Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL மாறிலி மானிடர்கள் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited by a moderator:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18
மாறிலி மானிடர்கள்
அத்தியாயம்-1

அந்த கிராமம் இருள் என்ற அரக்கனின் கைகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.. பேரிடரில் அகப்பட்டு கொண்டோம் என்ற நினைப்பு வர கூடாது என்பதற்காக சந்திர அரசி, தனது விண்மீன் படையையும் தனது நிலவொளி குடையும் விரித்து தண்மையை தருவித்து கொண்டிருந்தாள்..

இரவு படைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக கண்களில் ஒளியை ஏந்தி கொண்டு காட்டு பூனைகளும் தெருநாய்களும் ஆந்தைகளும் தங்களது வீழ்த்தப்பட்ட அரசாட்சியில் எக்கவலையும் இன்றி உலா வருகின்றன.. வானர படைகளான ஆந்தைகளும் கூகைகளும் வேகம் கொண்டு தங்களின் இரைகளை வேட்டையாடி தீர்த்து களியாட்டத்தினை தொடங்கியிருந்தது

சுவர்கோழிகள் தங்களின் இருப்பை நிலை நாட்டுவதற்காக சதா நேரமும் சத்தமிட்டு கொண்டிருக்க, வீட்டு நாய்கள் தங்களின் விசுவாசத்தை காண்பிக்கும் விதமாக ராஜதோரணையாக வாசல்களில் நடை போட, அவைகளின் ஜென்மம் தாண்டிய பகைவரான பூனைகளோ ஒட்டுப்பறையினுள் கிடைத்த பொந்துகளையே சுரங்கங்களாக்கி வீடு வீடாக சென்று பால் பாத்திரங்களை உருட்டி கொண்டிருந்தது.

இடைவெளிகளினால் பிரிக்கப்பட்டிருந்த வேப்பமரங்கள், ஒன்றை ஒன்று தழுவி சப்தமில்லாமல் உறவு கொண்டிருந்த புளியமரங்களினை கண்டு பொறாமையில் ஆம்பாரிட, கைகளில் அணிந்திருந்த இலை சருகுகள் சலசலத்து கொண்டது.. அதற்கு எதிர்பாட்டு எழுப்பும் விதமாக வேம்பின் மீது ஒரு தலை காதல் கொண்டிருந்த ஊருக்கு நடுவே உருவான ஊருணி நிலவின் ஒளியால் உடைந்த கண்ணாடியென வெள்ளியாய் பளபளக்கும் நீரினை சிடும்ப செய்தது..

மேல் காற்று மெல்ல வீச, மேலெழும்பி கீழ் பாயும் நீரின் ஈரப்பதத்தை தத்தெடுத்து கொண்டு புசல் காற்றாக மாறி மொத்த கிராமத்தையும் மேலும் உறக்கத்தில் சிலாகிக்க செய்தது.. ஆனாலும் இக்காற்று எதனையும் அனுபவிக்க விடாது ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் சூரியன் மிளிர்ந்தது.. மஞ்சள் நிற விளக்கொளி தன்னால் ஆனமட்டும் பிரகாசத்தோடு இணைந்த வெம்மையையும் தருவிக்க விழைந்தது.. அந்த பிரகாசம் பாய்ந்த இடத்தினை தெளிவாகவே காண முடிந்தது..

என்றோ ஒருநாள் சர்க்கார் ஆட்சியில் சாலை போட வேண்டுமென்ற முடிவால், தொடக்க நிலையான சரள்களை அணிவகுத்து விட்டு பதிய வேண்டுமென்று விட்டு அத்தோடு சென்றதினால் மழை வெயில் என்று இரண்டையும் அனுபவித்த அந்த சாலை சர்க்காரை மறந்து அவ்விடத்தில் வாழ பழகி கொண்டிருந்தது.. தற்பொழுது சில நாட்களாக கோடையில் உருவான புயல் கொடுத்த பரிசாக மெல்லிய மணல்களை கோடை மழை சரள்களோடு காதல் கொள்ள செய்திருந்தது..

ஒவ்வொரு வீட்டின் பாலமாக களவெத்தியால் வெட்டப்பட்டு இணைக்கப்பட்ட வாராங்காலில் கழிவுகள் சேர்ந்து கருமை நிறத்தை தோற்றுவித்திருந்தது.. வீட்டிற்கு செல்லும் அந்த ஒரு பகுதி மட்டும் அமிழ்ந்து அந்த இடைவெளி வழியே சாலையில் வழிந்து கொண்டிருந்தது சாக்கடை.. காலியான சிறுபகுதி சாணிப்பால் கொண்டு தெளிக்கப்பட்டதினால் வாசல் பகுதி திண்ணமாகவும் வெளிப்பகுதி சாண புழுதிகளாகவும் காணப்பட்டது.. வீட்டோடு இணைந்து கட்டப்பட்டிருந்த தொழுவம் வீட்டின் உயரத்தை ஒத்திருக்க, அதில் நிறுத்தப்பட்டிருந்த ஒற்றை மிதிவண்டியும், அதனருகே அடுக்கப்பட்ட அண்டாவும் புதியதாக தோன்றும் அளவிற்கு சுத்தமாக இருந்தது..

மற்றொரு புறத்தில் சென்ற வருட அறுவடையில் கிடைத்த உமி, சணல் சாக்குகளில் கட்டப்பட்டு சுவரோடு சாத்தி வைக்கப்பட்டிருந்தது.. அதனை கொள்ளை கொள்ளும் முயற்சியில் ஓட்டுப்பறையில் கண்ணுக்கு புலப்படாத வலைகளை கட்டி முடித்திருந்த கிழட்டு சிலந்தி ஒன்று வசிக்க, கீழேயோ அதனை ஏமாற்றி கொண்டிருந்த மூஞ்செலியை துரத்தி விட்டு பெருச்சாளி பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்தது.. அதனுடைய அநியாயத்தினால் அருகே இருந்த சுண்ணாம்பு தூண் எவ்வேளையிலும் விழுந்து விடலாம் என்ற தற்கொலைக்கு திட்டம் வகுத்து கொண்டிருந்தது..

புளியங்கொட்டையும் வேப்பங்கொட்டையும் பல நாட்கள் இருப்பதற்கான அறிகுறியாக உழுத்து போயிருந்தது.. கற்களால் கட்டப்பட்டு சுண்ணாம்பு பூச்சு கொடுக்கப்பட்ட மூன்றடி கொண்ட கதவில் பதிக்கப்பட்டிருந்தது அந்த நிலைக்கதவு.. தனது வாழ்வினை முடித்து விட்டு மாமரத்தின் தண்டுப்பகுதியை கொண்டு இரண்டு தலை முறைக்கு முன் உருவாக்கப்பட்டு மறுவாழ்வு அடைந்த கதவு வாழ்வை முடித்து இரண்டு வருடங்கள் ஆகிறது..

இறந்த உடலில் ஒவ்வொரு தசையும் வலுத்து கொண்டு செல்வது போன்ற தன்மையை கொண்டிருந்தது அக்கதவு.. இதிலும் உயிரோடிருக்கையில் மழைக்காலங்களில் விரிவடைந்து நிலைக்குள்ளே நுழையாமலும் கோடைகாலங்களில் இறுகி நிலை பொருந்தி போகாமலும் என்ற நிலைக்கு சென்று விடும்.. தற்பொழுது அந்த ஒரு பிரச்சினை மட்டும் இல்லை.. காட்டிற்கு ஒரு ராஜா தான் போல உலோகத்திற்கு தலைவனான இரும்பு கொண்டு செய்யப்பட்டிருந்த பூட்டினை கொண்டு அடைத்து விட்டால் எந்த காலத்திலும் எவனும் எளிதாக நுழைந்து விட இயலாது..

ஒரு பருமன் குறைந்த பலகையை நேர்வாக்கில் வைத்து அதன் மேல் மேல், கீழ், நடுப்பகுதி என்று மூன்று பருமனான கனசெவ்வக கட்டையை குறுக்குவாக்கில் பதிக்கப்பட்டு உருவானது... சமீப காலமாக தொழுவத்தில் விரட்டி விடப்பட்ட எலி வீட்டினுள் புகுந்து விட, கரையான்களின் படையை வழி நடத்தி சென்று அடிக்கதவினை அரித்து விட்டது..

அந்த கனமான சாவி கொண்டு பூட்டு திருகப்படும் பொழுது, “க்ரீச்..” என்ற சத்தம் எழுந்தது.. கதவை திறந்து கொண்டு வெளியே வந்த அவள், அரவமின்றி, சாம்பல் சாக்கின் மீது கணத்திற்காக வைக்கப்பட்டிருந்த நெளிந்த ஈயப்பாத்திரத்தை ஒதுக்கி விட்டு, ஒரு அள்ளல் சாம்பலினை அள்ளி இடது உள்ளங்கையில் குவித்து கொண்டு வெளியே வந்தாள்.. வலது விரல்களில் தேங்கியிருந்த துகள்களை பாவாடையில் தட்டி விட்டு, சுட்டுவிரலில் துவக்கமான கொஞ்சமாய் எச்சிலை தொட்டு சாம்பலிற்கு ஈரப்பதத்தினை அளித்து கடைவாய் பற்களுக்கு இடையே ரோந்து வர செய்தாள்..

குச்சி குச்சியாக நின்ற துகள்கள் பற்களில் மட்டுமல்லாது நாவில் இருக்கும் கோழைகளையும் உறிஞ்சி விட, தொண்டை வரை சென்ற அனைத்தையும் வெளிக்கொணர்வதற்காக காறி கொடுக்காய்ப்புளி மரத்தின் தூரிலே துப்பினாள்.. அருகே போடப்பட்டிருந்த மூன்று தலைமுறைகளை தாண்டிய கற்தொட்டியில் பச்சை பாசியை விடுத்து குளிர்ந்த நீரினை அள்ளி வாய் கொப்பளித்து விட்டு முகத்தை கழுவினாள்..

நேற்றே பெரியப்பா தொழுவத்தில் இருந்து எடுத்து வந்த சாணம் தூணருகே கேட்ப்பாரற்று கிடக்க, ஒற்றை கரத்தில் அள்ளியவள் மெழுகுவதிற்காக வைத்திருந்த சருவசட்டியில் இட்டு, தண்ணீர் ஊற்றி கரைத்து, ஓசை வராமல் தெளித்தாள்.. இயல்பாகவே முற்றம் தெளித்தால் பக்கத்து தெருவின் எவனையோ ஒருவனை அறைவது போல சத்தம் எழும்பும்.. ஆனால் காலையில் களவிற்கு வருபவனை காட்டிலும் அமைதியாக அனைத்தையும் செய்கிறாள்..

பூனை போல ஆமையாக தனது கூட்டினுள் தலையை உள்ளிழுத்து கொண்டாள்.. நீளவாக்கில் இருந்த கூடம் தான் மொத்த வீடுமே.. சமையலுக்காக இரண்டு அடிக்கு சுவர் எழுப்பியிருக்க, பரணில் ஒரு சோற்று பானை, குழம்பு பானை, ஒரு பொரிக்காஞ்சட்டி, எப்பொழுதாவது பயன்படுத்தும் பனியாரசட்டி, திருவிழாவுக்கு மட்டும் உபயோகமாகும் இட்டிலிக் கொப்பரை, தீட்டு போல ஒதுக்கி வைக்கப்பட்ட ஆட்டுக்கறிச்சட்டி என வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது..

விறகு அடுப்பினை தரையில் வைத்து சுற்றிலும் சுண்ணாம்பு பூசப்பட்டு இருந்த அடுப்பில் இரண்டு கட்டைகளில் தீமூட்டி, நடுவே காபிக்கென ஒதுக்கப்பட்ட பானையில் வெந்நீரை வைத்தாள்.. வெளியே கட்டிலிலும் தரையில் தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பி விடாமல் ஓட்டினுள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சாக்கினை எடுக்க நினைத்தாள்.. ஏற்கனவே சமையலறைக்கு என்று மூன்றில் ஒரு பங்கினை ஒதுக்கி விட, மீதமிருந்ததில் இரண்டில் ஒரு பங்கினை இரும்பு பீரோ ஆக்கிரமித்திருந்தது.. அதிலும் பாதியாக நார்க்கட்டில் அமைந்து விட இருந்த கொஞ்ச பகுதியை தூங்குவதற்கு உபயோகம் செய்து கொண்டனர்..

வாசலில் கதவை சாத்திய பின் சொச்ச இடைவெளி கிடைக்க, அதிலே விரித்து விட்டு அவசரமாய் சென்று அலுமினிய டம்ப்ளரில் கலந்து வைத்திருக்க சீனியும் தேயிலையும் மூழ்குமாறு கொதித்த வெந்நீரை ஊற்றினாள்.. கடுங்காப்பியை அங்கிருந்த அம்மி மேலே அமர்ந்து குடிக்க, அம்மாவின் “அம்மி மேல உக்காராதன்னு எத்தனை தடவை சொல்லுதது??” என்ற அதட்டல் நினைவில் எட்டி பார்க்க, சட்டென எழுந்து கொண்டாள்..

அதே கற்தொட்டியில் த்ம்ளரை அலசி அங்கேயே கவிழ்த்து விட்டு, இரவே சருகையில் வாங்கி வந்த சில இலைக்கட்டுகளை பாதி தண்ணீர் நிரம்பிய குவளையில் அமிழ்த்தி எடுத்து தண்ணீர் வடிய சுவற்றில் சாய்த்து வைத்திருந்தாள்.. ஒவ்வொன்றையும் உதறி சோதித்து பார்த்து எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தவள், நாரினால் வட்டமாக பின்னப்பட்ட தட்டினையும் கருப்பு இரும்பினால் செதுக்கப்பட்ட கத்தரியையும் அளவு கொடுக்கும் ஆர்ஸ் அளவையும் எடுத்து கொண்டு அமர்ந்தாள்.. உறையவைக்கும் குளிருக்கு இதமாக வெதுவெதுவென சாக்கு இருக்க சம்மணமிட்டு இலைக்கட்டினை பிரித்தாள்..

சிறுசும் பெருசுமாக இருந்த புகையிலையில் நேர்வாக்கிலும் பக்கவாட்டிலும் குறுக்குவாட்டிலும் எந்த வகையில் ஆர்ஸ் முழுவதும் நிறைகிறதோ அந்த வாக்கில் வைத்து “கரிச்க் கரிச்க்..” என வெட்டி தள்ளினாள்.. சற்று ஈரப்பதத்தில் நனைந்திருந்ததால் கனமான நடுநரம்பு கூட எளிதாக வெட்டுப்பட்டது.. அந்த சத்தம் வீட்டிலுள்ளோருக்கு பழக்கமானது என்பதால் தூக்கம் என்பது தடைபடாமல் தாலாட்டு போன்றானது..

சற்று நேரத்தில் எல்லாம் மணி நான்கை கடந்து ஐந்தில் அரையாக போய்விட, மேல் காற்று சுத்தமாக அற்று போனது.. இரவு ஆட்சி செய்த ஐந்து அறிவு ஜீவராசிகள் தங்களின் பணிகளை முடித்து விட்டு வசிப்பிடத்தில் சுருண்டு தூங்க சென்றது.. விடியலை அறிவிக்க சேவல் தனது செட்டைகளை புதுப்பித்து கொண்டு, “கொக்கரக்கோக்கூ.. கொக்காரக்கோக்கூ..” என மொத்த கிராமத்திற்கும் தண்டோரா அடித்தது..

அதனை தொடர்ந்து கோவிலில் மணியடிக்க, ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கதவு திறக்கும் க்ரீசென்ற சத்தமும் வாசல் தெளிக்கும் சத்தமும் மாறி மாறி ஒலிக்க துவங்கியது.. இதன் நடுவே பல்லவி போன்று அரிவாள்களும் களைக்கொத்தி மண்வெட்டி கடப்பாரையும் தங்களின் நகர்வை சேர்த்து கொள்ள, வெண்கல கும்பாக்கள் சுருதி சேர்த்து இசையின் ஊற்றாக மாற்றியது..

சமையலறையில் பெரிய சோற்று சட்டியில் கிடந்த பழைய சோறு பருக்கைகளை பிழிந்து கும்பாவினுள் இட, குழைந்த பருக்கை இரண்டாக வரியிடப்பட்டிருந்தது.. கலங்கலான நீர்த்தண்ணீரை கூட ஊற்றி இரண்டு ஈராங்கியத்தையும் பச்சை மிளகாயையும் உப்பையும் துணியில் கட்டி கைப்பிடியில் கட்டி கொடுத்து விட்டு வெளியே வர, திண்ணையில் அமர்ந்து கோலத்தினை ரசித்து கொண்டிருந்தார்..

“இத எப்போ போட்டா??” என்ற யோசனையோடு கட்டுச்சோற்றினை கொடுத்து விட்டு உள்ளே செல்ல, இன்னமும் அதே இடத்தில் அமர்ந்து இலைகளை வெட்டி கொண்டிருந்தாள்.. ஆறு கட்டுக்களையும் வெட்டி முடித்த பின்னே தான் அவ்விடம் விட்டு எழுவாள் என்று அந்த தாயும் அறிவாள்..

கால்களில் இரவு நேரத்தில் சுண்டெலி கடித்து வைத்த தழும்பு மறையாமல் இருக்க, பாதி விரல்களே அங்கிருந்தது.. ஒரு மெலிந்த மரத்தண்டு ஐந்து குட்டை கிளைகளாக பிரிந்தது போன்ற கால்கள், செங்காந்தள் பூவினை போல நகத்தில் வரியிட்ட மருதாணி கறை.. கத்தரிக்கோலினை பிடித்திருக்கும் கரமோ எலும்பினை தோல் சுற்றியது போல விரல்களை விட நரம்பே அதிக இடத்தை பிடித்திருந்தது.. சுண்டி விட்டால் ரத்தம் வரும் வகையறாக்களின் மத்தியில் சுண்டி விடாமலேயே பச்சை நரம்பு வரும் வகையறா..

நீள வாக்கில் அமைந்திருந்த முகத்தில் பரந்த நெற்றியில் மூன்று வரியாக தோல் சுருங்கி நிற்க, நெற்றிப்பொட்டில் உதித்த நரம்பொன்று பாதியிலே இரண்டாய் பிரிந்து இயற்கையாகவே தெய்வநாமத்தை இட்டிருந்தது.. அடர்ந்த மாநிறம், ஒட்டி போன கன்னத்து சதைகள், முன்னுக்கு பின் முரணாக நிற்கும் பல்வரிசையில் காலை துலக்கியதில் தேங்கியிருந்த சாம்பல் துகள்.. கண்ணாடி பார்த்து பவுடரை பூசும் பொழுதே அந்த துகள் விடுதலை பெறும்..

கழுத்து வெளியில் எலும்புகளும் நரம்புகளும் ஒன்றை ஒன்று பின்னி போர் செய்து கொண்டிருக்க, கழுத்தெலும்பும் மார்பு கூட்டு எலும்பும் சேருமிடத்தில் ஒரு பாழுங்கிணற்றை தோற்றுவித்தது.. அதாவது “அவ எலும்புல ஒரு பக்கா நெல் அள்ளி போட்டாலும் அலுங்காது..” என கேலி செய்யும் பக்கத்து வீட்டுக்கிழவியின் கூற்று தான் நினைவிற்கு வரும்..
அவள்- புவனேஸ்வரி..
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-2

‘முன்னொரு காலத்தில் முகலாயர்களோ பல்லவர்களோ ஆட்சி செய்துவிட்டு மீந்த நிலப்பரப்பில் வாழும் ஜமீன்கள்’ என்பது போன்ற எந்த வரலாறும் இந்த கிராமத்திற்கென்று இல்லை.. இன்னும் சொல்லப்போனால் கிராமத்தின் பழம்பெரும் சிறப்புகளோ புராதன நன்மைகளோ கிடையாது.. இன்னமுமே கூர்ந்து கவனித்தோமேயானால் இவர்கள் புலம்பெயர்ந்தவர்களும் இல்லை..

வசதியோ கல்வியோ எதிலோ ஒன்றில் சிறந்தவனே இங்கு தலைவனாகிறானே தவிர முன்னோடியானதில்லை.. அதைத் தவிர அவ்வூருக்கென்று எந்த அடையாளமும் கிடையாது.. ஊரின் நடுவாக ராமசாமி கோவிலும் நயினார் கோவிலும் இருப்பினும் காவலுக்காக எல்லையில் நிற்பது வடிவாளம்மனே.. ராமசாமி கோவிலின்முன் தான் சற்று நேரத்திற்கு முன் கூறிய அனைத்து நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டிருக்க, வரப்போகும் நிகழ்வுகளும் அங்கே தான் அரங்கேறப்போகின்றன..

சுண்ணாம்பு வீட்டின் சிறிய சந்தினுள் மறைவாக நின்று குளித்து முடித்த புவனேஷ்வரி; இடையில் கட்டியிருந்த மாராப்பின் மேலே ரவிக்கை அணிந்த தட(ய)மாக நிற வேறுபாடு அடைந்த தோள்களில் துண்டினை சுற்றிக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மங்கிய நிறத்தாலான இளஞ்சிவப்பு புடவை நேர்த்தியாக சுற்றப்பட்டது.. இடையையும் தாண்டி சாட்டை சாட்டையாக வழிந்து கிடந்த கூந்தலின் அடியில் முடிச்சினை இட்டு, எப்பொழுதோ பதிக்கப்பட்ட ஓவியங்கள் மங்கிய நிலையில் இருந்த பீரோவின் கதவை திறக்கவும் ஓடுகளை தாங்கிய பனங்கம்பில் இருந்து கௌளி பல்லியொன்று சத்தமிட்டது..

முன்னொரு நாளில்,

முதல் தடவையாக சேலை கட்டிபழக வந்த தோழியொருத்திக்கு மாதிரி காண்பித்துக் கொண்டிருந்தாள் புவனேஷ்வரி.. சேலையின் சூட்சமத்தை சரியாக புரிந்து கொள்ளாதவளோ தரை எங்கும் பரத்தி விட்டிருந்தபடியால் சில மாற்றங்களை கவனிக்க மறந்திருந்தாள்.. ஒவ்வொரு மடிப்பாக கற்றுக் கொடுத்த ஆர்வத்தில் முந்தியில் தொடங்கி முன்னால் மடிப்பு வைப்பது வரை முடித்தாகி விட்டது..

தண்டுவடப் பகுதியில் மீந்து நின்ற சேலையினை மடித்து கொண்டிருக்கும் போது இடைப்பகுதியில் ஏதோ நெளிவது போன்றதொரு உணர்வு. உணர்வுகளின் அடிப்படையை கற்று தேர்ந்த பெண்களுக்கு இது கடினமானதல்ல. “ஜெயா.. இடுப்புல சொருவியிருக்க மடிப்புல ஏதோ ஒன்னு இருக்கு.. நான் உருவுதேன்.. நீ உடனே அடிச்சிரனும் சரியா..” என்ற புவனேஷ்வரியின் கிசுகிசுவென்ற கூற்றில் ஜெயாவோ மயங்கி விழாத குறை..

“என்னப்ள சொல்லுத.. எங்க வீட்டுல ஒத்த கரப்பான்பூச்சி பாத்தாலே ஜன்னல் கம்பில ஏறி நின்னுக்கிடுவேன்.. எங்க அம்ம தான் அடிப்பாவ.. நீ என்னைய போயி அடிக்க சொல்லுதியே..” என பயத்தில் கூற, “எனக்கு பயமா இருக்கு.. வெளிய ஆளுவல கூட்டிட்டு வருவோம்.. உள்ள இருக்கது.. செடி செத்தயா இருந்தா ரெண்டு பொம்பள புள்ளைவலா என்ன பண்ணுதது??” என கதவை திறக்க எத்தனித்தாள்..

“ஏப்ள.. நான் நிக்க கோலத்துல யார கூட்டிட்டு வருவா.. சொல்லுதத கேளு.. நான் புடிச்சிட்டு தான் இருக்கேன்.. நைசா சேலையை கழத்துதேன்.. இந்தா.. இந்த உலக்கைய கொண்டு அடிச்சிரு..” என சன்ன குரலில் சமாதானம் பேச, “உலக்கையா?? அடுத்த தடவ நெல்லு குத்துததுக்கு உலக்க இல்லன்னா உங்க அம்ம என்னை உலக்கை ஆக்கிருவாவளே..” என பயந்து நடுங்கினாள் ஜெயா..

“அதை நான் பாத்துகிடுதேன்.. முதல்ல இதை புடி..” என அவளின் கைகளில் உலக்கையைக் கொடுத்த புவனேஷ்வரியின் முகத்தில் பதட்டம் கலந்ததினால் நெற்றி முழுவதும் வியர்த்து, உதட்டின் மேல்வழி வழிந்து கொண்டிருந்தது.. “ந்தா.. கழத்துதேன்.. சரியா அடிச்சிரு..” என்றவாறே சேலையை அவிழ்த்து விட, அடுத்த நொடியே இரண்டு வீர பெண்டிர்களும் கட்டிலின் மேல் ஏறி நின்றனர்..

கட்டிலிலே குத்தவைத்து அமர்ந்த ஜெயா, “என்னப்ள ஒன்னும் வெளிய வரல.. உண்மைய சொல்லு.. எதாவது இருந்துதா??” என சந்தேகிக்க, “எங்க அம்ம மேல சத்தியமா எதோ நெளிஞ்சிது..” என தலையில் அடித்தாள் புவனேஷ்வரி.. மேலிருந்த வண்ணமே உலக்கை கொண்டு சேலையை புரட்டி பார்க்க, ஒரு செத்த பல்லி கிடைத்தது.. பயத்தில் பிடித்த பிடியில் மூச்சு முட்டி எப்பொழுதோ இறந்த பல்லிக்கு இத்தனை அக்கப்போர்..

இந்த சம்பவத்திற்கு பிறகு பல்லியின் மீதிருந்த பயம் நீங்கியிருக்க, அடுத்த சம்பவத்தில் அதன் உச்சிக்கே சென்று விட்டாள்.. பின்னொரு நாளில் “பெரியண்ணே வயல்ல இருந்து தந்தாவ..” என பறித்த உடனேயே பைசல் செய்யப்பட்ட கத்தரிக்காயை கொண்டு வந்து வேலப்பன் கொடுத்திருக்க, மணக்க மணக்க கத்தரிக்காய் புளிக்குழம்பு செய்திருந்தாள் கனியம்மாள்..

நாசிக்கு செல்லும் கனியின் சமையல் நாவினை அடையாது.. நாவினை அடைந்தால் நாசியை அடையாது.. அதாவது மணம் அல்லது ருசி.. இரண்டில் ஒன்று மட்டுமே சாத்தியம்.. ஆனால் இன்றோ ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இரண்டுமே இடம்பெற்றது.. அம்மியில் அரைக்கப்பட்ட மசாலாவின் மணமும் மண்பானையில் சமைத்த ருசியும் வாவென்று அழைக்க, வீட்டின் ஆண்கள் மூவருமே ஒரு பிடி பிடித்து விட்டனர்..

மதிய நேரத்திற்கு வந்துசேர்ந்த புவனேஷ்வரிக்கும் கிடைக்கப் பெற, வகுப்பில் சென்று பெருமை புராணத்தோடு சேர்த்து விளம்பரமும் செய்து விட்டாள்.. அன்று இரவு, பீடி உருட்டி கொண்டிருந்தவளின் அருகே வந்து அமர்ந்த கனி, “மத்தியானம் கறி எப்பிடி இருந்துது??” என வினவ, தாயின் ஆசையை கெடுக்க விரும்பாமல் “நீ வச்சதுலேயே இந்த கறி நல்லா இருந்துது.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நானே பெரியப்பா தோட்டத்துல போய் அஞ்சாறு கத்தரிக்கா ஆய்ஞ்சிட்டு வந்துருப்பேன்..” என உண்மையை அப்படியே கூறினாள்..

“நான் ஒன்னு சொன்னா கத்த மாட்டியா??” என பொடிவைத்து பேசிய கனியை, மேலும் கீழுமாய் பார்த்து வைத்த புவனேஷ்வரி “சொல்லு..” என்றபடியே பீடியை உருட்டினாள்.. “காலையிலேயே உங்க ஐயா மத்தியாலதுக்கும் சேர்த்து வாங்கிட்டு போயிட்டாரு.. அவனுவ ரெண்டுவேரும் நீயும் சாப்புட்டு போனதும் சட்டிக்குள்ள செத்தோன்டியா தான் கறி கிடந்துச்சு.. சோத்தை உள்ள போட்டு சூடு பண்ணி சாப்பிடும் போது நானா சமைச்சேன்னு ஆச்சரியம் பாத்துக்கோ..” என முகவாயில் விரல் வைத்த கனி, பழக்க தோஷத்தில் அவளின் தோள்களில் இடித்தார்..

“ஏம்ம.. இத சொல்லுததுக்கு தான் வந்து உக்காந்தியா.. நானும் என்னமோ ஏதோனு பாத்துட்டேன்..” என முகம் சுளித்தவள், வானத்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே பீடியில் சிவப்பு நூலினை சுற்றி ஒற்றை விரலில் கொண்ட எச்சிலினால் நூலை அறுத்திருந்தாள்.. “அதில்ல..” என ராகம் இழுத்த கனி, “நான் சாப்பிடும் போது அடியில ரெண்டே கத்தரிக்கா துண்டு தான் கிடந்துது.. அதுல ஒன்னை எடுத்து வாயில வைக்கேன்.. நஜக்கு நஜக்குங்கு.. பிறவு கையில எடுத்து பாக்கேன்.. வெள்ளை பல்லி சூட்டுல கறுத்து போய் கத்தரிக்கா மாதிரி கிடந்துருக்கு..” என்கவும் மதியம் உண்ட உணவு தொண்டைக்கு ஏறியது அவளுக்கு..

“ஏம்ம.. ஒரு கறிய கூட பக்கத்துல நின்னு பாத்து வைக்க மாட்டியாம்ம.. இப்பிடியா பண்ணி வைப்ப.. அவருக்கு தெரிஞ்சிது நீ செத்த.. அப்பிடியா உனக்கு கண்ணு பத்தாம போயிட்டு..” என ஆத்திரமாக கேட்டவளின் தொண்டைக்குள் பல்லியே மிதப்பது போலிருந்தது.. முகத்தில் அசூயை காட்டியவளின் முகவாயில் கொஞ்சியபடியே, “என் தங்கம்ல.. என் ராசாத்தில.. அவருட்ட மட்டும் சொல்லிறாத.. இந்த துளசி நடுவால வந்துட்டா.. அதான் கறி கெட்டுப்போச்சு..” என்ற கெஞ்சலாக கேட்ட கனியிடம் கோபத்தை காட்ட இயலவில்லை.. அதன்பின் பல்லி என்றாலே அருவருப்பை தருவித்தது..

“உச்..” என சலித்து கொண்டு பீரோவில் அடுக்கப்பட்டிருந்த உருளை உருளையான பேப்பர் சாட்டினை வெளியில் எடுத்தாள்.. “ஏ.. பெரியவன் வந்து நிக்கான்ல.. சோத்தை போட்டு குடுத்தா தான் என்ன??” என்ற கனியம்மாளின் மீது எரிச்சல் மண்டினாலும் பசியில் வந்து நின்ற ராகவேந்திரனிடம் காட்ட தோன்றவில்லை.. வட்டமான சில்வர் தட்டில் பழைய கஞ்சியினை பிழிந்து வைத்து, தொட்டுக் கொள்வதற்காக உரித்த ஈருளி மற்றும் பழுத்த மிளபழம் ஒன்றையும் கொடுத்திட, “ஏக்கா.. அம்ம வைய போறாவ..” என நேர்மைக்கு பெயர் போன ராகவேந்திரன் சன்னகுரலில் கூறினான்..

“சும்மா சாப்புடுலே.. என்ன பண்ணுதான்னு பாப்போம்.. என் வயலுல மிளவு போட்ருக்கேன்னு ஊர் முழுக்க தண்டோரா போட வேண்டியது.. வீட்டுக்குள்ள பெத்த பிள்ளையலுக்கு ஒரு வாய் தொவையல் கூட அரைச்சு குடுத்துற கூடாது.. ம்க்கும்..” என உதட்டை சுழித்து கொண்டவள் மஞ்சள் பையினை துழாவினாள்..

தேடிய பொருள் கைகளில் கிடைத்ததும் இதழில் புன்னகையை விரிய, அவனை நோக்கி எறிய, சரியாக மடியிலே சென்று விழுந்தது அந்த புளிமிட்டாய்.. “சோத்த வச்சு குடுன்னா குசுகுசுன்னு பேச்சு என்ன வேண்டி கிடக்கு..” என்ற கடிதலோடே கனி உள்ளே நுழைய, சாரத்தில் கிடந்த மிட்டாயை மறைத்து கொண்டான் ராகவேந்தர்.. “ஆ.. நீ அரைச்சு வச்ச தொவையலு ருசி நாக்க அள்ளுது..” என ஏகத்தாளமாக பேசிய புவனேஷ்வரியின் கேலி புரிய கனிக்கு சற்று அவகாசம் அளித்தவள், “அவன் கேட்டா கொஞ்சோண்டி குடுத்துரு..” என்று விட்டு மஞ்சள்பையோடு தப்பியிருந்தாள்..

“நாலணாக்கு ரெண்டு மிட்டாய் வாங்குனா குடுப்பேன்... காலணாக்கு ஒன்னே ஒன்னு வாங்கி குடுத்துட்டு அவனுக்கு குடுத்துறாம்ல.. குடுக்கேன்.. குடுக்கேன்.. நாலு மிதி வேணா குடுக்கேன்..” என கருவிக் கொண்ட ராகவேந்திரன் சாப்பாட்டை தொடர்ந்தான்..

“ஏலே.. நீயாவது சொல்லலாம்ல.. இன்னும் ஆம்பள பயலுவ மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு அலையுதா.. ஊருக்குள்ள என்ன சொல்லுவாவ.. ஊரை விடு.. வடக்கு வீட்டுக்காரி என்ன சொல்லுவா?? இன்னும் சின்ன பிள்ளன்னு நினைப்போ.. உங்க அப்பனும் கண்டிக்க மாட்டைக்குறாரு.. என்ன தான் செய்யுததோ..” என கனி நொடித்து கொள்ள, “ஏம்மோ, விடும்மே..” என ராகம் இழுத்து கொண்டே, உருட்டி வைத்திருந்த பீடியை நட்சத்திரம் நட்சத்திரமாய் பொட்டுகுச்சி வைத்து மடக்க தொடங்கினான்..

வேலப்பன்- கனியம்மாள் தம்பதியினருக்கு தவப்புதல்வன் பிறந்து சில ஆண்டுகளிலேயே இறந்து விட, இரண்டாவதாய் உதித்தது தான் இந்த இரட்டை சுழி புவனேஷ்வரி.. அவளுக்கு அடுத்ததாகவும் இரண்டு மூன்று பிறந்து இறந்து விட, வாரிசாக தங்கியது ராகவேந்திரனும் மகேசனும் மட்டுமே.. எழுபதுகளில் ஒரு குடும்பத்தில் ஏழு எட்டு என்ற விகிதாச்சாரம் இயல்பு என்பதால் இதில் ஆச்சரியம் கொள்ள எதுவுமில்லை..

