Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

Status
Not open for further replies.

பெத்தனசுதா

Member
Vannangal Writer
Messages
42
Reaction score
72
Points
18
அகலில் அமிழ்ந்த ஆன்மா - நிறைவுப் பகுதி

அதுவரை கீழே விழுந்து கிடந்த சக்தி கண்களைத் திறந்து எழுந்து நின்றான். விழிகள் வழியே குரோதம் கொடூரமாய் வழிந்து கொண்டிருந்தது. வரம்பன் மீண்டும் தன் கையில் இருந்த கட்டையினால் தாக்க முயற்சி செய்ய சக்தி அதை லாவகமாக தடுத்து அவன் கழுத்தைப் பிடித்து தூக்கியிருந்தான்.


"என் அகல்யாவையே அடிக்கத் துணிச்சுட்டயே.. உன்ன விடமாட்டேன் டா" என்று ரௌத்திரத்துடன் பேசியவனின் சீற்றம் கண்டு அந்த இடமே ஒரு நிமிடம் மயான அமைதியில் நிறைந்திருந்தது.



அருகில் இருந்த தூணைப் பிடித்துக் கொண்டு தள்ளாடிக் கொண்டிருந்தவளை ரத்னா சென்று தாங்கிக் கொண்டான். தாங்கிக் கொண்டவனின் விழிகள் மட்டும் சக்தியை விட்டு விலகவே இல்லை. மனதில் எழுந்த நம்பிக்கையுடன் அவன் இனி நடக்கப் போவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.


அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்த வரம்பனின் கால்களும் கைகளும் சக்தியிடம் விட்டுவிடும் படி கெஞ்ச தொடங்கியது. தங்கப்பாண்டியோ சக்தியின் கரங்களுக்கு இடையே அந்த மந்திரக் கோலைக் கொண்டு வந்து நிறுத்தினான். கூடவே "கையை எடு" என்ற ஆணவக் குரல் வேறு அவனிடத்தில் இருந்து வெளிப்பட்டது.


சக்தியின் சிவந்த முகம் தங்கப்பாண்டியின் பக்கம் திரும்ப அதில் ஒரு நிமிடம் பயந்தாலும் மந்திரக் கோல் இருக்கும் தைரியத்தில் அவன் சற்று தைரியமாகவே இருந்தான்.


"என் பையன் மேல இருந்து கையை எடு இல்லைன்னா அவ்வளவுதான்" என்று அவன் சொல்ல உன்னால என்ன பண்ண முடியும் என்பதைப் போல சக்தி அர்த்தம் நிறைந்த பார்வையை அவன் மேல் வீசினான்.


"இப்படிப் பார்த்தா நான் பயப்பட மாட்டேன். என் கையில் இருக்குற கோலைப் பாத்தயா. அது என்கிட்ட இருக்குற வரைக்கும் யாராலும் என்னை எதிர்க்க முடியாது" என்று அவன் இறுமாப்புடன் சொல்ல அதைக் கேட்டவனது இதழ்கள் அழகான சிரிப்பை உதிர்த்தது.


"இறுமாப்புடன் பேசியவர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து தான் போயிருக்கிறார்கள். அதனால் என்னை எதிர்ப்பதை விட்டுவிட்டால் ஏமாற்றம் என்பது உனக்கில்லை" என்று சக்தி சொல்ல "எனக்கு ஏமாற்றமா...ஹா ஹா" என்று சிரிக்கத் தொடங்கினான் பாண்டி.


அப்போது வரம்பனை விடுவித்துவிட்டு மறுபடியும் அர்த்தம் நிறைந்த பார்வையை தங்கப்பாண்டியிடம் வீசினான் சக்தி.


அவனோ அந்த பார்வையினைக் கண்டுகொள்ளாது "கோல் என் கையில் இருப்பதால் இந்த புவனமே எனக்குத்தான் சொந்தம். அதனால் என்னை எதிர்க்க இங்கு எவனும் இல்லை. ஏன் உன் தெய்வம் அந்த ஐயன் இங்கு வந்தால் கூட என்னைத் தடுத்து நிறுத்த இயலாது" என்றதும்


"ஒருவேளை கோல் உன் கையில் இருப்பதால் இது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் கூடவே உனது ஆணவம் அகம்பாவம் வேறு உன்னிடம் இருக்கிறதே. அது போதுமே.. உன்னை இருந்த இடம் தெரியாம அழிப்பதற்கு" என்று சக்தி பொறுமையாக சொல்ல மீண்டும் இடியென சிரிக்கத் தொடங்கினான் அவன்.


