அத்தியாயம் 7
மறுநாள் ஊரே மாரியம்மன் கோவிலின் முன் தான் திரண்டிருந்தது. சற்று பரந்து விரிந்த அந்த ஆலமரம் இனி அங்கு இருக்கப் போவதில்லை என்பதை அறிந்து அனைவரும் ஒருவித ஆர்வத்துடன் நின்றிருந்தனர்.
சக்தியும் ரத்னாவும் நடப்பதை அமைதியுடன் வேடிக்கைப் பார்த்தார்கள். நேற்றைய இரவின் தாக்கம் இருவரது முகத்திலும் மிச்சம் இருந்தது.
விரிந்திருந்த அந்த ஆல மரத்தின் கிளைகளை முதலில் வெட்டினார்கள். அடைந்து கிடந்த அந்த ஆன்மா வெளியே வரப் போகிறோம் என்று சந்தோசத்தில் இருந்தது.
பின்னர் அந்த இடத்தில் இருந்த மண்ணை எல்லாம் தோண்டி எடுக்க ஆரம்பித்தார்கள். பள்ளமான அந்த இடத்தில் இப்போது ஆலமரத்தின் வேர்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்தது.
சற்று நேரத்தில் ஜேசிபி இயந்திரம் வந்து அப்படியே அந்த இடத்தை இன்னும் ஆழமாக தோண்ட ஆரம்பித்தது. வேர்கள் எல்லாம் கோரமாக மண்ணைப் பிளந்து வெளியே வந்த காட்சியைக் கண்டு ஊரே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது.
சட்டென்று வானத்தில் ஒரு மாற்றம். பகலவன் வெளியே வந்து வெயில் சுள்ளென்று அடித்தப் பின்பும் கூட சட்டென்று மேகங்கள் திரண்டு வர ஆரம்பித்து விட்டது.
என்னாச்சு என்றபடி அனைவரும் வானத்தையே உற்று நோக்கினார்கள். சக்திக்கு புரிந்து விட்டது என்ன நடக்கப் போகிறது என்று. அவனும் ஆர்வமாக அதை எதிர்பார்த்து நின்றிருந்தான்.
மழை சடாரென்று பெய்யத் தொடங்கியது... மழை இங்கே வலுக்கத் தொடங்கிய வேளையில் பள்ளியில் இருந்த அகல்யாவுக்கு தலைக்குள் பல்வேறு நினைவுகள் வந்து குடையத் தொடங்கிவிட்டது.
பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தவளால் அதை தொடர முடியவில்லை. அவள் முகத்தைக் கண்ட மாணவர்கள் "என்னாச்சு மேம்" என்று பதற்றமாக கேட்கத் தொடங்கினார்கள்.
"நந்திங்" என்று சொன்னவள் மீண்டும் முயற்சி செய்து பாடத்தை நடத்த ஆரம்பித்தாள்.
அப்போது ஒருவன் எழுந்து "மேம் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன் நாம நாளைக்கே பாடத்தை நடத்தலாமே" என்று சொல்ல
"எனக்கு ஒன்னும் இல்ல" என்று சொன்னவளுக்கு கண்கள் இருட்டு கட்டிக் கொண்டு வந்தது...
தன் முன் இருந்த டேபிளை பிடித்தவள் தன் சமாளித்துக் கொள்ள பெரும் முயற்சி செய்தாள். உடனே ஒரு மாணவி மட்டும் எழுந்து சென்று பக்கத்தில் இருந்த ஸ்டாப் ரூமுக்கு சென்றாள். அங்கு தற்போது கெமிஸ்ட்ரி ஸ்டாப் சதீஷ் மட்டும் இருக்க "எக்ஸ்கியூஸ் மீ சார்" என்றாள் அந்த பெண்.
"எஸ்" என்று அவன் நிமிர
"சார் சிஎஸ் மேம்க்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன் நீங்க கொஞ்சம் க்ளாஸ்க்கு வாங்க சார். அவங்க போய் ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றாள் அந்த பெண்.
"வர்றேன்" என்று சொன்னவன் வேகமாக பன்னிரண்டாம் வகுப்பிற்குள் நுழைய அங்கே தன் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள் அகல்யா...
"மேம் ஆர் யூ ஓகே" என்றான் சதீஷ்.
"எஸ் சார்..."
"நீங்க போங்க நான் க்ளாஸ்ஸை பாத்துக்கிறேன்..." என்றான் சதீஷ்.
"தாங்க்யூ சார்..."
"இட்ஸ் ஓகே மேம் நீங்க போங்க" என்று அவளை அனுப்பி வைத்தான் அவன்.
வேகமாக லேப்பை நோக்கி நடந்தாள். மனம் தடதடத்துக் கொண்டு இருந்தது. உள்ளே நுழைந்தவளுக்கு தலை வலி தாங்க முடியவில்லை. தலையைப் பிடித்து கொண்டு அப்படியே தரையிலே படுத்து விட்டாள்.
அங்கோ அந்த எந்திரம் அப்படியே மெதுவாய் அந்த மரத்தை அடியில் இருந்து தூக்க முயற்சி செய்தது... மழையில் அந்த இடம் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருந்தது.
கூடியிருந்த மக்கள் இப்போது கலைந்து விட்டனர். சக்தியும் ரத்னாவும் மட்டுமே அங்கே இருந்தார்கள்... கூடவே சற்று தள்ளி ருத்திரன் இருந்தான்...
வேர்கள் எல்லாம் வெளியே வந்துவிட்ட நிலையில் இருந்த அந்த மரத்தை எளிதாக தூக்கி விடலாம் என்று அந்த ஓட்டுனர் நினைத்திருக்க ஆனால் அசைக்க கூட முடிவில்லை.
மழை இன்னும் வலுக்க சரியாக பார்க்க முடியவில்லை அவரால். அப்போது அங்கே கந்தையா வர அவரைக் கண்ட ருத்திரனின் பார்வை இன்னும் பயங்கரமாக மாறியது.
கந்தையா ருத்திரனைப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையை மட்டும் பரிசாய் அவனுக்கு அளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
மீண்டும் அந்த இடத்தில் இருந்த மண்ணை அள்ளி வெளியே கொட்டிவிட்டு முயற்சி செய்தார். சத்ய ருத்திரன் அதை பார்த்த பின்பு கூட அசராமல் அங்கயே நின்றான். அவன் உடலை கருப்பு நிற வேட்டி சுற்றியிருந்தது. கழுத்தில் இருந்த துண்டை எடுத்து தலையில் கட்டியிருந்தான். கண்கள் கனலைப் போல் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தது. மழைநீர் அவன் மேனியில் வழிந்து கொண்டிருந்த போதும் கண்கள் தீர்க்கமாக அந்த இடத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தது.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சக்தி ஏதேச்சையாக பார்வையை அந்த பக்கம் திருப்ப அங்கிருந்தவனைக் கண்டு யோசனை வந்துவிட்டது. யாரது புதுசா இருக்கான் என்று நினைத்தவன் அருகே இருந்த ரத்னாவின் இடையில் குத்தி "டேய் அங்க பாரு" என்றான்.
"என்ன மச்சி" என்று பார்த்தவன்
"யார் மச்சி உன் ப்ரண்டா" என்றான் சாதாரணமாக.
"உன் மூஞ்சி... டேய் அவனைப் பாரேன் ஆளே பாக்க வித்தியாசமா இருக்கான்ல. அவன் கண்ணைப் பாருடா அதுல கோபம் தெரியுது" என்றான் சக்தி.
"எனக்குத் தெரியலை மச்சி" என்றான் ரத்னா.
"கண்ணு தெரியலையா டா"
"அய்யோ மச்சி கோபம் தெரியலைன்னு சொன்னேன்"
"விளையாடாத ரத்னா... "
"நான் சீரியசா தான் பேசுறேன் மச்சி ஆனா நீதான் விளையாடிட்டு இருக்க"
"சரி அதை விடு. இதுவரைக்கும் இவனை நாம பாத்ததே இல்லை இவன் இங்க என்ன பண்ணுறான். அதுவும் மரத்தையே உத்துப் பாத்துட்டு இருக்கான். எனக்கென்னவோ இவன் மேல சந்தேகமாக இருக்கு"
"அப்படியா சொல்லுற"
"ஆமா டா ரத்னா. நாம இந்த மரத்தை எடுக்குறதை எதிர்பார்க்குறது பிரச்சனை முடிவுக்கு வரும்னு ஆனா இவனோட எதிர்பார்ப்பு ஏதோ ஓர் ஆரம்பத்தை தேடி வந்துருக்கு டா" என்றான் சக்தி.
"அப்படியும் இருக்குமோ மச்சி"
"அப்படித்தான் இருக்கும் எதுக்கும் அவனை பாலோ பண்ணலாம் நமக்கும் இன்னும் ஏதாவது தெரிய வரும்"
"மச்சி நேத்து ஃபாலோ பண்ணிட்டு அவங்க சொன்ன விசயத்தைக் கேட்டு இன்னும் நெஞ்சுக்குள்ள பக்குன்னு இருக்கு. இதுல இவனை ஃபாலோ பண்ணி மேற்கொண்டு என் ஹார்ட்டுல ஓட்டை போட்டுடாத. தாங்க முடியாது" என்று அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே மழை சட்டென்று நின்றுவிட்டது.
திரும்பி அவர்கள் அந்த மரம் இருந்த இடத்தைப் பார்க்க மரத்தை வேரோடு அப்படியே தூக்கியிருந்தது அந்த இயந்திரம்.
அங்கோ அகல்யாவும் வேரறுந்த மரமாய் தரையில் வீழ்ந்து மயங்கியிருந்தாள்...
அதுவரை அந்த ருத்திரனையே பார்த்திருந்த இருவரது பார்வையும் அங்கே சென்றுவிட்டது. மண்ணில் இருந்த மரம் அப்படியே அந்தரத்தில் மிதந்தபடி இருந்தது.
அதை உற்று நோக்கிய சக்தியின் கண்களுக்கு அந்த வேரில் ஒரு சிவப்பு நிற துணி முடிச்சுடன் காணப்பட்டது தெரிந்தது. அது என்னவாக இருக்கும் என்று சக்தி உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போதே அவன் தோளை தட்டிய ரத்னா "மச்சி மச்சி அங்க பாரு" என்றான்...
சலிப்புடன் திரும்பி அவனும் அதிர்ச்சி அடைந்தான். இதுவரை அந்த மரத்தையே உற்று நோக்கி கோபத்துடன் நின்று இருந்த அவன் அங்கே இல்லை. என்னடா எங்க போனான்... என்று ரத்னாவிடம் கேட்டபடி திரும்ப அந்த ஆலமரத்தின் வேரில் இருந்த அந்த சிவப்பு நிற துணியையும் காணவில்லை...
குழப்பத்துடன் பீதியும் சக்தியை சூழ்ந்து கொண்டது. இப்போ வந்தவனுக்கும் இந்த மரத்துக்கும் நிச்சயமா சம்பந்தம் இருக்கு என்று நினைத்தவன் அருகில் இருந்த தகரம் போட்டிருந்த இடத்தைப் பார்த்தான்.
மாரியை நினைத்தவன் மனதுக்குள் சற்று தைரியம் வந்தது. சரி இனி என்னதான் நடக்குதுன்னு நாமளும் பாக்கலாம் என்று நினைத்து கொண்டே ரத்னாவை அழைத்து கொண்டு வெளியே வந்தான்...
அப்போது அவனது மொபைல் அடிக்க ஆரம்பித்தது.
"அகல்யாதான் கூப்பிடுறா" என்று ரத்னாவிடம் சொன்னவன் அகல் என்ன என்றான்.
"அண்ணா நான் நிவேதா பேசுறேன்" என்றது மறுபக்கம்.
"சொல்லும்மா"
"அது அண்ணா... மேம் மயங்கி விழுந்துட்டாங்க"
"என்ன சொல்லுறம்மா.."
"ஆமா அண்ணா... நான் தண்ணியை முகத்துல அடிச்சு கூட பாத்துட்டேன். ஆனா எந்தவித ரெஸ்பான்ஸூம் இல்ல... மேடம்கிட்ட இப்போத்தான் சொல்லிட்டு வந்தேன். அவங்க பக்கத்துல டாக்டரை வரச் சொல்லிருக்காங்க.. வீட்டுக்கு இன்பார்ம் பண்ண சொன்னாங்க. அதான் அண்ணா உங்களுக்கு போன் பண்ணேன்..." என்றாள் நிவேதா பரிதவிப்புடன்.
"இதோ நான் உடனே கிளம்பி வர்றேன்" என்று சொன்னவன்
"மாப்பிள்ள உன் ப்ரண்ட் மயங்கி விழுந்துட்டாளாம்.. ரொம்ப பயந்துருப்பான்னு நினைக்கிறேன். நான் போய் அவளை கூட்டிட்டு வர்றேன்" என்று சொன்னவன் தனது வண்டியை எடுத்து கொண்டு அங்கிருந்து விரைந்தான்.
ரத்னாவின் மனம் அவனைப் போட்டு பிராண்டி எடுத்தது. புதிதாய் முளைத்திருக்கும் இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று எப்படி கண்டுபிடிப்பது என்று அவன் யோசித்துக் கொண்டே நடந்து வீடு வந்து சேர்ந்தான்.
சக்தி பள்ளியை அடைந்து வெளியே வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக வாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் வந்து "அகல்யாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது. அதான்" என்று சொல்ல அவரும் சைன் வாங்கிவிட்டு அவனை உள்ளே அனுமதித்தார்.
நேராக ரிசப்ஷனை நோக்கி அவன் செல்ல அங்கே இருந்த இருக்கையில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தாள் அகல்யா...
"அகல் ம்மா" என்று அவன் அழைத்தபடி அவளை நெருங்க "சக்தி" என்றாள் சோர்வாக...
"என்னாச்சு டா"
"தெரியலை ரொம்ப டயர்டா இருக்கு... யாரோ தலையில ஏறி உக்காந்து ஊசியால குத்துற மாதிரி வலிக்குது..."
"சரி சரி ஒன்னும் இல்ல" என்று அவன் சொல்ல நிவேதா அவன் அருகே வந்தாள்.
"அண்ணா இது மருந்து சீட்டு... இதை வாங்கிக் கொடுங்க சொன்னாங்க அண்ணா"
"ரொம்ப தாங்க்ஸ் ம்மா. டாக்டர் வேற என்ன சொன்னாங்க ம்மா"
"பெருசா எந்த ப்ராப்ளமும் இல்லையாம் அண்ணா.. தூக்கம் இல்லாம அதிகமாக யோசிச்சுட்டே இருந்ததால தான் இந்த மயக்கம் வந்துருக்காம். நேத்து இருந்தே இப்படித்தான் எதையோ யோசிச்சுட்டே இருந்தாங்க... நான் கேட்டாலும் சரியா பதில் சொல்லவே இல்லை.. எதுவா இருந்தாலும் இனி நீங்க தான் பாத்துக்கணும்..." என்றாள் நிவேதா.
"சரிம்மா நான் இவளை கூட்டிட்டுப் போறேன். மேம்கிட்ட சொல்லணுமா"
"சொல்லியாச்சு அண்ணா கேட்பாஸ் சைன் பண்ணிட்டாங்க. அதை வாங்கிட்டு கேட்ல கொடுத்துட்டு கிளம்பலாம் அண்ணா. இரண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வரச் சொல்லுங்க" என்று அவள் சொல்ல "அகல்யா நான் போய் உங்க மேம்கிட்ட சொல்லிட்டு வர்றேன்" என்று அவளை நிவேதாவின் அருகே அமரவைத்து விட்டு சென்றான் சக்தி.
சற்று நேரத்தில் வந்தவன் முகம் என்னவோ போல் இருந்தது. அகல்யா அவனைப் பார்க்க "வா போகலாம். வர்றேன் ம்மா" என்றான் சக்தி நிவேதாவைப் பார்த்து.
அகல்யாவும் நிவேதாவிடம் சொல்லிவிட்டு அவனுடன் சென்றாள்.
வண்டியில் செல்லும் போது இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.
வீட்டில் அவன் இறக்கிவிட்டு உள்ளே நுழைய துர்காவும் சாமிநாதனும் வாசலிலே நின்று அவளை அழைத்துச் சென்றனர்.
"சக்தி அவளுக்கு"
"ஒன்னும் இல்ல மாமா. வேலை டென்சன் அதான். ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்... சரி நான் போய் மருந்து வாங்கிட்டு வர்றேன்" என்று கிளம்பி மருந்தை வாங்கி கொண்டு வெளியே வர சட்டென்று தன்னை யாரோ பிடித்து தள்ளுவது போல் இருந்தது.
முயன்று தன்னை நிலை நிறுத்தியவன் முன் இப்போது சட்டென்று ஒரு முகம்... அதுவும் அழகான முகம்...
ஒரு நிமிடம் அகல்யாவே வந்துவிட்டாள் என்றே அவனுக்குத் தோன்றியது...
"அகல்யா" என்று அவன் இதழசைக்க அந்த உருவம் மறைந்து போனது... அந்த உருவத்தைத் தேடி சுற்றும் முற்றும் பார்த்தவனை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க அங்கிருந்து நகர்ந்தான்.
வீட்டினுள் அமர்ந்திருந்த ரத்னா தன் கையில் இருந்த காபியை குடித்துக் கொண்டிருந்தான். டிவியில் சேனல்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தான்.
எதிலும் மனம் லயிக்கவில்லை. ஏதாவது பண்ணனும் நேத்து அவங்க சொன்ன மாதிரி நடந்தாலும் அகல்யாவை முழுசா காப்பாத்தணும்னா நாமளும் நம்ம பங்குக்கு ஏதாவது பண்ணியே ஆகணும். அதுக்கு என்ன பண்ணலாம் என்று நினைத்தவன் "ரத்னா" என்ற குரலில் கலைந்தான்.
"யாரு" என்று அவன் வெளியே வந்து பார்க்க அங்கே யாருமே இல்லை. "யாரு கூப்பிட்டது" என்று அவன் அங்கயே சுற்றிப் பார்க்க மீண்டும் "ரத்னா" என்ற குரல் கேட்டது.
"யாரது முன்னாடி வந்து நில்லுங்கள்" என்றான் அவன்.
"ரத்னா சீக்கிரமா கிளம்பு" என்று அவன் காதோரம் கேட்ட குரலில் அவன் "நீங்க யாரு" என்றான்.
"நீ இங்க இருக்குற ஒவ்வொரு நொடியும் ஆபத்து. அதனால மொத இங்க இருந்து கிளம்பி போய்டு...இந்த ஊருக்குள்ளயே இருக்காத" என்று சொன்ன அந்த குரல் மெதுவாய் மறைந்து தேய்ந்தது..
அவளுக்கு உதவி பண்ணனும் நினைச்சதால வந்த மிரட்டலா இருக்குமோ என்று நினைத்தவன் கூடவே கண்டிப்பாக நாம இங்கதான் இருக்கணும் என்று முடிவு எடுத்தான்...
அங்கோ தனது இருப்பிடத்தில் அமர்ந்திருந்தான் சத்ய ருத்திரன். அவன் கையில் அந்த சிவப்பு நிற முடிச்சு இருந்த துணி இருந்தது...
அதைப் பார்க்க பார்க்க அவன் உள்ளம் வேதனையில் துடிக்க ஆரம்பித்தது.
சத்யா என்று மெல்லிய முணங்கல் அதனுளிருந்து வெளிப்பட்டது.
"அம்மா" என்று கதறிவன் அதை இறுக பிடித்துக் கொண்டான்.
"அழாத சத்யா இது அழ வேண்டிய நேரம் இல்ல"
"அம்மா என்னால முடியல... ஒரு வருசமா இரண்டு வருசமா இருபத்தி நாலு வருசமா நீங்க அதுக்குள்ள இருந்தீங்க. உங்க வேதனை எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரியும் அம்மா.. இதை என்னால ஏத்துக்கவே முடியலல அம்மா" என்றான் அவன்.
விழிகளில் பெருகிய கண்ணீர் அவன் கன்னத்தை தாண்டி கரத்தினில் பட்டது. அவன் கரத்தினில் இருந்த சிவப்பு நிற துணியிலும் அவன் கண்ணீர் பட்டு நனைத்தது.
அதன்பின் அவன் மெதுவாக அந்த சிவப்பு நிறத் துணியில் இருந்த முடிச்சினை அவிழ்க்க முற்பட்டான். பல ஆண்டுகளாக மண்ணுக்குள் இருந்ததால் அது இறுகி போய் இருந்தது.
கஷ்டப்பட்டு அதை அவன் விடுவிக்க அதனுள் இருந்த பொருளை கண்டவன் அதைக் கையால் தடவிப் பார்த்தான். விழிநீர் இன்னும் இன்னும் வழிந்து கொண்டு இருந்தது.
அப்போது அவன் கண்ணீரை துடைக்க ஒரு கரம் வந்தது. அதன் தொடுகையில் சிலிர்த்தவன் திருப்ப அவனின் அருகே அவன் அம்மா அமர்ந்திருந்தாள்...
"அம்மா"
"ஷ்ஷ் எதுக்கு இந்த அழுகை சத்யா. நான் வந்துட்டேன்ல"
"நீங்க பக்கத்துல இருக்குறதை நினைச்சா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அம்மா. ஆனா இனி நடக்க வேண்டியதை நினைக்கும் போது பயங்கர வெறி உள்ளுக்குள்ள கிளம்புது.. உங்களை இந்த கதிக்கு ஆளாக்குனவங்களை நான் சும்மா விட மாட்டேன் அம்மா" என்றான் அவன். அவன் முகத்தில் இருந்த ரௌத்திரம் குரலிலும் தெறித்தது...
"அதுக்காகத்தான் நான் வெளிய வர்றதுக்குள்ள உன்னை வச்சு அந்த அகல்யாவை நெருங்குனேன். ஆனா அந்த சக்தி எல்லாத்தையும் கெடுத்துட்டான். இதுல அந்த வேலம்மாள் வேற நீ பண்ணுற எல்லாத்தையும் தடுத்து சக்திக்கு காவலா இருக்கா... இல்லைன்னா அவனை எப்பவோ முடிச்சுருக்கலாம்" என்றவளிடமும் அதே ஆத்திரம்..
"ஒன்னும் அவசரம் இல்லை அம்மா... இனி நாம பாத்துக்கலாம்" என்றான் அவன்...
"சத்யா இப்போ நான் அகல்யாவை போய் பாத்துட்டு வர்றேன். அவளை பயமுறுத்துனாத்தான் சக்தியும் பயப்படுவான்... அப்போத்தான் அவன் என்ன செய்யுறதுன்னு யோசிக்கவே முடியாம குழம்பி போய் தவிப்பான். நாமளும் நம்ம வேலையை எந்த தொந்தரவும் இல்லாம சரியா செய்யலாம்" என்றாள்.
அதைக் கேட்ட சத்ய ருத்திரனும் சரியென்று தலையாட்ட அவளோ அங்கிருந்து அகல்யாவின் வீட்டை நோக்கி புறப்பட்டாள்...
மீண்டது அமிழ்ந்துவிடுமா...
கதைக்கான கருத்துத்திரி... தங்களின் கருத்துக்களை இதில் சென்று தெரிவியுங்கள்....