வேலப்பனும் நான்கு அண்ணன்களுக்கு பின் பிறந்தது போல சூட்சமம், சூது, சூழ்நிலையியல் போன்றவற்றிலும் பின்னிலையே.. ஆ பூவென கத்தி களேபரம் செய்தாலும் அந்த கயமை என்பது ரத்தத்தில் சிறிதும் கிடையாது.. ஆனால் இந்த அப்பாவித்தனமும் மடத்தனமும் சற்றும் ஒட்டாத புவனேஷ்வரியோ சிறு வயதில் அண்ணன்மார்களுடன் விளையாட சென்று இல்லாத அநியாயமாக அட்டூழியம் செய்துவிட்டும் தோளுக்கு மேல் வளர்ந்த அண்ணன்களை கைநீட்டிவிட்டும் சாராயம் போட்டு வந்து நிற்கும் அப்பாவின் பின்னே ஒளிந்து கொள்வாள்..

போதையின் அடிமையாக நிற்கும் வேலப்பனோ, “அந்த மொவனே.. இந்த மொவனே..” என சரமாரியாக திட்டி தீர்த்து விடுவார்.. போதைக்கு உடன்பிறந்தான் தெரியுமா?? உடனிருப்பார் தான் தெரியுமா?? எத்தனை ஆழ்ந்த போதையினில் ஆட்கொள்ளப்பட்டிருந்தாலும் மகள் என்பதில் மட்டும் நிலையான கருத்து மட்டுமே.. புவனேஸ்வரியும் மறுநேரம் அண்ணன்களிடம் செல்லாமல் இருப்பாள் என்று நினைக்கிறீர்கள்??

மறுமுறையும் செல்வாள்.. விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மறுத்தாலும் மீண்டும் பஞ்சாயத்து வேலப்பனிடமே செல்லும்.. “நாய ஏன் அடிப்பானேன்.. கழிவள்ளி செமப்பானேன்..” என்ற கதையாக வேறு வழியின்றி அவளை சேர்த்து கொள்ள, கோலிக்காயை ஒரே அடியில் இரண்டாய் நொறுக்கி விடுவது, செல்லாங்குச்சியை வைக்கோல் படப்பிற்கு மேல் எரிந்து விடுவது இப்படியான பலவிதமான குடைச்சல்களை கொடுத்து விடுவாள்..

இதனை அறிந்த கனியும் பலமுறை விளக்குமாற்று கையோடு சென்று சம்பவ இடத்திலேயே நாயடி பேயடி கொடுத்து விடுவாள்.. தான் அடிவாங்கும் போது சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களை மனனம் செய்து கொண்டு அடுத்த முறையும் பழி தீர்த்து விட்டு, கனியை வேலப்பன் கொண்டே அடக்கி விடுவாள்..

கல்லும் சரளுமாக கிடந்த சாலையில் அங்கும் இங்குமாக ஆடி ஆடி நடந்தவள் ஊரின் ஒவ்வொரு முக்குமுடங்கிலும் ஏறி இறங்கி கொண்டிருக்க ஊரின் முக்கியப்பகுதியை வந்து சேர்ந்தாள்.. மேல தெருவிலுள்ள மச்சுவீடு மிகவும் பிரசித்தி பெற்றது..

எந்த முகவரியாயினும் அந்த வீட்டை மையமாக கொண்டே அடையாளங்காணப்படும்.. அதில் இன்னொரு சிறப்புமாக “நள்ளவாத்தியார்’ என்ற அடைமொழியும் அடங்கும்.. அதை விட சிறப்பு மிக்க சிந்தனைமிக்க வீடுகளும் வீட்டிலுள்ளோர்களும் இருக்கும் பட்சத்தில் அவ்வீட்டிற்கு மட்டும் அடைமொழி கிடைத்ததிற்கு ஆசிரிய வம்சாவளி என்ற பல ஆண்டுகளின் சுருக்க வரலாறே காரணம்..

வீட்டின் தலைவாசல் தொடங்கி கொல்லைப்புறம் வரை கற்களாலேயே செதுக்கப்பட்டிருக்க, அதே ரத்தத்தில் பிறப்பெடுத்த மற்றொருவனின் இருப்பிடமோ கரையான்களுக்கு இப்பொழுதோ அப்பொழுதோ என விழித்து கொண்டிருந்தது.. இரண்டிற்கும் வித்தியாசங்களை பிரித்து பார்த்தோமேயானால் வெள்ளை வேட்டியோடு கம்பீரமாக மாலை நேரத்தில் கோவிலின் படியில் அமர்ந்திருப்பவரின் புத்தருக்கு ஒப்பான போதகம் என்பது பச்சை தண்ணீரைப் போல ருசி ஒன்றுமில்லாமல் போகும்..

சிறிதும் அப்பழுக்கில்லாத வேட்டி சட்டையும் சதா நேரமும் பிரச்சினைகளில் ஈடுபடும் கலர் சாரமும் சாராயமும் என்றுமே ஓட்டப்போவதில்லை என்றாலும் இரண்டுமே ஒரு தாய் வயிற்றுச் சுவரில் தானே இளைப்பாறின.. ‘தம்பி இப்படி கஷ்டப்படுறானே ஒரு புத்திமதி சொல்ல கூடாதா??’ என்ற வார்த்தைகளை விடுத்து இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை அடையாளம் காண்க.. என்ற ஐந்து மதிப்பெண் வினாவிற்கே மொத்த ஊரும் விடை எழுதும்..

ஏனோ சிறுவயதில் இருந்தே அவளுக்கு அந்த வீட்டின் மீது ஒரு பற்றுதல் உண்டு.. அந்த பற்று வெயில் காலத்தில் குளுகுளுவென தண்மை அளிப்பதினாலா?? ஒன்றிற்கும் இரண்டிற்கும் கருவங்காட்டை நோக்கி செல்லும் தங்களிடத்தில் இருந்து வேறுபட்டு இரண்டிற்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் கழிவறையினாலா?? சதா நேரமும் சமையலறையில் கிடைக்கும் சுடுசோற்றினாலா?? விழாக்கள் வரும் பொழுதில் கிடைக்கும் பலகாரங்களினாலா?? இப்படியாக எத்தனை ஆலாக்கள் போட்டாலும் அவளின் அவாக்கள் நிறைவடைவதில்லை..

ஆனால் தற்பொழுதோ ஏதோ ஒரு வெறுப்பு.. விரக்தி.. கோபம்.. சிறுவயதில் அண்ணன்களை அடக்கின அந்த சர்வாதிகாரி சடங்கு என்ற ஒன்றினால் சர்வமும் ஒடுங்கி போனாரா?? வளர வளர தன் குடும்ப நிலை பின்தங்கியுள்ளது என்பதைக் காட்டிலும் அண்ணன்களிடம் இருந்து எவ்விதத்தில் குறைந்து விட்டோம் என்ற கேள்வி எழுகிறதே.. ஏதோ ஒன்று.. அதினால் பெரியப்பா மக்கள் தன்னையும் தன் தம்பிகளையும் தகுதி குறைவாக நடத்துவது ஏன்?? என்ற கேள்வி ஒருபுறம் இருப்பினும் “மதியாதார் தலை வாசல் மிதியாதே..” என்ற இறுமாப்பு கொண்டிருக்கிறாள்..

யோசனையோடே அவ்வீட்டினை கடந்து செல்கையில், “என்ன புவனா.. அப்படி பாத்துகிட்டு போற..” என சர்க்கரையில் கலந்த பாலாக குரல் ஒன்று ஒலிக்க திரும்பினாள்.. “பெரியம்மா..” என வலிய புன்னகையை வரவழைத்து கொள்ள, “என்னப்ள காலேஜுக்கா போற.. இப்படி இளைச்சு போயிட்டியே..” என போலியான வருத்தத்தினை தெரிவித்தார்..

“ம்ம்..” என முறுவலித்துக் கொண்டவள் அங்கிருந்து தப்ப எண்ணம் கொண்டாள்.. இல்லையென்றால்.. “நம்ம பொன்னு இருக்கால்ல.. காலேஜுல வேலை போட்டு குடுத்துட்டாவாளாம்.. பாவம் நீயுந்தான் படிக்க.. ஒன்னுந்தரலை..” என கூறி கொண்டிருக்கும் போதே, வெளிப்படையாக முகத்தை சுருக்கினாள் புவனேஷ்வரி.. பொன்னு(எ)பொன்னரசி பயில்வதோ தனியாருக்கு சொந்தமான ஆசிரியர் பயிற்சி பட்டறை.. இவள் பயில்வதோ கிடைத்த ஒன்று..

இந்த வித்தியாசம் கூட புரியாத பெரியம்மாவை பரிதாபமாக நோக்கினாள்.. “என்னப்ள.. ஒன்னுஞ் சத்தம் குடுக்க மாட்டைக்க.. ஒ அம்ம என்னத்தையும் சொல்லி குடுத்தாளா??” என்று விட்டு கெக்கபிக்கே என சிரிக்க, அந்த சிரிப்பின் நடுவே நாசி சுருங்கும் இடைவெளியில் ஒளிரும் அந்த மூக்குத்தியை பிடித்து இழுத்து விட வேண்டுமென்ற அளவிற்கு ஆத்திரம் வந்தது..

“எனக்கு நேராவுது.. நான் வந்து பேசுதேன்..” என வெடுக்கென கூறி விட்டு அங்கிருந்து கிளம்ப, “இந்த முனைச்சிக்கிட்டு போறதுல ஒன்னும் குறைச்சலில்லை.. அப்பிடியே கிழவி புத்தி.. நடக்க நடைய பாரேன்.. அங்குட்டு ஒரு ஆட்டு இங்குட்டு ஒரு ஆட்டு.. சீலைய தரையை தூக்குற மாரி கீழ வரை போட்டுக்கிட்டு.. ஒரு தாயானவா தொப்புளுக்கு மேல பாவாடைய தூக்கி கெட்டுன்னு சொல்லி குடுக்க மாட்டாளாக்கும்.. மெனக்கெட்டு வந்து பேசுதேன்.. நின்னு சத்தம் குடுக்காம ஓடுதா.. உண்மைய சொன்னா சுருத்து வருது..” என நொடித்துக் கொண்டு வீட்டினுள் சென்றார்..

வீட்டில்,

அரவமில்லாமல் வீட்டினுள் பூனை போல நுழைந்த மகேசன், பானையின் ‘கிளிங்’ என்ற சத்தம் கூட எழும்பாது சோற்றினை தட்டில் அள்ளி வைத்து திண்ணையில் முட்டுக் கூட்டி அமர்ந்து, ராயப்பண்ணே கடையில் வாங்கி வந்த தடை ஊறுகாயை பிரித்தான்.. தேக்கு இலையில் சுடசுட வைத்த நார்த்தங்காய் ஊறுகாய் இலையின் மணத்தை உள்வாங்கியிருக்க, அந்த மணத்தை உள்வாங்கியபடி வந்து சேர்ந்தார் கனி.. “ஏலே.. கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?? செத்த நேரத்துக்கு முன்னால வந்துருந்தன்னா ரெண்டு பிள்ளையளும் நாக்குக்கு ருசியா தின்னுருக்கும்ல.. உனக்கு மட்டும் வாங்கிட்டு வந்துருக்க.. தாந்தின்னிப் பயலே.. வேலைக்கு போறவனும் காஞ்ச வயித்துல கஞ்சி தின்னுட்டு போறான்.. படிக்க இடத்துல அவள எல்லா பிள்ளையளும் என்ன சொல்லும்.. ஏ தாயி.. உன் வீட்டுல கறி குழம்பு ஆக்குத பழக்கமே இல்லையான்னு கேக்காதுவ.. ஏம்ல இப்பிடி பண்ணுத..” என முதுகிலே கைகளால் மத்தளம் வாசிக்க, தடுத்துக் கொண்ட மகேசன், “இப்போ என்னயணும்ங்க.. அந்த ரெண்டையும் தான் பெத்தியா?? நானும் இந்த வீட்ல தான பிறந்து அழுதேன்.. எப்ப பாரு உன் மக்க தான் பெருசா போயிட்டாவென்ன.. அவனவன் வெயிலுல மழையில கெடந்து வேலை பாத்துட்டு வந்து செத்தேன் வீட்ல நிம்மதியா திங்க முடியுதா.. கெடுக்கதுக்குன்னே வந்து சேருதுங்க.. ச்சே..” என சலிப்புற்றவனாக அங்கிருந்து கிளம்பினான்..

பக்கத்து வீட்டில நடக்கும் கூத்தை இரண்டடி வளர்ந்த சுற்று சுவரில் நாற்காலி போட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மாரியம்மா, “ந்தா.. கனி.. எதுக்கு அந்த பயல அந்த விரட்டு விரட்டுத.. பய சாப்பிடாம கொள்ளாம போறான்..” என எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிட, “நீங்க செத்தே சும்மா இருங்கக்கா.. நாலு பிள்ளையல் வந்து போற இடத்துல படிக்கா அவ.. குருவி மாதிரி சேத்து வச்ச துட்டுல தம்பிக்கு ஆசையா ஒரு சைக்கிள் வாங்கி குடுத்தா கேளுங்க.. பெரியவனுக்கு கூட ஒன்னுத்தையும் குடுக்கல.. அவன் வேலைக்கு போயி பாத்துப்பான்.. இந்த பயலுக்கு சூதுவாது தெரியாதேன்னு குடுத்தா எவனோ விதை வாங்க காசு இல்லன்னு கேட்டானாம்.. உடனே சைக்கிள வித்து துட்டை தூத்தெரிச்சிட்டு வந்து நிக்கான்.. அவளும் லேசுப்பட்டவ இல்ல.. அந்தால போன்னு பேசாம போயிட்டா.. அந்த கோவத்துல இப்பிடி வயலுக்கும் போவாம வீட்டுக்கும் வராம ரோட்டுல காயஞ்சிட்டு கிடக்கான்.. ஒண்ணுமில்லாத வயித்துல ஊறுகாய் திங்கான்னா எவ்ளோ கிராமுட்டித்தனம் இருக்கணும்.. வயித்த காய வச்சிட்டு பருத்தி கெட்ட தூக்க ஏலுவயில்லன்னு வீட்ல மலந்துக்கிடுவான்..” என தனது மனப் பாரத்தைக் கொட்டித் தீர்க்க, மாரியம்மாவுக்கு அந்த பொழுது கடந்து விட்டிருந்தது..

சேலை தலைப்பில் மூக்கை சீந்திக் கொண்ட கனி, “சேரிக்கா.. இன்னும் ரெண்டு தூளு சுத்த வேண்டிருக்கு.. அவ வாறதுக்குள்ள உருட்டி வச்சா தான் பெரியவன் மடக்க, அவ சைஸ் பாத்து தருவா.. பிறவு வாரேன்..” என்று விட்டு கிளம்பினார்..
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-3

இரு மருங்கிலும் இறுகிபோன புல்லிதழில் இரவலாக அமர்ந்திருந்த பருத்திசெடிகள் வெடித்து நிற்க, நடுவாக வெட்டபட்டிருந்த வரப்பில் ஒற்றை கரம் கொண்டு மார்போடு அணைத்த புத்தகங்களோடும் மறுகரத்தில் சேலையின் மடிப்புகளையும் தூக்கி பிடித்து நடந்து கொண்டிருந்தாள் அப்பவளகொடி..

“ஏ.. ஆலங்கனி மொவளா??” என்ற குரல் பாத்தியில் இரைந்து கொண்டிருந்த தண்ணீரையும் மீறி வந்து சேர்ந்தது.. வேலப்பனின் இந்த பட்டப்பெயர் ஊரெங்கும் பிரசித்தம் பெற்றது.. ஆலங்கனி என்ற பெயருக்கு பின் பெரிய கதையென்று கிடையாது.. சிறுவயதில் யாரும் உண்ணாத ஆலங்கனியை ருசித்து உண்டதால் இப்பெயர் என்று வேலப்பன் நினைத்து கொண்டிருக்க, உள்ளே மொத்தமாக புழுவாகி போன கனியின் பெயர் என்ற சிறுவிவேகம் கூட இல்லாது வெள்ளேந்தியாக வலம் வருகிறார்.. குரல் வந்த திசையில் பின்னங்கழுத்தினை சுருக்கி தேட, வாய்க்காலில் இருந்த பாதை மணலை பாதியின் குறுக்கே வெட்டி அடைத்து விட்டு எழுந்தார் குமார்.. அவரை கண்டதுமே புன்னகையை பூசி கொண்ட புவனேஷ்வரி, “என்ன மாமா..” என்றாள்..

இவ்விடத்தில் கேள்விகுறி தானே அடைப்புக்குறியாக வந்திருக்க வேண்டும்.. ஆனால் அவள் வாக்கியமாக தானே கேட்டாள்.. அதாவது ஒருவரை காணும் நொடியில் வழக்கமான ‘வணக்கம்’ என்ற மரியாதை இங்கு கொஞ்சமாய் ‘என்ன’ என்றதின் பின் உறவின் பெயரை கூறும் வழக்கமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.. “தினம் இந்த வழியா தான் போயிட்டு வந்துட்டு இருக்கியாக்கும்..” என்றவரின் கைகளில் இருந்த மண்வெட்டி தோளிற்கு இடம் மாறியிருந்தது..

“கிளாசுக்கு போறேன் மாமா..” என கூறிய புவனேஸ்வரியை நோக்கி பெருமூச்சிட்ட குமார், “உங்கப்பன் இருக்கானே.. பனை மரத்துக்கடியிலயே படுத்து கிடந்து கள்ளு குடிச்சு அழிச்சது பத்தாதுன்னு கடை கடையா ஏறி சாராயம் வேற குடிச்சிக்கிட்டு கெடக்கான்.. அவன ஒரு வார்த்த தட்டி வைக்கது..” என நொடித்து கொண்டார்..

“எங்க மாமா.. நான் சொல்லுதத காது குடுத்தே கேக்க மாட்டைக்காரே.. வேற என்னத்த சொல்லுதது.. எல்லாம் விதி.. வந்தது வந்துட்டு.. போறது போய் தொலையுதுன்னு கடவுள் மேல பாரத்தை போட்டுக்கிட்டு போவ வேண்டியது தான்.. இன்னும் எத்தனை நாளைக்கு அவிய ரெண்டு வேரு பாட்டையே படிச்சிக்கிட்டு கிடைக்கது.. நீங்களே சொல்லுங்க..” என வழக்கம் போல குடும்ப நிலையை எண்ணி வருந்தி கொண்டாள்..

“நீ சொல்லுத மாதிரியும் விட்டுற முடியாது.. சின்ன புள்ளைய பேச விட்டு வேடிக்கை பாக்க முடியுமா?? உனக்கு அடுத்து அவன்வ ரெண்டு வேரும் இருக்கான்வ.. அதையும் யோசி.. சும்மா இது மாதிரி பேசிக்கிட்டு அலையாத.. நல்லவேளையா உன் அம்ம வீட்டுல இருந்து பங்கு வரும் போது பெரியப்பன்மாருவளா சேந்து வந்த துட்டுல உனக்கு பீசையும் கட்டி ரெண்டு செட் யூனிபார்மும் வாங்கி போட்டானுவ.. இல்லன்னா அந்த துட்டையும் தூக்கிட்டு போய் அந்த சனியன் பிடிச்ச சாராயக்கடையிலலா போட்ருப்பான்.. நல்ல காரியம் பண்ணுத வயசு வந்ததுக்கு பெறவும் இப்பிடி கோட்டிக்காரேன் மாதிரி அலைஞ்சா நல்லா இருக்காது... என்னத்தயாவது சொல்லி வழிக்கு கொண்டு வரப்பாருங்க.. சரிப்பட்டு வரலைன்னா ஒரு பாட்டில் பூச்சி மருத்தை அந்த கருமத்துலயே கலக்கி குடுத்துருங்க.. போய் சேரட்டும்..” என அக்குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவராக எச்சரிக்க, “ம்ம்.. ச்சேரி.. மாமா.. நான் சொல்லுதேன்.. நீங்க மனசுக்குள்ள எதையும் போட்டு உளப்பாதிய..” என்று விட்டு கடந்தாள்..

குமார் கூறிய சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களே ஆகிறது.. அண்ணன்மார்கள் என்ற பெயரில் வேலப்பனுக்கு நன்மை செய்ததுண்டா என்பதெல்லாம் புவனேஸ்வரிக்கு நினைவில் இல்லை.. ஆனால் அவளுக்கு செய்த ஒரே நல்ல காரியமென எடுத்து கொண்டால் அது ஒன்றே.. கனியம்மாளின் பிறந்த வீட்டில் தாயும் தந்தையும் தவறிவிட, மீந்திருந்த சொத்துக்களை விற்று நான்கு தங்கைகளுக்கும் விட்டு போன நகை பாக்கிகளை நிறைவேற்றி கொடுத்தனர் நான்கு அண்ணன்களும்..

கனியம்மாள் பிறந்ததும் சரி புகுந்ததும் சரி வளமிக்க சிறப்பான இடமே.. “அவளுக்கு கூறு காணாது..” என்ற தங்கைகளின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாகவே அவளது குடும்பம் மாறி போனது.. தனக்கு துட்டு வரப்போகிறது என்பதை மை வைத்த வெத்திலையே இன்றி மோப்பம் பிடித்த வேலப்பன் மூக்கு முட்ட குடித்து விட்டே வந்து சேர்ந்தான்.. சரியாக நிற்க கூட தெம்பில்லாமல் லம்பி கொண்டிருந்த வேலப்பனை இரு ஊருமே வேடிக்கை பார்க்க, புவனேஷ்வரி தான் கூனி குறுகி போனாள்..

“இப்பிடி தள்ளமாடி போய் நிக்கானே.. இவனை நம்பி துட்டை குடுத்துட்டு போவவா?? குடுத்துட்டு செருப்பை மாட்டுததுக்கு முன்னால மொடா குடிகாரனால்ல வந்து நிப்பான்..” என்று ஒரு அண்ணன் பேச, “ஏண்ணே அவரு அப்பிடிலாம் இல்ல.. நீ ஒன்னு நினைச்சிக்காத..” என சமாதானம் பேச முயன்ற கனியம்மாளை ஒற்றை பார்வையில் அடக்கி விட்டார் மூத்தவர்..

“கோயிலுக்கு முன்னாடி உக்காந்துருக்கியருல்ல.. நீரே சொல்லும் நியாயத்தை.. ஒம்ம தம்பிய நம்பி குடுத்துட்டு போனா என் துட்டுக்கு என்ன கதி?? சொல்லும்ய்யா..” என இளையவர் அண்ணன்மார்களை நோக்கி வினவிட, “என்ட தந்து வையும்.. தேவைப்படுத நேரம் நான் குடுத்துக்குடுதேன்..” என்று எங்கே பெரியப்பா கூறிவிடுவாறோ என்ற பயம் பிள்ளைகள் மூவருக்குள்ளும் தோன்றியது..

அவ்வாறு மட்டும் நடந்தால் வாழ்க்கை முடிந்தது.. காலையிலேயே பவ்யமாக கைகட்டி நின்று அண்ணியிடம் பணத்தை பெற்று சென்று கடைவாசலில் காலி செய்துவிட்டு, அடுத்த நேரம் தேவைக்கு இல்லையென்றால் வீட்டில் வந்ததும் வராததுமாக, “எல்லாம் இந்த கெடுகாரியால வந்துது.. அந்த திருட்டு பயமொவன் பாட்டுக்கு என் கையில வச்சிட்டு நீ நல்லா இரு சாமின்னு காலை தொட்டு கும்பிட்டு போவான்.. இவா பாத்த வேலை அந்த நாரபய கையில குடுக்க வச்சிட்டா.. தினமும் அந்த ஈனப்பய வீட்டு வாசல்ல போய் நிக்க வேண்டியிருக்கு.. ஏளா, ஒழுங்கு மரியாதைக்கு போயி உன் நொண்ணன் கிட்ட இருந்து துட்டை வாங்கிட்டு வா.. இல்லன்னா நடக்காதே வேற.. யாரு எந்த நாரப்பயட்ட கைகட்டி நிக்கது.. யலெய்.. என் அப்பன்.. என் அப்பன் சாவும் போது என்னை தான் கூட வச்சிக்கிட்டான்.. அப்போ மத்துக்கும் எங்கலே போனியே ஈனப்பயலுவளா??” என உள்ளே சென்றிருக்கும் தைரியத்தில் மாவீரன் போல சொற்பொழிவாற்றும் வேலப்பன் மறுநாளும் அதே பவ்யகோலத்தில் சென்று நிற்கத்தான் போகிறார்..

ஒரு முறை கற்பனையிலேயே யோசித்த மூவருக்குமே பயம் முகத்தில் அப்பி நிற்க, அப்பொழுது வாயை திறந்து, “இவன்ட்ட குடுத்தோம்னா ஏமாந்து நிக்க போறது நாம தான்.. ந்தா நிக்கான் பாரு.. வயசு பிள்ளைய வச்சுட்டு மொடா குடி குடிக்கோமேன்னு ஒரு உறுத்தல் இருக்கா.. துட்டை தங்கமா மாத்துனாலும் இந்த புண்ணியவதி புருஷன் நல்லா இருக்கட்டும்னு தூக்கி குடுத்துப்புடுவா.. பேசாம பிள்ளைக்கு டீச்சர் ட்ரைனிங் பீஸ கெட்டிட்டு ரெண்டு செட் யூனிபார்ம் எடுத்து குடுங்க.. பொம்பள புள்ள படிச்சாவது அது காலத்தை அதுவே பாத்துக்கிடட்டும்.. இவன்ட்ட கிடந்து சீரழிததுக்கு படிச்சிட்டாவது போட்டுமே..” என தன்பாட்டிற்கு பேசிய பெரியப்பாவின் மீது ஒரு துளியாய் மரியாதை உருவாகியது..

இல்லையென்றால் அடிக்கடி மேரி வீட்டிற்கு சென்று ரவிக்கை இரவல் வாங்க வேண்டி வருமே.. வாழ்வில் பெரிதொரு மாற்றம் இல்லை என்றாலும் அந்த சங்கடமான நிலை இல்லையே என்ற நிம்மதியை கொள்ள முடிந்தது.. அந்த சம்பவத்திற்கு பின் ஏனோ புவனேஸ்வரியினுள் ஒரு தன்மானம் குடிகொண்டது.. மற்றவர்கள் குறை கூறும் அளவிற்கு வேலப்பன் ஒன்றும் கெட்டவர் இல்லை.. போதையை தாண்டி பேதை என்று வந்து விட்டால் அத்தனை ஒழுக்கம் அவரிடம்.. இல்லையென்றால் பெரியப்பாவிற்கு மேலத்தெரு அந்த ஆளுக்கும் இருக்கிறதை குறித்து அரசல் புரசலாக வதந்திகள் வெளிவருமா??

இவர்களுக்கு நடுவே படித்து முன்னேறி காட்டவேண்டும் என்ற வெறி மனதிற்குள் காட்டாற்று வெள்ளமாக பெருகி கொண்டிருக்க விபிசொக்கநாதர் மேல்நிலை பள்ளியை அடைந்து விட்டாள்.. பள்ளியில் தான் ஆசிரியப்பயிற்சி பட்டறையும் இயங்கி வருகிறது.. வேகமாக உள்ளே சென்று வகுப்பில் தனது உருளை காகிதங்களை அடுக்கி விட்டு, “ஜெயா, சாரு வந்துட்டாவளா??” என வினவினாள்..

“ம்ம்.. அப்போவே.. வரிசைக்கு போயிட்டு வந்து கிளாசுக்கு வருவாங்க..” என்று விட்டு நகர, பள்ளியில் வழக்கமான நடைபெறும் அணிவகுப்பில் சென்று நின்றாள்.. சற்று நடுநிலையான உயரம் கொண்ட புவனேஷ்வரி முன்னும் அல்லாது பின்னும் அல்லாது சரியான நடுவில் நின்றாள்.. அங்கிருந்து பார்க்கும் பொழுது மேடையில் நின்ற கனகசபை பூச்சாண்டி போல தெரிகிறார்..

நேற்று முழுவதும் அமர்ந்து மனப்பாடம் செய்த அனைத்து வார்த்தைகளும் அவரின் அழுத்தமான உதடுகள் முறைத்து விழிக்கும் பொழுது மறந்துவிடுமோ என்ற ஐயம் தோன்றி மறைகிறது.. அனைத்தையும் கற்றுவைத்திருக்கும் பொழுதும் அவர் வந்திருக்கிறார் எனும் பொழுது உள்ளுக்குள் உதறல் எடுப்பதை நிறுத்த இயலவில்லை.. இதோ அணிவகுப்பும் நிறைவுக்கு வர, மாணவர்கள் அணியணியாய் வகுப்பினை நோக்கி சென்றனர்..

முதல் பாடவேளையே அந்த எமகண்ட நேரம் புவனேஸ்வரிக்கு நேர்ந்து கொண்டிருந்தது.. ஒரு வகுப்பு ஆசிரியரின் மேற்ப்பார்வையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும்.. பெருவாரியாக அனைத்து இடங்களிலும் நடைபெறுவது தான்.. இதற்கு முன்னும் பல வகுப்புகளை கடந்து வந்தாலும் கனகசபை எனும் போது கொஞ்சம் பதட்டம் இருக்கத்தான் செய்கிறது..

கனகசபை பற்றி கூறவேண்டுமானால் பயந்து நடுங்கும் அளவிற்கு எந்த பூச்சாண்டியின் தோற்றத்தையும் கொண்டிருக்கவில்லை.. ஐம்பது வயதிற்கு உரித்தான இயல்பான தோற்றம் தான்.. ஆனாலும் மனம் திறந்து புகழ்ச்சியே வெளிவராத இறுக்கமான உதடுகளும் மாணாக்கருக்கு மன்னிப்பினை வழங்காத மணிவிழிகளும் அவருகென்று ஒரு கெத்தை சம்பாதித்து வருகிறது..

இன்று முதல் வேளையே அவரின் முன்னே சுட்டு போட்டாலும் வராத இங்கிலிபீஸில் பாடம் எடுக்க வேண்டும்.. எவ்வளவு கொடூரமான நேரமாக அமைந்து விட்டது.. நடுங்கும் கரங்களை விரித்து விரித்து சூடாக்கி கொண்டு வழிந்து கொண்டிருந்த சேலை தலைப்பினை சரியாக சொருகி கொண்டு நீண்ட பெருமூச்சோடு உள்நுழைந்தாள்..

எப்படியும் பத்து பதினைந்து பையன்மார்களே அமர்ந்திருப்பதால் நிச்சயம் மெல்லிய குரலாயினும் பாம்பு காதினை கடன் வாங்கிய கனகசபைக்கு கச்சிதமாக கெட்டுவிடும்.. இதை விட வேறேதும் தண்டனை வேண்டுமா?? பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அலட்டலேயின்றி கணிதத்தில் தொண்ணூற்றி ஆறு மதிப்பெண் பெற்றவள் ஆங்கிலத்தில் தட்டு தடுமாறி இம்மியளவு மதிபெண்ணில் தேர்ச்சி கரையை அடைவாளா??

இதோ, நேற்று இரவு முட்டி முட்டி மனனம் செய்த அனைத்தும் தலைகீழாய் நினைவிற்கு வருகிறது.. இறுதி வரிசையில் சென்று அமர்ந்து கொண்டவர் தொடங்குமாறு பணிக்க, கண்ணை மூடி கொண்டு நேற்று படித்த அனைத்தையும் கடகடவென பேச துவங்கினாள்.. முதலில் திக்குவாயை விட மோசமாக வார்த்தைகளை கடித்து துப்பி எப்படியோ நிறுத்தாமல் பேச பழகி கொண்டாள்..

“ஹப்பாடா.. தப்பிச்சோம்..” என்று மனதிற்குள்ளே நிம்மதி கொண்டவள், ஒரு நிமிட இடைவெளியில் மெத்தனமாக எண்ணிவிட்டாள் போலும்.. வழக்கம் போல முன்வரிசையில் அமர்ந்திருந்தவனை, “டஸ்டரை எடுத்து அழி தம்பி..” என்கவும் “இங்க்லீஷ்.. ம்ம்..” என கனகசபை உறுமவும் சரியாக இருந்தது.. மீண்டும் அதே பதட்டம் தொற்றி நடுக்கத்தினுள் நுழைத்தவள் அடுத்து என்னென்ன வார்த்தைகள் பயன்படுத்தினாள் என்பதெல்லாம் நினைவில் கடுகளவும் இல்லை..

“போநெட்டிக்ஸ் தெரியுமா??” என்றவரை பார்த்து புரியாமல் திருதிருவென விழித்தவளுக்கு கேள்வியே தெரியாத அளவிற்கு மனபிரமை பிடித்திருந்தது.. அப்பாவியான முகமும் அழ ஆயத்தம் கொண்ட கண்களும் அவருக்குள் கருணையை விதைத்தது போல.. “நான் நாலு வார்த்தை தாரேன்.. போநெட்டிக்ஸ் எழுதுதியா??” என தன்மையாக கேட்டார்..

குரல் எழும்பாது சிரம் மட்டும் சிறிதாய் அசைய, கரும்பலகையில் சுன்னக்கோல் வைத்து இரண்டு வார்த்தைகளை எழுதினர்.. அவள் என்ன செய்கிறாள் என்பதை வேடிக்கை பார்க்கும் பொருட்டு கைகட்டி ஓரம் நின்று வேடிக்கை காண, அவளுக்கோ காவ்களில் கம்பீரமாக வீற்றிருந்த பிரம்பின் மீது பயம் அப்பியிருந்தது.. விரல்களை மடக்கி ஏதேதோ பாவலா செய்து ஒருவழியாக முடித்து விட்டாள்.. போநெடிக்ஸ் என்பது ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்புகளை குறியீடாக எழுதுவது..

நகர்ந்து நின்றவளின் விழிகளோ அவரின் விழி அசைவை அனுமானித்து கொண்டிருக்க, அனிச்சையாக கனகசபையின் அதரங்கள் வளைந்து விரிந்தது.. எதுவுமே கூறாமல் வகுப்பை விட்டு வெளியேற, அவரிடம் இருந்து தப்பித்தோம் என்று சந்தோசப்பட்டு கொள்வதா?? தனது செயல்பாடான போநெடிக்ஸின் பதில் பற்றி கூறாமல் செல்கிறாரே.. அது தனது மதிப்பெண்ணை தீர்மானிக்குமா?? என குழம்புவதா?? என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்து கொண்டிருந்தாள்..

காலை வகுப்புகள் முழுவதும் இதே குழப்பம் மண்டையை கீறி கொண்டிருக்க, மதிய வேலையில் சம்படம் கழுவ செல்லும் பொழுது பிடிபட்டாள்.. பள்ளியின் ஒரே குடிநீர் தொட்டி அலுவலகம் அருகே இருக்க, குழாயில் தண்ணீரை திறந்து இரண்டு கைகளால் அணைகட்டி அதில் வாய்வைத்து குடித்து கொண்டிருந்தவள் பின்னாலிருந்து வந்த சத்தத்தில் திடுக்கிட்டாள்.. கையெழுத்திட வந்த கனகசபையின் குரலை கண்டுகொண்ட புவனேஷ்வரி முதல் வேலையாக அங்கிருந்து தப்பிப்பதற்காக கைகளை சேலையில் துடைத்து வாயில் வழிந்து கொண்டிருந்த தண்ணீர் தலைப்பால் துடைக்கப்பட்டது..

