Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

Status
Not open for further replies.
அத்தியாயம் 14.

அமைச்சருக்கு குழந்தை பிறந்த அன்று அவரைப் பார்த்தது தான். பிறகு அவர் அரச சபை, மன்னரோடு சந்திப்பு, அதோடு மக்கள் நலப்பணி என மிகவும் பரபரப்பாக இருந்தார் அமைச்சர். ஆனால் தித்தனுக்கு ஒரே குழப்பம். அதோடு யோசனை வேறு. தன் நண்பர்களோடு கலந்து பேசினான். அன்று அமைச்சர் ஒற்றறிதலில் தேர்ந்த பெண்கள் இருந்தால் நலமாக இருக்கும் என்று கூறியிருந்ததால் உடனே செண்பகப் பொழிலில் இருந்து பிரம்ம நாயகியையும் முல்லையையும் வரவழைப்பது என முடிவு செய்து கொண்டார்கள். அதோடு தித்தன் மனவி கல்யாணியும் வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே இல்லத்தில் வசித்தால் தான் திட்டமிட முடியும். இப்போது இருக்கும் வீடு அமைச்சரின் இல்லத்திலிருந்தும், அரண்மனையிலிருந்தும் தள்ளி இருந்தது. பக்கத்தில் இருந்தால் தான் நல்லது என அபிப்பிராயப்பட்டார்கள். இது குறித்து அமைச்சரிடம் பேசலாம் என முடிவு செய்து உள்ளே சென்றார்கள். தித்தன், வேலன் மற்றும் தங்கமணி வந்திருக்கிறார்கள் என்றதுமே உமையாள் தேவியார் தனது அறைக்கு வரச் சொன்னார். தயங்கியபடியே சென்றனர் மூவரும். தேக்குமரத்தொட்டிலில் படுத்திருந்தது ஒரு மாதமே ஆன குழந்தை. அருகில் ஒரு நாற்காலியில் களைப்பாக அமர்ந்திருந்தார் அமைச்சரின் மனைவி. அது அவரின் தனியிடம் என்பதால் தயக்கமின்றிப் பேசினார்.

"என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? சொல்லுங்கள்! ஒற்றறிய பெண்ணை ஏற்பாடு செய்து விட்டீர்களா?" என்றார்.

"அதைப் பற்றிப் பேசத்தான் வந்தேன் தாயே! செண்பகப் பொழிலில் என் தங்கைகள் இருவர் ஏற்கனவே ஒற்றறிந்தவர்கள் இருக்கிறார்கள். அதோடு என் மனைவியும் வந்து விட்டால் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால்....தங்குவது...." என இழுத்தான் தித்தன்.

"உம்! நம் இல்லத்திலேயே பக்கவாட்டில் சிற்றில் இருக்கிறது அல்லவா? அதில் நீங்கள் தங்கிக்கொள்ளலாம். மற்ற இரு பெண்களும் என்னுடனே தங்கட்டும். அது தான் அவர்களுக்கும் நல்லது. இல்லையென்றால் காதலில் நிலை மறந்து விட்டால் என்ன செய்ய?" என்று சொல்லிச் சிரித்தார். இத்தனை விஷயங்களுக்கு மத்தியிலும் முன்னால் சொன்ன செய்திகளை நினைவில் வைத்திருந்து சொல்லும் அந்தப் பெண்மணிய மரியாதையோடு பார்த்தனர் மூவரும். தங்கமணிக்கும், வேலனுக்கும் வெட்கம் தாங்கவில்லை. நெளிந்தார்கள். சிரித்து விட்டான் தித்தன். கூடவே நகைத்தார்கள் உமா தேவியார்.

"போகட்டும்! எப்படி அவர்களை அழைத்து வரப் போகிறீர்கள்?" என்றார்.

"இப்போது இருக்கும் நிலையில் எங்கள் மூவராலும் செல்ல முடியாது. ஊரில் எங்களது நண்பன் வேங்கையன் இருக்கிறான் தாயே! அவனுக்கு ஓலை அனுப்பி விட்டால் அனைவரையும் பாதுகாப்பாக குதிரையில் அழைத்து வந்து விடுவான். அதற்குத் தேவையான குதிரைகளுக்குத்தான் என்ன செய்வது எனத் தெரியவில்லை." என்றான் தித்தன்.

"அது ஒன்றும் பிரச்சனை இல்லை! நம்மிடம் இருக்கும் குதிரைகளில் மூன்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உன் மனைவிக்கு இப்போது தானே பிரசவம் ஆகியிருக்கிறது? சிறுகுழந்தையை வைத்துக்கொண்டு குதிரையில் பயணிக்க முடியாது. ஆகையால் அவளுக்கு மட்டும் பல்லக்கு ஏற்பாடு செய்து விடு தித்தா! இங்கிருந்து பல்லக்கு, குதிரைகள் அவற்றை வழி நடத்திச் செல்ல நம்பிக்கையான ஆள், இவர்களை ஏற்பாடு செய்து விடு. இன்னும் இரு தினங்களில் செல்ல வேண்டும். அடுத்த வாரத்துக்குள் உங்கள் பெண்கள் அனைவரும் நம் இல்லத்தில் இருக்க வேண்டும்." என்றார்.

யோசித்தான் தித்தன். உமாதேவியார் சொல்வது போல செய்து விடலாம். ஆனால் நம்பிக்கையான ஆள் வேண்டுமே? அரண்மனைப் பணிப்பெண்கள் வரை சேர் ஒற்றர்களின் கரம் நீண்டிருக்கும் போது, யாரை நம்புவது? இந்நேரம் எனது பெயரும், என் நண்பர்களின் பெயரும் அவர்களது தலைமை வரை போயிருக்கும். மன்னருக்கு நெருக்கமான அமைச்சரைக் கொல்ல முயன்றவர்கள் எனக்குக் குறி வைக்க மாட்டார்களா என்ன? அப்படியானால் என் மனைவி, தங்கைகள் என அனைவரது உயிருமே ஆபத்தில் தான் இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக ஒருவனை நம்புவதை விட நானோ அல்லது வேலனோ சென்றால் என்ன?

"என்ன யோசிக்கிறாய் தித்தா?"

"தேவி! நானே சென்று அழைத்து வருவது நல்லது என நினைக்கிறேன்." என்றான்.

இடை மறித்தான் தங்கமணி.

"தாயே! வேலனுக்கும் தித்தனுக்கும் இங்கே அதிக வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் போய் அழைத்து வருகிறேன். வரும் போது வேங்கையனும் இருப்பான் என்பதால் பாதுகாப்புக்குக் கவலை இல்லை." என்றான்.

அவ்வாறே செய்யலாம் என முடிவு எடுத்தார்கள். அதற்குத் தேவையான பொன், ஆட்கள் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டு தங்கமணியே செல்வதால் ஓலை தேவையில்லை எனவும் பேசினார்கள். மறு நாள் காலையில் தங்கணி ஒரு குதிரையில் பயணித்தான். ஒரு குதிரையில் பல்லக்கு அதைத் தூக்கும் ஆட்களில் ஒருவன், இரண்டாவது குதிரையில் பல்லக்குத் தூகிகளில் இருவர், மூன்றாவது குதிரையில் நாலாவதில் பல்லக்குத் தூக்கும் ஆள் எனப் பயணித்தார்கள். வரும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி அவர்களை அனுப்பினார்கள் தித்தனும் வேலனும். இன்னும் ஒரு வாரத்துக்குள் மனைவி குழந்தையைப் பார்க்காலம் என்ற எண்ணம் இனிக்க தங்கள் பணியைத் தொடரச் என்றான் தித்தன்.

அதே நேரத்தில் மதுரை நகரின் மையத்தில் இருந்த ஒரு மண்டபம். அதில் மூவர் வீற்றிருந்தனர். அதில் ஒரு பெண் மிகவும் களைப்புற்றவளைப் போலக் காணப்பட்டாள். அவர்கள் வேறு யாருமல்ல வர்த்தினியும் பூந்துறையானும் தான். பக்கத்தில் அமர்ந்திருந்தது தான் அவர்களின் தலைவன் என ஊகிக்க முடிந்தது. அவனது தோற்றம் சர்வ சாதாரணமாகக் காணப்பட்டது. நரைத்த தாடி மீசை. தலையில் ஒரு முடி கூட இல்லை. முகத்திலும் கை கால்களிலும் சுருக்கம். ஆனால் கண்களில் கூர்மை. நாலாபுறமும் பார்த்தபடி சுழன்றன அவனது கண்கள். அவன் பேசும் போது உதடுகள் அசைகிறதா இல்லையா? என்பதை உற்றுக் கவனித்தால் தான் தெரியும்.

"அமைச்சனையும் அவன் மனைவியையும் கொல்லும் திட்டம் எப்படி தோற்றது?" என்றான் அந்த வயதானவன். குரலிலோ முகத்திலோ கோபமே தெரியவில்லை என்றாலும் அந்தக் குரலில் இருந்த அமைதியே இருவரையும் வெருட்டியது.

"தவறு நேர்ந்து விட்டது தலைவா! மங்கையும், அமுதாவும் தாங்களே சென்று கொடுத்தால் அடையாளம் கண்டு கொள்ளப்ப்படுவோமோ என எண்ணி மற்றொரு பணிப்பெண்ணிடம் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பெண் பெயர் பவளமாலையாம். அவள் போன நேரம் அங்கே மருத்துவர் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட மருந்தே இல்லை அது என அடையாளம் க்ண்டு கொண்டு விட்டார். அதனால் அவர்கள் தப்பித்து விட்டார்கள்." என்றாள் வர்த்தினி.

சற்று நேரம் அமைதியாக இருந்தான் தலைவன் எனப்பட்டவன்.

"உம்! போகட்டும் இனி மங்கையையும் அவள் தமக்கையையும் என்ன செய்ய வேண்டும் என உனக்குத் தெரியும் அல்லவா வர்த்தினி?" என்றான்.

திக்கென்றது பூந்துறையானுக்கு. ஆனால் வர்த்தினியோ அலட்டிக்கொள்ளவேயில்லை. தலையை மட்டும் ஆட்டினாள்.

"அடுத்து...நமது இலக்கு தித்தன் குடும்பம் தான். அரச குடும்பத்தை செண்பகப் பொழிலுக்கு அழைத்துப் போய் அங்கே பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவப் பார்க்கிறார்கள். அது மட்டும் நடக்கக் கூடாது. அது போன்ற ஒரு எண்ணம் பாண்டியனுக்கு வரவே கூடாது. அவன் இங்கேயே இருந்து சேர மன்னனிடம் தோற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவனது தோல்வியை வருங்காலத்தவர்கள் கேவலமாகப் பேச வேண்டும்." என்றான்.

"அப்படியானால் தலைவா! நம்மால் இப்போதே மன்னனையும், அரசியையும் எளிதாகக் கொலை செய்ய முடியுமே? ஏன் செய்யவில்லை?" என்றான் பூந்துறையான். தலைவனின் பார்வை பூந்துறையான் மேல் படிந்தது. அந்தப் பார்வையிலேயே பயம் வர கண்களைத் தழைத்துக்கொண்டான் பூந்துறையான்..

"முட்டாள்! நம் நோக்கம், நிதானம் என எதுவும் தெரியாமல் பேசுகிறாயே? " என்றான் தலைவன்.

"இவனுக்கு விளக்கம் நான் சொல்லிக்கொள்கேறேன் தலைவா! உங்களது நேரம் மிகவும் முக்கியம். இப்படி விரயம் செய்ய முடியாது. ஆகையால் நான் யோசித்து வைத்திருக்கும் திட்டத்தைச் சொல்கிறேன்." என்றாள் வர்த்தினி. மீண்டும் ஒரு தலையசைப்பு தலைவனிடமிருந்து.

"கஜராஜனுக்குத் துணையாக இருப்பவர்களை நன்றாகவே கவனித்துப் பாதுகாப்பாக வைப்போம். யானையின் தந்தம் வெளியில் தெரியும், ஆனால் பற்கள் தெரியாது. ஆனால் உண்ணப் பயன்படுவது பற்களே! தந்தம் அல்ல. அதனால் மீகாமனை வலையில் சிக்க வைத்துப் பிடித்து விடுகிறேன்." என்றாள்.

கேட்டுக்கொண்டிருந்த பூந்துறையானுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. என்ன சொல்கிறாள் இவள்? கஜராஜனா? அது யார்? யானையின் தந்தத்துக்கும் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? பைத்தியம் பிடித்து உளறுகிறாள். தலைவனிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளப் போகிறாள் என எண்ணியபடியே தலைவனைப் பார்த்தான். வாயைப் பிளந்து விட்டான். சுருக்கங்கள் நிறைந்த அந்த முகத்தில் மெல்லிய புன்னகை இருந்தது.

"சபாஷ் வர்த்தினி! நல்ல திட்டம்! அப்படியே செய்! ஆகையால் இரவு நேரம் நாளை என்னை வந்து பார். அழிவும் தருகிறேன்." என்று சொல்லி விட்டு போய் விட்டார். நடையிலும் அத்தனை தளர்ச்சி. அவர் சென்றதும் பூந்துறையானை நோக்கினாள் வர்த்தினி.

"நமக்கு வேலைகள் அதிகம் உள்ளன. அமுதாவையும், மங்கையையும் உறங்கச் செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்கிறாயா?" என்றாள்.

உறங்கச் செய்வது என்றால் இருவரையும் இல்லாமல் ஆக்க வேண்டும் எனப் புரிந்தது பூந்துறையானுக்கு. ஆனாலும் பெண் கொலை புரிய மனம் இல்லை. அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்ட வர்த்தினி "சரி! அதை நான் பார்த்துக்கொள்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் இருவரும் வருவார்கள். இதை அவர்கள் உண்ணக் கொடுக்க வேண்டும். இந்தப் பழத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உடனே வேலை செய்யாது. குறைந்தது 8 மணி நேரம் ஆகும்." வர்த்தினி பேசிக்கொண்டிருக்கும் போதே அமுத தேவியும், மங்கையும் வந்து விட்டார்கள். இருவரும் அரண்மனைப் பணிப்பெண்கள் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

"தலைவர் என்ன சொன்னார்?" என்றாள் அமுதா எடுத்த எடுப்பில்.

"கத்தாதே அமுதா! திட்டம் தோற்றதற்கு நீங்கள் காரணமல்ல என தலைவர் புரிந்து கொண்டு விட்டார். ஆனால் இனியும் நீங்கள் இங்கே இருந்தால் உங்களுக்கு ஆபத்து. ஆகையால் உங்களை சேர நாட்டுக்குச் செல்ல கட்டளையிட்டிருக்கிறார். அங்கே சென்றதும் செங்கம் புழையாரிடம் இந்த ஓலையைக் கொடுக்குமாறு கூறினார்." என்று சொல்லி துணிச் சுருளில் பொதிந்த ஒரு ஓலையைக் கொடுத்தாள் வர்த்தினி. அயர்ந்தே போனான் பூந்துறையான். இவள் உண்மையிலேயே பெண் தானா? இல்லை நயவஞ்சகத்தின் மொத்த உருவமா?

மங்கைக்கும், அமுத தேவிக்கும் முகம் மலர்ந்தது. கை நீட்டி அதை வாங்கிக்கொண்டனர்.

"இப்போதே நீங்கள் புறப்படுங்கள்! மீண்டும் அரண்மனைக்குப் போனால் அங்கே உங்களை விசாரிக்கவும் ஆட்கள் வரக் கூடும். உங்களுக்குத் தேவையான பொன்னும், துணிகளும் இதில் உள்ளன. அதோடு சில பழங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! எக்காரணம் கொண்டும் வழியில் ஊருக்குள் செல்ல வேண்டாம். பழத்தோடு சில கிழங்குகளையும் அவித்து வைத்திருக்கிறேன். உணவுப்பிரச்சனை இல்லை." என்றாள் வர்த்தினி. அவற்றை வாங்கிக்கொண்டு விடைபெற்றுப் புறப்பட்டனர் இரு பெண்களும். அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் பூந்துறையான். அவன் மனம் இரக்கப்பட்டது.

"வர்த்தினி! அவர்கள் அந்தப் பழத்தை உண்ணவில்லையே?"

"இன்று இரவுக்குள் எப்படியும் உண்பார்கள்."

மௌனமானான் பூந்துறையான். அவனுக்கு வர்த்தினியின் திட்டம் புரிந்தது. உணவுக்காக ஊருக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அந்தப் பெண்கள் இரவுக்குள் பழங்களையோ அல்லது கிழங்குகளையோ கட்டாயம் உண்பார்கள். அந்த விஷம் வேலை செய்ய எட்டு மணி நேரம் ஆகும். இரவு உறக்கத்திலோ அல்லது மறு நாள் காலையிலோ காட்டு வழியில் பயணம் செய்யும் போது இறந்து போவார்கள். உடலை காட்டு விலங்குகள் இழுத்துச் சென்று விடும். ஆகையால் இப்படி இரு பெண்கள் இருந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய் விடும். அரண்மனையைப் பொறுத்தவரை இரு பெண்கள், அவர்கள் சேர ஒற்றர்களாகவும் இருக்கலாம். அவர்களைக் காணவில்லை. மீண்டும் சேர நாட்டுக்குச் சென்றிருக்கக் கொடும். அவ்வளவு தாம். விஷயம் முடிந்தது.

உடல் நடுங்கியது பூந்துறையானுக்கு. அவன் சிறந்த வீரன் தான். எப்போதுமே நேருக்கு நேர் மோதுவான். அல்லது தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பான். ஆனால் இது போல தங்கள் ஆட்களில் இருவரை சூழ்ச்சி செய்து கொல்வது மட்டுமல்ல, அதைக் கொஞ்சம் கூட இரக்கமே காட்டாமல் செய்து முடித்த வர்த்தினியை நினைத்து பயமாக இருந்தது.

"நீ உண்மையிலேயே பெண் தானா வர்த்தினி?" என்றான். அவனை முறைத்தாள் அவள்.

"எதற்கு உனக்குத் தேவையில்லாத ஆராய்ச்சி?"

"இல்லை! இப்படி இரக்கமோ, கருணையோ இல்லாமல் இருக்கிறாயே?" என்றான்.

"என்னிடம் யாரும் அவற்றை எதிர்பார்க்க வேண்டாம். இப்போது நாம் கிளம்பலாம். நமது திட்டம் புரிந்தது அல்லவா உனக்கு?"என்றாள்.

தயங்கினான் பூந்துறையான். அந்த இரு பெண்களும் என்ன ஆவார்கள் என்பது தான் புரிந்ததே தவிர, தலைவனும், இவளும் பேசியது எதுவுமே புரியவில்லையே? அதைச் சொன்னால் என்னயும் கொன்று விடுவாளோ என்னவோ? இவளுக்கு உதவிக்கு ஆட்கள் தேவையில்லை என தலைவனே சொல்லும் போது, நான் எம்மாத்திரம்? என எண்ணிக் கொண்டு பேசாமல் நின்றான்.

"புரியவில்லை அப்படித்தானே?" என்றாள்.

மௌனமே பதிலாக வந்தது.

"உன்னைப் போன்ற கோழையை நான் பார்த்ததே இல்லை. உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன். சிறு பெண்ணான என்னிடம் பயப்படுகிறாயே? உனக்கு வெட்கமில்லை?" என்றாள்.

நீயா சிறுபெண். அரக்கி அல்லவா நீ? என மனதில் நினைத்துக்கொண்டான் ஆனால் சொல்லவில்லை.

"பயமில்லை வர்த்தினி! எச்சரிக்கை அவ்வளவு தான். உண்மையிலேயே நீயும் தலைவரும் பேசிக்கொண்டது புரியத்தான் இல்லை!" என்றான்.

"இங்கே அதைப் பற்றிப் பேசுவது நல்லதல்ல. நமது இடத்துக்குப் போவோம்." என்று சொல்லி விட்டு நடக்கும் அந்தப் பெண்ணை பயத்தோடு தொடர்ந்தான் பூந்துறையான்.

அதே நேரத்தில் குரு விந்தையனிடமிருந்து ஒரு ரகசிய ஓலையைப் பெற்றிருந்தான் தித்தன். அதைப் படித்ததும் அவன் கண்களில் நெருப்பு.
 
அத்தியாயம் 14:

தித்தன் தனியான இடத்தில் அமர்ந்திருந்தான். அவன் மனதில் பலவிதமான எண்ணங்கள், குழப்பங்கள் அலைமோதின. ஓலை சொன்ன செய்தியைக் கண்டவுடனேயே குழப்பங்கள் ஆரம்பமாகி விட்டன அவனுக்கு. ஏனெனில் கொஞ்சமும் எதிர்பாராத ஒருவர் அதிலும் மன்னனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவர் பெயர் அதில் எழுதப்பட்டிருந்தது. அதன் பொருள் என்னவென்பது தித்தனுக்கு மட்டுமே தெரியும். அந்தப் பெயர் கொண்டவர் தான் சதியின் தலைவன் என்பதே அது. ஓலையில் இருந்த அந்தப் பெயரை மீண்டும் மீண்டும் படித்தான். கண்களை நம்பவே முடியவில்லை. கண்டிப்பாக யாருக்கும் தெரியவே கூடாது என்ற கட்டளை என்பதால் அதனை எரித்து முடித்தான். இப்போது எப்படிக் காய் நகர்த்துவது? என்ற கேள்வி பூதாகாரமாக வந்து நின்றது.

தன் நிலையை யோசித்துப் பார்த்தான் தித்தன். சதியின் மூல காரணம் யார் எனத் தெரியும், ஆனால் அவன் ஆட்கள் யார் யார்? என்னென்ன மாறுவேடம் பூண்டு காரியத்தை சாதிக்கிறான்? எனத் தெரியாது. அதை யாரிடமும் சொல்லக் கூடாது. அதே நேரம் அந்த நபரிடமிருந்து நாட்டையும், காக்க வேண்டும். தித்தனுக்குத் துணையாக இருப்பவர்களிடம் கூட மிகவும் அவசியம் ஏற்பட்டாலன்றி எதையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. யோசிக்க யோசிக்க மூளையே குழம்பியது. இது போன்ற தருணங்களில் என்ன செய்ய வேண்டும் என குரு விந்தையன் சொன்னது நினைவில் வந்தது. சுற்று முற்றும் பார்த்தான். பெரிய குளக்கரையில் அரசமரத்தடியில் அமர்ந்திருந்தான் அவன். நடுப்பகல் வேளை என்பதால் யாரும் இல்லை.

கண்களை மூடி நீண்ட மூச்சுக்களை இழுத்தான். மனதில் குரு விந்தையனையும் அவரது மானசீக குருவான அகத்தியரையும் தியானித்தான். நினைவுகளைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தினான். மனதால் அவரோடு பேசினான்.

"சாமி! ஐயனே! என் நிலை உங்களுக்குத் தெரியும்! பாண்டிய நாட்டை மீண்டும் வலுவாக்க நான் முயற்சி செய்து வருகிறேன். அந்த முயற்சியில் ஒரு மிகப் பெரிய இக்கட்டில் சிக்கியிருக்கிறேன், நாட்டையும், நாட்டும் மக்களையும் பத்திரமாக செண்பகப் பொழிலுக்கு அழைத்துச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சதிகாரர்கள் இளவரசனையும், மன்னரையும் குறி வைத்திருக்கிறார்கள். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி வியூகங்கள் வகுக்க வேண்டும்? எனக்கு வழிகாட்டுங்கள் சாமி" என மீண்டும் மீண்டும் எண்ணங்களைச் சிதற விடாமல் வேண்டினான்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ தெரியாது, மெல்ல கண் விழித்த போது மாலை நெருங்குகிறது என்பதை சூரியன் வானத்திலிருந்தே உணர்த்தினா. அப்போது யாரோ இருவர் அவ்வழியே ஏதோ பேசிக்கொண்டே சென்றனர்.

"எவன் ஒருவன் தனியாகத்திட்டமிட்டாலும் தக்க துணையைச் சேர்த்துக்கொள்கிறானோ? அவனே ஜெயிப்பான்." என்றான் ஒருவன்.

"எதிரிகளின் நோக்கங்கள் சூழ்ச்சிகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது நோக்கத்திற்காக வியூகங்களை வங்குப்பதே புத்திசாலித்தனம்." என்றான் ஒருவன்.

இந்த பேச்சுகளே அகத்தியர் எனக்குச் சொல்ல நினைக்குக் கருத்துக்கள் போலும். இல்லையென்றால் இவர்கள் ஏன் இப்படிப் பேச வேண்டும்? கோடி தான் காட்டுவார்கள் சித்தர்களும் முனிவர்களும். நாம் தான் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நன்றாகத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். முதலில் என்ன? அடுத்து என்ன? என்று யோசிக்க வேண்டும். அதற்கு நிறையத் தனிமையும் தொந்தரவுகள் இல்லாத சூழலும் தேவை. நல்லவேளை தங்கமணி பெண்களை அழைத்து வரப் போயிருக்கிறான். வேலன் மட்டும் தான். அவனும் நானும் வேறல்ல. அவனிடம் சொல்லித்தான் தீர வேண்டும். முடிவு செய்து கொண்டு நண்பனைக் காணப் புறப்பட்டான்.

அமைச்சரின் மனைவி உமையாள் தேவி, தித்தன், அவன் மனைவி மற்றும் குழந்தை, இவர்களோடு பிரம்மநாயகியும், முல்லையும் வர இருப்பதால் அமைச்சரின் இல்லத்தில் புறக்கடைப் பக்கம் இருந்த ஒரு சிறு வீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகையால் முன்னால் தங்கியிருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு அமைச்சரின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு வீட்டில் தான் இப்போது தித்தனும் வேலனும் தங்கியிருந்தார்கள். அங்கே தான் சென்றான் தித்தன். வேலனும் பணி முடிந்து வீட்டுக்கு வந்து விட்டான். தித்தனின் முகத்தைப் பார்த்ததுமே ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என ஊகித்துக்கொண்டான்.

"வேலா! நாம் அப்படியே மீனாட்சியம்மை கோயிலுக்குப் போய் வரலாம்! வருகிறாயா?" என்றான் தித்தன்.

வேலனுக்குப் புரிந்து விட்டது. ஏதோ விஷயம் பேச தன்னை அழைக்கிறான். மக்கள் அதிகம் கூடும் இடம் தான் ரகசியம் பேசத் தோதானது என மீனாட்சியம்மையின் கோயிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். தலையை மட்டும் அட்டினான் வேலன். இரு நண்பர்களும் இணைந்து நடந்தன.

"தங்கமணி இந்நேரம் செண்பகப் பொழில் சென்று சேர்ந்திருப்பான் என நினைக்கிறேன். பெண்களையும் குழந்தையையும் அழைத்து வர எப்படியும் ஒரு வாரம் பிடிக்கும். அது வரையில் நமக்குத் தனிமை தான்." என்றான் வேலன்.

"ஆம்! வேலா! அமைச்சருக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். நம் வீட்டுப் பெண்களை அழைத்து வர பல்லக்கு, அதனைத் தூக்கி வர ஆட்கள் என அளித்திருக்கிறாரே?" என்றான்.

ஏதேதோ பொதுவான விஷயங்களைப் ஏசிக்கொண்டே கோயில் வரை வந்து விட்டார்கள். வழக்கம் போல பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்து கொண்டார்கள். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் நல்ல கூட்டம். பொற்றாமரைக் குளப் படிகளில் சிறுவர்களும் சிறுமியரும் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தனர்.

"வேலா! நம்பகமான ஒருவனிடமிருந்து ரகசிய ஓலை வந்தது. அதில் சதியின் தலைவனின் பெயர் இருந்தது." என்றான் தித்தன்.

வேலன் திடுக்கிட்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

"அப்படியானால் நம் பணி எளிதாக முடிந்து விட்டது என எண்னுகிறேன். சதியின் தலைவனை கைது செய்து மன்னர் முன்னால் நிறுத்தினால் முடிந்தது நம் வேலை!" என்றான்.

வெறுமையாகச் சிரித்தான் தித்தன்.

"அது அத்தனை சுலபமல்ல என்பது உனக்கே தெரியும் வேலா!"

"யார் என்று தான் சொல்லேன்." என்றான். வாயால் சொல்லாமல் கைகளால் சைகை செய்தான் தித்தன்.

வேலனின் விழிகள் விரிந்தன. வாயை இறுக மூடிக்கொண்டான். சிறிது நேரம் பேச்சே இல்லாமல் இருந்தது.

"இப்போது என்ன செய்ய தித்தா?" வேலனின் குரலில் கலக்கம்.

பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் தித்தன்.

"அதைப் பற்றிக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன் வேலா!" என்றான் தித்தன்.

மீண்டும் மௌனம்.

"என்ன வேலா? ஏதாவது சொல்லேன்?"

"என் மூளையே மரத்துப் போனாற்போல இருக்கிறது! என்னால் சிந்திக்கவே முடியவில்லை."

"உம்! முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் ஐயன் விந்தையனையும், அகத்தியரையும் தியானித்தேன். சில யோசனைகள் கிடைத்தன."

"நல்ல விஷயம். உன் மன வலிமையும் இறையருளும் தெரிந்து தான் குரு உன்னைத் தலைவனாக ஆக்கினார். சொல்! என்ன யோசனைகள்?" என்றான் வேலன்.

"நமக்குத் தெரிந்த இந்த ரகசியம், வேறு யாருக்கும் தெரியத் தேவையில்லை. தங்கமணியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். புரிந்ததா?"

தலையை ஆட்டினான் வேலன்.

"எனக்கு சில நிமித்தங்கள் கிடைத்தன நண்பா! அவற்றை ஆதாரமாகக் கொண்டே நான் இந்தத் திட்டங்களை வகுத்துள்ளேன். இவை தவறாகவும் போகலாம். அப்படி தவறாகும் பட்சத்தில் ஒன்று நாம் ராஜ தண்டைனைக்கு ஆளாவோம். இல்லையெனின் சதிகாரர்களின் கரங்களால் மடிவோம். இருபுறமும் ஆபத்து தான். இதை நீ முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்!" என்றான் தித்தன் நிதானமாக.

"என்னைக் கொழை என்றா நினைத்தாய்? உனக்கு மட்டும் தான் பாண்டிய நாட்டின் மீது விசுவாசமா? எனக்கு கிடையாதா? எந்த நேரத்திலும் பின் வாங்க மாட்டேன் தித்தா! அதே போல என் அன்னையின் மீதும், தமிழ் மண்ணின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன். நீ சொன்ன ரகசியம் என்னைத் தாண்டி வெளியில் செல்லாது. உம்! இப்போது சொல் உனது திட்டத்தை! " என்றான் வேலன்.

இதை எதிர்பார்த்திருந்தான் தித்தன் என்றாலும் வேலனே சொல்லவே மகிழ்ச்சி பூத்தது தித்தனுக்கு.

"ஆனால் தித்தா! எதிரிகளின் திட்டம் என்ன என்பதே தெரியாமல் நாம் என்ன செய்வது?" என்றான் வேலன்.

"நாம் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் வேலா! அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ? என எதிர்பார்த்து நாம் செயல்படுவதை விட, நாம் செய்ய நினைப்பதைச் செய்து முடிப்பதற்கான முயற்சிகளைச் செய்வோம். சதிக்கூட்டத் தலைவன் யார்? எனத் தெரிந்து விட்ட பட்சத்தில், அவர்கள் எங்கு கூடுகிறார்கள்? எங்கு திட்டமிடுகிறார்கள்? என்ன செய்ய இருக்கிறார்கள்? போன்றவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் நீ தலைவனுக்குத் தெரியாமல் அவனை பின் தொடர வேண்டும். மிகுந்த அபாயமான வேலை. செய்வாய் இல்லைய?"

"நிச்சயம் தித்தா! உன் அடுத்த திட்டம் என்ன?"

"அது தான் மிகவும் முக்கியமானது. நமது நோக்கத்தை நோக்கி நாம் நகர வேண்டும். அதாவது மன்னரையும், மக்களையும், இளவசரையும் அழைத்துக்கொண்டு செண்பகப்பொழில் செல்வது."

"ஏயப்பா! அது எத்தனை பெரிய விஷயம்? நாம் சாதாரண வீரர்கள். வேண்டுமானால் உளவாளிகள் எனச் சொல்லிக்கொள்ளலாம். மன்னரை எப்படி நெருங்குவாய்?"

"அதற்கு ஒரு சிறு நாடகம் நடத்த வேண்டும் வேலா! மன்னருக்கு மிகவும் நெருக்கமான நபர் மூலமாக நாம் அவரை நெருங்க வேண்டும். நம்பகமான என்றால் அந்த நபர் என்ன சொன்னாலும் அரசர் கேட்க வேண்டும் அதோடு அவர் பாண்டிய நாட்டுக்கு உண்மையானவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் யார்?"

சற்று நேரம் யோசித்தான் வேலன். அவன் மனதில் இரு பெயர்கள் தோன்றின.

"இருவர் இருக்கின்றனர் தித்தா! முதலாமவர் நிதி அமைச்சர் மாறன் நல்லான். அவர் மன்னருக்கு வலது கரம் போல, இரண்டாவது தளபதி வீரநன்னன். இவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பாய்? எப்படித் தேர்ந்தெடுப்பாய்?"

"உம்! அதற்கும் யோசனை வைத்திருக்கிறேன் நண்பா! இருவரையுமே சிறிது கண்காணித்து பிறகே முடிவு செய்ய வேண்டும்? எனெனில் அவர்கள் கூட சதிக்கூட்டத்தில் இருக்கலாம் அல்லவா? கண்காணித்த பிறகே நாம் அவர்களை நம்ப முடியும்." என்றான் தித்தன்.

"அமைச்சர் கொடுங்கண்ணனாரிடம் என்ன சொல்வாய்?"

"இப்போதைக்கு அவருக்கு இது தெரிய வேண்டியதில்லை என நினைக்கிறேன். அவருக்கு இருக்கும் கவலைகளே போதும். நம்மை சுதந்திரமாக இயங்கச் சொல்லியுள்ளாரே? ஆகையால் எதுவும் சொல்ல வேண்டாம். "

"உம்! அதுவும் நல்ல யோசனை தான். ஆனால் தித்தா....நம் வீட்டுப் பெண்கள்...?"

"அவர்கள் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்."

"அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லி விடு."

" நீ அமைச்சர் மாறன் நல்லானைக் கண்காணி! மூன்றே நாட்கள் தான் நமக்கு சமயம். அதற்குள் நமக்குத் தெரிந்து விடும் அவர் உண்மையானவர் தானா? என. " என்றான் தித்தன்.

"ஏதோ நாடகம் நடத்த வேண்டும் என்றாயே? அதோடு தலைவனையும் கண்காணிக்கச் சொன்னாய்?"

"ஆம்! நடத்தத்தான் வேண்டும். நீயும் நானும் மட்டுமே அதில் பாத்திரங்கள். ஆனால் இப்போது இல்லை. எந்த அமைச்சரோடு நாம் இணக்கமாக வேண்டும் எனத் தெரிந்த பின். அவரை நெருங்குவதறாக வியூகம் அது. தலைவனை இந்த வேலை முடிந்ததும் கண்காணிக்கலாம்."

பேசிய நண்பனை வியப்பாகப் பார்த்தான் வேலன். இரு மாதங்கள் முன்பு வரை கூட என்னோடு இரவு நேரக்காவலுக்கு வந்த தித்தனா இது? எவ்வளவு வேகமாக, புத்திசாலித்தனமாக திட்டங்கள் தீட்டுகிறான்? இத்தனை நாள் இவனது இந்தத் திறமைகள் ஒளிந்திருந்தவனா? நேரம் வந்ததும் வெளியில் வந்து விட்டனவா? என யோசித்தபடியே அமர்ந்திருந்தான் வேலன்.

"என்ன அப்படியே கல்லாய்ச் சமைந்து விட்டாய் வேலா! செய்ய வேண்டிய பண்களை நினைத்து மலைக்கிறாயா?" என்றான் தித்தன்.

இல்லை எனத் தலையசைத்து விட்டு நண்பனோடு இணைந்து நடந்தான் வேலன்.

பொற்றாமரைக் குளத்தில் எதிர்ப்படிக்கட்டில் அமர்ந்திருந்த வர்த்தினி தித்தனையே பார்த்திருந்தாள்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom