Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


விசுவாசம்...!

Messages
3
Reaction score
0
Points
1
பனிபடர்ந்த இருள் சூழ்ந்த வேளையில் இருளை கிழித்துக்கொண்டு ஒலித்தது குழந்தையின் அழுகுரல் இடையிடையே நாய்களின் ஊளையிடும் சப்தமும் கூடவே காலடி சத்தமும்.

வேகமா வாங்கடா , விடியற்காலைக்குள்ள வேலையை முடிச்சிட்டு ஊர் எல்லையை தாண்டி போயிடனும். உனக்கென்னப்பா கருப்பா நீ சொல்லிடுவ எங்களுக்கு ஒரே பயமா இருக்குல, சும்மா பயப்படாதாடா எல்லாத்தையும் ஐயா பார்த்துக்கிறேன் சொல்லிடாப்புல அப்புறம் என்ன வாடா செவலை!.

நாய்களின் சத்தம் அதிகமாக மாடனும், காளையனும் பின்னேவர முன்னேறி சென்றனர் கருப்பனும், செவலையும்.

ஊரின் நடுவே இருக்கும் பெரியவீட்டின் மதில் சுவரை இலகுவாக ஏறினார்கள் கருப்பனும், செவலையும் வீட்டின் முன்பக்கத்தில் காளையனும் பின்பக்க சந்தில் மாடனும் வேவு பார்க்க!.

ப்ப்பீ, கூர்காவின் விசில் சத்தத்தில் ஒரு வினாடி அசையாது மதில் சுவர் ஓரமாய் உள்ள தென்னை மரத்தின் பின்புறம் மறைந்து நின்றனர் கருப்பனும், செவலையும். விசில் சத்தத்தில் முழித்துகொண்ட பெரியவீட்டு நாய் தன்பங்குக்கு வாசலை நோக்கி குரைத்தது.

முன்வாசல் பக்கம் நின்ற மாடன் விசில் சத்தத்தில் வாசல் அருகிலையே படுத்து போர்வையை போர்த்திக்கொண்டான். சைக்கிளில் சிகரெட்டை புகைத்தவாறு கூர்கா கோவில் திண்ணையை நோக்கி நகர்ந்தான்..

நாய் போர்டிகோவில் போய் படுக்க, மெதுவாக குனிந்தவாறு பின்வாசல் பக்கம் வந்தவுடன் கருப்பன் கழிவறை குழாய் கைபற்றி தாவி ஏறினான், செவலையும் அவனை பின் தொடர மாடியின் பின் பால்கனியை அடைந்தனர்.

பால்கனி கதவின் சாவிதுவாரம் வழியே கம்பியைவிட்டு நெம்பி சத்தமே இல்லாமல் கதவை திறந்தான் செவலை, இவன் எப்படிபட்ட பூட்டையும் எளிதில் திறந்துவிடும் வேலைக்காரன். கருப்பன் பால்கனி வாசல் வழியாக உள்ளே செல்ல, செவலை பால்கனி வாசலில் காவலிருந்தான்.

சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே சத்தம் கேட்க செவலை பால்கனி பின்பக்க கழிவறை பைப் வழியாக இறங்கி , வீட்டின் சுவரை ஏறி குதித்தான் மாடனுடன் அங்கிருந்து ஓட்டமெடுத்தனர். வீட்டிற்க்குள் கேட்ட சத்தத்தை வைத்து , ஏதோ தப்பு நடக்குது என்பதை உணர்ந்து முன்வாசலில் படுத்து கிடந்த காளையும் மெதுவாக நகர்ந்து ஆள் அரவம் இல்லா இடத்தை சென்றடைந்தான்.

விடியற்காலை சேவல் கூவலுடன், மக்கள் கூட்டமும் கூடியது கோவில் திண்ணையில், அங்கு ஒரு ஒரத்தில் கை, கால்கள் கட்டபட்ட நிலையில் உடலெங்கும் இரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தான் கருப்பன். அவனை சுற்றி இளைஞர்கள் கையில் அருவாள்,கட்டைகளுடன் முறைத்தவாறு நின்றனர்.

சிறிது நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு ,ஐயா வர்றாங்க, ஐயா வர்றாங்க, அனைவருக்கும் வணக்கம் வைத்தபடி நெற்றி நிறைய திருநீர் பூசி, வெள்ளை சட்டை வேஷ்டியில் ஒரு 50 வயது மதிக்கதக்க ஆள் வரும்போதே கருப்பனை முறைத்து பார்த்தவாரே வந்தார். நேராக கோவில் திண்ணை நடுவே அமர்ந்தவாறு என்ன பிரச்சனை, எதுக்கு இவன இப்படி கட்டி போட்டு அடிச்சு இருக்கிங்க?!..

கருப்பன் கண்களை திறக்க சிரமபட்டு பார்த்தான், நெருக்கமான குரலாய் காதுக்குள் கேட்டவுடன்.

மங்கலாக தெரிந்தது கருப்பனுக்கு கூட்டத்தின் நடுவே பெரியவரும் அவருக்கு இரண்டு பக்கமும் செவலையும், மாடனும் கைகட்டி பாதுகாவலாக நிற்பதும்.

ஐயா, நம்ம கணக்குபிள்ளை வீட்டுல இந்தபைய களவான போயிருக்கான் பின்பக்க வழியா கதவை உடைச்சு , தடுக்கவந்த கணக்குபிள்ளைய குத்திட்டு ஓடபாத்திருக்கான் வீட்டு ஆளுங்க சேர்ந்து பிடிச்சு கட்டிவச்சிருக்கோம், கோவத்துல அடிச்சிட்டாங்கய்யா.

கணக்குபிள்ளைக்கு ஏதும் உயிருக்கு?!...

இல்லையா ஆனா ,கையிரண்டும் போச்சுய்யா இனி சேராதாம்!..

அச்சச்சோ!!...அப்படி என்னப்பா ஆச்சு?!.

அவர் தடுக்கும்போது விஷம் தடவுன சூரிக்கத்தியை வச்சு ரெண்டு கைலையும் மாறி மாறி குத்தியிருக்கான், உயிரை காப்பாத்தனும்னா கைய எடுக்கனும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்களாம்.

பாவத்த! , நல்ல மனுசன் அவருக்கா இப்படி நிலைமை வரனும் என்றவாறு முகத்தை மூடி வருத்தபடுவதை போல் சிரித்துகொண்டார் பெரியவர் சங்கரப்பாண்டி.

இவனை அடிச்சே கொல்லனும்னு இளைஞர்கள் கட்டையால் அடிக்க ஓங்கும்போது, ஏய் நிறுத்துப்பா, அவனை கொன்னுபுட்டு நீ ஜெயிலுக்கு போக போறியா?! ..போலீஸ் ஸ்டேசனுக்கு போன் அடிச்சு நான் சொன்னேன்னு புடிச்சு கொடுங்க, இன்ஸ்பெக்டர்கிட்ட நா பேசிக்கிறேன் என்ன சொல்றது புரிதா?!..

ஆமாம்பா, ஐயா சொல்றதும் சரிதான் என்றது கூட்டம்.

ஓரக்கண்ணால் கருப்பனை பார்த்தவாரே நடையைகட்டினார் சங்கரப்பாண்டி, செவலையும், மாடனும் பின்னாலையே ஏதும் தெரியாதது போல் நடந்தனர்.

கடும்பாடுபட்டு உழைச்சு கஞ்சி குடிக்கிற நமக்கு எதுக்குயா இந்த பொழப்பு என்று அழுது வடித்து கொண்டிருந்தால் கருப்பன் பொண்டாட்டி மூக்காயி கோர்ட் வாசலில், ஏ புள்ள நீ ஏன் இங்க வந்த, நீ போ ஐயா இருக்காங்க அவங்க பார்த்திப்பாங்க எல்லாம், இப்படி இங்கவந்து அழுவாத.

இந்த புள்ளகுட்டிகள நினைச்சு பார்த்தியாய்யா, எனக்கு இந்த தலையெழுத்து தேவையா?!..

யோவ் இந்த புள்ளைக மேல சத்தியமா சொல்லு நீ திருடதான் போனியா?!..நான் சொல்றேன் யார்கிட்டையும் காட்டி கொடுத்திடாத புள்ள, நம்ம சங்கரப்பாண்டி ஐயாதான் அவன் கையிரண்டையும் வெட்ட சொன்னாங்க அதுனாலதான் செஞ்சேன்.

அட பாவி மனுசா, காசுக்கு ஆசைப்பட்டு இப்படி செய்ய துணிஞ்சிட்ட, நாளைக்கு எவனும் காசு தரேன் சொன்னா என்னையும் புள்ளைகளையும் சேர்த்து கொன்னுடுவ அப்டிதானே?!..

யாரபாத்து கேட்ட காசுக்கு ஆசைபட்டேனு, இது எங்க ஐயா மேல உள்ள விசுவாசத்துல செஞ்சதுடி, யாருக்கு வேணும் காசு?!.

அவன் எங்க ஐயா சொன்னத எழுத மாட்டேனு சொல்லிட்டானாம், ஐயா ரொம்ப வருத்தப்பட்டாரு அதனாலதான் அவன் கையே இல்லாமா ஆக்கிட்டேன். பாருபுள்ள ஐயா முகத்துல சந்தோசத்த, நீ போ ஐயா பாத்துக்குவாறு!..

என்ன கருப்பா, என்ன சொல்லுது உன் பொண்டாட்டி , ஒன்னுமில்லை ஐயா விவரம் தெரியாபுள்ள சும்மா அழுதுகிட்டுயிருக்கு..

இந்தாம்மா மூக்காயி நான் இருக்கன்ல கூடிய சீக்கிரம் அவன வெளில கூட்டிட்டு வந்திருவேன் , அவனுக்காக பெரிய பெரிய வக்கீல் எல்லாம் வச்சுருக்கேன். நீ புள்ளைகள கூட்டிட்டு வீட்டுக்கு போ, இந்த இந்த ரூபாயை வீட்டு செலவுக்கு வச்சுக்க..

இல்ல வேணம்ய்யா!...இருக்கட்டும் வச்சுக்க, அப்பப்ப செலவுக்கு காசு வேணும்னா வந்து வாங்கிக்க சரியா?!...

சரிங்கய்யா!..

கருப்பா, ஜெயிலர் நம்ம ஆளுதான் சொல்லிட்டேன் அடிக்கமாட்டாப்புல, சீக்கிரம் வெளியில கொண்டுவந்திடுறேன் நீ தைரியமா இரு!..

எனக்கென்னய்யா நீங்க இருக்கிங்க, நான் எதுக்கு பயப்படபோறேன், நீதாண்டா என் மூத்தபுள்ள மாதிரி என் மானத்தை காப்பாத்திட்ட, மனசை அரிச்சுகிட்டே இருந்துச்சு நிம்மதியா தூக்கம்கூட வரல, இன்னைக்குதான் நிம்மதியா தூங்குவேன்!.

ஐயா சாமி பெரியவார்த்தை எல்லாம் சொல்லாதிங்க ,நான் எப்பவும் உங்க உப்பு திண்ணு வளர்ந்த உங்க விசுவாசிங்க ,உங்களுக்கு ஒன்னுன்னா உசுரையே கொடுப்பேன்.

நெகிழ்ச்சியுடன் சிறையை நோக்கி நடந்தான் கருப்பன்!..

எத்தனையோ விசுவாசிகள் இந்த கருப்பனை போல் சிறைக்குபின் வெள்ளந்திரியாக, எத்தனையோ சங்கரப்பாண்டிகள் வெளியில் பெரியமனிதன் போர்வையில்!.

கேள்விக்குறியாய் பல மூக்காய்களின் வாழ்க்கை, எங்கள் வானம் பார்த்த பூமியில்!...
 

New Threads

Top Bottom