காத்திருந்தேன்..! உனையே எதிர்பார்த்திருந்தேன்..!
அத்தியாயம் 1:
ஒருபுறமோ மங்கை அவள் கார்கூந்தலில் முல்லை அரும்புகளை அள்ளி தெளித்ததைப் போல், வானமெங்கும் விரவிக் கிடந்தது நட்சத்திர கூட்டம். மற்றொரு புறமோ அதற்கு நேர்எதிர் திசையில், செங்காந்தள் மலர்களை அரைத்துப் பூசியதைப் போல செக்கசிவந்து கிடக்கிறது வானம். கருமையும் செம்மையும் சேருமிடத்தை பிரித்தரிய முடியா வண்ணம், செம்மையில் தொடங்கி கருமையில் முடிந்திருந்தது வானம்.
தன்னை சுற்றிலும் சகாரா பாலைவனமாய் வரிவரியாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு விரவிக் கிடக்கிறது வெண்மணல் பாதை. அப்படி இருந்தும் மண்ணும் விண்ணும் தொடும் அந்த ஒற்றை புள்ளி, அவன் கைக்கெட்டிய தொலைவில்.
மலரின் மகரந்தம் மண்ணில் விழுந்தாலும் பேரிகையாய் அதிரக்கூடும். அப்படியொரு அசாத்திய அமைதி. ஆள் அரவமற்ற கொடிய தனிமை. அந்த தனிமைக்கு இனிமை சேர்க்கும் வண்ணம் மெல்லிய ஊதல் காற்று அவனின் உடலெங்கும் உல்லாச பயணம் செல்ல, உடன் வந்த மெல்லிசையோ செவி வழி புகுந்து சிந்தையை மொத்தமாய் ஆலிங்கனம் செய்கிறது. இன்னிசை தான் என்றாலும் மென்சோகம் ஒன்று இழைந்தோடுகிறது அந்த இசையில். அந்த சோகம் அவன் உயிரையும் ஒரு உலுக்கு, உலுக்க தவறவில்லை.
சுற்றும் முற்றும் கண்களால் துழவுகிறான் அவன். அவனையன்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமேயில்லை. 'பிறகெப்படி இந்த இசை மட்டும் சாத்தியம்?' வண்டாய் மனதைக் குடைகிறது கேள்வி. மூளை கட்டளையிடும் முன்னே கால்கள் அனிச்சை செயலாய் இசையின் திசை நோக்கி பயணப்படுகிறது. சில நொடிகளா? சில மணி நேரங்களா? இல்லை சில யுகங்கள் தான் கடந்துவிட்டன அவன் அறியவில்லை. அந்த பாதையும் முடியவதாயில்லை. அந்த இசையும் நின்றபாடில்லை. கால்கள் சற்றே இளைப்பாற இறைஞ்சுகிறது. இளைப்பாறவும் இடமின்றி வெறித்து கிடக்கிறது அந்த வெண்மணல் பாதை. நின்ற இடத்தில் அப்படியே சோர்ந்து அமர, பார்வை விழும் தூரம் வரை கண்களால் வலை வீசுகிறான் அவன்.
அதோ, அங்கே தூரமாய் ஒரு புள்ளிப் போல ஏதோ ஒன்று கண்ணுக்கு புலனாகிறது. இன்னதென்று வரையறுக்க முடியவில்லை அவனாலும். 'பாலைவன கானல் நீராய் இருக்குமோ? ஆனால் இசை அந்த புள்ளியில் இருந்து தானே புறபடுகிறது.' தனக்குள் எண்ணமிட்டவன், சோர்ந்த மனதை தெம்புட்டி அந்த புள்ளி நோக்கி பயணித்தை தொடர்கிறான். இந்த பாதைக்கொரு முடிவேயில்லையா என்னும் விதமாய் நெருங்க நெருங்க விலகிக் கொண்டே போகிறது அந்த புள்ளி.
நடந்து நடந்து அலுத்துப் போனவன் இனி நடக்கவே முடியாதென்று எண்ணுகின்ற வேளையில் கைக்கெட்டும் தொலைவில் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கிறது அரண்மணை ஒன்று. இது வரை புள்ளியாய் தோன்றிய காட்சி இப்போது எப்படி கைக்கருகில். சந்தேக கேள்விகளுக்கு தடைவிதித்து அவனின் சிந்தனையை மொத்தமாய் சிரையெடுக்கிறது அந்த அரண்மனையினீ அழகியலும் நுண்வேலைபாடுகளும்.
வானில் ஜொலிக்கும் ஒற்றை நிலாவாய் அரண்மனை மாடத்தில் அவள். தாமரையாய் சிவந்திருந்த முகமோ, மோப்ப குழையும் அனிச்சயாய் வாடிக் கிடக்கிறது. மைதீட்டிய கூர் விழிகளோ கலங்கி சிவந்து எந்நேரமும் கண்ணீர் முத்துக்களை உகுக்க தயாராய் இருக்கிறது. காற்றோடு கதைப் பேசிய கார்கூந்தல் ஆதவனின் செங்கதிரின் உபயோகத்தால் பளபளத்துக் கொண்டிருக்கிறது. அவளின் வெண்பிஞ்சு விரள்கள் பற்றியிருந்த மகரயாழோ நீண்ட காலமாய் முகாரி மட்டுமே பாடி பழக்கப்பட்டதைப் போல சோககீதம் வாசித்துக் கொண்டிருக்கிறது.
அவளின் இந்நிலை அவனை ஏதோ செய்கிறது. ஏதோ என்ன உயிரை வேறோடு அறுத்துச் செல்கிறது. இமைக்க மறந்து(த்து) அவளின் வதன முகம் தான் பார்த்திருக்கிறான் அவன். ஏனிந்த சோகம்? ஏனிந்த கலக்கம்? கேட்க துடிக்கிறது நாவு. அவனின் எண்ணம் உணர்ந்தவளாய், சற்றே பார்வையை தாழ்த்தி, அவனை நோக்குகிறாள். என்ன செய்கிறாள் அவள். விழி வழி அவள் சோகத்தை அவனிடத்தில் கடத்த முயல்கிறாளா? ஒற்றை முத்து உருண்டு திரண்டு அவள் கன்னம் தான்டி, அவன் கரங்களில் வந்து அடைக்கலம் சேர்கிறது. அதே நேரம் வரவரிவாய் இருந்த வெண்பஞ்சு மணல் ஆழிப் பேரலையாய் மாறி அவனை தன்னுள் சுருட்டிக் கொள்ளப் பார்க்கிறது.
சர்வமும் அடங்கி அதிர்ந்து தான் போகிறது ஒரு நொடி. வரிவரியான வெண்பஞ்சு மணல் பாதை, துள்ளி குதிக்கும் அலைகளாகவும், அதன் வெண்மை நிறம் அலை அமர்ந்த வெண்பஞ்சு நுரையாகவும் தெரிகறது. அப்போது தான் புரிகிறது இதுகாறும் அவன் நடந்தது, நின்றது அத்தனையும் கடலின் மேற்பரப்பிலென்று. அத்தனையும் அவன் உணரும் நொடிக்குள்ளேயே அந்த பேரலை அவனைத் தன்னோடு சேர்த்து வாறி சுருட்டிக் கொள்கிறது.
பெரும் போராட்டத்திற்கிடையே அவளின் நிலை அறிய முற்படுகிறான் அவன். அவளுமே அந்த அரண்மனையோடு சேர்த்து நீருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக் கொண்டிருக்கிறாள். அப்போதும் இவனைத்தான் இமைக்காது பார்த்தபடி அசையாமல் யாழ் மீட்டிக் கொண்டிருக்கிறாள். 'என்னை காக்க மாட்டாயா?' என்ற வினாவோடு சோகமும் விரவிக் கிடகிறது அவளின் விழிப்படலத்தில். அவளை எப்படியும் காத்துவிட கரங்கள் துடிக்கிறது. இருந்தும் அந்த பேரலையில் இருந்தும் மீள முடியவில்லை அவனால்.
இவனைப் பார்த்தபடியே கொஞ்சம் கொஞ்சமாய் நீருக்குள் மூழ்கி மொத்தமாய் மறைந்துப் போகிறாள் அவள். இவனையும் அப்பேரலை தன்னுள் இழுத்துக் கொள்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் உடலில் உட்புகுந்த உவர்நீர் மொத்தமாய் நுரையீரலை ஆட்சிச் செய்கிறது. மூச்சு முட்டிகிறது. எக்கி எக்கி தலையை வெளியே நீட்டி சுவாசத்தை தன்னுள் கடத்த முயல்கிறான். முழுதாய் நீரை நிரப்பிக் கொண்ட நுரையீரலும் பாங்காய் வேலைநிறுத்தம் செய்ய, மத்த உறுப்புகளும் அதனுடன் சேர்ந்துக் கொண்டு ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது. இறுதி கட்ட போராட்டமாய் அந்த பேரலையிலிருந்து மீண்டிட தவித்து துடிக்கிறது அவன் உயிர். ஆனால் அதற்கு கொஞ்சம் பலனின்றி உயிரை தனியே தவிக்கவிட்டு உடல் மட்டும் மொத்தமாய் அந்த பேரலைக்குள் மூழ்கி மறைந்தேப் போகிறது.
"அடி யாத்தே... எடிபட்ட பய... என் இடுப்ப உடைச்சுபுட்டானே..." அலறிய படியே கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்திருந்தான் ஜெகன். அவனின் இந்நிலைக்கு காரணமானவனோ இன்னும் கனவுலகில் சஞ்சரித்தபடி உயிரை காக்கும் இறுதிக்கட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான்.
ஜெகனின் அலறல் சத்ததில் அதே அறையில் மற்றொரு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த டேவிட்டும் சுமனும் என்னவோ ஏதொவென்று அடித்துப் பிடித்து எழுந்து அமர, ஜெகனோ இன்னும் எழ முடியாமல் இடுப்பை பிடித்தபடி புலம்பிக் கொண்டிருந்தான்.
"ஐய்யோ ஜெகா... என்னடா ஆச்சு உனக்கு... ஏன் இடுப்ப புடிச்சுட்டு கீழ கிடக்க..?" என்றான் டேவிட். அவனின் பரிதாப குரலுக்கும் இதழ் சிந்திய குறும்பு புன்னகைக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இருப்பதாய் தெரியவில்லை.
"நான் ஏன் கீழ கிடக்கனேனு உனக்கு தெரியாவே தெரியாது... அப்படிதானே... நல்லா நடிக்கறடா யப்பா... படிச்சு படிச்சு சொன்னேனடா... பொத்துனாப்புல செவுத்த ஒட்டி ஒரு ஓரமா படுத்துக்கறேனு... கேட்டீங்களா... சிரிக்காதடா செம கடுப்பாகுது எனக்கு..." என்றவன் அதற்கு காரணமானவனை பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. 'உதைக்கறதையும் உதைச்சு தள்ளிட்டு தொர இன்னும் தண்ணீல தத்தளிக்கறத பாரு...' என்றவன் மெல்ல முனகியபடியே தட்டு தடுமாறி அருகிலிருந்த மேஜையின் கால்களை பற்றிக் கொண்டு எழ, மற்ற இருவரும் அவனின் வினோத முனகல் சத்தத்தில் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.
"ஏன்டா தடுமாட்டு பயலுவளா... ஒருத்தன் ஏந்திரிக்க முடியாம தடுமாறிட்டு இருக்கானே... கைய குடுத்து தூக்கி விடுவோனு இல்லாம என்னாடா இழிப்பு வேண்டி கடக்கு இழிப்பு..." என்க, சிரித்தபடியே தான் வந்து தூக்கிவிட்டனர் அவர்கள்.
"இல்லடா மச்சான்... எப்ப பாரு உன் குறுக்கையே உடைக்கறேனே... என்னைக்காவது ஒரு நாள் தப்பி தவறி ஒரு ஜான் இறக்கி உதைச்சா என்னாகுமுனு நினைச்சேன்... சிரிச்சேன்..." என டேவிட் சொல்ல, "வேற என்னாகும் மச்சானுக்கு பத்து பைசா செலவில்லா குடும கட்டுபாடு ஆப்ரேஷன் நடக்கும்..." என்றபடி சுமனும் அவனோடு சேர்ந்து சிரிக்க, இவற்றிற்கெல்லாம் காரணமானவனோ இன்னும் கட்டிலிலேயே நீச்சல் பழகிக் கொண்டிருந்தான்.
"எல்லாம் இந்த எடுபட்ட பயலால வரது..." என்றபடியே அருகில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து அவன் தலைமுதல் பாதம் வரை ஊற்ற,
"தண்ணீ... தண்ணீ... காப்பாத்துங்க... யாராவது என்ன காப்பாத்துங்க..." என்றபடியே இன்னும் கட்டிலில் தான் கவிழ்ந்து படுத்து நீச்சல் பழகிக் கொண்டிருந்தான் அவன்.
இதில் இன்னும் அதிக எரிச்சலுன்ற ஜெகன், "நேமி... டேய்... நேமி... இன்னும் நீ சாகல... என்ன தான் தினம் தினம் சாவடிச்சுட்டு இருக்க... ஏந்திரி முதல..." என தோளைப்பற்றி வேகமாக உலுக்கவும் தான் கண்ணை கசக்கிக் கொண்டு மெல்ல எழுந்தமர்ந்தான் நேமியோன். 'இப்ப நான் எங்க இருக்கேன்..?' என்ற ஒற்றை வினாவை தவிர, சித்தம் பிறதழ்கான மற்ற அத்தனை அறிகுறிகளும் அம்சமாய் பொருந்தி இருந்தது அவனுக்கு.
"எரும மாடே... மாசத்துல நாலு நாள் இதே பொழப்பா போச்சு உனக்கு... உன்ன நம்பி நிம்மதியா பக்கத்துல படுக்க முடியுதாடா... நீயெல்லாம் ஒரு மனுஷ ஜென்மமாடா..?" என்றபடியே நேமியை முறைத்துக் கொண்டிருந்தான் ஜெகன்.
அவனோ அசடு வழிந்தபடியே, "சாரிடா ஜெகா... பயங்கரமான ஒரு கனவுடா..." என விவரிக்க தொடங்க, அவனை இடையிட்டு தடுத்தனர் மற்ற மூவரும்.
"தெய்வமே... இத்தோட நிறுத்திக்க... இதேயே இதுவரைக்கும் நாலாயிரத்து நானூத்தி நாலு தடவ சொல்லிட்ட..." என ஜெகன் கையெடுத்துக் குடும்பிட, அதைக் கவனியாதவன் போல, மீண்டும் தொடங்கியவனை தடுத்து நிறுத்தி சுமனே தொடர்ந்தான்.
"யாருமே இல்லாத அத்துவான காட்டுல நீ மட்டும் தன்னந்தனியா நின்னுட்டுருக்க... அதானடா..." என சுமன் வடிவேலு பாணியில் கேட்க,
"அதே தான்..." என்றனர் மற்ற இருவரும் கோரஸாக.
"ஒரு பக்கம் பாத்தா இருட்டு... இன்னொரு பக்கம் பாத்தா வெளிச்சம்... சுத்தி வெறும் மண்ணு அதானேடா..."
"அதே தான்..."
"அப்ப தீடிருனு ஒரு பாட்டு சத்தம்... அதனாடா..."
"அதே தான்..." மற்ற இருவர்.
"அதான் இல்ல... அது பாட்டுல்ல... ஏதோ மியூசிக்..." என்றான் நேமி இடைபுகுந்து.
"ரொம்ப முக்கியம்... நீ அத கேட்டு மயங்கி பேக்கு மாதிரி மியூசிக் வந்த திசையில போய்ட்டு இருக்க... அதானேடா..."
"அதேதான்..."
"அப்படி போகும் போது திடீருனு ஒரு அரண்மனை... அங்க ஒரு பொண்ணு உக்காந்து..."
"சிறு திருத்தம் நின்னுட்டு..." என இடைபுகுந்த நேமியை முறைத்தவாறே தொடர்ந்தான் சுமன்.
"நின்னுட்டு சோகமா என்னத்தையோ வாசிச்சுட்டு இருக்கு... நீ அவள பாக்குற... அவ உன்ன பாக்குறா... இப்படி நீ பாக்க... அவ பாக்க... இப்படி பாத்துட்டே இருக்கும் போது பெரிய அலை ஒன்னு வந்து இரண்டு பேரையும் மூழ்கடிச்சு சாவடிச்சுடுது... அதானேடா..."
"அதேதான்..."
"நீ சாவப் போறதா நினைச்சுட்டு பக்கத்துல படுத்திருக்கவன ஒவ்வொரு தடவையும் சாவடிச்சுட்டு இருக்க... அதானேடா..." என புதிதாய் ஒரு குரல் கேட்க, குரல் வந்த திசையில் நால்வரும் திரும்பி பார்க்க அவர்களை முறைத்தபடி இடுப்பில் கைவைத்து நின்றுக் கொண்டிருந்தாள் சாரா.
"இப்படியே உக்காந்து கதாகாலட்சேபம் பண்ணிட்டு இருந்தா எப்ப கிளம்பி வேலைக்கு போறதாம்... இப்பவே மணி எட்டரையாகுது... இனிமே எப்ப நீங்க கிளம்பி வந்து... கேப்டன் வந்து உங்க எல்லாரையும் கிழிச்சு நார்நாரா தொங்க விட்டா தான்டா அடங்குவீங்க... இதுல தொர சீப் ஆபிஸர் வேற... சீக்கரம் வந்து தொலைங்க..." படபடவென பொறிந்தவள் தனது சீருடையை சரி செய்தபடியே வெளியே செல்ல,
"பூட்டுன கதவு பூட்டுன மாதிரியே தானடா இருக்கு... இந்த குட்டி சாத்தான் எப்படிடா உள்ள வந்துச்சு..." என்ற டேவிட்டுக்கு பால்கனி பக்கம் கையைக் காட்டிவிட்டு கதவை ஓங்கி அறைந்து சாற்றிவிட்டு வெளியேறிவிட்டாள் அவள்.
அவள் சென்றதுமே அடித்துப் பிடித்துக் கொண்டு மற்ற மூவரும் அவரவர் அறைக்கு எழுந்து ஓட, உண்மைக்கும் ஒரு பேரலை அடித்து ஓய்ந்தது போல தான் இருந்தது அந்த அறையில். அதே அவசரம் நேமியையும் தொற்றிக் கொள்ள வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.
சரியாக அடுத்த கால்மணி நேரத்தில் தனது வெண் சீருடை சகிதம் தயாராகி வந்திருந்தான் நேமியோன். திறந்திருந்த பால்கனியின் வழியே சில்லென்ற காற்று அவன் உடலை தழுவ அங்கே சென்று இரு கரங்களினாலும் கம்பிகளை பற்றியபடி நின்றான் அவன்.
இன்னும் இரவு முழுதாய் முழுதாய் முடிந்திருக்கவில்லை. முழுநிலவுக்கு முந்தைய நாள் என்பதால் நிலவு சற்றே பிரகாசமாய் ஒளிர்ந்துக் கொண்டிருந்து. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் விரிந்து கிடந்தது. அந்த ஆழ்கடலின் அமைதியோடு அந்த சொகுசு கப்பலும் சிறு சலனமும் இன்றி மெல்ல அக்கடலின் மேல்பரப்பில் ஊர்ந்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு புள்ளியில் சங்கமிக்கும் கடலலையும் நிலவையுமே இமைக்காது பார்த்திருந்தான் அவன். அழகான குறுநகை ஒன்று தானாய் வந்து ஒட்டிக் கொண்டது அந்த இதழ்களில்.
இந்த பரந்து விரிந்த பெரும் கடலுக்கு அவன் தான் அரசனாமே. இந்த பெயருக்கு கூட அர்த்தம் அதுதான். ஆயிரம் முறை அவன் அன்னை சொல்ல கேட்டிருக்கிறான். ஒவ்வொரு முறை சொல்லும் போது அப்படியொரு பெருமிதம் மின்னி மறையும் அவர் கண்களில். மீண்டும் ஒரே ஒரு முறை அவர் அதை சொல்ல கேட்க மாட்டோமா என்றிருத்தது.
நான்கு மணி ஆகிவிட்டதை கடிகாரத்தில் இருந்த செயற்கை குயில் நான்கு முறை கூவி உறுதிப்படுத்த, சுயம் மீண்டவனாய் அவசர அவசரமாக பால்கனி கதவை இழுத்து மூடிவிட்டு வெளியே வந்தான் அவன். அவனுக்கு முன்பே வந்துவிட்ட மற்றவர்கள் தங்கள் பணிகளை துவங்கியிருக்க, இவனும் தன் படியை துவங்கினான். அவசர அவசரமாக கையில் ஒரு காபி கோப்பையோடு வந்த சாரா, அதை அவன் கைகளில் திணித்துவிட்டு, ஒரு வார்த்தை பேசாமல் விறுவிறுவென தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள். அவள் செயலால் அழகாய் மலர்ந்த முறுவலை மறைக்க அவன் முற்படவில்லை.
நேமியோன், ஜெகன், சுமன், டேவிட், சாரா ஐவரும் பள்ளி காலம் தொட்டு இன்று வரை நட்பு வட்டத்திற்குள் இருப்பவர்கள். இந்த நெருங்கிய பிணைப்பிற்கு அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை அதிலும் குறிப்பாக அனைவருமே தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பள்ளி, கல்லூரி முடித்து இதோ இந்த சொகுசு கப்பலில் பயிற்சியில் சேர்ந்து படிபடியாக உயர்ந்து அனைவருமே தலைமை அதிகாரி (chief officer - grade 1) என்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களின் பணி நேரம் காலை நான்கு முதல் எட்டு வரை. மீண்டும் மாலை நான்கு முதல் இரவு எட்டு வரை. அன்றைய நிகழ்வுகளை சரிபார்த்து கப்பலின் கேப்டனிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
8 தளங்களைக் கொண்ட அவர்களின் சொகுசு கப்பல் 1320 பயணிகளையும் 350 ஊழியர்களையும் சுமந்துக் கொண்டு நியூயார்கில் இருந்து கிளம்பி இன்றோடு பத்து நாட்கள் ஆகிறது. இன்னும் 140 நாட்கள் பயணம் பாக்கி இருக்கிறது. நியூயார்கில் இருந்து கிளம்பி மீண்டும் நியூயார்கையே வந்தடைகறது. இடையில் 57 துறைமுகங்களில் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரும்பும் பயணிகள் அருகிலிருக்கும் புகழ்மிக்க சுற்றுலா தளங்களுக்கு சென்று வர நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யபடும்.
காலை எட்டு மணிக்கு தங்கள் பணியை முடித்துக் கொண்டு இரண்டாம் தளத்திலிருந்த உணவு கூடத்தில் அவர்களுக்கான உணவுடன் குழுமி இருந்தனர் ஐவரும்.
"சுமன்... நாளைக்கு கப்பல் மியாமி துறைமுகம் போய்டும்... இரண்டு நாள் அங்க தான்... எங்க போகலானு பிளான் பண்ணிட்டீங்களா..." என்றாள் சாரா.
"எங்க போறது எல்லாமே பாத்த இடம் தானே... சாப்பிட்டு இங்கேயே தூங்கி ரெஸ்டாவது எடுக்கலாம்..." என்றான் ஜெகன் தன் கை மறைவில் நீண்ட கொட்டாவியை வெளியேற்றியபடியே.
"ஆமான்... ஆமான்... நடுகடல நின்னுட்டு இருந்த கப்பல தள்ளி தள்ளி தொர ரொம்ப களைச்சுப் போய்ட்டீங்கல... ரெஸ்ட் அவசியம் தான்..." என்றான் டேவிட் தன்னிடமிருந்த பழச்சாற்றை எடுத்து உறிஞ்சியபடி படு நக்கலாக.
"அப்ப எங்க போகலாம் நீயே சொல்லு..." என்றான் சுமன்.
"மியாமில பாக்கவா இடம் இல்ல... அந்த நீலமும் பச்சையும் கலந்த கடலோட வெள்ளை மணலும்னு... எத்தன தடவ பாத்தாலும் அழுத்து போகுமா என்ன... இந்த தடவையும் நாம மியாமி பீச்சுக்கே போகலாம்..." என்றான் டேவிட்.
"நீ எதுக்கு அடிப் போடறனு நல்லா தெரியுது மகனே... எத்தன தடவ பீச்சுக்கு போறது... இந்த ஒரு தடவ சாப்பிங் போகலாம்ப்பா..." என்றான் சுமன்.
"எப்ப பாரு சாப்பிங் சாப்பிங்... சம்பாதிக்கற மொத்த பணமும் இப்படி தான் காலியாகுது உனக்கு... அப்படி என்னதான் இருக்கோ இந்த சாப்பிங்ல..." சாரா அலுத்துக் கொள்ள,
"அதெல்லாம் ரசிச்சு அனுபவிச்சு பாத்தா தான்டி தெரியும் எரும மாடே..." என்றான் சுமன். அவனுக்கு பழங்கால பொருட்களை சேகரிப்பதில் அப்படி ஒரு ஆர்வம். தேடி அலைந்து எத்தனை விலை என்றாலும் கொடுத்து வாங்கி விடுவான்.
"நாம ஏன் அக்வரியம் போக கூடாது... செமையா இருக்கும்... வெரைட்டி வெரைட்டியா கண்ண பறிக்கற மாதிரி கலர் கலர் மீனுங்க..." சிலிர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள் சாரா.
"ஏன்... வெரைட்டி வெரைட்டியா இருந்தா எண்ண சட்டில போட்டு வறுத்தா தீங்க போற... ஒழுங்கா பீச்சுக்கே போகலாம்..." என்றான் டேவிட்.
"நீங்க எங்க வேணாலும் போங்க... ஆனா இவனையும் கூட்டி போய் தொலைங்க... நான் ரெண்டு நாள் இவன் தொல்ல இல்லாம நிம்மதியா தூங்குவேன்..." நேமியை கைக்காட்டி ஜெகன் சொல்ல, "சரியான கும்பகர்ணன்டா நீ..." என்றாள் சாரா.
இப்போது தான் மற்ற நால்வருமே நேமியை கவனித்தனர். அத்தனை அமைதியாய் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தான் அவன்.
"டேய் நேமி... நீ என்னடா யோசிக்கற..." என சாரா அவனை லேசாக உலுக்கி கேட்க,
"நாம ஏன் ஒரு லாங் ட்ரைவ் போக கூடாது..." என்றான் அவன் யோசனையாய்.
"யா...ஹூ... சூப்பர் ஐடியா..." நால்வரும் ஒரு சேர ஆமோதிக்க, கடலிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு தரையில் சுற்றவும் ஆசை இருக்கும் தானே.
"ஆனா நமக்கு கார் வேணுமே... ரெண்ட்க்கு எடுக்கலாம்னா கூட உடனே எப்படி கிடைக்கும் கிடைக்கும்... முன்னாடியே ஏற்பாடு பண்ணி இருக்கனும் இல்ல..."
"ஏ... மேன் கடல லாங் ட்ரை போறதுக்கு கார் எதுக்கு மேன்... சிப்ல இருக்க ஒரு போட் போதாது..." என்றான் அவன் யோசனையாய்.
"நீயெல்லாம் உண்மைக்குமே மனுஷன் தானா... எத்தன நாள் இந்த கடல சுத்தனாலும் இந்த கடல் பைத்தியம் உன்னவிட்டு போகாதா..?" ஜெகன் வெளிப்படையாய் தலையில் அடிந்துக் கொள்ள, மற்ற மூவரும் முறைத்துக் கொண்டிருந்தனர் அவனை.
"இரண்டு நாளுக்கப்பறம் கப்பலையும் அதே கடலுக்குள்ள தான போக போற... அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு..."
"இரண்டு நாளைக்கு அப்பறமும் போவோம் தான்... ஆனா பெர்முடா போக மாட்டேமே..." என்றவனை அதிர்ந்துப் பார்த்தனர் மற்றவர்கள்.
"நீ விளையால தான நேமி..." சாரா அச்சமாய் அவனை வினவ,
"இதுல விளையாட என்ன இருக்கு சாரா... நான் முடிவு பண்ணிட்டேன்... பெர்முடா இந்த தடவ போயே ஆகனும்... யார் வருவீங்க... வர மாட்டீங்க... அதெல்லாம் உங்க விருப்பம்... நான் போக தான் போறேன்..." என உறுதியாக மொழிந்தவனை உடலில் உதறல் எடுக்க அச்சத்துடன் பார்த்திருந்தனர் மற்ற நால்வரும்.
- காத்திருப்பு தொடரும்...
வாசித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. கருத்துக்கள் பெரும் ஆவலோடு எதிர்ப் பார்க்கப்படுகிறது.