அவன் சரண்டர் என்று சொன்னதும் "இங்க என்னடா பண்ணுற" என்று கேட்டான் சக்தி.
"சாதகம் நமக்கு சாதகமா இருக்கான்னு செக் பண்ணலாம்னு வந்தேன்" என்றான் ரத்னா.
"புரியல"
"அன்னைக்கு உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்க்கும் போது ஏதோ ஒரு உருவம் இடையில் வந்து டிஸ்டர்ப் பண்ணுதுன்னு சொன்னேன் இல்ல. சரி மறுபடியும் செக் பண்ணி பாக்கலாம்னு தான் இங்க வந்தேன்" என்று அவன் சொல்ல
"செக் பண்ணி பாத்துட்டயா" என்றான் சக்தி.
"எங்க அதுக்குள்ள நீதான் வந்துட்டயே"
"இன்னைக்கு பாத்தாலும் அந்த உருவம் தெரியும்தானே ஒருவேளை இங்க வச்சு பார்த்தா ஏதாவது தெரியுமோ" என்று அவன் சந்தேகத்துடன் கேட்க
"நீ பாரு நான் இங்கயே வெயிட் பண்றேன்" என்று சக்தி சொன்னதும் ரத்னா அங்கே இருந்த ஒரு சிறு அறைக்குள் நுழைந்தான். அது அந்த வீட்டின் சாமியறை. அந்த அறையும் அங்கே இருந்த அத்தனை சாமி படங்களும் சுத்தமாக இருந்தது. அதுவே ரத்னாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பொதுவாக பல வருடங்களாக பூட்டியிருந்த அறை. அதைத் திறக்கையில் வரும் துர்நாற்றமோ தூசியோ நூலாம்படையோ இன்றி அந்த இடம் காட்சியளித்தால் அதிர்ச்சி வராமல் இருந்தால் தான் அதிசயம். அவன் அப்பா இருந்திருந்தால் எப்படி சுத்தமாக இருக்குமோ அப்படி இருந்தது.
இன்னும் என்ன என்ன மர்மம் எல்லாம் வரிசைகட்டி வரப் போகுதோ என்று எண்ணிக் கொண்டவன் கையோடு கொண்டு வந்திருந்த மலர்களை சாமி படத்திற்கு போட்டவன் முன்னால் இருந்த குத்துவிளக்கினை ஏற்றினான்.
ரத்னசாமியின் அப்பா பெரியசாமி எதிர்காலத்தை கணித்துச் சொல்வதில் மிகவும் வல்லவர். அவர் இருக்கும் வரை அவன் இந்த அறைக்குள் வந்ததே இல்லை. இப்போதும் வேறு வழி இல்லை என்ற காரணத்தாலே இங்கே வந்திருக்கிறான். பெரியசாமி தனக்குத் தெரிந்ததில் சோதிட கலையை மட்டும் ரத்னாவுக்கு கற்று கொடுத்தார். அவனுக்கோ அவரிடம் இருந்து அத்தனை கலைகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு முன் பெரியசாமி மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவரது பிணமோ ஊருக்கு வெளியே கிடந்தது. எப்படி இறந்தார் என்பது இதுவரை யாராலும் கண்டறிய இயலவில்லை. அதன் பின் ரத்னாவை தேற்ற அகல்யாவினால் மட்டுமே முடிந்தது. அகல்யாவுக்காக சக்தியும் ரத்னாவைப் பார்த்துக் கொள்ள நாளடைவில் அகல்யாவைவிட அவனை நன்றாக பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான்...
அடிக்கடி வந்து இந்த வீட்டை சுத்தம் செய்துவிட்டு போனாலும் இந்த அறையினை மட்டும் ரத்னா என்றுமே திறந்தது இல்லை. ஆனால் இன்று அடிக்கடி அவன் எண்ணம் எல்லாம் இந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது. அதனாலயே அகல்யாவைத் தேடி அந்த பேய் வந்ததும் அவனும் இங்கே வந்துவிட்டான்.
ஏற்றிய குத்துவிளக்கின் ஒளியினால் அந்த இடம் முன்னை விட தெய்வீகமாக காட்சியளித்தது. அதன் பின் கற்பூரத்தை ஏற்றியவன் தன் வேண்டுதலை முன் வைத்து தீபாராதனை காட்டத் தொடங்கினான். அவன் செய்வதை வெளியில் இருந்து பார்த்த சக்தி எழுந்து நின்றான். அவன் மனதிலும் நம்பிக்கை சுடர்விட ஆரம்பித்தது. எல்லாமே நல்லபடியா நடக்கணும் என்று நினைத்தவன் அங்கிருந்தபடியே இறைவனை வணங்க ஆரம்பித்தான். சாமி கும்பிட்டு முடித்ததும் அங்கே இருந்த பலகையில் சென்று அமர்ந்தான் ரத்னா. அவன் முகம் ஒருவித எதிர்பார்ப்புடனே இருந்தது.
சக்தியின் சாதகமும் அகல்யாவின் சாதகமும் அவன் முன் இருந்தது. முதலில் சக்தியின் சாதகத்தை அவன் எடுக்க அப்போது "சத்யா அவனுங்களை போய் தடுத்து நிறுத்து" என்று சத்ய ருத்திரனின் அம்மா அவனிடம் கூறினாள்.
"யாரை" என்று சத்ய ருத்திரன் சாதாரணமாக கேட்க
"சக்தியையும் ரத்னாவையும் தான்" என்றாள் அவள்.
"சாதகத்தைப் பாத்தா பாத்துட்டுப் போறாங்க அவங்களை நாம ஏன் தடுத்து நிறுத்தணும்"
"சக்தி நான் சொல்லுறதை கேளு. அவங்களுக்கு எந்த உண்மையும் தெரியக் கூடாது டா. அதுக்காகத்தான் நான் வேலம்மாவையே சொல்ல விடலை. இப்போ மட்டும் அகல்யா சக்தி சாதகத்தைப் பார்த்து அவன் கண்டுபிடிச்சுட்டா எல்லாமே நாசம் ஆகிடும். அப்புறமா நாம எதிர்பார்க்கிறது நடக்காது. போய் அவங்களை தடு. நானே போயிருப்பேன் ஆனா நான் அங்க போன வேலம்மாள் கட்டை விட்டு வெளியேறிடுவா. அது இன்னும் மோசமாகிடும்" என்று புலம்ப
"நீங்க என்ன தான் நினைக்கிறீங்கன்னு எனக்குப் புரியலை. மண்ணுக்குள்ளே இருந்ததுனால நீங்க உங்க உறுதியில இருந்து மரத்துப் போய்ட்டீங்களோன்னு எனக்குத் தோணுது" என்றான் அவன்
"என்ன சொன்ன சத்யா. நான் மரத்துப் போய் இருக்கேன்னா. உன்னை விட ஆக்ரோசமா நான் கொந்தளிச்சுட்டு தான் இருக்கேன். ஆனா என்னை பார்த்து நீ இப்படி பேசுற"
"பின்ன என்னம்மா.. வந்த உடனே அகல்யாவை கூட்டிட்டு வந்து நம்மளோட திட்டத்தை செயல்படுத்துவீங்கன்னு பார்த்தா நீங்க அவங்களுக்கு பயந்துட்டு அமைதியா இருக்கீங்க இப்போவும் அந்த ரெண்டு பேரும் இந்த விசயத்தைக் கண்டுபிடிச்சுடக் கூடாதுன்னு தடுக்க நினைக்குறீங்க. எனக்கு என்னென்னே புரியலை"
"சத்யா இப்போ சொல்லுறதை மட்டும் செய். அவங்க உண்மையை தெரிஞ்சுகிட்டா அவங்களோட பலம் அதிகமாகிடும்" என்றாள் அவளின் அம்மா.
"அவங்க பலத்தை நினைச்சுப் பார்த்த உங்களுக்கு ஒரு விசயம் புரியலை. உங்க பையன் இந்த சத்ய ருத்திரன் பயங்கரமான மந்திர தந்திர ஏவல் சக்தி கொண்டவன். அவனுக்கு அடிமையாய் வேலை செய்ய கணக்கில்லாத பூத பிசாசுங்க காத்துட்டு இருக்கு. ஆனா நீங்க..." என்று அவன் சொல்லும் முன்னே
"இப்போ முடிவா என்ன சொல்லுற. அவங்களை தடுத்து நிறுத்தவயா மாட்டயா" என்று கோபமாக கேட்டாள்.
"அம்மா இதை தான் நான் எதிர்பார்த்தேன். உடனே போய் அதுக்கான வேலையைப் பார்க்கிறேன்" என்றான் மகிழ்ச்சியாக.
"ஒரு நிமிசம் சத்யா.. இது உன்னால முடியலை அப்படின்னா அடுத்து நான் சொல்லுறதை மட்டும் தான் நீ கேக்கணும் புரிஞ்சதா"
"வேலையை முடிச்சுட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன் ம்மா" என்றவன் அந்த தூணைத் தாண்டி உள்ளே சென்றுவிட்டான்.
அங்கோ பலவித மாறுதல்கள் ரத்னாவின் வதனத்தில் வந்து போனது. நிறைய குழப்பங்கள் அவனை வந்து சூழ ஆரம்பித்தது. சக்தியும் அவன் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று நினைத்த ரத்னாவுக்கு சக்தியின் சாதகம் இன்னும் புதிராகத்தான் இருந்தது. ஒவ்வொரு பக்கமாக அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் கண்கள் ஓரிடத்தில் வந்து நிலைகுத்தி நின்றது.
பொதுவாக சத்ய ருத்திரன் வசிக்கும் இடம் பகலில் கூட இருளாகத் இருக்கும். அந்த இடத்தில் அவன் சென்று அமர்ந்திருக்க மெதுவாக உள்ளே நுழைந்தாள் அவனின் அம்மா.
இதுவரை சாதாரணமாக இருந்தவன் முகம் மந்திரவாதிக்கே உரித்தான தோரணைக்கு மாறியிருந்தது. அவன் கருப்பு நிற துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு தன் முன் இருந்த ஒரு ஒற்றைக் கொம்பு வைத்த உருவத்தை வணங்கினான்.
கீழே சிதறியிருந்த மஞ்சள் குங்குமம் அந்த இடத்தையே வித்தியாசமாக காட்டிக் கொண்டிருந்தது அதை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டவன் அங்கயே அமர்ந்தான். ஆனால் முன்னால் நெருப்பு குண்டம் இல்லை. கட்டம் கட்டமாய் வரைந்திருந்த ஒரு மந்திரகட்டம் மட்டும் இருந்தது அதன் நாலு மூலையிலும் அறுத்து வைத்திருந்த எலுமிச்சை பழத்தினை எடுத்து அதில் மஞ்சளை வைத்து தேய்த்து பிழிந்து விட்டான்...
அவன் அங்கே பூசை செய்ய ஆரம்பித்ததும் மயானத்தின் மண்ணுக்குள் அவன் அடைத்திருந்த அத்தனை பிசாசுகளும் அலற ஆரம்பித்தது.
"என்னாச்சு" என்று அந்த புதிய பிசாசு கேட்க "அந்த மந்திரவாதி பூசையை செய்ய ஆரம்பிச்சுட்டான். இனி அவனுக்காக நாம போய் அந்த வேலையை முடிச்சுக் கொடுத்துட்டு வரணும். இந்த பூசை பண்ணும் போது நமக்கு அவ்வளவு வேதனையா இருக்கும். அது முடிஞ்சாத்தான் நம்மளால அமைதியா இருக்க முடியும். ஏதாவது சந்தர்ப்பத்துல முடிக்க முடியாம போயிடுச்சுன்னா அவ்வளவுதான் அவன் நம்மளை வெளியவே வரமுடியாதபடி அவன் அறைக்கு கீழே இருக்குற பாதாளத்துக்குள்ள அடைச்சு வச்சிடுவான்" என்றது அந்த பூதம்...
உடனே அந்த புதுப்பிசாசு "இந்த தடவை நான் போறேன்" என்றது.
"நீயா"
"ஆமா எனக்கும் அவனுக்கும் இடையே ஒரு கணக்கு இருக்கு அதை நான் தீர்க்கணும்"
"வேணாம் அவன் கூட நாம மோத முடியாது. அவன் ரொம்ப ஆபத்தானவன்" என்று சொல்ல
"பரவாயில்லை வாழ்க்கையே வேணாம்னு தான் நான் செத்துப் போனேன். அந்த வேதனைக்கு முன்னாடி எனக்கு இது ஒன்னும் புதுசு இல்ல" என்றது அந்த பிசாசு...
இப்போது நான்கு மூலையும் பற்றியெரிய தொடங்கியது. அதன் வெம்மை அந்த பிசாசுகளை தாக்கத் தொடங்கியது... அதில் இன்னும் அலறல் அதிகமாகியது.
கடைசியில் கையில் இருந்த அந்த மஞ்சளை எடுத்து அந்த நெருப்பிலே போட அந்த மண்ணுக்குள் இருந்த மற்ற பூதங்களை தாண்டி முன்னேறி வெளியே வந்து சேர்ந்தது அந்த பிசாசு.
தன் முன் வந்து நின்ற பிசாசை பார்த்தவன் "ஓ சங்கரி நீயா... நீ வருவன்னு நான் எதிர்பார்க்கவில்லையே" என்றான்.
"நான் இப்போ என்ன செய்யணும்" என்றது அது கடமை நிறைந்த குரலில்.
அங்கே இருந்து வெளியேறிய சங்கரி நேராக அகல்யாவின் வீட்டின் முன் வந்து நின்றாள்.
காற்றாய் மாறி அகல்யாவின் அறையில் அவள் நுழைந்துவிட அங்கே படுத்திருந்த அகல்யா வேகமாக பெர்ஷீட்டை உதறிவிட்டு எழுந்தமர்ந்தாள்.
முத்து முத்தாய் வியர்வை பூத்திருந்தது அவள் முகத்தில்.
அவள் முகத்தில் இருந்த அச்சத்தைப் பார்த்ததும் சங்கரிக்கு என்னவோ போல் இருந்தது. இவளைப் பார்த்தால் எதுவுமே செய்ய மனம் வரவில்லையே. இவளை எப்படி நாம அந்த மந்திரவாதிகிட்ட கூட்டிட்டு போறது என்று நினைத்த சங்கரி நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அறைக்குள் யாரோ வந்து அவளை அப்படியே தரதரவென்று இழுத்துச் செல்வதைப் போல் கனவு கண்டதாலே அவள் பதறி எழுந்து அமர்ந்திருந்தாள்...
இப்போது அறைக்குள் யாரோ இருப்பதைப் போல அவளுக்குள் தோன்ற அவள் அம்மா என்று சத்தமாக அழைத்தாள். ஆனால் துர்காவோ இவள் நன்றாக தூங்கியதால் பக்கத்தில் உள்ள கடைவரைக்கும் சென்றிருந்தார்.
"அம்மா அம்மா" என்று அவள் அழைக்க அதன் பின் பொறுக்க மாட்டாமல் சங்கரி அவள் கரத்தைப் பற்ற திடீரென அவள் கையைப் யாரோ பிடித்ததில் "அய்யோ என்னை விடு என்னை விடு" என்று அகல்யா கத்த ஆரம்பித்தாள்.
"கத்தாத அகல்யா. பேசாம என்னோட வா" என்ற குரல் மட்டும் அவளுக்கு மிக அருகில் இருந்து கேட்பது போல் இருந்தது...
"என்னை விடு என்னை விடு" என்று அவள் கையை விட முயற்சிக்க
"என்கிட்ட இருந்து உன்னால தப்பிக்க முடியாது. ஆனா நீ நினைச்சா என்னை தப்பிக்க வைக்க முடியும்" என்றது அந்த குரல்.
"புரியலை" என்று அவள் அச்சத்திலே கேட்க அவள் முன் தோன்றினாள் சங்கரி...
"யாரு நீ" என்று பயம் விலகாமல் அவள் கேட்க
"என் பேர் சங்கரி நான் இப்போ ஆத்மாவா அலைஞ்சுட்டு இருக்கேன்" என்றாள் அவள்.
"நான் இப்போ என்ன பண்ணனும்"
"என்கூட ஓரிடத்துக்கு வரணும். அங்க வந்தா உனக்கே தெரிஞ்சுடும் வர்றயா" என்று அவள் கேட்க
அவளது மனமோ அகல்யா இது என்னோட பிரச்சனை.. என்னதான் இதுக்குள்ள புகுந்து சக்தி இந்த பிரச்சனையை அவன் தலையில தூக்கி போட்டுக்கிட்டாலும் அவன் உயிரை பணயம் வைக்க என்னால முடியாது. அதனால இப்போ நானே அங்க போறேன். எனக்காக அவன் வந்து ஆபத்துல சிக்க கூடாது. அவன் நல்லா இருக்கணும் நான் இல்லைன்னாலும் என்று நினைத்ததும் "சரி வர்றேன்" என்றாள்.
சங்கரி வேகமாக அவளோடு இணைந்து போக சரியாக வாயிலில் கால் வைக்கையில் அப்படியே பின்னால் இரண்டு அடி தள்ளப்பட்டாள் அகல்யா.
"என்னாச்சு" என்று சங்கரி கேட்க
"படியில கால் வைக்க முடியலை. ஏதோ ஷாக் அடிக்குற பீல் வருது" என்று சொல்லி அகல்யா விழிக்க சங்கரியோ திகைத்து நின்றாள்.
பின்னர் அப்படியே அகல்யாவை காற்றாய் மாறி தூக்கி அந்த படியின் மேல் கால் படாமல் வெளியே தூக்கி வந்துவிட்டாள். வெளியே வாசல் கேட் அருகே வரும் வரை எதுவும் நடக்கவில்லை. ஆனால் அதன்பின் சங்கரி கையில் இருந்த அகல்யா அவள் கையை விட்டு பறக்க ஆரம்பித்துவிட்டாள்...
பறந்தவள் வீட்டுனுள் நுழைந்ததும் அப்படியே கதவு அடைத்துக் கொண்டது...
"அகல்யா" என்று அவளை பிடிக்க முற்பட்டு கதவைத் தட்ட அந்த கதவு திறக்கவே இல்லை... சட்டென்று சங்கரியை அந்த கேட்டைத் தாண்டி யாரோ பிடித்து இழுத்து வெளியே தூக்கியெறிந்ததும்...
எழுந்தவள் அந்த கேட்டை உற்று நோக்க அதன் இருமருங்கிலும் ஏதோ ஒரு எந்திரம் புதைத்து வைத்திருப்பது இப்போதுதான் அவளின் கண்களுக்குத் தெரிந்தது.
கூடவே "சத்ய ருத்திரன்கிட்ட போய் சொல்லு அகல்யாவை இந்த எல்லையைத் தாண்டி எவனாலும் கூட்டிட்டுப் போக முடியாதுன்னு. அவ இதுக்குள்ளயே இருக்குறதுதான் எனக்கு நல்லது" என்ற சத்தம் மட்டும் கேட்க அவளோ அங்கிருந்து விரைந்து ஓடினாள்...
நேராக சத்யாவிடம் சென்று அவள் நிற்க "எங்க அகல்யா" என்றான் அவன்.
சங்கரி நடந்ததைச் சொல்ல "அவளைக் கூட்டிட்டு வரச் சொன்னா அதை செய்யாம அதுக்கான காரணத்தைச் சொல்லிட்டு இருக்கயா... உன்னை" என்று அவன் அவளைப் பாதாளத்தில் அடைக்க முற்பட "சத்யா அவளை விடு" என்றார் அம்மா.
"அம்மா இதுல தலையிடாதீங்க நீங்க"
"சத்யா அவளை விடு" என்றவள்... "நீ போ" என்று சங்கரியை பார்த்து சொல்ல அங்கிருந்து சென்று விட்டாள் சங்கரி.
அவன் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் அமைதியாக இருக்க
"நான் சொன்னேன் தான. இப்போதைக்கு நாம பொறுமையா தான் இருக்கணும்னு. கந்தையனும் அந்த கிழவனும் சேர்ந்து என்னென்னவோ திட்டம் போட்டு வச்சுருக்கானுங்க. அதை தடுத்து நிறுத்தணும்னா நாம அவசரப்பட கூடாது. அமைதியாத்தான் இருந்தாகணும். அகல்யாவை சங்கரி மட்டும் இல்ல நீயே போயிருந்தா கூட கூட்டிட்டு வந்துருக்க முடியாது. அதுதான் இப்போது உள்ள நிதர்சனம்" என்றதும் அவன் அமைதியாக இருந்தான்.
"கவலைப்படாத சத்யா. எல்லாமே நடக்கும். நான் நடத்தி வைப்பேன். நீ மட்டும் கொஞ்சம் நான் சொல்லுறதை பொறுமையா கேட்டு நட. இப்பவாவது ரத்னாவை தடுத்து நிறுத்துறயா" என்றுக் கேட்க
"சரிம்மா" என்றவன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான். சக்தியின் சாதகத்தை விட்டுவிட்டு அகல்யாவின் சாதகத்தை கையில் எடுத்தான். அதை எடுத்ததும் அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்து விட்டது. சட்டென்று ஏற்பட்ட மாற்றத்தை ரத்னா கவனிக்கும் முன் சக்தி கவனித்து விட்டான்.
அதான... இவ்வளவு நேரம் நல்லா போனதே எந்த சாமி புண்ணியமோ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அகல்யாவின் சாதகத்தை தூக்கி வீசிவிட்டு வேகமாக வெளியே ஓடி வந்தான் ரத்னா.
"யோவ் மச்சி... அங்க அங்க" என்று அரண்டபடி பேசியவனை கண்ட சக்தி "ஏய் ரத்னா என்னடா" என்றான்.
"மச்சி விசயம் ரொம்ப பெருசு போல மச்சி" என்றான் ரத்னா.
"அடேய் அப்போ கண்டுபிடிச்சுட்டயா" என்று சந்தோசத்துடன் சக்தி கேட்க
"இன்னும் தெளிவா குழம்பிப் போய் வந்துருக்கேன் மச்சி" என்றான் ரத்னா.
"டேய் ஒழுங்கா என்ன நடந்துன்னு சொல்லு"
"மச்சி" என்றவனின் தொண்டைக் கூடு ஏறி இறங்கியது. சட்டென்று அவனின் இதயம் தனது துடிப்பை அதிகப்படுத்தியது. தனது நெஞ்சைப் பிடித்த ரத்னா அப்படியே அவன் மீதே சாய்ந்தான்.
"மச்சி" என்று அவன் இதழ்கள் மட்டும் முணங்க அதன் அருகே சென்று என்ன பேசுகிறான் என்று கேட்கத் தொடங்கினான் சக்தி.
"அகல்... கல்யாணம்.... நடக்கணும்... சீக்கிரமா..." என்று அவன் இதழ்களின் மெல்லிய அசைவை வைத்து புரிந்து கொண்டான் சக்தி.
அதன்பிறகு ரத்னாவிடம் எந்தவித அசைவும் இல்லை. அவனை நன்றாக அங்கயே படுக்க வைத்தவன் காதில் சில பேச்சுக் குரல்கள் கேட்டது.
"நான் சொன்ன இடத்துக்கு நீ போயிட்டு வந்தயா ராணி" என்று ஒருத்திக் கேட்க
"இல்லக்கா இன்னும் போகலை" என்றாள் மற்றொருத்தி.
"அங்க போ அந்த பூசாரி அப்படியே நாம என்ன நினைச்சு போனோமோ அதை அவராவே சொல்லிடுவார். என்ன பண்ணா என்ன நடக்கும்னு அவர் தெளிவா சொல்லுவார். அதைப் பண்ணா போதும். நாளைக்கு வேற வெள்ளிக் கிழமை..அவர் கருப்பனாவே மாறி குறி செல்லுவாரு. அதனால நாளைக்கு மறக்காம போ. போகும் போது வெத்தலை பாக்கு பத்தி சூடம் எலுமிச்சம் பழம் காணிக்கை இதெல்லாம் கொண்டு போயிடு... கண்டிப்பா உன் பொண்ணுக்கு எல்லாமே நல்லபடியே நடக்கும் என்று சொல்லியபடி அந்த குரல்கள் அந்த வீட்டை கடந்து சென்று மறைந்துவிட்டது..
நடக்கப் போறதை சொல்லிடுவாரா. யாரா இருக்கும் என்று நினைத்தவன் முகம் யோசனையைத் தத்தெடுத்தது... இது ஏதேச்சையா கேட்டதா இல்லை நமக்கான வழி இதுவா என்று அவன் சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதே மாரியம்மன் கோவிலில் இருந்த அந்த தகர கதவு காற்றில் பட்டென்று திறந்து கொண்டது. அந்த சத்தில் நிமிர்ந்து பார்த்தவனுக்கு எதிரே அம்மன் விளக்கொளியில் நன்றாகத் தெரிய அவனுக்கான வழியும் அவனுக்குப் புலப்பட்டுவிட்டது...
மயங்கி கிடந்த ரத்னாவைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றான் சத்ய ருத்திரன்.
அம்மா சொன்னதில் இருந்த உண்மையை புரிந்து கொண்டதால் அமைதியாக அவள் சொன்ன வேலையை முடித்து விட்டு வரும் போது அந்த பாதையில் வேறு யாரோ போவது போல் இருந்தது. உற்று நோக்கியவனுக்கு அந்த நபர் வசியத்துக்கு கட்டுப்பட்டு செல்வதைப் போல் தோன்ற உடனே வேகமாக அந்த நபரை தொடர்ந்து சென்றான்.
இருட்டு லேசாக கவிழ்ந்திருக்கும் அந்த நேரத்தில் அந்த நபர் செல்லும் வழியை பின்பற்றி நடந்தாலும் அதன் பிண்ணனியில் இருக்கும் மர்மம் என்னவாக இருக்கும் என்றே நினைத்தவனுக்கு அதன்பின்னரே புரிந்தது அது தனது தம்பி என்று.
வேகமாக அவன் முன் சென்று மாதவா மாதவா என்று அழைக்க அவனோ அவனை திரும்பியும் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான்.
அவன் கரத்தைப் பிடித்து அவன் இழுத்துச் செல்ல முற்பட மாதவனோ அவன் கரத்திலிருந்து விடுபட்டு வழியில் நடக்கத் தொடங்கினான்.
உடனே தன் இடையில் இருந்த பையினை எடுத்தவன் அதிலிருந்த கருப்பு நிற பொடியினை எடுத்து அவன் நெற்றியில் அழுத்தமாக வைத்து தேய்த்துவிட்டான்.
அதுவரை அவனை உடன் இருந்து வழிநடத்திய துஷ்ட சக்தி அவனை விட்டு விலகி வெளியே வந்து நின்றது.
"யார் நீ என் தம்பியை எங்க கூட்டிட்டு போற. யார் உன்னை அனுப்புனது" என்றான் கடுமையான குரலில்.
"மாயவரம்பன்" என்று அது சொல்ல
"என்ன அவனா" என்று யோசித்தவன்
"அவனுக்காக வேலை செஞ்சது சரிதான் ஆனா நீ என்னைப் பத்தி தெரியாம இங்க வந்துட்ட. இன்னொரு தடவை என் தம்பி கிட்ட நெருங்குனா அவ்வளவுதான்" என்றதும் அந்த துஷ்ட சக்தியும் அங்கிருந்து ஓடிவிட்டது.
"மாதவா மாதவா" என்று அவனை எழுப்பினான் சத்ய ருத்திரன். சிரமப்பட்டு கண்விழித்தவன் எதிரில் தன் அண்ணனைப் பார்த்ததும் வேகமாக அண்ணா என்று அழைத்தபடி கட்டிக் கொண்டான்.
"ஒன்னும் இல்லை பயப்படாத வா போகலாம்" என்று சொல்லியவன் அங்கிருந்து தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான்.
உள்ளே நுழைந்ததும் "அம்மா அம்மா" என்று அவன் சத்தமிட அவன் அம்மா பதில் உரைக்கவில்லை.
"அண்ணா அம்மா இங்கதான் இருக்காங்களா. நான் காலையிலே பாக்கணும்னு சொன்னேன் ஆனா நீங்க முடியாதுன்னு மறுத்துட்டீங்க. இப்பவாவது பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைச்சுருக்கே" என்று சொன்னவன் அம்மா என்று அழைத்தான் உணர்ச்சி நிறைந்த குரலில்.
அப்போதும் பதில் இல்லை. "அம்மா எங்க இருக்கீங்க. நான்தான் உங்க சின்ன பையன் வந்துருக்கேன் என்கூட பேசுங்க ம்மா" என்று கண்ணீர் குரலில் கூற
"மாதவா ஏதோ நடந்துருக்கு நீ இங்கேயே இரு நான் என்னவாக இருக்கும்னு பார்க்கிறேன்" என்றவன் வெளியேறும் முன் "மாதவா எக்காரணம் கொண்டும் இந்த இடத்தை விட்டு வெளியே போயிடாத சரியா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
உள்ளே நின்றவனுக்கு அறையின் தோற்றமும் நேற்று நடந்த நிகழ்வுகளுமே மாறி மாறி தோன்றி சற்று பயத்தை தோற்றுவித்தது. இருந்தும் அண்ணன் சொன்னதற்காக அங்கயே இருந்தான். சில நேரங்களில் அண்ணன் செய்யும் பூசைகளில் அவனுக்கு உடன்பாடு இருந்ததில்லை. அதை அவனிடமும் சொல்லியிருக்கின்றான்... ஆனால் அப்போது எல்லாம் சத்ய ருத்திரன் அந்த காரணம் என்னவென்று தெரியும் போது உனக்கே புரியும் எது தவறு எது சரியென்று சொல்லியிருந்ததால் அவனும் அண்ணனிடம் அன்றிலிருந்து இதைப் பற்றி கேட்பதை விட்டுவிட்டான்.
மயங்கி கிடந்த ரத்னாவை எழுப்பிய சக்தி அவன் முகத்தில் இருந்த உணர்வைப் பார்த்து பக்கி மறந்துட்டேன்னு சொல்லப் போகுதோ என்று நினைத்தபடியே "ரத்னா" என்றான் மெதுவாக.
மெதுவாக அந்த அறையை சுற்றிப் பார்த்தவன் டக்கென்று எழுந்து அமர்ந்து "ஏய் மச்சி நீயா... இங்க நாம என்ன பண்ணுறோம்" என்று புரியாமல் கேட்க
"அது சாதகம்..." என்பதற்குள் துர்காவிடம் இருந்து போன் வந்தது.
"சக்தி" என்றவளின் குரலில் அவ்வளவு பயம் நிரம்பியிருந்தது.
"இந்தா வந்துட்டேன்" என்றவன் "டேய் ரத்னா மறுபடியும் உன் ப்ரண்ட் வீட்டுல இருந்துதான் அழைப்பு. ஏதோ பிரச்சனை போல வா சீக்கிரம்" என்றதும் ரத்னா உடனே வீட்டைப் பூட்டிவிட்டு அவனுடன் இணைந்து நடந்தான்.
அவர்கள் அவ்விடம் விட்டு அகன்றதும் அணைந்திருந்த குத்துவிளக்கு மீண்டும் பிரகாசமாக எரியத் தொடங்கியது.
வீட்டுக்கு வந்தவன் அகல்யாவின் அறை முன் நின்றிருந்த தன் அத்தையிடம் சென்று "என்னாச்சு அத்தை" என்றான்.
"சக்தி அவ ரூம்குள்ள இருந்து எல்லாத்தையும் போட்டு உடைக்குற சத்தம் கேட்டுச்சு. நானும் இங்க வந்து கதவை தட்டி தட்டி பார்த்தேன் ஆனா அவ திறக்கவே இல்லை. இப்போ சத்தமும் கேக்கலை. அவளும் பேச மாட்டுற. எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று துர்கா சொன்னதும்
"அப்போ வா கதவை உடைப்போம்" என்று சொன்னவன் கதவின் மேல் கையை வைக்க அது வேகமாக திறந்து கொண்டது.
"அத்தை நிசமாவே பூட்டியிருந்ததா" என அவன் சந்தேகமாக கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய அங்கே அனைத்து பொருட்களும் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது.
"சக்தி இப்ப வரைக்கும் எல்லாமே உடைந்து நொறுங்கின சத்தம் கேட்டது டா ஆனால் இப்போது அதற்கான எந்த ஒரு தடயமும் இல்லை. இது எப்படி டா சாத்தியம்" என்று சொன்னவளுக்குப் பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது.
"அம்மா நீங்க கொஞ்சம் வெளிய வாங்க" என்று ரத்னா அவளை ஆறுதல் படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்று தண்ணீர் அருந்த வைத்தான்.
அறைக்குள் இருந்த சக்தியின் பார்வை அந்த அறை முழுவதையும் அலசிவிட்டு கட்டிலின் அடியில் சென்று நின்றது. அப்படியே மண்டியிட்டவன் அவளைத் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்தான்.
"அகல்யா அகல்யா" என்று அவன் அவளை எழுப்ப அவளிடம் இருந்து மூச்சு சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் இப்போதைக்கு இவள் உறங்கிக் கொண்டு இருப்பதுதான் நல்லது என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தான்.
"அத்தை அவ நல்லா தூங்குறா. நீங்க அவ பக்கத்துலயே இருந்து பாத்துக்கோங்க" என்று சொல்ல "டேய் எனக்குப் பயமா இருக்கு டா சக்தி. நீங்க கொஞ்சம் இங்கயே இருங்க டா" என்றாள் துர்கா.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை. அவ தூங்கிட்டு தான் இருக்கா பாத்துக்கோங்க. தனியா இருக்க விட்டுடாதீங்க. எங்களுக்கு வேற முக்கியமான வேலை இருக்கு" என்று சொன்னவன் ரத்னாவை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றான்.
நடுக்கூடத்தில் மூவரும் அமர்ந்திருக்க டிவி அனாமத்தாக ஓடிக் கொண்டிருந்தது
"ஏதாவது சொல்லுங்க" என்று சக்தி கேட்க ரத்னாவோ "நீயே சொல்லு மச்சி என் மூளையெல்லாம் முடங்கிப் போய் ரொம்ப நாளாச்சு" என்றான்.
அவனை முறைத்துப் பார்த்தவன் "அப்பா நீங்க சொல்லுங்க அப்பா" என்றான்.
"இல்லை சக்தி எனக்கும் என்ன செய்யன்னு தெரியலை. உங்க அம்மா இருந்தாலாவது அவகிட்ட கேக்கலாம் அவளும் வர மாட்டுறா... எதுக்கும் இப்போ கந்தைய்யா கூட இருக்குறது நல்லதுன்னு தோணுது" என்று மாரியப்பன் சொல்ல
"சரிப்பா நாங்க நைட்டு அங்க போய் பாக்குறோம்... அப்போத்தான் அந்த கந்தைய்யா என்ன நினைச்சு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காருன்னு நமக்கு புரியும்"
அவன் பேசியதை காதிலே வாங்காதவன் போல் சக்தி "அப்பா இன்னைக்கு ஒரு பூசாரி பத்தி யாரோ பேசிட்டு போனதை கேட்டேன். அவர்கிட்ட போனா நடந்ததை எல்லாம் சொல்லிடுவாராம். காலையில அங்க போகலாம்னு இருக்கேன். உங்களுக்கு அவரைப் பத்தி தெரியுமா" என்றான்.
"நல்லாத் தெரியும் டா. ஊர் எல்லையில இருக்க சங்கிலி கருப்பன் கோவில்ல தான் அவர் இருப்பார். எல்லாரும் அவரைப் பத்தி சொல்லுவாங்க. ஆனா நான் தான் அங்க போனதே இல்லை. அப்பறம் காலையில வேணாம் சக்தி சாயந்திரத்துக்கு மேல தான் அவர் கோவில்ல எல்லாருக்கும் குறி சொல்லுவார். அப்போ போ" என்றார்.
"சரிப்பா" என்று சொல்ல ரத்னா "எனக்கென்னவோ நாம இந்த ராத்திரியையே தாண்ட மாட்டோம்னு தான் தோணுது மச்சி" என்றான்.
"அடேய் மொத அந்த வாயைக் கழுவு டா... " என்று கோபமாக சக்தி சொல்ல
"வாயை கழுவிட்டா மட்டும் மாறிடுமா அடப்போ மச்சி.." என்றான் சாதாரணமாக.
"அப்படியே போனாலும் உன் ப்ரண்ட்க்காக உயிர் போகுதுன்னு நினைச்சுக்கோ" என்றான் சக்தி.
"அப்போ முடிவு பண்ணிட்ட"
"நீயே இவ்வளவு ஆர்வமா இருக்கும் போது நானும் அதுக்கான வேலையை செஞ்சாத்தான நல்லது" என்றான் சக்தி.
"உன்னை நம்பி வந்ததுக்கு இதுதான் மச்சி கதி" என்றான் ரத்னா சலிப்பான குரலில்.
"அடேய் அவ்வளவு சீக்கிரம் உன்னை சாக விட்டுருவோமா... நீதான் எனக்கு மச்சினன் முறை செய்யணும் அப்பறம் என் புள்ளைங்களுக்கு தாய்மாமன் சீர் செய்யணும் அதுக்காகவாது உன்னோட உயிரை நான் காப்பாத்திடுவேன் மாப்ள"
"அப்பக்கூட எனக்கு ஒரு கல்யாணம் பண்ணனும் நான் சந்தோசமா இருக்கணும்னு நீ சொல்லவே இல்லையே மச்சி... போ நான் கோபமா போய் தூங்கப் போறேன். வந்து எழுப்பிவிட்டு அப்பறமா கூப்பிட்டு போ" என்று வெளியேறிவிட்டான். அவன் அப்படிப் பேசியதும் சக்தி மாரியப்பனை பாத்து சிரிக்கத் தொடங்கிவிட்டான்.
நல்ல பையன் என்று சொல்லிவிட்டு மாரியப்பனும் எழுந்து தன் தங்கை வீட்டை நோக்கி சென்று விட சக்தியும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றிய எண்ணத்திலேயே அமிழ்ந்து போகத் தொடங்கிவிட்டான்.
சரியாக அதே நேரம் அங்கே சங்கிலி கருப்பன் கோவிலில் கருப்பன் காலடியில் அமர்ந்திருந்த அந்த பூசாரி "வா டா... உண்மையைத் தேடி வர்ற நேரம் வந்துடுச்சு... உன்னைத் தேடி நானும் இப்போ இருந்து காத்துட்டு இருக்கேன்" என்று சொல்லிவிட்டு அந்த இடமே இடியும் அளவிற்கு சிரிக்கத் தொடங்கினார்...
இரவின் ஆதிக்கத்தால் ஊரே அடங்கிப் போயிருந்தது. சக்தியும் ரத்னாவும் நிலாவின் வெளிச்சத்தைத் துணைக்கு வைத்துக் கொண்டு அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள்.
இத்தனைக்கும் கந்தையா சொன்னதில் சக்திக்கு நம்பிக்கை கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. இருந்தாலும் இந்த நேரத்தில் எதையுமே அப்படி சாதாரணமாக நினைத்து அதை விட்டு விடவும் அவனால் முடியவில்லை. ஏன் என்றால் ஆபத்து இருப்பது அகல்யாவிற்கு அல்லவா. அவள் விடயத்தில் அவனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட இயலவில்லை. அதனால் அவன் மனம் அனைத்தையும் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டது.
கந்தையாவின் மேல் சந்தேகம் இருந்தாலும் ஒரு வேளை அவர் சொல்வது போல் செய்தால் அவளின் உயிர் காப்பாற்றப்பட்டுவிடுமோ என்ற ஓர் எண்ணத்தாலயே இன்றைக்கான திட்டத்திற்கு அவன் சம்மதித்தான்.
(பார்க்கலாம் அது அகல்யாவின் உயிரை காப்பாற்ற பேகிறதா இல்லை பணயம் வைக்கும் அவன் உயிரை பலி வாங்க போகிறதா என்று...)
அந்த குடிசையின் அருகே செல்லும் போதே யாரோ அந்தப்பக்கம் போவது போல் இருந்தது.உடனே சக்தியின் விழிகள் கூர்மையானது. யாரா இருக்கும் என்று சிந்திக்கும் போதே கதவு திறந்து கொண்டது. அதனால் கவனத்தை இங்கே திருப்பினான் சக்தி.
"வந்துட்டீங்களா.. வாங்க வாங்க எல்லாமே தயாரா இருக்கு உனக்காகத்தான் நாங்க காத்துட்டு இருந்தோம்" என்று சொன்ன கந்தையா உள்ளே அழைக்க இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
நேற்று பார்த்ததை விட அந்த அறை வித்தியாசமாக இருந்தது. அங்கே இருந்த பூசை பொருட்கள் அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே "என்ன பார்க்குறீங்க நேத்தே சொன்னேன்ல பூசை செய்யணும்னு.. அதுக்கான ஏற்பாட்டைத்தான் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து பண்ணிருக்கோம்" என்றார்.
"அதுக்கென்ன தாத்தா என்ன செய்யணும் நீங்க சொன்னீங்கன்னா அது மாதிரியே நாங்க பண்ணிடுறோம்" என்றான் சக்தி.
அப்போது உள்ளே இருந்து அந்த முதியவர் வந்து "மொத இதை நீங்க இரண்டு பேரும் பூசிக்கோங்க" என்றார். அவர் கையில் ஒரு சிறிய கிண்ணம் இருந்தது.
"இது என்ன தாத்தா" என்றனர் இருவரும்.
"பலகாலமா நான் பூசை பண்ணதால கிடைச்ச அபூர்வமான மை இது.
இந்த பூசை பண்ணுறதுக்கு முன்னாடி இதை நெத்தியில பூசிட்டு தான் உக்காரணும். இது உங்களை சுத்தி இருக்குற தீய சக்திகிட்ட இருந்து காப்பாத்தும்" என்றதும் இருவரும் எடுத்து தங்களின் நெற்றியின் மையத்தில் இட்டுக் கொண்டனர்.
மாதவன் அங்கயே அமர்ந்திருக்க இன்னும் சத்ய ருத்திரன் வந்தபாடில்லை. அப்படியே அங்கே இருந்த அறையை நோக்கி நடந்தான். உள்ளே இருந்த சத்யனின் அறையின் மீது கைவைக்கும் போதே மாதவனுக்கு நடுக்கமாக இருந்தது. ஆயினும் அவன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
அங்கிருந்த அந்த ஒற்றை கொம்பு வைத்த சிலையைப் பார்த்ததும் அவன் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போயின. தலைக்குள் மின்னல்கள் வெட்டுவதுபோல் தோன்ற அவனால் தலைவலியை தாங்க இயலவில்லை. அம்மா அம்மா என்று கதறியவன் அங்கே இருந்த மஞ்சள் குங்குமம் நிறைந்த தட்டின் மேல் நிலைதடுமாறி விழுந்துவிட அது அந்த சிலையின் மேல் பட்டு சிதறியது.
பதறியடித்து எழுந்தவன் அதை சுத்தம் செய்துவிடலாம் என்று எண்ணி தட்டினை எடுத்து சிதறிய மஞ்சள் குங்குமத்தை அள்ளத் தொடங்கினான். அப்போதுதான் அவன் கையில் ஒரு பொருள் தட்டுப்பட்டது. அது சிவப்பு நிறத் துணியால் சுற்றப் பட்டு குங்குமத்தின் உள்ளே இருந்தது. அதைக் கண்டவன் ஆர்வ மிகுதியால் தன் அண்ணனை மறந்து அந்த துணியைப் பிரிக்க ஆரம்பித்தான்.
அதைத் திறக்கப் போகும் சமயம் "இல்லை இப்படி நடக்கக்கூடாது" என்றபடி அவசர அவசரமாக சத்ய ருத்திரனுடன் உள்ளே நுழைந்தாள் அவர்களின் தாய் அமராவதி. உடனே தன் கையை பின்னால் மறைத்துக் கொண்டான் மாதவன். அமராவதியோ அங்கே மாதவன் இருப்பதைக் கண்டு "மாதவா" என்றாள் பாசத்தை அடக்கிய குரலில்.
"அம்மா வந்துட்டீங்களா.." என்றவன் குரல் கலங்கி ஒலிக்க அவன் நின்றிருந்த தோற்றமோ அவளை உலுக்கியது.
"அழாத மகனே. அனைத்தையும் முடித்துவிட்ட பிறகு உன்னை வந்து பார்க்கலாம் என்று நினைத்து இருந்தேன் இப்போது நீயே தேடி வந்துவிட்டாய். சரி நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க" என்றதும்
சத்ய ருத்திரன் "மாதவா இந்த ரூம்க்குள்ள நீ ஏன் வந்த. இப்போ என்ன பண்ணிட்டு இருக்க. உன்னை நான் இதுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல. கையில என்னடா" என்று கேட்க அவன் அந்த சிவப்பு நிற துணியை நீட்டினான்.
"மாதவா" சத்ய ருத்திரன் கோபமாக கத்தியபடி "அதை எடுத்த இடத்துலயே வை" என்று கட்டளையிட இதுவனை தன்னிடம் கோபமாக பேசியே அறியாத மாதவன் அதை வேகமாக அந்த இடத்திலே வைத்துவிட்டான்...
"இதை ஏன் தொட்ட" என்று அவன் திட்ட ஆரம்பிக்கும் முன்
"இப்போ இது முக்கியம் இல்லை. எல்லாரும் கந்தைய்யா கூட சேர்ந்துட்டு அவன் சொன்ன மாதிரி திட்டத்தைச் செயல்படுத்தப் போறானுங்க" என்றாள் அமராவதி.
"நாம அகல்யாவை நெருங்க முடியலை. இப்போ இவங்களையும் நெருங்க முடியாது. என்ன பண்ணி இதை தடுத்து நிறுத்த" என்றதும் அமராவதியின் முகம் யோசனையில் சுருங்கியது. அப்போது மறுபடியும் அந்த குங்குமம் இருந்த தட்டு சிதற இம்முறை அது மாதவன் பாதத்தின் அருகிலே சிதறி கிடந்தது.
"மாதவா" என்று அழைத்த அமராவதியின் குரலில் அத்தனை நிம்மதி.
"அம்மா" என்று அவன் பயத்துடனே அழைக்க
"நீதான் டா நீதான். உன்னை நான் மறந்துட்டேன் பாரு" என்று சொன்னவளின் விழிகள் பளபளத்தது...
"என்னம்மா என்ன சொல்லுறீங்க" என்று சத்ய ருத்திரன் கேக்க
"டேய் இவன் போதும் டா நாம நினைச்சதை நடத்தி முடிக்க... எதிர்த்து வர்றவங்களை இவன் தடுத்து நிறுத்துவான். இவன் நிலவில்லாத நாளில் பிறந்தவன். கருமையை அள்ளித் தெளிக்கும் அந்த காருவா இரவில் பிறந்ததால் இவனை எந்த மையும் தடுக்காது. அதனால நாம அந்த சக்தியை ரத்னாவை தடுத்து நிறுத்திடலாம். இந்த விசயத்தை நான் மறந்து போய்ட்டேன் பாரு.." என்றாள்.
அமராவதியின் பேச்சினைக் கேட்ட சத்ய ருத்திரனுக்கு எதுவோ புரிந்தது போல இருந்தது. ஆனால் இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மாதவனுக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை.
மையினை பூசிக் கொண்டு இருவரும் அமைதியாக அமர்ந்தார்கள். கந்தைய்யாவும் அந்த முதியவரும் இருவரின் முன்னிலையில் அமர்ந்து கொண்டு மந்திரங்களை சொல்லத் தொடங்கினார்கள். சக்தி மையின் சக்தியினால் யோசிக்கும் திறனற்று அவர்கள் செய்வதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைத்து வேலையும் முடிந்த பின் "போங்க இரண்டு பேரும் போங்க... அங்க வெள்ளிமலை போற பாதையில இருக்கற அந்த சத்ய ருத்திரனோட இடத்துல சிவப்பு நிற துணியில முடிஞ்ச ஒரு பொருள் இருக்கும் அதை எடுத்துட்டு வாங்க" என்று அந்த முதியவர் சொன்னதும் சக்தியும் ரத்னாவும் அங்கிருந்து பட்டென்று எழுந்து குடிசையை விட்டு வெளியேறினார்கள்.
இருவரது எண்ணங்களும் சுத்தமாக துடைத்தெறியப்பட்டு அவர்கள் இட்ட கட்டளை மட்டுமே உள்ளே ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த மயக்கத்திலே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
கொஞ்சமாய் கசிந்து வந்து கொண்டிருந்த தண்ணொளியில் அவர்கள் அந்த ஊரைத் தாண்டி வெள்ளிமலை செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினார்கள்.
பொதுவாக அந்த பக்கத்தில் யானை நடமாட்டம் அதிகம். அதனால் அது அனைத்தும் தடைசெய்யப்பட்ட பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் சத்ய ருத்திரன் அதற்கு எல்லாம் பயந்தவன் இல்லையே அதனால் அவன் அங்கே தங்கியிருந்தான். அதுவும் இல்லாமல் எந்த வித தொந்தரவும் இல்லாமல் பூசை செய்ய அந்த இடமே அவனுக்கு சரியானதாக இருந்தது.
அவர்கள் தங்களைத் தேடித்தான் வருகிறார்கள் என்று தெரிந்ததும் அமராவதி சத்ய ருத்திரன் இதுவரை பயன்படுத்தி வந்த அந்த அறையில் இருந்த உருவத்தின் முன் அமர்ந்தாள்.
அவள் செய்வதை இருவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். அடங்காத ஆன்மாவை அடக்கி அந்த அகல்மரத்தில் உள்ளே அடக்கி வைத்திருந்ததால் அவளுக்கான சக்தி அவள் வெளியே வந்ததில் இருந்து அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் எதிரிகள் என்ன செய்ய திட்டம் இட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்து கொள்ளவே தனது பலத்தினை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தது. ஆனால் இப்போது தெளிவாகத் தெரிந்து போனது அவர்களின் திட்டம் என்னவென்று.
அதனால் தான் அவளே செய்ய வேண்டியதை பற்றி தீர்மானித்து விட்டாள்.
தன் கரத்தினை அங்கே இருந்த உருவத்தின் மீது வைத்தவள் அப்படியே மாதவனின் தலையின் மேல் வைத்தாள். சர்ரென்று மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது மாதவனுக்கு. அவன் உடலெங்கும் புதுவித ஒளி பரவி விரவியதில் அவன் முகமும் வெளிச்சமானது.
"நம்மளைத் தேடி வந்துட்டு இருக்கவங்களை தடுத்து நிறுத்து மாதவா" என்று அமராவதி சொன்னதும் அவனும் தாயின் சொல்லை நிறைவேற்ற புறப்பட்டு விட்டான்.
அந்த ஆபத்தான இடத்தைக் கடந்து சக்தியும் ரத்னாவும் வந்து கொண்டிருக்கையில் திடீரென யானை பிளிறும் சத்தம் கேட்டது. அது அவர்கள் காதில் விழாதது போல் அவர்கள் முன்னேறி கொண்டு இருக்க அவர்களுக்கு முன் அந்த யானை வந்து நின்றது.
ஒற்றையாய் வரும் யானையின் சீற்றம் அனைவரும் அறிந்தது தான். அந்த யானை இருவரையும் தாக்க முற்படுகையில் இருவரின் நெற்றியில் இருந்து ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த மையினைப் பார்த்ததும் தன் தும்பிக்கையை கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து அமைதியாக சென்று விட்டது.
இருவரும் நேராக சத்ய ருத்திரன் இருப்பிடத்தை அடைய அங்கே அவர்களுக்கு முன்னால் மாதவன் நின்றிருந்தான். அவர்கள் அவனைத் தாண்டி உள்ளே செல்ல முற்பட மாதவன் தன் கரத்தை நீட்டி அவர்களை தடுத்து நிறுத்தினான்.
மயக்கத்தில் இருந்த அவர்களது விழிகள் மாதவனை ஏறிட்டு பார்த்தது. உடனே மாதவன் அவர்களை தன் கரத்தினால் தள்ளி நிறுத்தினான்.
"எங்களுங்கு உள்ளே இருக்கிற பொருள் வேணும் அத எடுத்துட்டா நாங்க போய்டுவோம்" என்றான் சக்தி.
"அது எங்களுக்கு சொந்தமானது. உங்களோட கையில் கிடைக்க நான் விடமாட்டேன் இங்கிருந்து போய் விடுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது" என்றான் மாதவன்.
மையின் தாக்கத்தால் சக்தியும் ரத்னாவும் மீண்டும் அவனைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைய பார்க்க மாதவன் இருவரையும் பிடித்து தள்ளியிருந்தான்.
"என்ன தாண்டி போக முடியாதுன்னு நான் தான் சொல்லிக்கிட்டே இருக்கேன் இல்ல.. அப்புறம் என்ன இரண்டு பேரும் திரும்பி போயிடுங்க இல்லைன்னா உயிரும் மிஞ்சாது" என்றான் மாதவன்.
இருவரும் திரும்பிச் செல்லாமல் இன்னும் அப்படியே நிற்க சீற்றத்துடன் மாதவன் அவர்களை குப்புறத் தள்ளி இருந்தான். ஆக்ரோசமாக அவர்களை அடித்து அவன் தூக்கி யெறிய அங்கோ எறிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி நடுக்கத்தில் இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருந்தது.
"நாம பூசி விட்ட மையை எதிர்த்து யார் வந்து நிக்க போறா" என்று யோசனையுடன் அந்த முதியவர் கேட்க "அதுதான் புரியலை" என்றார் கந்தையா.
"அந்த அமராவதி ஏதோ திட்டம் போட்டுட்டா போல" என்று சொன்ன முதியவர் "கந்தையா" என்று கத்த "என்ன ஐயா" என்றார் அவர்.
"இனி நாம நம்மளோட திட்டத்தை ரொம்ப கவனமா தான் செயல்படுத்தணும். அப்போத்தான் நாம நினைச்சது நடக்கும்" என்று சொன்னதும் "சரிங்க ஐயா நான் பாத்துக்கிறேன்" என்றார் கந்தையா.
அமராவதி கையில் குடுத்து அனுப்பியிருந்த ஒரு குடுவையை எடுத்து அதிலிருந்த திரவத்தை இருவரின் மீதும் தெளித்தான். அதைத் தெளித்ததும் அவர்கள் மயங்கி அங்கே விழ அதன்பிறகு அந்த மையின் மீது இன்னும் கொஞ்சம் ஊற்ற அந்த மை அந்த திரவத்தோடு திரவமாக கரைந்து போனது.
நெற்றியில் இருந்த மை காணாமல் போனதில் அவர்கள் அப்படியே அசையாமல் கிடக்க உடனே மாதவன் உள்ளே சென்றுவிட்டான்.
மாதவனை கண்ணுற்ற அமராவதி "மாதவா சொன்ன மாதிரியே பண்ணிட்ட டா. இனி நீயும் இங்கயே இருடா. நம்ம வேலை எல்லாம் சீக்கிரமா முடியட்டும் அப்புறம் எனக்கு விடுதலைதான்" என்று சொன்னதும் இருவருக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.
"எதுக்குடா இரண்டுபேரும் மூஞ்சை தூக்கி வச்சுருக்கீங்க. என்ன இருந்தாலும் நான் இந்த உலகத்தை விட்டு போக வேண்டியவதான. என்ன அந்த மரத்துக்குள்ள என்னை அடைக்காம இருந்திருந்தா நான் ஆவியாய் அலையாம எப்பவோ மேலே போயிருப்பேன். அதையும் தடுத்து நிறுத்தி... என்னை அடைச்சி.... ச்சே...ச்சே எவ்வளவு நரகம்... விடக் கூடாது டா. யாரையும் விடக் கூடாது" என்று கோபத்தில் கொந்தளித்தாள் அவள்..
"அம்மா கவலையேப் படாதீங்க இனி நம்ம திட்டம் நல்லபடியா நடக்கும்" என்றனர் இருவரும்.
அங்கோ "போச்சு போச்சு எல்லாம் போச்சு அவங்க இரண்டு பேரும் கட்டுப்பாட்டை இழந்துட்டாங்க. மை எல்லாம் மாயமாகிடுச்சு" என்று அந்த முதியவர் சொல்ல "எப்படி அது மறையும் எந்த துஷ்ட சக்தியாலையும் தடுக்க முடியாதுன்னு தான நாம சொன்னோம்" திருப்பிக் கேட்டார் கந்தையா.
"ஆமா ஆனா அமராவதி அவளோட சின்ன பையனை வச்சு எடுத்துட்டா. இது நடக்கக் கூடாதுன்னு தான் நாம நினைச்சோம் ஆனா அது நடந்துடுச்சு. இனி என்ன பண்ணுறது. இப்போதைக்கு அகல்யாவை நாம எங்கேயும் போக விடாம அவங்க கண்ணுல படாம பாத்துக்கணும். இல்லைன்னா எல்லாருக்கும் ஆபத்து" என்று அந்த பெரியவர் சொன்னதும் அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார் கந்தையா.
வெகுநேரம் கழித்து தன் முகத்தில் எதுவோ டொம் என்று விழுவதை உணர்ந்து கண்ணைத் திறந்தான் சக்தி. அந்த இருட்டில் முதலில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நன்றாக கண்ணைத் திறந்து பார்க்கும் போது தான் புரிந்தது எதிரே ஒரு யானை நின்றிருப்பது.
ஐயோ போச்சு மாட்டிக் கிட்டோம் என்று நினைத்தவன் அப்படியே அசையாமல் படுத்திருக்க அதுவே அவனை ஒன்றும் செய்யமால் சென்றுவிட்டது. எழுந்தவன் அனாமத்தமாக அந்த வனாந்தரத்தில் இருப்பதைக் கண்டு சுற்றிலும் பார்க்க சற்று தள்ளி ரத்னா மயங்கிக் கிடந்தான்.
அவனைப் போய் எழுப்பியவன் "ரத்னா சீக்கிம் வா நாம போகலாம்" என்றான்.
நடந்து கொண்டிருக்கும்போதே ரத்னா "இப்போ நாம எங்க போறோம்" என்று கேட்டான்.
"கந்தையாவை பார்க்க போறோம் ரத்னா. நடந்த எதுவும் ஞாபகத்துல இல்லை. ஏதோ தப்பு நடக்குது ரத்னா. அவங்ககிட்ட கேட்டாத்தான் உண்மை என்னென்னு தெரியும்" என்று சொன்னவன் அவனை அழைத்துக் கொண்டு விறுவிறுவென அங்கே சென்றான்.
அந்த குடிசையின் அருகே சென்றவர்கள் உள்ளே நுழைய முற்பட அவனின் சட்டையை பிடித்து யாரோ இழுப்பது போல் தெரிந்தது.
சட்டென்று சக்தி திரும்ப அங்கே மாரியப்பன் நின்றிருந்தார்.
"அப்பா" என்பதற்குள் அவனின் வாயை மூடியவர் அங்கிருந்து புறப்படும்மாறு கையை அசைத்தார். இருவரும் அதிர்ச்சியடைந்தாலும் அப்பாவின் பேச்சை தட்டாமல் அந்த இடத்தில் இருந்து விரைந்து ஊரை நோக்கி நடந்தார்கள். அதுவரை பின்னால் திரும்பி பார்க்காமலே வந்த சக்தி அப்போது திரும்பி பார்க்க தங்களுடன் வந்து கொண்டிருந்த மாரியப்பனை காணவில்லை. அதிர்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
நடப்பதைப் பார்க்கும் போது அவனுக்கு மூளை குழம்ப ஆரம்பித்தது. எந்த வித தெளிவும் இல்லாமல் நாளுக்கு நாள் குழப்பம் தான் மிஞ்சுகிறது. அதை நினைத்தவன் அங்கேயே அமர்ந்து விட்டான். ரத்னாவோ "ஒன்னும் பீல் பண்ணாத மச்சி பாத்துக்கலாம்" என்றான்.
"எப்படி ரத்னா பீல் பண்ணாம இருக்க முடியும் ... எனக்கு கொஞ்சம் அந்த தாத்தா மேலயும் டவுட் இருந்தது. ஏதோ நம்மளை வச்சு பண்ணுறாங்கன்னு. இப்போ அது உண்மையா இருக்குமோன்னு தோணுது... நான் அங்க வந்ததுக்கு காரணமே என்ன பண்ணப் போறாங்கன்னு பாக்குறதுக்குத்தான்.. ஆனா மையை வச்சதும் எல்லாமே மறந்துபோச்சு. இப்போ அந்த நேரத்தில என்ன நடந்தது. நாம என்ன பண்ணோம்.. எப்படி அந்த காட்டுக்குள்ள கிடந்தோம்... இப்படி எதுவும் தெரியல" என்று அவன் சொல்ல
"சரி வா மச்சி மொத வீட்டுக்கு போகலாம்" என்றான் அவன்.
இருவரும் வீட்டுக்குப் போய் பார்க்கும் போது அங்கு மாரியப்பனா திண்ணையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரை எழுப்ப போகும் முன் தடுத்த ரத்னா
"மச்சி எதுவும் நினைக்காத நாம உள்ள போகலாம் வா" என்று கூட்டிச் சென்று படுக்க வைத்தான்.
அவன் நிலை நன்றாக புரிந்தது ரத்னாவிற்கு. தான் விரும்பிய பெண்ணின் உயிர் ஆபத்தில் இருக்கும் போது குழம்புவது இயற்கைதான். ஆனால் என்ன சக்தியின் மனம் இப்போது அதிகமாக அதை நினைத்து வருந்துவதை அவனால் தாங்கவே முடியவில்லை. ஆரம்பத்தில் தைரியமானவனாய் இருந்தவன் இப்போது அகல்யாவின் நிலையை பார்த்து குலைந்து போய்விட்டான். இது எல்லாம் எப்போது சரியாகும் என்று நினைத்தபடி அவனையே பார்த்திருந்தான் ரத்னா.
எப்படியும் இதை தடுத்து நிறுத்த ஒரு வழி இருக்கும் அதை சீக்கிரம் கண்டுபிடிக்கணும் என்று நினைக்கும் போதே எழுந்தான் சக்தி.
"என்ன மச்சி" என்றான் ரத்னா
"அகல்யாவைப் பாத்துட்டு வர்றேன்" என்று சக்தி சொல்ல
"நீ தூங்கு அப்பறமா போகலாம்" என்றான் இவன்.
"இல்லை அவளைப் பார்த்தாத்தான் எனக்கு நிம்மதியாக தூக்கம் வரும்" என்று அவன் சொல்ல அவனோடு இணைந்து இவனும் சென்றான்.
பூட்டியிருந்த வீட்டின் முன் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் ரத்னா. அப்போது ஏதேச்சையாக சக்தி மாடியைப் பார்க்க அங்கே அகல்யாவின் அறையின் சன்னல் வழியே யாரோ நுழைவது போல் தோன்றியது. உடனே பதறியவன் "சீக்கிரம் கதவைத் தட்டு ரத்னா. அவ ரூம்க்குள்ள யாரோ போன மாதிரி இருந்தது" என்றான் பதற்றத்துடன்.
"இரு மச்சி கதவைத் தொறக்க வேணாமா" என்பதற்குள் இவன் பின்பக்கம் சென்று விட்டான். அங்கே சின்னதாய் ஒரு கதவு இருக்கும். பெரும்பாலும் அது பூட்டியிருக்காது. இன்றும் பூட்டியிருக்க கூடாது என்ற வேண்டுதலோடு அவன் சென்று கதவைத் தட்ட ஆனால் அது பூட்டியிருந்தது. கதவை தட்டிப்பார்த்தவன் அதன்பின் அதை ஆங்காரத்துடன் குத்த ஆரம்பித்து விட்டான்.
இரண்டு பக்கத்தில் இருந்து கதவு தட்டும் சத்ததில் விரைந்து வந்தார்கள் துர்காவும் சாமிநாதனும். இரண்டு பேரும் ஆளுக்கொரு கதவைத் திறந்துவிட உள்ளே நுழைந்த சக்தியும் ரத்னாவும் அகல்யாவின் அறைக்குள் வேகமாக நுழைந்தார்கள். அங்கே அகல்யாவோ எந்தவித பாதிப்பும் இல்லாமல் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
பின்னாலே வந்த துர்கா அவனிடம் பதறிப் போய் "என்ன ஆச்சு டா சக்தி" என்றார்.
"ஒன்னும் இல்லை அத்தை யாரோ இங்க வந்த மாதிரி இருந்தது. அதான் வந்து பார்த்தோம்" என்றான்.
"நானும் மாமாவும் இங்கதான் டா இருக்கோம் அப்படி யாரும் இல்லை டா. அகல்யாவும் வேற மாதிரி நடந்துக்கலை. எழுந்து சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கிட்டு மறுபடியும் தூங்கிட்டா டா" என்று சொன்னபின்தான் சக்திக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது.
"சரி அத்தை பாத்துக்கோங்க" என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.
"என்னாச்சு டா அவனுக்கு" என்று ரத்னாவிடம் கேட்க "அகல்யாவைப் பத்தியே எந்நேரமும் நினைச்சுட்டு இருக்கான் அம்மா அதான். நீங்க ஒன்னும் நினைக்காதீங்க. நான் மச்சானை பாத்துக்கிறேன்" இப்படிச் சொல்லிவிட்டு அவனும் கிளம்பிவிட்டான்.
துர்காவோ மனதில் ஆத்தா மாரியம்மா. எங்க புள்ளைங்க சந்தோசமா இருக்கணும். இந்த பிரச்சனையில இருந்து அவங்களை நீதான் காப்பாத்தணும் என்று வேண்டிக் கொள்ள அகல்யாவின் அருகே அரூபமாய் நின்றிருந்த ஒரு உருவம் அது நாங்க இருக்குற வரைக்கும் நடக்காது என்று உரக்கச் சொல்லிச் சிரித்தது...
மறுநாள் கோவில் வேலையைச் செய்தவன் எப்போதடா பொழுது சாயும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் மாரியப்பன் வந்து "இப்போ போ சக்தி சரியா இருக்கும்" என்று சொல்ல அவனும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்று குளித்து முடித்துவிட்டு ரத்னாவிடம் வந்தான்.
அவனும் தயாராக இருக்க இருவரும் சேர்ந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு வந்தார்கள். அங்கே முதலில் எலுமிச்சம் பழம் கேட்க கடைக்காரர் கனி இருந்த தட்டை நீட்டி எடுத்துக்கோங்க என்று சொன்னதும் சக்தி அதிலிருந்து மூன்று எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டான். பின்னர் பத்தி சூடம் வெற்றிலை பாக்கு எல்லாம் வாங்கிக் கொண்டு அந்த பூசாரியைத் தேடி சென்றார்கள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக எல்லையின் ஓரத்தில் இருந்தது சங்கிலி கருப்பசாமி கோவில். இதுவரை இவனுக்கு இங்கே வந்ததாய் நினைவு கூட இல்லை. இப்போது அகல்யாவுக்காக அவன் வந்திருக்கின்றான். கோவிலில் இன்று கூட்டமாக வேறு இருந்தது. குறி கேக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அங்கே ஒரு பக்கம் அமர்ந்திருந்தார்கள்.
இவனும் அங்கே சென்று ரத்னாவுடன் அமர்ந்து கொண்டான். ரத்னாவிற்கு சாமி ஆடுபவர்களைப் பார்த்தாலே கொஞ்சம் பயம் தான். அவர்கள் அங்கே ஆடினாலும் அவர்கள் அருகில் செல்லாமல் ஒதுங்கியே இருப்பான்.இங்கு பூசாரி சாமியாடி குறி சொல்லுவாங்க என்று சொன்னதில் இருந்து அவன் மனதில் சின்னதாய் பயம் வந்து ஒட்டிக் கொண்டது.
சற்று நேரத்தில் ஏய் என்ற அலறலுடன் கருப்பு கால்சட்டை போட்டுக் கொண்டு தலையில் தலைப்பாகை வைத்துக் கொண்டு காலில் சலங்கையை கட்டிக் கொண்டு அருவாளும் சாட்டையுடனும் அந்த பூசாரி வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் கண்ணை மூடிக் கொண்டு சக்தியின் கையைப் பிடித்துக் கொண்டான் ரத்னா.
"டேய் சாமி டா" என்றான் சக்தி.
"பயமா இருக்கு மச்சி"
"சாமி மேல பக்திதான் இருக்கணும் பயம் இருக்க கூடாது ரத்னா... அங்க பாரு. கண்டிப்பா நமக்கான வழியை கடவுள் காட்டிக் கொடுக்கும்" என்று அவன் கைகூப்பி அமைதியாகிவிட அந்த நேரத்தில் அந்த பூசாரியின் கண்கள் சக்தியைத்தான் பார்த்தது. சந்தனம் முகம் முழுக்க அப்பியிருந்த போதும் அவரின் கண்கள் சிவந்து ரௌத்திரத்துடன் காட்சியளித்தது.
ஆளுயர அருவாள் அங்கே அருகே இருக்க சாட்டையை வைத்துக் கொண்டு அவர் சுழற்றி சுழற்றி ஆடத் தொடங்கினார். பின்னர் அங்கே ஒரு சாக்கு விரித்திருக்க அந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். அருகிலே சாட்டையை வைத்துவிட குறி கேட்க வந்தவர்கள் இப்போது கேட்கத் தொடங்கினார்கள். ஒவ்வொருத்தரும் அங்கே சென்று அமைதியாக அமர்ந்துவிட அந்த பூசாரியோ என்ன பிரச்சனை என்று அவர்களைப் பார்த்த உடனே சொல்ல ஆரம்பித்தார்.
குறி கேட்க வந்தவர்கள் தப்பு பண்ணியவர்களாக இருந்தால் அவர் கண்ணை உருட்டி உடலே நெளித்து மிரட்டுவதிலே அப்படியே பயந்து போய் இறுகி அமர்ந்திருப்பார்கள்.
இப்படியாக அனைவரும் குறி கேட்டு முடிக்க கடைசியாக சக்தியின் முறை வந்தது. இப்போது கோவிலில் ஆட்கள் இல்லை. குறி கேட்டவர்கள் அனைவரும் உடனே கலைந்து செல்ல அங்கே இப்போது இவர்கள் மூவரும் தான் இருந்தார்கள்.
இவன் அமைதியாக எலுமிச்சம் பழம், பத்தி, சூடம், காணிக்கை இருந்த பையினை அவரிடம் நீட்ட அதை வாங்கியதும் உட்கார சொன்னார். சக்தி முன்னால் உட்கார ரத்னா பின்னால் சென்று அமர்ந்தான். அவனைப் பார்த்தவர் "இங்க வந்து உக்காரு" என்று தன் முரட்டுக் குரலால் கூப்பிட வேகமாக வந்து அவருக்கு அருகிலே அமர்ந்து கொண்டான்.
அந்த பையினுள் கையைவிட்டு அவர் எலுமிச்சம் பழத்தை எடுத்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் அவர் செய்கையை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அவர் அந்த எலுமிச்சம் பழத்தைத் திருப்பி அவனிடம் காண்பித்து "என்ன தெரியுது" என்று கேட்க
"சாமி" என்று பக்தியோடு அழைத்தவன் அந்த கனியை உற்று நோக்கினான்...
எதுவும் சொட்டை இல்லாமல் அவன் பார்த்து வாங்கிய கனிதான் ஆனால் இப்போது அதில் மங்கிய நிறத்தில் குதிரையின் முகம் நன்றாக தெரிந்தது...
"குதிரை முகம் தெரியுது" என்று அவன் மெதுவாக சொல்ல
"தெரியுதா தெரியுதா" என்று கத்தினார் பூசாரி. சட்டென்று உலுக்கி விழுந்தபடி இருவரும் அவரையேப் பார்த்திருந்தனர்.
பின்னர் வெத்தலையை எடுத்து ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தார். அவரிடம் குறி கேக்கும் போது அவர் முதலில் பார்ப்பதே இதைத்தான். அந்த கனியையும் வெற்றிலையும் பார்த்தாலே பாதிப் பிரச்சனை அவருக்குத் தெரிந்துவிடும்.
வெற்றிலையை பார்த்தவர் அதையும் அவனிடம் நீட்ட அதில் ஒரு சிறிய கருப்பு நிற நூல் போன்ற ஒன்று இருந்தது. இரண்டு வெற்றிலைக்கு இடையில் கருப்பாய் ஒன்று எப்போதும் இருப்பது தான். ஆனால் இங்கே அது நாகம் போல் வளைந்து நெளிந்திருந்தது.
அதைக் கண்டதும் "நாகம்" என்றான் சக்தி.
"இதுவும் தெரியுதா" என்று சொன்னவர் பாக்கை எடுத்து தனது ஆராய்ச்சியை தொடங்கினார். அதில் ஒரு பாக்கை எடுத்து அவன் முன் நீட்ட அதுவும் பாம்பு போன்ற தோற்றத்தை ஒத்திருந்தது.
அவன் அதையும் திகிலுடன் சொல்ல சட்டென்று அவர் உடம்பை வளைக்க ஆரம்பித்தார்... சட்டென்று அவரின் உடலில் இருந்து எலும்புகளில் ஏற்படும் சொடக்கு சத்தங்கள் அந்த இடம் முழுவதும் கேட்க ஆரம்பித்துவிட்டது... அவர் உடலை வளைப்பதைப் பார்த்தும் ரத்னாவுக்கு வேர்த்துக் கொட்டியது...
உடனே அந்த பூசாரி பெருங்குரலெடுத்து "இப்போத்தான் தேடி வர வழி தெரிஞ்சதா... ம்ம்" என்று கேட்க அதிலே இருவரும் பிரம்மை பிடித்தவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள்...
"கேக்குறேன்ல பதில் சொல்லுங்கடா. இப்போத்தான் வழி தெரிஞ்சதா" என்ற குரலில் சக்தி வேகமாக சாமி "வழி தெரிஞ்சதால தான் இப்போ உன்னைத் தேடி வந்துருக்கோம் சாமி. இதுக்கு முன்ன எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா இப்போ உன்னை நம்பி வந்துருக்கோம் நல்ல வார்த்தையா சொல்லுங்க சாமி" என்றான்.
"நான் யார்னே தெரியாம இருந்துட்டு இப்போ தேடி வருவீங்க நான் வழி சொல்லணுமா டா" என்றவர் சாட்டையை சுழற்ற அதன் சத்தம் நாடி நரம்புகளில் புதுவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது...
"ஏன்டா என்னை மறந்து போனீங்க. ஏன் மறந்தீங்க... இத்தனை வருசமா நீங்க என்னைத் தேடி வருவீங்கன்னு காத்துட்டு இருந்தேன் டா ஆனா வரவே இல்லை... ஏன் உங்க அப்பனுக்கு அவ்வளவு ரோசமா.. அதுவும் என்கிட்டயா. இன்னும் அதே ரோசத்தோட இருக்க வேண்டியதுதான.. இப்போ ஏன் வந்தீங்க" என்று சொன்னபடி அந்த சாமி சத்தமாக சிரிக்க சக்தி புரியாமல் அமர்ந்திருந்தான்...
வெகுநேரமாக உடலை நெளித்து வளைத்தவர் "போதும் போதும். பொறுமையா இரு வந்த புள்ளைங்கள இப்படியா மிரட்டுவ" என்று பூசாரி சொல்ல சட்டென்று அவர் உடலில் மாறுதல் ஆனது...
இருவரின் குழப்பமான பார்வையைப் பார்த்த அந்த பூசாரி நேராக அமர்ந்து "நீங்க பண்ண தப்புக்கு என்னைப் போட்டு வளைச்சு ஒடிக்குறான் டா உன் சாமி" என்று சிரித்தார். ஆனால் கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் சிரிப்பு வரவில்லை. சிரிக்கக் கூடிய மனநிலையிலும் அவர்கள் இல்லை.
"உன் குலதெய்வம் பேரு என்னடா" என்றார் அந்த பூசாரி...
"ஐயனார்னு நினைக்குற.. ம்ம்... உனக்குள்ள இப்ப வந்தவனை இறக்கி விடணும் டா.. அப்போத் தெரியும்.. என்று விரக்தி சிரிப்பு சிரித்தவர் "இந்த எலுமிச்சம் பழத்தைப் பாத்ததும் எனக்குப் புரிஞ்சுடுச்சு டா. உன் சாமி அந்த ஐயனார்னு.. அதுதான் அவன் குதிரையை காமிச்சு குடுத்துருக்கான். அப்பறம் உன்னை கட்டிக்கப் போறவ குலசாமி நாகத்தோட சம்பந்தப்பட்டவளா இருக்கணுமே.. பேர் என்ன நாகாத்தாவா" என்றார்.
"தெரியலை சாமி..." என்றான் சக்தி. உண்மையில் அவனுக்கு இது பற்றியெல்லாம் தெரியாது...
"சரி குலதெய்வம் கோவிலுக்கு போய் பாத்து எவ்வளவு நாளாச்சு... அதுசரி உன்கிட்ட போய் இப்படி கேக்குறேன் பாரு.. நீங்க தான் போகவே இல்லையே."
"ஆமா சாமி எனக்கு விவரம் தெரிஞ்சு இதுவரைக்கும் பார்த்த ஞாபகம் இல்லை.. வீட்டுல சாமிபடம் எதுவும் இருந்தது இல்லை. அப்பா அதிகமாக சாமி கும்பிடவும் மாட்டாங்க. குலதெய்வத்தை நான் பாத்ததே இல்லை" என்றான் சக்தி...
"குலதெய்வத்தை மறந்துட்டு வீம்பு பிடிச்சுட்டு சுத்திட்டு இருக்கான் டா உங்க அப்பன். அப்பறம் எப்படி டா அவன் வருவான்.. நீங்க கூப்பிடுவீங்கன்னு தான் டா காத்துட்டு இருக்கான். ஆனா நீங்க யாரும் அவனைக் கூப்பிடவே இல்லையே... எதுக்கெடுத்தாலும் நீ ஆத்தா... மாரிஆத்தான்னு போன.. அப்பவும் அவன் நம்மளை கூப்பிடுவான்னு நினைச்சு வெளியேவே நின்னுட்டு இருந்தான். ஆனா அப்பக்கூட உங்க அம்மா வேலம்மா ஞாபகம் வந்த உங்களுக்கு அந்த ஐயனாரை நினைக்கத் தோணலையே... " என்றார் அந்த பூசாரி.
"நான் தான் சொன்னேல்ல சாமி எனக்குத் தெரியாதுன்னு"
"உங்க அப்பனுக்கு தெரியும்ல கூப்பிட வேண்டியதுதான. அவ்வளவு கோபமா டா... விதி முடிஞ்சவங்க போய் சேர்ந்தா விதியை வழிநடத்துறவங்க மேல கோச்சுட்டு இருப்பானா அவன்... " என்றார் பூசாரி.
"புரியவே இல்லை சாமி என்ன சொல்லுறீங்கன்னு" என்றான் சக்தி...
"சொல்லுறேன் டா... ஆனா உங்க அப்பனை மாதிரியே உங்க அத்தையும் மாமனும் இருந்துட்டானுங்க டா.. எந்த தெய்வத்தை மறந்தாலும் குலசாமியை மறக்கக் கூடாதுன்னு அவனுங்களுக்குத் தெரியவே இல்லை... இப்போ எல்லாம் சேர்ந்து உங்களை போட்டு ஆட்டிப் படைக்குதா? ... ஊருக்கெல்லாம் சோறு போட்டுட்டு பெத்த ஆத்தாவுக்கு சோறு போடாம விட்டா அது புண்ணியமா டா... பாவம் டா பாவம்... பெரும் பாவம்... அதைத்தான் நீங்க பண்ணிருக்கீங்க..." என்றார் ஆக்ரோசமாக.
"தப்பு பண்ணிட்டோம் தான் சாமி.. குலசாமியை கும்பிடாம விட்டது எங்க தப்புத்தான். எங்களை மன்னிச்சுடு சாமி" என்று அவர் பாதத்தில் அவன் விழ அவர் உடல் மறுபடியும் வளைய ஆரம்பித்தது. ரத்னாவுக்கோ அப்படியே கண்கள் இருட்டு கட்ட ஆரம்பித்து விட்டது. உடம்பெல்லாம் மெய்சிலிர்க்க அப்படியே இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.
உடல் நெளிய நெளிய அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது...
கூடவே "கோச்சுக்காத ஐய்யா அதான் புள்ளை காலடியில கிடக்கானே. அவனை மன்னிச்சு ஏத்துக்கோ. அவன் ஒன்னும் தெரியாதவன்.." என்று பூசாரியின் குரல் கேக்க எலும்புகள் சட்டு சட்டென்று முறிவது போல் ஓசை வேறு கேட்டது சக்திக்கு...
அந்த உக்கிரம் கண்டு "அய்யோ ஐயனாரப்பா வேண்டாம் இவ்வளவு கோபத்தை என்னால தாங்க முடியாது. நான் வேணும்னே உன்னை மறந்து போய் இருக்கலை. எனக்கு சொல்லுறதுக்கு யாரும் இல்லை. உன் கோவில் எங்க இருக்குன்னு கூட எனக்குத் தெரியாது. அப்பாகிட்ட கேட்டதுக்கு ஐயனார் சாமின்னு மட்டும் சொல்லிட்டு வேற எதுவும் கேக்காதன்னு சொல்லிட்டாங்க. நானும் அவர்கிட்ட அதை பத்திக் கேக்கவே இல்லை.. மன்னிச்சுடு ஐயா... அதுக்கான தண்டனையை வேணும்னா கொடு நான் மனசார ஏத்துக்கிறேன்..." என்று பாதத்தை பிடித்து கொண்டு அவன் கதற
"தண்டனையா... எதுக்கு தண்டனை தரச் சொல்லுற டா... காவல் தெய்வமா இருக்குற என்னை மறந்து உங்க அப்பன் போனானே அதுக்கு தண்டனை தரச் சொல்லுறயா.... இல்லை உங்க அம்மா விதி முடிஞ்சு போய் சேர்ந்துக்கு காரணம் நான்னு நினைச்சு வெறுத்துப் போனானே அதுக்குத் தண்டனை தரச் சொல்லுறயா... பெத்த புள்ளைகிட்ட கூட குலசாமி பத்தி சொல்லாம வளத்தானே அதுக்கு தண்டனை தரச் சொல்லுறயா... இல்லை இத்தனை வருசமா நீங்க வருவீங்க வருவீங்கன்னு வாசலை பாத்து உக்காந்துருந்தேன்னே அதுக்கு தண்டனை தரச் சொல்லுறயா.. இல்ல இவ்வளவு பிரச்சனை வந்தபிறகும் அவன் நினைப்புல நான் வந்து நிக்கலையே அதுக்கு தண்டனை தரச் சொல்லுறயா.. சொல்லுடா எதுக்கு நான் தண்டனை தர ... அப்படி தண்டனை குடுக்கணும்னு நான் நினைச்சுருந்தா உன் குடும்பமே இன்னைக்கு இருந்துருக்காது டா... பெத்த ஆத்தாவை புள்ளைங்க மறந்தாலும் பெத்தவ நினைச்சுட்டே தான் டா இருப்பா. அவளுக்கு கோபம் இருந்தாலும் அதை விட பிள்ளைங்க மேல இருக்க பாசம் அதிகம்.. குலசாமியும் அப்படித் தாண்டா. அது உனக்குப் புரியலையா. என் வம்சத்தைக் காக்கணும்னு தான டா நான் சாமியா நின்னுட்டு இருக்கேன். எனக்கு குலத்தைக் காத்து வாழ வைச்சுத்தான் டா வழக்கம்... அதுவும் இல்லாம இன்னும் உன் ஆத்தா வேலம்மா என்னை நினைச்சுட்டு இருந்ததால தான் நான் நீங்க கும்பிடாததை கூட மறந்து இருக்கேன்... அவ்வளவு பிரச்சனை வந்ததப்போ கூட என் ஞாபகம் உங்க யாருக்கும் வரலையே அப்படிங்கிற கோபம் தான் எனக்கு. அது கூடவா எனக்கு வரக் கூடாது.. உங்க அப்பன் காரணமே இல்லாம கோபப்பட்டதை ஏத்துக்கிட்டவன் நான். ஆனா நான் காரணத்தோட கோபப்படுறதை உன்னால ஏத்துக்க முடியலை இல்ல.... இதை கோபம்னு கூட சொல்ல முடியாது... என்னை ஒதுக்கி வச்சு நீங்க இப்படி கஷ்டப்படுறீங்களேன்னு வேதனை... தீர்த்து வைக்க நான் இருக்கும் போது நீங்க தனியா கிடந்து அல்லாடுறீங்களேன்னு ஆதங்கம்...... அது உனக்குப் புரியலையா.. அவ மயங்கி விழுந்த அப்போ கூட நான் குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரச் சொல்லி சொல்ல வச்சேனே. உனக்கு ஞாபகம் இருக்கா அப்பவாவது நீ புரிஞ்சுக்குவன்னு நினைச்சேன் டா.. ஆனா அப்பவும் நீ மாறவே இல்லை..... என்றார் கோபம் தணியாத குரலில்..
"அப்பா அப்பா உன்னைப் பத்தி தெரியாம உன் சக்தி புரியாம இந்த சக்தி இருந்துட்டேனே.. என்னை மன்னிச்சுடு" என்றான் சக்தி.
"மன்னிப்பு தேவையே இல்லடா எனக்குத் தேவை என்னை மறக்காம இருக்கணும் அவ்வளவுதான்" என்று சொன்னதும் பூசாரியின் உடல் மீண்டும் முறுக்கு விடுவதைப் போல் நெளிய ஆரம்பித்துவிட்டது.
சற்று நேரத்தில்
"கோபம் குறைஞ்சுடுச்சா டா உன் தெய்வத்துக்கு. உங்களால என்னை ஒரு வழியாக்கிட்டான்" என்றவர் கைகளை நீட்டி முறிக்கத் தொடங்கினார்.
விழிநீர் கன்னத்தை தாண்டி வழிந்தபடி சக்தி அமைதியாக இருக்க "கவலைப்படாத அதான் அவனா மனசு இறங்கி வந்துட்டான்ல" என்றார் பூசாரி..
சக்தி இன்னும் அமைதியா இருக்க "சக்தி இங்க பாரு இது அமைதியா இருக்க வேண்டிய நேரமில்லை... ஆபத்து நிறைஞ்சு இருக்க நேரத்துல நம்ம கூட இருக்குறவங்க எல்லாம் நல்லவங்க இல்லை புரிஞ்சதா. நடந்ததை சொல்லுறேன் இனி என்ன பண்ணனும்னு சொல்லுறேன் கேளு..." என்று சொன்னவர் இதற்கு முன் நடந்த நிகழ்வுகளைப் பற்றி சொல்லத் தொடங்கினார்...
அதைக் கேட்க கேட்க அவனால் தாங்க இயலவில்லை. பலவிதமான புதிர்களுக்கு எல்லாம் விடை தெரிய தெரிய அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. அகல்யா என்று அவன் இதழ்கள் முணுமுணுக்க அதைக் கேட்ட பூசாரி "அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது சக்தி. என்னதான் மனசு இறங்கி உன் சாமி இங்க வந்து பேசுனாலும் இன்னும் அவனுக்கு உங்க மேல வருத்தம் இருக்கும். அதனால நீயா அவன் எல்லையை மிதிக்காத வரைக்கும் அவனும் உன் எல்லையைத் தேடி வரமாட்டான். போ அவன்கிட்ட போ...அங்க போனபிறகு அவனே உனக்கு காவலா இருப்பான்... மாரியம்மன் கோவில் வேலை முடிஞ்சு குடமுழுக்கு நடக்கும் போது எல்லாமே நல்லபடியா முடிஞ்சுருக்கும். நான் சொன்னது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா சக்தி. அதை நீ சரியாப் பண்ணனும். எதுக்கும் கவலைப்படாத உன் ஐயன் உனக்குத் துணையா இருப்பான் டா" என்றவர் அருகே இருந்த கத்தியை எடுத்து சக்தி கொண்டு வந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து அறுத்தார். அதை இருவரது கைகளிலும் பிழிந்தவர் குடிங்க என்றார். இருவரும் அந்த சாறை குடித்ததும் "எந்திரிச்சு அந்த கருப்பனை கும்பிட்டு இங்க வாங்க டா" என்றார்.
சக்தி ரத்னா எழுந்து அங்கிருந்த சங்கிலி கருப்பனை வணங்கிவிட்டு வர "இந்தா சக்தி" என்றார் பூசாரி.
அதை வாங்கியவனைப் பார்த்த பூசாரி "இதை அகல்யா கிட்ட குடுத்து சாமி வீட்டுல வைக்க சொல்லு... சரியா போங்க" என்றார்...
"சரி சாமி கிளம்புறோம்" என்று சக்தி கிளம்ப எத்தனிக்க
"சாமி அப்போ அந்த ஆலமரத்து பேய்" என்று ரத்னா இழுக்க "எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு. அது அது நடக்கும் போது எல்லாருக்கும் புரியும்.. போங்க" என்றார் அவர்...
இருவரும் வண்டியின் அருகே வர அவன் அந்த எலுமிச்சம் பழத்தை பாக்கெட்டில் போட்டுவிட்டு வண்டியின் மேல் ஏறி அமர்ந்தான். ரத்னாவும் ஏறி அமர்ந்துவிட இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.
சற்று நேரம் கழித்து ரத்னா "என்ன மச்சி இவ்வளவு நடந்துருக்கு.. இது துரோகம் மச்சி" என்றான்.
"ஆமா ரத்னா. இப்போத்தான் நடந்துட்டு இருக்குறதுக்கான காரணம் புரியது. இனி விடக் கூடாது டா ரத்னா" என்றான் அவன்.
"இன்னைக்கே போய் அப்பாகிட்ட பேசி நாளைக்கு காலையில கிளம்பிடலாம் ரத்னா" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்க வண்டி சட்டென்று க்றீச் என்ற சத்தத்துடன் நின்றது.
அங்கோ தன் முன் இருந்த அத்தனை பொருட்களையும் அந்த குண்டத்தில் இருந்த நெருப்பில் தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்தான் ஒருவன். அவன் முகம் அந்த நெருப்பை விட அதிகமாக சிவந்து போய் இருந்தது.
"எது நடக்கவே கூடாதுன்னு நாம நினைச்சுட்டு இருந்தோமோ அது நடந்துடுச்சு. இனி என்ன பண்ண" என்று அவன் குமுறிக் கொண்டு இருந்தான். அவன் முன் நின்றிருந்தவர்களோ "எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்றார்கள்.
"எப்படி எப்படி நடக்கும்... குலதெய்வம் இதுவரைக்கும் உள்ள நுழையாம வெளியவே இருந்ததால தான் நாம எல்லாமே பண்ண முடிஞ்சது. அப்படி இருக்கும் போது நாளைக்கு கோவிலுக்கு போய்ட்டு வந்துட்டா எல்லாரோட கதியும் அவ்வளவுதான்" என்றவனின் பேச்சில் சீற்றம் நிறைந்திருந்தது.
"கோவிலுக்கு போனாத்தான.. நாம தடுத்து நிறுத்திடலாம். நீ கவலைப்படாதே" என்று எதிரே இருந்தவர்கள் சொல்ல
"எப்படி தடுக்க முடியும். இந்த பூசாரிகிட்ட போகவிடாம தடுக்கவே நம்மளால முடியல. இனி எப்படி நாம எல்லாத்தையும் தடுத்து நிறுத்த முடியும்"
"முடியும் அவனோட பலவீனமே அகல்யா தான். அவளை அலற வச்சா இவனும் அரண்டு போயிடுவான்" என்று அவர்கள் சொன்னதும்
"இது சரியா வருமா" என்றான் அவன்.
"இப்போதைக்கு இது மட்டும் தான் சரியா வரும்" என்றனர் இருவரும்.
"இது மட்டும் சரியா நடக்கலை உங்களை மொத இந்த நெருப்புல தூக்கி போட்டுட்டு நான் போயிட்டே இருப்பேன்" என்று சொன்னவன் அங்கிருந்து வெளியேறி விட்டான்.
திரும்பி சுற்றி முற்றும் பார்க்க அந்த ஒற்றையடிப் பாதையோ யாரும் வருவதற்கான சாத்தியக் கூறு இல்லாதிருந்தது. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்த பின்பும் வண்டி ஸ்டார்ட் ஆகவே இல்லை.
அய்யோ உடனே அகல்யாவை பார்த்து இதை அவகிட்ட கொடுக்கணுமே இப்போ போய் இப்படி ஆகிடுச்சே என்று புலம்பியவன் வண்டியை ஓங்கி ஓங்கி உதைக்கத் தொடங்கியிருந்தான்.
"தள்ளு மச்சி நான் பாக்குறேன்" என்று சொன்ன ரத்னா முயற்சி செய்ய அப்போதும் முடியவில்லை. சட்டென்று அந்த இடம் முழுவதும் மயான அமைதியில் நிறைந்திருந்தது.
சுற்றிப்பார்த்த ரத்னாவிற்கு அப்போதுதான் புரிந்து போனது இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் மயானமே வந்துவிடும் என்று.
"மச்சி ஏதாவது பண்ணு மச்சி" என்று சொல்லும் போது யாரோ பின்னால் வருவது போல தோன்றியது அவனுக்கு...
"மச்சி மச்சி யாரோ வர்ற மாதிரி இருக்கு ரொம்ப பயமா இருக்கு ஸ்டார்ட் பண்ணு மச்சி இல்லைன்னா வா ஓடிடலாம்..." என்றான் ரத்னா.
"லூசா நீ கொஞ்சம் நேரம் பேசாம இரு. இப்போ ஸ்டார்ட் ஆகிடும்" என்று சொன்னவன் மீண்டும் உதைக்க ம்ஹூம் அது அசைவேனா என்று நின்றிருந்தது.
இப்போது அந்த இடத்தில் யாரோ அலறுவது போல் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.
இரண்டு பேரும் பயத்தில் உறைந்து போனாலும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை. அந்த நேரத்தில் சக்தி வேகமாக தன் கையை தலைக்கு மேல் உயர்த்தி "ஐயனாரப்பா என்ன சோதிச்சுப் பாக்குறயா. இனி சோதனை வந்தாலும் சரி வரலைன்னாலும் சரி என் மனசுல எப்பவும் நீ நீங்காம நிறைஞ்சு இருப்ப" என்று சொன்னவன் வண்டியை மிதிக்க அது சமர்த்தாக ஸ்டார்ட் ஆகிவிட்டது...
இப்போது எந்தவித சத்தங்களும் சுற்றி கேட்கவே இல்லை. உடனே இருவரும் "ஐயனாரப்பா" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு வண்டியை கிளப்பினார்கள் சின்ன சிரிப்புடன்.
அங்கோ ஆளுயரச் சிலை வடிவில் இரண்டு பெரிய குதிரைக்கு இடையே கம்பீரமாக நின்றிருந்த ஐயனாரின் இதழ்களும் சிரிப்பினால் விரிந்தது...
அந்த சிரிப்பின் காரணம் மைந்தன் தன்னை நினைத்ததா..... இல்லை தன் கள்ளத்தனமான வேலையை அவன் கண்டு கொண்டானே என்ற எண்ணமா...
எது எப்படியோ சிரிப்பு என்றாலே அழகுதான்.. அதுவும் அழகு நிறைந்த ஐயனின் கம்பீர சிரிப்பைப் பற்றி சொல்லவும் வேண்டுமா... அது இன்னும் பேரழகு....
வீட்டிற்குள் நுழைந்தவனை தடுத்து நிறுத்தினார் மாரியப்பன். அவரைப் பார்த்ததும் சக்தி வேகமாக உள்ளே நுழைந்து விட்டான். என்ன இவன் நிக்காம கூட போறான் என்று நினைத்தபடி "டேய் சக்தி சக்தி" என்று அழைத்தார் அவர்.
எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவன் கொண்டு வந்திருந்த விபூதியை சாமியறையின் உள்ளே வைத்துவிட்டு வெளியே வந்தான்.
"நான் கேக்குறேன் நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க பூசாரி என்ன சொன்னார் டா" என்றார் மாரியப்பன்.
"ம்ம் உண்மையை சொன்னாரு" என்றான் அவன்.
"என்ன உண்மை"
"அது எதுக்கு உங்களுக்கு"
"என்ன சக்தி இப்படி பேசுற டேய் ரத்னா இவனுக்கு என்னாச்சுடா"
"அவன் நல்லாத்தான் இருக்கான் மாமா. ஆனா" என்றவன் இடையிலே நிறுத்திவிட்டு சக்தியின் முகத்தை பார்க்க "என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ அதை தெளிவா சொல்லுங்க" என்றார் அவர்.
உடனே சக்தி கோபமாக "நம்ப குலசாமி யாரு" என்றான்.
அவரிடம் இப்போது சட்டென்று மாறுதல் "இப்போ எதுக்கு அதெல்லாம்" என்றார்.
"இப்போக் கூட சொல்ல உங்களுக்கு மனசு வரலை இல்லப்பா" என்றான் சக்தி ஆற்றாமையுடன்.
"சக்தி உனக்குத் தான் தெரியுமே ஐயனார்னு அப்பறம் என்ன... என்கிட்ட இனி இதைப் பத்தி பேசாத" என்றார் மாரியப்பன்.
"சரி பேசலை கொஞ்சம் நாம அத்தை வீடு வரைக்கும் போகணும் வாங்க" என்க "அங்க எதுக்கு பூசாரி என்ன சொன்னாரு. அதை மட்டும் சொல்லு" என்று கேட்டார் அவர்.
"வந்தா தெரிஞ்சுடும்" என்று சொன்னவன் தன் பாக்கெட்டைத் தடவிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அனைவரும் அகல்யாவின் வீட்டினை அடைந்திருக்க துர்காவும் சாமிநாதனும் கவலையுடன் அங்கே அகல்யாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.
"அத்தை" என்று அவன் அருகே வர இருவரும் "சக்தி அவளைப் பார்த்தயா.. அப்போ இருந்து இப்படியே தான் உக்காந்துருக்கா. நாங்க எவ்வளோ கூப்பிட்டு பார்த்துட்டோம்" என்றனர்.
"நான் பாத்துக்கிறேன்" என்றவன் அகல்யா என அழைத்து அவளது கையில் எலுமிச்சம் பழத்தை வைத்தான்.
வைத்த மாத்திரத்தில் அவள் கண்களின் கருவிழிகள் அசைந்தது. அருகே இருந்த அரூபமோ உடனே அங்கிருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்றுவிட்டது.
தன்னருகே இருந்தவனை ஏறிட்டுப் பார்த்தவள் சக்தி என்று தன் மென்குரலில் அழைத்தாள்.
"அகல்யா வா நாம இதை சாமிரூம்ல வைக்கணும்" என்று அவளை கரம் கொடுத்து தூக்க அவன் கைப்பற்றி அவள் எழுந்து நடக்கத் தொடங்கினாள்.
இருவரும் சேர்ந்து அங்கே வைத்ததும் தன் கையில் இருந்த விபூதியை எடுத்து அவன் அகல்யாவின் நெற்றியில் பூசிவிட்டான்.
உடனே அவள் அவன் மேல் சாய்ந்து கொண்டு "சக்தி என்னை விட்டு போகாத" என்று கண்ணீர் உகுக்க தொடங்கி விட்டாள்.
"ஷ்ஷ் அழாத டா... நான் எதுக்கு உன்ன விட்டுப் போகப் போறேன். நான் எப்பவும் உன்கூடவே இருப்பேன்" என்றான் அவன்.
பின் இருவரும் வெளியே வர அங்கே கூடத்தில் அனைவரும் இருந்தார்கள். அகல்யாவை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவன் தன் சட்டையின் கைப்பகுதியால் வேர்த்திருந்த அவள் முகத்தை துடைத்தான்.
"ஏய் அழுக்காகிடும்" என்று அவள் தடுக்க
"துவைச்சிக்கலாம்" என்றான் சக்தி...
அப்போது ரத்னா "மச்சி இதையெல்லாம் நான் போன பிறகு வைச்சுக்கோங்க. என்னோட வயிறு எரியுதா இல்லையா... ஏற்கனவே வரிசையா பேய்ங்க எல்லாம் நம்மளை போட்டுத் தள்ள ப்ளான் பண்ணிட்டு ரெடியா இருக்குது. இதுல இப்போ உனக்கு ரொமான்ஸ் கேக்குதா" என்று கடுப்பில் பேசினான்.
அவனோ நீ பேசிட்டே இரு என்பது போல் அவன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்க பொறுமையிழந்த மாரியப்பன் "சக்தி பூசாரி என்ன சொன்னார்" என்றார்.
உடனே அவன் "நாளைக்கு நாம குலதெய்வம் கோவிலுக்கு போகணும்" என்றான் பட்டென்று.
"நான் பூசாரி என்ன சொன்னார்னு கேட்டேன்" என்று மறுபடியும் கேட்க
"அங்க எதுக்கு" என்று கேட்ட மாரியப்பனின் விழிகள் இடுங்கியது.
"எதுக்கு போவாங்க சாமி கும்பிட தான்"
"இத்தனை நாள் இல்லாம என்ன திடீர்னு"
"திடீர் திடீர்னு இப்போத்தான என்னென்னமோ நடக்குது"
"சக்தி புரியாம பேசாத" என்று அவர் கோபமாக சொல்ல.
"நீங்க தான் புரிஞ்சுக்கவே மாட்டேன்னு பேசிட்டு இருக்கீங்க" என்றான் சக்தி.
"சக்தி" என்று அவர் கத்த
"அப்பா இப்பே நாம நாளைக்கு நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போகணும். நீங்க எல்லாரும் வர்றீங்க" என்றவன் தன் அத்தையிடம் திரும்பி "அவர் தான் கோபத்துல வீராப்பா கோவிலுக்கு போகாம இருந்தாரு. ஆனா நீங்களும் போகமா இருந்துட்டீங்களே அத்தை. ஏன் அண்ணனுக்கு ஏத்த தங்கச்சின்னு நிரூபிக்கணுமா" என்று ஆற்றாமையுடன் கேட்க
"சக்தி..." என்று துர்கா பேசும் முன் "யாரும் எதுவும் பேசாதீங்க... நாம நாளைக்கு கோவிலுக்கு போறோம்.இந்த பிரச்சனையில இருந்து தப்பிக்கணும்னா இதுதான் ஒரே வழி..." என்றான் சக்தி.
அதைக் கேட்டதும் "நான் வரலை" என்றார் மாரியப்பன்.
"இப்பவும் வீம்பு பிடிச்சா அப்பறம் நான் என்ன சொல்ல. ஆனா ஒன்னு நீங்க உங்க பொண்டாட்டியை காப்பாத்த முடியலைன்னு சாமிகிட்ட கோச்சுக்கிட்டு கோவிலுக்கு போகாம இருந்துட்டீங்க. ஆனா நான் இப்போ என் பொண்டாட்டியை காப்பாத்துறதுக்காக கோவிலுக்கு போகணும்னு நினைக்கிறேன். நாங்க நல்லா இருக்கணும்னு நினைச்சா நீங்களே வருவீங்க" என்று அவன் வெளியேறிவிட
"மாமா நீங்க பெரியவங்க உங்களுக்கு நாங்க சொல்ல ஒன்னுமே இல்லை. ஆனா நீங்க இப்படி அடம் பிடிக்குறது சரியில்லை மாமா. அந்த பூசாரி எல்லாத்தையும் சொன்னாரு. கேட்ட எங்களுக்கு மனசு கஷ்டமா போயிடுச்சு. அதைவிட உங்க சாமியே நேர்ல வந்து பேசும் போது அப்பப்பா அப்படியே உடம்பே சிலிர்த்து போயிடுச்சு... சாமியோட குரல்ல அவ்வளவு வேதனை இதுக்கெல்லாம் நீங்க தான் மாமா காரணம். வேண்டாம் மாமா இந்த கோபத்தை எல்லாம் தூக்கி போட்டுட்டு வாங்க மாமா" என்றான் ரத்னா.
"அப்போ என்னோட வேதனையை பத்தி உங்களுக்கு கவலை இல்லையா டா. சரி யாரும் அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம். ஆனா எனக்கு இதுல இஷ்டமில்லை. நான் சொன்னா சொன்னது நான். நீங்க வேணும்னா போங்க டா. ஆனா நான் வர மாட்டேன்..." என்று அவர் வெளியேறிவிட உடனே ரத்னாவின் அருகே வந்த அகல்யா "என்னடா ஆச்சு" என்றாள்.
"ஒன்னும் இல்ல நான் போய் சக்தியை மொத கூட்டிட்டு வர்றேன். ஏகப்பட்ட வேலை இருக்கு. அம்மா நீங்களாவது புரிஞ்சுக்கோங்க. நாம நாளைக்கு கோவிலுக்குப் போகணும். ரெடியா இருங்க" என்று மட்டும் சொல்லிவிட்டு சக்தியை தேடிச் சென்றுவிட்டான்.
சக்தி தங்களின் பழைய வீட்டில் அமர்ந்திருக்க அவன் மேல் யாரோ கையை வைப்பது போல் இருந்தது.
உடனே அவன் அம்மா என்று அழைத்தபடி திரும்பினான். எதிரே வேலம்மாள் நின்றிருக்க இவனோ பேசக் கூட முடியாமல் அவரையேப் பார்த்த வண்ணம் அமைதியாக இருந்தான்.
"சக்தி" என்று உயிர் உருகும் குரலில் வேலம்மாள் அழைக்க "அம்மா நீங்களாவது முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. இப்போ இவ்வளவு தூரம் வந்துருக்காதுல்ல" என்றான் அவன் ஆதங்கத்துடன்.
"என்ன செய்ய சக்தி உங்க அப்பா நம்ம சாமிகிட்டயே சண்டை போட்டுட்டு கோவிச்சுகிட்டு போயிட்டாரு. நானும் அவருக்கு பலவிதமா உணர்த்த முயற்சி பண்ணிட்டு தான் இருந்தேன். ஆனா அவர் அதையெல்லாம் உணர கூடிய நிலையில இல்லை டா" என்றார் வேலம்மாள்.
"சாமி கோபத்தைப் பாத்ததும் உண்மையிலே பயந்து போயிட்டேன் ம்மா... நாம நினைச்சுப் பாக்கலனாலும் நமக்காக காத்துட்டே இருந்ததை நினைக்கும் போது அப்படியே உடம்பே சிலிர்த்து போயிடுச்சு.எப்போடா விடியும் அவன் முகத்தைப் போய் பாக்கலாம்னு இருக்கும்மா" என்றான் அவன் சிறுகுழந்தையாய்.
"அவர் அப்படித்தான். ஆனா அப்பாவை நான் நாளைக்கு கோவிலுக்கு அனுப்பி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு" என்றார் வேலம்மா.
அதைக் கேட்டதும் அவன் சந்தோசத்துடன் "அம்மா இது போதும் ம்மா"என்றான்.
"ஆனா சக்தி இதுலாம் நடக்கணும்னா நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுதான் ஆகணும். நாளைக்கு நீ அகல்யாவுக்கு என்ன நடந்தாலும் கோவிலுக்குப் போறதை மட்டும் நிறுத்திடாத. எப்படியாவது கோவிலுக்குப் போயிட்டு வந்துடு... அவன் மேல பாரத்தைப் போட்டு ஆக வேண்டியதை பாரு சக்தி. பூசாரி சொன்னதை எல்லாத்தையும் இப்பவே எடுத்து வச்சுடு" என்றதும் சரிம்மா என்று அவன் கிளம்பினான்.
அம்மாவிடம் பேசியவன் மாரியம்மனிடம் வந்து நின்றான். அந்த விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. அதில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றியவன் அப்படியே அமர்ந்து "ஆத்தா சின்னவயசுல இருந்து நான் இங்க வந்துருக்கேன். விவரம் தெரிஞ்ச பின்னாடி நான் உணர்ந்து கும்பிட்டது உன்னத்தான். இப்போ தான் குலதெய்வம் பத்தி எனக்கு முழுசா தெரிஞ்சுருக்கு. அதுக்காக உன்னை மறந்துடுவேன்னு நினைச்சுடாத" என்று கண்ணை மூடி அமர்ந்து விட்டான் சக்தி.
"நான் நினைக்கலை சக்தி. அப்படி நினைச்சிருந்தா உனக்கு அந்த பூசாரியை பத்தி நான் காட்டி குடுத்துருக்க மாட்டேன். உனக்கும் உன் சாமி பத்தி தெரிஞ்சுருக்காது... உன் சாமியோட வேதனை எனக்குப் புரியும் சக்தி. இது நீ தெரியாம பண்ணதுதான. உங்க அப்பா சொல்லாததுக்கு நீ என்ன பண்ணுவ. நீ தைரியமா போ சக்தி. நாங்க எல்லாரும் உனக்குத் தான் துணையா இருப்போம்" என்ற குரல் அந்த தகரங்களில் பட்டு அவன் செவியை வந்து அடைந்தது.
அதிலே மனம் நிறைந்தவன் அங்கிருந்து சென்று அன்று இரவே பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள், இன்னும் சில பொருட்கள் என அலைந்து திரிந்து வாங்கி வைத்தான். அவனின் பரப்பரப்பை பார்த்தபடி மாரியப்பன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
ரத்னா கூட அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டான் ஆனால் மாரியப்பன் எதுவும் பேசவே இல்லை.
சக்தியும் அவரிடம் பேச முற்படவே இல்லை. அவருக்கே அவ்வளவு பிடிவாதம் இருந்தால் அதுல பாதியாவது எனக்கு இருக்காது என்று அவனும் முறுக்கிக் கொண்டு திரிந்தான்.
ஒருவழியாக அனைத்தையும் தயார் செய்து விட்டு அவன் அக்கடா என்று அமர ரத்னா
"மாமா வந்துடுவாரா மச்சி..." என்றான் மெதுவாக.
"யூ மீன் அத்தை" என்று அவன் சொல்ல ஆமா என்பது போல் தலையை ஆட்டினான் சக்தி.
அங்கோ "அவன் கிளம்புறதுக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டான் ம்மா நீங்க ஏன் இப்படி பண்ணுறீங்க. அவங்க அம்மாவை கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுருக்கேன்னு சொன்னீங்க. ஆனா இப்போ விட்டுட்டு வேடிக்கை பாக்குறீங்க. நீங்க என்னதான் நினைக்குறீங்கன்னு எனக்குப் புரிய மாட்டேங்குது" என்று தன் அம்மாவிடம் கத்திக் கொண்டிருந்தான் சத்ய ருத்திரன்..
"சத்யா இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாமே புரிஞ்சுடும். உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு தான" என்று அமராவதி சொல்ல
"அம்மா நடந்தது என்னனென்னு எனக்கும் தெரியும். ஆனா இப்போ நடந்துட்டு இருக்குறது கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு தான் உங்ககிட்ட கேட்டேன். மத்தபடி உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்ல" என்றான் சத்ய ருத்திரன்.
"மாதவனும் நீயும் இன்னும் கொஞ்ச நேரத்துல நான் சொல்லுற இடத்துக்குப் போகணும். தயாரா இருங்க" என்று அமராவதி சொல்ல சரியென்று இருவரும் தலையாட்டினார்கள்.
மறுநாள் காலை அனைவரும் வேகமாக தயாராகிக் கொண்டு இருந்தார்கள். அகல்யாவுக்கு நேற்றே வெளியே செல்ல முற்பட்டு உள்ளே வந்து விழுந்தது யாரே தனக்குள் இருந்து தன்னை வழிநடத்த முயலுவது போன்று இருந்தது என அனைத்தும் நினைவில் இருந்து கொண்டு அவளை மேலும் மேலும் பயமுறுத்திக் கொண்டு இருந்தது.
இப்போதும் நாம வெளியே போனா இதுதான நடக்கும் என்று அவளது உள்மனம் ஆழமாக நம்பத் தொடங்கியது.
கூடவே தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை சக்தி வீணாய் ஆபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று அவள் மனம் வேண்டிக் கொண்டது. அவள் வேண்டிக் கொண்டு இருக்கும் போதே அந்த வேண்டுதலுக்குச் சொந்தக்காரன் அங்கே வந்துவிட்டான்.
அவள் கண்மூடி அமர்ந்திருந்ததைக் கண்டவன் "அகல்" என்றான்.
"சக்தி" என்று அவள் அழைக்க "என்ன அப்படியே கண்ணை மூடிட்டு என்ன யோசனை" என்றான்.
"ஒன்னும் இல்ல சக்தி சும்மாதான்... "
"கிளம்பலாமா" என்று அவன் கேக்க "கிளம்பலாம்" என்றாள் அவள்.
இருவரும் வெளியே வர துர்கா சாமிநாதன் பெரிய பெரிய கட்டப் பைகளைத் தூக்கிக் கொண்டு தயாராக நின்றிருந்தார்கள்.
அப்போது அவள் திடீரென ஞாபகம் வந்தவளாய் "மாமா கிளம்பலையா" என்று கேட்க "மொத வெளிய போலாம்... வண்டி ரெடியா இருக்கு" என்றான் அவன்.
வாயிலை நெருங்க நெருங்க அவளுக்கு வியர்த்து வழிந்தது. மறுபடியும் நம்மளை தூக்கியெறிய போகுது என்று நினைத்தபடி பயந்து கொண்டே அவள் படியினில் காலை வைக்க அவள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.
உடனே அவளும் சந்தோசத்துடன் வெளியே வந்தாள். கேட்டைத் தாண்டி வந்த பிறகும் அவள் நினைத்தது போல் ஆகவில்லை என்றதும் இன்னும் நம்பிக்கை வந்துவிட்டது.
அவள் முகத்தில் படர்ந்த நம்பிக்கையை பார்த்த சக்திக்கு இது போதும் என்றே தோன்றியது. மனம் ஐயனை நன்றியோடு நினைத்துக் கொண்டது...
வண்டியில் அவள் முதலில் ஏற அங்க முதல் ஆளாக மாரியப்பன் அமர்ந்திருந்தார். "மாமா" என்று அவள் ஆச்சர்யத்துடன் கூப்பிட "எனக்கு உங்க இரண்டு பேரோட வாழ்க்கைக்கு முன்னாடி வேற எதுவும் பெருசில்லை" என்றார்.
"ரொம்ப தாங்க்ஸ் மாமா" என்று சொன்னவள் பின்னால் சென்று அமர்ந்துவிட அனைத்து பொருட்களையும் ரத்னாவும் சக்தியும் எடுத்து வைத்துவிட்டு வண்டியில் ஏறினார்கள்.
ஊருக்கு வெளியே இருந்த அந்த குடிசையில் இருந்து பேச்சுக்குரல்கள் கேட்டது.
"உங்க இரண்டு பேரையும் நான் நம்புனதுக்கு பதிலா நானே போய் இருக்கலாம்" என்று கோபமாக அவன் செல்ல எதிரே இருந்தவர்கள் "இப்போத்தான் கிளம்பிட்டு இருக்காங்க நாங்க அவங்களை தடுத்து நிறுத்துடுவோம்" என்றார்கள்.
"இப்படிச் சொல்லித்தான் அகல்யா வெளியவே வர மாட்டான்னு அந்த தகடை அவங்க வீட்டுல புதைச்சு வச்சீங்க. ஆனா இப்போ என்னாச்சு எல்லாம் போச்சு. அவ வெளிய வந்துட்டா. உள்ள அகல்யா பக்கத்துலயே அரூபமா சுத்திட்டு இருந்தவனும் நேத்து அந்த எலுமிச்சம் வந்ததுல இருந்து உள்ள போக முடியாம வெளிய சுத்திட்டு இருக்கான். இனியும் உங்களை நம்புனா என்னோட திட்டம் எல்லாம் தூளாகிப் போறதை நான் வேடிக்கைதான் பாத்துட்டு நிக்கணும். இனி நீங்க யாரும் தேவையில்லை நானே போறேன்" என்று அவன் கோபத்துடன் கிளம்ப
"அய்யோ மாயவரம்பா நாங்க சொல்லுறதை கேளு நீ போக வேண்டாம் நானே பாத்துக்கிறேன். இந்த கந்தைய்யா சொன்னா சொன்னதுதான்" என்று சொல்ல அவன் அமைதியாக திரும்பி கந்தைய்யனின் முகத்தைப் பார்த்தான்.
கூடவே அருகில் இருந்த அந்த முதியவரும் "நாங்க எல்லாத்தையும் சரியாத்தான் பண்ணிட்டு இருந்தோம். ஆனா இப்போ இப்படி குழப்பம் வரும்னு யாரும் எதிர்பார்க்கலை... மாதவன் மட்டும் குறுக்க வராம இருந்தா நாம நினைச்சது இந்நேரத்துக்கு நடந்துருக்கும்... சரி அதை விடுங்க இப்போ கோவிலுக்கு போற அந்த பயணத்தை தடுத்து நிறுத்தணும். அவ்வளவு தான் அதுல மட்டும் நம்ம கவனத்தை செலுத்துங்க" என்றார்.
"நீங்க சொல்லுறதுதான் சரி சித்தைய்யா தாத்தா நானுமே கொஞ்ச நேரத்துல கோபத்துல உணர்ச்சி வசப்பட்டுட்டேன்" என்றான் மாயவரம்பன்...
"வரம்பா நாம இப்போ அவசரப்பட்டோம்னோ எல்லாமே பாழாகிடும். ஏற்கனவே நம்ம திட்டத்தை தடுக்க எல்லா முயற்சியும் நடந்துட்டு இருக்கு" என்றார் சித்தைய்யன்...
"சரி இப்போ நீங்களே சொல்லுங்க தாத்தா. நாம என்ன பண்ண போறோம்னு" என்று மாயவரம்பன் கேட்க
"அகல்யா அப்பறம் அந்த சக்தியை கோவிலுக்குள்ள நுழைய விடாம நாம தடுக்கணும்... ஏற்கனவே நாம சொன்ன மாதிரிதான் சக்தியோட பலவீனம் அகல்யா. அவளை வச்சுத்தான் அவனை நாம வழிக்கு கொண்டு வரணும்" என்றவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினார்கள்...
நல்லவர்கள் போல் நடித்தவர்கள் தான் நல்லவர்களின் துன்பத்திற்கு காரணமா???... அப்படியெனில் இதிலிருந்து இவர்கள் எங்ஙனம் மீளப் போகிறார்கள் என்பது அனைத்தும் அறிந்த இறைவனுக்கே வெளிச்சம்....
வண்டி விரைந்து சென்று கொண்டிருக்க சன்னல் ஓரமாக அமர்ந்திருந்த அகல்யாவின் முகத்தில் காற்று மோதியதில் அவளது முடி பறக்க ஆரம்பித்தது. சற்று நேரம் வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தவள் சட்டென்று திரும்ப அவளையேப் பார்த்தபடி சக்தி அமர்ந்திருந்தான்.
அவனைப் பார்த்ததும் அதன் பின் அவளது பார்வையும் வேறு எங்கும் திரும்பாமல் அவனைப் பார்க்கத் தொடங்கியது.
இருவரையும் கண்ட ரத்னா மனசுக்குள் இவனுங்க முன்னாடி பேயே வந்தாக் கூட இதுங்க ரெண்டும் இப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டே தான் இருக்கும் போல என்று நினைத்து சலித்துக் கொண்டான்.
அவனது இடையில் குத்திய சக்தி "அந்த பக்கம் திரும்புடா" என்றான்.
உடனே அந்த பக்கம் திரும்பியவன் "திரும்பிட்டேன் திரும்பிட்டேன். ஆனா ஒன்னு மச்சி. இப்போ நீ ஒரு சின்னப்பையன் மனசை கலைச்ச குற்றத்துக்காக உனக்கு நான் சாபம் விடுறேன். நீங்க ரொமான்ஸ் பண்ணுறதை ஸ்டாப் பண்ணுறதுக்காக ஒரு பேய் வந்து உங்க இடையில உக்காரப் போகுது" என்று சொல்லிவிட்டு திரும்ப இருவருக்கும் இடையே ஒரு உருவம் அமர்ந்திருப்பது போல் இருந்தது...
அதில் பயந்தவன் "ம...ச்சி.."என்று திக்க "என்னடா" என்றான் சக்தி...
"சாபம் பலிச்சுடுச்சு மச்சி" என்று முணங்க என்ன என்றவன் தன்னருகே பார்க்க அகல்யா தான் அமர்ந்திருந்தாள்.
"உளறாத மாப்ள இங்க நாம மட்டும் தான இருக்கோம். என்னாச்சு உனக்கு" என்க அந்த உருவமோ ரத்னாவைப் பார்த்து முறைக்கத் தொடங்கிவிட்டது.
"மச்சி உங்க இரண்டு பேருக்கும் நடு... நடுவில மச்சி...மச்..." என்று அவன் திக்கித் திணற
"என்ன நீ வந்து உக்காரப் போறயா" என்றான் சக்தி கடுப்புடன்.
அய்யோ இவன் வேற என்று நினைத்தவன் அந்த உருவத்தையேப் பார்க்க அடுத்த வார்த்தை தொண்டையைத் தாண்டி வர மறுத்தது.
அப்போது சட்டென்று அகல்யாவுக்கு என்னவோ போல் இருக்க அவள் முகம் மாறியது.
அவளின் மாற்றத்தை உணர்ந்த சக்தி "என்னாச்சு" என்க சைகையினாலே வாந்தி வருவது போல் இருக்கு என்று சொன்னாள் அகல்யா.
உடனே வண்டியை நிறுத்தச் சொன்னவன் அவளை இறங்கச் செய்தான். சாலையின் ஓரத்தில் அவள் வேகமாக சென்று வாந்தி எடுக்கத் தொடங்க அவள் பின்னால் சென்று தலையை பிடித்துக் கொண்டான் சக்தி.
அப்படியே தொய்ந்து கீழயே அமர்ந்தவள் முகம் மிகவும் களைத்துப் போயிருந்தது. அவளை அமர வைத்தவன் வேகமாக வண்டியினுள் சென்று தண்ணீரை எடுத்து வந்தான். அதற்குள் ரத்னாவும் இறங்கி விட்டான். தண்ணீரை குடித்தவள் வாய் கொப்பளித்து விட்டு எழுந்து நிற்க அது முடியாமல் அப்படியே மயங்கி கீழே விழுந்தாள்.
தண்ணீரை முகத்தில் அடித்தபின்னும் கூட அசையாமல் கிடந்தவளைப் பார்த்தவனுக்குள் நடுக்கம் பரவியது.
"ரத்னா இவளைப் பாரு" என்பதற்குள் வண்டியில் இருந்த அனைவரும் இறங்கி வந்துவிட்டனர்.
அப்போது மாரியப்பன் வந்து "சீக்கிரமா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்" என்று சொல்ல அவர்களின் பக்கத்தில் நின்றிருந்த அரூபமோ சந்தோசத்தில் சிரித்தது.
அங்கிருந்த அனைவருக்கும் அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிச் செல்வது தான் நல்லது என்று தோன்றியது. ஆனால் சக்தி "இல்லை கோவிலுக்கு போகலாம்" என்றான்.
மாரியப்பன் வேகமாக "அவளுக்கு உடம்பு சரியில்லை சக்தி ஹாஸ்பிட்டல் போயிட்டு கோவிலுக்கு போகலாம்" என்றார்.
"இல்லை ப்பா கோவிலுக்கு போனாத்தான் அவளை காப்பாத்த முடியும். வாங்க போகலாம்" என்றான் சக்தி.
"புரியாம பேசாத சக்தி. அவளைப் பாரு. இப்படியே கோவிலுக்கு போய் ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்ணுறது" என்றார் அவர் கோபமாக.
துர்காவுக்கு என்ன செய்ய என்று புரியவில்லை. ஆனால் இப்போதைக்கு மகளின் உடல்நலம் மட்டுமே பிரதானமாக அவருக்குத் தோன்றியது அதனால் அவரும் சக்தியிடம் "அண்ணன் சொல்லுறது தான் கரெக்ட் சக்தி. இப்போ நாம ஹாஸ்பிட்டல் போகலாம் சக்தி. அவ மயக்கம் தெளிந்து எந்திருக்கட்டும். அப்பறமா நாம கோவிலுக்கு போகலாம்" என்றார்.
யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. எனக்கு கோவிலுக்கு சென்றே ஆக வேண்டும் என்பது போல் அவன் அவளைத் தூக்கி வண்டியினுள் கிடத்தி விட்டு அனைவரையும் ஏறச் சொன்னான்.
"சீக்கிரமா கோவிலுக்கு போங்க" என்று டிரைவரிடம் அவன் சொல்ல மாரியப்பனோ "ஹாஸ்பிட்டல் போப்பா" என்றார்.
"அப்பா ப்ளீஸ். என்னை புரிஞ்சுக்கோங்க" என்றான் சக்தி.
"நீதான் நிதர்சனத்தை புரிஞ்சுக்க மறுக்குற சக்தி. என்னாச்சு உனக்கு. இவ இப்படி கிடக்கிறதைப் பார்த்த பின்னாலும் கோவிலுக்கு போறேன்னு எப்படி சொல்லுற" என்றார் அவர் ஆதங்கத்துடன்.
"எனக்கு நம்பிக்கை இருக்குப்பா அங்க போனா எல்லாமே சரியாகிடும்"
"சக்தி என் பொறுமைக்கும் அளவு உண்டு"
"அதேதான் நானும் சொல்லுறேன் "
"ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குற" என்றார் அவர்.
"ஏன்னா அவ உயிர் எனக்கு அவ்வளவு முக்கியம்" என்று அவன் சொல்லிவிட்டு "கோவிலுக்கு நான் போயே ஆகணும்" என்று கத்தினான்.
அதைக் கேட்டு அந்த கண்ணுக்குத் தெரியாத உருவமோ கோபத்தில் இருந்தது. கோவிலுக்குப் போறதை தடுத்து நிறுத்திடலாம்னு பார்த்தா இவன் என்ன இவ்வளவு உறுதியா இருக்கான் என்று நினைத்தது.
மாரியப்பன் கோபத்தில் மனம் ஆறாமல் "அன்னைக்கு குலதெய்வத்தை நம்பி நான் இருந்து உன் அம்மாவை பறிகொடுத்த மாதிரி நீ ஆயிடாத சக்தி. நான் சொல்லுறதை கேளு. இப்போ அவனை நம்பி நீ கிளம்புன.. ஆனா நடந்ததைப் பார்த்தயா இன்னும் கோவிலுக்கே போகலை...அதுக்குள்ள வந்த தடங்கலைப் பாத்தயா. வேண்டாம் இதுக்கு மேல அங்க போறது நல்லதா எனக்குப் படலை" என்று அவர் சொல்ல யார் என்ன சொன்னாலும் என் முடிவு இதேதான் என்பது போல் அவன் இருக்க அதை பொறுக்க முடியாமல் எழுந்தவர் அவர் இடத்திலிருந்து நகர்ந்தார்.
அதை கண்ணுற்றவன் ரத்னாவிடம் அகல்யாவை பார்த்துக்க சொல்லிவிட்டு விரைந்து வந்து அவரின் கைப்பிடித்து உள்ளே இழுத்தான்.
"விடுடா என் பேச்சை நீ கேக்கலைல்ல இனி நான் எதுக்கு கோவிலுக்கு வரணும்" என்று சொல்ல
"வந்துதான்ஆகணும் வாங்க" என்று அவரை இழுத்தவன் உள்ளே அமரவைத்தான்.
"இன்னைக்கு ஒரு நாள் என் பேச்சை எல்லாரும் கேட்டுத்தான் ஆகணும். அண்ணே நீங்க கோவிலுக்கு போங்க" என்று சொல்ல வண்டியை எடுத்துவிட்டார் டிரைவர்.
அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துவிட சக்தி மட்டும் நம்பிக்கையுடனே வந்து கொண்டிருந்தான்.
ரத்னாவோ "மச்சி கொஞ்சம் பயமா இருக்கு" என்றான் சுற்றிலும் பார்த்தக் கொண்டு.
"ஏன் அந்த பேய் இன்னும் இருக்கா"
"இல்லை ஆனா..." என்று ரத்னா சட்டென்று அமைதியாகிவிட
"நேத்து அந்த பூசாரி பேசும் போது நீயும் தான கூட இருந்த. என்ன சொன்னாரு ஞாபகம் இருக்குதான. அப்பறம் எதுக்கு பயப்படுற. அவங்களுக்குத்தான் இந்த மாயை புரியலை. உனக்குமா புரியலை. அவங்க நாம கோவிலுக்கு போறதை தடுக்க தான் இப்படிலாம் பண்ணுறாங்க. அப்படி இருக்கும் போது எப்படி நாம ரிஸ்க் எடுக்குறது..." என்றான் சக்தி.
"புரியுது மச்சி" என்றான் ரத்னா.
சரியாக அதே நேரம் வண்டி பெரும் குலுக்கலுடன் நின்றது. அனைவரும் என்னாச்சு என்று பதட்டத்துடன் கேட்க டிரைவர் என்னென்னு தெரியல வண்டி நின்னுடுச்சு என்றான்.
உடனே சக்தி எழுந்து "யாரும் வெளிய வராதீங்க நான் என்னென்னு பாத்துட்டு வந்துடுறேன்" என்று சொல்ல ரத்னாவோ "வேணாம் மச்சி" என்றான்.
"இரு ரத்னா பாத்துட்டு வர்றேன்" என்று அவன் இறங்க அவன் பின்னாலே அந்த உருவம் தன் கோரப்பற்களை காட்டியபடி இறங்கியது ரத்னாவிற்கு தெரிந்தது.
"மச்சி" என்றபடி அவனும் இறங்கையில் கதவை அடைத்தவன் உள்ளயே இரு என்று சைகை செய்தான்.
வெளியே இருந்த இருவரும் வண்டியை சோதிக்க வண்டியின் சக்கரம் ஒன்று பஞ்சராகி இருந்தது.
"சக்தி தம்பி பஞ்சர்... இருங்க கொஞ்ச நேரத்துல நான் வேற மாத்திடுறேன்" என்று சொல்ல சக்தி டிரைவருக்குத் தேவையான உதவியை செய்து கொண்டிருந்தான்.
வண்டியின் சக்கரத்தில் ஒரு எலும்பு மாட்டியிருக்க அதை சக்தி எடுக்க முயற்சி செய்தான். வித்தியாசமாக இருந்த அதன் தோற்றம் அவனுக்குள் ஒருவித உணர்வை தோற்றுவித்திருந்தது.
அதை எடுத்து தூக்கி எறிந்தவன் வேறு வேலையினை பார்க்க அந்த எலும்பில் இருந்து ஒருவித புகை வண்டியை நோக்கி நகர்ந்தது. இதை சக்தி பார்க்கவில்லை ஆனால் ரத்னா பார்த்துவிட்டான். உள்ளே இருந்து அவன் "மச்சி மச்சி" என்று அலற மற்றவர்கள் திரும்பி "என்ன ரத்னா" என்றார்கள்.
"அங்க பாருங்க எதோ புகை மாதிரி நம்மளைத் தேடி வருது" என்று அவன் பயத்தில் சொல்ல அங்கே அவர்கள் பார்க்கும் போது அப்படி எதுவுமே இல்லாமல் சாலையே நிர்மலமான தோற்றத்தில் தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
"ரத்னா ஏற்கனவே எல்லாரும் பயந்து போய் உக்காந்து இருக்கோம் இதில நீ வேற பயமுறுத்தாத டா" என்று துர்கா அவனை சொல்ல "இல்லம்மா நான் உண்மையிலேயே பார்த்தேன்" என்றான் ரத்னா.
"அதுக்குத்தான் நான் எங்கயும் போக வேண்டாம்னு சொன்னேன் ஆனா இவன் என் பேச்சை கேக்கவே இல்லை. ஏற்கனவே ஒரு தடங்கல் இப்போ இன்னொன்னு.. இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ" என்று பெருமூச்சு விட அங்கே கோவிலினுள் நின்றிருந்த ஐயனாரின் மூச்சும் சீற்றம் நிறைந்து வெளிப்பட்டது.
நம்பிக்கை இன்னும் உனக்கு என்மேல இல்லை மாரியப்பா... அது வர்ற வரைக்கும் உனக்கு என்னோட அருமை புரியாது என்று சொல்லுவதைப் போல் இருந்தது அந்த சீற்றம்.
வேர்வை வழிய இருந்தவனின் முதுகை எதுவோ உறுத்து பார்ப்பதைப் போல் இருக்க சக்தி மனதுக்குள் தனது குலதெய்வத்தை நினைத்துக் கொண்டான். ஐயனாரப்பா உன்னைப் பாக்கணும்னு வந்தோம்.. இப்போ இப்படி பாதி வழியில நிக்கிறோம். தடங்கலை தடுத்து எப்படியாவது உன்னைப் பாக்க நீதான் வழி பண்ணனும் என்று வேண்டிக் கொள்ள கோவிலுக்குள் தொங்கிக் கொண்டிருந்த விளக்குள் அனைத்தும் சுடர்விட்டு பிரகாசமாக எரியத் தொடங்கியது.
கருப்பு நிற புகை வடிவ தோற்றமோ வண்டியை நோக்கி வந்துவிட்டு பின் சக்தியை நோக்கிச் சென்றது. சக்தியை தீண்ட செல்லும் முன் சக்தி சக்தி என்று உள்ளிருந்து கத்தினான் ரத்னா.
அங்கோ நடந்ததை நினைத்த களிப்புடன்
"சித்தையா தாத்தா பாதியிலயே வண்டி நின்னுடுச்சு. இனி அவன் கோவிலுக்கு போய் சேர்ந்த மாதிரி தான்" என்றான் மாயவரம்பன்.
"அகல்யாவையும் நாம மயங்கிவிழ வச்சுட்டோம். இனி அந்த உருவம் சக்தியை அடிக்குற அடியில அவன் குலசாமியை மட்டும் இல்ல எல்லாத்தையும் மறந்துடணும்" என்று சித்தையா சொல்ல "ஆமா ஐயா" என்று ஒத்து ஊதினான் கந்தையா.
அவன் முதுகை தொடும் முன் சட்டென்று சக்தி திரும்ப அங்கே எதுவுமே இல்லை. ஏதோ வந்தது மாதிரி தெரிஞ்சதே என்று நினைத்தவன் அவனது வேலையை செய்து கொண்டிருந்தான்.
அனைத்தையும் சரிசெய்து முடித்ததும் சக்தி எழுந்து விட்டான். அந்த டிரைவர் தன் கையை கழுவ அருகே ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றை நோக்கி நடக்க சக்தி "அண்ணா இருங்க தண்ணி நான் தர்றேன்" என்றான்.
"இல்லை தம்பி இந்த வளைவில் இருந்து கீழ இறங்குன உடனே ஆறு தான். நான் போய் கையை கழுவிட்டு வந்துடுறேன்" என்று சொன்னவன் செல்ல சக்தி அப்படியே நின்று கொண்டு அந்தபக்கம் தன் பார்வையை திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நேரம் ஆகிக் கொண்டு இருக்க இந்த டிரைவர் வருவது போல் தோன்றவில்லை.
என்னாச்சுன்னு தெரியலையே என்று நினைத்தபடி அங்கிருந்து விரைந்து அவன் கீழே இறங்க அந்த டிரைவர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது அந்த மேட்டில் இருந்து பாக்கும் போது புரிந்தது. அதைக் கண்டவன் விரைந்து அங்கே சென்றான்.
சிறிது நேரத்தில் சக்தியும் டிரைவரும் வந்துவிட கோவிலுக்குச் செல்லும் பாதையில் மறுபடியும் அவர்களின் பயணம் தொடங்க ஆரம்பித்தது. சக்தி டிரைவரின் அருகே அமர்ந்துவிட ரத்னாவுக்கு மட்டும் மனசு வேறு எதையோ சொல்லத் தொடங்கியது.
"மச்சி" என்று அழைக்க அவனோ திரும்பி பார்த்துவிட்டு அமைதியாக மறுபடியும் திரும்பிக் கொண்டான்.
ரத்னாவுக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கிய நிலையில் சட்டென்று அவன் மொபலை எடுத்து சக்திக்கு அழைத்தான்.
அவன் போன் அடித்துக் கொண்டே இருந்ததே தவிர எடுக்கவே இல்லை. வந்தது சக்தியே இல்லை என்று ரத்னா நினைக்கையில் அங்கே ஆற்றின் ஓரத்தில் சக்தி அந்த டிரைவரை எழுப்பிக் கொண்டிருந்தான்.
"அண்ணே அண்ணே" என்று அவனை இழுத்து வெளியே போட்டவன் கன்னத்தில் தட்ட சற்று நேரத்தில் இருமியபடி எழுந்தான் டிரைவர்.
"என்னாச்சு அண்ணே" என்று அவன் கேக்க "தெரியலை சக்தி நான் கையை கழுவிட்டு இருக்கும் போது யாரோ தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு அமுக்கி கொல்லப்பாத்தாங்க. நான் மயங்கிட்டேன்னு நினைக்கிறேன்" என்று அவன் சொல்ல "சரி சரி பயப்படாதீங்க" என்று சொன்னவன் "வாங்க" என்று திரும்பி பார்க்க அவன் ஏற்கனவே நீரில் இருந்த தாக்கத்தால் சோர்வாக அப்படியே மறுபடியும் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
ஐயனாரப்பா இன்னும் எத்தனை சோதனை தான் வரும்... அப்படியே வந்தாலும் நீதான் எங்களை காப்பாத்தணும் என்று ஒரு நொடி அமைதியானவன் சாலையில் வந்து பார்க்க வண்டியை காணவில்லை. இப்போது சக்திக்கு இன்னும் பதட்டம் கூடிவிட்டது. தன் மொபைலை பார்க்க அதுவும் அவனிடத்தில் இல்லை.
அய்யோ என்று அவன் அலறினாலும் மனசை விட்டுராத எப்படியும் ஐயனாரப்பா நமக்கு வழி காண்பிப்பாரு என்று நினைக்கும் போதே அந்த இடத்தில். எங்கிருந்தோ குதிரை கனைக்கும் சத்தம் கேட்டது..
அதை கூர்ந்து கவனித்தவன் பார்வையை திருப்பிப் பார்க்க அங்கே வெண்மை நிற புரவி மின்னலென வந்து கொண்டிருந்தது.
அதன் வேகத்தைக் கண்டவன் அப்படியே உடல் சிலிர்த்து நின்றிருக்க அருகே வந்த குதிரை அவன் கண்ணையேப் பார்த்தது.
அதில் இருந்த கட்டளையை சரியாகப் புரிந்து கொண்டவன் புரவியின் மீது ஏறிக் கொள்ள அது மீண்டும் கனைத்துக் கொண்டு பாய்ந்து செல்லத் தொடங்கியது.
அதே நேரம் அவன் காதுக்குள் "சக்தி நீ கோவிலுக்கு போ... அதுக்குள்ள நாங்க எல்லாரையும் கோவிலுக்கு கூட்டிட்டு வந்துடுறோம்"என்ற குரல் கேட்க அதற்கு கட்டுப்பட்டு அந்த புரவியும் விரைந்து சென்றது.
வண்டி வழி மாறி செல்லும் போது கவனித்த மாரியப்பன் "சக்தி வேற வழியில போகுது" என்றார்.
"சரியான வழியில தான் போகுது நீங்க பேசாம வாங்க" என்றான் சக்தி.
"ஏய் என்ன ஆச்சு உனக்கு. ஹாஸ்பிட்டல் போகலாம்னு சொன்னா வேண்டாம்னு சொல்லிட்ட இப்போ என்னென்னா கோவிலுக்கு போகாம வேற வழியில போறோம். சக்தி இது சரியில்ல"
"எல்லா பிரச்சனைக்கான முடிவைத் தேடித்தான இந்த பயணம். கவலையேப் படாதீங்க அந்த முடிவுக்கான ஆரம்பம் தான் இந்த வழி. இதுல போனா சீக்கிரமா எல்லாமே முடிஞ்சுரும்" என்று சக்தி கத்திக் கொண்டே சிரிக்க உள்ளே இருந்த அத்தனை பேரும் அரண்டு போய் இருந்தார்கள்.
வண்டி இப்போது அசுர வேகத்தில் செல்ல அனைவரும் கத்த தொடங்கினார்கள். ரத்னாவோ "மச்சி மச்சிக்கு என்னாச்சு" என்று அகல்யாவை அங்கே ஓரமாக படுக்க வைத்துவிட்டு கத்தினான்.
"அவன் தண்ணிக்குள்ள நல்லா குளிச்சுட்டு இருப்பான். ஏன்னா அவன் தான் இங்க ரொம்ப சூடா இருந்தான்" என்று சக்தியின் உருவத்தில் இருந்தவன் சொல்ல உள்ளே இருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
"வேண்டாம் எங்க உயிரைக் கூட எடுத்துக்கோ ஆனா எங்க பசங்களை விட்டுரு" என்று துர்கா கண்ணீருடன் சொல்ல
"உங்க உயிரை விட இதோ இங்க இருக்காளே அவ உயிர் தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்" என்று அவன் சொன்னான்.
அப்போது மாரியப்பனோ இத்தனை நாள் இல்லாம உன்னைத் தேடி வந்தோம். ஆனா இத்தனை தடங்கல் வருது. இதுக்கு காரணம் என்னோட வீம்பு அப்படின்னு நீ நினைச்சா அதுக்கான தண்டனையை எனக்குக் கொடு ஐயனாரப்பா. புள்ளைங்களுக்கு எந்த தண்டனையும் வேண்டாம். அவங்களை காப்பாத்து" என்று அவர் மானசீகமாக அவனின் உருவத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து வேண்டிக் கொண்டார்.
அந்த நேரம் வண்டியினுள் பலவித மந்திரங்கள் சொல்லும் கலவையான ஒலி கேட்கத் தொடங்கியது.
அதில் டிரைவராக இருந்த அந்த உருவமும் சக்தியின் உருவமும் அலறி கதறித் துடிக்கக் ஆரம்பித்தது.
இருவரது அலறலையும் கேட்டவர்கள் அப்படியே அமைதியாக இறுகிப் போய் இருக்கையினை ஒட்டி அமர்ந்திருக்க வண்டியின் எதிரே கனல் கக்கும் விழியோடு இருவர் நின்றிருந்தனர்....
வண்டியின் முன் கனல் தெறிக்க நின்றிருந்தவர்களை கண்டு இருவரும் ஆத்திரத்துடன் முறைத்தபடி வந்து நின்றார்கள். அவர்களின் கண்களிலும் ஆவேசம் அதிகமாக இருந்தது.
எதிரே இருந்தவர்கள் "மரியாதையாக இவங்களை விட்டு போய்டுங்க" என்று சொல்ல
"சத்ய ருத்திரா உன்னோட மந்திர வேலையை எல்லாம் வேற எங்கயாவது போய் வச்சுக்கோ. எங்ககிட்ட வேண்டாம்" என்றது சக்தி வடிவத்தில் இருந்த பேய்.
"வேற எங்கயும் நான் போக மாட்டேன். இங்கதான் உங்ககிட்ட தான் அதை காட்டுவேன். தைரியம் இருந்தா என்னை மீறி இவங்களை கூட்டிட்டு போயிடு" என்று சொல்ல இரண்டு பேய்களும் சத்யாவையும் மாதவனையும் தாக்க முயற்சி செய்தனர். அதில் சத்யனும் மாதவனும் தூரமாக சென்று விழுந்தார்கள்.
"போயிடுன்னு சொன்னா கேக்கணும்" என்று அந்த பேய் சொல்லிக் கொண்டே அவனை மீண்டும் நெருங்கி பிடித்து இழுத்தது. இமையை கூட சிமிட்டாமல் அந்த உருவத்தையே உறுத்துப் பார்க்கத் தொடங்கினான் சத்யன் .
"இப்படிப் பாத்தாலும் நான் பயப்படப் போறது இல்லை" என்று சிரித்தது அந்த பேய்...
டிரைவரின் உருவத்தில் வந்த பேயோ மாதவனைப் போட்டு புரட்டி எடுத்தது...
மறுபடியும் இருவரையும் தூக்கி வீச அவர்கள் தூரமாக சென்று விழுந்தார்கள். வெகு பிரயத்தனப்பட்டு எழுந்த இருவரும் தங்களின் கையை சேர்த்துக் கொண்டு மந்திரங்களைச் சொல்ல எதிரே இருந்தவர்களின் மேனி பற்றி எரியத் தொடங்கியது. கூடவே அவன் கட்டுப்பாட்டில் இருந்த அத்தனை பேய்களும் அங்கே ஓடிவந்தது.
சங்கரியோ வெகு ஆக்ரோசமாக வந்து இரண்டு ஆவிகளையும் தாக்கத் தொடங்கினாள். அவளுள் அன்று இருந்த கோபம் இல்லை. அமராவதி அவளிடம் நடந்த அத்தனையும் சொல்லியிருக்க அவளால் சத்யன் மேல் கோபப் பட முடியவில்லை.
வண்டிக்குள் இருந்தவர்களுக்கு இது புதுமையாக இருந்தது. சத்ய ருத்திரன் ரத்னாவை அழைத்து "சீக்கிரமா கோவிலுக்கு போங்க" என்று கட்டளையிட அகல்யாவை துர்காவிடம் விட்டவன் வண்டியினை எடுத்தான்.
இன்னும் மந்திரத்தின் தாக்கம் மறையவில்லை. அந்த பேய்களுக்கோ எரிச்சலும் தாங்கவில்லை. சுற்றி இருந்தவர்கள் அடிக்கும் அடியில் இரண்டும் பேய்களும் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட "சத்யா மாதவா இரண்டு பேரும் போங்க.. கோவிலுக்கு போங்க... அவங்களுக்கு துணையா போங்க" என்று தன் அம்மாவின் குரல் கேட்டது.
அதைக் கேட்டதும் கட்டுப்பாட்டில் இருந்த ஆவிகளை அனுப்பிய சத்ய ருத்திரன் அங்கிருந்து கிளம்பி கோவிலை நோக்கி சென்றான் தன் தம்பியுடன்.
வண்டியை கவனமாக ஓட்டிக் கொண்டிருந்த ரத்னாவின் அருகே வந்த மாரியப்பன் ரத்னா "அவங்க யாரு" என்றார்.
"ஏன் உங்களுக்கு தெரியலையா மாமா"
"தெரியாமத்தான் உன்கிட்ட கேக்குறேன்" என்றார் அவர்.
"அமராவதி பசங்க" என்று சொன்னதும் திடுக்கிட்டு திரும்பியது மாரியப்பன் மட்டும் அல்ல துர்காவும் சாமிநாதனும் தான்.
"அவங்களா நம்மளை காப்பாத்த முயற்சி பண்ணாங்க" என்றார் மாரியப்பன்.
"ஆமா மாமா" என்றான் ரத்னா...
தங்களின் முன் தோல்வியைத் தழுவி வந்து நின்றிருந்த அந்த உருவத்தைக் கண்ட மாயவரம்பன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.
"இப்படி அந்த சத்யன் நேரடியா மோதுவான்னு நான் எதிர்பார்க்கலை" என்றவன் அதே கோபத்தில் தன் கண்ணை மூட வாயை அசைக்க ரத்னாவின் கைகளில் வண்டி அசுர வேகத்தில் சென்றது.
அதைக் கண்ட அந்த மூவரின் இதழ்களும் கொடூரமான புன்னகையை சிந்தியது.
குதிரையோ காற்றைப் போல் விரைந்து சென்று சக்தியை கோவிலுக்கு முன் நிறுத்திவிட்டு மறைந்து போனது.
பெரிய அளவில் கோபுரம் என்று எதுவும் இல்லை. சாதாரணமாக ஒரு காட்டுப்பகுதி... அந்த சாலையின் ஓரத்தில் கோவில். ஒரே ஒரு கட்டிடம்... வெளியே தூணில் மணிகள் நிறைய கட்டப்பட்டிருந்தது. கண்ணைக் கவரும் அளவிற்கு வானுயர கட்டடம் இல்லையென்றாலும் அது கருத்தை கவரும் வண்ணம் இருந்தது. ஒரு முறை அந்த இடத்தை வலம் வந்தவனின் கண்கள் ஐயனின் முகத்தில் வந்து நிலைத்து நின்றது.
இரண்டு குதிரைகள் பெரியதாய் எழிலாய் நின்றிருக்க அதன் இடையே நின்ற நிலையில் ஐயனார் கம்பீரமாக வெள்ளை வேட்டி கட்டி கையில் அரிவாளுடன் காட்சி கொடுத்தார்.
பார்த்த மாத்திரத்திலே சக்தியின் விழிகளில் கண்ணீர் வழிந்து ஓடியது. கைகள் நடுங்க கும்பிட்டவன் அவனின் அழகை தன் மனதுக்குள் நிறைத்துக் கொண்டான்.
மெதுவாய் அடியெடுத்து காலை கோவிலின் உள்ளே வைக்கும் சமயம்
"சக்தி என்னைக் காப்பாத்து" என்று அகல்யாவின் குரல் நாலாபக்கமும் இருந்து எதிரொலித்தது.
"அகல்" என்று கத்தியவன் காலை பின்னுக்கு இழுத்து சுற்றிலும் பார்த்தான்.
"என்னைத் தனியா விட்டுட்டு போயிட்ட சக்தி. இங்க ரொம்ப பயமா இருக்கு. வா சக்தி சீக்கிரம் வா" என்று அவளின் அழுகை குரல் கேட்டதும் அவன் பின்னாலே நகர்ந்தான்.
அப்போது "சக்தி கோவிலுக்குள்ள போ" என்ற வேலம்மாளின் குரல் கேட்டது.
"அம்மா அம்மா அகல்யா" என்று அவன் பதற
"அவ வந்துடுவா சக்தி நீ கோவிலுக்குள்ள போ" என்றாள் வேலம்மாள்.
"அவளுக்கு ஏதோ ஆபத்து அவளை நான் போய் காப்பாத்தணும்"
"சக்தி நீ பலவீனமா மாறிட்டு இருக்க சக்தி. இப்படி இருந்தா எதிரிகளுக்கு தான் லாபம். சொல் பேச்சை கேளு திரும்பி அவனைப் பாரு. அவன்கிட்ட போ அவன் காலடியில் உன் கவலையை இறக்கி வை சக்தி... போ" என்று சொல்ல
"ஐயோ அகல்யா அகல்யா" என்று அவன் சொன்னதையே சொல்லிக் கொண்டு பிதற்றினான் சக்தி.
"சக்தி சீக்கிரம் வா என்னைக் காப்பாத்து. எனக்கு மூச்சு முட்டுது செத்துடுவேன் போல" என்று அகல்யா வேதனையுடன் முணங்க
"இந்தா வந்துட்டேன் அகல்யா உன் சக்தி வந்துட்டேன்" என்று அவன் கோவிலைத் தாண்டி நடக்கத் தொடங்கினான்.
"சொன்னா கேளு உள்ள போடா" என்று வேலம்மாள் கத்த "எதுக்கு இத்தனை பதட்டம்" என்ற கணீர் குரல் அங்கே கேட்டது. உடனே ஆவி சிலிர்த்த வேலம்மாள் "ஐயனே அவன் சொல்ல சொல்ல கேக்காம போறான்" என்றாள்.
"எங்க போகப் போறான் வந்துடுவான்" என்றான் ஐயன்.
"சாமி "
"நான்தான் சொல்லிட்டேன்ல வந்துடுவான். இவ்வளவு தூரம் வரவச்சவனுக்கு உள்ள வரவைக்கத் தெரியாதா. ஆனாலும் நான் ஏன் அமைதியா இருக்கேன். அவனே வருவான் அதுக்காகத்தான்..."
"எப்படியோ இப்போ போயிட்டானே ஐயனாரப்பா" என்று வேலம்மாள் சொல்ல
"என்ன நடக்குதுன்னு மட்டும் பாரு" என்று மட்டும் கேட்ட குரல் அதன்பின் கேட்கவில்லை.
வேகமாக ஓடியவன் காதுகளில் இன்னும் அகல்யாவின் குரலே கேட்டுக் கொண்டிருந்தது.
அங்கோ வண்டியின் வேகத்தில் அனைவரும் அருகே இருந்த கம்பியை பிடித்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர். துர்கா அகல்யாவினை தன் மடியில் போட்டுக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்தாள்.
சட்டென்று வண்டியின் மேல் எதுவோ வந்து விழுந்த சத்தம் கேட்டது. "கோவிலுக்கு போகாம தடுக்க என்னென்ன பண்ண முடியுமோ அவ்வளவையும் பண்றானுங்களே.. இப்போ என்ன வந்து விழுந்ததுன்னு தெரியலையே" என்று ரத்னா வாய்விட்டு புலம்ப
"டேய் லூசு புலம்பாத" என்றார் மாரியப்பன்.
"யாரு நான் புலம்புறேனா. அடப் போங்க மாமா" என்று அவன் மீண்டும் புலம்ப
"ரத்னா நம்பிக்கையோட இரு எல்லாத்தையும் சரி பண்ணுறதுக்காகவே எல்லையில ஒருத்தன் இருக்கான். இந்த தொல்லையில இருந்து அவன் காப்பாத்துவான் டா" என்றவர் "ஐயனாரப்பா என் புள்ளைங்க எல்லாரையும் நீதான் காப்பாத்தணும்" என்று மனதார அவர் கையெடுத்து கும்பிட கோவில் அருகே இருந்த வேலம்மாவிற்கு மனம் நிறைந்து போனது. கூடவே ஐயனுக்கும் தான்.
வெறுத்து ஒதுக்கியவன் இன்று விரும்பி நினைக்கிறான். பிடிவாதமாக வரமாட்டேன் என சொன்னவன் பிடித்து வரம் கேட்கிறான். இதுதான் நமது மனித மனதின் விசித்திரமோ.
சட்டென்று வண்டியின் கண்ணாடியின் முன் ஒரு முகம் தோன்ற அம்மா என்று ரத்னா கத்த "ரத்னா அமைதியா இரு" என்ற சத்தத்தில் வாயை மூடிக் கொண்டான் அவன்..
அதற்குள் அமராவதி என்று துர்காவும் மாரியப்பனும் அழைக்க நான் தான் என்பது போல் அவள் பார்த்தாள்.
"மறுபடியும் எங்களுக்காக நீ வந்தயா" என்று சொல்ல "ஆமா" என்றவள் வண்டியின் வேகத்தினை சீராக்கினாள்.
"இப்போ எதுவும் பேச நேரமில்லை அதனால மொத கோவிலுக்கு போங்க அப்பறமா எல்லாம் பேசிக்கலாம்" என்று சொன்னவள் வண்டியினுள் இருந்த அகல்யாவின் நெற்றியினை வருடி விட்டாள். "அம்மா" என்றபடி சட்டென்று கண்ணைத் திறந்தவள் தனக்கு முன்பாக இருந்த துர்காவை தான் பார்த்தாள்.
"அகல்யா அகல்யா" என்று அழைத்துக் கொண்டு வந்தவன் காதில் சக்தி என்ற பூசாரியின் குரலும் அதை தொடர்ந்து அவர் அடிக்கும் உடுக்கை ஒலியும் கேட்டது.
சட்டென்று அவனைப் போர்த்தியிருந்த மாயத்திரை விலக "உன் அப்பனை பாக்க வந்துட்டு அவனைப் பாக்காம எங்க கிளம்பிட்ட" என்று உறுமலுடன் அவர் பேச "அகல்யா அகல்யா" என்றான் அவன் கதறலாய்.
"அவளுக்கென்ன அவ நல்லாத்தான் இருக்கா. இங்கதான் வந்துட்டு இருக்கா. மனசை திடமா வச்சுட்டு போ சக்தி நேரமில்லை" என்று சொல்ல அப்படியே திரும்பியவன் வேகமாக ஓடினான்.
கோவில் எதிரே வர அப்போது வண்டியும் அங்கே வந்து நின்றது.
வேகமாக சக்தி என்றபடி மாரியப்பன் இறங்க "அப்பா அகல்யா" என்றான் அவன்.
"அவ நல்லா இருக்காடா போய் கூட்டுட்டு வா" என்றார்.
இவனும் வேகமாக சென்று "அகல் இப்போ ஓகே வா" என்க "நல்லா இருக்கேன் சக்தி" என்று அவனின் கைப்பிடித்து மெதுவாக இறங்கினாள் அகல்யா.
அகல்யாவோடு இணைந்து சக்தி அந்த கோவிலின் வாசலில் கால் வைத்து உள்ளே வந்தான். இருவரது உள்ளமும் சந்தோசத்தில் நிரம்பி வழிந்தது. இருவரின் சந்தோசத்தைப் பார்த்து அங்கே இருந்த மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
ரத்னா அனைத்து பொருட்களையும் எடுத்து வந்து உள்ளே வைக்க மாரியப்பன் நேராக ஐயனிடம் சென்று நின்றார்.
"மன்னிச்சுடு ஐயனாரப்பா. உன்னை பாக்காமல் இத்தனை வருசத்தை கடந்து போயிட்டேன். கோபத்தால என்னை நானே ஏமாத்திட்டு இருந்திருக்கேன். என்னை நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு. சின்னப் பையன் அவனுக்கு இருக்க அறிவு கூட எனக்கு இல்லாம போயிடுச்சு. என்னை மன்னிச்சுடு" என்றவர் அப்படியே விழுந்து வணங்கிவிட்டு மனதின் பாரத்தை அவனிடம் வைத்துவிட்டு எழுந்து வந்தார்.
பொங்கல் பானையை துர்கா எடுத்து வைக்க அகல்யா அதில் அரிசி களைந்த தண்ணீரை ஊற்றினாள். பின் அடுப்பில் பொங்கல் பானையை வைத்தார்கள்.
பொங்கல் நன்றாக பொங்கியதும் துர்கா அரிசியை அகல்யாவை போட வைத்துவிட்டு பின் சக்தியை அழைத்தார். அவனும் அதனுள் அரிசியை அள்ளிப் போட்டான்.
ஒருவழியாக பொங்கல் தயார் ஆனதும் சக்தி அதை எடுத்துக் கொண்டு கோவிலின் உள்ளே சென்று வைத்தான். அப்போதுதான் சத்ய ருத்திரனும் மாதவனும் அங்கே வந்தார்கள்.
அவர்களைச் சென்று வரவேற்ற சக்தி உள்ளே அழைத்து வந்தான்.
"நீங்க இல்லைன்னா என்ன ஆகிருக்கும்னு எனக்கேத் தெரியலை" என்று சக்தி சொல்ல
"உனக்கு அகல்யா எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு எங்களுக்கும் அவ முக்கியம் மாப்பிள்ளை.. அவளோட நாங்க இருக்குற பாக்கியம் எங்களுக்கு கிடைக்கலைனாலும் அவளைப் பத்தியே தான் நாங்க நினைச்சுட்டு இருந்தோம். அவ நல்லா இருக்கணும்னு தான் நாங்க இவ்வளவு பண்ணோம்... நீங்க உள்ள போங்க. திடீர்னு நாங்க அவகிட்ட வந்து நின்னா அவ எங்களை ஏத்துக்க மாட்டா. அதனால நாங்க இங்கயே இருந்துக்கிறோம்" என்று சத்யன் சொல்லிவிட்டு அவனை உள்ளே அனுப்பி வைத்தான்...
சக்தி போனபிறகு "அண்ணா உனக்கு கஷ்டமா இல்லையா" என்றான் மாதவன்.
"அவளைப் பாரு மாதவா. அவ எவ்வளவு சந்தோசமா இருக்கான்னு. அதுவே நமக்கு போதும் டா. இதை பார்க்கத்தான நாம இவ்வளவு பாடுபட்டோம்" என்றான் சத்ய ருத்திரன்.
"இருந்தாலும்" என்று இடை மறித்தவனால் பேச முடியவில்லை. அவனின் நிலையைப் புரிந்த சத்யன் "டேய் மாதவா என்னடா இது சின்னப்பையன் மாதிரி கண்கலங்கிட்டு இருக்க எல்லாமே நல்லபடியா நடக்கும் டா. கவலைப் படாதே. இப்போதைக்கு நம்ம சந்தோசத்தை விட அகல்யா சந்தோசம் தான் முக்கியம்" என்று அவனைத் தேற்றினான்...
தன் முன் இருந்து வந்த நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கலைப் பார்த்ததும் ஐயனின் மனம் இளகியது. இனிப்பைப் போல் இனி உங்களின் வாழ்வும் இருக்கும் மகனே என்று வாழ்த்தியவனோ அந்த பொங்கலின் சுவையை உணர ஆரம்பித்தான்.
மனதினைப் போலவே ஐயனின் வயிறும் நிறைந்து போனது.
அதன்பின் தீபத்தை ஏற்றிய சக்தி மனதுக்குள் எதுவுமே வேண்டாமல் ஐயனைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டான். பின் தன் சட்டைப் பையினுள் கைவிட்டவன் அதிலிருந்த நகைப்பெட்டியை எடுத்தான்.
ரத்னாவைத் தவிர அங்கிருந்த அனைவரும் உறைந்த நிலையில் அவனைப் பார்க்க சக்தி அதை திறந்து அதனுள் இருந்த திருமாங்கல்யத்தை வெளியே எடுத்தான். மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்த அந்த மாங்கல்யம் அழகாக மின்னியது.
மாரியப்பனோ "என்னடா இது. எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை" என்க
"இந்தா இப்போ சொல்லுறேன் ப்பா... இவளை நான் கல்யாணம் பண்ணப் போறேன். உங்களுக்கு ஒன்னும் அப்சக்சன் இல்லையே" என்று கேட்டான் சிரிப்புடனே.
"உங்க கல்யாணம் நம்ம குலதெய்வம் கோவில்ல அவன் முன்னாடியே நடக்கணும்னு இருந்திருக்கு. இதுல எங்க எல்லாருக்கும் சந்தோசம் தான். என்ன மாப்பிள்ளை உங்களுக்கு ஓகே தான" என்றார் மாரியப்பன்.
"மச்சான் எனக்கு எப்பவோ ஓகே தான் இரண்டு பேரும் சந்தோசமா இருந்தா அதை விட வேறென்ன வேணுமாம் நமக்கு" என்றார் சாமிநாதன்.
அந்த கணம் அனைவரின் வாழ்த்துக்களுடன் ஐயனின் ஆசியுடன் அகல்யாவின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டி அவளுக்கு மட்டும் சொந்தமானவனாக மாறிப்போனான் சக்தி.
இருவரின் கல்யாணத்தை கண்டு களித்த மகிழ்வோடு சத்யனும் மாதவனும் தங்களின் விழியில் துளிர்த்திருந்த நீரை துடைத்து எறிந்தார்கள்
கண்கள் கலங்க நிமிர்ந்து பார்த்த அகல்யாவிற்கு சக்தியின் உருவம் கூட கலங்கலாக தான் தெரிந்தது.
"என்ன அப்படி பாக்குற" என்று மெதுவாக கண்ணைத் துடைத்தவன் கேட்க "இந்த உணர்வை எப்படி உங்ககிட்ட சொல்லுறதுன்னு கூட எனக்குத் தெரியலை. மனசு அவ்வளவு சந்தோசமா இருக்கு" என்றாள் அவள். அவளின் தோளைச் சுற்றி கைப்போட்டுக் கொண்டவன் அவளோடு இணைந்து ஐயனாரின் காலில் விழுந்து வணங்கினான்.
அனைவரின் காலில் விழுந்த பின் ரத்னாவிடம் சக்தி பேசிக் கொண்டே அனைவருக்கும் பொங்கலை எடுத்து வந்து கொடுத்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று அவனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றவள் அங்கே அமர்ந்து பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருந்த சத்யனின் காலில் சென்று விழுந்தாள். அவளையே அதிசயமாக பார்த்தபடி சக்தியும் விழ இருவரையும் பதறிப் போய் பார்த்தபடி நின்றான் சத்ய ருத்திரன்.
"அகல்யாம்மா என்னடா இது.... நல்லா இருடா எந்திரி" என்று அவன் அவளைத் தூக்க "அண்ணா" என்றாள் அவள் ஆத்மார்த்தமாக...
அந்த நொடி சத்ய ருத்திரன் எப்படி உணர்ந்தான் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது...
"அண்ணா" என்ற அவளின் அழைப்பில் மனம் நிறைந்து போய்விட்டது சத்யனுக்கும் மாதவனுக்கும்.
சக்தி அவளை ஆச்சர்யமாக பார்க்க அவளோ அவனை கவனிக்காமலே "அண்ணா அண்ணா" என்று கதறினாள். அவள் கண்கள் அவளை கேளாமலே கண்ணீரை வெளியே தள்ளியது.
"ஷ்ஷ் என்னம்மா எதுக்கு இப்படி அழற... அண்ணன்ங்க நாங்க இருக்கோம் டா" என்று மாதவன் அவளின் கண்ணீரை துடைத்தபடி பேச அவளோ "நடக்குறது என்னென்னு எனக்குப் புரியலை. ஏன் அண்ணன்னு உங்களை கூப்பிடுறேன் அதுவும் எனக்குத் தெரியலை. சக்தி கிட்ட நீங்க அவ எங்களை ஏத்துக்க மாட்டான்னு சொல்லும் போது சம்பந்தமே இல்லாம என் மனசு கலங்குது... இரண்டு பேர் கண்ணுல கண்ணீர் வர்றதைப் பாக்கும் போது என் கண்ணுல சோகம் வெடிக்குது... இதெல்லாம் ஏன்??? நான் யாரு" என்று அவள் கத்த
"அது ஏன்னு நான் சொல்லுறேன்" என்று சக்தி சொல்லும் போதே ரத்னா வந்து "மச்சி மச்சி நான் சொல்லுறேன் சரியா இருக்கான்னு பாரு" என்றான்.
அவன் பேசியது புரியவில்லை என்றாலும் "எங்க சொல்லு..." என்று சொல்லிவிட்டான் சக்தி.
அகல்யாவும் தீவிரமான முகப் பாவனையுடன் ரத்னாவைப் பார்க்க "ஏன் ஏன்னு கேட்டயே அகல்... அதுக்கான காரணம் என்னென்னு தெரியுமா நீ முந்தா நேத்துத்தான் பாகுபலி the beginning படம் பார்த்த" என்றான் ரத்னா சிரிப்பை அடக்கிக் கொண்டு...
சட்டென்று அந்த இடத்தில் குபீர் என்ற சிரிப்பு சத்தம் கேட்டது. அகல்யா ரத்னாவை முறைத்துக் கொண்டே சக்தியைப் பார்க்க அவன் தான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
"டேய் ரத்னா" என்று அவன் தலையில் நாலு கொட்டு கொட்ட சக்தி இன்னும் சிரித்துக் கொண்டு தான் இருந்தான். இவர்களைப் பார்த்த சத்யனும் மாதவனும் கூட சிரிக்கத் தொடங்கினார்கள்.
"அண்ணா நீங்களும் சிரிக்குறீங்களா... சிரிக்காதீங்க" என்று சொல்ல சரியென்று அவர்கள் தங்களின் சிரிப்பை நிறுத்தினார்கள்.
"டேய் ஒழுங்கா சக்தியை சிரிக்க வேண்டாம்னு சொல்லு. இல்லைன்னா உன் மண்டை சின்சான் மண்டை மாதிரி வீங்கிடும்" என்று அவன் தலையில் கொட்டிக் கொண்டே அவள் சொல்ல
"மச்சி போதும் மச்சி சிரிக்காத. வலிக்குது மச்சி. கொட்டி கொட்டியே உன் பொண்டாட்டி சொட்டை வர வச்சுடுவா போல மச்சி" என்றதும் தான் அவன் ரொம்பவும் முயற்சி செய்து சிரிப்பை அடக்கினான்.
"டேய் மாப்ள இதை நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை" என்று சக்தி சொல்ல
"வீட்டுக்கு வாங்க உங்களை" என்று அவள் முறைக்க
"மாப்பிள்ளை போதும் எங்க தங்கச்சி பாவம்" என்றான் சத்ய ருத்திரன்.
"டேய் மச்சான்" என்று அவள் சக்தியை இடையிலயே குத்தி காதுக்குள் எதையோ சொல்ல அதைக் கேட்டவன் " இனி சொல்ல மாட்டேன் டா அகல்" என்றான் அவளின் தோளின் மேல் கைப்போட்டபடி.
"சொல்ல மாட்டேன்னு சொல்லாம இப்பவாவது
சொல்லுங்க என்ன நடந்ததுன்னு" என்றாள் அகல்யா.
சத்யன் விழிகள் இருள தானே முன் வந்து "நான் சொல்லுறேன் அகல்யா ம்மா" என்றான். அவன் கண்களுக்கு முன் அவர்களின் கடந்த காலம் நிகழ்வாய் விரிந்தது...
பல வருடங்களுக்கு முன்....
அதிகாலை நேரம்...
அது மார்கழி மாதத்தின் முதல் நாள் என்பதால் பனி உச்சந்தலையில் இறங்கி அப்படியே தேகத்தையே நடுங்க வைப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் கையில் குடத்தோடு வெளியே வந்தாள் அமராவதி.
கொஞ்ச தூரம் நடந்தவள் அடுத்த சந்துக்குள் நுழைந்து தன் தோழி துர்காவை எழுப்பி உடன் அழைத்து வந்தாள்.
இருவரும் சேர்ந்து பிள்ளையார் கோவிலுக்கு போகும் பாதையில் நடந்து வந்தார்கள்.
தெருவில் இருந்து இறங்கியதும் ஆற்றங்கரைதான். அந்த கரையை தாண்டி அக்கரை சென்றால் அங்கே அரசமரத்தடியில் பிள்ளையார் சிறு சிலைவடிவில் வீற்றிருப்பார். தற்போதைக்கு கோவில் கோபுரமாக அந்த அரச மரத்தைத்தான் ஏற்று அமர்ந்திருக்கிறார் அந்த ஊரின் பிள்ளையார்.
அந்த பிள்ளையாரை வணங்கத்தான் இந்த அதிகாலையில் துர்காவை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தாள் அமராவதி. பெரும் சத்தத்துடன் ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சமயம் இன்னும் சில கன்னிப்பெண்களும் மார்கழி மாதம் நீராட வந்து கொண்டிருந்தனர்.
ஆற்றில் இறங்கிய அமராவதி திரும்பி துர்காவைப் பார்க்க அவளோ நடுங்கியபடி கையை கட்டிக் கொண்டு அந்த மேட்டின் மேலேயே நின்றிருந்தாள்.
"இறங்கி வாடி" என்க அவளோ தலையை இட வலமாக ஆட்டியபடி "ஏய் நேத்து சும்மாதான் டி நான் சொன்னேன். அதுக்காக இந்த குளிர்ல என்னையும் சேர்த்து குளிக்க கூட்டிட்டு வருவயா. ஆத்துக்குள்ள கால் வைக்கவே என்னால முடியலை. அவ்வளவு குளிர்ச்சியா இருக்கு. இதுல குளிச்சா அவ்வளவுதான் ஜன்னி வந்துடும் போல.... நான் வேணும்னா இப்படி ஓரமா உக்காந்துகிறேனே. நீ மட்டும் போய் குளிச்சிட்டு வா" என்றாள் துர்கா
"பேசாம வாடி. உள்ளே இறங்கிட்டா குளிர் தெரியாது... இது மார்கழி மாசம். இந்த மாசம் விரதமிருந்து காலையிலயே குளிச்சு கோவிலுக்கு போயிட்டு வந்தா நாம நினைச்ச மாதிரி வாழ்க்கை அமையும்" என்று அமராவதி சொல்லியபடி அவளை அழைப்பதற்காக மேலே ஏறி வந்தாள்.
"அதுதான் உனக்காக ஒருத்தன் போறப்ப வர்றப்போ வாசல்லயே காத்துட்டு இருக்கானே அவனுக்கு பதில் சொல்ல வேண்டியதுதான" என்று துர்கா கேட்க அவளுக்குள் சின்னதாய் ஒரு தடுமாற்றம். அவள் என்னவோ கிண்டலாக தான் கேட்டாள். ஆனால் அமராவதியினால் தான் பட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.
"என்ன அவனை சொன்னதும் இப்படி அதிர்ச்சியா நிக்கிற" என்று புரியாமலே துர்கா கேட்டாள்.
"அப்போ அப்பாவுக்காகத்தான் அமைதியா இருக்கியா. உண்மையிலே என்னை உனக்குப் பிடிச்சிருக்கா" என்றபடி முன்னால் வந்து நின்றான் அவன்.
இன்னும் இருள் பிரியாத வேளைதான். ஆனாலும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்து பேசினால் பார்ப்பவர்கள் பேசியே ஒருவழியாக்கிவிடுவார்கள் என்று உணர்ந்தவர்கள் அவன் வந்து நின்றதிலே பயத்துடன் விலகி நின்றார்கள்.
அதே பதட்டத்தில் துர்கா "வாடி" என்று அமராவதியை இழுக்க அவனோ "நானும் எவ்வளவு நாள் தான் இப்படியே இருக்குறது எதாவது சொல்லு. உங்க அப்பாகிட்ட நான் வந்து பேசுறேன்" என்று மீண்டும் அமராவதியினை தடுத்து நிறுத்திப் பேசினான்.
உடனே துர்கா "இங்க பாரு பேசுறதா இருந்தா நீ வேணும்னா நின்னு பேசிட்டு வா நான் வீட்டுக்குப் போறேன். எங்க அண்ணன் பாத்தா அப்பறம் திட்டுவான்" என்றபடி ஆற்றுக்குள் அவள் இறங்கி நடக்க "துர்கா நில்லு நான் வர்றேன்" என்றபடி வந்தாள் அவள்.
ஐயோ குளிரும் ஆற்றுக்குள் இறங்க மாட்டேன் என்று சொன்னவள் அந்த குளிரையும் பொருட்படுத்தாது நடந்து கொண்டிருந்தாள்.
தன்னருகில் அமைதியாக வந்த அமராவதியைப் பார்த்து
"என்ன இப்படி வந்து பயமுறுத்துறான் இது சரியில்லை அமரா... எதுக்கும் கொஞ்சம் கவனமாவே இருந்துக்கோ" என்றாள் துர்கா.
"என்னடி சொல்லுற" என்று அவள் மிரண்டு போன விழிகளுடன் கேட்க
"வெள்ளனவே வந்து நிக்கிறான். உன்னையே தொடர்ந்து வந்துட்டே இருக்கான். ஒன்னு வீட்டுல சொல்லிடு இல்லைன்னா அவன்கிட்டயாவது தெளிவா சொல்லிடு. வேற யாருக்காவது விசயம் தெரிஞ்சா அவ்வளவுதான்" என்று துர்கா சொன்னதும்.
"அப்போ கூட அவனுக்கு பதில் சொல்லுன்னு சொன்ன இப்போ என்ன இப்படி பேசுற" என்றாள் அமராவதி.
அவள் மனம் புரிந்தாலும் அதைப் பற்றி தான் பேசி எதுவும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்த துர்கா "அது சும்மா நமக்குள்ள கிண்டலுக்கு பேசிக்கிறதுதான். அதுக்காக அவன்கிட்ட அப்படி பேச முடியுமா" என்றதும் இல்லை என்று தலையாட்டினாள் அமராவதி.
"தெரியிதுல்ல அமரா.. அதனால இதெல்லாம் வேண்டாம் நீ போய் குளிச்சிட்டு சாமி கும்பிடு" என்றாள்.
"அப்போ நீ" என்று அமராவதி கேட்க
"நானும் தான் அதான் இவ்வளவு தூரம் குளிர்ல கூட்டிட்டு வந்துட்டயே" என்றவள் அவளுடன் இணைந்து ஆற்றில் முங்கிவிட்டு குடத்தில் தண்ணீர் மோந்து கொண்டு அங்கிருந்து பிள்ளையார் மேல் ஊற்றினார்கள்.
இவர்கள் தான் அந்த அதிகாலை நேரத்தில் குளிர்ந்த நீரால் குளிக்கிறார்கள் என்றால் இப்போது அந்த பாக்கியம் இறைவனுக்கும் கிடைத்துவிட்டது...
தண்ணீர் ஊற்றி முடித்தவர்கள் அந்த மரத்தை மூன்று முறை சுற்றி முடித்துவிட்டு விநாயகனை வணங்கி வீட்டுக்குப் புறப்பட்டனர்.
அதன் பின் அமராவதி அவனை மறந்துவிட்டு தன் வீட்டின் வேலையை பார்த்துவிட்டு துலக்க வேண்டிய பாத்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்றை நோக்கி புறப்பட்டாள்.
அவள் வருவதைப் பார்த்தவனும் வந்து அவள் முன் நின்றான். ஏற்கனவே பயத்தில் இருந்தவள் சற்று பின்வாங்க "என்ன அமராவதி ஏன் எப்போ பாத்தாலும் பயந்த மாதிரியே பாக்குற. நான் என்ன அவ்வளவு கோரமாவா இருக்கேன்" என்றான் அவன்.
"மொதல்ல வழிவிடுங்க எப்போப் பாத்தாலும் வழி மறிச்சுட்டே நிக்குறீங்க" என்று அவள் விலக
"அமராவதி நீ ஏன் என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டுற. நீ இல்லைன்னா எனக்கு எதுவும் இல்ல" என்றான் அவன்.
"நீங்கதான் நிலமையை புரிஞ்சுக்க மாட்றீங்க" என்று அவள் படபடத்தாள்.
"இல்லை உன்கிட்ட பேசுனா எதுவும் வேலைக்கு ஆகாது. நான் உங்க அப்பாகிட்ட வந்து பேசுறேன் அப்பவாவது நீ என்னை நம்பு" என்று அவன் சென்று விட்டான். சொன்னது போல பெண் கேட்டும் வந்துவிட்டான்.
அமராவதியின் தந்தையும் மறுக்காமல் சரியென்று சொல்லிவிட எல்லாம் பேசிய பின் கல்யாண நாளைக் குறிக்கும் போது மட்டும் அவன் இன்னும் ஒருவருடம் போகட்டும் என்று சொல்லிவிட்டான்.
இரண்டு வீட்டாரும் சரியென்று சொல்லிய நிலையில் எல்லாப் பெண்களைப் போலவே அமராவதி திருமணத்தை எதிர் நோக்கி காத்திருக்க தொடங்கினாள். இந்நிலையில் துர்கா சாமிநாதனின் திருமணமும் நடந்துவிட்டது... அவளும் தன் கணவனுடன் சென்றுவிட்டாள்.
அன்று மாரியம்மன் கோவிலை நோக்கி அமராவதி வந்து கொண்டிருக்கும் போது அவளை இடைமறித்து நின்றான் அவளது வருங்கால கணவன் தங்கப்பாண்டி.
"இப்போ எல்லாம் உன்னை பாக்கக் கூட முடியலை" என்றவனின் குரலில் ஏக்கம் தெரிந்தது...
"நான் ஏன் கோபப் படப் போறேன்" என்றான் அவன் இன்னும் இறங்கி வராமல்.
"கல்யாணம் நடந்தா நல்லா பேசலாம். ஆனா நீங்க தான ஒரு வருசம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கிடலாம்னு சொன்னீங்க" என்றாள் அவள் இன்னும் தயங்கியபடி.
"ஆமா எனக்குன்னு ஒரு முக்கியமான வேலை இருந்தது. அதை செஞ்சு முடிக்கணும்னு தான் நான் அந்த அவகாசம் கேட்டேன். அது எனக்கே ஆப்பா வந்து நிக்கும்னு நான் எதிர்பார்க்கலை" என்றான் அவளைப் புரிந்துக்கொண்ட பார்வையுடன்.
"என்ன வேலை"
"சொல்லுறேன் கல்யாணம் முடிஞ்சபிறகு.. சரி போ" என்று சொல்ல "கோபமா சொல்லுறீங்களா" என்று அவனைப் பார்த்தாள் அமராவதி.
"இல்லையே.. உன் மேல எனக்கு என்ன கோபம். நீ போ இன்னும் கொஞ்ச நாள் தான.. அதுக்கப்புறம் உன்னை எங்கயும் போகவிடாத மாதிரி நான் பாத்துக்கிறேன்" என்று மையலுடன் சொல்ல அதில் அவள் தலைகுனிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள். அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டியின் விழிகள் புன்னகையை சிந்தியது...
திருமணமும் இனிதே முடிந்து விட்டது. அவர்களது மண வாழ்விற்கு சான்றாக ஒரு வருடத்திற்குள்ளாகவே சத்ய ருத்திரனும் பிறந்துவிட்டான்.
அவன் பிறந்து பத்து வருடங்கள் கழித்து இன்னொரு மகனும் பிறக்க அடுத்த சில மாதங்களிலே அவள் மீண்டும் கர்ப்பம் தரித்துவிட்டாள். அதுகூட பாண்டியின் பெண்குழந்தை வேண்டும் என்ற ஆசையினால்...
இப்போது அவளுக்கு ஒன்பதாவது மாதம். இந்த சூழ்நிலையில் தான் அவள் மீண்டும் தன் பிறந்த வீட்டிற்கு வந்தாள். அவளின் தந்தையும் பலவீனமாக தான் இருந்தார்.
சத்ய ருத்திரன் உறங்கிவிட வீட்டிற்குள்ளேயே இருப்பது ஒரு மாதிரியாக இருக்க சரி கொஞ்சம் அப்படியே வெளியே சென்று வரலாம் என எண்ணியவள் கையில் எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு தன் அப்பாவிடம் சொல்லிவிட்டு தன் இரண்டாவது மகனை மட்டும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
வெளியே வந்ததும் எதிரே இளைத்து கருத்து சென்றவளைப் பார்த்து "ஏய் துர்கா" என்று அழைக்க திரும்பியவள் இவளைப் பார்த்ததும் "அமரா எப்படி இருக்க" என்று அருகில் வந்தாள். அவளும் கர்ப்பமாக தான் இருந்தாள்..
"நல்லா இருக்கேன் டி. நீ எப்படி இருக்க. வா வீட்டுக்கு" என்று அவள் அழைக்க
"அண்ணா திட்டுவான்... வெளிய போக வேண்டாம்னு தான் சொன்னான். நான் தான் கொஞ்ச நேரம்னு சொல்லிட்டு வெளிய வந்தேன்.. சக்தி வேற தூங்கிட்டு இருந்தான்.. தேடுவான்" என்று சொல்ல
"ஓ உன் புள்ளையா" என்றாள் அமராவதி.
"இல்லை டி அண்ணா பையன்... மதினி திடீர்னு உடம்பு சரியில்லாம இறந்துட்டாங்க. அதனால இப்போ நாங்களும் இங்க வந்துட்டோம். அவர் தோட்டம் சும்மாதான் இருந்தது அதனால அதை அவர் பாத்துக்கிறார்" என்று சொன்னதும் "அப்போ நான் வீட்டுக்கு வர்றேன் அண்ணாவை பாத்தே பல வருசம் ஆகிடுச்சு" என்று அவளுடன் இணைந்து நடந்தாள்.
"உனக்கு எத்தனை பசங்க" என்று அமராவதி கேட்க "இதோ இப்பத்தான்" என்று அவள் தன் வயிற்றைத் தொட்டுக் காண்பித்தாள்.
"பன்னிரண்டு வருசத்துக்கு மேல ஆகிடுச்சு இல்ல துர்கா" என்று அவள் சொல்லி பாதியிலே நிறுத்த
"என்ன செய்ய டி.. பர்ஸ்ட் ஒருதடவை தள்ளிப் போய் இருந்தேன் ஆனா எப்படின்னு தெரியலை அது இரண்டு மாசத்துக்கு அப்பறம் கலைஞ்சுடுச்சு. அடுத்து ரொம்ப நாள் கழிச்சு நின்னுச்சு அதுவும் கலைஞ்சுடுச்சு... வைத்தியர் கிட்ட போய் போய் எல்லா மருந்தும் சாப்பிட்டும் ஒன்னும் சரியாகவே இல்லை.
அப்போ தான் அவருக்குத் தெரிஞ்ச பாட்டி ஒருத்தவங்க திருக்கருகாவூர் போய் கரு காத்த நாயகியை கும்பிட்டு வரச் சொன்னாங்க. நாங்களும் அதுபடியே போய் அங்க கோவில் முன்னால இருந்த வாசல்படியை நெய்யால கழுவிவிட்டு அவளை வேண்டுனோம். அங்கிருந்து அவ காலடியில வச்சு மந்திரிச்ச நெய் தந்தாங்க. அதைச் சாப்பிட்டா நாற்பத்தெட்டு நாள்ல கரு தங்கிடும்னு சொன்னாங்க. அதுபடியே இரண்டு பேரும் சாப்பிட்டு வந்தோம். அதே மாதிரி கருவும் தங்கிடுச்சு டி. அவளை வேண்டி கும்பிட்டு வந்த கரு எப்பவும் கலையாதுன்னு அந்த ஊர்ல அசைக்க முடியாத நம்பிக்கை. எனக்கும் நம்பிக்கையா தான் இருக்கு. ஆனா சில நேரத்துல மொத இரண்டு தடவை நடந்த மாதிரி நடந்துடுமோன்னு பயமா இருக்கு" என்று சொன்னவள் "உள்ள வா. அண்ணன் வெளிய போயிடுச்சு போல" என்று சொன்னவள் மாரியப்பன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
"என்னடி இந்த வீட்டுலயா அண்ணன் இருக்காங்க. அந்த வீடு என்னாச்சு" என்றாள் வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தபடி. ஏனோ அவளுக்கு அந்த வீடு இருண்டு போய் கிடப்பதாகவே தோன்றியது.
"மதினி இறந்ததுல இருந்து அங்க அண்ணன் போகாது. குலசாமியும் கும்பிடாது. மதினி இறந்ததுக்கு என்னமோ சாமிதான் காரணம்னு அது நினைச்சுட்டு கோவில் பக்கமே போறது இல்லை. நான் வீட்டுல விளக்கு போட்டாலும் அதுக்கு பிடிக்காது. அதனாலயே இங்க இருந்த குலசாமி படத்தை எல்லாம் எடுத்து போட்டுருச்சு" என்று சொன்னவள் உறங்கிக் கொண்டிருந்த சக்தியை காட்டி.
"இவன்தான்டி என் மருமகன் இந்த குழந்தை பொண்ணா பொறக்கட்டும் இவனுக்குத்தான் என் பொண்ணு" என்று ஆசையோடு அவன் தலையை வருடிவிட்டபடி சொன்னாள் துர்கா.
சாமி கும்பிட மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கா கடவுள் மேல அண்ணனுக்கு கோபம்.. அதுதான் வீடே களையிழந்து இருக்கு போல என்று நினைத்தவள் "சரி துர்கா நான் வர்றேன் நீ எதுவும் நினைக்காத. குழந்தை நல்லபடியா பொறக்கும்" என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அந்த சமயம் அந்த ஊரைத் தாண்டி இருந்த இடத்தில் மூன்று பேர் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கே இருந்த சிறிய வெளிச்சத்தில் அந்த தங்கப்பாண்டியின் முகம் கொடூரமாக தெரிந்தது...
"அந்த குழந்தையை இன்னும் ஏன் அழிக்காம வச்சுருக்க கந்தையா" என்று கோபமாக கேட்டான் தங்கப்பாண்டி.
"பாண்டி அது கருகாத்த அம்மன் வரப்பிரசாதம். இரண்டு தடவை நாம அழிச்ச மாதிரி இதை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது.." என்றான் கந்தையா தயங்கியபடி
"முட்டாள்கள் தான் தன்னால முடிக்க முடியாத விசயத்துக்கு ஏதாவது சாக்கு சொல்லிட்டு இருப்பாங்க" என்று சொல்லும் போது சித்தையா வந்து
"இல்ல பாண்டி கந்தையா சொல்லுறது உண்மைதான் ஒருதடவை நீத்துருவர் அப்படிங்கிற முனிவர் அவர் மனைவி வேதிகையோட வாழ்ந்து வந்துருக்கார். அப்போ அவர் மனைவி கர்ப்பமாக இருந்துருக்காங்க. அந்த சமயத்துல ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து அன்னம் இடச் சொல்லி வாசல்ல நின்றபடி கேட்டுருக்கார். கர்ப்பகால அசதியால படுத்திருந்த வேதிகைக்கு சட்டுன்னு எழுந்து வரமுடியலை. அது புரியாத முனிவரோ கோபத்துல சாபம் விட்டுட்டார். அதனால அவங்களை பெரும்நோய் பிடிச்சு அவங்க கருவுக்கு ஆபத்து வந்துடுச்சு... உடனே வேதிகை அந்த கோவில்ல இருக்க அம்மனையும் முல்லைவனநாதரையும் வணங்கி வேண்டிருக்கா. அதைக் கேட்டு அம்மன் வேதிகை வயித்துல இருந்த கலைந்த கருவை எடுத்து ஒரு பொற்குடத்துல வச்சு உருக் கொடுத்துருக்காங்க. கர்ப்ப காலம் முடிஞ்ச உடனே கரு நைதுருவனாக பிறந்து வேதிகையிடம் வந்துருக்கிறான்.
இதனால சந்தோசப்பட்ட வேதிகை இனி நீ இங்க குழந்தை இல்லாமல் வர்றவங்களோட வேதனையை தீர்த்து வைத்து அவங்களோட கருவை காத்து ரட்சிக்கணும்.. கருகாத்த நாயகியாவே இங்க இருந்து அருள்புரியனும்னு வேண்டிருக்காங்க. அவங்க கேட்டுக்கிட்ட மாதிரியே அம்மனும் அப்படியே தன்னைத் தேடி வந்தவங்களுக்கு அவங்க வேண்டுதலுக்கான வரத்தை தந்துட்டு தான் இருக்கா. அந்த ஊர்லயும் சரி கோவிலுக்கு வந்துட்டு போனவங்களுக்கும் சரி கரு கலைஞ்சதே இல்லை. இது அவங்ககிட்ட இருக்க அசைக்க முடியாத நம்பிக்கை" என்று சொல்ல...
"இங்க என்ன ஆன்மிக சொற்பொழிவா நடக்குது சித்தையா. விட்டா நீயே கோவிலுக்குப் போய் அங்கயே இருந்துடுவ போல. என்னாச்சு உனக்கு. நமக்கு தெய்வ பக்தி... அந்த நம்பிக்கை இதெல்லாம் இருக்கவே கூடாதுன்னு உனக்குத் தெரியுமா தெரியாதா. தெய்வத்துல மேல நம்பிக்கை வந்துச்சுன்னா நம்ம திட்டம் எப்படி நடக்கும். இப்போச் சொல்லுறேன். இந்த மாதிரி எண்ணத்துல இருந்தா இங்க இருந்து இரண்டு பேரும் போய்டுங்க. நானே பாத்துக்கிறேன். அந்த குழந்தையை வயித்துக்குள்ள கலைக்க முடியலைன்னா என்ன பொறந்து வரட்டும் அது கழுத்தை நானே நெறிக்கிறேன்" என்றான் தங்கப்பாண்டி வன்மத்துடன்...
ஒரு குழந்தையை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த கேடுகெட்டவனுக்கு கேடு வருவது எப்போதோ??...
என்னதான் நம்பிக்கை இருந்த போதும் மனதின் மூலையில் இருந்த பயமே துர்காவினை இயல்பாக இருக்க விடாமல் செய்து கொண்டிருந்தது. அதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவ்வப்போது அமராவதியும் அவளுக்கு ஆறுதலாக இருந்து வந்தாள்.
ஒருநாள் அமராவதி தங்கப்பாண்டியிடம் துர்காவின் பயத்தினை பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போதுதான் அவனுக்குள் அந்த யோசனை உதயமானது. இவளை வச்சே அவ வயித்துக்குள்ள இருக்குற கருவுக்கு சமாதி கட்டுறேன் என்று கருவிக் கொண்டவன் அமராவதியிடம் "எனக்குத் தெரிஞ்ச ஒரு சாமியார் இருக்கார். நான் அவர்கிட்ட இதைப் பத்தி பேசி உன் தோழியோட பயத்துக்கு ஒரு முடிவு கட்டுறேன்" என்று சென்று விட்டான்.
சென்றவன் மறுநாள் அவளிடம் "இதுல அவர் கொடுத்த மந்திரிச்ச விபூதி இருக்கு. நீ இதை துர்காவுக்கு பால்ல கலந்து கொடு. குழந்தை நல்லபடியா பிறக்கும்" என்றான் மனதில் படிந்த கயமையுடன்.
அதைப் பற்றி எதுவும் அறியாத அமராவதியும் அதை வாங்கிக் கொண்டு துர்காவினைத் தேடிச் சென்றாள்.
"நீ ரொம்ப பயந்துட்டே இருந்த இல்ல துர்கா. இது என் கணவன் ஒரு சாமியார்கிட்ட சொல்லி மந்திரிச்சு வாங்கிட்டு வந்தார். இதை பால்ல கலந்து குடிச்சா குழந்தை ரொம்ப ஆரோக்கியமா பொறக்குமாம். மனசுல இருக்க பயமும் போயிடும்" என்று சொல்ல அவளும் அதை கலந்து குடித்துவிட்டாள்.
சற்று நேரத்தில் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தவளின் முகம் மாறத் தொடங்கியது. வயிற்றுக்குள் ஏதோ அசௌகரியம் ஏற்பட்டதை அறிந்த துர்கா "அமரா என்னால முடியலை எதோ செய்யுது. குழந்தை.. குழந்தை" என்றவள் கதறத் தொடங்கினாள்.
அமராவதிக்கோ அந்த நிலையில் என்ன செய்ய என்று தெரியவே இல்லை. உடனே அவள் வயிற்றின் மேல் கையை வைக்க அந்த சிசு தன்னை காப்பாற்றிக் கொள்ள முயலுவதை அறிந்து கொண்டவள் பட்டென்று கையை எடுத்துக் கொண்டாள்.
மனம் பயங்கரமாக அதிர்ந்தது இது எப்படி சாத்தியம் என்றவாறு குழம்பி போய் அவள் பார்க்க சன்னல் அருகே இருந்து யாரோ பதுங்கியபடி மறைந்து செல்வது கண்ணில் பட்டது. அது யார் என்றும் அவளுக்கு புரிந்து போனது. அப்படியானல் எல்லாத்துக்கும் காரணம் இவன் தானா என்று நினைத்தவளுக்கு வெறுப்பில் மனம் கசந்தது.
உடனே அமராவதி வேகமாக உள்ளே சென்றாள். சாமியறையில் திருக்கருக்காவூரில் இருந்து வாங்கி வந்து துர்கா வைத்திருந்த கருகாத்த நாயகியின் திருவுறுவப்படம் மட்டும் இருந்தது. அதைப் பார்த்ததும் அங்கேயே அவள் மண்டியிட்டு வேண்டிக் கொண்டாள்.
"என்ன நினைச்சு என் புருசன் இதைப் பண்ணான்னு எனக்குத் தெரியலை. ஆனா நான் நல்ல மனசுல தான் அவளுக்கு கொடுத்தேன். அது உண்மைன்னா இதை தடுத்து நிறுத்தி அந்த குழந்தையோட உயிரை காப்பாத்து. நீ கொடுத்த உயிர் அதை உன்னால மட்டும் தான் காப்பாத்த முடியும். வேணும்னா இந்த தப்பை பண்ண என்னோட உயிரை நான் உனக்கு காணிக்கையா குடுத்துர்றேன். நீ அவளையும் அவ குழந்தையும் காப்பாத்து" என்று அவள் முறையிட அங்கே மேல அந்த சாமியின் படத்தின் முன் இருந்த எலுமிச்சம் பழம் அங்கிருந்து உருண்டு அவள் முன் வந்து நின்றது.
அதை எடுத்தவள் அங்கே நிறை செம்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் அதை பிழிந்து வேகமாக துர்காவிடம் சென்றாள்.
வலியில் துர்கா சுருண்டு ஜீவனற்று படுத்திருந்தாள். விரைந்து அவள் அருகே அமர்ந்தவள் அவள் வாயைத் திறந்து அதிலிருந்த அந்த தண்ணீரை ஊற்றத் தொடங்கினாள். நாவில் நீர் பட்டதும் அவளது வறண்டு போயிருந்த தொண்டையும் தன்னை ஈரப்படுத்த தொடங்கியது. உள்ளே சென்ற அந்த நீர் அப்படியே துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் துடிப்பை சீராக்கி ஆறுதல் செய்யது.
மெதுவாய் களைப்பில் உறங்கிய துர்காவினையே சிறிது நேரம் பார்த்தவளின் முகம் இப்போது சினத்தில் சிவந்து போனது. எவ்வளவு வேண்டுதல் செஞ்சு எவ்வளவு மருந்து சாப்பிட்டு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு என்னென்ன பேச்சு கேட்டு இப்போ குழந்தை உண்டாகிருக்கா இவ. அந்த குழந்தையை என் கையாலே கொல்லப் பாத்துட்டேல்ல. இதை நான் சும்மா விட மாட்டேன் என்ற நினைத்தவள் அதே ஆக்ரோசத்துடன் அங்கிருந்து சென்றாள்.
அவன் சென்ற பாதையை அனுமானித்து அமராவதி நடந்தாள். முடிவில் ஒரு குடிசை வீடு அங்கே இருக்க அங்கிருந்து சிரிப்பு சத்தம் வந்து கொண்டிருந்தது. அருகே சென்று மறைந்தபடி உள்ளே நடப்பவற்றை கேட்கத் தொடங்கினாள்.
"எப்படி இது சாத்தியம்" என்று கந்தையா ஆச்சர்யமாக கேட்க
"அமராவதிகிட்ட அந்த மருந்தை குடுத்து அனுப்பிவிட்டேன். அவளும் அதை அவளுக்கு கொடுத்துட்டா. கொஞ்ச நேரத்துல அவ வலியால துடிச்சா.. அதைப் பார்த்துட்டு தான் நான் இங்க வந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த குழந்தை வயித்துக்குள்ளயே செத்துப் போயிடும்" என்றவனின் முகம் ஒருவித மனநிறைவை பிரதிபலித்தது.
தன் கணவன் கருவில் இருக்கும் குழந்தையை கொல்லத் துடிக்கும் கொடிய அரக்கன் இதை நினைக்கும் போதே அவளது வயிறும் சேர்ந்து பற்றியெறிந்தது.
"ஆனா அந்த குழந்தை.." என்று சந்தேகமாக சித்தையா இழுக்கும் போதே "என்ன இன்னைக்கும் ஏதாவது சாமி கதை சொல்லப் போறயா சித்தையா" என்று அவன் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
பின்னர் அவனே "அந்த குழந்தை எனக்கு எமனா வந்துருக்கு. இல்லைன்னா நான் ஏன் அதைக் கொல்ல போறேன். அவன் இருந்தா என்னோட மந்திர தந்திர வேலைகள் எல்லாம் தடைபடும். அவ்வளவு சக்தி நிறைஞ்ச அந்த குழந்தையை நான் பக்கத்துல வச்சுட்டு எப்படி வேற வேலை செய்ய முடியும். நமக்குத் தேவை அந்த மாரியம்மன் கோவில் அடியில இருக்க அந்த பொருள் தான்... அதை எடுக்க அந்த குழந்தை தடையா இருக்கும். இப்போ அந்த தடையும் இல்லை. இனி என்னோட பொண்ணு பொறந்ததும் நான் அவ மூலமா நினைச்சத அடைஞ்சுடுவேன்" என்றான்.
இதைச் சொல்லும் போது தங்கப்பாண்டியின் முகம் சிவந்து கோரமாக காட்சியளித்தது. அதைப் பார்த்தவளின் கைகள் அனிச்சையாக அவளது வயிற்றை தடவிக் கொண்டது. அவள் பயந்ததைப் போல அவளது குழந்தையும் பயந்து தான் இருந்திருக்கும் போல. உள்ளே அது அசைந்து கொண்டே இருந்தது.
வயிற்றை தடவி ஆறுதல் படுத்திக் கொண்டு அவள் அமைதியாக என்ன நடக்கிறது என்று கிரகிக்க அங்கே இருந்து இப்போது எந்த சத்தமும் வரவில்லை. என்ன என்று அவள் சுற்றிப்பார்க்க தூரத்தில் சிறு வெளிச்சம் கடந்து போவது கண்ணுக்குப் புலப்பட்டது. அப்படின்னா இங்க இருந்து கிளம்பி போய்ட்டாங்களா என்று நினைத்து நிம்மதியுற்றவள் அப்படியே அங்கேயே மடங்கி அமர்ந்தாள்.
உடலும் உள்ளமும் வெகுவாக ஓய்ந்து போயிருந்தது. அன்பு மட்டும் காட்டும் தனது கணவனா இப்படி.. இதை என்னும் போதே உள்ளுக்குள் எரிமலை கனல் போல் கோபம் கணன்று எரிந்தது.
என்னவோ திட்டம் என்று பேசிக் கொண்டிருந்தார்களே அது என்னவாக இருக்கும் என்று நினைத்தவள் தன் முகத்தில் இருந்த வேர்வையை துடைத்துவிட்டு எழுந்து அந்த வீட்டினுள் நுழைந்தாள். இங்கே யார் வரப் போகிறார்கள் என்று கதவை திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் சென்றிருந்தார்கள் அந்த மூவரும். அது அந்த நேரத்தில் அவளுக்கு வசதியாக போய்விட்டது.
இருட்டாக இருந்த அந்த இடத்தில் இருந்து பலவிதமான நாற்றம் வந்து கொண்டிருந்தது. முந்தானையால் மூக்கை மூடியவள் அந்த இடத்தில் இருந்து இன்னும் உள்ளே நடக்கத் தொடங்கினாள்.
இருட்டில் தட்டுத் தடுமாறி அவள் நடந்து வர அங்கே இருந்த மற்றொரு அறையின் உள்ளே இருந்து கசிந்து வந்த ஒளியை கண்டு அந்த கதவினைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.
சின்னதாய் விளக்கு இருந்தது. ஆனால் கதவைத் திறந்ததும் அதன் வெளிச்சம் அந்த அறை முழுவதும் நன்றாக பரவியது. அந்த வெளிச்சத்தில் அந்த சுவற்றில் இருந்த அத்தனை விசயங்களும் அமராவதியின் கண்ணுக்குத் தெளிவாக புலப்பட்டது.
திகிலோடு கண்கள் அந்த சுவற்றையே வட்டமிட்டது. மெதுவாக அதன் அருகில் சென்று பார்க்க பார்க்க அவள் கண்கள் விரிந்தது.
அங்கே சுவற்றில் பலவிதமான உருவங்கள் வரையப் பட்டிருந்தது. அதில் மாரியம்மன் கோவில் மட்டும் பெரியதாக இருந்தது. மற்றபடி வேறு எதுவும் அவளுக்கு சரியாகத் தெரியவில்லை.
கர்ப்பிணி பெண் நிற்கும் உருவம்... குழந்தையோடு மூவர் கோவிலின் முன் நிற்கும் உருவம்.. உள்ளே இருந்து எதையோ எடுத்து வருவது போன்ற உருவம். இப்படி அந்த சுவர் முழுக்க இப்படி படங்களாக வரைந்து வைத்திருக்க அதைக் கண்டவள் நன்றாக உற்று பார்த்து அதைக் கிரகிக்க முற்பட்டாள்.
அப்போது அவள் குழந்தை மீண்டும் வயிற்றுக்குள் அசைய அந்த படம் சொல்ல வந்த சேதியை புரிந்து கொண்டாள். தங்கப்பாண்டி சொன்னது போல இந்த குழந்தையை வச்சு இவங்க போட்ட திட்டத்தைத் தான் இந்த படம் சொல்லுது. இன்னும் கொஞ்சம் உற்று கவனித்தால் அந்த திட்டம் என்னவாக இருக்கும் என்பதை நாம் எளிதாக கணித்துவிடலாம் என்று நினைத்து அந்த இடத்தை நன்றாக அலச தொடங்கினாள். அத்தனை படங்களையும் தனது மூளையில் நன்றாக பதிய வைத்தவள் இன்னும் வேறு ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினாள்.
அந்த விளக்கு இருந்த இடத்தில் ஒரு பெட்டி இருக்க அங்கே வந்த அமராவதி அதை திறந்தாள். வெகுகாலமாக அது பூட்டியிருந்ததால் திறக்க கொஞ்சம் கடினமாக இருந்தது. இருந்தும் முயற்சி செய்து அவள் அதை திறந்து பார்க்க உள்ளே ஒரே ஒரு ஓலை சுவடி இருந்தது. அதை தொட்ட நிமிடத்தில் அவளது நினைவில் சட்டென்று ஆலமரம் வந்து போனது. கண்கள் இருட்டி அந்த இடத்திலே மயங்கிவிழும் அபாயம் இருப்பதாக அவளுக்குத் தோன்ற முயன்று தன்னை நிலை நிறுத்தி அந்த ஓலையை புரட்ட தொடங்கினாள்.
பஞ்சபூதமும் கட்டுப்படும் கோராக்கனியின் கோலுக்கு...
கோல் கோவிலின் உள்ளே...
கைப்பற்ற நினைத்தால் காலனாய் நிற்பாள் மாரி....
இவ்வாறு முதல் ஓலையில் இருக்க அடுத்த ஓலையை நடுங்கும் விரல்களினால் நகர்த்தினாள் அமராவதி.
மாரியைத் தடுக்க கேட்டையில் பிறந்த பெண் வேண்டும் அவள் கைப்பட்டால் கோல் கைவசமாகும்
அதையும் படித்து புரிந்து கொண்டவள் அடுத்த ஓலையை திருப்ப அதில்
துர்கையவளின் குழந்தை துளிர் விட்டால்
துவம்சம் செய்யும் அழித்தால் விதி வசமாகும்
என்றிருக்க அடுத்த ஓலையைத் திருப்பினாள்.
தவறவிட்டால் தவறிப் போகும் உயிர் பலியாகும்
மீண்டும் மீட்க
மூவெட்டு ஆண்டுகள் காத்திருப்பு அவசியம்...
இதைப் படிக்கும் போதே அவளது வயிறு வெகுவாக கணக்கத் தொடங்கியது. இன்னும் என்னென்ன இருக்கிறதோ என்ற பயத்துடனே அவள் அடுத்தடுத்த ஓலையை திருப்பினாள்.
ஆனால் அதில் எதுவுமே இல்லை. சில ஓலைகள் கிழிக்கப்பட்டு இருந்தது. வெறுமையாக இருந்த அந்த ஓலையை இருந்த இடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தாள் அமராவதி.
இதுவரை படித்ததை வைத்துப் பார்க்கையில் கொஞ்சம் அவர்களின் திட்டம் என்னவென்று அவளுக்குப் புரிந்தது.
அதாவது அவங்க அந்த கோல் எடுக்க தடையா இருக்குற துர்கா குழந்தையை கொல்லப் பாக்குறாங்க. அப்பறம் என் பொண்ணை வச்சு அவங்க திட்டத்தை முடிக்கப் பாக்குறாங்க. ஆனா நான் இதை பண்ண விடக் கூடாது. எப்படித் தடுக்குறது என்று யோசித்தவள் அங்கே இன்னும் வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தாள். ஆனால் அதைத் தவிர அவளுக்கு வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.
அப்படியே அவள் வெளியே வர தூரத்தில் அவர்கள் திரும்புவது தெரிந்தது. உடனே அங்கிருந்து அமராவதி வீட்டை நோக்கி சென்றுவிட்டாள்.
எல்லாமே இவனோட திட்டப்படி தான் நடந்துருக்கு. அப்போ என்னையும் அவன் திட்டத்தோட ஒரு பகுதியாக தான் உபயோகப்படுத்தி இருக்கான். என் பின்னாடியே வந்து கல்யாணம் பண்ணது எல்லாம் அவனோட லட்சியத்தை நிறைவேத்திக்கத்தான். இப்போ பெண் குழந்தை பெத்துக்கணும்னு சொன்னது கூட குழந்தை மேல இருந்த பாசத்துல இல்லை அவனுக்கு கிடைக்கப் போற அந்த மந்திர சக்திக்காக. இவனைப் போய் நான் நம்பிட்டேனே... உண்மையை மறைச்சு என்னை கல்யாணம் பண்ணி இவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகத்தை எனக்கு பண்ணிருக்கான். இதே மாதிரி அவனுக்கும் துரோகத்தோட வலின்னா என்னென்னு தெரியணும். எதை அடைய அவன் இதையெல்லாம் பண்ணானோ அது நடக்கவே கூடாது. இதை தடுக்க என்னோட உயிர் போனாலும் பரவாயில்லை. நான் நிச்சயமா தடுத்து நிறுத்துவேன் என்று முடிவு எடுத்தவள் முதலில் துர்காவின் வீட்டிற்கு சென்றாள்.
அவள் இன்னும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க அப்போதுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அப்படியே தன் வீட்டிற்கு வர அங்கே அவளின் இரண்டு பையன்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
"அப்பா வந்துட்டாரா" என்று இருவரையும் பார்த்து அவள் கேட்க இன்னும் இல்லை என்பது தான் பதிலாக கிடைத்தது. "சரி சத்யா நான் மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வர்றேன் அப்பா கேட்டா சொல்லிடு" என்று சொன்னவள் கோவிலை நோக்கி புறப்பட்டாள். செல்லும் அம்மாவை பார்த்த சத்ய ருத்திரனுக்கு அந்த வயதிலே அம்மாவின் முகம் சரியில்லை என்று தோன்றியது.
நடந்து செல்லும் வழியெங்கும்
அவளுக்கு இதை எப்படி தடுக்கலாம் என்ற நினைப்புதான்.
மாரியம்மன் கோவில்.
அங்கே கோபுரம் என்று எதுவும் கிடையாது. சின்னதாக ஒரு பீடம் அதில் ஒரு கல்தூண் விளக்கு ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்தது. கூடவே ஒரு திரிசூலம்.. அவ்வளவுதான். மொத்ததில் அந்த இடம் கவனிக்க ஆள் அற்று அப்படியே சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதிகமாக யாரும் அங்கே வந்து வழிபடுவது இல்லை. இங்கே இருக்கும் வரை அமராவதி எப்போதாவது வெள்ளி அன்று மட்டும் செல்லுவாள்.
இன்று வந்ததன் காரணம் மாரி நிச்சயமாக வழிகாட்டுவாள் என்ற நம்பிக்கையில் தான்.
இந்த இடத்தில எங்கே அந்த கோல் மறைஞ்சு இருக்கும். ஏதோ கோரக்கனியோட கோல் அப்படின்னு வேற போட்டுருந்ததே அது யாரு. அவன் இப்போ எங்க என்று அவளுக்குள் பலவித கேள்விகள் அந்த சமயத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
சற்று முன் யாரோ வந்து சாமி கும்பிட்டு விட்டு சென்றதன் அடையாளமாய் தீபம் எரிந்து கொண்டிருக்க அங்கே நின்றவள் அப்படியே அந்த பீடத்தின் கீழ்படியில் அமர்ந்தாள். "இந்த நேரத்துல உன்னைத் தேடி நான் இந்த நிலைமையில வந்து நிக்கிறேன். எதுக்குன்னு உனக்கே தெரியும். இந்த புள்ளை வந்த பிறகு தான் அதை எடுப்பானுங்களாம்... அதை தடுக்கணும். எனக்கு தனியா என்ன பண்ணனும்னு தெரியலை. நீ தான் ஏதாவது சொல்லணும். வழி காட்டு" என்று அமராவதி சொல்ல சட்டென்று ஏதோ மங்கலான உருவம் அந்த விளக்கின் அருகே இருப்பது போல் தோன்றியது அமராவதிக்கு....
மங்கலாக தெரிந்த அந்த உருவத்தைக் கண்ட அமராவதி திடுக்கிட்டு நிமிர "பயப்படாத மகளே. நீ எதற்காக இங்கே வந்தாயோ அதைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து உனக்கான வழி என்னவென்று சொல்லத்தான் நான் இங்கே வந்தேன். எனக்குத் தெரியும் அவனோட இந்த எண்ணத்தை தடுத்து நிறுத்த ஒருத்தி வந்து நிற்பாளென்று. அதனாலே தான் நான் இந்த கோவிலை விட்டு வெளியே செல்லாம காத்துக் கொண்டு இருக்கிறேன்" என்ற கணீர் குரலில் காரணமேயன்றி அமராவதிக்கு கண்ணீர் வந்தது.
"கண்ணீர் விடுவதற்கான காலம் இது இல்லை மகளே. அவங்களோட எண்ணம் நிறைவேறி விட்டால் இந்த ஊருக்குள் நிறைய மோசமான விளைவுகள் ஏற்படும். அதை தடுத்து நிறுத்த நம்மிடம் இருப்பது கொஞ்ச நேரம் தான். அதற்குள் அவனை தடுத்து நிறுத்தி எந்த வித செயலையும் செய்ய விடாமல் செய்ய வேண்டும்" என்றார் அவர்.
"நடந்ததை எல்லாம் கேள்விப்பட்ட உடனே எனக்கு தோணுன விசயமும் அதுதான் சாமி. இப்போ நான் என்ன பண்ணனும்.. நீங்க யாரு. உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்" என்றாள் அமராவதி.
"அமராவதி நான் ஒரு சித்தர் என்னோட பேர் கோராக்கனி... " என்று சொல்ல "என்ன கோராக்கனியா. அது நீங்களா அப்போ உங்க கோல் தான இங்க புதைஞ்சு இருக்கிறது" என்று அவள் அதிர்ச்சியாக கேட்க
"ஆமா நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த ஓலையில படிச்சயே அதுல இருந்த அந்த கோரக்கனி தான் நான். என்னோட கோல் தான் இங்க புதைஞ்சு இருக்கு. அதை எடுக்கணும்னு தான் உன் புருசனும் அவன் சகாக்களும் சுத்திட்டு இருக்காங்க" என்றார் அவர்.
"சாமி அவங்களை அதை எடுக்க விடக் கூடாது. அதுக்கு நான் என்ன பண்ணனும் சொல்லுங்க கண்டிப்பா என் உயிரை குடுத்தாவது அதை நிறைவேத்திடுவேன்" என்றாள் அவள்.
"உன் உயிர் தேவைப்படும் அமராவதி" என்றார் அந்த சித்தர் பூடகமாக.
அதைக் கேட்டதும் அவளோ வெகு சாதாரணமாக "ரொம்ப சந்தோசம் சாமி. இதை நிச்சயமா நான் மனபூர்வமா ஏத்துக்குவேன்" என்றாள் நிதர்சனம் நிறைந்த குரலில்.
"ஆனா அதுக்கு முன்னாடி நீ செஞ்சு முடிக்க வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கு"
"என்னென்னு சொல்லுங்க சாமி நான் பண்ணுறேன்"
"சொல்லுறேன் ஆனா மொதல்ல அந்த கோலைப் பத்தி நீ தெரிஞ்சுக்கோ. அது சாதாரண கோல் இல்லை. ரொம்பவும் சக்தி வாய்ந்தது. பல நூறு வருடங்களாக நான் கடுமையாக பண்ணிய தவத்தோட பலனை எல்லாம் சேர்த்து தான் அந்த கோலை உருவாக்குனேன். அந்த கோல் பஞ்ச பூதத்தோட சக்தியையும் கட்டுபடுத்துற ஆற்றல் கொண்டது. மக்களுக்கு இது மூலம் நிறைய நன்மை கிடைக்கும்னு தான் இந்த கோலை மண்ணுக்கு அடியில வச்சு இந்த பீடத்தை உருவாக்கினேன். நான் நினைச்ச மாதிரியே மாரியும் இங்க வந்தா. அவளுக்கான ஆதார சக்தி இந்த கோல் மூலமா பஞ்ச பூதங்கள் கிட்ட இருந்துவர ஆரம்பிச்சது. இதனால அவளோட சக்தி இன்னும் அதிகரிச்சது. அந்த காரணத்தால இங்க வர்ற மக்களோட கோரிக்கை சீக்கிரமாகவே நிறைவேற்றப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போனது. அப்போத்தான் அந்த கோலைப் பத்தி கேள்விப்பட்டு ஒருத்தன் அதை அடையணும்னு இங்க வந்தான். அவன்தான் தங்கப்பாண்டியோட கொள்ளுப்பாட்டன் ஏகதண்டன். அவனுக்கு மந்திர தந்திரங்களில் பலம் அதிகம். அதனால அவன் கோலை எப்படியாவது வெளிய எடுத்துடணும்னு என்னென்னவோ பூசை பண்ணான். என்ன பண்ணா எடுக்கலாம் அப்படிங்கிறதை அவன் கண்டும் பிடிச்சுட்டான். கேட்டை நட்சத்திரத்தில பிறந்த பெண் அதுவும் மூணாவது குழந்தையா பிறந்த பெண்ணாலதான் கோலை எடுக்க முடியும் என்ற உண்மை அவனுக்குத் தெரிஞ்சதும் தேடி அலைஞ்சு அவன் அந்த பெண்ணை கண்டுபிடிச்சுட்டான். இப்படி எல்லாமே அவனுக்கு சாதகமா நடக்கப் போகுதுன்னு அவன் நினைச்சு பண்ணிட்டு இருக்கும் போது தான் நான் என்னோட தவ வலிமையால அவனை அழிச்சு அவனோட அஸ்தியையும் சேர்த்து இங்க புதைச்சு வச்சேன். இது நடந்து சிலகாலம் ஆகிடுச்சு. நானும் ஜீவசமாதி ஆகிட்டேன். ஆனால் அதுக்கு முன்னால் ஏகதண்டன் மாதிரி வேற யாரும் வந்து இதை எடுக்க முயற்சி பண்ணக் கூடாதுன்னு நான் நிறைய விதிகள் விதிச்சுருந்தேன். கோலை எடுக்க வர்றவங்களைத் தடுக்க அந்த உலகாளும் அன்னையோட ஆசியில குழந்தை பிறக்கும். அந்த குழந்தை கண்ணு முன்னால இருக்குற வரைக்கும் அந்த கோலை எடுக்கவே முடியாது. அதே மாதிரி குழந்தை பிறந்த உடனே எடுக்க முடியலைன்னா அந்த கோல் எடுக்க இருபத்திநாலு ஆண்டுகள் காத்துட்டு இருக்கணும்" என்று கோரக்கனி சொல்லி முடிக்க
"இதை நான் ஓலையில படிச்சேன் சாமி. ஆனா அடுத்து என்ன பண்ணனும்னு தான் தெரியலை. ஏன்னா அதுல இருந்த மீதி ஓலைகளை காணோம்" என்றாள் அவள்.
"அந்த ஓலைகளைப் படிச்சுட்டு உன் புருசன் அதை யாருக்கும் தெரியாம மறைச்சுட்டான். அவனைப் பத்தி உனக்கு தெரியாது இல்ல. அவனுக்கு நிறைய கருப்பு பக்கங்கள் உண்டு"என்றதும்
"இப்போத்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் சாமி என்றாள் அவள் வேதனையுடன்.
"இது வேதனைப் படுவதற்கான சமயம் இல்லை மகளே. சொல்லுவதை கேள். அந்த ஏகதண்டன் மந்திரவாதி ஏற்கனவே இந்த கோலைப் பத்தி ஓலையில எழுதி ரொம்ப ரகசியமா பாதுகாத்து வச்சுருக்கான். அது தான் இப்போ தலைமுறை கடந்து தங்கப்பாண்டிக்கு கிடைச்சுருக்கு. அதைப் படிச்சு பார்த்தும் அவனுக்குள்ளயும் இந்த கோலை அடைஞ்சே ஆகணும்னு வெறி வந்துடுச்சு. அதுக்காக அவன் நிறைய மாந்திரீகம் பண்ணி உன்னை தேர்ந்தெடுத்தான். உன்னால தான் கேட்டை நட்சத்திரத்தில பிறக்கப் போற குழந்தையை பெத்து தரமுடியும். அவன் நெனச்ச மாதிரி எல்லாமே நடந்துச்சு. கூடவே அவன் நினைக்காத ஒரு விஷயமும் நடந்தது அதுதான் உன் தோழி துர்கா குழந்தை உண்டானது. எது நடந்தா இந்தக் கோல கைப்பற்ற முடியாது என்று அவன் நெனச்சுட்டு இருந்தானோ அதுவே நடந்து போச்சு. அது நடக்கவே கூடாது அப்படின்னு தான் ஏற்கனவே உருவான ரெண்டு கருவ அவன் அழிச்சுட்டான். ஆனா இந்த தடவை கரு அந்த லோகமாதா அருளாள உண்டானது. அதை அவனால அழிக்க முடியலை. அதுக்காக உன் மூலமா அந்த குழந்தையை கொல்லப் பார்த்தான். இந்த குழந்தை நல்லா இருக்குன்னு தெரிஞ்சா பிறந்த உடனே எப்படியும் அழிக்கனும்னு துடிப்பான்" என்று அவர் சொல்ல அவள் கண்ணீர் வழியும் விழிகளுடன் ஏறிட்டாள்.
"இல்ல சாமி அந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. என் புருசன் செஞ்ச பாவத்துக்கு எல்லாம் தண்டனை கிடைக்கணும்"
"நான் சொல்லுற மாதிரி பண்ணு அமராவதி" என்று சொன்னவர் அவளிடம் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.
கேட்டு முடித்தவளின் அமைதி வித்தியாசமாக இருக்க "என்ன மகளே மரணத்தை நினைத்து பயம் வருகிறதா" என்றார் அவர்.
"இல்லை சாமி என் பசங்க பொண்ணை நினைச்சேன்" என்று அவள் வருந்த வருத்தப்படாதே எல்லாம் நல்லபடியாவே நடக்கும் என்றதும் அவள் நெற்றி சட்டென்று சில்லென்று ஆனது. கோரக்கனி சித்தரின் விரல்கள் அவள் நெற்றியில் படிந்திருந்த அந்த தருணத்தில் அவள் உணர்வுகள் எல்லாம் அடங்கி அமைதியாக இருந்தது.
என்ன நடந்தாலும் அவர் சொன்னதை சரியாக செய்து முடித்துவிடுவோம் என்று அவளுக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
"போ மகளே.. என்ன நடந்தாலும் துணையாக அந்த தாய் இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதே" என்று சொன்ன சித்தர் அங்கிருந்து மறைந்துவிட்டார்.
எழுந்தவள் வெளியே வர அந்த நேரத்தில் தங்கப்பாண்டி வந்துவிட்டான்.
"அமராவதி என்ன இந்த நேரத்துல கோவிலுக்கு" என்று அவன் பதட்டத்துடன் கேட்க அவளுக்கே அந்த பதட்டம் எதனால் என்று புரிந்து போனது. இருந்தாலும் இப்போது எதுவும் பேசக் கூடாது என்பதால் "மனசு ஒரு மாதிரி இருந்தது அதுதான் கோவிலுக்கு வந்தேன்ங்க" என்றாள் அமராவதி.
"சரி சரி வா போகலாம் இந்த மாதிரி நிலைமையில இருட்டு நேரத்துல வெளிய வரலாமா" என்று திட்டியவன் அவள் கையைப்பிடித்து அழைத்துச் சென்றான். அவனுடன் வருவது அவளுக்கு பயங்கரமான வெறுப்பை தந்தாலும் அவன் தன்னை சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்பதாலே அமைதியாக வந்தாள்.
அவன் மெதுவாக "துர்காவுக்கு நான் கொடுத்த மருந்தை குடுத்தயா" என்று ஆர்வத்துடன் கேட்டான். அதைக் கேட்டதும் அவளுக்கு வயிற்றில் பரவிய உஷ்ணம் தொண்டை வரை ஏறியது. ஆனால் மிகுந்த பிரயத்தனப்பட்டு அடக்கியவள்
"குடுத்தேன் ஆனா அவளுக்கு ரொம்ப வலி வந்துடுச்சு" என்றாள் பாவமாக.
"அய்யோ அப்பறம் என்னாச்சு" என்று அவன் போலியான பதற்றத்துடன் வினவ "சரியாகிடுச்சுங்க அவ நல்லா தூங்க ஆரம்பிச்சுட்டா. உண்மையிலே உங்களை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு. உங்க மனசு யாருக்கு வராது. இப்பவும் கூட அவளை பத்தியும் அவ குழந்தையைப் பத்தியும் அக்கறையா விசாரிக்கிறீங்க பாருங்க. அங்க நிக்குறீங்க நீங்க" என்று அவள் சொல்ல அவன் முகம் மாறியது.
"என்னங்க என்ன இப்படி முழிக்கிறீங்க" பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கேட்க
"இல்லை அமராவதி ஒன்னும் இல்லை. துர்கா நல்லா இருந்தா எனக்கு சந்தோசம் தான். சரி வீட்டுக்குள்ள போ நான் வெளிய போயிட்டு வந்துடுறேன்" என்றவன் கிளம்பிவிட அவனையேப் பார்த்தவளின் முகம் உணர்வற்று இருந்தது.
போ இனி நீ இப்படித்தான் நிம்மதி இல்லாம தான் இருக்க வேண்டி இருக்கும் என்று உள்ளுக்குள் நினைத்தபடி நின்றிருந்தாள் அமராவதி.
அங்கே சென்றவனோ கடுங்கோபத்தில் இருந்தான். எப்படி நடந்தது இது.. அந்த குழந்தை இன்னேரம் செத்துருக்கும்னு நினைச்சேன் ஆனா அது எப்படி இன்னும் உயிரோட இருக்கு... என்று அவன் புலம்புவதைக் கேட்ட சித்தையா "அதான் நான் அப்பவே சொன்னேன்" என்று சொல்வதற்குள் அவனைத் தடுத்து நிறுத்திய தங்கப்பாண்டி "போதும் நானே கடுப்பில இருக்கேன். வேறு ஏதாவது உருப்படியான திட்டம் இருந்தா அதை மட்டும் சொல்லுங்க" என்றான்.
"இல்லை பாண்டி அந்த குழந்தையை நாமளும் அழிக்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம். ஆனா முடியலை. மொத வயித்துக்குள்ள இருந்து வெளிய வரட்டும் அதுக்கப்பறம் பாத்துக்கலாம். பிறந்த மறு நிமிடம் நாம நம்மளோட மந்திர தந்திரத்தால உருவான ஏவலை அனுப்பி அந்த குழந்தையை இங்க தூக்கிட்டு வந்துடலாம்" என்றான் சித்தையா.
"என்ன சொல்லுற சித்தையா"
"ஆமா அந்த குழந்தை வெளி வந்துட்டா அதை நம்ம கண்காணிப்புல கொண்டு வந்து என்ன பண்ணனும்னு நினைக்கிறோமோ அதை சிறப்பா பண்ணிடலாம்" என்றான் சித்தையா.
"இப்போத்தான் சித்தையா நீ நல்ல வார்த்தை பேசிருக்க" என்றதும் அந்த மூவரும் சேர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு அதை செய்து முடிக்க வேண்டிய தருணத்திற்காக காத்திருக்கத் தொடங்கினார்கள்...
நாட்கள் வேகமாக நகர ஆரம்பிக்க அன்று சக்தி வெகுநேரம் அழுது கொண்டே இருந்தான். அதைக் கண்ட மாரியப்பன் அவனை சமாதானப்படுத்தி உறங்க வைக்க முயல அவனோ உறங்காமல் அழுது கொண்டே இருந்தான். அம்மா அம்மா என்று அவன் கதற கதற மாரியப்பனுக்கும் வேலம்மாவின் நினைவு தான். அவளை நினைத்ததும் தன் கண்ணீரை துடைத்து எறிந்தவர்
"உங்க அம்மா தான் நம்மள எல்லாம் விட்டுட்டு போயிட்டாளே. அழாத சக்தி. நானும் உங்க அம்மா நம்ம கூடவே இருப்பா அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா அந்த கடவுள் ஏமாத்தி உங்க அம்மாவை நம்மகிட்ட இருந்து பிரிச்சுட்டு போயிட்டானே. நான் எவ்வளவு நம்புனேன். என் நம்பிக்கையை உடைச்சு இப்படி என்னை நட்டாத்துல இறக்கிவிட்டு போன அந்த கடவுளை நினைக்கும் போதே எனக்கு வெறுப்பு தான் வருது" என்கையிலே "அப்படி சொல்லாதீங்க அண்ணா" என்றபடி வந்தாள் அமராவதி.
அவளின் பேச்சில் கவனம் கலைந்த மாரியப்பன் "சொல்லாம இருக்க முடியலையே ம்மா. என்னோட இழப்பு எனக்கு எவ்வளவு வலி தரும்னு எனக்கு மட்டும் தான் தெரியும். மத்தவங்களால அதை புரிஞ்சுக்க முடியாது ம்மா. என்னதான் ஆறுதலா பேசுனாலும் அம்மா இல்லாம இவனை வளக்குற வேதனை உனக்கு புரியாது" என்று சொல்ல
"எனக்குப் புரியுது அண்ணா. வேதனை எல்லாருக்கும் இருக்குறது தான் ஆனா அதுக்காக நம்ம குலத்தை காக்குற சாமிய வேணாம்னு சொல்லுறது எல்லாம் நியாயமே இல்லை அண்ணா" என்றாள் அவள்.
"குலத்தை காக்குற சாமின்னு தான நான் நினைச்சேன் ஆனா அவன் என் குலத்தோட ஆணிவேரையே புடுங்கி எறிஞ்சுட்டானே. அப்பறம் எப்படி ம்மா" என்றவனின் குரல் இப்போது வழக்கத்திற்கு மாறாக ஒலிக்க ஆரம்பித்தது.
"இந்த இடத்துல என் குலசாமியே வந்து சொன்னாலும் நான் கும்பிட மாட்டேன்" என்று அவன் சொல்ல
"இந்த வீம்பு உங்களுக்கு தான் விநாசத்தை கண்டு வரப் போகுது அண்ணா. நான் சொல்லுறதை சொல்லிட்டேன். இதுக்கு மேல உங்க இஷ்டம்" என்று சொன்னவள் திரும்ப பின்னாலே துர்காவும் நின்றிருந்தாள். அவள் வேகமாக "அண்ணா அப்படித்தான் டி அமரா. நானும் எவ்வளவோ சொல்லிட்டேன் ஆனா அது கேக்கவே இல்லை. நீ தப்பா நினைச்சுக்காத" என்றாள்.
"நான் நினைக்க ஒன்னுமே இல்லை துர்கா. நான் வர்றேன்" என்று அவள் கிளம்பி படியில் கால்வைக்க அந்த நேரத்தில் ஆ என்ற அலறலுடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவள் அமர்ந்து விட்டாள்...
அவளைத் தாங்கிப் பிடிக்க துர்கா வேகமாக செல்ல அருகே இருந்த நாற்காலியின் கால் அவளை இடறியதில் அப்படியே நிலை தடுமாறி விழுந்து வயிற்றில் நாற்காலியின் முனை இடித்துவிட துர்கா அதைவிட அதிகமான வலியில் துடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அவளின் வலியை கண்டு அமராவதியின் இதழ்கள் அந்த நிலையிலும் புன்சிரிப்பை ஏந்திக் கொண்டது.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.