ராட்சஷன் 22
திரவங்கள் பல சூழ்ந்து இருக்க, குடுவைகள் பல அடுக்கி வைக்கப்பட்டிருக்க மேலே வெள்ளை கோட் மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு அந்த மனிதர் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க அவரை தேடி ஒருவன் வந்தான்.
வந்தவன் அவரிடம் ஏதோ சொல்ல அவர் முடியாது என்று மறுத்துக் கொண்டிருக்க அதன்பின் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தேறியது இறுதியில் அவன் சொன்னதற்கு அவர் அரைமனத்துடன் சம்மதித்து ஒரு அறைக்குள் சென்று மறைந்தார்.
அறையில் இருந்து வெளிவந்த அந்த மனிதரின் கைகளில் அந்த சிறு பெட்டி இருக்க, அதை அவர் பெரும் தயக்கத்துடன் தன் கைகளில் இருந்து எதிரில் இருந்த மனிதனை பார்த்துக் கொடுத்தார்.
அவர் தயக்கத்தை அளவிட்ட அந்த மனிதன் "ஓ! நோ! பார்ட்னர்! நாம செய்யறது வியாபாரம்! தொழில் செய்றதில் எல்லாம் பாவம்! புண்ணியம் பார்க்ககூடாது" என்று பார்ட்னர் என்று அழைக்கப்பட்ட நபரிடம் பேசிக் கொண்டிருந்தான் மைக்கேல்சன்.
"வேண்டாம்! மைக்கேல்! இது விபரீதத்தை விளைவிக்கும்! ஒரு இறந்த மனிதனை வெம்பையரா மாத்துறது உலக நியதிக்கு புறம்பானது! அவனால் மற்றவர்களுக்கு பாதிப்பு உண்டாகும்!" என்று மைக்கேல்சன் பார்ட்னர் என்று அழைத்த அந்த மனிதர் விஜயன் கூற அதை மறுத்து பேசினான் மைக்கேல்சன்.
"நோ! விஜயன்! நம்ம ரிசர்ச்க்கு அங்கீகாரம் கிடைச்சா நாம ஏன் இப்படி மறைமுகமா காசுக்கு பண்ணணும்! நேர் வழியில் போனா எதுக்கும் மதிப்பு கிடையாது விஜயன். நீங்க எனக்கு காலேஜ் சீனியரா இருந்துட்டு நான் அட்வைஸ் பண்ற நிலையை உருவாக்காதீங்க விஜயன். நம்ம ரீசர்ச் அங்கீகரிக்க வேண்டியவங்களுக்கு உண்மையா இருந்துட்டு போயிருவோம் சீனியர்! அதுமில்லாம நாம இப்ப ரிசர்ச் செய்து உயிரோட வர வைக்க போறது ஒரு வெஜீட்டேரியன் வெம்பையர். அவனால எந்த ஆபத்தும் வராது! அவன் பசி ஆடு , மாட்டோட ரத்ததோட நின்று போயிடும்! அவன் மனிதனை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்! நீங்க வீணா கவலைபடுறீங்க!" – மைக்கேல்சன்.
"உனக்கு நான் சொல்ல வரது புரியலை மைக்கேல்! இயற்கை மாற்றங்கள் மனிதனுக்குள்ளேயே பல மாறுதல்களை உண்டாக்குது! வைரஸ் , பேக்டீரியா னு புது புது நோய்களை உருவாக்குது! சாதாரண மனிதனுக்கே அப்படினா! வெம்பையர்க்கு? யூ ஜஸ்ட் இமாஜின்! அவன் மனித ரத்தத்தை குடிக்கும் சாத்தானா கூட மாறலாம்! தேவையில்லாம பணத்துக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்காதடா! இது உலக அழிவுக்கு வழிவகுக்கும்.." என்று விஜயன் எச்சரிக்க அதை கேட்ட மைக்கேல்சன் கோபமானான்.
"உங்க அறிவுரைக்கு ரொம்ப தேங்க்ஸ்... நா உங்க அறிவுரையை கேட் க இங்க வரலை! நமக்கு இப்ப நேரம் குறைவா இருக்கு! வாங்க.... இல்ல.. இல்ல... நீங்க வந்தே ஆகனும்... கமான்.... போகலாம் விஜயன்! பிரசாத் நமக்காக அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பார் என்று மைக்கேல்சன் கூற அறை மனதுடன் விஜயன் அவனை பின் தொடர்ந்து சென்றார் .
*******
தேவ் வினய்யின் சடலத்தை போட்டோவில் பார்த்தபடியே தன் மகன் விபி பற்றிய நினைவுக்குச் சென்றார்.
ஆகாஷ் மல்கோத்ரா லண்டனின் இந்திய வம்சாவளி முன்னணி பணக்காரர்களில் அவரும் ஒருவர். அவர்க்கு தேவ் ஆனந்த் மற்றும் விக்ன பிரசாத் என்று இரு மகன்கள். தேவ் மற்றும் பிரசாத் இருவரும் தொழிலில் வல்லவர்களாக விளங்கினர். முதுமை காரணமாக தன் தொழிலை மகன்களிடம் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்ற ஆகாஷ் ஒரு காலை வேளையில், எழாமல் தூக்கத்திலேயே இறைவனடி சேர்ந்திருந்தார்..
ஆகாஷ் இறப்பதற்கு முன்பு, அவர் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் தேவ் தன் தந்தையை சூழ்ச்சி செய்து ஏமாற்றி மல்கோத்ராவிற்கு தெரியாமல் அவர் கையெழுத்து வாங்கி உயிலை தனக்கு சாதகமாக தன் வக்கீல் மூலமாக மாற்றி எழுதி வாங்கி இருந்தார் தேவ் ஆனந்த்.
மல்கோத்ரா இறந்ததும் உயில் படிக்கப்பட சொத்துகள் அதிக அளவில் தேவ்வின் பெயரில் இருப்பதை கேள்விப்பட்ட பிரசாத் கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டார்.
இதை அடுத்து பிரசாத் தேவ்விடம் அதை சொல்லி சண்டையிட... பிரசாத் இறுதியாக ஒரு கட்டத்தில் "உன்னை சொத்துக்களை அனுபவிக்க விடமாட்டேன் தேவ்! உன்னையும் விடமாட்டேன் உன் பையனையும் விடமாட்டேன்" என்று தன் கோபத்தில் தேவையில்லாமல் வார்த்தையை விட்டு கத்திவிட்டுச் சென்றார்.
அச்சமயத்தில் எந்த தேவதை 'ததாஸ்து' சொன்னதோ...
அதனை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டே எதிரும் புதிருமாக பேசாமல் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலை சுமார் 1 மாத காலம் நீடிக்க,
அன்று ஒரு நாள் தேவ் வெளியே சென்று இருக்க , தேவ்வின் 11 வயது மகன் விபி மற்றும் 10 வயது வினய் நீச்சல் குளத்தின் அருகில் பந்து விளையாட்டிக் கொண்டு இருந்தனர் .
அவர்கள் பந்து விளையாட்டிக் கொண்டிருக்க திடீரென்று பந்து தண்ணீரில் விழுந்தது. அதை எடுத்து வர விபி செல்ல முனைய வினய் அவனை தடுத்தான்.
"இரு! விபி! நான் போய் டேட் ஐ கூடிட்டு வரேன்... அவங்க இல்லாம பூல் பக்கம் போக கூடாதுனு சொல்லிருக்காங்கல்ல...
