைக் கேட்டாலும் இதே பதில். நாடு இருக்கும் நிலையில், நாட்டில் வாழ்வதை விட காட்டிலேயே காலம் கழிக்கலாம் என முடிவு செய்து விட்டீர்கள்? அப்படித்தானே?" என்றான் தித்தன்.
"அப்படி அல்ல! விரைவில் செண்பகப் பொழிலுக்கு நல்ல நேரம் வரப்போகிறது. ஆனாலும் அதுவும் நிலையானதல்ல. எப்படியும் வரும் ஐநூறு ஆண்டுகள் நம் நாட்டுக்கு மிகவும் சோதனையான காலம் தான். அதன் பிறகு படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். " என்றார் குறுமுனி.
"ஐயா! நல்ல வார்த்தை சொன்னீன்ர்கள்! செண்பகப் பொழில் முன் போல மாறுமா? பெண்கள் அச்சமின்றி நடமாட இயலுமா? அது போதும் ஐயா! அது போதும்" என்றான் தித்தன்.
"ஆம்! செண்பகப் பொழில் மிகவும் புகழ் வாய்ந்த நகரமாக விளங்கும். இதன் பெயரே மாறி விடும். இதன் வரலாற்றில் நீ நிலையாக இடம் பிடிப்பாய்" என்றார்.
"நானா? சாதாரண இரவுக் காவலன் நான். நானா வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறேன்?"
"ஆம்! நீயே தான் தித்தா! செண்பகப் பொழிலின் வளர்ச்சிக்கு நீயும் உன் நண்பனும் மிகச் சிறந்த தொண்டாற்றப் போகிறீர்கள். செண்பகப் பொழிலில் என் மாணவன் ஒருவன் இருக்கிறான். அவனைச் சந்தித்துக் கேளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என அவன் சொல்வான்" என்றார்.
"உங்கள் மாணவரா? அவர் பெயர் என்ன? எங்கே வசிக்கிறார்? சொல்லுங்கள் ஐயா! நாங்கள் உடனே சென்று அவரைப் பார்க்கிறோம்." என்றான் வேலன் துடிப்பாக.
"எல்லாவற்றையும் நானே சொல்லி விட்டால் எப்படி? உங்கள் செயலும் வேண்டும் அல்லவா? என் மாணவன் பெயர் விந்தன். அவனைக் கண்டு பிடித்து நான் சொன்னேன் என்று சொல்லுங்கள். உங்களுக்கு உதவுவான்." என்றார்.
"சரி! அப்படியே செய்கிறோம். நான் பிறந்தது முதல் செண்பகப் பொழிலில் தான் இருக்கிறேன். ஆனால் விந்தன் என்ற பெயரில் ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லையே?" என்றான் வேலன்.
"இருக்கிறான்! இருக்கிறான்!! தேடிப்பிடியுங்கள் அவனை! இப்போது நான் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது. ஆகையால் நீங்கள் செல்லலாம்" என்றார் அந்த மனிதர்.
அவரை வணங்கி விட்டு மேலும் சில நாழிகைகள் காவல் புரிந்து விட்டு விடி வெள்ளி முளைக்கும் நேரம் செண்பகப் பொழிலை அடைந்தார்கள் நண்பர்கள் இருவரும். வீட்டின் கதவைத் திறந்து படுத்து சூரியன் மேலே வரும் வரை நன்றாக உறங்கினான் தித்தன். அதிகாலை கதவை யாரோ தட்ட விழித்துக்கொண்டான்.
"ஐயா! உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்று அதிகாலை நாலரை மணிக்கு. தாயும் சேயும் நலம்! இதனை உங்கள் மனைவி வீட்டார் சொல்லி அனுப்பினார்கள்." என்று சொன்னான் ஒரு ஆள். அவனுக்கு கையில் இருந்த பொன்னில் மூன்றை எடுத்துக்கொடுத்து விட்டு மகிழ்ச்சியோடு நீராட ஓடினான் தித்தன்.