8. செல்வியின் கோபம்!
மாலைநேரம் ரம்மியமாக இருக்க தன்னுடன் தனக்கு மட்டுமே தெரிந்த தன் ரகசிய காதலும், 'காதலிக்கிறேன்' என்று தெரியாமல் தன்னுடன் அழகாய் நிலவொளியில் தேவதை போல் ஜொலிக்கும் தன் காதலியும ஒன்றாய் பயணிக்க, உள்ளுக்குள் சொல்லமுடியாத ஒரு காதல்உணர்வு பொங்கி வழிந்து கொண்டிருக்க, இது தன் வாழ்க்கை முழுவதும் நிலைக்காதே என்ற வருத்தமும் மேலோங்கி அவன் முகத்தை வாடச்செய்தது.
தன் மனதை கொள்ளை கொண்டவன் சிந்தனையில் தான் மட்டும் அல்லாமல் தன் குடும்பத்தின் மேல் உள்ள அக்கரையை கண்டதில் இருந்து அவன் மேல் உள்ள மதிப்பு இன்னும் பலமடங்காக உயர்ந்தது தாமரைச்செல்விக்கு.
'எப்படியோ? ஒரு வழியா உன் மனசுல இருந்ததை சொல்லிட்டடா. அந்த கடவுளுக்குதான் நன்றி சொல்லணும், ஆனாலும், கடவுளே! இது ரொம்ப ஓவர்... என்னால முடியலை! நல்லவனா இருக்க வேண்டியதுதான், அதுக்காக அநியாயத்துக்கு இவ்வளவு நல்லவனா இருந்தா என்ன பண்றது?'
'காதலுக்காகவும் காதலிக்காகவும் என்ன வேணாலும் செய்வேன்னு சொல்ற பசங்கள பார்த்துருக்கேன். ஆனா காதலிக்கிற பொண்ணு அவங்க அப்பா அம்மாவோட சேர்ந்து இருக்கனும். தன்னை மாதிரி யாருமில்லாம கஷ்டப்படக்கூடாதுன்னு தன் காதலை சொல்லாம வச்சிருக்குற ஆள, முதல் முறையா இப்பத்தான்டா பார்க்கிறேன்.
என்ன ஆனாலும் உன் கையால தான் என் கழுத்துல தாலி கட்ட போற, கண்டிப்பா கட்ட வைப்பேன். அதுக்காக யார வேணாலும் எதிர்க்கறதுக்கு நான் ரெடி, எங்கப்பாவையும் சேர்த்து...
நிச்சயமா நீ எதுவும் செய்ய மாட்ட, நானா தான் எதுவும் செய்யணும் போல இருக்கே? அதுவரைக்கும் எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சு சந்தோஷமாயிரு. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கிறேன்.
உன் கையில் விட்டா ஒன்னும் பண்ண மாட்ட, வேற யாராவது என்னை கல்யாணம் பண்ணிக்குறத பார்த்து வாழ்த்திட்டு தாடி இல்லாத தேவதாஸா அலைய போறியா?' என்று தனக்குள்ளே பெரும் போராட்டமே நடத்தி கொண்டிருந்தாள்.
சீரான வேகத்தில் கார் போய் கொண்டிருந்த நேரம், திடிரென்று சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் சரவணன். அடித்த வேகத்தில் தூங்கி கொண்டிருந்த செல்வி முன்னே சென்று தலையில் முட்டி பின்னுக்கு வந்தாள்.
ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழிக்க, சரவணத்தமிழனிடம் திரும்பி தலையை தேய்த்துக்கொண்டே ”என்ன ஆச்சு? தூங்கிட்டிங்களா?" என்று கேட்டாள்.
"ப்ட்ச்! முன்னாடி கொஞ்சம் பார்த்துட்டு பேசு" என்றான் கடுப்பாக.
"என்ன?" என்று முன்னே பார்க்க, சுற்றிலும் ஒரே இருட்டு முழுவதும் மரங்கள் நிறைந்த காடு போல் தெரிய, முன்னால் யாரோ ஒருவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் படுத்திருப்பது தெரிந்தது. கூர்ந்து கவனித்தாள், ”தண்ணி, தண்ணி” என்று அவர் முனகுவது தெளிவாக கேட்டது.
"ஐயையோ! இடிச்சிட்டீங்களா? தண்ணி கேக்கறாரு. முதல்ல இறங்குங்க" என்று தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு கார் கதவை திறக்க போனவளின் கரம் பற்றி நிறுத்தினான்.
"ஏய்! செல்வி என்ன பண்ற நீ? முதல்ல கதவை மூடு” சொன்னதோடு நிக்காமல் அவளின்புறம் சாய்ந்து அவனே மூடியும் விட்டான்.
'நம்ம கார் எங்க இருக்கு? இவன் எப்படி இங்கு வந்து விழுந்து கிடக்கிறான்? நிச்சயமா நான் அவனை மோதலை. அப்ப, இது ஏதோ டிராமா மாதிரி தெரியுது. நாம உடனே இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும்' என்று தனக்குள்ளே யோசித்தவன்.
"ஐ திங்க் வி ஆர் இன் ரிஸ்க், சோ வி ஹவ் டு மூவ் பாஸ்ட்" என்று சொல்லிக்கொண்டே காரை ரிவர்ஸ் எடுத்து சரி செய்த பின்னர், அந்த இடத்தைவிட்டு வேகமாக ஓட்டினான்.
"அங்க விழுந்து கிடக்கற மனுசன காப்பாத்தாம, நீங்க பாட்டுக்கு வண்டிய ஓட்டிட்டு வந்துட்டீங்க. ஏன் இப்படி பண்றிங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?" என்று கோபமாக செல்வி கேட்டாள்.
"ஏய்! கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருக்கியா? ஆளு தான் வளர்ந்துருக்கியே தவிர அறிவு வளரவே இல்லடி உனக்கு. நம்ம கார் முன்னாடியே இருக்கு அவன் எங்கயோ விழுந்துகிடக்கறான். இந்த இடத்தை பார்த்தியா இல்லையா? எனக்கு ஏதோ தப்பா படுது. இரு” என்று 108ற்கு போன் செய்து விபத்து நடந்த இடத்தை குறிப்பிட்டு அங்கே வருமாறு கூறினான்.
இவர்கள் வெகுதூரம் சென்ற பின் மீண்டும் தனக்கு போன் வர, ஸ்பிக்கரில் ஆன் செய்தான்.
"ஹலோ! சார்! நீங்க சொன்ன இடத்துல யாருமே இல்ல" என்றார்.
"சார். அங்க ஒருத்தர் ரத்த வெள்ளத்துல இருந்ததால தான் உங்களுக்கு போன் பண்ணேன்" என்று சரவணன் கூற.
"ஏற்கனவே ரெண்டு பேர் இதே மாதிரி சொல்லி வந்து பார்த்து யாருமில்லாம திரும்பி போனோம்." என்று வைத்துவிட.
"பார்த்தியா? சொன்னேன்ல?" என்று முறைத்தபடி வண்டி ஓட்டினான்.
"சரி சாரி. நான் தான் தெரியாம சொல்லிட்டேன்" என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூற இவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
"சரி விடு" என்று மென்மையாய் புன்னகைத்தான்.
"உங்களை பத்தி சொல்லுங்க" என்று மெதுவாக தன் வேலையை ஆரம்பித்தாள்.
"என்னை பத்தி என்ன தெரியணும் உனக்கு?" என்று ஆழமாய் அவள் விழிகளில் ஊடுருவ, ”சும்மா தான் தெரிஞ்சிகிலாம்னு கேட்டேன். சொல்ல விருப்பம் இல்லன்னா விட்ருங்க" அவன் விழிகளில் இருந்து தப்பிக்க கோவம் எனும் ஆயுதத்தை போலியாக உபயோகப்படுத்தினாள்.
"சரி சொல்றேன்" என்று தன்னை பற்றி எல்லாவற்றையும் கூறிக்கொண்டு வந்தான்.
அவளும் ஆர்வமாக கேட்டுகொண்டு வந்தாள்.
அவர்களின் உரையாடலின் முடிவில் அவளது வீட்டின் பக்கத்துக்கு தெருவில் காரை நிறுத்தி ”உன் பிரெண்டுக்கு போன் பண்ணு, அவங்க எங்க இருக்காங்கன்னு கேளு" என்றான் வெளியே நோட்டம் விட்டபடி.
அவளும் பேசிவிட்டு ”அவர்கள் இங்கு வர இன்னும் இருபது நிமிடங்கள் ஆகும்னு சொல்லிருக்காங்க" என்றவுடன்.
"சரி" என்றவன் தன் போனை எடுத்து ”பிரபு! எங்கடா இருக்க?" என்று தன் நண்பனுக்கு போன் செய்திருந்தான்.
"ஏன்டா? எங்க சித்தப்பா வீட்ல இருக்கேன்" என்று கூறவும்.
"எதுவும் பேசாம பக்கத்துக்கு தெருவுக்கு வா" என்று போனை கட் செய்தான்.
"இந்த எருமை இந்த நேரத்துக்கு இங்க எதுக்கு வர சொல்லுது?" என்று திட்டிக்கொண்டே வந்த பிரபு, சரவணின் காரை பார்த்துவிட்டு, ”இவன் இந்த நேரத்துல இங்க என்ன
Start
பண்றான்?" என்று நெருங்கியதும் செல்வி அதில் இருப்பதை பார்த்துவிட்டு,”ஏய்! நீ இங்கே என்ன பண்ற? நீ டூர் போயிருக்கன்னு தான அப்பா சொன்னாரு. இவன் கூட என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அவளை முறைத்தான்.
"யெஹ் பக்கி! நான் தான போன் பண்ணி வர சொன்னேன். அங்க எதுக்கு கோபப்படற? முதல்ல உள்ள ஏறு" என்று அவன் திட்டியவுடன் உள்ளே ஏறி அமர்ந்து”இப்ப சொல்லுங்க" என்று இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
செல்வி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
"நான் சொல்றேன்" என்று நடந்த எல்லாவற்றையும் கூறினான் சரவணன்.
"உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. இப்படியா நடந்துப்பாங்க" என்று திட்ட ஆரம்பித்தவனை அதட்டினான் சரவணன்.
"டேய்! நானே ஏற்கனவே திட்டிட்டேன், நீ வேற எதுக்குடா திட்ற? சும்மா இரு"
"ஹ்க்கும். சும்மாவே இது அடங்காது. நீ வேற சப்போர்ட் பண்றியா? சுத்தம்" என்று போலியாய் கிண்டல் செய்தான்.
"எனக்கு முக்கியமா ஒருத்தர மீட் பண்ணனும் உனக்கு தான் சொல்லி இருந்தேன் இல்ல. இன்னும் கொஞ்ச நேரம் ஆகுமாம் இவங்க பஸ் வர. சோ, நீ அவங்கள கூப்பிடிட்டு போய் அவங்க வீட்ல விட்ருடா" என்று கூறினான்.
"ஆமாடா! ஏற்கனவே சொன்னியே, அவங்க எப்போ வராங்க?" என்று கேட்க.
'யாரடா பார்க்க போற நீ? இவ்ளோ நேரம் பேசிட்டு வந்தேன் என்கிட்டே நீ எதுவும் சொல்லவே இல்லையே? யாரா இருக்கும் அது?' என்று தன் சிறுமூளையை போட்டு கசக்கி கொண்டிருந்தாள் செல்வி.
"ஜெனி இன்னும் அரைமணி நேரத்துல நான் வர சொன்ன இடத்துக்கு வந்துருவாங்கடா. நான் போகணும்” என்று சரவணன் செல்வியை பார்த்தபடி கூறினான்.
அவளின் மனவலைகள் அவனுக்கு புரிந்தது. இருந்தாலும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே”நீங்க உங்க அண்ணன் கூட போய்டுங்க மிஸ்.செல்வி” என்று கூற மிகவும் கடுப்பாகி போனாள் செல்வி.
"நான் எப்படி திருமதி.சரவணன் ஆகறதுன்னு யோசிச்சுட்டு இருந்தா? இந்த பக்கி பாரு என்ன வெறுப்பேத்துறதிலையே குறியா இருக்கு. இப்ப நான் எப்படி தெரிஞ்சுகிறது யாரு அந்த ஜெனி? அவ மட்டும் என் கைல மாட்டினா அவ்ளோ தான் இருக்குற கொலைவெறில அவளை கைமா பண்ணிடுவேன்." என்று அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.