Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
அகலில் அமிழ்ந்த ஆன்மா

அத்தியாயம் ஒன்று

அடியேய் அருந்ததி என்று கைப்பேசியின் திரையில் கதறிக் கொண்டிருந்தான் பசுபதி. அந்த சத்தத்தில் அதிர்ந்து கைப்பேசியையே இறுக்கமாகப் பிடித்தபடி பயத்தோடும் ஆச்சர்யத்தோடும் அருந்ததி படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா.
அறைக்குள் மின்விசிறி கடகடவென சுற்றிக் கொண்டிருந்த சத்தத்தோடு அந்த படத்தின் சத்தமும் சேர்ந்திருந்தது.



அறையின் ஒரு மூலையில் சிறிய மின்விளக்கு ஒன்று மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அது கூட அவள் பயம் அதிகமாக இருந்த காரணத்தால் போட்டிருந்தாள். இரவு நேரத்தில் இந்த படம் பார்க்கிறோமே என்று பயம் இருந்த போதும் படத்தின் விறுவிறுப்பில் தன்னையே மறந்திருந்தாள்.
ஏற்கனவே பார்த்த படம் தான் ஆனாலும் அன்று ஏனோ அந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் தனது கைப்பேசியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.



படத்தில் மூழ்கிய போதும் அருகே ஏதோ வித்தியாசமாக இருப்பது போல் தோன்றியது அகல்யாவுக்கு. பேய் படம் பார்த்ததால் வந்த பிரமையாக இருக்கும் என்று எண்ணியவள் அதைப் புறம் தள்ளிவிட்டு கவனத்தை கைப்பேசியில் பதித்தாள்.



நேரம் கடந்து கொண்டே இருந்தது. சட்டென்று அறையில் எரிந்து கொண்டிருந்த அந்த சிறு மின் விளக்கும் அணைந்து போனதில் கையில் வைத்திருந்த கைப்பேசியில் இருந்து தனது பார்வையை மேலே திருப்பினாள் அகல்யா.


மெதுவாக அவள் கைப்பேசியை பார்க்க நேரம் பன்னிரண்டை நெருங்க தொடங்கியிருந்தது. உடனே கைப்பேசியில் இருக்கும் விளக்கை உயிர்ப்பிக்க அந்த அறை வெளிச்சத்தால் நிரம்பியது.


வியர்வை வேறு மின்விசிறி நின்ற காரணத்தால் வழியத் தொடங்கியது. உடனே எழுந்தவள் தனக்கு நேராக இருந்த சாளரத்தை நோக்கி நடந்தாள். பூட்டியிருந்த கதவினைத் திறந்தவளின் பார்வையில் அவள் இருக்கும் அந்த தெரு முழுவதும் தெரிந்தது.

கதவினை திறந்ததால் சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோத அதையே ரசித்து வேடிக்கை பார்த்தவளுக்கு அப்போதுதான் ஒன்று உரைத்தது வெளியே இருந்த தெருவிளக்கு எல்லாம் எரிந்து கொண்டிருந்தது. வெளியே விளக்கு எரிகிறது என்றால் நம்ம வீட்டுல மட்டும் தான் மின்சாரம் இல்லையா என்று யோசித்தவளின் நயனங்கள் இப்போது சட்டென்று பெரியதாய் விரிந்தது.


அதுவரை கைப்பேசியில் பயத்துடன் பார்த்த படத்தில் இருந்த பசுபதி அந்த தெருவிளக்கு கம்பத்தின் அடியில் நின்று அவளையே உற்று நோக்குவது போல் இருந்தது.



விழிகளை பயத்தில் மூடியவள் மீண்டும் பார்க்க மெதுவாய் அந்த உருவம் மங்கலாக மாறி அப்படியே மறைந்தும் போனது. அதன்பின்னர் தான் அகல்யாவிற்கு மூச்சே வந்தது.


அப்பாடி ஒரு நிமிசத்துல உயிரே போய்டுச்சு. இந்த ராத்திரி நேரத்துல பேய் படம் பாத்ததுக்கு இன்னும் என்னென்ன கண்ணு முன்னாடி வரப் போகுதோ... என்று நினைத்தவள் தன்னையே நொந்து கொண்டிருக்க நின்றிருந்த காட்சியில் இருந்த அந்த படம் இப்போது மறுபடியும் ஓட ஆரம்பித்தது.

கூடவே "விடமாட்டேன்
பொம்மாயி விடமாட்டேன்" என்று பசுபதியின் ஓலக் குரல் அந்த இருளின் அமைதியை கிழித்து அவள் காதினில் கேட்க உடல் நடுங்கவே தொடங்கிவிட்டது.


உடனே படத்தை நிறுத்தியவள் தனது அறையில் இருந்து வெளியே வேகமாக வந்தாள். பயத்தின் காரணமாக இதயத்துடிப்பு தாறுமாறாக ஏறியிருந்தது.


கீழே கூடத்தில் அப்பாவும் அம்மாவும் படுத்திருக்க அங்கே மின்விசிறி ஓடிக் கொண்டிருந்தது. அதைக்
கண்டவளுக்கு அப்படியானால் நமது அறையில் மட்டும் தான் பிரச்சனை இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டே சரி இனி அங்கே போக வேண்டாம் இங்கேயே அப்பா அம்மாகிட்ட படுத்துக்கலாம் என்று நினைத்து அவர்களின் அருகே வர ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென்று நின்று விட்டது.


இதுவரைக்கும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியும் எரிந்து கொண்டிருந்த மின்விளக்கும் நான் அருகே வரும் போது நிற்கிறது என்றால் பிரச்சனைக்கு காரணம் நானாக இருக்குமோ என்ற எண்ணம் அவளுக்குள் வந்த மறுநொடி அவள் முகம் யோசனையில் சுருங்கியது.


அவள் யோசனையை தடுத்து நிறுத்துவதற்காக இப்போது உயிரையே உலுக்கும் அளவிற்கு ஒரு குரல் கேட்டது.

"அகல்யா வா வா"

நடுராத்திரியில் செவிக்குள் கேட்ட அந்த ஒலியினால் அவள் யாக்கையினுள் ஓடிய குருதி அனைத்தும் ஒரு நிமிடம் உறைந்து போனதைப் போல உணர்வு தோன்றியது.. மீண்டும் "அகல்யா வா வா" என்ற குரல் அவள் செவியை தீண்டியதில் அவள் தன் உணர்வுக்கு வந்து பின்னால் மெதுவாக திரும்பினாள்.


இரவு நேரத்தில் இதயத்தையே நடுங்க வைக்கும் இத்தகைய குரலில் என்ன செய்ய என்று புரியாமலே அகல்யா சிலைபோல் நின்றிருந்தாள்.

"வாம்மா உனக்காத்தான் நான் இத்தனை நாளா காத்துட்டு இருக்கேன். என்னைத் தேடி வாம்மா என்று வேதனையுடன் அந்த குரல் ஓங்கி ஒலிக்க அந்த குரலில் புதைந்திருந்த வேதனை அவளை தாக்கியது. கூடவே அருந்ததி படத்தின் காட்சியும் நினைவுக்கு வந்தது. நடப்பது உண்மையா இல்லை கற்பனையா என்று புரியாமல் இருந்தாலும் அந்த வேதனைக் குரல் அகல்யாவின் உள்ளத்தைப் பிசைந்ததில் மெதுவாக கதவினை நோக்கி நடந்தாள்.


அகல்யாவிற்கு என்ன செய்கிறோம் என்று புரியவில்லை. ஆனால் அந்த குரலை தொடர்ந்து செல்ல வேண்டும் என்பது மட்டும் புரிந்தது. கதவினில் சென்று அவள் கைவைக்கும் முன் சத்தமில்லாமல் கதவு திறந்து கொண்டது. அதையும் அவள் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு வெளியேறினாள்.


தெருவிளக்குகள் வஞ்சனையில்லாது வெளிச்சத்தை வழங்கியிருக்க அவள் அந்த பாதையில் நடக்கத் தொடங்கினாள்‌. அவளுக்கு பின்னால் யாரோ நடந்து வருவதைப் போல இருக்க உடனே அகல்யா திரும்பிப் பார்த்தாள். நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து வந்து கொண்டிருந்த நாய் அவள் திரும்பிப் பார்த்ததை அறிந்து சட்டென்று நின்றது. அதன் கண்கள் மின்னிக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் அவள் கண்களில் அச்சம் குடிபுகுந்தது. தன்னைப் பார்த்து இந்த பெண் பயப்படுகிறாள் என்பதை அறிந்த அந்த நாயோ வேகமாக அங்கிருந்து நகரந்து சென்றுவிட்டது.


நாய் சென்று விட அவளும் மெதுவாக நடக்கத் தொடங்கினாள். சற்று தூரம் அவள் நடந்து கொண்டே இருக்க இப்போது தெருவிளக்குகளின் வெளிச்சம் எதுவும் இல்லாமல் அந்த இடமே இருட்டாக இருந்தது.



இருளுக்குள் அவளும் புதைந்து நடக்க ஆரம்பித்தாள். "உன்னைப் பார்க்கணும் என்று தான் நான் இத்தனை நாளாய் இங்கயே காத்திருந்தேன். வா ம்மா" என்று அந்த குரல் காற்றினில் கலந்து அவள் காதுக்குள் கேட்க அவள் அதன் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க ஆரம்பித்தாள்.



ஊரைத் தாண்டி சற்று தள்ளி வந்த அவளுக்கு இப்போது அந்த குரல் கேட்கவே இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அந்த இருட்டில் ஒன்றும் புலப்படவில்லை. சற்று தூரத்தில் மட்டும் சின்னபுள்ளியாய் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. கையில் இருந்த கைப்பேசி இப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே அதை எடுத்து விளக்கை போட்டு அந்த வெளிச்சத்தினால் எதிரே இருந்தவற்றை பார்வையிட அவளது கைப்பேசி கரத்தில் இருந்து நழுவியது. ஆனால் பார்த்த காட்சி மட்டும் அவளது கண்ணை விட்டு மறையவே இல்லை.


அதிலே அவள் உறைந்து போய் நின்றாள்... "வந்துட்டயா அகல்யா ம்மா... நீ வருவேன்னு எனக்குத் தெரியும். உனக்காகவே இந்த இடத்துல இத்தனை வருசமா நான் காத்துட்டு இருந்தேன். இப்போத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு" என்று குரல் மீண்டும் கேட்க அவளோ நடந்து முடிந்த நிகழ்வின் தாக்கத்திலே நின்றிருந்தாள்.


அவள் கண்ணுக்குள் அந்த சிறிய ஆலமரம் அப்படியே விழுதுகளை நீட்டி தன்னை நோக்கி வருவதைப் போலவே இருந்த காட்சி மீண்டும் மீண்டும் வர கண்களை மூடிக் கொண்டே அப்படியே அங்கேயே மடங்கி அமர்ந்து விட்டாள். அந்த மரத்தின் நடுவே ஏதோ ஒரு முகம் தெளிவில்லாமல் தெரிய அதை பார்த்ததில் அவளுக்குள்ளும் கலக்கம் சூழ்ந்து கொண்டது...
அவள் கண்களில் காரணமே இன்றி கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. சத்தமில்லாது அழுது கொண்டிருந்தவளின் விசும்பல் சத்தம் இப்போது சற்று சத்தமாக அங்கே அந்த இடத்தில் கேட்கத் தொடங்கியது...


அந்த சத்தம் அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒருவனின் காதில் கேட்டது. இந்த நேரத்துல இது என்ன சத்தம் என்று நினைத்தவன் வேகமாக அந்த பக்கம் திரும்பி நடக்கத் தொடங்கினான்.

இடையில் கட்டியிருந்த சிவப்பு நிறத் துண்டை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு விரைந்து நடந்தவன் அந்த ஆலமரத்தைக் கண்டு அப்படியே நின்றான். இங்க இருந்துதான் சத்தம் வருது என்று நினைத்தவன் தன் பார்வையை சுழற்ற கீழே யாரோ அமர்ந்து அழுது கொண்டிருப்பது வரிவடிமாக தெரிந்தது.


இந்த மரத்துக்கிட்ட யாரு உக்காந்து இப்படி அழுதுட்டு இருக்குறது என்று நினைத்தவன் அந்த உருவத்தை நோக்கி நடந்து வந்தான்.


பின்புறம் வந்து நின்றவன் மெதுவாக அவள் தோளைத் தொட அகல்யா உடனே திரும்பிப் பார்த்தாள்.

"ஏய் அகல் நீயா" என்றான் அவன் அதிர்ச்சியாக.

திரும்பிய அவள் அவன் மேல் அறிமுகமற்ற பார்வையை செலுத்திவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.


"அகல் அகல்யா எழுந்திரு வீட்டுக்கு போகலாம்" என்று அவன் கையைப் பிடித்து எழுப்ப முயற்சிக்க கையை உதறிவிட்டு அவள் அங்கேயே அமர்ந்து விட்டாள்.


என்ன செய்வது என்று புரியாதவன் அங்கிருந்து மீண்டும் வந்த வழியே ஓடினான். அங்கே இருந்த சிறிய அறையின் முன் மூச்சு வாங்க நின்றவன் தன் இடையில் இருந்த சாவியை கொண்டு பூட்டைத் திறந்து வேகமாக உள்ளே நுழைந்தான்.


உள்ளே கல்லால் ஆன சிறு விளக்கு தூண் மட்டும் இருக்க அதன் ஒரு புறம் சிவன் சிலையும் மறுபுறம் விநாயகர் சிலையும் இருந்தது.


அவன் அந்த விளக்கின் முன் கொட்டியிருந்த விபூதியை எடுத்துக் கொண்டு வேகமாக அவளை நோக்கி வந்தான்.


அவளின் அழுகை இன்னும் குறைந்தபாடில்லை. உடனே அருகே வந்தவன் "அகல்யா" என்று அழைத்துக் கொண்டே அவள் நெற்றியில் விபூதியை பூசி விட்டான். சட்டென்று நெற்றியில் பதிந்த அந்த தொடுகையாலும் விபூதியின் சக்தியாலும் அவள் அழுகை நின்று தன் எதிரே இருந்தவனை ஏறிட்டுப் பார்த்தாள்.


உடனே அவளது அதரங்கள் "சக்தி" என்று மெதுவாக அசைந்தது.


"சக்தியே தான் எந்திரி மொத" என்றான் அவன்.


எழுந்தவள் சுற்றிலும் பார்க்க "என்ன பாக்குற இங்க எப்படி வந்தேன்னு கேக்க போறயா" என்றான் சக்திவேல்.


"இல்லை நீ எப்படி இங்க வந்த" என்றாள் அவள்.


"அடிப்பாவி அப்போ நீ இங்க தெரிஞ்சே தான் வந்தயா..." என்றான் அவன்.


"ஆமா சக்தி யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது. அதான் வந்தேன் ஆனா வந்து இந்த மரத்தைப் பாத்ததும் அது அப்படியே என்னை நோக்கி வர்ற மாதிரியே இருந்தது. அதுவரைக்கும் ஞாபகம் இருக்கு. அடுத்து தான் என்ன நடந்ததுன்னு தெரியல"


"நல்லா இருக்கு அகல் நீ சொல்லுறது எல்லாம்... இந்த ராத்திரியில இங்க வந்து இருக்க பாரு பயமே இல்லாமல்... வா போகலாம் வீட்டுக்கு" என்று அவன் அவளது கைப்பிடித்து அழைத்துச் சென்றான். அவளது கரத்தில் இருந்து விழுந்து கிடந்த அவளின் கைப்பேசி அங்கயே அனாமத்தாக இருந்தது... அதை அவளும் கவனிக்கவே இல்லை.

அவனுடன் இணைந்து நடந்து கொண்டே "சக்தி நீ எங்க இந்த நேரத்துல" எனக் கேட்டாள்.

"கோவில்ல வேலை நடக்குது இல்ல"

"ஆமா"

"மண் லோடு வர்றதா சொல்லிருந்தாங்க அதான் இங்க இருந்தேன். இப்போ தான் டிராக்டர் வந்தது. அந்த வேலையை முடிஞ்சுட்டு வீட்டுக்கு கிளம்புவோம்னு வெளியே வந்தா அழுகைச் சத்தம் கேக்குது. அதான் யாருடான்னு பாக்க வந்தேன். ஆனா நீயா இருப்பன்னு எனக்குச் சத்தியமா தெரியாது" என்றான் சக்தி.

"அழுதுட்டு இருந்தேனா" என்றாள் அவள் குழப்பமாக.

"ஆமா அகல்" என்றவன் "சரி சரி வீடு வந்துடுச்சு நீ உள்ள போ" என்றான்.

"சரி சக்தி" என்றவள் உள்ளே நுழைய கதவு இவள் பூட்டும் முன்பே பூட்டிக் கொண்டது. நடக்கும் அமானுடமான விசயங்களைக் காணக்காண அவள் உள்ளம் பயத்தில் பயங்கரமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது....



ஆலமரத்தின் முன் விழுந்து கிடந்த அந்த கைப்பேசி அப்படியே காற்றில் மிதந்து அவளது அறையின் சாளரத்தின் வழியே நுழைய அப்போதுதான் அறைக்குள் நுழைந்தவனின் பார்வையில் அந்த காட்சி பட்டுவிட்டது...
அப்படியே பின்னால் நகர்ந்தவளின் முகத்துக்கு முன் வந்து நின்ற கைப்பேசியின் திரை ஒளிர்ந்து ஆன்மா அழைக்கிறது எனக் காட்டியது...


அமிழ்ந்தது மீளுமா...
************​

தங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள் மிக்க நன்றி சொந்தங்களே

கதைக்கான கருத்துத்திரி:

Thread 'அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments' https://www.sahaptham.com/community/threads/அகலில்-அமிழ்ந்த-ஆன்மா-comments.440/
 
Last edited:
அத்தியாயம் இரண்டு

பயத்தோடு தனது கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தவள் அந்த அழைப்பை ஏற்கலாமா இல்லை நிராகரிக்கலாமா என்ற சிந்தனையிலே இருந்தாள். அந்த அழைப்போ ஒருகட்டத்தில் அமைதியாகிவிட அவள் கைப்பேசியை மிகுந்த நடுக்கத்துடன் கைப்பற்றினாள். வேகமாக அங்கே இருந்த மேசையின் மேல் வைத்தவள் ஓடிச்சென்று போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.


அவளது அறைக்குள் மட்டும் இன்னும் மின்சாரம் வந்தபாடில்லை. அதனால் வேர்வை வழிந்து அவள் உடலை நனைத்த போதும் போர்வையை அகற்றாமலே படுத்திருந்தாள்.

நடந்த முடிந்த நிகழ்வுகளின் தாக்கம் அவளுக்குள் பயங்கரமான எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியிருந்தது.

இப்போது மறுபடியும் அழைப்பு வந்தது... அவளோ காதுகளை மூடிக் கொண்டு படுத்திருந்தாள். உடலின் நடுக்கம் போர்வையை தாண்டி வெளியே தெரிந்தது. கூடவே அந்த குரல்... அதே குரல்...

"அமிழ்ந்து போனதை மீட்க அகலைத் தேடி நீயே வந்து விட்டாய்... இனி நடப்பவைகளை உன்னால் தடுத்து நிறுத்தவே முடியாது...." என்றது கோரமாய்...

காதை இறுக மூடிய போதும் காதுக்குள்ளயே ஒலிப்பதைப் போல் இருந்தது அந்த குரல். இந்த இரவில் அவள் இன்னும் எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவது... அந்த குரலில் இருந்த ரௌத்திரம் அவளுக்கு புரிந்தது. ஆனால் சொன்ன சேதி தான் புரியவில்லை.

இதயத்தை ஏகத்துக்கும் எகிற வைத்த அந்த நிகழ்வுகளையே யோசித்துக் கொண்டிருந்தவள் பயத்துடனே ஒருவழியாக உறங்கியும் போனாள்.


ஆனால் அங்கே ஒருவன் உறங்காமல் தன் வீட்டின் மாடியில் நடை பயின்று கொண்டிருந்தான். மெல்லிய நிலவொளியில் அவன் முகம் சோகத்தோடு கூடிய குழப்பத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது.

அகல்யா இந்த நேரத்துக்கு அங்க ஏன் வந்தா. அந்த இடத்தைப் பாக்கும் போதே மனசை என்னவோ பண்ணுச்சே.. இதனால அகல்யாவுக்கு ஏதாவது ஆபத்து வருமா என்று யோசனையிலே அவன் உழன்றதில் தூக்கம் தூரமாய் போய்விட்டிருந்தது.

காலையில அவளை எப்படியாவது பாக்கணும். என்ன பண்ணலாம் ஸ்கூலுக்கு கிளம்பி வரும் போது கோவில் தாண்டி தான போவா... அப்போ அவளை நிறுத்தி பேசிடலாம். அவளை ரொம்ப கவனமா இருக்கச் சொல்லணும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு தெரியவில்லை கவனமாக இருந்தாலும் அவளுக்காகவே காத்திருந்த சோதனை அவளை அவ்வளவு எளிதாக விட்டுவிடாது என்பது பற்றி.


மறுநாள் காலையில் அவளின் அம்மா துர்கா வந்து "அகல்யா எந்திரி லேட்டாகிடுச்சு பாரு" என்று எழுப்ப அதன்பின்னரே அவள் கண்விழித்தாள்.

போர்வையை எடுத்து பார்க்க துர்காவோ "ஏன்டி காத்தாடியும் போட்டுட்டு இப்படியா முகத்தையும் மூடி தூங்குவ" என்று திட்டியபடி அந்த மின்விசிறியை அணைத்து விட்டு சென்று விட்டார்.

எழுந்தவளுக்கோ உடலெல்லாம் வலிப்பது போல் இருந்தது. அதன் காரணம் அவளுக்கு ஏன் என்று புரியவில்லை.
இரவில் நடந்தது அனைத்தும் அவளது சிந்தனையில் இருந்து சுத்தமாக மறைந்து அன்று சீக்கிரமாகவே பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பது மட்டும் ஞாபகத்தில் இருக்க எழுந்து வேகமாக குளிக்கக் சென்றாள்.

குளித்து முடித்து ஆடையை மாற்றிக் கொண்டு வந்தவள் தலைசீவிக் கொண்டு இருக்க கிளம்பிக் கொண்டிருந்தவளின் அருகே வந்த அவளின் அப்பா சாமிநாதன் "என்னம்மா சீக்கிரமாவே கிளம்பிட்டு இருக்க" எனக் கேட்டார்.


"இன்னைக்கு ஸ்பெசல் க்ளாஸ் இருக்குப்பா.. அதான்" என்றாள் அவள்.

"சரிம்மா" என்று சொன்னவர் அங்கிருந்து நகர்ந்து விட
"அப்பா" என்று அவள் அழைத்தாள்.

"என்னம்மா"

"சாயந்தரமும் க்ளாஸ் இருக்குப்பா என்னோட வண்டி பஞ்சரா இருக்குப்பா. இப்போ பஸ் இருக்குல்ல நான் அதுல போய்க்கிறேன். ஆனா சாயங்காலம் மட்டும் நீங்க..." என்று அவள் முடிப்பதற்குள்...

"நான் வந்துடுறேன் ம்மா.. போன் பண்ணு" என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட அவள் தலைசீவி முடித்துவிட்டு வேகமாக சாப்பிட வந்து அமர்ந்தாள்.

"பஸ் வர்ற நேரம் ஆகப் போகுது ஆனா நீ லேட்டா வர்ற" என்று திட்டிக் கொண்டே அவளுக்கு சாப்பாடை எடுத்து வைத்தார் துர்கா.

"என்னை திட்டாம என்னைக்குத்தான் சாப்பாடு வைக்க கத்துக்க போறீங்களோ" என்று அவள் முணுமுணுக்க..

"என்னடி சொன்ன" எனக் கேட்டார் துர்கா.

"சாம்பார் நல்லா இருக்குன்னு சொன்னேன் ம்மா" என்றாள் அவள் அப்பாவியாக.

"சொல்லுவ டி ஏன் சொல்ல மாட்ட" என்று அவர் திட்டினாலும் அவளுக்கு தேவையான அத்தனையும் எடுத்து வைத்தார்.

சாப்பிட்டு முடித்தவள் "அம்மா போயிட்டு வர்றேன்" என்று சத்தமாக சொல்ல "ஏய் இருடி ஃபோனை மறந்துட்டு போற" என்று அதையும் கையில் கொடுத்தார் துர்கா.

அதையும் வாங்கியவள் வேகமாக அவர்களின் வீட்டினைத் தாண்டி வந்து அந்த சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். நேராக நடந்தவள் வலதுபக்கம் திரும்பி அங்கிருந்த பாலத்தை கடக்க தொடங்கினாள்.

அந்த பாலத்தில் இருந்து கீழே பாக்கும் போதே அவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது. அந்த ஆற்றில் நீர் ஓடாமல் குப்பையும் கழிவுகளும் மட்டுமே இருந்தது. சாக்கடை நீர் வேறு அதற்குள் குளம் போல் தேங்கி இருந்தது.

இப்போதுதான் இந்த ஆறு இப்படி இருக்கிறது. ஆனால் பத்து பதினைந்து வருடத்திற்கு முன்னால் அந்த ஆறு எப்போதும் வற்றாமல் அழகாய் காட்சியளிக்கும். சின்ன வயதில் ஆற்றில் குளித்தது எல்லாம் ஞாபகத்துக்கு வந்ததும் இன்னும் அவளுக்கு வேதனையாக இருந்தது.

மாறிவிட்ட சூழ்நிலையில் வளர்ந்து விட்ட காலகட்டத்தில் இயற்கை எல்லாம் இல்லாமலே போய்விடுமோ என்று அவள் யோசித்துக் கொண்டே பேருந்து நிலையத்தை அடைந்திருந்தாள்.

அகல்யாவை பார்த்துவிட வேண்டும் என்று வேகமாக வீட்டை விட்டு சக்தி கிளம்ப அவனின் அப்பா மாரியப்பனோ திண்ணையில் அமர்ந்திருந்தார்.

இவனைப் பார்த்ததும் "என்ன சக்தி சீக்கிரமாவே கிளம்பிட்ட.. சாப்பிட்டயா" எனக் கேட்டார்.

"அப்பா கோவில்ல வேலை இருக்குல்ல அதான்... ஆங்.. சாப்பிட்டேன் ப்பா" என்றான்.

"கோவில்ல வேலை இருக்குன்னு தெரியும். ஆனா அதுக்குன்னு இப்படி ஏழரை மணிக்கே கிளம்பி போவன்னு தான் எனக்குத் தெரியாது..." என்றார் அவர்.

"அப்பா என்னப்பா" என்று அவன் கேட்க..

"எப்பவும் பத்து மணிக்குத்தான போவ. அதுவும் நான் போனதுக்கு அப்பறம் தான வருவ... இன்னைக்கு அதிசயமா நீ கிளம்புனா எனக்கு அதிர்ச்சியா இருக்காதா ப்பா" என்றார் அவர் வேகமாக.

"அது வந்து ப்பா..." என்று அவன் என்ன சொல்லி சமாளிக்க என்று யோசிக்க

"சரி சரி போ சக்தி" என்றார் அவர்.

அப்பாடி என்று அவரிடம் இருந்து தப்பித்து வந்தவன் வேகமாக கோவிலுக்குச் சென்றான். அவள் வருவதற்கு இன்னும் நேரம் இருக்கின்றது என்பதால் கோவிலில் நேற்று சிமெண்ட் பூச்சு பூசிய இடத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அது அவன் வேலை இல்லை தான் இருந்தாலும் அப்போது சும்மா இருக்கப் பிடிக்காமல் அந்த வேலையை செய்து கொண்டே நான் உன்கிட்ட பேசணும் அகல்யா என்று அவளுக்கு செய்தி வேறு அனுப்பியிருந்தான்.

ஆனால் அவள் தனது கைப்பையினுள் போட்டிருந்ததால் தனது கைப்பேசியை பார்க்கவே இல்லை. அதனால் அவனது செய்தியும் பார்க்கப்படாமலே இருந்தது.

அந்த நேரத்தில் பேருந்தும் வந்துவிட அவள் அதில் ஏறி கிளம்பியே விட்டாள். அரை மணி நேரப் பயணம் சரியாக அவள் எட்டு மணிக்கு பள்ளியின் உள்ளே நுழைந்துவிட்டாள். அவள் வந்த பிறகு மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.

அனைவரையும் அமரவைத்து நேற்று போடச் சொல்லியிருந்த C++ ப்ரோக்கிராமை சரிபார்த்துக் கொண்டிருந்தாள். பாதிப் பேர் சரியாக போட்டு வந்திருக்க மீதிப் பேர் பாதியளவுக்கு முயற்சி செய்து வந்திருக்க அவர்களுக்கு புரியும் படி அதை தெளிவாகச் சொல்லி அதைப் போல் வேறு ஒரு ப்ரோகிராமையும் கொடுத்துப் போடச் சொன்னாள்.

ப்ரோகிராம் போட்டு முடிக்க உடனே ப்ரேயர் பெல்லும் அடித்தது. அவள் கிளம்ப எத்தனிக்க கடைசி பென்சில் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து "மேம் இன்னைக்கு செகண்ட் ப்ரீயட் நம்மது தான். லேப்புக்கு வரவா மேம்" என்று கேட்டான்.

"இல்லை வேண்டாம் நான் க்ளாஸ்க்கு வந்துடுறேன்" என்றாள் அகல்யா.

"மேம் மேம் ப்ளீஸ் மேம் ரொம்ப நாளாச்சு லேப்க்கு வந்து... இன்னைக்காவது கூட்டிட்டு போங்க" என்று இப்போது அனைவரும் கோரசாக சொல்ல

"சரி சரி வெயிட் நான் நிவேதா மேம்கிட்ட கேட்டுட்டு வேற யாருக்காவது லேப் இருக்கான்னு பாத்துட்டு சொல்லுறேன்" என்றாள்.

"அப்படி ப்ரீயா இல்லைன்னாலும் ப்ரீ பண்ணிடுங்க மேம் ப்ளீஸ்" என்று அவர்கள் சொல்ல

"மொத ப்ரேயர் போங்க நான் சொல்லுறேன்" என்று சொல்லிவிட்டு அவள் வெளியே வந்துவிட்டாள்.

சரியாக ஒன்பது ஆனப்பிறகு இவன் கோவிலை விட்டு வெளியே வந்து நின்றான். இவளை எங்க இன்னும் காணோமே என்று தேடியவன் மெஸேஜை பார்க்க அது இன்னும் பார்க்கப் படவில்லை என்று தான் காட்டியது.

என்ன பண்ணுறா ஒருவேளை நேத்து நைட்டு நடந்த விசயத்தால பயந்து போய் வீட்டுலயே இருக்காளோ என்று அவன் நினைக்க ஆரம்பித்தான்.

அவன் அந்த நினைவிலே வேகமாக அங்கிருந்து அவளது வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பிக்க திடீரென வானம் திரண்டு கருப்பு வண்ணத்தில் காட்சியளிக்க தொடங்கியது.

இருள் சூழ்ந்தது போல் இருந்த இந்த காட்சியை கண்டு சக்தி அதிர்ச்சியாகி நின்றுவிட்டான். எதிரே ஏதோ ஓர் உருவம் மங்கலாக தெரிவதைப் போல இருந்தது. அந்த இருளிலும் இருளாய் கருநிழலாய் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு அவன் விழிக்க அதுவோ அந்த மரத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

முதலில் பயந்தாலும் முயன்று தைரியத்தை வரவழைத்து அந்த உருவத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அந்த உருவம் ஆலமரத்தை அடைந்ததும் அதனுள் புகுந்து கொண்டது.

சக்திக்கு ஒன்றுமே புரியவில்லை. இதுவரை இந்த ஆலமரத்தைப் பற்றி அவன் வித்தியாசமான செய்திகளை கேட்டதே இல்ல. கோவிலுக்கு சற்று பக்கத்தில் இருக்கும் மரம் அதனால் சிலர் அதனையும் கும்பிட்டு செல்வதைத்தான் பார்த்திருக்கின்றான்.

ஆனால் புதிதாய் வேறு பல நிகழ்வுகள் நிகழ்வதை இப்போதுதான் பார்க்கிறான். அவன் குழப்பத்துடனே இருக்க
"நீ தேவையில்லாமல் அகல்யாவுக்கும் பிரச்சனைக்கும் இடையே வந்து நிற்கிறாய். இது சரியில்ல. அவளுக்காகத்தான் நான் இத்தனை நாளாய் காத்துக் கொண்டு இருந்தேன். நீ அவளை நெருங்கி வராமல் விலகி போய்டு" என்று அந்த மரத்தின் உள்ளே இருந்து குரல் வர அவனோ தான் நினைத்தது சரிதான் போல என்ற நினைப்பிலே நின்றிருந்தான் தைரியமாக.


"இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ. அவ விசயத்துக்குள்ள நீ தலையிடாத மீறி வந்தா உன்னோட உயிர் தான் போகும்" மறுபடியும் அந்த மரத்தினுள் இருந்து குரல் கேட்டது..


அவனோ அந்த மரத்தையே உற்றுநோக்கி "நான் நேத்து சும்மா தான் அவ இங்க வந்து உக்காந்துருக்கா. நாம அவளை கவனமா இருக்கச் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா இப்போத்தான் தெரியுது பிரச்சனை ரொம்ப பெரிசுன்னு. இனி நீயே நினைச்சா கூட என்னை தடுக்க முடியாது" என்று சொல்ல அந்த மரமோ சட்டென்று அதிரத் தொடங்கியது.


அதையே பார்த்தவனின் இதழ்கள் இப்போது புன்னகையில் விரியத் தொடங்கியது.
"என்ன உனக்கு நடுக்கம் வந்துடுச்சா என்னை நினைச்சு" என்றான் சக்தி சாந்தமாக.


"என்ன" என்று கேட்ட அந்த குரல் அந்த இடமே அதிரும் வண்ணம் இருந்தது.

"நான் பக்கத்துல தான் இருக்கேன் மெதுவா சொன்னாலே எனக்கு கேக்கும். நீ இவ்வளவு கத்தணும்னு அவசியமே இல்லை..." என்றான் அவன் சாதாரணமாக.

"உனக்கு அவ்வளவு திமிரா"

"இது திமிர் இல்ல அகல்யாவை எப்படியாவது காப்பாத்தியே ஆகணும்ங்கிற வெறி. என் கூடவே இந்த அகிலத்தையே கட்டிக் காக்கும் ஆதார சக்தி கூடவே இருக்காங்கிற நம்பிக்கை. அந்த சக்தி தான் உன் முன்னாடி இந்த சக்தியாய் நின்னு அவ்வளவு தைரியமா என்னை பேச வைக்குது"

"அவளே இப்போ அந்த தகர கொட்டகைகுள்ள அடைஞ்சு கிடக்கா. தெரியும்தான. அவளாலயே இதுக்கு இடையில வர முடியாது..." என்றது அந்த குரல்.

"உன்னோட அறிவு அவ்வளவு தான் அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியுது. அவ அந்த இடத்துக்குள்ள அடைஞ்சு கிடக்கலை. கோவில் கட்டும் வரை அந்த இடத்துக்குள்ள குடி இருக்கா. அதுக்காக அதுல இருந்து வெளியவே வரமாட்டான்னு எப்படி நீ நினைக்குற எனக்குப் புரியல" என்றான் அவன்.


"உனக்குத்தான் புரியல இனி அவ குடமுழுக்கு நடக்குற வரைக்கும் அங்கதான் இருப்பா இருந்தாகணும். அதுக்குள்ள நான் இங்க இருந்து வெளிய வந்து என்னோட எல்லா வேலையும் முடிஞ்சுடுவேன். நீதான் இடையில வந்த பாவத்துக்கு இல்லாமலே போகப் போற. அதான் சொல்லுறேன் இந்த இடத்தை விட்டு காலி பண்ணிரு..." என்று சொல்ல அதற்குள் அவனது கைப்பேசிக்கு அழைப்பு வந்துவிட்டது.

வந்த அழைப்பில் அவன் கவனம் குவிய உடனே அழைப்பை ஏற்று பேசத் தொடங்கினான்.

"சக்தி என்ன மெஸேஜ் பண்ணிருந்த" என்றாள் அகல்யா. அவளது குரல் கிணற்றின் உள்ளே இருந்து கேட்பதைப் போல மெதுவாக இருந்தது.


"ஆமா நீ எங்க இருக்க. ஏன் உன் வாய்ஸ் இவ்வளவு டல்லா கேக்குது"


"ஸ்கூல்ல லேப்ல இருந்து பேசுறேன்... அதான் அப்படி கேக்கும்"

"ஸ்கூலுக்கு போயிட்டயா. நான் இங்கதான இருந்தேன் உன்னைப் பாக்கவே இல்ல" என்றான் சக்தி.

"இன்னைக்கு ஸ்பெசல் க்ளாஸ் சக்தி. அதுவும் இல்லாம வண்டி பஞ்சர் அதான் பஸ்ல போயிட்டேன். போனை பேக்ல போட்டதால பாக்கல. இப்போத்தான் ப்ரேயர் முடிச்சுட்டு வந்து பாத்தேன். சாரி சக்தி"

"அதை விடு நான் உன்கிட்ட பேசணுமே"

"ஏன் சக்தி ஏதாவது பிரச்சனையா" என்றாள் அகல்யா அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்து.

"அது வந்து நைட்டு நடந்தது பத்தி" என்று அவன் இழுத்து நிறுத்த

"நைட்டா என்ன சக்தி. ஏதா இருந்தாலும் தெளிவா சொல்லு. எனக்குப் புரியலை" என்று அவள் சொல்ல அதன் பின்னரே அவனுக்குப் புரிந்தது அவளுக்கு நடந்தது அனைத்தும் மறந்து போயிருக்கிறது என்று.


"ஒன்னும் இல்ல இன்னைக்கு உன் கூட பேசணும்னு தோணுச்சு அதான் பேசலாம்னு வெயிட் பண்ணேன் அகல்"

"அப்படியா சக்தி ஈவினிங் கோவிலுக்கு வர்றேன் பேசலாம் நீ அங்கதான இருப்ப. இல்ல வீட்டுக்கு வரவா"

"கோவிலுக்கு வேணாம் வீட்டுலயே பேசலாம்" என்றான் அவன்...

"சரி சக்தி வச்சுடுறேன்" என்று அவள் வைக்க அதன்பின்னரே அவன் சுற்றுப்புறத்தைப் பார்த்தான்.

அகல்யாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்ததில் அவன் கோவில் அருகே வந்து சேர்ந்திருந்தான். அதை உணர்ந்தவன் திரும்பி அங்கே இருந்த மரத்தைப் பார்க்க அது அமைதியாக நின்றிருந்தது.

மறைந்த சூரியனும் வெளியே வந்து தனது வேலையை காட்டத் தொடங்கியிருந்தது. ஆலமரத்தைப் பார்த்தவன் விழிகளில் இப்போது தைரியத்தையும் மீறி சிறு அச்சம் வந்திருந்தது.

அகல்யாவுக்கு நேரப் போகும் ஆபத்தை தடுத்து நிறுத்த முடியுமா என்ற எண்ணம் அவன் மனதுக்குள் தலை தூக்கத் தொடங்கியது....

அமிழ்ந்தது மீளுமா...

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள 👇👇👇


 
அத்தியாயம் மூன்று


போகவே மாட்டேன் என்று அடம் பிடித்த பொழுதை நெட்டித் தள்ளிய சக்தி அவள் வரும் நேரத்தை கணக்கிட்டு வீட்டுக்குச் சென்றான். அவனின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டே இருந்த மாரியப்பன் இவனுக்கு ஏதோ ஆகிடுச்சு என்று நினைத்துக் கொண்டார்.



வீட்டுக்கு வந்தவன் சும்மா இருக்கப் பிடிக்காமல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். அந்த இடத்துல ஏதோ ஒன்னு இருக்கு அதுக்கும் அகல்யாவுக்கும் என்ன சம்பந்தமா இருக்கும். அப்படி ஏதாவது இருந்தா ஏன் அதைப் பத்தி யாருக்கும் தெரியலை. இல்ல... எல்லாருக்கும் தெரியுமா?... தெரிஞ்சே மறைக்குறாங்களா என்று யோசனையில் இருந்தவன் அகல்யா வந்ததைக் கூட கவனிக்கவில்லை.



"என்ன சக்தி என்ன யோசனை. நானும் அப்போ இருந்து பாத்துட்டே இருக்கேன் நீங்க நான் வந்ததை கூட பாக்கலை..." என்ற சத்தத்தில் திரும்பியவன்



"ஏய் அகல்யா எப்போ வந்த" என்றான்.



"வந்து ரொம்ப நேரமாச்சு. ஆனா நீங்கதான் அப்படியே வேற உலகத்துல இருந்தீங்களே.. "



"சாரி டா நான் கவனிக்கலை..." என்றான் சக்திவேல்.



"அது பரவாயில்லை உங்களுக்கு என்னாச்சு. இப்படிலாம் இருக்க மாட்டீங்களே"



"ஒன்னும் இல்லையே" என்றான் அவன்.



"இல்லை சக்தி ஏதோ நடந்துருக்கு. இல்லைன்னா உங்க முகத்துல இவ்வளவு கலவரம் தெரியாதே.. சொல்லுங்க சக்தி"



அவள் அப்படி கேட்டதும் அவன் மௌனமாகிவிட்டான். இந்த மௌனமும் அவளுக்கு புதிது தான். எப்போதும் சக்தி ஏதாவது பேசி கிண்டல் செய்து கொண்டே இருப்பான். இன்று தான் பேசினால் கூட என்னவோ போல் பேசும் இவனைக் காண காண அகல்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.



"சரி அதை விடுங்க... ஏதோ பேசணும்னு என்னைக் கூப்பிட்டீங்களே அதையாவது சொல்லுங்க. அம்மா செஞ்சு வச்சிருந்த பனியாரத்தை கூட சாப்பிடாம யூனிபார்ம் மாத்தாம ஓடி வந்துட்டேன். சீக்கிரம் சொல்லுங்க சக்தி"



"சாப்பிடலையா நீ... ஏன் சாப்பிட்டு வந்துருக்கலாம்ல" என்று சொல்லியபடி உள்ளே இருந்து அவன் காலையில் செய்து வைத்திருந்த சாப்பாடை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.



"சாப்பிடு" என்று சொல்ல அவளும் மறுபேச்சின்றி வாங்கி சாப்பிடத் தொடங்கினாள்.



"சக்தி சூப்பரா இருக்கு..." என்று அவள் சாப்பிட அவன் அவளையேப் பார்த்திருந்தான். சிறு குழந்தை போல் ரசித்துச் சாப்பிடும் அந்த அழகில் சற்று தன்னையே மறந்திருந்தான் சக்தி...



அவள் சாப்பிட்டு முடித்ததும் இவன் வேகமாக "அகல் நான் உங்க வீட்டுல வந்து பேசவா"என்றான் வேகமாக.



"அது உங்க அத்தை மாமா வீடு... அங்க வந்து பேசுறது உங்களோட உரிமை. நான் ஏன் வேண்டாம்னு சொல்லப் போறேன்"



"அப்போ நாளைக்கு வர்றேன்"



"இப்போ கூட வரலாம். சரி மச்சான் என்ன பேசப் போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா" என்றாள் அவள் எதிர்பார்ப்புடன்.



"ம்ம் உன்னை எப்போத்தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்கன்னு கேக்கப் போறேன்" என்றான் அவள் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல்..



"அவங்க எல்லாரும் எப்பவோ ரெடிதான்... ஆனா சார் தான் கொஞ்ச நாள் வேலைக்கு போ... ஒரு வருசம் ஆகட்டும் அப்படின்னு பினாத்திட்டு இருந்தீங்க. மறந்துட்டீங்களா" என்றாள் அவள் வேண்டுமென்றே...



"அதையெல்லாம் விடு. நான் வந்து பேசவா" என்றான் சக்தி மீண்டும்.



"வந்து பேசுறதை விட்டுட்டு என்கிட்ட அனுமதி வேற கேக்குறீங்களா. நான் வேணாம்னு சொன்னா விட்டுருவீங்களா என்ன?"



"மாட்டேன்"



"அப்பறமென்ன வந்து உங்க மாமாகிட்ட பேசுங்க" என்றாள் அவள்.



"அதுக்கு முன்னாடி இந்த மாமன் கிட்ட பேச வேணாமா" என்றபடி மாரியப்பன் உள்ளே நுழைந்தார்.



"மாமா" என்று அகல்யா எழுந்து நிற்க



"என்னம்மா மருமகளே நான் சொல்லுறது சரிதான" என்றார் அவர்...



"நீங்க என்னைக்கு தப்பா பேசிருக்கீங்க மாமா... ஆனா நீங்க தான் எப்பவோ சம்மதம் சொல்லிட்டீங்கள்ல. இனி எதுக்கு உங்ககிட்ட எல்லாம் கேட்டுட்டு" என்றாள் அகல்யா.



"அது சரி என் தங்கச்சி மகளுக்கு பேச சொல்லியா தரணும்...சரிம்மா நேரமாச்சு நீ வீட்டுக்குப் போ..." என்றார் அவர்.



அவள் கிளம்பியதும் "என்ன சக்தி என்ன பிரச்சனை. திடீர்னு நீ கல்யாணத்தைப் பத்தி பேசுற. என்னதான் ஆச்சு" என்றார் மாரியப்பன்.



"அப்பா..."



"நேத்து ராத்திரி நீ கோவிலுக்கு போயிட்டு வந்ததுல இருந்து சரியில்லை. தூங்காம மாடியிலயே உலாத்திட்டு இருந்தன்னும் எனக்கு தெரியும்"



"அது ப்பா"



"ஏதா இருந்தாலும் சொல்லு சக்தி. என்னால முடிஞ்ச உதவியை நான் பண்ணுவேன்ல"



"இல்லைப்பா சீக்கிரமா அகல்யாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சு அதான்" என்றான் அவன்.



"இதைத்தான் நான் வைகாசி ஆரம்பத்துலயே கேட்டேன் அப்போ நீ என்ன சொன்ன இன்னும் ஒரு வருசம் ஆகட்டும் அதுவரைக்கும் அவ வேலைக்கு போகட்டும்னு சொன்ன. இப்போ இப்படிச் சொல்லுற. அப்போ அதுக்குன்னு காரணம் இல்லாமல் இருக்காது... சொல்லுப்பா என்ன காரணம்"



"அவளை என் கூடவே பாதுகாப்பா வச்சுக்கணும்னு தோணுது அப்பா..." என்றான் எங்கயோ பார்த்தபடி.



"என்ன சொல்லுற டா"



"ஏதோ நடக்குது ப்பா எனக்கே என்னென்னு புரியல. அதனால என்கிட்ட இதுக்கு மேல கேட்காதீங்க. நாளைக்கு மாமா வீட்டுல போய் பேசலாம்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான் அவன்.



எதையோ மறைக்கிறான் என்று யோசனையில் இருந்தவர் தன் மகனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு அகல்யாவின் வீட்டை அடைந்திருந்தார்.



"அண்ணா" என்றபடி துர்கா வேகமாக அவரை அழைத்துவந்து உள்ளே அமர வைத்தார். அகல்யாவுக்கும் சக்திக்குமான உறவை அந்த இரண்டு குடும்பமும் சேர்ந்து ஏற்கனவே உறுதிசெய்து வைத்திருந்தது. என்ன சக்தி மட்டும் ஓகே சொல்லியிருந்தாள் எப்பவோ திருமணம் நடந்து முடிந்திருக்கும்.



துர்காவிற்கு அவ்வளவு சந்தோசம் இந்த விசயத்தைப் பற்றி பேசுவதற்கு இப்பவாவது அண்ணன் வந்துச்சே என்று...



"இருங்க அண்ணா காஃபி எடுத்துட்டு வர்றேன்" என்றார்.



"அதெல்லாம் வேண்டாம் ம்மா மாப்பிள்ள எங்க"



"அவர் வெளிய போயிருந்தார் அண்ணா. வர்ற நேரம் தான்... இருங்க" என்றவர் காஃபியை கொண்டு வந்து மாரியப்பனிடம் நீட்ட அவரும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.



"நான் இரண்டு பேர் கல்யாண விசயமா பேசலாம்னு வந்தேன் ம்மா" என்றார் மாரியப்பன்.



"நீங்க வந்தபோதே நான் புரிஞ்சுக்கிட்டேன் அண்ணா. எனக்கு ரொம்ப சந்தோசம். ரொம்ப நாளா அகல்யா அப்பா வேற இதைப் பத்திதான் பேசிட்டே இருந்தார். ஆனா நம்ம சக்தி தான் முடிவா இன்னும் ஒரு வருசம் போகட்டும்னு சொல்லிடுச்சே. அதனாலயே இவ்வளவு நாள் தள்ளிப்போயிடுச்சு"



"இப்போ அவனே திடீர்னு கல்யாணம் பண்ணி வைங்கன்னு நிக்குறான்" என்று சொல்லும் போதே அகல்யாவின் அப்பாவும் வந்துவிட்டார்.



"மச்சான் வாங்க வாங்க" என்று அவர் சொல்லவிட்டு அருகே அமர "மாப்பிள்ள முக்கியமான விசயம் பேசணும்" என்றார் மாரியப்பன்.



"கல்யாண விசயம் தான மச்சான். நீங்க வந்து பேசணும்னு தான் இவ்வளவு நாளா காத்துட்டு இருந்தோம்"



"நாளைக்கு சக்தியோட வந்து முறைப்படி பேசுறேன். ஆனா அதுக்கு முன்னாடி நாம நம்ம பசங்களோட ஜாதகத்தைப் பாத்துடலாம்னு தான் வந்தேன். என்ன சொல்லுறீங்க மாப்பிள்ளை"



"வாஸ்தவம் நான் மச்சான். இது நம்ம பழக்கம் தான. துர்கா போய் பொண்ணு ஜாதகத்தை எடுத்துட்டு வா" என்றார் சாமிநாதன். அவள் உள்ளே சென்றுவிட



"நம்ம ரத்னா இப்போ போனாலும் பாத்து சொல்லிடுவான் நாம போயிட்டு வந்துடலாம் மாப்பிள்ளை. என்னதான் பையன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டாலும் நாம முறைப்படி நல்ல நேரம் நல்ல நாள் பாத்து வைக்குறதுதான நல்லது..." என்றார் மாரியப்பன்.



அதற்குள் துர்கா ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அங்கே வர அதை வாங்கிய சுவாமிநாதன் துர்காவிடம் சொல்லிவிட்டு தனது மச்சானுடன் ஜோசியர் வீட்டுக்குப் புறப்பட்டார்.



"ரத்னசாமி ரத்னசாமி" என்று வெளியே இருந்து மாரியப்பன் குரல் கொடுக்க வெளியே வந்து பார்த்த ஜோசியருக்கு வயது சக்தியை விட குறைவு தான்.



"அப்பா" என்று சாமிநாதனை அழைத்தவன் "வாங்க ஏன் வெளியவே நின்னுட்டு இருக்கீங்க மாமா நீங்களும் வாங்க" என்றான்.



இந்த ரத்னசாமி சிறுவயதில் இருந்தே அகல்யாவுடன் ஒன்றாக படித்தவன்... இருவரது நட்பும் வயது ஏறிய பின்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதனாலயே அவளின் அப்பாவை இவனும் அப்பா என்று அழைக்க பழகியிருந்தான். கூடவே சக்தியையும் சக்தியின் அப்பாவையும் மச்சான் மாமா என்றே தான் சொல்லுவான்..



உள்ளே வந்து அமர்ந்ததும் "எல்லாரும் எப்படி இருக்காங்க... முக்கியமா அகல்யா என்ன பண்ணுது ப்பா. வீட்டுக்கு வரணும்னு நினைக்கிறது. தோட்டத்துல வேலையே சரியாப் போயிடுது.. அவளும் வா வான்னு கூப்பிட்டு கிட்டே இருக்கா..."



"நல்லா இருக்கா ரத்னா. அவளைப் பத்தி தான் பேசலாம்னு வந்தோம்..."என்றார் சாமிநாதன்.



"என்ன விசேசம் அப்பா"



"இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணுறதுக்கு நாள் குறிச்சுட்டு போகலாம்னு தான் வந்திருக்கோம்" என்றார் மாரியப்பன்.

"மாமா கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களா.. சக்தி மச்சான் சரின்னு சொல்லிட்டாரா ஆச்சர்யமா இருக்கே. சரி குடுங்க ஜாதகத்தைப் பாக்கலாம்..." என்றவன் அதை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.



இருவரது ஜாதகத்தையும் வாங்கியவன் அதைப் பார்த்துவிட்டு "இப்போதைக்கு அடுத்த வாரம் புதன் கிழமை நாள் நல்லா இருக்கு. அப்போ நிச்சயம் மட்டும் பண்ணுங்க அப்பா. அடுத்து நான் கல்யாணத்துக்கு நாள் பாத்து சொல்லுறேன்" என்றான்.

"ஏன் ரத்னா அப்படி. கையோட கல்யாண தேதியையும் சொல்லிடலாமே" என்றார் சாமி நாதன்.



அவன் முகத்தில் வந்து போன மாறுதல்களை கணித்த மாரியப்பன் "சரி விடுங்க மாப்பிள்ளை மொத நிச்சயம் பண்ணிடுவோம். அடுத்து கல்யாணத்துக்கான நாளை நாம இன்னொரு நாள் வந்து சாவகாசமாக பேசிக்கிடலாம் என்ன மருமகனே" என்றார்.

"சரிதான் மாமா" என்று சொல்லி அவர்களை அனுப்பிய பின் கூட அவன் முகம் மாறவே இல்லை.



அமைதியாக நாற்காலியில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தான் ரத்னா. ஜாதகத்தை பார்த்த உடனே ஏன் எனக்கு வேற ஒரு முகம் தெரிஞ்சது. அது என் அவளை சுத்தி வருது. ஏதோ ஒன்னு தப்பா இருக்கே இப்போ என்ன பண்ணுவது என்று யோசித்தவன் முதலில் இதை சக்தியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து அவனுக்கு போன் பண்ணினான்...

"யோவ் மச்சான் உன்னை பாக்கணுமே" என்றான் எடுத்த எடுப்பிலேயே.

"தெரியும் டா நீ என்னை பாக்கணும்னு சொல்லுவன்னு அதான் உன் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். ஒரு ஐஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்" என்று சொல்லியவன் தனது பைக்கை மறுபடியும் கிளப்பிக் கொண்டு அவனது வீட்டை நோக்கி சென்றான்...

"டேய் ரத்னா" என்றபடி உள்ளே நுழைந்தவனைக் கண்டவன் திடுக்கிட்டு நின்றான்.

"மச்சி என்னாச்சு தலையில இரத்தம் வருது" என்று அவனது தலையைப் பார்த்தபடி பதற்றத்துடன் கேட்டான்.

"வர்ற வழியில பைக்குல இருந்து விழுந்துட்டேன். அத விடு என்னைப் பாக்கனும்னு நீ சொன்னயே அதுக்கு என்ன காரணம்னு சொல்லு..."

"சொல்லுறேன் அதுக்கு முன்னாடி நீ சொல்லு உண்மையிலே பைக்குல இருந்து நீயா கீழ விழுந்தயா" என்றான் ரத்னா.

"அது ரத்னா... "

"என்கிட்ட மறைக்குறதால உனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும்னு நீ நினைச்சா என்கிட்ட சொல்ல வேணாம் மச்சி"

"ஏய் என்ன டா கிறுக்குத்தனமா பேசுற... உன்கிட்ட சொல்லாம நான் யார்கிட்ட சொல்லப் போறேன்.. வரும் போது யாரோ திடீர்னு தள்ளிவிட்ட மாதிரி இருந்தது. அதுலதான் கீழ விழுந்துட்டேன் டா... "

"சரி வா ஹாஸ்பிட்டல் போயிட்டு வரலாம்"

"அதுக்கெல்லாம் டைம் இல்ல டா. நீ மொத என்னாச்சுன்னு சொல்லு"

"என்னென்னு சொல்ல மச்சி. அவ ஜாதகத்தை கையில எடுத்த உடனே வேற மூஞ்சு தான் அதுல தெரியுது. எந்த கிரகநிலையையும் அது பாக்கவிடலை. எனக்கே இது புரியாத புதிரா இருந்தது.
சரின்னு உன்னோடதை பார்த்தா அதுவும் அப்படித்தான். இரண்டு பேருக்கும் ஆபத்துன்னு மட்டும் தெரியுது. அதுவும் இல்லாம கல்யாணம் இப்போதைக்கு நடக்குமான்னு எனக்குத் தெரியலை மச்சி. பெரியவங்ககிட்ட இதை சொல்ல முடியாதுன்னு தான் நான் அடுத்த புதன்கிழமை நிச்சயம் மட்டும் வச்சுக்கோங்கன்னு சொன்னேன்" என்றான் அவன்.

"ரத்னா நேத்து நைட்டு அகல்யா அந்த ஆலமரத்துக்கிட்ட வந்தா டா... அங்க உக்காந்து அழுதுட்டு இருந்தா. ஆனா இன்னைக்கு அவகிட்ட பேசும் போது அப்படி ஒன்னு நடந்த மாதிரியே அவளுக்குத் தெரியலை. மறந்து போயிருந்தா. அதுகூட நல்லது தான். ஆனா அந்த ஆலமரத்துல இருந்து ஓர் உருவம் என்கிட்ட பேசுச்சு டா.." என்று நடந்தவற்றைச் சொல்ல ரத்னா யோசிக்கத் தொடங்கினான்.

"ஆலமரத்துக்கிட்டயும் மாரி குடியிருக்குறதா தான நம்ம ஊருக்குல பேசுவாங்க மச்சி" என்றான் ரத்னா.

"அதேதான் எனக்கும் குழப்பமாக இருக்கு"

"இது பத்தி யாருக்காவது தெரியுமான்னு பாக்கலாம் மச்சி. இப்போதைக்கு அகல் கிட்ட சொல்ல வேணாம். நாம பாத்துக்கலாம். மொத வா ஹாஸ்பிட்டல் போகலாம்" என்று ரத்னா சொல்ல அவனும் சரியென்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவனுடன் கிளம்பினான்.



மாரியப்பனின் மனம் முழுவதும் அப்போது சுற்றிலும் கவிழ்ந்திருந்த இருளே வியாபித்திருந்தது. திடீரென எந்தப்பக்கம் செல்வது என்று புரியாமல் இருப்பதைப் போல் இருந்த அந்த சூழ்நிலையை அவர் அறவே வெறுத்தார். மனம் இந்தமாதிரி சஞ்சலமடையும் நேரத்தில் அவர் தனது மனைவியின் சமாதியை தேடித் தான் செல்வார்.



இப்போது அவர் மனம் அடைந்திருந்த வெறுமை தன் மனைவியிடம் பேசிவிட்டு வந்தால் ஆறுதல் அடையும் என்பதால் வீட்டைவிட்டு கிளம்பினார்.



ஒரு ஆறுதலுக்கு தான் ஜாதகம் பார்க்கலாம் என்று முடிவெடுத்து ரத்னாவிடம் சென்றது. ஆனால் அவன் முகம் மாறியதைப் பார்க்கும் போது விசயம் பெரிது என்று அவருக்குத் தோன்றியது.



தார்ச்சாலையில் இருந்து பிரிந்து சென்ற அந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினார்.



வழியெங்கும் மலர்கள் வீசியெறியப்பட்டிருந்தது. அந்த மலர்கள் மேல் காலை வைக்காமல் ஒரு ஓரமாக நடந்து கொண்டிருந்தார் மாரியப்பன். இன்று வடக்குத் தெருவில் ஒரு கேதம். அந்த பிணத்தைச் சற்று முன்னர் தான் அந்த சுடுகாட்டுக்கு தூக்கி வந்து எரித்திருந்தனர்.... அதுதான் வழியெங்கும் இவ்வளவு மலர்கள்... இப்போது ஆட்கள் யாரும் இல்லை என்றாலும் அந்த சிதை மட்டும் அந்த இரவில் எரிந்து கொண்டிருந்தது.



மனதுக்குள் இதுவரை இல்லாத பயம் இப்போது முளைவிட்டிருந்தது மாரியப்பனுக்கு. இருந்தும் அங்கே ஒரு மூலையில் இருந்த தனது மனைவியின் சமாதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். காற்றில் சிதை எரியும் வாசம் கலந்து அவரை வந்து தாக்கியது. மெதுவாக திரும்பி அந்தப்பக்கம் பார்த்தார். இருளில் கசிந்து வந்த அந்த ஒற்றையடிப் பாதையில் போட்டிருந்த தெருவிளக்கில் ஒளியில் அந்தப் பக்கம் இருந்த அத்தனையும் தெரிந்தது. அந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் இருந்த பிணத்தை சாம்பலாக்க முயற்சி செய்து கொண்டிருந்தது...



இப்படி எரிந்து சாம்பலாக மாறப் போகும் பிறப்பு தான் அனைவரது பிறப்பும். ஆனால் அது புரியாமல் நாம் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுகிறோம். ஆடி முடித்த பின் அடங்கி ஒடுங்கி அமர வேண்டிய இடம் இதுதான் அல்லவா என்று நினைத்துக் கொண்டே தனது பார்வையை சுழற்றினார் மாரியப்பன்.



கூடவே அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த மேடுகள் அனைத்தும் புலப்பட்டது...



நடந்து சென்றவர் சமாதியின் அருகே நின்றார். சக்திக்கு ஆறு வயதாக இருக்கும் போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் வேலம்மாள் பிரிந்து விட்டார். இந்த சமாதி கூட மாரியப்பன் கட்டியது தான்...



அன்றிலிருந்து சக்தியை வளர்ப்பதிலே அவர் கவனம் இருந்தது. இடையிடையே இப்படி வந்து மனைவியை பார்த்துவிட்டு போவார். இன்று சக்தியின் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாற்றமே அவரை இங்கே அழைத்து வந்திருந்தது.



அங்கே அமர்ந்தவர் அப்படியே அந்த சமாதியின் மேல் சாய்ந்தார். மனைவியை நினைத்த உடனே அவரது விழிகளில் ஈரம் கசிந்தது... இவர் இங்கே இருக்க அந்த ஆலமரம் இருந்த இடத்தில் சட்டென்று விழுதுகள் எல்லாம் ஆடத் தொடங்கியது.



அங்கே அப்படி ஆடிய போது இங்கே ஒடுங்கி சிதையில் படுத்து வெந்து கொண்டிருந்த அந்த பிணம் சட்டென்று எழுந்து அமர்ந்தது....




அமிழ்ந்தது மீளுமா....



தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுவதற்கான திரி

Thread 'அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments' https://www.sahaptham.com/community/threads/அகலில்-அமிழ்ந்த-ஆன்மா-comments.440/
 
Last edited:
அத்தியாயம் நான்கு

தனக்கு பின்னால் நடப்பவை பற்றி அறியாமல் மாரியப்பன் அவரின் மனைவியின் சமாதியிலே அமர்ந்திருந்தார். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சுற்றிக் கொண்டே இருந்தது.

"வேலம்மா திடீர்னு என்ன இன்னைக்கு வந்துருக்கேன்னு பாக்குறயா.. இன்னைக்கு நடந்த விசயம் அப்படி... உன் பையன் வித்தியாசமா நடத்துகிறான். ஏதோ பிரச்சனைன்னு புரியது. ஆனா அவன் அதை என்கிட்ட சொல்ல மாட்றான். நீதான் அவன் கூடவே இருந்து எந்த ஆபத்து வந்தாலும் அவனை அண்ட விடாம பாதுகாக்கணும்" என்று மானசீகமாக மனைவியுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் போதே பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தார் மாரியப்பன்.


ரத்னா சக்தியை அந்த ஊரில் இருந்த டாக்டரிடம் கூட்டிச் சென்றான். தலையில் இருந்து வந்த இரத்தம் இன்னும் நிற்கவில்லை. அதற்கு மருந்திட்டு கட்டி முடித்து வெளியே வர சக்திக்கு என்னவோ போல் இருந்தது.

உடனே அவன் ரத்னாவிடம் "நீ வீட்டுக்குப் போ ரத்னா.. நான் வர்றேன்" என்றான்.

"ஏன் என்னாச்சு மச்சி"

"நீ போ நான் அப்பறமா சொல்லுறேன்"

"யோவ் மச்சி ஆபத்து உன்னை சுத்தி இருக்கு.. இந்த நேரத்துல உன்னை தனியா அனுப்பிட்டு நான் மட்டும் வீட்டுக்குப் போகவா. அதெல்லாம் முடியாது. நான் உன்கூடதான் வருவேன் இல்லைன்னா நான் இதை அகல்கிட்ட சொல்லிடுவேன்" என்றான் ரத்னா.

"வந்து தொலை" என்று சொன்னவன் அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடினான்.

சக்தி அடிவாங்கியும் நீ திருந்த மாட்ட போலயே என்று எண்ணியபடி அந்த ஆலமரத்தின் விழுதுகள் ஆட்டம் போட்டபடியே இவன் மேல் பார்வையை பதித்தபடி இருந்தது.


பார்த்த விழிகள் அப்படியே நேர்குத்தி இருக்க மாரியப்பன் முகத்தில் அதிர்ச்சி பரவியது. நெருப்பில் பாதி உடல் வெந்திருக்க கண்முழி காணாமல் போன மூஞ்சோடு வந்து நின்ற அந்த பிணத்தை கண்டு இதயம் தனது துடிப்பை நிறுத்தாமல் இருந்ததே அதிசயம் தான் மாரியப்பனுக்கு...

ஆத்தா மாரியம்மா இது என்ன சோதனை... என்று அவசர அவசரமாக மாரியம்மனை தன் துணைக்கு அழைத்தார் மாரியப்பன்...

"மாரியப்பா" என்ற அந்த பிணம் அவரை பேர் சொல்லி அழைக்க பயம் நிறைந்த விழிகளுடன் ஏறிட்டு பார்த்தார் அவர்.

"உன் பையன் தேவையில்லாத வேலையில தலையிடுறான் அவன் அமைதியா இருந்தா யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. அதனால அவனை அமைதியா இருக்கச் சொல்லு.. இல்லைன்னா அந்த பொண்ணோட சேர்ந்து உன் மவனும் புதைஞ்சு தான் போவான். கூடிய சீக்கிரம் அவனுக்கும் உன் பொண்டாட்டி பக்கத்துல நீ சமாதி கட்ட வேண்டி வரப் போகுது..." என்று கத்தியபடி அப்படியே அவரை உறுத்து விழித்தது...


அதில் பயந்து உடல் முழுவதும் அவருக்கு சில்லிட்டு போனது. இருந்தாலும் பயத்தை வெளியே காட்டாமல்
"என் பையன் எப்பவும் அநாவசியமான வேலையில தலையிட மாட்டான் அத்தியாவசியமான விசயத்துல தான் தலையிடுவான். தலையிட்டதுக்காக தலை போகுதுன்னா அதுக்காக அவனும் சரி நானும் சரி கவலையேப் படமாட்டோம்" என்றார் மாரியப்பன் சற்று தைரியமான குரலில்...


அத்தனை உணர்வையும் இழந்திருந்த அந்த பிணத்துக்கு மாரியப்பன் பேசியதைக் கேட்டதும் கோபம் காட்டாற்று வெள்ளம் போல் கரையை கடந்து வந்தது... அதில் அந்த வெந்து போன உடலில் இருந்து நெருப்பாய் பெருமூச்சு வந்து கொண்டிருந்தது.


அதே கோபத்துடன் அவரை நோக்கி நெருங்கி வந்து தனது பாதி வெந்திருந்த கையை மாரியப்பனின் கழுத்தை நோக்கி நீட்டியது... நீட்டிய கரம் கழுத்தைப் போட்டு இறுக்க மாரியப்பனின் மூச்சு தடைபட்டது. தனது கரத்தால் அந்த கரத்தை தடுக்க அவர் முயற்சி செய்து கொண்டிருக்க அவரால் முடியவே இல்லை..


கழுத்தை இன்னும் அதிகமாக அந்த உருவம் அழுத்த இப்போது அதன் கரத்தில் வேறோரு கரம் படிந்தது. ஏற்கனவே நெருப்பில் இருந்து தப்பித்து வந்த அந்த உடல் இப்போது அந்த கரத்தின் தீண்டலினால் மீண்டும் நெருப்பில் மூழ்கியதைப் போன்ற எரிச்சலை அடைந்திருந்தது.


உடனே யாரது என்பதை போல் அந்த உடல் மேலே ஏறிட்டுப் பார்க்க மாரியப்பனுக்கு பின்புறம் இருந்து திடீரென ஒளிவெள்ளம் பாய்ந்தது. அந்த ஒளி மேலே பட்டதில் இன்னும் இன்னும் உடல் தகிக்க தொடங்கிவிட்டது அந்த உருவத்திற்கு...


வேண்டாம் என்ற அலறலுடன் அந்த உருவம் தனது கரத்தை மாரியப்பனின் கழுத்தில் இருந்து எடுத்துவிட்டது... அப்படியே மாரியப்பன் மயங்கி அந்த இடத்திலே விழுந்து விட்டார்.

அலறிய அந்த உருவமும் அப்படியே பின்னால் நடக்க மெதுமெதுவாக அந்த ஒளியிலிருந்து ஓர் உருவம் தோன்றியது.

"என்னோட குடும்பத்துக்கு காவலா நான் இருக்குற வரை யாராலும் எதுவும் பண்ண முடியாது..." என்று சொன்ன வேலம்மா அப்படியே அந்த உருவத்தைக் தூக்கி அந்த சிதையிலே எறிந்தாள். ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த சிதை இன்னும் கோர தாண்டவத்தோடு அதிகமாக எரிய ஆரம்பித்தது..
அடங்கிய உயிர் கொண்ட அந்த உடல் அப்படியே எரிந்து சாம்பலாய் மாறிவிட்டது...


உடனே திரும்பிய வேலம்மாள் மாரியப்பனைப் பார்த்து "நீங்க கவலைப் பட வேண்டாம் நான் இருக்கேன் உங்க யாருக்கும் எதுவும் நடக்க நான் விட மாட்டேன்" என்று அவரது நெற்றியை வருடிவிட்டு அப்படியே மறைந்து போய்விட்டார்.


"ரத்னா சீக்கிரமா வாடா" என்று அழைத்துக் கொண்டு வேகமாக ஓடினான் சக்தி.

அவனுடன் இணைந்து ரத்னாவும் ஓட இருவரும் சுடுகாட்டை நெருங்கியிருந்தார்கள்.

சுடுகாட்டுக்குள்ளே நுழைந்தவன் தன் அப்பா அங்கே மயங்கி கிடந்ததை கண்டு வேகமாக அவரது தலையை தூக்கி தன் மடியில் கிடத்திக் கொண்டு அப்பா என்று அவரின் கண்ணத்தை தட்டி எழுப்பினான்.

அவனின் கதறலில் கண்ணை திறந்தவர் மெதுவாக தன் இதழ்களை அசைத்து "வேலம்மா" என்று முணங்கினார். பார்வை அந்த இடம் முழுவதும் சுழன்றது.

"அப்பா என்னாச்சு ப்பா" என்று கேட்க அவருக்கு அருகே வேலம்மாவின் குரல் அந்த நிசப்தத்தை மீறி சத்தமாக ஒலித்தது.

"அவன்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். இப்போ வீட்டுக்கு கிளம்பி போங்க எல்லாரும்" என்று வேலம்மா சொன்னதும் எழுந்து நின்றார் மாரியப்பன்.

"இது என்ன டா காயம்" என்று அவர் கேட்க

"அது ஒன்னும் இல்ல நீங்க சொல்லுங்க" என்றான் சக்தி.

"மொத இங்க இருக்க வேண்டாம் சக்தி வாங்க நாம வீட்டுக்குப் போகலாம்" என்று இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகன்றார்.

வீட்டுக்கு வந்த பிறகும் அமைதியாக இருந்தவரை கண்டு சக்தி "அப்பா அப்போ இருந்து நான் கேள்வி கேட்டுட்டே இருக்கேன்.. நீங்க பதிலே பேசமா உக்காந்துருக்கீங்க.சொல்லுங்க அப்பா என்னாச்சு. நீங்க அம்மாவை பாக்கப் போவீங்கன்னு தெரியும். ஆனா ஏன் அங்க மயங்கி கிடந்தீங்க" என்று கேட்க

"நீ நடந்ததை முதல்ல என்கிட்ட சொன்னயா டா. நீ மட்டும் எதுவுமே சொல்ல மாட்டுற.ஆனா நான் நீ கேட்ட உடனே எல்லாத்தையும் சொல்லணுமா" என்றார் அவர்.

"அப்பா நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க"

"அட இரு மச்சி" என்று சொன்ன ரத்னா "மாமா உங்களுக்கு நேத்து என்ன நடந்ததுன்னு தெரியணும் அவ்வளவு தான நான் சொல்லுறேன்" என்று நடந்ததை அவரிடம் சொல்லத் தொடங்கினான்.

அதைக் கேட்டவரின் மனதில் பல குழப்பம் ஏற்பட்டது. அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று அவருக்குள் பலத்த சந்தேகம் வந்துவிட்டது.

"அப்பா அதான் அவன் சொல்லிட்டான்ல நீங்க சொல்லுங்க என்ன நடந்ததுன்னு" என்றான் சக்தி மீண்டும்.

"மனசு ஒரு நிலையில இல்ல.. அதான் நான் அம்மாவை பாத்துட்டு வரலாம்னு போனேன். ஆனா பின்னாடி அந்த பிணம் திடீர்னு வந்து நிக்கும்னு எனக்குத் தெரியாது சக்தி. அதுவும் உன் பையன ஒழுங்கா இருக்கச் சொல்லு இல்லைன்னா அவனோடு உயிர் போயிடும்னு சொல்லிச்சு டா" என்றார் மாரியப்பன்.

"யோவ் மச்சி இப்ப என்னதான் பண்ணுறது"

"அதுதான் எனக்குப் புரியலை டா.. அந்த ஆலமரத்துக்குள்ள என்ன இருக்குன்னு மொத கண்டுபிடிக்கனும். அப்போத்தான் அது ஏன் அகல்யாவை சுத்தி சுத்தி வருதுன்னு கண்டுபிடிக்க முடியும்..." என்று சக்தி சொல்ல

"எல்லாம் காலையில பேசிக்கலாம் சக்தி மொத போய் தூங்குங்க. ரத்னா நீயும் உள்ள போ.. இங்கயே தூங்கு" என்றார் மாரியப்பன்.

அவர் சொல்லிவிட்டு திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டார். ஆலமரத்துல ஏதோ இருக்குன்னு சொல்லுறானுங்க. ஆனா இரண்டு நாளைக்கு முன்னாடி ஆலமரத்தை அங்க இருந்து அப்புறப்படுத்திட்டு அந்த இடத்தையும் சுத்தி காம்பவுண்ட் சுவர் எழுப்பலாம்னு ஊர் பெரியவர் சொன்னாரே. அவர் சொல்லுற மாதிரி அந்த ஆலமரத்தை அங்க இருந்து எடுத்தா பெரிய பிரச்சனை வரும் போலவே. இப்போ என்ன பண்ணுறது ஒன்னுமே புரியலையே என்று யோசிக்க தொடங்க

"நீங்க எதை நினைச்சும் பயப்பட வேண்டாம் இப்போ நிம்மதியா தூங்குங்க நான் பாத்துக்கிறேன்" என்று வேலம்மாளின் குரல் காதுக்கு மிக அருகில் மென்மையாக ஒலிக்க அப்படியே அந்த குரல் தந்த நம்பிக்கையில் உறங்கியும் போய்விட்டார் மாரியப்பன்.

வெளியே படுத்திருந்தவர் உறங்கிவிட உறக்கம் பிடிக்காமல் அங்கேயே நடைபயின்று கொண்டிருந்தான் சக்தி. ரத்னா கூட படுத்த உடன் உறங்கிவிட்டான். ஆனால் சக்திக்கு தான் உறக்கமே வரவில்லை. தலையில் பட்டிருந்த காயம் வேறு அவனுக்கு வலிக்க ஆரம்பித்தது. அந்த வலியையும் மீறி அகல்யாவின் ஞாபகமே அவன் சிந்தை முழுவதும் இருந்தது. என்ன செய்யலாம் என்று அவன் மூளை ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்க அந்த நேரத்தில் அவனின் போன் அடித்தது. இந்த நேரத்துல அகல் ஏன் கூப்பிடுறா என்று நினைத்தவன் வேகமாக போனை எடுத்தான்...

"என்னாச்சு அகல் எதுவும் பிரச்சனையா"

"பிரச்சனையா அப்படி எல்லாம் இல்ல சக்தி. சும்மா உன்கிட்ட பேசிட்டு இருக்கலாம்னு தோணுச்சு அதான் கூப்பிட்டேன்"

"அப்படியா அப்போ பேசு" என்றவன் அதன்பின்னரே அமைதியானான்.

"வீட்டுல அப்பா அம்மா இரண்டு பேருக்கும் பயங்கர சந்தோசம் சக்தி" என்றாள் அகல்யா.

"அப்போ உனக்கு சந்தோசமா இல்லையா"

"இல்லை சக்தி"

"ஏய் என்ன சொல்லுற அகல்" என்றான் அவன் அதிர்ச்சியாக.

"நீ சந்தோசமா நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசலை. ஏதோ நிர்பந்ததால தான் இப்படி நடந்துக்குற அப்படின்னு எனக்குப் புரியுது சக்தி. அப்பறம் எப்படி என்னால் சந்தோசமாக இருக்க முடியும்"

"பித்து பிடிச்சவங்க மாதிரி எதையாவது உளறாத அகல்"

"அப்போ உன்னோட மனசாட்சியை தொட்டு உண்மையை சொல்லு பாக்கலாம்"

"என்ன உண்மை சொல்லனும்"

"நீ சந்தோசமா தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டயான்னு தான்"

"ஏன் என்னோட காதல் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா"

"அது இருக்கு நிறைய சக்தி. ஆனா..."

"இந்த இழுக்குற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் அகல். நம்பிக்கை இருக்குன்னு சொல்லிட்ட தான. அது போதும் எனக்கு"

"சரி விடு நான் எதுவும் கேக்கலை. ஆனா ஸ்கூல் போகணுமே இப்போ உடனே ரிலீவ் லெட்டர் அக்செப்ட் பண்ண மாட்டாங்களே என்ன பண்ணுறது" என்றாள் அகல்யா.

"நீ ஏன் ரிசைன் பண்ணனும்"

"கல்யாணம் நடந்தபிறகு எப்படி ஸ்கூல் போக"

"அதெல்லாம் நீ உன்னோட வேலையை பாரு. நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். அதனால ரிசைன் பண்ணனும்கிற யோசனையை விட்டுடு" என்று அவன் சொல்ல ஆ... ம்மா என்று அவளின் அலறல் அவன் காதில் கேட்டது.

"ஏய் அகல் அகல்... அகல்யா.. என்னாச்சு" என்று இவன் பதற்றத்துடன் கத்த

"யாரோ முன்னாடி வந்து நின்னது மாதிரி இருந்தது டக்குன்னு பயந்துட்டேன் டா சக்தி" என்றாள் அகல்யா.
அவளது குரலில் நடுக்கம் தான் விரவியிருந்தது.

உடனே அவன் "நான் வரவா வீட்டுக்கு" என்றான்.


"இந்த நேரத்துலயா... அதெல்லாம் வேண்டாம் இது என்னோட பிரம்மை. இப்போ பயம் இல்ல" என்றாள் அகல்யா.


"இருக்கட்டும் எனக்கு இப்போ உன்னை பாக்கணும் போல இருக்கு நான் வீட்டுக்கு பின்னாடி வந்து நிக்குறேன் நீயும் அங்க வந்துடு" என்றான் சக்தி.

"சரி வா" என்று அவள் சொல்லிவிட்டு போனை வைக்க அவன் வேகமாக வீட்டில் இருந்து வெளியேறியிருந்தான்.
வீட்டின் பின்புறம் சென்று நின்றவன் அகல்யாவிற்காக காத்திருக்கத் தொடங்கினான்.


நிமிடங்கள் கரைய அவளும் வந்து சேர்ந்தாள். "ஏய் அங்க இருந்து நானே வந்துட்டேன் நீ மாடியில இருந்து இங்க வர்றதுக்கு இவ்வளவு நேரமா" எனக் கேட்டான்.

"அதுதான் வந்துட்டேன்ல சக்தி..." என்றாள் அவள்...

இருவரும் பேசிக் கொண்டே இருக்கையில் சக்தியின் மனதுக்குள் அபாய மணி அடிக்க ஆரம்பித்துவிட்டது... என்னவோ போல் இருந்த அவன் முகத்தைக் கண்ட அகல்யா "சக்தி உனக்கு என்னாச்சு ஏன் இப்படி முகம் மாறுது" என்றாள்.


"அகல் ஏதோ நடக்கப் போகுதுன்னு மனம் கிடந்து அடிச்சுக்குது"

"அதெல்லாம் ஒன்னும் நடக்காது. சரி வாங்க நாம கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்" என்று அகல்யா அழைக்க அவனும் அவளுடன் இணைந்து அந்த தெருவில் நடக்க ஆரம்பித்தான்.


அந்த தெருவை தாண்டி அகல்யா நடக்க வேகமாக சக்தி "போதும் நாம வீட்டுக்குப் போகலாம்" என்றான்.


"இன்னும் கொஞ்ச தூரம் சக்தி... நாம போயிட்டு உடனே திரும்பிடலாம். இந்த நேரத்துல இப்படி நாம நடக்குறது நல்லா இருக்குல்ல" என்று அவள் சொல்ல அவனும் அவளது கையைப் பிடித்துக் கொண்டு அவள் பின்னாலே நடக்க ஆரம்பித்தான்.

பாதித் தூரம் கடந்த பின் அங்கிருந்த ரத்னாவின் தோட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றாள் அகல்யா.

"ஏய் அகல் இங்க எதுக்கு நாம போகணும். வா காலையில போகலாம்"

"இது என்னோட ஆசை சக்தி. உன் கூட இங்க வரணும் இங்க நல்லா சுத்தி பாக்கணும் அப்படின்னு ரொம்ப நாளா நான் நினைச்சுட்டு இருந்தேன். வாங்க போகலாம்" என்று அவள் இழுக்க அவனும் அப்போது மறுபேச்சு பேசாமல் உள்ளே நுழைந்தான்...

சரியாக அப்போது ரத்னாவை யாரோ பலமாக உலுக்க கண்ணைத் திறந்தவன் எதிரே இருந்த அகல்யாவைப் பார்த்து
"ஏய் பக்கி நீ எங்க இங்க" என்றான் கண்ணைத் துடைத்தபடி...

"அது இருக்கட்டும் எங்க சக்தி"

"இங்கதான படுத்திருந்தான்"

"நல்லா இருக்குடா. இதுதான் நீ அவன்கூட இருந்த லட்சணமா. அவன் இப்போ வரைக்கும் என்கூட போன் பேசிட்டு தான் இருந்தான். என்னைப் பாக்க வர்றேன்னு சொல்லி பின்னாடி வரச் சொன்னான். நானும் வந்து ரொம்ப நேரமா நின்னேன் ஆனா அவனை காணோம். அதான் வீட்டுக்கு வந்தேன்" என்றாள் அவள்.


"அதுக்குன்னு இந்த நேரத்துல வருவயா" என்று சொன்னவன் சக்தியை தேடத் தொடங்கினான்.

"வீடு முழுவதும் பாத்தாச்சு அவனைக் காணோம் அகல்" என்றான் ரத்னா..

"எங்கடா போயிருப்பான்" என்று அவள் பதட்டத்துடன் கேக்க..

"அதுதான் தெரியலை நீ வீட்டுலயே இரு நான் போய் அவனை பாத்துட்டு வர்றேன்" என்றான் அவன்.

"நானும் வர்றேன்"

"நீ வர வேண்டாம் போ அகல்யா" என்றான் ரத்னா.

"நானும் வருவேன்" என்றவள் அவனுடனே நடக்க அதற்குள் எழுந்த மாரியப்பன் அகல்யாவைப் பார்த்து "நீங்க இரண்டு பேரும் உள்ளே போங்க நான் போய் அவனை கூட்டிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விரைந்தார்.

சற்று நேரத்தில் சக்தியுடன் அவர் வந்துவிட அகல்யாவும் அந்த நேரத்தில் எதுவும் பேசாமல் வீட்டுக்கு ரத்னாவின் உதவியுடன் சென்று விட்டாள்..


காலையில் எழும் போதே டட்...டட்...டட் என்ற ஒலி காதை கிழித்தது அகல்யாவிற்கு. கூடவே "இதனால் சகலமானவர்களுக்கு சொல்லுறது என்னென்னா மாரியம்மன் கோவில் கட்டும் விசயத்துல அந்த கோவிலுக்கு இடைஞ்சலா இருக்குற ஆலமரத்தை எடுக்கலாமா வேண்டாமா அப்படின்னு பேசி முடிவு எடுக்குறதுக்காக இன்னைக்கு ஆறுமணிக்கு கோவில்ல கூட்டம் இருக்கு... ஊர் மக்கள் எல்லாம் அங்க வந்துருங்க" என்று சாட்டுபவரின் குரல் கேட்டது.


டட்‌..டட்...டட்‌.. என்று அந்த ஒலி தேய்ந்து மறைந்துவிட அதைக் கேட்டதில் அகல்யாவின் இருதயம் பயத்தில் அந்த ஒலியாய் துடிக்க ஆரம்பித்து விட்டது...


அமிழ்ந்தது மீளுமா....

கருத்துக்கான திரி....👇👇👇
Thread 'அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments' https://www.sahaptham.com/community/threads/அகலில்-அமிழ்ந்த-ஆன்மா-comments.440/
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom