Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

Status
Not open for further replies.
நான்காவது அத்தியாயம்

சதியாலோசனை


சையத் ஆஸாத் தூக்கக் கலக்கத்தில் வந்த கொட்டாவியை விழுங்கிவிட்டு, அவனது கை கடிகாரத்தைப் பார்த்தான். ஏறக்குறைய நள்ளிரவு ஆகிவிட்டது, அறைக்குள் சதியாலோசனையில் இருந்த பெரிய தலைகள் இன்னும் சிற்றுண்டி செய்து கொண்டிருந்தனர், உள்ளே ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டு , வெள்ளமென ஓடிக்கொண்டிருந்த உயர் ரக ரஷ்ய வோட்காவை ரசித்துக் கொண்டிருந்தனர்.


ஆஸாத் தூக்கத்தை உணர்ந்தான். காஷ்மீரின் பிரதான சந்தையில் ஒரு ஆபத்தான வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் யோசனை மிகவும் பைத்தியக்காரத்தனமானது. இது போன்ற மோசமான யோசனைகளை எப்போதுமே அந்தக் கூட்டத்திலேயே முதியவரான அமானுல்லா கான் தான் கூற முடியும். ஆனால், உண்மை என்னவென்றால், அந்த வயதான பைத்தியக்கார முதியவரைக் கேள்வி கேட்கும் துணிவு அங்கு யாருக்கும் இல்லை, காலித் ஒருவனைத் தவிர. அவனும் அமானுல்லா கான் மீதுள்ள மரியாதையால் அவரைத் தேவையில்லாமல் சீண்ட மாட்டான்.


பரந்த மாளிகையின் உள்ளே, அமானுல்லா கானைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு பொருத்தமான பெயரிட முடியாத அந்த “போர் அறை” யில் ஐந்து பேர் கொண்ட குழு ஆழ்ந்த விவாதத்தில் இருந்த போது. காலித் தனது வலது கையை உயர்த்தியதால் விவாதம் சட்டென நிறுத்தப்பட்டது.



"நமக்குத் தெரிந்து நம் புதிய பிரதமர் எந்தவொரு செயலையும் செய்வதற்கு ரிஸ்க் எடுப்பதற்கு நிறைய யோசிப்பதால், இந்தியா ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டது. இந்தியப் பிரதமர் வயதானவர்தான், ஆனால் புத்திசாலி, மேலும் நம் போன்ற தீவிர இயக்கங்களின் மீது இரக்கமற்றவர். அவருடைய அமைச்சரவையில் இருக்கும் அனைவரின் சிந்தனையும் எப்படி இருக்கும் என்பது அவருக்குத் தெரியும், அதனால், எந்தவொரு அமைச்சரும் ஒரு கூட்டத்தில் கூட அவரை / அவரது கருத்தை ஆட்சேபிக்கத் தயாராக இல்லை. நான் எனது சகோதரர் கமாலை பல முறை எச்சரித்தேன். நம்முடைய புனிதப்போரான ஜிஹாத் மிகவும் முக்கியமானது, ஆனால், அதற்காக பணி முழுவதுமாக முடிவடைவதற்குள் தேவையில்லாமல் நம் வாழ்க்கையை இழப்பது முட்டாள்தனம் ”



காலித் பேசுவதை சிறிது நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு, தனது வழிகாட்டியான அமானுல்லா கானைப் பார்த்தான். அமானுல்லா கான் தனது கண்பார்வை மூலம் காலித் மேலும் தொடர சைகை காட்டிவிட்டு,



“காலித், கமால் இறந்ததால் ஏற்பட்ட இழப்பு நம் எல்லோருக்குமே பொதுவானது. எனவே, நடந்ததற்கு நீ மட்டுமே காரணம் என்று உன்னை நீயே குற்றம் கூறிக்கொள்ள முயற்சிக்காதே. உன் இரட்டை சகோதரனைப் பற்றி டாக்டர் மிஸ்ராவுக்குத் தெரியாது என்பது உறுதியா? ஒரு வேளை அவருக்குத் தெரிந்திருந்தால் நம்முடைய தாக்குதலில் இருக்கும் எதிர்பாராத தன்மை போய்விட்டது என்றே பொருள். புதுதில்லியில் உள்ள நம் உளவாளிகளிடமிருந்து ஏதாவது செய்தி வந்துள்ளதா ? ” என்று கேட்ட அமானுல்லா கானின் குரல் மிகவும் தெளிவாக இருந்தது.



காலித் தலையை ஆட்டினான். “மிஸ்ராவுக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன், புதுடில்லியில் இருந்து நமக்கு உபயோகமான தகவல் எதுவும் இதுவரை இல்லை. இப்போது, நம் காஷ்மீர் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவோம், நாளை மாலை, இந்தியாவின் பதிலின் உண்மையான வீரியத்தைக் காண்போம். ” என்றான்.

===================================


"ஸார், உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது" என்ற அவினாஷை நிமிர்ந்து பார்த்த மிஸ்ரா,


"அவினாஷ் வா, சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்" என்றார்.


அவினாஷ் "காஷ்மீர் IB (இன்டெலிஜென்ஸ் பீரோ) தகவல் அனுப்பியுள்ளது. ஸ்ரீநகரில் நாளை அல்லது நாளை மறுநாள் ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடிக்கும் என்று தெரிகிறது. என்ன செய்யப்போகிறோம் ஸார்? " என்றான் கவலையுடன்.


இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேசினார்கள். முன்னெப்போதையும் விட இந்தியாவுக்கு எதிராக அமானுல்லா கானின் மோசமான சதிச் செயல்கள் எப்படி அதிகமாகிவிட்டது என்பதை அவர்கள் விவாதித்தனர்.


அவர்கள் இருவரும் விவாதித்த சிறிது நேரத்தில், மிஸ்ராவின் அணியின் சிறப்பு உளவுப் பிரிவில் உள்ள புத்திசாலித்தனமான இரு இளம் அதிகாரிகள் ப்ரியா சதுர்வேதி மற்றும் துஷ்யந்த் ஆகியோர் டெல்லியில் இருந்து ஒரு தனி விமானத்தில் ஸ்ரீநகரை அடைந்தனர்.


==================================


ஸ்ரீநகரில் அந்த இனிமையான காலை வேளையில், குளிருக்கு இதமாக இருந்த இளம்வெயிலில். ஒரு ஜிப்ஸி ஜீப் மெதுவாக ஊர்ந்து அஞ்சல் அலுவலகம் அருகே நின்றது. கமருதீன் வெளியே வந்து ஜீப்பில் ஏறும்போது, உள்ளே இருந்த மாலிக்கை நோக்கித் தலையை அசைத்தான்.


"கமருதீன், நாளை மாலை வாணவேடிக்கைக்கு நீங்கள் தயாரா?" என்று மாலிக் கேட்டான்.


கமருதீன் சில கணங்கள் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்துவிட்டு, "மாலிக், இங்குள்ள நிலைமை முன்பு போல் இல்லை. பாதுகாப்பு மிகவும் அதிகமாக உள்ளது. காவல்துறையும் சிறப்புப் படையினரும் சிறப்பு ஆயுதப் படைகளில் இருந்து ஏராளமானவர்களைக் கூட்டி வந்துள்ளனர்" என்றான்.


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருக்க, ஜீப் நிதானமாக இரண்டு தெருக்களைச் சுற்றி வந்தது. கமருதீன் இறங்கும் நேரம் வந்தவுடன், மாலிக் அவனைப் பார்த்து சிரித்தான். "நீங்கள்தான் எங்கள் உள்ளூர் ஹீரோ. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது சரியாக, எந்தவித இடையூறும் இன்றி நடக்க, எங்கள் ஆட்கள் உதவுவார்கள். ஆனால், தாமதிக்காதீர்கள், விரைவில் அந்த நாளைக் குறிக்கவும்."


கமருதீனை இறக்கிவிட்டு, அந்த ஜிப்ஸி ஜீப் புகை மூட்டத்துடன் காணாமல் போனது.


=================================


அன்று இரவு பலூசிஸ்தானில் இருந்து சையத் அனுப்பிய ஒரு அவசர செய்தி வந்தது. ‘சந்தையில் உருளைக்கிழங்கு இருப்பு இல்லை. நிலைமை 26 தேதிக்குப் பின்னரே தெரியவரும்".


சையத் உடனடியாக அவினாஷை தனது சாட்டிலைட் ஃ போன் மூலம் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தான்.


**********************************


அவினாஷ் குளியலறையிலிருந்து வெளியே தன்னை உலர்த்திக் கொண்ட போது, சையத்தின் அச்சமூட்டும் தகவல் வந்தது. அவனுக்குத் தெரியும், காலித் கணக்கைத் தீர்க்க வருகிறான் என்பது, ஆனால், இப்படியா? .


கிரிக்கெட் ஸ்டேடிய சம்பவத்திற்குப் பிறகு இரண்டு நாட்களிலேயே, இறந்தது கமால் தான், காலித் அல்ல என்பது தெரிந்துவிட்டது.


மிஸ்ராவும், அவினாஷும் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து, ராம் சந்தர் ராவ் உயிர் பிழைத்த செய்தியை மட்டுமே வெளியே தெரியச் செய்துவிட்டு, அதற்குக் காரணமான டெக்ஸ்ட்ரோகார்டியா சமாச்சாரத்தைத் திறமையாக மறைந்துவிட்டனர்.


அவினாஷுக்குத் தெரிந்து காலித்தின் மனதில், அவனுடைய பரம எதிரியான இந்தியாவும் அதன் உளவாளிகளை அவன் எதிர்பார்த்ததைவிட அதிக சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.



அவினாஷ் காலித்தின் இரட்டையான கமாலைக் கொன்றதன் மூலம், காலித்தின் மனதில் வெறுப்பை அதிகமாகவே தூண்டிவிட்டு விட்டோம் எனபதை அறிந்திருந்தான். எனவே, பலுசிஸ்தான் இருக்கும் உளவாளி சையத்தின் செய்தி அவினாஷை ஆச்சரியப்படுத்தவில்லை.



மிஸ்ராவைச் சந்தித்து சையத்தின் அதிர்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்பினான்.


சையத்திடம் இருந்து வந்த ரகசிய குறியீட்டுச் செய்தியிலிருந்து "உருளைக்கிழங்கு" என்ற வார்த்தை அவினாஷைக் கதி கலங்கச் செய்துவிட்டது. .


அவர்களின் உளவுப் பரிபாஷையில் , உருளைக்கிழங்கு என்பது அழுக்குக் குண்டு (Dirty Bomb) எனப்படும் அணுசக்தி செறிவூட்டப்பட்ட ஒரு கொடிய குண்டு .



= = சாகசம் நாளை தொடரும்
 
ஐந்தாவது அத்தியாயம்

அழுக்கு குண்டு


அவினாஷின் மனதில், அவனது ஆசிரியர் பரமஹம்ச துரோணாச்சார்யரின் நிபுணத்துவத்தின் கீழ், பாடம் பயின்ற அவனது ஆரம்ப கால பயிற்சி நாட்கள் நினைவுக்கு வந்ததன. ‘அழுக்கு குண்டு’ என்று அழைக்கப்படும் அந்த ஆபத்தான குண்டைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.


அவன் அலுவலகத்தை அடைந்து, அந்த சதிச்செயலை முறியடிக்க வழிகளை மிஸ்ராவிடம் ஆலோசித்தபோது, மிஸ்ரா மீண்டுமொருமுறை அந்த ஆயுதத்தைப் பற்றி அவினாஷ் தலைமையிலான குழுவிற்கு விளக்கினார்.


ஒரு "அழுக்கு குண்டு" என்பது ஒரு வகை "கதிரியக்க பரப்பு சாதனம் (RDD)" உலகெங்கிலும் ஒரு பயங்கரவாத ஆயுதமாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இது ஒரு "அணுகுண்டு" அல்ல. வழக்கமான வெடி பொருட்களைப் பயன்படுத்தும் ஆயுதம் (டைனமைட் அல்லது டி.என்.டி - TNT போன்றவை) கதிரியக்கப் பொருளை சிதறடிக்க அல்லது பரப்புவதற்கு. ஆயுதத்தின் வெடிக்கும் தன்மை பயன்படுமே தவிர, இந்த வகை குண்டுகள் மூலம் மிக ஆபத்தான கதிரியக்கத் தன்மையை பெரிய அளவு பரப்ப முடியாது.


ஆயுதத்தின் நோக்கம் வெடிப்பால் சேதத்தை ஏற்படுத்துவதோடு ஓரளவிற்கு கதிரியக்கத்தன்மை இருப்பதால் பயத்தையும் பீதியையும் பரப்புவதாகும். மிகச் சக்திவாய்ந்த அணுசக்தித் தயாரிக்கும்போது மிஞ்சும் மீதிப் பொருட்களை வைத்து தயாரிக்கப்படுவதாலோ என்னவோ அழுக்கு குண்டு (Dirty Bomb) என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது.


பெரும்பாலான ஆர்.டி.டி (RDD) க்கள் மக்களைக் கொல்லவோ அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தவோ போதுமான கதிர்வீச்சை வெளியிடாது . எனினும், ஒரு அழுக்கு வெடிகுண்டு வெடிப்பு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க கால அளவுக்கு, ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தக்கூடும்,


மேலும், இந்த வெடிப்பிற்குப் பிறகு சம்பவ இடத்தையு, அதன் சுற்றியுள்ள இடத்தையும் சுத்தம் செய்ய ஏற்படும் செலவு காரணமாக அதிக பொருள் இழப்பை ஏற்படுத்தும். கட்டிடங்கள் இடிக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மக்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அரசிற்கு பெரும் தலைவலி. .


இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகள் தனித் தனியாகவும், ஒன்றாக இணைந்து (GTRI) - Global Threat Reduction Initiative - உலகளாவிய அச்சுறுத்தல் குறைப்பு முயற்சி என்ற பெயரில் ஒரு இயக்கத்தையும் நடத்தி, அதன் மூலம், தகவல் பரிமாற்றம், மற்றும் கதிரியக்கத் தீவிரவாதம் - Radiological Terrorism - என்பதை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்து வருகின்றன.


உலகிலேயே, மக்கள் தொகை அதிகமுள்ள இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் ஒவ்வொரு சதுர கிமீலும் இருக்கும் மக்கள் தொகை அதிகம். எனவே, விளைவு பயங்கரமாக இருப்பதோடு அல்லாமல், வெடிப்பிற்குப் பின்னால் ஏற்படும் செலவும், முயற்சிகளும் மிக அதிகம்.


மிஸ்ரா அவருடைய உரையை முடித்துவிட்டு, அவினாஷ் ஒவ்வொருவராக என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லி முடித்து வெளியே வந்தபோது மழை தூறிக்கொண்டிருந்தது. என்ன ஆனாலும் சரி காலித் மற்றும் அமானுல்லா ஆகியோரின் சதியை முறியடிக்க வேண்டும் என்பதே மிஸ்ராவின் விருப்பமாக இருந்தது. குழுவிற்கும் அதைச் சரியான முறையில் சொல்லியிருந்தார் அவர்.

===========================================.


சிறிது நேரத்தில் காஷ்மீரில் இருந்த இந்திய விமானப்படை தலைவர், டெல்லியில் மிஸ்ராவிடமிருந்து தனக்கு வந்த கட்டளையைக் கேட்டு அதிர்ந்து போனார்.

==========================================


நீங்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து பூமியில் விழும்போது, காற்று கூட உங்கள் எதிரியாக மாறிவிடும்.


குளிர் மைனஸ் - 50 டிகிரியை எட்டிவிடும்.


நீங்கள் பூமிப் பரப்பிற்கு மேலே சென்றதால், புவியீர்ப்பு சக்தி பூமியை விட்டு வெளியேறியதற்காக உங்களை தண்டிக்க விரும்பும். .


அவினாஷ் அசாத்திய வேகத்தில் இரவு வானதைக் கிழித்துக்கொண்டு கீழே வந்துகொண்டிருந்தான். காற்றின் கொந்தளிப்பு அவனது உடலைத் துடிதுடிக்க வைத்தது. அவனது தலைக்கவசத்தில் காற்று அலறியது .


கீ......................ழே காஷ்மீர் பள்ளத்தாக்கு கடல் மை போன்ற நிறத்தில் தகதகத்தது.


அவினாஷ் தனது மணிக்கட்டில் ஜி.பி.எஸ்ஸுடன் பொருத்தப்பட்ட தொலைபேசியில் நிலைமையை சரிபார்த்து, கால்களை மெதுவே அசைத்து, அசைத்து கடலில் நீந்துவது போல காற்றில் நீந்த ஆரம்பித்தான்.


மிகக் கடினமான பாறை நிலப்பரப்பு அவனை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.


= = சாகசம் நாளை தொடரும் .
 
ஆறாவது அத்தியாயம்

சூறாவளியின் கண்


அவினாஷின் பாராசூட் தரையைத் தொட்ட போது, சத்தமேயில்லாமல் தரையில் இரண்டு முறை உருண்டு, எழுந்து கொண்டு, கீழே கிடந்த பாராசூட்டை எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவு சுருட்டி அருகே இருந்த பள்ளத்தாக்கில் எறிந்தான்.


அவினாஷ் மிகத் தனியாக இருந்தான், கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டான். இப்போது நினைத்தாலும், மிஸ்ராவிடம் அவன் கூறிய யோசனை முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக இருந்ததை உணர்ந்தான். அவனுடைய யோசனையின் தீவிரத்தை உணர்ந்த மிஸ்ராவை அது வெறுமனே தலையசைக்கச் செய்ததும் அவனுக்கு ஞாபகம் வந்தது.


மரத்திலிருந்து மண்ணிலிருந்து வந்த வித விதமான வாசனைகளை நுகர்ந்து கொண்டே அவினாஷ் நகர்ந்தான். கீழே விழுந்தபோது கைகளை ஊன்றிய வலி அவனுடைய மணிக்கட்டில் தெறித்தது. இந்தக் குளிரில், இரவில், உடல் அசதியில் தூக்கம் வரமாலிருக்க வலி தேவை என்று நினைத்துக்கொண்டான்.


மிஸ்ரா சுருக்கமாகவே அவனுக்குச் சொல்லியிருந்தார். கண்ணில் பட்டவுடன், குறிபார்த்துக் கொன்றுவிடு (Locate - Aim - Kill) என்பதே அவர் சொன்னது. மரங்களின் அடர்த்தியால் வான வெளிச்சம் கூட இல்லாமல் கும்மிருட்டு. இவ்வளவு மரங்களின் நடுவே சிக்கிக்கொள்ளாமல் குதித்துத் தரையை அடைந்ததே பெரிய ஆச்சரியம்தான் என்று நினைத்துக் கொண்டான்.



சத்தமே இல்லாமல் ஒரு சிறிய குன்றின் குன்றின் மீது அமைந்திருந்த அந்தப் பரந்த கட்டிடத்தை நெருங்கியபோது, கட்டிடத்தின் உள்ளே பல விளக்குகள் ஒளிருவதை அவினாஷ் கவனித்தான்.



இந்திய உளவாளி சையத் சொன்னதைப் போலவே காலித் மற்றும் அவனது வழிகாட்டியான அமானுல்லா கான் தவிர மேலும் சிலர் உள்ளே நடந்து கொண்டிருக்கும் ரகசிய சந்திப்பில் இருக்கலாம், இந்த முக்கியமாணவர்களின் பாதுகாப்புக்காக விசுவாசமான உதவியாளர்களின் மிகச் சிறிய குழு மட்டுமே காவலுக்கு இருந்ததையம், நிச்சயம் அவர்கள் தேவைக்கதிகமான ஆயுதங்களுடன் இருக்கலாம் என்பதையும் அவினாஷ் உணர்ந்திருந்தான்.


அந்த கட்டிடத்தின் முன்னே ஒரே ஒரு பெரிய, பழைய மாடல் ராணுவ லாரி நின்றிப்பதைப் பார்த்தான். அந்த ஒரு வாகனத்தைத் தவிர கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வேறு வண்டிகள் எதுவும் இல்லாமல், அந்த இடம் வெறிச்சோடியிருப்பதையும் கவனித்தான்.


ஒரு சில வினாடிகள் அவினாஷ் நிதானித்தபோது, கழுத்தில் சிலீரென ஒரு முள் போல ஊசி குத்தியதை உணர்ந்தான், அவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு முன்பே, கால்கள் உணர்ச்சியற்றதாக மாறுவதை உணர்ந்தான்.


மெதுவாக, அவனுடைய கட்டுப்பாடு எதுவுமின்றி தரையில் சரிந்தான். முற்றிலும் சுயநினைவின்றி, கீழே விழுந்தபோது அவன் வலது கால் ஒரு முறை துடித்தது. அது தவிர எந்த இயக்கமும் இல்லை.


===========================


அவினாஷ் தரையில் விழுந்ததைச் சுற்றிலும் இயந்திரத் துப்பாக்கிகளுடன் நின்றிருந்த மூன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எந்த வித உணர்ச்சியுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் காலித் வருவதை உணர்ந்து சட்டென விறைப்பானார்கள்.



எந்தவித உணர்வுமின்றி கீழே கிடந்த அவினாஷைப் பார்த்த காலித் பெரிதாக சிரித்தான். "ஆஹா, நம் வலையில் சுறாமீனே விழுந்திருக்கிறதே !! பலூசிஸ்தானில் இருக்கும் நம் ஒற்றன் சையத்துக்கு பெரிய சலாம். அவன் சொன்னபடியே இவன் வந்துவிட்டான்? சபாஷ்" என்று மீண்டும் சிரித்தான்.



"நண்பர்களே, அந்த மிஸ்ராவின் நம்பர் ஒன் லெஃப்டினன்ட் மற்றும் இந்திய ராணுவத்தின் இன்டெலிஜன்ஸ் பிரிவின் பெரும்பாலான புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் மிகவும் புத்திசாலித்தனமான மூளைக்காரனான அவினாஷ் ஜெகந்நாதனை சந்திக்கவும். ” என்று தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சிரித்தான் காலித்.


பின்னர் அவனது தொனி கனமானது, "மிக முக்கியமாக, என் அன்பான இரட்டை, கமாலை சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கொலை செய்ததன் பின்னணியில் உள்ள அபார மூளை."


அந்த இடத்தில் சுற்றி இருந்த யாருமே பேசவில்லை. வெளியே இருக்கும் சில்லிட்ட அமைதியைப் போலவே அங்கும் அமைதி நிலவியது.


அமானுல்லா கான் அவினாஷ் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறார். அவினாஷ் மிகச் சிறிய வயதில் தாயையும், பிறகு காஷ்மீரில் - பாகிஸ்தான் கைவரிசையில் - நடந்த ஒரு குண்டுவெடிப்பில் இந்திய ராணுவத்திலிருந்த தந்தையையும் இழந்தவன். உடன்பிறந்தோர் யார் இல்லாமல் கிட்டத்தட்ட அனாதையாக இருந்த அவினாஷ், மிஸ்ராவின் கண்களில் பட்டபிறகே இந்த நிலை வரை உயர்ந்துள்ளான். இதையெல்லாம் மெதுவே அசைபோட்டபடி, காலித்தைப் பார்த்த, அமானுல்லா கான் புன்னகையுடன் கேட்டார்,


"இவனை என்ன செய்யப்போவதாக உத்தேசம்?" என்றார்.


காலித் உடனடியாக பதில் சொல்லவில்லை. சில வினாடிகள் சென்று, அமானுல்லா கானைப் பார்த்துப் புன்னகைத்தவன்,


"நிறைய, நிறைய செய்ய உத்தேசம்" என்றான்.


அவன் குரலில் இருந்த உறுதி அமானுல்லா கானையே அச்சுறுத்தியது.

=============================


கை,கால்கள் மிக இறுக்கமாக கட்டப்பட்டு, வாயில் நிறையத் துணி அடைக்கப்பட்டு, இரண்டாவது மாடியிலிருந்த ஒரு ஸ்டோர் ரூமினுள் அவினாஷ் வீசப்பட்டான்.


ஒரு இன்ச் கூட நகர முடியாதபடி அந்த ஸ்டோர் ரூமிலிருந்த கண்டாமுண்டா சாமான்களிடையே கிடந்த அவினாஷுக்கு நினைவு திரும்பவில்லை.



= = சாகசம் நாளை தொடரும்
 
ஏழாவது அத்தியாயம்

மறுபடியும் எழ முடியாத அடி


தரைமட்ட மீட்டிங் ஹாலில், ஸ்ரீநகர் பற்றிய ஸ்லைடுகளை அமானுல்லா கானுக்கும், மற்றவர்களுக்கும், அங்கிருந்த ஸ்லைட் ப்ரொஜெக்டர் மூலம் காட்டுவதில் காலித் மும்முரமாக இருந்தான்.


"இது லால் சௌக், நகர சதுக்கம் (சிவப்பு சதுக்கம் என்று பொருள்), ஸ்ரீநகரின் பிரபலமான ஷாப்பிங் பகுதி, இது பரம்பரையாக ஜம்மு & காஷ்மீரை ஆண்டு வந்த அரசியல்வாதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு ஜிஹாதிஸ்ட் (புனித போர்) படைகளால் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தின் அடையாளமாக இருந்தது".



"நான் சொன்னபடி வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு ஜீலம் பூங்காவிற்கு அருகிலுள்ள G. P. O Bund அடியில், ஸ்ரீநகரின் பொது தபால் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த இடம் ஸ்ரீநகரின் நிரந்தர அடையாளமான, அழகிய ஜீலம் நதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. காஷ்மீர் முழுவதும், கிட்டத்தட்ட 70 தபால் நிலையங்கள் உள்ளன, அவற்றில் இந்த ஸ்ரீநகர் ஜி.பி.ஓ மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் இது லால் சௌக்கிற்கும் மிகவும் அருகில் உள்ளது".



"இப்போது அவினாஷ் நம் காவலின் கீழ் இருப்பதால், புதுதில்லியில் இதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் நம் ஹுசைன், ஒரு மறக்க முடியாத பாடம் கற்பிக்க இந்திய உளவுத்துறையின் தலைவர் மிஸ்ராவைப் பார்க்கப் போகிறார். அந்த வேலை முடியட்டும். அதன் பிறகு, இந்த இந்திய நாய் அவினாஷை கவனித்துக் கொள்வோம். ”


அமானுல்லா கான் மெதுவாக தலையை ஆட்டிப் பாராட்டினார்.


அருகிருந்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த இளைஞன், காலித் அருகில் நின்று, “ஐயா, ஏன் இவ்வளவு ஸ்லைடுகள்? நம் மரியாதைக்குரிய பெரியவர் இந்த இடத்தை பலமுறை பார்த்திருப்பார் அல்லவா? ” என்று அமானுல்லா கானைக் குறிப்பிட்டுச் சொன்னான்.



காலித் புன்னகைத்து, “தம்பி, நீ புதியவன். எனவே, நம் பெரியவரின் சத்தியம் உனக்குத் தெரியாது. காஷ்மீர் மண்ணை இந்தியாவிலிருந்து முழுமையாக சுதந்திரப்படுத்திய பின்னரே அவர் அதில் காலடி எடுத்து வைப்பார். நம்முடைய ஜிஹாத் இதுதான். 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் (Article 370) கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை (Special Status) இந்திய அரசு ரத்து செய்த பின்னர், இந்திய நாடாளுமன்றம் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை (Jammu and Kashmir Reorganization Act) நிறைவேற்றியது,



அதில் மாநில அந்தஸ்த்தைக் கலைத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கும் விதிகள் உள்ளன - மேற்கில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் கிழக்கில் லடாக், 31 அக்டோபர் 2019 முதல் இது அமலுக்கு வந்தது. இந்தத் துயர சம்பவம் நடக்கும் முன், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவில் முஸ்லீம் பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட ஒரே மாநிலமாக இருந்தது. பல வருட சிறப்பு அந்தஸ்துக்குப் பிறகு, முந்தைய பிரதமர் இதைச் செய்தார்,



இதனால் தற்போதைய நிலைமை, இந்திய மத்திய அரசைச் சார்ந்தது. இந்த முடிவினால், ஆரம்பத்தில் நிலைமை நமது படைகளுக்குப் பெரிய பின்னடைவாக இருந்தது. ஆனால், நாம் மீண்டும் ஒரே குழுவாக இணைந்து விட்டோம், எனவே நமது ஜிஹாத் தொடர்கிறது" என்றான். புன்னகைத்தபடி.


===========================


அவினாஷிடமிருந்து நீடித்த நீண்ட நேர அமைதி குறித்து மிஸ்ரா கோபத்திலிருந்தார். சிறிது நேரத்திற்கு முன்பு ப்ரியா சதுர்வேதி மற்றும் துஷ்யந்திடமிருந்து அவர்கள் சென்ற விமானம் ஸ்ரீநகர் சென்றடைந்தவுடன் கிடைத்த செய்தியை உடனடியாக உறுதிப்படுத்தினார், அவினாஷின் பாதுகாப்பு நிலைமை குறித்த அவரது கவலை அதிகரித்தது.


பாகிஸ்தானுக்குள் நுழையும் அந்த ஆபத்தான பயணத்திற்கு அவினாஷ் எந்த உதவியாளரையும் கூடச் சேர்த்துக் கொள்ளாததில் மிஸ்ராவுக்கு வருத்தமே மிஞ்சியது. .


சில நாட்களுக்கு முன்னர், உள்ளூர் சந்தைக்குச் சென்ற போது, தனது மனைவி விபத்துக்குள்ளானபடியால், அவரது நிலைமை பற்றி அறிந்து வர மிஸ்ராவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணா அனுமதி கேட்டிருந்தார். அவர் மனைவி குணமடைந்து கொண்டிருந்தாலும், கிருஷ்ணாவுக்கு மனைவியைப் பிரிந்து எந்த வேலையும் ஓடவில்லை என்பதை மிஸ்ரா கவனித்தார்.


தலையை அசைத்து கிருஷ்ணாவை அருகே அழைத்த மிஸ்ரா, “கிருஷ்ணா, நீங்கள் சென்று உங்கள் மனைவியைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கவனம் உங்கள் மனைவிக்கு இந்த சமயத்தில் நிச்சயம் தேவை என்பது எனக்கு தெரியும். தயவுசெய்து கவனித்துக் கொண்டு நாளை திரும்பி வாருங்கள். அவினாஷிடமிருந்து இதுவரை எந்த செய்தியும் இல்லாமல், அவனுடைய அழைப்புக்காக காத்திருப்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை. மேலும், காலையிலிருந்து மிக அதிக மழை பெய்து வருகிறது, எனவே இரவு உணவிற்குப் பிறகு நான் இங்கேயே அதிகாலை வரையில் தூங்குவேன். எப்படியிருந்தாலும், பாதுகாப்பு அணியின் கோவர்த்தனும் முராரியும் இங்கே இருக்கிறார்கள். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அவர்களில் ஒருவரை அழைப்பேன். நாளை பார்க்கலாம். குட் நைட். ” என்றார்.



கிருஷ்ணா 20 வருடங்களுக்கும் மேலாக மிஸ்ராவின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணி புரிகிறார். மிஸ்ராவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவர் மகிழ்ச்சியுடன் புன்னகைத்துவிட்டு, மிஸ்ராவுக்கு மரியாதையுடன் சல்யூட் அடித்துவிட்டு, அறைக்கு வெளியே காவலுக்கு நிற்கும் கோவர்த்தன் மற்றும் முராரியிடம் சில நிமிடங்கள் தெளிவாக கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு நகன்றார்.


============================


அதிகாலை 4 மணி அளவில், மிஸ்ரா சைலன்ஸர் பொருத்தப்பட்ட, சக்திவாய்ந்த .44 மாக்னம் (Magnum) துப்பாக்கியால் சுடப்பட்டார்.


உலக ஆயுத மார்க்கெட்டில் மாக்னம் மிக நம்பிக்கையான கைத்துப்பாக்கி என்று பெயர் வாங்கியது.


நெற்றிப் பொட்டில் வட்டவடிவத் துளையுடன் மிஸ்ரா தரையில் கிடைக்க, அவரது ரத்தம் சிறிய குட்டையாக மாறி மெதுவே நகர்ந்து கொண்டிருந்தது. மிஸ்ராவின் கண்கள் திறந்திருந்தன.



மழை இரக்கமின்றி விளாசிக் கொண்டிருந்தது.



மிஸ்ராவின் அறைக்கு வெளியே, எதிர்பாராத மயக்க ஊசியின் விளைவால் கோவர்த்தன் மற்றும் முராரி நடந்த எதையும் அறியாமல், தரையில் சுயநினைவற்றுக் கிடந்தனர்.



= = சாகசம் நாளை தொடரும்
 
எட்டாவது அத்தியாயம்

தடையறத் தாக்கு


அழைப்பு வந்ததும் ஜெனரல் மிஸ்ராவின் குரலை எதிர்பார்த்து ப்ரியா சதுர்வேதி அலைபேசியை எடுத்தாள்.


ஆனால் அது மிஸ்ராவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான கிருஷ்ணா தான், அவர் குரலில் பயமும், படபடப்பும் தெளிவாகத் தெரிந்தது..


"மேடம், இதை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நம் பாஸ் ஜெனரல் மிஸ்ரா சிறிது நேரத்திற்கு முன்பு சில தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். எனக்கு மிகவும் அவசர வேலை இருந்ததால் நான் வெளியே சென்றிருந்தேன். இங்கு கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நான். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வெளியே இருந்திருப்பேன். திரும்பி வரும் வழியில், நம் அலுவலகத்தின் வாசலில் ஒரு பெரிய போலீஸ் படை இருந்தது. நான் வருவதற்கு முன்னரே, எனக்குத் தகவல் தெரிவிக்க போலீஸ் முயன்றுள்ளது.



பல முயற்சிகளுக்குப் பிறகுதான் காவல்துறையினர் எனது எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது. நான் தகவல் வந்தபோது அலுவலகத்திற்குத்தான் வந்து கொண்டிருந்தேன். பாதி வழியில் இருந்தேன்".



"பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிவிப்பதற்கு முன்பு மேஜர் அவினாஷிற்குத் தகவல் தர முயற்சித்து, அவருடைய எண் இணைப்பில்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல். உங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்து முயற்சித்தேன். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் இணைப்பில் வந்தீர்கள். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை .... "



மேலும் பேசுவதற்கு முன்பே ப்ரியா குறுக்கிட்டாள்..



"மிஸ்டர் கிருஷ்ணா, மிகவும் கொடூரமான தகவல். என்னால் சுத்தமாக நம்பமுடியவில்லை. து. அவினாஷ் எந்தத் தகவலும் இல்லாமல் ஏன் திடீரென்று தொடர்பிலிருந்து மறைந்துவிட்டார் ? அவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?"



"ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி அவருடன் பேச பல முறை நானும் முயற்சித்தேன், என்னால் அவர் எண்ணை அடைய முடியவில்லை. இப்போது இங்கிருந்து மீண்டும் நான் முயற்சி செய்கிறேன் நீங்களும் நமது பாதுகாப்பு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, பாதுகாப்பு அமைச்சரிடம் நேரடியாக பேசுங்கள். இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை… .. ”


ப்ரியாவிற்கு குரல் கமறியது. மிஸ்ராவா? கடவுளே, அந்த நல்லவருக்கா இந்த கதி?


“மேஜர் அவினாஷ் பற்றி எந்த தகவலும் இல்லை. எனக்குத் தெரிந்தவரை அவர் கடந்த இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை. அவரது மொபைல் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல் செய்கிறேன். நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன்.ஜெனரல் மிஸ்ராவுக்கு நடந்த கொடூரம் பற்றி என்ன சொல்ல? நான் மிகவும் வருந்துகிறேன். " என்றார் கிருஷ்ணா.


அவரது குரலில் நடுக்கம் இருப்பதை ப்ரியாவால் உணர முடிந்தது.



ப்ரியாவுக்கு கிருஷ்ணாவைப் பற்றி நன்கு தெரியும். ஜெனரல் மிஸ்ராவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் அவர், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக மிஸ்ராவின் கீழ் பணியாற்றி வருகிறார். திருமணம் செய்யாமல் எப்போதும் அலுவலகத்தில் இருப்பதில் புகழ் பெற்ற ஜெனரல் மிஸ்ரா, குடும்பத்துடன் தனக்கு உதவிகள் செய்யும் கிருஷ்ணாவுடன் மிகவும் நல்ல நட்பு பாராட்டியதில் ஆச்சரியமில்லை.



கிருஷ்ணா சொன்னபடி அடுத்த 20 நிமிடங்களில் மீண்டும் அழைத்தார்.



"மேடம், நான் நமது அமைச்சரிடம் பேசினேன். வேலை எவ்வளவு முக்கியமானது என்றாலும், அதை உங்கள் டெபுடி துஷ்யந்திடம் ஒப்படைத்துவிட்டு, உங்களை அழைத்துச் சென்ற அதே விமானத்தில் உடனடியாக டெல்லிக்குத் திரும்புமாறு அமைச்சர் கூறினார். 'இது மிகவும் முக்கியமான விஷயம். ப்ரியா விரைவில் இங்கு வரட்டும்' என்பதுதான் அவர் சொன்னது."



ப்ரியா சதுர்வேதி உடனடியாக டெல்லி திரும்ப வாக்குறுதி அளித்த பின்னர் கிருஷ்ணா இணைப்பைத் துண்டித்தார். .


==============================


ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்ததும், அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக தனது உதவி ஆய்வாளரை அழைத்தார். விஷயத்தை அவரிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு இருவரும் ஜீப்பில் ஏறி தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.


அங்குள்ள யாருக்கும் உருப்படியாக எந்தத் தகவலும் தெரியாத நிலையில் அவர்கள் இருவரும் தலைமை போஸ்ட் மாஸ்டர் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது ..


தலைமை போஸ்ட் மாஸ்டர் வந்தபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டது.


மாலை மணி நாலு இருபதற்கு ஜீலம் நதியருகேயிருந்த அந்த 'அழுக்கு குண்டு' வெடித்துச் சிதறியது.



= = சாகசம் நாளை தொடரும்
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom