Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
உதய்கிருஷ்ணாவிடம் வேறு விசயங்களைப் பேசி அவனை இலகுவாக்கி, மெதுவாக அனன்யா விசயத்தைப் பேசலாம் என்றிருந்த உத்ராவின் திட்டத்திலோ ஒரு வியாழன் கோளையே தூக்கிப்போட்டாள் அனன்யா.

கவிலயா தன்னருகில் வந்த விக்கியிடம், “அவங்க தான் அனன்யாவா?” என்று கோபமாய் வினவினாள்.

“அவ யாரா இருந்தா உனக்கென்ன?” என்றான் படக்கென்று.

தன் மேல் முதன்முறையாய் அவன்பட்ட எரிச்சலை அவள் பொருட்படுத்தவில்லை.

“அப்போ அவ தான் அனன்யா இல்ல? இதுவரைக்கும் எப்படியோ, இனிமே நீங்க அவக்கூடல்லாம் பேசக்கூடாது. ஏன்னா ஏன்னா அது எனக்குப் பிடிக்கல.” என்றவளை அவன் அதிர்ச்சியாகப் பார்க்க, உதய்கிருஷ்ணாவும் உத்ராவும் அவ்விடம் சேர்ந்தார்கள்.

அப்போது தான் ட்ரெம்ப்லிங்கிலிருந்து இறங்கிய அமிகா, “நீ ஏன் விக்கிய கல்யாணம் பண்ணிக்கல உதி? இந்த அன்க்கிள் நமக்கு வேணாம்.” என்று உதய்கிருஷ்ணாவைக் காட்டி முகம் கோணினாள்.

அனைவரின் முகமும் விளக்கெண்ணெய் குடித்தது போலானது. ஏற்கனவே அனைவரின் மனநிலையையும் அனன்யா எனும் ஒருத்தி வெவ்வேறு அளவில் சிதைத்திருக்க, இவள் வேறென்று அமிகாவின் கன்னத்தைக் கிள்ளினாள் உத்ரா.

“அதிகப் பிரசங்கி! உன்ன அந்த ராட்டினத்துல ஏற அலோவ் பண்ணாருன்னா, நீ அந்த தாத்தாவக் கூட என்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுவ” என்று சூழ்நிலையின் கனத்தை குறைத்தாள்.

உதய்கிருஷ்ணாவிடம் விடைபெற்று அனைவரும் வீட்டிற்கு செல்லும்போது பக்கத்தில் அம்மன் ரெஸ்டாரண்டில் காரை நிறுத்தி பானுமதிக்காக நெய் பனியாரம் வாங்கினான் விக்கி. இது ஏன் தனக்கோ‌ உதய்க்கோ தோன்றவில்லை என்று உள்ளூர வருந்தினாள் உத்ரா.

காரில் வீட்டை அடைந்ததும்‌ பனியாரப்பையுடன் இருவரையும் மேலேப் போகச் சொல்லியவள், “விக்கி நீ கொஞ்சம் இரு. உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு” என்றாள்.

அவர்கள் சென்றதும், “உதய்கிருஷ்ணாகூட என்ன பேசின?” என்று ஆர்வமாகக் கேட்டான் ‌விக்கி.

தன் ஹேண்ட்பேக்கில் இருந்த மைக்ரோ மைக்கை அவன் முகத்தில் தூக்கியெறிந்தவள் கண்களில் கனலைக் கக்கினாள்.

தன் காதில் இருந்த ப்ளூடூத் ஸ்பீக்கரை வழிசலாக கழற்றியவன், “சாரி உதி. சும்மா ஒரு க்யூரியாசிட்டி. இந்த மாதிரி அறிமுகமில்லாத கபுள் என்ன பேசிக்குவாங்கன்னு. அதான்…” என்று இழுத்தான்.

“ஏன்டா திமிங்கிலத்துக்கே தூண்டில் போடுற‌ அறிவாளியா நீ?” என்றவள் அவனை மொத்தி எடுக்க,

“சாரி.. சாரி..” என்று அலறினான்.

சற்று தணிந்தவள், “அத விடு, நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு! அந்த அனன்யா எதுக்கு இப்ப தெப்பக்குளம் வந்தா?” என்றாள்.

“ம்? தற்கொல பண்ணி சாக.” கடுப்பாக பதிலளித்தான்‌.

“ஏய் வெளையாடாதடா!”

“பின்ன? என்கிட்ட கேக்குற?”

“அந்த அனன்யாவும் நீயும் தெப்பக்குளத்துல என்னடா பேசிக்கிட்டீங்க? லயா என்கிட்ட எல்லாத்தையும் வாட்சப் சாட்ல சொல்லிட்டா. பொய்‌ சொல்லி தப்பிக்கப் பாக்காத.” என்று கிடுக்குப்பிடி போட்டாள்.

இறங்கி வந்தவன், “அவ என்ன லவ் பண்றதா சொன்னா‌” என்றான்.

உத்ரா அவனை அற்பமாகப் பார்த்தவள், “ஸோ, நீ என்ன நடக்கனும்னு ஆசப்பட்டியோ கடைசில அதுவே நடந்துருச்சி.” என்றாள்.

“ஆமா, ஒரு கோடி. நீ பாத்த?”

“நடிக்காதடா. ஹிம்! உங்கூட வேல பாக்கறதுக்கு கன்னி வெடிய டி-ஆக்டிவேட் பண்ற வேலையே பெட்டர்டா.‌ ஒவ்வொரு நிமிசமும் என்ன பக்கு பக்குன்னே வச்சிருக்க. உனக்கொன்னு தெரியுமா விக்கி? அவ என்னையும் உதயையும் இன்னைக்கு ஒன்னா பாத்துட்டா.”

“அதுக்கென்ன?” அசுவாரசியமாய் கேட்டா‌ன்.

“டேய்! உனக்கு மூளையிருக்கா இல்லையா?”

“உன்ன உருவாக்கும்போது தான் கடவுள் ஞாபக மறதில உள்ள வைக்க மறந்துட்டாராம்.”

“உன்ன” என்று கைகளை அவன் கழுத்தை நெறிப்பது போல் கொண்டு வந்தவள், “உன்னால நான் எவ்ளோ பெரிய பிரச்சனைல மாட்டியிருக்கேன் தெரியுமா?” என்று எரிச்சலாகச் சொன்னாள்.

அவன், “அவளால எல்லாம் உன் கல்யாணம் நிக்காது” என்று உறுதி கூறினான்.

சோர்ந்து, “எப்படி சொல்ற?” என்று சந்தேகப்பட்டாள்.

“அவளத் தான் உதய்கிருஷ்ணா மொத்தமா வெறுக்குறானே. அவ பக்கத்துல வந்தாலும் இவன் வெலகிப் போயிருவான். ஸோ பிராப்ளம் எதுவும் வராது.” என்றான்.

சற்று யோசித்தவள், “ஆனாலும், எனக்கு ரொம்ப பயமா இருக்கு விக்கி. வேற யாராவது உதய்கிட்ட போய் உண்மைய சொல்றதுக்குள்ள நாமளே சொல்லிடுறது நல்லதுடா. அதுவுமில்லாம அனன்யா பெரியப்பாக்கு வேற இந்த விசயம் தெரிஞ்சா… எனக்கு நெனைக்கவே பயமா இருக்கு. பேசாம நானே நந்தகோபன்கிட்டயும் போய் உண்மைய சொல்லி மன்னிப்பு கேட்டுரவா?” எனவும்,

ஸ்டியரிங்கை ஓங்கி அறைந்த விக்கி, “முட்டாள்தனமா செஞ்சு உன்‌ வாழ்க்கைய நீயே கெடுத்துக்காத.” என்று அறிவுறுத்தினான்.

ஆனால், அவன் பேச்சைக் கேட்கக்கூடாதென்ற முடிவுடன் கார்க்கதவை திறந்து வெளியேறினாள்.


கலைடாஸ்கோப் திரும்பும்…​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 14 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
தொட்டால் தொடரும்
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் பதினான்கிற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 15


உத்ரா தனது முடிவை செயல்படுத்த எப்படி நந்தகோபனை சந்திப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்க, அதனை கலைக்கும் வகையில் உதய்கிருஷ்ணா அவளுக்கு அழைப்பு விடுத்தான். யோசனையை கைவிட்டு அலைபேசியில் கோடு கிழித்தாள்.

“உத்ரா நீ கொஞ்சம் விளக்குத்தூண் ஏடூபிக்கு வர முடியுமா?” என்றது எதிர்புறக்குரல்.

என்ன ஏதென்று கேட்காமல், “இப்பவே வரேன் உதய்” என்று புறப்பட்டாள்.

அவள் இவ்வாய்ப்பை நழுவவிடுவதாய் இல்லை. ஆனால், கொஞ்சம் அவள் அவன் சொன்ன இடத்தை பற்றி யோசித்திருந்தால் முன்னெச்சரிக்கையுடன் நடந்திருக்கலாம். ஆனால், காலம் அவளுக்கு கைகூடவில்லை. அரக்கப் பறக்க உணவுவிடுதிக்கு வந்தவளை பந்தாட தயாராயிருந்தார் அந்த ஜவுளிகடைக்காரர்.

‘நந்தகோபன்?’ என்பதிலேயே அவள் மூளை தட்டாமாலை சுற்ற, அவளைக் கண்டதும் தன் முதுகெழும்புகளை நிமிர்த்தினான் உதய்கிருஷ்ணா. எச்சிலை விழுங்கியபடி மெதுவாக அவர்களை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

அருகில் வந்ததும், “பிரமாதம்மா! ரொம்பப் பிரமாதம்! நாங்க கஷ்டப்பட்டு ஒரு மாப்பிளைய தேடிக் கண்டுபுடிச்சு உங்கக்கிட்ட கொண்டு வருவோம். நீங்க அவன் போதைப்பொருள் ஆசாமி, பொம்பளப் பொறுக்கினு சம்பந்தத்த கெடுத்து உங்க முந்தானைல முடிஞ்சு வச்சுக்குவீங்க. என்ன எவ்வளவு முட்டாளாக்கியிருக்கம்மா நீ? ச்சே! உன்ன நம்பி தானம்மா நான் பொறுப்ப உங்கிட்ட ஒப்படைச்சேன். ஆனா நீ என் தலைலயே நல்ல பழுத்த மொளகாவா பார்த்து அரச்சி அனுப்பிருக்கல்ல? நல்லவேள யூடியூப்ல வந்த உன் நிச்சயதார்த்த வீடியோவப் பாத்து உஷாரானேன். இல்ல இன்னும் நாலு பேர உன் ஏஜென்சிக்கு அனுப்பியிருப்பேன்.

இப்படி எங்கள ஏமாத்த உனக்கு மனசு உறுத்தல? உன் பேச்ச நம்பி இவர வேற நாங்க தப்பா நெனச்சிட்டோம். இவர் மேல உனக்கு ஆச இருக்குன்னா அத நீ முன்னாடியே எங்கக்கிட்ட சொல்லியிருக்கலாம்லமா? பெரிய மனசு பண்ணி நாங்களே விட்டுக் குடுத்திருப்போம். நீ இவ்வளவு பெரிய நாடகத்த நடத்தியிருக்க வேண்டிய‌ தேவை இருந்திருக்காது. உன்னால எங்க ரெண்டு பேர் குடும்பமும் இப்ப அசிங்கப்பட்டு நிக்குது. அதுக்கு நீ என்னமா சமாதானம் சொல்லப்போற? ஆனா, உன் பேச்சக் கேட்டு நான் இந்தமுற ஏமாருவேன்னு மட்டும் நீ கனவுலயும் நெனைக்காதம்மா.

உன்னால இவர் பேருக்கு உண்டான கலங்கத்துக்கும், எங்களுக்கு உண்டான மன உளைச்சலுக்கும் நீ சரியான நஷ்ட ஈடு குடுத்தே ஆகனும். இல்ல உங்க டிடெக்டிவ் ஏஜென்ஸி பேர்ல போர்ஜரி வழக்கு ஃபைல் பண்ணி உங்க லைசென்ஸையே கேன்சல் பண்ணிருவேன்.” என்று மிரட்டினார் நந்தகோபன்.

உத்ராவுக்கு அவர் பேசியது கூட பெரிதாய் படவில்லை. ஆனால், வாயையே திறக்காமல் தன்னை சாட்டை கேள்விக் கேட்டுக்கொண்டிருந்த உதய்கிருஷ்ணாவின் பார்வையை தான் எதிர்கொள்ள முடியவில்லை.

“உதய் நா‌ன் முன்னாடியே உங்கக்கிட்ட சொல்லனும்னு தான் இருந்தேன். ஆனா, சூழ்நில சொல்ல முடியாமப் போச்சு. ப்ளீஸ் உதய்! என்ன நம்புங்க” என்று சிறுகுழந்தை போல் கெஞ்சினாள்.

அவனோ தன் மடியிலிருந்த கோப்பை மேசை மேல் தூக்கி வைத்தான். அவனைப் பற்றி அவர்கள் ஏஜென்சி கொடுத்த கேரக்டர் ரிபோர்ட் தான் அது. அவளால் மேற்கொண்டு என்ன சொல்ல முடியும்? அதையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

சில நாட்களுக்கு முன்பு அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் தான் அவள் மகிழ்ச்சியாக அமர்ந்துகொண்டு நந்தகோபன் நீட்டிய அவன் படத்தை பார்த்தாள்.

ஆனால், இன்றோ குற்றவாளிக்கூண்டில் நிற்பது போல் அவஸ்தையுடன் நின்று கொண்டிருக்கிறாள். அன்றே இந்த விவகாரத்தை கையிலெடுக்க வேண்டாம் என்று விக்கி கூறியதை தான் செவிமடுத்திருக்க வேண்டுமோ? என்று காலம் கடந்த ஞானயோதம் கொண்டாள்.

“எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு உத்ரா. நீ‌ தான்‌ இதப் பண்ணியா?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டான்.

தலை குனிந்து நின்றிருந்தவளால் விக்கியை மாட்டிவிட முடியவில்லை. இதே கேள்வியை‌ உதய்கிருஷ்ணா தனிமையில் கேட்டிருந்தால் நிச்சயம் தன் மனதில் உள்ளதையெல்லாம் பொலபொலவென்று கொட்டியிருப்பாள். இப்போதோ நந்தகோபனின் முன்னிலையில் விக்கியின் பெயரைச் சொல்லி, அவன் அப்படி செய்ததற்கான காரணத்தையும் சொல்லி அவனை கெட்டவனாக்க விரும்பவில்லை அவள்.

ஏற்கனவே‌ காதலில் தோற்ற விரக்தியில் இருக்கும் விக்கி, நந்தகோபனின் வெறுப்பையும் சம்பாதித்தால் முழுதாக அனன்யாவை மறந்துவிட வேண்டியது தான் என்று கணக்கிட்டவள், பழியை தான் ஏற்க தயாரானாள். இதை விக்கியின் அப்பா வாசன் மேல் தனக்குள்ள நன்றியுணர்வுக்காகவும்,‌ விக்கியின் மேலுள்ள பரிதாபத்தாலும் செய்தாள். ஆனால், இது தெரியாத உதய்கிருஷ்ணாவோ தன் ஆடை சி நம்பிக்கையையும் இழந்தது போல் அவ்விடம் விட்டு எழுந்து சென்றான்.

தன்னை கேள்வியுடன் நோக்கிய நந்தகோபனைப் பார்த்து கைகளைக் கூப்பியவள், “சாரி சார். எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப சாரி.” என்றாள்‌ பரிதாபமாக.

நந்தகோபன் இறங்கி வருவதாய் தெரியவில்லை.

“எதாயிருந்தாலும் இனி என் லாயர்கிட்ட பேசிக்கம்மா. நாளைக்கே உன் ஆஃபிஸுக்கு நோட்டீஸ் அனுப்புறேன். என்ன கோர்ட்ல பாக்க ரெடியா இரு” என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு எழுந்தார்.

அவர் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள் பிடிமானமின்றி அங்கிருந்த நாற்காலியில் விழுந்தாள். வெகுநேரமாக அந்த கேரக்டர் ரிபோர்ட்டையே வெறித்தவள் தன்னருகில் வந்த பேரர் சாப்பிட என்ன கொண்டு வரவேண்டும் என்று விசாரித்தபோது தான் தன்னிலை‌‌‌ மீண்டு, அலைபேசியில் உதய்கிருஷ்ணாவின் எண்ணிற்கு முயன்றாள்.

அவன் அவள் முயல முயல அழைப்பை துண்டித்துக்கொண்டே இருந்தான்.

அடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

நேரே டிடெக்டிவ் ஏஜென்சிக்கு வந்தவளை சூழ்நிலை தெரியாமல், “என்ன திரும்பி வரமாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு சீக்கிரமே வந்துட்ட?” என்று கேலி பேசினான் விக்கி.

அவனை வேகமாக நெருங்கியவள் அவனின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டாள்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அவன் அதிர்ந்து, “என்ன உதி? என்னாச்சு?” என்றான், அவள் அடித்ததைக்கூட பெரிது படுத்தாமல் அவளின் நலுங்கிய தோற்றத்தில் பாதித்தவனாக.

“உன்னால தான்டா. எல்லாம் உன்னால தான். எனக்கு அமைய இருந்த நல்ல வாழ்க்க என் கைய விட்டுப் போயிருச்சிடா. இப்ப உனக்கு திருப்தியா? நான் என்னடா தப்பு பண்ணேன்? நான் என்ன தப்பு பண்ணேன்? அய்யோ! இனி நான் என் அம்மாக்கிட்ட என்னடா பதில் சொல்வேன்? எனக்கு கல்யாணம் நடக்கப்போகுதுனு பல கனவுகளோட இருக்கவங்கக்கிட்ட நான் எப்படி இனி இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லுவேன்? பண்ணாத தப்புக்கு எனக்கேன் இவ்வளவு பெரிய தண்டன?” என்றவள் கொந்தளித்துத் கத்த,

“உதி என்னாச்சு? உதய்க்கு உண்மையெல்லாம் தெரிஞ்சிருச்சா? எப்படி? நீ சொன்னியா?” என்றவன் அவள் தோளின் மீது கை வைத்தா‌ன்.

அவனை அருவருப்பாகப் பார்த்தவள் அவன் கையை வேகமாக உதறினாள்.

“ச்சீ! என் பேரச் சொல்லக்கூட இனி உனக்கு தகுதி கெடையாது‌. எக்காரணம் கொண்டும் என் மூஞ்சிலயே முழிக்காத” என்றுவிட்டு தன் கையிலிருந்த கேரக்டர் ரிபோர்ட்டை அவன் முகத்தில் விட்டெறிந்து அவ்விடம் விட்டே கிளம்பினாள்.

இடிந்து போய் நின்றான் விக்கி.

அங்கிருந்து கிளம்பி விறுவிறுவென தன் வீட்டிற்குள் நுழைந்த உத்ரா தன் அன்னையின் கண்களில் வழியும் நீரைக் கண்டு ரஞ்சனியின் வேகத்தை‌ வியந்தாள்.

தன் திருமணம் நின்று போன சோகத்திலிருப்பவரை என்ன சொல்லி தேற்றுவதென்ற யோசனையுடனே அவர் காலடியில் சென்று உட்கார்ந்தாள்.

“ம்மா ப்ளீஸ்மா. இதுல என் தப்பு எதுவும் இல்லம்மா. சாரிம்மா.” என்றாள் அவரின் மடியில் தலை வைத்தபடி.

“உனக்கு ஒரு நல்ல வாழ்க்க அமையப்போகுதுனு பூரிச்சுப்போனேன் உதி. ஊர் மெச்ச நான் வாழாத வாழ்க்கைய என் புள்ளைங்க வாழனும்னு ஆசப்பட்டேன். ஆனா, என்‌ துரதிஷ்டம் என் புள்ளைகளையும் தொத்திக்கிடுச்சி. எனக்கு பொறந்த பாவத்துக்கு நீங்களும் பாவம் ரொம்ப கஷ்டப்படுறீங்க. நான் உங்களோட இருக்கக்கூடாது உதி. நான் தான் இந்த வீட்டோட பெரிய துர்சகுனமே. நான் போயிட்டேன்னா எல்லாம் சரியாகிரும். எல்லாம் சரியாகிரும்.” என்று எதையோ வெறித்துக்கொண்டே பேத்துபவரைக் கண்டு பயந்துபோனாள் மகள்.

“ம்மா இல்லம்மா. அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நீங்க இல்லைனா நாங்கல்லாம் ஒடஞ்சுப் போயிருவோம். ப்ளீஸ் இப்படியெல்லாம் இனிமே பேசாதீங்க. என்ன பயமுறுத்தாதீங்க” என்றவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பேச்சு மூச்சற்று அவளின் மேலேயே கவிழ்ந்தார்.

தன் மேல் சரிந்தவரை உடனே மருத்துவமனை கொண்டு செல்ல நூற்றியெட்டுக்கு அழைத்தாள் உத்ரா. தங்கள் அறைகளில் வேலையாக இருந்த கவின் கவிலயாவை அழைத்து விசயத்தை கூறியவள், அவர்களின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

கவிலயாவின் தகவலில் தானும் உடனே மருத்துவமனைக்கு ஓடோடி வந்தான் விக்கி.

பானுமதியை பரிசோதித்த மருத்துவர் “ஷீ வென்ட் டூ கோமா ஸ்டேஜ்” என்றார்‌.

உலகமே இருண்டு போனது உத்ராவுக்கு. அதன் பின் கவின், கவிலயா‌ யார் குரலும் அவள் செவியில் ஏறவில்லை. உயிரற்றவள் போல் கிடந்தாள். விக்கி தான் அனைத்தையும் கவனிக்க வேண்டியதாகிற்று.

சிறிது நேரத்திற்குப்பின் தன்னிலை மீண்டவளை, “ஏன்? எதனால அம்மாவுக்கு இப்படியாச்சுக்கா?” என்று சிறியவர்கள் கேட்க,

“என்னால தான். என்ன பெத்த பாவத்தால தான்” என்று முகத்திலறைந்து கத்தினாள்.

உடனே அவளை பாய்ந்து சென்று கட்டிக்கொண்டாள் கவிலயா. கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்ததையெல்லாம் சொல்லி‌‌ புலம்பியவள் தொண்டை வறண்டுபோனாள். குழந்தை அமிகாவை தூக்கிக்கொண்டு வெளியே சென்ற விக்கி அனைவருக்கும் காஃபி, பிரட் வாங்கி வந்தான்.

அவன் தந்த காஃபிகப்பை வாங்கிய உத்ரா, “இப்படியெல்லாம் செஞ்சு நீ செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தம் தேடிக்கலாம்னு பாக்கறியா விக்கி?” என்று குத்தினாள்.

அவன் அவளை விட்டு நகர்ந்து சற்றுத் தள்ளிப்போய் நின்று கொண்டான்.

மருத்துவர் அவர்களை பானுமதியைப் பார்க்க அனுமதித்தபோது, “அவங்கக்கிட்ட‌ பேசிப் பாருங்க. இது ஒரு தூக்கநிலை மாதிரி தான். அவங்க எழுந்திரிக்க மாட்டேன்னு பிடிவாதமா படுத்திருக்காங்க. நீங்க அவங்கள இந்த ஒலகத்துக்கு கூட்டிட்டு வாங்க” என்று நம்பிக்கையாகப் பேசினார்.

முதலில் கவினின் கையிலிருந்த அமிகா பாட்டியை அழைத்தாள். பிறகு, கவினும் கவிலயாவும் பேசினார்கள். பலன் தரவில்லை.

உத்ரா தான் மட்டும் தனியே உள்ளே சென்றவள், “எனக்கு உங்கக்கிட்ட கெஞ்சிப் பழக்கமில்லனு உங்களுக்கே தெரியும். மரியாதையா எந்திரிச்சிருங்கம்மா.” என்று விம்மலாக ஆரம்பித்தவள் இறுதியில் கதறி தீர்த்து விட்டாள்.

“நீங்க இல்லாம நம்ம வீடு எப்படி வீடா இருக்கும்? என்னப் பாத்தா பாவமா இல்லையா உங்களுக்கு? எல்லா பொறுப்பையும் என் தலைல கட்டிட்டுப் போயிராதீங்க. அப்பறம் நான் உங்கள மன்னிக்கவே மாட்டேன் ஆமா? என்ன அம்மா நீங்க? பிள்ளைகள இப்படி தான் அழவிட்டு‌ வேடிக்கைப் பாப்பீங்களா?” என்று கோபப்பட்டாள்.

அவளால் அவரை இந்நிலையில் பார்க்கவே முடியவில்லை. எழுந்து வெளியே வந்துவிட்டாள். அன்று இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே கழிய, மறுநாள் காலை பில் கட்டச் சென்ற உத்ரா அங்கு உதயுடன் அவன் அக்கா மச்சானை கண்டதும் சிலையாகிவிட்டாள்.


கலைடாஸ்கோப் திரும்பும்…​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் பதினைந்து பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழேயுள்ள கருத்துப்பெட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்.🙂

கருத்துப்பெட்டி
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 16


அவர்களுக்கு எப்படி இந்த விசயம் தெரிந்தது என்று அதிர்ச்சியுடன் பார்த்திருந்தவள், தான் இருக்கும் நிலையில் அவர்களிடம் பேச‌ என்ன இருக்கிறது என்று அவ்விடம் விட்டு செல்லலானாள்.

உதய்கிருஷ்ணாவின் அக்கா ரஞ்சனி தான் அவளை நிறுத்தினாள்.

“ஹே நில்லு! எங்க ஓடுற? நீ சொன்ன பொய்யினால நாங்க எங்க சொந்தக்காரங்க முன்னாடி எப்படியெல்லாம் கூனிக்குறுகி நின்னோம் தெரியுமா? என் தம்பி எப்படியெல்லாம் ஃபீல் பண்ணான் தெரியுமா? நல்லவேள இப்பவாச்சும் உன்னப் பத்தி தெரிஞ்சதே. என் தம்பியோட நல்ல நேரம்.” என்று திருப்திபட்டாள்.

அவளின் கணவன் அகிலனோ, “ஷூ! என்ன ரஞ்சனி இது? அந்தப் பொண்ணே அவங்க அம்மாவ நெனச்சு இடிஞ்சுப்போய் நிக்குது. அதுக்கிட்ட போய் இப்படி பேசிக்கிட்டிருக்க?” என்று கடிந்தான்.

ஆனால், அவள் விடுவதாய் இல்லை. நேற்றே அலைபேசியில் பானுமதியிடம் அவர் நாக்கை பிடுங்கும் அளவுக்கு பேசியிருந்தாலும், இன்று உத்ராவை நேரில் கண்டு உண்டில்லை என்றாக்கத் தான் அவர்களின் வீட்டிற்கே கிளம்பினாள். அப்படியே நிச்சயதார்த்தத்திற்கு அவர்கள் போட்ட மோதிரத்தையும் திரும்ப வாங்குவது தான் திட்டம்.

ஆனால், அக்கம் பக்கத்தினர் சொன்ன விசயமோ அவள் குடும்பத்தையே மருத்துவமனை நோக்கி ஓடிவரச் செய்துவிட்டது. இருப்பினும் சோகப்பதுமையாக இருப்பவளை விடுவதாய் இல்லை அவள்.

“ஆமா இப்படி‌ துணிஞ்சு பொய் சொல்லி ஒரு உறவ ஆரம்பிச்சிருக்கியே அது எப்ப வேணாலும் ஒடஞ்சு போகும்னு நீ யோசிக்கவே இல்லையா? ஆங்! இப்ப புரியுது. மத்தவங்களுக்கெல்லாம் கேரக்டர் சர்டிஃபிகேட் குடுக்கற உனக்கு சர்டிஃபிகேட் குடுக்க ஆளில்லைங்கிற மெதப்பு. அதான் தைரியமா தப்பு பண்ணிட்ட.

ஆனா இந்த வேவு பார்க்கற தொழில ஏதோ சேவ செய்யுற மாதிரி என் தம்பிக்கிட்ட விட்டியே ஒரு பில்டப்? ரீலு அந்துப்போச்சி. எப்படி ஒருத்தரோட அந்தரங்கத்த எந்தவொரு உறுத்தலும் இல்லாம எட்டிப் பாக்குறீங்க? உன் அம்மா ஒரு மானஸ்தி. பாவம் உன்ன பெத்தததுக்கு தண்டனைய அவங்க அனுபவிக்கிறாங்க.” என்றதும், அதுவரை தலை குனிந்து நின்றிருந்தவள் கடைசி வாக்கியத்தில் வெகுண்டாள்.

லேசாக தலையை உயர்த்தியவளின் பார்வையிலிருந்த கனல் அனைவரையுமே மிரளச் செய்தது. தன்னை கேள்விகளால் சாடியவளை விட்டுவிட்டு அங்கிருந்த அகிலனிடம் சென்றாள்.

“போன மாசம் ஆன்லைன்ல ரம்மி வெளையாடி நாப்பது லட்சம் எழந்தீங்க இல்லையா? இப்ப அதுல உண்டான கடன அடைக்க தெரிஞ்சவங்கக்கிட்டல்லாம் பணம் கேட்டு அலையுறீங்க இல்லையா? உங்கப் பொண்டாட்டி உங்க சரி பாதி தான? அவங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?” என்றவள் கேட்க, அருகில் நின்றிருந்த ரஞ்சனியை மின்னல் கீற்று தாக்கியது.

“எல்லாரும் எல்லார்கிட்டயும் எப்பவும் உண்மையா இருந்துட்டா நாங்க இந்தத் தொழில் பாக்க வேண்டிய அவசியமே இருக்காது மிஸஸ் ரஞ்சனி. உங்க ஹஸ்பண்ட் கடன் தொல்லையால எப்பவேணாலும் தற்கொல பண்ணிக்க வாய்ப்பிருக்கு. அவருக்கு உறுதுணையா நில்லுங்க.” என்று நிதானமாய் சொன்னாள்.

இவ்விடத்தில் உதய்கிருஷ்ணா உள்ளே புகுந்தான்.

“ஹே! நீ என்ன சொல்ற? முன்னாடி என்ன பத்தி போதைபொருள் அது இதுன்னு தப்பா சொன்ன. இப்ப என் மச்சானப் பத்தி தப்பா சொல்றியா?” என்று பதட்டமாக, அகிலனை ஒரு பார்வை பார்த்தாள் உத்ரா.

ரஞ்சனியுமே தற்போது அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடமே தன் நண்பனுக்கு தேவைப்படுவதாக ஒரு‌ இருபது லட்சம் கடன் உதவி கேட்டவன் தானே அவன். அவள் அதிர்ச்சியுடன் அப்படியே தங்கள் வீட்டிற்கு திரும்ப, அவளின் பின்னேயே ஓடினான் அகிலன்.

தற்போது குழம்பிப்போய் நிற்கும் உதய்கிருஷ்ணாவை நெருங்கிய உத்ரா தன் விரலிலிருந்த மோதிரத்தை கழற்றி அவன் வலக்கையைப் பிடித்து வைத்துவிட்டு, மௌனமாக அவ்விடம் விட்டு அகன்றாள்.

உதய்கிருஷ்ணா இருபக்கமும் பார்த்துவிட்டு தன் குடும்பத்தினரை நோக்கி ஓடினான்.

மூச்சு வாங்க தன் அன்னை இருக்கும் வார்டிற்கு வந்தவள் அங்கு மருத்துவர் விக்கியிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு வேகமாக ஓடி வந்தாள்.

“அவங்க பல்ஸ் ரேட் நேரம் ஆக ஆக கொறஞ்சிட்டே வருது. இன்னும் இருபத்திநாலு மணி நேரம் அவங்க தாக்குப் பிடிக்கிறதே கஷ்டம் தான் தோணுது. சொல்ல வேண்டியவங்க யாராவது இருந்தா சொல்லியனுப்பிச்சிருங்க.” என்றவர் சொல்ல, சிறியவர்கள் மூவரும் தொண்டைத் தண்ணீர் வற்றும் அளவிற்கு கதறித் தீர்த்தனர்.

ஆனால், உத்ரா மட்டும் அவர்களை தேற்ற வேண்டி தன் துக்கங்களை அடக்கிக்கொண்டிருந்தாள்.

விக்கியும் திரும்பி நின்று தன் கண்களை துடைத்துக் கொண்டான்.

ஒவ்வொரு மணித்துளிகளையும் அவர்கள் பயத்துடனே கழிக்க, “அவங்களுக்கு கடைசி ஆசைனு ஏதாவது இருந்தா நிறைவேத்தி வையுங்கம்மா. போற ஆத்மா நிம்மதியா போய் சேரட்டும்.” என்றார் போகிறபோக்கில் செவிலியர் ஒருவர்.

பானுமதியின் உட்சபட்ச எதிர்பார்ப்பே உத்ராவின் கல்யாணம் தான். அது நின்ற ஆற்றாமையில் தான் தன்னையே அவர் வருத்திக்கொண்டார். நிதர்சனத்தை நினைத்ததும் இன்னும் துவண்டுபோனாள்.

அதே யோசனையிலிருந்த விக்கியோ சற்று தள்ளிப்போய் அலைபேசியில் தன் நண்பன் மகேஷிற்கு அழைப்பு விடுத்து சில கட்டளைகளை பிறப்பித்தான். பின், சற்றும் தயங்காமல் உதய்கிருஷ்ணாவிற்கு அழைப்பு விடுத்தான்.

எதிர்புறம் ஏற்கப்பட்டதும், “உதய் நான் தான் விக்கி. ப்ளீஸ் கால கட் பண்ணிடாதீங்க. தப்பெல்லாம் எம்மேல தான். உத்ராவுக்கும்‌ அதுக்கும் எந்த சம்பந்தமும் கெடையாது. பானுமதி ஆன்ட்டி உத்ராவுக்கு கல்யாணம் ஆகலைனு ஃபீல் பண்றாங்களேனு நான் தான் உங்களப் பத்தி தப்பா ரிபோர்ட் குடுத்தேன். அப்ப உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல ஏதோ ஒரு வேவ் பாஸான மாதிரி இருந்தது. சத்தியமா நான் பண்ணது எதுவும் உத்ராவுக்கு தெரியாது. பின்னாடி தெரிஞ்சப்பக்கூட உங்கக்கிட்ட சொல்லியே ஆகனும்னு பிடிவாதம் பிடிச்சா. நாந்தான் அத இதச் சொல்லி தடுத்துட்டேன்.

நான் பண்ணின தப்புக்கு அவள தண்டிச்சிடாதீங்க ப்ளீஸ். பானுமதி ஆன்ட்டி வேற இப்ப உயிருக்கு போராடிக்கிட்டிருக்காங்க. அவங்க கடைசியா உத்ரா கல்யாணத்த தான் ரொம்ப எதிர்பார்த்தாங்க. அத இப்ப அவங்க முன்னாடி நடத்தினா, நிச்சயம் அவங்களுக்கு நாம‌ ஒரு நல்லது பண்ண மாதிரி இருக்கும். ப்ளீஸ் உதய்! மறுக்காதீங்க. இப்ப உத்ராவுக்கு உங்க உதவி ரொம்ப அவசியம்.

அட்லீஸ்ட் உருக்குலையுற நெலமைல இருக்க ஒரு ஃபேமிலிக்கு நம்பிக்க குடுக்கவாவது நீங்க கொஞ்சம் எறங்கி வாங்க உதய். ரிசர்வ்லைன் சந்திரன் ஹாஸ்பிடல்ல தான் ஆன்ட்டிய அட்மிட் பண்ணிருக்கோம். வந்திடுறீங்களா? நான் என் ஃப்ரெண்ட் மகேஷ்கிட்ட சொல்லி தாலி மாலைக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிருக்கேன். நீங்க மட்டும் கொஞ்சம் சீக்கிரம் வாங்க ப்ளீஸ்.” என்று மூச்சுவாங்கப் பேசினான்.​
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
எதிர்புறம் உதய்கிருஷ்ணாவின் குரல் கம்மியது.‌‌

“சாரி விக்கி. என்னால இப்ப என் ஃபேமிலிய கேக்காம எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஒருவேள நீங்க சொல்ற மாதிரி உத்ரா மேல எந்தத் தப்பும் இல்லைனா அத அவளே சொல்லிருக்கலாமே? ஏன் அத நீங்க சொல்றீங்க? எனக்கு இப்பக்கூட இது ஒரு நாடகமோனு தான் சந்தேகப்படத்தோணுது, சாரி.

நீங்களே யோசிச்சுப் பாருங்க. என்ன எழந்திருவோம்னு தெரிஞ்சும் அவ உண்மைய மறைச்சிருக்கான்னா என்னை விட அவளுக்கு நீங்க தான முக்கியமா படுறீங்க? கட்டிக்கப் போறவனை விட எவனோ ஒருத்தன்‌ அவளுக்கு பெருசா போயிட்டான் இல்ல? இதையெல்லாம் விட பெரிய பிரச்சன அவளால என் குடும்பமே இப்ப செதறுற நெலமைல இருக்கு. என் குடும்பத்துக்குள்ளப் பெரிய புயலக் கெளப்பிட்டுப் போயிட்டா. அவங்க குடும்பத்த விட என் குடும்பத்துக்கு தான் என் உதவி இப்ப ரொம்ப அவசியம். சாரிங்க, ரொம்ப சாரி. இதுக்கு மேல எனக்கு கால் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்.” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

உதய்கிருஷ்ணாவிடம் விக்கி எடுத்த முயற்சி தோல்வியைத் தழுவவும், கைகளைப்‌ பிசைந்தபடி நின்றான். அப்போது அணையப்போகும் விளக்கு என்பதால் மீண்டும் ஒருமுறை பானுமதியைப் பார்க்க அனுமதி தந்தார் மருத்துவர்.

இந்த தருணத்தை‌ பயன்படுத்திக்கொள்ள நினைத்த விக்கி வெளியே ஓடினான். திரும்பி வரும்போது கையில் மாலைகளோடு வந்தான்.

முன்புபோல் ஒவ்வொருவராக சென்று பானுமதியிடம் மீண்டுவரும்படி வேண்டிக் கொண்டிருந்தனர்.

உத்ரா பானுமதியின் முகத்தையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துவிட்டு வெளியே‌ வர, மூச்சு வாங்க அவளின் முன் வந்து நின்றான் விக்கி. தன் அன்னை இறப்பதற்கு முன்பாகவே கையில் மாலைகளோடு நிற்பவனை அவள் கேள்வியாக நோக்க, மஞ்சள் கிழங்கு கட்டப்பட்ட தாலிக்கயிற்றொன்றை உயர்த்திக் காட்டினான்.

“நான்.. நான்.. உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கவா உதி? ஆன்ட்டிக்கு அப்பவாவது கொஞ்சம் நினைவு திரும்புதான்னு பாக்கலாம்.” என்று‌ தவிப்பாக கேட்கும்போதே அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த கவின்,

“அக்கா சரின்னு சொல்லுக்கா. நிச்சயம் அம்மாவுக்கு இதக் கேட்டு ஒடம்பு சரியாகிரும் க்கா. எழுந்து நம்மகிட்ட பேசிருவாங்க.” என்று பரிதாபமாகக் கெஞ்சினான்.

உத்ரா இருவரின் பேச்சிலும் உக்கிரமானாள்.

“உனக்கு இவனப் பத்தி சரியா தெரியாது கவின். தெரிஞ்சா நீ இப்படியெல்லாம் பேசமாட்ட. இவன மாதிரி ஒருத்தன கனவுலயும் நான் எந்தப் பொண்ணுக்கும் ஜோடி சேர்த்து வைக்கமாட்டேன். அப்படியிருக்க நம்ம லயாவ எப்படிடா கட்டிக் குடுப்பேன்? லவ் ஃபெயிலியர், லவ் ஃபெயிலியர்னு வேற ஒரு பொண்ண நெனச்சிக்கிட்டு குறிக்கோளே இல்லாம குடிச்சிட்டு சுத்துறவனுக்கு கல்யாணம் ஒரு கேடா?” என்றவள் சாட்டைக் கேள்வி கேட்க,

அடியுண்ட பார்வை பார்த்தவன், “லயா எங்க?” என்றான்.

கவின் தயக்கமாக, “அமிகாவ கூட்டிட்டு இப்பத்தான் ரெஸ்ட் ரூம் போனா.” என்றான்.

உத்ராவுக்கு அவனது‌ கேள்வியில் கோபம் வந்துவிட்டது.

“இப்ப எதுக்கு நீ அவள கேக்குற? இது வர நீ எங்களுக்கு செஞ்ச நல்லதெல்லாம் பத்தாதா?” என்று கத்தியபடியே, அவன் கையிலிருந்த மாலைகளை பிடிங்கி அருகிலிருந்த குப்பைத் தொட்டிக்குள் வீசினாள்.

இம்முறை விக்கி அவளை விடுவதாய் இல்லை.

“சும்மா சும்மா கத்தாத உதி. லயாவுக்கும் இதுல சம்மதம் தான்னு என்னால உறுதியா சொல்ல முடியும். ஏன்னா உன் கூடப்பொறந்தவங்கள நீ புரிஞ்சி வச்சிருக்குற லட்சணம் அந்த மாதிரி. ஸோ, எதுவாயிருந்தாலும் நீ அவளையும் ஒரு வார்த்த கேட்டு முடிவு பண்றது நல்லது. அநியாயமா உன் அம்மாவ காப்பாத்த இருக்குற ஒரு நல்ல வாய்ப்பையும் உன் முட்டாள்தனத்தால கெடுத்துறாத ப்ளீஸ்” என்று சற்று ஆவேசமாகவேக் கூறினான்.

ஒருகணம் விதிர்த்துப் போனவள் மறுகணமே, “ஓ! என் வீட்டுக்கு வந்து இந்த வேலைய வேற பாத்துருக்கியா? உன்ன நம்பின என்ன மொத்தமா வச்சி செஞ்சிட்டடா. உனக்குலாம் இங்க நிக்கவே வெக்கமா இல்ல? ஒடம்பு கூசல?” என்று அருவருப்பாகப் பார்த்தாள்.

அதுவரை கலங்கி நிற்கும் தன் தோழிக்காக கலிவிரக்கத்துடன் அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்தவன், அவளின் அந்த அருவருப்புப் பார்வையில் தன்மானம் சீண்டப்பட்டான். எப்போதும் தன்னை தவறாகவே நினைப்பவளைக் கண்டு அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

தான் இறங்கி இறங்கி வருவதால் தான் அவள் தலையில் ஏறி ஆடுகிறாள் என்று வெறுப்பாக, தாலியை தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்தபடியே கோபமாக அவ்விடம் விட்டு இரண்டு எட்டு எடுத்து வைத்தான். ஆனால், தன்னை நோக்கி வந்த கவிலயாவை கண்டதும் அவனின் வேகம் குறைந்தது.

கையில் அமிகாவுடன் அவனை எதிர்கொண்டவளோ சற்றுமுன் நிகழ்ந்ததெதுவும் தெரியாமல், “எங்கப் போனீங்க நீங்க? ஆமா அம்மாவ பாத்துட்டீங்களா?” என்றாள்.

உத்ராவை சாம்பலாக்கும் எண்ணத்துடன் திரும்பிப் பார்த்தவன், “இல்ல” என்று தலையாட்டினான்.

“அப்ப உடனே போய் பாருங்க. டாக்டர் இனிமே அலோவ் பண்ணுவாங்களான்னு‌ தெரியாது.” என்று தன் அன்னை இருந்த அறைக்கு முன் அவனை அழைத்துச் சென்றாள்.

பெருமூச்சொன்றை வெளியிட்டவன்‌ கதவை திறந்து உள்ளே சென்றான். அங்கு பானுமதியை கண்காணிக்க மருத்துவர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் அமர்ந்திருந்தனர்.

தான் அவரின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் புது மாப்பிள்ளையை கவனிப்பது‌ போல் விழுந்து விழுந்து கவனிக்கும் பானுமதி, இன்று தன் வருகையைக்கூட உணராமல் படுத்திருப்பதைக் கண்டு மனம் கசங்கினான் விக்கி.

‘நீங்க ஸ்ட்ராங் வுமன் ஆன்ட்டி. உங்களுக்கு ஒன்னும் ஆகாது. சீக்கிரம் எழுந்து வாங்க. நாங்கல்லாம் உங்களுக்காக காத்திருக்கோம்.’ என்று மானசீகமாக வேண்டிக்கொண்டான்‌.

விக்கி உள்ளே சென்ற ஒவ்வொரு விநாடியும் தகித்துக் கொண்டிருந்தாள் உத்ரா. இரண்டு நிமிடங்களுக்கு மேலாகியும் அவன் வெளியே வராததைக் கண்டு நரகமான அந்த கணங்களை சகிக்க முடியாமல் அவனை வெளியே இழுத்துவர உள்ளே சென்றாள்.

வந்தவள் அவன் மேல் பாய்வதற்கு பதிலாக தன் அன்னையின் முகத்தை பார்த்ததும் மனம் மாறிவிட்டாள். பானுமதி மட்டும் விழிப்புடன் இருந்திருந்தால் தன்‌ முன் அவனை திட்டுவதை நிச்சயம் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார் என்பது நினைவு வர, தன் ஆக்ரோசத்தைக் கட்டுப்படுத்தினாள்.

அப்போது விக்கியும் தன் கோபம் தணிந்திருந்தான்.‌ திடீரென அவனுக்கு தன் கையில் இருக்கும் கடைசி பானத்தை உபயோகித்தால் என்னவென்ற எண்ணம் எழ, கணநேரத்தில் நிறைவேற்றினான். தன் பேண்ட் பாக்கெட்டிற்குள்ளிருந்த தாலியை எடுத்து உத்ராவின் கழுத்தில் கட்டினான்.

அவர்கள் உள்ளே நுழைந்தது முதல் அவர்களையே பாவமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த செவிலியர், விக்கி உத்ராவின் கழுத்தில் தாலி கட்டுவதைக்‌ கண்டதும், “பானுமதி உங்கப் பெரியப் பொண்ணுக்கு கல்யாணமாகிருச்சுப் பாருங்க. கண்ணத் தொறந்து‌ உங்க பொண்ணயும் மாப்பிளையையும் ஆசீர்வாதம் பண்ணுங்க.” என்று சந்தோசக் கூச்சலிட்டார்.

ஆனால், விக்கி முதல் முடிச்சுப்போடும்போதே சுதாரித்த உத்ரா அவனைத் தடுத்து அந்தத் தாலியை‌ கழுத்திலிருந்து‌ அத்தெடுத்தாள். சுலபமாக அது கையில்‌ வந்து விட்டது.

செவிலியரோ, “அடிப்பாவி!” என்று திகைத்து நின்றார்.


கலைடாஸ்கோப் திரும்பும்…

 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 16 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ்🙂

கருத்துப்பெட்டி
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom