Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

Status
Not open for further replies.
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 9:

திட்டமிட்டபடி வெளியன் பெண்களை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான். தங்கமணி, வேலன் மற்றும் தித்தன் அவவரவர் குதிரைகளில் மதுரை நோக்கிப் பயணப்பட்டார்கள். அப்போது பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது தித்தனால். அது வரையிலும் செண்பகப் பொழிலை விட்டு வெளியே சென்றிராத தித்தனுக்கு மதுரையைக் காண வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது. கல்வி கற்கும் காலத்தில் ஆயுதப்பயிற்சிகளோடு சேர்த்து அவனது குரு அவனுக்கு தமிழும் கற்பித்தார். மதுரைக் காஞ்சி, புற நானூறு போன்ற போர், வீரம் பற்றிக் கூறும் நூல்களை படிக்க ஏற்பாடு செய்தார். அவற்றில் மதுரையைப் பற்றிய வர்ணனை, அதன் அழகு, அங்கு இருக்கும் உயர்ந்த மாடங்கள் என படிக்கப் படிக்க மதுரையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது தித்தனுக்கு. இப்போது தான் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

திங்கள் அன்று காலை கிளம்பியவர்கள் செவ்வாய்க் கிழமை மதிய நேரத்தில் மதுரையின் புற நகர்ப்பகுதியை அடைந்து விட்டார்கள். வைகை தண்ணீரே இல்லாமல் காட்சியளித்தது. மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தான் தித்தன். நண்பகல் வெயில் வாட்டியெடுத்தது. தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆங்காங்கே சில மனிதர்கள் தென்பட்டார்கள். தாகத்துக்கு ஒரு தண்ணீர்ப் பந்தல் கூட இல்லை. ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு மேலே சென்றான். ஒரு தெருவில் சோறும், கறிக்குழம்பும் ஒருவன் விற்றுக் கொண்டிருந்தான். அங்கே குதிரையை நிறுத்தினான் வேலன்.

"இதற்கு மேல் பசி தாங்காது எனக்கு! வா! உணவு உண்டு விட்டுப் போகலாம்" என்றான் வேலன்.

மௌனமாக குதிரையை திண்ணையில் இருந்த மரத்தூணோடு சேர்த்துக் கட்டி விட்டு கடையை நோக்கி நடந்தார்கள். ஆறிப் போன சோற்றில் சூடான கறிக்குழம்பை ஊற்றினான் கடைக்காரன். சுவை பரவாயில்லை.

"ஏனப்பா? இது மதுரை தானா? நான் மாடக் கூடல் என்றும், உறங்கா நகரம் என்றும் புகழப்படும் மதுரை தானா இது? இப்படி இருக்கிறதே?" என்றான் தங்கமணி.

கசப்பாக சிரித்தான் கடைக்காரன்.

"அதெல்லாம் பழம் பெருமையப்பா! பகைவர்களின் இடையறாத தாக்குதலால் நாட்டின் பொருளாதாரமே அழிந்து விட்டது. மழை இல்லை என்பதால் பயிர்கள் விளையவே இல்லை. ஆனை கட்டிப் போரடித்த மதுரை மாடு கட்டிக் கூடப் போரடிக்க முடியாமல் இருக்கிறது." என்றான் அந்த கடைக்காரன்.

"ஏனப்பா உன் பெயர் என்ன?" என்றான் தித்தன்.

"கூடலழகன்! பெயருக்கொன்றும் குறைச்சல் இல்லை! ஆனால் இல்லத்தில் தான் அழகு இல்லை" என்றான் வெறுப்பாக.

"ஏன் இத்தனை விரக்தி? காலம் மாறாமலா போய் விடும்? என்றான் தங்கமணி மீண்டும்.

"ஹூம்! இத்தனை ஆண்டுகள் மாறாத காலம் இனி மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன? ஆமாம்! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்றான் கூடலழகன்.

"நாங்கள் தெற்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஊர் செண்பகப் பொழில். வேலை தேடி மதுரை வந்தோம்." என்றான் வேலன்.

குழம்பு ஊற்றிக்கொண்டே சிரித்தான் கடைக்காரன்.

"நல்ல புத்திசாலிகளப்பா நீங்கள்! மதுரையே பஞ்சத்தில் இருக்கும் போது வேலை தேடி வந்திருக்கிறீர்களே? நாங்களே எங்கே சென்று பஞ்சம் பிழைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் வந்தீர்களே?" என்றான்.

மூன்று இளைஞர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"பாண்டிய நாட்டின் நிலை அத்தனை மோசமாகவா இருக்கிறது?" என்றான் தங்கமணி.

"பாண்டிய நாடு எங்கே இருக்கிறதப்பா? முன் ஒரு காலத்தில் தெற்கே கொற்கை வரை பரவியிருந்ததாகச் சொல்வார்கள். ஆனால் இப்போது மதுரையை பாதுகாப்பதே இயலாத காரியமாக இருக்கும் போது மற்ற பகுதிகளை எப்படி கவனிப்பார் மன்னர்?" என்றான்.

"நீ சொல்வதும் சரி தான். அப்படியானால் உங்கள் எதிர்காலம் பற்றி ஏதாவது யோசித்திருக்கிறீர்களா?"

"எதிர்காலமா? எங்களுக்கா? ஹூம்! ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு. இல்லை எங்காவது புலம் பெயர்ந்து செல்ல வேண்டியது தான்."

"அதை நீ இப்போதே செய்யலாமே?" என்றான் வேலன்.

"அது எப்படி முடியும் இளைஞனே? மன்னர் முன் வந்து அழைத்துச் சென்றால் தானே மனதுக்கு நிம்மதியாக இருக்கும்? மதுரை வேண்டுமானால் இப்போது இப்படி இருக்கலாம். ஆனால் பாண்டிய மன்னர் தன் குடிமக்களை விட்டுக்கொடுக்கவே மாட்டார். அவரது குடையின் கீழ் தான் நாங்கள் எப்போதும் இருப்போம்." என்றான்.

அதன் பிறகு இதர விஷயங்களை பேசி விட்டு காசையும் கொடுத்து விட்டுக் கிளம்பினார்கள் மூவரும். கொடுங்கண்ணனாரின் இல்லம் அரண்மனையை ஒட்டி இருந்தது. குதிரையில் செல்லும் போது தான் மதுரை மாநகரம் எவ்வளவு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருக்கிறது எனப் புரிந்தது. மீனாட்சியம்மையின் கோயில் தான் நகரின் இதயம். அதைச் சுற்றிய நான்கு வீதிகள். வெளிச்சுற்றில் அரண்மனை மற்றூம் முக்கிய அதிகாரிகளின் இல்லங்கள். அதைத் தொடர்ந்து கடை வீதி. ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக அங்காடி வீதி இருந்தது. தங்க நகைக்கென ஒரு வீதி, வெண்கலப் பாத்திரங்கள் விற்பதற்கென தனி வீதி, துணிமணிகள் விற்பதற்கென ஒன்று என மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. காவலர்கள் வாழ்வதற்கு என தனியாக வீடுகள், விவசாயப் பெருமக்கள் வாழ குடியிருப்புகள், ஆயர் குல மக்களுக்கு என குடியிருப்பு என பாண்டிய மன்னர்களின் அறிவுத்திறமையையும், திட்டமிடும் திறமையையும் பறை சாற்றியது மதுரை.

மெதுவாக குதிரையை செலுத்திக்கொண்டு சென்றார்கள். வழி நெடுக பார்த்துக்கொண்டே போனதில் ஒரு விஷயம் புரிந்தது தித்தனுக்கு. ஒரு காலத்தில் செல்வத்தில் மிதந்த மதுரை மக்கள் இப்போது அத்தனை செழுமையாக இல்லை என்பது தான் அது. வீடுகளும், மாடங்களும் இருந்தன. ஆனால் அவைகள் பராமரிக்கப்படாமல் அழுக்கடைந்து கிடந்தன. இன்னும் சில இடங்களில் மதில் சுவர்களில் விரிசல் விழுந்து அவற்றில் செடி கொடிகள் முளைத்திருந்தன.

கொடுங்கண்ணனாரின் இல்லம் சற்றே பெரிதாகக் காணப்பட்டது. வாயிலில் காவலன் ஒருவன் மட்டுமே நின்றிருந்தான். அவனிடம் சென்று தாங்கள் செண்பகப் பொழிலில் இருந்து வருவதாகவும் அமைச்சரைப் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்கள்.

"என்ன விஷயமாக பார்க்க வேண்டும்? நிதி உதவி தேவையா?" என்றான்.

"இல்லை! எங்களை குரு விந்தையன் அனுப்பினார் என்று சொல்! அமைச்சருக்குத் தெரியும்." என்றான் தித்தன்.

உள்ளே சென்ற காவலன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவர்களை அழைத்துச் சென்றான். படிகளேறிச் சென்றனர் மூவரும். பெரிதாக விரிந்திருந்தது கூடம். அதன் கிழக்குச் சுவரின் பக்கம் நடு நாயகமாக பெரிய வேலைப்பாடுகள் கொண்ட நாற்காலியில் அமர்ந்திருந்தார் அமைச்சர் கொடுங்கண்ணனார். அவர் மன்னருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் மூவரும் மிகவும் பணிவுடன் நிண்றனர்.

"செண்பகப் பொழிலில் குரு நாதர் நலமாக இருக்கிறாரா?"

"இறைவன் அருளால் நலமாக இருக்கிறார் ஐயா! என் பெயர் தித்தன், இவர்கள் என் நண்பர்கள் பெயர் வேலன், இவன் தங்கமணி. குருநாதர் கொடுத்த ஓலையை பத்திரமாகக் கொண்டு வந்தோம் ஐயா."

"நல்லது! எங்கே ஓலை?"

தன் இடுப்பிலிருந்து எடுத்துக்கொடுத்தான் வேலன். அதனை பய பக்தியோடு வாங்கிப் படித்தார் அமைச்சர். அவரது முக பாவம் எதையும் வெளிக்காட்டவே இல்லை. படித்து முடித்து விட்டு மூவரையும் ஏறிட்டார்.

"உம்! சாதகப் பலன் இப்படி மாறுபாடாக இருக்கிறதா? உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் என குருநாதர் எழுதியிருக்கிறாரே? அப்படியானால் இளவசரர் சடையவர்மரின் ஜனன பலன் கூடத் தெரியும் அல்லவா?"

"ஆம் ஐயா!"

"அதைக் குறித்து குரு நாதர் ஏதேனும் விசேஷமாகப் பேசினாரா?"

மௌனம் காத்தனர் வேலனும், தங்கமணியும்.

"ஆம் ஐயா! விதியை மதியால் வெல்ல வேண்டிய சந்தர்ப்பம் இது என்று சொன்னார்."

"ஓ! அப்படியானால்?"

"பொதுப்பலன் படி அவரால் மதுரையில் அதிக காலம் வாழ முடியாது. ஆனால் அவரது சாதகப்படி பெரிய தலைநகரத்தில் மன்னராக ஆளும் யோகம் அவருக்கு இருக்கிறது. இதனை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் குருநாதர்." என்றான் தித்தன்.

"சபாஷ்! மிக்க மகிழ்ச்சி! அவர் எழுதிய ஓலையிலிருந்து அவர் உத்தேசித்திருக்கும் காரியம் என்ன என்பது எனக்குப் புரிகிறது. உங்களையும் அதில் பயன்படுத்திக்கொள்ளுமாறு எழுதியிருக்கிறார் குருநாதர். உங்களுக்கு சம்மதம் தானே?"

"நாட்டுக்காக உழைப்பதில் எங்களுக்குப் பெருமையே ஐயா" என்றான் தங்கமணி.

"உங்களது நாட்டுப்பற்று பாராட்டத்தக்கது. ஆனால் எனக்கு அமைச்சராக பணிகள் மிக அதிகம். அதிலும் நாடு இப்போது இருக்கும் நிலையில் என்னால் இதற்கென நேரம் ஒதுக்கவே முடியாது. ஆகையால் குருநாதர் உத்தேசித்திர்க்கும் மிகப்பெரிய செயலை நீங்கள் தனியாகத்தான் செய்ய வேண்டும். அவ்வப்போது என்னால் ஆலோசனை மட்டுமே கூற முடியும்." என்றார் கொங்கண்ணனார்.

"புரிகிறது ஐயா! எங்களால் சாதிக்க முடியும் என நம்புகிறோம்."

"நல்லது! புத்திசாலிகளாகத்தான் காணப்படுகிறீர்கள். உங்களை நம்பலாம் என குருநாதரும் எழுதியிருக்கிறார். எனவே இந்தப் பொறுப்பை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன். எடுத்த காரியம் முடியும் வரை நீங்கள் மதுரையிலேயே தங்குங்கள். உங்களுக்கு வீடு கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்."

"நன்றி ஐயா"

"ஒரு விஷயம், சேர ஒற்றர்களும், சோழ ஒற்றர்களும் எங்கும் சுற்றித் திரிகிறார்கள். இந்நேரம் இளவரசரின் ஜாதகப் பலன் அவர்கள் வரை எட்டியிருக்கும். பாண்டிய வம்சத்தைப் பூண்டோடு அழிப்பதே அவர்கள் நோக்கம். ஆகையால் மிக்க கவனமாகச் செயலாற்ற வேண்டும். மன்னருக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அதற்கு முன் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். பல விவரங்களைக் கேட்பார் மன்னர். எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். முறையாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அப்போது தான் வேலை எளிதாகும். "

"அப்படியே செய்கிறோம் ஐயா"

"உம்! நீங்கள் மூவரும் மதுரைக்கு புதிதாக வேலை தேடி வந்தவர்கள். அதை மறக்க வேண்டாம். உங்களது செயல் பேச்சு எல்லாமே அதை ஒட்டித்தான் அமைய வேண்டும். திட்டமிடுதலை எக்காரணம் கொண்டும் இரவில் செய்யாதீர்கள்."

"ஐயா? இரவில் திட்டமிடுதல் தானே வழக்கம்?" என்றான் வேலன்.

"நீ நினைப்பது போல பகைவர்களின் ஒற்றர்களும் நினைப்பார்ர்கள் என்பதால் தான் இரவில் திட்டமிட வேண்டாம் என்றேன் புரிகிறதா?" என்றார் சற்றே எரிச்சல் கலந்த குரலில்.

"புரிந்தது ஐயா!"

"பகலில், அதுவும் உங்கள் வீட்டில் வைத்து திட்டமிட வேண்டாம். ஊருக்குப் பொதுவான மண்டபம், அல்லது கோயில் பிராகாரம் இவற்றில் அமர்ந்து பேசுங்கள். அப்படி நீங்கள் பேசும் போது ஏதோ ரகசியத் திட்டம் தீட்டுகிறீர்கள் என யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது. ஆகையால் இயல்பாகப் பேசுங்கள். உங்களுக்கு அருகாமையில் யாரேனும் நடமாடினால் நீங்கள் பொதுவாகப் பேசுங்கள்." என்றார் அமைச்சர்.

கொடுங்கண்ணனார் ஏன் மன்னருக்கு இத்தனை நெருக்கமாக இருக்கிறார் என புரிந்தது தித்தனுக்கு. அறிவுக்கூர்மை மிக்கவர் அதோடு சூழ்நிலைகளை கணித்து அதற்கேற்றபடி நடக்கவும் தெரிந்தவர் என்பதால் மன்னர் தன் அருகிலேயே வைத்திருக்கிறார் போல என எண்ணிக் கொண்டான் தித்தன்.

"சரி! எனக்கு பணிக்குச் செல்ல வேண்டும். நீங்கள் நேராக காவலர் குடியிருப்பு செல்லுங்கள். அங்கே அமுதன் என்று ஒரு அதிகாரி இருப்பான். அவனுக்கு நான் ஓலை தருகிறேன். அதைக் கொடுத்தால் நீங்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வான். பெண்களும் வர இருக்கிறார்கள் என குருநாதர் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு அமுதன் காட்டும் வீட்டில் தங்குங்கள். பிறகு ஒரு வளாகத்துக்குள்ளேயே மூன்று வீடுகள் இருக்குமாறு ஏற்பாடு செய்து தருகிறேன்." ஆனால் தித்தன் மட்டுமே தன் குடும்பத்தோடு தங்கலாம். வேலனும், தங்கமணியும் பெண்களை மட்டும் தனியாகத்தான் தங்க வைக்க வேண்டும். உங்களுக்குத் திருமணமாகவில்லை எனத் தெரிந்தும் கொண்டேன்." என்றார்.

விரைவாக முடிவெடுக்கும் அவரது திறமையை வியந்தார்கள் மூவரும்.

"உமையாள்" என்று குரல் கொடுத்தார் அமைச்சர்.

நிறைமாத கர்ப்பிணியான ஒரு இளம் மங்கை ஓலையைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

"நீ ஏன் வந்தாய் உமையாள்? யாராவது செவிலியிடம் ஓலையைக் கொடுத்தனுப்பு என்று சொல்லத்தானே வந்தேன்."

சிரித்தாள் அமைச்சரின் மனைவி.

"இதில் எனக்கொன்றும் சிரமமில்லை அத்தான். நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அப்போதே ஓலையைத் தயார் செய்து விட்டேன். ஆனால் எனக்கொரு ஐயம்."

"கேள்"

"இன்னும் ஓரிரு மாதங்களில் பெண்களும் வரப்போகிறார்கள் எனச் சொன்னீர்கள் அல்லவா? அப்படியானால் எனக்கு உதவியாக அவர்களை நம் வீட்டுக்குப் பக்கத்திலயே குடி வைத்து விடலாமே? " என்றாள்.

"உம்! செய்யலாம் தான். ஆனால் தித்தனின் மனைவியும் இப்போது தான் குழந்தை பெற்றிருக்கிறாள். ஆகையால் அவளால் உனக்கு எப்படி உதவ முடியும் எனத் தெரிவில்லையே?"

"இன்னமும் நல்லதாகப் போயிற்று! நம் குழந்தையோடு விளையாட தோழன் கிடைத்தான் என எண்ணுகிறேன். அதோடு, வேலனும், தங்கமணியையும் காதலிகளை அணுகாத வண்ணம் நான் பார்த்துக்கொள்ளவும் செய்வேன்." என்றாள் உமையாள்.

சிரித்து விட்டார் கொடுங்கண்ணனார்.

" நீ மனதில் நினைத்து விட்டால் அதை எப்படியாவது சாதித்துக் கொள்வாய். சரி இப்போதைக்கு இவர்கள் காவலர் குடியிருப்பில் தங்கட்டும். பெண்கள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

ஓலை எழுதி அதனை தித்தன் கைகளில் அளித்தார்.

"அமுதனுக்குக் கூட நீங்கள் எந்த விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவனைப் பொறுத்தவரை நீங்கள் என் வீட்டுக் காவலுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய வீரர்கள். அவ்வளவு தான்."

"புரிந்தது ஐயா"

"நீங்கள் செல்லலாம்!" என்று எழுந்தார்.

மூவரும் வெளியில் வந்தனர். காவலர் குடியிருப்புக்கு எப்படிச் செல்வது எனக் கேட்டுக் கொண்டு புறப்பட்டனர். சற்றே தொலைவில் அமைந்திருந்தது அந்த இடம். அங்கு சென்று அமுதன் என்பவரைப் பற்றி விசாரித்தார்கள்.

"நான் தான் அமுதன். இங்கு பணி புரியும் அதிகாரி. உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டுக்கொண்டு ஒல்லியான ஒருவன் வந்தான்.

"ஐயா! நாங்கள் அமைச்சர் கொடுங்கண்ணனார் வீட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய காவலர்கள். அவர் உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறார்." என்று சொல்லி ஓலையைக் கொடுத்தான் தித்தன். அதனை வாசித்து விட்டு பதிலே பேசாமல் நடந்தான் அமுதன்.

"ஐயா! என்ன இது? எதுவுமே சொல்லாமல் போனால் எப்படி?" என்றான் தங்கமணி.

"நீ தான் அமைச்சரிடமிருந்தே ஓலை வாங்கி வந்து விட்டயே? என்னால் அதை மீறவா முடியும்? உங்களுக்கு வீடு காட்டுகிறேன் வா" என்று அழைத்தான். அவனது பேச்சில் எரிச்சல் தெரிந்தது.மூவரும் அவனைத் தொடர்ந்தனர்.

சற்று தொலைவில் மிகவும் பழசாகத் தோன்றிய ஒரு சிறு வீட்டின் முன்னால் போய் நின்றான் அமுதன்.

"சொக்கா! சொக்கா" என்று அழைத்தான்.

அமுதனை விட ஒல்லியான ஒருவன் வெளியில் வந்து வணங்கினான்.

"இவர்கள் இங்கே தான் தங்கப் போகிறார்கள். ஆகையால் நீ வேறு இடம் பார்த்துக்கொள்" என்றான் அமுதன்.

"ஐயா! இப்படி திடீர் எனச் சொன்னால் நான் எங்கு செல்வேன்?" என்றான் சொக்கன் பரிதாபமாக.

"என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இவர்கள் மூவரும் என்னைக் கேட்காமல் நேராக அமைச்சரிடமே வேலை கேட்டு வாங்கிக்கொண்டார்கள். போதாதென்று இவர்களுக்கு வீடு கொடு என கட்டளை வேறு. நான் என்ன தான் செய்ய? வீடு எதுவும் காலி இல்லை என அமைச்சரிடம் நான் சொல்லவா முடியும்?" என்றான் அமுதம் கோபமாக.

"ஐயா! என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. குழந்தை வேறு இருக்கிறது. அவர்களை அழைத்துக்கொண்டு நான் எங்கே செல்வேன்? தயவு செய்யக் கூடதா?" எனக் கெஞ்சினான் சொக்கன். பரிதாபமாக இருந்தது அவனைப் பார்க்க.

"ஐயா! எங்களுக்காக வீட்டில் குடியிருப்பவரை விரட்ட வேண்டாம். நாங்கள் வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்கிறோம். " என்றான் வேலன். அதனை ஆமோதித்தார்கள் தித்தனும் தங்கமணியும்.

"சரி தான். ஆனால் நான் உங்களுக்கு வீடு கொடுக்கவில்லயென நீங்கள் அமைச்சரிடம் புகார் சொன்னால் என் வேலை போய் விடுமே?"

"அப்படிச் சொல்ல மாட்டோம் ஐயா! சத்தியம்" என்றான் தித்தன்.

சொக்கன் அவர்கள் காலிலேயே விழுந்து விட்டான்.

"ஐயாமாரே! உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்வேன்? நீங்கள் நீடூழி வாழ வேண்டும்" என்றான்.

"நான் உங்களுக்கு வீடு தரவில்லை என்ற வார்த்தை வரவே கூடாது. நான் கொடுத்தேன். ஆனால் நீங்கள் அதை வேண்டாம் என்று விட்டீர்கள் நினைவிருக்கட்டும்" என்று சொல்லி விட்டு போய் விட்டான் அமுதன்.

சொக்கனிடம் விடைபெற்றுக் கொண்டு மூவரும் வீடு தேடிப் புறப்பட்டார்கள்.
 
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 10:

ஏதோ இரக்கத்தின் பேரில் வீடு நாங்களே தேடிக்கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்களே தவிர, எங்கு போவது? யாரைப் பார்ப்பது என எதுவும் புரியவில்லை. காவலர் குடியிருப்பை விட்டு சற்றே விலகி வந்தார்கள். ஆங்காங்கே சில வீடுகள் தென்பட்டன.

"பேசாமல் அங்கு சென்று வீடு கேட்கலாமா?" என்றன் தங்கமணி.

"முன் பின் தெரியாதவர்களுக்கு எப்படி வீடு தருவார்கள் தங்கமணி! அதுவும் தவிர இப்போது நாம் சாதாரண காவலர்கள் இல்லையே? யார் எங்கே எப்போது என்ன உருவத்தில் இருப்பார்கள் எனத் தெரியாத நிலையில் இப்படி நாம் இஷ்டப்பட்ட இடத்த்தில் வீடு எடுத்துத் தங்க முடியாது." என்றான் தித்தன்.

அவன் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டார்கள் மற்ற இருவரும்.

"பேசாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சத்திரம், சாவடி இவற்றில் தங்கிக் கொள்ளலாமா?" என்றான் தங்கமணி.

"செய்யலாம் தான். ஆனால் அது நம் வேலைக்கு இடைஞ்சலாக இருக்குமோ எனத்தான் யோசிக்கிறேன்." என்றான் வேலன்.

"இப்படியும் போக முடியாது, அப்படியும் போக முடியாது என்றால் என்ன தான் செய்ய? ஏன் பெரிய மனிதர்கள் போல சொக்கனிடம் வீடு வேண்டாம் எனச் சொன்னீர்களாம்?" என்றான் தங்கமணி.

"நீயா இப்படிப் பேசுகிறாய் தங்கமணி? அவனைப் பார்த்தால் உனக்கு இரக்கம் வரவில்லையா?"

"ஹூம்! அப்படி இரக்கப்பட்டதன் பலன் தான் நம்மை பார்த்து நாலு பேர் இரக்கப்படும்படி ஆகி விட்டது." என்று புலம்பினான் தங்கமணி.

"வேலா! எனக்கு ஒரு அருமையான யோசனை வந்துள்ளது. நாம் ஏன் கூடலழகனிடம் உதவி கேட்கக் கூடாது? அவன் பாண்டிய நாட்டு விசுவாசியாகவும் தோன்றினான்." என்றான் தித்தன்.

"கேட்கலாம் தான். ஆனால் அவன் உதவுவான் என்பது என்ன நிச்சய்ம்?" என்றான் வேலன்.

"முயற்சி செய்து பார்க்கலாம் வேலா! இப்போதே கிளம்புவோம்" என்றான் தங்கமணி உற்சாகமாக. அவனது உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ள கிளம்பினார்கள் மூவரும். இப்போது வெயில் சாய ஆரம்பித்தது. இன்னமும் இரு நாழிகைக்குள் வீடு கிடைக்கவில்லையென்றால் சத்திரமோ அல்லது யார் வீட்டுத் திண்ணையிலோ தான் படுக்க வேண்டும். என எண்ணிக் கொண்டான் தித்தன்.குதிரைகள் மூவரையும் சுமந்து கொண்டு விரைந்தன. கூடலழகனின் கடைப்பக்கம் சென்ற போது அங்கே யாருமே இல்லை. திண்ணை காலியாக இருந்தது.

"எங்கே போய் விட்டான்?" எனத் தேடினர். அப்போது சொல்லி வைத்தாற் போல கதவைத் திறந்து கொண்டு வந்தான் கூடலழகன்.

"அடடே! நீங்கள் வேலை தேடி வந்தவர்கள் அல்லவா? இரவு உணவு இன்னமும் தயாராக இல்லையே?" என்றான் அவன்.

"இல்லை கூடலழகா! நாங்கள் உணவுக்காக வரவில்லை. எங்களுக்கு சிறிய உதவி செய்ய முடியுமா உன்னால்?"

"என்னிடம் செப்பாலடித்த காசு கூட கிடையாது. ஆகையால் பண உதவி கேட்க வேண்டாம்."

"இல்லை இல்லை! பண உதவி இல்லை! எங்களுக்குத் தங்க வீடு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா?" என்றான் தித்தன்.

"ஏன் உங்களுக்கு வேலை கிடைத்து விட்டதா?"

"ஆம்! மூவருக்குமே காவலர் வேலை கிடைத்து விட்டது."

"அப்படியானால் காவலர் குடியிருப்பில் வீடு தருவார்களே?"

"அங்கே வீடு காலி இல்லையாம். அமுதன் சொன்னார்." என்றான் வேலன்.

"அவன் ஒரு ஊழல் பெருச்சாளி. காசு வாங்கிக்கொண்டு காவலர் அல்லாதவர்க்குக் கூட வீடு கொடுப்பான் அவன். அவனைப் போன்ற ஊழல் அதிகாரிகள் இப்போது பெருகி விட்டார்கள். என்ன செய்ய? எல்லாம் பாண்டிய நாட்டின் தலையெழுத்து." என்றான் கூடலழகன்.

"உனக்குத் தெரிந்து எங்காவது வீடு உள்ளதா? சிறியதாக இருந்தாலும் போதும். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டுப் பெண்களும் வந்து விடுவார்கள். அது வரையில் தங்க ஒரு இடம் வேண்டும் அல்லவா?" என்றான் தித்தன்.

"உங்களைப் பார்த்தால் நல்லவர்களாகத் தோன்றுகிறது, அதோடு காவலர் என்றும் கூறுகிறீர்கள். என் தம்பியின் வீடு இருக்கிறது. அவனும் அவன் குடும்பமும் தொண்டியில் படகேறி இலங்கை சென்று விட்டார்கள். எப்படியும் மூன்று மாதம் ஆகலாம் அவர்கள் திரும்பி வர. வீடு என் பொறுப்பில் தான் இருக்கிறது. அது வரையில் வேண்டுமானால் நீங்கள் தங்கிக்கொள்ளலாம்." என்றான்.

"மிக்க நன்றி கூடலழகா!"

"இருக்கட்டும்! ஏதோ என்னால் ஆன சிறு உதவி. மாதம் 10 பணம் வாடகை கொடுக்க வேண்டும். உங்களுக்கு உணவு நானே கொடுத்து விடுவேன். அதற்குத் தனியாக பணம் தர வேண்டாம். கள் குடிப்பது, பெண்கள் சகவாசம் இது போன்றவை கூடவே கூடாது. ஏனெனில் என் தாயும் தந்தையும் இந்த வீட்டில் தான் இருக்கிறார்கள். பக்கத்து வீடு தான் என் தம்பியின் வீடு. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் நான் வீடு தருகிறன்." என்றான் கூடலழகன்.

"ஒப்புக் கொள்கிறோம்" என்றனர் நண்பர்கள் மூவரும் ஒரே நேரத்தில். அவர்களை வினோதமாகப் பார்த்தபடி உள்ளே சென்று பெரிய சாவி ஒன்றை எடுத்து வந்தான்.

"வாருங்கள் வீட்டைக் காட்டுகிறேன்." என்று அழைத்துப் போனான். பக்கத்து வீடு தான். வாசலில் திண்ணை பெரிதாக இருந்தது. கதவைத் திறந்தான் கூடலழகன். உயரமான கூரையோடு அழகாக இருந்தது வீடு. திண்ணையை ஒட்டினாற் போல் தாழ்வாரம். அதைக் கடந்தால் பெரிய கூடம் அதன் ஒரு பக்கத்தில் ஒரு அறை, மறு புறத்தில் சமையலறை என இருந்தது.

"வீடு மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் நாளை முதல் வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால் இன்றிலிருந்தே தங்குகிறோம்." என்றான் வேலன்.

"எனக்கு ஆட்சேபணை இல்லை. பாய், தலையணை இப்படி எதுவும் இல்லாமல் எப்படி உறங்குவீர்கள்?

"காட்டிலும், மரத்திலுமே உறங்கிப் பழக்கம் தான் எங்களுக்கு. நாளை வேலை முடிந்து திரும்பி வரும் போது தேவையான பொருட்களை வாங்கி வருகிறோம்." என்றான் தித்தன். அவர்களிடம் சாவியைக் கொடுத்து விட்டு இரண்டடி நடந்த கூடலழகன் மீண்டும் வந்தான்.

"இன்றைய நாள் கணக்கில் வராது. ஆகையால் இரவு உணவுக்கான பணத்தைக் கொடுத்து விட வேண்டும்." என்றான். மூவரும் தலையாட்ட சென்று விட்டான் அவன்.

"என்ன இவன்? சரியான பணப்பேயாக இருப்பான் போல இருக்கிறதே?" என்றான் தங்கமணி.

"இவன் எப்படி இருந்தால் நமக்கென்ன?தங்குவதற்கு வீடு கிடைத்து விட்டதே! அது போதாதா?" என்றான் தித்தன்.

இரவு உணவை முடித்துக்கொண்டு நகரை வலம் வந்தனர் மூன்று நண்பர்களும். ஆங்காங்கே இருந்த விளக்குத் தூண்களில் எண்ணெய் ஊற்றி தீபமேற்றிக் கொண்டிருந்தனர் நகர சபைப் பணியாளர்கள். அந்தத் தெருவின் முடிவில் மற்றொரு தெரு இருந்தது. அந்த இரு தெருக்களையும் இணைக்கும் இடத்தில் ஒரு சிறிய மண்டபம் காணப்பட்டது. வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காக எப்போதோ எந்த மன்னனாலோ கட்டப்பட்ட மண்டபம். அதில் சென்று அமர்ந்து கொண்டனர். சுற்றும் முற்றும் பார்ப்பதில் சிறிது நேரம் போனது. வீட்டில் வாயிலில் இருந்த மாடப்பிறைகளில் பெண்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர். சிறுவர்கள், சிறுமியர்கள் விளையாடி முடித்து வீடு சென்று கொண்டிருந்தனர். மதிய நேரத்தைப் போல இல்லாமல் சற்றே கலகலப்பாகக் காணப்பட்டது அந்த இடம்.

"இவற்றைப் பார்க்க சற்றே வருத்தமாக இருக்கிறது இல்லையா வேலா?" என்றான் தங்கமணி.

"வருத்தமா? ஏன்?"

"நாம் வந்த வேலை நல்லபடியாக முடிந்தால் விளக்கேற்றவும், விளையாடவும் இங்கே யார் இருப்பார்கள்?" என்றான் தங்கமணி.

புரிந்தது அவர்களுக்கு.

"நீ சொல்வது சரி தான் தங்கமணி. ஆனால் செண்பகப் பொழில் இன்னமும் அழகாக ஆகுமே? அதை எண்ணிப் பார்." என்றான் தித்தன்.

"ஆம்! ஆம்! உண்மை தான். ஆனால் இவ்வளவு பெரிய வேலையை நாம் மூவரும் மட்டும் எப்படி முடிக்க முடியும் தித்தா? அமைச்சர் நமக்கு உதவுவார் என்ற நம்பிக்கை அவரது பேச்சைக் கேட்டவுடன் எனக்குப் போய் விட்டது. "

அவர்கள் அமைச்சரின் உத்தரவுப்படி சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கண்கள் நாலாபுறமும் சுழன்று யாரேனும் தங்கள் பேச்சைக் கவப்னிக்கிறார்களா? எனக் கண்காணித்தது. அப்படி யாரும் இல்லை.

"அவருக்கு வேலை அதிகம் இருக்குமல்லவா? நாம் அவரை எதிர்பார்ப்பது தவறு."

"ஆனால் நாம் கிளம்பும் போது குருநாதர் அப்படிச் சொல்லவில்லையே? நீங்கள் ஓலையைக் கொடுங்கள். கொடுங்கண்ணனார் பார்த்துக்கொள்வார் என்று தானே சொன்னர்?" என்றான் தங்கமணி.

"அதற்காக நாம் வந்த வேலையை முடிக்காமல் இருக்க முடியாது. எந்த நேரமும் அவரிடம் உதவி கேட்கலாம் எனச் சொல்லியிருக்கிறாரே அமைச்சர்? ஆகையால் நாம் அடுத்து என்ன செய்வது எனத் தான் திட்டமிட வேண்டும்." என்றான் தித்தன்.

அப்போது அவர்களை நெருங்கி இரு ஆட்கள் வர "ஊரிலிலிருக்கும் பெண்களை எப்போதடா அழைத்து வருவோம் என்றிருக்கிறது" என்றான் வேலன்.

"ஆம் வேலா! குடும்பமாக வாழ்ந்தால் தான் நன்றாக இருக்கும்" என்றான் தங்கமணி.

"உம்! காதலிகளைப் பார்க்க முடியாமல் தவிப்பாக இருக்கிறதாக்கும். இருக்கட்டும் இருக்கட்டும்! வந்த ஆட்கள் போய் விட்டார்கள்." என்றான் தித்தன்.

"அடுத்து என்ன செய்யலாம் என நீயே சொல்" என்றான் வேலன்.

"சிவநேசன் சதிச் செயலில் ஈடுபட்டான் அல்லவா? அதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? அவர்கள் நோக்கம் என்ன? இதை நாம் கண்டு பிடிக்க வேண்டும். அதோடு மன்னரை சந்திக்கும் போது விவரங்கள் கேட்பார் சொல்ல வேண்டும் என்றாரே அமைச்சர், அவை என்ன விவரங்கள்? அவற்றை எப்படி சேகரிக்கலாம்? போன்றவற்றையும் நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்."

"சபாஷ்! நல்ல யோசனை." தங்கமணி.

"சிவநேசன் இறந்தே போயிருக்கலாம். அவனுக்கு யார் உதவுகிறார்கள் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? அதைக் கூட செய்து விடலாம் என வைத்துக்கொண்டாலும், மன்னர் என்ன விவரங்கள் கேட்பார் என்பதே தெரியாமல் என்ன விவரங்களை நாம் சேகரிக்க முடியும்? குழப்பமாக இருக்கிறதே?" என்றான் வேலன்.

"எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது வேலா! ஆனால் மனம் தளர வேண்டாம். இன்றைக்குத்தான் முதல் நாள். போகப்போக நமக்குத் தெரிய வரலாம்." என்றான் தித்தன்.

"எங்கிருந்து தொடங்குவது, எப்படித் தொடங்குவது என எதுவுமே புரியவில்லையே?" என்றான் வேலன்.

"நமக்கு நன்றாக தெரிந்த விஷயத்திலிருந்து தொடங்குவோம். அதாவது சிவநேசனின் சதி. அவன் அசல் ஓலைகளைக் கைப்பற்ற மிகவும் ஆசைப்பட்டான். அது ஏன்? அசல் ஓலையைக் கைப்பற்றிய பிறகு என்ன செய்ய உத்தேசித்திருந்தான்? இதிலிருந்து தொடங்குவோம்." என்றான் தங்கமணி.

"ஆம்! அதிலிருந்து தான் தொடங்க வேண்டும். சாதகப்பலனும், பொதுப்பலனும் அவனுக்கும் தெரியும் என்ற உண்மையை அடிப்படையாக வைத்துக்கொண்டு நாம் பேசுவோம். அவனிடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம்?" என்றான் தித்தன்.

"புத்திசாலித்தனம் நிரம்பியவன் அவன். அப்படியானால் இளவரசரை செண்பகப் பொழிலுக்கு வரவழைப்பது தான் குருநாதரின் நோக்கம் என்பதை எளிதாக ஊகித்திருப்பான். இல்லையா? அப்படி ஊகித்திருந்தால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?" என்றான் தங்கமணி.

"இதற்கு நான் பதில் சொல்கிறேன் தங்கமணி. இரண்டு வகையான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவன் அந்த ஓலையை அப்படியே கொண்டு போய்க் கொடுத்து கொடுங்கண்ணனாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அரசரையும் அரசியையும் செண்பகப் பொழிலுக்கு அழைத்து வரும் வழியிலேயே கொலை செய்யத் திட்டம் தீட்டலாம். இரண்டாவது வாய்ப்பு, ஓலையில் உள்ள செய்தியை மாற்றலாம்." என்றான் வேலன்.

"சரியென்றே வைத்துக்கொள்வோம். ஓலையின் செய்தியை என்னவென்று மாற்றுவான்?"

"எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். அவனது தலைவனின் விருப்பப்படி பாண்டிய மன்னரை செய்ய வைக்க முடியுமே? ஒரு வேளை சிவநேசனது தலைவன் பாண்டிய மன்னரை சேர நாடு நோக்கி வர வைக்க விரும்புகிறார் என வைத்துக்கொள், அதுவும் யாருமில்லாமல் தனியாக, அதை அப்படியே ஓலையில் எழுதி விட்டால் தீர்ந்தது. ஏனெனில் கொடுங்கண்ணானாரையும், மன்னரையும் பொறுத்தவரை அந்த ஓலையை நம்பிக்கைக்குரிய விந்தையன் அல்லவா அனுப்பியிருக்கிறார்? ஆகையால் அது படி செய்யலாம் என அவர்கள் தீர்மானித்தால் பாண்டிய நாட்டின் நிலையை யோசித்துப் பார்" என்றான் வேலன்.

நினைக்கவே பயங்கரமாக இருந்தது.

"இப்போது சிவநேசன் இல்லை! ஆனால் மற்ற ஆட்கள் இருக்கிறார்கள் தானே? அவர்கள் என்ன திட்டம் தீட்டுவார்களோ?" என்றான் தங்கமணி.

சிந்தனையில் ஆழ்ந்தான் தித்தன்.

"சேர அரசன் சதித்திடம் தீட்ட வேண்டும் என்று தீர்மானித்தால் சிவநேசன் என்ற ஒருவனை மட்டும் நம்பி இதில் இறங்க மாட்டான். நிறைய பேர் ஈடுபட்டிருப்பார்கள். அதன் அடியையும் நுனியையும் கண்டு பிடிப்பது முக்கியம். அதைச் செய்ய முடியுமா? எத்தனை புத்திசாலித்தனமும், நிதானமான அணுகுமுறையும் தேவை? எங்களால் அது முடியுமா? இல்லை, இந்த முயற்சியில் தோற்றுப் போய் மன்னருக்கோ, இளவரசருக்கோ ஆபத்து ஏற்பட்டு விட்டால் எவ்வளாவு அவப்பெயர்? மக்கள் எங்களை எப்படியெல்லாம் தூற்றுவார்கள்? பெரிய புதைகுழியில் இறங்குவதைப் போல அல்லவா இருக்கிறது? நான் சாதாரண படை வீரன். ஒற்றறியும் கலையும், உளவாளிகளுக்கான பயிற்சியும் சிறிதும் இல்லதவன். வேலனும், தங்கமணியும் என்னைப் போலத்தான். நாங்கள் மூவர் அவர்கள் பெரிய அரசாங்கம். என்ன செய்யப் போகிறேன்? தாயே மீனாட்சி! உன் வழித்தோன்றல்களான பாண்டியர்களின் ராஜ்ஜியம் அழியாமல் தெற்குப்பகுதியில் தழைத்தோங்க அருள் செய்யம்மா" என்று வேண்டிக் கொண்டான்.

"என்ன யோசனை தித்தா?"

"சொல்கிறேன் சொல்கிறேன்! சேர மன்னன் தான் சதியில் ஈடுபடுகிறான் என நமக்கு தெரிந்து விட்டது. அப்படி ஒரு மன்னனே சதியில் ஈடுபடும் பொழுது, ஒரு மனிதனை மட்டுமே நம்புவான்? அவனுக்கு இருக்கும் அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் ஒரு சிறு ஒற்றர் படையையே அல்லவா இதில் ஈடுபடுத்துவான்? அந்தப் பெரிய சங்கிலியில் ஒரு சிறு கண்ணி தான் சிவநேசன். அவன் இருந்தாலும், இல்லையென்றாலும் சதி என்னவோ நடக்கத்தான் செய்யும். இல்லையா?" என்றான் தித்தன்.

"ஆம்! நீ சொல்வது உண்மை. ஆனால் நீ என்ன சொல்ல வருகிறாய் தித்தா?" என்றான் தங்கமணி.

"சதியில் ஈடுபடுபவன் சேர மன்னன் உண்மை. ஆனால் என்ன சதி? எத்தகையது? அது நமக்குத் தெரியாதே? நாம் மன்னரையும் மக்களையும் அழைத்துக்கொண்டு செண்பகப் பொழிலுக்குச் செல்லும் போது அவன் தாக்குதல் நடத்தலாம், இல்லை மொத்தமாக அனைவரும் தங்கியிருக்கும் பகுதியில் காட்டுத்தீயை உருவாக்கலாம், இல்லை அதற்கும் முன்பாகவே மன்னருக்கோ, இளவரசருக்கோ தீங்கு விளைவிக்கலாமே?" என்றான் தித்தன்.

மௌனம் சூழ்ந்தது அந்த இடத்தை. அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்கள் மூவரும்.

"என்ன செய்யலாம் தித்தா?" என்றான் தங்கமணி.

"எனக்கு சில யோசனைகள் தோன்றுகின்றன. ஆனால் முழுமையாக உருவாகவில்லை. நீங்களும் இது குறித்து சிந்தியுங்கள். அனைவரது யோசனைகளையும் சேர்த்தால் நல்ல திட்டம் உருவாகலாம் என்பது என் எண்ணம்."

"உம்! எனக்கும் அது சரியென்றே படுகிறது. இனி இது குறித்துப் பேச வேண்டாம். இரவு நேரமாகி விட்டது. வீட்டுக்குப் படுத்து காலையில் தெளிவாக சிந்திக்கலாம். மீனாட்சியம்மன் கோயில் பிரகாரத்தில் விபூதிப்பிள்ளையாருக்குப் பக்கத்தில் பொற்றாமரைக் குளம் இருக்கிறது அல்லவா? அதன் படிகளில் அமர்ந்து பேசலாம். யாருக்கும் சந்தேகம் வராது." என்றான் வேலன்.

"அப்படியே செய்வோம். வினாயகப் பெருமானை வணங்கி நம் முயற்சி நல்லபடியா நடந்து முடிய வேண்டும் என வேண்டுவோம்." என்றான் தித்தன்.

மூவரும் எழுந்து வீட்டுக்குச் சென்றனர்.

"எங்களது வேலை நாளையிலிருந்து தொடங்குகிறது. மிகவும் ஆபத்தானதும் முக்கியமானதும் கூட. ஆபத்து பகைவர்களால் மட்டுமல்ல, நாங்கள் சரியாக காரியத்தை முடிக்காமல் போனால் மன்னரின் கோபத்துக்கோ, அமைச்சர் கொடுங்கண்ணனாரின் கோபத்துக்கோ ஆளாக நேரலாம். அதோடு எங்கள் விதி முடிந்தது எனக் கருத வேண்டியது தான். பகைவர்களுக்குத் தெரிந்தாலோ எங்களை எப்படியும் கொலை செய்யத்தான் பார்ப்பார்கள். எப்படி இருந்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. என் கண்ணே செண்பகப் பொழிலா! அன்பே கல்யாணி! உங்களை நான் மீண்டும் பார்ப்பேனா? மீண்டும் குடும்பமாக நிம்மதியாக வாழ்வோமா? தெரியவில்லை. ஆனால் எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால் மகனே! நீ இந்நாட்டின் அமைச்சனாவாயாம். அதற்காக எந்த ஆபத்தையும் சகித்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். கல்யாணி! இதுவும் ஒரு போர்க்களம் தான். உன் கணவனின் பத்திரத்துக்காக நீ இறைவனை வேண்டிக்கொள். " என்று சிந்தித்தபடி படுத்திருந்தான் தித்தன். தன்னையுமறியாமல் கண்கள் மூடிக்கொள்ள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினான் அவன்.

இரவில் உறங்கும் போது திக்குத் தெரியாத காட்டில் வெளிச்சமோ, ஆயுதமோ இல்லாமல் தனியாக நடந்து செல்வது போலவும் ஒரு புறம் எரியும் நெருப்பு, மற்றொரு புறம் புதை மணல், இடப்பக்கம் பார்த்தால் கொடிய விலங்கு எனக் கனவு கண்டு கொண்டிருந்தான் தித்தன்.
 
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 11.

சேர நாடும் பாண்டிய நாடும் சந்திக்கும் எல்லைப் பகுதி. காடுகள் அடர்ந்து மனித நடமாட்டமே மிகவும் குறைவாக உள்ள பகுதிகள் அவை. புலி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளோடு மான், மிளா, வரையாடு போன்ற மிருகங்களும் வாழும் மலைக்காடு. சூரியக் கதிர்கள் கூட உட்புக முடியாத அளவு அடர்ந்த மரங்கள் செறிந்து காணப்பட்டது. ஒற்றையடிப்பாதை கூட இல்லை. குதிரைகள் செல்லும் வழித்தடங்கள் கூட காணாத வனப்பகுதி. சரியான வழி தெரிந்தாலொழிய அக்காட்டைக் கடப்பது என்பது முடியாத காரியம். அந்தக் காட்டில் ஓங்கி உயர்ந்த ஒரு ஆலமரத்தின் மேல் அமர்ந்து நாலாபுறமும் பார்த்திருந்தான் ஒருவன். இளமை பொங்கும் வயது. சிவந்த நிறம், கருகருவென்ற மீசை என இருந்தான். உடற்பயிற்சி செய்து செய்து தசைகளும் நரம்புகளும் முறுக்கேறி இருந்தன. பகல் நேரத்திலேயே அவன் கள் குடித்திருந்தான் என்பதை சிவந்த கண்கள் காட்டிக்கொடுத்தன. அவனது பார்வை, உடல் மொழி இவை யாவும் அவன் யாரையோ எதிர்பார்க்கிறான் என நினைக்க வைத்தது.

அந்தக் காட்டின் கிழக்குத் திசையிலிலிருந்து இருவர் மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த்னனர். கரங்களில் சிலம்பு போன்ற ஒரு கம்பு. அதனால் தரையைத் தட்டியபடி வந்து கொண்டிருந்தனர். ஏதேனும் பாம்புகள் வழியில் இருந்தால் அவை ஓடி விடும் என்பதால் அப்படிச் செய்தனர். அவர்களில் ஒருவன் சிவநேசன். அவனது தலையில் காயம் பட்டிருக்கிறது என்பதன் அடையாளமாக கட்டுப் போடப்பட்டிருந்தது. மற்றொருவன் மிகவும் ஒல்லியாக பழுப்பு நிற மேலாடை அணிந்து அழுக்கான வேட்டி கட்டி, காலில் தண்டை அணிந்திருந்தான். இருவரும் ஏதோ காரசாரமாகப் பேசிக்கொண்டு வருகிறார்கள் எனத் தெரிந்தது.

"நீ செய்தது மடத்தனம் சிவநேசா! உன் மேல் நம் தலைவர் கடும் கோபத்தில் இருக்கிறார்." என்றான் தண்டை அணிந்தவன்.

"எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது காத்தான். எப்போது நான் ஒற்றன் என அவர்களுக்குத் தெரிந்தது? வேலன் எப்படி வந்தான்? இவையெல்லாம் எனக்கு விளங்கவே இல்லை" என்றான் சிவநேசன்.

"எல்லாவற்றையும் தலைவர் விளக்குவார். வா! மதியம் 2 மணிக்கு நம்மை வரச் சொல்லி செய்தி வந்தது. மணி இப்போதே ஒன்றாகி விட்டதே?" என்றான் காத்தான். அப்போது பாதையில் யாரோ முனகும் ஒலி கேட்டது. அடிபட்டு யாரோ வலியால் முனகுவது போலிருந்தது அது. சட்டென நின்றான் காத்தான்.

"என்ன சத்தம் அது சிவநேசா?"

"உனக்கும் கேட்டதா? யாரோ ....முனகுவது போல...?"

"ஆம்! இங்கு புலிகள் அதிகம். ஒருவேளை காட்டில் விறகு பொறுக்க வந்த யாரையாவது புலி அடித்துப் போட்டிருக்கிறதா? தெரியவில்லையே?" என்றான் காத்தான். இப்போது சத்தம் சற்றே அதிகமாக இடது புறமிருந்து வந்தது. மெல்ல நடந்தான் காத்தான். ஒரே புதராக இருந்தது. அவற்றிலிருந்து தான் ஒலி வந்தது.

"பார்த்துப் போ! காத்தான். அது மனிதர்களா? இல்லை விலங்கா எனத் தெரியவில்லை" என்றான் சிவநேசன்.

அந்தப் புதரில் மிகவும் வயதான கிழவி படுத்திருந்தாள். அவள் மேல் ஈ மொய்த்திருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவாள் போல இருந்தது அவள் தோற்றம். உடை அனைத்தும் கிழிசல். அருகில் செல்லவே முடியாத அளவுக்கு முடை நாற்றம்.

"பாவம்! யாரோ கிழவி! சாகக் கிடக்கிறாள்." என்றான் காத்தான்.

"தண்ணீர்! தண்ணீர்!!" என மெலிதாகக் குரல் கொடுத்தாள் அந்தக் கிழவி. தன் இடுப்பிலிருந்த குடுவையிலிருந்து சிறிது நீர் புகட்டினான் சிவநேசன். மூன்றாவது வாய் நீர் அப்படியே வடிந்து விட்டது. கிழவியின் உயிர் போய் விட்டது.

"இப்போது என்ன செய்ய காத்தான்? யார் இவள்? ஏன் இந்தக் காட்டுக்கு வந்தாள்? என எதுவுமே தெரியவில்லையே? இவளை இப்படியே விட்டுச் செல்வதா? என்ன செய்வது?" என்றான் சிவநேசன்.

"நமக்கு நேரமாகிறது சிவநேசா! தாமதமாகச் சென்றால் பூந்துறையானின் கோபத்துக்கு ஆளாக வேண்டும். இவள் தான் இறந்து விட்டாளே? அப்படியே விட்டுப் போய் விடுவோம். திரும்பி வரும் போது எங்காவது குழி தோண்டி புதைத்து விடுவோம்." என்றான் காத்தான்.

"அப்படியே செய்வோம். ஆனால் அது வரையில் கழுதைப் புலிகள் இவள் உடலை விட்டு வைத்திருக்க வேண்டுமே? இழுத்துப் போய் விட்டால் என்ன செய்ய?"

"உம்! நீ சொல்வதும் சரி தான். என்னடா இது சோதனை? ஏன் தான் இவளைப் பார்த்தோமோ? தேவையில்லாத சங்கடங்கள். சே!" சலித்துக்கொண்டான் காத்தான்.

"காத்தான்! எனக்கொரு யோசனை! நெருப்புக்குக் காட்டு விலங்குகள் வராது எனச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இங்கே இருக்கும் காய்ந்த குச்சிகளையும் சுள்ளிகளையும் கொண்டு நருப்பை உண்டாக்குவோம். நாம் திரும்பி வரை இக்கிழவியின் உடலை எந்த விலங்கும் இழுத்துச் செல்லாது." என்றான் சிவநேசன்.

அதன் படியே சுள்ளிகளையும் சருகுகளையும் சேகரித்து பெரிய நெருப்பு உண்டாக்கினார்கள் இருவரும். சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்தது நெருப்பு. நன்கு பற்றி எரியத் தொடங்கியதும் மேலும் நடந்தார்கள் இருவரும். பேசிக்கொண்டே நடந்தார்கள். சிவநேசனுக்கு இக்கூட்டத்தின் தலைவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவல் பிறந்தது. அவரைத் தெரிந்து கொண்டால் அறிமுகம் கிடைக்கும். அவரை நன்றாக கவனித்துக்கொண்டால் பாண்டிய நாடு சேர நாட்டுக்கு அடிமையாகும் போது எனக்கு ஏதேனும் பதவி தருவார் எனக் கணக்குப் போட்டான்.

"தலைவரே வருவாரா இன்றைய கூட்டத்துக்கு?" என்றான் சிவநேசன் ஆவலாக.

"ஹூம்! நல்ல கேள்வி கேட்டாய் போ! தலைவராவது வருவதாவது? அவர் இந்நேரம் பாண்டிய நாட்டில் அல்லவா இருப்பார்? அதிலும் பாண்டிய மன்னன் சடைய வர்மனின் நம்பிக்கைக்கு உரியவராக வேலைகள் செய்து கொண்டிருப்பார். அவரால் வர இயலாது."

"அப்படியானால் இன்று கூட்டத்துக்கு யார் யார் வருவார்கள்?"

"தலைவருக்கு அடுத்தபடியாக இருக்கும் பூந்துறையான், நாம் இருவர் பிறகு இரு பெண்கள். வருவார்கள். அவ்வளவு தான்"

"பெண்களா? பெண்களுக்கு என்ன வேலை இங்கே?"

பேசிய சிவநேசனை முறைத்தான் காத்தான்.

"உனக்கு அறிவு என்பதே இல்லையா? ஆண்களால் போக முடியாத இடங்களுக்குப் பெண்கள் போய் விடுவார்களே? அதன் மூலம் பல செய்திகளை சேகரிக்க முடியுமே? என்றான் காத்தான்.

புரியாமல் விழித்தான் சிவநேசன்.

"நீ விழிக்கும் விழியிலிருந்தே உனக்குப் புரியவில்லை எனத் தெரிகிறது. இப்படியெல்லாம் உன் அறியாமையை பூந்துறையான் எதிரில் வெளிப்படுத்தாதே! அவன் இரக்கமே இல்லாதவன். ஒரே வாள் வீச்சில் உன் கதையை முடித்து விடுவான்."

அச்சம் நிறைத்தது சிவநேசனின் மனதை.

"இதைப் பார் சிவநேசா! நீ சேர நாட்டான். பாண்டிய நாட்டு மன்னருக்கு நெருக்கமான விந்தையனை உளவு பார்க்க நியமிக்கப்பட்டாய். அவர்கள் ஏதோ ஒலை கொண்டு செல்லப் போவதாக நீ செய்தி அனுப்பியதும் தலைவரும் பூந்துறையானும் எப்படியாவது அந்த ஓலைகளைக் கவர்ந்து விட வேண்டும் எனத் திட்டமிட்டார்கள். ஆனால் உன்னால் அது முடியவில்லை. "

"அதையே திருப்பித் திருப்பிப் பேசுவதால் என்ன பயன்? பெண்களுக்கு என்ன வேலை? அதைச் சொல்"

மீண்டும் முறைத்துப் பார்த்து விட்டுத் தொடர்ந்தான் காத்தான்.

"சில இடங்களுக்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை. உதாரணமாக அரண்மனைப் பெண்கள் வசிக்கும் அந்தப்புரப் பகுதி. மன்னரும் அரசியாரும் பேசும் போது பல ரகசியங்கள் தெரிய வரும். பல திட்டங்கள் வெளியாகும். அவற்றை நமக்குச் சொல்வதற்காகத்தான் பெண்கள் ஒற்றர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்."

"ஓ! இந்தப் பெண்களும் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் தானா? அவர்கள் எப்படி அரண்மனைப் பணியில் சேர்ந்தார்கள்?"

"நம் தலைவரின் ஏற்பாடுகள் தான் இவை. சேர நாட்டுப் பெண்களை ஊமை என்று சொல்லி அரண்மனைப் பணியில் அமர்த்தி விடுவார். அவர்களுக்குக் காதும் கேட்காது எனச் சொல்லி விடுவதால் பலரும் அவர்கள் முன்னிலையில் தயக்கமின்றிப் பேசுவார்கள். அதனால் நமக்கு பல நன்மைகள். அப்படிச் செய்ததால் தானே பாண்டிய மன்னன் சடைய வர்மனை நம்மால் பல இடங்களிலும் தோற்கடிக்க முடிந்தது?"

ஏயப்பா? எத்தனை விஷயங்கள் இருக்கிறதா ஒற்றறிதலில்? அதோடு சதியும் சூழ்ச்சியும் செய்ய எவ்வளவு திட்டமிடல்கள் தேவையாக இருக்கிறது? என யோசித்துக்கொண்டே வந்தான். இருவரும் ஆலமரத்தை நெருங்கி விட்டார்கள். சட்டென குதித்து இறங்கினான் மேலே அமர்ந்திருந்தவன். பதறி இரண்டடி பின்னால் போனான் சிவநேசன்.

"நில்லுங்கள்! யார் நீங்கள்? இந்தக் காட்டுக்குள் ஏன் வந்தீர்கள்?" என்றான்.

"காட்டில் அதிகமாக செம்பருத்தி பூத்திருக்கிறது எனச் சொன்னார்கள். அதைக் காண வந்தோம். இவன் என் நண்பன். யானைகளில் ஒருவன்." என்றான் காத்தான்.

வாயைப் பிளந்து விட்டான் சிவநேசன். காத்தான் என்ன இப்படிப் பேசுகிறான்? நிச்சயம் இது ஏதோ சங்கேத வார்த்தைகள் தான். இவையெல்லாம் காத்தனுக்குத் தெரிந்திருக்கிறதே? எனக்கு ஏன் தெரியவில்லை? அப்படியானால் என்னை இவர்கள் இன்னமும் முழுதாக நம்பவில்லை என்றாகிறதே? இது போன்ற ஒற்றர் கூட்டங்களில் ஒருவன் மேல் நம்பிக்கை இல்லையென்றால் உயிரையே எடுத்து விடுவார்களே? இனி எனக்கு கொடுக்கவிருக்கும் பணிகளை செம்மையாக முடிக்க வேண்டும். இல்லையேல் என் உயிருக்கே ஆபத்து." என எண்ணிக் கொண்டான்.

"யானைகளில் ஒருவனா? நல்லது? இப்படி அமருங்கள். பிடிகள் இன்னமும் வரவில்லை. வரும் நேரம் தான்." என்றான்.

"பெண் யானைகளுக்குப் பிடிகள் என்று பெயர். பெண்களைத்தான் பூந்துறையான் அப்படிச் சொனனன்" என்றான் காத்தான் சிவநேசன் காதுகளில். புரிந்து கொண்டேன் என்பதன் அடையாளமாகத் தலையை ஆட்டினான் அவன்.

"இவன் தான் திட்டத்தை சரியாக நிறைவேற்றத் தெரியாதவனா? பெயர் என்ன?" என்றான் பூந்துறையான் கடுமையான குரலில்.

"சிவநேசன்" என்றான். அதைச் சொல்லி முடிக்கு முன் குரல் நடுங்கியது.

"உம்! நீ யார்? உண்மையிலேயே சேர நாட்டுக்காக ஒற்றறிகிறாயா? இல்லை எங்களையே ஏமாற்றி பாண்டிய நாட்டுக்கு சேவை செய்யும் துரோகியா? என இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும். எதற்கும் உன் கழுத்தை என் வாளுக்கு இரையாக்க தயாராக இரு" என்றான் முன்னை விடக் கடூரமாக.

"இது என்ன புதுக்கதை?" என்றான் காத்தான். அவனுக்கே இது தெரியாது என்றதும் பயம் மேலும் அதிகரித்தது சிவநேசனுக்கு. அந்த நேரத்தில் சட்டென கூர்மையானான் பூந்துறையான்.

"யாரோ வரும் சத்தம் கேட்கிறது." எனச் சொல்லி விட்டு வேகமாக மரக்கிளைகளில் தாவியேறினான். அவனது வேகம் அதிசயிக்கத்தகக்கதாய் இருந்தது. சற்று நேரம் பொறுத்து மெல்லிய ஓசைகள் கேட்டன. சட்டென அழகான இரு இளம் பெண்கள் தெரிந்தார்கள். இருவரும் காட்டுவாசிப்பெண்களைப் போல உடையணிந்திருந்தார்கள். வளையல்கள், கம்மல் என எல்லாமே மலர்களால் செய்யப்பட்டவை. தங்கம் என்ற உலோகமே இல்லை அவர்கள் உடலில்.

"என்ன? கார்த்தியாயினி? நீ பாண்டிய அரசியின் அந்தப்புரத்தில் வேலை பார்ப்பவள்? உன் கழுத்தில், காதில் நகையே இல்லையே?" என்றான் காத்தான். அவனை விழித்துப் பார்த்தாள் கார்த்தியாயினி என அழைக்கப்பட்ட இளையவள். முதல் பெண் முகத்தையே திருப்பிக் கொண்டு விட்டாள்.

"என்ன கோபம் உனக்கு? ஆதிரை?" என்றான் காத்தான் இளிப்புடன்.

"எங்கள் இயற்பெயரை நாங்கள் மறந்தே போய் விட்டோம் காத்தான். இப்போது என் பெயர் மங்கையர்க்கரசி, இவள் பெயர் அமுத தேவி." என்றாள் இளையவள்.

"இவனுக்கு ஏன் விளக்கம் சொல்கிறாய் மங்கை?" என்றாள் அமுத தேவி எரிச்சலுடன்.

"உன்னிடம் நகை இல்லையென்றால் நான் என்ன செய்ய? என்னிடம் ஏன் கோபப்படுகிறாய்?" என்றான் காத்தான் மெல்லிய குரலில்.

"வாயை மூடு! எங்களிடம் நகை இல்லை என்று நாங்கள் சொன்னோமா? காட்டுக்குள் வரும் இரு இளம் பெண்கள் உடல் முழுக்க நகை அணிந்து, நாகரீகமாக உடுத்தி வந்தால் சந்தேகம் வராதா முட்டாளே? அதனால் தன் நாங்கள் காட்டுவாசிப் பெண்களைப் போல வந்துள்ளோம்." என்றாள் மங்கை.

மரத்திலிருந்து இறங்கி வந்தான் பூந்துறையான்.

"பிடிகளில் இரண்டு" என்றாள் மங்கை மீண்டும்.

"உம்! தெரிந்து கொண்டேன். முதலில் அமருங்கள்" என்றான் பூந்துறையான்.

"நாங்கள் அப்போதே வந்து விட்டோமே? எங்களை நீங்கள் அமரச் சொல்லவே இல்லையே?" என்றான் காத்தான்.

"இது போன்ற அசட்டுப் பேச்சுக்கள் வேண்டாம்." என்றான் பூந்துறையான் சுருக்கமாக.

"இன்று என்ன செய்தி கொண்டு வந்தீர்கள் பெண்களே?" என்றான் பூந்துறையான்.

"முக்கியமான செய்தி தான் அண்ணா! சடையவர்மருக்கு செண்பகப் பொழிலில் இருந்து யாரோ விந்தையன் என்பவர் ஓலை அனுப்பியிருக்கிறாரம். அப்படி அனுப்பிய இருவரில் ஒருவன் ஒற்றனாம். ஆனால் அதை முன்னாலேயே உணர்ந்து கொண்ட விந்தையன் சதியை சதியாலேயே வென்று விட்டாராம். சேர ஒற்றனுக்கு நல்ல அடியாம்." என்றாள் அமுத தேவி.

பதில் தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது போல இருந்தது சிவநேசனுக்கு. அதோடு தான் சேர ஒற்றன் தான் என பெண்கள் உறுதி செய்ததால் பூந்துறையானின் வாளுக்கு இல்லகாக வேண்டாம் என்ற ஆறுதலும் தோன்ற அப்படியே மரத்தின் அடியில் அமர்ந்தான்.

"பிழைத்தாய் நீ சிவநேசா! இல்லையென்றால் உன் உயிர் போயிருக்கும். நன்றி சொல் இப்பெண்களுக்கு" என்றான் பூந்துறையான்.

"அப்படியானால் அண்ணா! இவன் தான் அடிப்பட்ட அந்த சேர ஒற்றனா? பிழைத்து வந்து விட்டானா?" என்றாள் மங்கை கிண்டலாக.

ஒரு பெண் தன்னைக் கிண்டல் செய்தது அதைக் கேட்டு பூந்துறையானும் காத்தானும் சிரித்தது எல்லாம் சேர்ந்து அவமானமாக இருக்கக் கொதித்தான் சிவநேசன்.

"இனி ஒரு முறை என்னை இகழ்ந்து பேச வேண்டாம். என் மேல் தவறு இல்லை. அந்தக் கிழவன் என்னை ஏமாற்றி விட்டான்." என்றான் ஆத்திரமாக.

"வெட்கக்கேடு இது. ஏமாற்றுவது, சூழ்ச்சி செய்வது எல்லாமே நம் வேலை. அப்படி இருக்க, வயது முதிர்ந்த ஒரு கிழவன் உன்னை ஏமாற்றி விட்டான் என்கிறாயே?" என்றாள் அமுத தேவி.

"சரி சரி! நமக்குள் வாக்குவாதங்கள் வேண்டாம். நீங்கள் நினைப்பது போல விந்தையன் ஏதோ சாதாரண ஜோதிடன் அல்ல. அவன் தான் சடையவர்மனுக்கு அரசியல் குரு. அவன் இப்போது என்ன திட்டம் தீட்டியிருப்பான் எனத் தெரியவில்லையே? ஏன் சிவநேசா? அந்த ஓலையில் என்ன இருந்தது என உன்னால் அறிந்து கொள்ள முடியவில்லையா?"

"இல்லை பூந்துறையான்! பயணம் தொடங்கும் போது தான் அந்த ஓலைகள் எங்கள் கைகளுக்கு வந்தன. கூடவே தித்தன் இருந்ததால் என்னால் அதைப் பிரித்துப் படிக்க முடியவில்லை. அதோடு எங்களிடம் கொடுத்தது கொடுங்கண்ணாரிடம் கொடுக்க வேண்டிய ஓலைகளே அல்ல! ஏதோ போலி ஓலைகள்" என்றான் சிவநேசன்.

"அடேயப்பா! அந்த விந்தையன் அவ்வளாவு அறிவு படைத்தவரா?" என்றாள் அமுத தேவி.

"போகட்டும்.! சடையவர்மனுக்குக் குழந்தை பிறந்ததைக் குறித்து ஏதேனும் பேசிக்கொண்டார்களா?"

உற்சாகமானான் சிவநேசன்.

"நிறையத் தெரிந்து கொண்டேன் பூந்துறையான். சடையவர்மனுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதோடு அதன் சாதக அமைப்பின்படி அவனால் மதுரையில் ஆட்சி செய்ய முடியாதாம். அதனால் தான் ஏதோ ஓலை எழுதினார் விந்தையன்." என்றான்.

"ஓஹோ! அப்படிப் போகிறதோ கதை? விந்தையன் ஓலையில் என்ன எழுதியிருப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது." என்றான் பூந்துறையான்.

"அனைவராலும் ஊகிக்க முடியும் அண்ணா! ஆனால் விவரங்கள் அது தானே முக்கியம்?" என்றாள் மங்கை.

"ஆம்! அண்ணா! சடையவர்மனின் மகனால் மதுரையில் ஆட்சி செய்ய முடியாது என்பதால் அவனை தென் பகுதிக்கு அழைத்திருப்பார் விந்தையன். இதை நம்மால் ஊக்கிக்க முடியும் தான். ஆனால் எங்கே? எப்போது? இதற்கு மன்னன் சடையவர்மன் சம்மதிப்பானா? அப்படியே சம்மதித்தாலும் எவ்வளவு பேரைக் கூட அழைத்துச் செல்வார்கள்? இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லத் தேவையான பணம் எங்கே கிடைக்கும்? மக்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்? இப்படி நிறையக் கேள்விகள் இருக்கின்றனவே?" என்றாள் அமுத தேவி.

பெண்களின் புத்திசாலித்தனத்தில் ஆடிப்போனான் சிவநேசன். அவர்களை மரியாதையாகப் பார்த்தான்.

"இத்தனை கேள்விகளுக்கும் எளிய பதில் உண்டு அமுதா! மன்னனையும் அரசியையும் நீங்கள் கண்காணித்துக்கொண்டே இருந்தால் போதும். இந்த விவரங்கள் அனைத்தும் தெரிந்து விடுமே?" என்றான் பூந்துறையான்.

"ஆம்! நல்ல யோசனை தான்."

"இதற்காக மட்டும் நான் இங்கு கூடவில்லை நண்பர்களே! தலைவர் நம்மிடம் முக்கியப்பணி ஒன்றை ஒப்படைத்திருக்கிறார். விந்தையன் எச்சரிக்கையாகி விட்டார் என்றால் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கத் தொடங்குவார். மன்னனையும் மற்ற முக்கியமானவர்களையும் சம்மதிக்க வைத்து மதுரையை விட்டு தென் பகுதிக்குச் செல்ல யாரோ சிலரை ஏற்பாடு செய்திருக்கிறாராம் அந்த விந்தையன். அவர்களது நோக்கம் நிறைவேறக் கூடாது. முக்கியமாக அவர்களையும் கொடுங்கண்ணனாரையும் மன்னர் நம்ப்வே கூடாது. இதைச் செய்ய முடியுமா உங்களால்?" என்றான் பூந்துறையான்.

"முடியும் என்று தான் எண்ணுகிறேன்." என்றான் சிவநேசன்.

"இதில் நீ கண்டிப்பாக ஈடுபடக் கூடாது சிவநேசா! உன்னை அந்த தித்தனுக்கும் வேலனுக்கும் அடையாளம் தெரியும். நீ கூட இருந்து உதவு. ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்கள் முன்னால் போய் நிற்க வேண்டாம். என்ன?" என்றான் பூந்துறையான்.

தலையாட்டினான் சிவநேசன்.

"அப்படியானால் நான் மட்டுமா இதில் ஈடுபட வேண்டும்? இது மிகவும் பெரிய பணியாயிற்றே?"

"அது தெரிந்து தான் மற்றொரு ஆளை வரச் சொல்லியிருக்கிறேன். தந்திரத்தில் நரி, சூழ்ச்சியில் யாரும் அருகில் கூட நிற்க முடியாது."

"அது யார் அண்ணா? அத்தனை திறமைசாலி? பெயர் என்ன?"

"வரும் நேரம் தான். நீங்களே பாருங்களேன்?"

அந்த நேரத்தில் சிவநேசனும் காத்தானும் இறந்து போய் விட்டதாகக் கருதிய கிழவி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள்.
 
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 12.

ஈ மொய்த்து செத்துக்கிடந்த அந்தக் கிழவி சற்று தொலைவில் நடந்து வருவதைப் பார்த்ததும் முகங்கள் வெளிறிப் போயின சிவநேசனுக்கும், காத்தானுக்கும். பூந்துறையான் மெல்ல புன்னகைத்தான். பதிலுக்கு அந்தக் கிழவியும் புன்னகைத்தாள்.

"வா! வர்த்தினி! இம்முறை யாரை ஏமாற்றினாய்?" என்றான் சிரித்தபடி.

"இந்த மூதாட்டியா நீ சொன்ன ஒற்றன்? இவளால் என்ன செய்ய முடியும்?" என்றாள் மங்கை மெல்லிய குரலில்.

காத்தானும், சிவநேசனும் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.

ஹாஹா என நகைத்தனர் பூந்துறையானும் அந்தக் கிழவியும்.

"வர்த்தினி கிழவியே அல்ல! இள வயது மங்கை அவள். மாறு வேடம் பூணுவதில் வல்லவள்." என்றான் பூந்துறையான்.

தனது மாறு வேடத்தைக் கலைத்தாள் வர்த்தினி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண். நரை முடியில் தண்ணீர் தடவ முடியின் கரு நிறம் தெரிந்தது. எண்ணெயைக் குழைத்துப் பூச முகத்தில் தோலில் இருந்த சுருக்கங்கள் மறைந்தன. முதுகை நிமிர்த்த உயரம் தெரிந்தது. இப்போது மிகவும் அழகான ஒரு பெண் அவர்கள் முன்னால் நின்றிருந்தாள்.

"எங்களையே ஏமாற்றி விட்டாயே! நீ மிகவும் புத்திசாலி தான்" என்றான் சிவநேசன்.

"உங்களைப் போன்ற மடையர்களை ஏமாற்றுவது மிகவும் சுலபம் காத்தான். இதில் என்ன பெரிய புத்திசாலித்தனம்?" என்றாள்.

"நீ புத்திசாலி என்பதால் நாங்கள் முட்டாள்கள் ஆகிவிட மாட்டோம். தெரிந்து கொள்" என்றான் சிவநேசன் இளக்காரமாக.

"சிவநேசா! நீங்கள் இருவரும் முட்டாள்கள் என்பதை நான் இங்கேயே இப்போதே நிரூபித்துக் காட்டட்டுமா?" என்றாள் வர்த்தினி.

ஹூம் என்றான் சிவநேசன்.

"இவர்களை முட்டாள்கள் என நீ நிரூபிக்க வேண்டாம் வர்த்தினி! ஆனால் இவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை நீ எடுத்துச் சொன்னால், இனியும் அவர்கள் அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருப்பார்கள் அல்லவா?" என்றான் பூந்துறையான் சமாதானமாக.

"சரி! உனக்காக இவர்களை மன்னிக்கிறேன்." என்றாள் அந்தப் பெண்.

"உன் மாறுவேடம் மிகச் சிறப்பாக இருந்தது. அதில் நாங்கள் ஏமாந்து விட்டோம். அவ்வளவு தானே?" என்றான் காத்தான்.

"இல்லை! அது மட்டும் இல்லை! நீங்கள் என்னைக் கண்டவுடன் இந்தக் காட்டுப்பகுதிக்கு எப்படி இத்தனை வயதான கிழவி தனியாக வந்தாள்? என யோசிக்கவே இல்லை. அப்புறம் காட்டுக்கு விறகு சேகரிக்கவோ, தேன் சகரிக்கவோ வரும் மக்கள் கட்டாயம் தங்களுடன் கூடை அல்லது பை எடுத்து வருவார்கள். கிழங்குகளையும், கீரைகளையும் போட்டு எடுத்துச் செல்ல. அப்படி ஏதேனும் பொருள் அந்தக் கிழவியின் அருகில் இருக்கிறதா? என நீங்கள் தேடவும் இல்லை."

"பாவம்! வயதான கிழவி ஒருத்தி, முடியாமல் இருக்கையில் இதையெல்லாம் யோசிக்கத் தோன்றுமா?" என்றான் சிவநேசன்.

"தோன்ற வேண்டும்! கட்டாயம் தோன்ற வேண்டும். அப்படித் தோன்றினால் தான் நீ ஒற்றன், உளவாளி. இல்லையென்றால் வெறும் ஊர்க்காவலன் தான்."

"சரி! இனி கவனமாக இருக்கிறோம்" என்றான் காத்தான்.

"அது மட்டுமில்லை நண்பர்களே! மிகப்பெரிய தவறு ஒன்றும் செய்தீர்கள்."

"என்ன அது? உன்னை உயிரோடு விட்டு வந்ததா?" என்றான் சிவநேசன்.

வர்த்தினியின் முகம் மாறியது.

"வேடிக்கைக்காகக் கூட இது போன்ற பேச்சுக்களை நான் அனுமதிப்பதில்லை. இரக்கம் என்பது பலவீனத்தின் அறிகுறி எனக் கருதுபவள் நான். என்னிடம் விளையாட்டு வேண்டாம்" என்றாள் கடுமையாக. மருந்துக்காகக் கூட அவள் புன்னகைக்க மாட்ட்டள் என நினைத்தான் சிவநேசன்.

"என்ன தவறு சொல்லேன்" என்றாள் மங்கை.

"உடலை விலங்குகள் இழுத்துச் செல்லாமல் இருக்க நெருப்பு மூட்டினீர்கள் பாருங்கள் அதைத்தான் சொல்கிறேன். நீங்கள் காட்டுக்கு வந்ததே ஒரு ரகசியக் கூட்டத்தில் பங்கு கொள்ள. அப்படி இருக்க நெருப்பு மூட்டி அந்தப் புகை மூலம் உங்கள் வரவை அனைவருக்கும் தெரிவிப்பது போல அல்லவா இருக்கிறது உங்கள் செயல்?" என்றாள்.

இரு நிமிடங்கள் மௌனமாகக் கடந்தது.

"அப்படி என்றால் நாங்க:ள் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறாய்?"

"உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் மூதாட்டி இறந்து கொண்டிருக்கிறாள். அவளால் நமக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை. அப்படி இருக்க அவள் இறந்து உடலை எந்த விலங்கு இழுத்துச் சென்றால் என்ன? என்று விட்டு விடுவேன். " என்றாள்.

அந்தப் பகல் வேளையில் கூட வயிற்றில் ஜில்லென பயம் பாய்ந்தது. இப்படியும் ஈவு இரக்கம் என்பதே இல்லாமல் ஒரு பெண்ணால் இருக்க முடியுமா? என்ற எண்ணம் மனதில் ஓடியது.

மீண்டும் மௌனத்தைக் கலைத்தாள் வர்த்தினி.

"போனதெல்லாம் போகட்டும். இனியாவது பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்" என்றாள்.

"வர்த்தினி! உனக்குத் தலைவர் முக்கியமான பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் தெரியுமல்லவா?" என்றான் பூந்துறையான்.

"தெரியும்! அதற்கு எனக்கு உதவியாக இருவரை நியமித்திருப்பதாகச் சொன்னார். யார் அவர்கள்?"

"அப்படியானால்? நீ தலைவரைப் பார்த்திருக்கிறாயா?" என்றாள் மங்கை.

"உம்" என்றாள் வர்த்தினி சுருக்கமாக.

அவளை வியப்புடன் பார்த்தார்கள் அனைவரும். வயது இருபதுக்குள் தான் இருக்கும் அவளுக்கு. ஆனால் முகத்தின் கடுமையும், கண்களின் கொடூரமும் கண்டாலே பயப்படும் வண்ணம் இருந்தன. கையில், காதில் கழுத்தில் எந்த ஆபரணமும் இல்லை. அழகு படுத்திக்கொள்வதிலோ? அலங்காரம் செய்து கொள்வதிலோ ஆர்வம் உள்ளவள் போலவும் தெரியவில்லை. இவளுடன் இணைந்து எப்படிப் பணி செய்வது? என யோசித்தார்கள் சிவநேசனும், காத்தானும்.

"இவர்கள் இருவரும் தான் உன் உதவியாளர்கள்" என கை காட்டினான் பூந்துறையான்.

"இவர்களா? " என்றவள் சற்று நேரம் யோசித்தாள்.

"உம்! என் திறமைக்கு இது ஒரு சவால் தான். பார்த்துக்கொள்ளலாம். சிவநேசன் எக்காரணம் கொண்டும் மற்றவர்கள் எதிரில் வரக்கூடாது." என்றாள் வர்த்தினி.

அவமானமாக உணர்ந்தான் சிவநேசன்.

"சரி! நேரமாகிறது! நாங்கள் குறித்த நேரத்தில் திரும்பவில்லையென்றல் அரசியாருக்குக் கோபம் வரகூடும். இப்போது புறப்பட்டால் தான் நாளை காலையில் மதுரையை அடைய முடியும். எங்களுக்கு ஏதாவது செதி உண்டா?" என்றான் அமுத தேவி.

"இப்போதைக்கு எதுவும் இல்லை பெண்களே! நீங்கள் வழக்கம் போல காதுகளைத் தீட்டி வைத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் நான் பேச விரும்பினால் மதுரை அரண்மனைக்கு அருகில் இருக்கும் பாண்டி முனீஸ்வரர் கோயிலுக்கு வருவேன். நீங்களும் அங்கே வரலாம்" என்றாள் வர்த்தினி.

"நீ அங்கே வந்து விட்டாய் என்பதை எப்படி நான் தெரிந்து கொள்வது?" என்றாள் மங்கை.

"ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்கள் கோயிலுக்கு வாருங்கள். நான் வருவதாக இருந்தால் அந்தக் கிழமை தான் வருவேன். நானே உங்களை அடையாளம் கண்டு பேசுவேன்." என்றாள்.

"நீ என்ன? பெரிய ராணி போலப் பேசுகிறாய்? நீயும் எங்களைப் போல ப்ணிப்பெண் தானே? உனக்கு ஏன் இத்தனை ஆணவம்?" என்றாள் அமுத தேவி.

"இது தான் நம் பெண்களிடம் இருக்கும் கேவலமான சிந்தனை. ஆண்கள் தங்கள் தலைவனாக இருக்க வேண்டும் என ஆணாதிக்க சிந்தனை. ஏன் என்னை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாதா உங்களால்?"

"மன்னிக்க வேண்டும். நீங்கள் சொல்வதும் உண்மை தான். அரசியல் தந்திரத்தில் ஆணென்ன பெண்ணென்ன?உங்களை எங்கள் தலைவியாக ஏற்றுக்கொள்கிறோம். எப்படி நாங்கள் அழைப்பது? தலைவி என்றா?" என்றாள் அமுத தேவி. அவள் முகத்தில் அபரிமிதமான மரியாதை தெரிந்தது. அவளைத் தொடர்ந்து மங்கையும் அதையே சொன்னாள்.

"என்னை நீங்கள் வர்த்தினி என்றே அழைக்கலாம். வீண் பேச்சு வேண்டாம். இப்போது நான் என் திட்டத்தை விவரிக்கலாம் அல்லவா? ஏனெனில் மங்கையும் அமுதாவும் வெகு தூரம் செல்ல வேண்டும்." என்றாள் வர்த்தினி.

அவளது பேச்சு, விரைந்து முடிவெடுக்கும் தன்மை இவை மற்றவர்ஃபளிடம் மரியாதையை ஏற்படுத்தின.

"சொல் வர்த்தினி! உன் திட்டம் என்ன?" என்றான் சிவநேசன்.

முதலில் மரங்கள் மேல், காட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு வாருங்கள். யாரேனும் மறைந்திருக்கக் கூடும்." என்றாள். அவசர அவசரமாகத் தேடினர் யாரும் இல்லை.

வட்டமாக அமர்ந்து கொண்டனர். நடு நாயகமாக வர்த்தினி, அவளை அடுத்து பூந்துறையான், அவனுக்கு பிறகு இரு பெண்கள் வர்த்தின்யின் இந்தப்பக்கம் சிவநேசன் மற்றும் காத்தான் என அமர்ந்திருந்தார்கள். யாரும் இல்லையென்றாலும் மிகவும் மெல்லிய குரலில் பேசினாள் வர்த்தினி. நெருங்கி அமர்ந்திருந்தவர்களுக்கே கூட கூர்ந்து கேட்டல் தான் புரியும் என அமைந்திருந்தது அவள் பேச்சு.

"தலைவர் சொன்னதிலிருந்து சில விஷயங்கள் எனக்குத் தெரிந்தன. விந்தையன், தித்தன் என்பவனை தலைவனாகக் கொண்டு ஒரு கூட்டத்தை மதுரை நோக்கி அனுப்பியிருக்கிறான். அவர்கள் நோக்கம் மன்னரையும் மற்ற அமைச்சர்களையும் சம்மதிக்க வைத்து தெற்கு நோக்கிச் செல்வது. அதை நாம் நடக்கவே விடக் கூடாது. "

"ஏன்? பாண்டிய மன்னர் தெற்கு நோக்கிச் சென்றால் நாம் மதுரையை எளிதாகக் கைப்பற்றி விடலாமே?" என்றான் காத்தான்.

"முட்டாளே! இப்போதே மதுரையை நம்மால் கைப்பற்ற முடியும். சோழனும், வடக்கிலிருந்து வந்த பலரும் நமக்கு துணையாக இருப்பார்கள். ஆனால் நம் நோக்கம் அதுவல்ல. பாண்டிய வம்சத்தைப் பூண்டோடு அழிப்பது. புரிகிறதா?" என்றாள்.

"அதை ஏன் இப்போதே செய்யவில்லை? இரவோடு இரவாக தீயை வைத்துக் கொளுத்தி விடலாமே? மதுரை எரிவது ஒன்றும் புதிதில்லையே?" என்றான் சிவநேசன்.

"அதி மேதாவிகள் தான் இருவரும். முன்பு மதுரை எரிந்த போது இருந்த நிலை வேறு. இப்போது நிலை வேறு. அதோடு இரவு நேரத்தில் காவலர்களும் அதிகம். சுற்றிலும் தீ வைத்தால் அவர்கள் பார்த்துக்கொண்டு பேசாமல் இருப்பார்களா? அதோடு நம் ஆட்களில் பலரும் மதுரையில் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களும் சேர்ந்தல்லவா மடிவார்கள்? பூந்துறையா! இவர்களைப் பேசாமல் இருக்கச் சொல்! இல்லையேல் நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்க்கப் போய் விடுவேன். நீ தான் தலைவருக்குப் பதில் சொல்ல வேண்டும்." என்றாள் வர்த்தினி.

"நீங்கள் இருவரும் திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டுமானால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இங்கேயே வெட்டிப் புதைத்து விட்டுப் போய் விடுவேன். ஜாக்கிரதை" என உறுமினான் பூந்துறையான். கப்பென வாயை மூடிக் கொண்டார்கள் இருவரும்.

"எந்த ஒரு செயலையும் முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்பது தான் என் கொள்கை. அந்த தித்தன் என்பவன் யார்? அவன் பலம் என்ன? பலவீனம் என்ன? இவைகளை நாம் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தித்தனைத் தவிர மற்றவர்கள் யார் யார் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள்? அவர்களது இருப்பிடம் என்ன? இவைகளும் தெரிய வேண்டும். முடிந்தால் மற்றவர்களை பொன்னசை, பெண்ணாசை காட்டி நம் பக்கம் இழுக்க முயல வேண்டும்." என்றாள்.

"அப்படி முடியவில்லையென்றால்? நம் திட்டம் அவர்களுக்குத் தெரிந்து விடுமே?" என்றாள் அமுத தேவி.

"நிச்சயம் தெரியாது. ஏனெனில் அவன் ஒப்புக்கொள்ளவில்லயேன்றால் உயிரோடு திரும்ப மாட்டான். அப்படியே ஒப்புக்கொண்டாலும் அவன் தித்தனோடு இணை ந்து பணியாற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. அதற்குத்தான் சிவநேசனும் காத்தனும் உதவுவார்கள்." என்றாள்.

"இது தான் திட்டமா?"

"இது மட்டுமில்லை தோழர்களே! இது ஒரு சிறிய பகுதி தான். நம் வேலையை எளிதாக்கும் பணிகளை நம் தலைவரும் அவரோடு சேர்ந்த மற்றவர்களும் பார்த்துக்கொள்வார்கள். நமது மிக மிக முக்கியமான பணி, இளவரசனைக் கொல்வது தான்." என்றாள் வர்த்தினி.

இதயம் ஒரு முறை அதிர்ந்தது அவர்களுக்கு. இளவரசன் எனச் சொல்லப்பட்டாலும் அவன் கைக்குழந்தை அல்லவா? ஒரு சிறு குழந்தையைக் கொல்லவா இத்தனை திட்டம்? என எண்ணிக் கொண்டார்கள்.

"என்ன அமைதியாகி விட்டீர்கள்?" என்றாள் வர்த்தினி மீண்டும்.

"இல்லை! சிறு குழந்தையைப் போய்க்கொல்ல வேண்டுமா? என்று தான்..." என இழுத்தாள். அமுத தேவி.

"பாம்புக்குட்டியைக் கொல்லாமல் விடுவோமா? அது போலத்தான் இதுவும் என்றாள் வர்த்தினி சர்வ சாதாரணமாக.

"ஏன் குழந்தையைக் கொல்ல வேண்டும்? அதன் அவசியம் என்ன?" என்றான் சிவநேசன்.

"நன்றாகக் கேட்டாய். இப்போது பிறந்துள்ள இளவரசன் சடையவர்மன் பெரிய பெரிய செயல்களைச் செய்து தென் திசையில் பாண்டிய ராஜ்ஜியத்தை நிலை நிறுத்துவானாம். இவ்வாறு அவனது ஜாதகம் கூறுகிறதாம். அதை நடக்க விடக் கூடாது. பாண்டியர்கள் பல காலம் பெரிய புகழோடு இருந்து விட்டார்கள். இனி அவர்கள் தலை தூக்கவே கூடாது. சேரர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தும் பாண்டியருக்கும், சோழருக்கும் கிடைத்த பெருமை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதை அடைவதே நம் நோக்கம். சேரர்கள் என்றால் உலகமே பயம் கொள்ள வேண்டும். சேர மன்னர்கள் முன்னால் எவனும் தலை நிமிர்ந்து நடக்கக் கூடாது. அதற்குத் தடையாக என்ன இருந்தாலும், யார் இருந்தாலும் தகர்த்தெறிய வேண்டும். அதுவே நமது நோக்கம், இலட்சியம் எல்லாம்." எனப் பேசி நிறுத்தினாள் வர்த்தினி.

அவளது பேச்சால் உந்தப் பட்டவர்கள் போல அனைவரும் அப்படியே எனத் தலையசைத்தார்கள். திருப்தியுற்றவளாக மீண்டும் பேசினாள் வர்த்தினி.

"நமது முதல் நோக்கம் இளவரசனைத் தீர்ப்பது தான். ஆனால் அது அத்தனை சுலபம் அல்ல. தித்தனுக்கு நமது திட்டம் தெரியாவிட்டாலும் கூட அவன் மிகவும் எச்சரிக்கையாக இருப்பான் எனத் தோன்றுகிறது. ஆகையால் அமுதா நீயும் உன் சகோதரியும் என்னை எப்படியாவது அரண்மனைப் பணியில் சேர்த்து விடுங்கள்." என்றாள்.

"அது சற்று சிரமமான காரியம் தான் வர்த்தினி. இப்போது யாரையும் பணிக்கு சேர்ப்பதே இல்லை. பொருளாதார நிலை தான் காரணம்." என்றாள் மங்கை.

கடகடவெனச் சிரித்தாள் வர்த்தினி. எக்காளமும் கிண்டலும் அதில் எதிரொலித்தன. பயங்கரமாகச் சிரிக்கும் அவளை அச்சம் தோன்றப் பார்த்திருந்தனர் மற்றவர்கள்.

"மதுரையின் இந்த நிலையைக் கேட்க எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? சரி! பரவாயில்லை. சற்றே திட்டத்தை மாற்றுவோம். முதலில் தித்தனைக் கவனிப்போம். அவனது நோக்கம், மன்னரையும் மற்ற அதிகாரிகள் குடிமக்களை அழைத்துக்கொண்டு தெற்கு நோக்கிச் செல்வது எனத் தெரிகிறது. அதை நடக்க விடக் கூடாது. எக்காரணம் கொண்டும் மன்னர் சடையவர்மர் தன் பரிவாரத்தோடு தெற்கு நோக்கிச் செல்லக் கூடாது."

"ஏன் அப்படி வர்த்தினி?" என்றாள் மங்கை.

"மதுரையில் இருக்கும் வரை தான் மன்னரும் மக்களும் சோர்ந்தும், விரக்தியாகவும் இருப்பார்கள். அவர்கள் அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பது நமக்கு மிகவும் முக்கியம். அப்போது தான் நமது முக்கிய அதிகாரிகள் மன்னர், பின்னர் அவருக்கு உண்மையாக இருக்கும் அமைச்சர்கள் என ஒவ்வொருவராகக் கொல்வார்கள். ஒரே நாளில் இது ந்டக்காது. ஆறு மாதங்களில் நான்கு அமைச்சர்கள் இறப்பார்கள். இயற்கையான மரணம் போலத் தோன்றும் அது. ஆனால் அதன் பின்னால் இதோ, இது இருக்கும்." என தன் இடுப்பிலிருந்து ஒரு குப்பியை எடுத்தாள்.

ஏதோ ஒரு கரு நிற திரவம் தளும்பிக் கொண்டிருந்தது. இனிய மணமும் வந்தது.

"இது என்ன?" என்று கேட்டான் காத்தான்.

"இது தான் கல்ப ரசாயனம். இதை வெளி நாட்டு வணிகன் ஒருவனிடமிருந்து பூம்புகாரில் வாங்கினேன். இதை உணவில் கலந்து கொடுத்து விட்டால் மறு நாளே இதயத்துடிப்பை நிறுத்தி விடும் இது. உடனே செய்யாமல் 24 மணி நேரம் கழித்து வேலை செய்வதால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. இதற்கு முதல் பலி யார் தெரியுமா?" என்றாள் வர்த்தினி.

பதிலே பேசாமல் காத்திருந்தனர்.

"மன்னரின் அன்புக்கு உரித்தான கொடுங்கண்ணனாரும் அவரது மனைவி உமையாளும்." என்றாள் வர்த்தினி. மற்றவர்கள் மகிழ்ச்சியாக சிரித்தனர்.

அங்கே நிலைப்படியில் தலையை இடித்துக்கொண்டார் கொடுங்கண்ணனார்.
 
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 13:

கொடுங்கண்ணனாரின் வீட்டில் காலை நேரத்தில் காவல் பணி, இரவு நேரத்தில் திட்டமிடுதல் என செயல்பட்டார்கள் தித்தனும் அவனது தோழர்களும். எக்காரணம் கொண்டும் தங்களது திட்டத்தையோ, விந்தையனின் பெயரையோ கூட பணியில் இருக்கும் போது உச்சரிக்கக் கூடாது என அமைச்சர் திட்டவட்டமாக ஆணையிட்டிருந்ததால் அவர்கள் எதுவும் பேசுவதே இல்லை. ஆனால் பணி முடிந்ததும் இரவில் அவர்கள் தங்களது கருத்துக்களைப் பரிமறிக்கோண்டனர். எதுவும் செய்யாமல் வெறுமே நாட்களைக் கடத்துவதில் தங்கமணிக்கு எரிச்சல் வந்தது. அன்று அதே போலக் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் தித்தன், தங்கமணி இருவரும். மற்றவர்கள் வாயிற்புறம் காவல்ப் புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ ஒருவன் அமைச்சரின் இல்லத்தின் பின் புறமாக மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தான். அவனது தயக்கம், நடை இவை சந்தேகத்தைக் கிளப்பவே நேராக அவனைச் சென்று கையோடு பிடித்தான் தித்தன். அவர்களது கை மேலே பட்டதும் நடுங்கி விட்டான் அந்த மனிதன்.

"ஐயா! எனக்கு எதுவும் தெரியாது! நான் நல்லது சொல்லத்தான் வந்தேன்" என உளறினான். மிகவும் இள வயதினன். பார்த்தால் மாணவன் போல இருந்ததால் சற்றே தன் பிடியைத் தளர்த்தினான் தித்தன்.

"உன்னை எதுவும் செய்ய மாட்டோம்! நீ யார்? எதுக்கு இப்படி வந்தாய்? அதை மட்டும் சொல்லு போதும்!" என்றான் கடுமையாக.

தயங்கினான் வந்தவன். பின்னர் என்ன நினைத்தானோ? பேச ஆரம்பித்தான். "ஐயா! நான் சிங்காரவேலரிடம் மருத்துவம் பயிலும் மாணவன். நேற்று அரண்மனை அந்தப் புரத்தில் பணி புரியும் பெண்களில் ஒருத்தி அமைச்சரின் மனைவியாரை சந்தித்தாள். அப்போது என் குரு நாதர் சிங்கார வேலர் அவரை பரிசோதித்துக்கொண்டிருந்தார். நானும் உடனிருந்தேன். அப்போது அந்தப் பெண், சிறு குப்பியைக் கொடுத்து, இது அரசியார் அளித்தது. இதில் இருக்கும் மருந்தை உணவில் கலந்து உண்டால் குழந்தை அழகாகப் பிறக்கும் , ஆண்களுக்கும் கொடுத்தால் வீரமும், அறிவும் பெருகும் என்று சொல்லி அனுப்பினார்கள். என்றாள்."

"சரி! அதனால் என்ன?"

"எப்படிச் சொல்வது ஐயா? என் குரு நாதர் சித்த வைத்தியத்தில் கை தேர்ந்தவர். இது போன்ற ஒரு மருந்து இல்லவே இல்லை என அடித்துச் சொல்கிறார். ஆனால்...."

மின்னல் தாக்கியது போல உணர்ந்தான் தித்தன். நிச்சயம் இதில் ஏதோ சதி இருக்கிறது. இல்லாத ஒரு மருந்தை எதற்காக அமைச்சரின் மனைவியிடம் அரசியார் கொடுத்ததாகச் சொல்ல வேண்டும்? நிச்சயம் இது சேர ஒற்றர்களின் சதி தான். கொடுங்கண்ணனார் மன்னரோடு இணக்கமாக இருப்பதால் அவரையும் அவரது மனைவியையும் கொல்ல திட்டம் வகுத்திருக்கிறார்கள் போலும். என எண்ணிக் கொண்டான். நேற்றே கொடுத்து விட்டார்கள் என்றால், உமாதேவியார் அதனை எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே? கடவுளே! இது என்ன சோதனை? என உள்ளே ஓடினான் தித்தன். அவனைத் தொடர்ந்து ஓடினான் தங்கமணி. கூடவே அந்த மருத்துவ மாணவனையும் இழுத்துக்கொண்டு ஓடினார்கள். அமைச்சரின் இல்லத்தில் எல்லாமே சாதாரணமாகத்தான் இருந்தது. நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்டார்கள். அப்போது அமைச்சரின் மனைவி தாதியின் துணையோடு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார்.

"என்ன விஷயம் தித்தா? ஏன் முகமெல்லாம் இப்ப்டி வியர்த்திருக்கிறது?" என்றார்.

"தாயே! அரசியார் அளித்த அந்த மருந்தை உண்டு விட்டீர்களா?" என்றான் அந்த இளம் மாணவன்.

"இல்லையே! நல்ல மருந்து என்பதால் நாளும் கோளும் பார்த்து தான் உண்ண வேண்டும் என எடுத்து வைத்திருக்கிறேன். இன்றைய பகல் உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்." என்றார்.

மனம் நிம்மதியானது மூவருக்கும். ஆனால் விஷயத்தை எப்படிச் சொல்வது? அதை அவர்கள் நம்ப வேண்டுமே? அப்பட்யே நம்பினாலும் அரசியார் இதில் சம்பந்தப்படவில்லை என நிரூபித்தாக வேண்டும். இல்லயெனில் நாட்டில் பெரும் குழப்பம் உண்டாகும். இப்படி எல்லாச் சிந்தனையும் ஒரு நொடிக்குள் வந்து போயிற்று தித்தனுக்கு. கடவுள் அருளால் எந்தக் கெடுதலும் நடக்கவில்லை. ஆனால் அரசியாரின் பெயரைச் சொல்லி ஒரு விஷத்தை அமைச்சரின் வீட்டுக்கே வந்து கொடுத்துச் செல்கிறார்கள் என்றால் தங்களது திட்டம் தோல்வியடையாது என்று நம்புகிறார்கள் என்று தானே அர்த்தம்? இதன் பின்னால் நிச்சயம் சேர ஒற்றர்கள் தான். ஆனால் யார்? எத்தனை பேர்? அவர்கள்து நோக்கம் என்ன? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றனவே? என யோசித்தபடி நின்றிருந்தான் தித்தன்.

"தித்தா! என்ன விஷயம்? உங்கள் முகங்களில் கவலை தெரிகிறதே?" என்றார் அமைச்சரின் இல்லாள்.

இவர்களிடம் சொல்லித்தான் தீர வேண்டும். அப்போது தான் எச்சரிக்கையாக இருப்பார்கள் என தீர்மானித்தான் தித்தன்.

"உங்களிடம் யாருக்கும் தெரியாமல் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும். மிகவும் முக்கியம் அம்மா! ஒருவருக்குக் கூடத் தெரியக் கூடாது." என்றான் தங்கமணி.

முகம் கவலைக்குள் போனது உமாயாள்தேவியாருக்கு. எதுவும் பேசாமல் படியேறினார்கள். தன்னைத் தொடஸ்ர்ந்து வருமாறு சைகை செய்யவே மூவரும் பின்னால் சென்றார்கள். மொத்தம் 15 படிகள் ஏறியிருப்பார்கள் நின்று விட்டார் அமைச்சரின் துணவியார். எதையோ பிடித்து இழுக்க மேல் படியில் ஒரு சிறு வாயில் திறந்தது. வாயைப் பிளந்து பார்த்திருந்தனர் மூவரும். அதில் நுழைந்து அவர்களையும் வரச் சொன்னார். உள்ளே நுழைந்தனர். சிறிய அறை வட்ட வடிவமாகக் காணப்பட்டது. அதன் நடுவில் சிறு மேஜையும் அதைச் சுற்றி முதுகே இல்லாத நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. நடு நாயகமாக ஒரு நாற்காலி வேலைப்பாடுகளோடு காணப்பட்டது. இப்படி ஒரு அறை இருக்கிறது என வெளியிலிருந்து பார்த்தால் தெரிய வாய்ப்பே இல்லை. அமைச்சரின் அறிவுத்திறனை வியந்தபடி உள்ளே சென்றனர்.

"இப்போது சொல்லுங்கள்! என்ன விஷயம்? அந்த மருந்து விஷமா?" என்றார் உமையாள்தேவியர். அந்த நேரத்திலும் பதட்டமின்றிச் ச்யல்படும் அவர்களது அறிவை மெச்சிக்கொண்டனர்.

"ஆம் தாயே! நேற்று அந்த மருந்தை அரண்மனைப் பணிப்பெண் உங்களுக்கு அளிக்கும் போது இவனும் உடனிருந்தானாமே? இவன் தான் சொன்னான்." என்றான் தித்தன்.

"நீ சிங்கார வேலரின் மாணவன் வீரசேனன் தானே? நீ இவர்களிடம் என்ன சொன்னாய்?" என்றார் உமாதேவியார்.

"இது...அதாவது அந்த அரண்மனைப் பணிபெண் கொண்டு வந்து கொடுத்தது மருந்தே அல்ல. ஏனெனில் அப்படி ஒரு மருந்தே இல்லை என என் குருநாதர் திட்டவட்டமாகச் சொல்கிறார்." என்றான் வீர சேனன் தயங்கித்தயங்கி.

"இப்போது சொல்கிறாயே? உன் மூளையை என்னவென்று சொல்ல? அதை நான் என் கணவருக்குக் கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? சிந்திக்கவே மாட்டீர்களா? நேற்றே சொல்லியிருக்கலாமே?" என்றார் கோபமாக.

பயந்தே போனான் மருத்துவமாணவன்.

"வந்து....அம்மா.....வந்து....அரசியார் கொடுத்ததாக அந்தப் பெண்.....நான் என்ன சொல்ல முடியும்?"

"உம்! புரிந்தது! நீ என்ன நினைக்கிறாய் தித்தா?"

"இது அனைத்துமே சேர ஒற்றர்களின் வேலை தான். ஆனால் அவர்கள் யார்? நோக்கம் என்ன? அரண்மனை வரையிலும் அவர்களது கை நீண்டிருக்கிறதா? இவையெல்லாம் தான் எங்களைக் கவலைக்குள்ளாகுன்றன." என்றான் தித்தன்.

"நோக்கம் தான் தெரிந்து விட்டதே? எனக்கும் என் கணவருக்கும் தீங்கு விளைவிப்பது என்று? ஆனால் ஏன்?"

"அது அத்தனை சுலபம் இல்லை அம்மா! எளிய விஷயமும் இல்லை. இதில் அரசியாரின் பெயர் இழுக்கப்பட்டிருக்கிறது. அதோடு வந்தவள் அரண்மனையில் பணி புரிபவள். ஆகையால் தங்களிடம் நஞ்சு கொடுக்கப்பட்ட விஷயம் வெளியில் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். வந்தவள் அரண்மனைப் பணிப்பெண் தானே?"

"அதில் சந்தேகமே வேண்டாம் தித்தா! வந்தவள் பல ஆண்டுகளாக அந்தப் புரத்தில் பணியாற்றுபவள் தான். பெயர் பவளமாலை. அவளது தாய் நம் இல்லத்தில் தான் சமையல் வேலை செய்கிறாள். ஆகையால் நிச்சயம் வந்தவள் அரண்மனைப் பணிப்பெண் தான்." என்றார்.

துணுக்கென்றது தித்தனுக்கு. பல வடிவமில்லாத சந்தேகங்கள் மனதில் வந்து போயின. வந்தவள் அந்தப்புரப் பணிப்பெண் தானென்றால் பல கேள்விகள் எழுகின்றன. உண்மையிலேயே இதை அரசியார் தான் கொடுத்தாரா? இதற்கான விடை இல்லை என்றால் வேறொரு நபரிடமிருந்து ஏன் அந்தப் பணிப்பெண் மருந்தை வாங்கிக்கொண்டாள்? கட்டாயப்படுத்தப்பட்டாளா? அல்லது அவளும் சதிகாரியில் ஒருத்தியா? பவளமாலையின் தாய் இங்கே பணி புரிபவள் என்றால் விஷயம் இன்னமும் சிக்கலாகிறதே? அதை விட மிக மிக முக்கியம், ஒரு வேளை அரசியாரே அமைச்சரையும், அவரது துணைவியாரையும் கொலை செய்யும் நோக்கில் இருக்கிறார்களா? ஏன்? நினைக்கவே பயங்கரமாக உள்ளதே? இது என்ன சதி? இதன் ஆழம் என்ன? அது வரை இது ஊடுருவி இருக்கிறது? என யோசித்தபடி நின்றான் தித்தான்.

"இதை நாம் வெளியில் பரவாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். வீரசேனா...மறந்தும் கூட நீ இதை வெளியில் சொல்லி விடாதே! உன் குருநாதரிடமும் இதே எச்சரிக்கையைக் கூறு! இருவரும் வாயைத் திறந்தீர்கள் எனத் தெரிந்தால் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். இப்படி இரு மனிதர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் அழித்து விடுவோம். ஜாக்கிரதை." என்றான் தித்தன்.

பயத்தில் உடல் நடுங்க நின்றிருந்தான் வீரசேனன்.

"இவர்களைப் பற்றிய பயம் உங்களுக்கு வேண்டாம்! இமய மலையில் கிடைக்கும் சில மூலிகைகளைப் பறித்து வர வேண்டும், காசி விசுவநாதரை தரிசிக்க வேண்டும் என சிங்காரவேலர் சில மாதங்களாகவே சொல்லிக்கொண்டிருந்தார். நானே பொருள் கொடுத்து இருவரையும் வடக்கே அனுப்பி விடுகிறேன். அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? அது தானே கேள்வி?" என்றார் அறிவிற் சிறந்த அந்தப் பெண்மணி.

"இதை அமைச்சரிடம் சொல்லித்தான் தீர வேண்டும். அவரது உதவி இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது. முதலில் பவளமாலையை விசாரிக்க வேண்டும். பிறகு தான் மற்றவை!" என்றான் தித்தன்.

"வெகு நேரம் நாம் இங்கே பேச வேண்டாம். என்னைக் காணவில்லையென்று தேடுவார்கள். அமைச்சர் வந்ததும் நான் விஷயத்தைச் சொல்லிக்கொள்கிறேன்,. நீங்கள் காவல் புரியுங்கள். உங்கள் மற்ற நன்பர்களிடமும் விஷயத்தைச் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்! அதற்கு மேல் இறைவன் செயல்" என்று சொல்லியபடி எழுந்து விட்டார்கள். உடலில் வேதனை, மனதில் வேதனை என இருந்த போதிலும் அவர்களது நெஞ்சுரம் வியக்க வைத்தது.நேரே வாயிற்புறம் சென்று அங்கு தங்கமணியைப் பார்த்து மிகவும் மெல்லிய குரலில் நடந்ததைச் சொனனர்கள்.
பதறிய அவர்களை சமாதானம் செய்து கொண்டிருக்கும் போதே அமைச்சர் வந்து விட்டார். அவர் உள்ளே சென்ற சில நிமிடங்களில் பணிப்பெண் ஒருத்தி வந்து மூவரையும் அழைப்பதாகக் கூற விரைந்தார்கள்.

உள்ளே ஒரு நாற்காலியில் வயிற்றைப் பிடித்தபடி உமாதேவியார் அமர்ந்திருந்தார்கள். நோவு எடுத்து விட்டது என்பதை அவரது கண்களும், வயிறும் உணர்த்தின. ஆனாலும் மருவத்துவப் பணியாளர்களை அழைக்காமல் அமைச்சரோடு தனித்திருந்தார். அமைச்சரின் விழிகள் கோபத்தில் சிவந்திருந்தன. புருவங்கள் நெரிபட்டு அவரது கவலையையும் கலக்கத்தையும் வெளிப்படுத்தின.

"உமையாள் சொல்வது உண்மை தானா தித்தா?"

"ஆம்! ஐயா! நல்ல நேரத்தில் வீரசேனன் வந்ததாலும், அன்னையின் சாதுர்யத்தாலும் தான் நீங்கள் தப்பினீர்கள்!"

"உமா! இனி நான் பார்த்துக்கொள்கிறேனே? உன் வேதனையை என்னால் சகிக்க முடியவில்லை! நீ உள்ளே செல்! நான் மருத்துவச்சிகளை அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து போயேன் உமா!" எனக் கெஞ்சினார்.

"உங்கள் கட்டளைக்காக நான் செல்கிறேன். ஆனால் என்ன நடந்தது என எனக்கு முழுவதும் தெரிய வேண்டும். நீங்கள் இதற்கு ஒப்புக்கொள்வதானால் நான் போகிறேன்." என்றார். நால்வருக்கும் வியப்புக்கு மேல் வியப்பு. அப்படியே செய்வதாக வாக்குறுதி கொடுத்தார் அமைச்சர் கொடுங்கண்ணனார். பிறகே பிரசவத்துக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றார் உமாதேவியார். அவர் சென்றதும் அமைச்சரின் நிலை குறித்து இரக்கம் தோன்றியது. ஒரு புறம் குழந்தை பிறக்கப் போகும் மகிழ்ச்சி! பிரசவம் சிக்கலில்லாம நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலை! அதோடு இப்போதுள்ள சதிகள் வேறு. பெரிய பதவி என்றால் இப்படித்தான் போலும். மரியாதையும், பொருளும் வருவது போல பொறுப்புக்களும், சோதனைகளும் கூட தேடி வரும் போல இருக்கிறது. என நினைத்துக்கொண்டான் தித்தன். அவனது மனக்கண்ணில் மனைவி கல்யாணியின் முகமும், குழந்தை செண்பகப் பொழிலனின் முகமும் வந்து போயின. "எல்லாம் உனக்காகத்தான் பொழிலா! நீ வளரும் போது நாடு நன்றாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சி தான். இது. சீக்கிரமே உன்னையும், உன் அன்னையையும் மதுரை அழைத்துக்கொண்டு விடுகிறேன்" என மனதோடு பேசினான்.

"அரண்மனை வரை அவர்களது கரம் நீண்டு விட்டது என நினைக்கும் போது தான் கலக்கமாக இருக்கிறது!" என்ற அமைச்சரின் குரலில் நிகழ் காலத்துக்கு வந்தான் தித்தன்.

"ஐயா" என ஏதோ சொல்ல வந்தவனைத் தடுத்து அவரும் மௌனமாகப் படியேறினார். அதே ரகசிய அறைக்குச் செல்லவும் இம்முறை தித்தன், வெளியன், வேலன் மற்றும் தங்கமணி சென்றார்கள். தங்கமணிக்கு இது தான் முதல் முறை என்பதால் வாய் பிளந்து விட்டான். அதே போல உள்ளே நுழைந்து அமைச்சரின் கட்டளைக்காகக் காத்து நின்றார்கள்.

"முதலில் பவளமாலையைத்தான் விசாரிகக் வேண்டும். அவள் யாரிடமிருந்து அந்த நஞ்சை வாங்கினாள்? அது எத்தயைகது? இவை நமக்குத் தெரிய வேண்டும்." என்றார்.

"அது கல்ப ரசாயனம் என்னும் நஞ்சாம் ஐயா! உடலுக்குள் சென்றால் 24 மணி நேரத்தில் வேலை செய்யத் தோடங்குமாம். இதயத்தைச் செயலிழக்கச் செய்து ஆளை கொன்று விடுமாம். இவற்றையெல்லாம் அந்த மாணவன் வீரசேனன் கூறினான்." என்றான் தங்கமணி. அவனை பாராட்டுதலாக நோக்கினார்கள் அனைவரும்.

"மிகவும் ஆபத்தான நஞ்சாக அல்லவா இருக்கிறது? இது எப்படி அந்தப் பெண்ணின் கைகளுக்கு வந்தது?" என்றார்.

"இவை அத்தனையையுமே அந்தப் பெண்ணை விசாரித்தால் தெரிந்து விடும் ஐயா. ஆனால்...." இழுத்தான் தித்தன்.

"புரிகிறது தித்தா! அரசியாரின் பெயரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இதைக் கையாள வேண்டும். நாம் விசாரிக்கிறோம் என்பதே பவளமாலைக்குத் தெரியக் கூடாது. ஆனால் விஷயத்தை அவளிடமிருந்து வாங்கவும் வேண்டும். என்ன செய்யலாம்?"

யோசித்துக்கொண்டிருந்த அமைச்சரை ஏறிட்டு நோக்கினான் தித்தன். படிய வாரப்பட்ட முடி. மேலே ஜரிகை போட்ட அங்கவஸ்திரத்தை குறுக்காக அணிந்திருந்தார். முறுக்கிய மீசை. அதிக ஆபரணங்கள் ஏதுமில்லை என்றாலும் அவரிடம் மரியாதையும் பயமும் வண்ணம் அமைந்திருந்தது தோற்றம். ஆனால் தற்போது அவரது முகம் கவலையைக் காட்டியது. அவரது கேள்விக்கான விடை தித்தனிடம் இருந்தது. ஆனால் அதை அவர் விரும்புவாரா? விரும்பினாலும் அதை எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்? முடியாத ஒன்றை தான் சொல்லி அதனால் அவரது கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ? என்ற அச்சத்தில் அமைதியாக நின்றான் தித்தன். மற்றவர்களுக்கும் ஒரு வேளை அதே போன்ற எண்ணம் தானோ என்னவோ? ஆனால் கீழே சில ஒலிகளும் அவசர அழைப்புகளும் கேட்டன. தாதி ஒருத்தி, மிகவும் அவசரம், அமைச்சர் எங்கே இருக்கிறார்? எனக் கேட்க, அதற்கு ஒரு பணியாள், அராசங்க வேலையாகச் சென்றிருக்கிறார் என்று பதிலளிப்பதும் கேட்டது. மனைவியின் குழந்தைப் பேற்றை விட, இவர்களுக்கெல்லாம் அரசாங்கப் பணி தான் முக்கியம் என அலுத்தபடி விரையும் தாதியின் குரலும் கேட்டது. ஆனால் அமைச்சர் அசைவதாயில்லை. ஏதாவது வழி புலப்பட்டாலன்றி அவர் இவ்விடத்தை விட்டுச் செல்ல மாட்டார் என்பது உறுதியாகத் தெரிந்து போனது.

"ஐயா! ஒரு வழி இருக்கிறது!" என்றான் தித்தன். பதில் பேசாமல் அவனை ஏறிட்டு நோக்கினார் அமைச்சர் கொடுங்கண்ணனார்.

"ஏற்கனவே ஒரு முறை நாங்கள் செய்தது தான். நமக்கு நம்பிக்கைக்கு உகந்த பெண் ஒருத்தியை மெல்ல பேச்சுக்கொடுத்து பவளமாலையிடம் உண்மையை வரவைக்கலாம் என நினைக்கிறேன். அந்தப் பெண் பிள்ளைபேற்றை எதிர்பார்ப்பவள் போல வேடமிட்டாள், பவளமாலையிடம் அந்த மருந்தைப் பற்றிப் பேசுவது எளிதாகும்! எனக்குத் தெரிந்த வழி இது ஒன்று தான்." என்றான் தித்தன்.

பாய்ந்து எழுந்தார் கொடுங்கண்ணனார். "மிகவும் சரியான வழி இது தான். உங்களுக்குத் தெரிந்த பெண், ஏற்கனவே ஒற்றறிதல் செய்திருந்தால் இன்னும் நலம். அவளை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். அவள் எங்கே இருந்தாலும் வரவழையுங்கள். தித்தா! இன்னும் பத்து நாட்களில் எனக்கு விவரம் வேண்டும். நீயும் உன் நண்பர்களும் என்ன செய்வீர்களோ தெரியாது. பெண்ணைக் கொண்டு ஒற்றறிவீர்களோ? இல்லை நீங்களே பெண் வேடமிட்டு பேசுவீர்களோ? ஆனால் இன்னும் பத்து நாட்களில் எனக்கு முழுன் விவரம் தெரிய வேண்டும். தேவையான பொருளை என் கணக்காளர் சம்பந்தம்பிள்ளையிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்! இப்போது நான் செல்கிறேன்!" எனக் கூறி இவர்களைக் கூட எத்ரிபாராமல் விரைந்து வ்ட்டார்.

அவரைத் தொடர்ந்து மூவரும் ரகசிய வாழியை மூடி விட்டு கீழே இறங்கினர். அமைச்சரிடம் பரபரப்பாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள் ததி ஒருத்தி. மற்ற பணியாளர்கள் ஆங்காங்கே நின்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். தாதி பேசியதும் அமைச்சரின் முகம் கலவரமானது. என்ன விஷயம் தெரியவில்லையே? எனத் தவித்தனர் மூவரும். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சிங்காரவேலரும், அவரது மாணவன் வீரசேனனும் வீட்டினுள் நுழைந்தார்கள். மருத்துவர் ஏதோ அரைத்த உருணைடையை தாதியிடம் கொடுத்து என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல தாதி விரைந்தாள். சில நிமிடங்களில் குழந்தையின் வீறிட்ட அழுகைக் குரல் கேட்க நிம்மதியானது அனைவருக்கும். ஆனால் அமைச்சரின் முகத்தில் கவலை மறையவில்லை.

"பெண்ணே! என் மனைவி எப்படி இருக்கிறாள்?" எனக் கேட்டார் வந்த ஒரு தாதியிடம்.

"நலமாக இருக்கிறார்கள்! பெண் குழந்தை! அதுவும் நலமாகவே இருக்கிறது!!" என்றாள். அவளைத் தூக்கிச் சுற்றாத குறை. தன் கழுத்தில் இருந்த கனமான தங்கச் சங்கிலியை அப்படியே அவள் கழுத்தில் அணிவித்தார் அமைச்சர் கொடுங்கண்ணனார்.

"இன்னும் அரை நாழிகையில் நீங்கள் சென்று உங்கள் மனைவியையும், மகளையும் பார்க்கலாம். அது வரை காத்திருங்கள்" எனச் சிரித்தபடி சொல்லி விட்டுப் போய் விட்டாள் தாதி. பணியாளர்களும் மகிழ்ச்சியோடு தங்கள் பணிகளை கவனிக்கச் சென்று விட்டனர். இப்போது அமைச்சர், தித்தன், தங்கமணி மற்றும் வேலன் மட்டுமே நின்றிருந்தனர். அவர்களை நோக்கி வந்தார் அமைச்சர்.

"வாழ்த்துக்கள் ஐயா! இன்று உங்களுக்குப் பிறந்திருக்கும் உங்கள் மகள்! உங்கள் புகழை வளர்ப்பாள். குலம் வளரும்!!" என வாழ்த்தினார்கள் மூவரும்.

"எல்லாம் அந்த சொக்க நாத சுவாமியின் அருள்!! நான் சொன்னதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்! பத்தே நாட்கள் தான் சமயம்!" என்றார் அமைச்சர். சிந்தித்தபடி வெளியில் வந்தான் தித்தன். அவனைத் தொடர்ந்தார்கள் மற்ற இருவரும்.
 
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 14.

அமைச்சருக்கு குழந்தை பிறந்த அன்று அவரைப் பார்த்தது தான். பிறகு அவர் அரச சபை, மன்னரோடு சந்திப்பு, அதோடு மக்கள் நலப்பணி என மிகவும் பரபரப்பாக இருந்தார் அமைச்சர். ஆனால் தித்தனுக்கு ஒரே குழப்பம். அதோடு யோசனை வேறு. தன் நண்பர்களோடு கலந்து பேசினான். அன்று அமைச்சர் ஒற்றறிதலில் தேர்ந்த பெண்கள் இருந்தால் நலமாக இருக்கும் என்று கூறியிருந்ததால் உடனே செண்பகப் பொழிலில் இருந்து பிரம்ம நாயகியையும் முல்லையையும் வரவழைப்பது என முடிவு செய்து கொண்டார்கள். அதோடு தித்தன் மனவி கல்யாணியும் வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே இல்லத்தில் வசித்தால் தான் திட்டமிட முடியும். இப்போது இருக்கும் வீடு அமைச்சரின் இல்லத்திலிருந்தும், அரண்மனையிலிருந்தும் தள்ளி இருந்தது. பக்கத்தில் இருந்தால் தான் நல்லது என அபிப்பிராயப்பட்டார்கள். இது குறித்து அமைச்சரிடம் பேசலாம் என முடிவு செய்து உள்ளே சென்றார்கள். தித்தன், வேலன் மற்றும் தங்கமணி வந்திருக்கிறார்கள் என்றதுமே உமையாள் தேவியார் தனது அறைக்கு வரச் சொன்னார். தயங்கியபடியே சென்றனர் மூவரும். தேக்குமரத்தொட்டிலில் படுத்திருந்தது ஒரு மாதமே ஆன குழந்தை. அருகில் ஒரு நாற்காலியில் களைப்பாக அமர்ந்திருந்தார் அமைச்சரின் மனைவி. அது அவரின் தனியிடம் என்பதால் தயக்கமின்றிப் பேசினார்.

"என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? சொல்லுங்கள்! ஒற்றறிய பெண்ணை ஏற்பாடு செய்து விட்டீர்களா?" என்றார்.

"அதைப் பற்றிப் பேசத்தான் வந்தேன் தாயே! செண்பகப் பொழிலில் என் தங்கைகள் இருவர் ஏற்கனவே ஒற்றறிந்தவர்கள் இருக்கிறார்கள். அதோடு என் மனைவியும் வந்து விட்டால் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால்....தங்குவது...." என இழுத்தான் தித்தன்.

"உம்! நம் இல்லத்திலேயே பக்கவாட்டில் சிற்றில் இருக்கிறது அல்லவா? அதில் நீங்கள் தங்கிக்கொள்ளலாம். மற்ற இரு பெண்களும் என்னுடனே தங்கட்டும். அது தான் அவர்களுக்கும் நல்லது. இல்லையென்றால் காதலில் நிலை மறந்து விட்டால் என்ன செய்ய?" என்று சொல்லிச் சிரித்தார். இத்தனை விஷயங்களுக்கு மத்தியிலும் முன்னால் சொன்ன செய்திகளை நினைவில் வைத்திருந்து சொல்லும் அந்தப் பெண்மணிய மரியாதையோடு பார்த்தனர் மூவரும். தங்கமணிக்கும், வேலனுக்கும் வெட்கம் தாங்கவில்லை. நெளிந்தார்கள். சிரித்து விட்டான் தித்தன். கூடவே நகைத்தார்கள் உமா தேவியார்.

"போகட்டும்! எப்படி அவர்களை அழைத்து வரப் போகிறீர்கள்?" என்றார்.

"இப்போது இருக்கும் நிலையில் எங்கள் மூவராலும் செல்ல முடியாது. ஊரில் எங்களது நண்பன் வேங்கையன் இருக்கிறான் தாயே! அவனுக்கு ஓலை அனுப்பி விட்டால் அனைவரையும் பாதுகாப்பாக குதிரையில் அழைத்து வந்து விடுவான். அதற்குத் தேவையான குதிரைகளுக்குத்தான் என்ன செய்வது எனத் தெரியவில்லை." என்றான் தித்தன்.

"அது ஒன்றும் பிரச்சனை இல்லை! நம்மிடம் இருக்கும் குதிரைகளில் மூன்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உன் மனைவிக்கு இப்போது தானே பிரசவம் ஆகியிருக்கிறது? சிறுகுழந்தையை வைத்துக்கொண்டு குதிரையில் பயணிக்க முடியாது. ஆகையால் அவளுக்கு மட்டும் பல்லக்கு ஏற்பாடு செய்து விடு தித்தா! இங்கிருந்து பல்லக்கு, குதிரைகள் அவற்றை வழி நடத்திச் செல்ல நம்பிக்கையான ஆள், இவர்களை ஏற்பாடு செய்து விடு. இன்னும் இரு தினங்களில் செல்ல வேண்டும். அடுத்த வாரத்துக்குள் உங்கள் பெண்கள் அனைவரும் நம் இல்லத்தில் இருக்க வேண்டும்." என்றார்.

யோசித்தான் தித்தன். உமாதேவியார் சொல்வது போல செய்து விடலாம். ஆனால் நம்பிக்கையான ஆள் வேண்டுமே? அரண்மனைப் பணிப்பெண்கள் வரை சேர் ஒற்றர்களின் கரம் நீண்டிருக்கும் போது, யாரை நம்புவது? இந்நேரம் எனது பெயரும், என் நண்பர்களின் பெயரும் அவர்களது தலைமை வரை போயிருக்கும். மன்னருக்கு நெருக்கமான அமைச்சரைக் கொல்ல முயன்றவர்கள் எனக்குக் குறி வைக்க மாட்டார்களா என்ன? அப்படியானால் என் மனைவி, தங்கைகள் என அனைவரது உயிருமே ஆபத்தில் தான் இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக ஒருவனை நம்புவதை விட நானோ அல்லது வேலனோ சென்றால் என்ன?

"என்ன யோசிக்கிறாய் தித்தா?"

"தேவி! நானே சென்று அழைத்து வருவது நல்லது என நினைக்கிறேன்." என்றான்.

இடை மறித்தான் தங்கமணி.

"தாயே! வேலனுக்கும் தித்தனுக்கும் இங்கே அதிக வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் போய் அழைத்து வருகிறேன். வரும் போது வேங்கையனும் இருப்பான் என்பதால் பாதுகாப்புக்குக் கவலை இல்லை." என்றான்.

அவ்வாறே செய்யலாம் என முடிவு எடுத்தார்கள். அதற்குத் தேவையான பொன், ஆட்கள் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டு தங்கமணியே செல்வதால் ஓலை தேவையில்லை எனவும் பேசினார்கள். மறு நாள் காலையில் தங்கணி ஒரு குதிரையில் பயணித்தான். ஒரு குதிரையில் பல்லக்கு அதைத் தூக்கும் ஆட்களில் ஒருவன், இரண்டாவது குதிரையில் பல்லக்குத் தூகிகளில் இருவர், மூன்றாவது குதிரையில் நாலாவதில் பல்லக்குத் தூக்கும் ஆள் எனப் பயணித்தார்கள். வரும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி அவர்களை அனுப்பினார்கள் தித்தனும் வேலனும். இன்னும் ஒரு வாரத்துக்குள் மனைவி குழந்தையைப் பார்க்காலம் என்ற எண்ணம் இனிக்க தங்கள் பணியைத் தொடரச் என்றான் தித்தன்.

அதே நேரத்தில் மதுரை நகரின் மையத்தில் இருந்த ஒரு மண்டபம். அதில் மூவர் வீற்றிருந்தனர். அதில் ஒரு பெண் மிகவும் களைப்புற்றவளைப் போலக் காணப்பட்டாள். அவர்கள் வேறு யாருமல்ல வர்த்தினியும் பூந்துறையானும் தான். பக்கத்தில் அமர்ந்திருந்தது தான் அவர்களின் தலைவன் என ஊகிக்க முடிந்தது. அவனது தோற்றம் சர்வ சாதாரணமாகக் காணப்பட்டது. நரைத்த தாடி மீசை. தலையில் ஒரு முடி கூட இல்லை. முகத்திலும் கை கால்களிலும் சுருக்கம். ஆனால் கண்களில் கூர்மை. நாலாபுறமும் பார்த்தபடி சுழன்றன அவனது கண்கள். அவன் பேசும் போது உதடுகள் அசைகிறதா இல்லையா? என்பதை உற்றுக் கவனித்தால் தான் தெரியும்.

"அமைச்சனையும் அவன் மனைவியையும் கொல்லும் திட்டம் எப்படி தோற்றது?" என்றான் அந்த வயதானவன். குரலிலோ முகத்திலோ கோபமே தெரியவில்லை என்றாலும் அந்தக் குரலில் இருந்த அமைதியே இருவரையும் வெருட்டியது.

"தவறு நேர்ந்து விட்டது தலைவா! மங்கையும், அமுதாவும் தாங்களே சென்று கொடுத்தால் அடையாளம் கண்டு கொள்ளப்ப்படுவோமோ என எண்ணி மற்றொரு பணிப்பெண்ணிடம் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பெண் பெயர் பவளமாலையாம். அவள் போன நேரம் அங்கே மருத்துவர் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட மருந்தே இல்லை அது என அடையாளம் க்ண்டு கொண்டு விட்டார். அதனால் அவர்கள் தப்பித்து விட்டார்கள்." என்றாள் வர்த்தினி.

சற்று நேரம் அமைதியாக இருந்தான் தலைவன் எனப்பட்டவன்.

"உம்! போகட்டும் இனி மங்கையையும் அவள் தமக்கையையும் என்ன செய்ய வேண்டும் என உனக்குத் தெரியும் அல்லவா வர்த்தினி?" என்றான்.

திக்கென்றது பூந்துறையானுக்கு. ஆனால் வர்த்தினியோ அலட்டிக்கொள்ளவேயில்லை. தலையை மட்டும் ஆட்டினாள்.

"அடுத்து...நமது இலக்கு தித்தன் குடும்பம் தான். அரச குடும்பத்தை செண்பகப் பொழிலுக்கு அழைத்துப் போய் அங்கே பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவப் பார்க்கிறார்கள். அது மட்டும் நடக்கக் கூடாது. அது போன்ற ஒரு எண்ணம் பாண்டியனுக்கு வரவே கூடாது. அவன் இங்கேயே இருந்து சேர மன்னனிடம் தோற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவனது தோல்வியை வருங்காலத்தவர்கள் கேவலமாகப் பேச வேண்டும்." என்றான்.

"அப்படியானால் தலைவா! நம்மால் இப்போதே மன்னனையும், அரசியையும் எளிதாகக் கொலை செய்ய முடியுமே? ஏன் செய்யவில்லை?" என்றான் பூந்துறையான். தலைவனின் பார்வை பூந்துறையான் மேல் படிந்தது. அந்தப் பார்வையிலேயே பயம் வர கண்களைத் தழைத்துக்கொண்டான் பூந்துறையான்..

"முட்டாள்! நம் நோக்கம், நிதானம் என எதுவும் தெரியாமல் பேசுகிறாயே? " என்றான் தலைவன்.

"இவனுக்கு விளக்கம் நான் சொல்லிக்கொள்கேறேன் தலைவா! உங்களது நேரம் மிகவும் முக்கியம். இப்படி விரயம் செய்ய முடியாது. ஆகையால் நான் யோசித்து வைத்திருக்கும் திட்டத்தைச் சொல்கிறேன்." என்றாள் வர்த்தினி. மீண்டும் ஒரு தலையசைப்பு தலைவனிடமிருந்து.

"கஜராஜனுக்குத் துணையாக இருப்பவர்களை நன்றாகவே கவனித்துப் பாதுகாப்பாக வைப்போம். யானையின் தந்தம் வெளியில் தெரியும், ஆனால் பற்கள் தெரியாது. ஆனால் உண்ணப் பயன்படுவது பற்களே! தந்தம் அல்ல. அதனால் மீகாமனை வலையில் சிக்க வைத்துப் பிடித்து விடுகிறேன்." என்றாள்.

கேட்டுக்கொண்டிருந்த பூந்துறையானுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. என்ன சொல்கிறாள் இவள்? கஜராஜனா? அது யார்? யானையின் தந்தத்துக்கும் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? பைத்தியம் பிடித்து உளறுகிறாள். தலைவனிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளப் போகிறாள் என எண்ணியபடியே தலைவனைப் பார்த்தான். வாயைப் பிளந்து விட்டான். சுருக்கங்கள் நிறைந்த அந்த முகத்தில் மெல்லிய புன்னகை இருந்தது.

"சபாஷ் வர்த்தினி! நல்ல திட்டம்! அப்படியே செய்! ஆகையால் இரவு நேரம் நாளை என்னை வந்து பார். அழிவும் தருகிறேன்." என்று சொல்லி விட்டு போய் விட்டார். நடையிலும் அத்தனை தளர்ச்சி. அவர் சென்றதும் பூந்துறையானை நோக்கினாள் வர்த்தினி.

"நமக்கு வேலைகள் அதிகம் உள்ளன. அமுதாவையும், மங்கையையும் உறங்கச் செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்கிறாயா?" என்றாள்.

உறங்கச் செய்வது என்றால் இருவரையும் இல்லாமல் ஆக்க வேண்டும் எனப் புரிந்தது பூந்துறையானுக்கு. ஆனாலும் பெண் கொலை புரிய மனம் இல்லை. அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்ட வர்த்தினி "சரி! அதை நான் பார்த்துக்கொள்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் இருவரும் வருவார்கள். இதை அவர்கள் உண்ணக் கொடுக்க வேண்டும். இந்தப் பழத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உடனே வேலை செய்யாது. குறைந்தது 8 மணி நேரம் ஆகும்." வர்த்தினி பேசிக்கொண்டிருக்கும் போதே அமுத தேவியும், மங்கையும் வந்து விட்டார்கள். இருவரும் அரண்மனைப் பணிப்பெண்கள் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

"தலைவர் என்ன சொன்னார்?" என்றாள் அமுதா எடுத்த எடுப்பில்.

"கத்தாதே அமுதா! திட்டம் தோற்றதற்கு நீங்கள் காரணமல்ல என தலைவர் புரிந்து கொண்டு விட்டார். ஆனால் இனியும் நீங்கள் இங்கே இருந்தால் உங்களுக்கு ஆபத்து. ஆகையால் உங்களை சேர நாட்டுக்குச் செல்ல கட்டளையிட்டிருக்கிறார். அங்கே சென்றதும் செங்கம் புழையாரிடம் இந்த ஓலையைக் கொடுக்குமாறு கூறினார்." என்று சொல்லி துணிச் சுருளில் பொதிந்த ஒரு ஓலையைக் கொடுத்தாள் வர்த்தினி. அயர்ந்தே போனான் பூந்துறையான். இவள் உண்மையிலேயே பெண் தானா? இல்லை நயவஞ்சகத்தின் மொத்த உருவமா?

மங்கைக்கும், அமுத தேவிக்கும் முகம் மலர்ந்தது. கை நீட்டி அதை வாங்கிக்கொண்டனர்.

"இப்போதே நீங்கள் புறப்படுங்கள்! மீண்டும் அரண்மனைக்குப் போனால் அங்கே உங்களை விசாரிக்கவும் ஆட்கள் வரக் கூடும். உங்களுக்குத் தேவையான பொன்னும், துணிகளும் இதில் உள்ளன. அதோடு சில பழங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! எக்காரணம் கொண்டும் வழியில் ஊருக்குள் செல்ல வேண்டாம். பழத்தோடு சில கிழங்குகளையும் அவித்து வைத்திருக்கிறேன். உணவுப்பிரச்சனை இல்லை." என்றாள் வர்த்தினி. அவற்றை வாங்கிக்கொண்டு விடைபெற்றுப் புறப்பட்டனர் இரு பெண்களும். அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் பூந்துறையான். அவன் மனம் இரக்கப்பட்டது.

"வர்த்தினி! அவர்கள் அந்தப் பழத்தை உண்ணவில்லையே?"

"இன்று இரவுக்குள் எப்படியும் உண்பார்கள்."

மௌனமானான் பூந்துறையான். அவனுக்கு வர்த்தினியின் திட்டம் புரிந்தது. உணவுக்காக ஊருக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அந்தப் பெண்கள் இரவுக்குள் பழங்களையோ அல்லது கிழங்குகளையோ கட்டாயம் உண்பார்கள். அந்த விஷம் வேலை செய்ய எட்டு மணி நேரம் ஆகும். இரவு உறக்கத்திலோ அல்லது மறு நாள் காலையிலோ காட்டு வழியில் பயணம் செய்யும் போது இறந்து போவார்கள். உடலை காட்டு விலங்குகள் இழுத்துச் சென்று விடும். ஆகையால் இப்படி இரு பெண்கள் இருந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய் விடும். அரண்மனையைப் பொறுத்தவரை இரு பெண்கள், அவர்கள் சேர ஒற்றர்களாகவும் இருக்கலாம். அவர்களைக் காணவில்லை. மீண்டும் சேர நாட்டுக்குச் சென்றிருக்கக் கொடும். அவ்வளவு தாம். விஷயம் முடிந்தது.

உடல் நடுங்கியது பூந்துறையானுக்கு. அவன் சிறந்த வீரன் தான். எப்போதுமே நேருக்கு நேர் மோதுவான். அல்லது தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பான். ஆனால் இது போல தங்கள் ஆட்களில் இருவரை சூழ்ச்சி செய்து கொல்வது மட்டுமல்ல, அதைக் கொஞ்சம் கூட இரக்கமே காட்டாமல் செய்து முடித்த வர்த்தினியை நினைத்து பயமாக இருந்தது.

"நீ உண்மையிலேயே பெண் தானா வர்த்தினி?" என்றான். அவனை முறைத்தாள் அவள்.

"எதற்கு உனக்குத் தேவையில்லாத ஆராய்ச்சி?"

"இல்லை! இப்படி இரக்கமோ, கருணையோ இல்லாமல் இருக்கிறாயே?" என்றான்.

"என்னிடம் யாரும் அவற்றை எதிர்பார்க்க வேண்டாம். இப்போது நாம் கிளம்பலாம். நமது திட்டம் புரிந்தது அல்லவா உனக்கு?"என்றாள்.

தயங்கினான் பூந்துறையான். அந்த இரு பெண்களும் என்ன ஆவார்கள் என்பது தான் புரிந்ததே தவிர, தலைவனும், இவளும் பேசியது எதுவுமே புரியவில்லையே? அதைச் சொன்னால் என்னயும் கொன்று விடுவாளோ என்னவோ? இவளுக்கு உதவிக்கு ஆட்கள் தேவையில்லை என தலைவனே சொல்லும் போது, நான் எம்மாத்திரம்? என எண்ணிக் கொண்டு பேசாமல் நின்றான்.

"புரியவில்லை அப்படித்தானே?" என்றாள்.

மௌனமே பதிலாக வந்தது.

"உன்னைப் போன்ற கோழையை நான் பார்த்ததே இல்லை. உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன். சிறு பெண்ணான என்னிடம் பயப்படுகிறாயே? உனக்கு வெட்கமில்லை?" என்றாள்.

நீயா சிறுபெண். அரக்கி அல்லவா நீ? என மனதில் நினைத்துக்கொண்டான் ஆனால் சொல்லவில்லை.

"பயமில்லை வர்த்தினி! எச்சரிக்கை அவ்வளவு தான். உண்மையிலேயே நீயும் தலைவரும் பேசிக்கொண்டது புரியத்தான் இல்லை!" என்றான்.

"இங்கே அதைப் பற்றிப் பேசுவது நல்லதல்ல. நமது இடத்துக்குப் போவோம்." என்று சொல்லி விட்டு நடக்கும் அந்தப் பெண்ணை பயத்தோடு தொடர்ந்தான் பூந்துறையான்.

அதே நேரத்தில் குரு விந்தையனிடமிருந்து ஒரு ரகசிய ஓலையைப் பெற்றிருந்தான் தித்தன். அதைப் படித்ததும் அவன் கண்களில் நெருப்பு.
 
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 14:

தித்தன் தனியான இடத்தில் அமர்ந்திருந்தான். அவன் மனதில் பலவிதமான எண்ணங்கள், குழப்பங்கள் அலைமோதின. ஓலை சொன்ன செய்தியைக் கண்டவுடனேயே குழப்பங்கள் ஆரம்பமாகி விட்டன அவனுக்கு. ஏனெனில் கொஞ்சமும் எதிர்பாராத ஒருவர் அதிலும் மன்னனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவர் பெயர் அதில் எழுதப்பட்டிருந்தது. அதன் பொருள் என்னவென்பது தித்தனுக்கு மட்டுமே தெரியும். அந்தப் பெயர் கொண்டவர் தான் சதியின் தலைவன் என்பதே அது. ஓலையில் இருந்த அந்தப் பெயரை மீண்டும் மீண்டும் படித்தான். கண்களை நம்பவே முடியவில்லை. கண்டிப்பாக யாருக்கும் தெரியவே கூடாது என்ற கட்டளை என்பதால் அதனை எரித்து முடித்தான். இப்போது எப்படிக் காய் நகர்த்துவது? என்ற கேள்வி பூதாகாரமாக வந்து நின்றது.

தன் நிலையை யோசித்துப் பார்த்தான் தித்தன். சதியின் மூல காரணம் யார் எனத் தெரியும், ஆனால் அவன் ஆட்கள் யார் யார்? என்னென்ன மாறுவேடம் பூண்டு காரியத்தை சாதிக்கிறான்? எனத் தெரியாது. அதை யாரிடமும் சொல்லக் கூடாது. அதே நேரம் அந்த நபரிடமிருந்து நாட்டையும், காக்க வேண்டும். தித்தனுக்குத் துணையாக இருப்பவர்களிடம் கூட மிகவும் அவசியம் ஏற்பட்டாலன்றி எதையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. யோசிக்க யோசிக்க மூளையே குழம்பியது. இது போன்ற தருணங்களில் என்ன செய்ய வேண்டும் என குரு விந்தையன் சொன்னது நினைவில் வந்தது. சுற்று முற்றும் பார்த்தான். பெரிய குளக்கரையில் அரசமரத்தடியில் அமர்ந்திருந்தான் அவன். நடுப்பகல் வேளை என்பதால் யாரும் இல்லை.

கண்களை மூடி நீண்ட மூச்சுக்களை இழுத்தான். மனதில் குரு விந்தையனையும் அவரது மானசீக குருவான அகத்தியரையும் தியானித்தான். நினைவுகளைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தினான். மனதால் அவரோடு பேசினான்.

"சாமி! ஐயனே! என் நிலை உங்களுக்குத் தெரியும்! பாண்டிய நாட்டை மீண்டும் வலுவாக்க நான் முயற்சி செய்து வருகிறேன். அந்த முயற்சியில் ஒரு மிகப் பெரிய இக்கட்டில் சிக்கியிருக்கிறேன், நாட்டையும், நாட்டும் மக்களையும் பத்திரமாக செண்பகப் பொழிலுக்கு அழைத்துச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சதிகாரர்கள் இளவரசனையும், மன்னரையும் குறி வைத்திருக்கிறார்கள். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி வியூகங்கள் வகுக்க வேண்டும்? எனக்கு வழிகாட்டுங்கள் சாமி" என மீண்டும் மீண்டும் எண்ணங்களைச் சிதற விடாமல் வேண்டினான்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ தெரியாது, மெல்ல கண் விழித்த போது மாலை நெருங்குகிறது என்பதை சூரியன் வானத்திலிருந்தே உணர்த்தினா. அப்போது யாரோ இருவர் அவ்வழியே ஏதோ பேசிக்கொண்டே சென்றனர்.

"எவன் ஒருவன் தனியாகத்திட்டமிட்டாலும் தக்க துணையைச் சேர்த்துக்கொள்கிறானோ? அவனே ஜெயிப்பான்." என்றான் ஒருவன்.

"எதிரிகளின் நோக்கங்கள் சூழ்ச்சிகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது நோக்கத்திற்காக வியூகங்களை வங்குப்பதே புத்திசாலித்தனம்." என்றான் ஒருவன்.

இந்த பேச்சுகளே அகத்தியர் எனக்குச் சொல்ல நினைக்குக் கருத்துக்கள் போலும். இல்லையென்றால் இவர்கள் ஏன் இப்படிப் பேச வேண்டும்? கோடி தான் காட்டுவார்கள் சித்தர்களும் முனிவர்களும். நாம் தான் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நன்றாகத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். முதலில் என்ன? அடுத்து என்ன? என்று யோசிக்க வேண்டும். அதற்கு நிறையத் தனிமையும் தொந்தரவுகள் இல்லாத சூழலும் தேவை. நல்லவேளை தங்கமணி பெண்களை அழைத்து வரப் போயிருக்கிறான். வேலன் மட்டும் தான். அவனும் நானும் வேறல்ல. அவனிடம் சொல்லித்தான் தீர வேண்டும். முடிவு செய்து கொண்டு நண்பனைக் காணப் புறப்பட்டான்.

அமைச்சரின் மனைவி உமையாள் தேவி, தித்தன், அவன் மனைவி மற்றும் குழந்தை, இவர்களோடு பிரம்மநாயகியும், முல்லையும் வர இருப்பதால் அமைச்சரின் இல்லத்தில் புறக்கடைப் பக்கம் இருந்த ஒரு சிறு வீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகையால் முன்னால் தங்கியிருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு அமைச்சரின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு வீட்டில் தான் இப்போது தித்தனும் வேலனும் தங்கியிருந்தார்கள். அங்கே தான் சென்றான் தித்தன். வேலனும் பணி முடிந்து வீட்டுக்கு வந்து விட்டான். தித்தனின் முகத்தைப் பார்த்ததுமே ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என ஊகித்துக்கொண்டான்.

"வேலா! நாம் அப்படியே மீனாட்சியம்மை கோயிலுக்குப் போய் வரலாம்! வருகிறாயா?" என்றான் தித்தன்.

வேலனுக்குப் புரிந்து விட்டது. ஏதோ விஷயம் பேச தன்னை அழைக்கிறான். மக்கள் அதிகம் கூடும் இடம் தான் ரகசியம் பேசத் தோதானது என மீனாட்சியம்மையின் கோயிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். தலையை மட்டும் அட்டினான் வேலன். இரு நண்பர்களும் இணைந்து நடந்தன.

"தங்கமணி இந்நேரம் செண்பகப் பொழில் சென்று சேர்ந்திருப்பான் என நினைக்கிறேன். பெண்களையும் குழந்தையையும் அழைத்து வர எப்படியும் ஒரு வாரம் பிடிக்கும். அது வரையில் நமக்குத் தனிமை தான்." என்றான் வேலன்.

"ஆம்! வேலா! அமைச்சருக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். நம் வீட்டுப் பெண்களை அழைத்து வர பல்லக்கு, அதனைத் தூக்கி வர ஆட்கள் என அளித்திருக்கிறாரே?" என்றான்.

ஏதேதோ பொதுவான விஷயங்களைப் ஏசிக்கொண்டே கோயில் வரை வந்து விட்டார்கள். வழக்கம் போல பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்து கொண்டார்கள். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் நல்ல கூட்டம். பொற்றாமரைக் குளப் படிகளில் சிறுவர்களும் சிறுமியரும் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தனர்.

"வேலா! நம்பகமான ஒருவனிடமிருந்து ரகசிய ஓலை வந்தது. அதில் சதியின் தலைவனின் பெயர் இருந்தது." என்றான் தித்தன்.

வேலன் திடுக்கிட்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

"அப்படியானால் நம் பணி எளிதாக முடிந்து விட்டது என எண்னுகிறேன். சதியின் தலைவனை கைது செய்து மன்னர் முன்னால் நிறுத்தினால் முடிந்தது நம் வேலை!" என்றான்.

வெறுமையாகச் சிரித்தான் தித்தன்.

"அது அத்தனை சுலபமல்ல என்பது உனக்கே தெரியும் வேலா!"

"யார் என்று தான் சொல்லேன்." என்றான். வாயால் சொல்லாமல் கைகளால் சைகை செய்தான் தித்தன்.

வேலனின் விழிகள் விரிந்தன. வாயை இறுக மூடிக்கொண்டான். சிறிது நேரம் பேச்சே இல்லாமல் இருந்தது.

"இப்போது என்ன செய்ய தித்தா?" வேலனின் குரலில் கலக்கம்.

பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் தித்தன்.

"அதைப் பற்றிக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன் வேலா!" என்றான் தித்தன்.

மீண்டும் மௌனம்.

"என்ன வேலா? ஏதாவது சொல்லேன்?"

"என் மூளையே மரத்துப் போனாற்போல இருக்கிறது! என்னால் சிந்திக்கவே முடியவில்லை."

"உம்! முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் ஐயன் விந்தையனையும், அகத்தியரையும் தியானித்தேன். சில யோசனைகள் கிடைத்தன."

"நல்ல விஷயம். உன் மன வலிமையும் இறையருளும் தெரிந்து தான் குரு உன்னைத் தலைவனாக ஆக்கினார். சொல்! என்ன யோசனைகள்?" என்றான் வேலன்.

"நமக்குத் தெரிந்த இந்த ரகசியம், வேறு யாருக்கும் தெரியத் தேவையில்லை. தங்கமணியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். புரிந்ததா?"

தலையை ஆட்டினான் வேலன்.

"எனக்கு சில நிமித்தங்கள் கிடைத்தன நண்பா! அவற்றை ஆதாரமாகக் கொண்டே நான் இந்தத் திட்டங்களை வகுத்துள்ளேன். இவை தவறாகவும் போகலாம். அப்படி தவறாகும் பட்சத்தில் ஒன்று நாம் ராஜ தண்டைனைக்கு ஆளாவோம். இல்லையெனின் சதிகாரர்களின் கரங்களால் மடிவோம். இருபுறமும் ஆபத்து தான். இதை நீ முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்!" என்றான் தித்தன் நிதானமாக.

"என்னைக் கொழை என்றா நினைத்தாய்? உனக்கு மட்டும் தான் பாண்டிய நாட்டின் மீது விசுவாசமா? எனக்கு கிடையாதா? எந்த நேரத்திலும் பின் வாங்க மாட்டேன் தித்தா! அதே போல என் அன்னையின் மீதும், தமிழ் மண்ணின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன். நீ சொன்ன ரகசியம் என்னைத் தாண்டி வெளியில் செல்லாது. உம்! இப்போது சொல் உனது திட்டத்தை! " என்றான் வேலன்.

இதை எதிர்பார்த்திருந்தான் தித்தன் என்றாலும் வேலனே சொல்லவே மகிழ்ச்சி பூத்தது தித்தனுக்கு.

"ஆனால் தித்தா! எதிரிகளின் திட்டம் என்ன என்பதே தெரியாமல் நாம் என்ன செய்வது?" என்றான் வேலன்.

"நாம் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் வேலா! அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ? என எதிர்பார்த்து நாம் செயல்படுவதை விட, நாம் செய்ய நினைப்பதைச் செய்து முடிப்பதற்கான முயற்சிகளைச் செய்வோம். சதிக்கூட்டத் தலைவன் யார்? எனத் தெரிந்து விட்ட பட்சத்தில், அவர்கள் எங்கு கூடுகிறார்கள்? எங்கு திட்டமிடுகிறார்கள்? என்ன செய்ய இருக்கிறார்கள்? போன்றவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் நீ தலைவனுக்குத் தெரியாமல் அவனை பின் தொடர வேண்டும். மிகுந்த அபாயமான வேலை. செய்வாய் இல்லைய?"

"நிச்சயம் தித்தா! உன் அடுத்த திட்டம் என்ன?"

"அது தான் மிகவும் முக்கியமானது. நமது நோக்கத்தை நோக்கி நாம் நகர வேண்டும். அதாவது மன்னரையும், மக்களையும், இளவசரையும் அழைத்துக்கொண்டு செண்பகப்பொழில் செல்வது."

"ஏயப்பா! அது எத்தனை பெரிய விஷயம்? நாம் சாதாரண வீரர்கள். வேண்டுமானால் உளவாளிகள் எனச் சொல்லிக்கொள்ளலாம். மன்னரை எப்படி நெருங்குவாய்?"

"அதற்கு ஒரு சிறு நாடகம் நடத்த வேண்டும் வேலா! மன்னருக்கு மிகவும் நெருக்கமான நபர் மூலமாக நாம் அவரை நெருங்க வேண்டும். நம்பகமான என்றால் அந்த நபர் என்ன சொன்னாலும் அரசர் கேட்க வேண்டும் அதோடு அவர் பாண்டிய நாட்டுக்கு உண்மையானவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் யார்?"

சற்று நேரம் யோசித்தான் வேலன். அவன் மனதில் இரு பெயர்கள் தோன்றின.

"இருவர் இருக்கின்றனர் தித்தா! முதலாமவர் நிதி அமைச்சர் மாறன் நல்லான். அவர் மன்னருக்கு வலது கரம் போல, இரண்டாவது தளபதி வீரநன்னன். இவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பாய்? எப்படித் தேர்ந்தெடுப்பாய்?"

"உம்! அதற்கும் யோசனை வைத்திருக்கிறேன் நண்பா! இருவரையுமே சிறிது கண்காணித்து பிறகே முடிவு செய்ய வேண்டும்? எனெனில் அவர்கள் கூட சதிக்கூட்டத்தில் இருக்கலாம் அல்லவா? கண்காணித்த பிறகே நாம் அவர்களை நம்ப முடியும்." என்றான் தித்தன்.

"அமைச்சர் கொடுங்கண்ணனாரிடம் என்ன சொல்வாய்?"

"இப்போதைக்கு அவருக்கு இது தெரிய வேண்டியதில்லை என நினைக்கிறேன். அவருக்கு இருக்கும் கவலைகளே போதும். நம்மை சுதந்திரமாக இயங்கச் சொல்லியுள்ளாரே? ஆகையால் எதுவும் சொல்ல வேண்டாம். "

"உம்! அதுவும் நல்ல யோசனை தான். ஆனால் தித்தா....நம் வீட்டுப் பெண்கள்...?"

"அவர்கள் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்."

"அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லி விடு."

" நீ அமைச்சர் மாறன் நல்லானைக் கண்காணி! மூன்றே நாட்கள் தான் நமக்கு சமயம். அதற்குள் நமக்குத் தெரிந்து விடும் அவர் உண்மையானவர் தானா? என. " என்றான் தித்தன்.

"ஏதோ நாடகம் நடத்த வேண்டும் என்றாயே? அதோடு தலைவனையும் கண்காணிக்கச் சொன்னாய்?"

"ஆம்! நடத்தத்தான் வேண்டும். நீயும் நானும் மட்டுமே அதில் பாத்திரங்கள். ஆனால் இப்போது இல்லை. எந்த அமைச்சரோடு நாம் இணக்கமாக வேண்டும் எனத் தெரிந்த பின். அவரை நெருங்குவதறாக வியூகம் அது. தலைவனை இந்த வேலை முடிந்ததும் கண்காணிக்கலாம்."

பேசிய நண்பனை வியப்பாகப் பார்த்தான் வேலன். இரு மாதங்கள் முன்பு வரை கூட என்னோடு இரவு நேரக்காவலுக்கு வந்த தித்தனா இது? எவ்வளவு வேகமாக, புத்திசாலித்தனமாக திட்டங்கள் தீட்டுகிறான்? இத்தனை நாள் இவனது இந்தத் திறமைகள் ஒளிந்திருந்தவனா? நேரம் வந்ததும் வெளியில் வந்து விட்டனவா? என யோசித்தபடியே அமர்ந்திருந்தான் வேலன்.

"என்ன அப்படியே கல்லாய்ச் சமைந்து விட்டாய் வேலா! செய்ய வேண்டிய பண்களை நினைத்து மலைக்கிறாயா?" என்றான் தித்தன்.

இல்லை எனத் தலையசைத்து விட்டு நண்பனோடு இணைந்து நடந்தான் வேலன்.

பொற்றாமரைக் குளத்தில் எதிர்ப்படிக்கட்டில் அமர்ந்திருந்த வர்த்தினி தித்தனையே பார்த்திருந்தாள்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom