Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

முப்பத்துநான்காம் அத்தியாயம்

நந்தி மேடை

அன்றிரவு இரண்டாம் ஜாமத்தின் மத்தியில் நாவுக்கரசர் மடாலயத்தின் வாசலில் மாமல்லரும் குண்டோதரனும் பேசிக் கொண்டிருந்தார்கள். சாயங்காலமே மேகங்கள் எல்லாம் கலைந்து வானம் துல்லியமாயிருந்தது. சரத்கால சந்திரன் பொழிந்த தாவள்யமான நிலவு அந்தச் சாதாரண கிராமத்தைக் கந்தர்வலோகமாகச் செய்து கொண்டிருந்தது. சற்றுத் தூரத்தில், கிராமக் கோயிலின் தூங்கானை மாடத்துத் தங்க ஸ்தூபி 'தக தக' என்று பிரகாசித்தது. அதற்கப்பால் தெரிந்த தென்னை மரங்களின் உச்சியில் பச்சை மட்டைகளின் மீது நிலாமதியின் கிரணங்கள், ரசவாத வித்தை செய்து கொண்டிருந்தன. தென்னை மட்டைகள் இளங்காற்றில் இலேசாக அசையும் போது, பச்சை ஓலைகள் பளிச்சென்று வெள்ளி ஓலைகளாக மாறுவதும், மீண்டும் அவை பச்சை நிறம் பெறுவதும் ஏதோ ஒரு இந்திரஜாலக் காட்சியாகவே தோன்றின.

"பிரபு! குபேர சம்பத்து வாய்ந்த அரண்மனை உப்பரிகையில் பஞ்சணை மெத்தையில் படுத்து உறங்க வேண்டிய தாங்கள், இந்த ஆண்டி மடத்துத் திண்ணையில் அனாதைப் பரதேசியைப் போல் படுத்து உறங்குவதா? அந்த எண்ணத்தையே என்னால் சகிக்க முடியவில்லையே!" என்றான் குண்டோதரன். "குண்டோதரா!! இத்தனை நேரமும் ஆயனரோடு விவாதம் செய்து ஒருவாறு முடிந்தது. நீயும் அதே பாட்டைப் பாட ஆரம்பித்து விட்டாயா?" என்றார் மாமல்லர். குண்டோதரன் ஏதோ சொல்ல ஆரம்பித்தான், அதற்கிடங்கொடாமல் மாமல்லர் மறுபடியும் கூறினார்.

"என் தந்தை அப்படி என்னை அரண்மனை உப்பரிகையிலேயே எப்போதும் படுக்க வைத்து வளர்க்கவில்லை. குண்டோதரா! பஞ்சணை மெத்தையில் பரப்பிய முல்லைப் புஷ்பங்களின் மீது படுத்தும் எனக்குப் பழக்கம் உண்டு; நடு காட்டிலே மரத்தின் வேரைத் தலையணையாய்க் கொண்டு தரையில் படுத்தும் எனக்குப் பழக்கம் உண்டு. இந்த மடத்துத் திண்ணை வழ வழவென்று தேய்ந்து எவ்வளவு மிருதுவாக இருக்கிறது?" என்றார் மாமல்லர். "பிரபு! தாங்கள் பரிகாசம் செய்கிறீர்கள் எனக்கோ வேதனையாயிருக்கிறது. இந்தக் கஷ்டம் தங்களுக்கு என்னால் வந்ததுதானே என்பதை எண்ணும்போது என் மனம் பதைக்கிறது. நான் மட்டும் ஒரு வார்த்தை இந்த ஊர் வாசிகளிடம் தாங்கள் இன்னார் என்பது பற்றிச் சொல்லியிருந்தால்?..." "குண்டோதரா! பிசகான காரியம் செய்துவிட்டுப் பிறகு வருத்தப்படுகிறவர்களை நான் கண்டதுண்டு. நல்ல காரியம் - புத்திசாலித்தனமான காரியம் - செய்ததற்காக வருத்தப்படுகிறவர்களை நான் பார்த்ததில்லை; இப்போது உன்னைத்தான் பார்க்கிறேன். நான் சக்கரவர்த்தி குமாரன் என்பது தெரியாதபடி ஜனங்களுடன் கலந்து பழகும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எவ்வளவோ ஆவல் கொண்டிருந்தேன். அந்த ஆவல் இப்போது உன்னால் நிறைவேறுகிறது. ஆஹா! சிவகாமியின் நடனக் கலையின் புகழ் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறதென்பதை இன்று தெரிந்து கொண்டதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?.."

"பிரபு! சிவகாமி தேவியின் நடனக் கலையின் புகழ் மட்டும் இங்கே பரவியிருக்கவில்லை. புள்ளலூர்ப் போரின் கீர்த்தியும் இந்தக் கிராமம் வரையில் வந்து எட்டியிருக்கிறது!" "மெய்யாகவா, குண்டோதரா!" "ஆம் பிரபு! அந்தச் சண்டையிலே குமார சக்கரவர்த்தி நிகழ்த்திய மகத்தான வீர சாகசச் செயல்களைப் பற்றியும் இங்கேயெல்லாம் தெரிந்திருக்கிறது. அதையெல்லாம் பற்றிச் சவிஸ்தாரமாகச் சொல்ல வேண்டுமென்று கிராமவாசிகள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு இராத்திரி சாவகாசமாய்ச் சொல்லுவதாக வாக்களித்திருக்கிறேன். இப்போது கோவில் பிராகாரத்திலே அவர்கள் கூடியிருப்பார்கள், நீங்களும் வருகிறீர்களா?" என்று குண்டோதரன் கேட்டான். "வருகிறேன்; ஆனால் நீ ஏதாவது விஷமம் செய்து என்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது!" என்றார் மாமல்லர்.

கோயில் பிரகாரத்தில் நந்தி மேடையின் படிக்கட்டில் குண்டோதரனும் மாமல்லரும் உட்கார்ந்திருந்தார்கள். நந்தி மேடை பலிபீடம் இவற்றைச் சுற்றிப் பிரகாரத்தில் செங்கல் சுண்ணாம்பினால் தளவரிசை போடப்பட்டிருந்தது. அந்தச் சுத்தமான தளத்தில் கிராமவாசிகள் பலர் உட்கார்ந்திருந்தார்கள். புள்ளலூர்ச் சண்டையைப் பற்றி அவர்களிடம் குண்டோதரன் சண்டப் பிரசண்டமாக வர்ணனை செய்தான். அந்தச் சண்டையிலே முக்கியமாகக் குமார சக்கரவர்த்தி மாமல்லர் காட்டிய தீர சாகசங்களைப் பற்றி உற்சாகமாக விவரித்தான்.

"மாமல்லர் எப்படிப் போர் செய்தார் தெரியுமா? இந்தக் கணம் பார்த்தால் இங்கே இருப்பார்; மறுகணம் பார்த்தால் அதோ அந்த மதில்சுவருக்கு அப்பால் இருப்பார். அந்தப் பெரிய போர்க்களத்திலே மாமல்லர் எங்கே போரிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை எந்த நேரத்திலும் கண்டுபிடித்துவிடலாம். மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தைப்போல் எங்கே ஒரு ஜொலிக்கும் வாள் அதிவேகமாகச் சுழன்று எதிரிகளின் தலைகளை வெட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறதோ, அங்கே மாமல்லர் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். அப்படி மின்னல் வேகத்தில் வாளைச் சுழற்றிப் பகைவர்களை ஹதாஹதம் செய்யக்கூடிய வீராதி வீரர் வேறு யார்? மாமல்லருடைய வாளிலே அன்றைக்கு யமனே வந்து உட்கார்ந்திருந்தான். அவர் சக்கராகாரமாகச் சுழன்று வாளை வீசியபோது, ஒன்று, பத்து, ஆயிரம் என்று எதிரிகள் உயிரற்று விழுந்தார்கள்!..."

"ஆஹா! அபிமன்யு செய்த யுத்தம் மாதிரி அல்லவா இருக்கிறது!" என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார். அந்த ஊரிலும் சில காலமாக மகாபாரதம் வாசிக்கப்பட்டு வந்தது. அதனால் எல்லாரும் அருச்சுனன் - அபிமன்யு நினைவாகவே இருந்தார்கள்! குண்டோதரன் கூறினான்; "ஆம், மாமல்லர் அன்று அபிமன்யு மாதிரிதான் போர் புரிந்தார். ஆனால் ஒரு வித்தியாசம், அபிமன்யு போர்க்களத்தில் மாண்டு போனான். புள்ளலூர்ச் சண்டையிலோ மாமல்லரின் வாளுக்கு முன்னால் நிற்க முடியாமல் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடத் தொடங்கினார்கள். எல்லோருக்கும் முன்னால் ஓட்டம் பிடித்தவன் கங்க நாட்டு அரசன் துர்விநீதன் தான்!" "துர்விநீதன் எந்தப் பக்கம் ஓடினானோ?" என்று ஒரு கிராமவாசி கேட்டான். "தெற்கு நோக்கி ஓடி வந்ததாகத்தான் கேள்வி. தென் பெண்ணை நதி வரையில் அவனைப் பின்தொடர்ந்து மாமல்லரும் தளபதி பரஞ்சோதியும் வந்ததாகக் கூடக் கேள்வி" என்று சொல்லி வந்த குண்டோதரன், மாமல்லர் பக்கம் திரும்பிப் பார்த்து, "ஏன் ஐயா, என் கையைக் கிள்ளுகிறீர்?" என்றான்.

மாமல்லரின் கண்களில் கோபக் குறி காணப்பட்டது. இதற்குள் கூட்டத்தில் இன்னொருவர், "ஆமாம், இந்த விவரமெல்லாம் உனக்கு எப்படி அப்பா தெரிந்தது? ஆயனரின் சீடனுக்குப் போர்க்களத்தில் என்ன வேலை?" என்று கேட்டார். "நல்ல கேள்விதான்; உன்னிடம் உண்மையைச் சொல்லாமல் முடியாது போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே குண்டோதரன் எழுந்து மாமல்லரிடமிருந்து சற்று அப்பால் போய் நின்றான்.

"இதோ இருக்கிறாரே, என் பக்கத்தில், இவர்... இவர்தான்... ஏன் ஐயா, இப்படி என்னை உறுத்துப் பார்க்கிறீர்... இவர்தான் உண்மையில் ஆயனருடைய உத்தம சிஷ்யர். நான் பல்லவ சைனியத்தைச் சேர்ந்தவன். துர்விநீதனைத் தொடர்ந்து வந்த மாமல்லருடன் நானும் வந்தேன். வழியில் என் குதிரையின் கால் ஒடிந்து விழுந்து விட்டபடியால் பின் தங்கிவிட்டேன். பிறகு வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு இவர்களுடைய தெப்பத்தில் ஏறி உயிர் தப்பினேன்!"

உடனே, கூட்டத்திலிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் விலாவிலே விரலால் சீண்டியும் வேறுவிதமாகக் கவனத்தை இழுத்தும் காதோடு இரகசியம் பேசிக் கொண்டார்கள். குண்டோதரன் ஆயனரின் சிஷ்யனாக இருக்க முடியாது' என்று அவர்களில் பலர் முன்னாடியே ஊகித்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். "மாமல்லரும் ஒரு வேளை இந்த வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கலாமோ?" என்று ஒருவர் கூறினார். "அதை நினைத்தால் எனக்கு ரொம்பவும் கவலையாயிருக்கிறது!" என்றான் குண்டோதரன். "ஒருவேளை இங்கேயே அவரும் வந்து ஒதுங்கினாலும் ஒதுங்கலாம்" என்று இன்னொருவர் சொன்னார். "ஒதுங்கினாலும் ஒதுங்கலாம்!" என்றான் குண்டோதரன்.
 
முப்பத்தைந்தாம் அத்தியாயம்

"கள்வரோ நீர்?"

மறுநாள் மாலை நேரத்தில் மண்டபத்துக் கிராமத்துச் சிவன் கோயில் கண்கொள்ளாக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. கோயிலின் முன் கோபுர வாசலைப் பசுமையான வாழை மரங்களும், மகர தோரணங்களும் திரைச் சீலைகளும் அலங்கரித்தன. உள்ளே அர்த்த மண்டபத்தையும் வௌிக் கோபுரத்தையும் சேர்த்துப் பிராகாரத்தில் விஸ்தாரமான பந்தல் போட்டிருந்தார்கள். பந்தல் முனைகளில் வரிசை வரிசையாகத் தந்த வர்ணமுள்ள இளந்தென்னங் குருத்துத் தோரணங்களும் அவற்றின் இடையிடையே செந்தாமரை மொட்டுக்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

அந்த நாளில் தமிழ்நாட்டில் நீர்வளமுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தாமரைக்குளம் உண்டு. குளத்திலே தண்ணீர் இருப்பதே தெரியாதவண்ணம் தாமரை இலைகளும் மலர்களும் மொட்டுக்களும் நிறைந்திருக்கும். எனவே, கோயில் விக்கிரங்களுக்கு வேறு அபூர்வ புஷ்பங்களைச் சாத்திவிட்டுத் தாமரை மொட்டுக்களையும் மலர்களையும் கோயிலின் அலங்காரத்துக்கு உபயோகப்படுத்துவார்கள். இவ்விதம் அமோகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த கோயிலில் அஸ்தமிப்பதற்கு முன்னால் ஊர் ஜனங்கள் எல்லாரும் வந்து கூடி விட்டார்கள். ஸ்தீரிகள், குழந்தைகள் ஒருவரும் மிச்சமில்லாமல் வந்து அவரவர்களும் போட்டியிட்டு முன்னால் இடம் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்கள். சூரியன் அஸ்தமித்ததும் நூற்றுக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஆலயம் ஒளிமயமாக விளங்கிற்று. அதே சமயத்தில் சிவகாமிதேவியின் திவ்ய நடனத்தைப் பார்ப்பதற்காகவே விஜயம் செய்கிறவனைப்போல் பூரண சந்திரனும் உதயமானான்.

ஆயனரும் சிவகாமியும் கோயிலின் கோபுர வாசலுக்குள்ளே பிரவேசித்ததும் கூட்டத்தில் கலகலப்பு உண்டாயிற்று. பந்தலுக்குத் தென்புறத்தில் அமைந்திருந்த அரங்க மேடையிலே வந்து சிவகாமி நின்றதும் கூட்டத்தில் நிசப்தம். ஸ்திரீகளும் பேச்சை நிறுத்தினார்கள் அழுத குழந்தைகளும் வாய் மூடின. அந்த மண்டபப்பட்டுக் கிராமத்து ஜனங்கள் அதுவரையில் அம்மாதிரி கண் கூசும்படியான திவ்ய சௌந்தரியத்தைக் கண்டதில்லை.

சிவகாமியின் நடன அலங்காரமும் அணிகலன்களும் அவளுடைய முகத்தில் அப்போது பிரகாசித்த தெய்வீக களையும் கிளர்ச்சியும் பார்த்தவர்களைத் திகைக்கச் செய்தன. ஆரம்பத் திகைப்பு ஒருவாறு மாறியதும் ஒருவருக்கொருவர் தங்களுடைய வியப்பைத் தெரிவித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். "தேவலோகத்து நடன மாதர்களான அரம்பை, ஊர்வசி முதலியவர்கள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்!" என்றார் ஒருவர். "ஒருநாளும் இல்லை அவர்கள் இவ்வளவு அழகாக ஒரு நாளும் இருந்திருக்க முடியாது!" என்றார் இன்னொருவர். "இந்தப் பெண்ணுடனே அந்தத் தேவலோக கணிகையரை ஒப்பிடுவது பிசகு. தில்லையம்பலத்தில் நடராஜப் பெருமானுக்குப் போட்டியாக நடனமாடிய சிவகாமி தேவியேதான் இப்படி அவதாரம் எடுத்து வந்திருக்கிறாள்!" என்று ஒரு பக்தர் கூறினார். "இல்லாமலா, நாவுக்கரசர் பெருமான் அவ்வளவு பாராட்டினார்!" என்று இன்னொரு பக்தர் பரவசமாகச் சொன்னார்.

பளிச்சென்று சொல்லி வைத்தாற்போல் சபையிலே மறுபடியும் பரிபூரண நிசப்தம் ஏற்பட்டது. சிவகாமி நடனமாட ஆரம்பித்து விட்டாள்! ஆயனரின் கரதாளத்துக்கும் அவர் பாடிய ஸ்வரஜதிகளுக்கும் இணங்கச் சிவகாமி ஆடினாள்! உள்ளூர் மத்தள வித்வான் ஒருவர் வாணாளில் என்றுமறியாத உற்சாகத்துடன் மத்தளம் வாசித்தார். 'கும் கும்' என்னும் மத்தளச் சத்தத்தோடு கலந்து பாதச் சதங்கை ஒலி 'கல் கல்' என்று சப்திக்கச் சிவகாமி நிருத்தம் ஆடினாள்.

அந்த நிருத்தத்தில் மின்னலின் விரைவு காணப்பட்டது; மான் குட்டியின் துள்ளல் தோன்றியது; கான மயிலின் சாயல் விளங்கியது. சில சமயம் சிவகாமி பூமியிலே நின்று ஆடினாள்; சில சமயம் வானமண்டலத்துக்குச் சென்று வெண்மதியின் கிரணங்களில் ஆடினாள். சில சமயம் நட்சத்திர மண்டலத்துக்கே சென்று விண்மீன்களின் மத்தியில் பம்பரம் போலச் சுழன்று ஆடினாள். சிவகாமி அவ்விதம் சுழன்றாடியபோது பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள் சுழன்றன; அரங்க மேடையும் அகல் விளக்குகளும் சுழன்றன. கோயில் சுழன்றது; கோபுரங்கள் சுழன்றன; தூங்கானை மாடத்துத் தங்க ஸ்தூபி சுழன்றது; வானமும் பூமியும் கீழ் மேலாகச் சுழன்றன; சந்திரனும் நட்சத்திர மண்டலங்களும் சுழன்று சுழன்று வந்தன. இவ்விதம் வெவ்வேறு காலப் பிரமாணங்களில், வெவ்வேறு ஜதிகளில் விதவிதமான நிருத்த வகைகளை ஆடிச் சபையோரைக் கிறுகிறுக்க அடித்த பிறகு சிவகாமி சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்து கொள்வதற்காக மேடைக்குப் பின்புறம் சென்றாள். அப்போது சபையில் பிரமாதமான ஆரவாரம் எழுந்தது. ஆயனரின் அரண்ய வீட்டில் எட்டு மாதம் இருந்தும் சிவகாமியின் நடனத்தைப் பார்த்தறியாதவனான குண்டோதரனும் மற்றச் சபையினரைப் போலவே பரவசமடைந்து போயிருந்தான். நடனம் நின்ற பிறகும் அவன் தன்னை மறந்த நிலையிலேயே இருந்தபடியால், பக்கத்திலிருந்த மாமல்லரைப் பார்த்து, "பிரபு..." என்று ஆரம்பித்தான். மாமல்லரும் சிவகாமியின் நடனத்தில் பூரணமாய் ஈடுபட்டிருந்தாராயினும், அவர் தம்மையும் தமது சுற்றுப்புறத்தையும் மறந்துவிடவில்லை. எனவே, குண்டோதரன் 'பிரபு' என்றதும் அவர் அவனை ஒரு குலுக்குக் குலுக்கினார். அதற்குள் பக்கத்திலிருந்த ஐந்தாறு பேரின் கவனமும் குண்டோதரனின் மேல் விழுந்திருந்தது. மாமல்லரின் குலுக்கலினால் தனது நினைவு அடைந்த குண்டோதரன் சுவாமி சந்நிதியை நோக்கி, "பிரபு!... இந்தத் தெய்வீக நடனம் உனக்குத்தான் பிரீதி!" என்று பக்தி பரவசம் ததும்பிய குரலில் கூறி முடித்தான். "சந்தேகம் என்ன? இறைவனுக்குத்தான் பிரீதி!" என்று பக்கத்திலிருந்தவர்களும் ஆமோதித்தார்கள்.

சிவகாமி மீண்டும் அரங்க மேடைக்கு வந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள். திருநாவுக்கரசர் பெருமானின், "வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும்" என்னும் பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடித்தபோது, சபையோர் சாக்ஷாத் சிவபெருமானையே நேருக்கு நேர் தரிசித்தவர்களைப் போல் ஆனந்த வாரிதியில் முழுகினார்கள். பின்னர், "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்னும் திருப்பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பாள் என்று எல்லாரும் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சிவகாமி பின்வரும் பாடலைப் பாடி அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள்: வெள்ளநீர்ச் சடையனார் தாம் வினவுவார் போலவந்தென் உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்குநான் புடைகள் போந்து கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கிநக்கு வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே!

ஓர் அறியாப் பெண்ணின் உள்ளமாகிய இல்லத்தினுள்ளே வெள்ள நீர்ச்சடையனாராகிய சிவபெருமான் ஏதோ விசாரிக்க வருகிறவர்போல வந்து பிரவேசிக்கிறார். தூங்கிக் கொண்டிருந்த பெண் திடுக்கிட்டு எழுந்திருக்கிறாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறாள். யாரோ முன்பின் அறியாதவர் எதிரில் நிற்பதைக் கண்டு, "ஐயோ! இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் என் உள்ளத்திலே புகுந்த நீர் யார்? கள்ளரா?" என்று வினவுகிறாள். அப்போது வந்தவர் கண்ணோடு கண் கலங்கும்படி அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறார். பார்த்துவிட்டு நகை செய்கிறார்; அந்த நகைப்போடு கலந்து, "நானா கள்ளன்? கள்ளத் தனமென்பதே அறியாத வெள்ளை மனத்தவனாயிற்றே அதற்கு அறிகுறியாக என் மேலேயும் வெண்ணீறு பூசியிருக்கிறேன், தெரியவில்லையா?" என்கிறார். வானத்திலே விளங்கிய இளம் பிறையைத் திருடித் தம் சிரசிலே அணிந்து கொண்ட பெருமான்தான் இப்படி ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்! ஆகா! அந்த இளம் பிறையின் அழகைச் சொல்வேனா? அவருடைய கள்ளத்தனத்தைச் சொல்வேனா? அல்லது கள்ள மற்றவர் போல அவர் நடித்த நடிப்பைச் சொல்வேனா?... மேற்கூறிய இவ்வளவு உள்ளப் பாடுகளும் வௌியாகும்படியாகச் சிவகாமி தன் முகபாவங்களினாலும், அங்கங்களின் சைகைகளினாலும் கைவிரல்களின் முத்திரையினாலும் உணர்ச்சியோடு கலந்து அற்புதமாக அபிநயம் பிடித்தாள்.

பாடலும் அபிநயமும் சபையோருக்கு எல்லையற்ற குதூகலத்தை அளித்துப் பல முறை 'ஆஹா'காரத்தை வருவித்தது. ஆனாலும் சபையோர்கள் திருப்தியடைந்தவர்களாகக் காணவில்லை. அவர்களில் ஒருவர் துணிந்து எழுந்து அரங்க மேடைக்குச் சென்று ஆயனர் காதோடு ஏதோ சொன்னார். அது சிவகாமியின் செவியிலும் விழுந்தது. சிவகாமி சிறிது தயக்கத்துடனேயே, "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்!" என்று பாடிக்கொண்டு அபிநயம் பிடிக்க ஆரம்பித்தாள். எவ்வளவோ திறமையுடனே, விதவிதமான உள்ளப்பாடுகள் அற்புதமாக வௌியாகும்படி அபிநயம் பிடித்தாள். பாட்டும் அபிநயமும் முடியும் தருவாயில் சபையிலே பலருக்கு ஆவேசம் வந்துவிட்டது!

ஒரு வயது சென்ற கிழவர் எழுந்து நின்று, "நடராஜா, நடராஜா! நர்த்தன சுந்தர நடராஜா!" என்று பாடிக் கொண்டே ஒரு காலைத் தூக்கிய வண்ணம் சபையிலே நடனமாடத் தொடங்கி விட்டார். "இம்மாதிரி உணர்ச்சி வாய்ந்த அபிநயத்தை இது வரையில் யாரும் பார்த்ததில்லை; இனிமேல் பார்க்கப் போவதும் இல்லை" என்று சபையோர் ஒருவருக்கொருவர் கூறி மகிழ்ந்தார்கள். ஆனால், இன்று அந்தப் பாடலுக்கு அபிநயம் காஞ்சியில் நாவுக்கரசர் பெருமான் சந்நிதியில் அமைந்ததுபோல் அவ்வளவு உணர்ச்சியுடன் அமையவில்லையென்று மூன்று பேருக்கு மட்டும் தெரிந்திருந்தது. அந்த மூவர் ஆயனர், மாமல்லர், சிவகாமி ஆகியவர்கள்தான். சிவகாமி இன்றைக்கு அபிநயத்தின் முடிவில் மூர்ச்சையடைந்து பூமியில் விழுந்துவிடவும் இல்லை!
 
முப்பத்தாறாம் அத்தியாயம்

புதிய பிறப்பு

மண்டபப்பட்டுக் கிராமத்துக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள் சாயங்காலம் ஆயனர், சிவகாமி, மாமல்லர் ஆகிய மூவரும் கிராமத்துக்கு வௌியே உலாவி வரக் கிளம்பினார்கள். பாறையில் படகு மோதி அவர்கள் நீரில் மூழ்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். வெள்ளம் இன்றைக்கு ரொம்பவும் வடிந்து போயிருந்தது. அன்று தண்ணீரில் மூழ்கியிருந்த இடங்களில் இன்று நீ வடிந்து பாறைகள் நன்றாய்த் தெரிந்தன. கரையோரத்து மரங்கள் அன்று பாதிக்கு மேலே வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. இன்றைக்கு அதே மரங்களின் வேரின் மீது தண்ணீர் 'சலசல'வென்று அரித்தோடிக் கொண்டிருந்தது. பாறைப் பிரதேசமாதலால் வெள்ளத்திற்குப் பிறகு இடங்கள் வெகு சுத்தமாயிருந்தன.

அந்தப் பாறைகளைச் சுற்றிச் சுற்றி வந்து பார்ப்பதில் ஆயனர் அடங்காத ஆர்வம் கொண்டவராயிருந்தார். இந்தப் பாறையை இன்னின்ன மாதிரி கோவிலாக அமைக்கலாம், இன்னின்ன சிற்ப வடிவங்களாகச் செய்யலாம் என்று அவர் உள்ளம் கற்பனை செய்து கொண்டிருந்தது. சிவகாமியும் மாமல்லருமோ, மகிழ மரத்தடியில் பாறையின் மீது உட்கார்ந்து மௌனம் சாதிப்பதில் அடங்காத பிரியம் கொண்டவர்களாகத் தோன்றினார்கள்.

பகலும் இரவும் மயங்கிக் கலந்திருந்த அந்த நேரத்தில் ஆயனர் அரை மனதாக "போகலாமா, சிவகாமி?" என்று கேட்டார். "அப்பா! இன்றைக்கு இருட்டி இரண்டு நாழிகைக்குப் பிறகு சந்திரோதயம் ஆகுமல்லவா? அதைப் பார்த்துவிட்டுப் போகலாமே?" என்றாள் சிவகாமி. "அதற்கென்ன, அப்படியே செய்யலாம்!" என்று கூறி ஆயனர் அவர்களுக்கு அருகில் தாமும் உட்கார்ந்தார். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது.

"இந்த ஊரை விட்டுப் போகவே எனக்கு மனம் வராதென்று தோன்றுகிறது!" என்றார் ஆயனர். "இந்த ஊர் அதிர்ஷ்டம் செய்த ஊர், கிராமவாசிகள் சொன்னார்களே, அது உண்மைதான்!" என்றார் மாமல்லர். "ஏன் அப்பா, அவ்வளவு தூரம் இந்த ஊர் உங்களுக்குப் பிடித்துவிட்டதின் காரணம் என்ன?" என்று சிவகாமி கேட்டாள். "இந்தப் பாறைகளைப் பார்க்கும்போது எனக்கு ஆசையாயிருக்கிறது. திவ்வியமான கோயில்கள் அமைப்பதற்குக் கை ஊறுகிறது." "இன்னும் எத்தனையோ ஊர்களிலேயும் பாறைகள் இருக்கின்றன!" என்றாள் சிவகாமி. "இந்தக் கிராமவாசிகள் நல்ல ரசிகர்கள்; நேற்று உன் நடனத்தைப் பார்த்து எவ்வளவு ஆனந்தப்பட்டார்கள்!"

"ஐயா! காஞ்சியில் ரசிகர்கள் இல்லையென்று கூறுகிறீர்களா?" என்று மாமல்லர் பொய்க் கோபத்துடன் கேட்டார். "மகேந்திர பல்லவரும் அவருடைய திருக்குமாரரும் இருக்கும் காஞ்சியில் ரசிகர்கள் இல்லாமற் போய் விடுவார்களா? அந்த எண்ணத்துடன் நான் சொல்லவில்லை. எங்கேயோ போகலாமென்று யாத்திரை கிளம்பியவர்களைக் கடவுளே பார்த்து இந்த ஊரில் கொண்டுவிட்டிருக்கிறார். நாங்கள் இங்கேயே இருப்பதுதான் இறைவனுடைய சித்தம் என்று தோன்றுகிறது!" "அப்பா! நாகநந்தி பிக்ஷு வெள்ளம் வந்த இரவு போனாரே, அவர் என்ன ஆகியிருப்பார்?" என்று சிவகாமி கேட்டாள். "ஐயோ! பாவம்! என்ன ஆனாரோ, தெரியவில்லை. அந்த வயோதிக பிக்ஷுவின் கதியும் என்ன ஆயிற்றோ, தெரியவில்லை!"

அப்போது மாமல்லர் தம்முடன் வந்த சைனியத்தின் கதி என்ன ஆயிற்றோ என்று நினைத்தார். குண்டோதரன் படகு சம்பாதித்துக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுக் காலையிலேயே போனவன், இன்னும் ஏன் திரும்பி வரவில்லை..? சற்று நேரத்துக்கெல்லாம் கீழ் அடிவானத்தில் ஏறக்குறைய வட்டவடிவமான சந்திரன் உதயமானான். அவனுடைய கிரணங்களினால் வெண்ணிறம் பெற்ற வெள்ளப் பரப்பு தேவர்கள் அமுதத்திற்காகக் கடைந்த பாற்கடலைப்போல் ஜொலித்தது. வெள்ளத்திலிருந்து சந்திரன் மேலே கிளம்பியது, அந்தப் பாற்கடலிலிருந்து அமுதம் நிறைந்த தங்கக் கலசம் எழுந்தது போலிருந்தது. சிறிது நேரம் சந்திரோதயத்தின் அழகைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஆயனருக்கு இருப்புக் கொள்ளவில்லை. "நிலா வௌிச்சத்தில் ஒரு தடவை இந்தப் பாறைகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார்.

மாமல்லரும் சிவகாமியும் வெகுநேரம் மௌனமாய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய இரு கைகள் மட்டும் ஒன்று சேர்ந்து அந்தரங்கம் பேசிக் கொண்டிருந்தன. அவர்களைச் சுற்றி வௌியிலே மகிழம் பூவின் நறுமணம் நிறைந்து மூச்சுத் திணறும்படிச் செய்தது. அவர்களுடைய உள்ளங்களிலே இன்ப உணர்ச்சி ததும்பி மூச்சுத் திணறும்படிச் செய்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களுக்குக் கீழேயிருந்த பூமி இலேசாக நழுவி அவர்களை அந்தரத்தில் விட்டுச் சென்றது.

அவர்களுடைய தலைக்கு மேலே வானமானது, சந்திர மண்டலம் நட்சத்திரங்களுடன் திடீரென்று மறைந்துவிட்டது! எங்கேயோ, எங்கேயோ, எங்கேயோ எல்லையில்லாத வெள்ளத்தில் மிதந்து மிதந்து அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவ்விதம் அவர்கள் செய்த ஆனந்த யாத்திரை ஒரு கண நேரமா அல்லது நீண்ட பல யுகங்களா என்பது தெரியாதபடி காலாதீத நிலையை அடைந்து, மேலே இன்னும் மேலே, அதற்கும் மேலே போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென்று அமுதமளாவிய குளிர்ந்த இளங்காற்று வீசி, மகிழ மரத்தின் கிளைகளில் சலசலப்பை உண்டுபண்ணியது. அந்த கிளைகளிலிருந்து மகிழம் பூக்கள் பொல பொலவென்று அவர்களுடைய தலைமேல் உதிர்ந்தன.

இருவரும் தடாலென்று பூலோகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். மண்டபப்பட்டுக் கிராமத்துப் பாறையின் மேல் மகிழ மரத்தினடியில் தாங்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்கள். "சிவகாமி! என்ன சிந்தித்துக் கொண்டிருந்தாய்?" என்று மாமல்லர் கேட்டபோது, வெகு வெகு வெகு தூரத்திலிருந்து அவருடைய குரல் கேட்டது போலிருந்தது. "பிரபு! கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; விழுந்து விடுவேன் போலிருக்கிறது!" என்றாள் சிவகாமி. "ஏன் சிவகாமி உன் உடம்பு இப்படி நடுங்குகிறது? குளிர் காற்றினாலா?" என்று மாமல்லர் கேட்டார். "இல்லை, பிரபு! குளிர் இல்லை; என் உடம்பு கொதிக்கிறதைப் பாருங்கள்!" என்று சிவகாமி சொன்னபோது அவளுடைய குரலும் நடுங்கிற்று. "பின் ஏன் இவ்விதம் நடுங்குகிறாய்?" "ஏதோ பயமாயிருக்கிறது நான் உயிரோடுதானிருக்கிறேனா?" "இது என்ன கேள்வி? உயிரோடு இல்லாவிட்டால் எப்படி என்னுடன் பேசமுடியும்?"

"சற்று முன்னால் எனக்கு எங்கேயோ வானமார்க்கத்தில் பிரயாணம் போவதுபோல் தோன்றியது. சத்தமில்லாத ஒரு தெய்வீக சங்கீதம் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தது. அதன் தாளத்துக்கிணங்க என் ஆத்மா நடனமாடிக் கொண்டு மேலுலகம் சென்றது... அதெல்லாம் பிரமைதானே? உண்மையாக நான் இறந்து போய்விடவில்லையே?" "ஆம்; சிவகாமி! ஒரு விதத்தில் நாம் இருவருமே இறந்து விட்டோம். ஆனால், மறுபடியும் பிறந்திருக்கிறோம். இருவருக்கும் இது புனர்ஜன்மந்தான். மூன்று நாளைக்கு முன்னால் நாம் இந்தக் கிராமத்துக்கு வந்தபோது தனித்தனி உயிருடனும் உள்ளத்துடனும் இருந்தோம். இன்று அந்தச் சிவகாமி இல்லை நீ; நானும் அந்த நரசிம்மவர்மன் இல்லை. என் உயிரிலும் உள்ளத்திலும் நீ கலந்திருக்கிறாய். அப்படியே உன் உயிரிலும் உள்ளத்திலும் நான் கலந்து போயிருக்கிறேன். ஆகையால், நாம் இருவரும் மரணமடைந்து மறு பிறப்பும் அடைந்துவிட்டோம்; எல்லாம் மூன்றே நாளில்!..."

"நிஜமாக மூன்று நாள்தானா? என்னால் நம்பமுடியவில்லை. எத்தனையோ நீண்ட காலம் மாதிரி தோன்றுகிறது!" "அதுவும் உண்மையே, இந்த மூன்று நாள் வெறும் மூன்று நாள் அல்ல. இதற்கு முன் எத்தனையோ ஜன்மங்களில் நாம் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோம்; காதலித்திருக்கிறோம்; பிரிந்திருக்கிறோம்; சேர்ந்திருக்கிறோம். அவ்வளவு அனுபவங்களையும் இந்த மூன்று தினங்களில் திரும்ப அனுபவித்தோம்." "இதோடு எல்லாம் முடிந்து போய்விட்டதா?" "எப்படி முடிந்துவிடும்? பல ஜன்மங்களில் தொடர்ந்து வந்த உறவு இந்த ஜன்மத்தோடு மட்டும் எப்படி முடியும்?" "வருகிற ஜன்மங்களைப் பற்றி நான் கேட்கவில்லை. இந்த ஜன்மத்தைப்பற்றித்தான் கேட்கிறேன். இந்த ஜன்மத்தில் எப்போதும் இப்படியே இருக்குமா?" "எது இப்படி இருக்குமா என்று கேட்கிறாய்?" "உங்களுடைய அன்பைத்தான் கேட்கிறேன்!"

மாமல்லர் தமக்கு அருகில் பாறையில் உதிர்ந்து கிடந்த மகிழம் பூக்களைத் திரட்டிச் சிவகாமியின் கையில் வைத்தார். "சிவகாமி என்னுடைய அன்பு மல்லிகை - முல்லை மலர்களைப் போல் இன்றைக்கு மணத்தை வாரி வீசிவிட்டு நாளைக்கு வாடி வதங்கி மணமிழந்து போவதன்று. என் அன்பு மகிழம் பூவை ஒத்தது; நாளாக ஆக அதன் மணம் அதிகமாகும். வாடினாலும் காய்ந்து உலர்ந்தாலும் அதன் மணம் வளர்ந்து கொண்டுதானிருக்கும்.... அன்றைக்குத் தாமரைக் குளக்கரையில் என்னிடம் வாக்குறுதி கேட்டாயே, ஞாபகம் இருக்கிறதா?" "இருக்கிறது!" "அந்த வாக்குறுதியை இப்போதும் கோருகிறாயா?" "வேண்டாம் பிரபு! வாக்குறுதி வேண்டாம்! தங்களுடைய மன்னிப்புத்தான் வேண்டும்!" "எதற்கு மன்னிப்பு?" என்றார் மாமல்லர். "தங்களைப் பற்றிச் சந்தேகம் கொண்டதற்குத் தான். தங்களைப் பற்றி ஒரு துஷ்ட நாகம் கூறிய விஷங்கலந்த மொழிகளை நம்பியதற்காகத்தான்!" என்றாள் சிவகாமி.

அப்போது இலேசாகச் சரசரவென்ற சத்தம் சமீபத்தில் கேட்கவே, சிவகாமி மிரண்டுபோய்ச் சுற்றுமுற்றும் பார்த்தாள். மரக்கிளைகளின் நிழலும் நிலா வௌிச்சமும் மாறி மாறித் தரையில் படிந்திருந்த இடத்தில் அவர்களுக்குச் சமீபத்தில் ஒரு பாம்பு நௌிந்து நௌிந்து போய்க் கொண்டிருந்தது. "ஐயோ! அப்பா! பாம்பு!" என்று சிவகாமி அலறிக் கொண்டு எழுந்தாள். மாமல்லரும் குதித்து எழுந்து, சிவகாமியை ஆதரவுடன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். "பயப்படாதே, சிவகாமி! நானிருக்கும்போது என்ன பயம்?" என்றார்.
 
முப்பத்தேழாம் அத்தியாயம்

தியாகப் போட்டி

சிவகாமியின் அலறலைக் கேட்ட சர்ப்பம் சற்று நேரம் திகைத்து நின்றது பிறகு, தன் வழியே போய்விட்டது. தூரத்தில் பாறைகளுக்கு அப்பாலிருந்து, "சிவகாமி! என்னைக் கூப்பிட்டாயா?" என்று ஆயனரின் குரல் கேட்டது. "இல்லை அப்பா!" என்று சிவகாமி உரத்த குரலில் கூறினாள். இந்த இரண்டு வார்த்தைகள் மாமல்லருக்கு எவ்வளவு மகிழ்ச்சியையும் நன்றி உணர்ச்சியையும் உண்டாக்கின என்பதைச் சிவகாமி அவருடைய கரங்களின் ஸ்பரிசத்தினால் உணர்ந்தாள்.

இருவரும் மரத்தடியிலிருந்து சற்று அப்பால் சென்று பட்டப் பகல்போல் வௌிச்சமாயிருந்த பாறையின் மீது உட்கார்ந்தனர். "மன்னிப்புக் கேட்பதாகச் சொன்னாயே, சிவகாமி! எதற்காக?" என்று மாமல்லர் கேட்டார். "தங்களைப் பற்றிப் பொல்லாத வசை மொழிகளைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்ததற்காக! அம்மொழிகளை நம்பியதற்காக!" "இவ்வளவுதானே! மன்னித்து விட்டேன் அப்படி யார் என்னைப் பற்றி என்ன கூறினார்கள்?" "நாகநந்தி என்னும் புத்த பிக்ஷுவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமல்லவா? அவர்தான் தங்களைப் 'பயங்கொள்ளிப் பல்லவன்' என்றார். தாங்கள் போர்க்களத்துக்குப் போகப் பயந்து கொண்டு காஞ்சிக் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சொன்னார், இன்னும் என்னவெல்லாமோ சொன்னார்...."

சிவகாமி கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மாமல்லர், "இதற்காக நாகநந்தியின் மேல் எனக்குக் கோபம் இல்லை என் தந்தைபேரில்தான் கோபம். இராஜ்யத்தைத் தேடி மகாயுத்தம் வந்திருக்கும்போது நான் கோட்டைக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்தால் 'பயங்கொள்ளி' என்று ஏன் ஜனங்கள் சொல்லமாட்டார்கள்?... அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, ஆனால் அதையெல்லாம் நீயும் நம்பினாயா, சிவகாமி?" என்றார். "ஆம், பிரபு! நம்பினேன் தங்களைப் பிரிந்திருந்ததில் என் மனவேதனையைச் சகிக்க முடியாமல் அந்த அவதூறுகளை நம்பினேன். 'இவ்வளவு மட்டமான மனுஷரின் காதல் இல்லாமற் போனால்தான் என்ன?' என்று எண்ணுவதில் ஓர் ஆறுதல் உண்டாயிற்று. ஆனாலும், என் வௌி மனம் அப்படி நம்பியதே தவிர, என் உள்நெஞ்சம் 'இதெல்லாம் பொய்' என்று சொல்லிக் கொண்டிருந்தது. 'மாமல்லர் வீர புருஷர்; அவருடைய காதலுக்கு நீ பாத்திரமானவள் அல்ல! ஆகையால், அவரைப் பற்றித் தாழ்வாக எண்ணுகிறாய்! இது உன் நீச குணம்' என்று என் உள் இதயம் எனக்கு இடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது பிரபு! என்னை மன்னிப்பீர்களா?'

"சிவகாமி! உன்னை மன்னிப்பதற்குரிய குற்றம் எதுவும் நீ செய்யவில்லை. அவ்வளவு மன வேதனைக்கு உன்னை ஆளாக்கியதற்காக நான்தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். இனி மேல் என்னைப் பற்றி அத்தகைய அவதூறுகளை நம்பமாட்டாயல்லவா?" என்று கேட்டார் மாமல்லர். "ஒருநாளும் நம்பமாட்டேன்; அந்தப் புத்த பிக்ஷுவை மறுபடி பார்க்க நேர்ந்தால் அவரை இலேசில் விடப்போவதில்லை!" என்றாள் சிவகாமி. பிறகு, திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு "பிரபு! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை என்று கதைகளில் சொல்கிறார்களே? அதிலே உங்களுக்கு நம்பிக்கை உண்டா?" என்று தயக்கத்துடன் கேட்டாள். "என்ன கேட்கிறாய், சிவகாமி! நம்பிக்கை உண்டா என்றால்?..."

"ஒரு உயிர் ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குப் போவது சாத்தியமாகுமா என்று கேட்டேன். அதாவது, ஒரு மனுஷர் பாம்பு உருவம் எடுத்துக் கொள்ள முடியுமா?..." "இப்படிக் கேட்டபோது சிவகாமியின் உடம்பு மறுபடியும் நடுங்குவதை மாமல்லர் கண்டார். உடனே அவளை ஆதரவோடு தன் அகன்ற மார்பிலே சேர்த்து அணைத்துக் கொண்டு, "இதென்ன வீண் பீதி! மனுஷனாவது, பாம்பு உருவம் கொள்வதாவது? அப்படி ஒருவன் பாம்பு உருவம் எடுத்து உன்னைத் தீண்ட வரும் பட்சத்தில், நான் கருடன் உருவங்கொண்டு வந்து அவனை சம்ஹரிப்பேன், அல்லது உன் எதிரே அவனுடைய விஷப் பல்லைப் பிடுங்கி எறிவேன். நான் இருக்கும்போது உனக்கு ஏன் பயம்?" என்றார்.

"பிரபு! எப்போதும் தாங்கள் என் அருகில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொண்டிருப்பீர்களா? இந்த ஏழைப் பெண்ணைக் காப்பாற்றுவது ஒன்றுதானா உங்களுக்கு வேலை? உங்களுடைய பாதுகாப்பை எதிர்பார்த்து இராஜ்ய லக்ஷ்மி காத்துக் கொண்டிருக்கிறாளே?" என்றாள் சிவகாமி. "சிவகாமி! நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லு! இராஜ்யம் எக்கேடாவது கெடட்டும் என்று விட்டுவிட்டு உன்னோடு இருந்து விடுகிறேன். உன்னைவிட எனக்கு இராஜ்யம் பெரிதல்ல..." என்று மாமல்லர் கூறிவந்தபோது, சிவகாமி குறுக்கிட்டாள்.

"பிரபு! அவ்வளவு சுயநலக்காரி இல்லை நான். அப்படி உங்களை எனக்கே உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. விஸ்தாரமான சாம்ராஜ்யத்திற்கு உரிமை கொண்டவர் தாங்கள். வாழையடி வாழையாக வந்த பல்லவ வம்சத்தின் சிம்மாசனத்துக்குத் தனி உரிமை பூண்டவர். எத்தனையோ லட்சம் பிரஜைகள் தங்களுடைய தோள் வலியையும் வாள் வலியையும் நம்பி இந்தப் பெரிய ராஜ்யத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொல்லாத பகைவர்களை விரட்டி அடித்துப் பிரஜைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுடைய இந்த இரு புஜங்களிலும் சார்ந்திருக்கிறது. அத்தகைய புஜங்கள் இன்று இந்த ஏழையை அணைத்துக் கொண்டிருப்பது என்னுடைய பூர்வஜன்மத்து சுகிர்தம். ஆனால், இந்தப் பாக்கியத்தினால் என் தலை திரும்பிப் போய்விடவில்லை. என் பகுத்தறிவை நான் இழந்துவிடவில்லை. பல்லவர் குலம் விளங்கவந்த மாமல்லருடைய வலிமையும் வீரமும் கேவலம் இந்தச் சிற்பியின் மகளைப் பாதுகாப்பதற்காக மட்டும் உபயோகப் படவேண்டும் என்று ஒருநாளும் சொல்லமாட்டேன். அப்பேர்ப்பட்ட மகா தியாகத்தைத் தங்களிடம் நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். இந்தக் கிராமவாசிகள் புள்ளலூர்ச் சண்டையில் தாங்கள் நிகழ்த்திய வீரச் செயல்களைப் பற்றி உற்சாகமாகப் பேசுவது என் காதில் விழும் போது என் உள்ளமும் உடலும் எப்படிப் பூரிக்கின்றன, தெரியுமா?"

"சிவகாமி இந்தக் கிராமவாசிகள் உன்னுடைய நடனக் கலைத் திறனைப் பற்றி பாராட்டும்போது நானும் அப்படித்தான் பூரித்துப் போகிறேன். நினைத்துப் பார்த்தால், என்னுடைய சுய நலத்தைப் பற்றி எனக்கு வெட்கமாய்க்கூட இருக்கிறது." "தங்களிடம் ஒரு சுயநலத்தையும் நான் காணவில்லையே, பிரபு!" "நீ காணமாட்டாய், சிவகாமி! உன்னுடைய காதலாகிற பொன்னாடையினால் என்னை நீ போர்த்திவிட்டுப் பார்க்கிறாய். அதனால் என்னிடமுள்ள குற்றங்குறைகளை நீ காணமாட்டாய். ஆனால், என்னுடைய சுயநலத்தை நான் நன்றாக உணர்கிறேன். இறைவன் உனக்கு அற்புதமான கலைச் செல்வத்தை அளித்திருக்கிறார். அதையெல்லாம் நான் எனக்கென்று ஆக்கிக் கொள்ளப் பார்க்கிறேன். என்னைப் போன்ற சுயநலக்காரன் யார்? உன்னுடைய அற்புத நடனக்கலை இறைவனுக்கே உரியது. கேவலம் மனிதர்களுக்கு உரியதல்ல என்று என் தந்தை கூறுவதுண்டு. அதன் பொருள் நேற்று இந்தக் கிராமத்துக் கோயிலில் நீ நடனமாடிய போதுதான் எனக்குத் தெரிந்தது. இறைவனுக்கு உரிய நிவேதனப் பொருளை நான் அபகரிக்கப் பார்ப்பது தெய்வத்துக்குச் செய்யும் அபசாரமாகாதா என்று கூட எண்ணமிட்டேன்..."

சிவகாமி அப்போது எழுந்து மாமல்லருக்கு முன்புறமாக வந்து குனிந்தாள். அவளுடைய உத்தேசத்தை அறிந்து மாமல்லர் அவளைத் தடுப்பதற்கு முன்னால், அவருடைய பாதங்களைத் தொட்டுத் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டாள். பின்னர் அவர் எதிரில் அமர்ந்து கூறினாள்; "சுவாமி! என்னுடைய நடனக் கலை இறைவனுக்கே உரியதாயிருக்கும் பட்சத்தில், அந்த உரிமை பூண்ட இறைவன் தாங்கள்தான். அந்த நாளில் நான் ஆர்வத்துடன் என் தந்தையிடம் நடனக் கலையைப் பயின்றதன் காரணம், அடுத்த தடவை தாங்கள் வரும்போது தங்களுக்கு ஆடிக்காட்டி மகிழ்விக்கவேண்டும் என்னும் ஆசையே. எனது நடனக் கலை கனிந்து உணர்ச்சியும் உயிரும் பெற்றதெல்லாம் தங்களுடைய காதலினால்தான். என்னை மறந்து ஆனந்த பரவச நிலையில் நான் ஆடும்போதெல்லாம், தங்களுடைய அன்புக்கு உரிமை பூண்டவள் என்னும் எண்ணமே அந்த ஆனந்த பரவசத்துக்கு ஆதாரமாயிருக்கிறது. திருநாவுக்கரசர் பெருமானின் இனிய தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கொண்டு நான் அபிநயம் பிடிக்கும்போது தங்களுடைய திருவுருவந்தான் என் அகக்கண் முன்னால் நிற்கிறது. தங்களால் கிடைத்த இந்தக் கலைச் செல்வத்தை வேறொருவருக்கு உரிமையாக்க எனக்குப் பாத்தியதையில்லை. நடனக் கலை தெய்வத்துக்கும் எட்டாத கலையாகவே இருக்கட்டும். தங்களைக் காட்டிலும் அது எனக்கு உயர்ந்ததல்ல. தாங்கள் வாய்திறந்து ஒரு வார்த்தை சொன்னால் போதும்; உடனே அந்த நடனக் கலையை இந்த நதிப் பிரவாகத்திலே விட்டுவிட்டு ஒரு முழுக்கும் போட்டு விடுகிறேன்."

மடல் விரிந்த மாதுளை மொட்டுப் போன்ற சிவகாமியின் செவ்விதழ்களை மாமல்லர் தமது அகன்ற கரத்தினால் மூடினார். 'சிவகாமி! நீ இப்படியெல்லாம் சொல்லச் சொல்ல என் தர்ம சங்கடந்தான் அதிகமாகிறது. ஒருநாள் நீ இந்தக் கலையை விட்டு விடத்தான் வேண்டியிருக்கும் என்று எண்ணும்போது எனக்குப் பகீர் என்கிறது; பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி அரங்க மேடையில் நின்று நடனமாடுவது என்பது நினைக்க முடியாத காரியம் அல்லவா? அதை எண்ணும்போதுதான் உண்மையிலேயே நான் உன்னுடைய தந்தையின் சிற்பக் கலைச் சீடனாக இருந்திருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது. அப்படியானால் இந்த மூன்று நாட்களைப்போல் நம் வாணாள் முழுவதுமே ஆனந்தமயமாயிருக்குமல்லவா? சாம்ராஜ்யம் என்னத்திற்கு? யுத்தமும் இரத்த வெள்ளமுந்தான் என்னத்திற்கு? உண்மையாகவே சொல்கிறேன், சிவகாமி! நான் சக்கரவர்த்திக்குச் சொல்லி அனுப்பி விடுகிறேன், எனக்கு இராஜ்யம் வேண்டாம் என்று. நானும் நீயும் உன் தந்தையுமாகப் படகில் ஏறிக் கொண்டு கிளம்புவோம். ரதியையும், சுகரையும் கூட அழைத்துக் கொள்வோம். எங்கேயாவது கடல் நடுவிலுள்ள தீவாந்தரத்துக்குப் போய்ச் சேர்வோம். அங்கே நமது வாணாளை ஆனந்தமாகக் கழிப்போம் என்ன சொல்கிறாய்? 'ஆகட்டும்' என்று சொல்லு!" "ஒருநாளும் சொல்லமாட்டேன்!" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுச் சிவகாமி மேலும் சொன்னாள்.

"கதைகளிலே, காவியங்களிலே கேட்டிருக்கிறேன் வீரப் பெண்கள் நாயகர்களுக்குப் போர்க்களத்தில் துணை நின்று சாஹஸச் செயல்கள் புரிந்தார்கள் என்று. தசரதருக்குக் கைகேயியும், அர்ச்சுனனுக்குச் சுபத்திரையும் போர்க்களத்தில் ரதம் ஓட்டினார்கள் என்றும் படித்திருக்கிறேன். அப்பேர்ப்பட்ட பாக்கியத்துக்கு நான் பிறக்கவில்லை. போர்க்களத்திற்கு என்னால் வரமுடியாது. இரத்தத்தைக் கண்டால் நான் மூர்ச்சையடைந்து விடுவேன். ஆடவும் பாடவும் அலங்காரமாகக் கொலுவிருக்கவும் பிறந்த பேதைப் பெண் நான். ஆனால், தங்களையும் என்னைப் போலாக்க உடன்பட மாட்டேன். சிம்மாசனத்தில் அமர்ந்து சாம்ராஜ்யம் ஆளவும் போர்க்களத்தில் பகைவர்களை சின்னாபின்னம் செய்யவும் பிறந்த தங்களைக் கல்லுளி பிடித்து வேலை செய்ய விடமாட்டேன். வாளும் வேலும் பிடித்து எதிரிகளைத் துவம்ஸம் செய்யவேண்டிய கைகளை ஆடல் பாடலுக்குத் தாளம் போடும்படி விடமாட்டேன். சுவாமி! இராஜ்யம் என்னத்திற்கு? யுத்தம் என்னத்திற்கு? என்றெல்லாம் இனிமேல் சொல்லாதீர்கள். அவ்விதமே தாங்கள் சொன்னால், இந்தப் பாவியின் காரணமாகத்தானே இப்படித் தாங்கள் சொல்கிறீர்கள் என்று எண்ணிப் பிராணத் தியாகம் செய்து கொள்வேன்!"

"சிவகாமி! கையில் கல்லுளி பிடித்து வேலை செய்யும் சிற்பியின் இரத்தம் மட்டும் உன் உடம்பில் ஓடவில்லை. பழந்தமிழ் நாட்டு வீரத் தாய்மாரின் இரத்தமும் ஓடுகிறது. மணக்கோலம் பூண்ட மணவாளனைப் போர்க்களத்துக்கு மனமுவந்து அனுப்பிய வீரத் தமிழ் மங்கையின் இரும்பு நெஞ்சம் உன்னிடமும் இருக்கிறது. உண்மையில் வீர பத்தினியாவதற்குரியவள் நீதான்! போர்க்களத்துக்கு என்னோடு நீ வரவேண்டியதில்லை. ரத சாரத்தியமும் செய்ய வேண்டியதில்லை. ஆனால், இனி நான் எப்போது போர்க்களம் சென்றாலும், என்னுடைய நெஞ்சில் நீ இருந்து கொண்டிருப்பாய். சற்று முன் நீ கூறிய வீர மொழிகள் என் செவியிலே ஒலித்துக் கொண்டிருக்கும். உன்னுடைய காதலின் நினைவு எனக்கு இணையற்ற வீரத்தையும் துணிவையும் ஊட்டிக் கொண்டிருக்கும்...."

"சுவாமி! வீர பல்லவ வம்சத்தில் பிறந்து, பதினெட்டு வயதிற்குள் தென்னாட்டிலுள்ள மல்லர்களையெல்லாம் வென்று மகாமல்லர் என்று பெயர்பெற்ற தங்களுக்கு இந்த ஏழைப் பெண்ணின் நினைவுதானா தீரமும் துணிச்சலும் ஊட்ட வேண்டும்? யுத்தத்திலே தாங்கள் எதிரிகளைச் சின்னாபின்னம் செய்து உலகமே ஆச்சரியப்படும்படியான வெற்றி கொண்டது இந்த ஏழைப் பெண்ணின் ஞாபகத்தில்தானா?... கேவலம் ஒரு எட்டுக்கால் பூச்சியைக் கண்டு கதி கலங்குபவள் நான்! தங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? நமது குழந்தைப் பிராயத்தில் ஒருநாள் நீங்களும் நானும் என் தந்தையின் சிலைகளுக்குப் பின்னால் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய கரப்பான் பூச்சியைப் பார்த்து, 'ஓ' என்று அலறிவிட்டேன். நீங்கள் ஒளிந்துகொண்டிருந்த இடத்திலிருந்து ஓடிவந்து என்னைக் கட்டி அணைத்துத் தேறுதல் கூறினீர்கள். 'என்ன? என்ன?' என்று கேட்டீர்கள். நான் முதலில் சொல்வதற்கு வெட்கப்பட்டு அப்புறம் உண்மையைச் சொன்னேன். தாங்கள் நம்பவே இல்லை. 'கரப்பான் பூச்சிக்குப் பயப்படவாவது? பொய்! என்னை ஒளிந்து கொண்டிருந்த இடத்திலிருந்து வௌியே வரச் செய்வதற்காகவே நீ இப்படிப் பாசாங்கு செய்தாய்!' என்றீர்கள்; நிஜமாக நான் அப்போது பயப்பட்டேன். சற்று முன்னால் இங்கே பாம்பைக் கண்ட போதும் எனக்கு உண்மையில் பயமாய்த்தான் இருந்தது... பாருங்கள், இப்போது கூட என் உடம்பு நடுங்குவதை!"

மாமல்லர் மீண்டும் முன்போல சிவகாமியைத் தனது வலிய புஜங்களினால் சேர்த்து அணைத்துக் கொண்டு, "இதென்ன அசட்டுத்தனம், சிவகாமி! ஏன் இப்படி நடுங்குகிறாய்?" என்று கேட்டார். "ஏனோ தெரியவில்லை சில காலமாக எனக்கு அடிக்கடி இம்மாதிரி பயம் உண்டாகிறது. ஏதோ ஒரு பெரிய அபாயம், இன்னதென்று தெரியாத விபத்து என்னைத் தேடி வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. சுவாமி தங்களிடம் ஒரு இரகசியம் சொல்லுகிறேன். என் தந்தையிடம் கூட அதை நீங்கள் சொல்லக் கூடாது..." "சொல்லு, சிவகாமி!"

"காஞ்சியில் திருநாவுக்கரசர் மடத்திலே நான் மூர்ச்சை அடைந்து விழுந்த அன்று, எனக்குப் பிரக்ஞை வந்ததும் தாங்கள் நயன பாஷையில் விடைபெற்றுக் கொண்டுபோய் விட்டீர்கள். சற்று நேரம் கழித்து, நானும் என் தந்தையும் வாகீசப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கமலியின் வீட்டுக்குக் கிளம்பினோம். அப்போது நாவுக்கரசர் என் தந்தையைப் பின்னால் நிறுத்திச் சில வார்த்தைகள் மெல்லிய குரலில் கூறினார்; 'உங்கள் பெண் மகா பாக்கியசாலி! உலகத்தில் இல்லாத தெய்வீக கலை அவளிடம் இருக்கிறது. ஆனால் அவளைப் பார்க்கும்போது ஏனோ என் மனதில் துயரம் உண்டாகிறது! ஏதோ ஒரு பெரிய அபாயம் அவளுக்கு வரப்போவதாகத் தோன்றுகிறது. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அப்பெருமான் கூறியது என் காதிலும் விழுந்தது அதைக் கேட்டதிலிருந்து..."

"அந்த மகா புருஷர் கூறியது உண்மைதான், சிவகாமி! உனக்குத்தான் பெரிய அபாயம் வந்ததே! இந்த வெள்ளத்தைக் காட்டிலும் பெரிய அபாயம் வேறு என்ன வரமுடியும்? கடவுள் அருளால் அதிலிருந்து தப்பிவிட்டாய்!... இனிமேல் ஒன்றும் வராது!" என்று மாமல்லர் உறுதியான குரலில் கூறினார். "பிரபு தங்களை என்னுடன் சேர்த்து வைத்து மூன்று தினங்கள் நான் சொர்க்கத்தில் இருக்கும்படிச் செய்த வெள்ளத்தை விபத்து என்று எப்படிச் சொல்வேன்? ஆகையினால்தான், இன்னும் ஏதோ இருக்கிறது என்று எண்ணமிடுகிறேன். ஆனால் இனிமேல் என்ன விபத்து வந்தால் என்ன? தங்களுடைய விசால இருதயத்தின் ஒரு மூலையில் எனக்கு ஒரு பத்திரமான இடம் இருக்கிறது என்ற நம்பிக்கையே எனக்குத் தைரியமும் உற்சாகமும் ஊட்டி வரும். தாங்கள் யுத்தத்தையெல்லாம் முடித்துவிட்டு, தங்கள் தந்தையிடம் அனுமதி பெற்று என்னை அழைத்துப் போக வரும் வரையில் நான் இவ்விடத்திலேயே மனநிம்மதியுடன் இருப்பேன். தங்களுடைய அன்பாகிய கவசம் என்னைக் காப்பாற்றும்போது, என்ன விபத்து என்னை என்ன செய்துவிடும்?"

"மண்டபப்பட்டு அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறதா? இங்கேயே தங்கி விடுவதென்று தீர்மானம் செய்து விட்டாயா?" என்று மாமல்லர் கேட்டார். அதுதான் அவருடைய விருப்பம் என்று குரலிலிருந்தே தெரிந்தது. "ஆம், பிரபு! வேறு எந்த இடத்திலும் நான் மன நிம்மதியுடன் இருக்க முடியாது. இந்தக் கிராமத்துக் கோயிலும், இந்தப் பாறைகளும் வராகநதியும் எனக்குப் பல இன்ப நினைவுகளை ஊட்டிக் கொண்டிருக்கும். என் தந்தையும் இந்தப் பாறைகளைக் கோயில்களாக அமைப்பதில் பெரும் ஆவல் கொண்டிருக்கிறார். அவரும் நிம்மதியாக இருப்பார்; ஆனால் ஒரே ஒரு விஷயந்தான் கொஞ்சம் மனக்கவலை உண்டாக்குகிறது. அந்த நாகநந்தி மட்டும் இங்கே வராமலிருக்க வேண்டும்" என்றாள் சிவகாமி. "நாகநந்தி இங்கே வரமாட்டார்! அந்தக் கவலை உனக்கு வேண்டாம்!" என்றார் மாமல்லர். குண்டோதரனிடம் நாகநந்தியைப்பற்றித் தெரிந்து கொண்டிருந்ததனால்தான் அவர் அவ்விதம் உறுதியாய்க் கூறினார். அதே சமயத்தில் அவர்கள் பேசிக் கொண்டிருந்த பாறைக்குப் பின்னால் ஒளிந்து கேட்டுக் கொண்டிருந்த புத்த பிக்ஷுவின் உருவம் மெதுவாக எழுந்து அப்பால் சென்றது!
 
முப்பத்தெட்டாம் அத்தியாயம்

சந்திரன் சாட்சி

இரவு ஜாம நேரத்துக்கு மேல் மாமல்லர், சிவகாமி, ஆயனர் ஆகியோர் திரும்பிக் கிராமத்தை அடைந்தபோது, நாவுக்கரசர் மடத்து வாசலில் பெருங்கூட்டம் நிற்பதைக் கண்டார்கள். நிலாவொளியில் அந்தக் கூட்டத்தின் மத்தியில் கத்தி கேடயங்களும், வாள்களும் மின்னின. மூன்று பேரும் துணுக்கமடைந்து வீதி முனையில் கோயில் மதில் ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். மடத்து வாசலில் நின்ற வீரர்கள் யாராயிருக்கும் என்ற கேள்வி மூவருடைய மனத்திலும் எழுந்தது.

அன்று காலையில் குண்டோதரனுக்கும் மாமல்லருக்கும் ஒரு சிறு வாக்குவாதம் நடந்தது. மேலே நடக்கவேண்டிய காரியத்தைப் பற்றித்தான். வராக நதியில் வெள்ளம் வடிந்து விட்டபடியால், பானைத் தெப்பம் ஒன்று கட்டி, அதில் தம்மை வராக நதிக்கு அக்கரையில் கொண்டுபோய் விட்டுவிட்டுக் குண்டோதரன் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும், தாம் அங்கிருந்து காஞ்சிக்குப் போய் விடுவதென்றும், குண்டோதரன் ஆயனருக்கும் சிவகாமிக்கும் துணையாக மண்டபப்பட்டுக் கிராமத்திலேயே சில காலம் இருக்க வேண்டும் என்றும் மாமல்லர் சொன்னார்.

குண்டோதரன் இதை மறுத்து, தான் முதலில் அக்கரை சென்று பல்லவ சைனியத்தைப் பற்றித் தகவல் விசாரித்து வருவதாகவும், அதற்குப் பிறகு என்ன செய்வதென்பதை முடிவு செய்து கொள்ளலாமெனவும் கூறினான். மாமல்லரும் இன்னும் ஒருநாள் சிவகாமியுடன் இருக்கலாம் என்ற ஆசையினால் அதற்கு இணங்கினார். ஆனாலும் அன்றைக்கெல்லாம் அவருக்கு அடிக்கடி மனதில் பரபரப்பு உண்டாகிக் கொண்டிருந்தது. சாயங்காலம் ஆக ஆக, "குண்டோதரன் ஏன் இன்னும் வரவில்லை?" "எத்தனை நாள் இங்கே சும்மா உட்கார்ந்திருப்பது?" என்ற எண்ணங்கள் அவ்வப்போது அவர் உள்ளத்தில் தோன்றி அல்லல் செய்தன. மோகன நிலவொளியில் சிவகாமியுடன் பேசிக் கொண்டிருந்த போதுகூட நடுநடுவே மாமல்லரின் மனம், "குண்டோதரன் இதற்குள் வந்திருப்பானோ? என்ன செய்தி கொண்டு வந்திருப்பான்?" என்று எண்ணமிட்டுக் கொண்டுதான் இருந்தது.

இப்போது மடத்து வாசலில் கூட்டத்தைக் கண்டதும், அதிலும் வாள்கள் வேல்களின் ஒளியைக் கண்டதும், மாமல்லருடைய மனத்தில் ஏக காலத்தில் பல கேள்விகள் எழுந்தன. இவர்கள் யார்? பகைவர்களா? பல்லவ வீரர்களா? பல்லவ வீரர்களாயிருந்தால் இங்கு நாம் இருப்பது தெரிந்து வந்திருக்கிறார்களா? தெரிந்தவர்களாயிருந்தால், திடீரென்று நம்மைக் கண்டதும் கோஷம் இடுவார்களே? கிராமவாசிகளுக்குத் தெரிந்து போய்விடுமே? மாமல்லருடைய மனத் தயக்கத்தையும் அதன் காரணத்தையும் ஒருவாறு அறிந்துகொண்ட ஆயனர், "பிரபு! தாங்களும் சிவகாமியும் சற்று இவ்விடமே நில்லுங்கள். நான் முன்னால் சென்று வந்திருப்பவர்கள் யார் என்று பார்க்கிறேன்" என்று கூறிச் சென்றார்.

சிவகாமியும் மாமல்லரும் கோயில் மதில் ஓரத்தில் மதிலுக்குள்ளிருந்து கொப்புங் கிளையுமாய் வௌியே படர்ந்திருந்த மந்தார மரத்தின் அடியில் நின்றார்கள். அப்போது மாமல்லர் மடத்து வாசலில் நின்ற கூட்டத்திலிருந்து வந்த சத்தத்தைக் காது கொடுத்துக் கவனமாய்க் கேட்டார். கலகலவென்று எழுந்த பல பேச்சுக்குரல்களுக்கிடையில் தளபதி பரஞ்சோதியின் குரல் கணீரெனக் கேட்டது. கிராமவாசிகள் பலர் ஏக காலத்தில் மறு மொழி கூறினார்கள். அந்தப் பல குரல்களுடன் சுகப்பிரம்ம முனிவரும் சேர்ந்து, "மாமல்லா! மாமல்லா!" என்று கீச்சுக் குரலில் கூவிய சத்தம் எழுந்தது.

மாமல்லரின் மனக் குழப்பமெல்லாம் ஒரு நொடியில் நீங்கிவிட்டது. "நமது தளபதி பரஞ்சோதிதான் வந்திருக்கிறார்! வா! சிவகாமி! நாமும் போகலாம்!" என்று அவர் உற்சாகம் ததும்பும் குரலில் கூறி மேலே நடக்கத் தொடங்கியபோது, சிவகாமி அவருடைய கரத்தை மெதுவாகத் தொட்டு, பிரபு!" என்றாள். மந்தார மரத்துக் கிளைகளின் வழியாக வந்த பால் நிலவின் ஒளியில் அவளுடைய கண்களில் துளித்திருந்த இரு கண்ணீர்த் துளிகளும் முத்துப்போல் பிரகாசித்ததை மாமல்லர் பார்த்தார். "என் கண்ணே! இது என்ன?" என்று மாமல்லர் அருமையுடன் கூறி, தமது அங்கவஸ்திரத்தினால் கண்ணீரைத் துடைத்தார். "உங்கள் தளபதியின் குரல் கேட்டதும் இந்தப் பேதைப் பெண் அவசியமில்லாமல் போய் விட்டேனல்லவா?" என்று சிவகாமி விம்மினாள்.

இவ்விதம் நேரும் என்று சற்றும் எதிர்பாராத மாமல்லர் அவளுக்கு எவ்விதம் தேறுதல் சொல்லுவதென்று தெரியாமல் சற்றுத் திகைத்து நின்றார். பின்னர், "என் ஆருயிரே! ஏன் இவ்விதம் பேசுகிறாய்? சற்று முன்னால் நீதானே உன் வாயார வீரமொழிகள் புகன்று என்னைப் போர்க்களத்துக்குப் போகும்படி ஏவினாய்? போகவேண்டிய சமயம் வந்திருக்கும்போது இவ்விதம் நீ கண்ணீர்விட்டால், நான் என்ன தைரியத்துடன் போவேன்?" என்று கூறி, சிவகாமியின் அழகிய முகவாயைப் பிடித்து நிமிர்த்தினார். அப்போது சிவகாமியின் முகத்தில் நிலாமதியின் கிரணங்கள் நேராக விழ, அவளுடைய இயற்கைப் பொன்னிற முகம் தந்த நிறம் பெற்றுத் திகழ்ந்தது.

சிவகாமி அவருடைய கரத்தைத் தன் முகவாயிலிருந்து எடுத்துத் தன் கண்களிலே சேர்த்துக் கண்ணீரால் நனைத்த வண்ணம் "இந்தப் பேதை நெஞ்சம் ஏனோ காரணமில்லாத பீதி கொண்டிருக்கிறது. என் வாணாளின் இன்பம் இன்றோடு முடிந்து விட்டதுபோல் தோன்றுகிறது. பிரபு! என்னை மறக்க மாட்டீர்கள் அல்லவா? மத்த யானையின் மேலேறி யுத்த களத்தில் சத்ருக்களைத் துவம்ஸம் செய்யும்போதும் அகில சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகி மணிமுடி தரித்து ரத்தின சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் போதும் இந்த ஏழைச் சிற்பியின் மகளை மறவாமலிருப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டாள்.

மாமல்லர் வானக்கடலிலே மிதந்த பூரணச் சந்திரனைச் சுட்டிக்காட்டி, "சிவகாமி! அதோ, அமுத நிலவைச் சொரிந்து கொண்டு வானவீதியில் பவனி வரும் சந்திரன் சாட்சியாகச் சொல்கிறேன், கேள்! இந்த ஜன்மத்தில் உன்னை நான் மறக்க மாட்டேன் என்று வாக்குறுதி கூறுவதில் பொருள் இல்லை. நான் முயன்றாலும் அது முடியாத காரியம். உன் மனத்தில் காரணம் இன்றித் தோன்றும் பீதிக்கு ஏதாவது உண்மையில் காரணம் இருக்குமானால் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். ஒருவேளை போர்க்களத்தில் நான் வீரமரணம் அடைவேன்..." "ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள் ஒருநாளும் அப்படி நேராது!" என்று விம்மலுடன் உரத்துக் கூவினாள் சிவகாமி.

மாமல்லர் சொன்னார்; "அப்படி நேரவில்லையென்றால், உன்னை நான் மறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. யுத்தமெல்லாம் முடிந்து இந்தப் பரந்த பல்லவ சாம்ராஜ்யத்துக்குச் சக்கரவர்த்தியாகி நான் ரத்தின சிங்காதனத்தில் வீற்றிருக்கும் காலம் வரும் போது, நீயும் என் அருகிலேதான் வீற்றிருப்பாய். ஆனால் போர்க்களத்துக்குப் போகும்போது, வெற்றி அல்லது வீர மரணத்தை எதிர்பார்த்துத்தான் போக வேண்டும். நான் போர்க்களத்தில் உயிர் துறக்க நேர்ந்தால்தான் என்ன, சிவகாமி! எதற்காகக் கவலைப்படவேண்டும்? இந்த ஒரு பிறப்போடு, நமது காதல் முடிந்து விட்டதா? ஒருநாளும் இல்லை. போர்க்களத்தில் உயிர் போகும்போது எனக்கு நினைவிருந்தால் பிறை சூடும் பெருமானைத் தியானித்து, 'இந்தப் புண்ணிய பாரத பூமியிலே பாலாறும் பெண்ணையும் காவேரியும் அமுதப் பிரவாகமாய்ப் பெருகும் தமிழகத்திலே, மீண்டும் வந்து பிறக்கும் வரம் தாருங்கள்' என்று கேட்பேன். அவ்விதமே இந்தத் தமிழகத்திலே பிறந்து, ஊர் ஊராய் அலைந்து திரிவேன். பூர்வ ஜன்மங்களிலே நான் காதலித்த சௌந்தரிய வடிவத்தை, மோகன உருவத்தை, ஜீவனுள்ள தங்க விக்கிரகத்தைத் தேடிக்கொண்டு அலைவேன். இம்மாதிரி கார்த்திகை மாதத்துத் தாவள்யமான நிலவொளியிலே உன்னை மீண்டும் காண்பேன். கண்டதும் தெரிந்து கொள்வேன் நீதான் என்று. 'இந்தப் பெண்ணின் முகத்திலே ததும்பும் சௌந்தரியம், இவளுக்குச் சொந்தமானதில்லை. பல ஜன்மங்களிலே தொடர்ந்து வந்த என் காதலின் சக்திதான் இந்த மோகனத்தை அளித்திருக்கிறது' என்று தெரிந்து கொள்வேன். உன் கண்களில் ஜொலிக்கும் மின் ஒளியிலே என் உயிரின் சுடரைக் கண்டு தெரிந்து கொள்வேன். உன் இதழ்களின் புன்னகையில் என் இருதயத்தின் தாபம் தணிவதை உணர்ந்து அறிந்து கொள்வேன் இவள்தான் என் சிவகாமி! ஜன்ம ஜன்மங்களிலெல்லாம் என் உயிரிலே கலந்த இன்ப ஒளி இவள்தான்; சரத்கால சந்திரனின் மோகன நிலவில் நான் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த சௌந்தரிய வதனம் இது தான்! இந்தக் கருங்குவளைக் கண்களிலேதான் என்னுடைய விழிகளாகிய வண்டுகள் ஓயாது மொய்த்து மதுவருந்தி மயங்கின!' என்று தெரிந்து தௌிவேன். சிவகாமி, வாக்குறுதி போதுமா? திருப்தியடைந்தாயா?"

மாமல்லரின் கவி இருதயத்திலிருந்து பிரவாகமாய்ப் பொழிந்த அமுதச் சொற்கள் சிவகாமியைத் திக்குமுக்காடச் செய்தன. அவளுடைய தேகம் சிலிர்த்தது! புளகாங்கிதம் உண்டாயிற்று; தரையிலே நிற்கிறோமா, வானவௌியில் மிதக்கிறோமா என்று தெரியாத நிலையை அவள் அடைந்தாள். திடீரென்று கலகலத்வனியையும், "அதோ மாமல்லர்!" "அதோ பல்லவ குமாரர்!" என்ற குரல்களையும், "மாமல்ல பல்லவேந்திரர் வாழ்க!" "வாழ்க! வாழ்க!" என்ற கோஷங்களையும் கேட்டுச் சிவகாமி சுயப் பிரக்ஞை அடைந்தாள். "எனக்கு திருப்திதான்! ஜனங்கள் இங்கு வருவதற்குள் தாங்கள் முன்னால் செல்லுங்கள்!" என்று கூறினாள்.
 

New Threads

Top Bottom