இருவரும் வலியில் கதறியதைக் கண்டு மாரியப்பனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே அமராவதியை மெதுவாகத் தூக்கி அங்கிருந்த அறையில் படுக்க வைத்துவிட்டு துர்காவையும் அதே அறையில் படுக்க வைத்துவிட்டு "துர்காம்மா கொஞ்சம் பொறுத்துக்கோ அண்ணன் போய் பிரசவம் பாக்குற பாட்டியை கூட்டிட்டு வர்றேன்" என்றான். வலியில் பல்லைக் கடித்துவள் தலையை மட்டும் ஆட்ட அவன் வேகமாக சக்தியைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஆற்றுக்கு அந்தப்பக்கம் இருக்கும் அந்த பாட்டியின் வீட்டை அடைய ஆற்றை கடந்தாக வேண்டும். அப்போதுதான் மழை பெய்ந்திருந்ததால் ஆற்றில் நீர் நெஞ்சளவுக்கு ஓடிக் கொண்டிருந்தது. சக்தியை தோளில் ஏற்றிக் கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான் மாரியப்பன்.
இரண்டு தங்கைகளின் வலியே அவன் கண் முன் இருக்க ஆற்றைக் கடந்ததும் விரைந்து சென்று மூச்சு வாங்க அந்த பாட்டியின் முன் சென்று நின்றான் அவன்.
"மாரியப்பா என்னாச்சு தங்கச்சிக்கு வலி வந்துடுச்சா"
"ஆமா பாட்டி வாங்க சீக்கிரம்" என்று சொன்னவன் அவரை அழைத்துக் கொண்டு பாலத்தின் வழி கூட்டிச் சென்றான்.
வீட்டிற்கு வந்ததும் இருவரின் வேதனை நிறைந்த முணங்கல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
"போய் பாருங்க பாட்டி" என்று சொன்ன மாரியப்பன் சக்தியுடன் வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்துவிட்டான். உள்ளே நுழைந்த பாட்டியின் கண்கள் இருவரது கையும் சேர்ந்து இருக்க விழிகளில் நீர் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியைத்தான் கண்டது.
"இரண்டு பேருக்கும் ஒரேதா வலி வந்துருக்கா" என்று சொன்னபடியே இருவரது வயிற்றையும் மாறி மாறி ஆராய்ந்தார்.
"குழந்தை இன்னும் செத்த நேரத்தில பிறந்துடும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க" என்று சொல்லிக் கொண்டு அவர்களை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார் பாட்டி.
தங்கப்பாண்டியோ இருவரையும் சேர்த்துக் கொண்டு பூசையில் அமர்ந்திருந்தான். துர்காவின் குழந்தை பிறக்கும் சமயம் வலிமை வாய்ந்த ஏவலை அனுப்பி அதை அழித்துவிட வேண்டும் அதுதான் இப்போது அவர்களின் லட்சியம். அதை முடித்த பின்பு தான் அமராவதியின் குழந்தையைக் கொண்டு அந்த மந்திரக் கோலை தங்கள் வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தார்கள்.
பூசை மும்முரமாக நடந்து கொண்டிருக்க இங்கு இருவரும் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தனர்.
குண்டத்தில் இருந்து நெருப்பு சீற்றத்துடன் எரிந்து கொண்டிருக்க அவர்களின் உதடுகள் துர் மந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டிருந்தது. அந்த மந்திரங்கள் எல்லாம் சேர்த்து நெருப்பில் கலந்து பெரும் சக்திவாய்ந்த ஏவலாக உருமாறிக் கொண்டிருந்தது.
நிமிடங்கள் கடந்து கொண்டிருக்க வலியில் உடல் துடிக்க இறுதியில் மிகுந்த அழுகையொலியோடு இருவரின் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறக்க அந்த களைப்பில் துர்கா மயங்கிவிட்டாள். ஆனால் அமராவதியோ செய்ய வேண்டிய கடமைகள் வரிசையாக இருந்ததால் தெளிவாகவே இருந்தாள்.
அமராவதியிடம் குழந்தையை அந்த பாட்டி குடுக்க அதை வாங்கியவள் அதன் தலையை வருடிவிட்டு அப்படியே வைத்திருந்தாள். இதழ்கள் மெதுவாக அகல்யா என்று அழைத்தது.
கூடவே கையில் இருந்த அந்த பெண்குழந்தை மூலம் நடக்கப் போகும் விபரீதம் வேறு அவள் கண்களுக்கு புலப்பட்டது. உடனே அவள் அந்த பாட்டியிடம் "இந்த குழந்தையை துர்கா கிட்ட குடுங்க அவ குழந்தையை என்கிட்ட கொடுங்க" என்றாள்.
"எதுக்கும்மா" என்று பாட்டி கேட்க "அவளுக்கு பெண்குழந்தை தான் வேண்டும்னு சொன்னா அதுதான் பாட்டி. இதுக்குமேல எதுவும் கேள்வி கேட்காம அவகிட்ட இந்த குழந்தையை வச்சுடுங்க. குழந்தை பொறந்ததும் என்ன பண்ணனும்னு நான் அவகிட்ட சொல்லிருக்கேன் அதுமாதிரி அவ பண்ணிடுவா. அந்த குழந்தையை மட்டும் என்கிட்ட கொடுங்க" என்று சொல்ல அந்த பாட்டியும் சொன்னது போலவே குழந்தையை மாற்றி வைத்துவிட்டு அவளிடம் நீட்டினார்.
குழந்தையை கையில் அவள் வாங்கியதும் அந்தக் குழந்தை அவளை நன்றாக உற்றுப் பார்த்தது. "உன் உயிருக்கு காணிக்கையா என் உயிர் தர்றேன்னு அன்னைக்கே சொன்னேன் இப்போ அதுதான் நடக்கப் போகுது மகனே" என்று சொன்னவளுக்கு தன் தோழி ஒருநாள் சொன்னது ஞாபகம் வந்தது.
அமராவதி விளையாட்டாக "பொண்ணு பொண்ணுன்னு சொல்லுறயே ஒருவேளை பையன் பொறந்தா என்ன பண்ணுவ" எனக் கேட்க "பையனோ பொண்ணோ எந்த குழந்தை பொறந்தா என்ன. எனக்கு சந்தோசம் தான். ஆனா பொண்ணா இருந்தா என் மருமகனை உண்மையிலே என்னோட மருமகனா ஆக்கிக்கிடலாம் அப்படிங்கிற சந்தோசமும் சேர்ந்து கிடைக்கும்" என்றாள் துர்கா.
"அப்போ சரி.. பையனோ பொண்ணோ பொறந்தா என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சு வச்சுருக்க. அதைச் சொல்லு" என்று அமராவதி கேட்டதும்
"பொண்ணு பொறந்தா அகல்யா.. பையன் பொறந்தா மாதவன்" என்றாள் அவள்.
அந்த நினைவு வந்ததும் அந்த குழந்தையை பார்த்து "மாதவன்" என அழைத்தாள் அமராவதி. அதுவோ சிணுங்கிக் கொண்டே அவளின் மார்பில் ஓட்டிக் கொண்டது. அந்தக் குழந்தைக்கு பசியாற்றியவள் குழந்தை உறங்கியதும் பாட்டியைப் பிடித்துக் கொண்டே எழ முயற்சி செய்தாள்.
"வேண்டாம் ம்மா நான் சொல்லுறதை கேளு இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அப்படியே படுத்துக்கோ. வலி அதிகமாக இருக்கும்" என்றார்.
"இந்த வலியை பார்த்தா என் முன்னாடி இருக்க எல்லா வழியும் அடைபட்டு போயிடும் பாட்டி. என்னை விடுங்க. நான் போயிடுவேன். போயே ஆகணும்" என்று சொன்னவள் எழுந்து குழந்தையுடன் வெளியே செல்ல மாரியப்பன் வந்து அமராவதியை தடுத்து நிறுத்தினான்.
"அம்மாடி என்னதிது இப்படியா பச்சை உடம்புக்காரி எழுந்து வருவ.. அங்கயே படுமா" என்றான்.
"இல்லண்ணா நான் வீட்டுக்குப் போகணும். எனக்கு ஒண்ணும் இல்லை நான் நல்லாத்தான் இருக்கேன். நானே போயிடுவேன்" என்று சொல்ல அவனும் முடிந்தளவுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்காமல் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
வீட்டை அடைந்தவள் கையில் இருந்த குழந்தையைப் பார்த்த அமராவதியின் தந்தை "அமராவதி என்னம்மா... குழந்தை" என்று அதிர்ச்சியுடன் கேட்டபடி அவளைப் பிடித்து கட்டிலில் அமரவைத்தார்.
"இந்தாங்க உங்க பேரன்" என்று அவள் அவரிடம் நீட்ட "வலி வந்ததும் எனக்கு சொல்லாம இப்படியா பண்ணுவ" என்றவரின் விழிகள் கண்ணீரால் நிறைந்து விட்டது.
"மாரியப்பன் அண்ணன் பாட்டியை கூட்டிட்டு வந்து பிரசவம் பாக்க வச்சுட்டாங்கப்பா. இப்போ வேற எதையும் சொல்ல எனக்கு நேரம் இல்லை. சத்யா நீ இங்க வா" என்று அழைக்க அவனோ தம்பியின் கையை விட்டுவிட்டு அவளிடம் வந்து நின்றான்.
தந்தையிடம் இருந்த குழந்தையை வாங்கி அவனிடம் நீட்டிய அமராவதி "இவனை வாங்கிக்கோ இவன் உன்னோட தம்பி. பேர் மாதவன் இவனைத் தூக்கிட்டு வெள்ளிமலை காட்டுக்குள்ள போ. உனக்குன்னு ஓர் இடம் அங்க காத்துட்டு இருக்கு. அங்கயே இருந்துக்கோ. இவனை பத்திரமா பாத்துக்கோ. கொஞ்ச நாளைக்கு உங்க அப்பாவுக்கு இவனைப் பத்தி தெரியவே கூடாது " என்றாள் அமராவதி.
"அம்மா நீங்க" என்று அவன் குழப்பத்துடன் கேட்க "நானும் ஒருநாள் அங்க வருவேன்" என்றாள் அவள்.
"இவன்" என்று திரும்பி இரண்டாவது தம்பியை சத்யன் கைகாட்ட "மாயவரம்பனை நான் பாத்துக்கிறேன் போ" என்றாள் அவள்.
"என்ன அமராவதி எதுக்கு என்னென்னவோ சொல்லுற. இவன் எப்படி அந்த சின்னப்பையனை வளர்ப்பான். குழந்தை பெத்த உடம்போடு நீ எப்படி இவனை விட்டு இருப்ப. என்னாச்சு உனக்கு" என்றார் அவர்.
"அவன் மட்டும் தனியா போகலைப்பா நீங்களும் துணைக்குப் போகத்தான் போறீங்க. நான் சொல்லுறதை நல்லா கேட்டுக்கோங்க. மாதவனுக்கு எந்தவித ஆபத்தும் வந்துடக்கூடாது அவனை பத்திரமா பாத்துக்க வேண்டியது உங்களோட பொறுப்பும் கூட. என்ன நடந்ததுன்னு சொன்னா உங்களால அதை தாங்கிக்க முடியாது ப்பா. இப்போதைக்கு நீங்க போங்க. நான் அங்க வர்றேன்" என்றாள் அவள்.
"இல்லை அமராவதி உன் வீம்புக்கு என்னால எதுவும் பண்ண முடியாது. நான் மாப்பிள்ளை வரட்டும் அவர்கிட்டயே என்ன நடந்ததுன்னு கேட்டுக்கிறேன்" என்று சொல்ல
"அப்பா அவன் வந்தா யாரும் உயிரோட இருக்க மாட்டோம். நான் சொல்லுறது உங்களுக்குப் புரியலையா. என்னால இதுக்கு மேல சொல்ல முடியாது. புரிஞ்சுக்கோங்க. இப்போதைக்கு அவன் நல்லவன் இல்ல அதை மட்டும் என்னால தெளிவா சொல்ல முடியும்... அவ்வளவுதான்... இனியும் நாம உக்காந்து அழுவதற்கோ அதிர்ச்சியடைவதற்கோ இல்லை பேசுவதற்கோ நேரமில்லை. சீக்கிரமா போங்க. எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சா நீங்க இதை பண்ணித்தான் ஆகணும். போங்க அப்பா. சத்யனையும் மாதவனையும் கூட்டிட்டு போங்க" என்று அவள் சொல்ல குழந்தையை தூக்கிக் கொண்டு இருவரும் அங்கிருந்து சென்றனர்.
மாயவரம்பன் நடப்பதை பற்றி புரிந்து கொள்ள இயலாதவனாய் நின்றிருந்தான். குண்டத்தில் இருந்து பூசை நிறைவு பெற்றதன் அடையாளமாய் செந்நிறம் கொண்ட ஏவல் ஒன்று வெளியே வந்தது.
அதைக் கண்ட மூவரும் "போய் அந்த துர்காவோட குழந்தையை தூக்கிட்டு வா" என்றனர். அதுவும் அங்கிருந்து விரைந்து துர்காவினைத் தேடி வந்தது.
மாரியப்பன் வீட்டை அடைந்து படியினில் அது காலை எடுத்து வைக்க உடலெல்லாம் தகிக்க தொடங்கியது. சட்டென்று பின்னால் நகர்ந்து கொள்ள அந்த நேரத்தில் காதுக்குள் குதிரை கணைக்கும் ஓசை கேட்டது...
உள்ளுக்குள் வியாபித்த பயத்துடன் தன் கொடூர கண்களைத் திருப்பி அது பார்க்க அங்கே புரவியின் மீது கம்பீரமான தோற்றத்தில் கண்களில் வழிந்த ரௌத்திரத்துடன் ருத்ர மூர்த்தியாக ஐயன் அமர்ந்திருந்தான். அதைக் கண்ட அந்த ஏவல் இன்னும் நான்கடி பின்னால் நடக்க "என் குலத்தை அழிக்க நீ வந்து நின்னா அதைப்பார்த்தும் நான் அமைதியா நின்னு வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா. அவங்களுக்கு காவலா நான் இருக்குற வரைக்கும் யாராலும் எதுவும் பண்ண முடியாது" என்று ஐயன் கர்ஜிக்க அதுவோ பயத்தில் பின்வாங்கியது...
வெளியே நடந்து கொண்டிருந்த போராட்டத்தை அறியாத மாரியப்பன் தன் வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கினைப் பார்த்து கோபத்தில் கத்தத் தொடங்கினான்.
"யார் இதை ஏத்தி வச்சது" என்று அவன் சத்தமாக கேட்க சக்தி முன் வந்து "நான்தான் ப்பா" என்றான்.
"எவ்வளவு தைரியம் இருந்தா இப்படிப் பண்ணிருப்ப" என்றவன் அவனை சட்டென்று அடித்தே விட்டான்
"அம்மாதான் ப்பா சக்தி தீபம் ஏத்தி வை அப்படின்னு சொன்னாங்கப்பா" என்றான் அவன் திணறிக் கொண்டு...
"யார் சொன்னாலும் பரவாயில்லை இந்த வீட்டுல விளக்கு எரியக் கூடாது. ஏற்கனவே எரிஞ்சு போன மனசு இதைப் பாக்கையில இன்னும் பத்திட்டு எரியுது. எனக்கு என் குலதெய்வம் வேண்டாம். வேற சாமியைக்கூட கும்பிடுவேனே தவிர இனி குலசாமியை நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். அந்த ஐயனார் இனி என் குடும்பத்துக்கு காவலா இருக்க வேண்டாம். வேண்டவே வேண்டாம்" என்றவன் விளக்கை ஊதி அணைக்க வெளியே காவலாக இருந்தவன் அவன் எல்லைக்கே வேதனையுடன் திரும்பிவிட்டான். மதியாத இடத்தில் மனிதனே இருக்க விரும்ப மாட்டேன் அப்படி இருக்கையில் தெய்வம் மட்டும் எப்படி இருக்கும்...
வேலம்மாள் ஆவி நடப்பதைக் கவனித்து கொண்டு மாரியப்பன் மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி பண்ணியது.
"என்னங்க குலசாமி வேதனையில போகுதுங்க. நான் சொல்லுறேன்ல விளக்கை ஏத்துங்க" என்றாள் வேலம்மாள்.
"முடியாது நீ எவ்வளவு சொன்னாலும் நான் அவனைக் கும்பிட மாட்டேன்" என்றான் மாரியப்பன் பதிலுக்கு.
"இது தப்புங்க இப்போ இருக்க சூழ்நிலையில இது ரொம்ப பெரிய தப்பு. துர்கா குழந்தை நல்லா இருக்கணும்னா நீங்க கொஞ்சம் பிடிவாதம் பிடிக்காம இருக்கணும்" என்றாள் வேலம்மா.
"முடியாது முடியாது" என்று சத்தமிட்டவன் பிடிவாதமாக இருந்துவிட அவன் பிடிவாதத்தின் முன் எதுவுமே பலன் தரவில்லை. ஏவலைத் தடுக்க வேலம்மாள் உடனே முன் வந்து நின்றாள்.
ஆனால் வலிமை வாய்ந்த மந்திரங்களை உருவேற்றி அனுப்பி வைத்த ஏவலைத் தடுக்க அப்போதைக்கு அவளால் முடியவில்லை.
தங்கப்பாண்டியோ ஐயனார் வந்து தங்களின் ஏவலைத் தடுத்து நிறுத்தியதை அறிந்து இன்னும் ஆக்ரோசத்துடன் மந்திரங்களைச் சொல்லத் தொடங்கியிருந்தான். ஆனால் அதற்கு அவசியமே இல்லாதபடி மாரியப்பனே தங்கப்பாண்டிக்கு சாதகமாக அனைத்தையும் செய்து முடித்து விட்டான். அதில் மகிழ்ந்த தங்கப்பாண்டி இனி ஐயன் அவன் எல்லையிலிருந்து வரமாட்டான் என்று நினைத்துக் கொண்டு அடுத்து செய்ய வேண்டிய வேலையை செய்யத் தொடங்கினான்.
வீட்டினுள் நுழைந்த அந்த ஏவல் துர்காவின் அருகே படுத்திருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிட துர்காவோ இன்னும் கண் விழிக்காமலே இருந்தாள்.
மாரியப்பன் விளக்கு ஏற்றிய கோபத்தில் கொந்தளித்துக் கிடக்க அந்த நேரத்தில் தான் உள்ளே வந்தான் சாமிநாதன். "துர்கா துர்கா" என்று படபடப்புடன் அழைத்தபடி அவன் வர அந்த சத்தத்தில் உள்ளே இருந்து வெளியே வந்தான் மாரியப்பன்.
"வா மாப்பிள்ளை தங்கச்சி உள்ளதான் படுத்து இருக்கா"என்று சொன்னவன் அவனை அழைத்துச் செல்ல அங்கே துர்கா மட்டும் மயக்கத்தில் இருக்க குழந்தையை காணாமல் இருவருக்கும் பேரதிர்ச்சி.
"அய்யோ குழந்தை இங்கதான் தூங்கிட்டு இருந்தா" என்று மாரியப்பன் பதற "தூங்குன குழந்தை எங்க போகும் மச்சான்" என்று சாமிநாதனும் பதறிக் கொண்டு தேடினான்.
அந்த நேரம் மாரியப்பன் செவிக்கு அருகே "எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் விளக்கை அணைக்காம இருக்கணும்னு அமராவதி சொல்லிட்டுப் போனா. அதை அணைச்சுட்டு நம்மளை காக்க வந்த குலதெய்வத்தை திருப்பி அனுப்பிட்டீங்களே. இப்போ குழந்தையை தூக்கிட்டு ஒரு பிசாசு போயிடுச்சு.. என்னால தடுக்க முடியலை. போங்க போய் அந்த குழந்தையை காப்பாத்துங்க கோவிலுக்கு உடனே போங்க" என்று வேலம்மாள் சொன்னதும் மாரியப்பன் "மாப்ள இங்கயே இருங்க இதோ குழந்தையோட வந்துடுறேன்"என்று சொல்லிவிட்டு ஓடினான்.
தங்கப்பாண்டி வேகமாக எழுந்து சித்தையா கந்தையாவிடம் "நான் போய் என் குழந்தையை தூக்கிட்டு கோவிலுக்கு வந்துடுறேன். துர்காவோட பையன் வந்தா நீங்க அவனை என்ன பண்ணனுமோ அதை பண்ணிடுங்க" என்று சொல்ல நகர குழந்தையை கையில் ஏந்தியபடி நடந்து கொண்டிருந்த அந்த ஏவல் தங்கப்பாண்டியின் முன் வந்து நின்றது.
"அதுக்குள்ள வந்துட்டயா" என்று தங்கப்பாண்டி வினவ "இடையில மட்டும் அந்த ஐயன் வந்து தடுக்கலைன்னா எப்போதோ வந்துருப்பேன்" என்று சொன்னவன் குழந்தையை நீட்ட அதை வாங்கியவன் முகம் திடுக்கலுடன் சுருங்கியது.
"என்னச்சு பாண்டி" என்று மற்ற இருவரும் கேட்க "என்னாச்சா இது பெண் குழந்தை.. அதுவும் என் குழந்தை" என்றான் அவன்.
"என்ன" என்று இருவரும் அதிர்ச்சியுடன் கேட்க தங்கப்பாண்டி ஏவலிடம் திரும்பி "இவளை எதுக்கு தூக்கிட்டு வந்த துர்காவோட பையன எங்க" என்றான் கோபமாக.
"நீங்க என்கிட்ட சொல்லும் போது துர்காவோட குழந்தையை தூக்கிட்டு வான்னு தான் சொன்னீங்க. பையன் அப்படின்னு சொல்லவே இல்லை. நானும் போய் பாக்கும் போது துர்கா பக்கத்துல இந்தக் குழந்தை தான் இருந்தது. அதுதான் தூக்கிட்டு வந்தேன்" என்றது ஏவல்.
"அப்போ குழந்தை மாறிடுச்சா.. எப்படி" என்று தங்கப்பாண்டி புரியாமல் வினவ "ஒருவேளை துர்காவுக்கு பெண்குழந்தைதான் பிறந்திருக்குமோ" என்றான் சித்தையா.
"இல்லை அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. ஏன்னா எனக்கு நல்லா தெரியும் இதுதான் என்னோட குழந்தை. அதுவும் கேட்டை நட்சத்திரத்தில பொறந்த குழந்தை... அவளுக்கு பொறந்தது பையன் தான். இப்போ அந்த பையன் எங்க இருக்கான்னு தான் நாம தேடணும். நான் வீட்டுக்குப் போறேன் ஒருவேளை அமராவதிக்கிட்ட அந்த குழந்தை இருக்கலாம். நீங்க அதுவரைக்கும் என் பொண்ணை பத்திரமா பாத்துக்கோங்க. இடையில ஏதாவது பிரச்சனை நடந்ததுன்னா நான் குரல் கொடுத்ததும் கோவிலுக்கு வந்துடுங்க" என்றவன் ஏவலை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
நேராக அமராவதியை தேடி அவன் செல்ல அவளோ வீட்டிலிருந்து வேறு எங்கயோ செல்வது போல் தெரிந்தது. "அமராவதி" என்று தங்கப்பாண்டி கத்திக் கொண்டே செல்ல அவளோ திரும்பவே இல்லை. எங்க போறா என்று நினைத்தவன் வேகமாக அவளைத் தூரத்திக் கொண்டு ஓடினான்.
அவள் சென்று நுழைந்த வீட்டினுள் ஏவலோடு நுழைந்தவன் அப்படியே சட்டென்று அதிர்ச்சியாகி நின்றுவிட்டான். இவன் அதிர்ச்சியைப் பார்த்த அமராவதிக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது....
"அமராவதி இங்க என்ன பண்ணிட்டு இருக்க" என்று கடுமையான குரலில் தங்கப்பாண்டி வினவ அவளோ "என்ன பண்ணனும்னு நினைச்சுட்டு நீ இதையெல்லாம் பண்ணயோ. அதை தடுக்கத்தான் நான் இதை பண்ணிட்டு இருக்கேன்.." என்றாள்.
"அப்போ நான் பண்ணுற எல்லாமே உனக்குத் தெரிஞ்சுடுச்சு அப்படித்தான" என்று அவன் கேட்க "ஆமா இந்த மாதிரி பண்ண உனக்கு எப்படி மனசு வருது. ஒரு பச்சக் குழந்தை அதைப் போய்... அதுவும் என் கையால இதை என்னால மன்னிக்கவே முடியாது" என்றாள் ஆத்திரத்துடன்.
"உன்கிட்ட மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல. எனக்குத் தேவை அந்த குழந்தை மட்டும் தான். அது எங்க இருக்குன்னு சொல்லிட்டா போதும்" என்றான் அவன்.
"மாட்டேன் அந்த குழந்தையை உன்கிட்ட தரவே மாட்டேன்"
"அமராவதி அடம் பிடிக்காத.. சரியா வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல பானையை போட்டு உடைச்சிடாத. இதுக்காக நான் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுருக்கேன் தெரியுமா" என்று அவனா பொறுமையாக சொல்ல "அதுக்காக குழந்தையை பலி கொடுப்பயா" என்றாள் அவள்.
"அந்த பையன் இருந்தா என்னால அதை எடுக்க முடியாது அமராவதி" என்றான் பாண்டி.
"அப்போ அந்த கோல் வேண்டாம்னு எல்லாத்தையும் தலை முழுகிடு" என்று அவள் கோபத்துடன் சொல்ல "என்ன.. என்ன சொன்ன அந்த கோல் வேண்டாம்னு நான் விட்டுரனுமா.. என் உயிரை கூட விட்டுருவேனே தவிர அந்த கோலை எடுக்காம ஓய மாட்டேன். இதுக்காக எத்தனை நாள் சாப்பிடமா தூங்காம எத்தனை எத்தனை பூசையெல்லாம் பண்ணிருக்கேன் தெரியுமா? ரொம்ப வேமா சொல்லுற இதை விட்டுடுன்னு" என்றான் தங்கப்பாண்டி.
"அது தான் உனக்கு வேணும்னு முடிவு பண்ணிட்டா அதை எடுக்கவிடாம நான் தடுப்பேன்" என்றாள் அவள்.
"அமராவதி சொன்னா புரிஞ்சுக்கோ. இந்த கோல் கைக்கு கிடைச்சுட்டா போதும் எல்லாமே நம்ம காலுக்கு கீழ்தான். இந்த உலகமே நமக்கு அடிமை. நாம சொல்லுறது தான் நடக்கும். தெய்வங்கள் எதுவும் தேவையில்ல. நீ ராணி மாதிரி இருக்கலாம்" என்று அவளுக்கு ஆசை காட்ட "இப்படி சொன்னா நான் அதை ஏத்துக்குவேன்னு நீ நினைக்கிறயா. என்னைப் பத்தி நீ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா. அதுசரி நீ எங்க என்னைப் புரிஞ்சு நடந்த.. நல்லா நடிச்சு தான என்னை ஏமாத்துன" என்றாள் அவள் வேதனையுடன்.
"அமராவதி என்னை கோபப்படுத்துற மாதிரி பேசிட்டு இருக்காத. சீக்கிரமா போய் நான் அந்த கோலை எடுக்கணும் அந்த பையனை எங்க வச்சுருக்க சொல்லு"
"எனக்குத் தெரியாது"
"உனக்குத் தெரியாம இது நடந்திருக்காது. ஒழுங்கா சொல்லிடு" என்று அவன் ஆத்திரத்தின் உச்சத்தில் கேட்க "அவன் எங்க இருக்கான்னு தெரியும். ஆனா நான் சொல்ல மாட்டேன். அதேமாதிரி உன்னை அந்த கோலை எடுக்க விடாம நான் தடுப்பேன்" என்றாள் அமராவதி.
"உன்னால முடியாது அமராவதி. என்னோட பலம் என்னென்னு நீ தெரியாம பேசிட்டு இருக்க" என்று புருவத்தை உயர்த்தியபடி அவன் பேச "அந்த பலத்தை சின்னஞ்சிறு கருவை கொல்லுறதுக்குதான பயன்படுத்துவ" என்றதும்
"என்னடி விட்டா பேசிட்டே போயிட்டு இருக்க. ஏதோ கட்டிகிட்டோமே பொறுமையா பேசுவோம்னு நான் பேசுனா நீ என்ன ஓவரா ஆடுற. வேண்டாம் என்கிட்ட மோத நினைக்காத. அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது. நான் ரொம்ப மோசமானவன் அமராவதி" என்றான் வன்மத்துடன்.
"அதுதான் எனக்குத் தெரியுமே" என்றவள் அழுத்தமாக அவனை ஏறிட அவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு "கடைசியா கேக்குறேன் துர்காவோட பையன் எங்க" என்றான்.
"எனக்குத் தெரியாது" என்று அவள் மீண்டும் பழைய பல்லவியைப் பாட உடனே அவன் ஏவலை அழைத்து "வீட்டுல போய் பாரு பையன் அங்க இருந்தா அவனைத் தூக்கிட்டு வந்துடு" என்று சொல்ல அதுவும் சரியென்று கிளம்பியது. அமராவதியின் முகத்தில் சட்டென்று வேதனை அப்பிக் கொள்ள "குழந்தை வரட்டும் அப்பறம் இருக்குடி உனக்கு. என்னைத் தடுக்க பூசை எல்லாம் பண்ணுவயா" என்று அவன் அமராவதியின் அருகே நின்றிருந்த பெரியசாமியை பார்க்க அவனோ அதை தூசிபோல் தட்டிவிட்டு நிமிர்ந்தான். அவனின் பாவனையில் தங்கப்பாண்டிக்கு கோவம் வந்துவிட்டது.
"உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை சாதகம் பாத்தோமா போனோமா இல்லாம... இது எல்லாம் தேவையா? இனி பாரு நீயும் இவளோட சேர்ந்து செத்துப் போகப் போற" என்றான் அதே கோபத்துடன்.
"பாண்டி... அதைத்தான் நாங்களும் சொல்லுறோம் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. ஏற்கனவே உன் கொள்ளுப் பாட்டனுக்கு நடந்தது மறந்துடுச்சா. நீயும் அதே மாதிரி அஸ்தியா மாறப் போறயா" என்றான் பெரியசாமி.
கோபத்தில் சிவந்த விழிகளை அவன் மூடிக் கொள்ள அவன் செய்யப் போவதை அனுமானித்த பெரியசாமி தன் முன் இருந்த நெருப்பு குண்டத்தில் அமராவதியின் கையில் இருந்த அரிசியை போட வைத்தான். சட்டென்று அந்த நெருப்பினுள் இருந்து எழுந்த புகை தங்கப்பாண்டியை சூழ்ந்து கொண்டது. அதனுள் அவன் மந்திரங்கள் வேலை செய்யவில்லை.
"விடு என்னை விடு" என்று அவன் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்த்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
ஏவலோ வேகமாக வீட்டினை அடைய அங்கே தொட்டிலில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதைப் பார்த்த அந்த ஏவல் தொட்டிலோடு சேர்த்து அந்தக் குழந்தையே தூக்கிக் கொண்டு வந்தது.
தங்கப்பாண்டி எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த புகையைத் தாண்டி வெளியே வர அவனால் முடியவில்லை. "அமராவதி வேண்டாம் என்னை விட்டுடு" என்று அவன் சொல்ல "எல்லாத்தையும் விட்டுர்றேன்னு நீ சொல்லு நானும் இதை நிறுத்திடுறேன்" என்றாள் அவள்.
"முடியாது என்னோட லட்சியத்தை நான் அடையாம விட மாட்டேன்"
"அப்போ என்னாலும் முடியாது" என்று சொன்னவள் இன்னும் அரிசியை அள்ளி உள்ளே போட்டாள்.
"போடாத அமராவதி" என்று கத்தியவனைக் கண்டு அவளுக்குள் இரக்கம் என்ற ஒன்று வரவில்லை. மாறாக இன்னும் அவன் அந்த குழந்தையை கொல்லத் துடிக்கின்றானே என்ற ஆத்திரம் தான் வந்தது.
அந்த நேரத்தில் தான் அவனது ஏவல் வந்து நின்றது. அது வந்ததும் அவனைச் சூழ்ந்த புகை இப்போது கருமை நிறத்துக்கு வந்து விட்டிருந்தது. அது எதிரே இருப்பவைகளை எல்லாம் மறைத்தது.
"பாண்டி குழந்தையை தூக்கிட்டேன்" என்ற குரல் மட்டும் அந்த கரும்புகையைத் தாண்டி அவனுக்கு கேட்க "குழந்தையை தூக்கிட்டு கந்தையா சித்தைய்யாகிட்ட போ. அவங்களை இந்த குழந்தையை கொண்ணுட்டு என் குழந்தையை தூக்கிட்டு கோவிலுக்கு வரச் சொல்லு" என்று சொல்ல "நீ" என்று இழுத்தது அந்த ஏவல்.
"எனக்கு ஒன்னும் ஆகாது. நீ போ நான் வந்துடுவேன். குழந்தை பையன் தான.. சரியா தூக்கிட்டு வந்துட்டயா இல்லை இந்த தடவையும் தவறா மாத்தி எடுத்துட்டு வந்துட்டயா" என்றான் பாண்டி.
"இல்லை இல்லை பையன் தான் தொட்டில்ல தூங்கிட்டு இருந்தான் . நான் தூக்கிட்டு வந்துட்டேன்" என்று சொல்ல "சரி சீக்கிரம் போ" என்றான் தங்கப்பாண்டி. ஏவல் சென்றதும் தங்கப்பாண்டி தன் பாட்டனை நினைத்துக் கொண்டான்.
அரிசியைப் போட்டிக் கொண்டிருந்தவள் பெரியசாமி சொன்னபடி அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள். உடனே பெரியசாமி "இன்னும் சில நிமிடங்கள் மட்டும் தான் நாம இவனை தடுத்து நிறுத்த முடியும் அமராவதி" என்றான்.
"அதுவே போதும் அண்ணா. இனி நான் பாத்துக் கொள்வேன்" என்றாள் அமராவதி.
"நீ செய்யுறது எவ்வளவு ஆபத்தானதுன்னு தெரிஞ்சும் துணிந்து போறயே ம்மா" என்றான் பெரியசாமி.
"இதை பார்த்தா இந்த ஆபத்தானவன் இன்னும் என்னென்ன ஆபத்தை ஏற்படுத்துவானோ. என்னைப் பத்தி கவலைப்படாதீங்க அண்ணா நான் சொல்லுற மாதிரி பண்ணுங்க அதுபோதும்" என்றாள் அவள்.
பாட்டனை நினைத்ததும் அவனுக்குள் ஆபத்து நேரத்தில் உதவும் மந்திரம் ஒன்று நினைவுக்கு வந்தது. அதை அவன் முணுமுணுக்க அந்த கரும்புகை மெதுவாக கலையத் தொடங்கியது. அதுவரை எதிரே என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருந்தவனின் கண்களுக்கு எல்லாமே தெரிந்தது. ஆனால் அவன் ரொம்பவும் எதிர்பார்த்த அமராவதியும் பெரியசாமியும் மட்டும் அங்கே இல்லை.
"ச்சே தப்பிச்சுட்டாங்க.. அமராவதி நீ என்னையவே அடக்கிவச்சுட்ட இல்ல. உன்னை என்ன பண்ணுறேன் பாரு" என்று கறுவியவன் வேகமாக அங்கிருந்து அவன் இடத்துக்குச் சென்றான்.
கோவிலுக்குள் நுழைந்த அமராவதி அந்த பீடத்தின் படியில் அமர்ந்துவிட பெரியசாமி வந்து அமைதியாக அவளருகே நின்றான்.
"இனி அவன் கோவிலுக்கு வருவான் அதுவும் கோபத்தோட... என்ன செய்யப் போற" என்றான்.
"சித்தர் என்கிட்ட சொன்னதை செய்வேன் அண்ணா" என்றாள் அவள். அவளுக்கு அன்று சித்தர் சொன்ன அத்தனை விசயங்களும் நினைவுக்கு வந்தது.
மாதவம் புரிந்து பிறந்தவனை
ருத்திரன் துணையோடு
வேழங்கள் உலவும் அடவியினுள்
அடைக்கலமாக்கினால்
அவன் உயிர் தப்பும்...
வன்மம் கொண்டு
வரம்பு மீறும் ஏவலுக்கு
வரம்பனை அடையாளம் காட்டினால்
சதிகாரனின் ஆணவம் நொறுங்கும்
கோலைத் தேடி
கோவிலுக்குள்
குழந்தையோடு நுழைபவனை
உயிர்ப்பலி ஒன்றே தடுத்து நிறுத்தும்...
எரியும் நெருப்பில்
இன்முகத்தோடு இறங்கி
அவன் கொண்ட வெறியை
பஸ்பமாக்க
அமரத்துவம் பெற்ற
பெண்ணால்
மட்டுமே இயலும்.
அதுவும் உன்னால்
மட்டுமே இயலும்
அவன் கட்டிய வேலியில்
தீயின் நாக்கு தீண்டும் போது
அவனும் நெருப்பில் துடிதுடிப்பான்
இருந்தும் அவனைக் காக்க
அடுத்த தலைமுறை வரும்...
காலம் கனியும் வரை
காத்து நிற்கத்தான் வேண்டும்...
அகல்யாவினை காக்க
அகலினுள் அமிழ்ந்து கிடக்க வேண்டும் என்பதே விதி...
மூவெட்டு ஆண்டுகள்
முடிந்ததும் மீண்டுவிடலாம்...
மகவிற்கு காவலாக மாறலாம்...
மாரியின் அருளால்
இந்த இடமும் மாறும்
காலமும் வரும்
அதுவரை காத்திரு மகளே...
கோபுரம் எழுப்பும் போது அகலை தோண்டி எடுப்பர்
அன்றே அனைத்திற்கும்
விமோச்சனம் கிட்டும்
விமோச்சனம் கிட்டும்...
என்றவரின் குரல் இப்போதும் அவளது காதுக்குள் கேட்டது.
"அமராவதி என்ன யோசிக்கிற" என்று பெரியசாமி கேட்க "ஒன்னும் இல்லை அண்ணா" என்றாள் அவள் திடுக்கிட்டு..
தங்கப்பாண்டி நேராக தங்களின் இடத்திற்கு சென்று நின்றான். அங்கே கந்தையா "இது என்ன ஒரே தடங்கலாக நடக்குது. இப்போ என்ன பண்ணுறது. இந்த ஏவலை அனுப்பினதுக்கு நாமளே போயிருக்கலாம் போல" என்று புலம்ப "என்ன நடந்தது" என்று கேட்டபடி உக்கிரத்துடன் உள்ளே நுழைந்தான் பாண்டி.
"அது இந்த தடவையும் குழந்தையை மாத்தி உன் குழந்தை வரம்பனை தூக்கிட்டு வந்துருக்கு" என்றான் கந்தையா.
"என்ன" என்று அவன் கொடூரமாக கத்த அந்த சத்தத்தில் அந்த ஏவல் அலறியடித்து அங்கிருந்து மறைந்து போனது.
சித்தையா வந்து "நாம இப்பே கோபப்படக் கூடாது. அந்த குழந்தையை கொல்ல முடியலைன்னா என்ன இப்போதைக்கு அந்த குழந்தை நம்ம கண்ணு முன்னாடி இல்லை. அதுவே நமக்கு போதும். நாம உன்னோட பொண்ணை தூக்கிட்டுப் போய் கோலை எடுத்துட்டு வந்துடலாம் என்ன சொல்லுற பாண்டி" என்றான்.
"ஆமா பாண்டி நேரம் இல்லை. இந்த இரவே நாம எடுத்தாத்தான் அப்படி இல்லைன்னா உன் பொண்ணுக்கு இருபத்தி நாலு வயசு ஆகுற வரைக்கும் நாம காத்திருக்கணும். துர்கா பையன் செத்தா என்ன சாகலைன்னா என்ன அவனை கண்டுபிடிக்கிறோம்னு கோலை கோட்டை விட்டுடக் கூடாது" என்று கந்தையாவும் எடுத்துச் சொல்ல "சரி வாங்க கோவிலுக்குப் போகலாம். ஆனா ஒன்னு கோவில்ல நம்ம நினைச்ச மாதிரி நடக்கலைன்னா அப்பறமா வந்து இந்த ஓலையைப் படிங்க. வரம்பன் இங்கயே இருக்கட்டும்" என்று சொன்னவன் அகல்யாவினைத் தூக்கிக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தான்.
அங்கே அவர்களை எதிர் நோக்கி ஒளிந்தபடி காத்துக் கொண்டிருந்தனர் அமராவதியும் பெரியசாமியும்.
குழந்தையோடு உள்ளே நுழைந்தவன் அந்த குழந்தையை பீடத்தின் மேல் வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்து விட இருவரும் அவனுக்கு இரு திசையிலும் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு கோலை வெளியே எடுப்பதற்கான மந்திரங்களை சொல்லத் தொடங்கினார்கள்.
இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்த அமராவதி அங்கே இருந்து வெளியே வந்து பீடத்தை நோக்கி வந்தாள். குழந்தை கைகளை ஆட்டியபடி படுத்திருந்தது. கண்கள் முணுக்கென்று கண்ணீரை வெளியே விட பலவீனமாகிடாத அமராவதி என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள் அவர்களுக்கு நடுவே வந்து நின்றாள்.
கைகூப்பி நின்றவள் மாரியம்மனையும் சமாதி ஆகிவிட்ட அந்த சித்தனையும் நினைத்துக் கொண்டு "என்னோட உயிர் நல்ல விசயத்துக்காக போகுதுன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. இவங்களோட எண்ணம் எந்த காலத்துலயும் நிறைவேறக் கூடாது. என்னோட உயிர் போன பின்னும் நான் இங்கே உனக்குப் பக்கத்துலதான் இருக்கணும்னு நினைக்கிறேன். இங்கயே இருக்குற மாதிரி பெரியசாமி அண்ணன்கிட்ட தயார் பண்ணச் சொல்லிருக்கேன். அவரும் பண்ணிடுவார்... அப்பறம் என் பொண்ணை பத்திரமா துர்காகிட்ட சேர்ந்துடு... துர்கா ஆசைப்பட்ட மாதிரி அண்ணன் பையன் சக்திக்கே கல்யாணம் பண்ணித் தரட்டும். என் பொண்ணும் பசங்களும் சந்தோசமா இருக்கணும். அவளுக்கு ஆபத்து வரும்போது நான் மறுபடியும் வெளிய வர்றேன் விதி கூட போராடுறதுக்கு... என் உயிரை எடுத்துக்கோ அம்மா. சீக்கிரம் எடுத்துக்கோ" என்று அவள் சொல்ல வேலம்மாள் வேகமாக பதறியபடி மயங்கிக் கிடந்த மாரியப்பனை எழுப்பிக் கொண்டிருந்தாள்.
பெரியசாமியின் வீட்டில் தான் அவனை படுக்க வைத்திருந்தனர். நடந்த விசயங்கள் அவனுக்குத் தெளிவாகத் தெரியாது ஆனால் மருமகளுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் அவனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதிலே மயங்கி அவன் கோவிலை அடையும் முன் விழுந்து விட அவனை பெரியசாமி தான் தன் வீட்டிற்கு தூக்கி வந்தான்... வேலம்மா எவ்வளவு பேசியும் அவன் எழவே இல்லை..
கோவிலில் "என் உயிரை எடுத்துக்கோ.. சாமி எடுத்துக்கோங்க" என்றதும் அவள் உடலில் நெருப்பு பற்ற ஆரம்பித்தது. உடல் எங்கும் தீ பரவ அப்போதும் அவள் முகம் சின்னச் சிரிப்பினையே ஏந்தியிருந்தது.
தன் அம்மாவுக்கு ஆபத்து என்றதும் சட்டென்று குழந்தை வீறிட்டு அழ அதில் தங்கப்பாண்டி கண் திறந்தான். எதிரே நெருப்போடு நெருப்பாய் நின்றிருந்த தன் பத்தினியை அவன் பார்த்துவிட்டு பதறியபடி "அய்யோ அமராவதி என்ன காரியம் பண்ணுற" என்று அவள் அருகே வர நெருப்பின் வெம்மை அவனையும் தீண்டியது..
"வேண்டாம் அமராவதி இப்படிப் பண்ணாத" என்று அவன் அதிகமாக கதற நெருப்பு மெதுவாக அவள் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை தொட்டது..
உடனே அதை அவளது கழுத்தில் அணிவித்தவன் தேகம் நெருப்பால் பற்றி எரிவதைப் போல் எரியத் தொடங்கியது.
ஆ என்று அவன் அலற அவனைக் காப்பாற்ற கந்தையாவும் சித்தையாவும் முயல "நீங்க போங்க அந்த ஓலையை எடுத்து படிச்சுட்டு அதேமாதிரி பண்ணுங்க. என்னோட ஆசையை என் பையன வச்சு நிறைவேத்த வைங்க.. அவனுக்கு அவனோட அம்மா தங்கச்சி அண்ணன் இப்படி எதைப் பத்தியும் சொல்லாதீங்க. இருபத்தி நாலு வருசம் கழிச்சு அவனோட தங்கச்சியை வச்சே அந்த கோலை எடுக்க வைங்க... அதுவரைக்கும் என்னை அவன் பாக்கவே கூடாது" என்று அவன் பெரும் குரலில் கத்தியவன் "அமராவதி இந்த தடவை நீ என்னைத் தடுத்து நிறுத்திட்ட... உன்னை இன்னொரு தடவை ஜெயிக்க விடமாட்டேன் டி. என்னைத் தடுக்க முடிஞ்ச உன்னால உன் பையனை தடுத்து நிறுத்த முடியாது... பாக்கிறேன் என்ன பண்ணப் போறேன்னு... அதுவரைக்கும் ஆவியாவே அலைஞ்சுட்டு திரி. இதுக்கெல்லாம் உனக்கு உதவுன அந்த பெரியசாமியை நான் சும்மாவே விட மாட்டேன். வர்றேன் இருபத்து நாலு வருசம் கழிச்சு வர்றேன்" என்று சொன்னவன் அப்படியே மண்ணில் புரண்டு உருள ஆரம்பித்துவிட்டான்.
உடல் ஆங்காங்கே சிவந்து கொப்புளம் வர ஆரம்பித்தது...
இவன் தான் அலறிக் கொண்டிருந்தானே தவிர அவளிடம் இருந்து எந்தவித அலறல் சத்தமும் வரவில்லை சற்று நேரத்தில் சாம்பலாக மாறிவிட்டாள்.
அதன்பின் கொடூரமாய் வெந்து போயிருந்த தன் உடலை மெதுவாக இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான் தங்கப்பாண்டி...
அவன் சென்றதை பார்த்தபின் பெரியசாமி வெளியே வந்தான். சாம்பலின் மத்தியில் மின்னிக் கொண்டிருந்த அந்த திருமாங்கல்யத்தை எடுத்தவன் ஒரு சிவப்புநிறத் துணியில் அதைப் போட்டு முடிந்துக் கொண்டு அங்கே தூரத்தில் சின்னதாய் துளிர் விட்டு இருந்த அந்த அகல்மரத்தை நோக்கி நடந்தான்.
அதை கவனமாக தோண்டி அந்த சின்ன வேரில் அதை முடிச்சிட்டு கட்டினான். மீண்டும் மண்ணுக்குள் அதை புதைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவனின் கண்ணீர் துளிகள் அந்த மண்ணில் வந்து விழ அமராவதியின் ஆவி அங்கயே அடைபட்டுக் கொண்டது.
வெள்ளிமலையை நோக்கிச் சென்ற சத்ய ருத்திரன் தன் தம்பி மாதவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டான். தன் தாத்தா இறந்த பின்னும் தனியொருவனாய் தம்பியை வளர்த்தான்.
தப்பித்துச் சென்ற தங்கப்பாண்டியோ இந்த உலகத்தின் பார்வையில் படாமல் மறைந்து கொண்டான். அவனுக்கு இன்னும் நினைப்பு எல்லாம் கோரக்கனியின் கோல் மீதே இருந்தது.
கந்தையாவும் சித்தையாவும் மாய வரம்பனை பாண்டி சொன்னது போலவே வளர்க்கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில் தான் அந்த ஓலையை பார்க்கும் தருணம் அவர்களுக்குக் கிட்டியது.
அதில் தான் அந்த அகல்மரத்தை எடுக்க வேண்டும். அதிலிருக்கும் அந்த முடிச்சினை கைப்பற்றி அழிக்க வேண்டும். கூடவே மாதவனை கொன்று புதைத்துவிட்டு அதன் பின்னர் அந்த அகல்யாவை வரவைத்து கோலை எடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தது. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால் இருவரும் வரம்பனுக்கு அவர்களுக்குத் தெரிந்த மாயமந்திரங்களை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
சித்தையா மட்டும் ஊருக்குள் வரவில்லை. ஆனால் கந்தையா ஊருக்குள் தெய்வ பக்தியில் சிறந்து விளங்கி தான் சொன்னால் அந்த ஊர் கேட்டுக் கொள்ளும்படி வாழத் தொடங்கியிருந்தான். அவன் நடிப்பை உண்மை என அந்த ஊர் மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்..
அந்நிலையில் தான் சித்தையா வரம்பனுடன் தங்கப்பாண்டியைப் பார்க்க அடம்பிடித்துச் சென்றான். அவர்கள் எவ்வளோ மறுத்தும் அவன் சென்றான்... அங்கே உடல் வெந்து உருக்குலைந்து உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு ஓய்ந்து போயிருந்த தன் தந்தையை கண்டவனின் கண்கள் அவனையும் அறியாமல் கண்ணீரை சுரந்தது.
"அழாத வரம்பா" என்று நடுங்கியபடி கூறினான் தங்கப்பாண்டி.
"அப்பா இதுக்கெல்லாம் யார் காரணம் மட்டும் என்கிட்ட சொல்லுங்க. நான் உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்" என்றான் அவன் பாண்டிக்கு சற்றும் குறையாத ஆத்திரத்துடன்.
"பண்ணனும் வரம்பா... அந்த பெரியசாமி தான் இதுக்கெல்லாம் காரணம் அவனை மொத கொண்ணுடு. என்னைப் பத்தி தெரியாம என்கிட்ட மோதிட்டான். அவன் சாகணும். அவனோட சாவு ரொம்ப மர்மமா கோரமா இருக்கணும்" என்று பாண்டி மனதுக்குள் இத்தனை நாளாய் புதைத்து வைத்திருந்த வன்மத்துடன் சொல்ல
"உங்க ஆசையை நான் நிறைவேத்தி வைக்கிறேன் ப்பா. அவன் செத்துட்டான் அப்படிங்கிற செய்தியோட வர்றேன்" என்று சொன்னவன் பெரியசாமியை கொல்லுவதற்கு தகுந்த நேரம் பார்த்துக் காத்திருந்தான்.
அன்றைய இரவு பக்கத்து ஊருக்கு சாதகம் பார்க்கச் சென்று விட்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தான் பெரியசாமி. அவன் வருவதை தூரத்தில் இருந்தே வரம்பன் பார்த்துவிட்டான். அவன் கண்கள் எரிமலையின் சீற்றத்தை உள்ளடக்கிக் கொண்டு அவனையே உற்றுப் பார்த்தது.
எங்க அப்பா இந்த நிலையில இருக்குறதுக்கு காரணம் நீதான. இதுக்கான விலை உன்னோட உயிர். அதை எடுத்தாத்தான் எங்க அப்பா கொஞ்சமாவது நிம்மதியாக இருப்பார் என்று தனக்குள்ளயே முணங்கிக் கொண்டவன் அவன் வழியில் வந்து நின்றான்.
திடீரென்று தன் அருகில் வந்து நிற்கும் அந்த சிறுவனை கண்டவன் முதலில் திகைத்து பின்னர் அமைதியானான். அவன் தான் யாரென்று பெரியசாமிக்கு தெரியுமே...
"என்ன வரம்பா வழியை மறித்து நிற்கிறாய். தள்ளிப் போ" என்று பெரியசாமி சொல்ல "தேவையில்லாம எங்க வழியில குறுக்க வந்தது நீதான். நீ சொன்னதும் நான் விலகி போயிடணுமா" என்று வரம்பன் கேட்க இவன் ஏதோ ஒரு முடிவோடு வந்திருக்கிறான் என்று புரிந்து போனது பெரியசாமிக்கு.
"தப்பு பண்ணவங்ககிட்ட நான் சரியா தான் பேசிட்டு இருக்கேன்" என்றான் கோபத்துடன் அவன்.
"உங்க அப்பா பண்ணிட்டு இருக்க வேலையைப் பத்தி உனக்குத் தெரியாது. அது தப்புன்னு தான் நான் அதை தடுக்க..." என்று பேசி முடிப்பதற்கு முன் "ஷ்ஷ் உன்கிட்ட நான் எந்த விளக்கமும் கேட்டு வரலை. உன் உயிரை எடுக்கணும்னு தான் நான் வந்தேன்" என்றவன் தன் கழுத்தில் இருந்த கருப்பு நிற கயிற்றைப் பிடித்துக் கொண்டு பெரியதாய் சத்தம் இட பெரியசாமியின் கைகளை யாரோ இறுக்கமாக பிடித்தது போல் இருந்தது.
தன் முகத்தைத் திருப்பி அவன் பார்க்க அவன் கண்களுக்கு இரண்டு பக்கமும் இருந்து காட்டேரி பிசாசு தெரிந்தது.
"வேண்டாம் விட்டுடு வரம்பா. நீயும் தப்பு பண்ணாத" என்று அவன் சொல்ல "இப்படித்தான் எங்க அப்பாவும் சொன்னார். அப்போ நீ கேக்கலை. இன்னைக்கு நானும் கேக்க மாட்டேன்" என்று சொல்ல பெரியசாமி உடனே கண்களை மூடி தன்னை காப்பாற்றிக் கொண்டு மந்திரங்களை சொல்லத் தொடங்கும் முன்பே அவனை இரண்டு காட்டேரிகளும் மேலே அலேக்காக தூக்கிக் கொண்டு அப்படியே டொம்மென்று போட்டது. விழுந்த வேகத்தில் தலை நச்சென்று அங்கிருந்த பெரிய பாறையின் மீது மோதியதில் அவன் தலை பிளந்து அந்த இடத்திலே உயிரை விட்டிருந்தான்.
அதைக் கண்டு ரசித்த வரம்பன் குரூர திருப்பதியுடன் தன் அப்பாவைத் தேடிச் சென்றான். இதை தூரத்தில் இருந்து பார்த்த சத்ய ருத்திரன் வேகமாக தன் அன்னையை நோக்கி ஓடினான். அவனால் பெரியசாமியின் இழப்பினை தாங்க முடியவில்லை.
அன்று வெள்ளிமலைக்குச் சென்றவன் பெரியசாமியின் வழிகாட்டுதலோடு தான் பல வித்தைகளை கற்றுக் கொண்டான். அவனே முயற்சி செய்து இன்னும் இன்னும் மாய மந்திரங்களைக் கற்றுக் கொண்டான். தங்கப்பாண்டியின் ரத்தம் என்பதால் சொல்லவும் வேண்டுமா... விரைவிலேயே அனைத்தையும் முடித்துவிட்டான். ஆனால் கூடவே அமராவதியின் நல்ல மனசும் அவனிடம் இருந்ததால் அவனால் தவறான வழிக்கு போக முடியவில்லை. ஆனால் மனம் என்னவோ இறுகி கடினப்பட்டு இருந்தது. காரணம் தன் அன்னை அந்த மரத்தினுள் அடைபட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்ததால்... அதைத் தீர்த்து வைக்கும் வரை அவன் இந்த மாதிரியான வேலையை செய்வதை என்றுமே நிறுத்தப் போவதில்லை.
அந்த அகல்மரம் இப்போது சற்று வளர்ந்திருந்தது. நேராக வந்தவன் அம்மா என்று அதன் கீழே அமர்ந்தான். வளர்ந்திருந்த கிளைகள் அவன் தலை தொட்டது. அதில் சிலிர்த்தவன் "அம்மா என்னை விட்டு நீங்க இங்க வந்துட்டீங்களே. உங்களைப் பாக்காம எப்படி நான் இருக்குறது. நடக்குற விசயங்கள் என்னை ரொம்ப வேதனைப் படுத்திட்டு இருக்கு" என்று வேதனையுடன் சொல்ல "என் பையன் வேதனைப்பட்டா அதை என்னால தாங்க முடியாது சத்யா. என்னால இப்போதைக்கு வெளிய வரமுடியாது. சரி தங்கச்சி எப்படி இருக்கா" என்றாள் அமராவதி.
"துர்கா அம்மா நல்லாப் பாத்துக்கிறாங்கன்னு பெரியசாமி ஐயா சொன்னார். அவளைப் பாக்கும் போது உங்களைப் பாக்குற மாதிரியே இருக்காம். ஆனா என்னால தான் அங்க போக முடியலை" என்று அவன் கலங்க "அவளை நீ பாக்க வேண்டாம். அப்பறம் தேவையில்லாத பிரச்சனை தான் வரும் சத்யா. கொஞ்ச நாளாகட்டும். நானும் வெளிய வந்துடுவேன். அதுக்கப்புறம் பாத்துக்கலாம்" என்றாள் அமராவதி.
"சரி அம்மா... ஆனா இன்னொரு விசயம் தம்பி இப்படி மாறிட்டானே. அவன் பெரியசாமி ஐயாவை..." என்று அவன் இடையிலேயே நிறுத்த என்ன நடந்திருக்கும் என்று அமராவதிக்கு புரிந்து போனது.
"என்ன செய்ய உங்க அப்பா அவனை அப்படி மாத்திட்டார்... இதுக்கெல்லாம் இப்போ நீ வேதனைப்படாத... இது இப்படித்தான் நடக்கும்னு ஏற்கனவே எங்களுக்கும் தெரியும்... நானும் அண்ணாவும் அதைப் பத்தி என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை" என்றாள் அவள்.
"அவன்கிட்ட கூட நெருங்க முடியலை அம்மா. நானும் அவன்கிட்ட பேசிடலாம் அவனை மாத்திடலாம்னு பாத்தா அந்த ரெண்டு பேரும் அவனை நெருங்கவிடாம காவலா இருக்காங்க"
"விடு சத்யா. விதி என்ன மாதிரி இருக்கோ பாக்கலாம். நான் வெளிய வரும் போது இதையெல்லாம் பாத்துக்கிறேன். அதுவரைக்கும் நீ உன் இடத்துலயே இரு. இங்க வராத... அப்பறம் வேலம்மா ஆவியை வேற அவனுங்க அடைச்சு வச்சுட்டானுங்க போல. அதை விடுவிக்க என்ன மார்க்கம் அப்படின்னு பாரு. இப்போ நீ இங்க இருந்து கிளம்பு தம்பியை ஜாக்கிரதையா பாத்துக்கோ" என்றாள் அமராவதி... அதைக் கேட்டவன் அங்கிருந்து அமைதியாக சென்றுவிட்டான். அன்றிலிருந்து உள்ளே அடைந்து இருந்தவளுக்கு இப்போதுதான் விடுதலை கிடைத்திருக்கிறது.
இவ்வாறு நடந்து முடிந்த நிகழ்வுகளை கண்ணீர் வழிய சொன்னதும் ரத்னாவுக்கும் கண்ணீர் வந்துவிட்டதை. காரணம் தன் அப்பாவை அந்த வரம்பன் கொடூரமாக கொன்றுவிட்டானே என்று தான். இது ஏற்கனவே பூசாரியின் வாயிலாக அவனுக்குத் தெரியும் தான். ஆனால் மீண்டும் ஒரு முறை கேட்கையில் நெஞ்சை போட்டு அறுக்க ஆரம்பித்து விட்டது. சக்தி அவன் தோளில் கைப்போட்டு "விடு டா பீல் பண்ணாத" என்றான் ஆறுதலாக.
அனைவரும் இதைக் கேட்டு ஆளாளுக்கு இடிந்து போய் அமர்ந்திருந்தனர். அகல்யாவோ தேம்பி தேம்பி அழத் தொடங்கிவிட்டாள். அவளது அம்மாவின் தியாகம் அவளுக்கு மலை போல் உயர்ந்து தெரிந்தது.
"அண்ணா அம்மா எவ்வளவு பெரிய விசயம் பண்ணிருக்காங்க. அவங்க உயிரைக் குடுத்து இதைப் பண்ணிருக்காங்க. எனக்கு இதை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு" என்று கண்ணீரோடு சொல்ல அவள் கண்ணீரைத் துடைத்த சத்யன் "அழாத அகல்யாம்மா. அதை எங்களால தாங்கிக்க முடியாது. நீ அப்படியே அம்மா மாதிரியே இருக்க தெரியுமா. எனக்கு உன்னைப் பாக்கும் போது எல்லாம் அம்மாவை பாத்த உணர்வுதான் உள்ளுக்குள்ள இருக்கும்" என்றான்.
"அண்ணா அண்ணா" என்று அவள் அழைக்க "சொல்லும்மா" என்றான் அவன். "அண்ணா இவ்வளவு விசயம் நடந்துருக்கு. அப்பறமும் ஏன் அண்ணா இவ்வளவு நாள் பொறுமையா இருந்தீங்க. ஏன் ஆப்போசிட்டா எல்லாத்தையும் பண்ணீங்க..." என்றாள் சந்தேகமாக
"எதையும் நான் எதிரா பண்ணலை டா அகல்யா... சில விசயங்கள் நேரடியா உங்களுக்குத் தெரிய கூடாதுன்னு தான் நாங்க நினைச்சோம்.. உனக்கு இருபத்தி நாலு வயசான உடனே நீ மொத தடவை ஆலமரத்தைத் தேடிப் போனயே அது நான் சொல்லித்தான். அங்க போனா அது சக்திக்குத் தெரிய வரும்னு நினைச்சுத்தான் உன்னை அங்க வர வச்சேன். நாங்க நினைச்ச மாதிரி சக்தியும் உன்னைப் பார்த்தான். ஆனா அதுக்குள்ள இந்த விசயம் அந்த வரம்பனுக்குத் தெரிஞ்சுடுச்சு... உடனே அவன் அன்னைக்கே ஆலமரத்துக்கு முன்னாடி பூசை பண்ணி வேற ஒரு ஆவியை வச்சு சக்தியை மிரட்ட ஆரம்பிச்சுட்டான். அப்படி பண்ணா சக்தி இந்தப் பிரச்சனையை தீர்க்க என்ன பண்ணனும்னு யோசிப்பான். அப்போ அவனை வச்சே உன்னை வரவச்சு கோலை எடுத்துடலாம்னு நினைச்சுட்டு இருந்தான். அவன் நினைச்ச மாதிரியே சக்தியும் இந்த பிரச்சனையை எப்படி தடுக்குறதுன்னு யோசிச்சுட்டு இருக்கும் போது இன்னும் சில அமானுஷ்யமான விசயங்கள் அவனைச் சுத்தி நடக்க ஆரம்பிச்சது. அந்த நேரத்தில தான் வேலம்மாள் அத்தையோட ஆவியையும் கட்டுப்பாட்டுல இருந்து வெளிய வந்தாங்க.. அப்போத்தான் அந்த மரத்தை எடுக்குற பேச்சும் வந்தது. உண்மையிலே அந்த மரத்தை அங்க இருந்து அப்புற படுத்துனாத்தான் கோவில்ல இருக்க கோலை எடுக்க முடியும்னு அவங்களுக்குத் தெரியும். கூடவே இன்னொரு காரணமும் இருந்தது. அங்க புதைஞ்சுருந்த அம்மாவோட தாலி. அதனால் தான் கந்தையா மரத்தை எடுத்தே ஆகணும்னு பேசுனார். என்னதான் கந்தையா சொன்னதை சக்தி நம்புன மாதிரி தெரிஞ்சாலும் மாப்பிள்ளைக்கு அவங்க மேல சந்தேகம் இருந்தது. அது எங்களுக்கும் தெரிஞ்சது. அதனாலேயே தான் நாங்க இவ்வளவு நடந்த பிறகும் தைரியமா இருந்தோம்.. ஆலமரத்துல இருந்து அம்மா வெளிய வந்த பிறகும் உன்னை வச்சு சக்தி ரத்னாவைப் பயமுறுத்துனாங்க. அப்போத்தான் நீங்க கந்தையா பின்னாடி போவீங்கன்னு. ஆனா நம்ம மாப்பிளை விவரமா வேலம்மா அத்தையை தேடி போனாரு. அவங்களும் நாங்க சொன்னதால சக்தி முன்னாடி வராம இருந்துட்டாங்க... அடுத்து ரத்னா சாதகம் பாக்குறேன்னு போயி அதை தடுத்து... உன்னை வெளிய கூட்டிட்டு வர முயற்சி பண்ணி அப்பப்பா எவ்வளவு போராட்டம் தெரியுமா? உன்னை வெளிய வர விடாம மாயவரம்பன் தான் வாசல்ல எந்திரம் வச்சு தடுத்து நிறுத்திட்டான். எல்லாத்தையும் நமக்கு சாதகமா மாத்தனும்னா அது இந்த ஐயனால தான் முடியும்னு நாங்க பூசாரியை சந்திக்க வைக்குற திட்டத்தை போட்டோம். அதுதான் இப்போ சரியா நடந்து எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்கு. அதே மாதிரி மாதவனை அவங்க கூட்டிட்டுப் போய் கொலை பண்ண முயற்சி பண்ணாங்க. ஏன்னா அவன் இருந்தா அவங்க திட்டம் வெற்றியடையாது இல்லையா! ஆனா நான் அவனைத் தடுத்து நிறுத்திட்டேன். அப்பறமும் அவங்க முயற்சி செய்யுறதை மட்டும் நிறுத்தலை. அம்மாவோட தாலியை எடுத்துடனும்னு சக்தி ரத்னாவை அனுப்பி வச்சாங்க. ஆனா அதை மாதவனை வச்சு தடுத்திட்டோம். இப்போ எல்லாருமா சேர்ந்து கோவிலுக்கும் வந்தாச்சு. வந்த பின்னாடி மனசும் நிறைஞ்சு போச்சு. கூடவே உன் கல்யாணத்தையும் பார்த்தாச்சு. எங்க எல்லாருக்கும் பரம திருப்தி" என்றான் சத்யன்...
அவனுடன் பேசிக் கொண்டிருக்கையிலே ஒதுங்கி நின்றிருந்த மாதவனைக் கண்ட அகல்யா மாதவா என்று அழைக்க தங்கச்சி என்றான் அவனும் சத்யனைப் போல... என்னதான் இருவரும் ஒரே நாளில் பிறந்தாலும் அவளுக்கு ஒரு நிமிடம் முன்னதாக பிறந்தவன் மாதவன் தான்.. அதுமட்டும் இல்லாமல் தங்கை என்று விளிக்கும் போது அந்த உணர்வு இன்னும் உன்னதமானதாக இருப்பதாய் அவனுக்குள் தோன்றியது...
"அம்மா பாசத்தை உனக்கு கிடைக்க விடாம நான் பண்ணிட்டேன்னு என் மேல கோபமா இருக்கயா டா" என்று அவள் கேட்ட "ஏய் லூசு யார் சொன்னது எனக்கு அம்மா பாசம் கிடைக்கலைன்னு. இதோ நிக்குறானே நம்ம அண்ணன் அவன் தான் எனக்கு அம்மா. அவன் பாசத்தைப் பாக்கும் போது அம்மா இல்லைங்கிற வருத்தம் எனக்கு எப்பவுமே வந்தது இல்லை டா" என்றான்.
"இருந்தாலும்"என்று அவள் கலக்கத்துடன் பேச
"இங்க பாரு டா.. இப்போ என்னதான் நான் தள்ளி இருந்தாலும் அவங்க நம்ம அம்மா தான். அவங்க எங்க இரண்டு பேரையும் சேர்த்து ஏத்துக்கிட்டா ஏத்துக்கிடட்டும். இல்லைன்னா நாங்க தனியா இப்படியே இருந்துக்கிறோம்" என்று சொல்லும் போதே அவன் கன்னத்தில் பட்டென்று அடி விழுந்தது. யார் அடித்தது என்று அனைவரும் பார்க்கையில் துர்கா தான் அந்த வேலையை செய்திருந்தாள்...
"அம்மா" என்று அவன் கண்கள் கலங்க அடிக்க "இப்போத் தெரியுதா நான் யாருன்னு" என்று கேட்டாள் துர்கா ஆவேசமாக...
"அம்மா" என்றான் அவன் மீண்டும். "எப்படி டா அப்படி ஒரு வார்த்தையை சொல்லுவ அதுவும் என்னைப் பார்த்து... அமராவதி எனக்காக என் புள்ளையை காப்பாத்துனா... எனக்கும் முன்னாடியே அது தெரியும். பிரசவம் நடக்கும் போதே அவ என்கிட்ட சொல்லிட்டா. அன்னைக்கு இருந்தே நான் எனக்கு நாலு பசங்க அப்படின்னு தான் நினைச்சு வாழ்ந்திட்டு இருக்கேன். நீ என்னென்னா நான் ஏத்துக்க மாட்டேன் தனியா போய் இருந்துக்கிறோம்னு சொல்லுற... போடா" என்று சொல்ல "அம்மா அம்மா அவன் சின்னப் பையன் தெரியாம பேசிட்டான் அவனைப் போய் அடிச்சுட்டு... விடுங்க அம்மா" என்றான் சத்யன் துர்காவின் தோளைப் பிடித்துக் கொண்டு.
"எப்படி பேசுறான் பாரு டா... நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரியாடா... எப்பவுமே மாரியாத்தாகிட்ட நான் வேண்டுற ஒரே வேண்டுதல் என்னென்னா வரம்பனும் மனசு மாறி வந்து நாலு பிள்ளைகளும் ஒற்றுமையா இருக்கணும்னு தான்" என்று துர்கா சொல்ல
"தெரியும் மா ஆன மாதவன் பாவம் அவன் தெரியாம பேசிட்டான். விட்டுருங்க மா" என்று அகல்யா சொல்ல துர்கா அமைதியாகி விட்டாள். மாதவன் வந்து "சாரிம்மா" என்று கட்டிக் கொண்டதும் "இல்லைடா மாதவா நான்தான் சட்டுன்னு கோபப்பட்டுட்டேன்" என்றாள் துர்கா.
"உங்களுக்கு அதுக்கு உரிமை இருக்கு ம்மா" என்றான் மாதவன்... இப்படி அழுகையே அங்கே பிரதானமாக இருக்க சூழ்நிலையை மாற்றும் பொருட்டு "அத்தை கவலையேப்படாதீங்க வரம்பனும் மனசு மாறி இங்க வந்துடுவான் நாம எல்லாரும் சந்தோசமா இருப்போம்" என்றான் சக்தி.
"நடக்குமா சக்தி" என்று அகல்யா ஆர்வமாக கேட்க "அதை நடத்தி வைக்க உள்ள ஒருத்தன் இருக்கானே. அவனே எல்லாத்தையும் பாத்துக்குவான் நமக்கு எதுக்கு அந்த கவலை" என்று அவன் சிரிக்க அந்த சிரிப்பு அங்கிருந்த அத்தனை பேரையும் தொற்றிக் கொள்ள அனைவரது மனதும் நிறைந்து போனது...
அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஐயனின் மனமோ வெகுவாக குளிர்ந்து போனது. இதைத்தானே அந்த அழகனும் வெகுகாலமாக எதிர்பார்த்திருந்தான். நினைத்தது நடந்ததில் அவனுக்கும் மகிழ்ச்சிதான். இனிதான் அவனின் ஆட்டமும் ஆரம்பமாகப் போகிறது...
"அம்மா" என்று சக்தி மற்றும் அகல்யா அவர்கள் இருவரையும் அழைக்க சக்தியைப் பார்த்த வேலம்மாள் "இனி எது நடந்தாலும் உனக்குத் துணையா நம்ம ஐயன் இருப்பாரு டா.. நான் வர்றேன்" என்க மாரியப்பன் வேகமாக வந்து "வேலம்மா" என்றார்.
"உங்களை எப்படியாவது கோவிலுக்கு வரவச்சுடணும்னு தான் நாங்க இவ்வளவு தூரம் போராடுனோம். அது நல்ல படியா முடிஞ்சுருச்சு... அதுவரைக்கும் உங்களுக்குத் துணையா இருக்கணும்னு தான் நான் நினைச்சு இங்கயே இருந்தேன். ஆனா என்னையும் வர விடாம மயானத்துலயே அடைச்சு வச்சுட்டான் அந்த கந்தையா.. அடுத்து சத்யன் தான் வந்து என்னை விடுவிச்சான். இனி எனக்கான வேலை இங்க எதுவும் இல்லை. நான் கிளம்புறேன். சக்தி அகல்யாவை நீ நல்லபடியா பாத்துக்கோ. அந்த ஐயன் மனசு வைச்சா நானே உனக்கு மகளா வந்து பொறக்குறேன்" என்று சொன்ன வேலம்மாள் அங்கிருந்து மறைந்து விட்டார்.
இத்தனை நாளும் இறந்து போன பின்பும் தனக்கு ஆறுதலாக இருந்தவள் இப்போது மீண்டும் பிரிகிறாள் என்ற வருத்தம் இருந்து போதும் அவள் மீண்டு(ம்) வருவேன் என்று சொன்னதில் சற்று தேறி தெம்போடு நின்றிருந்தனர் சக்தியும் அவன் அப்பாவும்.
அமராவதியின் கரத்தைப் பிடித்து அகல்யா அழத் தொடங்கும் முன் துர்கா வந்து அமரா என்று கதறினாள்.
"அழாத துர்கா"
"என்னென்னவோ நடந்துடுச்சு. நான் உன்னை இப்படிப் பாப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை டி. இவ முகத்தைப் பார்த்து தான் அப்பப்போ என்னை நானே சமாதனப்படுத்திக்குவேன். இப்போ இவனுங்களை பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம். இதே மாதிரி வரம்பனும் திரும்பி திருந்தி வந்தா என் நாலு புள்ளைங்களோட நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன்" என்று துர்கா சொல்ல "ஐந்து பசங்க துர்கா நாலு இல்லை என்றாள் அவள் ரத்னாவைப் பார்த்துக் கொண்டு.
அதைக் கேட்டதும் ரத்னாவே ஒரு நிமிடம் சிலிர்த்து விட்டான். அம்மா என்று அழைக்க கூட அவனுக்கு வாய் வரவில்லை. "துர்காம்மா என்னை மறந்தாலும் நீங்க மறக்கலையே ம்மா. எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. மனசு குளிர்ந்து போச்சு" என்றான் ரத்னசாமி.
"ரத்னா அம்மாவை தப்பா நினைச்சுக்காத" என்று அகல்யா சொல்ல "ச்சே ச்சே நான் போய் அப்படி நினைப்பேனா.. அம்மாவைப் பத்தி எனக்குத் தெரியாதா..." என்றவன் கன்னத்தைப் பிடித்தபடி "நானும் மாதவன் மாதிரி எதையாவது சொல்லி அடிவாங்க விரும்பலை" என்று சற்று தள்ளி நின்று கொண்டு கவனமாக சொல்ல மறுபடியும் அனைவரும் சிரித்து விட்டார்கள். அதைக் கண்டு துர்கா அவனை முறைத்தாலும் பக்கென்று சிரித்துவிட்டார்..
"அகல்யாம்மா" என்று தன் அருகே இருந்தவளை அமராவதி பாசத்துடன் அழைக்க "அம்மா" என்றாள் அவள்.
தன் கையினால் அகல்யாவினைப் பிறந்த உடனே தொட்டுப் பார்த்தது தான். அதன் பிறகு அவள் இப்போதுதான் தனது குழந்தையை தொடுகிறாள். அது அமராவதிக்கு இன்னும் சந்தோசத்தை அளித்தது. அதில் அகல்யாவின் முகமும் மலர்ந்தது. இந்த சந்தோசம் இனிமேலும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இப்போது அமராவதியின் எண்ணமாக இருந்தது.
சற்று நேரத்தில் அங்கேயே துர்கா சமைக்க ஆரம்பித்துவிட அகல்யா தன் அம்மாவுக்கு உதவி செய்ய தொடங்கினாள். சக்தியின் கண்கள் தனக்கு சொந்தமானவளையே வட்டமிட்டு கொண்டிருந்தது. அதைக் கண்ட மாதவன் "ஏய் அகல்யா" என்றான் மெதுவாக.
"என்னடா" என்றாள் அவள்.
"அங்கபாரு மச்சான் உன்னையே பாத்துட்டு இருக்கார்" என்று மாதவன் உரைக்க "அதுக்கு என்ன பண்ணனும்" என்றாள் அவள் அரிசியை கழுவியபடி.
"என்ன பண்ணனும்னு என்கிட்ட கேக்குற. போய் அவர்கிட்ட பேசு. ஆக்சுவலா அதுக்குத்தான் அவர் பாத்துட்டே இருக்கார்" என்றான் அவன்.
"அப்பறமா பேசிக்கிறேன் டா வேலை நிறைய இருக்கு. சோறு சாப்பிட வேண்டாமா" என்றாள் இவள்.
"ஏய் மச்சான் பாவம்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னமோ மாஸ்டர் செஃப் ரேஞ்சுக்கு பில்டப் விட்டுட்டு இருக்க... மொத உனக்குச் சமைக்கத் தெரியுமா" என்று இவன் கேட்க ம்ஹூம் என்று தலையாட்டியவள் "ஆனா மச்சானுக்குத் தெரியும். அதனால கஷ்டம் இல்லை" என்றாள்.
"அப்போ அங்க அந்த மனுசன் நொந்து போனாலும் பரவாயில்லைன்னு தான் நீ சீன் போட்டுட்டு நின்னுட்டு இருக்கயா" என்றதும் "அவ்வளவு அக்கறை இருந்தா நீ போய் பேசுடா" என்றாள் அவள்.
"பேசலாம். ஆனா என் கழுத்துல அவர் தாலி கட்டலையே உன்னைத் தான கட்டிருக்கார். நான் மட்டும்..." என்று அவன் இழுக்க "என்னடா இழுக்குற" என்று கேட்டவளிடத்தில் இப்போது பொறாமை எட்டிப் பார்த்தது.
"நான் மட்டும் பொண்ணா பொறக்காம போய்ட்டேன். அப்படி பொறந்துருந்தா நானே மச்சானை கல்யாணம் பண்ணிருப்பேன்" என்றான்.
"ஏன்டா இந்த விபரீத ஆசை" என்றாள் அவள் முறைத்துக் கொண்டு. "மச்சான் எவ்வளவு ஹேண்ட்சமா இருக்கார் தெரியுமா. நீ ரொம்ப லக்கி" என்றதும் "உண்மையிலே நான் லக்கிதான் டா... ஆனா அது அவன் ஹேண்ட்சமா இருக்குறதால நான் சொல்லலை. அவனை மாதிரி நல்ல மனசு யாருக்கும் இருக்காது..." என்றாள் அவள் காதலாக...
"அதான் சொல்லுறேன் அந்த நல்ல மனசு கஷ்டப்படக் கூடாது. நீ போய் பேசிட்டு இரு" என்று சொன்னவன் அரிசியை வாங்கிவிட்டு "அம்மா என்ன பண்ணனும்னு சொல்லுங்க நான் பண்ணுறேன்" என்று வேலையில் பிசியாகிவிட அவளோ சக்தியின் அருகே சென்றாள்.
சட்டென்று திரும்பிய மாதவன் "எல்லாத்தையும் நோட் பண்ணிக்கோங்க மச்சான். திருப்பி செய்யணும்ல" என்றான் அவன் சத்தமாக...
இவளோ "எதுக்குப் பாத்துட்டே இருந்தீங்க சக்தி. இந்த மாதவன் வேற பொண்ணா பொறந்திருந்தா உங்களையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு திரியுறான். எதுக்கும் கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க..." என்றாள்.
"இருந்துட்டா போச்சு" என்று சொன்னவன் அப்படியே அவள் கைப்பிடித்து அங்கிருந்து நடந்து சென்றான். கோவிலுக்கு முன்னதாக அகண்டு விரிந்து ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அகல்யா வேகமாக "அங்க போலாமா" என்றாள். அவனும் "சரி வா" என்று ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றான்.
எப்பவாவது ஆட்கள் வரும் கோவில் என்பதால் ஆற்று நீர் தெளிவாகவே இருந்தது. ஆற்றங்கரையும் குப்பைகள் எதுவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. தண்ணீரை பார்த்ததும் அவள் ஆற்றில் இறங்கிக் கொண்டாள்.
அவளின் சந்தோசத்தைப் பார்த்த சக்தியும் வேட்டியை மடித்துக் கொண்டு உள்ளே இறங்கினான்.
"சக்தி செமையா இருக்குல" என்று அவள் சொல்ல "ஆமா" என்றான் அவனும். கரையோரமாக இருந்த தென்னைமரங்கள் அந்த இயற்கைக்கு இன்னும் பொலிவு சேர்த்திருந்தது.
"சக்தி எனக்கு ஆறுன்னாலே பிடிக்கும். அங்கயே இருக்கனும்னு மனசு சொல்லிட்டே இருக்கும். சின்ன வயசுல ரத்னா நீ நான் எல்லாரும் சேர்ந்து நம்ம ஊரு ஆத்துல எவ்வளவு நேரம் குளிச்சுருக்கோம். ஆனா அதையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்த்தா கனவு மாதிரி இருக்கு இல்லை. ஏன்னா இப்போ இருக்குற நம்ம ஊரு ஆறு சாக்கடையா மாறி ரொம்ப நாளாகிடுச்சு... ஒரு பக்கம் குப்பை. ஒரு பக்கம் கழிவு நீர். இன்னொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இப்போ ரொம்ப பெருசா மண்டிப் போயிருக்கும் புதர் இப்படின்னு மாறி ஆற்றோட அந்த அழகே சீர்குலைந்து போயிருச்சு. அந்தப்பக்கம் போகும் போது மனசு ரொம்ப வேதனைப்படும் சக்தி. நாம ரொம்ப சந்தோசமா விளையாடி திரிஞ்ச ஓர் இடம் நமக்கு அடுத்து வரப் போற குழந்தைகளுக்கு கிடைக்காமலே போயிடுமா" என்று அவள் வருத்தத்துடன் கேட்க அவனோ "நமக்கே இப்போ திரும்பி கிடைக்கலை. இதுல எங்க அடுத்த சந்ததிக்கு கிடைக்கும். பேசாம வளராமலே இருந்திருக்கலாம் அகல். இயற்கை அப்படியே இருந்திருக்கும்" என்றான் அவன்.
"இங்க இருக்குற மாதிரி நம்ம ஆறும் மாறுனா நல்லா இருக்கும் சக்தி. அப்போத்தான் நம்ம பசங்ககிட்ட இந்த இயற்கையை காமிச்சு ரசிக்கச் சொல்லலாம்" என்று அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டு இருக்க சத்யன் தூரத்தில் இருந்து "அகல்யா இங்க வாங்க" என்று சத்தமிட "கூப்பிட்டாங்க வா போகலாம்" என்று அவன் அவளை அழைத்துக் கொண்டு கரையேறினான்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க நேராக சத்யனிடம் வந்த சக்தி "ரத்னாவோட தோட்டத்தில வச்சு என்னைக் கொல்லப் பாத்தது வரம்பனா மச்சா" எனக் கேட்க "இல்லை மாப்ள.அது என் கட்டுப்பாட்டுல இருக்க ஆவி" என்றான் அவன்.
"நினைச்சேன்யா மச்சான் நீதான் பண்ணிருப்பன்னு"
"எல்லாமே ஒரு செட்டப் மாப்ள. அப்போத்தான் நீ ஏதாவது பண்ணுவ. அதை அவங்க அவனுங்களுக்கு சாதகமா மாத்திக்க முயற்சி பண்ணுவாங்க. அதை நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்கலாம்னு நினைச்சு பண்ணோம்.. ஆனா நீ புத்திசாலி மாப்ள. கந்தையாவை பத்தி சரியா புரிஞ்சுக்கிட்ட. அதை நாங்களே எதிர்பார்க்கல தெரியுமா" என்றான் அவன்.
"அதை விடு மச்சான். இனி வரம்பன் சும்மா இருக்க மாட்டான். பெருசா எதாவது ப்ளான் பண்ணுவான். என்ன பண்ணுறது"
"அதைப் பத்தியெல்லாம் நீ எதுக்கு மாப்ள கவலைப்படுற. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம். நீ போய் நிம்மதியா இரு"
"இங்க ஹீரோ நான் தான் மச்சான்" என்று அவன் சொல்ல மாதவன் அங்கிருந்து கொண்டு "என்ன மச்சான் என்ன சொன்னீங்க" என்றான்.
"மச்சான் கிட்ட சும்மா பேசிட்டு இருந்தேன் மாப்ள" என்று அவன் சொல்ல சத்யன் அவன் தோளைத் தட்டிவிட்டு "எப்பவும் நீ தான் ஹீரோ மாப்ள. ஆனா இன்னைக்கு இதுக்கு மேல யோசிக்காத" என்றான்.
அங்கோ கோபத்தில் தன்னருகே இருந்த கூரிய கத்தியை எடுத்து தனது கையினை கிழித்துக் கொண்டான் மாயவரம்பன். தேகத்தை விட்டு வெளியே சிந்தும் சிவப்பு நிற இரத்தத்தை பார்க்க பார்க்க அவனுக்குள் குரோதம் கொப்பளித்தது.
யாரோட காவல் அவங்களுக்கு கிடைக்கக் கூடாதுன்னு நான் இத்தனை நாளாய் நினைச்சுட்டு இருந்தேனோ அது அவங்களுக்கு கிடைச்சுடுச்சு. எத்தனையோ பண்ணியும் அந்த சத்யனும் அவங்க அம்மாவும் அதைத் தடுத்து நிறுத்திட்டாங்களே.. இனி எப்படி நான் எங்க அப்பா முகத்துல போய் முழிப்பேன் என்று நினைக்கையிலே அவனுக்கு மிகவும் வெட்கமாக போய்விட்டது. தோற்றுப் போய்விட்டு நிற்கும் என்னை காண்கையில் அப்பாவின் தோல்வி தானே அவருக்குக் கண்முன் தோன்றும்... இதை என்னால தாங்க முடியாதே என்று அவன் நினைக்கையில் கந்தையாவும் சித்தையாவும் அங்கே வந்தார்கள்.
"வரம்பா உனக்கு புத்தி கெட்டுச்சா என்ன. கையைப்பாரு இரத்தம் வருது" என்று கந்தையா கேட்க அவனோ "அப்பா என்ன சொன்னாரு" என்றான். உடனே சித்தையா வேகமாக "உங்க அப்பா இது ஏற்கனவே எதிர்பார்த்தது தான. இனி அடுத்து என்ன பண்ணுறதுன்னு யோசிங்கன்னு சொல்லிட்டான்" என்றார்.
அதைக் கேட்டதும் அவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான். நேராக மயானத்திற்கு அருகே சென்றவன் அங்கே பெரிய பெரிய மலைகள் இருக்கும் பகுதியிலே உள்ள ஒரு சிறிய குகையினுள் நுழைந்தான். அதுதான் அவனது இருப்பிடம்.
அங்கே சென்று அமர்ந்தவனுக்கு மனம் வலித்தது. அவன் காதுக்குள் அப்பா சொல்லும் அந்த வார்த்தைகளே கேட்டது. வரம்பா என்னால தான் அந்த கோலை அடைய முடியலை.ஆனா நீ எடுத்திடணும் டா. கண்டிப்பா எடுத்திடணும். அதுக்குக் குறுக்க யார் வந்தாலும் அவங்களை உயிரோட விட்டுடாத.. பாசம் பந்தம் இதுலாம் நமக்கு கிடையாது. நம்ம பாட்டன் ஆசைப்பட்டது அதை அடையாம விடக் கூடாது... நீ சோர்ந்து இப்படி உக்கார பிறந்தவன் இல்லை வரம்பா. நாளைக்கு உன்னோட வெற்றி தான் இந்த இருபத்து நாலுவருசமா நான் வேதனையோட போராடிட்டு இருக்குற போராட்டத்துக்கு கிடைச்ச வெற்றி என்ற குரலில் புதுத் தெம்புடன் எழுந்தான் வரம்பன்.
நாளைக்கு மறுநாள் அகல்யாவை கோவிலுக்கு வர வைக்கணும். அதுக்கு முன்னாடி அந்த மாதவனை போட்டுத்தள்ளணும். அதை மட்டும் மொத சரியா செஞ்சு முடிச்சுட்டா போதும் அப்பறம் நம்ம வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சுடும் என்று நினைத்தவனுக்கு அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் புரியவே இல்லை. அது இருக்கும் வரையில் அவர்களுக்கு எந்தவித தோல்வியும் ஏற்படாது என்பதை வரம்பன் எப்போது தான் புரிந்து கொள்ளுவானோ...
வீட்டுக்கு வந்தும் கூட அகல்யா தன் சகோதரன்களுடன் வாய் ஓயாது பேசிக் கொண்டு இருந்தாள். அதைக் கண்ட சக்திக்கு சந்தோசமாக இருந்தது. அவன் அதனாலயே அவளை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி இருந்தான். அவன் மனதுக்குள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது ஓடிக் கொண்டிருந்தது. எப்படியும் வரம்பன் அமைதியாக இருக்க மாட்டான் என்று அவன் மனம் சொல்லிக் கொண்டு இருந்தது. சற்று நேரத்தில் அனைவரும் உறங்கச் செல்ல அகல்யாவின் அறையில் அவளும் சக்தியும் இருந்தார்கள்.
அறைக்குள் அவளுடன் சிறிது நேரம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த சக்திக்கு திடீரென்று ஏதோ தோன்ற வேகமாக "அகல் நீ இங்கயே இரு நான் இதோ வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். அவன் மனம் முழுவதும் மாதவா மாதவா என்று அலறியது. சத்யனும் மாதவனும் தங்கிருந்த அறையின் கதவை அவன் தட்ட அந்த கதவு தொட்டதும் திறந்து கொண்டது.
உள்ளே நுழைந்தவன் "மச்சான்... மாதவா" என்று கூப்பிட அவர்களோ அங்கே இல்லவே இல்லை. "அண்ணன், மாதவன் இல்லையா" என்று அகல்யா வர "இரண்டு பேரையும் காணோம்" என்றான் அவன்.
"இங்கதான இருந்தாங்க எங்க போயிருப்பாங்க. ஒருவேளை அவங்களுக்கு எதுவும் ஆபத்து" என்று அகல்யா பயத்தில் பேச
"ஏய் அகல் அதெல்லாம் எதுவும் ஆகாது. நம்ம குலசாமி இருக்கு. அப்பறம் அத்தையும் இருக்காங்க. அதனால இப்படி பயப்படுறதை நீ மொத நிறுத்து" என்றான் சக்தி.
"அப்போ அவங்க எங்க" என்று அவள் கேட்க உடனே ரத்னாவை அழைத்தவன் "இங்க நீ அகல்யாகூட இரு மாப்ள. நான் போய் அவங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு வர்றேன்" என்க "நானும் வர்றேன் மச்சி" என்றான் அவன்.
"இல்லை ரத்னா. நீ அகல் கூட இருக்குறதுதான் இப்போ முக்கியம். இந்த இரண்டு நாளைக்கு நாம ரொம்ப கவனமா நடக்கணும். இல்லைன்னா என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.
இருட்டுக்குள் இருளாக கலந்து ஓடியவனின் மனம் ஐயனாரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. துயர் தீர்ப்பவனின் நாமத்தை நினைத்த உடனே இன்னல் தீர்க்க அசுவம் ஏறிப் புறப்பட்டுவிடுவான் என்ற நம்பிக்கை சக்தியினுள் ஏற்பட்ட அதே கணம் சத்யன் அந்த வனாந்தரத்தில் மாதவா மாதவா என்று கத்தியபடி பித்துப் பிடித்தவன் போல் ஓடிக் கொண்டிருந்தான்...
மாதவனைக் காணாததால் மனதை கவ்விய பயத்தை விலக்கும் வழியறியாது சோர்வுடன் அமர்ந்திருந்தவளை ரத்னா வந்து ஆறுதல் படுத்தினான்.
"ரத்னா அவனுக்கு ஒன்னும் ஆகாதுல்ல" என்று அதே பயத்துடனே அவள் கேட்க "அகல் அவனுக்கு ஒன்னும் ஆகாது. அவன் தெய்வத்தோட அருளால் பிறந்தவன். அவனை யாராலும் எதுவும் பண்ண முடியாது. நீ கொஞ்சம் நார்மலா இருக்க டிரை பண்ணு" என்றான் அவன்.
வனாந்திரத்தில் தேடியே தேடியே அலுத்துப் போனவனாய் சத்ய ருத்திரன் தன் மேலயே கோபம் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது வந்த சங்கரி "நீங்க இப்படி இருந்தா எப்படி. மாதவனுக்கு ஒன்னும் ஆகாது. உங்க அம்மா அவனைத் தேடி எப்பவோ போயிட்டாங்க. நீங்க விசனப்பட்டு இப்படி உக்கார வேண்டாம்" என்று சொல்ல "இல்ல சங்கரி அவனை குழந்தையில இருந்து நான் தான் வளர்த்தேன். அவன் என்னோட பையன். அவனுக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது" என்று விசும்ப "இதைத்தான் அந்த வரம்பன் எதிர்பார்க்குறான். நீங்க பலவீனமாகிட்டா அவன் வேலை சுலபமாகிடும். ஆரம்பத்துல என்னை உங்க கட்டுப்பாட்டுல அடைச்சு வைக்கும் போது எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. எனக்கொரு சந்தர்ப்பம் வந்தா உங்களை துடிதுடிக்க வைச்சு சாகடிக்கணும்னு வெறி இருந்தது. ஆனால் அதற்கான காரணத்தை உங்க அம்மா வந்து சொன்ன பிறகு கோபமே வரலை. மாறாக உங்களுக்கு துணையாக இருக்கணும்னு தான் எனக்குத் தோணுச்சு. மற்ற ஆத்மாக்கள் நீங்க விடுதலை செஞ்சதும் போயிட்டாங்க. ஆனா என்னால அப்படி விட்டுட்டு போக முடியலை. எதா இருந்தாலும் பிரச்சனை முடியுற வரைக்கும் கூடவே இருக்கணும்னு தான் நான் இப்பவும் வந்தேன்" என்று சங்கரி சொன்னதும் அவனுக்குள் அப்படி ஓர் ஆறுதல்...
சற்று நேரம் அமைதியாக இருந்தவன் "அம்மா எங்க போனாங்கன்னு உனக்குத் தெரியுமா" என்று வேகமாக நிமிர்ந்து பார்த்தபடி கேட்க அவள் அங்கே இல்லவே இல்லை. மறைந்து போயிருந்தாள்.
சங்கரி என்று அவன் சப்தமிட நிசப்தமாய் இருந்த அந்த இடம் அவனுக்கு நிதர்சனத்தை எடுத்துக் காட்டியது.
உடனே எழுந்தவன் மனதிற்குள் மாதவனை கடத்திச் செல்லலாம் ஆனால் அவனை அழிப்பது என்பது இப்போதைக்கு இயலாத காரியம். ஆனால் வரம்பனை இந்த விசயத்தில் சாதாரணமாக எடை போடக் கூடாது என்ற சிந்தனையே ஓடிக் கொண்டிருக்க கால்களோ தன் இடத்தை அடைந்திருந்தது.
அமராவதி மாயவரம்பனின் முன் நிற்க அவனோ அவளை உணர்வற்ற நிலையில் பார்த்திருந்தான்.
"வரம்பா மாதவனை விட்டுடு" என்று அமராவதி சொல்லவும் "மாதவனா அவனைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நீங்க இடம்மாறி வந்துருக்கீங்க" என்றான் போலியான சிரிப்புடன்.
"வேண்டாம் வரம்பா இது தப்பு" என்று அவள் சொல்ல "வேண்டாம்னு தான முடிவு பண்ணிட்டு போனீங்க இப்போ எதுக்கு இங்க வந்தீங்க" என்றான் அவன்.
"நான் உன்னை வேண்டாம்னு நினைக்கலை"
"அப்போ நீங்க பண்ணதுக்கு என்ன அர்த்தம். ஒரு வயசு கூட ஆகாத என்னை தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்குப் போனீங்களே அதுக்குப் பேர் தான் வேண்டாம்னு நினைக்காததா" என்று கேட்க
"உங்க அப்பா விபரீதத்தின் பின்னால போனதை தடுக்கத்தான் நான் அப்படிப் பண்ணேன் வரம்பா. அதுக்காக நான் போய் உன்னை எப்படி வெறுக்க முடியும்" என்றாள் அமராவதி.
"நீங்க தடுக்காம இருந்திருந்தா அப்பாவுக்கு இந்த வேதனை வந்துருக்காது. அப்பறம் இப்பவும் நான் அதே விபரீதத்தின் பின்னால தான் போய்ட்டு இருக்கேன். என்ன என்ன பண்ணப் போறீங்க. அவரை மாதிரியே வேதனைப் படுத்தி சாகடிக்கப் போறீங்களா" என்றான் அவன் இறுகிய குரலில்.
"உங்க அப்பா படுற வேதனை உனக்குப் புரியுது. ஆனால் அவரை தடுக்காம இருந்திருந்தா அவரால எல்லாருக்கும் வேதனை வந்துருக்குமே வரம்பா. அது ஏன் உனக்குப் புரியலை"
"நீங்க என்ன சொன்னாலும் என்னால உங்க பேச்சைக் கேட்க முடியாது. அதுக்குத்தான் உங்களுக்கு இரண்டு பசங்க இருக்காங்களே. அவங்க கிட்டயே போங்க. இங்க வராதீங்க. நான் வேற மாதிரி மாறி ரொம்ப வருசமாச்சு. என் மனசுக்குள்ள கோபமும் குரோதமும் விபரீத ஆசைகளும் தான் இருக்கே தவிர அங்க பாசம் பந்தம் இந்த மாதிரியான அல்பத்தனமான விசயங்கள் இல்லை" என்று அவன் வெறுப்புடன் சொல்ல
"நீயும் என் பையன் தான் வரம்பா. நீ என்னதான் வேண்டாம்னு விலகிப் போனாலும் அந்த பந்தம் மாறிப் போயிடுமா என்ன" என்று அவள் சாந்தமாக சொல்ல
"இல்லை நான் தங்கப்பாண்டியோட பையன். அவரோட பையன் மட்டும் தான். எனக்கு அம்மா இல்லை. அவங்க எனக்குத் தேவையும் இல்லை. அப்பாவோட வேதனையை பார்த்து பார்த்து வளர்ந்த எனக்கு அதைத் தீர்க்குறது தான் முக்கியம். அதுல இருந்து நான் மாற மாட்டேன்" என்றான் சத்தமாக.
என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளவே மறுக்கும் அவனை காண காண இப்போது அமராவதிக்கு கோபம் துளிர் விட ஆரம்பித்துவிட்டது.
"வரம்பா வரம்பு மீறி பேச்சை வளர்க்குற. நான் உன் அப்பாவையேத் தடுத்து நிறுத்தியவள்.. என்கிட்ட நீ மோதணும்னு நினைக்காத" என்று சினத்துடன் சொல்ல
"அப்பாவை தடுத்து நிறுத்துன மாதிரி என்னையும் முடிந்தால் நாளை மறுநாள் தடுத்து நிறுத்துங்கள். இப்போது போங்க" என்று சொன்னவன் முகத்தில் பாசம் என்ற ஒன்று துளி கூட இல்லை.
வெறுத்துப் போய் வெளியேறிய அமராவதி அங்கிருந்து சத்யனை தேடிச் சென்றாள். அவனைக் கண்டவள் என்ன பண்ணப் போற என்று கேட்க "இதுவரைக்கும் நான் கற்று வைத்திருக்கும் மாந்தீரிக சக்தியோட உதவியால தம்பியை கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வரப் போறேன்" என்று சொன்னதும் "தேவையில்ல" என்றாள் அமராவதி.
"என்ன சொல்றீங்க அம்மா"
"உன்னோட மாந்திரீக சக்தி தேவையில்லை நம்ம மாப்பிள்ளை சக்தியே போதும் அவன் கூட்டிட்டு வந்துடுவான்" என்றாள் அவள்.
"அம்மா" என்று அவன் புரியாமலே கேட்க "ஆமா அவன் கண்டுபிடிச்சுடுவான். அதனால அந்த வேலையை விட்டுடு இப்போ நீ இன்னுமொரு வேலை செய்யணும்" என்று சொல்ல "என்ன பண்ணனும்னு சொல்லுங்க அதை நான் பண்ணுறேன்" என்றதும் அவள் அந்த செயலைப் பற்றி சொன்னாள். அதைக் கேட்டவனின் கண்கள் இடுங்கி பின் சாதாரணமானது.
"சரிம்மா அப்படியே பண்ணிடுறேன்" என்று சொன்னவன் அங்கேயே தங்கிவிட திருப்தியுடன் அங்கிருந்து புறப்பட்டாள் அமராவதி.
சக்தி ஐயன் மேல் இருந்த நம்பிக்கையினால் வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்டாலும் திக்குத் தெரியாத காட்டில் எந்தப்பக்கம் செல்வது என்று புரியாமலே நடந்து கொண்டிருந்தான்.
சக்தி மாதவனைத் தேடி அலைவதைக் கண்டு கந்தையாவும் சித்தையாவும் என்ன செய்வது என்று புரியாமல் மாயவரம்பனை தேடி வந்தனர். "வரம்பா சக்தியை இப்போ என்ன பண்ணுறது" என்று கேட்க "தாத்தா அவனுக்கு சிறப்பான ஒரு சம்பவம் காத்துட்டு இருக்கு. அதுல இருந்து அவன் மீண்டு வரமாட்டான் நீங்க இதை என்கிட்ட விட்டுட்டு அமைதியா இருங்க" என்றான்.
"மொத மாதிரி சூழ்நிலை நமக்கு சாதகமா இல்லை வரம்பா" என்று சித்தையா சொல்ல "ஆரம்பத்துல இருந்தே சூழ்நிலை நமக்கு சாதகமா இல்லையே தாத்தா. அதனால அதைப் பத்தி நாம யோசிக்க வேண்டாம்" என்றான்.
"ஆனா அந்த ஐயன்" என்று கந்தையா இழுக்க அவன் திரும்பி "இப்படியே பயந்தா நாம கோலை எடுக்காம அப்படியே கிளம்ப வேண்டியதுதான். என்ன பண்ணலாம். ஐயனுக்கு பயந்து அப்படியே கிளம்பிடலாமா. சொல்லுங்க" என்றான் கோபமாக.
"இப்போ எதுக்கு இவ்வளவு கோபம்" என்று கந்தையா மீண்டும் கேட்க "பின்ன என்ன ஒருவிசயத்துல இறங்கிட்டோம்னா அந்த விசயத்தை பத்தி மட்டும் தான் யோசிக்கணும். அதை விட்டு தேவையில்லாத விசயத்தை யோசிக்க கூடாது. நாம அவங்க கோவிலுக்குப் போகாம தடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணோம். அதையும் மீறி அவங்க போயிட்டாங்க. அதுக்காக நாம அதையே நினைச்சுட்டு உக்காந்தா அடுத்தும் தோற்றுத்தான் போவோம். தேவையில்லாத பேச்சை விட்டுட்டு நடக்கப் போறதை மட்டும் இனி பேசலாம்" என்று சொன்னவன் அமைதியாகிவிட மறாறவர்களும் பேச்சற்று அமர்ந்துவிட்டனர்.
ஏதோவொரு முடிவினை அவன் தீர்க்கமாக எடுத்துவிட்டான். இனி நாம் சொல்வதை கேட்க மாட்டான். நாளை மறுநாள் நாம் செய்ய வேண்டிய காரியம் வேறு வரிசை கட்டிக் கொண்டு காத்திருக்கிறது என்பதால் அவர்கள் அவனிடம் வேறு விவாதம் புரியாமல் இருந்துவிட்டனர்.
கந்தையா சித்தையா இருந்த அந்த குடிசையை நோக்கி சக்தி தன் நடையினை எட்டிப் போட ஆரம்பித்தான். அதுசமயம் அந்த இடத்தில் திடீரென ஓர் அதிர்வு பரவி விரவியது. அந்த அதிர்வு அவன் தேகத்துக்குள்ளும் நுழைந்து தாக்க அவனோ திரும்பி பார்த்தான்.
சட்டென்று ஒருவித அச்சம் அவனை வந்து ஆட்கொள்ள அவன் நயனங்கள் அசையாது அந்த உருவத்தையே பார்த்திருந்தது. ககனத்தையே முட்டும் அளவிற்கு பிரமாண்ட தோற்றம் கண்டு அவனுக்கு அதிர்ச்சியில் என்ன செய்ய என்றே தெரியாமல் பனி நேரத்து நீராய் உறைந்து போய்விட்டான். அரக்கன் போன்ற தோற்றத்தில் வந்த ஆபத்தைக் கண்டு நிலைகுலைந்து போனாலும் தன்னை திடமாகக் காட்டிக் கொண்டான்
அந்த உருவம் அவனைத் தாக்க வருகிறது என்று அவன் புத்திக்கு புரிந்து அவனை அங்கிருந்து தப்பித்துச் செல் என்ற ஆணையை அனிச்சையாக பிறப்பித்த அதே சமயம் அவன் மனமோ மாதவனை கூட்டிட்டு வரணும். நீ முன்னேறி போ பயந்து பின் வாங்கிடாத என்று உரைத்தது. இரண்டு குரலில் எதைக் கேட்பது என்று யோசித்தவன் எப்போதும் போல் மனம் சொல்லுவதைக் கேட்டு அங்கேயே துணிச்சலோடு நின்றான்.
உள்ளுக்குள் நடுக்கம் செந்நீர் போல ஓடிக் கொண்டிருக்க அந்த உருவமோ அவனை நோக்கி வந்து தன் குரூரம் வழியும் கண்களை உருட்டிக் காட்டியபடி நின்றது.
நின்ற அந்த உருவமோ நொடி கூட தாமதிக்காமல் அவனை அப்படியே பிடித்து தூக்கியெறிய அவனோ அங்கிருந்த பாறையின் மேல் பொத்தென்று விழுந்தான். தலை அந்த கல்லின் மேல் மோதியதால் இரத்தம் துளிர்க்க ஆரம்பித்தது. என்ன நடக்கிறது என்று அவன் அவதானிக்கும் முன் மீண்டும் தூக்கியெறிந்தது அந்த உருவம்.
இவன் இங்கே துர்சக்தியினால் துடிதுடித்துக் கொண்டு இருக்க அங்கோ சங்கிலி கருப்பசாமி கோவிலில் இருந்த பூசாரி தன் உடுக்கையை ஆவேசத்துடன் அடிக்கத் தொடங்கினார்.
அவரது உள்ளமும் உடலும் அந்த சப்தத்திற்கு ஏற்ப ஆட ஆரம்பித்திருந்தது.
புள்ளையை காப்பாத்த ஓடி வா என்று அவர் முணுமுணுக்க அந்த ஆள் அரவமில்லாத இடத்தில் அவர் அடித்துக் கொண்டிருந்த உடுக்கையின் சத்தம் எதிரொலிக்கத் தொடங்கியது.
தேகம் முழுக்க குருதி வடிந்து நனைந்து போன போதிலும் பயந்து ஓடிடவில்லை சக்தி. மாதவன் என்று தான் அவன் உதடுகள் முணுமுணுத்தது. அதைக் கேட்டதும் இன்னும் சினத்துடன் அவனை தூக்கிப் போட்டு மண்ணில் புரட்டியது அந்த உருவம்.
கீழே கிடந்தவன் கரம் ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது. வலியோடு கூடிய கதறலோடு அவன் ஐயனாரப்பா மாதவனை காப்பாத்து என்றபடி நினைவு தப்பி விட அருகே வந்து உற்றுப் பார்த்த அந்த உருவம் தன் வலிய பாதத்தை எடுத்து அவனை மிதிக்க முற்படும் முன் ஈசான்ய மூலையில் சட்டென்று மின்னல் வெட்ட அடுத்த கணம் இடியோசை முழங்க ஆரம்பித்து விட்டது.
அதைக் கேட்டதும் தன் செய்கையை நிறுத்திவிட்டு அமைதியாக விண்ணைப் பார்த்தது அந்த உருவம். கருமை நிறமாக மாறியிருந்த வான்வெளி இப்போது இன்னும் கருமை நிறத்திற்கு மாறியிருக்க அங்கே ஒளியும் ஒலியும் ஒளிபரப்பாக தொடங்கியிருந்தது....
கொண்டல்கள் எல்லாம் உருமாறி கந்துகமாய் மாறி ஈசான்ய மூலையிலிருந்து சக்தியை அழிக்க வந்து நிற்கும் உருவத்தை நோக்கி ஆவேசத்துடன் வந்து நின்றது....
அதன் சீற்றம் நிறைந்த மூச்சு குளுமையாய் இருந்த இடத்தையே கொதிக்க வைத்துக் கொண்டிருந்தது.
அய்யனாரு வீதியிலே
ஆடிவரும் சாமி
ஆதிசிவன் கோபமேந்தி
தாங்கி வரும் சாமி
இடவலமா இடிஇடிக்க
இறங்கி வரும் சாமி
ஈரக்கொலை நடுநடுங்க
சீறிவரும் சாமி
உடுக்கைச் சத்தம் கிடுகிடுக்க
கூவிவரும் சாமி
ஊருலகம் வணங்கி நிற்க
பாய்ஞ்சு வரும் சாமி
எட்டு மேல எட்டு வச்சு
ஏறி வரும் சாமி
ஏழு கடல் ஏழு மலை
தாண்டி வரும் சாமி
ஐயமெல்லாம் தீர்த்து வைக்க
பைய்ய வரும் சாமி
ஒத்தையில வீச்சருவா
வீசி வரும் சாமி
ஓடைக்கரை காடுமேடு காத்து
நிக்கும் சாமி
ஔடதமாய் ரௌத்திரமாய்
சாமி எங்க சாமி...
அந்த சாமியே பரி வடிவெடுத்து பாய்ந்து வந்ததுவோ என்று எண்ணும் படியே அத்தனையும் நடக்க அந்த உருவமோ அச்சத்தில் பின்வாங்கினாலும் மீண்டும் சக்தியின் அருகே சென்று நின்றது...
வெம்மையாய் வெளிவந்த மூச்சு நின்றுவிட இப்போது அந்த கானகத்தையே நடுங்க வைக்கும் அளவிற்கு கணைக்கத் தொடங்கியது.
பரியின் சத்தத்தில் சக்தி மெதுவாக கண்ணைத் திறக்க தன் முன் இருந்த அந்த குதிரையை கண்டு விழிகள் விரிய சிரமப்பட்டு கைகூப்ப முயன்றான்.
அகல்யாவுக்கோ இதயம் தாறுமாறாக துடித்ததில் இரத்தமும் தேகத்தினுள் வேகமாக ஓடத் தொடங்கியிருந்தது. சக்தி சென்று இவ்வளவு நேரம் ஆகிவிட்டது என்ற பயத்திலே அவள் ரத்னாவை பார்க்க அவனோ "மச்சி வந்துடுவான்" என்றான். ஆனால் அவளால் அங்கே இருக்கவே முடியவில்லை. சக்தியை பார்த்தால் மட்டும் தான் அந்த துடிப்பு அடங்கும் என்று அவளுக்குத் தோன்றியது.
ஆனால் தன்னையே காவல் காத்து நின்று கொண்டிருக்கும் அம்மா அப்பா மற்றும் ரத்னா விடம் இருந்து எப்படி தப்பித்து வெளியே செல்வது என்று அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.
ஓர் எண்ணம் அவளது மூளையில் உதயமாக எழுந்து நின்றாள். "என்ன அகல் எதுக்கு எந்திரிக்குற" என்று ரத்னா கேட்க "தண்ணீ குடிக்கப் போறேன் டா" என்றாள்.
"நீ இங்கயே உக்காரு நான் போய் எடுத்துட்டு வர்றேன்" என்று ரத்னா சொன்னதும் "இல்லை வேண்டாம் நானே போய்க்குவேன்" என்று சொன்னவள் இயல்பாக சமையலறை நோக்கி நடந்தாள். அவனும் அவளே தைரியமா போறா போகட்டும் என்று விட்டுவிட்டான்.
வேகமாக தண்ணீரை
குடித்தவள் யாரும் அறியா வண்ணம் அங்கிருந்த பின்பக்க கதவைத் திறந்து வெளியேறி விட்டாள். சக்திக்கு ஆபத்து ஆபத்து என்று மனம் அவளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்ததால் தான் அவள் இப்படி யார்கிட்டயும் சொல்லாமல் வெளியே வந்தாள்.
அதுவரை மாயவரம்பன் நடக்கும் விசயங்களை கிரகித்துக் கொண்டே அமைதியாக இருக்க இப்போது அகல்யா வெளியே வந்ததில் காரணமே இல்லாமல் அவன் முகத்தில் புன்னகை வந்தமர்ந்து விட்டது.
தேடிப் போக வேண்டும் என்று நினைத்தது தேடாமல் வந்து கொண்டிருக்க அவன் தேடல் எளிதாகி விட்டது. இந்த விசயம் எளிதாக நிறைவேறியது போல் அவன் எண்ணம் ஈடேறுமா????
தன்னையே எதிர்நோக்கி காத்திருக்கும் ஆபத்தைத் தேடி தன் பயணத்தைத் தொடர்ந்தாள் அகல்யா. அவள் சிந்தனையில் யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணமே உழன்று கொண்டிருக்க அவளைப் பற்றி யோசிக்க மறந்துவிட்டாள். ஒரு நிமிடம் அதைப் பற்றி நினைத்திருந்தால் அவள் இப்படி தனியே வந்திருக்க மாட்டாள். என்ன செய்ய இனி அவளுக்கு என்ன நேரப் போகிறதோ?..
தன் முன் கண்களில் ஏறிய கனலோடு ஐயனின் வாகனம் நிற்பதையும் பொருட்படுத்தாமல் அந்த கோர உருவம் சக்தியை நெருங்கியே நிற்க சக்தியோ மாத...மாதவன் என்று முணங்க அந்த கணத்தில் அந்த உருவத்தின் மேல் பாய்ந்தது ஐயனின் வெண்புரவி.
ஆக்ரோசமாய் அந்த பிரமாண்ட உருவத்தை உருட்டி புரட்டி எடுத்துக் கொண்டிருந்த வேளையில் சக்தியின் காதுக்குள் "எழுந்திரி சக்தி இங்கிருந்து போ" என்ற கணீர் குரல் கேட்க தள்ளாடியபடியே எழுந்து நின்றான் அவன்.
பயமுறுத்தும் வண்ணம் இருந்த அந்த உருவத்தை காலடியில் போட்டு நசுக்கிக் கொண்டிருந்தது அந்த புரவி. அதன் அலறலோ அந்த காடுகளைத் தாண்டி கந்தையா சித்தையா காதுகளில் விழ அவர்களோ மாயவரம்பனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவன் அதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாது காலாட்டியபடி அமர்ந்திருந்தான். கந்தையா அதைப் பற்றி பேச முற்பட சித்தையா வேண்டாம் வாவென்று அழைத்துச் சென்றுவிட்டார்.
சக்தி நடப்பவற்றையே திரும்பி திரும்பி பார்த்தபடி அங்கிருந்து நடக்கத் தொடங்கினான். தன் முன்னங்கால்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்திய புரவி அப்படியே அந்த உருவத்தின் நெஞ்சில் தடத்தைப் பதிக்க அதில் ஓலமிட்டபடியே ஒடுங்கிப்போய் விட்டது. அதன் முடிவைக் கண்ட புரவியும் கணைத்தபடி அந்த இடத்தை விட்டு மறைந்து போக சக்தி ஐயனை மனதுக்குள் விடாமல் நினைத்தபடி சென்று கொண்டிருந்தான். உடலெல்லாம் வலி பரவி அவனை இம்சிக்கத் தொடங்க அந்த நிலையிலும் அவன் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று நினைக்கவே இல்லை. தொடர்ந்து முன்னேறிக் கொண்டு தான் இருந்தான்.
ஐயனின் நாமம் அவனுக்கு உறுதுணையாக இருக்க அப்போது அவன் காதுக்குள் யாரோ மெலிதாய் முணங்கும் சத்தம் கேட்டது. எந்தப்பக்கம் இருந்து இந்த சத்தம் வருகிறது என்று கூர்ந்து கேட்டவன் அதை பின்பற்றி நடந்தான்.
மெல்லியதாய் கேட்ட அந்த முணங்கல் ஒலி அவனுக்கு இப்போது தெளிவாகவே கேட்டது. மாதவன் குரல் மாதிரியே இருக்கு. இங்கதான் எங்கயோ இருக்கான் போல என்று நினைத்தபடி அவன் நடக்க அவனுக்கு பக்கவாட்டில் ஒரு சிறிய குகை தெரிந்தது. அவன் வந்து நின்றதும் அந்த குகையின் இருமருங்கிலும் நெருப்பு பந்தம் சுடர்விட்டு எரியத் தொடங்கியது. அதனுள் இருந்து தான் சத்தம் வருகிறது என்று உறுதி செய்தவன் அதனுள் நுழைய எத்தனிக்க அதற்கு முன் வழியை மறைத்தபடி வந்து நின்றாள் சங்கரி.
"சக்தி இப்போதைக்கு நீ உள்ள போகாத" என்று அவள் எச்சரிக்க "மாதவன் இருக்கானா" என்றான் சக்தி.
"ஆமா... ஆனா நீ போனா உன்னாலயும் இந்த இடத்தை விட்டு வெளிய வரமுடியாது. அதுக்குள்ளயே நீ அடைபட்டு போயிடுவ" என்று சொல்லி அவனை தடுக்க "மாதவனை நான் காப்பாத்தி கூட்டிட்டு வர்றேன்னு அகல்யாகிட்ட சொல்லிட்டு வந்துருக்கேன். இப்போ அந்த காரியத்தைப் பண்ணாம என்னை அப்படியே திரும்பிப் போகச் சொல்லுறயா. அதை ஒரு காலத்திலும் நான் பண்ணவே மாட்டேன். உசுருக்கு பயப்படுறவனா இருந்திருந்தா நான் இன்னைக்கு வீட்டை விட்டு வெளியவே வந்துருக்க மாட்டேன். மாதவனுக்கு எதுவும் ஆகிடக் கூடாது. நான் உள்ள போகத்தான் போறேன்" என்று சொல்ல "இல்லை வேண்டாம் சக்தி நீ போகக் கூடாது. அனர்த்தம் தான் உருவாகப் போகுது" என்று அவள் மீண்டும் சொல்ல
"அனைத்து அனர்த்தத்தையும் தடுத்து நிறுத்தி அதிலிருந்து என்னைக் காப்பாத்த என்கூடவே அந்த ஐயனும் ஆத்தாவும் இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை. என் உயிரை எப்படிக் காப்பாத்தி தர்றதுன்னு என் குலசாமிக்குத் தெரியும். அதனாலயே நான் அதை நினைச்சு கவலைப்படுவது இல்லை" என்று சொன்னவன் அவளைத் தாண்டி நடக்க அப்போது உடுக்கை ஒலி கேட்க ஆரம்பித்தது.
அதைக் கேட்டதும் சங்கரி அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றாள். இப்போது உடுக்கை ஒலி சன்னமாக கேட்கத் தொடங்க என்ன பண்ண வேண்டும் என்று சக்திக்கு இப்போது புரிந்தது.
ஊ...ஊ என்று நாயோ நரியோ ஊளையிட்டதைத் தொடர்ந்து எதுவோ படபடவென்று முகத்துக்கு நேராக பறந்து வந்து மோதி மீண்டும் பறந்ததில் திடுக்கிட்டு அப்படியே நின்றுவிட்டாள் அகல்யா. கண்களில் பீதி பரவ உடலோ நடுங்கத் தொடங்கியது.
கால்பெருவிரலை தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு பயத்தை விரட்ட முயற்சி செய்தாள். ஆனால் விடாது கேட்ட அந்த ஊளைச் சத்தம் அவள் பயத்தை விட்டுவிடாமலே வைத்திருக்க வழிவகுத்தது.
முதன்முறையாக மனதுக்குள் இந்த நேரத்தில் வந்தது தவறோ என்று எண்ணத் தொடங்கினாள்.
சட்டென்று அவள் தலையில் எதுவோ வந்து விழ அவளோ அலறி அடித்தபடி பின்னால் நகர்ந்து எதன் மீதோ மோதி நின்றாள்.. தலையில் பட்டு கீழே விழுந்து கிடந்த அந்த வஸ்துவை பார்க்கையில் அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அது ஏதோ ஒரு பறவையின் சடலம். பயத்தில் தொண்டை வறண்டு கொண்டிருக்க இதயத்தை யாரோ தாக்குவதைப் போல் உணர்ந்தாள் அவள்.
அந்த சடலமோ மெதுவாக அசைவதைப் போல் இருக்க ஐயோ ஐயோ என்று அவள் அலற அவள் இடையில் எதுவோ ஒன்று ஊர்ந்தது. அப்போதுதான் தான் எதன் மீதோ மோதி நின்றிருக்கிறோம் என்று புரிய நடுங்கும் தேகத்தை மெதுவாய் நகர்த்தி திரும்பினாள் அகல்யா...
எதிரே மனிதச் சடலம் நின்று கொண்டு அவளைப் பார்த்து ஈயென இளித்து வைத்தது. அதன் அழுகியிருந்த கரங்களோ அவளது இடுப்பை இறுகப் பிடித்திருந்தது...
அந்த கையினை அவள் வேகமாக எடுக்க அதுவோ கையோடு வந்தது. ஆ என்று அவள் அலறிய அலறல் அந்த இடத்தையே அதிர வைத்தது. கத்தியவள் பயத்தோடு அந்த கரத்தைத் தூக்கியெறிந்து விட்டு திரும்ப அங்கே எந்த உருவமும் இல்லாமல் ஒரு மரம் தான் இருந்தது.
பிரம்மையா என்று அவள் யோசித்தபடி இந்தப்பக்கம் பார்க்க அங்கே அந்த அழுகிய கரமும் இல்லை. அதுவரை பயத்தில் அடக்கி வைத்திருந்த மூச்சு அப்போதுதான் நிம்மதியாக வெளியே வந்தது. வீட்டுக்கே போயிடலாமா என்று அவள் நினைத்த மறுநிமிடமே சக்தியும் அவனது சகோதரர்களும் நினைவுக்கு வர அவள் மீண்டும் நடந்தாள்.
எந்தப்பக்கம் போகிறோம் என்ற யோசனையும் இல்லை. எங்கே போகப் போகிறோம் என்ற சிந்தனையும் இல்லை. ஏதோவொரு குருட்டு தைரியத்தில் அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தாள் அகல்யா.
சற்று முன் நடந்த விசயங்களை நினைத்துப் பயந்தபடியே சுற்றிலும் பார்க்காமல் அவள் எட்டு வைத்துக் கொண்டிருக்க இப்போது விநோதமாக யாரோ உறுமும் சத்தம் கேட்கத் தொடங்கியது.
மறுபடியுமா என்று நினைத்தவள் தன் காதுகளை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டு ஓடத் துவங்கினாள். ஒரு கட்டத்தில் அவள் கால் எதிலோ இடிக்க பொத்தென்று அங்கே விழுந்தாள் அகல்யா. விழுந்த வேகத்தில் அவள் அப்படியே புதைய ஆரம்பிக்க இப்போது பதறி கதறத் தொடங்கினாள்.
"ஆ அம்மா அம்மா" என்று அவள் பதற ரத்னா அந்த நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்தான்.
"எந்த நேரத்தில இவளை பெத்தாங்களோ இந்த அமராவதி அம்மா. நம்ம உயிரை வாங்க வந்துருக்கா. அம்மணிக்கு பெரிய இவ ன்னு மனசுக்குள்ள நினைப்பு. இவ போய் அவனுங்களை காப்பாத்திடுவாளாமா... இவளைக் காப்பாத்தவே நாலு பேர் வேண்டும். ஏற்கனவே பேய் டார்ச்சர். இப்போ பத்தாததுக்கு இந்த பிசாசு டார்ச்சர். ஆண்டவா இந்த அகல்யா புள்ளைக்கு நல்ல புத்தியைக் குடு" என்று புலம்பியபடியே அவன் ஊரைத் தாண்டியிருந்தான்.
கடைசியில் வரம்பன் நினைத்தது போலவே மாதவனைத் தேடிக் கொண்டு ஒவ்வொருவராக வெளியேறித் தொடங்கியிருந்தார்கள்...
"காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று அலறியடி அவள் புதைந்து கொண்டே இருக்க அவளின் கரத்தில் எதுவோ தட்டுப்பட அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
மெதுவாக அவள் மேலே எழும்பி வந்து நிற்க அப்போதுதான் தனக்கு எதிரே இருந்த அந்த உருவத்தைப் பார்த்தாள். அதன் கண்கள் நீலநிற ஒளியை அந்த இடம் முழுவதும் பரப்பிக் கொண்டு அசையாமல் இருக்க இவளோ இதற்கு புதைகுழியிலயே புதைஞ்சு போயிருக்கலாம் போலவே என்று எண்ணத் தொடங்கிவிட்டாள்.
அதுவோ தன் கண்களை உருட்டிக் கொண்டு "அவ்வளவு சீக்கிரமா நீ செத்து போயிட முடியுமா. உன்னால தான கோல் வரம்பன் கைக்குக் கிடைக்கும். அதுவரைக்கும் நீ உயிரோடு தான் இருந்தாகனும். ஆனா அதுக்கு முன்னாடியே நீ உயிர் போற அளவுக்கு வேதனை அனுபவிக்கணும். அதுக்காகத்தான் இது எல்லாத்தையும் வரம்பன் சொல்லி நாங்க பண்ணிட்டு இருக்கோம்" என்று பேச அகல்யாவோ அது சொன்ன நாங்க என்ற பதத்திலே அப்படியே திகிலடைந்து முழிக்கத் தொடங்கிவிட்டாள்.
"என்னாச்சு அகல்யா ஏன் அப்படி முழிக்குற. ஓ நாங்கன்னு சொல்லிட்டு நான் மட்டும் நிக்குறேன்னு பாக்குறயா. அவங்க எல்லாம் இங்கதான் இருக்காங்க பாரு" என்று அது சொல்ல அதன் கண்களில் இருந்து வந்த அந்த நீலநிற ஒளி இன்னும் அதிகமான வெளிச்சத்தை காட்ட அதில் அருகில் இருந்த மற்ற பேய்கள் தெரிய ஆரம்பித்தது.
வெந்தது வேகாதது தீஞ்சது என வகை வகையாய் வந்து நின்ற அந்த பேய்களைப் பார்த்தும் மயக்கம் வராமல் இன்னும் நிற்பதே அவளுக்கு உலக சாதனை என்றே தோன்றியது.
"இவங்க எல்லாரும் உன்னை பயமுறுத்தி பயமுறுத்தி சாக விடாம பாத்துக்குவாங்க. அது எல்லாம் எப்போ வரைக்கும் தெரியுமா? நாளைக்கு மறுநாள் வரைக்கும் தான். அதற்கு அடுத்து அனைவரின் பசிக்கும் நீ உணவாகியிருப்பாய். உன்னைப் புசிக்க வேண்டும் என்றே இந்த பேய்கள் எல்லாம் உன் பின்னாலயே அலைந்து கொண்டு இருக்கிறது " என்று அந்த பேய் பேச எல்லாம் பசி பசி என்று பயங்கரமாக அலறியது.
இதயம் கூடுதலாக இரத்தத்தோடு அச்சத்தையும் நரம்புகளின் வழியே பாய்ச்சும் வேலையில் ஈடுபட முகமெல்லாம் வியர்த்து வழிய தொடங்கியது அகல்யாவிற்கு. அவள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு திரும்பி ஓடினாள். அத்தனை பேய்களும் சிரித்துக் கொண்டே அவளை தொடராமல் அங்கேயே நின்று கொண்டது. அதைப் பற்றிக் கூட அறியாமல் அகல்யா ஓடினாள்.
சட்டென்று காலில் எதுவோ குத்த அதன் வலி கண்களை தாக்கி கலங்க வைத்ததில் அப்படியே மடிந்து அமர்ந்து விட்டாள். என்னவாக இருக்கும் என்ற நினைப்பில் சில நொடி அமைதியாக இருந்தவள் பின்னர் நன்றாக வலிக்க ஆரம்பிக்க பாதத்தைத் திருப்பிப் பார்வையிட்டாள். அங்கு இருந்தது நெருஞ்சி முள் தான்.
ஊஃப் என்று மூச்சை விட்டவள் அதை எடுத்துப் போட்டு விட்டு எழ பின்னால் இருந்து "அகல்யா" என்ற குரல் தெளிவாகக் கேட்டது. செவிகள் அவள் பெயரைக் கிரகித்துக் கொண்ட பின்பும் எந்த எதிர்வினையும் காட்டாது அமைதியா இருக்க மீண்டும் "அகல்" என்றது அந்த குரல்.
இது இது சக்தியின் குரல் போல் இருக்கிறதே என்று அதன் பின்னரே அவளின் மூளை கணித்தது. உடனே திரும்பியவளின் கண்ணுக்கு சக்திதான் தெரிந்தான்.
சக்தி என்று நிம்மதியுடன் அவள் அழைக்க "உன்னை யாரு இங்க வரச் சொன்னது அகல்" என்றான் அவன்.
"யாருக்காவது ஏதாவது ஆகிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருந்தது சக்தி. அதனால என்னால வீட்டுல இருக்கவே முடியலை. அதுதான் கிளம்பி வந்துட்டேன்"
"ரத்னாகிட்ட உன்னைப் பாத்துக்க சொல்லித்தான வந்தேன் நீ எப்படி வந்த"
"யாருக்கும் தெரியாம பின்வாசல் வழி வந்துட்டேன்" என்று அவள் சொல்ல "அகல் ஏன் இப்படிப் பண்ணுற. நான்தான் இரண்டு பேரையும் கூட்டிட்டு வந்துடுவேன்னு சொல்லியிருந்தேன்ல. சரி வா" என்று அவளையும் அழைத்துக் கொண்டு சக்தி நடக்க ஆரம்பித்தான்.
"மாதவனும் அண்ணனும் எங்க இருப்பாங்க ஏதாவது தெரிஞ்சதா" என்று அவள் சிறிது தூரம் கடந்த பின்னே மெதுவாக கேட்க
"இன்னும் தெரியலை அகல்யா. நானும் விடாம தேடிட்டு தான் இருக்கேன்" என்று அவன் சொல்ல
"இப்போ எந்த இடத்துக்குப் போறீங்க சக்தி" என்று அவள் கேட்க "சொல்லுறேன் அகல் நீ வா" என்று அவன் கிட்டத்தட்ட அவளை இழுத்தபடியே சென்றான்.
நிசப்தம் எங்கும் குடிகொண்டிருக்கும் அந்த இருட்டு வேளை இப்போது சக்தி உடன் இருப்பதால் அகல்யாவிற்கு அச்சத்தை தரவில்லை. அதனாலயே தைரியமாக அவள் நடக்க சக்தி மெதுவான குரலில் "பயமாவே இல்லையா அகல்யா" என்றான்.
"அதுதான் கூட நீங்க வர்றீங்களே சக்தி அப்பறம் நான் ஏன் பயப்படணும்" என்று சொன்னதும் "அப்போ நான் இருந்தா பயப்பட மாட்ட" என்று கேட்க அவளோ "ம்ஹூம் மாட்டேன்" என்று அவள் உறுதியான குரலில் சொல்ல
"கூட வர்றது சக்தி இல்லைன்னு தெரிஞ்சாலும் இப்படி பயமில்லாம இருப்பயா அகல்யா" என்று குரலை மாற்றிக் கொண்டு அவன் வினவ "விளையாடதீங்க சக்தி" என்றபடியோ திரும்பியவள் திகைத்து நின்று விட்டாள்.
அவள் சத்தியமாக இதை எதிர்பார்க்கவே இல்லை. சக்தி என்ற வார்த்தை தொண்டைக்குள்ளயே அமிழ்ந்து போய்விட தலையில்லா அந்த உருவத்தைக் கண்டு மீண்டும் தலைதெறிக்க ஓடத் தொடங்கினாள்.
செல்லும் அவளை சிரிப்புச் சத்தம் மட்டுமே பின்தொடர்ந்து வந்தது. ஓடினாள் ஓடினாள் அந்த வனாந்தரத்தின் எல்லைக்கே ஓடினாள். உறங்கிக் கொண்டிருந்த விலங்குகள் கூட இவளின் ஓட்டத்தினால் விழித்துவிடும் போல அப்படிதான் அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.
ரத்னாவோ ஆத்தா மாரியாத்தா இந்த பச்சப்புள்ளயை இப்படி பாடு படுத்துறானுங்களே. இவனுங்ககிட்ட இருந்து என்னை மட்டும் காப்பாத்திடு என்று நினைத்தவன் "நோ..நோ. நாம சுயநலமா சிந்திக்க கூடாது. அதனால போனப் போகுது என்னோட சேர்ந்து அவனுங்களையும் காப்பாத்திடும்மா. இப்போ இந்த மச்சி வேற எங்க இருக்கான்னு தெரியலையே" என்று தனக்குத்தானே பித்தனைப் போல் புலம்பிக் கொண்டு வந்தவனின் புத்தியில் புதிதாய் காட்சிகள் தெளிவில்லாமல் தோன்ற ஆரம்பித்தது.
அது என்ன என்று அவன் அவதானிக்க முயன்றான்.
கோவில் மாதிரி தெரியுதே ஆனா ஏன்? எனக்கு இப்படித் தெரியுது என்று ரத்னா யோசிக்க மீண்டும் மீண்டும் மாரியம்மன் கோவிலே தெரிந்தது. அதுவும் இப்போது புதியதாய் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடம் அல்லாது அந்த மாரி குடிகொண்டிருக்கும் அந்த சிறிய தகர அறை தான் அவனுக்கு புலப்பட்டது.
இதுக்கு என்ன அர்த்தம் ஆத்தா. நான் அங்க போகணுமா என்று அவன் சற்று சத்தமாகவே சொல்ல அப்படியே அந்த காட்சி மறைந்து போய்விட்டது. அதன்பின் நொடி நேரம் கூட தாமதிக்காமல் அவன் திரும்பி நடந்தான். அவன் திரும்பியதை அறிந்தும் வரம்பன் இருந்த இடத்தை விட்டு நகராமல் அமைதியாக இருந்தான்.
உடுக்கைச் சத்தம்
சக்தியை வழிநடத்த
மாரியே மனமிரங்கி ரத்னாவுக்கு வழிகாட்ட
இனி நடப்பவையினால் யாருக்கு என்ன ஆகப் போகிறதோ?...
கேட்டுக் கொண்டிருந்த உடுக்கை ஒலியைத் தொடர்ந்து சக்தி சென்று கொண்டிருக்க அவன் பின் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. ஆனால் தன்னை தடுக்கவே இவ்வாறு சத்தங்கள் கேட்கிறது என்பதை அவன் உணர்ந்தே இருந்ததால் திரும்பவில்லை.
அங்கே ஓடிக் கொண்டிருந்த அகல்யாவின் கண்களில் தூரத்தில் சிறியதாய் பொட்டென வெளிச்சம் பட்டது. அதைக் கண்டவள் அந்த இடத்தைத் தேடிப் போனாள். அங்கே செல்ல வேண்டாம் என்று ஒருபுறம் தோன்றினாலும் போய் பார்க்கலாம் என்ற உந்துதலில் அவள் அங்கே சென்றாள்.
"அடடே தங்கச்சி வாம்மா வா" என்று அட்டகாசமாய் சிரித்துக் கொண்டு இரு கரத்தினையும் நீட்டியபடி ஆர்ப்பாட்டமாய் ஒருவன் வரவேற்றதில் ஒரு நிமிடம் அகல்யா குழம்பிப் போனாள்.
"என்ன தங்கச்சி நான் யார்னு உனக்குத் தெரியலையா. என்னம்மா நீ... நான் தான் உன் இரண்டாவது அண்ணன் மாயவரம்பன்" என்று சொல்ல "அண்ணா" என்று அவள் திடுக்கிடலுடன் அழைத்தாள்.
"இப்பவாவது தெரிஞ்சதே அண்ணன்னு. அப்பறம் தங்கச்சிமா என்ன இந்தப்பக்கம்" என்று ஆச்சர்யமாக அவன் கேட்க "அண்ணா சக்தி" என்று அவள் திணற ஆரம்மபித்தாள்.
"என்னம்மா சொல்லுற சக்தி மாப்பிள்ளைய காணோமா" என்று போலியான பதட்டத்துடன் அவன் கேட்க அவளோ மௌனமாகவே ஏறிட்டு பின் மெதுவான குரலில் "அண்ணா இது எல்லாம் வேண்டாம் அண்ணா. நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம். நீங்க இதை எல்லாம் விட்டு வந்தீங்கன்னா நம்ம வாழ்க்கையே நல்லா இருக்கும். அந்த மந்திரக் கோல் நமக்கு சொந்தமானது இல்லை அண்ணா. சொந்தமில்லாத ஒரு விசயத்துக்காக சொந்த பந்தத்தை எல்லாம் இழந்துட்டு வாழ்ற வாழ்க்கை சரியா அண்ணா" என்று அவள் பேச "தங்கச்சிக்கு வயசு கம்மியா இருந்தாலும் தத்துவம் நல்லா பேசுறாங்களே. உங்க அம்மா சொல்லித் தந்தாங்களா" என்றதும்
"அவங்க நம்ம அம்மா அண்ணா" என்றாள் அவள்.
"அம்மாவா..." என்று சிரித்தவன் "எப்போ அப்பாவுக்கு அப்படி ஒரு துரோகம் பண்ணாங்களோ அப்பவே எனக்கு அவங்க அம்மா இல்லைன்னு நான் முடிவு பண்ணிட்டேன்" என்றான் மாயவரம்பன்.
"அப்பா தான் முதல்ல அம்மாவுக்கு துரோகம் பண்ணிருக்காங்க அதை முதல்ல நீ தெரிஞ்சுக்கோ. இதுக்காகத்தான் கல்யாணம் பண்ணப் போறேன் அப்படிங்கிறதையே மறைச்சு கல்யாணம் பண்ணிட்டு கடைசியில மாதவனை கொல்ல அம்மாகிட்டயே விசம் குடுத்து அனுப்புன அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணி நீ பேசுறயா. இன்னொரு தடவை நீ என்கிட்ட அந்த மாதிரி பேசு அப்பறமா நடக்குறதே வேற" என்று அகல்யா சொல்ல "பாரேன் எந்தங்கச்சி கூட ரொம்ப ரோசப்பட்டு கோபமா பேசுதே" என்று அவன் ஆச்சர்யமாக கேட்டான்.
"உன் உடம்புல ஓடுற அதே ரத்தம் தான் இங்கேயும் ஓடுது. அப்படி இருக்கும் போது உன்னை விட நான் அதிகமாகவே பேசுவேன்" என்று அவள் சொல்ல "இரத்தம்னு சொன்ன உடனே தான் எனக்கு ஞாபகம் வருது. அந்த இரத்தம் எப்படியிருக்குன்னு நீ பாக்க வேண்டாமா. வா என் கூட" என்று சொன்னவன் அவளை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியே சென்றான்.
"விடு அண்ணா" என்று அவள் கையை இழுக்க முயற்சி செய்ய அவனோ "அண்ணான்னு கூப்பிட்ட அப்படியே அறைஞ்சுடுவேன். வாயை மூடிட்டு பேசாம வா. உனக்கு நான் அண்ணனா. அதுக்குத்தான் அங்க இரண்டு பேர் இருக்கானுங்களே. நான் யாருக்கும் சொந்தம் இல்லை. உங்க எல்லாருக்கும் வில்லன் புரிஞ்சதா" என்று கோபமாக சொல்லிவிட்டு நடக்க அதன்பின் எதுவும் பேசமால் அவள் வந்து கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் தன் அப்பாவின் முன் சென்று அவளை நிறுத்தினான் அவன்.
"அப்பா இங்க பாருங்க" என்று அவன் சொல்ல வேதனையில் முணங்கிக் கொண்டிருந்த தங்கப்பாண்டி கண்களைத் திறந்து எதிரே இருப்பவர்களைப் பார்த்தான்.
"அமராவதி" என்று அவன் உதடுகள் மெதுவாக அசைய அதைக் கேட்டவனோ "அகல்யா ப்பா" என்றான்.
"அப்படியே அம்மா மாதிரியே இருக்கயேடா" என்று அவன் பாசத்துடன் பேச அவளுக்குள்ளுள் இயல்பாக இருக்கும் பாசத்தினால் அப்பா என்று அழைத்து விட்டாள்.
"உனக்காவது இந்த அளவுக்கு பாசம் இருக்கே அகல்யா... ரொம்ப சந்தோசமா இருக்கும்மா" என்று அவன் சொல்ல "அப்பா நீங்க நீங்க" என்று அவள் அவனின் உடலைக் காட்டி கேட்க "இது நான் பண்ண தப்புக்கான தண்டனை. இதையும் உன் அம்மா தான் எனக்குக் குடுத்தா. உனக்கேத் தெரிஞ்சுருக்குமே" என்று அவன் சொல்ல "இந்த வேதனை தேவையா அப்பா. அப்பவே இது எல்லாம் வேண்டாம்னு விட்டுருக்கலாம்ல" என்றாள் அகல்யா.
"அது முடியாது அகல்யா. நான் அந்த கோலை எப்படியாவது அடைஞ்சு என் பாட்டனோட ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு தான் இவ்வளவு போராடுனேன். ஆனா அதை உங்க அம்மா வந்து தடுத்துட்டா. இப்போ இருபத்து நாலு வருசமா இந்த தண்டனை வேற அனுபவிச்சுட்டு இருக்கேன். இதுக்கடுத்தும் வேண்டாம்னு எப்படி விட முடியும். அந்த கோல் கைக்கு வந்தாத்தான் நான் இந்த வேதனையில் இருந்து விடுபட முடியும். அதுக்காகத்தான் வரம்பன் இதை எடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கான். கண்டிப்பா எடுப்பான். இப்போ நீயும் வந்துட்ட. உன்னால மட்டும் தான் அந்த கோல் உள்ளே இருந்து வெளிய வரும். அதை மட்டும் எடுத்து எங்ககிட்ட குடுத்துரு ம்மா. இந்த அப்பனுக்கு வேற எதுவும் வேண்டாம்" என்று தங்கப்பாண்டி முணங்க
"அந்த கோல் கைக்கு வந்தா இது மட்டும் இல்ல என்னென்னவோ பண்ணுவீங்க. அது தப்பு தான. அதனால நான் அதை எடுக்க விட மாட்டேன் அப்பா. அது அந்த தெய்வத்துக்கு சொந்தமானது. நமக்கு அது வேண்டாம்" என்று அவள் சொல்ல
"சரி விடும்மா அதை எப்படி அடையுறதுன்னு எங்களுக்குத் தெரியும்" என்றான் பாண்டி.
"இவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் கூட நீங்க மாறவே இல்லை அப்பா" என்று அவள் வெறுப்புடன் சொல்ல "அதை விடும்மா.. நீ இங்க அப்பாகிட்ட வா. நீ பிறந்த அப்போ உன்னைத் தொட்டுத் தூக்குனது. அடுத்து இந்த அப்பனால உன்னைப் பாக்கக் கூட முடியல" என்று சொன்னதும் அவள் வேகமாக "அப்பா" என்று அவன் அருகே சென்றாள்.
கட்டிலில் படுத்திருந்தவனின் கரம் அருகே அவள் அமர்ந்திருக்க அவனோ அந்த கரத்தினால் அவள் தலையை வருடத் தொடங்கினான்.
கையில் இருந்த எரிச்சல் மட்டுப்பட்டது போல் இருந்தது தங்கப்பாண்டிக்கு. "உன் அம்மா மாதிரி நீ ரொம்ப நல்லவளா இருக்கயே ம்மா. அதனால தான அந்த கோலை எடுத்து தர முடியாதுன்னு சொல்லுற. எப்பவும் அம்மாவுக்கு மட்டும் புள்ளையா இருக்கணும்னு அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு இந்த அப்பனுக்கும் புள்ளையா இருக்கலாம்" என்று சொன்னவன் சட்டென்னு தன் பெருவிரல் கொண்டு அவளின் நெற்றியின் மையத்தை அழுத்தினான். அவ்வளவுதான் அவள் மயங்கி கீழே விழுந்து விட்டாள்.
"இனி இவ நம்ம பேச்சை மட்டும் தான் கேப்பா வரம்பா.. இவள் எந்திரிச்சதும் இவ என்ன பண்ணனும்னு சொல்லிடு என்று சொல்ல சரிப்பா "என்று சொன்னவன் "அப்பா அந்த மாதவனை தேடி சக்தி வந்துட்டு இருக்கான். சக்தியை கொல்லணும்னு நினைக்கும் போதெல்லாம் யாராவது தடுத்துடுறாங்க. அவன் இப்போ மாதவனை விட ரொம்ப ஆபத்தானவன்" என்று சொன்னதும் சிரித்த தங்கப்பாண்டி "உண்மைதான் வரம்பா. இப்போ அவங்களுக்கான பலம் அதிகரிச்சுருக்கு. ஆனா இதை நினைச்சு நாம நம்மளோட பலத்தை குறைச்சு நினைச்சுட வேண்டாம். கண்டிப்பா இந்த தடவை நாம கோலை எடுத்துடலாம்" என்று சொல்ல "அந்த நம்பிக்கை எனக்கும் இருக்குப்பா. ஆனா அந்த ஓலை.." என்று வரம்பன் பேச்சை நிறுத்த "என்னதான் எல்லாமே அவங்க கைக்கு கிடைச்சாலும் நம்மளை அவங்களால தடுத்து நிறுத்த முடியாது வரம்பா எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்" என்று சொன்னவன் முகம் இப்போது வேதனையின் சாயல் இல்லாமல் இருந்தது.
"அப்பா உங்களுக்கு பாதி சரியாகிடுச்சு" என்று வரம்பன் குதூகலத்துடன் சொல்ல அவனோ கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து தன் அருகே இருந்த தன் மகளையே பார்வையால் வருடினான்.
அங்கோ சத்ய ருத்திரன் தன் அன்னையிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.
"அம்மா என்னம்மா நடக்குது. எல்லாமே நமக்கு எதிரா வந்து நிக்குது.இப்போ என்ன பண்ணுறது. மாதவன் வேற இன்னும் வரலை" என்று கேட்க
"அவன் வந்துடுவான் சத்யா நீ வேலையை பாரு" என்று அவள் சொல்லிவிட அவனும் அமைதியாகிவிட்டான்.
மலைகளின் மேல ஏறிச் சென்று அந்த இடத்தில் உள்ள ஒரு சிறிய புதர் போன்ற பகுதியை சக்தி அடைந்ததும் உடுக்கை ஒலி நின்று விட்டது. அப்படியானால் இங்குதான் மாதவன் இருக்கிறானா என்று நினைத்தவன் அந்த புதரை விலக்கி கொண்டு உள்ளே நுழைந்தான். "அண்ணா" என்று தீணமான குரல் சக்திக்கு கேட்டது.
"மாப்ள" என்று அழைத்தபடி அவன் உள்ளே நுழைந்து பார்க்க இரத்தம் வழிந்து உறைந்த நிலையில் மாதவன் அறை மயக்கத்தில் கிடந்தான்.
"மாதவா மாதவா" என்று அவனை உலுக்க அவனோ "அகல்யா அகல்யா" என்று பிதற்றிக் கொண்டிருந்தான். அவனைத் தூக்கிக் கொண்டவன் அங்கிருந்து புறப்பட்டான்.
கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருந்த ரத்னா தனது வேகத்தினை அதிகப்படுத்தினான். அவனைத் தடுக்க அங்கு யாரும் இல்லை. அதனால் அவன் சீக்கிரமாகவே கோவிலை அடைந்துவிட்டான்.
கோவிலுக்குள் நுழைந்தவன் நேராக அந்த தகரம் போட்டிருந்த அந்த அறைக் கதவினைத் திறந்து உள்ளே சென்றான். எதிரே மாரியம்மனின் சூலமும் அந்த கல்தூண் மட்டும் இருக்க அவன் அங்கே அமர்ந்தான்.
அகல்யாவைத் தேடிப் போனேன். ஆனா நீ கோவிலுக்கு வர வச்சுட்ட. இப்போ என்ன பண்ணனும் சொல்லும்மா என்று அவளிடம் ஆத்மார்த்தமாக வேண்ட அவன் சிந்தனையில் பெரியசாமியின் அறையும் கோவிலில் மூலையில் இருந்த தண்ணீர் தொட்டியும் மாறி மாறி தோன்றியது.
சட்டென்று எழுந்தவன் தண்ணீர் தொட்டியினை நோக்கிச் சென்றான்.
கந்தையாவோ "இவன் என்ன இப்படிப் பண்ணுறான். இது நடந்தா நாம கோல் எடுக்குறது கஷ்டமா இருக்குமே இப்போ என்ன பண்ணுறது" என்று சித்தையாவிடம் கேட்டான்.
"நாம ஏதாவது பண்ணலாம்னு பார்த்தா இவன் எதுவும் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டான்" என்று சித்தையா சொல்ல "அப்போ நாம வெறுமனே கையைக் கட்டிட்டு வேடிக்கை மட்டும் பார்க்கவா" என்றான் கந்தையா.
"இல்லை கந்தையா நாம தடுக்க முயற்சி பண்ண முடியாது. ஏன்னா இப்போ அவன் கோவிலுக்குள்ள இருக்கான். ரத்னா வெளிய வரட்டும். வரம்பன் கிட்ட கேட்டுட்டு நாம அவன் சொல்லுற மாதிரி பண்ணலாம்" என்று சொல்ல அங்கே அகல்யாவுடன் வந்து நின்றான் மாயவரம்பன். அதன்பின் அவர்கள் பேசுவதற்கு அங்கு எதுவுமே இல்லையென்று ஆனது.
ரத்னா தண்ணீர் தொட்டிக்குள் கையை விட்டு பார்த்தான். அதற்குள் எதுவும் இருப்பதற்கான அறிகுறி அவனுக்குத் தென்படவில்லை. இதுக்குள்ள என்ன இருந்ததுன்னு எனக்கு இந்த தண்ணீர் தொட்டியே தெரிஞ்சுது... இங்கதான் இருக்கா. இல்லை இதைச் சுத்தி வேற எங்கயாவது இருக்கா என்று தனக்குள்ளயே பேசியவாறு தேடத் தொடங்கினான்.
சரியென்று தண்ணீர் தொட்டிக்குள் அவன் இறங்கி பார்க்க குளிர் தான் அவன் தேகம் உணர்ந்ததே தவிர உள்ளே எதுவும் இருப்பதாக அவனால் உணரவே முடியவில்லை.
அதிலிருந்து இறங்கியவன்
அந்த தொட்டியின் பின் புறம் சென்று பார்த்தான். தண்ணீர் பட்டு பட்டு அங்கு சேறாக இருந்தது. அதைக் கண்டவன் அங்கே நடக்க சட்டென்று வழுக்கி விழுந்தான். உடலெல்லாம் சேறாக இருக்க தன் கை அந்த சேற்றில் புதைவதைக் கண்டான். உடனே நிமிர்ந்து அமர்ந்தவன் அதனுள்ளும் கைவிட்டு துழாவத் தொடங்கினான். கடைசியில் அவன் கையில் ஏதோவொன்று தட்டுப்பட்டது.
அதை எடுத்தவன் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரில் கழுவி விட்டு பார்க்க அது சின்னதாய் பெட்டி போல் இருந்தது. அதைத் திறந்து பார்க்க அவன் முயல அது அவனால் முடியவில்லை. சரி அடுத்ததா நம்ம வீடு தான ஞாபகத்துக்கு வந்தது அங்கயே போகலாம். ஒருவேளை அங்க போனா இதை திறக்க முடியுமோ என்னவோ என்று நினைத்தவன் அங்கிருந்து கிளம்பி வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் முன் சென்று நின்றவன் சாவி என்று நினைக்கும் முன்னே கதவு பட்டென்று திறந்து கொள்ள அவனும் நுழைந்துவிட்டான். இதில் அவனுக்கு எந்தவித ஆச்சர்யமும் ஏற்படவில்லை. ஏனென்றால் இது எல்லாம் அவனுக்கு ரொம்பவே பழகி விட்டது.
உள்ளே சாமியறையில் சத்ய ருத்திரன் அமர்ந்திருக்க அவன் முன் என்னென்னவோ வரையப்பட்டிருந்தது. ரத்னா அவனை எழுப்ப முயற்சி செய்ய அமராவதி அவன் முன் தோன்றி வேண்டாம் என்று சொல்ல அவன் அமைதியாக கையில் இருக்கும் பொருளை அவளை நோக்கி நீட்டினான்.
"அம்மா இது என்னென்னு தெரியலை. உங்களுக்கு தெரியுமா" என்று நீட்டியபடியே கேட்க "இது வெளிய வரணும்னு தான் சத்யனை இந்த பூசை பண்ண சொன்னேன். அவன் பூசையை முடிச்சுட்டு வரட்டும். அதுக்கப்பறம் இதைப் பத்தி பேசலாம்" என்றாள் அமராவதி.
"அம்மா இந்த அகல்யா வேற வீட்டை விட்டு போய்ட்டா. அவளை வேற தேடணும். நான் போகட்டா" என்று அவன் கேட்க "அவ பத்திரமாத்தான் டா இருப்பா. அவ இல்லைன்னா அவனுங்களால எப்படி கோலை எடுக்க முடியும். அதனால அவளைப் பத்தின கவலையை விடு" என்றாள் அவள்.
"அப்போ நான் என்னதான் பண்ணுறது" என்று ரத்னா கேட்க "உன்னோட டிரெஸ் எல்லாம் சேறா இருக்கு. போய் குளிச்சுட்டு வேற டிரெஸ் மாத்திட்டு வந்து படுத்து தூங்கு. விடியுறதுக்கு இன்னும் நேரம் இருக்கு" என்றாள் அமராவதி.
"அம்மா நிசமாத்தான் சொல்லுறீங்களா. நான் உண்மையிலே தூங்கிடுவேன்" என்று அவன் பேச "தூக்கம் வந்தா தூங்கு டா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்து விட்டாள் அமராவதி.
தூங்குறதா என்று நினைத்தபடி குளித்துவிட்டு வந்தவன் அங்கிருந்த இருக்கையிலே காலை நீட்டி படுத்தவன் கண்களை மூட உண்மையிலே உறங்கி போய்விட்டான்.
"டேய் ரத்னா ரத்னா" என்று சத்யன் அவனை எழுப்ப "அண்ணா" என்று அழைத்தபடி எழுந்து அமர்ந்தான் அவன்.
"அது சரி மச்சி வந்துட்டானா" என்று அவன் சத்யனிடம் கேட்க அந்த நேரத்தில் வாசல் பக்கம் இருந்து யாரோ வரும் அரவம் கேட்டது.
இருவரும் வேகமாக வெளியே வந்து பார்க்க மாதவனை தோளில் போட்டுக் சக்திதான் வந்து கொண்டிருந்தான்.
"மாதவா" என்றபடி அவனை தாங்கிப் பிடித்த சத்யா உள்ளே சென்று விட பின்னாலே இவனும் வந்தான்.
உடம்பில் இருந்த காயத்தைப் பார்த்ததும் சத்யனுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்ததுவிட்டது. மாதவா மாதவா என்று அவன் பார்க்க ரத்னாவோ உள்ளே இருந்து தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் விசிறியடிக்க மெதுவாய் சிறு முனங்கலுடன் எழுந்தான் மாதவன்.
"அண்ணா" என்றபடி அவன் முழிக்க "மாதவா இப்போ பரவாயில்லையா டா. நல்லா உக்காரு. ஏன்டா நீ ஏன் வீட்டை விட்டு போன" என்றான் சத்யன்.
"அது வந்து அண்ணா அகல்யா குரல் வெளியே இருந்து கேட்டுச்சு. அதான் நானும் வெளியே வந்தேன். ஆனா அடுத்து என்ன நடந்ததுன்னு தான் எனக்குத் தெரியல. இப்போ இங்க இருக்கேன்" என்று சொல்ல "அகல்யா வீட்டுல தான் இருக்கா மாப்ளை" என்று சக்தி சொல்லும் போதே ரத்னா "இல்லை மச்சி அவ வீட்டுல இல்லை. எங்கயோ போய்ட்டா அவளைத் தேடித்தான் நானே வீட்டுல இருந்து வெளிய வந்தேன்" என்றான்.
"என்னடா சொல்லுற" என்று சக்தி பதறிப் போய் கேட்க அவனோ "ஆமா மச்சி தண்ணி குடிக்க போறேன்னு போனா அடுத்து அவளை காணோம்" என்றதும் "உன்னை அவளை பத்திரமா பாத்துக்கச் சொல்லிட்டு தான வந்தேன். ஆனா நீ..." என்று சக்தி ரத்னாவைத் திட்டுவதற்கு ஆரம்பிக்கும் முன் "ஹலோ மச்சி உன் பொண்டாட்டி என்னமோ அடங்கி ஒடுங்கி உக்காருற பச்ச பிள்ள மாதிரி பேசாத. அதுவே ஒரு ராட்சஸி. அவ பாட்டுக்கு கிளம்பி போயிட்டா. இதுக்கெல்லாம் என்னைத் திட்டுன அப்பறம் அவ்வளவுதான் சொல்லிட்டேன்" என்று ரத்னா பேசியதும் அமைதியானவன் பின் "அவளுக்கு ஏதாவது ஆகிருக்குமா" என்று பயத்துடன் கேட்க சத்யனோ "நம்ம உயிரை விட அவ உயிர் தான் வரம்பனுக்கு ரொம்ப முக்கியம். அதனால அவ எங்க இருந்தாலும் பாதுகாப்பாத்தான் இருப்பா மாப்பிள்ளை" என்றான்.
"சரி இப்போ என்ன பண்ணுறது" என்று சத்யனிடம் சக்தி கேட்க அவனோ "நாளைக்கு வரம்பனை தடுத்து நிறுத்துறதுக்கு என்ன பண்ணலாம்னு இந்த பெட்டிக்குள்ளதான் குறிப்பு இருக்கு. அதைப் படிச்சுட்டு நாம அது படியே நடந்துக்குறது தான் இப்போதைக்கு இருக்குற ஒரே வழி என்று சொல்ல "அப்போ இப்பவே திறந்து படிக்கலாம்" என்றான் ரத்னா.
"இல்லை ரத்னா. இன்னைக்கு என்னதான் முயற்சி பண்ணாலும் நம்மளால இதை திறக்க முடியாது. நாளன்னைக்கு தான் நாம இதை திறக்க முடியும்" என்றான் சத்யன்.
"அப்போ அதுவரைக்கும் என்ன பண்ணுறது" என்று ரத்னா கேட்க
"இப்போ விட்ட தூக்கத்தை கண்டினியூ பண்ணு டா" என்றான் சத்யன்.
"அண்ணா இது ஒரு குட் ஐடியா.. வாங்க எல்லாரும் போய் தூங்கலாம். கிளைமாக்ஸ் அப்போ முழிச்சுக்கலாம்" என்றான் ரத்னா...
அதைக் கேட்டதும் மாதவனோ "சீரியசா இருக்க மாட்டயா அண்ணா" என்று கேட்க "நாளைக்கழிச்சு ஒட்டுமொத்தமா எல்லாரும் சீரியசா இருந்துக்கலாம். இப்போ அதுவரைக்கும் நான் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்" என்றவன் படுத்துவிட அவனைப் போலவே மற்றவர்களும் ஆளுக்கொரு மூலையில் முடங்கினார்கள்.
இவர்கள் அனைவரும் அமைதியாக படுத்துவிட சக்தியின் மனம் முழுக்க அகல்யாவே நிறைந்திருந்தாள். அகல்யா அருகில் இல்லாத வேதனை அவனை வாட்ட தொடங்க அதை எதையும் முகத்தில் காட்டாமல் விழி மூடிக் கொண்டான். தன் கணவன் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை பற்றி புரிந்து கொள்ளக்கூட முடியாத நிலையில் அவள் இருக்க சத்ய ருத்திரனோ நடக்கப் போகும் விபரீதம் யாருக்கும் எந்த பாதிப்பையும் எற்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்திலே கண்ணயர்ந்தான்.
துர்கா இன்று நடக்கப் போகும் நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு கண்ணீர் வடிந்தபடி இருக்க அதைக் கண்டு மாரியப்பனும் சாமிநாதனும் அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் வெளியே இருந்து உள்ளே வந்த மாதவன் "அம்மா" என்று அழைக்க அவளோ கண்ணீரை அவசரமாக துடைத்துவிட்டு என்ன என்று அவனைப் பார்த்தாள்.
"எதுக்கு இப்படி வேதனைப்பட்டுட்டு இருக்கீங்க. உங்க பொண்ணுக்கு எதுவும் ஆகாது. ஆகவும் நாங்க விட மாட்டோம்" என்று அவன் சொல்ல "அதுக்கில்ல டா மாதவா. ஏற்கனவே பாண்டி அண்ணன் ரொம்ப கோபத்துல இருந்துச்சு. இன்னைக்கும் கோல் எடுக்க முடியாமப் போச்சுன்னா அந்த கோபம் அகல்யா மேல தான் திரும்பும். அந்த நேரத்துல அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு டா" என்று துர்கா சொல்ல "ஒன்னும் ஆகாதுன்னு நான் சொல்லுறேன்ல. நான் சொன்ன நீங்க கேப்பீங்க தான" என்று அவன் கேட்க அவளும் கேட்பேன் என்பது போல் தலையை ஆட்டினாள்.
"சரி எதுக்கும் கவலைப்படாதீங்க. இன்னைக்கு இரவு நடக்கப் போறது நல்லதாக தான் நடக்கும். அந்த நம்பிக்கையோடு இருங்க. எல்லாரும் சத்யா அண்ணன் சொன்ன மாதிரி பண்ணிட்டு வீட்டுக்குள்ளயே இருங்க. மற்றதை நாங்க பாத்துக்கிறோம். சரியா... நான் கிளம்புறேன் ம்மா" என்று சொல்ல அவளோ "எல்லா சாமியும் உங்களுக்குத் துணையா இருக்கட்டும்" என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
அனைவரும் ரத்னாவின் வீட்டில் குழுமியிருந்தனர். சத்யன் பெரியசாமியின் அறையில் பயபக்தியோடு நின்றிருக்க ரத்னாவோ கையில் இருந்த மஞ்சள் நிறப் பொடியினால் தரையில் கோடுகள் கிழித்துக் கொண்டிருந்தான்.
சக்தியோ தன் வீட்டில் இருந்த ஐயனாரின் உருவப்படத்தை எடுத்துக் கொண்டு வர அப்போதுதான் மாதவனும் உள்ளே நுழைந்தான். அதற்குள் ரத்னா கோலமிட்டு முடிக்க சக்தி அந்த படத்தை சாமியறையில் வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்தார்கள். ரத்னா தான் எடுத்து வந்த அந்த பெட்டியை எடுத்து கோலத்தின் நடுவே வைத்தான்.
அந்த நேரத்தில் தங்கப்பாண்டி அகல்யாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து மற்றவர்களுடன் கிளம்ப ஆயத்தமானான். அப்போது வரம்பன் "அங்கே இவளோட புருசனும் அண்ணன்காரனுங்களும் சேர்ந்து அந்த பெட்டியை திறக்க முயற்சி பண்ணுறாங்க என்னப்பா பண்ணுறது" என்று கேட்டான்.
"என்ன நடக்க போகுதுன்னு அவங்களை மாதிரியே நீயும் பொறுமையா இருந்து பாரு வரம்பா. இப்போ எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. நான் போயிட்டு வந்துடுறேன். அடுத்து நாம கோவிலுக்குப் போகலாம். அதுக்குள்ள எல்லாமே தயாராக இருக்கட்டும்" என்று சொன்னவன் அங்கிருந்து வெளியேறினான்.
எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் இறைவனை மனதார வணங்கினார்கள். ஏற்றிய விளக்கில் இருந்து சீரான ஒளி அறை முழுவதையும் வியாபித்து இருந்தது. அப்போது சத்யன் சக்தியையும் மாதவனையும் அழைத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு ஏற்றி விட்டு வருமாறு பணித்தான்.
இருவரும் சத்யன் சொன்னதுபோல் செய்துவிட்டு மாரியம்மனை வணங்கிவிட்டு அறைக்குள் நுழைந்தார்கள். சத்யன் பூஜையை ஆரம்பிக்க மற்ற மூவரும் அவனைச் சுற்றி அமர்ந்தார்கள். பூஜை முடியும் தருவாயில் அந்த பெட்டி சற்று மேல் நோக்கி வந்தது. ஆடாமல் அசையாமல் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த அந்தப் பெட்டி சில நொடியில் அதுவாகவே திறந்து கொண்டது. திறந்த பெட்டியின் உள்ளே இருந்து வெண்மை நிற ஒளி வெளியேறியது. அந்த ஒளி அந்த அறை முழுவதும் பரவ உள்ளிருந்து இப்போது ஓலை ஒன்று மிதந்து வெளியே வந்து விழுந்தது. வேகமாக ரத்னா எடுத்து பரவசத்துடன் பார்க்க அதுவோ வெறுமையாக இருந்தது.
"என்னடா எழுதியிருக்கு" என்று சக்தியும் கேட்க "ஒன்னுமே இல்ல மச்சி" என்றான் அவன்.
"இதுல தான்டா அவங்களை தடுப்பதற்கான குறிப்பு இருக்கு. அப்புறம் எப்படி அதுல ஒண்ணுமே இல்லாம இருக்கும். உனக்கு கண்ணு தெரியாமப் போச்சு" என்று சக்தி சொல்ல "எங்க அப்ப நீ படிச்சு சொல்லு" என்று நீட்டினான் ரத்னா.
அதை வாங்கிய சக்தியும் அதைத் திருப்பி திருப்பிப் பார்க்க அந்த ஓலையினுள் எதுவுமே இல்லை.
"என்ன தெரியலையா மச்சி. அதான் கண்ணு தெரியலையா" என்று ரத்னா கேட்க உடனே சக்தி மாதவனிடம் நீட்டி "ஒருவேளை இந்த ஹீரோ கண்ணுக்குத் தான் தெரியும் போல. இந்தா டா படிச்சுட்டு சொல்லு. நீதான அடிக்கடி ஹீரோன்னு சொல்லிட்டு திரிஞ்ச..." என்றதும் "அப்படி உண்மையை ஒத்துக்கோங்க மச்சான்" என்றவன் அதை வாங்கிப் பார்த்துவிட்டு அந்த ஓலையை அப்படியே ஓரமாக வைத்துவிட்டான்.
"ஆக எவனுக்குமே கண்ணு தெரியலை" என்று ரத்னா சொல்ல "ரத்னா இப்போ இது கிண்டல் பண்ணுறதுக்கான நேரம் இல்லை. இதுல இருக்குறது நமக்கு தெரிஞ்சாத்தான் நாம அகல்யாவைத் தடுத்து நிறுத்தி அந்த கோலை எடுக்க விடாம செய்ய முடியும். அதனால அதை எப்படி தெரிஞ்சுக்குறது அப்படின்னு யோசிங்க அதை விட்டு இப்படி நேரத்தை வீணாக்காதீங்க" என்று சொன்னதும் அவன் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்து மற்றவர்கள் அமைதியானார்கள்.
தங்கப்பாண்டி அங்கிருந்து கிளம்பி இத்தனை நாளாய் சத்யன் இருந்த அந்த இடத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தான். இதுவரையில் அவன் அடைந்த வேதனை அவனை இன்னும் குரூரமானவனாய் மாற்றியிருந்தது. அமராவதியின் மேல் அவன் வன்மம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவளை நினைத்ததும் அவள் செய்த அத்தனையும் அவனுக்கு நினைவுக்கு வர "அமராவதி" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கத்த ஆரம்பிக்க அதுசமயம் அந்த பெயருக்கு சொந்தமானவளே அவன் எதிரே வந்து நின்றாள். அவள் கண்களிலும் கனல் ஏறியிருந்தது.
"வந்துட்டயா... வா வா... உன்னைப் பாத்தாலே என் உடம்பு அன்னைக்கு மாதிரியே பத்திக்கிட்டு எரியுது. எத்தனை வருசம் என்னை வேதனைப்பட வச்சுட்ட இல்ல" என்று அவன் வெஞ்சினத்துடன் பேச இவளோ"எங்க போற" என்றாள் சாதாரணமாக. அப்படிக் கேட்டதும் "எனக்கு சொந்தமானதை எடுக்க போறேன்" என்றான் அவன்.
"இவ்வளவு வருசம் ஆனபிறகும் நீ மாறவே மாறலை இல்லை" என்று ஆக்ரோசத்துடன் கேட்க "நான் மாற மாட்டேன். நான் எதுக்கு மாறணும். மாறவே மாட்டேன். அதே மாதிரி என் திட்டத்தையே பாழாக்குன உன்னை நான் சும்மாவும் விட மாட்டேன். நீ மட்டும் கொஞ்சம் அவசரப்படாம இருந்திருந்தா இப்போ நீயும் இறந்துருக்க தேவையில்லை. நானும் இவ்வளவு வேதனை அடைஞ்சுருக்க தேவையும் இல்லை. ஆனா எல்லாத்தையும் கெடுத்து நீ நாசமாக்கிட்ட. அதனால இனியும் நான் சும்மா இருந்தா அது நல்லா இருக்காது. நான் எனக்கு சொந்தமானதை எடுத்துக்கப் போறேன். எதை வச்சு அன்னைக்கு என்னைத் தடுத்து நிறுத்துனயோ அதை வச்சே நான் இந்த தடவை கோலை எடுத்துக் காட்டுறேன். முடிஞ்சா என்னை இப்போ தடுத்து நிறுத்திப் பாரு" என்று சொன்னவன் முன்னேறிச் செல்ல அவனைத் தடுக்கும் வழியறியாது அமைதியாக நின்றுவிட்டாள். அவனைத் தாக்கி தடுத்து நிறுத்துவது தேவையில்லாத விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என்று அவளுக்குத் தெரிந்தே தான் இருந்தது.
நடந்து சென்றவன் சத்யனின் இருப்பிடத்தை அடைந்து விட்டான். வாசலில் இருந்த சங்கரியோ தங்கப்பாண்டியனைப் பார்த்தவுடன் அங்கிருந்து விரைந்து வெளியேறி விட்டாள். இவன் சத்யனோட அப்பா தான.. இவன் எதுக்கு இங்க வந்தான் என்று அவள் யோசித்தபடியே சென்று கொண்டிருக்க அங்கே ஓரிடத்தில் அமராவதி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
"அம்மா அங்க சத்யனோட அப்பா உள்ள போயிருக்காரு" என்று அவள் சொல்ல
"தெரியும் சங்கரி. ஆனா தடுக்க கூடிய நிலையில நான் இல்லை. யாருமே தடுத்து நிறுத்திடக் கூடாதுன்னு தான் இத்தனை வருசமா உபயோகிக்காமல் வச்சுருந்த அவனோட மாந்தீரக பலத்தை இப்போ துணையா கூட்டிட்டு வந்துருக்கான்" என்றாள் அமராவதி.
"அவன் உள்ள இருக்குறதை எடுத்துட்டு போயிட்டா அடுத்து நடக்கிறது எல்லாம் அவனுக்கு சாதகமாக மாறிடுமே" என்றதும் "ம்ம் ஆமா" என்று அமராவதி மீண்டும் அமைதியாகிவிட "அம்மா அன்னைக்கு தனியாளா நின்னு அவனை எதிர்த்து போராடுனீங்க. இன்னைக்கு உங்களுக்கு துணையா உங்க பசங்க அத்தனை பேர் இருக்காங்க. அப்படி இருக்கும் போது நீங்க ஏன் சோர்ந்து போய் உக்காந்துருக்கீங்க. நீங்க தடுமாறுனா அங்க அவங்க தடம் மாறிடுவாங்க" என்று சங்கரி சொல்ல அதிலிருக்கும் உண்மையை உணர்ந்த அமராவதி அங்கிருந்து புறப்பட்டாள்.
உள்ளே நுழைந்த தங்க பாண்டியனுக்கு அந்த இடத்தை கண்டதுமே அதிர்ச்சியாகிவிட்டது. இவன் வரம்பனை விட மந்திரத்தில் கைதேர்ந்தவனாக இருக்கிறான் என்று நினைத்தவனுக்கு அதை நினைத்து பெருமை வந்த அதே நேரம் இவ்வளவு பலத்தை வைத்துக்கொண்டு தகப்பன் பின்னால் நிற்காமல் தர்மத்தின் பின்னால் நிற்கும் சத்யனை கண்டு வெறுப்பாகவும் இருந்தது. இப்பொழுது இதையெல்லாம் நினைக்க நேரமில்லை என்று தன் வெறுப்பை பெருமையை கைவிட்டவன் அந்த இடத்தினை தன் பார்வையினால் அலசத் தொடங்கினான்.
அந்த ஒற்றைக் கொம்பு வைத்திருந்த சிலையினை கண்டு அதனருகே செல்ல அங்கே இருந்த குங்குமத்தின் மேல் அவன் தேடி வந்த பொருள் இருந்தது. அதை அந்த சிவப்பு நிறத் துணியிலே நன்றாக முடிச்சிட்டு கொண்டவன் மகிழ்ச்சியுடனே அங்கிருந்து கிளம்பினான்.
அந்த ஓலையை திருப்பி பார்த்தபடி சத்யன் யோசிக்க அந்த நேரத்தில் டொம்மென்று எதோ ஒரு சத்தம் கேட்டது. என்னவென்று திரும்பி பார்க்க மேலே இருந்த சுவாமி படத்தில் இருந்து ஒரு மஞ்சள் நிறப்பை கீழே விழுந்திருந்தது. ரத்னா சென்று அதை எடுக்க அதனுள்ளிருந்தது ரத்னாவின் சாதகம்.
"என்னது டா ரத்னா" என்று அவன் கையில் இருந்த நோட்டைப் பார்த்து சக்தி கேட்க "என்னோட சாதகம் மச்சி. ஆனா அது ஏன் இப்போ கீழ விழுந்தது" என்றபடி சக்தியின் அருகே வந்தான்.
"குடுடா பார்க்கலாம்" என்று சொன்னவன் ஒவ்வொரு பக்கமாக திருப்பிக் கொண்டு வர கடைசியாய் ஒரு பக்கத்தில் ஏதோ எழுதியிருந்தது.
ஓலையில் இருப்பது தெரியவில்லை என்றால் எதிரியின் கை ஓங்கிவிட்டது என்றே அர்த்தம். குறிப்பை படிக்க எல்லையில் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். கருப்பன் மனது வைத்தால் மட்டுமே கவலை எல்லாம் தீரும்..
இப்படி எழுதியிருக்க அதைப் பார்த்துவிட்டு "மச்சான் இப்போ கோவிலுக்குப் போகணுமா" என்று கேட்க சத்யனும் ஆமாம் என்று தலையை ஆட்டினான். உடனே நால்வரும் அந்த பெட்டியினுள் ஓலையைப் போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
எதையோ சாதித்துவிட்ட திருப்தியுடன் உள்ளே நுழைந்த தன் தந்தையை பார்த்த வரம்பன் "அப்பா என்னப்பா. என்னாச்சு ப்பா என்று ஆர்வத்துடன் கேட்க நமக்கான அடுத்த அடியை வெற்றிகரமாக எடுத்து வச்சாச்சு மகனே. இனி யார் நினைச்சாலும் நம்மளை தடுக்க முடியாது" என்று தன்னிடம் இருந்த அந்த சிவப்பு நிற துணி முடிச்சினை காட்ட "அப்பா இதை எடுக்கணும்னு தான் நாங்க முயற்சி பண்ணோம்" என்றான் வரம்பன்.
"அதைத்தான் நான் எடுத்துட்டு வந்துட்டேன். இனி அந்த மாதவனைத் தூக்கணும் அப்பறமா நாம அந்த கோலை எந்தவித தொந்தரவும் இல்லாம எடுத்துடலாம். சரி வா அதுக்கும் நான் ஒரு திட்டம் வச்சுருக்கேன்" என்று சொன்னபடி வரம்பனை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட அங்கே அவர்களும் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் புறப்பட்டதை அறிந்த தங்கப்பாண்டியோ கோவிலுக்கு உங்களால போய்ட முடியுமா என்று நினைத்தபடி சிரித்துக் கொண்டு வரம்பனுடன் இணைந்து நடந்தான்.
கோவிலை நோக்கி நடந்து கொண்டிருக்க அவர்களுக்குத் துணையாக அமராவதி உடன் வந்து கொண்டிருந்தாள். இதுவரை எதுவும் அசம்பாவிதம் நேராமல் அவர்கள் பாதையை கடந்து கொண்டிருக்க சட்டென்று அங்கே "கோவிலுக்குப் போகப் போறீங்களா" என்ற சத்தம் கேட்டது. அந்த குரல் கேட்டதும் நால்வரின் நடையும் நிற்க அவர்களுக்கு அரணாக அமராவதி முன்னால் வந்து நின்றாள்.
"சத்யா நீங்க நிக்காம போய்ட்டு இருங்க நான் பாத்துக்கிறேன்" என்று அவள் சொல்ல சரியென்று நால்வரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
அமராவதி மட்டும் அங்கே நிற்க கொஞ்சம் கொஞ்சமாய் எதிரே செம்மண்ணை பூசியது போன்ற தோற்றத்தில் ஓர் உருவம் தோன்றியது.
"என்னைத் தடுக்க உன்னால முடியாது" என்று சொன்னவாறே அந்த உருவம் தன் விழிகளை உருட்டி அமராவதியை பார்த்தது. "அதை தடுத்து நிறுத்துன பிறகு சொல்லு" என்று சொன்னவள் அந்த உருவத்திற்கு முன் திமிராகவே நின்றாள். அவள் முகத்தில் அடக்கிவைத்த கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் அவளின் கோபமும் செல்லாமல் போகும் என்பதை அவள் அறியாது போய்விட்டாள். தடுத்து நிறுத்திடலாம் என்று அவள் தைரியமாக இருக்க அந்த தைரியத்தைச் சோதிக்க வேண்டியே வந்ததோ இந்த உருவம்.
எதிரே தன்னை எதிர்த்து ஒருத்தி நிற்கிறாள் என்றதும் கோபத்தில் அமராவதியை நோக்கி அந்த உருவம் தனது நீண்ட நாவினை நீட்ட அதிலிருந்து செந்நிற ஒளியை ஒன்று புறப்பட்டு சென்றது. அதைத் தடுத்து நிறுத்த அவள் முயலும் முன் அவளை அது சுற்றி வளைத்தது. இறுக்கி பிடித்த அந்த ஒளியினை மீறி அவளால் வெளியேற முடியவில்லை.
"தடுத்து நிறுத்திடுவேன்னு சொன்ன... முடியலை பாத்தயா" என்று சொல்லியபடி அந்த செம்மண் உருவம் அவளை விடுத்து முன் சென்ற நால்வரைத் தேடிச் சென்றது. நால்வரும் விரைந்து ஓடிக் கொண்டிருக்க பின்னாலேயே துரத்திச் சென்றது அந்த செந்நிற உருவம்.
கோவில் தூரத்தில் தெரிந்தது. அதைக் கண்ட சக்தி கோவிலுக்குள் நுழைந்துவிட்டால் ஆபத்து இல்லை என்பதை உணர்ந்து நடையில் வேகத்தை அதிகப்படுத்த சக்தியின் கரத்தைப் பிடித்து அந்த உருவம் சத்யனின் மேல் தூக்கி வீசியது.
நிலை தடுமாறி இருவரும் விழுந்து கிடக்க அதைக் கண்ட மற்ற இருவரும் நிற்காமல் கோவிலை நோக்கி ஓடினார்கள். "நில்லுங்க" என்ற கர்ஜனையில் இருவரும் நிற்க "இவனுங்க உயிர் உங்களுக்கு வேணாம்னா கோவிலுக்கு போங்க" என்று இருவரையும் மிரட்ட "அய்யோ வேண்டாம் யாரையும் எதுவும் பண்ணிடாத" என்றான் மாதவன்.
"அப்படின்னா கோவிலுக்கு போகம திரும்பி வாங்க. அந்த பெட்டியை என்கிட்ட கொடுத்துடுங்க" என்று அது மீண்டும் கட்டளையிட சத்யனோ மாதவனைப் பார்த்து கண்ணசைத்தான். அவன் சமிக்ஞையை புரிந்து கொண்ட மாதவன் ரத்னாவினை பிடித்து முன்னால் தள்ளிவிட்டு அவன் கரத்தில் இருந்த பெட்டியினை பிடுங்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.
"மாதவா" என்று அந்த காடே அதிரும்படி கத்திய அந்த உருவம் அப்படியே இருவரையும் பார்க்க விழியில் இருந்து இப்போது நெருப்பு பொறிகள் பறக்கத் தொடங்கியது.
பற்றியெறியும் நெருப்பு இவர்களை நோக்கி பாய்ந்து வர அதில் இருந்து தப்பிக்க மூவரும் ஓடத் தொடங்கினார்கள். ஓடினாலும் விடாமல் துரத்தும் அந்த கனலில் இருந்து தப்பிக்க சத்யன் தன் கண்ணை மூடி மந்திரங்களை பிரயோகிக்க அவனால் அது முடியவே இல்லை.
சிரித்துக் கொண்டே அந்த உருவம் "உன் மந்திரம் மாயம் எல்லாம் என்னிடம் செல்லாது சத்ய ருத்திரா... மூவரும் நெருப்பில் கிடந்து எரிந்து சாம்பலாக போங்க. நான் அந்த மாதவனை அழித்துவிட்டு வந்து பார்க்கிறேன்" என்று அந்த உருவம் சினத்துடன் சொல்லிவிட்டு நகர்ந்தது.
மாதவன் வேகமாக ஓட அமராவதியோ "ஆத்தா பசங்களை காப்பாத்து. காப்பாத்து" என்று வேண்ட மாரியம்மன் கோவிலில் ஏற்றி வைத்திருந்த விளக்கு இன்னும் பிரகாசமாக எரியத் தொடங்கியது.
ஓடிக் கொண்டிருக்கும் மாதவன் முன் ஒய்யாரமாக வந்து நின்ற அந்த உருவத்தைக் கண்டு கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு பயம் வந்து அப்பிக் கொண்டது. "பெட்டியை கொடு" என்று அது மிரட்ட "மாட்டேன்" என்றான் மாதவன்.
"உங்க அண்ணன் உங்க அம்மா எல்லாம் எப்படி அடங்கி நிக்கிறாங்க பாத்தேல்ல. அதைப் பாத்தபிறகுமா என்கிட்ட மோத நினைக்கிற பெட்டியை கொடு" என்று அது கேட்க அவன் தலை மட்டும் மறுக்கும் வண்ணமாக பலமாக ஆடியது.
"உன்கிட்ட பேசிட்டு இருந்தா வேலைக்காகாது" என்று சொன்ன உருவம் தன் கைவிரலை நீட்ட உடனே அவன் கை அந்த பேயை நோக்கி அதுவாகவே வந்தது. கூடவே கைகளை யாரோ பிடித்து முறுக்குவது போல் வலிக்கத் தொடங்க அதைத் தாங்காமல் மாதவன் இழுக்க முயற்சி செய்ய அவனால் முடியவே இல்லை. வேண்டாம் என்று அவன் வலியில் துடித்து கத்த "பெட்டி" என்று கோரமாய் சிரித்தது அந்த உருவம்.
கண்ணீர் வழிந்தாலும் உறுதி குலையாது மாட்டேன் என்றவாறு அவன் மறுக்க முறுக்கிய கையை மேலும் முறுக்கத் தொடங்கியது அந்த உருவம். அம்மா என்ற அலறல் மிகுந்த சத்தமாக அவனிடமிருந்து வெளிப்பட அந்த கதறல் யாரின் அருட்பிரசாதமாக மாதவன் இந்த பூமியில் வந்து பிறந்தானோ அவளின் செவியை அடைந்தது.
சிலையாய் நின்று தன்னை நினைக்கும் பக்தர்களுக்கு அருள் கொடுக்கும் அந்த கருகாத்த நாயகி தான் உருவாக்கிக் கொடுத்த அந்த கருவுக்கு சோதனை என்றால் சும்மா விட்டுவிடுவாளா என்ன?...
மாதவனின் கரத்தை இழுத்துக் கொண்டிருந்த அந்த செந்திற உருவம் பெட்டியை பிடித்து வெடுக்கென கைப்பற்ற மாதவன் தன் மற்றொரு கரத்தினால் அதன் கழுத்தைப் பிடித்திருந்தான். அதுவரை பயத்திலும் வேதனையிலும் இருந்தவனின் கண்கள் இப்போது ரௌத்திரத்தில் உக்கிரமாக காட்சியளித்தது.
செந்நிற உருவத்திற்கு அவனது மாற்றம் புரியவே இல்லை. அதனால் மாதவனை மீண்டும் தாக்க முயற்சி செய்ய அவனோ அந்த உருவத்தையே கீழே தள்ளியிருந்தான். மாதவனின் முகம் அந்த மலைமகளின் முகத்தை ஒத்திருக்க அதைக் கண்டு இப்பொழுது அந்த உருவத்திற்கு முதன்முறையாக பயம் வர ஆரம்பித்தது.
"வேண்டாம்" என்று அந்த உருவம் நகர அதன் வயிற்றில் ஓங்கி மிதித்தான் மாதவன். உடனே மற்றவர்களைத் துரத்திக் கொண்டிருந்த அந்த நெருப்பு பொறிகள் மறைந்து அமராவதியை அடக்கி வைத்திருந்த ஒளியும் காணாமல் போய்விட்டது. விடுதலை கிட்டியதும் அவர்கள் மாதவன் அருகே வர அவன் முகத்தில் இருந்த மாற்றத்தைக் கண்டதும் அவர்களின் கை அனிச்சையாக தலைக்கு மேலே உயர்ந்தது. மாதவன் தன் கையிலிருந்த பெட்டியை தூக்கி வீச அதை சக்தி பிடித்துக் கொண்டதும் "கருப்பன்கிட்ட போங்க" என்று அவன் சொல்ல மற்றவர்களும் சரியென்று உடனே சென்றார்கள்.
"என்னை விடு" என்று அந்த உருவம் வலியில் முணங்க மாதவன் கண்களை உருட்டி பார்த்தான். "நல்லவர்களை தடுக்க நினைக்கும் கெட்டவர்களுக்குத் துணையாக நீ வந்தால் அதே நல்லவங்களுக்குத் துணையாய் காவலாய் நான் வருவேன். தாய் வயிற்றில் அவன் சிசுவாய் இருந்த போதே சிதையாமல் காப்பாற்றி தந்தவள் நான். இப்போது வலியில் துடிக்கும் என் மகனை காக்காமல் வேடிக்கைப் பார்ப்பேன் என்று நினைத்தீர்களா... விடமாட்டேன் " என்று சொல்லிக்கொண்டே அதன் மேல் தன் பாதத்தை வைத்து இன்னும் கோபத்துடன் அழுத்தினாள் மாதவன் வடிவத்தில் இருந்த கருகாத்த நாயகி.
அதன் அலறல் அங்கே கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பாண்டியின் காதுகளில் பட்டு அவன் நடையினை ஒரு நிமிடம் நிறுத்தியது. அப்பா என்றவாறு வரம்பன் அழைக்க "ஒன்றுமில்லை வரம்பா ஒன்றுமில்லை. வாங்க சீக்கிரம் நாம கோவிலுக்கு போகணும்" என்று சொல்லி பாண்டி அழைத்துச் சென்றான்.
கருப்பன் கோவிலுக்குள் நுழைந்தவர்கள் அந்த பெட்டியினை அவனின் காலடியில் வைத்துவிட்டு சற்று தள்ளி நின்று அவனை வணங்கினார்கள். அலறியபடி ஒடுங்கிய அந்த உருவத்தைப் பார்த்துவிட்டு சீற்றம் தணிந்து மாதவனும் கோவிலினுள் வந்தான்.
அவன் வந்து நிற்க கருப்பன் சிலை அருகே இருந்த அந்த உடுக்கை உருண்டு வந்து மாதவன் முன் நின்றது. உடுக்கையை குனிந்து எடுத்தவன் ஓங்கி அதைத் தட்ட ஆரம்பித்தான். அதன் அதிர்வில் அங்கிருந்த அனைவரின் உடலிலும் சிலிர்ப்பு ஓடி மறைந்தது.
"கருப்பா அகல்யாவைக் கூட்டிட்டு இன்னேரம் கோவிலுக்குப் போயிருப்பாங்க. அவங்களை எப்படித் தடுத்து நிறுத்துவது. அந்த வழியை நீதான் எங்களுக்கு காட்டிக் குடுக்கணும் கருப்பா" என்று சக்தி சத்தமாய் வேண்டிக் கொள்ள கருப்பன் காலடியில் வைத்திருந்த பெட்டி அசைய ஆரம்பித்தது. அதன் உள்ளிருந்து எழுந்த ஓலை தனது வெண்மை நிற ஒளியை அந்த இடம் முழுவதும் நிறைக்க அதில் கருப்பனின் கருத்த முகம் அழகாய் மின்னியது.
மெதுவாய் அந்த ஓலையில் இப்போது எழுத்துகள் மின்னத் தொடங்கியது. அதை அனைவரும் உள்வாங்கத் தொடங்கினார்கள்.
பலி அவசியம்
உயிர்பலி அவசியம்
கொடுமையைத் தடுத்து நிறுத்த
உயிர்பலி அவசியம்...
இருபத்தி நாலு ஆண்டுகளாய்
இறக்காமல் கோலை எடுக்க
காத்திருப்பவனின்
ஆசை நிறைவேறும்...
கேட்டையில் பிறந்தவளால் வரும்
கேட்டைத் தடுக்க
கணவன் முன்னிற்க வேண்டும்
காவலாய் மாற வேண்டும்...
மாரியின் பீடத்தில்
மறுபடியும் கோலை சேர்க்க
துர்க்கை மைந்தனின்
துணை வேண்டும்....
தடம்மாறியவர்கள்
தடயம் இல்லாமல் அழிய வேண்டும்
என்பதே விதி
விதியை நிறைவேற்ற மதி அவசியம்...
வழியில் வரும் சங்கடங்களை
விலக்க வருவான் ஐயன்
வினை தீர்ப்பான் அவன்...
அனைத்தும் சரியாக நடந்தால்
நன்மையும் கிட்டும்
அகலில் அமிழ்ந்த ஆன்மா
அமைதியடையும் காலமும் வரும்...
இவ்வாறு அந்த ஓலையில் எழுத்துக்கள் இருக்க அதைப் படித்ததும் சில நொடிகள் அங்கே கணத்த மௌனம் நிலவியது.
அதன்பின்னர் "என்ன இது பாதி பாதியா இருக்கு. ஒன்னுமே புரியலை" என்று ரத்னா கேட்க உடுக்கையை எடுத்து கருப்பனின் பாதத்தில் வைத்த மாதவன் அனைவருக்கும் கருப்பன் காலடியில் இருந்த விபூதியை பூசிவிட்டான். சத்யனோ "நமக்கு நேரமில்லை ரத்னா. எதுவா இருந்தாலும் நடந்துட்டே பேசலாம்" என்றான்.
சரியென்று அவர்கள் நால்வரும் நடந்து கொண்டிருந்தனர். அமாரவதியோ அந்த கட்டில் இருந்து விடுபட்டதுமே இவர்களை விட்டு விட்டு கோவிலை நோக்கிச் சென்றிருந்தாள்.
அவர்கள் குறிப்புகளைத் தெரிந்து கொண்டதில் பாண்டிக்கு பெரிதாய் பதட்டம் ஒன்றும் வந்துவிடவில்லை. இதையெல்லாம் முதலிலேயே எதிர்பார்த்தது தானே. அவன் இதை தடுக்க ஏற்கனவே பல விஷயங்கள் செய்துவிட்டதால் அந்த தைரியத்தில் இப்போது கோவிலுக்கு சென்று கொண்டிருந்தான்.
கோவிலை அடைந்ததும் தங்கப்பாண்டி ஏற்கனவே மாரி இருந்த அந்த இடத்தினை நோக்கி நடந்தான். அன்று பார்த்த அந்த பீடம் கோவில் வேலை நடைபெற்று கொண்டிருந்ததால் அகற்றப்பட்டு இருந்தது. இருந்தாலும் அந்த இடத்தைத்தான் அடைந்தான். ஏனென்றால் அதன் கீழே தான் அந்த மந்திர கோல் இருக்கிறது என்பது பாண்டிக்கு நன்றாகவே தெரியும். இப்போது அந்த இடத்தில் சுய நினைவற்று இருந்த அகல்யாவினை அழைத்து அமர வைத்தான் தங்கப்பாண்டி.
அவளும் பாண்டி சொன்னது போல் செய்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் "அகல்யா எந்திரி" என்ற சத்தம் கேட்டது.
உடனே தங்கப்பாண்டி "நீ வருவேன்னு எனக்கு தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரமாகவே வருவேன்னு எனக்கு தெரியாது" என்று கூறினான்.
"இதையெல்லாம் விட்டுட்டு இங்கிருந்து கிளம்பி போய் விடுங்கள். அதுதான் உங்க எல்லாருக்கும் நல்லது" என்றாள் அமராவதி எச்சரிக்கும் தொனியில்.
"மிரட்டி பாக்குறயா அமராவதி. ஆனா இந்த தடவை உன்னால நடக்கிற விஷயத்தை தடுத்து நிறுத்த முடியாதே... ஏன்னா நான் இதைப் பண்ணப் போறதே இதோ நிற்கிறானே இவன வச்சு தான். என்ன எரிச்ச மாதிரி இவன உன்னால எரிக்க முடியுமா" என்று அவன் கிண்டலாக கேட்க "வேண்டாம் தப்புக்கு மேல தப்பு பண்ணாதீங்க. உள்ள இருக்குற மாரி கோபப்பட்டா அப்பறம் இந்த ஊரே தாங்காது" என்றாள் அமராவதி.
"அப்போ அவளை கோபப்பட்டு வரச் சொல்லு. இப்போ நீ கிளம்பு" என்றான் தங்கப்பாண்டி.
"அப்பா அவங்க கிட்ட என்ன பேச்சு நீங்க உட்காருங்க நான் வேலையை ஆரம்பிக்கிறேன்" என்றான் மாயவரம்பன்.
"ஆரம்பி வரம்பா" என்று சொல்ல "வேண்டாம் வரம்பா நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். இத விட்டுட்டு உங்க அண்ணன்கிட்ட போ" என்றாள் அமராவதி. அவனோ அவள் பேசுவதை காதிலேயே வாங்கவில்லை. அவனது வேலையைத்தான் செய்து கொண்டிருந்தான்.
"என்ன பாக்குற. என்ன தடுத்த மாதிரி அவனையும் தடுத்துப் பாரு" என்று பாண்டி சொல்ல "இந்த தடவை நான் தடுக்க மாட்டேன். உங்களுக்கு கடைசியா ஒரு சந்தர்ப்பம் தரலாம்னு பார்த்தேன். ஆனா நீங்க யாரும் திருந்துற மாதிரியே தெரியலை. இனி பேசி பிரயோசனம் இல்லை" என்றாள் அமராவதி.
"வேற என்ன பண்ணப் போற இன்னொரு தடவை தீக்குளிக்க போறியா" என்று அவன் எள்ளலுடன் கேட்க "நான் தான் இந்த தடவை எதுவுமே பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன் இல்ல. உங்களைத் தடுக்க என்னோட பசங்க வர்றாங்க. அந்த நாலு பேர் கிட்ட இருந்து நீங்க எப்படி தப்பிக்கிறீங்கன்னு நான் வேடிக்க மட்டும் பாக்குறேன்" என்று சொன்னவள் அமைதியாகிவிட்டு "தப்புன்னு தெரிஞ்சதும் தாலிக் கொடி உறவையே தூக்கி எறிஞ்சவ இந்த அமராவதி. இவளுக்கு தொப்புள் கொடி உறவும் தேவையே இல்லை" என்று சொல்லிவிட அவனோ அவளை முறைத்துப் பார்த்தான்.
அதே கோபத்துடன் "அன்னைக்கு இதை வச்சுத்தான என்னை எரிச்ச" என்று அவன் கரத்தை நீட்ட அங்கு மாங்கல்யம் பொன்னென மின்னிக் கொண்டிருந்தது. அதை எடுத்ததும் அமராவதி அங்கிருந்து சட்டென்று மறைந்து போனாள்.
"பயந்து ஓடிட்டயா... இனி நீ கோவிலுக்குள்ளயே வர முடியாத படி செய்யுறேன்" என்று சொன்னவன் அப்படியே கந்தையாவை கண் காட்ட அவன் வேகமாக அருகே இருந்த பாத்திரத்தை எடுத்து வந்து அதிலிருந்த திரவத்தை சுற்றிலும் ஊற்றினான்.
அந்த வளையத்தினுள் எந்த வித ஆத்மாவும் நுழைய முடியாத படி அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கியது.
மற்றவர்கள் அமைதியாக நடந்து கொண்டே இருக்க ரத்னா மட்டும் "அதில எழுதியிருந்ததை புரிஞ்சுக்கவே முடியல அம்மா கிட்ட கேட்கலாம்னு பார்த்தா அவங்களையும் காணோம்" என்று புலம்ப "அம்மா கோயிலுக்கு போய் இருப்பாங்க" என்றான் சத்யன்.
"அண்ணா அதுல இருக்குறது என்னன்னு உனக்கு தெளிவா புரியுதா" என்று மீண்டும் ரத்னா கேட்க அவனோ மௌனமாகவே இருந்தான்.
உடனே மாதவன் "நீ எதைப் பத்தி யோசிக்கிற ன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது அண்ணா. உயிர்பலி தரணும் அப்படின்னு அந்த ஓலையில இருந்ததே அதைப் பத்தி தான.... நீ ஒன்னும் கவலைப்படாத அண்ணா. நான் என்னோட உயிரை பலியா கொடுத்துடறேன்" என்று சாதாரணமாக சொல்ல "மாதவா" என்று கத்தினான் சத்யன். அவன் குரலில் நடுக்கம் பரவியிருந்தது.
"இதுக்கு எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற அண்ணா" என மாதவன் கேட்க ரத்னாவோ "டேய் என்னடா உளர்ற" என்றான்.
"உளறலை அண்ணா. யாராவது இறந்தால் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அப்படி இருக்கும்போது நான் என்னோட உயிரைத் தியாகம் பண்றேன்னு சொல்றேன். இதுல என்ன இருக்கு. ஏற்கனவே நம்ம அம்மா பண்ணது தான. இப்போ அவங்கள மாதிரியே நானும் பண்ண போறேன். தட்ஸ் இட்" என்றான் அவன்.
"இப்படி உயிரை பறிகொடுக்க வாடா நான் இவ்வளவு தூரம் உன்னை வளர்த்தேன். நீ சாகுறத நான் எப்படி டா பார்க்கமுடியும். அதனால நான் செத்துடுறேன்" என்று சத்யன்.
"அண்ணா அப்படி சொல்லாத அண்ணா நீ போய்ட்டா நான் எப்படி இருப்பேன்" என்றான் மாதவன் கண்கள் கலங்க.
"உங்க பாசமலர் சண்டையை பாக்குறதுக்கு பதிலா நான் செத்துப் போறேன் டா என்ன விடுங்க" என்று ரத்னா கத்த "எல்லாரும் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா... விட்டா இங்கேயே ஒப்பாரி வைச்சுட்டு இருப்பீங்க போல.. ஆளு தான் பெருசா வளர்ந்து இருக்கீங்களே தவிர கொஞ்சம் கூட அறிவை யூஸ் பண்ணனும்னு உங்களுக்கெல்லாம் தோணவே மாட்டேங்குதே" என்றான் சக்தி.
"அறிவு யூ மீன் மதி" என்றான் ரத்னா புரிந்து கொண்ட தோரணையில்.
"அதே தான்... இந்த விஷயத்தை எமோஷனலா டீல் பண்ணோம்னா நாம கண்டிப்பா தோத்துப் போய்விடுவோம்" என்று சத்யனை பார்த்து அவன் சொல்ல அவனோ "என்ன மாப்ள என்ன சொல்ல வரீங்க. எனக்கு புரியலை" என்றான்.
"மச்சான்.. பலி வேணும்.. உயிர்பலி வேணும் அப்படின்னு தான் அந்த ஓலையில் இருக்கே தவிர அது யார் உயிர் அப்படின்னு எதுவுமே மென்ஷன் பண்ணவே இல்ல. அப்போ அது நம்ம உயிர் தானன்னு நாம ஏன் நினைக்கனும்" என்று சொல்லி நிறுத்த
"மாப்ள என்ன சொல்ற" என்றான் அவன்.
"மச்சான் எதிரியோட பக்கத்துல இருந்து உயிர் போனாலும் அது உயிர்பலி தான் அதனால நாம அப்படி யோசிக்கலாமே" என்றான் சக்தி.
அதன்பின்னரே சத்யனும் மாதவனும் தெளிந்த முகத்தோடு சக்தியை ஏறிட்டனர். கூடவே சத்யனோ "நான் அந்த மாதிரி யோசிக்கவே இல்லை மாப்பிள்ளை" என்றான் சந்தோசத்துடன்.
"நீங்க உணர்ச்சிவசப்பட்டு இருந்தீங்களா மச்சான்.. அதனாலதான் அதை பத்தி யோசிக்க மறந்துட்டீங்க. அந்த ஓலையில் தெளிவா என்ன போட்டு இருக்கு தெரியுமா. விதியை மாற்ற நம்ம நாலு பேரோட மதியைத் தான் யூஸ் பண்ணனுமாம். அதாவது நாம தான் அவங்கள யோசிச்சு அழிக்கணும்" என்றான் சக்தி.
"சரியா சொன்ன மச்சி" என்று ரத்னா சொல்ல "அது மட்டும் இல்ல ரத்னா. தங்கப்பாண்டி என்ன ப்ளான் பண்ணிருக்காருன்னு நமக்குத் தெரிஞ்சாத்தான் நாம அதை தடுக்க ப்ளான் பண்ண முடியும். அதனால நாம சீக்கிரமாகவே கோவிலுக்குப் போகணும். அதுவரைக்கும் யாரும் ரொம்ப எமோசனலா ஆக வேண்டாம்" என்று சொல்ல மூவரும் சரியென்று சொல்லி அவன் பின்னாடி நடந்தார்கள்.
ஊருக்குள் நுழைந்தவர்கள் அந்த பாலத்தின் மேல் நடந்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு எதிரே மாரியப்பன் துர்கா சாமிநாதன் நின்றிருந்தார்கள். அவர்கள் முகம் என்னவோ போல் இருந்தது.
"அப்பா" என்று சக்தி முன்னால் வர மாரியப்பனோ தன் கரத்தினை கத்தியால் கிழித்தி விட்டார். இரத்தம் அந்த பாலத்தில் மேல் பட்டு பரவ "அப்பா" என்று சொன்னவன் "வேண்டாம்" என்று கதற "பின்னால போ சக்தி. இதுக்கு மேல ஓர் அடி எடுத்து வச்ச நான் என்னோட கழுத்தை அறுத்துடுவேன்" என்றார் அவர்.
"அப்பா என்னப்பா ஏன் இப்படி நடந்துக்குறீங்க" என்று அவன் சொல்ல துர்காவோ "யாரும் இருந்த இடத்துல இருந்து அசையவே கூடாது. இங்கயே இருக்கணும். மீறி வந்தீங்கன்னா நாங்க மூணு பேரும் இங்கயே செத்துடுவோம்" என்று தன் கையில் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தனர். என்ன செய்ய என்று புரியாமல் நால்வரும் ஒரு கணம் அதிர்ந்து போய் அசையாமல் நின்று விட்டனர்.
அவர்களின் கையறு நிலையை கண்ட தங்கப்பாண்டி சிரிக்க வெளியே நின்றிருந்த அமராவதியின் காதுகளில் அந்த சத்தம் விழுந்து வேதனைப்படுத்தியது. கூடவே "ஏய் அமராவதி என்னமோ என் பசங்க வருவாங்க. அவங்க தடுத்து நிறுத்திடுவாங்க அப்படின்னு சொன்ன இப்போ என்னாச்சு... அதுதான் அப்பவே சொன்னேன். இந்த தடவை என்னை தடுத்து நிறுத்த எவனாலும் முடியாதுன்னு" என்றவன் அகல்யாவினை உறுத்துப் பார்த்துவிட்டு அவள் நெற்றியில் மீண்டும் கரத்தினை வைத்து அழுத்தினான்.
"கேட்டையில் பிறந்தவளே
கோட்டையை ஆள வந்தவளே
எழுந்து சென்று கோரக்கினியின் கோலை எடுத்துவா... எடுத்து வா" என்று பாண்டி சொல்ல சொல்ல அப்படியே தலையை ஆட்டியவள் அந்த இடத்தில் மண்டியிட்டு அமர்ந்தாள். தனது கையை எடுத்து அவள் அங்கே வைக்க அந்த இடத்தில் இருந்த மண்துகள்கள் எல்லாம் அதிரத் தொடங்கியது. கந்தையா சித்தையா உடன் வரம்பன் செய்து கொண்டிருந்த பூசை இன்னும் இன்னும் அதிர்வினை அந்த மண்ணுக்கு கடத்திக் கொண்டிருந்தது.
"ஆத்தா மாரியாத்தா ஐயா சித்தர் ஐயா... இது இப்படி நடக்கக் கூடாது" என்று அவள் கைகூப்பி வேண்டிய அதே நேரத்தில் வீட்டினுள் துர்காவும் சாமிநாதனும் விளக்கேற்ற வெளியே மாடத்தில் மாரியப்பன் விளக்கேற்றினார்.
அந்த ஒளி வீடு முழுக்க தெய்வீகத்தைப் பரப்ப மாரியப்பனோ "ஐயனாரப்பா எம் மக்களுக்கு நீதான் காவலா இருக்கணும் ஐயா..." என்று வேண்ட பாலம் இப்போது அதிர தொடங்கியது. சட்டென்று ஏற்பட்ட அதிர்வில் என்ன என்று அவர்கள் உணரும் முன் அவர்களுக்கு எதிரே இருந்த அந்த மூன்று பேருக்கு பின்னால் பால் வண்ணப் புரவி வந்து நின்றது.
ஏற்றிய விளக்கின் ஒளி அங்கிருந்து வந்து பாலத்தினை அடைய அது இப்போது புரவியின் மீது அமர்ந்திப்பவனையும் சேர்த்தே அவர்களுக்கு அடையாளப்படுத்தியது.
சக்தி பொத்தென்று கீழே விழுந்துவிட அனைவரும் வணங்கினார்கள். எதிரே நின்றிருந்த மூவரும் திடுக்கிட்டு விழிக்க கையில் இருந்த வீச்சரிவாளால் சரமாரியாக வீசத் தொடங்கினான் அந்த வெண்புரவி வாகனன்.
அந்த மூவரும் தங்களின் உண்மை உருவத்திற்கு மாற ஐயனின் கோப விழிகளில் சுழன்று வீசிய சூறாவளியில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த ஆற்று மணலில் அமிழ்ந்து போனார்கள்...
"சக்தி எழுந்திரு.. போய் உன் பொண்டாட்டியை அவன் பிடியில இருந்து விடுவிச்சு சீக்கிரமா கோலை அந்த ஆத்தா கிட்டயே சேர்த்துடு... போங்க எல்லாரும் போங்க ஏதாவது ஆபத்து வந்தால் தடுக்க நீங்கள் அழைக்கும் முன்பே நான் வந்து நிற்பேன்.. செல்லுங்கள்" என்று தன் சிம்மக் குரலில் சொல்ல அந்த இடமே அசைவை மறந்து ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனது...
ஐயனின் ஆசியோடு அனைவரும் அங்கிருந்து சென்றுவிட கோவிலிலோ அகல்யா கை வைத்திருந்த இடம் இன்னும் அதிரத் தொடங்கியது. வரம்பன் தன் மந்திரங்களை உச்ச தொனியில் உச்சாடனம் செய்து கொண்டிருக்க கந்தையாவும் சித்தையாவும் அவனைப் பின் தொடர்ந்து துர் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். சில நொடிகளில் அவள் கை வைத்திருந்த அந்த இடம் பிளக்க ஆரம்பித்தது. தன் கையை எடுத்தவள் பிளந்த பூமியையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். தங்கப்பாண்டியன் கண்கள் இந்த காட்சியை கண்டு ஆவலுடன் விரியத் தொடங்கியது.
எத்தனை வருட காத்திருப்பு..
இதற்காக எத்தனை வருடங்களாய் அடைந்த வேதனை...
இப்படி தான் அடைந்த இன்னல்கள் அனைத்தும் முடிவுக்கு வரப் போகிறது என்பதை அறிந்தவுடன் அவனது உள்ளம் ஆசையில் பொங்கத் தொடங்கியது.
நடந்து கொண்டிருக்கும் போதே பூமி அதிர்வதைக் கண்ணுற்ற மாதவன் "அண்ணா கோல் வெளிய வரப் போகுதுன்னு நினைக்கிறேன்" என்று சொல்ல "ஆமா மாதவா. அது வெளியே வரணும் அப்படிங்கிறது தான விதி. வரட்டும்" என்றான் சத்யன்.
இப்படியாக நால்வரும் விரைந்து சென்று கொண்டிருக்க சட்டென்று அவர்களின் காலை எதுவோ பிடித்து இழுத்தது போல் இருந்தது. அதில் நிலைதடுமாறி நால்வரும் பொத்தென்று தரையில் விழுந்து விட்டனர். விழுந்தவர்களின் மேல் எதுவோ ஏறி நின்று அவர்களை அழுத்துவது போல் இருக்க அவர்களால் அதை மீறி எழுந்திருக்கவே முடியவில்லை.
மூச்சு கூட விட முடியாத படி அவர்கள் இருக்க அதைத் தாங்க இயலாமல் மாதவன் உடனே மூர்ச்சையாகி விட்டான். அந்த நேரத்தில் சத்யனின் மனம் சங்கரியை அழைத்தது. வெள்ளிமலை காட்டுக்குள் வேதனையுடன் சுற்றிக் கொண்டிருந்தவளின் காதுக்குள் சத்யனின் அழைப்பு குரல் கேட்க அவள் அங்கிருந்து காற்றை விட வேகமாக விரைந்து வந்தாள்.
அவர்கள் வீழ்ந்து கிடந்த இடத்தை அடைந்தவள் அவர்கள் நால்வரையும் அமுக்கிக் கொண்டிருந்த அந்த கண்ணுக்குத் தெரியாத ஆன்மாவினை எதிர்த்துப் போராடத் தொடங்கினாள். அந்த ஆன்மாவோ இப்போது அவளைச் சுற்றி தாக்கத் தொடங்கியது.
விடுதலை கிடைத்த அந்த நேரத்தில் பிரயத்தனப்பட்டு எழுந்த சக்தியினை நோக்கிய சத்யன் " சீக்கிரமா போங்க மாப்ள அகல்யாவுக்கு துணையா நீங்க இருக்கணும்" என்று சொல்ல "உங்களை விட்டுட்டு எப்படி போறது மச்சான்" என்று அவன் சொல்ல "நான் சீக்கிரமா வந்துடுவேன். நீங்க மாதவனை கூட்டிட்டு சீக்கிரமா போங்க" என்றான் சத்யன்.
சத்யனைத் தொடர்ந்து "ஆமா மச்சி நீ போ அண்ணனும் நானும் சீக்கிரமா வந்துடுறோம்" என்று ரத்னா சொன்னதும் மாதவனை எழுப்பி தூக்கி நிறுத்தினான் சக்தி.
சற்று நிதானத்திற்கு வந்தவனை அழைத்துக் கொண்டு சீக்கிரமாக கோவிலுக்கு செல்லும் பாதையில் சக்தி செல்லத் துவங்கினான்.
அவர்கள் சென்றதை பார்த்த சத்யன் தன் கால்களை மடக்கி அப்படியே அமர்ந்தான். கழுத்தில் போட்டிருந்த கருப்பு நிற பாசியினை தன் இரு கரத்தாலும் பிடித்தவன் மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினான். அந்த நேரத்தில் மயானத்தில் புதைந்து கிடந்த ஓர் அழுகிய பிணம் அப்படியே எழுந்தது.
அதே சமயத்தில் சங்கரியை அந்த கண்ணுக்குத் தெரியாத துஷ்டசக்தி மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. அவள் அலறல் அந்த இடம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்க ரத்னாவோ சத்யன் அமர்ந்திருக்கும் தோரணையைப் பார்த்தபடி அசையாது நின்றிருந்தான். உடலெல்லாம் உதறல் எடுக்கத் தொடங்கியிருந்தது.
அந்த உதறலை இன்னும் அதிகப்படுத்துவது போல் அவன் முதுகுப்புறம் இருந்து ஓர் உறுமல் கேட்கத் தொடங்கியது. விழிகளில் திகைப்பு பரவே அதே பாவனையுடன் அவன் மெதுவாக திரும்பினான்.
பார்த்த மாத்திரத்திலே இதயத்தின் துடிப்பு சட்டென்று நின்று போனது. அவன் உடலில் இருந்து உயிர் வெளியேறியது போல் அவனுக்குத் தோன்றியது. சிலைபோல் நின்றிருந்தவனின் முன் அந்த அழுகிய பிணம் இருக்க அதன் நாற்றம் ரத்னாவின் வயிற்றையேப் பிரட்டியது.
தள்ளி நிக்குறயா என்பது போல் அது அழுகி தொங்கிக் கொண்டிருந்த அந்த கண்களை உருட்டிக் காட்ட அவன் சட்டென்று சில அடி தூரம் நகர்ந்து நின்று விட்டான்.
சங்கரியுடன் மோதிக் கொண்டிருந்த அந்த கண்ணுக்குத் தெரியாத அந்த துர்சக்தி முன் வந்து நின்ற பிணத்தைக் கண்டு சங்கரியை தூக்கி வீசி விட்டு வந்தது. இரண்டும் எதிர் எதிரே நிற்க அந்த நேரத்தில் அதன் உருவம் அங்கிருந்தோர்க்கு தெரிய ஆரம்பித்தது.
"என்னைத் தடுக்க உன்னால முடியாது. மண்ணுக்குள்ள புதைந்து போன நீ அங்கயே இருந்திருக்கணும். என் முன்னாடி வந்து தப்பு பண்ணிட்ட" என்று அது சொல்ல அந்த பிணமோ தன் பற்கள் பெயர்ந்த அந்த வாயை அசைத்து "இதையேத்தான் நான் உனக்கும் சொல்லுறேன். வழியை விட்டு போயிடு" என்று சொல்ல ஆ என்று அது கோரமாய் கத்தியது.
அந்த கதறல் ஊர் முழுக்க அதிரச் செய்ய அந்த பிணமோ தன் கையை நீட்டி அதன் கழுத்தை பிடிக்க அதுவோ தன் கையை நீட்டி சத்யனை பிடித்தது. சத்யன் தன் கண்களை இன்னும் திறக்கவே இல்லை. கழுத்து எலும்புகள் நொறுங்குவதைப் போல் சத்தம் கேட்க ரத்னாவோ "அண்ணா அண்ணா கண்ணைத் தொறந்து பாரு எதாவது பண்ணு" என்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தான்.
சத்யனைப் பிடித்திருந்த அந்த கரத்தினை அழுத்தத்துடன் அந்த அழுகிய பிணம் பிடித்து இழுக்க அதுவோ வேதனையில் கதறியபடி அப்படியே கழுத்தை விடுத்தது.
நீண்டிருந்த கையினை அந்த அழுகிய பிணம் பிடித்து இழுத்து அதனை அங்கிருந்த மரத்தின் மீது தூக்கியடிக்க அங்கிருந்த கிளையில் மாட்டி அது தொங்க ஆரம்பித்துவிட்டது.
"அண்ணா வா கிளம்பலாம்" என்று ரத்னா அவனைப் போட்டு உசுப்ப அவன் கண்களைத் திறந்துவிட்டு "நீ போ ரத்னா நான் வர்றேன்" என்றான்.
"என்ன சொல்லுற நீ இங்க இருந்துட்டு என்ன பண்ணப் போற" என்று கேட்க "நான் வர்றேன்னு சொல்லிட்டேன்ல சட்டுன்னு இங்க இருந்து நீ கிளம்பு" என்றவனின் குரல் அரட்டலாக ஒலிக்க அவன் அதற்கு கட்டுப்பட்டு அங்கிருந்து விரைந்து செல்லத் தொடங்கினான்.
அவன் சென்றதும் சத்யனும் அங்கிருந்து வேறு திசையில் வெளியேற அவன் பின்னாலேயே அந்த அழுகிய பிணமும் சங்கரியும் சென்றார்கள்.
அங்கு கோவிலில் பிளந்த பூமியின் உள்ளே இருந்து பெரும் சப்தத்துடன் வெளிவந்தது அந்த கோல்.
அமராவதியோ நடக்கும் விபரீதத்தை எண்ணி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். அகல்யாவின் கரத்தில் அந்தக் கோல் வந்து சேர்ந்த உடனே அவளது தேகமே பொன்னெனப் போல் மின்னத் தொடங்கியது.
கோலினை இறுக்கிப் பிடித்தவாறு சட்டென்று திரும்பிப் பார்க்க பாண்டியன் எதிரில் வந்து நின்றான். "குடு அந்தக் கோலை என்கிட்ட குடு" என்று ஆர்வத்துடன் அவன் கேட்க அவள் அவனிடம் நீட்டினாள். அதை வாங்கும் முன் "அகல்யா" என்று அந்தக் கோவிலே அதிரும் அளவிற்கு கத்தியபடி சக்தி வர அவனை உள்ளே நுழையவே முடியாதபடி வீசுகின்ற காற்றில் அமைதியடையாது சுற்றி இருந்த ஆத்மாக்கள் வந்து தடுக்க ஆரம்பித்தது.
அதைக் கண்டதும் அவர்களோ சிரிக்கத் தொடங்கினார்கள். கூடவே "எடுக்கவே விட மாட்டோம்னு சொல்லிட்டு திரிஞ்சுட்டு இருந்தீங்க.. இப்போ பாத்தீங்களா.. என்ன நடந்ததுன்னு. இதைத் தடுக்க உங்களால உள்ள வரக் கூட முடியாது. இப்போ வெளிய நின்னுட்டு வேடிக்கை பாக்குறது மாதிரியே இனியும் வேடிக்கை பாருங்க" என்று அவர்கள் சொல்ல
"அகல்யா நீ இங்க வா" என்று சக்தி வெளியே இருந்து கத்திச் சொல்ல அவளோ அதை கேட்கும் மனநிலையில் அவள் இல்லை.
"அவளை கூட்டிட்டு போக உன்னால முடியாது. அதனால சத்தம் போடாம இங்க இருந்து ஓடிடுங்க. இல்லைன்னா இங்க கோல் புதைஞ்சு இருந்த இடத்துலயே உங்களையே புதைச்சுடுவேன்" என்று தங்கப்பாண்டி சொல்ல சக்தியோ "அகல்யா" என்று அவளையே அழைத்துக் கொண்டிருந்தான்.
வரம்பன் வேகமாக அவளை நோக்கி வந்து "அந்த கோலை அப்பாகிட்ட குடு" என்று உரைக்க அவள் கரம் மீண்டும் நீண்டு தங்கப்பாண்டியை நோக்கிச் சென்றது.
"அகல்யா இங்கபாரு. அந்த கோலை நீ மாதவன் கிட்ட குடு" என்று சொல்ல அவளோ தலையை மறுப்பாக ஆட்டிவிட்டு தங்கப்பாண்டியின் அருகே சென்று அவனிடம் கோலை தர அவனோ விரிந்த இதழ்களோடு அதை வாங்கிக் கொண்டான்.
அந்த நேரத்தில் வந்து நின்ற ரத்னாவோ இதைக் கண்டு திகைக்க இவர்களைப் பார்த்து இந்த மூவரும் இடியென சிரிக்கத் தொடங்கினார்கள்.
"எடுக்க விடமாட்டோம் தடுப்போம் அப்படின்னு சொல்லிட்டு இருந்தீங்களே இப்போ பாத்தீங்களா டா எடுத்துட்டேன்" என்று தங்கப்பாண்டி சொல்ல "அந்த கோலை மாரியம்மன் கிட்ட வச்சுட்டு மன்னிப்பு கேளுங்க. இல்லைன்னா இனி நடக்கப்போறது அனர்த்தமாக தான் இருக்கும்" என்றான் மாதவன் கோபமான குரலில்.
"டேய் நீ இருந்தா இதை எடுக்க முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்போ எடுத்துட்டேன் பாத்தயா. இனி அந்த இறைவனே நினைச்சாக் கூட இதை தடுக்கவே முடியாது" என்று சொன்ன தங்கப்பாண்டியின் குரலில் அகம்பாவமே நிறைந்திருந்தது.
"வரம்பா இனி நமக்கு யாருமே தேவையில்லை. எல்லாரையும் இங்கயே கொண்ணு புதைச்சுட்டு வா" என்று சொல்ல "சரிப்பா" என்று சொன்னவன் தன் அருகில் இருந்த கட்டையினை எடுத்து அகல்யாவினை நெருங்க அந்த நேரத்தில் "வரம்பா நிறுத்து" என்றான் சக்தி.
வரம்பனோ அதைக் கவனிக்காமல் அவள் தலையில் ஓங்கி அடிக்க அம்மா என்றே அவளின் அலறல் அங்கிருந்து காற்றில் கலந்து வந்து சக்தியினை அடைந்தது. அவள் அடைந்த வேதனைக்கு அதிகமாக அவன் வேதனைப்பட்டு கத்த மற்ற இருவரும் அதைக் கண்டு கண்ணீர் வடிக்கத் தொடங்கினர்.
மூன்று பேரும் பாசத்தால் புத்தி என்ற ஒன்று இருப்பதையே மறந்து கதறிக் கொண்டிருக்க வேகமாக வாசலை நோக்கி சக்தி முன்னேற நெருப்பைப் மிதித்தவன் போல் பின்னால் வந்தவன் "டேய் முன்னாலயே போக முடியலை டா" என்றான் வேதனையாக.
அடுத்த அடி மீண்டும் அவள் தலையின் மேல் விழ அவளோ அம்மா என்று மீண்டும் அலறினாள். இரத்தம் அதிகமாக வழிந்தபடி இருக்க சக்தி அதைத் தாங்க இயலாதவனாய் அப்படியே மடங்கி அமர்ந்தான். அப்போதுதான் அவனுக்கு அது தோன்றியது உடனே தனது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டவன் அங்கே இருந்த எலுமிச்சம் பழத்தை எடுத்தான்.
மாதவன் அருகே உடுக்கை உருண்டு வந்த சமயத்தில் சக்தியினை நோக்கி கருப்பன் காலடியில் இருந்து உருண்டு வந்த எலுமிச்சம் பழம் இது.
அதை எடுத்தவன் அந்த வாயிலில் வைத்து அருகே இருந்த கல்லை எடுத்து அதில் ஓங்கி அடித்தான். அப்போது அதிலிருந்து சிதறிய சாறு அந்த இடம் முழுவதும் பரவியதில் அந்த இடத்தைச் சுற்றி காவலாய் இருந்த ஆவிகள் எல்லாம் அலறியடித்து கொண்டு ஓடத் தொடங்கியது.
கட்டு விலகியதும் உடனே சக்தி உள்ளே ஓட மற்றவரும் அவன் பின்னாலே ஓடினார்கள். வரம்பனை சக்தி சென்று தடுத்து அகல்யாவுக்கு அரணாக நிற்க அவனோ கோபத்தில் சக்தியின் மீதே தாக்க முற்பட "நிறுத்து மாயா" என்றவாறு வந்தான் சத்யன்.
அவனின் குரலைக் கேட்டவனின் கரங்கள் தனது செயல்பாட்டினை அப்படியே நிறுத்த தங்கப்பாண்டியோ "வேண்டாம் சத்யா நீ இதைத் தடுக்காத. நீயும் எங்க பக்கமே வந்துடு. அதுதான் உனக்கு நல்லது" என்று சொல்ல "எது நல்லதுன்னு எனக்கு எங்க அம்மா சொல்லித்தான் வளர்த்துருக்காங்க அப்பா. அதனால தலையே போனாலும் நான் எப்பவும் தர்மம் பக்கம்தான்" என்றான் சத்ய ருத்திரன்.
"வரம்பா அவனே சொல்லிட்டான் தர்மத்துக்காக தலையே போனாலும் பரவாயில்லைன்னு சீக்கிரம் அவனை போட்டுத் தள்ளுடா. இல்லைன்னா இவனும் அவங்க அம்மா மாதிரியே நம்மளை தொல்லை பண்ணிட்டே இருப்பான்" என்று தங்கப்பாண்டி சொல்ல "அதுக்கு முன்னாடி நீங்க அந்த கோலை எடுத்துட்டு இங்க இருந்து கிளம்புங்க அப்பா. நான் பாத்துக்கிறேன்" என்று வரம்பன் சொன்னதும்
"வேண்டாம்டா மாயா அது தப்பு" என்று சத்யன் அவனிடம் சொல்ல அந்த நேரத்தில் சக்தி "நான் அவ முன்னாடி இருக்குற வரைக்கும் ஆபத்து அவளுக்கே நேரவே நேராது வரம்பா. கொல்லணும்னா என்னைக் கொல்லு. ஆனா அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்" என்றான்.
"என்னோட பலம் தெரியாம வீணா என்கிட்ட மோதாத. இப்போ கூட நீ இங்கிருந்து போகலாம். நான் எதுவும் செய்ய மாட்டேன்" என்று வரம்பன் சொல்ல முடியாது என்பது போல் அழுத்தமாக அங்கேயே நின்றான் சக்தி.
சட்டென்று அந்த இடம் முழுவதும் விநோதமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்து விட்டது. அதைக் கேட்டவன் சக்தியினை முறைத்துப் பார்ப்பதை விடுத்து சுற்றுப்புறத்தைக் கவனிக்கத் தொடங்கினான். ஏதோ நடக்கப் போவது போல் அறிகுறிகள் தோன்றியதில் அவனுக்குள் முதன்முறையாக பயம் வந்துவிட்டது. கோலை எடுத்த பின்பும் தோற்றுவிடுவோம் என்று தோன்றியதால் வந்த ஆவேசத்தால் எதிரே இருந்தவனின் மூக்கினை நோக்கி அந்த கட்டையினால் நச்சென்று குத்த அங்கிருந்து குருதி வடிய ஆரம்பித்தது.
அப்படியே கீழே விழுந்தவன் தனக்கு முன் தடுமாறி இரத்தம் வழிய நின்றிருந்தவளை பார்த்துக் கொண்டே "ஐயனாரப்பா என் பொண்டாட்டியை காப்பாத்து" என்றவனின் விழிகள் சொறுகிக் கொண்ட சில நொடியில் மீண்டும் பட்டென திறந்தது.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.