பந்தை அவர் வந்து எடுத்து தருவார் ! யூ ஆர் சோ ஸ்மால்! உன்னால முடியாது விபி! விழுந்துடுவ! உனக்கு நீச்சல் வேற தெரியாது! ரிஸ்க் எடுக்காத!" – வினய்
"நோ! ஐ அம் நாட் ஸ்மால்! உனக்கு நீச்சல் கொஞ்சம் தெரியும்னு ரொம்ப பண்ணாத வினய்! நான் அந்த ஸ்டிக் வச்சு பந்த பக்கத்தில் கொண்டு வந்து எடுத்துடுவேன்! "என்று விபி சொல்ல
வினய் எவ்வளவு தடுத்தும் அதை கேட்காத விபி ஸ்டிக்கை வைத்து பந்தை அருகில் இழுக்க முயல, பந்து தள்ளிச் கொண்டே சென்றது .
அதை எடுக்க விபி முயன்று கொண்டிருக்க ஒரு கட்டத்தில் எக்கி எடுக்க முயன்று ஸ்லிப் ஆகி தண்ணீரில் விழுந்தான் விபி.. தண்ணீரில் விழுந்த விபி மூச்சு வாங்க நீரில் போராட அவனை காப்பாற்ற அவன் கைகளை பற்ற வினய் முயன்று முடியாமல் போக
வினய் வேகமாக "டேட்!..." என்று கத்திக் கொண்டே பிரசாத்தை அழைக்க உள்ளே ஓடினான்.
அவன் கத்துவதை கேட்டு பதட்டத்தில் ஓடி வந்த பிரசாத் "வினய்! என்னாச்சு! ஏன் இப்படி கத்திக்கிட்டே ஓடி வர... உனக்கு ஒன்றுமில்லையே! ஆர் யூ ஆல்ரைட்" – பிரசாத்
"ஐ அம் ஆல்ரைட் டேட்! பட்.. விபி.. விபிக்கு என்று அவன் மூச்சுவாங்க வினய் சொல்ல பிரசாத்திற்கு பதட்டம் பிடித்துக் கொண்டது.
"விபி?... விபிக்கு என்னாச்சு! வா! என் கூட" என்று கூறிய பிரசாத் வினய்யை அழைத்து கொண்டு நீச்சல் குளத்திற்கு விரைய அங்கு விபி மிதந்து கொண்டிருந்தான்.
நீச்சல் தெரியாத விபி மூச்சு திணறி இறந்து போயிருந்தான்.
அது தெரியாமல் பிரசாத் "ஓ! காட்!..." என்று அலறியபடியே ஸ்விமிங் பூலில் இறங்கி விபியை வெளியே இழுத்து, விபியின் கன்னத்தில் தட்டி, வயிற்றில் அமுக்கி, வாயோடு வாய் வைத்து ஊதி, அவனை எழுப்ப போராடிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்தார் தேவ்.
இந்த காட்சியை பார்த்த தேவ் பிரசாத் தன் மகனை கொன்றதாக நினைத்து கொண்டு அவனை குற்றவாளியாக்கி அவனிடம் கத்த ஆரம்பித்துவிட்டார்!
சந்தர்ப்பங்களும் , சூழ்நிலைகளும் பிரசாத் விபியை கொன்றதாக அமைந்தது.
"நீ சொன்ன மாதிரி செஞ்சிட்டேல பிரசாத்! என் பையனை கொன்னுட்டேல!" – தேவ்
"நோ! தேவ் நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க! நான் ஒன்றும் பண்ணல! பசங்க விளையாடும் போது பந்தை எடுக்க தெரியாம விபி தண்ணில விழுந்துட்டான்... நான் அவனை காப்பாற்ற தான் முயற்சி பண்ணேன்!" – பிரசாத்
"கதை ரொம்ப நல்லாவே சொல்ற... உன் கதைய நம்ப நா தயரா இல்ல... உன் பையனை வைத்து என் பையனை கொன்னுட்டேல! அவனுக்கு நீச்சல் தெரியாத விசயத்தை நீங்க பயன்படுத்திக்கிட்டீங்கள்ல"- தேவ்
"நோ! தேவ்பா! நான் எவ்வளவு தடுத்தும் கேட்காம அவன் பந்த எடுக்குறேன்னு உள்ளே விழுந்துட்டான்! டேட் ஒன்றும் பண்ணல" – வினய்
வினய் சொன்னதை காது கொடுத்து கூட கேட்காத தேவ் இறுதியில் பிரசாத்திடம் திரும்பினார்.
"உன்னை நான் சும்மா விட மாட்டேன் பிரசாத்! எனக்கு மாதிரி உனக்கும் உன் பையன் இருக்க மாட்டான்! அவனும் சாகனும்! சாகடிப்பேன்! ஆனால் இப்ப இல்லை... அவன் நல்லா வளர்ந்ததும் சாகடிப்பேன்! உன் பையன் எப்ப என் கையால சாகப் போறானு நீ தினம் தினம் அவன் சாவ நினைச்சு நீ பயப்படனும் ! நீ செத்து பிழைக்கனும்! அதான் நான் உனக்கு தர பனிஷ்மெண்ட்" என்று தேவ் சொல்லிவிட்டு விபியை எடுத்துச் செல்ல பிரசாத் திகைப்பில் நின்றார்
அன்று முதல் பிரசாத் வினய்யை பாதுகாக்க ஆரம்பித்தார். அவனை தேவ்வை விட்டு தொலைதூரம் நிறுத்த வேறு நாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தார். லண்டனுக்கு வர அனுமதிப்பதே இல்லை.
அது தெரிந்தும் தேவ் அமைதியாக இருந்தார். வினய் படிப்பு முடிந்து லண்டன் வந்ததும் தேவ் வினய்யை கொல்ல முடிவு செய்தார்.
அதன்படி வினய்யும் வந்தான் பிரசாத்தை தேடி. தன் தந்தையின் மேல் அதிக அன்பு கொண்ட வினய் அவர் லண்டன் வரக்கூடாது என்று சொல்லியும் அவர் சொல்லை மீறி லண்டன் வந்தான் பிரசாத்தின் காவல்களையும் மீறி .
ஆனால் வினய் தந்தைக்கு இன்ப அதிர்ச்சி தருவதாக நினைத்து பிரசாத்தை தேடி வந்து தன் மரணத்தை தானே தேடிக் கொண்டான்.
****
விபி பற்றிய நினைப்பில் இருந்து வெளிவந்த தேவ் போனை எடுத்து தன் ஆட்களுக்கு அழைத்தார்
"அஜய்! பிரசாத்தோட இப்போதைய நிலை என்ன?" – தேவ்
அதற்கு அவர்கள் என்ன சொன்னார்களோ?
இங்கு "வாட்! என்ன சொல்றீங்க!" என்று சற்று நேரம் யோசித்த தேவ் திரும்பவும் பேசினார் "அஜய்.. பிரசாத்திற்கு வினய்யின் பாடி கிடைக்க கூடாது! வினய் பாடி இப்ப இங்க வந்தாகனும்! அதுக்கு பதில் நான் சொன்ன மாதிரி செய்!" என்று சொல்ல அதை கேட்டுவிட்டு போனை வைத்தான் தேவ்வின் செக்ரடரி அஜய்.
போனை வைத்ததும் தேவ் "ஓ! நோ! பிரசாத்! பாவம் நீ! பையன் இறந்ததை தாங்க முடியாம என்னவோ! பண்ற! ஆனா நீ நினைச்சது இந்த தேவ் இருக்குற வரை நடக்காது! இப்ப என்னோட கேம் ஆரம்பிக்க போகுது! யூ வெய்ட் அண்ட் வாட்ச்! பிரசாத்!" என்று கூறி வெற்றி களிப்பில் சிரித்தார் தேவ் ஆனந்த்.
*******
அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது. அங்கு சிலர் மெழுகுவர்த்திகளை எரியூட்டிக் கொண்டிருந்தனர். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அறையின் நடுவில் தெரிந்தது அந்த சவப்பெட்டி.
சவப்பெட்டியை சுற்றி மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்க அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வந்தார் பிரசாத். அவரை பின்பற்றி மைக்கேல்சன் மற்றும் விஜயன் வந்தனர்.
பிரசாத் அறையின் உள்ளே வந்ததும் அங்கிருப்பவர்களை கண் ஜாடையால் வெளியே போகச் சொல்ல அவர்களும் சென்றனர்.
அவர்கள் சென்றதும் பிரசாத் மைக்கேல்சன்னிடம் திரும்பினார்.
"ஓகே! மைக்கேல்.. நீங்க உங்க வேலையை ஆரம்பிங்க! மணி 12 ஆகிடுச்சு!" என்று பிரசாத் கூற அவர் கூறியதை அடுத்து மைக்கேல் அந்த பெட்டியை திறந்து அந்த சிறு பாட்டிலை எடுத்தார்.
அதை பார்த்த பிரசாத் வேகமாக "மைக்கேல்! என் பையனுக்கு எதுவும் பிரச்சனை வராது ல! அவன் திரும்ப வந்துடுவான்ல" என்று கேட்க மைக்கேல் தன் கைகளில் உள்ள பாட்டிலை அவரிடம் காட்டினான்.
"பிரசாத்! இந்த பாட்டிலில் இருக்குறத அவன் உடம்பில் செலுத்துனா போதும்! அவன் ஒரு மாத காலத்தில் திரும்ப எழுந்திடுவான்!" – மைக்கேல்சன்.
"ஓ! இது என்ன மைக்கேல்! இந்த மருந்துனால என் பையனுக்கு பின்னாடி எந்த பின் விளைவுகளும் வராதுல?" - பிரசாத்.
"இது வெம்பையரின் ரத்தம் பிரசாத். இது உங்க மகன் உடம்பில் செலுத்தினா போதும் அவன் 1 மாத காலத்தில் எழுந்திருப்பான்"- மைக்கேல்சன்.
"வெம்பையரா! ஓ! நோ! மைக்கேல்! நான் என் மகனை உயிரோட தான் வரச் சொன்னேன். நீ என்னமோ வெம்பையர் அது இதுனு சொல்ற! நாம வேற வழி எதாவது கண்டுபிடிக்கலாம் மைக்கேல்" – பிரசாத்.
"நீங்க பயப்படுற அளவுக்கு இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை பிரசாத்! இவன் மனிதர்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்" – மைக்கேல்சன்.
"எனக்குப் புரியல மைக்கேல்! வெம்பையர் னா மனிதனின் ரத்தத்தை தான குடிக்கும்!" – பிரசாத்
"நோ! பிரசாத்! வெம்பையரில் வெஜிடேரியன் நாண்–வெஜீடேரியன் இரண்டு இருக்கு! நாம இப்ப வெஜீடேரியன் வெம்பையரை தான் கொண்டு வரப் போறோம்! அவன் நார்மல் மனிதர்கள் போல் தான் வாழ்வான்! ஆனா இரவு மட்டும் அவன் வெம்பையரா மாறி தன் இரையை தேடி அலைவான்! அவன் மனிதனில் இருந்து உருமாறது அந்த நேரத்தில் தான். அவனுக்கு தேவையானதை நாம கொடுத்துட்டு இருந்தா அவன் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டான் பிரசாத். அவனுக்கு தேவை விலங்குகள் ரத்தம்! அவ்வளவு தான்! அவனால் யாருக்கும் எந்த தீங்கும் வராது" - மைக்கேல்சன்
"ஓ! அப்படியா! இருந்தாலும்...." என்று பிரசாத் இழுக்க மைக்கேல்சன் அவரை இடை மறித்தார்.
"உங்களுக்கு உங்க மகன் திரும்ப வேணுமா? வேண்டாமா? பிரசாத்" – மைக்கேல்சன்.
மைக்கேல் அப்படி கேட்டதும் சற்று நேரம் யோசித்த பிரசாத் தன்னை தேற்றிக் கொண்டு அவனுக்கு சம்மதமாக தலையாட்டினார்.
அதனை அடுத்து அவன் அந்த பாட்டிலில் இருந்த ரத்தத்தை ஊசியில் ஏற்ற பிரசாத் அவனை இடை மறித்தார்.
"இந்த ரத்தம் உனக்கு எப்படி கிடைச்சது மைக்கேல்!" – பிரசாத்.
"மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெம்பையர் வாழ்ந்து வந்ததாக நாங்க புக்கில் படிச்சோம் பிரசாத். அதனை அடுத்து நாங்க அங்கு சென்று வெம்பையர் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது வெம்பையர் பற்றி எங்களுக்கு பல அரிய தகவல்களும், மனிதனை வெம்பையராய் மாற்றும் முறைகளும் ஓலைச் சுவடியில் கிடைத்தது. அதை மூலாதாரமா வைத்து நாங்க மேலும் பல ஆராய்ச்சி செய்து, இறந்தவர்களை வெம்பையரா மாற்ற நிறைய முறைகளை சோதனை செய்து மனிதனை வெஜிடேரியன் வெம்பையரா மாற்றும் யுக்திகளை கண்டுபிடிச்சோம். அதில் ஒரு முறை தான், நாம இப்போ வினய்க்கு பண்ணப் போறோம். அதாவது இறந்து போன மனிதர்களை அங்கு மட்டுமாய் (மேற்கு ஐரோப்பிய காடு) வளரும் ஒருசில மூலிகை சாறை தடவி வெள்ளை துணி போர்த்தி புதைக்கப்பட இறந்து போனவர்கள் கொஞ்ச நாளில் மூலிகையின் பலனாய் புது ரத்தம் ஊறி, வெம்பையராக அதாவது அதீத பலம் கொண்டு ரத்தத்தை மட்டும் உணவாக ஏற்கும் மனிதனாக உருமாறுவார்கள். அவர்கள் மேல போர்த்தி இருந்த துணியில் அவர்களது புது ரத்தம், அவர்கள் வாயில் இருந்து வழிந்து அந்த துணியில் படியும். அந்த படிந்த ரத்த துளிகள் சராசரி மனிதர்களுக்குள் செலுத்தப்படும் போது அவர்களும் வெம்பையராக உருமாறுவார்கள். நாங்கள் அங்கு சென்று இதை பற்றி ஆராய்ச்சி செய்யும் பொழுது எங்களுக்கு இந்த ரத்தத்துளிகள் கிடைச்சது. இது மனிதனை ப்யூர் வெஜிடேரியனா மாத்தும் சக்தி பெற்றது. எல்லா விதமான பரிசோதனைகளையும் நாங்க வெற்றிகரமாக முடித்திவிட்டோம் பிரசாத்! . ஆனால் ... இதுவரை இந்த சோதனைகளை மனிதனுக்குள் செலுத்தி நாங்க பார்க்கவில்லை." என்று மைக்கேல் கூற அவன் சொல்லச் சொல்ல இங்கு பிரசாத்திற்கு பயத்தில் வேர்த்தது.
"என்ன இன்னும் மனிதனுக்கு பரி சோதனை செய்யவில்லையா? ஓ ! காட்?" - பிரசாத்.
"ஒன்றும் பயப்பட தேவையில்லை பிரசாத்... எல்லா விலங்குகள் மேலையும் சோதனை பண்ணிப்பார்த்துட்டோம் நாங்க!" - விஜயன்.
"ஆமா பிரசாத்!.. நீங்க கவலை படத் தேவையில்லை !. உங்க பையன் உங்க கிட்ட பத்திரமா வருவான்.." - மைக்கேல்சன்.
"இதனால் பின்னாடி எந்த பிரச்சனையும் வராதே மைக்கேல்?" - பிரசாத்.
"என்ன பிரச்சனை?" - மைக்கேல்சன்.
"இல்ல அவன் திடீர்னு நாண்-வெஜிடேரியனா மாறிட்டா" - பிரசாத்.
"நாங்க அந்த ரத்தத்தை அப்படியே செலுத்தவில்லை பிரசாத் !... நாங்க நிறைய மூலிகைகள் இதில் கலந்து மாத்திருக்கோம்" - மைக்கேல்சன்.
"அதனால இவன் நாண்-வெஜிடேரியனா மாற சான்ஸ் கம்மி" - விஜயன்.
"அப்போ சான்ஸ் இருக்கு அப்படித்தானே" - பிரசாத்.
"எங்களை நம்பிதான் ஆகணும் . பிரசாத்! உங்களுக்கு வேற வழியில்லை!" - விஜயன்.
"உங்க பையன் உங்க கிட்ட நல்லபடியா திரும்பி வருவான் .! கவ லைபடாதீங்க பிரசாத்"- மைக்கேல்சன்.
"அவனை கவனமாக பார்த்துக்கிட்டாள் போதும் ! பிரச்சனையே இல்லை.. கவலைபடாதீங்க" - விஜயன்.
"ஆனாலும்..."- பிரசாத்.
"பிரசாத்...." - மைக்கேல்சன்.
"சரி எத்தனை நாள் ஆகும் மைக்கேல் என் பையன் எழுந்திருக்க?" – பிரசாத்
மைக்கேல்சன் விஜயனிடம் கண் ஜாடை செய்ய அவர் பிரசாத்திற்கு விளக்கம் கொடுத்தார்.
"உங்க பையன் மாற சுமார் 1 மாத காலம் ஆகும்! இந்த ரத்தம் கொஞ்சம் கொஞ்சமா அவன் உடம்பில் மாற்றத்தை உண்டாக்கும்! அவன் மாற்றம் அடைவது அவன் போர்த்திய துணியில் தெரியும். அந்த துணியின் மேல் அவன் வாயில் வழிந்த ரத்தத் துளிகள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டு அந்த துணியின் நிறத்தையே மாற்றும். அந்த துணி முழுவதுமாக சிவப்பு நிறமாக மாறும் போது அவன் எழுவான் பிரசாத்!" - விஜயன்.
"இன்னொரு முக்கியமான விசயம் அவன் மாற்றம் அடையும் இந்த ஒரு மாத காலமும் மனிதனின் வாடை அவனுக்கு அடிக்கக் கூடாது. குறிப்பாக அவன் சடலத்தின் மேல் எந்த சந்துக்களும் ( பூனையோ , நாயோ) அவன் மேல் ஏறக் கூடாது!" – என்று விஜயன் கூற பிரசாத் மைக்கேலிடம் திரும்பினார்.
"ஏன்? மைக்கேல் அப்படி எதாவது அவன் சடலத்தின் மீது ஏறினால் என்னாகும்?" – பிரசாத்
"அப்படி எதாவது அவன் சடலத்தில் ஏறும் பட்சத்தில் அவன் முழுவதுமாக மனிதரத்தத்தை குடிக்கும் வெம்பையரா அவன் மாறிடுவான் பிரசாத்! அவனால் மனிதர்கள் அழிந்து போவார்கள்!" என்று மைக்கேல் கூற பிரசாத் பயத்தின் உச்சத்திற்குச் சென்றார்.
ஆயினும் தன் மகன் மேல் அவர் வைத்து இருக்கும் அன்பு அவரை மெளனம் காக்க வைத்தது.
மைக்கேல்சன் அந்த சடலத்தின் அருகில் சென்று அந்த வெம்பையர் ரத்தத்தை ஊசியினால் ஏற்றிவிட்டு பிரசாத் அருகினில் வந்தார்.
"வேலை முடிஞ்சது பிரசாத்! நீங்க என்ன பண்றீங்க... 1 மணி நேரம் கழிச்சு அவன் மேல் இந்த வெள்ளை துணியை போர்த்துவிட்டுட்டு வந்துடுங்க! அதை அடுத்து 1 மாத காலம் கழிச்சு நீங்க இந்த கதவை திறந்தா போதும்.." என்று மைக்கேல்சன் சொல்லிவிட்டு வெளியே செல்ல பிரசாத் அவரை பின் தொடர்ந்தார்.
வெளியே வந்த மைக்கேலிடம் பிரசாத் பணத்தை நீட்ட அதை வாங்கிய மைக்கேல்சன் அவரை கேள்வியாக பார்த்தான்.
"என் பையன் எனக்கு முழுவதுமா கிடைச்ச உடனே உன் பணமும் உனக்கு முழுசா வந்து சேரும் மைக்கேல்!" – பிரசாத்
"ம்.ம்.ம்.. பிசினஸ்மேன்ங்குறதை கடைசியில் நிரூபிச்சிட்டீங்கள பிரசாத்? நான் நினைச்சா உங்களையும் மாற்ற முடியும்" என்று மைக்கேல்சன் கூற பிரசாத் சிரித்தார்.
"எனக்கு தெரியும் மைக்கேல்... நீ எனக்கு தலைக்கு மேல சுற்றும் கத்தி மாதிரி எப்பனாலும் எனக்கு நீ ஆபத்தா முடிவனு தெரியும். அதனால் நீ ஆதாரம் இல்லாம செஞ்ச எல்லா இல்லீகல் வேலைக்கும் ஆதாரம் ரெடி பண்ணிட்டேன்!" என்று கூறி அவன் வினய்யை மாற்ற முயற்சி செய்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்ததை காண்பித்தார் பிரசாத்.
அதை பார்த்த மைக்கேல்சன் பல்லை கடித்தபடி கோபத்தோடு அவர் குடுத்த பணத்தை வாங்கியபடியே "என்னை பகைச்சிக்காதீங்க பிரசாத்! பின்னாடி என் உதவி உங்களுக்கு தேவைபடலாம்!" – மைக்கேல்சன்.
"நான் உன்னை பகைச்சிக்க மாட்டேன்! நீ என்னை பகைச்சா என்னாகும்னு சொன்னேன் மைக்கேல்.. அவ்ளோ தான்!" என்று பிரசாத் சிரித்தபடியே மிரட்ட மைக்கேல்சன் வேகமாக அந்த அறையைவிட்டுச் சென்றான்.
அவன் சென்றதும் விஜயன் மைக்கேல்சனை பின்பற்றி செல்ல முயல பிரசாத் அவரை தடுத்தார்.
"மிஸ்டர் விஜயன்! நீங்க என் கூட கொஞ்ச நேரம் இருங்க! எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு" என்று பிரசாத் கூற அதற்கு விஜயன் சம்மதித்தார்.
1 மணி நேரம் கழித்து பிரசாத் சென்று வினய்யின் சடலத்தின் மேல் துணியை போர்த்த முயல அதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் விஜயன்.
"பிரசாத் அவனை தொடாமல் அவன் மேல் இந்த துணியை போர்த்துங்க!" என்று விஜயன் கூற
பிரசாத் எச்சில் விழுங்கியபடி கவனமாக துணியை போர்த்த முயல வினய்யின் வலதுகையை அப்போது தான் கவனித்தார். அதில் டாலு என்று பச்சை குத்தப்பட்டிருக்க அதை பார்த்த பிரசாத் பதற்றம் அடைந்தார்.
"ஓ! நோ! விஜயன்! இது வினய் பாடி கிடையாது! இந்த பாடி வேறு ஒருவனோடது" என்று பிரசாத் கூற அதிர்ச்சியில் நின்றார் விஜயன்.
யட்சகனாக மாறுவான்...