ரத்னாவோ "இவன்கிட்ட போய் எதுக்கு வீணாய் பேசிகிட்டு மச்சி.. முடிச்சுடுவிடு" என்று சொல்ல "முடிச்சுரலாம் டா" என்று சொன்னதும் பாண்டி தன் சிரிப்பை நிறுத்திவிட்டு "என்னை அழிக்கணும்னு நீங்க நினைச்சா மட்டும் போதாது. நான் அழியணும்னா அதுக்கு வேற வழி ஒன்னு இருக்கு. அது இப்போதைக்கு அடைப்பட்டு கிடக்கு. உங்களால அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. என்னை கொல்லவும் முடியாது. ஒழுங்கா நீங்க திரும்பி போயிட்டா யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை" என்று சொன்னவனின் செருக்கு நிறைந்த பேச்சைக் கேட்ட சக்தி சத்யனைப் பார்க்க அவனோ அநியாயத்திற்கு அழகாய் புன்னகை செய்தான்.


இருவரின் சைகையை கவனிக்காத தங்கப்பாண்டியோ இன்னும் அவர்கள் அங்கயே இருப்பதைக் கண்டு அந்த கோலைச் சுழற்றிக் கொண்டே "போகமாட்டீங்களா இப்பவே உங்க எல்லாரையும் ஓட ஓட பரலோகத்துக்கு விரட்டுறேன் பாரு. அப்போத் தெரியும் நான் யாருன்னு" என்றான் மூர்க்கமாக.



சொல்லி முடித்தவன் அந்த கோலை கையில் வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு தன் வாயைத் திறந்து எதையோ சொல்லத் தொடங்கினான்.



அப்போது பார்த்து "அப்பா" என்று வரம்பனின் கதறல் தங்கப்பாண்டியின் காதுக்குள் பயங்கரமாக ஒலிக்கத் தொடங்கியது. அதைக் கேட்டதும் கண்ணைத் திறந்தவனுக்கு எதிரே வரம்பன் கழுத்தில் வீச்சரிவாள் வைத்தபடி சக்தி நிற்கும் காட்சியே தெரிந்தது.



"வேண்டாம் வேண்டாம் என்னோட பையனை விட்டுடு" என்று அவன் திடுக்கிடலுடன் சொல்ல "அப்போ அந்த கோலை மாதவன் கிட்ட குடுத்துடு" என்றான் சக்தி.



"அப்பா வேண்டாம் வேண்டாம். என்னோட உயிர் போனாலும் பரவாயில்லை. கோல் இருந்தா எல்லாமே வசமாகும். அதனால அதை எடுத்துட்டு நீங்க நம்ம இடத்துக்கு போங்க" என்று வரம்பன் சொல்ல "வரம்பா இந்த கோலை விட நீதான டா எனக்கு முக்கியம்" என்றான் பாண்டி.



"அப்பா பித்து பிடிச்சவங்களாட்டம் உளராதீங்க. மொத கிளம்புங்க" என்று வரம்பன் சொல்ல அவனைப் பேச விடாதபடி கழுத்தில் அரிவாளை வைத்து இன்னும் அழுத்தினான் சக்தி.


அந்த நேரத்தில் மந்திரக் கோலை மாதவன் கரத்தில் தருவதற்காக நகர்ந்தவன் கந்தையாவினை பார்க்க அவனோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் பார்த்துவிட்டு அங்கிருந்து மெதுவாக நகர்ந்தான்.


"ரத்னா ஏதோ நடக்கப் போகுது டா சக்தியை பத்திரமா பாத்துக்கோ" என்று அகல்யா சொல்லிக் கொண்டிருக்கையிலே அவளது கரத்தைப் பற்றி இழுத்தான் கந்தையா.


"ஏய் விடு டா" என்று சொல்லியபடி ரத்னா தடுக்க அங்கோ மாதவனை நோக்கி வந்த பாண்டி அவனை அந்த கோலை கொண்டு தலையில் தட்ட அப்படியே சிலை போல் நின்றுவிட்டான் அவன்.


ரத்னா கந்தையாவை தடுக்க அவன் கரத்தினை பிடித்து இழுத்துச் சென்ற சித்தையா மூலையில் இருந்த அந்த தண்ணீர் தொட்டியில் ரத்னாவைப் போட்டு அமுக்கி எடுக்கத் தொடங்கினான். மூக்கில் எல்லாம் நீர் புகுந்து அவன் இருமத் தொடங்க அங்கே நடக்கும் போராட்டத்தைப் பார்த்து வரம்பனின் கழுத்தில் வைத்திருந்த அருவாளை எடுத்தான் சக்தி. அதே நேரத்தில் சக்தி என்று மெல்லிய குரலில் முணங்கியவளின் குரலைக் கேட்டவனின் தேகம் மொத்தமும் பதறத் தொடங்கியது. உடனே கையில் இருந்த அரிவாளை அவன் கீழே போட்டு விட்டான்.



அதைக் கண்ட தங்கப்பாண்டி "என்ன எனதருமை மாப்பிள்ளை அவ்வளவுதானா உங்களது வீரம். நான் கூட உங்கள ரொம்ப பெரிய ஆளுன்னு நினைச்சிருந்தேனே இப்படி என்னை ஏமாத்திட்டீங்களே. இது நல்லாவே இல்லையே மாப்பிள்ளை" என்றதும் அவன் காலடியில் இருந்த மாய வரம்பன் எழுந்து நின்றான்.


"அப்பா இந்த நாலுபேரையும் கொண்ணுட்டு நாம உடனே இங்க இருந்து கிளம்பலாம்" என்று சொல்லியவன் சக்தியின் கரத்தில் இருந்து வந்து விழுந்து கிடந்த அந்த வெட்டருவாளை எடுத்தபடி வீராவேசமாக பேச அவனருகே வந்த சத்யன் "வேண்டாம் மாயா. நான் சொல்லுறத கேளு அப்பாதான் அப்படி நடந்துக்கிறாரு. நீயாவது இதைவிட்டுட்டு வெளியே வந்துடு டா அண்ணன் நான் சொல்லுறேன்ல" என்று சொல்ல


"உங்களால எங்களை அழிக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் பேசி எங்களை வழிக்கு கொண்டு வந்துடலாம்னு இப்படி பண்ணுறயா. ச்சே தள்ளிப் போடா" என்றான் மாய வரம்பன்.



ரத்னா இன்னும் சிறிது நேரத்தில் உயிரையே விட்டு விடுவான் போல அந்த மாதிரியான நிலையில் என்ன செய்வது என்று சக்தி புரியாமல் நிற்க மாதவனோ உண்மையாகவே சிலையென நின்றிருந்தான்.



சக்திக்கு மதியை உபயோகப்படுத்த வேண்டும் என்று சொன்னது மறந்தே போனது. கூடவே தன்னைக் காக்க ஐயன் தன்னுடனே இருக்கிறான் என்ன எண்ணமும் சுத்தமாக இல்லை. இப்போது அவன் நினைவில் ஆக்ரமித்து இருந்தது எல்லாம் வேதனையுடன் இரத்தம் வழிய நின்றிருந்த அவளின் முகம் மட்டும் தான். அதனாலயே அவன் மூளை மழுங்கிப் போய் இருந்தது.



அந்த நேரத்தில் தான் பாண்டி சத்யனை நோக்கி அந்த மந்திரக் கோலை நீட்டினான். சட்டென்று அந்த கோலில் முனை எரிமலையின் வாய் போல் சிவக்கத் தொடங்கியது. என்ன நேரப் போகிறது என்று சத்யன் அனுமானித்துவிட்டான். அப்போது பாண்டி "நீ என்னோட பையன் அப்படிங்கிறதால உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு தர்றேன். நீ என்கூட வந்துடு" என்று சொல்ல மாட்டேன் என்பது போல் அவன் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினான்.



அவனின் மறுப்பு பாண்டிக்கு அதீத கோபத்தைக் கிளப்ப உடனே அந்த மந்திரக் கோலை நீட்டி "இங்கிருக்கும் எதிரிகள் இந்த ஐந்து பேரையும் இதிலிருந்து வரும் நெருப்பு சுட்டு சாம்பலாக்கட்டும்" என்று கட்டளையிட அந்த முனை இன்னும் சிவந்து நெருப்பினை உமிழத் தொடங்கியது.



அப்போதும் அதைக் கண்டு சத்யன் சின்னச் சிரிப்புடனே நகராமல் நிற்க அதைக் கண்ட பாண்டி "சாகுறதுக்கு உனக்கு அவ்வளவு சந்தோசமா" என்றான்.



"யார் சாகப் போறாங்க அப்படின்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுடும் அப்பா" என்று சொன்னவனையே உறுத்துப் பார்த்தான் தங்கப்பாண்டி.



அந்த நேரத்தில் அவன் தன் இடையில் கைவிட்டு அந்த சிவப்பு நிற துணி முடிச்சினை எடுத்தான். அதைக் கண்டதும் பாண்டியின் கண்கள் மட்டும் அல்ல வரம்பன் கந்தையா சித்தையாவின் கண்களும் திகிலை பிரதிபலித்தது.



"இது இது" என்று பாண்டி திக்கித் திணற வரம்பனோ "அப்பா இவன் பொய் சொல்லி நம்மளை திசை திருப்பப் பாக்குறான். உங்ககிட்ட இருக்குற மாதிரி இவன் ஒன்னு வச்சு நம்மளை ஏமாத்துறான்" என்றான்.



"பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை தம்பி. இந்த தாலி தான் இப்போ எங்க எல்லாருக்கும் வேலி. அதை உங்க கையில அவ்வளவு எளிதாக நாங்க கிடைக்க விட்டுடுவோமா என்ன? நீங்க கொஞ்சம் யோசித்து பாத்துருக்கலாம். எங்க.. நீங்கதான் போலிக்கும் அசலுக்கும் வித்தியாசம் தெரியாமல் எடுத்துட்டு வந்து எல்லாமே நமக்கு சாதகமா இருக்குன்னு நினைச்சுட்டு இருக்கீங்களே. என்னைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போனோமோ அன்னைக்கே அந்த இடத்துல இருந்த அம்மாவோட தாலியை எடுத்து ரத்னா வீட்டுல நான் வச்சுட்டேன். அது தெரியாம நீங்க என்னோட இடத்துக்கே போய் அங்க இருந்த வேற தாலியை எடுத்துட்டு போயிட்டீங்க. இப்போ உங்க உயிர் எங்க கையில தான.." என்றதும் பாண்டிக்கு சட்டென்று அந்த பழைய வேதனை கண் முன் வந்து போனது.



அவன் முகத்தில் படிந்த வேதனையின் சாயலைக் கண்டவன் "என்னதான் கோல் உங்க கையில இருந்தாலும் இதுல இருந்து உங்களால தப்பிக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்" என்று சொல்லும் போதே அந்த நெருப்பு சத்யன் கையில் வைத்திருந்த அந்த சிவப்பு நிறத் துணியினை தீண்டத் தொடங்கியிருந்தது.



அதைக் கண்டதும் தங்கப்பாண்டி தன் கையில் இருந்த கோலினைத் தவறவிட்டு அந்த சிவப்பு நிற துணியினை நோக்கி வந்தான். அதற்குள் அந்த துணியும் நன்றாக பற்றியெரிய அவன் மேனியும் எரியத் தொடங்கியது. இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அடைந்த அதே வேதனை மறுபடியும் அவனை ஆட்டிபடைக்க அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. "வரம்பா காப்பாத்துடா காப்பாத்துடா" என்று அவன் கதற சித்தையா ரத்னாவை விடுவித்துவிட்டு அங்கிருந்து ஓடி வந்தான்.



கந்தையாவும் அகல்யாவை விட்டுவிட்டு அவனை நோக்கி ஓடி வர "வரம்பா அந்த கோலை எடுத்து அப்பாவை காப்பாத்து டா" என்று சித்தையா சொல்ல அதற்ககு முன் அகல்யா தடுமாறி அந்த கோலினை நோக்கி ஓடிவந்தாள்



அதற்குள் கோலை எடுத்த வரம்பன் அவளின் வயிற்றிலே ஓங்கித் தாக்க முற்பட அவளுக்கு இடையே வந்து நின்றான் சக்தி... அது சமயம் அவனது வயிற்றில் ஓங்கி விழுந்த அடியினால் அவன் சுருண்டு விழ சக்தி என்று கத்தியவளது கதறல் காடு மலை தாண்டி காத்து நிற்கும் காவல் தெய்வத்தின் காதுகளை அடைந்தது.



ஏற்றி வைத்திருந்து தீபத்தின் வெளிச்சம் மங்குவதைக் கண்டு மாரியப்பன் மனதுக்குள் அச்சம் குமிழிடத் தொடங்கியது. தனது தெய்வத்தை அவன் மானசீகமாக நினைத்துக் கொண்டு "இந்த உலகத்துக்கே நல்லது செய்யணும்னு நினைச்சுட்டு போயிருக்கானுங்க என் பசங்க எல்லாரும். அவங்களுக்கு காவலா இருந்து காப்பாத்தி தருவேன்னு நீதான் வாக்கு குடுத்துருக்க. அதனால அதை நிறைவேத்தி வச்சுடு. அதுக்கு காணிக்கையா என்னோட உயிரைக் கூட எடுத்துக்கோ" என்று அவர் சொல்ல அந்த இடத்தில் ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியும் அதனோடு இணைந்த புரவியின் கணைக்கும் சத்தமும் கேட்கத் தொடங்கியது. சட்டென்று வீட்டினுள் சாம்பிராணி வாசம் பரவ அதை உணர்ந்த மாரியப்பனின் மனம் மிகுந்த தெம்பை பெற்றிருந்தது என்பதே உண்மை.



வரம்பனோ வெறி பிடித்தவன் போல சக்தியை இன்னும் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கியிருந்தான். அந்த இடமே குருதி படிந்து சகதியாய் மாறியிருந்தது. சக்தியின் தேகத்தில் இருந்து வடிந்த இரத்தத்தைக் கண்ட அகல்யா மூர்ச்சையாகி கீழே விழுந்துவிட்டாள்.



பாண்டியின் கதறலுக்கு பழிக்கு பழி வாங்குபவனாய் அவன் நடந்துகொள்ள சத்யனோ இருந்த நிலையில் இருந்து மாறாமல் அப்படியே நின்றிருந்தான். சக்தியின் உதடு கிழித்து உதிரம் இன்னும் அதிகமாக வெளியேற அதனைக் கண்டு கண்ணீர் வந்த போதும் சத்யன் அமைதியாக இருந்தான். இப்போது அவசரப்பட்டால் காரியம் அனைத்தும் கெட்டுவிடும் அபாயம் இருப்பது அவனுக்கு நன்றாக புரிந்ததால் அமைதியாகவே இருந்தான். நெருப்பு இன்னும் அதிகமான ஆவேசத்துடன் அந்த துணி முழுவதும் பற்றியெறிய சத்யன் மேனியிலும் தீயின் நாக்குகள் தனது அடையாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்யத் தொடங்கியது. வேதனை வாட்டிய போதும் அவன் இதயம் சக்தியைத்தான் நினைத்து கலங்கியது.



இம்முறை இன்னும் அதிக வேகத்துடன் வரம்பன் ஓங்கிய கோலினை சக்தியின் கரங்கள் தாங்கிப் பிடித்தது. பிடித்தவனின் கண்களை உற்றுப் பார்த்த வரம்பன் ஒரு நொடி ஆடியே போய்விட்டான். அவன் கண்கள் நெருப்பில் வாட்டிய கங்குகளைப் போல் தகதகவென மின்னிக் கொண்டிருந்தது.



அந்த மாற்றம் ஏற்பட்ட மாத்திரத்தில் கோவில் அருகே ஜல் ஜல் என சலங்கை ஒலி சத்தமாக கேட்டது. வேதனைப்பட்டுக் கிடந்த சத்யனின் விழிகள் நிம்மதியில் விகசிக்க வரம்பனின் செவிகளோ அந்த ஒலியை கேட்டு கோபத்தில் கொந்தளித்தது.



மீண்டும் அவனிடம் இருந்து கோலை இழுக்க சக்தி தன் பிடியை விட்டுவிட அது அப்படியே பறந்து மாதவனின் தலையில் பட்டு அவன் காலடியில் விழுந்தது. அதில் சிலையென நின்றிருந்தவன் உயிர்ப்பெற்று எழ வரம்பன் நடந்ததைக் கண்டு சக்தியின் கழுத்தைப் பிடித்தான்.



"எல்லாத்தையும் நாசமாக்கிட்டயே விடமாட்டேன்" என்று வரம்பன் கத்த அவனோ "உன்கிட்ட இருந்து நாசமா போகப் போகிற இந்த உலகத்தைக் காப்பாத்த வந்துருக்கேன் டா" என்று சொல்லியபடி அவனது கரத்தை பிடித்து முறுக்கி அவனை கீழே தள்ளிவிட சக்தியின் காலிலே விழுந்த வரம்பனுக்கு அவன் காலில் இருத்த சலங்கை தெரிந்தது.



அவன் இதழ்கள் மெதுவாக "ஐயனாரப்பனா" என்று முணுமுணுக்க "நானே தான்" என்பது போல் அவன் நெஞ்சில் தன் பாதத்தை வைத்து ஓங்கி அழுத்தத் தொடங்கினான்.



கந்தையாவும் சித்தையாவும் நடப்பவைகளை கண்ணுற்று தங்களின் உயிரைக் காப்பாற்ற முதலில் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று ஓடத் தொடங்கினார்கள். கோவிலை விட்டு ஓடியவர்களின் முன்னால் வந்து நின்றது அந்த பால் நிலா போன்று ஒளிவீசும் புரவி.



அதைக் கண்டதும் பயத்தில் அவர்கள் இருவரும் பின்னாலே நகர பாய்ந்து ஓடி வந்த குதிரை அவர்களை தன் முன்னங்கால்களால் தாக்கத் தொடங்கியது. அவர்களின் அலறல் அப்படியே மெது மெதுவாக அடங்கி ஒடுங்கிப் போனது அந்த வனாந்தரத்திலே... அதன் பின் அந்த அசுவம் மீண்டும் கோவிலை நோக்கி ஓடத் தொடங்கியது.



அங்கோ மாங்கல்யம் நெருப்பினால் சிவக்க சிவக்க பாண்டியின் தேகம் மொத்தமும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கூடவே அமராவதியும் அந்த நெருப்பில் வந்து நின்று கொண்டாள். அதுவரை பற்றியெரிந்த நெருப்பினையே பார்த்துக் கொண்டிருத்தவன் தன் அன்னையை பார்த்ததும் அம்மா என்று கதற "நான் இப்படித்தான் இந்த உலகை விட்டுச் செல்ல வேண்டும் என்பது விதி. அதனால கலங்காத சத்யா. இனி உங்களுக்கு எல்லாமே நல்லதாக தான் நடக்கும்" என்று சொன்னவள் அந்த நெருப்பில் கலந்து மறைந்து விட்டாள். அதே நேரத்தில் அந்த தாலியும் எரிந்து மாயமாய் மறைய தங்கப்பாண்டியின் தேகமும் முழுவதும் எரிந்து சாம்பலாய் மாறியது.



"அப்பா அப்பா" என்றவன் தன் நெஞ்சில் இருந்த பாதத்தை தள்ளிவிட்டு தன் அப்பாவை நோக்கி ஓடினான். சாம்பலாய் மாறிய தன் அப்பாவைக் கண்டு அவன் உள்ளம் பதறித் துடித்தது. மாதவனோ தன் முன் இருந்த கோலினை எடுக்க எடுத்த மாத்திரத்திலே அந்த தகர கதவு க்றீச் என்ற சத்தத்துடன் திறந்து கொள்ள அங்கே வேகமாக சென்றான் அவன்.



அவன் செல்வதைக் கண்ட வரம்பனின் வெஞ்சினம் கொண்ட விழிகள் குரோதத்தைக் கொப்பளித்துக் கொண்டு விடமாட்டேன் என்று சொன்னவன் ஆங்காரத்துடன் கத்தியபடி மாதவனை நோக்கி ஓட அவன் கால்களில் எதுவோ இறுக கவ்வியது போல் உணர்வு தோன்றியது.



அதில் தடுமாறியவன் திரும்ப.. அவன் கால்களில் சாட்டை சுற்றியிருந்தது. கவ்விப் பிடித்திருந்த சாட்டையினை கண்டவன் நிமிர்ந்து பார்க்க வெண்ணிற குதிரையின் மேல் கம்பீரமாக வீற்றியிருந்தபடி ஐயன் காட்சியளித்தார்.



"உனக்கு சொந்தமில்லாத பொருளின் மீது வைத்திருக்கும் ஆசையானது உனது சொந்தத்தையே அடியோடு அழித்துவிடும். இதை இன்னமும் நீ உணர்ந்து கொள்ள மறுக்கிறாய். இனி உன் மரணம் ஒன்றே மாற்றத்திற்கான வழி" என்று கர்ஜித்தபடி ஐயன் தன் சாட்டையினை இழுத்து மீண்டும் அவன் கழுத்தில் வீச அவன் கழுத்து இறுக ஆரம்பித்தது. தேகக் கூட்டில் இருந்த அவனது உயிர் பறவை அந்த வேதனையை உணர்ந்து துடிதுடித்து அங்கிருந்து வெளியேற கோலை மாரியம்மன் கல்தூண் இருந்த அந்த இடத்தில் மாதவன் வைக்க அது அப்படியே அங்கே மீண்டும் அமிழ்ந்து போனது....


புரவியின் மீது சிம்மமென வீற்றிருந்த ஐயனோ தன் மக்களை காப்பாற்றி விட்ட மகிழ்வில் அங்கிருந்து நகர்ந்து விட மெது மெதுவாக சலங்கை ஒலி மறைந்து போனது.. அதில் சக்தி பிரக்ஞை அற்று வீழ்ந்து விட்டான்.



அனைத்தும் முடிந்து எல்லாமே இயல்பு நிலைக்குத் திரும்ப அங்கிருந்தவர்கள் அனைவரையும் சத்யனும் மாதவனும் மெதுவாய் எழுப்பினார்கள்.



அகல்யா "சக்தி சக்தி அவனுக்கு ஒன்னும் இல்லையே" என்றவாறு எழ சக்தியும் "அகல்யா" என்று பதறிப் போய் எழுந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் ஆறுதலாக அணைத்துக் கொள்ள ரத்னாவோ "இன்னும் நான் சாகலையா. இல்லை. நீங்க எல்லாரும் செத்துட்டீங்களா" என்று கேட்டவாறு எழுந்து அமர இருவரும் அவன் தலையிலேயே நங்கென்று கொட்ட ஆரம்பித்தார்கள்.



இன்னும் சக்தியும் அகல்யாவும் அவர்கள் அணைப்பில் இருந்து விலகாது இருப்பதைக் கண்ட ரத்னாவோ "மச்சி இது கோவில். வீட்டுக்கு போயிடலாமோ" என்று சொல்ல "உன்னை தண்ணீ தொட்டிக்குள்ளயே போட்டு அமுக்கியே சாவடிச்சுருக்கனும் டா" என்றான் சக்தி அகல்யாவினை சற்று தள்ளி நிறுத்தியபடி.



"அப்படியே செத்தாலும் நானும் பேயா வந்து உங்களை டார்ச்சர் பண்ணுவேன்" என்க அவனைத் துரத்தியபடி மகிழ்ச்சியுடனே அங்கிருந்து நகர்ந்தார்கள் அனைவரும்.



சில நாட்களுக்குப் பிறகு..

அன்று ஆனிமாதத்தின் இறுதி நாள்... வெள்ளிக்கிழமை..


அன்றுதான் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா. ஊரே மகிழ்ச்சியினால் திளைத்திருக்க சரியாக ஒன்பதரை மணிக்கு மேல் தீர்த்தக் குடம் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுரத்தை அடைந்தது.



மேலே ஏறியதும் கலசத்தில் தீர்த்தம் ஊற்றப் போகும் சமயம் கருட பகவான் மேற்கு மூலையில் இருந்து பறந்து வந்து வட்டமிட்டு சென்றதைக் கண்டு ஊரே பக்தியில் கன்னத்தில் போட்டுக் கொண்டது. அதன்பின் தீர்த்தம் கலசத்தில் பட அதுவரை தகரம் போட்ட அந்த இடத்தினுள் தன்னை அடக்கிக் கொண்டு இருந்தவள் தரணியாள தன்னை விடுவித்து வெளியேறி வந்து கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருந்த சிலையினுள் தன்னை புகுத்திக் கொண்டாள்.


ஊரையே தன் அருள் நிறைந்த கண்களால் அவள் ஏறிட்டுப் பார்த்து தனது ஆசியினை வழங்கிக் கொண்டிருக்க பக்தர்கள் அனைவரும் தீர்த்த மழையிலும் அவளின் கருணை மழையிலும் திகட்ட திகட்ட நனைந்த பின்னரே அங்கிருந்து தங்கள் இல்லம் திரும்பினர். இனி அவர்களுக்கு துணையாக அகிலாண்ட நாயகி இருப்பாள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை...



நாட்கள் இவ்வாறாக நகர்ந்து கொண்டிருக்க அன்று ரத்னா வந்து "அகல் சீக்கிரமா வா" என்று அவளை அழைக்க "எங்க டா கூப்பிடுற" என்றவாறு வெளியே வந்தாள் அவள்.

"பேசாம வா அகல்" என்று சொன்னவன் அவளை அழைத்துக் கொண்டு அந்த இடத்தினை அடைந்திருந்தான். எங்கே போகிறோம் என்ற ஆர்வத்தில் அவளும் நடக்க அந்த இடம் வந்துவிட்டது.
அந்த இடத்தையும் அங்கே நின்றிருந்தவர்களையும் கண்டு அவள் திகைத்து விட்டாள். கண்கள் கலங்க ஆரம்பித்து விட அதில் சக்தியும் அவளின் சகோதரர்களும் மங்கலாகவே தெரிய ஆரம்பித்தனர்.

"அகல் என்னாச்சு" என்றபடி சக்தி வர "இதெல்லாம் எனக்காகவா சக்தி" என்றாள் அவள் ஒருவித உணர்வுப் பெருக்குடன்.

"இல்லை. நம்மளோட அடுத்த தலைமுறைக்காக" என்று அவன் சொல்ல அதில் சிணுங்கியவள் "ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்களே" என்று சொல்ல "கஷ்டம் தான் ஆனா இப்போ இல்லை" என்றவன் அந்த தண்ணீரை எடுத்து அவள் மீது வாரி இறைக்க ஆரம்பித்தான்.


அன்று எந்த ஆற்றைக் கண்டு அவள் குப்பையாய் சாக்கடையாய் இருக்கிறது என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாளோ அந்த ஆற்றைத்தான் சக்தி சத்யன் மாதவன் ரத்னாவுடன் சேர்ந்து சுத்தப்படுத்தி அழகாய் மாற்றியிருந்தான். சிறுவயதில் இருந்தது போல் இருந்த ஆற்றைக் கண்டு அவள் மனம் உணர்ச்சி பெருக்கில் தத்தளித்துக் கொண்டு இருந்தது.



அன்று அவள் வேதனைப்பட்டு பேசியதையே நினைத்துக் கொண்டிருந்தவன் கோவில் வேலை முடிந்ததும் அதை செய்து முடிக்கவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தான். அவர்கள் சுத்தம் செய்த சமயம் மழை வேறு நன்றாக பெய்ய ஆரம்பிக்க ஆற்றில் நீர்வரத்தும் அதிகமானது. பழைய ஆறு வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டதை இன்று நிறைவேற்றி அவளை சந்தோச படுத்தியதில் அங்கிருந்த அனைவருக்குமே மகிழ்ச்சி தான். அவர்கள் வியந்து ரசித்து குளித்த இந்த ஆறு அவர்களுக்கு அடுத்து அவர்களின் சந்ததிகளுக்கும் அப்படியே சென்று விடும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

அதை உணர்ந்தவள் "ரொம்ப தாங்க்ஸ் சக்தி" என்று சொல்ல "அதுலாம் தேவையில்லை. இது நம்ம கடமை" என்றவன் அவளை அப்படியே தள்ளிவிட ஓடிக் கொண்டிருந்த அந்த நீரில் விழுந்தாள் அவள்.

அதைக் கண்டு மற்றவர்கள் சிரிக்க அவளோ "டேய் சக்தி இன்னைக்கு நீ செத்தடா" என்று எழ எழுந்த வேகத்தில் மீண்டும் வழுக்கி விழ அப்போது இன்னும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தனர் அவர்கள் நால்வரும்.

"டேய் விழுந்த புள்ளைய தூக்கி விடாம இப்படியா டா சிரிப்பீங்க" என்று சொல்லியவள் எழுந்து விரட்ட அவர்கள் அனைவரும் சிரித்தபடியே எஸ்கேப் என்று ஓடத் தொடங்கினார்கள். அவர்களின் சந்தோசம் அந்த ஆற்று நீர் முழுவதும் சலசலத்து ஓடத் தொடங்கியது. அதே உவகை இன்று போல் எப்போதும் அவர்கள் உடனே இருக்கட்டும்...

வாழ்க வளமுடன்


அமிழ்ந்தது மீண்டு மீண்டும் அமிழ்ந்ததில் அனைவருக்கும் நன்மையே...
 
Status
Not open for further replies.
Top Bottom