“திரும்பி பாக்காம ஓடிரு புவா..” என தனக்குள்ளே ஓட்ட வீராங்கனையை தயார்ப்படுத்த, அவரோ இவளை கண்டுகொண்டார்.. “புவனேஷ்வரி..” என்ற அவரின் கம்பீரமான குரலில் திகைத்து மெல்ல மரியாதையோடு கலந்த பயத்தில் “சார்..” என்றாள் கம்மிய குரலில்.. “இங்க வாங்க..” என அழைக்க, கைகளில் பரவிய நடுக்கத்தினை தீர்க்கும் வழியறியாது முன்னேறினாள்..

“காலையில போட்ட நாலு வார்த்தையில மொத ரெண்டுக்கு சரிதான்.. மிச்ச ரெண்டுக்கு எனக்கு சந்தேகமாவே இருந்துது.. ஆபீசுல வந்து பாத்தேன்.. அதுவும் சரி தான்.. எனக்கே ரெண்டு சந்தேகமா இருக்கும் போது நாலையும் சரியா போட்டுட்டீயே.. யாருட்ட போநெடிக்ஸ் படிச்ச??” என வினவ, பதட்டம் குறைந்தபாடில்லை..

“ராஜரத்தினம் வாத்தியார்ட்ட சார்..” என மெல்லிய குரலில் கூற, “எங்க??” என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டார்.. “எங்கூருக்கு ரெண்டு ஊரு தண்டு சார்.. மலையனூருக்கு வடக்கோடி இருக்கு சார்..” என விளாவரியாக கூற “ம்ம்.. இதே மாதிரி தினமும் ரெண்டு வார்த்தை பேசி பழகு.. திக்காம பேசலாம்..” என்று விட்டு மறைந்தார்.. ம்க்கும்.. பாகற்காய் உடலுக்கு நல்லது என்பதற்காக தினம் மூன்று வேலை சோற்றிலும் குழைத்து உண்ண முடியுமா?? புவேஸ்வரியின் ஆங்கில அறிவின் சபதமெல்லாம் அறைநாள் கூட தாக்குபிடிக்காது.. அன்று மாலை அறிவியல் வகுப்பிற்காக டீச்சரை அழைக்க ஆசிரியர் அறைக்கு செல்ல, கனகசபையும் அங்கு வீற்றிருக்கிறார்..

சங்கடத்துடன் நுழைந்தவள், “டீச்சர், கிளாஸ் எடுக்கணும்..” என புவனேஷ்வரி நினைவுப்படுத்த, “ச்சேரி.. நீ போ.. நா வாரேன்..” என்கவும் அங்கிருந்து நகர்ந்தாள்.. “இந்தம்மா கிளாசுக்கு எல்லாம் போவேணாம்.. கட்டன் ரைட்டா எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சு தெளிவா எடுத்துப்புடுது..” என்ற கனகசபையில் வார்த்தைகள் வாசல் கதவினை கூட தாண்டாத புவனேஸ்வரியின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது..

உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கி வர, மிகுந்த சந்தோசத்தோடு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தவள் சற்று இருட்டியதையும் சுற்றுசூழலையும் கவனிக்க மறந்திருந்தாள்.. பள்ளிக்கு செல்லும் வழி வேறு.. திரும்பி வரும் வழி வேறு.. பகலில் சற்று தூரம் என்றாலும் சாலை வழி நடந்து விடுவாள்.. மாலையில் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்பதால் மற்றொரு காட்டுபகுதியே எளிது..

அவளிருந்த ஆனந்தத்தில் கால்கள் தரையில் ஒன்று விட்டு ஒன்றாக தாளமிட்டு கொண்டிருக்க துள்ளல் போட்டு நடந்தாள்.. முதுகு பகுதியில் ஏதோ ஒரு அரவம்.. சட்டென திரும்பி பார்த்து விட, மனிதனாக இருந்தால் கூட பரவாயில்லை.. கொள்ளிவாய் பிசாசு நின்றுவிட்டால்?? அப்பகுதியில் அநியாயமாக உயிரை விட்டவர்கள் ஆசை அடங்காமல் ஆவியாக உலா வருகிறார் என்ற கட்டுக்கதை வேறு கருமம் புடித்த நேரத்திற்கு நினைவிற்கு வந்து தொலைந்தது..

காடு என்றால் முல்லை திணை வகையை சார்ந்ததல்ல.. மருத வகையை சார்ந்தது.. முதலில் அண்டிமாம்பழ தோட்டம் சற்று உயர்ந்து புதர் புதராக வளர்ந்து நிற்கும் மரத்தினுள் எவர் ஒளிந்து கொண்டாலும் வெளியே தெரிவதில்லை.. அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வேலைகளுக்கு செல்பவர்கள் தங்களின் உடைமைகளை பாதுகாத்து கொள்ள இவ்விடங்களை பயன்படுத்தி வருகின்றனர்..

அடுத்ததாக பிச்சிமூடு.. அக்காட்டில் சிறிய அளவில் தலை வெளியே தெரியும் நிலை.. அடுத்ததாக முழுவதுமே கிராமம்.. அங்கு சென்று விட்டால் அத்தைக்காரி வீட்டில் கூட தங்கி கொள்ளலாம்.. மனதில் இருந்த அனைத்து பயங்களையும் ஒருங்கிணைத்து நெஞ்சாகூட்டிற்குள் அடைத்து புத்தகப்பை கொண்டு அணைத்து நடந்தாள்.. தடிமனான கால்களும் அழுத்தமான பாதசுவட்டின் தட் தட்டென்ற ஒலியுமே கள்வன் என்பதை கணிக்க செய்தது..

அவ்வளவு தான்!! இத்தோடு முடிகிறது.. கழுத்தில் கிடக்கும் சொச்ச கிராம் கொண்ட சங்கிலியை அறுத்து கழுத்தையும் கரகரவென அறுத்து இதே தோட்டத்தில் வெட்டி புதைத்து விட்டு செல்வானே.. இனி அம்மைக்கு யார் பீடி உருட்டி கொடுப்பது?? அப்பாவிற்கு யார் சோறு போட்டு கொடுப்பது?? ராகவேந்திரனுக்கு பஞ்சர் ஓட்ட நாலணா யார் கொடுப்பது?? மகேசனிடம் பேசாமலேயே உயிரை விடுவதா?? இந்த கேள்விக்கெல்லாம் பதிலாக அவளின் கால்கள் ஓட்டத்தினை துவங்கியிருந்தது..

எத்தனை தூரம் அவனை ஏய்த்து விட்டு தப்பிப்பது?? பாதுகாப்பான இடத்தினை அடைவதே உசிதம் என்ற முடிவிற்கு வந்தவள் பிச்சி கொடியினை காணும் வரை காலில் குத்திய எந்த கல்லையும் பொருட்படுத்தவில்லை.. பிச்சி மூடும் பாதியளவு பாதங்கங்கள் கொண்டது தானே.. “இவ்ளோ தூரம் ஓடியாந்துட்டோம்.. இன்னும் கொஞ்ச தூரம் தான்.. புவா.. உயிரை காப்பாத்திரு..” என மூளை கட்டளையிட, ஓட்டத்தினை நிறுத்தினாளில்லை..

பிச்சி மூடுகளுக்கு பக்கவாட்டில் உரிமையாளர்கள் பாத்தி கட்டி அன்றைய நாளுக்கான வருமானத்தை வரிசைப்படுத்தி கொண்டிருக்க, நம்பிக்கை கொள்ளவோ புகார் அளிக்கவோ மனதில் எண்ணம் தோன்றாமல் ஓடி கொண்டு தானிருக்கிறாள்.. பராசக்தி சிவாஜி போல ஓடுகிறாள் ஓடுகிறாள் ஓடிகொண்டே இருக்கிறாள் என்ற வசனத்தை இக்காட்சியில் நுழைத்தால் தகும்..

சாலையில் ஏறிவிட்டாள் தான்.. எங்கே மேலேறி வந்தும் எவரும் காணும் முன் வாய் பொத்தி இழுத்து சென்று விடுவானோ என்பது போலான கற்பனை குதிரை கபாலத்தினுள் தறிகெட்டு ஓடுகிறது.. பின்னாலும் முன்னாலுமாக கழுத்தை திருப்பி நடந்து வந்தவள், ஒரு மிதிவண்டியின் மீது மோத நேர்ந்தது.. நல்ல வேளையாக எதிரில் வந்தவர் மிதிவண்டியை ஒட்டாமல் உருட்டி கொண்டு வந்தார்.. இல்லையென்றால் பயம் என்ற அரக்கனே இவளை வென்றிருப்பான்..

ஓட்டமும் நடையுமாய் அதர பதற ஓடிவந்ததிற்கு அறிகுறியாக கண்கள் நிரம்ப கலக்கமும் நெற்றி நிறைய நிணநீரும் சுரந்திருக்க, காணும் எவருக்காக இருப்பினும் “ச்சே.. பாவம் புள்ள..” என உச்சுக்கொட்ட தோன்றும்.. “நீ யாரும்மா??” என கேட்டவரின் உருவமும் அவளை பயமுறுத்தி பார்க்க, “ப்.. பு.. ப்.. பு..” என வார்த்தை வெளிவர சிரமப்பட்டு கொண்டிருந்தது..

“யாருல அங்க?? தண்ணி கோதியா..” என ஆணையிட, ஒருவன் பவ்யமாக தண்ணீரினை செம்பில் கோதி வந்தான்.. அவளுக்கு குடிக்க கொடுக்க, மெல்ல மெல்ல தொண்டையினுள் இறக்கியவள் சற்று நிதானத்திற்கு வந்தாள்.. “யாரும்மா?? இந்த சாயங்கால நேரத்துல களவாணி பயலுவ சுத்துத காட்டுக்குள்ள நீ என்னயுத??” என்றவரின் குரலில் கம்பீரம் நீங்குவதாக இல்லை.. “வாத்தியாரே பிள்ள உங்களை பாத்து பயந்துற போவுது.. இங்கனகுள்ள நகருங்க..” என அருகில் இருந்த டீக்கடை பாத்தியப்பட்ட முனுசாமி கூறிட சற்றே நகர்ந்தார்..

“ஏம்மா, எங்கேருந்து வாரீக.. என்ன ஆச்சு??” என ஆத்மார்த்தமாக வினவ, நடந்த அனைத்தையும் நடுநடுவே குறுக்கிட்ட விக்கல்களுக்கு மத்தியில் கூறி முடித்தாள்.. “சாயங்காலம் ஆயி போச்சு.. நீ சொல்லுத ஊருக்கு போறது இப்போதைக்கு முடியாது.. இங்கன யாராவது தெரியுமா.. சொந்தகாரவிய சொக்கரவியன்னு இருக்காகளா??” என பாந்தமாய் விசாரிக்க, அத்தையின் வீட்டை குறிப்பிட்டாள்..

“அட நம்ம அருள் வாத்தியாரு..” என அருகில் இருந்தவரோ முகவாயில் விரல் வைக்க, “நான் கொண்டுவுடுதேன்..” என எழுந்து கொண்டார் அவர்.. மீண்டும் அவளுக்குள் நடுக்கம் தோன்ற, “பயப்படாத தாயீ.. உங்க அண்ணாச்சியும் வாத்தியாரும் ஒண்ணா தான் வேலை பாக்காவ.. நம்பி போம்மா..” என தைரியம் கூறினார்.. அதன் பின்னும் இருவருக்கும் இடையே ஒரு அடி இடைவெளியோடு நடக்க, சந்து பொந்தெல்லாம் நுழைந்து போக வேண்டியிருந்தது..

“இந்த ராத்திரிக்குள்ள பொம்பள பிள்ளைய தனியா விட்டு வேடிக்கை பாக்கானோ உங்க அப்பன்.. ஒரு கூறு வேண்டாமா?? இவ்ளோ நேரம் ஆவுது.. போய் தேடணும்னு விவஸ்தையோட இருக்கானா?? வீட்டுக்கு போனதும் நான் வையுதேன்னே சொல்லி குடு.. தனியா விட்டுட்டு வீட்ல உக்காந்து செரைக்க வேலை பாக்காராக்கும்..” என சரமாரியான திட்டுகள் கொடுத்தாலும் காப்பாற்றியவரே என்ற முறையில் அமைதி காத்து நடந்தாள்..

சற்று நேரத்தில் அத்தையின் வீட்டை அடைந்துவிட, வாசலில் அமர்ந்து உரலில் மாவாட்டி கொண்டிருந்த அத்தையை ஒட்டிகொண்டாள் புவனேஷ்வரி.. வந்தவர் அண்ணியின் கணவரிடம் விவரம் அனைத்தையும் கூறிவிட்டு கிளம்ப, அத்தை காது கூசும் அளவிற்கு அண்ணனை விளாசி எடுத்தார்.. ஏற்கனவே பதட்டத்திலும் பயத்திலும் உறைந்திருந்தவளால் தெரிந்தவர்களின் கதகதப்பில் சற்று நிம்மதியாக கண்ணயர முடிந்தது..

மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்து நடையை கட்டியவள், காலையில் வீட்டை அடைந்தாள்.. அவள் வரும் முன்னரே பொருட்கள் சில முற்றத்தில் சிதறி கிடக்க, கனியம்மாள் ஒரு ஓரமாக தலையில் கைவைத்து கவலையே உருவாக அமர்ந்திருந்தார்.. பக்கத்திலோ ராகவேந்திரன் தாயிற்கு ஆறுதலாக அமர்ந்திருந்தான்..
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-4

நேற்று இரவு என்ன நிகழ்ந்திருக்கும் என்று யூகித்தவளாக கனியம்மாளின் அருகே ஆதரவாக அமர்ந்தாள்.. “என்னாச்சு??” என ராகவேந்திரனிடம் பார்வையாலே வினவிட, “எப்பயும் போலத்தான்..” என்றவனின் தோள்கள் சலிப்பாக கீழிறங்கியது.. “தோ வாரேன்..” என்று விட்டு கைகளோடு பிணைந்திருந்த புத்தகப்பையை மிதிவண்டியின் பின்னால் இருந்த கம்பிகளில் வைத்துவிட்டு, வீறு நடையிட்டு நடந்தாள் தெற்கு நோக்கி..

அவள் சென்றதும் கண்களில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்து மூக்கை உறிஞ்சிய கனியம்மாள், “எல்லாத்தையும் எடுத்து வையுலே..” எனக் கூற, “ஆன், போ.. வேற வேலை சோலி இல்லாம அலையுதேன்.. ஒதுங்க வச்சு போடுததுக்கு.. யார் எடுத்து போட்டாவளோ அவியளே வந்து அடுக்கட்டும்..” என திருப்பி கொண்டான் ராகவன்..

“ம்ஹும்.. பேசுவலே.. பேசுவ.. ஏம் பேச மாட்ட.. அந்த மனுஷன் வந்து எல்லாத்தையும் இழுத்து போட்டு உடைக்கும் போது எனக்கென்னன்னு வேடிக்க தான பாத்த.. ஒவ்வொரு வீட்டயும் பாரு.. தாயை தவப்பன் அடிச்சா ஆம்பள பையன் என்னன்னு பிடிச்சு கேக்கான்.. இந்த வீட்ல அப்பிடியா நடக்கு.. பொம்பள பிள்ள நியாயம் கேக்க போயிருக்கா..” என வழக்கம் போல புலம்பலைத் தொடங்க, ஓரமாய் கிடந்த சருவச்சட்டியை எட்டித் தள்ளிவிட்டு, கோபமாக அங்கிருந்து வெளியேறினான்..

நெஞ்சம் முழுக்க எரிந்த கோபத்தனலை அணைக்கும் விதமாக கண்களில் நீர் கட்டி நிற்க, எவரும் காணும் முன்னரே அழுகையை நீர்த்துப் போக செய்தாள்.. ஊரின் தெற்கு பகுதிக்கு வந்து சேர்ந்தாயிற்று.. பச்சை பசேலென்று பயிர்களை காணவேண்டும் என்று தான் ஆசை.. ஆனால் ஆங்காங்கே முளைத்திருந்த வேப்பமரமே தண்மையை துளிர்க்கச் செய்தது.. இரண்டு மாதங்களுக்கு முன் விழுந்த கோடை மழையில் வழியெங்கும் புல்லும் முள்ளுமாக வளர்ந்து பாதி ஆளை மூழ்கச் செய்தது..

வேகமாக சென்றவளை விஷமமாக வழி மறித்தது நீர்முள்.. பச்சை நிறம் தண்டிலும் காம்பிலும் காபி நிறத்தினை ஆக்கிரமிக்க முயற்சிகள் எடுக்க, அரிசி அரிசியாய் இலைகள் துளிர்த்திருக்க, தளிர் முல்லையின் தாவணியை தாபத்துடன் தழுவியது வெள்ளை நிற முட்கள்.. ‘காக்கா முள்’ என கேள்வியுற்ற தாவரத்தின் தண்டினை கவனமாக பின்னிழுத்து கொழுவியிருந்த முள்ளினை வந்த திசையிலேயே பின்னே நகர்த்தி விடுவித்து கொண்டாள் தன்னை..

ஏதோ எண்ணம் கொண்டவளாக இரண்டு முள்ளினை பறித்து பாதுகாப்பாக, வளர்ந்து நின்ற பூவரசமரத்தின் இலைகளில் குத்தி எடுத்து கொண்டாள்.. மஞ்சளும் அல்லாது வெள்ளையும் அல்லாது இரண்டையும் குழைத்து எடுத்த நிறத்தில் கட்டாந்தரையாக காட்சி தந்த, தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலப்பரப்பில் கால்களைப் பதித்தாள்.. தனக்கு சொந்தம் என்றதுமே ஒரு உரிமை வந்து குடிகொள்ள சற்று அழுத்தமாகவே நடந்து கொண்டிருக்க, “யோ.. தாயோவ்..” என்ற குரல் வானில் இருந்து குதித்தது..

கண்களை மேல்நோக்கி ஏறெடுத்தவள், காய்ந்து போன புற்களுக்கு இடைவெளி விட்டு தொடர்ச்சியாக அணிவகுப்பு நடத்தி கொண்டிருந்த பனைமரத்தின் அடியில் நின்றிருந்தாள்.. பனையில் மேற்பரப்பில், கலயத்தை கழற்றிக் கொண்டிருந்த சுப்பன், “தாயோவ் எங்க போறீயரு??” என்றான்.. சுப்பன் காலங்காலமாக அவர்களின் குடும்பத்திற்கு வயல்வேலைகளுக்கு வருபவன்.. சில சமுதாய ஏற்ற இறக்கத்தின் காரணமாக அவர் இவர் என அழைக்கும் வழக்கமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது..

“ஆன், சுப்பா..” என புருவம் சுருக்கி கைகளை நெற்றியில் அணைக்கு வைத்து நோக்க, “உம்ம அப்பார பாக்க வந்தியராக்கும்..” என அவனே கேள்வியை எழுப்பிக் கொண்டே சுண்ணாம்பு கறை பூசப்பட்டு கொச்ச கயிறினால் தாங்கப்பட்ட சிறு பானையை (கலயம்) இடுப்பில் சொருகியிருந்த அரிவாளின் கைப்பிடியில் தொங்கவிட்டு மெல்ல இறங்கினான் சுப்பன்.. “ம்ம்ஹும்..” என்ற பெருமூச்சிரைப்போடு கீழிறங்கியவனின் மேலுடம்பானது ஆடையின்றி காட்சி தர, முகத்திலோ ஒரு மாதமாக வழிக்கப்படாத மீசையும் தாடியுமாய் மறைத்திருந்தது.. தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்து தோள்களில் இட்டு நெஞ்சை மறைத்து விட்டவன், சாரத்தின் கீழும் தெரியும் கால்சட்டையில் இருந்த பீடிக்கட்டை எடுத்து பற்றவைத்தான்..

அந்த புகையில் முகத்தை சுருக்கிய புவனேஸ்வரியை பொருட்படுத்தாமல், மூக்கின் வழி வெளிவந்த புகையை அனுபவித்து கொண்டிருந்தான்.. “எங்க அப்பா எங்க??” என்றவளின் குரலில் ஏகத்திற்கும் எரிச்சல் மண்டியது.. “அந்தா கிணத்தடியில இருக்காப்டி.. பைனி குடிக்கியளா??” என விசாரிக்க, கலயத்தை எட்டிப்பார்த்தாள்.. சலிக்காது உடனடி பதனியாக இருக்க, “ச்சேரி.. ஊத்தி தா..” என்றவளுக்கு பனை ஓலையை வெட்டி, விரிவு பக்கத்தினை மடித்து கட்டி நடுவே இருந்த பக்கத்தினை குழியாக்கி ஊற்றினான்..

“ச்சேரி.. நான் வாரேன்..” என அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவளிடம், “திரும்ப வருவியல்லா?? அப்பிடி வந்தீயன்னா அந்தா இருக்கேருங்க அந்த வடலில கலயத்தை கெட்டி வச்சிட்டு போறேன்.. பாத்து எடுத்து வச்சிருவியளா?? சாயந்தரம் வரணும்..” என்று விட்டு சென்றான் சுப்பன்.. அவன் கூறிய திசையிலேயே நடந்து செல்ல கிணற்றின் சுவரருகே சாய்ந்து அமர்ந்திருந்தார் வேலப்பன்..

புவனேஷ்வரியின் கூந்தலின் அளவைக் குறைத்து மூக்கின் கீழே மீசையை வரைந்து நிறத்தை கொஞ்சமாய் குறைத்தால் வேலப்பன் கிடைத்து விடுவார்.. மற்றொரு வழியில் கூறினால் மகேசனின் வயதான தோற்றம் எனலாம்.. “ப்போ.. ப்போ..” என வரும் முன்னே ஏலமிட்டு வந்த மகளின் குரலைக் கேட்டதும் வளைந்திருந்த குறுக்கை நிமிர்த்தி கொண்டு சாரத்தை கீழே இழுத்து விட்டார்..

“ம்மா புவனா.. என்ன இங்க வந்த??” என்றவரின் குரலில் அப்படியொரு தெய்வீக உணர்வு.. ஆனால் இதை எல்லாம் உணரும் நிலையில் எதிர்புறம் நிற்பவள் இருக்கவேண்டுமே.. இல்லையே.. “ப்போ.. என்ன நினைச்சிட்டு இருக்கிய?? வீட்டுல என்னத்துக்கு சண்டை போட்டுட்டு வந்திய?? சுத்தி இருக்கவா என்ன சொல்லுவா.. கொஞ்சமாச்சும் உணரு இருக்கா இல்லயா?? எத்தனவாட்டி சொல்லுதது.. கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு.. கேக்கியளா?? புருசனும் பொண்டாட்டியும் சண்டை போட்டு மல்லு ஏறி ஊர்ல அசிங்கப்படுத்தனும்னே அலையுதியளோ..” என எகிற, “இல்லம்மா.. உங்க அம்ம தான் ஏறுக்குமாறா பேசுதா..” என சாந்தமாக கூறினார் வேலப்பன்..

“சும்மா சும்மா அவியளயே பேசாதீய.. நீங்க சரியா இருக்கியளா?? அன்னாடு குடிச்சிட்டு வந்து வீட்ல பொண்டாட்டிட்டையும் பிள்ளட்டையும் சண்டை போடுதது நல்லாவா இருக்கு.. நீங்களே செத்தேன் யோசிச்சு பாருங்க.. ஒவ்வொருத்தியும் ஊருக்குள்ள என்ன சொல்லுவா.. ஊர விடுங்க.. உங்க கூட பொறந்த எவனாவது சொல்லுதானா?? சொல்ல மாட்டான்.. நம்ம வீடு சீரழிஞ்சா அவனுக்கு என்ன?? ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்ன மாதிரி நீங்க ரெண்டு வேரும் சண்டை போட்டு திரியுறத சாக்கா வச்சிட்டு சின்ன கழுத ஊர சுத்திட்டு அலையுதான்.. வீட்டுல இருக்க கொஞ்ச நஞ்ச பாத்திரத்தையும் வெளிய எடுத்து வீசிட்டா நாளைக்கு நாக்கை சுழட்டி சுழட்டி திங்கதுக்கு யாரு வந்து பானை தருவா.. எப்பா.. கொஞ்சமாச்சும் என் பேச்சை கேளுங்க.. இந்த குடி கிடி எல்லாம் வேணாம்.. வுடுங்க.. நம்மட்ட என்ன இல்ல?? எல்லாத்துக்கும் எல்லாம் இருக்கு.. ஊர்ல எவன் உம்ம மொவள விட பெரியவனா இருக்கான்.. புரிஞ்சு சூதுவாதா இருக்கதுகில்ல.. நேத்து ராத்திரி வெளிய போன பொம்பள புள்ள வீடு வந்து சேரலியேன்னு கொஞ்சமாச்சும் உணரு வந்துச்சா.. உங்களுக்கு என்ன?? குடிக்கதுக்கு சாராயம் இருக்கு.. அடிக்கதுக்கு பொண்டாட்டி இருக்கா.. எங்களை பத்தி எல்லாம் கொஞ்சமாச்சு உணரு இருந்தா இப்பிடி குடிச்சிட்டு வந்து சண்டை போட தோணுமா?? எதுக்குப்பா நீங்க மட்டும் இப்பிடி இருக்கிய..” என படபடவென பொரிந்து தள்ளிய புவனேஷ்வரியையும் அறியாமல் கண்ணீர் தாரை தாரையாய் வடிந்து கொண்டிருந்தது..

தோளுக்கு மேல் வளர்ந்த ஆண்பிள்ளையை அடிக்க கூடாது என்றால் பெயர் பெற்ற பெண்பிள்ளையின் மனதை பதைபதைக்க வைக்க கூடாது என்பதில் உறுதியாய் நின்ற வேலப்பனை புவனேஸ்வரியின் கண்ணீர் அசைத்து பார்த்தது.. எதுவும் பேசாமல் மௌனமாய் கால்விரல்களை வெறித்துக் கொண்டிருந்த வேலப்பனின் கண்களில் வலி பரவிக் கொண்டிருந்தது.. ஒரு கோபத்தில் கொட்டித் தீர்த்த வார்த்தைகள் தந்தையை தாக்கி விட்டதே என்ற வருத்தம் குடிகொண்டாலும் தாக்கினாலும் சரி தகர்த்து விட்டாலும் சரி திருந்தினால் போதும் என்ற மனஇறுக்கத்தில் பல்லைக் கடித்து கொண்டு நின்றாள்..

சில மணித்துளிகளுக்குப் பின், “என்னாச்சு ம்மா.. ஏன் நேத்து வீட்டுக்கு வரல??” என்ற வேலப்பனின் அக்கறையில் அமிழ்ந்து போன புவனேஷ்வரி அருகே அமர்ந்து, “ப்ச்.. ஸ்கூலுல வேலை.. வரும் போது இருட்டிட்டு.. அதுனால அத்த வீட்டுல நின்னுட்டு வந்தேன்..” என்றாள்.. ஒருநாள் இரவு வரவில்லை என்றதும் சந்தேகம் கொண்டு கத்திவிட வேலப்பன் சராசரி தந்தை இல்லை... தன்மீது கொண்டதை விட ஆயிரம் மடங்கு அதிகமான நம்பிக்கையும் உறுதியும் மகளின் மீது கொண்டவர்..

“இதுல உக்காரு.. நான் தண்ணிய பாய்ச்சிட்டு வாரேன்.. அதுவரைக்கும் இந்த நொங்கை சாப்புடு.. அதென்ன?? பைனியா??” என விசாரிக்க, “ம்ம்.. சுப்பன் தந்தான்.. போவும்போது வடலில கிடக்க கலயத்தையும் அருவாளையும் எடுத்து வைக்கணுமாம்..” என்றவள் அங்கிருந்த நுங்கு கண்களை துளையிட்டு உண்ண தொடங்கினாள்.. கொண்டு வந்த பதநீரினுள் நுங்கினைக் கொட்டி அவளுக்கே உரித்தான பாவனையில் கரைத்து ஒரு மடக்கில் குடித்துவிட்டாள்.

வாயோரமாக வழிந்து கொண்டிருந்ததை கைகளால் துடைத்து எழுந்தாள்.. “யப்போ.. நான் போறேன்.. நீங்க வாங்க.. எனக்கு நேரமாச்சு...” என்று விட்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள்.. வீட்டிற்கு வரும் பொழுது முற்றம் படுசுத்தமாக பெருக்கப்பட்டு, திண்ணையில் பாத்திரங்கள் மினுமினுப்பாய் அடுக்கப்பட்டிருந்தது.. கனியம்மாளை பாத்திரம் கழுவுவதில் மட்டும் எவராலும் அடித்துக்கொள்ள முடியாது.. வாசலில் வடக்குவீட்டுக்காரி நின்று பரிதாபமான பார்வையை வீசிக் கொண்டிருக்க, அப்படி ஒரு கர்வமான பார்வையை எதிர்த்து வீசினாள் புவனேஷ்வரி..

“வீடு கெடக்க கெடப்புக்கு இந்த கெத்தலான பார்வை ஒன்னு தான் குறைச்ச..” என மனதிற்குள்ளே பொருமிக்கொள்ள, விழிவழி மொழி பெயர்த்தாலும் சாக்கடையில் கல்லெறிந்தால் நமக்கும் தானே ஆபத்து என்பது போலே உள்ளே புகுந்து கொண்டாள்.. மணக்க மணக்க சாம்பார் அடுப்பில் கொதித்து கொண்டிருக்க, கனியம்மாள் ஜன்னல் வழியே அடுத்த தெருவில் நடந்து சென்ற ஒருவரிடம் கடனாக நூறு தூள் பீடி கேட்டுக்கொண்டிருந்தார்.. நேற்று வராத புவனேஸ்வரியால் அந்த நூறுகிராம் புகையிலைத் தூள் நட்டமாகியிருந்தது.. இன்று அதனை எப்படியாவது சமன் செய்துவிட வேண்டும் என்ற உறுதியோடு குளிக்க ச் சென்றாள்..

குளித்து முடித்த கையோடு வேகவேகமாக கிளம்பிக் கொண்டிருக்க, கண்ணாடியை மறைத்துக் கொண்டு வந்து நின்றது மகேசனின் கரம்.. அவன் மீது கோபமும் கடுமையும் வந்து நிற்கிறது.. ஆனால் காரணம் தான் தெரியவில்லை.. பெரும்பாலான சண்டைகளில் அவளுக்கு காரணங்கள் கவனத்தில் நிற்பதில்லை.. கோபம் மட்டும் தொக்கி நிற்கிறது.. உடும்பு பிடிவாதம் மின்னிட, அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.. அவள் உட்கார்ந்தால் அமருகிறான்.. நடந்தால் முன்வந்து நிற்கிறான்.. அடுப்பறை சென்றால் தண்ணீர் குடிப்பது போல பாவ்லா செய்கிறான்..

சரி தான்.. கழுதை ஊரெல்லாம் அலைந்து தேய்ந்து வந்துள்ளது என்பதை அறிந்து கொண்டவளின் இதழோரம் மெல்லிய நகை பிறக்க, அவனறியும் முன்னரே கடுமையாக மாற்றிக் கொண்டாள்.. தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவிவிட்ட சோகத்தில் தலையைத் தொங்க போட்டு வெளியே நகர, அவனது முன் வந்து நின்றது புவனாவின் கரங்கள் புளிப்பு மிட்டாயுடன்.. “என்ன பாக்க?? தின்னு.. உனக்குன்னு தான் வாங்கிட்டு வந்தேன்.. அவென் தரமாட்டான்னு தெரியும்..” என்றாள்..

“நான் இனி பழைய சைக்கிலேயே ஒட்டிகிடுதேன்.. நானா உழைச்சு புதுசு வாங்குதது வரைக்கும் அதையே எடுத்துகிடுதேன்..” என கவிழ்ந்த தலைக்கு சொந்தக்காரனான மகேசன் விட்டால் அழுது விடுவான் போல.. “ஏலே.. அதுக்கு நான் என்னமாச்சும் சொன்னேனா?? சைக்கிள வித்ததுக்கு எனட்ட கேட்டிருந்தா துட்டாவது தந்திருப்பேன்.. குறைஞ்ச விலைக்கி ஏமாந்துட்டு வந்து நிக்க.. அப்பாவ மாதிரியே நீயும் செஞ்சதும் கோவம் வந்துட்டு.. அந்தால வீட்டுக்கு வராம வெளியே கிடந்தது காய்வியோலே..” என தோள்களை தட்டிடவும் முடிந்தது.. அக்காவிற்கும் தம்பிக்குமான ரோசமான சண்டை..

“ம்க்கும்.. பேசியாச்சாக்கும்.. நேத்து ராத்திரியில இருந்தே உருளுதானம்மா என்னத்துக்குன்னு தெரியாம நானும் மண்டைய போட்டு பிச்சுகிட்டு கிடக்கேன்.. இதுக்கு தானாக்கும்.. குட்டி போட்ட பூன மாதிரி பின்னாடியே சுத்துனதுக்கு அன்னைக்கு அந்த பய கேக்கும் போது இல்லைன்னுட்டு வந்துருக்கலாம்லாலே.. இன்னைக்கு இந்த ரோசக்காரிட்ட இப்பிடி மழுங்கி போவாட்டா தான் என்ன??” என அங்கே வந்த கனியம்மாள் கேட்டிட, அவரைத் தொடர்ந்து வந்த ராகவனை கண்டதும் தன்மான பிரச்சினை போல அங்கிருந்து ஓடினான்..

“ஏம்ம.. அவன் நிக்கும் போதே தான் உன் போதனைய எல்லாம் சொல்லணுமா?? வீடு வரைக்கு வந்தவனுக்கு ஒரு வாய் சோத்த குடுக்கதுக்கு இல்லாம உன் வாய வச்சே விரட்டிட்ட..” என கடிந்து கொள்ளவும், “யம்மா.. உங்க வீட்டுல வாயே திறக்க முடியலம்மா.. ஆளாளுக்கு சேந்துகிட்டு என் வாயை அடைச்சிருங்க.. ஒன்னு சொல்ல முடியுதா?? இப்போ என்ன சொல்லிட்டேன்.. ஒரு பயல்ட்ட இப்பிடி ஏமாந்துட்டு அலையாதன்னு சொன்னேன்.. அது தப்பா.. இவா பெரிய யோக்கியம் மாதிரி என் வாய அடைக்க வாரா.. அவ்வுளோ பாசம் தூக்கி போட்டு அடிச்சா அந்த பயல எதுக்கு பேசாம அலைய விட்ட.. உனட்ட இருக்க கிராமுட்டித்தனம்.. லேசுபட்டவளே இல்லை.. நாளைக்கு மாமியார் வீட்டுக்கு போயும்ல எதுத்து பேசி என் மானத்தை வாங்கிப்புடுவ...” என்றவரின் பேச்சை கேட்க முடியாமல் வாசலில் கிடந்த செருப்பை கையில் தூக்கி கொண்டுச் செல்ல எத்தனித்தாள்..

“நான் பேசுனா ஏதோ அவ காதுல ஈயத்தை காய்ச்சு ஊத்துனவ மாதிரி ஓடிரனும்..” என கூறுவம் தான் புவனேஸ்வரியின் பொறுமை காற்றில் கரையத் துவங்கியிருந்தது.. “ஆமா.. உன் புலம்பலை எவன் நின்னு கேக்க.. என்னைக்காவது புத்தியோட பேசி கூரோட காலம் கழிச்சிருக்கியா?? பெருசா அவரு குடிக்காரு.. அவரு குடிக்காருன்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு அனுதாபம் வாங்கி கட்டிக்கணும்.. உன்கூட பொறந்தவ ஒவ்வொருத்தியும் எப்படி இருக்கா?? இவ்வளோ பேசுதியே.. நேத்து முழுக்க ஒரு பொம்பள புள்ள வீட்டுக்கு வரலியே.. எங்க போன?? எங்க நின்ன?? ஏதும் ஆச்சா?? ஏதாவது கேட்டியா.. உனக்கு என்னத்தயாவது முனுமுனுன்னு முனங்கனும்.. வந்ததும் வராததுமா உனக்கு தான ஓனியம் பாத்தேன்..” என படபடவென பொரிந்து கொண்டிருக்க, “யாத்தாடி.. குமரி புள்ள இப்பிடியா வாசல்ல வச்சு பெத்த தாய பேசுவான்னு நாலு வேரு பேசுவா.. அடக்கம் ஒடுக்கமா இருக்க தெரியுதா??” என கலாச்சார பாதுகாவலர் கனியினுள் எழுந்து கொண்டார்..

“ஏலே.. நீயே வச்சு அழு உன் அம்மைய.. அவனை பத்தி உனட்டையும் உன்ன பத்தி அவன்ட்டையும் ஏத்தி ஏத்தி விடுவா.. சண்டை போட்டு நாறிட்டு கிடங்க..” என ஆத்திரத்தில் கத்தியவள் ஒரு நிமிடம் கூட அங்கு நில்லாமல் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடியே விட்டாள்.. ராகவன் அம்மாவை சங்கடத்தோடு நோக்க, “நீ என்னலே என்ன பாக்க.. ஒ.. உங்க நொக்கா சொல்லிட்டால்லா..ன.. அப்போ அப்படி தான் பாப்ப.. ஏன்னா நான் தான இந்த வீட்டுலேயே ஆப்பி..” என அடுத்து புலம்பலை துவங்குவதற்குள் ராகவன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியிருந்தான்..

புவனேஷ்வரி நேற்று இரவு அண்ணியின் வீட்டில் தான் தங்கியிருப்பாள் ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்..’ என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.. ராகவனுக்கும் மகேசனுக்கும் இடையே யாருக்கு அக்கா?? என்ற பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தும் ராகவன் முன் மகேசனை திட்டுவதும் மகேசன் முன் புவனாவை கண்டிப்பதும் கனியை பொறுத்தவரை ஒருவருக்கிடையே சண்டையை மூட்டி விடும் நோக்கில் அரகேற்றப்படுவது இல்லை.. பிள்ளைகளை கண்டிக்கும் தாயின் அதிகார உணர்வே ஆகும்.. மூன்றும் மூன்று கண்கள் என்றால் வேலப்பனின் சாயலிலேயே அவதாரமெடுத்த மகேசனே நெற்றிக்கண்.. அநேகமாய் பயனிருக்காதது போல பாசமிருக்காது..

அதே நேரத்தில், “அண்ணி.. அண்ணி..” என வாசலின் முதல் படிக்கட்டில் நின்று கூவி கூவி அழைத்தார் வேலப்பன்.. மாட்டிற்கு புண்ணாக்கு பிசைந்து கொண்டிருந்த பொன்னம்மா, கைகளை கழுவாமலேயே வெளியில் வந்து சேர்ந்தார்.. “என்ன ஆலங்கனி.. இந்நேரத்துக்கு வந்து சேர்ந்திருக்க.. காலேலயே வாங்கிட்டு போயிட்டன்னு சொன்னாவ..” என்றவரின் பேச்சில் கேலி மிகுந்திருந்தது.. “அதில்ல அண்ணி.. நம்ம புவனாவ கேட்டு வந்தாவ.. நானும் அடுத்த வாரம் வாங்கன்னுட்டேன்.. அதான்.. அவட்ட செத்தேன் நீங்க சொன்னியன்னா அவுக வாரன்னிக்கி ரெடியாயி நிக்கணும்..” என்றார் பவ்யமாக..

“ஒ..” என வளைந்த உதடுகள், “கெட்டகேட்டுக்கு கொடுக்க ஒன்னு தான் இல்ல..” என்றது.. “ச்சேரி.. நான் கனியம்மையிட்ட சொல்லுதேன்.. அது சேரி.. வாரவுக எவ்வளோ கேட்டாவ??” என அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டார்.. ஏனெனில் தங்கம் சேமிப்பு ஒவ்வொரு வீட்டிலும் ரகசிய மொழிகளாக தானே பாதுகாக்கப்படும்.. அதிலும் எங்கே தன் மகளை விட அதிகம் கொண்டு செல்வாளோ என்ற பயமும் ஒளிந்திருந்தது.. திருவிழாக்களிலும் கோயில் கொடைகளிலும் சிறுகுழந்தைகளாக “பெரியப்பன் மக்க.. சித்தப்பன் மக்க..” கூடுகையில் அக்காளும் தங்கையும் தங்கசங்கிலியை தழைய தழைய அணிந்து வர, பாசிமாலையோடு ஏக்கமாக பார்ப்பவள் தானே புவனேஷ்வரி..

“நம்மட்ட என்ன இருக்கோ அவ்வளவு தான் அண்ணி.. அவா போட்டுட்டு வந்த கம்மலும் ரெட்டை வடமும் ஒரு ஜோடி வளையலும் தான் இருக்கு.. அதுக்கு மேற்கொண்டு போட எனட்ட என்ன இருக்கு..” என வேலப்பன் கள்ளம் கபடமின்றி அனைத்தையும் உளறிக் கொண்டிருக்க, “அப்பாடா..” என பெருமூச்செறிந்தார்.. இப்பொழுது வாய் நிறைய மகிழ்வோடு “நான் காட்டாயம் சொல்லிடுதேன் ஆலங்கனி.. நீ எதுக்கும் வருத்தப்பட்டுக்கிட்டு கிடக்காத.. நம்ம புள்ள மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்..” என்ற பொன்னமாவின் வாழ்த்துதலில் திருமணமாகி சென்று விட்டால் அவ்வூரிலேயே வாத்தியார் பணிக்கு படித்தது தன் மகளாக மட்டும் தான் இருப்பாள் என்ற சுயநலமும் கூடவே கலந்திருந்தது..

வழக்கம் போல பள்ளிக்கு நடந்து கொண்டிருந்தவள் இம்முறை மாலை பயன்படுத்தும் வழியை தேர்ந்தெடுத்தாள்.. சரியாக அத்தை வீட்டை கடந்து செல்கையில் வாசலில் கால்நீட்டி அமர்ந்து, எள்ளினை புடைத்துக் கொண்டிருந்த சீனியம்மாள் “ஏளா, ஆலங்கனி பெத்த மொவளே.. இங்க ஓடியா..” என பெருத்த சத்தத்தில் அழைத்திட்டார்.. இதழ்களில் வலிய புன்னகையை படரவிட்டு, “யத்தே..” என்றபடியே இரும்பு க்ரில்லினை திறந்து கொண்டு உள்நுழைந்தாள்.. “என்ன கண்டுங் காணாதது மாதிரி அந்தாக்குள்ள போற.. எனட்ட பேசுனா கடிச்சா தின்னுற போறேன்..” என அலுத்து கொள்ள, “கடிச்சு தின்னா கூட பரவாயில்லையே அத்தே.. திரும்பவும் புளியை போட்ட வெந்தயக்கறியை என் தலையில கட்டிட்டியன்னா போச்சுல்லா..” என எதிர்பதம் பேசினாள்..

“யாத்தாடி.. நேத்து நல்லா நீ ஊத்து அத்தே.. நான் திங்கேன்னு அமுக்குனியாட்டம் தின்னுட்டு இன்னைக்கு என்னா பேச்சு பேசுத.. வீட்டுல எதாச்சும் போடுதாளா உங்க அம்ம.. தினம் பாக்கும் போதுல்லாம் உடம்பு உருகிட்டே போவுது.. இரு.. நான் சோத்த போட்டு கொண்டாறேன்..” என்ற சீனியம்மாளின் மற்றொரு மாற்று புவனேஷ்வரி என்றாலும் தகும்.. குணத்திலும் தோற்றத்திலும் அப்படியே உரித்து வைத்திருப்பதினாலேயே அவ்வபோது வேலப்பன், “எங்க அம்மா...” என மெச்சி கொள்வார்.. அப்பொழுதெல்லாம், “ச்சீ.. அந்த கிழவி மாதிரில்லாம் நான் இல்ல.. மனுஷியா அவ.. சூனியக்கார கிழவி..” என திட்டிக் கொள்வாள்..

அதற்கும் தனிக்கதை உண்டு.. விவரம் தெரிய தொடங்கிய பருவத்தில் இருந்த புவனேஷ்வரி ஆசையாக ‘அப்பாம்ம’ வீட்டுக்கு தம்பிகளோடு சென்றிருந்தாள்.. அப்பொழுது, கன்னிபூசையோ ஏதோவொன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த கிழவி, அவ்வறையில் இருந்து முட்டையோடு வெளிவந்தார்.. சிறுவயதில் இருந்து பழையசோறையும் துவையலையும் கண்டு வந்த குழந்தைகளுக்கு முட்டையை கண்டதும் காணாததை கண்டது போல இருந்தது.. அதனாலேயே மகேசனும் கொடுத்ததும் அந்த முட்டையை வாங்கி உண்டு விட்டான்.. ஒரு உந்துதலினால் தம்பியை தடுத்தும் அவன் உண்டுவிட, அடுத்து ஒரு வாரத்திற்கு படுக்கையில் வீழ்ந்து வடிவாளம்மனின் அருளினால் எழுந்தான்..

தனது ஆசை தம்பியை தன் கண்முன்னே அவதியுற செய்த கிழவி, புவனாவின் கண்களுக்கு நெருப்பின் முன் அமர்ந்திருக்கும் சூனியக்காரியாகவே பதிந்து விட்டாள்.. நினைவுகளில் மூழ்கி எழுந்த புவனேஷ்வரி முன் தட்டில் சுடுசோறில் ஊற்றிய கமகம மணம் வீசும் ரசமும் தொட்டுக்கொள்ள அவரைக்காய் கூட்டும் வைக்கப்பட்டிருந்தது.. வெளியிடங்களில் உணவு பதார்த்தங்களை உணர கூச்சப்படும் கரங்கள் அத்தை வீட்டில் மட்டும் தயங்குவதே இல்லை..

குழைந்த சோற்றை மிளகும் வற்றலும் வைத்து காட்டமாக புளியில் கரைத்த ரசத்தில் நொறுங்கப் பிசைந்து பாசிப்பருப்பும் தேங்காய்பூவும் இட்ட அவரைக்காய் கூட்டையும் இணைந்து ஒவ்வொரு வாயாக தொண்டையினுள் இறக்க, சீனியம்மாளே சமையலின் சக்கரவர்த்தி என்று புகழ தோன்றியது..

“அது சேரி.. நேத்திக்கு புள்ள வீட்டுக்கு வரலியே.. ஒரு எட்டு போய் பாப்போமேன்னு உங்க அப்பனுக்கு தோணவே இல்லையாக்கும்.. அவனை விடு.. குடிகாரப்பய.. வீட்டுல கிடக்கவளுக்கு இதெல்லாம் பாக்க நேரம் பத்த மாட்டைக்கோ??” என கேள்வி எழுப்பினார் சீனியம்மாள்.. “யத்தே.. எங்க போய் எங்க சுத்துனாலும் அவிய ரெண்டு வேரையும் வையுததுலேயே வந்து நிக்கிய.. பாசமா கூப்ட்டு சோறை போட்டது இப்பிடி பேசுததுக்கா.. போங்க.. உங்கள நம்பி வந்தேன் பாத்தியளா??” என எழுந்தாள் புவனேஷ்வரி.. கால்கள் தான் எழுந்ததே தவிர கண்கள் தட்டை விட்டு நகரவேயில்லை.. நாவில் இருக்கும் ருசி தொண்டைக்குள் இறங்குவதற்கு முன் இப்படி ஒரு தண்டனையா??

“ப்ச்.. உடனே பொசுக்கு பொசுக்கு கோவத்தை பாரு.. உக்காந்து சாப்புடு தாயி.. உன் அப்பனையும் ஆத்தாளையும் ஒன்னுஞ் சொல்லலை.. போதுமா.. எப்பிடி கோவம் பொத்துட்டு வருது..” என கன்னத்தில் இடித்த சீனியம்மாள், “அது சேரி.. நேசமணிட்ட அப்பிடி பயந்து போய் நின்ன??” என கேள்வி எழுப்ப, தொண்டையினுள் இறங்க சற்று சிரமப்பட்டது.. “யத்த அவரை பாத்தாலே ஏதோ பூச்சாண்டி மாதிரி இருக்கு.. பாத்து பயப்படாம கொஞ்சிட்டா நிக்க சொல்லுதிய..” என கூறி கொண்டிருக்கும் போதே அண்ணாச்சி வந்து நின்றார்.. “போச்சு.. நல்லா வசமா அம்புடுக்கிட்டேன்..” என நாக்கை கடித்து கொள்ள, அவரோ உறுத்து விழித்தார்..
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-5

“யண்ணாச்சி..” என வலிய புன்னகைத்து எழ முயன்றவளை கைகளால் “இரு..” என தடுத்து, “சாப்பிடும் போது எந்திக்காத.. சாப்புடு..” என்று விட்டு வாசலில் கிடந்த செருப்பை மாட்டிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினார்.. “உப்ப்ப்..” என மூச்சை வெளியிட்டவள், “நான் என்ன சொல்லிட்டு இருந்தேன் த்த..” என வாயாடலைத் தொடங்கினாள்..

அவளின் கவனக்குறைவால் பேசிக்கொண்டிருந்ததை மறந்து விட்ட சீனியம்மாள், “என்னளா திங்க பழகுன.. உன் அம்ம இப்பிடி தான் சொல்லி தந்தாளா.. அதான் பிள்ள இப்பிடி முருங்கக்காயாட்டம் மெலிஞ்சி கிடக்க.. பத்து கையால பாடுபடு.. அஞ்சு கையாள அள்ளி தின்னுன்னு சும்மாவா சொல்லிட்டு போனாவ... குருவி மாதிரி கொத்திட்டு கிடக்க..” என வழக்கமான பாஷையில் பொரிந்து தள்ளினார்..

“யத்தே.. நீங்க சொல்லுத மாதிரி அள்ளி தின்னேன்னா மூச்சு முட்டி செத்துருவேன்.. கொஞ்சம் கொஞ்சமா தொண்டையில இறக்கிருவேன்.. உங்க வீட்டு சோத்தை தூர கொட்டிர மாட்டேன்..” என உதட்டை சுளித்துக் கொள்ள, “நீ திங்க மாட்டன்னு சொன்னேனா?? உன் பாட்டுக்கு பேசிட்டே இருக்க.. வாய் கிழிய பேசுத வாயுக்கு ஆகாரம் வேண்டாமாக்கும்.. பிள்ளைக்கு மஞ்சக்காமாலை வந்து மெலிஞ்சு கிடக்கேன்னு சொன்னேன் பாரு.. என் புத்திய சாத்த கட்டவாரியல் இல்லாம போச்சு பாரு..” என நொடித்துக் கொண்டார் சீனியம்மாள்..

அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது தான்.. இதே புவனேஸ்வரியை ஒரு வருடத்திற்கு முன் பார்த்திருக்க வேண்டுமே.. குண்டு குண்டு கன்னங்கள்.. செவ்வக முக வடிவமைப்பு.. துருதுரு கண்கள்.. ஊக்கமான கைகால்கள்.. மொத்தமாக அவள் நடந்து வரும் அழகைக் கண்டால் தூரத்தில் தர்பூசணி உருண்டு வருவது போல இருக்கும்.. ஒன்னு விட்ட அத்தை கூட, “நம்ம வீட்டுலேயே முகம் சைஸா நம்ம புவனாக்கு தான் இருக்குது..” என சொல்லும்..

அப்பொழுதெல்லாம் ஒரு குலை நிரம்ப நுங்கினை வெட்டிப் போட்டாலும் ஒரே ஆளாய் முடித்து விடுவாள்.. ஆனால் அனைத்தும் அந்த அரக்கன் வரும் வரை தான்.. இரண்டு மூன்று நாட்களாய் அசதியாக திரிந்த புவனேஸ்வரியை, இரவில் ஆடலும் பாடலும் பார்க்கும் பொழுது தின்ற குல்பியினால் தான் என்று கனியம்மாள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட அது பின்னாளில் பெரிய பாதிப்பாக மாறிப் போனது..

அடுத்த நாள் ரத்த ரத்தமாக வாந்தியெடுக்க, பதறிப் போன கனியம்மாள் வேலப்பனுக்கு விஷயம் தெரியும் முன்னரே இரண்டு ஊர் தாண்டி வசித்த கைப்பார்ப்பவரிடம் கூட்டிச் சென்றார்.. அங்கே சென்றதும், “யம்மா.. நல்ல நேரத்துக்கு கூட்டியாந்திருக்க.. கொஞ்சம் விட்டாலும் உன் புள்ளை உனக்கில்ல..” என எச்சரித்து பச்சிலையை அரைத்தார்..

மூன்று உருண்டையாக உருட்டி, “இந்தாம்மா.. இதை உழுங்கிட்டு பக்கத்துல இருக்க ஆத்துல முங்கி எந்திரிச்சிட்டு கூட்டிட்டு போ.. மூணு வாரத்துக்கு பத்தியம் இருக்கணும்.. அன்னம் தண்ணி எதுவும் வாயில படக் கூடாது.. நீத்தண்ணி மட்டும் குடு..” என படிநிலைகளைக் கூறி அனுப்பினார்..

அவர் கூறிய அனைத்தையும் முடித்து விட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்க, ஒரு நிறுத்தத்தில் சுட சுட வடையை எண்ணெயில் இருந்து வடித்து எடுக்க அதனுடைய மணமானது இவளின் மனதைக் கூறுபோட்டுக் கொண்டிருந்தது.. “ம்மோ வடை வேணும்..” என புவனேஸ்வரி கூற, கனியம்மாள் கண்களாலேயே, “நல்ல கதையா போச்சு.. உயிரு பொழைச்சதே தெய்வ செயல்னு சொல்லுதாரு.. வடை வேண்டி கிடக்கோ.. வாய மூடிக்கிட்டு சும்மா கெட... வீட்டுக்கு போயி என்னதாவது திங்கலாம்.. செத்தே நேரத்துக்கு வாயையும் நாக்கையும் கெட்டி போடு.. வடை வேணுமாம்ல வடை..” எனக் கண்டித்தார்..

உதட்டை வளைத்து அழவேண்டும் போலிருந்தது.. பச்சிலை வேறு நாக்கை அரித்துக் கொண்டிருக்க, ஆற்றில் முழுகி எழுந்தது வேறு பசியைக் கிள்ளி எடுத்தது.. மற்றொரு புறமாய் ஒருக்களித்து திரும்பி, பொங்கி வந்த கண்ணீரை மட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.. கனியம்மாளுக்கும் அவளது பாராமுகம் பாரத்தைக் கொடுக்க, தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் ஒரு கடையில் அரை டம்ளர் சுக்கு காபியும் இரண்டு பச்சை வாழையும் வாங்கி கொடுத்து வீடு அழைத்து வந்தார்..

அதன் பிறகு இவள் செய்த ரகளை எல்லாம் சொல்லி மாளாது.. மூன்று வாரத்தில் அரிசி வடித்த நீர் மட்டுமே அவளுக்கு ஆகாரமாகிப் போயிருக்க, சோறு, குழம்பு, மற்றும் தின்பண்டங்கள் என்று உண்பவர்களை கண்டால் நாய் போல குரைத்துத் தள்ளினாள்.. அவளது பாணியில், “இந்த நேரத்துக்கு என்னத்தடா திம்போம்.. மொத்த சட்டி சொத்தையும் வாயில கொட்டிருவோமான்னு வருது.. வெறும் புளிச்ச தண்ணிய குடிச்சிட்டு கெடக்கவா முன்னாடி ருசியா தின்னா அவளுக்கு எப்பிடி வரும்..” என்று கூறலாம்..

அந்த வாரக்கணக்கில் தரப்படாத உணவிற்காக, வாழ்நாள் முழுவதும் அவள் உண்ட உணவை உறிஞ்சி கொண்டது உணவுப்பை.. சதைகள் ஏதுமின்றி எலும்புகளின் மீது தேகம் பூசியது போலானது.. அதன் பின் எவ்வளவு உண்டாலும் காணாமல் போன சதைகளை திரும்பப் பெற முடியவில்லை.. வயதும் காலமும் அதற்கு வழிவகை செய்யாது பணத்தின் பின் ஓட செய்து, பசியை மறக்கடித்திருந்தது..

முன்கதை எதையும் நினைவு கொள்ளாமல், “ம்க்கும்.. அவ்வுளோ பாசம் இருந்தா நீங்க ஏன்த்த அப்பன் வீட்டுல இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டு போவனும்.. கிழவி காதுல கிடந்த தடையத்தையும் விட்டு வைக்காம தான போனீய.. எங்க அப்பா உங்களுக்கு என்னல்லாம் செஞ்சிருப்பாவ.. தீவாளி, கோயில்கொடைன்னா போதுமே தட்டு தட்டா சட்டி சட்டியா உங்களுக்கு தான பைனி, நுங்கு, கண்டது, கனியது, அவிச்சது அவியாததுன்னு இங்க தான கொண்டாந்து தட்டுது.. எங்களுக்கா வருது.. என்னைக்காச்சும் ஒய்ச்சி போவாத பயறு அவிச்சு தாராவ.. பெறவு இப்பிடி இல்லாம எப்பிடி இருப்பாவ..” என வெளிப்படையாகவே கேட்டாள் புவனேஸ்வரி..

“சொல்லுவளா சொல்லுவ.. ஏன் சொல்ல மாட்ட.. நானும் உன்னைய மாதிரி தான இருக்கேன்.. உங்க அப்பன் கொண்டந்ததை தின்னுட்டு ஊதி போயா இருக்கேன்..” என தன்னை எடுத்துக்காட்டுக்கு காண்பிக்க, “ம்க்கும்.. உங்கட்ட இருக்க சூதுவாதுக்கு அப்பிடி இருக்கிய..” என உடனடி பதிலைக் கொடுத்தாள்.. “நீ மட்டும் என்னவாம்.. உடம்பு பூரா விஷமால்ல இருக்கு.. அதான் இப்பிடி இருக்க..” என சீனியம்மாள் வாயடைக்க கூறிக் கொண்டிருக்கும் போதே, “எங்க அம்மை தொல்லையில இருந்து தப்பிச்சு வந்து உங்கட்ட அம்புடுகிட்டேன்.. இப்படியே வாயளந்துட்டே இருங்க.. நான் போயிட்டு வாரேன்.. டாட்டா..” என்றுவிட்டு கிளம்பினாள்.

நான்கு அண்ணன்களுக்கு மத்தியில் பிறந்த சீனியம்மாளின் மீது வேலப்பனுக்கு ஒருவகை பாசம்.. அக்கா அக்கா என்று காலை சுற்றி கொண்டே திரிவார்.. திருமணத்திற்கு பின் எந்த கொண்டாட்டம் என்றாலும் எந்த லாபம் என்றாலும் முதல் பங்கு அக்காவிற்குச் சென்று விடும்.. தாயும் தந்தையும் இறந்துவிட்ட பின், குழி மூடும் முன் வெட்டியான் கேட்பான் பிணத்தின் மீது கிடக்கும் தங்க பொருள்கள் யாருக்கு?? என்று..

வழக்கமாக இவர்களின் கட்டு பிரகாரம் தாயின் தாலி தொடங்கி அனைத்து உடைமைகளும் ஆண்மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.. பெண்களுக்கு நகையை அணிவித்து திருமணம் செய்து வைத்தப்பின் பிறந்த வீட்டில் இருந்து சீர், தாய்மாமன் சீர் தவிர வேறு எதிலும் பங்கு கிடையாது.. ஆனால் சீனியம்மாளோ “என் அம்ம தாலிய வேணா வச்சுட்டு போங்கலே.. காதுல கெடக்க தடையம் எனக்கு தான்..” என ஒற்றை காலில் நின்று வாங்கிகொண்டார்..

தடயம் என்பது பாம்படம் என்று கூட அடையாளம் கூறலாம்.. அறுபது, எழுபதுகளில் அறுபது வயதைத் தாண்டி விட்டால் காதின் துளையை கிழித்து நீளமாக்கி, கனமான பாம்படத்தை அணிந்து கொள்வர்.. உருண்டை, கனசதுரம் என்ற உருவங்களை ஒன்றாக இணைத்து செய்யப்பட்டிருக்கும்.. எழுபதுகளில் வயதான பெண்கள் அனைவரும் அதனை அணிந்து ரவிக்கை இல்லாமல் சேலையை கட்டி வீடுதோறும் வாசலில் அமர்ந்து வெத்திலை பெட்டியோடு ஊரின் வீண்சச்சரவுகளை விதண்டாவாதம் பேசி கொண்டிருப்பர்..

இவர்களின் கிழவி உலக்கையில் பாக்கை போட்டு உடைக்கும் பொழுது ராட்டினம் போல அங்கும் இங்குமாய் உழலும் பாம்படத்தை ஒரு முறை மகேசன் தொட்டுபார்க்க ஆசைகொண்டான்.. அந்நேரத்திற்கு அதனை தட்டிக்கழிக்கும் விதமாக “என்னலே அப்பிடி பாக்க.. அப்பாம்ம போட்டுருக்க தடையம் என் செல்லபேராண்டிக்கு தான்லே..” என கூறிட, வயது கோளாறில் இழுத்தும் பார்த்து விட்டான்.. அவ்வளவு தான்.. “ஏ... முட்டாப்பேவுள்ள.. என்னனி பிடிச்சு இழுத்துட்டான்.. காது ரெண்டா கிழிஞ்சு போச்சு.. ஒரு பேச்சுக்கு சொன்னா இப்பிடியா பண்ணுவான்.. எனட்ட எழவு இழுக்கனும்னே பெத்து போட்டிருப்பா போல.. காது சவ்வு கிழிஞ்சி போச்சு..” என திட்டித் தீர்த்தார்.. கோபத்தில் ரத்தம் உயரழுத்தம் கொள்ள, பிய்ந்த இடத்தில் இருந்து ரத்தம் கொட்டத் துவங்கியது..

மொத்த குடும்பமும் மகேசனை திட்டி, பாட்டியின் காதை மீண்டும் தைத்து வந்ததெல்லாம் வேறுகதை.. சீனியம்மாளின் செய்கையில் அண்ணன் மனைவிகளுக்கெல்லாம் சற்று ஆத்திரமும் கோபமும் என்றாலும் வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை.. அவர்களுக்குள்ளாகவே “அவளுக்கென்ன புண்ணியாட்டி.. போட்டுட்டு போனது பத்தாதுன்னு அம்மைக்கு உள்ளதையும் பிடுங்கிட்டு போயிட்டா..” என பேசிக் கொள்வர்.. ஆனால் அத்தையின் மீது உரிமை கொண்டவளோ இன்று தைரியமாய் அடித்து பேசிவிட்டாள்.. சீனியம்மாளுக்கும் இதில் வருத்தம் என்பதில்லை..

பனங்காட்டில்,

“ஏலே.. இந்த குலை பூரா கடுக்காயா இருக்கு.. என்னத்த வெட்டி போடுதியோ..” என கட்டளையிட்டுக் கொண்டிருந்த வேலப்பன் பனைக்கு இரண்டு காத தூரத்தில் இதமான நிழலுக்கு பெயர் போன மாமரத்தின் கூடி நின்ற மணற்திட்டின் மேல் ஒய்யாரமாய் முன்னே பனங்கூந்தலை பரப்பி விட்டிருந்தார்..

“இந்த பனை சாதி அப்பிடி போல.. ஒன்னு தண்ணியா இருக்கு.. இல்லாட்டி கடுக்காவா போவுது.. என்னைய குறை குத்தலாட்டம் சொல்லி ஒன்னும் ஆவபோறதில்லை..” என கூறியபடியே பின் இடுப்பில் வெட்டரிவாளை செருகிக் கொண்டான் சுப்பன்.. “நீ பாத்து பதமா வெட்டலன்னு சொல்லு.. அத வுட்டுட்டு என் பனைய குத்தம் சொல்லாத.. இந்தா..” என தன்னருகே இருந்த மூன்று நுங்குகளை அவனின் புறம் நகர்த்தினார்..

“யப்பா.. கருப்ப்ப்ப்பா..” என பெருமூச்சோடு வலது கையை ஊன்றி அமர்ந்தவன், மறக்காமல் கைலியை இடுப்பிற்கு மேலே தூக்கி கொள்ள, கீழே போட்டிருந்த கால்சட்டை மணலின் புழுதியில் படிந்து கொண்டது.. “என்னதா கடுக்காயா இருந்தாலும் ருசின்னு ஒன்னு இருக்குல்ல.. சேரி.. அந்த கலயத்தை எடு.. ஒருவாட்டி நல்லா இருக்கா இல்ல சளிச்சிட்டான்னு பாப்போம்..” என வேலப்பன் கூற, “அதுல்லாம் அப்பயே சளிச்சிருக்கும்.. நீரு குடிப்பியருன்னு காத்துகிட்டு கிடக்குமாக்கும்..” என கேலி பேசினான் சுப்பன்..

மடக்கியிருந்த முட்டுகளில் இடித்த வேலப்பன், “ஏம்லே.. கிடக்காதுங்க.. சளிச்சுதுன்னா நீ வேணா திரும்ப போய் கலயத்தை இறக்கிட்டு வாயேன்..” என்றபடியே வளைந்து நெளிந்த ஈயப்பாத்திரத்தில் சேமித்து வைத்திருந்த பதநீரை நேரடியாக வாயினுள் ஊற்றினார்.. முந்தைய நாளே கலயச்சட்டியில் சுண்ணாம்பு தேய்த்து ஆண்பனையின் அலவறையை கீறிவிட்டு சொட்டு சொட்டாய் வடியும் பதநீரை மறுநாள் காலை அவிழ்த்ததும் அருந்தி விடுவர்.. இல்லையென்றால் சிறிது நேரத்தில் எல்லாம், ருசி பறந்து வலுத்து கொண்டு இருக்கும்.. அதாவது சளித்து விடும்..

“ப்பூ..” என குடித்ததை வாய் வழியே கொப்பளித்த வேலப்பன், “என்ன கசக்கு..” என வாயில் மீந்திருந்த துளிகளை கையினால் துடைக்க, “செத்தேன் வேப்பம்பூவை போட்டு வச்சேன்.. நல்லா இருக்கும்.. சும்மா குடியும்.. செத்தேன் நேரம் கழிச்சு இனிக்கும்..” என்றான் சுப்பன்.. “நா என்ன பால்வாடி பிள்ளையா?? இப்ப கசக்கும்.. பிறவு இனிக்கும்ங்கத்துக்கு..” என கடிந்து கொண்ட வேலப்பன் அருகிலிருந்த கிளையில் தொங்கி கொண்டிருந்த மாம்பிஞ்சினை பிய்த்து கடித்து பதநீரினுள் கலக்கினார்..

கசப்பிற்கு ஏற்ற துவர்ப்பு தொற்றிக்கொள்ள பானமானது உகந்ததாயிருந்தது.. “ம்ம்... வயிறு நெம்ப குடிச்சாச்சு.. பல்லாரிக்கு தண்ணி பாய்க்கணும்.. நீ வீட்டுக்கு போவியா எப்பிடி.. நீ போனின்னா என் வீட்டுல அவளை வர சொல்லிருன்ன..” என்று விட்டு அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து கொண்டு பாத்திகளில் நடந்தார்..

அந்தக் காலத்தில் தோண்டப்பட்ட கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் வலுத்த கற்களை அடுக்கி எழுப்பப்பட்டிருக்க, துணைக்காக அருகிலேயே தொட்டிக்கிணறு என்ற பெயரில் தொட்டிக்கும் கிணறுக்கும் தூண்டிலிட்டது போல சிறுபகுதி அமைக்கப்பட்டிருந்தது.. உள்வழியாக படிக்கட்டுக்கள் எழுப்பப்பட்டு பாதி தூரத்தில் கைவிடப்பட்டிருகிறது என்பதை தண்ணீரின் பளிங்கு தன்மையால் மேலிருந்தே காணமுடிகிறது.. கால் அடி, அரை அடி, முக்கால் அடி, முழு அடி சகிதம் அனைத்தையும் அளந்து அதற்கு அடிப்படையாக சிறிது துவாரமும் அதனருகே நீண்டிருந்த ஒற்றை கனசெவ்வக பாறைக்கல்லும் அமைக்கப்பட்டிருந்தது.. சுவர்களில் பூத்திருந்த பச்சை பாசி பகுதியளவாக கிணற்று நீரை பச்சையாக மாற்றிக் கொண்டிருக்க, அரண் போல சுற்றிலும் நின்றிருந்த தென்னை மரங்களில் உள்ள தேங்காய்கள் தவறுதலாக தண்ணீரில் விழுந்து உயிரை மாய்த்து வெறும் கூடாக மிதந்து கொண்டிருந்தது..

சில மாதங்களுக்கு முன் பொழிந்த வடகிழக்கு பருவமழையினால் வயலின் வடக்கு புறத்தில் இருந்த ஓடையின் செழிப்பான ஓட்டத்தில் இருந்து ஊற்றெடுத்து, முக்கால்வாசியை தொட முயன்று கொண்டிருந்தது.. அதன் விளைவாக தொட்டிகிணற்று நீர்வரத்து கண்டிருக்க, கமலை கொண்டு நீரை இறைக்கத் தொடங்கினார் வேலப்பன்.. கூனை, தோல், வால்கயிறு, வடம், உருளை, வட்டு சகிதம் கொண்டு உருவாக்கப்பட்டது தான் கமலை.. பானையை கவிழ்த்தி அடிபுறத்தை அறுத்தெடுத்து அதிலே இரண்டு கம்பிகளை பெருக்கல் குறியீடு போல பொருத்தப்பட்டது போன்ற மாதிரி கூனை எனப்படும்..

இரு கம்பிகளின் மையப்புள்ளியில் கொக்கி போன்று வடம் கோர்க்கப்பட்டிருக்க, வாய்பகுதியில் தோல் எனப்படும் ஆய்வுகுழல் போன்ற அமைப்பு ரப்பரினால் இணைக்கப்பட்டிருக்கும்.. தோலின் அடிப்புறத்தை வால் கயிறினால் கட்டி மரத்தினாலான உருளையில் கோர்க்கப்பட்டு கூனையின் முனை வட்டில் இணைக்கப்பட்டிருக்கும்.. கூனை மற்றும் வால்கயிறின் மற்றொரு முனை மாட்டோடு கட்டப்பட்டிருக்கும் நோக்காலில் கட்டப்பட்டிருக்கும்..

மாடானது முன்னும் பின்னும் நடக்க, கிணற்றில் உள்ள நீர் கூனையினுள் நிறைந்து தோலில் சமன்செய்யப்பட்டு பாத்திகளுக்கு செல்ல பெரியதான குழியினுள் கொட்டப்படும்.. வியர்வை சிந்த மாடுடன் சேர்ந்து மாடாக வேலை செய்த வேலப்பன், கவனமாக ஒவ்வொரு பாத்திகளிலும் தண்ணீர் பாய்ச்சினார்..

இறுதி பாத்தியை சுற்றி வலம் வருகையில் நீரோட்டத்தினால் சீராகிப் போயிருந்த குருமணலின் சமவெளி சிறு பிளவோடு பச்சை நிற முளையை வெளியில் எடுக்கத் துவங்கியிருந்தது.. “இன்னும் ரெண்டே வாரத்துல எல்லாம் பொடுபொடுன்னு வளந்துரும்.. பெறவு பல்லாரி மேல வரவுஞ்செய்யாது.. பருக்கவும் செய்யாது.. இவளுக்கு சொன்னாலும் மண்டையில உரைக்காது.. ஏழு ஊருக்கு வாய் கிழிய பேச தான் லாயக்கு..” என முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தார்..

கீழே பச்சை பசேலென்று குழல் போன்று தன் தோகையை விரித்து அழகை விவரித்துக் கொண்டிருந்த வெங்காய நாற்று கள்ளத்தனமாய் கருவுற்றதை மறைத்திட முயல, அங்கோ கோபுரமாய் ஒற்றைக் கிளை முளைத்து அதன் உச்சியில் நாளை வெள்ளை வெளிச்சம் தோன்றப் போவதை மறந்திருந்தது.. கால்கள் நிரம்ப செம்மை கலந்த சேறு படிந்திருக்க, அதே ஈரத்துடன் மனற்பகுதியில் காலடி எடுத்து வைத்ததுமே புழுதி மூடிய காலணி போல மாறத் துவங்கியது...

வழக்கத்தை விட அதிக உயரத்தை உப்புக்குத்தியில் சகதி அழுத்தமாகவும் கெட்டியாகவும் பிடித்துக் கொண்டிருக்க, அங்கே பிளந்து நின்ற பாறைக்கல்லில் தேய்த்து அகற்றி விட்டார்.. ஆனாலும் மேற்புறத்தில் சகதிகள் திட்டு திட்டாய் வெடித்து நிற்க, பாரபட்சமே இல்லாது அனைத்தையும் அணைக்க முயன்று கொண்டிருந்தது கரிசல் மணலின் மெல்லிய துகள்கள்.. சம்மட்டியின் ஓரமாக திரண்டிருந்த மணற்கட்டிகளை அருகே வளர்ந்து நின்ற கோரைப்புல்லை அத்தெடுத்து வழித்து விட்டார்..

தெளிந்த நீரோடையாக பல மணல் அடுக்குகளை கடந்து வரும் ஓடை நீரில் கால்களையும் சம்மட்டியையும் அலசி விட்டு, இரு கரம் இணைத்து நீரை கோதியள்ளி முகத்தில் அடித்தார்.. கண்கள் மூக்கின் துவாரம் வழி சென்ற நீர் திவலைகள் திரும்ப கூட இல்லை.. அதற்குள் வாய் குவித்து உறிஞ்சிய நீரை இந்த கடவாய் பல்லிற்கும் அந்த கடவாய் பல்லிற்கும் அதிவேகமாக கொப்பளித்து தூரமாய் துப்பினார்..

ஆட்களின் நடமாட்டத்தினால் உருவான ஒற்றையடி பாதையில் நடந்தவரின் கால்களை பக்கவாட்டில் வளர்ந்து நின்ற தேவையற்ற கோரைப்புற்களும் ஊறல்களுக்கு பயன்படும் குப்பைமேனிகளும் ‘ஒன்னுத்துக்கு ஆவாது’ எனப்படும் பீநாறி குளைகளும் மூக்குத்தி வைக்க பயன்படும் பார்த்தினியாக்களும் வெள்ளை பூவாய் அலங்கரிக்கும் தும்பையும் ‘கொட்டு மத்தளமாக’ செதுக்கும் கைகளைக் கொண்ட துத்திகளும் தலைவலியை போக்கும் முசுமுசுக்கைகளும் கரும்பலகை எழுத செய்யும் கரிப்பான் இலைகளும் தீண்டிக் கொண்டிருக்க, நாயுருவி கைகளோ தேகத்தில் எரிச்சலையும் ஏற்படுத்தியது..

தாவரங்களின் தடயங்களை தாண்டி வந்த வேலப்பன், கால்களில் வளர்ந்து நின்ற மயிர்களைக் கவ்வி கொண்டு நின்ற நாயுருவிகளைத் தட்டிவிட, சிலவை சிரமமின்றி உதிர்ந்து கொள்ள, பலவையோ பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.. ரத்தமாய் கன்றி போயிருந்த இடத்தில் எருக்கம் பூவின் பாலினை பொத்தல் பொத்தலாக ஒற்றி எடுத்தார்..

சற்று தொலைவில் இருந்த தோட்டங்களை பிரிப்பதற்காக கரை எழுப்பி அதிலே கற்றாழை நடப்பட்டிருக்க, முன்னமே ஏற்பாடு செய்த குறுக்குவழியில் பயணித்தார்.. அட, இரு கற்றாழைக்கு நடுவே ஒரு ஆள் நுழையும் அளவிற்கு பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது.. சொந்த வயலுக்குள் மூன்றாமவன் போல நுழைவதற்கு காரணம் கேட்டால், “கள்ளப்பய எவனாவது உள்ள புகுந்துட்டான்னா உங்க அப்பனா வந்து புடிப்பான்.. ஆளு முன்னுக்க நிக்குன்னா சைடுவாக்குல அத்துக்கிட்டு ஓடிருவான்.. பின்னாடி ஆளு இருக்கும்னு அவனுக்கு யோசிக்க தெரியாதுல்லா.. எப்பிடி என் அறிவு.. அதுவும் இல்லாம இங்கோடியா போனா தான் குளத்துல உடம்பை நனைச்சிட்டு போலாம்.. அங்கோடின்னா வழி ரொம்ப சுத்துல்லா..” என்பார்..

கரிசல் மண்ணும் செம்மண்ணும் கலந்த பூமி அது.. அனைத்து இடங்களிலும் ஒரே போல சமவிகிதத்தில் இரண்டும் கலந்திருப்பதில்லை.. ஓரிடத்தில் ஒன்று உயர்ந்து நின்றால் மற்றொரு இடத்தில் மீதமுள்ளது உயர்ந்திருக்கும்.. அதினாலேயே கிணற்றின் அருகே பல்லாரி, மிளசெடி ஊன்றி விட்டு அகத்தியை பாத்தியில் நட்டு சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், பாகற்காய் கொடிகளை வாய்க்காலில் படர்த்தி விடுவர்.. சில நேரங்களில் இலைகளில் காய்க்கும் உருளைகிழங்கை ஒட்ட இலைகிழங்கும் இணைக்கப்படும்.. உளுந்து விதைக்கும் பொழுது வத்தக்காயும் நடப்படும்.. இப்படியாக இரண்டு மூன்று காய்கறிகளை விதைத்து விடுவர்..

கிணற்றினை விட்டு சற்று தூரத்தில் கரிசல் மண் மிகுந்த பகுதியில் பருத்தியை விதைத்து விடுவர்.. பருத்திக்கு தண்ணீர் பாய்ப்பதற்குள் அனைவரையும் ஒரு பாடு படுத்தி எடுத்து விடுவார்.. கிணற்றில் இருந்து நீரை இரண்டு தோட்டங்கள் தாண்டி எடுத்து வர பாத்தி கட்டி, பாத்தியப்பட்டவன் வழி தரமுடியாது என மறுத்து, பச்சை பச்சையாய் வசவுகளை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வரப்பை சிதைத்து.. இப்படியாக பல சாகசங்களையும் போராட்டங்களையும் நிகழ்த்தி தண்ணீர் கொண்டு வருவார் வேலப்பன்..

அந்த தீராத கடின உழைப்பினால் உருவான பருத்தி செடிகள் பசுமையை மறந்து பழுப்பை பூசிக் கொண்டிருக்க, வெடித்து வியாபாரத்திற்கு தயாராகி விட்டதை உணர்த்தும் விதமாக புல்லிதழில் கொழுவி நின்றது வெண்பஞ்சு.. சணல்சாக்கினை தோள்களில் இருந்து எடுத்து அடைந்திருந்த பூச்சிகளையும் தூசியையும் ஒரே உதறலில் தட்டிய வேலப்பன், வேகவேகமாய் பருத்தியை பருத்தி சேகரிக்க துவங்கினார்..

மதிய வேளையின் மந்த மனநிலையை மிகைப்படுத்துவதற்காகவே மன்னவன் சூரியன் உச்சஸ்தாயியில் நின்றிருக்க, வேலப்பனை துளி கூட பாதிக்கவில்லை.. ஒற்றை ஆளாய் நின்று குனிந்த குறுக்கு நிமிராமலேயே ஆய்ந்து கொண்டிருந்தார்.. சூரியன் கொஞ்சமாய் வெப்பத்தினைக் குறைத்து, உயர்ந்து நின்ற பருத்தி செடியின் உயரம் கால்வாசியாக நிலத்தில் படர, மூன்று மணியென கண்டுகொண்டார்..

கொண்ட நோக்கம் நிறைவேறிய நிம்மதியோடு நிமிர்ந்த வேலப்பன், தூரமாய் நின்ற வேப்பமரத்தின் கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த கும்பாவை இறக்கினார்.. கெட்டியான நிழலில் அமரவும் கீழிருந்து குளுமை மெல்ல மெல்ல மடிக்கு ஏறிக் கொண்டிருக்க, அதற்கு போட்டியாக தொண்டைக்குள் இறங்கி கொண்டிருக்கும் பழைய சோறும் தொட்டு கொள்ள சின்ன உள்ளியும் தங்களின் விளைவை காண்பிக்கத் தொடங்கியது..

மதிய உணவை முடித்துக் கொண்ட வேலப்பன், மெதுவாக குளத்தின் வழியில் தோள்களில் சம்மட்டியுடனும் மற்றொரு தோளில் மேற்சட்டையும், தலையில் துண்டும் கையில் கும்பாவுடனும் புறப்பட்டாயிற்று.. நீண்ட நிம்மதியான குளியலுக்காக.. உடைமைகளை அருகில் நின்ற கருவேலமரத்தில் ஊஞ்சலாட விட்டு காற்சட்டையுடன் தயாராகி விட்டது.. பாதத்தின் விரல்கள் அடுத்து கால்கள் அடுத்து இடுப்பு என ஒவ்வொன்றாக மூழ்க, உள்ளிறங்கியவர் கைகளில் ஒரு கோதல் குளிரும் அடர்த்தியும் கொண்ட நீரினை தலையில் ஈரப்படுத்தி விட்டு முழுவதுமாய் ஐக்கியமாகி கொண்டார்..

மாலை நேரத்தில் மனதோடு இணைந்த மண்வாசத்தை நுகர்ந்து வெளியில் வர, துண்டினால் தலையை துவட்டி வியர்வை வாசம் காணாத காலை அணிந்து வந்த அதே சட்டையை உடுத்திக் கொண்டு நடந்தார்.. இந்த சட்டை எதற்காக வயலிற்கு இவருடன் வருகிறது என்பது அதற்கும் தெரியாது அவருக்கும் தெரியாது.. கறுப்புவைரமாகிப் போன நெஞ்சுரத்தை கொளுத்தி எடுக்கும் வெயில் பாதித்து விடுமா என்ற மெத்தனத்தில் மேற்சட்டையை தவிர்க்கிறார் என்றால் ஊரினுள் நடக்கும் பொழுது மரியாதைக்காக ஒட்டிக்கொள்கிறது இந்த அற்ப பாலிஸ்டர் துணி..

சென்ற முறை பட்டணத்திற்கு சென்றபொழுதா இல்லை தெருவில் வந்த வண்டிக்காரனிடம் வாங்கியதா என்பது நினைவில் இல்லை.. ஆனால் இருந்தும் இல்லையென்று.. இல்லாதிருந்தும் இருக்கிறது என்ற குழப்பத்தோடே வாழ்ந்து முடிக்கிறது ஒவ்வொரு சட்டையும். இதோ, இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது..

கிணற்றடியில் கிடந்த காலணிகளை எடுத்துக்கொண்டு, பருத்தி மூட்டையுடன் கிளம்பியவர் பொழுது சாயும் முன்னரே வீட்டை வந்தடைந்தார்.. வாசலில் கேட்ட சத்தத்தில் அடுப்படியில் இருந்த கனியம்மாள் ‘அவர் வந்துவிட்டார்’ என விழித்து கொள்ள, பருத்தி மூட்டை தூணில் சாயும் சத்தத்தில் வெளிவந்தார்.. முகத்தில் வேர்வையுடன், இருட்டில் நின்று வெளிச்சத்திற்கு வந்ததிற்கான சாட்சியாக பொடித்து விழித்த பார்வை இருக்க, பெருமை கலந்த மெச்சுதல் பார்வையை வீசினார் வேலப்பன்..

கனியம்மாள் அவரைக் கண்டு ஆச்சர்யத்தில் பேசாமடந்தையாக நிற்க, அது காதல் என்று நினைத்தால் நாமே அந்த ‘கூருகெட்டவர்கள்’.. மிதிவண்டியின் ஒளியோடு உள்ளே வந்த ராகவேந்திரன் அந்நேரத்திற்கு தந்தையை அங்கு எதிர்பாராதவனாக திருதிருவென கண்களை புரட்டினான்.. தாயும் மகனும் அவரை அங்கு எதிர்பார்க்கவே இல்லை.. வழக்கமான இந்நேரத்தில் சாராய கடைமுன் நிற்கும் வேலப்பனின் பருத்தி மூட்டையை வீடு திரும்பிய ராகவேந்திரனே சென்று எடுத்து வருவான்.. இந்த புதிய மாற்றம் அவர்களுக்கும் வசமாய் சிக்கிக்கொண்ட கள்ளர்களின் உணர்வை கொடுத்தது.. கள்ளத்தனம் என்பது இருவரின் சுதந்திரம் என்றும் வகைப்படுத்தலாம்..
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-6

“என்ன.. தாயும் மொவனும் காணக்கூடாதத கண்டதை மாதிரி பே பேன்னு முழிக்கிய..” என வேலப்பன் அதட்ட, தந்தையின் நிதானத்தினைக் கண்டு அதிசயித்த ராகவேந்திரனோ, “ஒண்ணுமில்ல.. ப்பா.. திடீர்னு வெளிய வந்ததும் அம்மைக்கு கண்ணு கூசியிருக்கும்.. என்னாச்சு.. இன்னிக்கு நீங்களே பருத்திய தூக்கிட்டு வந்துட்டீய..” என இயல்பாக பேச முயற்சித்தான்.. “அப்பிடித்தான் ச்ச்சொன்னாவளாம்..” என உதட்டை வளைத்து கனியை மேலிருந்து கீழாக அளந்து விட்டு, “ச்சேரி.. காப்பி போட்டு கொண்டா..” என்று விட்டு தொழுவத்தில் அமர்ந்தார்..

“ப்பா.. பலகையில உக்காருங்க.. சாரம் அழுக்காவுது..” என விழிப்பாய் பாத்திரம் கழுவும் இடத்தில் நனைத்து போட்டிருந்த மரப்பலகையை நிமிர்த்தி கொடுத்தான்.. “ம்ம்..” என வாங்கி கொண்டவர், சாரத்தை விரித்து மூட்டையை மடியினில் சாய்த்து பருத்தியை பிரிக்கத் துவங்கினார்.. அருகிலே ஈயப்பானை இருக்க, வேலை இன்னமும் எளிதானது..

திண்ணையில் அமர்ந்த ராகவேந்திரன் ஒற்றை காலை மடக்கியும் மற்றொன்றை தொங்கவிட்டும் முகவாய்க்கு முட்டுக்கொடுத்து தந்தையை அதிசயமாய் நோக்கிக் கொண்டிருந்தான்.. தோ வந்துவிட்டாள்.. வடக்குவீட்டுக்காரி.. அந்தக் கட்டை சுற்றுச் சுவற்றில் கைவைத்து வேடிக்கை பார்ப்பதற்கு.. இது வாடிக்கையான ஒன்று தான்.. வேலப்பன் வந்துவிட்டாலே அவ்விடத்திற்கு விரைந்து வந்து தினம் ஒரு தொடரை பார்ப்பது போல ஆர்வமாக உணர்வுகளை முகத்தில் காண்பித்து உச்சு கொட்டுவாள்..

மற்ற நாட்களில் வராத கோபம் இன்று எல்லாம் சரியாய் நடப்பதாலோ என்னவோ ராகவேந்திரனுக்கு துளிர்த்தது.. ஓடிச் சென்று சண்டையிடுவதற்கு வேலப்பனோ சாடை மாடையாக பேசுவதற்கு புவனேஷ்வரியோ பார்வையாலே எரித்து விடுவதற்கு மகேசனோ மழுப்பலாக மீண்டும் சென்று ஒட்டிக்கொள்ள கனியம்மாளோ இல்லை.. சாந்தத்தின் சத்திரியன் ஆயிற்றே.. அமைதியாக அவமானத்தில் அடிபட்ட பார்வையால் அளந்து கொண்டிருந்தான்..

கடுங்காப்பியை போட்ட செம்பை கையோடு தூக்கி வந்த கனியம்மாள், “ஏலே, கையு பொக்கு.. தள்ளி இரேன்..” என பொறுமியபடியே சுண்ணாம்பு திண்டில் வைத்தார்.. கரித்துணியில் ஆவிபட்டு நனைந்திருக்க, சூடு கைகளுக்கு கடத்தப்பட்டிருக்க வேண்டும்.. டம்ளரில் ஊற்றி வேலப்பனுக்கு கொடுத்திட, “என்ன கனியம்மக்கா.. காபி குடிக்கியளாக்கும்..” என கேட்டுவிட்டாள்.. ஒருவேளை இவ்விடத்தில் புவனேஷ்வரி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அவனாகவே கற்பனை செய்திட்டான்..

(“ஏன் உங்க வீட்டுல ஒருநாளும் காப்பியே குடிக்க மாட்டியளாக்கும்..” -புவனேஷ்வரி)

“ஆமாக்கா.. காப்பி குடிக்கோம்..” என கனியம்மாள் வாய் நிறைய பற்கள் தெரிய கூற, “பண்டத்துக்கு ஒன்னுமில்லயாக்கும்..” எனக் கேலியாகவே கேட்டாள்.. (“என்னைய த்த.. உங்க வீட்ட மாதிரி தெனம் ரோட்டுல போறது வாரது எல்லாம் வாங்கி திங்க முடியுமா??” -புவனேஷ்வரி)

“பண்டம்னு என்ன தனியா இருக்கு.. செத்தேன் நாலு அரிசிய வறுத்து வச்சிருக்கேன்.. அத தான் நாலு வாய் அள்ளி போட்டுக்கணும்..” என்ற கனியம்மாள் அதை பெருமையாக வேறு கூறி கொண்டார்.. “ஆஹா...ன்..” என ஒருபுறமாய் கழுத்து திருப்பிக் கொள்ள வாயை கோண வைத்து கொண்டாள்.. (“அவா பார்வைய பாரேன்.. முழுக்க பொறாமை.. அடுத்தவன் வீட்டுல செத்தேன் ஒன்னு கூடிரப்பிடாத.. அவா வயித்துக்குள்ள தபதபன்னு பத்திகிட்டு எரியுது.. அவா வீட்டுல எத்தனை நாலு ஒண்ணா கூடி கிடந்தது கும்மாளம் அடிக்காவ.. நாம என்னைக்காச்சும் கேட்டோமா?? அடுத்தவன் வீட்டுக்குள்ள நடக்கதை பாக்கதுல அவ்வுளோ சந்தோசம்.. வாயை பாரு.. கோணவாயி.. அவா தான் வயித்தெரிச்சல்ல புகையுதான்னு தெரியுதுல்லா.. பிறவு ஏன் இவா போய் எக்கான்னு பல் இளிச்சுக்கிட்டு கிடக்கா.. சும்மா மூடிக்கிட்டு வரவேண்டியது தான.. அவாட்ட குளுந்த பழக்கம் வுட்டா தான் ஆச்சா?? இந்த ஊர் உலகத்தை கெட்டி தூக்குத தெய்வமே அவாதாங்குற மாதிரி அவளுக்கு சப்போட்டா நம்மட்ட பேசுதது என்ன?? அவா கூப்புட்டான்னா ஓடி போய் என்னாங்குறது என்ன?? இதெல்லாத்தையும் வுட்டுருவேன்.. அன்னைக்கு குறுக்கு ஒடிய பத்து செல்லி பீடி சுத்தி வச்சிட்டு குளிக்க போயிட்டு வாரதுக்குள்ள ‘வடக்கு வீட்டுக்காரவிய கேட்டாவன்னு’ மூணு செல்லிய தூக்கி குடுத்துட்டா.. தூக்கி குடுக்கதுக்கு இவ சுத்துனாளா?? இல்ல நாள பின்ன அவா தான் இவளுக்கு படியளக்க போறாளா.. அலையுதா.. அடுத்தவளுக்கு அப்பணங் கட்டிக்கிட்டு..” என வசை வசையாய் விமரிசையாக கொடுத்திருப்பாள் புவனேஷ்வரி..)

கற்பனைக் குதிரையில் ஓடிக்கொண்டிருந்தவனை கனியின் உலுக்கல் நிறுத்தி கீழிறக்கியது.. “காப்பி வேணுமான்னு கேட்டுட்டே இருக்கேன்.. நீ உம்பாட்டுல உக்காந்துட்டு இருக்க..” என கேட்டுக்கொண்டிருக்கும் போதே, “யம்மா எனக்கு காப்பி தாம்மே.. தலைவலி உயிரு போவுது..” என தலையைப் பிடித்தபடியே வந்து சேர்ந்தாள் புவனேஷ்வரி.. “வந்துட்டா.. நினைச்சேன்.. வந்துட்ட.. நூறு ஆயுசுக்கா..” என ராகவன் கூற, உறுத்து முறைத்தவள், “நீ சொல்லு.. வாயிருக்குன்னு என்ன வேணா சொல்லு.. ஒ அம்ம என்ன பேசியே சாவடிக்கா.. நூறு ஆயுசாம்ல.. அம்பதே போதும்.. உங்கட்ட கெடந்து இடிபடுததுக்கு நிம்மதியா போய் சேரலாம் போல..” என களைப்பாக அவனருகே பையை போட்டுவிட்டு முற்றந்தரையில் கால்நீட்டி அமர்ந்துவிட்டாள்..

“ஏளா, பிள்ள தலைவலின்னு வந்து கிடக்கு.. அவன பாத்துட்டு காபி குடிக்கியான்னு கேட்டுகிட்டு கெடக்க.. முதல்ல பிள்ளைய கவனி..” என வேலப்பன் கடிந்து கொண்ட பிறகே அங்கு தந்தையின் இருப்பை உணர்ந்தாள் புவனேஷ்வரி.. அடித்து பிடித்து தலையை நிமிர்த்தியவள், கால்களை அடக்கமாக மடக்கி கொண்டு பவ்யமாக தந்தையை ஏறிட்டாள்.. காலையில் கத்திய வார்த்தைகளை கடனே என்று கேட்டுக்கொள்ளாமல் உள்வாங்கியிருந்ததால் வந்த மாற்றம் என்பதை கண்டுகொண்டாள்..

இனி மாற்றங்கள் என்பது அவளது வாழ்விலும் நிகழும் என்ற நிம்மதி மனதினுள் பரவ, தலைவலியோ வந்த வழியே சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது.. ராகவேந்திரனுக்கு ஊற்றிய காபியை இவளிடம் நீட்டி விட்டு, “பெரியவனே.. உள்ள சொளவுல எள்ளு பெடைச்சு வச்சிருக்கேன்.. அடுப்பாங்கரையில ஓலைபெட்டில ஒரு துண்டு கருப்பட்டியும் எடுத்து சாப்புடு.. இல்லன்னா கொண்டா.. நா கொஞ்ச கொஞ்சமா நாவி தாரேன்..” என்றார் கனியம்மாள்.

ராகவேந்திரன் உள்ளே செல்ல, அங்கிருந்தடியே “புவனா... பள்ளிகொடம் விட்டாச்சோ.. அங்க இருந்தா வார..” என மழுப்பலாக குரல் வந்து சேர, “ம்ஹும்.. இவா இருந்ததையும் பாக்காம விட்டுட்டேனே..” என சலித்து கொண்டே “ஆமா.. பள்ளிகொடம் விட்டாச்சு.. அங்கருந்து வரல.. எங்க அம்ம வயித்துல இருந்து தான் வாரேன்..” என பேசியவளின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது..

“வந்ததும் வராததுமா இப்பிடி சாணி தரையில உக்காந்துட்ட.. உடுத்தியிருக்கது என்னத்துக்கு ஆவுதது?? ஒரு சாக்கு கீக்கு விரித்து உக்கராலமென்ன..” என அடுத்த கணையை தொடுக்க, உள்ளே சென்றவனை அவசர அவசரமாக கருப்பட்டியை துழாவ செய்தது அக்காவின் வாயாடலை காண வேண்டும் என்கிற ஆர்வம்.. “நான் எங்க உக்காந்தா உங்களுக்கு என்ன த்த.. துணிய துவைக்க போறது நானு.. என்னை துவைக்க போறது எங்க அம்ம.. சாக்கு இருந்தா விரிக்க மாட்டோமா?? வேணுன்னா உங்க வீட்டுல இருந்து நாலு பாய் எடுத்தாந்து விரிங்களேன்..” என ஏகத்தாளமாக பேசியவளின் தலை புறந்திரும்பியிருந்தது..

“எப்பிடி பேசுது பாரேன்..” என்ற வடக்கு வீட்டுக்காரி, அடுத்தும் அங்கேயே இருந்தால் வேலப்பனிற்கு பதிலாக புவனேஷ்வரி ஆடிதீர்த்து விடுவாள் என்பதால் பூனை போல நழுவியே விட்டாள்.. “ச்சே.. இன்னைக்கு கச்சேரி வாங்காம போயிட்டே பொம்பள..” என அலுத்துக் கொண்டே வந்த ராகவேந்திரன் கனியிடம் முறத்தை கொடுக்க, கற்களின்றி எள்ளினை அரித்துக் கொடுத்தார்..

அதற்குள் மொத்த பருத்தியை பிரித்து முடித்த வேலப்பன் எழுந்து கொள்ள, பானையில் இருந்தவற்றை சாக்கில் தட்ட முயன்று கொண்டிருக்கும் போதே பிள்ளைகள் இரண்டும் சுற்றி நின்று விரித்து பிடித்தனர்.. கட்டி, மிதிவண்டியில் ஏற்றிக் கொண்ட வேலப்பன் அந்த தெருவை தாண்டும் வரை வாசலிலேயே வழியனுப்பி வைத்தது அந்த மொத்த குடும்பமும்..

ஒரு கை மிதிவண்டியின் முகப்பையும் மற்றொரு கை அணைப்பாக பின்னே கட்டியிருந்த பருத்தி மூட்டையின் மீதும் வைத்து பெடல் முட்டியில் இடிக்கா வண்ணம் உருட்டி நடந்தார் வேலப்பன்.. சந்தை நடைபெறும் நகரத்தின் சாலையில் இருந்து ஐந்தாவதாக அமைந்திருந்தது பூவனூர்.. பொழுது சாயும் முன் சென்று விட வேண்டும் என்ற முயற்சியில் தனது அகலமான பாதங்களில் வேகத்தினை கூட்டி நடக்க, சந்தையினுள் வந்தாயிற்று..

ஆங்காங்கே கம்பங்கள் நடக்கப்பட்டு தென்னை ஓலையை இரண்டாய் பிளந்து, கீற்றுகளை ஒன்றனுள் ஒன்றாக நுழைத்து நீள் சதுரமாய் பின்னி தட்டிகளாக மாற்றி ஒரு பாதியை மேற்கூரையாகவும் மற்றவைகளை தடுப்பு சுவர்களாகவும் மாற்றி, கடை கடையாய் அமைக்கப்பட்டிருந்தன.. காய்கறிகள் தொடங்கி மாடு வரை அனைத்து வியாபாரங்களும் அவ்விடத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்க, மேலும் உதவும் பொருட்டு அருகிலேயே ரயில் நிலையமும் அமைந்திருந்தது..

வர்த்தக பொருட்களோ வர்த்தகர்களோ அவ்விடம் வந்து செல்ல உதவியாக இருந்தது.. ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்து பருத்திக் கடையின் முன்னே மிதிவண்டியை நிறுத்தினார் வேலப்பன்.. நான்கு மூலைகளையும் மூழ்கடிக்கும் விதமாக மூட்டை மூட்டையாய் அடுக்கி வைத்து போதாத குறைக்கு தரையில் பரந்து கிடந்த பஞ்சுகளே பறைசாற்றியது அக்கடையின் வியாபார போகத்தை..

“என்னமியா?? இன்னிக்கு சீக்கிரமே வந்த மாதிரி இருக்கு..” என சிறு மேஜையின் மேல் பேனாவை கவிழ்த்து பழக்கதோஷமாய் குத்திக் கொண்டிருந்த கொழும்பன் கேட்டார்.. “உமக்கு என்னமியா?? தினம் உக்காந்து மையு தீருற வரை எழுதிட்டு துட்டு வாங்கிட்டு போயிரலாம்.. நம்ம பொழப்பு அப்பிடியா?? சாயங்காலத்துக்கு முன்னாடி வீடு போய் சேரணும்லா..” என்ற வேலப்பன் கயிற்றை அவிழ்த்து தரையில் நிமிர்த்தினார்..

“இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா இருக்கே.. அதான கேக்கேன்..” என்றவர் அருகில் நின்ற பையனிடம் நிறுத்து சொல்ல உத்தரவிட, “பொம்பள புள்ளைக்கு வயசு இருக்கும் போதே நல்லது கெட்டது பாத்துரணும்லா.. சரி.. பேச்சு பழக்கத்துல கணக்கை எழுதாம வுட்டு புடாதேயும்.. பாத்து சரியா எழுதும்..” என்றார் வேலப்பன்..

செவ்வக வடிவ மேடையின் நடுப்பகுதியில் இருந்து எழும்பிய கம்பியின் முனையில் சரிசமமான தராசு போல தொங்க விடப்பட்டிருக்க, அத்துடன் அளவுகோல் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.. படிக்கல்லை கோர்த்து விடும் அளவில் கம்பியும், மேடையின் மீதிருக்கும் எடைக்கு ஏற்ப நகரும் ஆடியும் அமைக்கப்பட்டிருந்தது.. நுகர்ந்த பொருளின் கணத்தால் ஆடி நகர, ஒவ்வொரு படிக்கல்லாக இணைத்து எடையினை கண்டறிவர்..

மகளின் வருங்காலத்தினை கருத்தில் ஏற்றிய வேலப்பனுக்குள் பொறுப்பு குடிகொண்டிருக்க, பொருள் ஈட்ட வேண்டும் என்ற அறிவு புதிதாய் துளிர்த்திருந்தது.. திடீரென திருந்தும் முடிவிற்கு வந்து விட்டால் விதியோ சதியோ தாண்டவமாட தொடங்குமாம்.. அது போல என்றுமே முப்பதிற்கு முன்னும் பின்னும் வந்து நிற்கும் மூட்டை இன்று நாற்பத்தி ஐந்தில் வந்து நின்றது.. வழக்கம் போல குறைத்து நாற்பதாக எழுதப்பட, “என்னய்யா.. இப்பிடி பண்ணுதியரு.. நாப்பத்தி அஞ்சு வந்துட்டுல்லா.. முழுசா அம்பதுன்னு எழுதலாம்லா.. அதென்ன நாப்பத்தி அஞ்சு நாப்பதாவுது??” என என்றும் இல்லாத திருநாளாய் கேள்வியை எழுப்பினார் வேலப்பன்..

“நம்ம கையில என்ன இருக்கு வேலப்பா.. எப்பயும் போடுதது தான.. இல்லாத அஞ்சுக்கு கணக்கு அழ முடியுமா??” என கேலியாக கொழும்பன் கேட்கவும் ‘அழ’ என்ற வார்த்தை வேலப்பனை எரிச்சலில் தள்ளியது.. “எங்களுக்கு நீரு ஒன்னும் அழ வேண்டாம்.. குடுக்க சரக்குக்கு ஒழுங்கான கூலிய தந்தா நாயா உம்ம கேள்வி கேக்க போவுது..” என வார்த்தையை விட, “ஒ.. இவ்வளோ நாளா சரியான விலையில வரவு செலவு வெச்சேம் பாரு.. எனக்கு நாயிங்க பட்டப் பேரு தேவை தான்..” என கொழும்பனும் தொடங்க, அருகில் மூட்டை தூக்கி போட்டு கொண்டிருந்த பையன், “விடுங்க.. நாப்பதுன்னு எழுதுனா என்ன?? அம்பதுன்னு எழுதுன்னா என்ன?? கூட அம்பது காசு வரும்.. அதுக்கு போய் இப்பிடி சந்தை கடையில வச்சு சத்தம் போடுதது நமக்கு தான அசிங்கம்..” என சமாதானம் செய்ய முயற்சித்தான்..

“எப்பிடிலே விட முடியும்.. அம்பது காசு என்ன மரத்துலயா காச்சு வருது.. வந்து பருத்தி பெறக்கி பாரு தெரியும்.. நான் ஒன்னும் துட்டை அனாமத்துக்கு கேக்கல.. உழைப்பு இருக்குல்லா.. குடுக்கதுக்கு தகுந்தால விலையையும் சரியா வைக்கனும்லா.. கூட்டி கழிச்சு இவியரு லாபத்தை மட்டும் பார்த்துட்டு போயிட்டா வாரவணுவ எல்லானும் இளிச்ச வாயனுவளா?? துட்டு தந்து அழுதாராம்லா..” என அநியாயத்தை கண்டு பொங்கி எழுந்தவராக கத்திக் கொண்டிருக்க, சுற்றி நின்றவர்கள் ஒருவர் ஒருவராய் விலக்கு தீர்க்க வந்ததும் கொழும்பனுக்கு மரியாதை குறைவாய் போயிற்று..

சங்கடமாய் நெளிந்த கொழும்பன் மொத்தத்திற்கும் வேலப்பன் தானே காரணம் என்ற சினத்தில், “அவ்ளோ ரோசம் பொங்கிட்டு வந்தா வேற எவன்ட்டயாவது போய் வித்து பாரு.. அப்போ தெரியும்.. எவன் நியாயமா போறான்னு..” என சவால் விட, “ஏலே.. ஒழுங்கான விலைக்கு எடுக்க உனட்ட வக்கு இல்லை.. ஏட்டிக்கு போட்டியா சவால் விடுதியோ.. நீ சொல்லி போனும்னு எனக்கு அவசியம் இல்லை.. எப்படி வித்து துட்டாக்கணும்னு எனக்கு தெரியும்.. போவே என் பிசிறு..” என கைலியை தொடைக்கு மேலே தூக்கி கட்டவும், கொழும்பன் ஆத்திரத்தின் எல்லைக்கே போய் விட்டார்..

“ஏலே.. உனக்கு மரியாதை அவ்வளோ தான்.. ஒழுங்கு மரியாதையா இங்கருந்து போயிரு.. இல்லாட்டி நடக்கதே வேற..” என விரட்ட, “நான் அப்பிடித்தான் நிப்பேன்.. உன்னால ஆனதை பாரு.. உன் உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாத்துக்கோ.. நடக்கதே வேறயா?? என்ன பண்ணிருவ?? என்ன பண்ணி கிழிச்சிருவ.. அடுத்து போடுததுக்கு கால்சட்டையும் மேல்சட்டையும் இல்லாம வந்து சேந்த நீ பண்ணுததையும் பண்ணிட்டு பெரிய இவன் மாதிரி பேசுதியோ..” என்ற வேலப்பன் நிமிடத்தில் சட்டையை பற்றி விட்டார்..

முடிந்தது.. தன்மானத்தில் கைவிட்டது போல கொதித்தெழுந்த கொழும்பன், ஓங்கி கைகளை தட்டி தள்ளிட, தடுமாறிய வேலப்பன் பின்னால் நின்ற நபரால் நிலைப்படுத்தப்பட்டார்.. இப்பொழுது கொழும்பனின் முறையாயிற்று.. வேட்டியை மடித்து சட்டையை இழுத்து விட்டு, “நானும் பாத்துட்டே இருக்கேன்.. ரொம்ப தான் துள்ளி துள்ளி கத்துத.. ஒ சண்டியர்த்தனம் எல்லாம் இங்க காட்டப்பிடாது.. அடுத்த கால்சட்டைக்கு வழியில்லாம வந்து நின்னேன்னு யாரு சொன்னா?? நூறு வீட்டுக்காரன்லே.. பேசுததுக்கு முன்னாடி பாத்து பேசணும்..” என்றது தான் தாமதம்.. அங்கே ஒரு சில கைகலப்பில் ஆரம்பித்து தள்ளு முள்ளு நடந்தது..

அங்கே நடந்த களேபரத்தை நிறுத்துவதற்காக சந்தையின் முக்கிய பங்கு வகிப்பவர்களில் ஒருவர், “நிறுத்துங்க.. அட ச்சை.. நிறுத்துங்கப்பா.. ஏய்.. நிறுத்துலே..” என கர்ஜனையாய் முழங்கிட, அவர் அணிந்திருந்த வெள்ளை வேட்டி சட்டைக்கும் பின்னால் இருந்த பதவிக்கும் மரியாதை தந்து கூட்டம் அமைதியை பூசி கொண்டது.. “என்னய்யா இங்க சலசலன்னு சண்டை..” என கேட்டபடியே வந்தவர், வேலப்பனை கண்டதும் தனக்குள்ளே “ஓஹோ..” போட்டுகொண்டார்..

“என்னய்யா??” என இருவரிடத்திலும் வினவ, “இல்லாத அஞ்சு கிலோக்கு கணக்கு எழுத சொல்லுதான்..” என கொழும்பன் முந்திக் கொண்டு பதில் தந்திட, “இல்ல.. அவன் அஞ்சு கிலோ குறைச்சு போட்டான்..” என உடனடியாக படபடத்தார் வேலப்பன்.. “ப்ச்.. ஆலங்கனி.. உனக்கு என்ன தான் பிரச்சனை.. தினம் எதாச்சும் ஒரு சண்டையை விலக்கு தீக்க வரணுமா?? எங்க போனாலும் ஒரு கோணக்கால் நீட்டிகிட்டு..” என அடக்கி விட்டு, “இப்போ என்னயணும்?? இவன் வாங்க மாட்டான்னு சொல்லிட்டாம்ல.. கழுத போவுதுன்னு விட்டுட்டு அடுத்த கடைய பாத்து போவியா.. அத வுட்டுட்டு மல்லு ஏறிக்கிட்டு கிடக்க..” என அங்கிருந்து நகர சொன்னார்..

அவருக்கு மறுவார்த்தை பேசும் தைரியம் எவருக்கும் இல்லாததால் வேலப்பன் கூட்டத்தின் நடுவே தனது பருத்தி மூட்டையை தேட, ஈரம் பூத்து இறுகிப் போயிருந்தது.. மெல்ல தூக்கி தோளில் இட்டு. அங்கிருந்து நகர்ந்து இன்னொரு கடையை தேடி சென்றார்.. பருத்தியில் ஈரம் ஏறியதால் ஏற்கனவே சொல்லிய விலையில் இருந்து மேலும் ஐம்பது காசு குறைவாகவே கிடைக்கப் பெற்றது.. கையில் வாங்கிய பைசாக்களை முன்னும் பின்னும் திருப்பி பார்த்திட சதுரமாக காலணா வேலப்பனை நாராசமாய் பார்த்து சிரித்தது..

தொங்கிய தலையுடன் மிதிவண்டியை உருட்டி வந்த வேலப்பனின் மனம் முழுவதும் பாரம் நிறைந்து கிடக்க, வழியில் சாராயத்தின் நெடி ‘வா’வென்று அழைக்கத் துவங்கியது.. ஏற்கனவே தவறு நடக்கப் பெற்றால் கொதித்து எழும் வேலப்பன், வீரமாக பேச முடியாது போகையில் நாடி செல்வது போதையையே.. இதோ இப்பொழுதும் ஆத்திரத்தில் அறிவை இழந்து பிள்ளையை பற்றிய பொறுப்பு பின்தங்கி, கடையை நோக்கி கால்கள் முன்னோக்கியது..

கிடைத்த நாலு ரூபாயில் மூன்றே முக்காலும் முடிந்து போகும் மட்டும் மூக்குமுட்டக் குடித்த வேலப்பன், மிதிவண்டியை மறந்து வீட்டினை அடையும் வழியை மட்டும் நினைவு வைத்து தள்ளாடியபடி நடந்தார்.. தட்டுத் தடுமாறியபடி வீட்டினை அடையும் பொழுது மணி எட்டை கடந்திருந்தது. இரவு உணவை பிள்ளைகளுக்கு வழங்கி விட்டு, வேலப்பனுக்கு தனி பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, குழம்பு சட்டியை கழுவிக் கொண்டிருந்தார் கனியம்மாள்.

தட்டுக்களையும் கிண்ணத்தினையும் திண்ணையில் கவிழ்த்தி விட்டு, அடுத்ததாக இரண்டு கட்டு இலையை மறுநாளில் பீடி சுற்றுவதற்காக வெட்டி வைத்து விட வேண்டும் என்ற கணிப்போடு வேகமாக சாம்பல் கொண்டு பரபரவென தேய்த்து கொண்டிருக்க, ஊற வைத்திருந்த இலையை எட்டி மிதிக்கவும் அரவம் கேட்டுத் திரும்பினார்..

கனியம்மாள் மட்டுமில்லை.. பிள்ளைகளுமே திடுக்கிட்டனர்.. உள்ளுக்குள் மதிப்பீட்டு புத்தகத்தின் முகப்பு பகுதியை புவனேஷ்வரி தயார் செய்து கொண்டிருக்க, அக்காவிற்கு உதவியாக மகேசன் காகிதங்களை வெட்டிக் கொண்டிருக்க, மற்றொரு உதவியாக பீடி இலையை வெட்டிக்கொண்டிருந்தான் ராகவேந்திரன்.. ஆண் பிள்ளைகள் இரண்டும் நிலைக்கதவிற்கு வந்திட, “ஏ.. பரதேசி மொவனே.. நாப்பயலே..” என அடுக்கு மொழியில் அனத்த தொடங்கினார் வேலப்பன்..

உடனே நால்வரும் உள்ளே சரக்கு இறங்கியுள்ளது என்பதை அனுமானித்துக் கொண்டு குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி காக்க, “என்னையே ஏமாத்த பாக்கான் அந்த கள்ளப்பய மொவன்..” என ஒவ்வொரு சொற்றொடரின் பின்னும் சொந்தமாய் செல்வமிழந்த சொற்களை சேர்த்து கொண்டார்.. “அந்த கொழம்ப பய.. நேத்து வந்த சுண்டக்கா பய.. என்னையே எதுத்து பேசுதான்.. அவ்ளோ அதுப்பு.. நீ இன்னைக்கு வந்தவன்.. நா காலங்காலமா இருக்கேம்ல.. ஊருக்குள்ள ஒரு பய என்னைய ஒன்னு சொல்ல முடியாது.. என் வீட்டு பக்கம் வந்து கேட்டு பாரு.. கண்டவனுக்கு கீழ்படிஞ்சு நடக்கணுமோ.. போலே.. இனி உன் சந்தை பக்கம் வந்தா என்னை ச்சீ இன்னு..” என ஏகபோகமாக எங்கோ பேச வேண்டியதை இங்கு மேடை பேச்சாளர் போல உளறிக் கொண்டிருந்தார்..

சுற்றிலும் உள்ள வீடுகளில் திறக்கப்பட்ட ஜன்னல்கள் வேடிக்கை நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்று ஊருக்கே பறைசாற்றியது.. இந்நிலையில் சென்று அமைதி காக்கும்படி தடுத்தால் கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு நீடிக்கும் என்பதை அறிந்து ஏதும் செய்ய இயலாது கையை பிசைந்து கொண்டு நின்றனர் தாயும் மக்களும்..

“எல்லாம்.. இவளால.. அன்னிக்கு வந்த பயலுவ துட்ட என் கையுல தந்துட்டு போயிருந்தானுவன்னா இப்பிடி கண்ட நாயும் என்னை பேசுத நிலைம வந்துருக்குமா?? என் அப்பன் இருந்தது வரைக்கு ராஜா மாதிரி வாழ்ந்தேன்.. எப்பிடி ராஜா மாதிரி.. அவன் போனான்.. என் மானம் மரியாதை எல்லாத்தையும் கொண்டே போயிட்டான்.. யப்போ.. எங்கப்பா இருக்க.. இந்த ஈனபயலுவ ஆடுத ஆட்டத்தை பாத்துட்டு தான் இருக்கியா.. நீ குடுத்து வச்ச புண்ணியாளன்.. நிம்மதியா போயிட்ட...” என சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க, விருட்டென தம்பிகளை இடித்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தாள் புவனேஷ்வரி..

மற்றவர்களுக்கு வேடிக்கை பொருள் போல நடுமுற்றத்தில் நின்று, குறளிவித்தை நடத்தி கொண்டிருந்த வேலப்பனை சங்கடமாக நோக்கி, “யப்பா..” என்று அழைத்தாள்.. சட்டென திரும்பி பார்த்து, “அம்மா புவனா..” என பம்மிய பூனையாக குரல் கொடுக்க, “ஒழுங்கா உள்ள வந்து தூங்குங்க..” என சற்றே அதட்டலாக கட்டளையிட்டாள் என்றால் அவள் கொண்டிருந்த கோபம் அவ்வாறானது..

“ம்ம்.. உனக்கு படிக்க தொந்தரவா பேசிட்டு இருக்கேனோ..” என ஆமை போல தனது அனைத்து அட்டூழியத்தையும் கூட்டினுள் உள்ளடக்கிக் கொண்டு திண்ணையில் சாய்ந்தார்.. “ம்ம.. என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்க.. நாளைக்கு கணக்கு போடுததுக்கு இலை வெட்டன்டாமோ??” என கேட்கவும்தான் கடமையின் உணர்வு வர, எப்படியோ அடங்கினாரே என்ற நிம்மதியில் புகையிலை தட்டை எடுத்து, மடியில் வைத்து அமர்ந்தார் கனியம்மாள்..

அப்பொழுது,

“அம்மா புவனா...” என்ற வேலப்பனின் சத்தம் கேட்டும் பதில் கொடுக்காமல் புவனேஷ்வரி நின்ற இடத்தில் நிற்க, மீண்டும் “அம்மா புவனா..” என்ற குரல் ஏக்கமாய் வெளிவந்தது.. மெல்ல வேலப்பனின் முன்சென்று நிற்க, “அப்பாவுக்கு பசிக்கு.. சோறு வச்சு தாரியாம்மா...” என கேட்கவும் புவனேஷ்வரியின் கோபம் இருந்த இடம் தெரியாமல் பறந்திட, வேகவேகமாய் தட்டில் சோற்றை இட்டு, வைத்திருந்த குழம்பையும் ஊற்றிக் கொடுத்து விட்டு அருகிலேயே ஒரு சொம்பில் தண்ணீரையும் முன்னெச்சரிக்கையாய் வைத்து விட்டு சென்றாள்..

உள்ளே சென்ற ஆல்கஹால் இரைப்பையை அரித்து தின்றிருக்க, சோற்றை மடமடவென உண்ணத் தொடங்கினார் வேலப்பன்.. வீட்டினுள் செய்து கொண்டிருந்த வேலையை எடுத்து வந்து முற்றத்தில் பாய் விரித்து தொடர்ந்தாள்.. உண்டு முடித்த வேலப்பன் தட்டிலேயே கைகழுவி விட்டு எழ, “நான் போட்டுக்குறேன்..” என்கவும் திண்ணையிலேயே சரிந்து உறங்க, தட்டினை எடுத்து கழுவிய புவனேஷ்வரி மீண்டும் வீட்டினுள் தஞ்சம் புகுந்து கொண்டாள்..
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-7

வழக்கம் போல பொழுது புலர, வாசலில் கோலம் போட வந்த புவனேஷ்வரி திண்ணையில் தூங்கி கொண்டிருந்த வேலப்பனை எழுப்பிவிடக் கூடாது என தள்ளி நகர, வாசலில் போட்டிருந்த சாக்கில் இடறி அருகில் இருந்த சுவற்றில் கால் இடித்து கொண்டது.. ரத்த ஓட்டமே இன்றி நரம்புகளும் எழும்புகளும் பின்னிக் கிடந்த விரலில் வலி உயிர் போகும் அளவிற்கு சுள்ளென பிடித்தது.. “ஷ்.. ஆ..” என விரலைப் பிடித்து அமர்ந்தவள், வேலப்பன் விழித்து விடாமல் இருக்க வலியை இழுத்து உதடு கடிப்பில் மீட்டினாள்..

பின் மெல்லமாய் நடந்து முற்றத்தில் ரங்கோலியை முடித்துவிட்டு திரும்புகையில் வேலப்பன், திண்ணையில் சரிந்து அமர்ந்து கண் தட்டாது அமர்ந்திருக்க ஒரு நொடி அதிர்ந்தே போனாள்.. அதற்கு சான்றாக அவளின் உடல் அரை இன்சிற்கு பின்னாக மீண்டு வர, “யப்பா..” என நெஞ்சில் கைவைத்து மூச்சை வெளியிட்டாள்..

கன்னத்தில் கைவைத்து மகள் இட்ட கோலத்தின் அழகை ரசித்து கொண்டிருந்த வேலப்பன், “புவனா காப்பி போட்டா கொண்டா..” எனக் கூற, கோலப்பொடி டப்பாவை அவள் உயரமே இருந்த கூரையின் மேல் தட்டில் நுழைத்து விட்டு உள்ளே சென்றாள்.. இரவு நேர பனிகளில் ஈரம் படர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அவள் தேர்ந்தெடுத்த எச்சரிக்கையான இடம் அது.. ஆனாலும் விளக்கின் வெளிச்சத்திற்கு வரும் வண்டுகள் தன்னுடைய இன்னுயிரை கோலப்பொடி எனும் பாலைவனத்திலே நீத்து விடும்.. இரண்டு தட்டு தட்டினால் ஒரு ஓரமாக ஒதுங்கி விடும் வண்டுகளை நீக்குவது அவளுக்கு பெரிதான வேலை இல்லைதான்..

தன்னுடைய சமையல் பெருமைகளை அறிந்து வைத்திருந்த புவனேஷ்வரி, விவேகமாக சென்று கனியம்மாளை உசுப்பினாள்.. “ம்மோ.. ம்மையோ..” என்றவளை தூக்கக் கலக்கத்தில், “என்ன??” என முகத்தை சுருக்கினார் கனியம்மாள்.. “அப்பா காப்பி கேட்டாவ..” என படபடவென கூறிவிட்டு வட்டத்தையும் பனைப்பெட்டியையும் தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு, கையோடு சணல் சாக்கையும் இழுத்து கொண்டு சென்றாள்..

எழுந்து அமர்ந்த கனி, நீட்ட நீட்டமாய் நட்டுக் கொண்டிருந்த முடியை ஒதுக்கி மொத்தமாய் கொண்டையிட்டு, கண்களை தேய்த்து, “செத்தே நேரம் கண்ணசர வுடுதாவளா?? காலங்காத்தாலே காப்பி தான்னு எழுப்பிக்கிட்டு.. மனுஷி நிம்மதியா தூங்க முடியுதா?? பீடி சுத்துக்காரி உக்காந்தே சுத்துதாளே, குறுக்கு வலிக்குமேன்னு ஒரு அக்கறை கிடையாது.. தலை வேற வின்னு வின்னுன்னு தெரிக்குதும்மா..” என புலம்பிக் கொண்டே எழுந்தார்..

“ஏ தாயி.. நீயே போட்டுக்குடுக்கலாம்லா.. உறக்கத்துல இருக்கவள தான் எழுப்பனுமாக்கும்...” என கேட்க, “ம்ம்.. நான் போட்டா காப்பி நல்லா வராது..” என உதட்டை சுழித்த புவனேஷ்வரி; சரிகையில் இருந்த வெட்டிய இலைகளை பீடி தட்டில் மிஞ்சியிருந்த நீர் திவலைகளை உதறி ஒரு ஓரமாக எடுத்து வைத்தாள்.. “ஒரு பிள்ளைக்கு கடுங்காப்பி போட தெரியாதாக்கும்.. ம்ஹும்.. தேயிலையும் சீனியையும் அள்ளி போட்டு வெண்ணியில கலக்குததுக்குமா படிச்சிட்டு வருவாவ.. நல்லா வளந்துருக்கும்மா.. நாளைக்கு ஒரு வீட்டுக்கு போனா அவா என்னல்லா பிள்ளைக்கு ஒன்னும் சொல்லி குடுக்கலன்னு வையுவா..” என முனங்கி கொண்டே காபியை போட்டு முடித்தார் கனியம்மாள்..

வாசலில் அமர்ந்து கொண்டிருந்த புவனேஸ்வரியை, “பொம்பளபிள்ள வாசல்ல உக்காராதன்னு எத்தன தடவ தாயி உனட்ட சொல்லட்டும்.. வாசல்ல மறிச்சிட்டு உக்காந்து கிட்டன்னா சூடா செம்பை வச்சிக்கிட்டு எங்கோடி போவட்டும்.. கொஞ்சமா நவுண்டு உக்காரு..” என கடிந்து கொண்ட கனியம்மாள், அவளின் முதுகுப்புறமாக உருவாகிய சிறிய இடைவெளியை பயன்படுத்தி வெளியே வந்தார்..

வேலப்பனுக்கு ஒரு டம்ப்ளரில் ஊற்றிக் கொடுத்து விட்டு, புவனேஸ்வரிக்கும் கொடுத்த கனியம்மாள் அங்கேயே குத்த வைத்து அமர்ந்தார்.. பனை நாரினால் வேயப்பட்ட வட்டவடிவ தட்டில் சாதம் போல புகையிலை தூள் கும்பமாக கொட்டப்பட்டிருக்க, ஓரமாக இலையும் மற்றொரு ஓரத்தில் சுற்றிய பீடியும் அடுக்கியிருந்தாள்.. செய்யது பீடியில் சிவப்பு நூலில் மிக நேர்த்தியாக உருட்டப்பட்டிருந்த பீடியை கையில் எடுத்த கனியம்மாள், கொஞ்சமாய் தூளை அள்ளி பீடியினுள் சொருகி முன்னும் பின்னுமாய் நீண்டு கொண்டிருந்த இலையை சமமாய் வெட்டி பொட்டுக்குச்சியை கொண்டு நட்சத்திர வடிவமாய் மடக்கினார்..

நாக்கில் எச்சில் தொட்டு நூலினை படுவேகமாக அறுத்து பீடியோடு தேய்த்து விட்ட புவனேஷ்வரி, “ஏம்ம, ஒழுங்கா மடக்கனும்னா மடக்கு... இல்லன்னா போய் தூங்கு.. தூக்க கலக்கத்துல நத்தலும் கொத்தலுமா மடக்கி போடுவ.. பெறவு அங்க போய் நொடிச்சிட்டான்னு சொல்லப்புடாது..” என்றாள்.. “சரியா தான் மடக்குதேன்..” என்று விட்டு கவனமாய் தொடர, வலது புறத்தில் மட்டும் முனை நீண்டபடி வெட்டப்பட்டிருக்க, எதிர்பதத்தில் முக்கோணமாய் மடக்கி விட்டு சிறிதாய் தூளை அள்ளி வைத்து இடது புறத்தில் சிறிதாய் உருட்டி, இரு கைகளுக்கு நடுவில் வைத்து ஒரே தேய்ப்பில் முழு பீடியாய் மாற்றியவள், வாலின் கால்பகுதியில் நூலை மூன்று சுற்று சுற்றி மிஞ்சியதை உருட்டிக் கொண்டிருந்தாள்..

மகள் பீடி சுற்ற, தாயார் மடக்கி கொடுக்க, விறகு போல சில சென்டிமீட்டர்களுக்கு அடுக்கப்படவும் இலை இரண்டோ மூன்றோ மிஞ்சியிருந்தது.. முனைகளில் சேதமானது என்பதால் கவனமாக உருட்டி தனியே எடுத்து வைத்தாள்.. அதே சரிகையில் பீடியை பரப்பிவிட்டு, பதினான்கு பதினான்காக எண்ணி எடுத்து பச்சை நூலின் சற்று மேலேயே மீண்டும் ஒரு சுற்று கொடுத்து கெட்டாக கட்டினர்..

அதற்குள் மகேசனும் ராகவேந்திரனும் எழுந்து வந்திருக்க, கட்டிய கட்டுக்களை தட்டில் வைத்துவிட்டு சமைப்பதற்காக எழுந்து சென்றார் கனியம்மாள்.. பீடியை மடக்கிக் கொண்டிருக்கும் பொழுதே வேலப்பன் எழுந்து, நேற்று தொலைத்த மிதிவண்டியை தேடிச் சென்றிருந்தார்.. எதையும் கருத்தில் கொள்ளாது பீடி கட்டுக்களை பொறுப்பாக சைஸ் பார்க்கத் தொடங்கினாள் புவனேஷ்வரி.. கட்டுக்களின் கீழே ஒவ்வொரு பீடியின் வாழும் சிறிய கோடாக காட்சியளிக்க, வெளியே ஒரு சுற்று வட்டமாக மாற்றி உள்ளிருப்பதையும் முக்கோணமாக மாற்றுவதற்காக ஒவ்வொன்றாய் மேலேற்றி உருட்டி கீழிறக்கினாள்..

காலையில் எழுந்த கொஞ்ச நேரத்தில் நூறு தூளை சுற்றி முடித்த நிம்மதியோடு பீடி கட்டுக்களை சரிகையில் இட்டு முடிச்சைப் போட்டு தட்டில் வைத்தவள்; அருகிலேயே கத்தரிப்பான், பொட்டுக்குச்சி, மற்றும் ஆர்சை பத்திரமாக அடுக்கினாள்.. இவ்வளவு நேரம் கால்களைமடக்கி போட்டு அமர்ந்திருந்ததால் கைகால்களில் ரத்த ஓட்டம் நின்று விட்டிருக்க, “யப்பா..” என்ற பெருமூச்சோடு கால்களை நீட்டினாள்.. “என்ன??” என வாயில் வைத்த சாம்பல் விரலோடு மகேசன் தலையை ஆட்ட, “பெரிச்ச்சல் பெத்திட்டு..” என்றவள் எழுந்து கால்களை உதறிவிட்டாள்..

அதற்குள், “ஏல... போயி கடையில செத்தேன் கடுகு வாங்கியா..” என மகேசனை வேலை கூற, “பக்கத்துல நிக்காம்லா.. அவனை சொல்ல வேண்டியது தான.. எப்போ பாத்தாலும் என்ன மட்டுமே வேலை யாவுதது...” என சலித்துக் கொள்ள, “வீட்டுக்கு கடைக்குட்டின்னு பேரு எதுக்கு வச்சதுன்னு நினைக்க?? கடைக்கு போயிட்டு வாரத்துக்கு தான்..” என புவனேஷ்வரி இடையில் நுழைந்தாள்.. “அவ கிடக்கா.. இந்தா.. வாங்கியா.. சீக்கரம்.. அடுப்புல எண்ணைய போட்டுட்டேன்.. சுடுததுக்குள்ள வாங்கிட்டு வா.. ஓடு..” என கனியம்மாள் விரட்ட, முறைத்துக் கொண்டே நகர்ந்தான் மகேசன்..

“நீ என்ன முழிச்சிட்டு நிக்க?? சீக்கரம் குளிக்க வழிய பாக்கதுக்கு இல்ல.. நீ பம்பு செட்டுக்கு போவ போறியா எப்பிடிலே..” என ராகவன் புவனா இருவரையும் விரட்ட, அவ்வீட்டின் முற்றம் காலியானது.. வழக்கம் போல ஒவ்வொருவரும் அவரவரின் பாதையில் பயணிக்கத் தொடங்கினர்..

இதிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து..

மாலை வேலையில் முற்றத்தில் அமர்ந்து கருப்பட்டி காப்பியும் அவித்த உளுந்தும் சோளமுமாய் கைகளில் அள்ளி ருசித்து கொண்டிருந்தனர் நால்வருமாய்.. அப்பொழுது மிதிவண்டியின் டயரில் ஒருவனும் நுங்கு கூந்தல் வண்டியில் ஒருவனுமாய் வந்திறங்கினர்.. அரைஞாண் கயிற்றில் சுருட்டி வைத்திருந்த காற்சட்டை கயிறோடு கீழிறங்கிட, இரு கைகளாலும் தூக்கி விட்டுக்கொண்டனர்..

“யக்கா.. புவனாக்கா.. உன்னையும் உங்க அம்மையையும் பெரியம்ம வரச்சொன்னாவ..” என ஒற்றன் போல தகவல் கூறிட, “ஏலே.. வாரியளா.. ஆளோட வந்து காப்பி குடிங்க..” என தன்னுடைய விருந்தோம்பலை காட்டினார் கனியம்மாள்.. தங்களின் விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை பொதும்பி நின்ற சுண்ணாம்பு சுவற்றில் சாய்த்து விட்டு அந்த வட்டத்தில் ஐக்கியமாகி அமர்ந்தனர்..

இருவருக்கும் ஒவ்வொரு டம்ப்ளரில் காப்பியை ஊற்றிக் கொடுக்க, மேலுதடு ஊத, கீழுதடு உறிஞ்ச ருசித்தனர்.. இரண்டு மிடறுக்குப் பின், “யாருல வரச்சொன்னா?? உங்க பெரியம்மயா?? இல்ல எங்க பெரியம்மயா??” என புவனேஷ்வரி விசாரிக்க, “அந்த மேல தெருவுல காம்போண்டு போட்ட வீடு உங்க பெரியம்ம வீடு தான..” என எதிர் விசாரணை செய்தான்..

“இருக்கது தம்மாத்துண்டு.. பேசுதது பெரிய இவன் மாதிரி..” என பின்னந்தலையில் மகேசன் தட்ட, “நீ சும்மா இருண்ணே.. இவேன் தலையில யாராச்சும் அடிச்சா கல்ல தூக்கி எறிஞ்சுப்புடுவான்..” என புழுதி படிந்த புருவத்தினை மேலேற்றினான்.. “ஏல.. நீ சும்மா கெட.. தூக்கி அடிச்சு புட்டான்னா போச்சு.. அவென் அம்மைட்ட ஆவுதாலிக்கு போயிட்டு கிடக்க முடியாது பாத்துக்கோ..” என தன் மகனை அதட்டினார் கனியம்மாள்..

“ச்சேரி.. நாங்க போயிக்குவோம்.. நீ போயி விளையாடு..” என புவனேஷ்வரி துரிதப்படுத்த, “செத்தேன் சும்மா இரேன்.. ரெண்டு மொடுக்கு தான் குடிச்சிருப்பான்..” என கனியம்மாள் தடுத்திட, அவர்கள் இருவரையும் வழியனுப்பிய பின்னரே தாயும் மகளும் மேல தெருவை நோக்கி நடைபோட்டனர்..

“எதுக்கு வர சொல்லியிருப்பாவ??” என புவனேஷ்வரி சந்தேகம் கேட்க, “எனக்கு மட்டும் தெரியவா செய்யும்.. நானும் உங்கூடதான நடக்கேன்.. தொணதொணன்னு பேசாம நட.. காலை நல்லா தான் எடுத்து வச்சு நடையேன்.. பூனை மாதிரி நடக்க.. ஒரு குமரி தாயிக்கு முன்னாடி பொடு பொடுன்னு நடப்பா கண்டிருக்கோம்.. உன்னயும் வச்சுட்டு நானும் திரியுறேன்..” என கனியம்மாள் கூறவும், “ம்க்கும்..” என உதட்டை சுழித்து வேறுபுறமாய் திருப்பிக்கொண்டு வேகமாய் நடந்தாள்..

சிறிது தூரத்தில் பொன்னம்மாவின் வீட்டை அடைந்திருக்க, “கனியம்ம.. ஏப்ளே புவனா.. வாங்க என்ன விசேஷம்...” என எதுவுமே அறியாதவர் போல வரவேற்க, “நீங்க கூப்புட்டியன்னு தான் ரெண்டு வேரு சொல்லிட்டு போனானுவ பெரியம்மா..” என உடனடி பதில் கொடுத்தாள் புவனேஷ்வரி.. தாய் குற்றம் செய்து விட்டது போல கண்களை குறுக்கி முறைத்த எதையும் கண்டுக்கொள்ளாமல் திண்ணைக்கு பக்கத்தில் கவிழ்த்து வைத்திருந்த கூடையின் மீது பார்வையை நிலைநிறுத்தியிருந்தாள்..

“சும்மா அவள முறைக்காதீய.. நான்தான் வர சொல்லிருந்தேன் போலருக்கு.. வேலை நெனப்புல அப்பிடியே மறந்துட்டேன்.. ஹிஹிஹி..” என மழுப்பலாக சிரித்த பொன்னம்மா, “ஊர்ல இருந்து பொன்னரசி வந்துருக்கா பாத்துக்கோ.. உன்னிய பாக்கணும்னு சொன்னா.. ஒரு எட்டு போய் பாத்துட்டு வான்னேன்.. முடியாதுன்னு முரண்டு பிடிக்கவும் தான் ச்சேரி உன்னை வர சொல்லிருவோமேன்னு சொல்லி வுட்டேன்..” என்றார்..

“புவி.. எப்பிடி இருக்க ப்ள.. பாத்து ரொம்ப நாள் ஆச்சுது.. அன்னிக்கு பாத்ததுக்கு இப்போ கொஞ்ச தேறிருக்க போல.. எதாச்சும் வேலையா இருந்தியா??” என கேட்டப்படியே வெளியே வந்தாள் பொன்னரசி.. “வேலல்லாம் இல்ல.. சும்மாதான் உக்காந்து காப்பி குடிச்சிட்டு இருந்தோம்.. அக்கா ஊர்ல இருந்து வந்துட்டான்னு சொல்லியிருந்தா அவளே வந்துருப்பாளென்ன?? இதுக்கு போயி அரசிய வைதுக்கிட்டு.. என்ன யக்கா நீங்க??” என மொத்த தோசையையும் திருப்பிப்போட்டு விட்டார்..

அந்த நொடியில் புவனேஸ்வரிக்கோ, இதில் தன்னை திட்டுவதற்கோ அக்காவை உயர்த்துவதற்கோ என்ன உள்ளது?? என்ற குழப்பம் மேலோங்கியது.. சொந்தத்திடம் தவறே செய்திருந்தாலும் விட்டுக்கொடுக்காத தாயின் மத்தியில் கிடைக்கும் அத்தனை பழியையும் அள்ளி தன் மகள் மீது போடும் கனியம்மாள் சற்று வித்தியாசமாகவே தெரிந்தார்..

அதற்குள் பொன்னம்மா கனியம்மாளை அழைத்து கொண்டு உள்ளே செல்ல, “அவட்ட பேசிட்டு இரு..” என கட்டளை வேறு புவனேஸ்வரிக்கு.. எரிச்சல் ஒரு புறம் இருந்தாலும் பெரியம்மாவின் மகள் மீது காட்டிட தோன்றவில்லை.. பாவம் பல நாட்களுக்கு பின் வீடு திரும்பியுள்ளாள்.. முதல் சந்திப்பிலேயே நோகடிக்க மனமில்லை..

“வா புவி.. இங்க உக்காரு..” என அரசி ஆசையாய் அழைக்க, சென்று அமர்ந்தாள்.. “எப்பிடிக்கா இருக்க?? படிப்பு எப்பிடி போவுது??” என அக்கறையாய் நலம் விசாரிக்க, “நல்லாருக்கேன் ப்ள.. படிப்பு முடிஞ்சிது.. பீஎட் முடிச்சிட்டேன்.. அடுத்து வேலைக்கு போவனும்.. நீ என்ன பண்ண போறே?? டீச்சர் ட்ரைனிங் இந்த வருஷத்துல முடியுதுலா..” என்றாள் பொன்னரசி..

“ஆமாக்கா.. இன்னும் ஒரு மாசம் இருக்கும்.. முடிச்சிட்டு என்ன பண்ண?? இங்க எங்கனயாவது வேலைக்கு பாக்கணும்..” என்ற புவனேஷ்வரி, “இன்னிக்கு தான் வந்தியாக்கா..” என கேட்டாள்.. “நேத்தே வந்துட்டேன்.. உன்னிய பாக்க வரணும்னு தான் பாத்தேன்.. அதுக்குள்ளே எங்க மாமா வீட்டுல இருந்து வந்துட்டாவ.. அவியள பாத்து அனுப்புமுன்ன நேராயிட்டு.. காலையிலே வரணும்னு பாத்தா.. நீ இருக்க மாட்டல்லா..” என்கவும் “இனி இங்க தான??” என உற்சாகத்தோடு கேட்ட புவனேஸ்வரியை புன்னகையுடன் நோக்கிய அரசி, “இல்ல ப்ள.. என் பிரெண்ட் ஒருத்தி வேலைக்கு சொல்லியிருக்கா.. கிடைச்சா போவனும்..” என கூறினாள்..

“பெறவு.. வீட்டுல ஏதாவது பாக்காவளா??” என இலைமறையாய் திருமணத்தை பற்றிக் கேட்க, “எனக்கென்ன ப்ள தெரியும்.. எல்லாத்தையும் நம்மட்ட சொல்லிட்டா செய்வாவ.. அப்பா மேலூருல ஏதோ நல்லா இருக்குன்னு நம்ம அம்மைட்ட சொல்லிட்டு இருந்தாவன்னு கேள்விப்பட்டேன்..” என்றாள்... “அப்போ அடுத்த வருஷ ராமசாமி கோயிலு கொடைக்கு ஜோடியா தான் வருவ..” என்கவும் பொன்னரசியின் மஞ்சள் பூசிய முகத்தில் வெட்கம் படர்ந்தது.. “அய்..” என வெட்கத்தை கண்ணுற முயற்சித்து கொண்டிருக்கும் போதே கனியம்மாள் வெளியே வந்திருந்தார்..

“என்ன அரசி, எப்பிடி இருக்க?? சோமா இருக்கியா??” என நலம் விசாரிக்க, “நான் நல்லா இருக்கேன் சித்தி.. நீங்க எப்பிடி இருக்கிய?? சித்தப்பா இப்போவும்..” என வார்த்தைகளை விழுங்கி கொண்டாள் பொன்னரசி.. “என்னைய?? நமக்கு தலையெழுத்து அப்பிடின்னு போவ வேண்டியது தான்.. வேற என்னயட்டும்..” என விரக்தியான சொற்களையும் சிரிப்போடு கூறினார்..

சிறிது நேரத்திற்கு அங்கு மௌனம் நிலவிக் கொண்டிருக்க, “போயிட்டு வாரோம் க்கா.. வாரேன் பெரியம்மா..” என புவனேஷ்வரி முந்திக் கொள்ள, “ச்சேரி.. வாங்க..” என பொன்னம்மா விடை கொடுத்தார்.. தன் புறம் வந்த கனியம்மாளின் பார்வைக்கு, “வாங்க சித்தி..” என்று விடை கொடுத்தாள் பொன்னரசி.. விடைபெற்று நடந்து வரும் வழியில், “அது ச்சேரி.. உள்ள கூட்டிட்டு போயி என்ன சொன்னாவ உங்க யக்கா..” என ஏகத்தாளமாக இடித்தாள் புவனேஷ்வரி..

“பெரியவியளுக்குள்ள என்னமாச்சும் பேசுவோம்.. உனக்கு என்ன?? கொஞ்சமாச்சும் வயசுக்கு தக்கன பேச கத்துக்கோ..” எனக் கடிந்து விட்டு, “ரொம்ப பாவம்லா.. பிள்ள வார அன்னிக்கு எல்லாம் மொத்த வேலையையும் இழுத்து போட்டு செய்யுதா.. நீயும் தான் இருக்கியே.. அடுப்படி பக்கம் என்னைக்காச்சும் வந்துருக்கியா.. அவள பாரு.. காலங்காத்தால எந்திரிச்சு முத்தம் தொளிச்சு கோலம் போட்டு பத்து பன்னெண்டு மாட்டுக்கும் சாணிய அள்ளி, அவிய அப்பாவுக்கு பள்ளிக்கொடத்துக்கு போறதுக்கு முன்னாடியே கஞ்சியும் காய்ச்சி குடுத்துப்புடுதா.. வீட்டுக்கு யாரு வந்தாலும் அவா தான் சமைச்சு போடுதா.. அவா அம்மைக்கு ஒரு வேலைய விட்டு வைக்கதில்ல.. பூராத்தையும் ஒத்த ஆளா பாத்துப்புடுதாளே.. நீயும் இவ்வளோ பண்ண வேண்டாம்.. செத்தேன் காலையில சோத்த வடிக்கவாவது செய்யலாம்ல\ளா.. கடுங்காப்பிய தவர வேற செய்ய தெரியுமா?? நாளை பின்ன எப்பிடித்தான் மாமியாளுக்கு அவிச்சு குடுப்பியோ..” என பொன்னரசியின் புராணம் பாடினார்..

“கொஞ்சமாச்சும் புத்தியோட தான் பேசுதியா ம்மோ.. அவா படிக்க போன இடத்துல இருந்து வாரா.. வேற வேல இல்லை.. வீட்டுல இருக்க அவ்வளோ வேலையையும் அவா தலையில கட்டிட்டு சொகுசா உக்காந்துகிடுதாவ.. நான் இங்கன தான கிடக்கேன்.. வீட்டுல போடுத ஊட்டத்துக்கு நீ வைக்க கடன் பீடியை அடைக்கதுக்கு ராத்திரி பகல் பாராம குனிஞ்சே கிடந்து சுத்துதேம்லா.. இதுவும் பேசுவ.. இதுக்கு மேலயும் பேசுவ.. உங்க வீட்டுக்கு என்னதான் நான் பாத்து போடல.. உன் வீட்டுக்காரரு அப்போப்போ தோட்டத்துல பயிறு போட்டுட்டு களை பெறக்க ஓடியா, காய் பெறக்க ஓடியான்னு கூப்பிடும் போது.. பொட்ட புள்ள மாதிரியா சிலுப்பிட்டு நின்னேன்.. ஆம்பள பயலுவலுக்கு போட்டிக்கு மூட்டை தூக்கி விடும் போது தெரியலையோ.. அவா அப்பனும் ஆத்தாளும் பீஏட்டு வர படிக்க வச்சாவ.. நீங்க என்ன படிக்க வச்சிய.. பக்கத்துல தான இருக்கு.. போயிட்டு வரட்டும்னு டீச்சர் ட்ரைனிங் அனுப்புனிய.. இதெல்லாம் போதாதுன்னு சின்ன வயசுல அஞ்சு மணிக்கே எழுப்பி வேப்பமுத்து யாரு பெறக்கி கொண்டாந்தா??? பாக்கதண்டிக்கும் அம்புட்டு வேலையையும் வாங்கிக்கிட்டு வந்த துட்டை தூத்தெரிச்சிட்டு இப்போ பெருசா அவா இவ்வளோ பாக்கா நீ எவ்வளோ பாக்கன்னு பேச்சு வேற கேக்கணுமோ.. அவா என்னுல இருந்து பத்து வயசு மூத்தவா.. சமைக்க வைக்க தெரிஞ்சிருக்கும்.. மத்தபடி அவா வீட்டுக்குள்ள வேல பாக்கா.. நா வெளிய பாக்கேன்.. எப்பிடி பாத்தாலும் ரெண்டும் ஒன்னுதான்.. மத்தவால்ல இருந்து என் மொவா செத்தேன் உசத்தின்னு சொல்லிட்டா வாயில இருக்க வைரம் வைடூரியம் எல்லாம் கொட்டிப்பேருமாக்கும்..” என படபடவென பொரிந்து முடித்து விட்ட புவனேஸ்வரிக்கு மூச்சு மேலும் கீழும் வாங்கியது.

“யம்மா.. ஒரு வார்த்தை தான் சொன்னேன்.. ஒம்போது வார்த்தை அடுக்கி பொரிஞ்சு தள்ளுத.. உனட்ட மனுஷன் சத்தம் குடுப்பானா??” என கனியம்மாள் காதை அடைத்துக் கொள்ள, “நானா பேசுனேன்.. பேச வுட்டு வேடிக்கை பார்த்துட்டு நான் பொரிதேனாம்.. அது ச்சேரி.. கமுக்கமா உன்ன மட்டும் உள்ள கூட்டிட்டு போயி என்ன சொன்னாவ உங்க அக்காக்காரி.. சேரி.. எப்பிடியும் வந்து சொல்லுவன்னு பாத்தா என்ன கத்த வச்சிட்டு அதுக்கு ஏதாவது ஒரு இடை குத்து குத்திட்டு இருக்க..” என சலித்துக் கொண்டாள் புவனேஷ்வரி..

“இப்போவே இந்த வாயி பேசுதே.. நாளைக்கு ஒரு வீட்டுக்கு போயி என்ன பண்ண போவுதோன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. உங்க அப்பன் என் தலையில உன்ன கட்டிட்டு போயிட்டாரு.. ஒரு பிள்ளைக்கு நல்ல காரியம்னா வீட்டுல பொண்டாட்டி பிள்ளையளு கூட கூடி உக்காந்து பேசுவான் மனுஷன் கண்ட்ருக்கோம்.. உடனே மைனிட்ட போய் சொல்லி நம்ம காதுக்கு வருது.. இது எல்லாம் எங்க போய் முடிய போவுதுன்னு தெரியல..” என தன போக்குக்கு புலம்பி விட்டு செல்ல, புரிந்தும் புரியாமலும் குழம்பிப் போனாள் புவனேஷ்வரி..

ஆனால் தெளிவுபடுத்தும் விதமாக பிள்ளைகள் உறங்கி விட்டதென நினைத்து வேலப்பனும் கனியம்மாளும் பேசிக்கொண்டிருந்ததை அரைத்தூக்கத்தில் இருந்தவள் கேட்டு விட்டாள்.. இன்னும் இரண்டு மாதங்கள் படிப்பு முடிய காலம் இருக்கும் பொழுது இந்த ஏற்பாடு தேவை தானா என்று தோன்றியது.. ஆனால் யார் சென்று கூறுவது?? வேலப்பனோ மகள் வாழ்வில் எப்படியாவது ஒரு நல்ல காரியத்தை நிகழ்த்தி விட வேண்டும் என்ற உறுதியில் இருந்தாரே தவிர பணத்திற்கு என்ன செய்வது?? என்ற கேள்வி மனதை அரித்து கொண்டு தான் இருந்தது..
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-8

மறுநாள் விருப்பமே இல்லை என்றாலும் வீட்டில் கூறிய அனைத்தையும் மௌனமாய் செய்தாள் புவனேஷ்வரி.. ஒரு குடும்பமே வந்திறங்க, உபசரிப்பிற்கு பஞ்சமே இல்லாமல் முன் நின்று கவனித்துக் கொண்டார் வேலப்பன்.. தம்பிகள் இருவரும், “அண்ணன் எப்போ சாவான்.. திண்ணை எப்போ காலியாகும்” என்பது போல எப்பொழுது நிகழ்ச்சி நிறைவை அடையும், இருக்கும் பலகாரத்தை சுவைக்கலாம் என்ற ஏக்கத்தில் ஓரமாய் கண்வைத்தப்படியே நின்றனர்..

முந்தைய நாளே ஐந்து ரூபாய்க்கு கடன் சொல்லி, தைத்து எடுத்து வந்த கருப்பு நிற ரவிக்கையை அணிந்து கனியம்மாளின் சேலைகளில் நல்லதான ஒன்றை எடுத்து சுற்றி, தலை வாரி, கனகாம்பரத்தை கூந்தல் கடலில் நீச்சலடிக்கவிட்டு சபையில் அறிமுகப்படுத்திட, அங்கிருந்த கூட்டத்தில் குனிந்த தலை நிமிராமல் நின்று விட்டாள்.. வந்தவர்களும் வழக்கமான சம்பிரதாயங்களை கடைப்பிடித்து பெண்ணும் பார்த்து விட்டு சென்றனர்..

அதன் பின் ஒரு வார்த்தை கூட வீட்டில் கேட்டுக்கொள்ளவில்லை.. வழக்கமாக எழுந்து பள்ளிக்கு செல்வது, திரும்பி வந்து அம்மாவின் கடன் பீடிகளுக்கு அசலை அடைப்பது என நாட்கள் நகர, ஒரு நாளில் வேலப்பன் வருத்தமாக “அவனுவ கேக்க களஞ்சிய நம்மளால போட முடியாது போலிருக்கு..” என கூறியதாய் கேள்விப்படவும் மனதிற்குள்ளே துள்ளிக் குதித்துக் கொண்டாள்..

கூறியபடியே சில மாதங்களில் படிப்பு முடிய, ராகவேந்திரன் வெற்றிகரமாக பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து விட்டு கடலூரில் தோல் பதனிடும் தொழிற்சாலையை நோக்கிச் சென்று விட்டான்.. மகேசனோ பத்தாவதையே தாண்டவே பாடுபட்டுக் கொண்டிருந்தான்.. முன்னமாவது புவனேஸ்வரிக்கு பள்ளி செல்லும் நேரத்தில் இடைவெளி கிடைக்கும்.. “உள்ளதும் போச்சு டா.. நொள்ள கண்ணா..” என்பது போல அதற்கும் வழியில்லாமல் வீட்டில் அமர, பீடித் தட்டே உலகமாகி போனது..

கனியம்மாள் சுற்றும் செய்யது பீடியில் ஓய்வூதியம் வழங்க, அதே கடையில் கணக்கு அட்டை பதிந்திருந்தார்.. முதலில் கடன் பீடி சுற்றிக் கொண்டிருந்த புவனேஸ்வரியின், நிறந்தர விடுமுறைக்குப் பின் பலரும் கனியம்மாளின் வீட்டை நோக்கி கடன் கேட்டு படையெடுத்தனர்.. “யக்கா.. ஒரு ரெண்டு வண்டல் இருந்தா தாங்களேன்.. நாளைக்கு இல்லன்னா நாளைக்கழிச்சி தந்துருதேன்..” என அவர்களின் வீட்டின் படியேறாத நபர்கள் ஒருவரும் இலர்.. இப்படியே கடன் பீடி சுற்றி வெறுத்துப்போன புவனேஷ்வரி பணம் ஈட்ட மற்றொரு வழியை தேர்ந்தெடுத்தாள்.. சில மாதங்களுக்கு கனியம்மாளோடு இணைப்பு கணக்கு ஒன்றை பதிவு செய்து தொடர்ந்தாள்..

புதிதாய் திருமணம் ஆகி வரும் பெண்கள், படிப்பை முடித்து விட்டு பீடி சுற்றும் தொழிலில் இறங்கும் பெண்கள், படிப்பு தலையில் ஏறாமல் வறுமையினால் பீடி தட்டை கையில் எடுக்கும் பெண்கள் போன்றோர்களுக்காக இந்த இணைப்பு கணக்கு என்ற பிரத்தியேகமான திட்டம் உண்டு.. அதாவது சரியான நேரத்திற்கு கணக்கு முடிப்பார்களா என தெரியாத நிலையில் அவர்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு, ஏற்கனவே சரியாய் கணக்கு கொடுக்கும் மூத்த பீடி தொழிலாளி ஒருவர் அவர்களுக்கு பரிந்துரை செய்து அவர்களின் பெயரில் நம்பிக்கை வரும் வரை இவர்களின் பொறுப்பில் ஒரே கணக்கில் கணக்கு ஒப்புவிப்பர்.. நம்பிக்கை மற்றும் உண்மை தன்மை வந்த பின்பதாக மற்றொரு கணக்கு தொடங்கப்படும்..

இணைப்பு கணக்கில் உழைப்பு அதிகமாகவும் ஊதியம் குறைவாகவும் இருக்க, பக்கவாட்டில் காஜா பீடியின் கணக்கினை தொடங்கினாள் புவனேஷ்வரி.. அதிக அளவு கெடுபிடி இல்லாததனால் இரண்டையும் ஒரே நேரத்தில் சரியான அளவில் பராமரித்துக் கொண்டாள்.. அங்கும் இங்குமாய் அலைக்கழிந்து கொண்டிருந்த மகளை என்ன சொல்லி தடுப்பது என தெரியாமல் உள்ளுக்குள்ளே மறுகத் தொடங்கினார் வேலப்பன்..

அன்று மாலை, வேகவேகமாக புவனேஸ்வரியின் கரங்கள் முன்னும் பின்னுமாய் தாழ்ந்து நிமிர்ந்து பீடியை உருட்டிக் கொண்டிருக்க, பக்கத்தில் கிடந்த பொட்டுக்குச்சியை எடுத்து மடக்கத் தொடங்கினார் வேலப்பன்.. அவரின் திடீர் சைகையை நிமிர்ந்து பார்த்தவள், என்ன நினைத்தாளோ தெரியவில்லை.. மீண்டும் வேலையைத் தொடர, மெல்ல “ம்க்கும்..” என செருமினார்.. ராகவேந்திரன் இருந்திருந்தால் இலையை வெட்டிக் கொடுத்து, தட்டுத் தடுமாறி மடக்கிடவும் செய்வான்.. அதற்கும் வழியின்றி போக, மொத்த வேலையையும் அவளே செய்து விட, உதவிக்கு வரும் நபரை வேண்டாமென்று உதறிடுவாளா என்ன??

“என்னப்பா?? தண்ணி கோதிட்டு வரணுமா??” என்றவளின் பார்வை நிமிரவும் இல்லை, கைகள் தனது இயக்கத்தை நிறுத்தவும் இல்லை.. “இப்படியே இருக்கதா உத்தேசமா புவனா??” என வேலப்பன் வினவ, இவளிடத்தில் பதில் இருந்தால்தானே கூறுவதற்கு.. “ம்ம்..” என பேந்த பேந்த விழித்தவளை குழப்ப விரும்பாது சுற்றி வைத்திருந்ததை மட்டும் மடக்கிக் கொடுத்து விட்டு எழுந்தார்..

தந்தையின் எண்ணமும் கூற வந்த காரியமும் ஓரளவிற்கு விளங்கியிருக்க, அறிந்தும் தன்னால் என்ன செய்து விட முடியும்?? என்ற நினைவில் அப்படியே இருந்தும் போனாள்.. சில தினங்கள் கழித்து வீட்டிற்கு வந்த தோழி ஜெயா, தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்தாள்.. மெல்ல அவளின் காதுகளில் மட்டும் கேட்குமாறு, “எதாச்சும் லீவ் பிளேஸ்மெண்ட் இருந்தா சொல்ல சொல்லு ப்ளே..” எனக் கூறி வைத்தாள்..

பட்டணத்தை விட்டு மூன்று நான்கு ஊர் உள்ளே தள்ளி இருக்கும் கிராமத்தில் வாழும் புவனேஸ்வரிக்கு இது எட்டாக்கனியாக இருப்பினும் பட்டணத்தின் அருகே வாழும் ஜெயாவின் காதுகளில் இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பது எளிதே.. அதோடு விட்டு வைக்காமல் தனக்கு தெரிந்த நபர்களிடம், பயின்ற பள்ளி ஆசிரியர்களிடம் என்று பலரிடமும் கூறி வைத்தாள்.. ஏனெனில் இப்படி ஒரு கடைக்கோடி கிராமத்தில் இப்படி ஒரு ஆசிரிய தகுதியோடு ஒரு பெண் இருக்கிறாள் என்பதை அறியச் செய்ய இது ஒன்று தான் வழி..

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்க, சில இடங்களில் இருந்து அரசு வேலையில் அமர்ந்திருக்கும் ஆசிரியைகளுக்கு பிரசவ கால விடுப்பு அளிக்கப்பட்டால் அந்த பணியிடத்தை நிரப்புவதற்காக அழைப்புகள் இவளை நோக்கி வரத் தொடங்கியிருந்தது.. பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும் ஓரளவிற்கு வந்தது..

இதற்கு இடையில் ஆயிரம் பீடிகள் சுற்றி கொடுத்தால் இருபத்தி ஐந்து ரூபாய் கிடைக்கும் என்றால் பத்தாயிரம் என வரும் பொழுது இருநூற்று ரூபாய் கிடைக்கும்.. இந்த கணக்கில் உண்ணாமல் தூங்காமல் விடிய விடிய ஓரிடத்திலேயே அமர்ந்து பீடியை உருட்டத் தொடங்கினாள்..

அதில் வரும் இருநூற்று ஐம்பதில் நூறு ரூபாய் கடைகளில் கடன் பாக்கிகளை அடைப்பதற்கே கழிந்து விட, மற்றொரு நூறு சீட்டிற்கும் மிஞ்சிய ஐம்பது ரூபாய் வேலப்பனுக்கு டீசல் போடவே கணக்கு சரியாக இருந்தது.. இதில் மிச்சம் பிடிக்கவோ சேமிப்பிற்கு என்றோ எதுவும் மிஞ்சுவதில்லை.. வயலில் விளையும் பொருட்கள் சந்தைக்கு சென்று பணமானது வழியிலேயே மதுபானம் வாங்குவதற்கே பாழாகியது..

நடுநடுவே பள்ளிக்கு வேலைக்குச் செல்வதால் கிடைக்கும் பணத்தினை மட்டும் வீட்டின் செலவினங்களுக்கு கணக்கு காண்பிக்காமல் தனியே சேமித்து, சேலையும் ஐம்பது ரூபாய்க்கு உள்பாவாடையும் சில ரூபாய்களுக்கு துணி எடுத்து தைத்து வெளியில் செல்வதற்கு என்று சில ஆடைகளை தனித்து வைத்துக் கொண்டாள் புவனேஸ்வரி.. பீடிக்கடையில் சம்பளம் போடும் நாளுக்காகவே சில பெட்டிக்கடைகள் அங்கு முளைத்திருக்க, அந்த கூட்டத்தின் ஊடே தேவையானவற்றை எடுத்துக் கொள்வாள் புவனேஷ்வரி..

வெளியில் சென்று பாடம் எடுப்பவளுக்கு இது அவசியமானது என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. அவளின் போக்கிலேயே விட்டுவிட்டனர்.. கனியம்மாளின் உழைப்பிற்கு சொச்ச சம்பளமே கிடைக்க, அன்று ஒரு நாள் சுடுசோறு பொங்குவதற்கும் சூடான சாம்பார் வைப்பதற்குமே சரியாக போய்விடும்.. வெளியூரில் ஏதோ பெரிய வேலை கிடைத்து விட்டதென கிளம்பிச் சென்ற அரசி @ பொன்னரசி வேறு ஊருக்கு வருவதாகத் தெரியவில்லை.. அவள் வந்தால் சற்று நேரம் ஆற அமர உட்கார்ந்து பேசலாம் என்று தோன்றியது..

வீட்டின் பொருளாதாரம் ஜெக ஜோதியாக கொளுந்து விட்டு எரியவில்லை ஆயினும் அடிவாங்காமல் தப்பித்து கொண்டிருந்தது.. இப்பொழுதெல்லாம் வேலப்பனால் ‘குடி’ என்ற ஒன்று இல்லாமலே வாழ முடியவில்லை.. முன்பு தவற்றை தட்டிக்கேட்க முடியாத தன் இயலாமையை மறைப்பதற்காக குடிக்கத் தொடங்கிய வேலப்பன் இப்பொழுது நரம்பு முழுக்க சாராயம் மட்டுமே ஓடிக்கொண்டிருக்க, நிறுத்த முடியவில்லையே என்ற இயலாமையால் குடிக்கிறார்..

குடும்பத்தாரும் ஒருபடி மேலே சென்று, வேலப்பனின் ‘குடி செலவு’ என்று ஒரு பகுதியை ஒதுக்கி வைத்திருந்தனர்.. புவனேஸ்வரியின் பாணியில் கூறினால், “குடிக்கதே குடிச்சு அழுத.. தார துட்டுல மட்டும் குடிச்சு அழு.. குடிச்சிட்டு வீட்டு முன்ன கிடந்து அசிங்கப்படுத்தாம.. குடிச்சோமா கவுந்து அடிச்சு படுத்தோமான்னு கிட.. அத விட்டுட்டு ரோட்டுல நின்னுட்டு அந்த மொவளே.. இந்த மொவளே.. அந்த மக்க.. இந்த மக்கன்னு ஆடாம கெட..” என்று விட்டனர்..

மகேசனும் பத்தாம் வகுப்பின் படியைக் கூட தாண்ட முடியாது என்ற முடிவிற்கு வந்து, சில காலமாய் ஊருக்குள் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கிறான்.. ஒரு தலைமுறையினர் தலையெடுக்கும் பொழுது சில மாற்றங்கள் நிகழும் என்பதால் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த குடும்பம் சற்று தடுமாற்றத்தை நிறுத்தி விட்டிருந்தது.. இந்த ஒரு முன்னேற்றம் போதாதா?? அடுத்த அடி இடியாக இறங்குவதற்கு..

வழக்கம் போல ஒரு ஆசிரியையின் மருத்துவ விடுப்பிற்கு பணியிடத்தை நிரப்புவதற்காக சென்ற புவனேஸ்வரியை வேலை என்ற பெயரில் சக்கையாக பிழிந்து எடுக்க, மாலை நேரங்களில் பீடி உருட்டும் வேலையே சரிவர செய்ய இயலவில்லை.. ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் சோர்வாக வந்து சேர்பவள் தலையை பிடித்துக் கொண்டு திண்ணையிலேயே சாய்ந்து விடுவாள்.. “விளக்கு ஏத்துத நேரத்துல இவள என்னத்துக்கு கிடத்தியிருக்கு...” என்ற கனியம்மாளின் பேச்சுக்கு பயந்து அமர்ந்தபடியே கண்களை மூடி கொள்வாள்.. ஒரு ஏழு மணி கடந்த பின், மெல்ல முகம் கை கால் அலசி விட்டு தேவையை நிறைவேற்ற வேண்டுமே என்ற ஆர்வத்தில் அவசர அவசரமாக உருட்டத் தொடங்கினாள்..

அவளின் உடல்நிலை நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வர, சிலர் கூறவும் செய்தனர்.. ஏதாவது ஒன்றை மட்டும் தொடருமாறு அறிவுறுத்தினர்.. விடாப்பிடியாக இரண்டையும் ஒரே நேரத்தில் கட்டி ஆள முனைய, வேலைக்கு சென்ற பள்ளியில் முதல் முறையாக அவளின் சம்பளம் அடி வாங்கியது.. அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் நிர்வாகத்தில் இருக்கும் சிலர் இது போன்ற பணியாளர்களின் சம்பளத்தில் கைவைப்பதும் உண்டு.. இந்த முறை கால்வாசியை எடுத்துக் கொள்ள புவனேஷ்வரிக்கோ மனம் பதறியது..

அளவிற்கு மீறி வேலையையும் வாங்கி விட்டு, சம்பளத்தையும் குறைத்து கொடுத்தால் என்ன செய்வது?? நிர்வாகத்தில் இருக்கும் ஒரு பெண்மணி இயல்பாக வகுப்பறையின் வராண்டாவில் நடக்கும் பொழுது ஏதாவது ஒரு வகுப்பு ஆசிரியர் இல்லாமல் இருந்து விட்டால் போதும்.. உடனே ஒரு மாணவனை அனுப்பி, “அந்த ஸ்டாப் ரூமுல புவனா இருப்பா.. வர சொல்லு..” என அதிகாரமாக அழைத்து விடுவார்..

உண்மையான அரசு ஆசிரியை இருந்திருந்தால் அவருக்கு நியமிக்கப்பட்ட வகுப்பிற்கு மட்டுமே சென்றிருப்பார்.. காலியிடத்தை நிரப்ப வந்தவளோ கிடைக்கும் இடத்தில் எல்லாம் வேலை வாங்கப்பட்டாள்.. அடிமாட்டிற்கு கூட சற்று இளைப்பாறல் இருக்கும்.. குச்சி போன்ற உடலை வைத்து கொண்டு ஊட்டமும் இல்லாமல் எத்தனை வகுப்பிற்கு தான் ஓடியாடி கவனிப்பை அளிக்க முடியும்? கோபத்தில் நேரே சென்று கத்தி விட வேண்டும் என்று தோன்றியது..

“உன் மொத்த குடும்பியும் என் கையில..” என நிர்வாகம் குரூரமாக கூறுவது போல தனக்குள்ளே கற்பனை செய்து கொண்டவள், “ஏன்?? எதற்கு??” என்ற கேள்விகளை மறந்து “ஆளா விட்டா போதும் சாமி..” என கும்பிட்டோடு ஓடியே வந்து விட்டாள்.. வண்டி வண்டியாக சாபத்தை இறக்கி வைக்க வேண்டும் என்ற கோபம் உள்ளுக்குள் தகித்து கொண்டிருந்தது.. “என் துட்டை வச்சிட்டு என்னனியோ போ..” என மனதிற்குள்ளே முனகிவிட்டு அத்தோடு அப்பள்ளியைத் தலைமுழுகி விட்டாள்.. இனி அந்த பக்கம் தலை வைத்து கூட படுக்கக்கூடாது என்ற முடிவையும் எடுத்து கொண்டாள்..

ஒரு இடத்தில் தப்பித்தால் அடுத்த இடத்தில் மாட்டிக்கொள்ளத் தானே வேண்டும்? ஊரில் உள்ள அனைவரும் பீடிக்கடையில் கணக்கு போட்ட பின்னர், ஒவ்வொரு கட்டுக்களையும் சதுரமான பெட்டிகளில் அடுக்கி தலைப்பகுதி மட்டும் தெரியுமாறு நிமிர்த்தி வெயிலில் காய வைத்து விடுவர்.. அந்த படிநிலையின் போது யார் சென்றாலும் புவனேஷ்வரி சுற்றிய பீடியை மட்டும் தனியே எடுத்து விடலாம்.. அந்த அளவிற்கு நேர்த்தியாக இருக்கும்..

“யக்கா.. ரெண்டு கட்டுல செத்தோன்டியா மடக்காம விட்டுப்புட்டேன்.. அதுக்கு போயி அந்த ஆளு ரெண்டயும் கழிச்சு போட்டுட்டான்.. நல்லா இருப்பானா?? கைபிள்ளைய வச்சுட்டு உருட்டுதது எவ்வளோ கஷ்டம்னு தெரியுமா..” என ஒருத்தி குறைப்பட்டுக்கொள்ள, அருகில் வந்தவளோ, “குடும்பம் குட்டின்னு வாழ்ந்தா தெரியும்.. அவன் தான் எல்லாத்தையும் அங்கே வுட்டுட்டு வேலைன்னு இங்க வந்து கெடக்கானே.. அவன்ட்ட போயி இதெல்லாம் பேசிட்டு இருப்பியா??” என அடக்கினாள்.. “அது சேரி... உன் பெட்டில ஒன்னும் கெடக்க மாதிரி தெரியலையே..” என பொறாமை பொங்க கேட்டவளிடம், “இங்கேரு.. நான் சொல்லுதேன்னு யாருட்டயும் சொல்லிறாத.. ராமசாமி கோயிலு தெருவுல இருக்க கனியம்ம மொவா அரிசி அரிசியா உருட்டுதாங்கேன்.. அவாட்ட தான் கடன் பீடி வாங்கியாந்தேன்.. ஒன்னயும் நொடிச்சு கழிக்கவே இல்லன்னா பாத்துக்கோயேன்..” என ரகசியம் கூறினாள்..

ஒவ்வொருவரும் அவளின் பெருமையை புராணமாகப் பாட, கனியம்மாளுக்கோ புவனேஸ்வரியை விட மனதில்லை.. “தங்கமே.. மணியே..” என கொஞ்சி கெஞ்சி உருட்ட வைத்தார்.. காலை பதினோரு மணி, மதியம் ஒரு மணி, மாலை மூன்று மணி என்று மூன்று பிரிவாக கணக்கு ஒப்புவிக்கும் நேரம் என்று ஒதுக்கப்பட்டிருந்தது.. கனியம்மாளின் மூன்று மணி கணக்கிற்கு மும்முரமாக புவனேஷ்வரி சுற்றிக் கொண்டிருப்பாள்..

சில நேரங்களில் இலை வெட்ட வந்தவளை, “கையோட உருட்டி மட்டும் வச்சிறேன்.. மீதிய நான் உருட்டிக்கிடுதேன்..” என்றுவிட்டு, உருட்டி முடித்ததும் மடக்கி கொண்டே, “செத்தேன் சைசும் பார்த்து தாயேன்.. எனக்கு வரவர கண்ணு பத்த மாட்டேங்கு..” என்று அங்கேயே அமர்த்தி விடுவார் கனியம்மாள்.. உடனே, “உன்னோட பெரும் யமத்தா போச்சு.. செத்தேன் கைய வச்சுட்டா போதுமே.. எல்லாத்தையும் என் தலையில் கட்டிட்டு அந்தால ஓடிரனும்.. பெறவு நேரத்துக்கு வந்து நின்னுக்கிட்டு ஏ நேராவுது.. ஏ நேராவுதுன்னு பாட்டு பாட வேண்டியது..” என திட்டி விட்டு மொத்தத்தையும் இவளே செய்து கொண்டே, “இங்க நின்னு என்னை பரக்கு பாக்கவா சொல்லிருக்கு.. ஒழுங்கா போய் காப்பிய போடு.. இல்லன்னா வடக்கு வீட்டுக்காரிட்ட வாய் பாரு..” என விரட்டி விடுவாள்..

ஆன்.. பதினொரு மணிக்கு எதிர் வீட்டில் இருந்து, “எப்ளே.. புவனா.. உருட்டிட்டு இருக்கியா?? எனக்கு ரெண்டு வண்டல் தாயேன்.. நீ மூணு மணி கணக்கு போடுததுக்குள்ள கொண்டாந்து தந்துருவேன்..” என்றுவிட்டு வாங்கிச் செல்ல ஒரு மணிக்கு அடுத்தவர், மூன்று மணி கணக்கில் கூட விடாது கடன் கேட்பவர்களும் உண்டு..

“ஏம்ம.. இவியளுக்குலாம் என்ன பேதி எடுக்கு.. கணக்கு இத்தன மணிக்கு போடணும்னு தெரியும்லா.. பெறவு என்ன?? ரெண்டு வண்டல் தாயேன்.. நாலு செல்லி தாயேன்னுட்டு வந்து நிக்காவ.. திருப்பி தார ஒரு பீடியும் உருப்படி இல்ல.. உருட்டவே தெரியலன்னா என்னத்துக்கு சுத்த வரணும்.. இவியளால நம்ம பீடி குறையுது.. தூளு கூட வாங்கி அழ வேண்டியிருக்கு.. நாளைக்குலாம் வந்தா நான் நாலு கேட்டுப்புடுவேன்..” என சில நேரங்களில் மனது பொறுக்காமல் கேட்டு விட்டால், “சத்தம் போடாம பேசு.. அக்கம் பக்கத்துல கேட்டா ஒருத்தி என்ன சொல்லுவா.. இங்க பாருங்கம்மா.. வயசுக்கு வந்த குமரி புள்ள என்னம்மா வாயி பேசுதுன்னு நாலு வேரு அசிங்கமா பேசிப்புடுவா..” என அடக்கிடுவார் கனியம்மாள்..

“சும்மா சும்மா இதையே சொல்லி என் வாய அடைக்கனும்னு பாக்காத.. நீயே ஒ மனசாட்சிய தொட்டு சொல்லு.. சரியான நேரத்துக்கு கணக்கு போட சுத்தி முடிக்க தெரியாதவா எதுக்கு செய்யது பீடி சுத்தணும்.. நேராநேரத்துக்கு நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்கணும்.. வேற தூளு சுத்த வேண்டியது தான.. இதே வேலையா வச்சிட்டு திரிய வேண்டியது.. கடனை திருப்பி தரும்போதாவது உருப்படியா தாராளுவளா?? கிங்கினிக்கு மங்கினிக்க தாரது.. ஒன்னு மேல ஒழுங்கா மடக்காம தரனும்.. இல்லன்னா கீழோடி ஒழுவிட்டு வருது.. இவளுகளுக்கு கடன் குடுத்தே நான் தேஞ்சிருவேன் போல இருக்கு.. இந்த மாதிரி ஆளுவளுக்கு தான வட்டி பீடின்னு ஒன்னு விக்கான்.. நம்மள விட நல்லா உருட்டி வச்சு தான தாரான்.. அங்க வாங்க வேண்டியது தானே..” என தாயை உஷ்ணமாக முறைப்பாள்..

“முட்டா நாய் மாதிரி பேசாத.. கடன் பீடி வாங்குனா கூட குடும்பத்த காப்பாத்திப்புடலாம்.. வட்டி பீடி வாங்குனா சீரழிஞ்சு போவோம்.. பத்து பீடி வாங்குனா ரெண்டு பீடி வட்டி கட்டனும்.. நாளாவ நாளாவ ஒவ்வொரு பீடியா கூடிட்டே போவும்.. வட்டி மட்டும் கட்டியே ஓஞ்சு போவோம்.. எங்க அசலை குடுக்கது.. வாழ்க்க பூரா வட்டி பீடியே உருட்ட முடியனுமென்ன??” என முகவாயில் விரலை வைத்து கொள்வார்.. “அப்போ எனட்ட வாங்க வரண்டாம்னு சொல்லு.. ஆளாளுக்குமா சேர்ந்து என் கழுத்த கரகரன்னு அறுத்து தலையை எடுத்துட்டு போயிருவிய போல..” என சலித்து கொண்டே மீண்டும் அதே பீடி தட்டு முன்னர் தான் அமரப் போகிறாள்..

நாட்கள் செல்லச் செல்ல, இப்படியே பிக்கலும் பிடுங்கலுமாக பீடி சுற்றல் சென்று கொண்டிருக்க, சதா நேரமும் பீடி தட்டும் கையுமாக அமர்ந்திருக்கும் புவனேஷ்வரிக்கு புகையிலை தூள் நாசி வழியே உள்ளே ஏறி, நுரையீரலுக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கியது.. ஒரு நாள் மூச்சுத் திணறி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, பீடிக்கடையிலேயே அமர்ந்து விட, அந்த விஷயம் வேலப்பனுக்கு தெரியவும் வீடே ரெண்டு துண்டாகும்படி ஆடி விட்டார்.. கனியம்மாளை “அவளே... இவளே.. அந்த மொவளே.. இந்த மொவளே..” என தகதகவென மின்னும் வார்த்தைகளால் அலங்கரித்து விட்டு, “என் புள்ளைய உன்ன நம்பி வுட்டுட்டு போனா துட்டு சேக்கேன், ஆளு சேக்கேன்னு செக்கு மாடு மாதிரி ஆக்கிட்ட.. உன் பெருமைக்கு நீ போயி சுத்துளா.. என் புள்ளைய எதுக்கு சுத்த வைக்க.. ஊருல உள்ள மினுக்கிவளுக்குலாம் என் மொவா சுத்தி தட்டணும்னு தலையெழுத்தா?? முதல்ல உனக்குல்லாம் சுத்தி தரணும்னு எழுதி வச்சிருக்கோ.. சொல்லுளா.. என் புள்ளைய படிக்க வச்சு இந்த தூளுக்குள்ளேயும் உன் யமத்துக்கு உள்ளேயும் விடக்கூடாதுன்னு பாத்தா.. உனக்கு எழவு இழுக்க என் புள்ளைய கெடுத்து புட்டாளம்மா.. யம்மா.. நீ இருக்கியா.. இப்படியா உன்ன கொடுமைப்படுத்துவா.. ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்லம..” என தன மகளை அன்னையாக பாவித்து குடித்த வெறி தீர, கத்தி முடித்தார்..

அழுது கொண்டே படுத்த புவனேஷ்வரி அப்படியே உறங்கிப் போக, மறுநாள் விடியற்காலமே மீண்டும் தொடங்கியது.. ஒரு மூச்சு நேற்று இரவு பேசிய ஒரு வார்த்தை மாறாது மீண்டும் பாடி முடித்த வேலப்பன்; “ஏளா.. நீ இங்க இருக்கணும்னா ஒழுங்கா இரு.. என் புள்ளைய பாடுபடுத்தனும்னு நினைச்சின்னா ஒழுங்கு மரியாதையா பெட்டிய கட்டிட்டு உன் வீட்டுக்கு போயிரு.. இனி என்னிக்காவது அவளை பீடி சுத்த வைக்கத கண்டேன்.. நடக்கதே வேற பாத்துக்கோ..” என எச்சரித்துவிட்டு உள்ளே சென்றார்..

புவனேஸ்வரியின் தலைமாட்டில் சென்று அமர்ந்து கொண்ட வேலப்பன், “அம்மா... புவனா..” என மெல்ல எழுப்ப, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளிடம் எந்த சலனமும் இல்லை.. “அம்மா புவனா.. எந்திரிக்கியா??” என மெல்ல உலுக்க, கண்களை மெல்ல விரித்து அழுந்த தேய்த்தவள் தந்தையைக் கண்டதும் அடித்து பிடித்து எழும்பி அமர்ந்தாள்.. “பட்டணத்துல ஒரு டாக்டர் இருக்கான்.. போய் பாத்துட்டு வந்துருவோமா??” என அக்கறையாய் வினவ, எங்கோ ஒரு புறமாய் தலையசைத்து விட்டு நிமிர, நிலையின் அருகே கலங்கிய விழிகளோடு நின்றிருந்தார் கனியம்மாள்..
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18
அத்தியாயம்-9

வலது கரத்தின் நரம்புகள் இணையும் கழுத்துப் பகுதியில் வலி சுர்ரென்று பிடிக்க, “எனக்கு ஒன்னும்மில்ல ப்போ.. நம்ம இன்னொரு நாளைக்கு போவோம்.. எனக்கு உறக்கமா வருது..” என மீண்டும் தலையணையில் தலை சாய்க்க சென்ற புவனேஸ்வரியை வலியோடு நோக்கினார் வேலப்பன்..

“எல்லாம் இந்த கிறுக்கியால வந்துது..” என கனியம்மாளிடமே மீண்டும் வசவுகள் செல்ல, படுக்கச் சென்றவள் மீண்டும் எழுந்து, “யப்போ.. அம்மைய வையாதீய.. அவா ஒன்னும் பண்ணல.. நாந்தான் நாளைக்கு நமக்குன்னு ஏதாவது சேமிப்பு வேணும்னு சுத்துனேன்..” என தாயிற்காக பரிந்து பேசினான்.. “சேரி.. என்னமும் இருந்துட்டு போவட்டும்.. இப்போ அப்பா கூட ஆஸ்பத்திரிக்கி வர போறியா எப்பிடி..” என்றவரின் அதட்டலில் அக்கறை அடங்கியிருந்தது..

“இந்த காலங்காத்தாலயா?? கொஞ்சம் பொறுத்து போவோமே..” என இறங்கிய குரலில் கூற, “அத தான் நானும் சொல்லுதேன்.. இந்த நேரத்துல இவிய அப்பனா ஆஸ்பத்திரிய தொறந்து வச்சிட்டு கெடக்கானுவ..” என குரலை உயர்த்தினார் கனியம்மாள்.. “இங்கேரு.. நீ ஒன்னும் பேசாத.. வார ஆத்திரத்துக்கு காத்துலே இளக்கிருவேன் பாத்துக்கோ.. புள்ள சோமில்லாம கெடக்கத கூட கவனிக்காம ஊருல பெருமை பீத்திட்டு தான இருந்த.. இப்போ பாசம் பொத்துட்டு வருதோ...” என வேலப்பன் கண்டிக்க, “ஆமா நான் ஊருல பெருமை பேசிட்டு திரிஞ்சேன்.. இவிய வீட்டுல குத்த வச்சு உக்காந்து பொம்பள புள்ளைய காவல் காத்தாரு.. சும்மா சும்மா என்னயவே குறை பேசனும்னே வராதியும்..” என நொடித்துக் கொண்டார் கனியம்மாள்..

இப்படியே விட்டால் நாள் முழுவதும் ஓயாமல் சலிக்காமல் ஆதிகாலத்தில் நடந்த தவறுக்காக எல்லாம் ஒருவரையொருவர் சாடி சண்டையை சம்பந்தமின்றி வளர்த்து விடுவர் என்பதால் சற்று குரலை கனைத்துக் கொண்டவள், “ஏ.. வுடுங்க.. எனக்கு ஒரு பேதியும் இல்ல போதுமா?? போய் தூங்குங்க.. காலங்காத்தாலயே எழுப்பி வச்சிட்டு இந்த எழவை தான் காட்டணுமா??” என எரிச்சலாக கூறினாள்..

அவளின் வார்த்தையில் வேலப்பன் திடுக்கிட, “இப்போ என்னயணும்?? ஆஸ்பத்திரி போணும்.. அதான.. விடிஞ்சதுக்கு பெறவு போவோம்.. எந்திரிச்சு ஒரு நூறு தூள் சுத்திருப்பேன்.. அதை கெடுத்து வுட்டுக்கிட்டு..” என முகத்தை சுருக்கி திட்டிவிட்டு சாய்ந்தவள் ஒருக்களித்து படுத்தாள்.. அதற்கு மேலும் அவளை கட்டாயப்படுத்த முடியாது.. அடம் என்பதை காட்டிலும் வீம்பு என்று குறிப்பிட்டால் மிக சரியாக இருக்கும்.. ஏனெனில் சிறுவயதில் இருந்தே அப்படி தான்..

ஏதோ ஒரு விளையாட்டாய் பெரியப்பா பையன் வீட்டிற்கு வந்த பொழுது, பந்து போல உருண்டு திரண்ட இவளை சீண்டி அழ வைப்பதற்காக முற்றத்தில் வளர்த்து வைத்திருந்த பசலி செடியில் ஒரு கிளையை பிய்த்து விட, அவனுடைய ஆசை அழகாய் நிறைவேறத் தொடங்கியது.. முற்றத்தில் அமர்ந்து பாவாடை தேய்வதை கூட கவனியாமல் புழுதி கிளம்ப இரண்டு கால்களையும் தரையில் உதைத்து அழுதிட, கனியம்மாள் கொளுஞ்சி மாரை கொண்டு மாறி மாறி வெளுத்து விட, பக்கவாட்டில் நின்று நகைத்தான் அவன்..

அவனுடைய புன்சிரிப்பை அப்படியே நெஞ்சில் நிறுத்தி கொண்ட புவனேஷ்வரி, ஒரு மாதம் நல்லபடியாக நடந்து கொண்டவள், பெரியம்மா ஆசையாக முற்றத்தில் நட்டுவைத்த ரோஜா செடியை வேரோடு பிடுங்கி எடுத்திருந்தாள்.. “ஏளா.. நல்லா தான இருந்த... இருந்தால போய் அவிய வீட்டு முன்ன நல்லா இருந்த செடியை ஒண்ணுமில்லாம ஆக்கிட்டு வந்து நிக்க..” என கனியம்மாள் துவைத்து கொண்டிருக்க, சற்றும் அசராமல் “அன்னிக்கு அவன் என் பட்டன் ரோசை பிச்சு போட்டான்லா.. நான் மட்டும் சும்மா இருப்பனா?? த*** மனசுல எவ்ளோ திண்ணிக்கம் இருந்தா என் செடியில காலை வச்சு பிடுங்கி போடுவான்.. வுடுவனா என்ன?? அதான் அவன் வீட்டு ரோசு பூக்கது வரைக்கு பாத்துட்டு இருந்தேன்.. சும்மா பிச்சு பிச்சு போட்டுட்டு வந்துட்டேன்.. யாருட்ட..” என்றவளின் வீம்பில் பயந்து போனது கனியம்மாள் தான்..

வளர வளர அந்த குணம் வளர்ந்து கொண்டே வர, தவறுக்கு தானே தண்டிக்கிறாள் என கண்டுகொள்ளாமல் விட்டாலும் “இவட்ட மனுஷன் பேசுவானா?? சொல்லுத ஒரு சொல்லு கேக்காளா?? வீட்டுக்கு திருந்தாத நாயி ஊர்ல கல்லடிபட்டு திருந்தட்டும்..” என்று விட்டார் கனியம்மாள்..

காலை எழுந்து அமர்ந்த புவனேஸ்வரியால் கையை தூக்கி பீடியை உருட்ட முடியாமல் உடல் வருத்தி எடுக்க, முடியாமல் மீண்டும் படுத்துக் கொண்டாள்.. சூரியன் வந்த பின்னும் சுருண்டு படுத்திருக்கும் புவன்ஷ்வரியை காணும் பொழுது மனதிற்குள் ஒரு பயம் தோன்றியது.. உடனே, “ஏ.. புவனா.. ஏப்ள.. ந்தா.. எந்திரி.. சூரியன் வெளிய வந்தும் சுருண்டு படுத்துட்டு இருக்க..” என உலுக்க, அவளின் உடல் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது..

எழுந்த பின்னும் ஏதாவது சமாளிப்பு பேசி நேரத்தை கடத்துவாள் என்பதனால் அந்த இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வரலாம் என்று வேலப்பன் சென்றிருக்க, பத்து மணிக்கு திரும்ப வந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக வேறு கூறியிருந்தார்.. ஏழு மணிக்கே இப்படி கொதித்தால் பத்து மணி வரை தாக்குப் பிடிக்க முடியுமா என்றால் அவளின் உடல் இல்லை என்றும் மனது முடியும் என்றும் பதிலளிக்கும்..

வேறு வழியில்லை.. திரும்பி வரும் வேலப்பன் “புள்ள காய்ச்சல்ல கொதிச்சிட்டு கெடந்தாலும் எனட்ட தான் கேக்கணுமா?? முதல்ல புள்ளைய பாக்கதுக்கு இல்ல.. புருசன் பேச்ச கேட்டு நடக்க உத்தமபத்தினின்னு இப்போதான் ஊருக்கு காட்டணுமா??” என எரிந்து விழுவார்.. நெஞ்சம் முழுக்க பதற்றம் தொற்றிக் கொள்ள, ஓடினார் எதிர் வீட்டை நோக்கி..

“யக்கா.. புவனாக்கு உடம்பு அனலா கொதிக்கு.. செத்தேன் என்னன்னு வந்து பாருங்க.. அண்ணன்ட சொல்லி ஒரு வண்டி பிடிக்க சொல்லுங்களேன்.. ஒரு எட்டு போயி டாட்டர பாத்துட்டு வரலாம்.. அந்த மனுஷன் வந்தா அதுக்கும் என்ன தான் குத்தம் சொல்லி நாய் மாதிரி விழுவாரு..” என கூற, கிடந்த வேலையை அப்படியே போட்டு விட்டு கனியம்மாளோடு ஓடி வந்தார் முத்தம்மாள்..

வாரி சுருண்டு கிடந்த புவனேஷ்வரியின் அருகே சென்று, “ஏப்ள.. புவனா.. இங்கேரு.. எந்திரி..” என முடிந்த மட்டும் எழுப்ப, அவளிடம் பேச்சு மூச்சு இல்லை.. “யாத்தாடி.. புள்ள கண்ண முழிக்கமுன்டாமல்லா கெடக்கா.. ஏ கனியம்ம.. என்ன பாத்துட்டு மசமசன்னு நிக்க.. போயி நம்ம கனமணி கிழவிய கூட்டியா.. வந்து என்னன்னு பாக்கட்டும்.. புள்ள உயிர் முக்கியமென்ன..” என கூறவும் கனியம்மாள் கனகமணியின் வீட்டை நோக்கி ஓடினார்..

பரம்பரை பரம்பரையாக பார்வை பார்க்கும் தொழிலை செய்து வரும் குடும்பத்தில் கனகமணிக்கு மனித உடம்பினை பற்றிய அறிவு அத்துப்படி.. இவ்வூரின் பல குழந்தைகளுக்கு பாதகமில்லாமல் பிரசவம் பார்த்தவர் என்றும் கூறலாம்.. கனியம்மாள் சென்று நின்ற வேகத்தையும் முகத்தில் அப்பிய பயத்தையும் கண்டதும் வெள்ளி நிற வெற்றிலை பொட்டியையும் கையோடு எடுத்து விரிந்து கிடந்த சேலையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு நடந்தார்..

இந்த அவசர கோலத்திலும் கனகமணியின் சேலைக்கட்டை பற்றி வர்ணித்தே ஆக வேண்டும்.. இரண்டு மடங்கு முந்தியை சேலை தலைப்பாக வைத்து மாராப்பு மறையும் படி விரித்து விட்டு கால்கள் வரை தொங்க விட்டு மீதமுள்ள சேலையை இடுப்பில் சுற்றி சேலை தலைப்பை இடுப்பை சுற்றி முதுகின் நடுவாக தண்டுவடத்தின் வரிசையில் சொருகியிருப்பாள்.. வழக்கத்தை விட அதிக சௌகரியமாகவும் அணிவதற்கு எளிதாகவும் முக்கியமாக தோட்டக் காடுகளில் தைரியமாக உடல் வெளியே தெரியாமல் கிணற்றில் குளித்து விட்டு வரவும் வசதியாக இருக்கும்..

முற்றத்தை முடித்து நிலையில் கால் எடுத்து வைக்கும் பொழுதே காரணத்தைக் கண்டு கொண்ட கனமணி, “ஏ தாயி.. உன் மொவ மேல அம்மன் இறங்கியிருக்கா..” என மூக்கை துருத்த, அணிந்திருந்த தட்டையான மூக்குத்தி மேலெழும்பி கீழிறங்கியது.. மகேசனும் நடப்பதை புரியாமல் பார்த்து கொண்டிருக்க, முத்தம்மாளோ லேசாய் பாவாடையை மேலே இழுத்து பார்க்க பொட்டு பொட்டாய் தன் பாதையை காட்டியது அம்மை நோய்..

“அம்மம் போட்ருக்கா??” என மகேசன் கேட்க, கனியம்மாளோ தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.. “மகேசா.. போ.. போயி கீழத்தெரு பெட்டிக்கடை வீட்டுக்கு முன்னாடி நிக்க வேப்பமரத்துல இருந்து ஒரு கொப்பை உடைச்சு கொண்டா.. அக்காளுக்கு பார்வை பாக்கனுமென்ன??” என முத்தம்மாள் கூறவும் கால்கள் பிடரியில் அடிக்க ஓடினான் கீழத்தெருவை நோக்கி..

ஐந்தே நிமிடங்களில் சிறிய மரத்தினையே கொணர்ந்து விட, அவனுக்கு மேலும் கீழுமாய் மூச்சிரைத்தது.. “போய்.. தண்ணிய குடிலே.. விக்கியே சாவாத..” என கனியம்மாள் விரட்ட, ஒரு டம்ப்ளரில் கோதி வந்து சுவற்றில் சாய்ந்து, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. கனகமணி வீட்டில் இருந்து போட்டு வந்த வெற்றிலையை வெளியே கருவேப்பிலை மரத்தின் அடியில் துப்பி விட்டு, அங்கிருந்த பானையில் தண்ணீர் கோதி வந்து, “கனியம்ம.. வீட்டுல மஞ்ச இருந்தா கொண்டா..” என்றார்..

சமையல் கட்டினுள் நுழைந்து மங்கிய வெளிச்சத்தில் துழாவ, அம்மியின் மேலிருந்த அஞ்சறை பெட்டி கையில் அகப்பட்டது.. அதற்குள் அடுத்த வெற்றிலையை எடுத்து நீர் விட்டு அலசி, கைகளால் ஒரு முறை தண்ணீரை துரத்தி விட்டு பொட்டியில் இருந்த இளஞ்சிவப்பு சுண்ணாம்பை நீளமாக வெற்றிலையில் தடவி காம்பினை கிள்ளி சேமித்த கனகமணி, நாலாக மடித்து இடது கடவாய் பல்லில் வைத்து மெல்லத் தொடங்கினார்..

கனியம்மாள் கொண்டு வந்த மரமஞ்சளை சிறிய உரலில் போட்டு இடித்த பின், பறித்து வந்த வேப்பிலையில் ஒரு கிளையை உடைத்து, புவனேஸ்வரியின் மீது ஏதேதோ மந்திரம் உச்சரித்து அங்கும் இங்குமாய் ஆட்டி உடல் முழுவதும் வலம் வந்தார்.. இரு பெண்களும் கவலையான முகத்தோடு கவனித்து கொண்டிருக்க மகேசன் ஆர்வமாய் அனைத்தையும் மூளையில் ஏற்றி கொண்டிருந்தான்..

தன் பார்வையை முடித்து விட்ட கனககமணி, வேப்பிலையை அவளின் தலைமாட்டினுள் வைத்து விட்டு மற்றொரு கிளையை பறித்து கனியம்மாளின் கையில் கொடுத்து விட்டு “ந்தா.. இத அரைச்சு அம்மம் போட்ருக்க இடத்துல போடு.. அம்மன் இறங்குதது வரைக்கு தாளிச்ச பொருளை குடுத்துராத.. குளுந்த பொருளா குடுக்க பாரு.. எப்பயும் வேப்பில பிள்ளைக்கு காவலுக்கு இருக்கட்டும்.. யாரும் பக்கத்துல போவண்டாம்.. முக்கியமா நீ.. அந்த நேரத்துல போவவே கூடாது.. பிள்ளைய பாத்துக்க.. நான் வாரேன் தாயி..” என விடைபெற்று சென்றார்..

கனியம்மாளுக்கோ இப்பொழுது மொத்த உலகமுமே சுழன்று, தன் தலையிலேயே விழுவது போல இருந்தது.. வேலப்பனுக்கு விஷயம் தெரிந்தால் கண்டமேனிக்கு திட்டுக்களும் வசவுகளும் கிடைக்கும்.. அதை எல்லாம் விடுத்து அவளின் மொத்த பயமும் புவனேஷ்வரி மீது தான் இருந்தது.. சென்ற முறை மஞ்சள் காமாலையிலேயே அவளை அடக்குவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது.. எழுந்து என்ன நடந்தது?? என கேட்பவளிடம் “அம்ம இறங்குதது வரைக்கும் உனக்கு பத்திய கஞ்சி தான்..” என்று கூறினால் பேயாட்டம் ஆடி விடுவாளே..

தெற்க்கூர்,

வீடுகள் நிறைந்த பகுதியை கடந்து சில பல ஒத்தையடி பாதைகளை கடந்து சென்றால் மொத்த நிலப்பரப்பும் தோட்டமும் துரவுமாய் காட்சி தந்தது.. அதிலே பெரும் நிலப்பரப்பிற்கு ஒற்றை சொந்தக்காரரான நேசமணி புளியங்காட்டின் வரப்பில் தோதுவான இடம் பார்த்து ஒய்யாரமாய் அமர்ந்திருந்தார்..

வேலைக்கு அமர்த்திய நயினாரும் சங்கிலியும் மரத்தின் மீது ஏறி, வலுவான கொம்பு கொண்டு பழுத்து தொங்கிய புளியை தட் தட்டென தட்டிக்கொண்டிருந்தனர்.. “யோ.. அந்த கொப்புல கெடக்கத தட்டு.. இந்த கொப்பு வேணாம்.. எல்லாம் உதக்கா.. பழத்த மட்டும் தட்டு..” என அறிவுரை வழங்கி கொண்டிருக்க, “தெரியுது வாத்தியாரே.. சரியா தான அடிச்சிட்டு இருக்கோம்..” என கூறினான் சங்கிலி..

“சொல்லுதத மட்டும் செய்யுல.. பெரிய இவன் மாதிரி பேசாத.. இங்க இருந்து பாக்கவனுக்கு தான எது எது எங்க கெடக்குன்னு தெரியும்.. சொல்லுதத கேட்டு கீழ்படிஞ்சு நடக்க பாத்துக்கோ.. சொல்லிப்புட்டேன்..” என அதிகாரமாய் கூற, “வாத்தியாருல.. அதான் பள்ளிகொடத்துல அதட்டுத மாதிரி பேசிட்டு இருக்காரு..” என இருவருக்கும் உள்ளேயே பேசி கொண்டனர்..

“என்னலே.. உள்ளுக்குள்ள குசுகுசுன்னு என்ன பேசிட்டு இருக்கிய..” என மீண்டும் அதட்டுவதற்குள் வந்து சேர்ந்தார் சமுத்திரம்.. அடர்ந்த கருமை நிறத்திற்கும் தமிழ்நாட்டின் நிறத்திற்கும் வித்தியாசம் காண்பிப்பதற்காக உருவான ஜோடி தான் நேசமணி-சமுத்திரம் தம்பதியினர்.. அவரைக் கண்டதும் முகத்தில் கொண்ட இறுக்கத்தை தளர்த்தாமல், “என்ன??” என சிடுசிடுத்தார் நேசமணி..

“பெரியவன் ஊருல இருந்து வாரானாம்..” என மெல்லிய குரலில் கூற, “அதுக்கு??” என்றார் உடனே.. என்ன கூறினாலும் தன் வார்த்தையை வெட்டி பேசுபவரிடம் என்ன பேசுவது என தெரியாமல் நிற்க, “அதுக்கு நான் என்ன செய்யட்டும்??” என அடுத்த கேள்வியும் வீசினார்.. “உங்களை ஒன்னும் செய்ய சொல்லல.. வாரேன்னு சொன்னான்.. கேட்டுட்டு வர மாட்டானோன்னு வந்த அன்னைக்கு வையிதுட்டு இருக்க கூடாதுன்னு தான் சொன்னேன்..” என்று விட்டு பதிலுக்காக காத்திருக்காமல் நகர்ந்தார் சமுத்திரம்..

ஒன்று மென்மையாக அடுத்த கேள்வியில் முழு விவரத்தையும் வாங்க வேண்டும்.. இல்லையென்றால் “நான் பேசிட்டு இருக்கும் போதே போற.. அப்போ எனக்கு என்ன மரியாதை??” என கேட்டு சண்டையிட வேண்டும்.. இரண்டும் இல்லை.. “ஆன்..” என்று விட்டு எந்த சலனமும் இன்றி மீண்டும் சங்கிலிக்கும் நயினாருக்கும் வசவுகளை வாரி வழங்க தொடங்கினார் நேசமணி..

அங்கிருந்து கிளம்பிய சமுத்திரம், இரண்டு வரப்புகள் தாண்டி நடப்பட்டிருந்த தக்காளி நாற்றுகளுக்கு நடுவே இருக்கும் களைகளை களையத் துவங்கினார்.. “யம்மா... ஐயா என்ன சொன்னாவ??” என பக்கத்து பாத்தியில் நின்ற தங்கம்மாள் கேட்க, “அவரு என்ன கேப்பாரு.. அப்பிடியா சேரின்னுக்கிட்டாரு.. வேற என்னத்த சொல்லுவாரு..” என்றபடியே தோளில் கிடந்த துண்டை எடுத்து, தலையை வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள கட்டிக்கொண்டார்..

மதிய நேரத்தில் உச்சி வெயில் தணியத் தொடங்கும் வேளையில் வேலை முடிந்திருந்தது.. மரத்திலேயே நாள் முழுவதும் ஒட்டியிருந்த இருவரும் மரப்பட்டையை மிஞ்சும் மரஅட்டை போல கீழிறங்க, இரண்டு பைசாவை எடுத்து நீட்டி “செலவுக்கு வச்சிக்கோ.. நாளைக்கு மதியத்துக்கு மேல வா.. வரப்பு வெட்டி பாத்தி கெட்டி தந்தன்னா சாயங்காலம் மல்லிய விதைச்சிருவேன்..” எனக் கூறி வழியனுப்பி வைத்தார்..

பெண்கள் அனைவரும் அந்த இடைவேளையில் உணவருந்தி விட்டு சற்று இளைப்பாற, உணவை கூட விடுத்து வெண்டையினுள் வளர்ந்து நின்ற களையைப் பிடுங்கத் தொடங்கினார் நேசமணி.. குனிந்த தலை சற்றும் நிமிராமல் உருவம் மட்டும் நகர, முதல் முறை பார்ப்பவர்கள் சிரித்தாலும் குறைபட்டுக் கொள்ளக்கூடாது.. “தோ பாரு.. அந்த பாறை நகருது.. அங்க பூச்சாண்டி இருந்து நவுத்துறான்.. நீ ஒழுங்கா சாப்பிடு.. இல்லன்னா அந்த பூச்சாண்டிக்கிட்ட பிடிச்சு குடுத்துருவேன்..” என்று ஒரு தாய் அடம் பிடிக்கும் மகனுக்கு சாப்பாடு ஊட்டி விடலாம்..

மோட்டார் செட்டின் அருகே நின்ற சமுத்திரம் தலையை தூக்கி நேசமணியை கண்டுவிட்டு, கையில் இருந்த பாலீத்தீன் கூடையோடு வீட்டை நோக்கி நடந்தார்.. இப்பொழுது குனிந்த நேசமணியின் தலை இருட்டுவதற்கான அறிகுறிகள் தென்படும் வரை நிமிரப்போவதிலை.. அதற்குள் வீட்டிற்கு சென்று பிள்ளைகளுக்கு காப்பி போட்டாவது வைக்கலாம்.. இப்பொழுது தொடங்கினால் தான் இரவு உணவும் முடியும் என்பதால் சீக்கிரமே கிளம்பி விடுவார் சமுத்திரம்..

இதை விட பெரியவன் வீட்டிற்கு வரப்போகிறான் என்பதே தலைக்குள் இருந்து அரித்து கொண்டிருக்க, வேகமாக நடையை கட்டினார்.. தோட்டத்தில் இருந்து வீடு நான்கு கிலோமீட்டர்கள் தள்ளியிருக்க, நடந்து செல்வது சற்று சிரமம் தான்.. ஆனாலும் சற்று தூரத்தில் வரும் பொழுதே உணர்வை கண்டு கொள்ளும் கன்றுக்குட்டிகளின் ஆசையான குரலுக்காகவே நடக்கலாம் தவறில்லை..

நேசமணியின் வீடு சற்று முன்னுக்குப் பின்னான அமைப்பு கொண்டது.. அவரை போலவே.. சதுரமான நிலப்பரப்பில் வலது முனையில் கிழக்கு நோக்கி வாசல் விட்டு இடது முனையில் கடைகளை கட்டி வடக்கு நோக்கி வாசல் விட்டு வீட்டை ஒட்டினாற்போல தொழுவம் மேற்கு நோக்கி கட்டப்பட்டிருந்தது.. குழப்பம் வருகிறதா?? ஹஹஹா..

கடையை சுற்றி வீட்டினை அடையும் பொழுது வாசலில் அமர்ந்திருந்தாள் ஜெயா.. “சின்னவன் வரலியோ..” என கேட்டுக்கொண்டே கூடையை அவளிடம் தந்து விட்டு, பின்பக்க தொழுவத்திற்கு நடந்தார்.. தீவனத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த கம்பிற்கு பக்கத்திலே அளியை அடுத்து சாக்கில் புண்ணாக்கு வைக்கப்பட்டிருந்தது..

ஈயப்பானையில் இரண்டு அள்ளி வாளியில் கொட்டி விட்டு ஏற்கனவே வீட்டுக் காய்கறி, உணவுக்கழிவுகளை சேமித்து வைத்திருந்த குடத்தில் இருந்து மாட்டுக்கான கழனித் தண்ணீரை ஊற்றினார்.. ஒன்று வெள்ளையும் மற்றொன்று கருப்பாக நெற்றியில் சுழித்திருந்த வெள்ளை நாமமும் கொண்டு சமுத்திரத்தின் வரவை கண்டு குதூகலித்துக் கொண்டிருந்தன இரு கன்றுகள்.. மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி வைத்திருந்த நீர்த்தண்ணீர் கலவையை தூக்கி முன்னே வைத்தார்.. ஆர்வமும் உறிஞ்சி குடித்து வெளியே எடுத்து நாவை சுழற்றி நாசியில் இருந்த மிச்சத்தை வழித்து கொண்டது..

வெற்றிடத்தில் கோபுரம் போல வைக்கோல் கட்டு படப்பாக அடையப்பட்டிருக்க, தொங்கிக் கொண்டிருந்த வைக்கோல் சடையை ஒரு புறமாகத் தள்ளிவிட்டு வைக்கோலை உருவி இரு கால்களுக்கு நடுவே போட்டார்.. அந்த சத்தத்தில் உள்ளே பதுங்கியிருக்கும் ஓணான்களும் பாம்புராணியும் பாதுகாப்பிற்காக அவ்விடத்தை விட்டு சரசரவென்று நகரத் தொடங்கியது.. பழகிப் போன சத்தத்தினை பொருட்படுத்தாமல் உருவி போட்ட வைக்கோலை அள்ளி, தீவன கொட்டடியில் போட்டுவிட்டு, கிடந்த தட்டையை சிறிது சிறிதாக அரிவாளில் கொத்தி கன்றுகளுக்கு போட்டார்..

வைக்கோலை மட்டும் தின்று காய்ந்து போன கன்றுக்குட்டிகள் பச்சையைக் கண்டதும் துள்ளிக் குதிக்க, அதனுடைய குளம்பால் தன்னை மிதித்து விடாமல் கவனமாகவே நடந்தாலும் சுண்டு விரலில் நங்கென்று மிதித்து விட்டது கருநிற கன்று.. “ஏ.. கொங்கன பேவுள்ள.. காலுலேயே மிதிச்சிட்ட.. இதுக்கு தான் தள்ளி நின்னே போடணும்..” என அதனுடைய முகத்திலேயே இரண்டு அடிகளை போட்டுவிட்டு கையில் இருந்த கட்டுகளை கோபமாக கீழே போட, சில தூரங்களுக்கு சிதறியிருந்தது..

புளியமரத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுகள் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நகர முடியாது என்பதால் தள்ளி விழுந்த தீவனத்தையும் உண்ண முடியாது.. முந்தியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்ட சமுத்திரம், கொளுஞ்சி மார் கொண்டு முதலில் தொழுவத்தில் கிடந்த சாணியை கூட்டினார்.. ஒரு அளவிற்கு கும்பலாக சேர்த்து முடிக்கவும் கல்லில் வைத்திருந்த நார்பெட்டியில் அள்ளி எருக்குழியில் தட்டினார்..

பின் கன்றுகள் அருகே சிறுசிறு உருண்டைகளாக கிடந்ததையும் வைக்கோலால் சுற்றி, மண்ணோடு சேர்த்து எருக்குழியில் எறிந்தார்.. கொளுஞ்சி மாரை நார்பெட்டியில் போட்டு எருக்குழியின் அருகே வைத்து விட்டு, ஈக்குமாரை எடுத்துக் கொண்டு வீட்டை சுற்றி பெருக்கத் தொடங்கினார்.. அந்த நேரத்தில் ஜெயா அம்மா கொண்டு வந்த கூடையில் இருந்த காய்கறிகளை அடுப்பாங்கரையில் அடுக்கி வைத்து விட்டு, பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு, ஈரமான துண்டினை காயப்போட பின்புறம் வந்தாள்..

முக்கால்வாசியை பெருக்கி முடித்திருந்த சமுத்திரம் ஆங்காங்கே கூட்டி வைத்திருக்க, “யம்மா.. அந்த கறுத்தைக்கு இன்னும் கொஞ்சமா தீவனம் போடலாம்லா..” எனக் கேட்டவளின் ஆசை மாடாற்றே.. “ஏ.. நீ சும்மா கெட.. பக்கத்துல போகக் கூடாது.. நங்குன்னு சுண்டு விரல்லயே மிதிச்சிட்டு..” என கால்களை தடவிக் கொண்டார் சமுத்திரம்.. பின் அம்மாவிற்கு ஒத்தாசை செய்வதற்காக குப்பையை அள்ளி எருக்குழியில் போட்டாள்..


மெல்ல மெல்ல இருள் கவ்வத் தொடங்க, தூரமாய் “ம்மா... ம்மா..” என்ற குரல் இருவரின் செவியையும் எட்டியது.. “ஏ.. ஜெயா.. பத்திக்கிட்டு வந்தாச்சு போல இருக்கு.. இந்தா கலக்கி வச்சிருக்க தண்ணீய காட்ட சொல்லு.. நா உள்ள போறேன்..” என்று விட்டு உள்ளே செல்ல, இரண்டு செவலை மாடுகளை கையில் பிடித்து, “கிக்கும்.. கிக்கும்..” என மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தார் நேசமணி.. உள்ளே சென்ற சமுத்திரம் அவசரமாக விளக்கை ஒளிர விட, முகப்பிலும் தொழுவத்திலும் இருந்த குண்டு பல்பு எரிந்தது..
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom