Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
ஒரு மணி நேரம் கழித்து, ஓவியர் மாருதியின் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட காரிகை உயிர்பெற்று வந்தது போல், தயாராகி வந்த ரதிதேவியைக் கண்டு, மெய் மறந்து நின்றான் கலாரசிகன்.


பின்புறம் ஒலித்த காரின் ஹாரன் ஒலியிலேயே சுய நினைவிற்கு வந்தவன், "ம்! வா, வா, டைம் ஆகிடுச்சு பாரு" என்று அவளின் கரம் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான்.


சரியாய் பதினொன்றரை மணிக்கு அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து, ரிஜிஸ்திரர் கொடுத்த புத்தகத்தில் கையெழுத்துப் போட்டவன், "ம்! சைன் பண்ணு பேபி" என அவளிடம் பேனாவை நீட்ட,


அதை வாங்கியவள் ஒரு கணம் தயங்கி நின்றாள்.


"ம்!" என்றவனின் அதட்டல் நிறைந்த உறுமலில், மறுகணம் தானும் கையெழுத்து போட்டுவிட்டு அவன் கையெழுத்தைப் பார்த்தாள்.


சத்தியமாக அவன் கிறுக்கி வைத்திருந்த கோழிக்கிறுக்கலில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.


"கங்ராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிசஸ் அக்னிமித்ரன்" என ரிஜிஸ்திரர் வாழ்த்த, கண்களில் நன்றியுணர்வுடன் அவரை நிமிர்ந்துப் பார்த்த ரதிதேவி, இனி காலம் முழுமைக்கும் தன் பெயரின் பின்னால் பயணிக்கப் போகும் அப்பெயரை மனதிற்குள் உருப்போட ஆரம்பித்தாள்.


"தான்க்யூ சார்" என்று புன்முறுவல் பூத்தவன்,


"என்ன யோசனை பேபி? இந்தா மாலையைப் பிடி" என அவளின் கையில் மாலையை கொடுத்து புகைப்படக்காரரின் முன்னிலையில் அவள் கழுத்தில் அந்த வெள்ளை ரோஜாக்கள் நிறைந்த மாலையை அணிவித்தான்.


பதிலுக்கு அவளும் அவனுக்கு மாலையை அணிவிக்க, அதனை தலை குனிந்து வாங்கிக்கொண்டான். நேற்று மாலை நடந்ததென்ன? இப்போது நடப்பதென்ன? என்று வாழ்வே கசந்தது அவளுக்கு.


அவர்களின் அருகில் வந்த அவனின் பி.ஏ சூர்யா, "சார் இந்தாங்க தாலி" என நீட்ட, அதை வாங்கி அவளின் கழுத்தில் கட்டுவது போல் கைகளை விரித்து முன்னோக்கி வந்தவன், அவள் தலை குனிந்து அதை ஏற்கப்போகும் சமயத்தில் தாலியை கட்டாமல் கைகளை கீழிறக்கினான்.


அவள் ஏன் எனும் விதமாய் குழம்பிப்போய் பார்க்க, "இல்ல பேபி, நான் இப்படியொரு இடத்துல உன் கழுத்துல தாலிக்கட்ட மாட்டேன். உன் குடும்பமும் என் குடும்பமும் சுத்தி நின்னு, மொத்த கூட்டமும் நம்ம தலைல அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் செய்யறப்ப தான் தாலிக் கட்டுவேன். அதனால இப்ப இது உனக்கு வேணாம் பேபி. ஃபர்ஸ்ட் உங்க வீட்டுக்குப் போவோம்" என்று அவளை காருக்குள் ஏற்றி, எஞ்சினை இயக்கினான்.


கார் அசுர வேகத்தில் வழுக்கிக்கொண்டு நேரே சந்தானத்தின் வீட்டின் முன்பு போய் நின்றது.


ஒரு கையில் மாலையும் மறுகையில் ரதியையும் பிடித்துக்கொண்டு புது மாப்பிள்ளை மிடுக்குடன், அவ்வீட்டிற்குள் நுழைந்தான் அக்னிமித்ரன்.


வரவேற்பறையில் உட்கார்ந்து அச்சடிக்கப்பட்டு வந்திருந்த திருமணப் பத்திரிக்கைகளை சரி பார்த்துக் கொண்டிருந்த ப்ரித்விஹாசன், சந்தானம், கல்பனா, பிரகாஷ் மற்றும் அவர்களின் ஒன்றிரண்டு குடும்பத்தினர் முதலானோர், உள்ளே நுழைந்தவர்களைக் கண்டு, அதிர்ந்துப்போய் எழுந்து நின்றனர்.


நாலு கால் பாய்ச்சலில் அவர்களை நோக்கி ஓடி வந்த கல்பனா, ரதியின் கன்னத்தில் அறைய தன் கையை ஓங்க, ஓங்கிய கை ஓங்கியபடியே அந்தரத்தில் நின்றது.


காரணம், தன் மனைவிக்கும், மாமியாருக்கும் இடையே புகுந்து, தன் மனைவிக்கு கவசமாய் நின்றிருந்தான் அக்னிமித்ரன்.


"ஹலோ மாமியாரே, என்ன இப்படி கோபப்படுறீங்க? ரொம்பத் தப்பாச்சே. இப்ப அவ மேல கை வைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏன்னா அவ இப்போ மிஸ் ரதிதேவி சந்தானம் இல்ல. மிசஸ் ரதிதேவி அக்னிமித்ரன். ஞாபகம் இருக்கட்டும்!” என செருக்குடன் கூறினான்.


தன்னை கொலைவெறியுடன் பார்த்தவரை துச்சமாக ஒதுக்கிவிட்டு, சந்தானத்தின் அருகே சென்றவன், "அன்னைக்கு என்ன சொன்னீங்க?" என தன் நாடியில் கை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தான்.


பின், "ஓ! யா, ஆலமரம், ஆலமரம். இன்னைக்கு இந்த அக்னிமித்ரன் அடிச்ச ஒத்த ஆப்புல அந்த ஆலமரம் மல்லாக்க விழுந்துருச்சே. ஹாஹாஹா! இதுக்கு தான் ஓவரா அலம்பக் கூடாதுனு சொல்றது மாமனாரே. ப்ரித்வி ப்ரோ உங்களுக்கு தான் என்ன ஆறுதல் சொல்றதுனே தெரியல. எனிவே நவ் ஷீ இஸ் மை வைஃப். சோ சேன்ஜ் யுவர் மைண்ட்" என்றவன் டீபாயில் இருந்த பத்திரிக்கைகளை தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த லைட்டரை கொண்டு பற்ற வைத்து, லைட்டரை மேல் நோக்கி தூக்கி எறிந்தான்.


அனைத்தும் பிடித்து எரிந்து கருகியது, பிரித்வியின் வயிற்றை போன்று.


"டேய்! யாரு முன்னாடி வந்து என்ன பேசுற? கல்யாணம் ஆகிட்டா ஒன்னும் பண்ண முடியாதுனு நெனச்சியா? இதை எப்படி மேனேஜ் பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்டா. எங்களை சின்ன பப்பானு நெனச்சியா? எங்கப் பொண்ணு நாங்க என்ன சொன்னாலும் செய்வாடா. பார்க்கறியா?" என்று பிரகாஷ் நின்ற வாக்கிலே குதிக்க,


"ரதி பேபி இப்ப உன் குடும்பத்துக்கிட்ட அத்தான் கொஞ்சம் தனியா டீலிங் பேச வேண்டியிருக்கு. நீ கொஞ்சம் உன் ரூமுக்குப் போறியா?" என்றவன், ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணியம்மை மற்றும் பிரகாஷின் மனைவி மீனாக்ஷியிடம், ரதியை மேலே அழைத்துச்செல்லுமாறு சைகை காட்டினான்.


அவர்களும் அவளை மேலே அழைத்துச் செல்ல, நேற்றிரவு நடந்ததை அவன் அவர்களிடம் சொல்லி விடுவானோ எனப் பயந்த ரதிதேவி, அக்னிமித்ரனைப் பார்த்து வேண்டாம் எனும் விதமாய் தலையாட்டிக்கொண்டே மாடிப் படியேறி மேலே சென்றாள்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 13



"என்ன சொன்னீங்க மிஸ்டர் பிரகாஷ்? நீங்க என்ன சொன்னாலும் உங்கப் பொண்ணு கேட்பாளா? ஆமா நீங்க சொல்றது சரி தான். உங்கப் பொண்ணு நீங்க என்ன சொன்னாலும் கேட்பா தான். ஆனா என் வைஃப் மிசஸ் ரதிதேவி அக்னிமித்ரன் நீங்க சொல்றதை கேட்க மாட்டாளே. அவளோட லவ்வபல் ஹஸ்பண்ட் இந்த அக்னி சொல்றதை மட்டும் தானே கேட்பா? மாமியாரே எங்க ஓடிப்போய் உங்க ஆஃபீஸ் ரூம் லாக்கர்ல நீங்க ஒளிச்சி வச்சிருந்த அந்த ஃபைவ் ஹண்ட்ரெட் க்ரோர்ஸ் ப்ராஜெக்ட் பத்தின ஃபைல்ஸ் இருக்கானு பாருங்க. போங்க, போங்க" என்றவுடன் திடுதிடுவென மாடிப்படிகளில் ஏறியவள், இரண்டு நிமிடங்களில் உக்கிரமாய் கீழிறங்கி வந்தாள்.


"டேய்! என் வீட்டிக்குள்ள வந்து என் லாக்கர்லயே திருட உனக்கு எவ்வளவு தைரியம்?" என அவனின் சட்டைக் காலரைப் பிடிக்க,


அவளின் கையை பட்டும் படாமல் விலக்கி விட்டவன், "என்ன சொன்னீங்க? எனக்கு சரியா கேட்கலையே மாமியாரே? நான் எதை உங்க வீட்லயிருந்து திருடிட்டுப் போனேன்?" என்று நைச்சியமாகக் கேட்டான்.


"டேய்! நடிக்காதடா. அந்த ஃபைவ் க்ரோர்ஸ் ப்ராஜெக்ட் பத்தின ஃபைல்ஸை தான்டா கேட்கறேன். அதை நீதானே திருடியிருக்க, சொல்லுடா? எங்க வச்சிருக்க?" என அதை வைத்து மனதில் பல கோட்டைகளை கட்டியவள், இப்போது அது இல்லை எனவும், ஆங்காரமாகக் கத்திக்கொண்டிருந்தாள்.


அப்படித்தானே அக்னிமித்ரனுக்கும் இருந்திருக்கும்?


சந்தானத்தின் பக்கம் திரும்பியவன், "மாமனாரே, உங்களுக்கு இந்த ஃபைவ் க்ரோர்ஸ் மேட்டர் பத்தி ஏதாவது தெரியும்? ம்ஹூம் தெரியாது இல்ல? ஆனா உங்க சகதர்மினி ஏதோ சொல்றாங்களே. என்னன்னு கேளுங்க" என கல்பனாவை மாட்டிவிட, சந்தானத்தின் கழுகு பார்வையில், பயத்தில் தொண்டைநீர் வற்றிப்போய், கைகளைப் பிசைந்துகொண்டு நின்றாள் கல்பனா.


இடையில் தான் கோமாளியாக்கப்பட்ட கடுப்பிலிருந்த பிரித்விஹாசனோ உச்சஸ்தாயில் கத்தினான்.


"டேய்! நீ எப்படிப்பட்ட பொம்பளை பொறுக்கினு எனக்கு தெரியும்டா. எவ்வளவு தைரியமிருந்தா எங்க வீட்டுப் பொண்ணையே பேசி மயக்கி இப்படி பண்ணியிருப்ப?" என தன் பங்கிற்கு சாடினான்.


"பாஸ்! என்ன பாஸ் பொசுக்குன்னு பொம்பளப் பொறுக்கினு சொல்லிட்டீங்க? அப்ப நம்ம யாரு பாஸ்? கேரவனுக்குள்ள வச்சு நீங்க நடத்துற மன்மத பூஜையெல்லாம் எங்களுக்கு தெரியாதுனு நினைச்சீங்களா? வீடியோவே இருக்கு பாஸ். ஒரு காபி வேணுமா? போன வாரம் மைதிலினு மேக்கப் ஆர்ட்டிஸ்டா வந்த ஒரு பொண்ணுக்கூட செம மேட்டராமே? சத்தியமா சொல்றேன் பாஸ், இதுக்கு முன்னாடி எவனுக்கும் இப்படி மாமா வேலை பார்த்ததில்ல. ஆனா உங்களுக்கு பார்க்க வேண்டியதாப் போச்சு. அந்தப் பொண்ணை மட்டும் பார்த்த நீங்க, அவ கொண்டு வந்த பட்டன் கேமராவைப் பார்க்காம விட்டுட்டீங்க. இப்ப உங்க ஆணிவேரே ஐயா கையில" என்று காலரை தூக்கி விட்டு, மிகத்தோரணையாக சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.


இதற்கு மேல் பிரித்விஹாசனால் வாய் திறக்க முடியும்? ம்ஹூம் மொத்த தமிழகமும் அவனின் நடிப்பு திறமையைக் கண்டு மெச்சி, அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.


இதில் இப்போது போய் இது போல் காணொளி வெளியானால் கல்பனாவின் தம்பி தரையைக் கவ்வ வேண்டியது தான். தன் கையறு நிலையை உணர்ந்தவன், எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான்.


பிரகாஷ் தான் ரதியின் வாழ்க்கையை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார்.


"அண்ணா, என்னண்ணா? இன்னும் இவனை உள்ள விட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க? அடிச்சி வெளிய துரத்துங்கண்ணா" என்று கடுப்பில் கூற,


"மாமியாரே" என்று மறுபடியும் கல்பனாவின் புறம் திரும்பினான் அக்னிமித்ரன்.


‘அய்யயோ! இப்ப என்ன குண்டை தூக்கிப் போடப் போறானோ தெரியலையே?’ என்று பீதியில் கல்பனா அவனை அரண்ட முகத்துடன் பார்த்திருக்க,


"எங்க மறுபடியும் குடுகுடுனு ஓடிப்போய் என் மாமனார் பண்ற இல்லீகல் பிசினஸ் பத்தின டாக்குமென்ட்ஸ், பினாமி பத்தின டாக்குமென்ட்ஸ் எல்லாம் சரியாயிருக்கானு பார்த்துட்டு வாங்க. போங்க, போங்க" என்றதுமே தெரிந்துவிட்டது அவனின் திரு(விளையா)டல்கள்.


"பயப்படாதீங்க. அதெல்லாம் இப்ப ஐ.பி.எஸ் ஆஃபீஸர் அசோகமித்ரன் கையில பத்திரமா இருக்கு. நீங்க பிரச்சனை பண்ணினா மட்டும் தான் ஒவ்வொன்னா வெடிக்கும். பூம்! பூம்! பூம்!”


“அய்யோ! வேணாம் தம்பி. நாங்க உன் வீட்லயிருந்து அதெல்லாம் திருடிட்டு வந்தது தப்பு தான். அதுக்கு பதிலாக உன் பேங்க் அக்கௌன்ட்ல எவ்வளவு பணம் வேணுமோ சொல்லு, ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுறோம். ஆனா நீ எங்க டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் திரும்ப கொண்டு வந்து கொடுத்திடனும். அப்படியே இந்த மேரேஜ் சர்ட்டிஃபிகேட்டையும் கொழுத்திரனும். இல்ல, நீ பத்து வருஷத்துக்கு முன்னாடி ரௌடியா இருந்த சவுண்ட் சந்தாவை இப்ப நேர்ல பார்க்க வேண்டியிருக்கும்" என இவ்வளவு நேரம் மிக்சர் சாப்பிடுபவர் போல் அமைதியாக இருந்த சந்தானம், கடைசி வாக்கியத்தில் நம்பியாராய் மாறி மிரட்ட,


"அப்பாடா! இப்ப தான் என் மாமனாருக்கு வாய்ஸ் வந்திருக்கு. சிறப்பு! மாமனாரே, எவ்வளவு கஷ்டப்பட்டு பிளான் போட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சேன் தெரியுமா? இப்படி பொசுக்குன்னு கொடுடான்னு கேட்டா எப்படி கொடுக்கறது? பதிலுக்கு ஏதாவது லம்ப்பா வாங்க வேண்டாம்?”


"சரி சொல்லு உனக்கு எவ்வளவு வேணும்?"


"நீங்க போடுற பிச்சைக் காசெல்லாம் எனக்கு வேண்டாம். மொத்தமா வேணும்."


"இல்ல, புரியல?"


"உங்கப் பொண்ணை எனக்கு ஊரறிய கட்டிக்கொடுங்கனு சொல்றேன். இப்ப ப்ரைம் மினிஸ்டர் முன்னாடி பிரித்விகூட நடக்கயிருக்கற கல்யாணத்தை என்கூட நடத்தி வைங்க. அப்படியே நீங்க பண்ணிட்டிருக்க எல்லா தப்பையும் நிறுத்தணும். இனிமே பிசினஸ்ல நியாய வழியில மட்டும் தான் சம்பாதிப்பேனு ஒரு பேப்பர்ல எழுதி கையெழுத்து போட்டுத் தரணும். இல்ல? நம்ம பிரதர் அசோகமித்ரன் ஐ.பி.எஸ் களி திங்க ஏற்பாடு பண்ணுவாரு. சொல்லுங்க எப்படி வசதி?"


"அதெப்படி முடியும்? ஊரறிய அவங்க தான் பொண்ணு மாப்பிள்ளைனு சொல்லியாச்சு" என்று அவனின் உடன்படிக்கையை கல்பனா மறுக்க,


"சோ வாட்? நாங்க லவ்வர்ஸ்னு சொல்லுங்க. இப்ப தான் எங்க லவ் மேட்டர் உங்களுக்கு தெரியும்னு சொல்லுங்க. பெருசா ப்ராபளம் எதுவும் வராது. ஹலோ ப்ரித்வி பாஸ், நீங்களும் எங்கக் காதல் தெரிஞ்ச மறு நிமிசமே, எங்கிருந்தாலும் வாழ்கனு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டதா சொல்லுங்க. சின்னதா ஒரு ப்ரெஸ்மீட்டுக்கும் அரெஞ்ச் பண்ணிடுங்க. அப்புறம் பாருங்க உங்க ஃபேன்ஸ் ரெஸ்பான்ஸை. உங்களை தலையில தூக்கி வச்சு கொண்டாடுவாங்க.” என்று அலட்டாமல் சொன்னான்.


"நீ சொல்ற கதையை என் பி.ஏ கூட நம்பமாட்டான்" என்று சந்தானம் தீர்க்கமாய் முடியாதென்று கூற,


"யார் நம்பினா என்ன? நம்பாமப் போனா எனக்கென்ன? எனக்கு தேவை உங்க பொண்ணோட எனக்கு ஊரறிய கல்யாணம். என்ன சொல்றீங்க மாமனாரே? இதுக்கு ஓகேனா நான் இப்பவே என் பேரெண்ட்ஸை வரச் சொல்றேன். இல்ல, அசோகமித்ரன் கிட்ட சொல்லி எல்லாத்தையும் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்ல சேர்க்க சொல்லிடுறேன். அதுக்கப்பறம் சட்டப்படி என் பொண்டாட்டியை நான் என் கையோடவே கூட்டிட்டுப் போயிடுவேன். சிம்ப்பிள்! எப்படிப் பார்த்தாலும் லாஸ் உங்களுக்கு தான். சோ யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க" என்று வீட்டில் சட்டமாய் அமர்ந்துகொண்டு, தன் அலைபேசியை தடவிக் கொண்டிருந்தான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
அனைவரையும் முறைத்துப் பார்த்த ப்ரித்வி தன் காரை கிளப்பிக்கொண்டு பறந்து விட்டான். அதற்கு மேல் அங்கிருக்க அவனுக்கென்ன பைத்தியமா?


சந்தானம், பிரகாஷ் மற்றும் கல்பனா ஆகிய மூவரும் அருகில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தனர்.


அறையினுள் நுழைந்த அடுத்தகணம் கல்பனாவின் கன்னத்தில் தன் ஐவிரல் பதிய ஓங்கி அறைந்தார் சந்தானம். பொறி கலங்கி அறையின் மூலையில் போய் விழுந்தாள் கல்பனா.


"திருட்டு நாயே! ஐந்நூறு கோடியையும் தனியா அமுக்கலாம்னு பார்த்தியாடி? முப்பது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தோம்னு மறந்து போச்சோ?" என அவளின் கொண்டை முடியை திருகிக்கொண்டே கேட்க,


"இல்ல, வேணாம் வேணாம்" என வலியில் முகம் சுருக்கி கைக்கூப்பினாள் அவள்.


“ச்சீ!” என அவளை கீழே தள்ளிவிட்ட சந்தானம், அறையின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார்.


"இப்போதைக்கு அவன் முடிவுக்கு சம்மதிக்கறதைத் தவிர நமக்கு வேற வழி இல்லண்ணா. ரிஜிஸ்டர் மேரேஜ் வேற பண்ணிக்கிட்டான். இது வெளிய தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிரும். நம்மளால இப்ப ஒன்னுமே செய்ய முடியாதுணா" என்று பிரகாஷ் சூழ்நிலையை விளக்க,


"அது சரிடா. ஆனா, நம்ம இல்லீகல் பிசினஸ் பத்தின டாக்குமென்ட்ஸ், பினாமி பத்தின டாக்குமென்ட்ஸ் எல்லாம் அவன் கைக்கு போயிடுச்சே. போலீஸ்ல மாட்டினா மொத்த சொத்தும் பறி போய், பேர் போய், நடுரோட்ல நிற்க வேண்டியது தான். அந்த அசோகமித்ரன் வேற நியாயமான போலீஸ்காரன். அதை எப்படிடா அவன்கிட்டயிருந்து திரும்ப எடுக்கறது?" என்று தாடையைத் தடவிக் கேட்க,


"ஆமா அது வேற அவன்கிட்ட மாட்டிக்கிச்சில்ல? ஒருவேளை ரதி தான் அவன்கிட்ட எடுத்துக் கொடுத்திருப்பாளோ? இல்லைனா, அது எப்படிண்ணா அவன் கைக்கு போயிருக்கும்? சிசிடீவில கூட எதுவும் ரெகார்ட் ஆகல." என்று விழி பிதுங்கி நின்றார் பிரகாஷ்.


அவர்கள் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, யாரிடம் கோபம் கொண்டாலும் சந்தானத்திடம் மட்டும் கோபம் கொள்ள இயலாத கல்பனா, "என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு" என்று வறண்ட குரலில் கூறினாள்.


என்னவென்று இருவரும் அவளை பார்க்க, உதட்டோரம் வழிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு, தனது கொண்டை முடியை அள்ளி முடிந்துகொண்டே எழுந்தவள், "நம்ம எல்லாரையும் இப்ப ஒருத்தியால தான் காப்பாத்த முடியும்" என்று பீடிகை போட்டாள்.


அண்ணன் தம்பி இருவரும் யாரென அவள் வாயிலிருந்து வரும் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தனர்.


அவள் வாயிலிருந்து வந்த பெயரோ, மித்ர வர்ஷினி.


"இப்ப வர்ஷூவால மட்டும் தான் நம்மளை காப்பாத்த முடியும். பூர்ணிமா ஏற்கனவே அசோகமித்ரனுக்கு நம்ம வர்ஷினியை பொண்ணு கேட்டா. வர்ஷூ மட்டும் அந்த வீட்டுக்குள்ள மருமகளா நுழைஞ்சிட்டா? மொத்த குடும்பத்தையும் நம்ம கால்ல விழ வச்சிடலாம். அவள் ரொம்ப தைரியமானவ. புத்திசாலியும் கூட. அதனால நம்ம டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் ஈஸியா நமக்கு எடுத்து தந்துருவா" என்று சொல்ல, மற்றைய இருவரும் தீவிரமாய் யோசித்தனர்.


இருவருக்கும் அவள் சொல்வது சரி என்றே தோன்றியது.


ஆனாலும் பிரகாஷ், “இதுக்கு வர்ஷினி ஒத்துக்கணுமே. அவ தான் கல்யாணமே வேணாம்னு ஒத்தக்கால்ல நிற்கறாளே?" என்று தன் மகளின் குணம் அறிந்தவராய் கூற,


"அவளை ஒத்துக்க வைக்கறது என் பொறுப்பு" என்று முன் வந்தார் சந்தானம்.


அவ்வீட்டில் அவள் மதிக்கும், மரியாதை கொடுக்கும் ஆள், அவர் ஒருவர் மட்டுமே! அந்த நம்பிக்கையில் தான் சந்தானம் அவ்வாறு கூறி தன் தலையை கொடுத்தார்.


இவ்வாறு நிகழும் பல பிரச்சனைகளுக்குள் மித்ர வர்ஷினியும் இணைந்தால் என்னாகுமோ?
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
இந்த நாவல் உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க ஜிலேபிஸ்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு,

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom