Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed எல்லையில் ஒரு எத்தன்

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 11



ஆதித்தனை கைதியாக கயிற்றால் பிணைத்து கட்டியபடி குதிரையின் பின்னால் நடக்க வைத்தபடி சோதனை சாவடியை நெருங்கினான் எதிர்காலம்.



ஏற்கனவே இளவரசர் அபயவர்மருடன் இதே வழியில் இரண்டு முறை பயணம் செய்திருந்ததால் அங்கிருந்த காவல் வீரர்களுக்கும், சோதனை சாவடியின் தலைவனுக்கும் வெகு பரிச்சயமான நபராக எதிர்காலம் அறிமுகமாகிமாகியிருந்தான். தன் அறையின் சன்னல் வழியாக வெளியே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த சோதனை சாவடியின் பொறுப்பதிகாரி தன் பருத்த உடலை சுமந்து கொண்டு ஓடி வந்து முகமன் கூறினான்.



" வாருங்கள். மெய் காவல் படை தலைவரே! என்ன இந்த பக்கம் தனியாக வந்திருக்கிறீர்கள்? இளவரசரும் மன்னரும் நலமா?" என்று கேட்டு தன் ராஜ விசுவாசத்தை காட்டினான்.



"அனைவரும் நலம். நான் தனியாக வரவில்லை தலைவரே! இதோ இந்த கள்வனுடன் துவந்த யுத்தம் புரிந்து அவனை கைதியாக பிடித்து வந்திருக்கிறேன்” என்றான் எதிர்காலம் பெருமிதத்துடன் .



"இவன்?" என்று ஆதித்தனை கேள்விக்குறியுடன் பார்த்தான் தலைவன்.



"ஆதித்தன் - நேற்று நம் மன்னரிடம் அதிகப் பிரசங்கித்தனமாக பேசி அதிகாலைக்குள் சிறையிலிருந்து தப்பி செல்வதாக சவால் விட்டவன். இவனை பிடிக்க சொல்லி மன்னர் அனுப்பிய ஓலை இன்னுமா உமக்கு வந்து சேரவில்லை?”



"ஓ! அந்த கள்வன் இவன் தானா? மன்னர் அனுப்பி வைத்த ஓலை காலையிலேயே வந்து விட்டது.இவன் இந்தப் பக்கம் வந்தால் பிடிப்பதற்காகத்தான் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்கிறேன்.” என்றான் தலைவன்.



"எமகாதகன் இவன். இவனை தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வங்கி லிருக்கும் எலியைப் போல் பல வழிகளில் என்னை வீழ்த்தி விட்டு ஓடப் பார்த்தான்.

இறுதியில் என்னிடம் அகப்பட்டுக் கொண்டான்.”



"ஓடுபவனுக்கு பல வழி. துரத்துபவனுக்கு ஒரே வழி என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது உண்மை தான் போல.”



" ஆனால் கடம்ப நாட்டிடம் இவனது திறமை செல்லுபடியாகவில்லை. பரிதாபமாக பிடிபட்டு விட்டான்.இவனது அகம்பாவத்திற்கு தண்டனையாக இவனை கால்நடையாக கட்டி இழுத்து வந்திருக்கிறேன். இவனை இங்கே ஆப்படைத்து விட்டு நான் எல்லைப்புறத்திற்கு இளவரசரை காண செல்ல வேண்டும்” என்றான் எதிர்காலம்.



"அதற்கென்ன? இவனை எங்களிடம் விட்டு விட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள். பயலை நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் தலைவன்.



"இவன் அதிகம் பேசுவான்”



" பேசவே முடியாதபடி செய்து விடுகிறேன். கவலையை விடுங்கள்." என்ற தலைவன் ஆதித்தனை நெருங்கி பயங்கரமாக முறைத்தான் -



"உமது பார்வையை கண்டு எனக்கு பயமாக இருக்கிறது. தயவு செய்து என்னை அப்படி பார்த்து பயமுறுத்தாதீர்கள்" என்றான் ஆதித்தன் பயப்படுவது போல் நடித்த படி.



"பார்த்தீர்களா? என் பார்வையை கண்டே ப யல் பயந்து விட்டான். இன்னும் என் கையால் அடி வாங்கினால் இவனது நிலைமை என்னாவது?" என்றான் தன் மீசையை முறுக்கியபடி.



"அய்யா எதிர்காலம் ! என்னை தயவு செய்து இவரிடம் ஒப்படைத்து விட்டு போய் விடாதீர்கள். இவரைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கிறது." என்று இறைஞ்சினான் ஆதித்தன்.



அதே நேரம் புதரில் கிடந்த துணி தீப்பிடித்து எரியத் துவங்கியது. புதரில் பற்றிய தீ மெல்ல காய்ந்து கிடந்த கோரை புற்களில் படர்ந்து முன்னேற ஆரம்பித்தது. சோதனை சாவடிக்கு வெளியே நின்றிருந்த இரு காவலர்களில் ஓருவன் அதைப் பார்த்து விட்டு "அதோ!அங்கே பார்!திடிரென அந்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது “ என்றான். இருவரும் உள்ளே நுழைந்து தலைவனின் உரையாடலில் குறுக்கிட்டனர்.



" என்ன? எதற்காக இங்கே ஓடி வருகிறீர்கள்?”



"வெளியே கோரைப் புற்கள் திடிரென தீப்பிடித்து எரிகின்றன.”



"திடிரென தீப்பிடித்து எரிகிறதா?" என்று சந்தேக கண்களுடன் ஆதித்தனைப் பார்த்தவன் "இங்கே தீயை அணைக்க போதுமான அளவு தண்ணீர் இல்லையே?" என்றான்.



"தண்ணீர் இல்லாவிட்டால் என்ன?கோரைப் புற்களையே பிடுங்கி பரவி வரும் நெருப்பை அணைத்து விடலாமே?" என்ற ஆதித்தனை முறைத்த தலைவன் "சரி. சரி. இவன் சொன்னதை செய்து தொலையுங்கள். போதுமான ஆட்களை கூட்டிச் செல்லுங்கள்" என்றான்.



சற்று நேத்தில் த ப த ப வென ஒரு கூட்டம் தீப்பிடித்த இடத்தை நோக்கி கூச்சலிட்டபடி ஓடியது.



" இப்படி நீ யோசனை கூறியதால் நான் உன் மீது கருணை காட்டுவேன் என்று நம்பி விடாதே" என்றான் தலைவன் முறைப்புடன்.



'உங்களின் கருணை எனக்கு தேவையேயில்லை" என்ற ஆதித்தன் மின்னல் வேகத்தில் தன் கைகட்டை அவிழ்த்துக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி பாய்ந்தான். தலைவன் கண்ணை மூடி திறக்கும் நேரத்தில் எதிர்காலத்தின் கழுத்தில் தன் கு றுவாளை வைத்திருந்தான் ஆதித்தன்.



" உன் இளவரசரின்ஆப் த நண்பன் இப்போது என் வாள்முனையில் . இப்போது என்ன செய்வதாக உத்தேசம். நான் சொல்வதை கேட்டு நடப்பதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை" என்றான் ஆதித்தன்.



எதிர்பாராது நடந்த இந்த செயலால் கல்லாய் சமைந்து நின்றான் தலைவன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 12



கதிரவன் மேற்கே மறைந்து கொண்டிருந்த போது ஆதித்தனும், எதிர்காலமும் எல்லைப் புற சாலையில் குதிரைகளை விரட்டிக் கொண்டிருந்தனர். பின்புறமாக திரும்பி பார்த்த ஆதித்தன் "போதும் நண்பா! குதிரைகளின் வேகத்தை குறை. சோதனை சாவடியிலிருந்து யாரும் நம்மை பின் தொடர்ந்து வரவில்லை. இனி நாம் மெதுவாகவே நம் பயணத்தை தொடரலாம்" என்றான்.



"நீ சோதனை சாவடியின் தலைவனின் கழுத்தில் வாளை வைக்காமல் என் கழுத்தில் ஏன் கத்தியை வைத்தாய் ? உன் செயலால் நான் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன்" என்றான் எதிர்காலம்.



" உன் கழுத்தில் நான் கத்தியை வைக்க தகுந்த காரணங்கள் உண்டு நண்பா.!அரசாங்க இயந்திரம் தன்னிச்சையாக இயங்கும் வல்லமையற்றது. அது யாராவது ஆணையிட்டால் அவர்களின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் இயல்பு கொண்டது. சோதனை சாவடியின் கட்டளை அதிகாரி அதன் தலைவன். அவன் கழுத்தில் கத்தியை வைத்து நான் கடத்தி வந்திருந்தால் கண்டிப்பாக அவனை மீட்டுப் போக வீரர்கள் நம்மைப் பின் தொடர்ந்து வந்திருப்பார்கள். அந்த தொல்லையை உன் கழுத்தில் கத்தியை வைத்து கடத்தியதன் மூலம் தவிர்த்துக் கொண்டு விட்டேன். நீ ஏற்கனவே என்னை கைது செய்தவன் என்பதால் இந்த முறையும் எப்படியாவது என்னை கைது செய்து விடுவாய் என்று அவன் நம்பினான். அதனால் தான் அவன் நம்மை பின் தொடரவும் இல்லை. பின் தொடர ஆட்களை அனுப்பவும் இல்லை." என்றான் ஆதித்தன்.



"நானும் நீயும் கூட்டுக் களவாணிகள் என்பது அவனுக்கு தெரியும் போது அவன் முகம் போகும் போக்கை என்னால் கற்பனை செய்ய வே முடியவில்லை." என்றான் எதிர்காலம்.



"உன்னுடைய நடிப்பும் கனகச்சிதமாகவே இருந்தது. இந்த கள்வனை நான் பார்த்து கொள்கிறேன்.இவன் என்னிடமிருந்து தப்பி செல்ல முடியாது என்று இறுமாப்புடன் கூறியதை அவர்கள் நம்பிவிட்டார்கள்" என்றான் ஆதித்தன்



"அவர்களுக்கு என்னைப் பற்றி மிக நன்றாகவே தெரியும். ஆனால் பாவம்! உன்னைப் பற்றித்தான் அவர்களுக்கு அதிகம் தெரியவில்லை. அவர்கள் சந்தித்த எத்தனையோ கள்வர்களில் உன்னையும் ஓருவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றான் எதிர்காலம்.



"அப்படி நினைப்பது தான் அவர்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது " என்றான் ஆதித்தன்



"ஆமாம். நீ ஒரு சிமிழைப் பயன்படுத்தினாயல்லவா? அது இல்லாவிட்டால் உன்னுடைய மாற்று திட்டம் என்னவாக இருக்கும்?”



" மாலை மயங்கி விட்டதால் அந்த வெடி உப்பை நான் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது. இல்லையென்றால் கதிரவனின் ஓளியைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கியிருப்பேன்”



"சூரிய ஒளியில் நெருப்பா? உன் திட்டம் புரியவில்லையே?" என்றான் எதிர்காலம்.



"இதோ இந்த கண்ணாடியை பயன்படுத்தி பகலவனின் வெளிச்சத்தை ஓரே புள்ளியில் குவியசெய்து நெருப்பை உண்டாக்கியிருப்பேன்" என்ற ஆதித்தன் ரசம் பூசாத ஒரு கண்ணாடி வில்லையை எடுத்து காட்டினான்.



"மொத்தத்தில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் உன்னிடம் உண்டு என்று சொல்" என்றான் எதிர்காலம்,



" எதிர்பாராததை எதிர்பார்ப்பது தானே வாழ்க்கை" என்று சிரித்தான் ஆதித்தன்.



"நீ சொல்வது உண்மைதான். இளவரசர் காணாமல் போனது கூட எதிர்பாராமல் நடந்த சம்பவம் தானே?" என்றான் எதிர்காலம்.



" நாளை காலை நாம் எல்லையோர கிராமங்களை அடைந்திருப்போம். நமக்கு முன் என்னைப் பற்றிய ஓலை அங்கே போய் சேர்ந்திருந்தால் என் நிலை மோசமாகி விடும்” என்றான் ஆதித்தன்.



"மழவராயரின் திட்டம் செயல் வடிவம் பெற்று விட்டது. அந்த திட்டத்தின்படி எல்லைக்கு உன்னைப் பற்றிய ஓலைவராது! கவலைப்பட வேண்டாம்" என்றான் எதிர்காலம்.



"கவலைப் படவில்லை. எல்லைப் புற தேச பக்தர்களின் மூர்க்கமான நாட்டுப் பற்றுக்கு நான் இரையாகி விடக்கூடாதே என்று தான் அஞ்சுகிறேன்." என்றான் ஆதித்தன்.



"என்னை மீறி எதுவும் நடந்து விடாது. இராணுவ ஓழுங்கைப் பற்றி நீயும் கேள்விப்பட்டிருப்பாயே?”



"ஆமாம். கேள்விப்பட்டிருக்கிறேன். கண்ணை மூடிக் கொண்டு கட்டளையை பின்பற்றுவதுதானே அவர்களின் வேலை.”



"சரியாகச் சொன்னாய்?”



"சரி. நாம் இப்போது இளவரசரைப் பற்றி பேசுவோம். வேட்டைக்கு கடைசியாக கிளம்பிய இளவரசர் என்னென்ன பொருள்களை கொண்டு சென்றார்.? “



"வேறு எதை கொண்டு போவார்? வழக்கமானஆயுதங்களைத் தான் “



" உணவு பொருள், தண்ணீர் எதாவது?”



" உணவு பொருளை கொண்டு செல்லவில்லை. ஆனால் தண்ணீர் குடுவையை கொண்டு சென்றார். “



"இந்த ஒரு தகவல் போதும். இளவரசரை கண்டுபிடித்து விடலாம். கவலைப்படாதே" என்றான் ஆதித்தன்.



ஆதித்தனை வியப்புடன் பார்த்தான் எதிர்காலம். தண்ணீர் குடுவையிலிருந்து எதை கண்டு பிடித்திருப்பான் இந்த கள்வன் என்ற கேள்வி அவன் மனதில் ஊஞ்சலாட ஆரம்பித்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 13



மறுநாள் கதிரவன் கிழக்கில் உதிக்கும் போது ஆதித்தனும் எதிர்காலமும் எல்லைப்புறத்து கிராமங்களை அடைந்திருந்தனர். வரும் வழியில் எதிர் பட்ட இயற்கை எழில் மிகுந்த காட்சிகளையும், பறவைகளையும் பார்த்த ஆதித்தன் அவற்றின் அழகில் தன்னையே பறிகொடுத்தான்.



ஆதித்தனின் ரசனையை உணர்ந்து கொண்ட எதிர்காலமும் தன் குதிரையின் வேகத்தை குறைத்து அவனது ரசனைக்கு தீனி போட்டான். உயர்ந்த மலை சிகரங்களையும் அவற்றின் உச்சியில் கொஞ்சி தவழம் மேகங்களையும் பார்த்த ஆதித்தன்" இயற்கை என்னவோ ஆதிகாலம் முதல் அப்படியே தன் இயல்பு மாறாமல் இருக்கிறது. அற்ப மானிடர்கள் ஒன்றுக்கும் உதவாத சில விசயங்களுக்காக தங்களை மாற்றிக் கொண்டு தங்கள் இயல்பை மறந்து மாற்றிக் கொள்கிறார்கள்." என்றான்.



" உண்மை தான்! இங்கே உள்ள மக்கள் இயற்கையை நாசம் செய்யாமல் அதனுடன் இணைந்து வாழ்பவர்கள். கள்ளம் கபடம் அற்றவர்கள். எது வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோதிடம் மிக்கவர்கள் " என்றான் எதிர்காலம்.



"ஆம். அவர்களின் மனோதிடத்தை நானும் பல முறை வியந்திருக்கிறேன். ஓரு காட்டுப் பகுதியில் நானும் என் அண்ணனும் பயணம் செய்த போது ஒரு சம்பவத்தை கண்ணுற்றேன். ஓரு மலைவாசியின் குடிசையை யானை ஓன்று பிய்த்தெறிந்து அவரின் வயலையும் நாசம் செய்து விட்டது. அவரோ அதற்காக மனம் துவண்டு போகாமல் கணேசர் வந்தார். குடிசையை பிய்த்துவிட்டு போய் விட்டார் என்று சாதாரணமாக கூறி விட்டார். அறிவற்ற மிருகம் யானை அதன் இயல்பு Uடி நடந்து கொண்டுவிட்டது என்று அந்த சம்பவத்தை இயல்பாகவே எடுத்து கொண்டார்." என்றான் ஆதித்தன்.



"இங்கேயும் யானைகள் தொந்தரவு உண்டு. அவற்றை பறையடித்து விரட்டி வருகிறார்கள். அவையும் வெகு அபூர்வமாகவே இங்கே தலை காட்டும் “



"பறை அடிப்பதெல்லாம் வீண் வேலை. அவை அடியோடு இந்த பக்கம் தலை காட்டாமலிருக்க சில யோசனைகள் உண்டு.”



"என்ன அது? எனக்கும் அதை கூறி உதவலாமே?" என்றான் எதிர்காலம்.



"அது வெகு எளிதான காரியம் தான். வயல்வெளிகளில் தேனீக்களை வளர்த்தாலே போதும். யானைகள் அந்த பக்கம் தலைகாட்டாது. யானைகளுக்கு தேனீ என்றாலே பயம். இவையெல்லாம் என் கண்டுபிடிப்பல்ல. என் நண்பன் பைராகியின் கண்டுபிடிப்பு. வயல்வெளியில் அட்டகாசம் செய்யும் மயில்களை பயமுறுத்தக்கூட அவனிடம் ஆலோசனை உண்டு.”



"நீ சொல்வதை கேட்கும் போது எனக்கு ஆச்சரியம் தான் அதிகரிக்கிறது. இவற்றையெல்லாம் உன் நண்பன் எப்படித் தான் கண்டுபிடிக்கிறானோ? அதிசயமான பிறவி தான் அந்த பைராகி . மயில்களை பயமுறுத்தும் யோசனையையும் கூறி விடு நண்பா ! இல்லாவிட்டால் என் தலையே வெடித்து விடும்" என்றான் எதிர்காலம்.



" என் நண்பன் மிகுந்த புத்திசாலி. ஓரு காரியத்தை கண் கொத்தி பாம்பாக கவனித்து அதன் உள்ளடக்கத்தை அவதானிப்பதில் வல்லவன். வயல்வெளியில் மேயும் மயிலை நன்றாக கவனித்துப் பார். அவை மூன்றடி தூரம் ஓடியே வானத்தில் பறக்கும். அந்த மூன்றடி தூரத்தில் அவை ஒடவோ பறக்கவோ இடையூறு ஏற்பட்டால் அவை பயந்து விடும் - இதை அவதானித்த என் நண்பன் வயல்வெளிகளின் இரண்டடி தூரத்திற்கு இடைவெளி விட்டு வயலின் இருபுறமும் நட்டு வைத்தான். அவற்றின் இடையே கயிறு கட்டி அவற்றில் ஓரடி நீளத்தில் கற்களைகட்டி தொங்க விட்டான். இரை தேடும் மயில்கள் ஓடி மேலே எழும்பும்போது கற்களில் மோதியும், கயிறுகளில் மோதியும் கீழே விழுந்துவிடும். ஆபத்தான நேரத்தில் ஓடிதப்ப முடியாது என்பதால் மயில்கள் வயல்களில் இரை தேடும் முயற்சியை கைவிட்டு விடும். அவனது இந்த யோசனை இதுவரை பொய்த்ததில்லை.” என்றான் ஆதித்தன்.



" அற்புதமான யோசனை, இதுவரைக்கும் யாருக்கும் தோன்றாத யோசனை. உண்மையிலேயே உன் நண்பன் புத்திசாலி தான்." என்றான் எதிர்காலம்.



"குறைவான வார்த்தைகளில் அவனை புகழ்கிறாய். அவன் ஓரு மேதாவி .எதிர்காலத்தில் பிறக்க வேண்டிய ஓருவன் தவறிப் போய் நம் காலத்தில் பிறந்து விட்டான். அவனது பல கண்டுபிடிப்புகள் நம்ப முடியாதவை. அவனை நினைத்தால் அவனது அறிவாற்றலை நினைத்தால் வியப்பு மட்டுமே மீதியாகும் " என்றான் ஆதித்தன்.



இருவரும் காட்டுவழியிலிருந்து விலகி ஓற்றையடிப் பாதையில் பயணித்தனர். சற்று தூரத்தில் தென்பட்ட கிராமத்தை காட்டிய எதிர்காலம் "நாம் வரவேண்டிய இடம் இது தான் " என்றான்.



இருவரும் கிராமத்திற்குள் நுழைந்த போது சில சிறுவர்கள் குதிரைகளின் பின்னால் ஓடி வர ஆரம்பித்தனர். மலைவாழ் மக்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் உரிமையோடு அளவளாவினான் எதிர்காலம் .மலைவாழ் மக்களிடம் தனித்த செல்வாக்கை எதிர்காலம் பெற்றிருப்பதன் சாட்சியாக அந்த காட்சி விளங்கியது.



எதிர்காலத்தை கண்ட வீரர்களிடையே பரபரப்பும் புதிதாக வந்தவன் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

"இவர் என் நண்பர். இவர் பெயர் ஆதித்தன்.என்னுடன் இங்கே தான் தங்க போகிறார். எனக்கு தர வேண்டிய மரியாதைகள் இம்மி குறையாமல் இவருக்கும் வழங்கப்பட வேண்டும். புரிந்ததா?" என்றான் எதிர்காலம்.



வீரர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டான் ஆதித்தன்.



எதிர்காலத்தின் இடத்திலிருந்த பைரவன்"ஓலை நேற்றே வந்துவிட்டது" என்று ஓலையை நீட்டினான்.



எதிர்காலத்தின் முகம் இருண்டது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 14



தன்னுடைய உதவியாள் பைரவன் நீட்டிய ஓலையை வாங்கிய எதிர்காலம் "நீ இந்த ஓலையில் இருப்பதை படித்து விட்டாயா?" என்று கேட்டான்.



"அதில் இருப்பதை படிக்கும் உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. அதனால் நான் அதை படிக்க வில்லை" என்றான் பைரவன்.



"ஓலை அனுப்பும் அதிகாரிகள் மிகுந்த பொறுப்போடு தான் வேலை செய்கிறார்கள்" என்று கோபத்துடன் கூறிய எதிர்காலம் வீரர்கள் குளிர் காயமூட்டி வைத்திருந்த நெருப்பில் ஓலையை விட்டெரிந்தான்.



"வேலைக்கு புதிதாக சேர்ந்த ஓருகத்துக்குட்டியின் ஆர்வக்கோளாறான வேலையாக இது இருக்கலாம்" என்று ஆதித்தன் அவனை சமாதானப்படுத்தினான்.



" காலை உணவு தயாராகி விட்டதா? வேட்டைக்கு தயாராக இருக்கிறீர்களா?" என்றான் எதிர்காலம்.



" உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது. காலைக் கடன்களை முடிக்க கிளம்பி விட்டோம்" என்றான் பைரவன்



“அனைவரும் காலை கடனை முடித்துவிட்டு உணவருந்தி தயாராகுங்கள். என் நண்பரும் இன்று வேட்டைக்கு வரப்போகிறார் " என்றான் எதிர்காலம்.



அருகிலிருந்த ஆற்றில் நீராடிவிட்டு காலை உணவை அருந்தி விட்டு அந்த சிறு படை கானகத்திற்குள் நுழைந்தது.



மொத்த வீரர்களையும் ஐந்து ஐந்து பேராக அணி பிரித்த ஆதித்தன் அவர்களை வெவ்வேறு திசைகளில் அனுப்பினான். அதற்கு முன்பாக அவர்களை நிறுத்தியவன்" வீரர்களே! இளவரசர் கடைசியாக சென்ற வழியில் நாங்கள் பயணமாகப் போகிறோம். நீங்கள் செல்லும் வழியில் நீர் சுனைகள், ஆறுகள், கிணறுகள் இருந்தால் அவற்றின் சுற்றுப்புறத்தை நன்றாக சோதனையிடுங்கள். காலடிதடங்களோ, குதிரைகளின் குளம் படித்தடங்களோ காணப்பட்டால் அவற்றை குறித்துக் கொள்ளுங்கள். சூரியன் உச்சிக்கு வரும் போது அணி பிரிந்த வீரர்கள் இங்கே வந்து சேர்ந்து விட வேண்டும்" என்றான்.



"ஆதித்தா! குறிப்பாக நீர் நிலைகளை நீ ஏன் கேட்கிறாய்?" என்றான் எதிர்காலம்.



" காரணம் இருக்கிறது நண்பா! இந்த கானகத்தில் வழி தவறிய இளவரசருக்கு பசியாற உணவில்லை. அதனால் தன் தாகத்தை தணித்துக் கொள்ள நீர் குடுவையை பயன்படுத்தியிருப்பார். அதுவும் விரைவிலேயே காலியாகி இருக்கும். அதனால் நீராதாரங்களை தேடிப் பயணித்திருக்க கூடுமென நான் கருதுகிறேன். அதனால் தான் நீர் நிலைகளில் தேடச் சொன்னேன் “ என்றான் ஆதித்தன்.



வரும் வழியில் இளவரசர்நீர் குடுவையை கொண்டு சென்றாரா என்று ஆதித்தன் ஏன் கேட்டான் என்று இப்போது கான் எதிர்காலத்திற்கு புரிந்தது.



" என் நண்பர் கூறியபடி தடயங்கள் உள்ளதா என்று தேடிப்பாருங்கள். அனைவரும் இப்போது கலைந்து செல்லுங்கள். இந்த பணியை முடித்த பிறகே நாம் பன்றி வேட்டையில் ஈடுபடுகிறோம். புரிந்ததா?" என்றான் எதிர்காலம்.



"உத்தரவு" என்று தலையசைத்த வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட திசையில் கலைந்து சென்றனர்.



ஆதித்தன், எதிர்காலம், பைரவன் அடங்கிய மூவர் அணி இளவரசர் அபயவர்மர் கடைசியாக பயணித்த பாதையில் பயணத்தை தொடங்கினர்.



"இந்த பாதையில் தான் இளவரசர் பன்றியை விரட்டிக் கொண்டு போனதை கடைசியாகப் பார்த்தோம் " என்றான் எதிர்காலம்.



"சரி. நாம் பயணத்தை தொடர்வோம்.வினோதமான எதையாவது பார்த்தால் என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்" என்றான் ஆதித்தன்.



அவர்கள் வெகு நேரம் பயணித்து களைத்துப் போனார்கள். அப்போது வழியில் ஒரு நீரோடையை கண்டான் பைரவன்.



"இந்த வழியில் இளவரசர் தண்ணீரை தேடி பயணம் செய்திருந்தால் கண்டிப்பாக இந்த இடத்தை வந்தடைந்திருப்பார்" என்றான் பைரவன்.



"நீ சொல்வது உண்மைதான். நாம் இந்த இடத்தை ஆராய்ந்து பார்க்கலாம். ஏதாவது துப்போ, தடய மோ நமக்கு கிடைக்கிறதா என்று பார்ப்போம்" என்றான் ஆதித்தன்.



மூவரும் தங்களின் குதிரைகளிலிருந்து இறங்கி அவற்றை அங்கிருந்த மரத்தில் கட்டி விட்டு நடக்க ஆரம்பித்தனர்.



"சேறு நிறைந்த கரை பகுதியை நன்றாக கவனித்துப் பாருங்கள். குதிரைகளின் தடங்களோ, மனிதர்களின் தடங்களோ காணப்படுகிறதா என்று கவனியுங்கள். விலங்குகளின் காலடித்தடத்தை கவனத்தில் கொள்ள வேண்டாம். அவற்றுக்கான ஓரே நீராதாரம் இது தான் என்பதால் அவை இங்கு வந்து செல்வது சகஜமான விசயம் தான் " என்றான் ஆதித்தன்



மூவரும் கரை பகுதியை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.



சற்று நேரத்தில் பைரவன் குரல் கொடுத்தான். "இங்கே சில காலடிதடங்களும், குதிரைகளின் குளம்படி தடயமும் காணப்படுகின்றன.”



அவன் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்த ஆதித்தன் அவற்றை கூர்ந்து கவனித்து விட்டு "இங்கே சில மனிதர்கள் குதிரைகளில் வந்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு குதிரைகளின் கால் தடங்கள் வினோதமாக உள்ளன. " என்ற ஆதித்தன் கீழே விழுந்து கிடந்த கழிஓன்றை எடுத்தவன் சேற்றில் பதிந்திருந்த குதிரையின் காலடி தடத்தில் அதை வைத்தான். "இதோ இந்த குதிரையில் இரண்டு மனிதர்கள் பயணத்திருக்கிறார்கள். இரண்டு பேரின் பாரம் குதிரையின் குளம்படி தடத்தில் ஆழமான பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருவரில் ஓருவன் காயம்பட்டி ருக்க வேண்டும் இல்லை மயக்கமாகியிருக்க வேண்டும். இன்னொரு குளம் படி தடம் ஆழமில்லாமல் காணப்படுகிறது. இந்த குதிரையில் யாரும் ஏறவும் இல்லை. பயணிக்கவும் இல்லை. இந்த குதிரை காலியாகவே பயணித்திருக்கிறது.” என்றான்.



" காலியான குதிரையிலேயே அந்த காயம் பட்ட மனிதனை ஏற்றியிருக்கலாமே?" என்றான் எதிர்காலம்.



" எதிரிகளிடம் போராடி காயம் பட்ட நிலையிலோ அல்லது மயக்கமான நிலையிலோ உன் குதிரை மீது உன்னை ஏற்றினால் அது என்ன செய்யும்?” என்று புதிர் போட்டான் ஆதித்தன்.



"அது எதிரிகளிடமிருந்து பாதுகாப்பான தொலைவிற்கு என்னை சுமந்து கொண்டு சிட்டாக பறந்து விடும்" என்றான் எதிர்காலம்.



" அதேதான் இங்கும் நடந்திருக்கிறது. இங்கே காயமடைந்தவர் இளவரசர் அபயவர்மர் .காலியாக ஆள் இல்லாமல் பயணித்தது அவரது குதிரை தான் " என்றான் ஆதித்தன்.



ஆதித்தனின் பதிலில் அயர்ந்து போய் நின்றனர் இருவரும் .!
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 15



மதிய உணவிற்குப் பின்னால் தனியறையில் கூடியிருந்தனர் ஆதித்தனும், எதிர்காலமும், பைரவனும். ஆழ்ந்த சிந்தனையுடன் இருந்த ஆதித்தனைப் பார்த்த எதிர்காலம் "என்ன நண்பா! சிந்தனையில் ஆழ்ந்து விட்டாய்? பல்வேறு திசைகளில் பிரிந்து சென்ற நம் வீரர்கள் நீராதாரங்களுக்கு அருகே எந்த தடயங்களும் கிடைக்காமல் வெறும் கையோடு திரும்பி விட்டார்கள். நீ ஊகித்தது தான் சரியாக இருக்கும் போலிருக்கிறது" என்றான்.



"ஆமாம். இவர் கண்டுபிடித்த தடயங்களும் இவரது யூகத்தை மெய்ப்பிக்கின்றன. இவரது யூகப் படி தண்ணீரை தேடி வந்த இளவரசரை யார் கடத்தி சென்றிருப்பார்கள்? அப்படி கடத்தி சென்றவர்கள் அவரை எங்கே அடைத்து வைத்திருப்பார்கள்? அவர்களின் நோக்கம் தான் என்ன? எல்லாமே ஒரே புதிராக இருக்கிறதே?" என்றான் பைரவன்.



"நீ கேட்ட அத்தனை கேள்விகளைத் தான் நானும் மனதிற்குள்ளாகவே கேட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்று உறுதி. அவரை கடத்தி சென்றவர்கள் கண்டிப்பாக கள்வர்கள் அல்ல. இளவரசரின் ஆபரணங்களை பறித்த பின் அவரை உயிரோடு விட்டு விட்டு போயிருப்பார்கள். இல்லை கொன்று விட்டிருப்பார்கள். அவர் இளவரசர் என்று தெரியாதிருந்தால் இந்த இரண்டும் நடந்திருக்கலாம்." என்றான் ஆதித்தன்.



"ஓரு வேளை அவர் இளவரசர் என்பதை அவர்கள் அறிந்திருந்தால்?” என்றான் எதிர்காலம்.



" மன்னிப்பு கேட்டு விட்டு ஓடிப் போயிருப்பார்கள். குறைந்த பட்சமாக அவரது நகைகளைக் கூட கொள்ளையடிக்க முயன்றிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவரது நகைகளை விற்கும் போது மாட்டிக் கொள்வோம் என்பதால் " என்றான் ஆதித்தன்.



" ஆற்றை ஓட்டிய பகுதி பாறையாக இருப்பதால் குதிரைகளின் காலடி தடத்தை நம்மால் பின் தொடர முடியவில்லை.அது நமது துரதிர்ஷ்டம்" என்றான் எதிர்காலம்.



“மனதை தளரவிட வேண்டாம் நண்பனே! இளவரசரை கண்டுபிடிக்க வேறோரு உபாயம் இருக்கிறது." என்றது ஆதித்தன்.



"என்ன உபாயம் அது? விரைவாகச் சொல் " என்றான் எதிர்காலம்.



"இளவரசரின் குதிரை எங்கிருக்கிறதோ அங்கே தான் இளவரசரும் இருப்பார். ஏனென்றால் இளவரசரை கடத்தியவர்கள் அவரின் குதிரையையுமல்லவா ஓட்டி சென்றிருக்கிறார்கள்?" என்றான் ஆதித்தன்.



மழவராயர் இவனை தேடி ஓலை அனுப்பியதில் எந்த தவறும் கிடையாது. அவரது மதிப்பீட்டிற்கு உகந்த ஆள் தான் இவன் என்று மனதிற்குள் நினைத்தான் எதிர்காலம்.



"நீங்கள் கூறுவது சரிதான். அப்படியானால் நாம் முல்லைவனத்தின் குதிரை சந்தைகளில் இளவரசரின் குதிரை விலைக்கு வருகிறதா என்று தேடிப் பார்ப்போமா?" என்றான் பைரவன்



"இளவரசரின் குதிரையை சிறு வயதிலிருந்து பராமரித்தவன் நான். என்னால் அந்த குதிரையை வெகு எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்" என்றான் எதிர்காலம்.



"உங்கள் இருவரின் கருத்தையும் நான் வரவேற்கிறேன். ஆனால் விலை உயர்ந்த அந்த குதிரை விற்பனைக்கு வராதென்றே நான் நினைக்கிறேன். இருந்தாலும் அப்படி ஓரு முயற்சியை செயல்படுத்தி பார்ப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை" என்றான் எதிர்காலம்.



அதே நேரம் அறையின் கதவு தட்டப்பட்டது. எதிர்காலம் பைரவனிடம் போய் பார் என்று கண்களால் சாடை காட்டினான்.



சில நிமிடங்களில் திரும்பி வந்த பைரவன்" கிராமத்தின் தலைவன் நம்மை சந்திக்க வந்திருக்கிறான். உங்களின் அனுமதிக்காக காத்திருக்கிறான்" என்றான்.



"சரி. அவனை வரச் சொல் " என்ற எதிர்காலம் " இவன் என்ன வில்லங்கத்தை கொண்டு வந்திருக்கிறானோ?" என்று முனகவும் செய்தான்.



சற்று நேரத்தில் உள்ளே வந்து பணிந்து நின்றான் கிராமத்தின் தலைவன். ஆதித்தனை தடுமாற்றத்துடன் பார்த்தவனின் தோளில் தட்டிய எதிர்காலம் " இங்கே நீ விரும்பியதை பேசலாம். அவர் அந்நியரல்ல. என்னுடைய நண்பர் தான் " என்று அவனுக்கு தைரியமூட்டவும் செய்தான்.



" உங்களுக்கு இணையான மரியாதையை அவருக்கும் தரச் சொல்லிகாலையில் வீரர்களிடம் நீங்கள் பேசியதை கேட்டேன்." என்றான் கிராம தலைவன்.



"அது இருக்கட்டும். நீ இங்கே எதற்காக வந்தாய்? அதை மட்டும் கூறு" என்றான் எதிர்காலம்.



" நீங்கள் வேட்டையாடிய பன்றிகளை நீண்ட நாட்கள் வைத்திருந்து புசிக்க அவற்றை பக்குவம் செய்பவன் நான். பன்றிகளை தீய்த்து அவற்றை துண்டு துண்டாக வெட்டி குண்டு வெல்லமும், நல்லெண்ணையும் கலந்த மண் பானையில் அவற்றை ஊற வைத்து பக்குவம் செய்வது எங்கள் பழக்கம். அவை நல்லெண்ணையில் ஊறி இனிப்பான பண்டமாக மாறிவிடும். அவை நீண்ட நாள் கெட்டு போகாது. பன்றிகளின் மேற்பகுதி மாமிசத்தில் மட்டும் ரோமங்கள் வளரும். அவற்றைப் பிடுங்கி போட்டுவிட்டு உண்டால் தேவாமிர்தம்" என்றான் கிராம தலைவன்.



"இந்த சமையல் குறிப்பை சொல்லத்தான் எங்களைத் தேடி வந்தாயா?" என்றான் எதிர்காலம் சற்று கோபத்துடன் .



"இல்லை. நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். நேற்று நீங்கள் வேட்டையாடிய பன்றி ஒன்றை இதை போல பக்குவம் செய்ய நான் துண்டு துண்டாக வெட்டினேன். அப்போது அந்த பன்றியின் இரைப்பையில் முழுதாக செரிக்காத ஓரு பொருள் கிடைத்தது. அதை உங்களிடம் காட்ட எடுத்து வந்திருக்கிறேன்" என்றான் கிராம தலைவன் பவ்யத்துடன் .



" என்ன பொருள் அது? காட்டுங்கள் இப்படி?" என்றான் ஆதித்தன்.



கிராமத் தலைவன் தன் மடியிலிருந்த அந்த பொருளை மேசையின் மீது வைத்தான்.



அது ஒரு மனிதனின் சுண்டு விரல்.



அதைப் பார்த்த மூவரின் முகமும் மாறியது.



"அந்த விரல் அபயவர் மருடையதாக இருக்குமோ?" என்றான் எதிர்காலம் தழுதழுத்த குரலில்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 16



கிராமத் தலைவன் மேஜையின் மீது வைத்த விரலை பார்த்த எதிர்காலம்" இது இளவரசர் அபயவர்மரின் விரலாக இருக்குமோ?" என்றான் குரல் தழுதழுக்க.



அந்த விரலை கையில் எடுத்துப் பார்த்த ஆதித்தன்" இதற்கு முன் இளவரசர் வந்து வேட்டையில் ஈடுபட்டா ரே அப்போது வேட்டையாடப்பட்ட பன்றிகளின் வயிற்றில் இப்படி மனித உடல் பாகங்கள் கிடைத்தனவா?" என்றான்.



"இல்லை. இளவரசர் முதல் முறை வேட்டையாடி கொண்டு வந்த இரைப்பைகளில் தாவர மிச்சங்களே ஜீரணமாகாமல் மீதமிருந்தன. இளவரசர் இரண்டாவது முறையாக வந்து வேட்டையாடிய பன்றிகளின் இரைப்பைகளில் இப்படி ஓன்றிரண்டு மனித உடல் பாகங்கள் கிடைப்பது வாடிக்கையாக இருக்கிறது. ஓரு சிறிய பானையில் அப்படி கிடைத்தவற்றை நான் சேகரித்து வைத்திருக்கிறேன்." என்றான் கிராமத்தலைவன்.



"நீங்கள் போய் அந்த மண் பானையை எடுத்து வாருங்கள்." என்றான் ஆதித்தன் - கிராமத்தின் தலைவன் வெளியேறியதும்" எதிர்காலம். நீ நினைப்பதுபோல் பன்றிக்கு இளவரசர் இரையாகி இருக்க மாட்டார். அப்படி இருவரிடையே ஏதாவது சண்டை நடந்திருந்தால் அதற்கான ஆதாரம் நம் வீரர்களின் கண்களில் தென்பட்டிருக்கும். கடவுளின் அருளால் அப்படி எதையும் நம் வீரர்கள் இன்னும் பார்க்கவில்லை. அதனால் நீ வீணாகப் பயப்பட வேண்டாம்" என்றான் ஆதித்தன்.



விரைவிலேயே மண்சட்டி ஓன்றுடன் திரும்ப வந்த தலைவன் நல்லெண்ணை கலவையில் மிதந்து கொண்டிருந்த சில மனித உறுப்புகளை காட்டினான்.வெகு எளிதில் செரிமாணமாகாத சில உறுப்புகள் அதில் இருப்பதைப் பார்த்த ஆதித்தன் "தலைவரே'! நான் ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு சரியான பதிலை சொல்ல வேண்டும்" என்றான்.



" கேளுங்கள். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்" என்றான் கிராமத் தலைவன்.



"இந்த உறுப்புகள் மனிதர்களால் வெட்டி பன்றிகளுக்கு உணவாகப் போடப்பட்டவையா ? இல்லை பன்றிகள் வேட்டையாடி உண்டவையா ?" என்றான் ஆதித்தன்.



"எனக்கென்னவோ இவை பன்றிகள் வேட்டையாடி தின்றதைப் போலத்தான் தெரிகிறது" என்றான் கிராமத் தலைவன்.



"நன்றி.உமது தகவலுக்கு .இப்போது வேட்டையாடப்பட்ட பன்றிகளை நீங்கள் பதப்படுத்த வேண்டாம். அவற்றை குழி தோண்டி புதைத்து விடுங்கள்." என்றான் ஆதித்தன்.



"மனித கறி உண்ணும் பன்றிகள். நினைத்தாலே குலை நடுங்குகிறது" என்றான் பைரவன்.



சட்டியுடன் திரும்பி நடந்த கிராமத் தலைவன்" எனக்கென்னவோ இவையெல்லாம் மலை கோட்டை எத்தனின் வேலையாக இருக்குமோ என்று தோன்றுகிறது" என்றான்.



" நில்லுங்கள் தலைவரே.! நீங்கள் சொல்வதை சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்" என்றான் ஆதித்தன்.



"நான் மலை கோட்டை எத்தன் என்று குறிப்பிடுவது முல்லைவனத்தின் இளவரசன் மகேந்திரனைத் தான். கைவிடப்பட்ட கோட்டை ஓன்றை புனர்நிர்மாணம் செய்து படை வீரர்களை குவித்து கொண்டிருக்கிறான் மகேந்திரன் - கடம்பம் நட்பு நாடாக இருந்தவரை அந்த கோட்டைக்கு முக்கியத்துவம் இல்லை. இரு நாடுகளிடையே இளவரசரால் பகை நேர்ந்த பின் அந்த கோட்டைக்கு முக்கியத்துவம் அதிகரித்து விட்டது. வீரர்களின் எண்ணிக்கை கூடுதலாகிறது. மலை வாசிகள் அந்த கோட்டை பக்கம் பிரவேசிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. அந்த கட்டுப்பாட்டை மீறுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதாகக் கேள்வி. பலரை பட்டினி போட்டு வதைத்து கொல்வதாக என் ஆட்கள் சொல்லியிருக்கிறார்கள்." என்றான் கிராம தலைவன்.



"அந்த மகேந்திரன் எப்போதிருந்து இந்த கோட்டையில் இருக்கிறான்?" என்றான் ஆதித்தன்.



" இளவரசர் அபயவர்மர் இளவரசி ரத்ன மாலாவை திருமணம் செய்ய மறுத்து பேசியதற்கு பிறகு தான் மகேந்திரன் இங்கு வந்து சேர்ந்தான். அவனுடன் கெடுபிடிகளும் வந்து சேர்ந்தன. “



"முல்லைவனத்து மன்னர் இவனை எதுவும் கேட்பதில்லையா?" என்றான் ஆதித்தன்



" தன் மகளை இழித்தும் ,பழ்த்தும் பேசிய கடம்பத்தை வம்பிழுக்கமகேந்திரனை ஒரு கருவியாக பயன்படுத்த நினைக்கிறார் மன்னர். அதனால் இளவரசர் மகேந்திரனின் எந்த விசயத்திலும் அவர் தலையிடுவதேயில்லை.” என்றான் கிராமத் தலைவன்.



"தலைவரே! உமது தகவலுக்கு நன்றி. நீர் கிளம்பலாம்" என்றான் ஆதித்தன். கிராமத் தலைவன் மௌனமாக வெளியேறினான்.



"பாசக்கார அண்ணன் போலிருக்கிறது. தன் தங்கையை பழித்த நாட்டையும், இளவரசரையும் பழிவாங்க துடியாக துடிக்கிறான்எதிர்காலம் நாளை காலை நானும் நீயும் அந்த மலைக்கோட்டைக்கு கிளம்புகிறோம்." என்றான் ஆதித்தன் எதிர்காலத்தை பார்த்து.



"நான் தயாராக இருக்கிறேன்.பைரவா! என் பொறுப்பை நாளை காலையிலிருந்து நீ ஏற்கிறாய். நாளை நாங்கள் இருவரும் மலை கோட்டைக்கு பயணமாகப் போகிறோம்." என்றான் எதிர்காலம்.



“ஆபத்தை நோக்கி பயணமாகப் போகிறீர்கள்" என்றான் பைரவன்



"தவறாகச் சொல்கிறாய்.! ஆபத்து மலை கோட்டையை நோக்கி நாளை நாலுகால் பாய்ச்சலில் பயணமாகப் போகிறது “ என்று புன்னகைத்தான் ஆதித்தன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 17



மலைக்கோட்டைக்கு மேற்கே முல்லைவனத்திலிருந்து வரும் சாலையில் மெதுவாக நடை பயின்று கொண்டிருந்தன இரு புரவிகள் . அதில் ஆரோக வைத்திருந்த இருவரில் மூத்தவன் கட்டுமஸ்தா க பார்ப்பதற்கே முரட்டுத்தனமாக தோன்றினான். அவனிடம் வாலாட்ட நினைப்பவர்கள் கூட அவன் முகத்தின் குறுக்காக விழுந்திருக்கும் வெட்டுத் தழும்பைப் பார்த்தால் தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். அவனது பார்வையின் தீட்சண்யமும் முரட்டுமீசையும் பார்ப்பவர்களின் மனதில் சொல்ல இயலாத ஒரு பயத்தை உருவாக்கும் தன்மை கொண்டவையாக இருந்தன.



அவனுக்கு அருகிலிருந்த மனிதன் ஓற்றை நாடியோடு அவ்வளவு சதைப்பிடிப்பு இல்லாத உடலமைப்பைக் கொண்டிருந்தான்.முதல் மனிதன் தன் தலைமுடியை மறைக்காமல் வெளிப்படையாக தெரியும்படி விட்டிருந்தான். ஓற்றை நாடி நபரோ தன் தலையை ஓரு முண்டாசால் மறைத்து வைத்திருந்தான்.



வெளிப்பார்வைக்கு முரட்டு மனிதனின் கட்டளைக்கு ஓற்றை நாடி நபர் கட்டுப்படுவதாக தோன்றினாலும் நிலைமை தலைகீழாக இருந்தது. எல்லோரும் அஞ்சி நடுங்கும் தோற்றத்தை கொண்டிருந்த நபர் தன் வழக்கத்திற்கு விரோதமாக ஒற்றை நாடி நபரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடந்து கொண்டிருந்தான். தன் தொண்டையை செருமிக்கொண்ட மூத்தவன் " ரத்னா! நான் செய்வது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? மன்னருக்கு நான் செய்யும் காரியம் தெரிந்தால் என் தலை தப்பாது. உனக்காகத் தான் இவ்வளவு பெரிய காரியத்தில் நான் தலையை நுழைத்திருக்கிறேன்" என்றான்.



மூத்தவனை பார்த்து தலையை ஆட்டிய ரத்னபாலன்"" உங்களை காப்பாற்ற நானிருக்கிறேன் வீரமல்லரே! அரண்மனையில் எத்தனையோ திறமை மிகுந்த வீரர்கள் இருக்கும் போது நான் ஏன் உங்களை தேர்ந்தெடுத்தேன்? உங்களின் திறமைக்கு முன்னால் வேறு யாரும் நிற்க முடியாது என்பதால் தான் உங்கள் உதவியை நாடி வந்தேன்" என்றான்.



"நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர்சாமான்யமானவன் அல்ல. என்னை விடவும் திறமை மிக்கவன். அவனது திறமைகள் பலவற்றை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். பலத்த காவலுக்கிடையே அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு அந்த குதிரையை களவாடியவன் அவன் " என்றான் வீரமல்லன்.



"அந்த சாகசத்தில் அவனது சகோதரனும் கூட இருந்தான். இப்போது புலி தனியாக வந்து சேர்ந்திருக்கிறது" என்றான் ரத்னபாலன்.



"உங்கள் திட்டத்தில் அவன் புலியல்ல. ஆடு தான். அவனும் காணாமல் போன கடம்பத்தின் இளவரசன் அபயவர் மனை தேடி களத்தில் இறங்கியிருக்கிறான். ஆதித்தன் இதுவரை தான் இறங்கிய காரியத்தில் தோற்றதில்லை." என்றான் மல்லன்.



"அதனால் தான் முதலில் அவனை தேடி கண்டு பிடிக்க சொன்னேன். அவனை கண்டு பிடித்து அவனை கண்காணித்தால் அபயவர் மனை கண்டுபிடித்து விடலாம். ஆதித்தன் அபயவர் மனை மீட்கும் வரை நாம் மறைவாக இருப்போம். பிறகு நாம் நமது கைவரிசையை காட்டி அபயவர் மனை கடத்தி செல்வோம்" என்றான் ரத்னபாலன்.



" அவனது முதுகில் உன் சவுக்கை நாட்டியமாட செய்யாமல் ஓயமாட்டாய் போலிருக்கிறதே?" என்றான் மல்லன்.



"எனக்கேற்பட்ட அவமானத்தை அவனது குருதியால்தான் கழுவ வேண்டும்" என்றான் ரத்னபாலன்.



" இவ்வளவு கோபம் ஆகாது. எதையும் பொறுமையாக செய்வோம்." என்று அவனை சமாதானம் செய்தான் மல்லன்.



"நாம் தேடும் ஆசாமி கடம்பத்தால் தேடப்படும் குற்றவாளி. அது கூட அந்த மழவராயரின் திட்டமாக இருக்குமோ என்று எனக்கு ஒரு ஐயம் “



"அதிலும் நமக்கு சாதகமாக ஓரு அம்சம் இருக்கிறது. அவனால் அபயவர் மரை மீட்டு விட்டு கடம்பத்திற்குள் திரும்பி செல்ல முடியாது. இந்த வழி அவனுக்கு ஓரு வழிப் பாதைதான்.”



"இல்லை நீ அவனை தவறாக மதிப்பிடுகிறாய். அவன் எல்லா சூழ்நிலைகளையும் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் திறமை கொண்டவன்”



"போதும் எதிரியின் புராணம். மாலை மயங்கி கொண்டிருக்கிறது. இருள் கவியும் முன்பாக நாம் ஒரு சத்திரத்தை கண்டுபிடித்தாக வேண்டும்”



"கவலை வேண்டாம். இன்னும் சற்று தொலைவில் ஓரு சத்திரம் இருப்பதாக நினைவு. அங்கே இரவு தங்கி செல்லலாம்" என்றான், மல்லன்.



சத்திரத்தின் முகப்பிலிருந்த மரத்தில் தன் குதிரையை கட்டி விட்டு இறங்கினான் மல்லன்.



" வாருங்கள்!" என்று வரவேற்ற சத்திர நிர்வாகி" எங்கே மலை கோட்டைக்கா செல்கிறீர்கள்?" என்றான்.



"இல்லை. வழிப்போக்கர்கள் நாங்கள்.ஏன் கேட்கிறீர்கள்?, " என்றான் மல்லன்.



"நாடெங்கும் இருந்து நிறைய படை வீரர்கள் அங்கே செல்கிறார்கள். நீங்களும் அங்கே தான் செல்கிறீர்களோ என்று நினைத்து கேட்டேன்.”



"இல்லை. நாங்கள் வேறு விசயமாக செல்கிறோம். இருவரும் தங்க ஒரு அறை வேண்டும். அதுவும் ஓதுக்குப் புறமாக .”



" காத்திருங்கள். அறையை தயார் செய்து விட்டு அழைக்கிறேன்.”



வெளியே வந்த மல்லன் ரத்னபாலனை பார்த்தான்.



"மகேந்திரன் தன் வேலையை ஆரம்பித்து விட்டான் போலிருக்கிறது" என்றான் ரத்னபாலன்.



"இங்கே பேச்சை குறைப்பது நல்லது " என்றான் மல்லன்



"புரிகிறது" என்றான் ரத்னபாலன்.



இரவு உணவிற்கு பின்னால் இருவரும் இருந்த அறைக்கு வந்த சத்திர நிர்வாகி அதிர்ந்தான்.



ரத்ன பாலனை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு அறை வாசலில் தலைக்கு வாளை வைத்து படுத்திருந்தான் மல்லன்.



மல்லனின் செய்கைக்கு காரணம் தெரியாமல் குழப்பத்துடன் அகன்றான்சத்திர நிர்வாகி.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 18



இரவு வெகு வேகமாக கவிழ்ந்து கொண்டிருந்தது. எல்லையோர மலை கிராமத்தில் ஆதித்தனும் எதிர்காலமும் சலனமுற்ற மனதுடன் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர்.சத்திரத்தில் ரத்னபாலனும், மல்லனும் உறங்கி கொண்டிருந்தனர். எல்லையோரத்தில் இருந்த மலை கோட்டையில் உறக்கம் வராமல் நடை பழகி கொண்டிருந்தான் மகேந்திரன்.ரத்ன மாலாவின் உடன் பிறந்த சகோதரன். ஏதோ யோசனையில் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்த மகேந்திரன் தன் கைகளை கட்டி காவல் வீரர்களில் ஓருவனை அழைத்தான்.

வந்து வணங்கி நின்றவனை பார்த்து "நீ கைதிகளின் கொட்டடிக்கு சென்று நம் சிறப்பு விருந்தாளியை அழைத்து வா" என்று கட்டளையிட்டான். அவன் சென்ற பிறகு ஒரு நாற்காலியை எடுத்து தன் மேசைக்கு எதிராக போட்டு விட்டு வருபவனை எதிர்கொள்ள தயாரானான்.



சற்று நேரத்தில் இரண்டு காவலர்கள் புடைசூழ வந்து சேர்ந்தான் கடம்பத்தின் இளவரசன் அபயவர்மன் - அவன் முகத்தில் இரண்டு நாள் தாடி மண்ட ஆரம்பித்திருந்தது. அவனது கைகளிலும் கால்களிலும் இரும்பு சங்கிலிகள் மாட்டப்பட்டு மிகவும் களைத்த நிலையில் காணப்பட்டான் அபயவர்மன்.



தன் நாற்காலியிலிருந்து எழுந்து கொண்ட மகேந்திரன் " கடம்பத்தின் இளவளே! வருக.இன்று வேலை மிக அதிகமோ ? " என்றான் நாடக பாணியில் கைகளை வீசி .



" என்னை ஏன் சித்ரவதை செய்கிறாய் மகேந்திரா ? இதற்கு நீ என்னை ஒரேயடியாக கொன்று விடலாம். நான் என் பத்மாவதியிடம் போய் சேர நீ உதவி செய்ததாக நினைத்து கொள்கிறேன்" என்றான் அபயவர்மன் பலவீனமான குரலில்.



"ஓரு மலை சாதி பெண்ணுக்காகத் தானே என் தங்கையை அவலட்சணம் பிடித்தவள் என்று பழித்து கூறினாய்? அதற்கு பழி வாங்கத் தான் உன்னை பின் தொடர்ந்து கடத்தி வந்தேன். இரண்டாவது முறை பன்றிகள் மலை கிராமத்திற்கு வந்தது என்னுடைய கைங்கர்யம். உன்னை தனிமை சிறையில் சிறை வைக்க வே எண்ணினேன். பாதுகாப்பான ஒரு இடம் மற்றவர்களின் கவனத்தை கவரும் என்பதால் தான் உன்னை கைதிகளோடு கைதியாக அடைத்து வைத்திருக்கிறேன். இந்த கைதிகளில் யாரும் உயிரோடு வெளியே செல்லப் போவதில்லை. இ வர்கள் இறுதியாக செல்ல போவது பன்றி குட்டைக்குத் தான். அதுவும் பிணமாக . அதனால் நீ இங்கு அடைபட்டு கிடப்பது யாருக்கும் தெரியப் போவதில்லை." என்று சொல்லிவிட்டு வக்கிரமாக சிரித்தான் மகேந்திரன்.



" எப்படியாவது என்னை சீக்கிரம் கொன்று என் உயிரை விடுதலை செய்.பத்மாவதி இல்லாத உலகத்தில் வாழ எனக்கு விருப்பமில்லை." என்றான் அபயவர்மன்.



"நீ இங்கு என்னிடம் வதைபட்டு அவமானப்பட்டு கொண்டிருக்கிறாய். உன் தந்தையோ காடுகள் வனிடம் அவமானப்பட்டு நொந்து கிடக்கிறார். புத்திர சோகத்தோடு இந்த அவமானமும் சேர்ந்து கொண்டு விட்டது." என்றான் மகேந்திரன்.



" என்ன சொல்கிறாய் நீ?”



"ஆமாம். ஆதித்தன் என்ற கள்வன் உன் தந்தையிடம் சவால் விட்டு சிறையிலிருந்து தப்பி சென்றிருக்கிறான். பாவம். உன் தந்தை நரேந்திரவர்மன் அவமானத்தால் கூனி குறுகி நின்று கொண்டிருக்கிறான்." என்று எக்காளமாகச் சிரித்தான் மகேந்திரன்.



"என்னால் என் தந்தைக்கு அவமானம் தான் மிச்சம். நான் பிறந்ததே வீண். கள்வனிடமெல்லாம் அவமானப்பட வேண்டும் என்பது என் தந்தையின் தலைவிதியா?என்ன?" என்றான் அபயவர்மன் கழிவிரக்கத்துடன் .



"பாரும் அபயவர் மரே! இன்னமும் எதுவும் கை மிஞ்சிப் போய் விடவில்லை. என் தங்கை ரத்ன மாலாவை நீர் மணந்து கொண்டால் நானும் நீரும் மாமா, மைத்துனர் என்று உறவு முறையால் நெருங்கி விடுவோம். நீர் இன்னமும் பத்மாவதி என்று பிதற்றி கொண்டிருந்தால் நாளை?”



" நாளை என்னாகும்?”



"உமது நாட்டின் மீது போர் தொடுக்க படை திரட்டி கொண்டிருக்கிறேன். அதற்கான முன்னேற்பாடுகள் துவங்கி விட்டன . இவையெல்லாம் என் தந்தைக்கு கூட தெரியாது.. அவை பூர்த்தியான பின் படையெடுப்பு துவங்கி விடும். பிறகு வருந்தி பயனில்லை.”



" நீர் தானாக பழுப்பதை தடி கொண்டு அடித்து பழுக்க வைக்க நினைக்கிறீர்கள். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். மனம் ஒத்து வந்து திருமணம் நடக்க வேண்டும். திருமணம் வெறும் வணிக மல்ல.”



"போதும் நிறுத்து உன் உபதேசத்தை .நீர்திருத்தப் போவதுமில்லை.பத்மாவதி பு ராணத்தை நிறுத்தப் போவதுமில்லை. யார் அங்கே ? இவனை கொட்டடிக்கு கூட்டி செல்லுங்கள்" என்றான் மகேந்திரன் கோபத்துடன் .



அபயவர்மன் கொட்டடிக்கு அழைத்து செல்லப் பட்ட பின் உள்ளே நுழைந்தான் கோட்டை தலைவன்.



" என்ன?”



" மதியம் அரண்மனையிலிருந்து ஒரு ஓலை வந்தது. பணிச்சுமையில் அதை மறந்து விட்டேன்.”



"நன்றாகவே வேலை செய்கிறீர்கள். கொடுங்கள் அந்த ஓலையை “



கோட்டை தலைவன் நீட்டிய ஓலையை படித்த மகேந்திரனின் முகம் மாறியது. அவன் கையிலிருந்த ஓலை நழுவி விழுந்தது.



"என்னாயிற்று இளவரசே ?" என்றான் கோட்டை காவலன் பதட்டத்துடன் .



"என் தங்கை ரத்னமாலாவை அரண்மனையிலிருந்து காணவில்லையாம். அப்பா சேதி அனுப்பியிருக்கிறார்." என்ற மகேந்திரனின் முகத்தில் சவக்களை தாண்டவமாடத் தொடங்கியது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 19



மறுநாள் காலை கதிரவன் கிழக்கில் உதித்துக் கொண்டிருக்கும் போது ஆதித்தனும், எதிர்காலமும் தாங்கள் தங்கியிருந்த மலை கிராமத்தை விட்டு கிளம்பியிருந்தனர். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த இருவரும் நேரமாகவே எழுந்து குளித்து முடித்து காலை கடன்களை முடித்துவிட்டு கிளம்பியிருந்தனர். எதிர்காலம் முன் எச்சரிக்கையாக ஓரு நாளிற்கு தேவையான உணவு பொருள்களை தயார் செய்து எடுத்து வைத்திருந்தான்.



ஏற்கனவே பல வணிகர்கள் சென்ற பெரிய பாதையில் நீண்ட நேரம் பயணித்தவர்கள் வழியில் கிளை பிரிந்த ஓரு ஒற்றையடி பாதையில் குதிரைகளை செலுத்தினர். மரங்களும் புதர்களும் அடர்ந்து வளர்ந்திருந்த அந்த பாதையில் மிக மெதுவாகவே குதிரைகளை செலுத்த முடிந்தது.



"நண்பா! குதிரைகளை மிக மெதுவாகவே நடத்தி செல். முட்கள் குதிரைகளை காயப்படுத்தி ஓலி எழுப்ப செய்து விடப்போகிறது. சில இடங்களில் குதிரை நகர மறுத்தால் பாதையை கவனமாகப் பார். புதரிலோ, பாதையிலோ பாம்புகள் ஏதாவது பதுங்கி கிடக்கலாம்" என்று எதிர்காலத்தை எச்சரிக்க ஆதித்தன் தவறவில்லை.



ஆதித்தனின் எச்சரிக்கையை கவனமாக பின்பற்றிய எதிர்காலம் குதிரைகளை மெதுவாகவே நடத்தி சென்றான். ஓரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் குதிரையிலிருந்து குதித்து இறங்கிய எதிர் காலம் "இந்த இடம் தான் மலை கோட்டையை கண்காணிக்க சிறந்த இடம். இப்போது நாம் மலை உச்சியில் இருக்கிறோம். மலைக்கோட்டையோ சமவெளியில் இருக்கிறது. இங்கிருந்து அங்கு நடப்பதை நாம் கண்காணிப்பது சுலபம். இங்கே மரங்களும், புதர்களும் அடர்ந்து கிடப்பதால் நாம் இங்கே பதுங்கி கிடப்பது அவர்களுக்கு தெரியாது." என்றான்.



அவனது பேச்சை செவிமடுத்த ஆதித்தன் அந்த இடத்தை சுற்றிலும் பார்த்து தலையசைத்து திருப்திக்கு அறிகுறியாக தனது தலையை அசைத்துக் கொண்டான்.



தனது குதிரையின் பையிலிருந்து சிறிய தொலைநோக்கு கண்ணாடியை எடுத்த ஆதித்தன் அதை எதிர்காலத்திடம் நீட்டினான்.



"நண்பா! இந்த தொலைநோக்கு கண்ணாடியின் குழலை இழுத்து நீளமாக்கி புதர்களின் வழியே நீட்டி மலை கோட்டையை கண்காணி. முதலில் நீ பார்க்க வேண்டியது குதிரை லாயம். அங்கே தான் இளவரசரின் குதிரை இருக்க வேண்டும். குதிரை லாயத்தில் இருந்தால் கண்டிப்பாக இளவரசர் இங்கு தான் இருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிவிடும்." என்றான் ஆதித்தன்.



தனது பார்வையை தொலைநோக்கு கண்ணாடி வழியாக விஸ்தரித்தான் எதிர்காலம். வெகு உன்னிப்பாக மலை கோட்டையின் ஓவ்வொரு அங்குலத்தையும் கண்களால் தேடிப்பார்த்த எதிர்காலத்தின் முகம் திடிரென மலர்ந்தது.



"நீ சொன்னது உண்மைதான். இளவரசர் அபயவர்மரின் குதிரை இங்கு தான் இருக்கிறது. இந்த குதிரை சர்வ நிச்சயமாக இளவரசரின் குதிரை தான் என்று நான் என் இறந்து போன மாமியாரின் மீது கூட சத்தியம் செய்ய தயாராக இருக்கிறேன்" என்றான் எதிர்காலம்.



"நீ சொல்வது உண்மை தானா?” என்றான் ஆதித்தன் பரபரப்புடன்.



" பொய் சொல்வது எனக்கு பிடிக்கும். ஆனால் இப்போது நான் சொல்வது பொய்யல்ல" என்றான் எதிர்காலம்.



" அந்த கண்ணாடியை கொடு. நானும் பார்க்கிறேன்." என்ற ஆதித்தன் லாயத்தில் இருப்பது இளவரசரின் குதிரை தான் என்பதை உறுதி செய்து கொண்டான். அடுத்ததாக மலைக்கோட்டையின் நிலவியல் அமைப்பை கவனிக்க தொடங்கினான் ஆதித்தன். கோட்டையின் மதில் சுவரை ஒட்டியிருந்த நிலப்பரப்பு சீர்திருத்தப்பட்டு மரங்கள், செடிகொடிகள் வெட்டப்பட்டிருப்பதைக் கவனித்தான் ஆதித்தன்.



"கோட்டையின் மதில் சுவரை ஓட்டி எதையோ செய்ய நினைத்திருக்கிறான் நம் எதிரி " என்றான் ஆதித்தன்.



" அவன் கோட்டையை விஸ்தரித்தால் என்ன? அந்த இடத்தில் விவசாயம் செய்தால் நமக்கென்ன? எப்படியோ இளவரசர் இங்கே இருப்பது உறுதியாகிவிட்டது. அவரை மீட்டுச் செல்லும் வழியைப் பார்ப்போம்" என்றான் எதிர்காலம்.



"கோட்டையை சுற்றி பலத்த காவல் இருக்கிறது. அவர்களின் பார்வையில் படாமல் யாரும் உள்ளே செல்ல முடியாது. வெளியேயும் வரமுடியாது. நிலமை வெகு சிக்கலாக இருக்கிறது." என்றான் ஆதித்தன்.



"நீ சொல்வது உண்மைதான். இளவரசர் இங்கே இருப்பதை நினைத்து உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன். அவரை மீட்டது எளிதான காரியம் போல தெரியவில்லை. இப்போது என்ன செய்வது?" என்றான் எதிர்காலம்.



"யோசிப்போம்" என்றான் ஆதித்தன் . கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்த ஆதித்தனின் புருவம் உயர்ந்தது.



"குதிரைகள் பூட்டப்பட்ட நாற் சக்கர வண்டி ஒன்று தயார் நிலையில் நிற்கிறது. வண்டிக்கு கூரை இல்லாததால் அதில் உயர் வகுப்பினர் யாரும் பயணிக்க போவதில்லை. வேறு யார் பயணம் செய்ய போகிறார்கள்?" என்ற ஆதித்தன் தன் உதட்டை கடித்து கொண்டு தொலைநோக்கு கண்ணாடியை எதிர்காலத்திடம் நீட்டி" யாரை ஏற்றுகிறார்கள் என்று பார்" என்றான்.



கண்ணாடியை தன் கண்களில் பொருத்திய எதிர் காலத்தின் முதுகு தண்டு ஜில்லிட்டது. உலர்ந்த உதடுகளோடு "வண்டி நிறைய பிணங்கள் ஏற்றப்படுகின்றன" என்றான் அதிர்ச்சியோடு.!
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 20



வண்டி நிறைய பிணங்கள் ஏற்றப்படுவதைப் பார்த்த எதிர்காலம் திகிலோடு " இவர்கள் யார்? இவர்களை கொன்று எங்கே கொண்டு போகிறார்கள்?" என்றான்.



"அவர்கள் உன் நாட்டு வணிகர்கள். உளவாளிகள் என்று குற்றம் சாட்டி பட்டினி போட்டு கொன்றிருக்கிறார்கள். அதற்கு முன்பாக அவர்கள் உழைக்க கட்டாயப்படுத்தபட்டிருக்கிறார்கள். அவர்களின் உடையில் உள்ள மண் புழுதி அதை மெய்ப்பிக்கிறது. மேலும் இறந்து போனவர்களின் உடலில் எந்த ரத்த காயமும் இல்லை. " என்றான் ஆதித்தன்.



"ஓரே பார்வையில் இத்தனை விசயங்களை கவனித்து விட்டாயா? பலே கில்லாடி தான் நீ." என்ற எதிர்காலம் ஆதித்தன் சொன்னது சரிதானா என்பதை கண்ணால் பார்த்து உறுதி செய்து கொண்டான்.



"இந்த வண்டி இறந்தவர்களை புதைக்க கொண்டு செல்கிறதென்று நினைக்கிறேன்." என்றான்.



"அப்படியானால் இந்த வண்டி மட்டும் தான் கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் போய் வரும் தகுதியோடு இருக்கிறது”



"அந்த வண்டியில் ஏறும் தகுதி பிணங்களுக்கு மட்டுமே உண்டு. நாமும் மூச்சு விடுவதை நிறுத்தி விட்டால் அந்த வண்டியில் இடம் பிடித்து விடலாம்" என்றான் எதிர்காலம்.



"அந்த வண்டிக்கு காவலாக வரும் வீரர்கள் உருவிய வாளோடு மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறார்கள்." என்றான் ஆதித்தன்.



"இறந்து போன பிணங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு தருவது மிகவும் விந்தையாக இருக்கிறது." என்றான் எதிர்காலம்.



" பாதுகாப்பு பிணங்களுக்கல்ல. அவற்றை கொண்டு செல்லும் வீரர்களுக்கு என்று நான் நினைக்கிறேன். சரி நாம் கால்நடையாக மறைந்திருந்து அவர்களைப் பின் தொடர்வோம்" என்றான் ஆதித்தன்.



" குதிரைகளை மரத்தில் கட்டி வைத்துவிட்டேன். திரும்ப நாம் வரும் வரை அவை பத்திரமாக இருக்குமல்லவா?” என்றான் எதிர்காலம்.



"நாம் கிளம்பும் முன்பாக அவற்றின் வாயை இறுக கட்டி விடு. இப்போது பிணங்களை வண்டியில் தூக்கி செல்லும் வீரர்கள் மிகுந்த சுமையை கொண்டு செல்கிறார்கள்.. பிணங்களுடன் வீரர்களையும் சேர்த்து கூடுதல் பாரத்தை சுமக்கும் குதிரைகள் திரும்ப வரும் போது சுமையின்றி காலி வண்டி யாக திரும்பி வரும். அப்போது உற்சாக மிகுதியால் அந்த குதிரைகள் கனைத்தால்பதிலுக்கு நம் குதிரையும் கனைத்து நம் இருப்பிடத்தை காட்டி கொடுத்து விடும். கவனம் " என்றான் அதித்தன்..



ஆதித்தனின் முன்னெச்சரிக்கையை மனதிற்குள் பாராட்டி கொண்ட எதிர்காலம் ஆதித்தன் சொன்னது போலவே குதிரைகளின் வாயை கயிறால் கட்டினான்.



இருவரும் புதர்களின் மறைவில் ஓளிந்தபடி முன்னேற தொடங்கினர்.



பிணங்களை ஏற்றி முடித்ததும் குதிரை வண்டி கோட்டை வாசலுக்கு வந்து நின்றது. கோட்டையின் பெருங் கதவுகள் கீச்சென்ற சத்தத்துடன் மெல்ல திறந்தன. வண்டியில் பாரம் அதிகமாக இருந்ததால் வண்டி மண் சாலையில் மெதுவாகவே பயணப்பட்டது ஆதித்தனுக்கும், எதிர்காலத்திற்கும் சாதகமாக அமைந்தது.



கோட்டையிலிருந்து சென்ற மண் சாலையில் சிறிது தொலைவு சென்ற வண்டி காட்டிற்குள் இருந்த ஒரு குறுக்குப் பாதையில் பயணித்தது. அதில் சிறிது தூரம் சென்ற வண்டி திடிரென நின்றது. பாதையின் குறுக்கே ஓரு சதுப்பு நிலகுட்டை ஓன்று தென்பட்டது. அதை சுற்றி முட்கள் வெட்டி போடப்பட்டிருந்தன. குட்டையின் மேல் ஒரு மரப்பாலம் கட்டப்பட்டிருந்தது. வண்டி பாலத்தின் மேல் ஏறி குட்டையின் நடு மையத்தில் நின்றது.



ஆதித்தனும், எதிர்காலமும் புதர் செடியின் மறைவிலிருந்து நடப்பவற்றை கவனித்து கொண்டிருந்தனர்.

வண்டியின் பொறுப்பதிகாரி பாலத்திலிருந்து குட்டையை எட்டி பார்த்தான். குட்டையின் உள்ளே அழுகிய நிலையில் ஏராளமான பிணங்கள் சிதைந்த நிலையில் கிடந்தன. அந்த இடத்தை சுற்றி துர்நாற்றம் வீசி கொண்டிருந்தது. அதன் வீச்சத்தை பொறுக்க முடியாத வீரர்கள் தங்கள் மூக்கை துணியால் பொத்தி கொண்டனர்.



"சீக்கிரமாக அந்த பிணங்களை வண்டியிலிருந்து குழிக்குள் தள்ளி விடுங்கள்." என்றான் அதிகாரி.



பிணங்கள் ஓவ்வொன்றாக அந்த குழிக்குள் தூக்கி வீசப்பட்டன.



"அந்த பன்றிகள் இங்கே இருந்திருந்தால் நல்ல விருந்தென்று இந்த உடல்களை தின்று தீர்த்திருக்கும். இளவரசர் வேறு அவற்றை கடம்பத்திற்குள் விரட்டி அடிக்க உத்தரவு போட்டு விட்டார். இந்த பிணங்களின் நாற்றத்தை சகிக்க முடியவில்லை. இங்கிருந்து சீக்கிரமாக கிளம்பலாம்”



அவர்கள் வெகு விரைவிலேயே பிணங்களை குழியில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.



அவர்கள் போனதை உறுதி செய்து கொண்ட ஆதித்தனும், எதிர்காலமும் வெளியே வந்தனர்.



குட்டைக்குள்ளிருந்து ஒரு தீனமான குரல்" தண்ணீர் " என்றது.



நண்பர்கள் இருவரும் குரல் வந்த திசையைப் பார்த்தனர்.



எல்லையில் ஒரு எத்தன்.
 

Latest posts

New Threads

Top Bottom