Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் பாகம் -3 : பிக்ஷுவின் காதல்

நாற்பத்திரண்டாம் அத்தியாயம்

பிக்ஷுவின் காதல்

புலிகேசியின் உள்ளத்தில் அசூயையென்னும் பாம்பு படமெடுத்து ஆடுவதை அறியாதவராய் நாகநந்தி பிக்ஷு தமது இருதயத்தைத் திறந்து சொல்லத் தொடங்கினார். "தம்பி! குழந்தைப் பிராயம் முதற்கொண்டு - எனக்கு அறிவு தௌிந்த நாளிலிருந்து, நான் அஜந்தா மலைக் குகைகளில் வளர்ந்து வந்தேன். அஜந்தா சங்கிராமத்தில் பிக்ஷுக்களும் அவர்களுடைய சிஷ்யர்களும் இருந்தார்கள். என் இருபதாவது பிராயம் வரையில் உயிருள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை. அதாவது, சதை, இரத்தம், எலும்பு, நகம் ஆகியவற்றால் ஆன மானிடப் பெண்ணைப் பார்த்ததில்லை. ஆனால், ஜீவனுள்ள பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவனுடைய இருதய அந்தரங்கம் வரைக்கும் சென்று ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்த விசால நயனங்களுடைய பெண்களைப் பார்த்திருக்கிறேன். மானிடக் குலத்துக்கு எட்டாத தெய்வீக சௌந்தரியம் வாய்ந்த மடமங்கையர்களைப் பார்த்திருக்கிறேன். அழகுக்கு அழகு செய்யும் திவ்விய ஆபரணங்களை அணிந்த அணங்குகளைப் பார்த்திருக்கிறேன். தங்கள் கூந்தலில் மலர் அணிந்ததனால் அம்மலருக்கு அழகைத் தந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். சாந்தங் குடிகொண்ட பெண்களையும், கருணை வடிவான பெண்களையும், மினுக்கி மயக்கும் மோகினி ரூபம் கொண்ட மாயப் பெண்களையும் பார்த்திருக்கிறேன். இவர்களையெல்லாம் அஜந்தா விஹாரங்களில் உள்ள சுவர்களிலே பார்த்தேன். மகா சைத்திரிகர்களான பிக்ஷுக்கள் தீட்டிய அற்புத சித்திர வடிவங்களிலே பார்த்தேன். அந்த சித்திர வடிவங்கள் எல்லாம் என்னைப் பொறுத்தவரையில் உயிர் உள்ள ஸ்திரீ புருஷர்கள்தான். நான் அவர்கள் அருகில் சென்றதும் என்னை அவர்கள் வரவேற்பார்கள்; முகமன் கூறுவார்கள்; க்ஷேமம் விசாரிப்பார்கள். அவர்களுடன் நானும் மனம் விட்டுப் பேசுவேன்; அவர்களுடைய க்ஷேம லாபங்களை விசாரிப்பேன்; வௌி உலகத்து விஷயங்களைப் பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்பேன். மௌன பாஷையில் அவர்கள் மறுமொழி சொல்வார்கள்.

"இப்படி நான் தினந்தோறும் பார்த்துப் பேசிப் பழகிய சித்திர வடிவங்களுக்குள்ளே முக்கியமாக ஒரு பெண்ணின் வடிவம் என் சிந்தையைக் கவர்ந்திருந்தது. அவளுடைய பொன்னிற மேனியின் சோபையை அவள் இடையில் உடுத்தியிருந்த நீல நிறப் பட்டாடையும், மாந்தளிர் நிறத்து உத்தரீயமும் அதிகமாக்கிக் காட்டின. புன்னகை பூத்த அவளுடைய இதழ்களின் செந்நிறமும், அவளுடைய கருங்கூந்தலில் குடியிருந்த செவ்வாம்பல் மலரின் சிவப்பு நிறமும் ஒன்றையொன்று தூக்கியடித்தன. தாமரை இதழ் போல வடிவம் அமைந்த அவளுடைய கண்களின் கருவிழிகள் என் இருதயத்தை ஊடுருவி நோக்கிய போது என் இருதயத்தில் நான் அதுகாறும் அறிந்திராத வேதனையும் இன்பமும் உண்டாயின. அந்தச் சித்திர உருவம் தீட்டப்பட்டிருந்த விஹாரத்தின் எந்தப் பக்கத்தில், எந்த மூலையில் நின்று பார்த்தாலும், அந்தப் பத்மலோசனியின் கண்கள் என்னையே நோக்குவது போல் இருந்தன. அவ்வளவு அற்புத வேலைத் திறமையுடன் யாரோ ஒரு சைத்திரிகப் பிரம்மா அவ்வுருவத்தைத் தீட்டியிருந்தார். அந்தச் சித்திரத்தை வரைந்து முந்நூறு வருஷங்களுக்கு மேல் ஆகியிருந்த போதிலும் வர்ணங்கள் சிறிதும் மங்காமல் நேற்று எழுதியவை போல் விளங்கின.

"அந்தச் சித்திரப் பெண்ணின் உருவத்தில் இன்னொரு விசேஷம் இருந்தது; அவள் இடை வளைந்து நின்ற நிலையும், அவளுடைய கரங்களும் கழுத்தும் அமைந்திருந்த தோற்றத்தில் காணப்பட்ட நௌிவும், அவள் ஏதோ ஒரு விசித்திரமான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. ஆனால், அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது எனக்குப் புலப்படவில்லை. என் மனத்திற்குள் எவ்வளவோ யோசனை செய்தும் அதை என்னால் அறிய முடியவில்லை. கடைசியில் சைத்திரிக பிக்ஷு ஒருவரைக் கேட்டேன். அவர் 'அந்தப் பெண் பரதநாட்டியம் ஆடுகிறாள்' என்று சொன்னார். பிறகு பரதநாட்டியம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். பரத சாஸ்திரம் என்னும் ஒரு நூல் இருப்பதாகத் தெரிந்து கொண்டு அந்த நூலைச் சம்பாதித்துப் படித்தேன். பரதநாட்டியக் கலையின் பல அம்சங்களையும் நன்கு தெரிந்து கொண்டேன்.

"இதற்குப் பிறகு, அந்த ஓவியக் கன்னி என் உள்ளக் காட்சியில் பரத நாட்டியம் ஆடத் தொடங்கினாள். பரதநாட்டியக் கலைக்குரிய பலவிதத் தோற்றங்களிலும் அவள் காட்சியளித்தாள். பற்பல முத்திரைகள், ஹஸ்தங்கள், பலவித அபிநயத் தோற்றங்கள் - என் அகக் கற்பனையில் தோன்றிக் கொண்டேயிருந்தன. பகலிலும் இரவிலும் சதா சர்வகாலமும் அந்தக் கற்பனைப் பெண் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்தாள். அப்போது தான் எனக்கு முதன் முதலில் வௌி உலகத்துக்குப் போக வேண்டும், நாடு நகரங்களில் வாழும் ஸ்திரீ புருஷர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஒரு வேளை அந்த மாதிரி உண்மையாகவே ஒரு பெண் எங்கேனும் இருக்கலாமல்லவா என்ற சபலம் ஏற்பட்டது. இந்த ஆசை காரணமாகவே அஜந்தா நதி வழியைப் பிடித்துக் கொண்டு வௌியே வந்து மலையடிவாரத்துக் கானகங்களிலே நான் சுற்ற ஆரம்பித்தேன். அப்போதுதான் தம்பி, ஒருநாள் உன்னைப் பார்த்தேன். பேச்சு மூச்சற்றுக் கிடந்த உன் உடம்பில் பிராணனை ஊட்டினேன். அது முதல் என் மனப்போக்கில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. சித்திரத்தில் பார்த்துக் கற்பனையில் நான் வளர்த்து வந்த பெண் சிறிது சிறிதாக என் உள்ளத்திலிருந்து மறையலானாள். அவள் இருந்த இடத்தில் நீ வந்து சேர்ந்தாய். நீ என் சொந்த உடன்பிறந்த சகோதரன், என்னுடன் இரத்தத் தொடர்புடையவன்; என்பதை அறிந்த பிறகு என் இருதயத்தில் அந்தச் சித்திர நாட்டியக்காரிக்குச் சிறிதும் இடமில்லாமல் போய் விட்டது.

"தம்பி! சிறிது காலத்துக்கெல்லாம் நீயும் நானும் அஜந்தா மலைக் குகையை விட்டு வௌியேறினோம். நீ வாதாபிச் சிம்மாசனம் ஏறினாய். நீயும் நானுமாக எத்தனையோ யுத்தங்கள் நடத்தி ஜயித்தோம். எத்தனையோ இராஜ தந்திரங்களையும் இராணுவ தந்திரங்களையும் கையாண்டு வெற்றி பெற்றோம். துங்கபத்திரையிலிருந்து நர்மதை நதி வரையில் சளுக்க சாம்ராஜ்யம் படர்ந்து தழைத்தது. உத்தராபத ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியும் வராகக் கொடியைக் கண்டு அஞ்சலானார்.

"இந்த நாட்களில் நான் ஏற்றுக் கொண்டிருந்த பிக்ஷு விரதத்தை நிறைவேற்றுவது எனக்குக் கொஞ்சமும் கஷ்டமாயில்லை. வாதாபி நகரத்திலும், மற்றும் நான் யாத்திரை செய்த பட்டணங்களிலும் கிராமங்களிலும் எத்தனையோ ஸ்திரீகளை நான் பார்த்தேன். அஜந்தா குகைச் சுவர்களில் நான் பார்த்த சித்திரப் பெண் வடிவங்களோடு ஒப்பிடும் போது, இந்த மானிடப் பெண்கள் அழகற்ற அவலட்சண வடிவங்களாகத் தோன்றினார்கள். அந்தச் சித்திரப் பெண்களைப் பார்த்து அவர்களுடைய அழகை வியந்த கண்களினால் இந்தச் சாதாரண மானிட ஸ்திரீகளைப் பார்க்கவே முடியவில்லை. "உலகத்திலே மனிதர்கள் என்னத்திற்காக ஸ்திரீகள் மீது மோகம் கொண்டு பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்று வியந்தேன். தம்பி! ஒருவர் பின் ஒருவராக நீ ஆறு பெண்களை மணந்த போது உன்னுடைய பரிதாப நிலையைக் குறித்து இரங்கினேன்!"

இத்தனை நேரம் மௌனமாயிருந்து கேட்டுக் கொண்டிருந்த புலிகேசி இப்போது குறுக்கிட்டுக் கூறினார்: "ஆம், அண்ணா! அதையெல்லாம் நினைத்தால் ஏன் அந்தப் பைத்தியக்காரத்தனங்களில் இறங்கினோம் என்று எனக்கும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. என்ன செய்யலாம்? எங்களுக்கெல்லாம் அனுபவித்த பிறகுதான் புத்தி வருகிறது. நீயோ பெண் மோகம் என்பது எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை முன்னதாகவே கண்டு கொண்டு விட்டாய்!"

புலிகேசிச் சக்கரவர்த்தி இவ்விதம் கூறிய போது அவருடைய தொனியில் சிறிது பரிகாசம் கலந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால், அறிவுக் கூர்மை மிகப் படைத்த பிக்ஷுவுக்கு அச்சமயம் அது தெரியவில்லை, அவர் மேலும் கூறினார்: "இல்லை, தம்பி இல்லை! உன்னுடைய புகழ்ச்சிக்கு நான் அருகனல்ல. நீங்கள் எல்லாரும் பட்டு அனுபவித்த பிறகு, உண்மையைக் கண்டுகொண்டீர்கள். ஆனால், நானோ எத்தனையோ காலம் துறவறத்தை அனுஷ்டித்த பிறகு, யௌவனப் பிராயத்தையெல்லாம் இழந்து விட்ட பிறகு, ஒரு பெண்ணின் காதலுக்கு வயமானேன். ஆனால், என்னுடைய காதல் மற்ற உலக மாந்தரின் காதலை ஒத்ததன்று. அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் நான் காதல் வயப்பட்ட வரலாற்றைச் சொல்லி விட வேண்டும்.

"வடக்கே ஹர்ஷ மகா சக்கரவர்த்தியுடன் நாம் ஓர் உடன்படிக்கைக்கு வந்து நர்மதைக்குத் தெற்கே அவருடைய சைனியங்கள் வருவதில்லையென்று வாக்குறுதி பெற்ற பிறகு, தென்னாட்டுப் படையெடுப்புக்கு முன் ஆயத்தம் செய்வதற்காகச் சென்றேன். தென்னாடெங்கும் பௌத்த மடங்களும் ஜைன மடங்களும் ஏராளமாக இருந்தபடியால் என்னுடைய வேலை மிகவும் சுலபமாயிருந்தது. காஞ்சி இராஜ விஹாரத்திலே கூட நமக்காக வேலை செய்யும் பிக்ஷுக்கள் கிடைத்தார்கள். பிறகுதான், உனக்குச் சைனியத்துடன் கிளம்பும்படி ஓலை அனுப்பினேன். அனுப்பி விட்டு நான் மதுரைக்குப் பிரயாணப்படுவதற்கு முன்னால் என் வாழ்க்கையிலேயே முக்கியமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

"தம்பி! சளுக்க சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்கான வேலைகளில் நான் பூரணமாய் ஈடுபட்டிருந்த போதிலும், இடையிடையே சிற்ப சித்திரக் கலைகளில் என் மனம் செல்லாமல் தடுக்க முடியவில்லை. காஞ்சியில் சில அற்புதமான சிற்பங்களைப் பார்த்தேன்; மாமல்லபுரம் என்று புதிதாகப் பெயர் பெற்ற துறைமுகத்துக்கருகில் சில அதிசயமான சிற்ப வேலைகள் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டேன். மதுரைக்குப் போகுமுன் அவற்றைப் பார்க்க வேண்டும் என்று சென்றேன். மாமல்லபுரத்துச் சிற்பங்கள் உண்மையில் அதிசயமாகவே இருந்தன. அந்த வேலைகளை நடத்தி வைக்கும் பெரிய சிற்பி ஒருவர் அரண்யத்தின் நடுவில் வீடு கட்டிக் கொண்டு வசிப்பதாகக் கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி அவருடைய சிற்ப வீட்டைத் தேடிக் கொண்டு போனேன்.

"அந்த மகா சிற்பியின் வீட்டில் பல அற்புதங்களைக் கண்டேன். முக்கியமாக, ஆயனர் அப்போது செய்வதில் ஈடுபட்டிருந்த நடனச் சிலைகள் என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. அஜந்தாவின் புத்த விஹாரத்தின் சுவரில் நான் பார்த்த நடனப் பெண்ணின் உருவத்தை அவை எனக்கு நினைவூட்டின. அந்த நடனச் சிலைகளைப் பார்த்து வியந்து கொண்டிருந்த போது ஒரு மகா அற்புதம் நிகழ்ந்தது. வீட்டின் பின்கட்டிலிருந்து ஒரு பெண் உருவம் நாங்கள் இருந்த சிற்ப மண்டபத்துக்கு வந்தது. ஊனும் உடலும் உயிரும் உள்ள உருவந்தான். ஆனால், அஜந்தா சுவரில் நான் பார்த்த சித்திரத்துக்கும் இந்த உருவத்துக்கும் அணுவளவும் வேற்றுமை இல்லை. அதே பூரண சந்திரனையொத்த முகம்; பொன்னிற மேனி; அதே வர்ணமுள்ள உடைகள்; நெஞ்சை ஊடுருவிப் பார்க்கும் நீண்ட நயனங்கள்; கூந்தலை எடுத்துக் கட்டியிருந்த விதமும் அப்படியே. சற்று நேரம் நான் காண்பது உண்மையான தோற்றமா, அல்லது சித்த பிரமையா என்று பிரமித்திருந்தேன். அந்த உருவம் அதன் செவ்விதழ்களைச் சிறிது விரித்து, 'அப்பா! இந்தச் சுவாமிகள் யார்?' என்று கேட்ட பிறகு தான், இதெல்லாம் உண்மை என்று உணர்ந்தேன். ஆயனச் சிற்பி என்னைப் பார்த்து, 'இவள் என்னுடைய மகள் சிவகாமி; இவளுடைய நடனத் தோற்றங்களைத்தான் நான் சிலை வடிவங்களாக அமைக்கிறேன்' என்றார். சற்று நேரத்துக்கெல்லாம் சிவகாமி நடனம் ஆடினாள்.

"தம்பி! அந்த நேரம் முதல் இந்த உலகமே எனக்குப் புதிய உலகமாக மாறி விட்டது. இவ்வுலகில் யுத்தத்தையும் இராஜ தந்திரத்தையும், இராஜ்ய பாரத்தையும் விட முக்கியமான காரியங்களும் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன். அஜந்தா அடிவாரத்தில் உன்னைச் சந்திப்பதற்கு முன்னால் சில காலம் அங்கே நான் கண்ட நடனச் சித்திரம் எப்படி என் உள்ளத்தைக் கவர்ந்ததோ, அல்லும் பகலும் அதே நினைவாக இருக்கச் செய்ததோ, அதே மாதிரி இப்போது சிவகாமியின் உருவம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. உள்ளத்தை மட்டுமா? ஊனையும் உயிரையும் உயிரின் ஒவ்வோர் அணுவையும் கவர்ந்து விட்டது.

"ஆம், தம்பி! சிவகாமியிடம் நான் காதல் கொண்டேன்; பிரேமை கொண்டேன்; மோகம் கொண்டேன். இன்னும் உலகத்துப் பாஷைகளில் என்னென்ன வார்த்தைகள் அன்பையும், ஆசையையும் குறிப்பதற்கு இருக்கின்றனவோ அவ்வளவு வார்த்தைகளையும் குறிப்பிட்ட போதிலும் காணாது என்று சொல்லக்கூடிய வண்ணம் அவள் மீது பிரியங்கொண்டேன். காதல், பிரேமை, மோகம் என்னும் வார்த்தைகளை இந்த உலகம் தோன்றிய நாள் முதல், கோடானு கோடி மக்கள் எத்தனையோ கோடி தடவை உபயோகித்திருக்கிறார்கள். ஆனால், அந்த வார்த்தைகளின் மூலம் நான் குறிப்பிடும் உணர்ச்சியை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். என்னுடைய காதலில் தேக தத்துவம் என்பது சிறிதும் கிடையாது.

"சிவகாமியின் உருவத்தைக் கண்டு நான் மோகித்து விடவில்லை. அவளுடைய உருவத்தைக் காட்டிலும் அழகிய சித்திர சிற்ப வடிவங்களை நான் கண்டிருக்கிறேன். "சிவகாமியின் பசும்பொன் மேனி நிறத்துக்காக அவள் மீது நான் காதல் கொள்ளவில்லை. அந்த மேனி நிறத்தைக் காட்டிலும் பிரகாசமான பொன்னிறத்தை இதோ இந்தச் சந்திரனிடம் காணலாம். "சிவகாமியின் கண்ணழகைக் கண்டு நான் மயங்கி விடவில்லை. அவள் வளர்த்த ரதி என்னும் மான் குட்டியின் மருண்ட கண்கள் சிவகாமியின் கண்களைக் காட்டிலும் அழகானவை.

"சிவகாமியின் உடம்பின் மென்மைக்காக அவள் மீது நான் ஆசை கொள்ளவில்லை. அவளுடைய உடம்பைக் காட்டிலும் அதிக மென்மை பொருந்திய எத்தனையோ புஷ்பங்கள் உலகில் இருக்கின்றன. "ஆம், தம்பி, சிவகாமியிடம் நான் கொண்டிருக்கும் காதலில் தேக தத்துவம் என்பதே கிடையாது. "ஆகையால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உனக்காக நான் ஏற்றுக் கொண்ட பிக்ஷு விரதத்துக்குச் சிவகாமியினால் யாதொரு பங்கமும் நேரவில்லை.." இவ்விதம் நாகநந்தி சொல்லி வந்த போது அவருடைய முகத்தில் அசாதாரணமான ஒரு கிளர்ச்சி காணப்பட்டது. புலிகேசி தம் மனத்தில், 'இதென்ன' ஒருவகை விசித்திரமான பைத்தியம் போல இருக்கிறதே? மகேந்திரனுடைய சிறையில் வெகு காலம் கிடந்ததனால் புத்தி மாறாட்டமாகி விட்டதா?' என்று எண்ணமிட்டார்.

புலிகேசியின் முகபாவத்தைக் கொண்டு இதை ஊகித்து உணர்ந்த நாகநந்தி கூறினார்: "இல்லை தம்பி, இல்லை! எனக்குப் பைத்தியம் பிடித்து விடவில்லை. இவ்வளவு தௌிவாக என்னுடைய அறிவு இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. எனக்கு உண்மையில் சிவகாமியின் மீது ஆசையே கிடையாது; அவளை ஆட்கொண்டிருக்கும் கலைத் தெய்வத்தினிடந்தான் மோகம். சிவகாமி சுயப்பிரக்ஞையை இழந்து தன்னை மறந்து ஆனந்த வௌியில் மிதந்து நடனமாடும் போது, நானும் தன் வசமிழந்து விடுகிறேன். அப்போது எனக்கு உண்டாகும் ஆனந்தம் இந்த உலகில் வேறெந்தக் காரியத்திலும் ஏற்பட்டதில்லை. தம்பி! மகேந்திர பல்லவனை நான் எவ்வளவோ பகைக்கிறேன்; துவேஷிக்கிறேன்; ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மகேந்திரனும் நானும் ஒரே அபிப்பிராயம் கொண்டவர்கள். சிவகாமி கேவலம் மனிதர்களுக்கு மனைவியாகப் பிறந்தவள் அல்லவென்றும் அவளுடைய அற்புதக் கலை தெய்வத்துக்கே அர்ப்பணமாக வேண்டிய கலையென்றும் ஒருநாள் ஆயனரிடம் மகேந்திர பல்லவன் சொன்னான். புத்தர் சிலையின் பின்னாலிருந்து அதை நான் கேட்டேன்; அவனுடைய கூற்றை மனத்திற்குள் பூரணமாக ஆமோதித்தேன். தம்பி! நீ நிச்சயமாக நம்பலாம், சிவகாமியிடம் நான் கொண்ட காதலினால் என்னுடைய பிக்ஷு விரதத்துக்கு யாதொரு பங்கமும் நேராது" என்று முடித்தார் நாகநந்தியடிகள்.
 
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம்

புலிகேசியின் வாக்குறுதி

புலிகேசி சக்கரவர்த்தி முகத்தில் புன்னகையுடன், "அடிகளே! தங்களுடைய பிக்ஷு விரதத்துக்கு நாட்டியப் பெண் சிவகாமியினால் பங்கம் நேராமலிருக்கலாம். ஆனால், நம்முடைய தென்னாட்டுப் படையெடுப்புக்கு அந்தப் பெண் தெய்வத்தினால் பங்கம் நேர்ந்துவிட்டது!" என்றார். பிக்ஷு வியப்பும் கோபமும் கலந்த குரலில், "அது எப்படி? படையெடுப்புக்கும் சிவகாமிக்கும் என்ன சம்பந்தம்? மகேந்திர பல்லவனுடைய சூழ்ச்சித் திறமையினால் அல்லவா நமது உத்தேசம் நிறைவேறவில்லை?" என்று கேட்டார்.

"அடிகளே! மகேந்திரனுடைய சூழ்ச்சித் திறனுக்குத் தங்களுடைய சூழ்ச்சித் திறன் குறைவானதா? யுத்தரங்கத்தில் நாம் சில சமயம் தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால், அரசியல் தந்திரத்தில் இதற்கு முன்னால் எப்போதாவது நாம் தோல்வியடைந்ததுண்டா? சிவகாமியிடமோ, அவளை ஆட்கொண்ட கலைத் தெய்வத்திடமோ தங்களுக்கு மோகம் ஏற்பட்டிராவிட்டால், மகேந்திர பல்லவன் தங்களைச் சிறைப்பிடித்திருக்க முடியுமா? தங்களுடைய திருவுள்ளத்தைப் பரிசோதனை செய்து உண்மையைச் சொல்லுங்கள்!"

இவ்விதம் புலிகேசி கூறியபோது, பிக்ஷுவின் முகத்தில் தோன்றிய கோபக்குறி மறைந்து, வெட்கம் கலந்த பிடிவாதம் காணப்பட்டது. தரையை நோக்கித் தலையைக் குனிந்த வண்ணம், "சக்கரவர்த்தி! இந்த அறிவிழந்த பிக்ஷுவை மன்னித்து விடுங்கள்! சாம்ராஜ்யத்தின் தொண்டுக்கு நான் இனித் தகுதியில்லாதவன். இத்தனை காலமாய் நான் செய்திருக்கும் சேவையை முன்னிட்டு மன்னித்து விடுதலை கொடுங்கள்!" என்றார் பிக்ஷு. "அண்ணா! இது என்ன விளையாட்டு?" "இல்லை, தம்பி! விளையாட்டு இல்லை; உண்மையாகத்தான் சொல்கிறேன், எனக்கு விடை கொடு; நான் போகிறேன்." "எங்கே போவதாக உத்தேசம்?" "எங்கேயாவது மனிதர்களுடைய கண் காணாத இடத்துக்குப் போகிறேன். அஜந்தாவைப் போன்ற இன்னொரு மலைப் பிரதேசத்தைக் கண்டுபிடித்து அதற்குள்ளே, உள்ளே, உள்ளே யாரும் எளிதில் வர முடியாத இடத்துக்குப் போய்விடுகிறேன். அங்கே சிவகாமியை நடனம் ஆடச் சொல்லிப் பார்த்துக் கொண்டே என் மிகுதி ஆயுளைக் கழித்து விடுகிறேன்.."

"அண்ணா! அப்படித் தனியாகச் சிவகாமியை நீ கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தால், அந்தப் பெண் நடனம் ஆடுவாளா?" "கலைஞர்களின் இயல்பு உனக்குத் தெரியாது, தம்பி! பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் சக்கரவர்த்தியின் அதிகாரத்தினால் சிவகாமியை ஆடச் சொல்ல முடியாது. ஆனால், நிற்க நிழலில்லாத இந்த ஏழைப் பிக்ஷுவினால் சிவகாமியை ஆடச் செய்ய முடியும்." "ஓஹோ!" "ஆம், தம்பி! அதனாலேதான் நான் உன்னைப்போல் வேஷம் தரித்திருக்கும் வரையில் அவளை நடனம் ஆடச் சொல்லவில்லை." "அண்ணா! இந்தப் பைத்தியம் உனக்கு வேண்டாம். சிவகாமியைக் காஞ்சிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இல்லாவிட்டால், நம் தளபதிகளில் யாராவது ஒருவனுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவோம்."

பிக்ஷுவின் கண்களில் கோபக் கனல் பறந்தது, "தம்பி! சிவகாமியைப் பெண்டாளும் எண்ணத்துடன் அவள் அருகில் நெருங்குகிறவன் யமனுலகம் போக ஆயத்தமாயிருக்க வேண்டும்" என்றார். "அண்ணா! மாமல்லன் யமனுலகம் போய்விட்டானா?" என்று புலிகேசி பரிகாசக் குரலில் கேட்டார். "இல்லை; அந்த நிர்மூடன் அதைக் காட்டிலும் கொடிய தண்டனையை இந்த உலகிலேயே அனுபவிக்கப் போகிறான். கேள், தம்பி! மாமல்லனை இந்தக் கையினாலேயே கொன்று விடத் தீர்மானித்திருந்தேன். இரண்டு மூன்று தடவை சந்தர்ப்பங்களும் வாய்த்தன. ஆனால், கடைசி நேரத்தில் என் மனத்தை மாற்றிக் கொண்டேன்."

"ஆகா! நீ மட்டும் உன் மனத்தை மாற்றிக் கொள்ளாமல் மாமல்லனைக் கொன்றிருந்தால், பல்லவ இராஜ்யத்தில் இப்போது வராகக் கொடி பறந்து கொண்டிருக்கும். மகேந்திர பல்லவனும் மதுரைப் பாண்டியனும் நம் காலின் கீழ் கிடப்பார்கள். "ஒருவேளை அப்படி ஆகியிருக்கலாம், ஆனால் சிவகாமியைத் தன்னுடைய சுகபோகப் பொருளாக்கிக் கொள்ள நினைத்த மாமல்லனுக்கு அது தக்க தண்டனையாகியிராது." "இப்போது என்ன தண்டனை?" "அவனுடைய ஆருயிர்க் காதலியைச் சளுக்கர் கொண்டு போன செய்தி வாழ்நாளெல்லாம் அவனுக்கு நரக வேதனை அளிக்கும். இரவு பகல் அவன் மனத்தை அரித்துக் கொண்டிருக்கும். இதைக் காட்டிலும் அவனுக்குத் தண்டனை வேறு கிடையாது." "நல்லது, அண்ணா! இப்போது என்ன சொல்கிறாய்?"

"இராஜரீக விவகாரங்களிலிருந்து அடியோடு விலகிக் கொள்வதாகச் சொல்கிறேன். இருபத்தைந்து வருஷம் உனக்காகவும் சாம்ராஜ்யத்துக்காகவும் உழைத்தேன். இனிமேல் சிலகாலம் எனக்காக வாழ்கிறேன். தம்பி! எனக்கு விடைகொடு! எங்கேனும் ஏகாந்தமான பிரதேசத்தைத் தேடிச் செல்கிறேன்." "அண்ணா! இராஜ்ய விவகாரங்களிலிருந்து விலகிக் கொள். அதற்காகக் காடு மலை தேடிப்போக வேண்டாம். வாதாபியிலேயே ஒரு நல்ல மாளிகையைப் பார்த்து எடுத்துக் கொள். வேண்டுமானால் அதில் ஒரு நடன மண்டபமும் கட்டிக்கொள். சிவகாமி அதில் ஆனந்தமாய் நடனமாடட்டும்; நீ பார்த்துக் கொண்டே இரு." "தம்பி! மெய்யாகச் சொல்கிறாயா? இதெல்லாம் எனக்காக நீ செய்து தரப்போகிறாயா?" "நிச்சயமாகச் செய்து தருகிறேன்; ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது." "நிபந்தனையா? என்னிடமா கேட்கிறாய், தம்பி!"

"நிபந்தனைதான்; ஆனால், உன்னிடம் நான் பிரார்த்தித்துக் கேட்டுக் கொள்ளும் நிபந்தனை; உன்னைத் தவிர யாரும் செய்ய முடியாத காரியம். எனக்கு இந்தக் கடைசி உதவியை நீ செய்து கொடு. அப்புறம் உன்னை நான் ஒன்றும் கேட்பதில்லை." "அது என்ன?" "சற்று முன் சொன்னேனே, அதுதான்; வேங்கியில் விஷ்ணுவர்த்தனன் படுகாயப்பட்டுக் கிடப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. நாடெல்லாம் கலகமும் குழப்பமுமாய் இருக்கிறதாம். நீ அங்கு உடனே போய் அவனைக் காப்பாற்ற வேண்டும். என்னைப் போல் விஷ்ணுவும் உன் உடன்பிறந்த சகோதரன்தானே?" "உடன் பிறந்த சகோதரன்தான்; ஆனால், அவனுக்கு என்னைக் கண்டால் பிடிப்பதே இல்லை! அவனிடமிருந்து நான் பாரவியைப் பிரித்து விரட்டிய குற்றத்தை அவன் மன்னிக்கவே இல்லை...." "அண்ணா! பாரவி கவியை ஏன் விஷ்ணுவிடமிருந்து நீ பிரித்தாய்? அதனால் எப்பேர்ப்பட்ட விபத்துக்கள் நேர்ந்தன!" "எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான் செய்தேன். அவன் ஓயாமல் கவிதை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் வீண்பொழுது போக்கிக் கொண்டிருந்தான்...."

புலிகேசி புன்னகை புரிந்தார், மனத்திற்குள் "என் உடன் பிறந்தவர்களில் இரண்டு பேரில் ஒருவனுக்குக் கவிதைப் பைத்தியம்; இன்னொருவனுக்குக் கலைப் பைத்தியம். புத்தி மாறாட்டம் இல்லாதவன் நான் ஒருவன்தான். அன்று விஷ்ணுவைக் காப்பாற்றியதுபோல் இன்று பிக்ஷுவை நான் காப்பாற்றியாக வேண்டும்" என்று எண்ணிக்கொண்டார். பின்னர் கூறினார், "ஆம் அண்ணா! அவனுடைய நன்மைக்காகவே செய்தாய். உன்னுடைய விருப்பத்தின்படி நான்தான் பாரவியை நாட்டை விட்டுப் போகச் சொன்னேன். ஆனால், அதன் பலன் என்ன ஆயிற்று? பாரவி கங்க நாட்டுக்குப் போனான். அங்கிருந்து துர்விநீதனுடைய மகளைப்பற்றி வர்ணித்து விஷ்ணுவுக்குக் கலியாணம் செய்து வைத்தான். பிறகு காஞ்சி நகருக்குப் போனான், அங்கிருந்து காஞ்சி நகரைப் பற்றி வர்ணனைகள் அனுப்பிக் கொண்டிருந்தான். அதனால் காஞ்சி சுந்தரியின் மேல் எனக்கு மோகம் உண்டாயிற்று." "அந்தப் பழைய கதைகளையெல்லாம் எதற்காகச் சொல்கிறாய்?" "உனக்குப் பிடிக்காவிட்டால் சொல்லவில்லை. ஆனால் இந்தக் கடைசி உதவியை நீ எனக்குச் செய்துவிடு, அண்ணா! நாம்தான் காஞ்சியைக் கைப்பற்ற முடியாமல் திரும்புகிறோம். வேங்கியிலிருந்து விஷ்ணுவர்த்தனனும் தோல்வியடைந்து திரும்பினால் அதைக்காட்டிலும் நம்முடைய குலத்துக்கு அவமானம் வேண்டியதில்லை. இந்த ஒரே ஓர் உதவிமட்டும் செய்துவிடு. உன்னுடன் நமது பாதிப் படையை அழைத்துக் கொண்டு போ!" புத்த பிக்ஷு சற்று யோசித்துவிட்டு, "ஆகட்டும் தம்பி; ஆனால், எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும்!" என்றார். "சிவகாமியைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதுதானே? அப்படியே வாக்குறுதி தருகிறேன். இத்தனை காலமும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இதுகூட நான் செய்ய வேண்டாமா? வாதாபியின் அழகான அரண்மனை ஒன்றில் அவளைப் பத்திரமாய் வைத்து நீ, வரும் வரையில் பாதுகாத்து ஒப்புவிக்கிறேன்." "தம்பி! சிவகாமி கலைத் தெய்வம்; அவளிடம் துராசையுடன் நெருங்குகிறவன் அதோகதி அடைவான். "அதை நான் மறக்கமாட்டேன் ஆனால், நடனக் கலையைப் பற்றி நீ சொல்லச் சொல்ல எனக்கே அதில் ஆசை உண்டாகிவிட்டது. சிவகாமியை நடனம் ஆடச் சொல்லி நான் பார்க்கலாமா?" "அவள் ஆடமாட்டாள்." "அவளாக இஷ்டப்பட்டு ஆடினால்..." "எனக்கு ஆட்சேபமில்லை." "மிகவும் சந்தோஷம்." "தம்பி! நம்முடைய பாட்டனாருக்குச் சத்யாச்ரயர் என்று பட்டம் கொடுத்தார்கள். அதே பட்டப் பெயர் உனக்கும் கிடைத்திருக்கிறது. ஒரு விஷயத்திலாவது உன் பட்டப் பெயருக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்." "சத்தியமாகச் சிவகாமியைப் பத்திரமாய்ப் பாதுகாத்து உன்னிடம் ஒப்புவிக்கிறேன்." இவ்விதம் புலிகேசிச் சக்கரவர்த்திக்கும், புத்த பிக்ஷுவுக்கும் நடந்த நீண்ட சம்பாஷணை முடிவடைந்தது. அன்றிரவு இரண்டாவது ஜாமத்திலே தான் இருவரும் சிவகாமி அரைத் தூக்கமாய்ப் படுத்திருந்த இடத்துக்குச் சென்று நிலா, வௌிச்சத்தில் நின்று, அவளைப் பார்த்தார்கள்.
 
நாற்பத்து நாலாம் அத்தியாயம்

நள்ளிரவுப் பிரயாணம்

மணிமங்கலம் போர் நடந்து ஏறக்குறைய ஒருமாத காலம் மகேந்திர பல்லவர் உணர்வற்ற நிலையில் படுத்த படுக்கையாய்க் கிடந்தார். போர்க்களத்தில் அவர் மீது பாய்ந்து காயப்படுத்திய கத்தி விஷந்தோய்ந்த கத்தி, என்று தெரியவந்தது. அரண்மனை வைத்தியர்கள் சக்கரவர்த்தியைக் குணப்படுத்த எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் தக்க பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருவெண்காடு நமசிவாய வைத்தியர் வந்து சேர்ந்தார். தளபதி பரஞ்சோதி திருவெண்காட்டுக்கு ஆள் அனுப்பி அவரை வரவழைத்தார். நமசிவாய வைத்தியருடைய சிகிச்சை விரைவில் பலன் தந்தது. மகேந்திரருடைய அறிவும் தௌிவு பெற்றது.

அறிவு தௌிந்ததும் மகேந்திர பல்லவர் முதன்முதலாக ஆயனர் - சிவகாமியைப் பற்றி விசாரித்தார். ஆயனர் கால் ஒடிந்து கிடக்கிறார் என்றும், சிவகாமியைச் சளுக்கர்கள் சிறைப்பிடித்துச் சென்றார்கள் என்றும் தெரிந்ததும் அவர் அடைந்த மனக் கலக்கத்திற்கு அளவே இல்லை. அதனால் குணமான உடம்பு மறுபடியும் கெட்டு விடுமோ என்று பயப்படும்படி இருந்தது. மாமல்லர் தந்தையைப் பார்க்கச் சென்றபோது, அவரை முன்னொரு நாள் ஆயனர் என்ன கேள்வி கேட்டாரோ, அதையே மகேந்திரரும் கேட்டார். "நரசிம்மா! சிவகாமி எங்கே?" என்றார்.

நரசிம்மர் மிக்க வேதனையடைந்தவராய், "அப்பா! அதைப் பற்றி இப்போது என்ன கவலை? முதலில் தங்களுக்கு உடம்பு நன்றாய் குணமாகட்டும்!" என்றார். "மாமல்லா! சிவகாமியிடம் நீ காதல் கொண்டதாகச் சொன்னதெல்லாம் வெறும் வார்த்தை என்று இப்போது தெரிகிறது. இதோ நான் கிளம்புகிறேன், சிவகாமியைக் கண்டுபிடித்துக் கொண்டுவா!" என்று சொல்லிய வண்ணம் மகேந்திர பல்லவர் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார். மாமல்லர் வெட்கமும் பரபரப்பும் கொண்டவராய்க் கூறினார்; "அப்பா! தங்களுக்கு உடம்பு குணமாவதற்காகவே காத்திருந்தேன். தாங்கள் என்ன சொல்வீர்களோ என்று சந்தேகமாயிருந்தது தாங்களே இப்படி சொல்லும் போது..."

"வேறு என்ன நான் சொல்வதற்கு இருக்கிறது மாமல்லா? ஆயனருடைய சிற்பத் திறமையும், சிவகாமியின் நடனத்திறமையும் இமயத்திலிருந்து இலங்கை வரையில் பரவியிருக்கின்றன. அப்படிப்பட்ட சிவகாமியை அந்த வாதாபி ராட்சதன் கொண்டு போய்விட்டான் என்றால், அதைக் காட்டிலும் பல்லவ குலத்துக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்? அப்படிப்பட்ட அவமானத்தைச் சகித்துக் கொண்டு உயிரோடிருப்பதைக் காட்டிலும், போர்க்களத்திலேயே என் உயிர் போயிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்." "தந்தையே! இப்படியெல்லாம் பேசவேண்டாம்; தங்களுக்கு உடம்பு குணமானதும் தங்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படுவதற்கு நானும் தளபதியும் ஆயத்தம் செய்திருக்கிறோம்..." "என்ன ஆயத்தம் செய்திருக்கிறீர்கள்?" "படை திரட்டிச் சேர்த்திருக்கிறோம்." "புத்திசாலிகள்தான்! படைகளுடன் சென்றால் சிவகாமியையும் கொண்டுவரமாட்டீர்கள்; நீங்களும் திரும்பி வரமாட்டீர்கள்." மாமல்லர் வியப்புடன், "அப்பா! வேறு என்ன செய்வது? தங்களுடைய யோசனை என்ன?" என்றார். "பரஞ்சோதியையும், சத்ருக்னனையும் அழைத்துக் கொண்டு வா! என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்" என்றார் மகேந்திரர்.

அவ்விதமே மாமல்லர், பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியவர்கள் அன்று மாலை சக்கரவர்த்தியிடம் வந்தபோது, அவர் தமது யோசனையைக் கூறினார். பரஞ்சோதியும் சத்ருக்னனும் மாறுவேடம் பூண்டு வாதாபிக்குப் போய்ச் சிவகாமியை அழைத்துவர வேண்டும் என்பதுதான் அந்த யோசனை. அப்படித் திருட்டுத்தனமாய்ப் போய்ச் சிவகாமியை அழைத்துக் கொண்டு வருவது பற்றி முதலில் மாமல்லர் ஆட்சேபித்தார். திருட்டுத்தனமாய்க் கொண்டு போகப்பட்டவளை அதே முறையில் திருப்பிக் கொண்டு வருவதில் தவறில்லை என்று மகேந்திரர் சொன்னார். அதோடு அவ்விதம் இப்போது ஒருதடவை வாதாபிக்குப் போய்விட்டு வருவது பின்னால் அவர்கள் வாதாபி மேல் பகிரங்கமாகப் படையெடுத்துப் போவதற்கும் அனுகூலமாயிருக்கும் என்று மகேந்திர சக்கரவர்த்தி தெரிவித்தார்.

வாதாபி மீது படையெடுக்கும் யோசனை மகேந்திர பல்லவருக்கு இருப்பது தெரிந்ததும் மாமல்லருக்கும் உற்சாகம் உண்டாகித் தம்முடைய ஆட்சேபங்களையெல்லாம் நிறுத்திக் கொண்டார். எல்லாம் பேசி முடிந்ததும் மாமல்லர் எழுந்து, தந்தைக்குச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, "அப்பா! தளபதியுடன் நானும் போய் வருகிறேன். கருணை கூர்ந்து அனுமதி கொடுக்க வேண்டும்!" என்று கெஞ்சுகிற குரலில் விண்ணப்பம் செய்தார். மகேந்திரர் முதலில் இதை மறுதலித்தார். கடைசியில், மாமல்லரிடம் முரட்டுத்தனமான காரியங்களில் இறங்குவதில்லை என்பதாகவும், எல்லா விஷயங்களிலும் தளபதி பரஞ்சோதியின் ஆலோசனைப்படி நடப்பதாகவும் உறுதி பெற்றுக்கொண்டு, விடை கொடுத்தார்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு நடுநிசி வேளையில், காஞ்சி அரண்மனை முற்றத்தில் ஆறு குதிரைகள் மீது ஆறு பேர் ஆரோகணித்துப் பிரயாணத்துக்கு ஆயத்தமாய் நின்றார்கள். தாடி, மீசை வைத்துக் கட்டிக்கொண்டிருந்த அந்த வேஷதாரிகள் மாமல்லர், பரஞ்சோதி, சத்ருக்னன், குண்டோதரன், கண்ணபிரான், அவனுடைய தந்தை அசுவபாலர் ஆகியவர்கள்தான். அப்படி நின்ற அறுவரும் அரண்மனை மேல்மாடத்தின் முன்றிலை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் அந்த முன்றிலுக்கு மகேந்திர சக்கரவர்த்தியும் புவனமகாதேவியும் வந்து சேர்ந்தார்கள். "புறப்படுங்கள்; ஜயத்துடன் சீக்கிரம் திரும்புங்கள்" என்று மகேந்திர பல்லவர் கூறியதும் மாமல்லரும் பரஞ்சோதியும் அவர்களைப் பார்த்து வணங்கிவிட்டுக் குதிரைகளைத் தட்டிவிட்டார்கள். குதிரைகள் அரண்மனை வௌி வாசலைக் கடந்து வீதிக்குப் போனதும், புவனமகாதேவியை மகேந்திர பல்லவர் பார்த்து, "தேவி! இராஜ குலத்தில் பிறந்ததற்குத் தண்டனை இது!" என்று சோகம் ததும்பும் குரலில் கூறினார்.
 
நாற்பத்தைந்தாம் அத்தியாயம்

மகேந்திரர் அந்தரங்கம்

அன்றிரவு மகேந்திர பல்லவரும் அவருடைய பட்ட மகிஷி புவன மகாதேவியும் கண்ணுறங்கவேயில்லை. அரண்மனை மேல் மாடத்தில், வெள்ளி நட்சத்திரங்களை அள்ளித் தௌித்திருந்த வானவிதானத்தின் கீழ் அமர்ந்து, சென்ற காலத்தையும் வருங்காலத்தையும் பற்றி, அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். "தேவி! என் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் இப்படி எனக்கு ஆசாபங்கம் உண்டாகுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. என்னுடைய கனவுகளெல்லாம் சிதைந்து போய்விட்டன. துரதிர்ஷ்டத்துக்கு உள்ளானவனை அவனுடைய அந்தரங்க சிநேகிதர்கள் கூடக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசியல் நீதி கூறுவது எவ்வளவு உண்மை! அதோ வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் முன்னேயெல்லாம் என்னைப் பார்த்து, 'மகேந்திரா! உன்னைப் போன்ற மேதாவி இந்தப் பூவுலகில் வேறு யார்? உன்னைப் போன்ற தர்மவான், குணபரன், சத்ருமல்லன், கலைப்பிரியன் வேறு யார்?' என்று புகழ்மாலை பாடுவது வழக்கம். இப்போது அதே நட்சத்திரங்கள், என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கேலிச் சிரிப்புச் சிரிக்கின்றன. 'மகேந்திரா! கர்வபங்கம் போதுமா? உன்னுடைய அகட விகட சாமர்த்தியங்கள் எல்லாம் விதியின் முன்னால் பொடிப் பொடியாகப் போனதைப் பார்த்தாயா?' என்று கேட்கின்றன..."

மகேந்திரருடைய உடம்பும் உள்ளமும் வெகுவாக நொந்திருந்தன என்பதைச் சக்கவர்த்தினி அறிந்தவளாதலால், அவர் மனத்தை மேலும் புண்படுத்த விரும்பவில்லை. ஆயினும் அவளை அறியாமல் இந்த வார்த்தைகள் வௌிவந்தன. "பிரபு! நாமாகச் செய்து கொள்ளும் காரியத்துக்கு விதி என்ன செய்யும்?" இதைக் கேட்ட மகேந்திர பல்லவர் சோகப் புன்னகை புரிந்து, "மனிதர்களாகிய நாம் எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியம் செய்தாலும் விதி வந்து குறுக்கிட்டு எல்லாவற்றையும் கெடுத்து விடத்தான் செய்கிறது. என்னுடைய காரியங்களைக் கெடுப்பதற்கு விதியானது சிவகாமியின் ரூபத்தில் வந்தது!" என்றார்.

"ஆ! அந்த ஏழைப் பெண்ணின் மீது ஏன் பழியைப் போடுகிறீர்கள்? அவள் என்ன செய்வாள்?" என்று இரக்கம் ததும்பிய குரலில் கூறினாள் பல்லவர் தலைவி புவனமகாதேவி. "பெண்ணுக்குப் பெண் பரிந்து பேசுகிறாய், அது நியாயந்தான். ஆனாலும், ஆயனர் மகளின் காரணமாகத்தான் என்னுடைய உத்தேசங்கள் எல்லாம் பாழாய்ப் போயின. சிவகாமியிடமிருந்து மாமல்லனைப் பிரித்து வைக்க நான் முயன்று வந்தேன். அதற்காக என்னவெல்லாமோ சூழ்ச்சிகளும் தந்திரங்களும் செய்தேன். நான் செய்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் பயன்படாமல் போயின, விதிதான் கடைசியில் வெற்றி பெற்றது."

"விதியானது உங்களுடைய நோக்கத்தைத்தானே நிறைவேற்றி வைத்தது? அந்தப் பெண்ணிடமிருந்து மாமல்லனைப் பிரிப்பதற்குத் தாங்கள் எத்தனையோ ஏற்பாடுகள் செய்தீர்கள். விதி உங்கள் ஒத்தாசைக்கு வந்து அவளை வாதாபிக்கே கொண்டு போய்விட்டது. அப்படியிருக்க, அவளைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்கு நீங்கள் ஏன் பிரயத்தனம் செய்ய வேண்டும்? தங்களுடைய காரியம் எனக்கு விளங்கவில்லையே?" என்று புவனமகாதேவி உண்மையான திகைப்புடன் கேட்டாள்.

"அதைத்தான் அப்போதே சொன்னேன், பழைமையான பல்லவ குலத்திலே பிறந்ததற்குத் தண்டனை இது. சிவகாமியைத் திருப்பிக் கொண்டு வராவிட்டால் பல்லவ குலத்துக்கு என்றென்றைக்கும் மாறாத அவமானம் ஏற்படும். புலிகேசி காஞ்சிப் பல்லவனை முறியடித்துவிட்டு ஊர் திரும்பியதாகப் பெருமையடித்துக் கொள்வான். சிவகாமி வாதாபியில் இருக்கும் பட்சத்தில் புலிகேசியின் ஜம்பத்தையே உலகம் நம்பும்படி இருக்கும். சிவகாமியின் புகழ் ஏற்கெனவே இலங்கை முதல் கன்யாகுப்ஜம் வரையில் பரவியிருக்கிறது. மாமல்லபுரத்துச் சிற்பங்களையும், சிவகாமியின் நடனத்தையும் வந்து பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று நானே ஹர்ஷவர்த்தனருக்கு ஓலை அனுப்பியிருந்தேன். அப்படிப்பட்ட சிவகாமி வாதாபியில் சிறை வைக்கப்பட்டிருந்தால் உலகம் என்ன நினைக்கும்? பல்லவ குலத்துக்கு அதைக் காட்டிலும் வேறு என்ன இழிவு வேண்டும்?"

"சுவாமி! தாங்கள் தலையில் அணியும் கிரீடத்தைச் சில சமயம் நான் கையிலே எடுத்துப் பார்த்திருக்கிறேன். அதனுடைய கனத்தை எண்ணி, 'இவ்வளவு பாரத்தை எப்படித்தான் சுமக்கிறீர்களோ!' என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த இரண்டு மூன்று வருஷத்திலேதான் எனக்குத் தெரிந்தது, தலையிலே அணியும் மணிமுடியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பாரத்தைத் தாங்கள் இருதயத்திலே தாங்க வேண்டியிருக்கிறதென்று. 'இராஜ்ய பாரம்' என்று உலக வழக்கிலே சொல்வது எவ்வளவு உண்மையான வார்த்தை?" என்று சக்கரவர்த்தினி உருக்கமான குரலில் கூறினாள்.

"ஒரு காலத்தில் அந்தப் பாரத்தை நான் வெகு உற்சாகத்துடன் தாங்கினேன். இப்போது அதுவே தாங்க முடியாத பெரும் பாரமாய் என் இருதயத்தை அமுக்குகிறது. தேவி! மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் நான் ஆகாசக் கோட்டைகள் கட்டி வந்தேன். ஆம்; காஞ்சிக் கோட்டையை அலட்சியம் செய்து விட்டு ஆகாசக் கோட்டைகள் கட்டினேன். இந்தப் பூவுலகத்தைச் சொர்க்க பூமியாகச் செய்து விடலாம் என்று கருதினேன். என்னுடைய மூதாதையர்களையெல்லாம் மனத்திற்குள் நிந்தித்தேன். வீணாகச் சண்டை பூசல்களிலும் இரத்தக் களறிகளிலும் அவர்கள் காலத்தைக் கழித்தார்களே என்று வருத்தப்பட்டேன். மாமல்லபுரத்தில் எல்லாச் சமயங்களுக்கும் அழியாத கற்கோயில்கள் கட்டத் தொடங்கினேன். கோயில்கள் கட்டி முடிந்ததும் ஹர்ஷனையும் புலிகேசியையும் அழைக்க நினைத்திருந்தேன். இந்த ஆகாசக் கோட்டைகளையெல்லாம் அந்தச் சளுக்க அரக்கன் பொடிப் பொடியாக்கி விட்டான். அவன் தொண்டை மண்டலத்துக் கிராமங்களில் வைத்த தீ சீக்கிரத்தில் அணையப் போவதில்லை. பல்லவர் படை வாதாபிக்குப் போய்ப் புலிகேசியை முறியடித்தாலொழியப் பல்லவ குலத்துக்கு நேர்ந்த அவமானம் தீரப் போவதில்லை. இது என் காலத்தில் நிறைவேறாவிட்டால், மாமல்லனுடைய காலத்திலாவது நிறைவேறியாக வேண்டும்." "பிரபு! என் வீர மகன் நிச்சயமாகத் தங்கள் மனோரதத்தை நிறைவேற்றுவான். பல்லவ குலத்துக்கு நேர்ந்த பழியைத் துடைப்பான்!" என்று புவனமகாதேவி பெருமிதத்துடன் கூறினாள்.
 
நாற்பத்தாறாம் அத்தியாயம்

வாதாபி

டபெண்ணைக் கரையிலிருந்து சளுக்க சைனியத்தின் பெரும் பகுதி வடமேற்குத் திசையாக வாதாபி நகரத்தை நோக்கிக் கிளம்பிற்று. சிவகாமியும் அந்தச் சைனியத்துடன் பிரயாணம் செய்தாள். தொண்டை மண்டலத்துக் கிராமங்களிலே பார்த்த பயங்கரங்களைக் காட்டிலும் கொடுமையான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு போனாள். வீடுகளும் வைக்கோற் போர்களும் பற்றி எரிவதையும், பசுமையான தோப்புக்கள் போர் யானைகளால் அழிக்கப்படுவதையும், பயிர்கள் நாசமாக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு போனாள். குற்றமற்ற கிராமத்து ஜனங்கள் கொல்லப்படுவதையும், திடகாத்திர புருஷர்களும் இளம் வயதுப் பெண்களும் சிறைப்பிடிக்கப்படுவதையும் தாய்மாரைப் பிரிந்த குழந்தைகள் அலறி அழுவதையும் பார்த்துக் கொண்டு போனாள்.

சிவகாமியின் உள்ளத்திலும் பெரிய தீப்பிழம்பு ஜுவாலை விட்டு எரியத் தொடங்கியது. வாதாபிச் சக்கரவர்த்தியை மீண்டும் சந்தித்து இம்மாதிரி அக்கிரமக் கொடுமைகளைச் செய்ய வேண்டாமென்று வேண்டிக் கொள்ள விரும்பினாள். பல தடவை அதற்காகப் பிரயத்தனம் செய்தாள். தன்னுடன் வந்த காவலர்களை தன்னைப் புலிகேசியிடம் அழைத்துப் போகும்படி கேட்டுக் கொண்டாள். அந்தக் காவலர்கள் அவள் கூறியதைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஒவ்வொரு சமயம் அவள் இரவில் தூங்கும் போது, 'ஹ ஹா ஹா' என்று பேய் சிரிப்பது போன்ற சிரிப்புச் சப்தம் கேட்கும். திடுக்கிட்டுக் கண்ணை விழித்துப் பார்ப்பாள். எதிரே சற்றுத் தூரத்திலிருந்து வாதாபிச் சக்கரவர்த்தியின் உருவம் திரும்பிப் போவது போலத் தோன்றும். எழுந்து உட்காருவதற்குள் அந்த உருவம் மறைந்து போய் விடும். தன்னுடைய சித்தப் பிரமையில் தோன்றிய உருவந்தான் அது என்று எண்ணிக் கொள்வாள்.

புலிகேசி இளம் பிராயத்தில் சிற்றப்பன் மங்களேசனால் பெரிதும் கொடுமை செய்யப்பட்டவன். அதன் காரணமாக, மரத்திலே வைரம் பாய்வது போல் அவனுடைய சுபாவத்திலேயே குரூரம் கலந்து இறுகிக் கெட்டிப்பட்டிருந்தது. நாகநந்தியின் உதவியால் வாதாபிச் சிம்மாசனம் ஏறிய காலத்திலிருந்து உள்நாட்டு எதிரிகளை ஒழித்தல், வௌிப் பகைவர்களோடு யுத்தம் செய்தல் முதலிய கொடுங் காரியங்களிலேயே புலிகேசியின் வாழ்நாளெல்லாம் சென்றிருந்தது. பிறருடைய துன்பங்களைப் பார்த்து வருந்துவது என்பது புலிகேசியின் சுபாவத்தில் இல்லவே இல்லை. தற்சமயம், புலிகேசியின் சுபாவக் குரூரத்தை ஒன்றுக்குப் பத்தாக வளரச் செய்த காரணங்கள் இரண்டு ஏற்பட்டிருந்தன.

ஒன்று, மகேந்திர பல்லவனுடைய மாய தந்திரங்களினால் தம்முடைய தென்னாட்டுப் படையெடுப்பு அபஜயமாக முடிந்ததில் ஏற்பட்டிருந்த ஆசாபங்கம். இன்னொன்று, இதுகாறும் வாதாபி இராஜ்யத்தின் பெருமையையும் தம்முடைய க்ஷேமத்தையும் தவிர வேறு கவனமே இல்லாமலிருந்த நாகநந்தியடிகளின் உள்ளத்தை ஒரு பல்லவ நாட்டுப் பெண் கவர்ந்து விட்டாளே என்ற அசூயையும் ஆத்திரமும். இக்காரணங்களினால் தம் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்த குரோதத்தையெல்லாம் புலிகேசிச் சக்கரவர்த்தி தாம் சென்ற மார்க்கத்தில் எதிர்ப்பட்ட குற்றமற்ற ஜனங்கள் மீது காட்டினார். அதனோடு, சிவகாமியின் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் தக்க வழியை யோசித்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் அறிந்திராத சிவகாமி, தான் மட்டும் வாதாபிச் சக்கரவர்த்தியை இன்னொரு தடவை நேருக்கு நேர் சந்திக்க முடிந்தால், அவருடைய படைகள் செய்யும் கொடுமைகளையெல்லாம் நிறுத்தி விடலாம் என்று ஆசையுடன் நம்பினாள். அவளுடைய இந்த மனோரதம் வாதாபி போய்ச் சேரும் வரையில் நிறைவேறவில்லை.

வாதாபியில் பெரியதோர் அழகான அரண்மனையில் சிவகாமி கொண்டு வந்து சேர்க்கப்பட்டாள். அவளுக்குத் துணையாகவும், பணிவிடை புரிவதற்காகவும் இரண்டு தாதிப் பெண்கள் அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் பிராகிருதமும் தமிழும் கலந்த பாஷையில் பேசினார்கள். அந்தத் தாதிப் பெண்களுடைய பேச்சையெல்லாம் சிவகாமி எளிதில் புரிந்து கொள்ளுதல் சாத்தியமாயிருந்தது. சக்கரவர்த்தி கட்டளையின் பேரிலேயே அந்த அரண்மனை சிவகாமிக்காகத் திட்டம் செய்யப்பட்டதென்றும், அவளுக்கு யாதொரு சௌகரியக் குறையும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளும்படி ஆக்ஞை என்றும் மேற்படி தாதிப் பெண்களிடம் சிவகாமி தெரிந்து கொண்டாள். இதெல்லாம் அவள் எதிர்பார்த்தபடியே இருந்தது. ஆகவே, கூடிய சீக்கிரம் புலிகேசிச் சக்கரவர்த்தி தன்னைப் பார்க்க அங்கு வருவாரென்றும் சிவகாமி தீர்மானித்தாள். அப்படி அவர் வரும் போது என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஓயாமல் சிந்தித்த வண்ணமிருந்தாள்.

சக்கரவர்த்தியின் விஷயத்தில் சிவகாமியின் மனோபாவம் இரண்டு விதமாயிருந்தது. ஒரு சமயம், அவருடைய சைனியம் செய்த கொடுஞ் செயல்களை எண்ணி எண்ணி அவளுடைய உள்ளம் கொதித்தது. மற்றொரு சமயம், அப்பேர்ப்பட்ட கொடுங்கோல் மன்னன் மீது அபலையாகிய தனக்கு ஏற்பட்டிருந்த சக்தியை நினைத்து அவள் உள்ளம் பெருமிதம் அடைந்தது. இராவணன் கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறைவைத்த சீதாதேவியின் நினைவு சிவகாமிக்கு அடிக்கடி வந்தது. சீதையின் நிலைமைதான் தன்னுடைய நிலைமையும். இராமபிரான் இராவணனை வென்று சீதையைச் சிறை மீட்டுக் கொண்டு போனது போல் மாமல்லர் ஒருநாள் வந்து இந்தப் பாதகப் புலிகேசியை வென்று தன்னைச் சிறை மீட்டுக் கொண்டு போகப் போகிறார்!

இவ்விதம் நம்பிய சிவகாமி, சீதைக்கும் தனக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றியும், எண்ணமிட்டாள். சீதாதேவியை இராவணன் அவளுடைய அழகுக்காக ஆசைப்பட்டு அபகரித்துக் கொண்டு வந்தான். அவளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால், புலிகேசியோ தன்னிடமிருந்த நாட்டியக் கலையின் மேல் மோகங்கொண்டு தன்னைச் சிறைப்பிடித்து வந்திருக்கிறான். (புலிகேசியே மாறுவேடம் பூண்ட புத்த பிக்ஷு என்னும் நம்பிக்கை சிவகாமியின் உள்ளத்தில் வேரூன்றியிருந்தபடியால் இவ்விதம் எண்ணினாள்.) ஆகையால், இராவணன் மீது சீதைக்கு இல்லாத செல்வாக்கு, தனக்கு வாதாபிச் சக்கரவர்த்தியின் மீது இருக்கிறது. தன் கலையின் சக்தி கொண்டு அவரைத் தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டி வைக்கலாம். ஆ! அந்தப் பொல்லாத புத்த பிக்ஷுவைத் தான் இலேசில் விடப்போவதில்லை. வரட்டும் இங்கே! எப்படியும் என்னிடம் வந்துதானே ஆக வேண்டும்?

சிவகாமி வாதாபி வந்து சேர்ந்த எட்டாம் நாள் அவளுடைய மனோரதம் ஈடேறியது. சக்கரவர்த்தி அவளைப் பார்ப்பதற்காக அந்த அரண்மனைக்கு வந்தார். வாசற்புறமிருந்த தாதி ஓடி வந்து, "சக்கரவர்த்தி வருகிறார்!" என்று தெரிவித்ததும், சிவகாமி மிக்க பரபரப்புக் கொண்டு வாதாபிச் சக்கரவர்த்தியை வரவேற்கவும், அவர்மீது தன் கூரிய கண்ணம்புகளையும், சொல்லம்புகளையும் செலுத்தவும் ஆயத்தமானாள். ஆனால், சக்கரவர்த்தி அரண்மனைக்குள்ளே வந்து நின்று அவளை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்து விட்டு, அவள் கனவிலே கேட்டது போன்ற ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்ததும், சிவகாமி எண்ணியிருந்த எண்ணமெல்லாம் எங்கேயோ போய் விட்டன. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பீதி அவளுடைய இருதயத்தில் புகுந்து தேகமெல்லாம் வியாபித்துத் தேகத்தின் எலும்புகளுக்குள்ளே பிரவேசித்து ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. வாயைத் திறந்து பேச முடியாதபடி நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

"சிற்பி மகளே! நாட்டிய கலாராணியே! மகேந்திர பல்லவனின் கலைப் பொக்கிஷமே! சௌக்கியமா? வாதாபி வாசம் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று புலிகேசி கேட்ட போது, சிவகாமியின் உடம்பு படபடத்து நடுங்கிற்று. தன்னுடைய நாட்டியத் தோற்றங்களிலே வெகு சாதாரணமான தோற்றத்தைக் கண்டு அப்படியே பரவசப்பட்டு நின்ற புத்த பிக்ஷுவா இவர்? தன்னிடம் அணுகும்போதே பயபக்தியுடன் அணுகி உணர்ச்சி மிகுதியினால் தன்னுடன் பேச முடியாமல் தத்தளித்து நின்ற நாகநந்தி இவர்தானா? பொன்முகலி நதிக்கரையில் தொண்டை நாட்டுப் பெண்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தான் வரங் கேட்டுப் பெற்ற போது, அவர் இவ்விதமில்லையே? வாதாபி நகருக்கு வந்து விட்டதனாலேயே இவரிடம் இந்த வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறதா?

இவ்விதம் சிவகாமியின் உள்ளக் கடல் கொந்தளித்துக் குழம்ப, புலிகேசியின் கேள்விகளுக்கு மறுமொழி ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள். அதைப் பார்த்த புலிகேசி, "பெண்ணே! ஏன் மௌனம் சாதிக்கிறாய்? 'கலை உணர்ச்சியில்லாத வாதாபிப் புலிகேசியுடன் நமக்கு என்ன பேச்சு' என்ற எண்ணமா? அப்படி நான் அடியோடு கலை உணர்ச்சி இல்லாதவனல்ல. அவ்விதமிருந்தால் சிறைப்பிடித்துக் கொண்டு வந்த உன்னை இந்த அரண்மனையில் வைத்திருப்பேனா? பல்லவ நாட்டின் இணையற்ற நடன கலாராணிக்குத் தகுந்த அலங்கார மாளிகையல்லவா இது? இங்கு உனக்கு எல்லாம் சௌகரியமாயிருக்கிறதா? பணிப்பெண்கள் திருப்தியாகப் பணிவிடை செய்கிறார்களா? ஏதாவது குறை இருந்தால் சொல்!" என்றார்.

புலிகேசியின் பேச்சு எவ்வளவோ அருவருப்பாயிருந்த போதிலும் இனிப் பேசாமல் இருக்கக் கூடாது என்று சிவகாமி கருதி, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, "பிரபு! இங்கு எல்லாம் சௌகரியமாயிருக்கிறது; ஒரு குறையும் இல்லை, மிக்க வந்தனம்!" என்றாள். "ஆஹா! வாய் திறந்து பேசுகிறாயா? நல்லவேளை! நீ மௌனமாய் நின்றதைப் பார்த்து விட்டு, நீ உயிருள்ள பெண்தானா அல்லது உன் தந்தை அமைத்த கற்சிலைகளில் ஒன்றைத்தான் சிறைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டோமா என்று சந்தேகித்தேன். நீ இந்த மட்டும் பேசியது மிக்க சந்தோஷம். நீ வாயினால் சொன்னபடி உண்மையாகவே எனக்கு வந்தனம் செலுத்த விரும்பினால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது..." என்ற புலிகேசி மேலும் கூறத் தயங்கி நின்றார்.

அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற பீதியுடன் சிவகாமி மௌனமாயிருந்தாள். "பெண்ணே! அந்த மூடன் மகேந்திர பல்லவன் என்னைக் கலை உணர்ச்சி அற்றவன் என்று சொன்னான்; அதை நீயும் நம்பினாய். நரிக்கும் புலிக்கும் எவ்வளவு வித்தியாசமோ, குட்டைக்கும் சமுத்திரத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ, உள்ளங்கை அகலமுள்ள தொண்டை மண்டலத்துக்கும் விஸ்தாரமாகப் பரந்த சளுக்க சாம்ராஜ்யத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ, அவ்வளவு வித்தியாசம் மகேந்திர பல்லவனுடைய கலை உணர்ச்சிக்கும் என்னுடைய கலை உணர்ச்சிக்கும் உண்டு. கூடிய சீக்கிரத்தில் இதை நீயே தெரிந்து கொள்வாய். கலா ராணியே! கேள்! தொலை தூரத்திலுள்ள பாரசீக நாட்டுச் சக்கரவர்த்தியிடமிருந்து என்னுடைய சபைக்குத் தூதர்கள் வந்திருக்கிறார்கள். என்னுடைய நட்பைக் கோரிப் பாரசீகச் சக்கரவர்த்தி காணிக்கைகளும் சன்மானங்களும் அனுப்பியிருக்கிறார். பாரசீகத் தூதர்களைப் பகிரங்கமாக வரவேற்பதற்கும் அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளை ஏற்பதற்கும் நாளைய தினம் மகுடாபிஷேக மண்டபத்தில் மகாசபை கூடுகிறது. அந்த மகாசபையில் வந்து நீ நடனம் செய்ய வேண்டும்."

இத்தனை நேரம் பயமும் பலவகைக் குழப்பங்களும் குடிகொண்டிருந்த சிவகாமியின் உள்ளம் நடனம் என்ற வார்த்தையைக் கேட்டதும் அசாதாரண தைரியத்தை அடைந்தது. கொஞ்சமும் தயங்காமலும் பயப்படாமலும் தலைநிமிர்ந்து புலிகேசியை நோக்கி அழுத்தந் திருத்தமான குரலில், "முடியாது" என்றாள். புலிகேசியின் கண்கள் ஒருகணம் ஜுவாலாக்கினியைக் கக்கின. தன்னை மீறிக் கொண்டு வந்த கோபத்தைப் புலிகேசி பல்லைக் கடித்துச் சமாளித்துக் கொண்டதாகத் தோன்றியது. "பெண்ணே! ஏன் இவ்வளவு கண்டிப்பாக 'முடியாது' என்று சொல்லுகிறாய்? மூன்று நாள் உனக்கு அவகாசம் கொடுக்கிறேன்; யோசித்துச் சொல்!" என்றார் புலிகேசி.

"யோசிப்பதற்கு அவசியமேயில்லை, பிரபு! என்னைத் தங்களுடைய சபையில் ஆடச் சொல்லி, மகேந்திர பல்லவரைத் தாங்கள் ஜயித்து வந்தது பற்றி உலகத்துக்கெல்லாம் பறையறையப் போகிறீர்கள். 'பல்லவ நாட்டிலிருந்து கொண்டு வந்த அடிமை இவள்!' என்று சுட்டிக் காட்டப் போகிறீர்கள். ஆ! தங்கள் நோக்கம் தெரிந்தது. தாங்கள் என்னைச் சிறைப்பிடிக்கலாம், என்னுடைய தேகத்தை அடிமை கொள்ளலாம். என் ஆத்மாவையும் கட்டுப்படுத்தலாம்; ஆனால், என்னிடமுள்ள கலையைத் தங்களால் அடிமைப்படுத்த முடியாது. அதிகாரத்துக்கு அடங்கி, ஆக்ஞைக்குப் பயந்து நான் நடனம் ஆட மாட்டேன்! ஒரு நாளும் ஆட மாட்டேன்" என்றாள்.

ஆத்திரம் பொங்கிய குரலில் சிவகாமி மேற்கூறிய மொழிகளைக் கூறி வந்த போது புலிகேசியின் கண்கள் செந்தணல் நிறம் பெற்று அனல் உமிழ்ந்தன. சிவகாமி பேசி முடித்ததும் புலிகேசி பழையபடி ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்தார். "பெண்ணே! பொறு! இவ்வளவு பதற்றம் உனக்கு எங்கிருந்து வந்தது? அப்படியொன்றும் உன் தேகத்தையோ, உன் கலையையோ அடிமைப்படுத்த எனக்கு உத்தேசமில்லை. உனக்கு இஷ்டமில்லாவிட்டால் நீ நடனம் ஆட வேண்டாம். இந்த அரண்மனைக்குள்ளே உன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் எண்ண வேண்டாம். உனக்கு இஷ்டமான போது நீ இந்த மாளிகையை விட்டு வௌியே போகலாம். வாதாபி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். உங்கள் காஞ்சியைப் போல் எங்கள் வாதாபி அவ்வளவு அழகாயில்லாவிட்டாலும், ஏதோ பார்க்கத் தகுந்த காட்சிகள் இங்கேயும் இருக்கின்றன. இந்த அரண்மனை வாசலில் காவல் காப்பவர்கள் உன்னைச் சிறை வைப்பதற்காக இங்கு இருக்கவில்லை. உனக்கு ஏவல் புரிவதற்காக இருக்கிறார்கள். நீ எப்போது சொல்கிறாயோ அப்போது அவர்கள் உனக்குப் பல்லக்குத் தருவித்துக் கொடுப்பார்கள். மறுபடியும் என்னைப் பார்ப்பதற்கு நீ விரும்பினாலும் அவர்களிடமே சொல்லி அனுப்பலாம். சிற்பி மகளே! நீ என் அதிகாரத்துக்குப் பயந்து நடனமாட வேண்டாம். உன் இஷ்டம் போல் சுயேச்சையாகவும் சுகமாகவும் இருக்கலாம்!"

இவ்விதம் சொல்லி விட்டுப் புலிகேசிச் சக்கரவர்த்தி சிவகாமியைக் கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையில் எல்லையில்லாத துவேஷமும், பழிவாங்கும் உறுதியும் குடிகொண்டிருந்ததைச் சிவகாமி கவனிக்கவில்லை. அந்த ஏழைப் பெண் அப்போது தரையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொடுமைக்கும் கொடூரத்துக்கும் பெயர் போன வாதாபிப் புலிகேசியைத் தான் வென்று விட்டதாக அவளுடைய உள்ளம் இறுமாப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அன்று மாலை சிவகாமி வாசற் காவலரிடம் தான் வாதாபி நகரைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறிப் பல்லக்குக் கொண்டு வரச் சொன்னாள். "உன்னை இங்கே சிறை வைத்திருக்கவில்லை; உன் இஷ்டப்படி வௌியே சென்று வரலாம்" என்று புலிகேசி கூறியது அவள் மனத்தை விட்டு அகலாதிருந்தது. தன்னுடைய சுதந்திரத்தை அன்றே பரிசோதித்து விட எண்ணிப் பல்லக்கில் ஏறிக் கொண்டு புறப்பட்டாள்.
 

New Threads

Top Bottom