Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் பாகம் -3 : பிக்ஷுவின் காதல்

நாற்பத்தேழாம் அத்தியாயம்

வீதி வலம்

ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னால் பரத கண்டத்தில் பிரசித்தி பெற்றிருந்த மூன்று சாம்ராஜ்யத் தலைநகரங்களில் வாதாபி ஒன்றாகும். கன்யாகுப்ஜத்தையும் காஞ்சியையும் போலவே வாதாபி நகரத்தின் புகழும் அந்த நாட்களில் கடல் கடந்து வெகுதூரம் சென்றிருந்தது. ஒவ்வொரு தடவை திக்விஜயம் செய்து திரும்பும் போதும் புலிகேசியின் படை வீரர்கள் வெற்றி கொண்ட தேசங்களிலிருந்து ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து வாதாபியில் சேர்த்து வந்தார்கள். இதனால் வாதாபி நகரம் வளங்கொழிக்கும் நகரமாய் அந்தக் காலத்தில் விளங்கிற்று. அந்நகரில் வர்த்தகம் சிறந்தோங்கியிருந்தது. தூர தூர தேசங்களிலிருந்தெல்லாம் அந்நகருக்கு இரத்தின வியாபாரிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

பிரசித்தி பெற்ற ஜைன ஆலயங்களும் பௌத்த மடங்களும் வாதாபியில் இருந்தபடியால், பற்பல நாடுகளிலிருந்தும் யாத்திரிகர்கள் அந்நகருக்கு வருவதுண்டு. இதனாலெல்லாம் வாதாபி நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருந்து வந்தது. அதிலும் சக்கரவர்த்தி தலைநகரில் இருக்கும் போது கேட்க வேண்டியதில்லை. சக்கரவர்த்தியைப் பேட்டி காண்பதற்காகச் சிற்றரசர்கள் காணிக்கைகளுடன் வருவார்கள். சீனம், பாரசீகம் முதலிய தூர தூர தேசங்களிலிருந்து அரசாங்கத் தூதர்கள் வருவார்கள். மாடமாளிகைகள், கூடகோபுரங்களுடன் விளங்கிய வாதாபியின் வீதிகள் எப்போதுமே திருவிழாக் காலத்தைப் போல் ஜனக்கூட்டம் நிறைந்து விளங்கும். வண்டிகள் வாகனங்களின் சப்தம் ஓயாமல் கேட்ட வண்ணமிருக்கும்.

வாதாபி நகரில் வீதிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு சிவகாமி பல்லக்கிலே போய்க் கொண்டிருந்த போது அவளுடைய உள்ளம் அடிக்கடி காஞ்சியையும் வாதாபியையும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தது. பழமையான காலத்திலிருந்து செல்வமும் பண்பாடும் சேர்ந்து வளர்ந்து வந்த நகரத்துக்கும் திடீரென்று செல்வம் படைத்துச் செழிப்படைந்த புதுப் பட்டணத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் அவளுக்கு நன்கு புலனாகி வந்தன. காஞ்சியில் செல்வத்திற் சிறந்த சீமான்களும் சீமாட்டிகளும் ஆடை ஆபரணங்கள் பூணுவதில் அடக்கம் காட்டுவார்கள். அவர்களுடைய அலங்காரங்களில் கலை உணர்ச்சியே பிரதானமாயிருக்கும். இந்த நகரிலோ எங்கே பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் படாடோபமும் பகட்டும் தாண்டவமாடின.

காஞ்சி வீதிகளில் தெரிந்தவர்கள் சந்தித்தால் ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் முகமன் கூறிக் கொண்டார்கள். வாதாபியின் தெருக்களிலோ, தெரிந்தவர்கள் சந்திக்கும் போது இடி முழக்க ஒலியில் சிரித்து ஆர்ப்பரித்தார்கள். காஞ்சியில் எஜமானர்கள் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடும் போது கூட அன்புடனும், ஆதரவுடனும் பேசினார்கள். வாதாபியில் எஜமானர்கள் வேலைக்காரர்களிடம் பேசும் போது கடுமையான மொழிகளையும் துர்வசனங்களையும் கையாண்டார்கள். இவற்றையெல்லாம் தவிரக் காஞ்சிக்கும் வாதாபிக்கும் உள்ள இன்னும் ஒரு வித்தியாசத்தையும் சிவகாமி கவனித்தாள்.

காஞ்சி வீதிகளில் புத்த பிக்ஷுக்கள், திகம்பர சமணர்கள், வைதிக சந்நியாசிகள், ஆண்டிகள், கபாலிகர்கள், வெறும் பிச்சைக்காரர்கள் ஆகியவர்கள் மொய்த்துக் கொண்டு வீதியில் போவோர் வருவோரின் பிராணனை வாங்குவது வழக்கம். தர்ம புத்தியுள்ள தனவான்கள் அதிகம் உள்ள இடத்திலே யாசகர் கூட்டமும் அதிகமாகப் பெருகி விடும் போலும்! வாதாபியின் வீதிகளில் அம்மாதிரி பிக்ஷுக்களும் யாசகர்களும் அதிகம் காணப்படவில்லை. தர்மம் கொடுப்பவர்கள் இல்லாதபடியால் யாசகர்களும் இல்லை போலும்! இம்மாதிரியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டும், வாதாபியின் செல்வ வளத்தை வியந்து கொண்டும் சிவிகையில் சென்ற சிவகாமி, ஒரு நாற்சந்தி மூலையில் அதுவரையில் காணாத காட்சி ஒன்றைக் கண்டாள்.

ஸ்திரீகளும் புருஷர்களும் அடங்கிய ஒரு கூட்டம் அங்கே நின்றது. அவர்கள் ஒவ்வொருவருடைய கரங்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அவ்விதம் பந்தமுற்ற கைகளுடன் தலைகுனிந்து நின்ற கும்பலைச் சுற்றி யமகிங்கரர்களைப் போன்ற முரடர்கள் சிலர் கையில் பெரிய பெரிய சாட்டைகளுடன் நின்றார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும்போதே சிவகாமியின் உள்ளம் பதைத்தது. கைகள் கட்டுப்பட்டு நின்ற ஸ்திரீ புருஷர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தோன்றியபடியால் அவளுடைய மனவேதனை பன்மடங்காயிற்று.

பல்லக்கை நிறுத்தி அவர்கள் அருகில் சென்று விசாரிக்கலாமா என்று சிவகாமி ஒருகணம் நினைத்தாள். ஆனால், அதற்கு வேண்டிய மனோதைரியம் அவளுக்கு ஏற்படவில்லை; சிவிகை மேலே சென்றது. நாற்சந்தி முனையிலிருந்து சிவிகை கொஞ்ச தூரம் போன பிறகு சிவகாமி தடுக்க முடியாத ஆவலினால் திரும்பிப் பார்த்தாள். அந்தக் கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் கட்டப்பட்ட கைகளினால் தன்னுடைய சிவிகையைச் சுட்டிக்காட்டுவது போலவும், கண்ணீர் ததும்பிய கண்களால் தான் போகும் திசையை உற்றுப் பார்ப்பது போலவும் அவளுக்குத் தோன்றியது. உடனே சிவகாமி தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். பல்லக்குச் சுமந்தவர்களை நேரே வீட்டுக்குப் போகும்படி கட்டளையிட்டாள்.

வீடு போய்ச் சேர்ந்ததும் சிவகாமி தான் கண்ட காட்சியைத் தாதியிடம் சொல்லி, அதைப் பற்றி ஏதேனும் தெரியுமா என்று கேட்டாள். தாதி தனக்குத் தெரியாது என்று சொல்லவே, போய் விசாரித்துக் கொண்டு வரும்படி பணித்தாள். அவ்விதமே அந்தத் தாதி வௌியே போய் விசாரித்துக் கொண்டு வந்தாள். அவள் கூறிய விவரம் சிவகாமிக்குச் சொல்ல முடியாத பயங்கரத்தையும் மன வேதனையையும் அளித்தது. தாதி விசாரித்து வந்து கூறிய விவரம் இதுதான். பல்லவ நாட்டிலிருந்து புலிகேசிச் சக்கரவர்த்தி அநேக ஸ்திரீ, புருஷர்களைச் சிறைப் பிடித்துக் கொண்டு வந்திருந்தார். அவர்களில் சிலர் சிறையிலிருந்து தப்பிப் போக முயன்றார்கள். சிலர் அடிமைத் தொண்டு செய்ய மறுத்தார்கள். சிலர் உணவு உட்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தார்கள்; இத்தகைய குற்றங்களைச் செய்த கலகக்காரர்களை வாதாபி நகரின் நாற்சந்திகளில் நிறுத்திச் சாட்டையினால் அடிக்கும்படியாகப் புலிகேசிச் சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். இந்தச் சாட்டையடி உற்சவம் இன்றைக்குத்தான் ஆரம்பமாகியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதம் வரையில் நடக்கும். தினம் சாயங்கால வேளையில் வீதிகளில் நடக்கும் வாதாபி நகரவாசிகள் அந்த வேடிக்கையைப் பார்த்துக் களிப்பார்கள்.

சிவகாமி அன்றிரவு ஒரு கணமும் கண்ணுறங்கவில்லை. வேதனையும் துன்பமும் நிறைந்த அவளுடைய வாழ்க்கையில் இதுவரை என்றும் அனுபவித்தறியாத வேதனையை அவள் அனுபவித்தாள். சுளீர் சுளீர் என்று அவளுடைய உடம்பில் சாட்டையடி விழுவது போன்ற உணர்ச்சி அவளுக்கு அடிக்கடி உண்டாயிற்று. பொன்முகலியாற்றங்கரையில் அவள் புலிகேசியை வேண்டித் தன்னுடன் சிறைப்பட்டிருந்த மாதர்களை விடுதலை செய்தது அவளுக்கு நினைவு வந்தது. அன்று விடுதலையானவர்கள் சளுக்கர் சைனியத்தினால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர்தான் போலும். இன்னும் எத்தனையோ பேரை முன்னால் சென்ற பெருஞ்சைனியம் சிறைப் பிடித்துக் கொண்டு போயிருக்க வேண்டும்.

இன்று பகலில் சக்கரவர்த்தி வந்து தன்னுடன் பேசியதன் கருத்தும், தனக்கு வாதாபி நகரைச் சுற்றிப் பார்க்க அனுமதியளித்ததன் கருத்தும் இப்போது சிவகாமிக்குப் புதிய பொருளில் விளங்க ஆரம்பித்தன. சிவகாமியைத் தன்னுடைய காலிலே விழுந்து கெஞ்சும்படி செய்வதற்காக இம்மாதிரியெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறான் அந்தக் கிராதகன். ஆனால், அவனுடைய எண்ணம் நிறைவேறப் போவதில்லை. யார் எப்படிப் போனாலும் சரி; இனித் தான் புலிகேசியின் காலில் விழுந்து கெஞ்சப் போவதில்லை. ஒருநாளும் முடியாது! இப்படியா வஞ்சம் தீர்க்க நினைத்திருக்கிறான், அந்தப் பாவி! "எதற்காக வாதாபி நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்?" என்று எண்ணி எண்ணிச் சிவகாமி தவித்தாள். இரவெல்லாம் தூக்கமின்றித் துடித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் பொழுது விடிந்தது; சூரியோதயம் ஆயிற்று. வானவௌியில் சூரியன் மேலே வர வர, சிவகாமியின் இதயத் துடிப்பு அதிகமாயிற்று. சூரியன் மேற்கு நோக்கிப் பிரயாணம் செய்யச் செய்ய அவளுடைய உள்ளமும் உடம்பும் பதறத் தொடங்கின. இத்தனை நேரம் அந்தப் பல்லவ நாட்டு ஸ்திரீகளும் புருஷர்களும் நாற்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருப்பார்கள்! அவர்களுடைய கைகள் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். இத்தனை நேரம் யமகிங்கரர்கள் போன்ற காவலர்கள் கையில் பெரிய சாட்டைகளுடன் வந்து நிற்பார்கள். இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் சாட்டையினால் அடிக்கத் தொடங்கி விடுவார்கள். சிவகாமி முதல் நாள் இரவு கொண்டிருந்த மன உறுதியெல்லாம் பறந்து போயிற்று. பரபரப்புடன் பல்லக்குக் கொண்டு வரும்படி வாசற் காவலர்களிடம் கட்டளையிட்டாள். பல்லக்கு வந்ததும் அதில் விரைந்து ஏறிக் கொண்டு நேற்றுப் பார்த்த நாற்சந்தி முனைக்குப் போகும்படி சொன்னாள்.

நாற்சந்தியின் சமீபத்தில் இன்று சிவகாமியின் சிவிகை போய்ச் சேர்ந்த போது, அங்கே கரங்கள் கட்டப்பட்டு நின்றவர்களிடம் நேற்றுக் காணாத கிளர்ச்சியை இன்று கண்டாள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஏதோ பேசிக் கொண்டார்கள். அவர்களில் பலர் சிவகாமியை நோக்கி, "அம்மா! தாயே! எங்களைக் காப்பாற்று!" என்று கூச்சலிட்டார்கள். எதிர்பாராத இந்த அபயக் கூக்குரலினால் சிவகாமியின் உள்ளம் பெருங்குழப்பமடைந்தது. 'ஐயோ! இவர்களைக் காப்பாற்றும் சக்தி உண்மையில் நம்மிடம் இருக்கலாகாதா?' என்ற ஏக்கம் ஒரு பக்கம் உண்டாயிற்று. பல்லக்கைத் தரையில் இறக்கச் சொல்லித் தானும் இறங்கிக் கூட்டத்தை அணுகினாள். மீண்டும், "அம்மா! தாயே! எங்களைக் காப்பாற்று!" என்ற கூக்குரல்கள் அக்கூட்டத்திலிருந்து எழுந்தன.

சிவகாமி அவர்கள் அருகில் இன்னும் நெருங்கிச் சென்றாள். அவர்களில் சிலருடைய உடம்பில் முன்னமே சாட்டையடி பட்ட காயங்களைக் கண்டாள். அந்தக் காயங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பதையும் தரையில் பல இடங்களில் இரத்தம் சொட்டிக் கறையாகியிருப்பதையும் பார்த்தாள். சிவகாமியின் தலை சுற்றியது; வயிறு குமட்டியது; மயக்கம் வந்தது. அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு ஒருவாறு சித்தத் தௌிவை நிலைநாட்டிக் கொண்டாள். கூட்டத்தில் அவளுக்குச் சமீபத்தில் நின்ற ஸ்திரீயைப் பார்த்து, "அம்மா! உங்களைக் காப்பாற்றும்படி என்னை வேண்டிக் கொள்கிறீர்களே, அது ஏன்? உங்களைப் போல் நானும் ஓர் அபலைப் பெண்தானே! சளுக்கரால் சிறைப் பிடித்துக் கொண்டு வரப்பட்டவள்தானே? உங்களைக் காப்பாற்றும் சக்தி எனக்கு ஏது?" என்றாள். "எங்களைக் காப்பாற்றும் சக்தி உனக்கு உண்டு, தாயே! அதோ அந்த ராக்ஷதனைக் கேள்; அவன்தான் அவ்விதம் சொன்னான்" என்றாள் அந்த ஸ்திரீ.

அவள் சுட்டிக்காட்டிய ராக்ஷத வடிவங்கொண்ட வீரர் தலைவனைச் சிவகாமி அணுகினாள். வாதாபிவாசிகள் பேசிய கலப்புப் பாஷையில், "ஐயா! இவர்களை ஏன் இப்படிச் சாட்டையால் அடித்துச் சித்திரவதை செய்கிறீர்கள்? வேண்டாம்! இந்தப் படுபாதகச் செயலை நிறுத்துங்கள்!" என்றாள். அந்த வீரர் தலைவன் கலகலவென்று சிரித்தான். என்னவோ யோசிப்பவன் போல் சற்று இருந்து விட்டுப் பிறகு, "நாங்கள் என்ன செய்வோம், தாயே! சக்கரவர்த்தியின் ஆக்ஞை!" என்றான். "அப்படியானால் கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள். நான் உங்கள் சக்கரவர்த்தியிடம் சென்று வேண்டிக் கொண்டு பார்க்கிறேன். அதுவரையில்..." என்று சிவகாமி சொல்வதற்குள், அவ்வீரன், "வேண்டாம், அம்மா! சக்கரவர்த்தியிடம் நீ போகவே வேண்டாம். இவர்களைச் சாட்டையால் அடிப்பதை நிறுத்தும் அதிகாரம் உன்னிடமே இருக்கிறது. நீ சொன்னால் நிறுத்தி விடுகிறோம்; ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு!" என்றான்.

"அந்த வீரன் முதலில் கூறிய வார்த்தைகளை வியப்போடும் உவகையோடும் கேட்ட சிவகாமி, "நிபந்தனை" என்றதும் திடுக்கிட்டாள். இதில் ஏதோ வஞ்சம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், "என்ன நிபந்தனை?" என்றாள். "நீ இந்த இடத்தில், எங்கள் எல்லாருடைய முன்னிலையிலும் நடனம் ஆட வேண்டும். நீ ஆடும் வரையில் நாங்கள் இவர்களை அடிக்காமல் இருக்கிறோம். சூரியன் அஸ்தமிக்கும் வரையில் நீ ஆடிக் கொண்டிருந்தால், நாங்களும் பார்த்துக் கொண்டேயிருப்போம். சூரியன் அஸ்தமித்ததும் நீ வீட்டுக்குத் திரும்பலாம். நாங்கள் இவர்களைச் சிறையிலே கொண்டு போய்ச் சேர்ப்போம். நாளைக்கும் இவர்கள் அடிபடக் கூடாது என்று நீ கருதினால் நாளைக்கும் இம்மாதிரியே நீ இவ்விடம் வந்து நடனம் ஆடலாம்!" என்றான் அந்தக் கிராதகன்.

சிவகாமியின் உள்ளத்திலிருந்து எரிமலை, தீக்குழம்பையும் கரும்புகையையும் கக்கத் தொடங்கியது. ஆஹா! இதுவா அந்தப் பாதகனுடைய எண்ணம்? இப்படியா என் மீது பழிவாங்கப் பார்க்கிறான்? இப்படியா என் அற்புதக் கலையை இழிவுபடுத்த நினைக்கிறான்? புத்த பிக்ஷு வேஷத்தில் வந்து என் கலையைக் கண்டு மெய்ம்மறந்து பரவசமடைந்ததாக நடித்ததெல்லாம் இதற்காகத்தானா? ஆனால் அந்த வஞ்சக நெஞ்சனுடைய உத்தேசம் ஒருநாளும் நிறைவேறப் போவதில்லை. யார் எப்படிப் போனாலும், நான் வாதாபியின் நாற்சந்தியில் நின்று நடனம் ஆடப் போவதில்லை, ஒரு நாளுமில்லை.

முகத்தில் குரோதம் பொங்க, கண்களில் தீப்பொறி பறக்க நின்ற இடத்திலே ஸ்தம்பமாய் நின்று யோசித்துக் கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்து மேற்படி வீரர் தலைவன், "என்ன முடிவு சொல்கிறாய், தாயே! நடனம் ஆடப் போகிறாயா? அல்லது இவர்களைத் தங்கள் காரியத்தைப் பார்க்கச் சொல்லட்டுமா?" என்று கேட்டான். அந்தக் கேள்வி சிவகாமியின் செவிகளில் பழுக்கக் காய்ந்த வேல் நுழைவது போல் நுழைந்தது. திடீரென்று பிரக்ஞை பெற்றவள் போல் அவள் துள்ளி நிமிர்ந்து நின்று அவ்வீரனைப் பார்த்தாள். "ஆஹா! இந்த நாற்சந்தியில் நின்று என்னை நடனம் ஆடவா சொல்கிறாய்? மாட்டேன்; ஒருநாளும் மாட்டேன்!" என்றாள். அவ்வீரர் தலைவன் முகத்திலே புன்னகையுடன், "சரி உங்கள் வேலையை நீங்கள் நடத்துங்கள்!" என்று கையில் சாட்டையுடன் நின்றவர்களைப் பார்த்துக் கட்டளையிட்டான்.
 
நாற்பத்தெட்டாம் அத்தியாயம்

நாற்சந்தி நடனம்

கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால், அவர் கருணாமூர்த்தி என்பதும் உண்மையானால், உலகத்தில் ஏன் இத்தனை துன்பங்களை வைத்திருக்கிறார்? மனித வர்க்கம் ஏன் இத்தனை கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது? இந்தக் கேள்விகள் ஆதிகாலந் தொட்டு கேட்கப்பட்டு வருகின்றன. உள்ளதில் உண்மை ஒளிகொண்ட மகான்கள் மேற்படி கேள்விகளுக்கு விடையும் சொல்லி வந்திருக்கிறார்கள். மனிதர்கள் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல. சூரியனை மேகம் மூடுவது போல் நமது அறிவை மூடியிருக்கும் மாயை காரணமாகச் சில விஷயங்களைத் துன்பம் என்று நாம் கருதுகிறோம். உண்மையில் துன்பமும் ஒருவித இன்பமேயாகும். "அன்பு வடிவாகி நிற்பள் துன்பமெலாம் அவள் இழைப்பள் ஆக்கநீக்கம் யாவும் அவள் செய்கை - அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை!" என்று பராசக்தியைக் குறித்து இந்தக் காலத்து மகாகவியான ஸரீ சுப்பிரமணிய பாரதியார் பாடியிருக்கிறார்.

ஆனால், அன்பு வடிவான ஜகன்மாதா ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கையான அன்னை பராசக்தி ஏன் தன் மக்களுக்குத் துன்பம் இழைக்கிறாள்; ஏன் கஷ்டங்களை அளிக்கிறாள்? துன்பம் என்றும், கஷ்டம் என்றும் நாம் எண்ணிக் கொள்கிறோமே தவிர, உண்மையில் அவை துன்பங்களுமல்ல; கஷ்டங்களுமல்ல. அறிவுத் தௌிவோடு பார்த்தால், நாம் துன்பம் என்று நினைத்ததும் இன்பந்தான்; கஷ்டம் என்று கருதியதும் சுகந்தான். இந்தத் தத்துவத்தை நம்புவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. "துன்பத்திலே இன்பமாவது, கஷ்டத்திலே சுகமாவது?" என்ற அவநம்பிக்கை உண்டாகத்தான் செய்யும். ஆயினும் நமது வாழ்க்கை அனுபவத்திலேயே சில விஷயங்களை ஆலோசித்துப் பார்த்தால் மேற்படி தத்துவத்தில் உண்மை உண்டு என்று அறியலாம்.

சோக ரஸமுள்ள கதைகள், காவியங்களைப் படிக்கிறோம். சோக மயமான நாடகங்களைப் பார்க்கிறோம்; சோகத்தை ஊட்டும் கீதங்களைப் பாடுகிறோம், கேட்கிறோம். இப்படியெல்லாம் துன்பத்தை நாமாகத்தானே தேடி அனுபவிக்கிறோம்? எதற்காக? அந்தத் துன்பங்களிலேயெல்லாம் உள்ளுக்குள்ளே இன்பம் பொதிந்திருப்பதனாலேதான். நமது வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அனுபவிக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. 'இது சகிக்க முடியாத கஷ்டம்' என்று தோன்றுகிறது. 'இந்த வாழ்க்கையே வேண்டாம்' என்று தீர்மானிக்கிறோம். எல்லாக் கஷ்டங்களையும் எப்படியோ சகித்துக் கொள்கிறோம். அப்படி நாம் அனுபவித்த சகிக்க முடியாத கஷ்டங்களைச் சில வருஷ காலம் கழித்து நினைத்துப் பார்க்கும் போது, ஒருவகை அபூர்வ இன்பம் ஏற்படுகிறது. பழைய கஷ்டங்களை நினைத்துப் பார்ப்பதிலும் அவற்றைக் குறித்துப் பேசுவதிலும் சந்தோஷமே அடைகிறோம்.

சீதாதேவி வனவாசத்தின் போது அனுபவித்த துன்பங்களுக்கு எல்லையேயில்லை. அவ்வளவு துன்பங்களைப் பெண்ணாய்ப் பிறந்த யாரும் அனுபவித்திருக்க முடியாது. ஆயினும் அயோத்தி அரண்மனையில் ஸரீ ராமபிரானுடைய பட்டமகிஷியாகச் சீதை வாழ்ந்த காலத்திலும் அதிலும் கர்ப்பம் தரித்திருந்த சமயத்தில், "உனக்கு எதிலாவது ஆசை உண்டா?" என்று ராமன் கேட்ட போது, சீதை என்ன சொன்னாள்? "மறுபடியும் காட்டுக்குப் போய் அங்கே நான் கஷ்டப்பட்ட இடங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது!" என்றாள். "துன்பம் என்பது உண்மையில் துன்பம் அல்ல. அவ்விதம் நினைக்கச் செய்வது மாயையின் காரியம். துன்பத்திற்குள்ளேயும் இன்பந்தான் இருக்கிறது!" என்று சொல்லும் வேதாந்த உண்மையை மேற்படி சீதையின் கோரிக்கை நன்கு நிரூபித்திருக்கிறதல்லவா?

சிவகாமியை நாற்சந்தியில் நெருக்கடியான தருணத்தில் நிறுத்தி விட்டு மேற்கண்டவாறு நாம் வேதாந்தம் பேசிக் கொண்டிருப்பது பற்றி வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம். மேலே சிவகாமியின் காரியத்தை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்கண்ட பூர்வ பீடிகை அவசியமாயிருக்கிறது. தமிழகத்து ஸ்திரீ புருஷர்களை சாட்டையடித் துன்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத் தளபதி விரூபாக்ஷன் அவளை நாற்சந்தியில் நடனமாடச் சொன்னான். அவ்விதம் செய்வது தெய்வீகமான, பரதநாட்டியக் கலையையே அவமதிப்பதாகும் என்று எண்ணி முதலில் சிவகாமி, "முடியாது!" என்றாள்.

ஆனால், விரூபாக்ஷனின் கட்டளையின் பேரில், 'சுளீர்' என்ற சாட்டையடிச் சப்தம் கேட்டதும் சிவகாமியின் மனஉறுதி பறந்து போய் விட்டது. மறுகணம் வாதாபி நகரின் நாற்சந்தியில் சிவகாமி தேவி நடனம் ஆடத் தொடங்கினாள், அற்புதமாக ஆடினாள். துன்பத்திலே இன்பம் உண்டு என்னும் வாழ்க்கைத் தத்துவம் நன்கு விளங்கும்படி ஆனந்தமயமாக ஆடினாள். சகிக்க முடியாத கஷ்டத்திலிருந்து எல்லையற்ற ஆனந்தம் பிறக்கும் என்னும் உண்மை நிதரிசனம் ஆகும்படி ஆடினாள். தன்னை மறந்து, வௌி உலகத்தை மறந்து, காலதேச வர்த்தமானங்களை மறந்து ஆடினாள். அந்தக் காட்சியானது அழகுத் தெய்வம் ஆனந்த வெறிகொண்டு ஆடுவது போலிருந்தது.

வாதாபியின் வீதியில் சிவகாமி நடனம் ஆடிய போது வானமும் பூமியும் அசைவற்று நிற்பது போல் தோன்றியது. வீதியிலே போய்க் கொண்டிருந்த வாதாபி நகர மாந்தர்கள் அப்படி அப்படியே நின்று அந்த விந்தையைப் பார்த்தார்கள். பந்தமுற்ற தமிழகத்து ஸ்திரீ புருஷர்கள் அசைவற்று நின்றார்கள்; கையில் சாட்டை பிடித்த கிங்கரர்களும் சும்மா நின்றார்கள். அவர்களுடைய தலைவன் விரூபாக்ஷனும் அசையாமல் நின்றான். அனைவரும் பார்த்த கண்கள் பார்த்த வண்ணம், சிற்ப வடிவங்களைப் போல் நின்றார்கள். காலம் போவதே தெரியாமல் மெய்மறந்து உலகத்தை மறந்து நின்றார்கள்.

சூரியன் மலைவாயிலில் விழுந்தது; கோட்டைக் கதவுகள் சாத்துவதற்குரிய அஸ்தமன பேரிகை முழக்கம் கேட்டது. சிவகாமியின் நடன பரவசத்துக்கு அதனால் பங்கம் ஏற்பட்டது. ஆட்டம் ஆடுவதை நிறுத்திச் சிவகாமி நின்றாள். அத்தனை நேரமும் ஏதோ ஓர் அதிசய ஆனந்த உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று பூவுலகத்துக்கு வந்தவளாய்ச் சுற்று முற்றும் பார்த்தாள். தான் நின்றிருந்த இடத்தையும் இத்தனை நேரம் செய்த காரியத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தாள். அவள் உள்ளத்தில் சகிக்க முடியாத வெட்கத்துக்கும் துன்பத்துக்கும் மத்தியில் இன்பமும் பெருமையும் உதித்தன. கட்டுப்பட்டு நின்ற பல்லவ நாட்டு ஸ்திரீ புருஷர்களைச் சிவகாமி நோக்கினாள். அவர்களுடைய கண்களிலே ததும்பிய நன்றியறிதலைக் கவனித்தாள். யாருடனும் ஒரு வார்த்தையும் பேசாமல் பல்லக்கில் போய் ஏறிக் கொண்டாள்; பல்லக்கு மாளிகையை அடைந்தது.
 
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம்

பிக்ஷுவின் வருகை

அத்தியாயம்

சுக்கில பட்சத்துப் பிரதமையில் சிவகாமி வாதாபி நகரின் நாற்சந்தியில் நடனம் ஆட ஆரம்பித்தாள். சுக்கில பட்சம் முடிந்து கிருஷ்ணபட்சம் வந்தது. கிருஷ்ண பட்சம் முடிவடைந்து மீண்டும் சுக்கில பட்சம் வந்தது. சிவகாமியின் வீதி நடனம் இன்னும் நடந்து கொண்டே இருந்தது. தளபதி விரூபாக்ஷன் நடன அரங்கத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தான். வாதாபி நகரின் முக்கிய நாற்சந்திகளை ஒவ்வொன்றாக அவன் தேர்ந்தெடுத்து அங்கங்கே கொண்டு போய்த் தமிழகத்து ஸ்திரீ புருஷர்களை நிறுத்தினான். சிவகாமியும் அங்கங்கே போய் நடனமாடினாள். அந்தக் காட்சியைப் பார்ப்பதற்குத் தினந்தோறும் மக்கள் பெருந்திரளாகக் கூடினார்கள். ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமியர்களும் திரண்டு வந்தார்கள்.

அரசாங்க அதிகாரிகள் ரதம் ஏறி வந்தார்கள். அந்தப்புரத்து ராணிகளும் சேடிகளும் பல்லக்கில் ஏறி வந்தார்கள். புலிகேசிச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து சிறைப் பிடித்துக் கொண்டு வந்த நாட்டியப் பெண், வாதாபி நகரின் வீதிகளில் நடனமாடுகிறாள் என்னும் செய்தி எங்கெங்கோ பரவலாயிற்று. அதன் பயனாக அக்கம் பக்கத்து ஊர்களிலேயிருந்தும் ஜனங்கள் மேற்படி காட்சியைப் பார்க்க வந்தார்கள். தூர தூரங்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள். தேசமெங்கும் நானா திசைகளிலும் இதைப் பற்றியே பேச்சாயிருந்தது.

சிவகாமியின் விஷயத்தில் வாதாபி ஜனங்களின் மனோபாவம் முதலில் ஒருவிதமாயிருந்தது. போகப் போக அவர்களுடைய மனோபாவம் வேறு விதமாக மாறிக் கொண்டிருந்தது. முதலில் அந்த அற்புத நடனத்தைப் பார்த்துவிட்டு வாதாபி மக்கள் பிரமித்துப் போனார்கள். "இப்படியும் ஒரு அற்புதக் கலை உண்டா?" என்று வியந்தார்கள். ஊரை விட்டு, உற்றாரை விட்டு, சொந்த நாடு, நகரத்தை விட்டுத் தூர தேசம் வந்திருக்கும் அந்தக் கலைச் செல்வியிடம் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் பச்சாத்தாபமும் ஏற்பட்டன. அவர்களில் பலர் சிவகாமியுடன் வார்த்தையாட விரும்பினார்கள். தங்கள் வியப்பையும் மதிப்பையும் அன்பையும் அபிமானத்தையும் வௌியிட விரும்பினார்கள். அவள் வசித்த மாளிகைக்குப் போய் அவளுடன் சிநேகம் செய்து கொள்ள விரும்பினார்கள். தத்தம் வீட்டுக்கு அவளை அழைத்து உபசரிக்கவும் ஆசைப்பட்டார்கள். ஆனால், வாதாபி ஜனங்களின் சிநேகமனப்பான்மை சிவகாமியின் உள்ளத்தில் எவ்வித எதிரொலியையும் உண்டாக்கவில்லை. நடனம் ஆடும் போது ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பின்னர் இயற்கையாகத் தோன்றும் சோர்வும் ஏற்கெனவே குடிகொண்டிருந்த மனக்கசப்பும் சேர்ந்து சிவகாமியை அவர்களுடன் முகங்கொடுத்துப் பேச முடியாமற் செய்து வந்தன.

நாளாக ஆக, "அந்தத் தமிழகத்து நடனப் பெண் ரொம்ப கர்வக்காரி!" என்ற செய்தி நகரமெங்கும் பரவிற்று. ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த அபிமானம், அனுதாபம் எல்லாம் வெறுப்பும் பரிகாசமுமாக மாறலாயின. சிவகாமி வரும்போதும் போகும்போதும், ஜனங்கள் அவளைப் பற்றிப் பரிகாசமாகப் பேசுவதும் கேலி செய்து சிரிப்பதும் அதிகமாகி வந்தன. ஆரம்பத்தில் சிவகாமியின் நடனத்தை "அற்புதம்" என்றும் "தெய்வீகக் கலை" என்றும் சொல்லி வந்த அதே ஜனங்கள் கொஞ்ச நாளைக்கெல்லாம் அதைப் "பைத்தியக்காரியின் கூத்து" என்று சொல்லத் தொடங்கினார்கள்!

சிவகாமி சிவிகையில் போகும் போது சிறுவரும் சிறுமிகளும் ஊளையிட்டுக் கொண்டு பின்னால் ஓடினார்கள். சில சமயம் மண்ணையும் அவள் மீது வீசி எறிந்தார்கள். இதையெல்லாம் சிவகாமி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவளுடைய நெஞ்சில் வைரம் பாய்ந்திருந்தது. அசைக்க முடியாத ஓர் உறுதி அவள் மனத்தில் ஏற்பட்டிருந்தது. புகழையும் இகழையும் பாராட்டையும் நிந்தனையையும் ஒன்றாகக் கருதும் மனோநிலையைச் சிவகாமி அடைந்திருந்தாள். கடவுளின் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டு இந்தப் பூவுலகத்தில் தாமரை இலைத் தண்ணீர் போல் வாழும் முற்றும் உணர்ந்த ஞானியை அவள் ஒத்திருந்தாள்.

சிவகாமி வாதாபி வீதிகளில் நடனம் ஆட ஆரம்பித்து ஏறக்குறைய ஒன்றரை மாத காலம் ஆயிற்று. ஒருநாள் வழக்கம் போல் சிவகாமி நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். சூரியாஸ்தமன பேரிகை முழக்கம் கேட்டது. சிவகாமி ஆட்டத்தை நிறுத்தினாள், சற்று மூச்சு வாங்குவதற்காக நின்றுவிட்டுப் பல்லக்கை நோக்கிச் செல்லத் திரும்பினாள். அவள் திரும்பிய திக்கில் தோன்றிய ஒரு தோற்றம் அவளைச் சிறிது நேரம் மனம் குழம்பித் திகைத்து நிற்கும்படிச் செய்து விட்டது. அந்தத் தோற்றம் நாகநந்தியடிகளின் உருவந்தான்.

வியப்பினால் விரிந்த கண்களில் கோபாக்னியின் பொறி பறக்க, இமையா நாட்டத்துடன் நாகநந்தி தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைச் சிவகாமி பார்த்தாள். நாகநந்தியின் முகபாவம் கணநேரத்தில் மாறியது. கண்களில் கோபாக்னி நிறைந்து பரிதாபம் தோன்றியது. அவளுடைய கண்களின் பார்வையும் முகத்தின் பாவமும் "மன்னித்து விடு" என்று கெஞ்சுவது போன்ற உணர்ச்சியை ஊட்டின. இதனால் மேலும் திகைப்படைந்த சிவகாமி, மெதுவாகச் சுயப்பிரக்ஞை அடைந்து குழப்பத்தைச் சமாளித்துக் கொண்டு தலை குனிந்த வண்ணம் நடந்து சென்று பல்லக்கில் ஏறிக் கொண்டாள்.

பல்லக்கு வழக்கம் போல் மாளிகையை நோக்கிச் சென்றது. ஆனால், சிவகாமியின் உள்ளம், ஜனக் கூட்டத்தின் நடுவே நின்ற நாகநந்தியடிகளிடம் இருந்தது. "இந்த புத்த பிக்ஷு யார்? வேடம் பூண்ட வாதாபிச் சக்கரவர்த்திதானா? உருவம் அப்படியே இருக்கிறது, ஆனால் கண்களின் தோற்றத்திலும் முகபாவத்திலும் எவ்வளவு வித்தியாசம்? உணர்ச்சி என்பதே இல்லாத கல்நெஞ்சைப் பிரதிபலிக்கும் புலிகேசியின் முகத்துக்கும் கனிவும் இரக்கமும் கலைப் பரவசமும் ததும்பிய பிக்ஷுவின் முகத்துக்கும், எவ்வளவு வித்தியாசம்...?" பிக்ஷுவின் தோற்றம் சிவகாமிக்குப் பல்லவ நாட்டையும் அரண்ய வீட்டையும் நினைவூட்டியது. அந்தக் காலத்து வாழ்வெல்லாம் ஞாபகம் வந்தது. உண்மையில் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகவில்லை. ஆனால், எத்தனை யுகம் ஆகிவிட்ட மாதிரி தோன்றுகிறது!

மாளிகையை அடைந்த பிறகும் சிவகாமியின் உள்ளம் வழக்கமான அமைதியை அடையவில்லை. ஏதோ ஓர் ஆவல், அர்த்தமில்லாத பரபரப்பு, அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது. அவளுடைய உள்ளம் அப்படி யாரை எதிர்பார்த்தது? அவளுடைய கண்கள் யாரை எதிர்பார்த்து அவ்விதம் அடிக்கடி வாசற்பக்கம் நோக்கின? நாகநந்தி பிக்ஷுவையா? இரவு ஒரு ஜாமம் முடியும் தறுவாயில் நாகநந்தி அந்த மாளிகைக்குள் நுழைந்த போது, சிவகாமியின் கண்களில் தோன்றிய ஒளியும் அவளுடைய முகபாவமும் அவள் புத்த பிக்ஷுவைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதை உணர்த்தின. நாகநந்தியும் சிவகாமியும் ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பார்த்தார்கள். அவர்களுடைய கண்களின் தீக்ஷண்யம், ஒருவருடைய இருதய அந்தரங்கத்தை இன்னொருவர் ஊடுருவிப் பார்க்க முயன்றதாகத் தெரியப்படுத்தியது. சற்று நேரம் அந்த மாளிகையில் மௌனம் குடிகொண்டிருந்தது. மௌனத்தைக் கலைத்துக் கொண்டு பிக்ஷுவின் தழு தழுத்த குரல், "சிவகாமி! என்னை மன்னித்துவிடு!" என்று கூறியது.
 
ஐம்பதாம் அத்தியாயம்

சிவகாமியின் சபதம்

உட்கார்ந்திருந்த சிவகாமி, சட்டென்று எழுந்து நின்றாள். அவளுடைய உதடுகள் துடித்தன; புருவங்கள் மேலேறின. கண்களிலிருந்து மின்னல் கிளம்பிப் புத்த பிக்ஷுவைத் தாக்கின. "கள்ள பிக்ஷுவே! எதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்கிறீர்? எனக்கு என்ன அபசாரம் செய்தீர்?" என்ற சொற்கள் சீறிக்கொண்டு பாயும் அம்புகளைப் போலச் சிவகாமியின் வாயிலிருந்து புறப்பட்டன. பிக்ஷு திகைத்துப் போனார்; தவறாக எதையோ சொல்லி விட்டோம் என்ற உணர்ச்சியினால் ஏற்பட்ட தடுமாற்றத்துடன், "ஆம், சிவகாமி! நான் உனக்குப் பெருந் தீங்குதான் செய்து விட்டேன். எல்லாம் விவரமாகச் சொல்ல வேண்டும். அவசரமாக இரண்டொரு வார்த்தையில் சொல்லக்கூடிய விஷயம் அல்ல. தயவு செய்து சற்றுச் சாவதானமாக உட்கார்ந்து கேள்!" என்றார்.

"ஐயா! விவரமாக எல்லாம் சொல்லுவதற்கு முன்னால் ஒரு விவரம் சொல்லும். நீர் யார்? கருணாமூர்த்தியான கௌதம புத்தரின் சங்கத்தைச் சேர்ந்து சர்வ பரித்யாகம் செய்த துறவியா? அல்லது வஞ்சக நோக்கத்துடன் காவித் துணி வேஷம் தரித்த சளுக்க குலத்துச் சக்கரவர்த்தியா? சிற்ப சித்திரக் கலைகளிலும் பரதநாட்டியக் கலையிலும் உண்மை அபிமானங் கொண்ட பரதேசியா? அல்லது ஓர் ஏழைச் சிற்பி மகளைக் கெடுப்பதற்காகப் பிக்ஷு வேஷம் பூண்ட இராவண சந்நியாசியா? நீர் யார்? நாகநந்தியா? புலிகேசியா?" இவ்விதம் கேட்டுச் சிவகாமி நிறுத்தியபோது, வானமுகட்டில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரையில் அதிர்ந்து நடுங்கும்படியாக மின்னல் மின்னி இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது.

இவ்வளவு இடி மின்னல்களும் நாகநந்தியின் முகபாவத்தில் எவ்வித மாறுதலையும் உண்டு பண்ணவில்லை. அவர் அதிசயமான அமைதியுடன், "அம்மா சிவகாமி! உன்னுடைய சந்தேகங்களுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. ஆனால், உண்மையிலேயே நான் உலகப் பற்றறுத்த புத்த பிக்ஷுதான். உன்னுடைய பரத நாட்டியக்கலைக்கு என் உள்ளத்தைப் பறி கொடுத்தவன்தான். விலங்கு இனத்தைச் சேர்ந்த மக்களின் முன்னால் தெரு வீதிகளில் உன்னை நடனமாடச் செய்த நிர்மூடப் புலிகேசி நான் அல்ல. பூர்வஜென்மத்தில் செய்த பாவத்தினால் அவனோடு உடன் பிறந்த துரதிருஷ்டசாலி நான். முன்னொரு சமயம், இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் என் தம்பி புலிகேசியைக் கொலைகாரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவனுடைய உடையை நான் அணிந்து நடித்தேன். மறுபடியும் இருபத்தைந்து வருஷங்களுக்குப் பின் உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவ்விதம் செய்தேன். ஆம், சிவகாமி காஞ்சிக் கோட்டைக்கு வௌியே காட்டின் நடுவே எனக்கு முன்னால் நீ கைகூப்பி வணங்கி, 'என் தந்தையைக் காப்பாற்றுங்கள்!' என்று வேண்டிக் கொண்டாய். அதை நிறைவேற்றுவதற்காகத் துறவியின் காஷாயத்தைக் களைந்து விட்டுச் சக்கரவர்த்தியின் ஆடைகளை அணிந்து கொண்டேன்...."

சிவகாமி பரபரப்புடன் பிக்ஷுவின் அருகில் ஓடிவந்தாள். மண்டியிட்டுக் கை கூப்பிய வண்ணம், "சுவாமி! இந்த அபலைப் பெண்ணின் ஆத்திர மொழிகளை மன்னித்து விடுங்கள். என் தந்தையைத் தாங்கள் காப்பாற்றினீர்களா? அவர் உயிரோடிருக்கிறாரா? எங்கேயிருக்கிறார்? எப்படியிருக்கிறார்?" என்று அலறினாள். "அம்மா! உன்னுடைய தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன். உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து கேட்டால் விவரங்களும் சொல்கிறேன்" என்றார் பிக்ஷு.

சிவகாமி உட்கார்ந்தாள்; புலிகேசியைப் போல் வேஷம் தரித்துச் சென்று, கையும் காலும் வெட்டப்படுவதற்கிருந்த ஆயனரைக் காப்பாற்றியதையும், ஆனால், அவர் தவறி மலை மீதிலிருந்து கீழே விழுந்ததையும், அதனால் கால் முறிந்ததையும், உணர்விழந்த நிலையில் அரண்ய வீட்டுக்குக் கொண்டுபோய் அங்கு அவருக்கு உணர்வு வந்த பிறகு விடைபெற்று வந்ததையும், புத்த பிக்ஷு சொல்லி வந்தபோது சிவகாமிக்கு அவரிடம் எல்லையற்ற நன்றி உணர்ச்சி உண்டாயிற்று. தான் அவரைக் குறித்துச் சந்தேகித்ததெல்லாம் எவ்வளவு தவறு என்று அடிக்கடி நினைத்துப் பச்சாத்தாபப்பட்டாள். நீர் ததும்பிய கண்களினால் பிக்ஷுவைப் பார்த்துச் சொன்னாள்; "சுவாமி! என் அருமைத் தந்தையைக் கொடிய தண்டனையிலிருந்து மீட்டு அவருடைய உயிரையும் காப்பாற்றிய தங்களுக்கு என் ஆயுள் உள்ள வரையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அப்படியிருக்கும் போது தாங்கள் இங்கு வந்ததும் என்னிடம் மன்னிப்புக் கேட்டீர்களே, அது ஏன்? தங்களை அநியாயமாகச் சந்தேகித்ததற்காக நான் அல்லவா தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! சளுக்க சக்கரவர்த்தியும் தாங்களும் ஒருவரேதான் என்று தவறாக எண்ணியதனால், தங்களைப் பற்றி அநியாயமாகச் சந்தேகப்பட்டேன். என்னை இந்த வாதாபிக்கு அழைத்து வந்தவரும் நாற்சந்தியில் நடனமாடச் செய்தவரும் தாங்கள்தான் என்று எண்ணிக் கோபம் கொண்டிருந்தேன். சுவாமி! என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று சிவகாமி கூறியபோது, அவளுடைய கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகியது.

"சிவகாமி! நான் உன்னை மன்னிக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையிலே நீ தான் என்னை மன்னிக்க வேண்டும். உனக்கு நான் பெரிய துரோகம் செய்திருக்கிறேன். இன்று இந்தத் தூரதேசத்தில் நீ தன்னந்தனியாகச் சிறைப்பட்டிருப்பதற்குக் காரணம் நான்தான்! என்னை மன்னித்துவிடு!" இவ்விதம் புத்த பிக்ஷு உணர்ச்சியினால் கம்மிய குரலில் கூறிய போது, சிவகாமி தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நாகநந்தியின் முகத்தை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

"ஆம், சிவகாமி! நான் சொல்வது சத்தியம், வாதாபிச் சைனியம் காஞ்சியின் மீது படையெடுத்து வருவதற்கே காரணமாயிருந்தவன் நான்தான். என் சகோதரன் புலிகேசிக்கு முதலில் அந்த உத்தேசம் இருக்கவில்லை. வாதாபிச் சைனியம் முழுவதும் வேங்கியை நோக்கிப் போவதாயிருந்தது. வாதாபிச் சைனியத்தை இரண்டாகப் பிரித்துப் புலிகேசியைக் காஞ்சிக்கு விரைந்து வரும்படி கூறியவன் நான்தான். வேங்கி ராஜ்யத்தின் மீது படையெடுக்கத் தம்பி விஷ்ணுவர்த்தனனை அனுப்பினால் போதும் என்றும் எழுதினேன்... அதன் பலன் என்ன விபரீதமாயிற்று, தெரியுமா? விஷ்ணுவர்த்தனனுடைய பத்தினி இன்று விதவையாகியிருக்கிறாள். அவளையும், அவளுடைய சின்னஞ் சிறு புதல்வனையும் இன்றைய தினந்தான் இந்நகரில் பத்திரமாய்க் கொண்டு வந்து சேர்த்தேன்..." "சுவாமி! இத்தனை நாளும் இந்த நகரில் தாங்கள் இருக்கவில்லையா?" என்று சிவகாமி கேட்டாள். "இல்லை, சிவகாமி! இருந்திருந்தால் உன்னுடைய தெய்வீக நடனக்கலை இப்படி சந்தி சிரிப்பதற்கு விட்டிருப்பேனா? கலை உணர்ச்சியில்லாத நிர்மூடப் புலிகேசி இப்படிச் செய்துவிட்டான்! அவன் இவ்விதம் செய்வான் என்று தெரிந்திருந்தால் வடபெண்ணைக் கரையில் உன்னை அவனிடம் ஒப்படைத்திருக்க மாட்டேன்.....

பிக்ஷு வடபெண்ணைக் கரையைப் பற்றிக் கூறியதும் அன்றொரு நாள் இரவு, சிவகாமி கண்ட கனவுத் தோற்றம் அவள் நினைவுக்கு வந்தது. "வடபெண்ணைக் கரையில் என்னை விட்டு விட்டுப் போனீர்களா? அது எப்படி? உங்களைக் காஞ்சிக்குப் பக்கத்தில் அல்லவா நான் பார்த்து வரம் கேட்டேன்?" என்றாள். "சக்கரவர்த்தி வேஷம் பூண்டு உன் தந்தையைக் காப்பாற்றிய பின் உடனே என் வேஷத்தைக் கலைத்துவிடவில்லை, சிவகாமி! அதே வேஷத்தில் மகேந்திர பல்லவனுடன் போரிட்டேன். மணி மங்கலத்தில் அவனை முறியடித்துவிட்டு உன்னைத் தொடர்ந்து வந்தேன். பொன்முகலி நதிக் கரையில் நீ என்னைப் பார்த்து, சிறைப்பட்ட பல்லவ நாட்டுப் பெண்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்று வரங்கேட்டாய். வாதாபிக்கு நீ மனத் திருப்தியுடன் வருவதாய் இருந்தால் அவர்களை விடுதலை செய்வதாகச் சொன்னேன்; நீயும் சம்மதித்தாய். அப்போது உன்னையும் நான் விடுதலை செய்து உன் தந்தையிடம் சேர்ப்பித்திருக்கலாம். அப்படி நான் செய்யவில்லை; உன்னை வஞ்சித்து வாதாபிக்குக் கொண்டு வந்தேன்!... ஆனால், நான் இல்லாத சமயத்தில் இந்த மூடன் புலிகேசி இப்படி உன்னை அலங்கோலப்படுத்துவான் என்று மட்டும் நினைக்கவேயில்லை. உன்னிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது ஏன் என்று தெரிகிறதா, சிவகாமி!" என்றார் பிக்ஷு.

"தெரிகிறது, சுவாமி! இதற்குமுன் எனக்குக் குழப்பம் அளித்துக் கொண்டிருந்த இன்னும் பல விஷயங்களும் விளங்குகின்றன. ஆனால், ஒரே ஒரு சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை. எதற்காக இவ்வளவெல்லாம் நீங்கள் செய்தீர்கள்? எதற்காக இவ்வளவு சூழ்ச்சிகளும் பிரயத்தனங்களும் செய்து, இந்த அபலைப் பெண்ணை இங்கே கொண்டு வந்து சேர்த்தீர்கள்? உலகத்தைத் துறந்து பிக்ரு விரதம் பூண்ட தங்களுக்கு இந்த ஏழைப் பெண்ணால் என்ன உபயோகம்?... கால் ஒடிந்து ஆதரவற்றுக்கிடக்கும் என் தந்தையிடமிருந்து என்னைப் பிரித்துக் கொண்டு வந்ததில் தாங்கள் என்ன லாபத்தைக் கண்டீர்கள்? என்ன பலனை உத்தேசித்து என்னை இங்கே சிறைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்?...."

"சிவகாமி! சொல்கிறேன், கேள்! என் சொற்படி காலமல்லாத காலத்தில் காஞ்சி மேல் படையெடுத்த காரணத்தினால் வாதாபியின் வீர சைனியத்தில் பாதிக்கு மேல் அழிந்துவிட்டது. வேங்கியை வென்று சென்ற வருஷம் மகுடம் சூடிய விஷ்ணுவர்த்தனன் அந்த வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள முடியாமல் மாண்டான். இந்த விபரீதங்களுக்கெல்லாம் காரணமானவள் நீதான்! உன்னை முன்னிட்டுதான் இதையெல்லாம் நான் செய்தேன், ஏன் என்று சொல்லுகிறேன், கேள்!"

இந்தப் பூர்வ பீடிகையுடன் நாகநந்தி பிக்ஷு தமது கதையைக் கூறத் தொடங்கினார். அஜந்தா குகைகளில் தாம் கழித்த இளம் பிராய வாழ்க்கையைப் பற்றிக் கூறினார். அஜந்தா குகைச் சுவரில் தாம் பார்த்த பரதநாட்டியப் பெண் சித்திரத்தைக் குறித்தும், அதைப்பற்றித் தாம் கண்ட மனோராஜ்யக் கனவுகளைக் குறித்தும் சொன்னார். தென்னாட்டின் நிலைமை எப்படியிருக்கிறதென்று அறிந்து கொள்ளத் தாம் யாத்திரை வந்தது பற்றியும், அப்போது ஆயனர் வீட்டில் அஜந்தா சித்திர கன்னிகை உயிர் பெற்று வந்து நடனமாடிய காட்சியைக் கண்டு பிரமித்தது பற்றியும் உணர்ச்சி ததும்ப விவரித்தார்.

"சிவகாமி! அன்று முதல் நான் ஒரு புது மனிதன் ஆனேன். சளுக்க சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தைப் பற்றி அதுவரை நான் கட்டிக் கொண்டிருந்த ஆகாசக் கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. இந்தப் பரந்த பரதகண்டம் முழுவதையும் புத்த சங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்றும், அப்பேர்ப்பட்ட மகா புத்த சங்கத்துக்கு நான் தலைமைப் பிக்ஷு ஆகவேண்டும் என்றும் நான் கொண்டிருந்த மனோரதங்களும் மறைந்தன. 'சாம்ராஜ்யங்களும் புத்த சங்கங்களும் எப்படியாவது போகட்டும். உன்னை நடனமாடச் சொல்லிப் பார்த்துக் கொண்டே என் வாழ்நாளைக் கழித்து விடுவது' என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அதற்குப் பிறகு உன்னை எப்படி இந்த வாதாபி நகருக்குக் கொண்டு சேர்ப்பது என்பது ஒன்றே என் மனக்கவலை ஆயிற்று. அதற்காக என்னவெல்லாமோ சூழ்ச்சிகள் செய்தேன்; எத்தனையோ உபாயங்களைக் கையாண்டேன்...."

இப்படிப் பிக்ஷு சொல்லி வந்தபோது, சிவகாமியின் உள்ளத்தில் ஏற்கெனவே குடிகொண்டிருந்த பெருமிதமான கர்வமும் பரிதாப உணர்ச்சியும் சேர்ந்தாற்போல் பொங்கிக் கொண்டு வந்தன. 'ஆகா! இந்த ஏழைச் சிற்பியின் மகள் காரணமாக இரண்டு பெரிய சாம்ராஜ்யங்கள் சண்டைபோட நேர்ந்ததல்லவா?' என்ற பெருமித கர்வத்தை அடுத்து, 'ஐயோ! காஞ்சியிலிருந்து வாதாபி வரும்போது நான் பார்த்த அத்தனை கொடுமைகளும் என் காரணமாக ஏற்பட்டனவா?' என்ற பரிதாப உணர்ச்சியும் மேலிட்டு வந்தது. "சிவகாமி! உன்னுடைய கலையின் மேல் நான் கொண்ட மோகத்தினால் ஒரு பெரிய யுத்தத்தையே உண்டு பண்ணினேன். பயங்காளியும், கோழையுமான அந்த அற்பன் மாமல்லனிடமிருந்து உன்னைக் காப்பாற்ற இவ்வளவு பிரம்மப் பிரயத்தனங்களும் செய்தேன். ஆனால் அவ்வளவும், இப்போது நிஷ்பலனாயின. நான் இல்லாத சமயத்தில் உன்னைத் தெரு வீதிகளின் நாற்சந்தியில் ஆடச்செய்து, உன்னையும் உன் கலையையும் நிர்மூடன் புலிகேசி கேவலப்படுத்திவிட்டான். சிவகாமி! என்னை மன்னித்துவிடு, நீ பட்ட அவமானத்திற்கும் நீ அடைந்த துன்பத்திற்கும் பரிகாரம் செய்து விடுகிறேன். உன்னை உன் தந்தை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட ஏற்பாடு செய்கிறேன். சக்கரவர்த்தியிடம் போராடி இதற்கு அனுமதியும் பெற்று வந்துவிட்டேன்."

இதைக் கேட்டதும் சிவகாமி நியாயமாகத் துள்ளிக் குதித்துக் குதூகலமடைந்திருக்க வேண்டுமல்லவா? விதி வசத்தினாலோ அல்லது விசித்திரக் கோணல்கள் நிறைந்த பெண் மனோபாவத்தினாலோ, சிவகாமி அவ்விதம் மகிழ்ச்சியடையவில்லை. மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். "சிவகாமி! ஏன் பேசாமலிருக்கிறாய்? எப்போது புறப்படலாம், சொல்! உன்னைப் பல்லக்கில் ஏற்றித் தக்க பாதுகாப்புடன் அனுப்பிவைக்கிறேன். உனக்குப் பணிவிடைப் புரியப் பணிப்பெண்களையும் உன்னைப் பாதுகாப்பதற்கு வீரர்களையும் அனுப்பி வைக்கிறேன். பொன்முகலி ஆறு வரையில் உன்னைக் கொண்டு போய் விட்டுவிட்டு அவர்கள் திரும்புவார்கள்..." என்று புத்த பிக்ஷு கூறி வந்தபோது, அதுகாறும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த சிவகாமி சட்டென்று எழுந்து நின்று, ஆவேசம் ததும்பிய குரலில் பின்வரும் பயங்கர மொழிகளைக் கூறினாள்.

"அடிகளே! கேளுங்கள், இந்த வாதாபி நகரத்தை விட்டு நான் எப்போது கிளம்புவேன் தெரியுமா? பயங்கொள்ளி என்று நீங்கள் அவதூறு சொல்லிய வீர மாமல்லர் ஒரு நாள் இந்நகர் மீது படையெடுத்து வருவார். நரிக்கூட்டத்தின் மீது பாயும் சிங்கத்தைப் போலச் சளுக்க சைனியத்தைச் சின்னா பின்னம் செய்வார். நாற்சந்தி மூலைகளில் என்னை நடனம் ஆடச்செய்த பாதகப் புலிகேசியை யமன் உலகத்துக்கு அனுப்புவார். தமிழகத்து ஸ்திரீ புருஷர்களைக் கையைக் கட்டி ஊர்வலம் விட்ட வீதிகளில் இரத்த ஆறு ஓடும். அவர்களை நிறுத்திச் சாட்டையால் அடித்த நாற்சந்திகளிலே வாதாபி மக்களின் பிரேதங்கள் நாதியற்றுக்கிடக்கும். இந்தச் சளுக்கர் தலைநகரின் மாட மாளிகை, கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாகும், இந்த நகரம் சுடுகாடாகும். அந்தக் காட்சியை என் கண்ணால் பார்த்துவிட்டுப் பிறகுத்தான் இந்த ஊரைவிட்டுக் கிளம்புவேன். சளுக்கப் பதர்களை வென்று வெற்றி மாலை சூடிய மாமல்லர் என் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவதற்கு வருவார். அப்போதுதான் புறப்படுவேன், நீர் அனுப்பிப் போக மாட்டேன். பல்லக்கில் ஏற்றி அனுப்பினாலும் போகமாட்டேன். யானைமீது வைத்து அனுப்பினாலும் போக மாட்டேன்!" இந்தப் பயங்கரமான சபதத்தைக் கேட்ட நாகநந்தியின் முகத்திலே புன்னகை தோன்றியது. தம்முடைய சூழ்ச்சி மீண்டும் பலித்துவிட்டது என்று எண்ணி அந்தப் பொல்லாத பிக்ஷு உள்ளுக்குள் உவகை அடைந்தார் போலும்!
 
ஐம்பத்தொன்றாம் அத்தியாயம்

ஜயஸ்தம்பம்

வாதாபி நகருக்கு இரண்டு காத தூரம் கிழக்கே ஒரு குன்று இருந்தது. சுற்றிலும் காடு அடர்ந்த அந்தக் குன்றின் ஒருபக்கத்துச் சரிவில் அடுத்தடுத்துக் குடைந்த குகைகள் இரண்டு இருந்தன. இரண்டு குகைகளும் குடையும் வேலை பூர்த்தியாகாமல் அரைகுறையாக விடப்பட்டிருந்தன. பௌத்தர்களோ சமணர்களோ அந்தக் குகைகளைக் குடைய ஆரம்பித்திருக்க வேண்டும். அப்புறம் எந்தக் காரணத்தினாலோ வேலையை நடுவில் நிறுத்தி விட்டுப் போயிருக்க வேண்டும். குகைகளில் ஒன்றுக்குள்ளேயிருந்து சல சல வென்ற சப்தத்துடன் ஒரு சிற்றருவி வௌியே வந்து கொண்டிருந்தது. குகையின் வௌியில் அந்த அருவி அங்குமிங்கும் தவழ்ந்து விளையாடி முத்து நீர்த்துளிகளை வாரி இறைத்துவிட்டுக் கீழ்நோக்கிச் சென்று அடர்ந்த விருட்சங்களின் நிழலில் மறைந்தது. இவ்வளவு அழகான இயற்கைக் காட்சியின் ரம்யத்தைக் கெடுத்து அருவருப்பையுண்டு பண்ணக்கூடிய பொருள்கள் சில அருவியின் இருபுறத்துப் பாறைகளிலும் விருட்சங்களின் அடியிலும் காணப்பட்டன. அவை மனிதர்களின் மண்டை ஓடுகள், மாட்டுக் கொம்புகள் முதலிய காபாலிகர் கூட்டத்தின் சின்னங்களாகும். பாறைகள் சிலவற்றில் இரத்தக்கறை படிந்திருந்ததிலிருந்து, அந்தப் பாறைகள் சமீபத்தில் பலிபீடங்களாக உபயோகப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது.

மாலை நேரத்து மஞ்சள் வெயிலினால் பச்சை மரங்களும் பசும்பொன் நிறம் பெற்றுத் திகழ்ந்த நேரத்தில், மேற்கூறிய குகைகளுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மொட்டைப் பாறையிலே நாலுபேர் உட்கார்ந்திருந்தார்கள். தொலை தூரம் பிரயாணம் செய்திருந்த காரணத்தினால் அவர்கள் பெரிதும் களைப்படைந்திருந்தார்கள். ஆடைகள் அழுக்கடைந்திருந்தன; தலையில் ரோமம் சடை விழுந்திருந்தது. முகவாய்க் கட்டையில் ரோமம் அடர்ந்திருந்தது. அவர்களுடைய இளம்பிராயத்துக்குப் பொருந்தாத சுருக்கங்கள் முகத்தில் காணப்பட்டன, கண்கள் குழிவிழுந்து போயிருந்தன. ஆயினும், அந்தக் கண்களிலே ஒரு அசாதாரண ஒளி, இணையில்லா மனோதைரியத்தையும் எடுத்த காரியத்தை நிறைவேற்றும் உறுதியையும் காட்டும் ஜீவசக்தி, பிரகாசித்தது.

குன்றின் உச்சியில் ஒரு மனிதன் நின்று நாலாபுறமும் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். கீழே மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்தவர்கள் அடிக்கடி அவனை அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மேலே நின்ற மனிதன் குதூகலம் நிறைந்த குரலில், "அதோ!" என்றான். அந்தக் குரலிலிருந்தே அவன் நமது பழைய நண்பன் குண்டோதரன் என்பதை அறிந்து கொள்கிறோம். "அதோ!" என்ற சத்தத்தைக் கேட்டதும் மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்த நால்வரின் முகங்களும் மலர்கின்றன. அவன் சுட்டிக்காட்டிய திக்கை அவர்கள் ஆவலுடன் உற்றுப் பார்க்கிறார்கள். மரங்கள் அடர்ந்த காட்டுக்குள்ளேயிருந்து ஒருவன் வருகிறான். அவன் வேறு யாருமில்லை; பல்லவ நாட்டு ஒற்றர் தலைவன் சத்ருக்னன்தான், மற்றவர்களைப் போல் அன்றிச் சத்ருக்னன் நன்றாக க்ஷவரம் செய்து கொண்டு சுத்தமான முகத்துடன் விளங்குகிறான். அதிலிருந்தே அவன் நகரத்துக்குப் போய் வருகிறான் என்று அறிந்து கொள்ளலாம்.

தோளிலே துணிப்பை தொங்க வந்த சத்ருக்னனை ஐந்து பேரும் சூழ்ந்து கொண்டார்கள். "சத்ருக்னா! காயா? பழமா சீக்கிரம் சொல்!" என்றார்கள். "பழந்தான்" என்று சொல்லிக் கொண்டே, சத்ருக்னன் தோளில் தொங்கிய பையை எடுத்து அவிழ்த்தான். அதிலிருந்த பழங்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின. அவற்றைப் பொறுக்குவதற்கு எல்லாரும் பட்ட அவசரத்திலிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் பசித்திருந்தார்கள் என்று தெரிய வந்தது. பசித்ததோ, இல்லையோ தரையில் விழுந்த பழங்களின் மேல் கவனம் செலுத்தாமல், சத்ருக்னன் என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே கவனம் செலுத்திய ஒருவரும் அவர்களில் இருந்தார். அவர்தான் மாமல்லர் என்று சொல்ல வேண்டியதில்லை. "சத்ருக்னா! பழம் என்கிறாயே? அப்படி என்றால் என்ன? சிவகாமியைப் பார்த்தாயா?" என்று கேட்டார். "ஆம் பிரபு, பார்த்தேன்!" என்று கூறி மறுபடியும் சத்ருக்னன் மௌனம் சாதித்தான். "ஏன் இப்படிப் பேசாமல் நிற்கிறாய்? மேலே சொல், சத்ருக்னா! எங்கே பார்த்தாய்? எந்த நிலையில் பார்த்தாய்?" என்று மாமல்லர் கேட்டார். "பிரபு! சிவகாமி அம்மையைப் பார்த்தேன். சௌக்கியமாக இருக்கிறார், கவலைக்கு ஒரு காரணமும் இல்லை. எங்கே பார்த்தேன்; எப்படிப் பார்த்தேன் என்பதை விவரமாகச் சொல்ல வேண்டும் எல்லாரும் உட்காருங்கள், சொல்கிறேன்!" என்றான் சத்ருக்னன்.

அவ்வண்ணமே அனைவரும் பாறை மீது உட்கார்ந்தார்கள்; சத்ருக்னன் சொல்லத் தொடங்கினான்: "நேற்று மாலை வளையல் வியாபாரியின் வேஷத்தில் வாதாபி நகருக்குள் பிரவேசித்தேன். கோட்டை வாசலுக்குள் பிரவேசிப்பதில் எவ்விதக் கஷ்டமும் இருக்கவில்லை. ஜனங்கள் தாராளமாய் நகருக்குள் வந்து கொண்டும், போய்க் கொண்டுமிருக்கிறார்கள். எந்த எதிரியின் படையெடுப்பையாவது எதிர்பார்த்தால் அல்லவா கோட்டையில் கட்டுக்காவல் வைக்கப் போகிறார்கள்? வாதாபியின் வீரப்படைகள் எட்டுத் திசையும் சென்று திக்விஜயம் செய்து கொண்டிருக்கும்போது...." அச்சமயம் சேனாதிபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, "என்ன உளறுகிறாய்; சத்ருக்னா! திக்விஜயமாவது மண்ணாங்கட்டியாவது? தென்னாட்டுக்குச் சென்ற வாதாபிப் படைகள் தோற்றுத் திரும்பி ஓடி வந்திருக்கின்றன! வேங்கிக்குப் போன சளுக்க சைனியத்தின் பாடும் ஆபத்துத்தான் என்று தெரிகிறது. அப்படியிருக்க வாதாபிப் படைகளின் திக்விஜயமாவது...? என்றார்.

சத்ருக்னன் பணிவுடன் கூறினான்; "சேனாபதி! வாதாபிப் படைகளின் திக்விஜயம் என்று நான் கூறியது என்னுடைய சொந்த மொழியல்ல. வாதாபி நகரத்தின் பிரதான நாலு வீதிச் சந்திப்பிலே ஒரு நெடிதுயர்ந்த ஜயஸ்தம்பம் நாட்டியிருப்பதைப் பார்த்தேன். அந்த ஜயஸ்தம்பத்திலே பிராகிருத மொழியில் எழுதியிருக்கும் மொழிகளையும் படித்தேன். கிட்டத்தட்ட அதில் எழுதியிருப்பதை ஞாபகம் உள்ள வரை அப்படியே சொல்லிப் பார்க்கிறேன். "மகா ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ரணதுங்க சூர சளுக்க குலதிலக சப்தலோக தேவேந்திர புலிகேசிச் சக்கரவர்த்தி தென் திசையை நோக்கி விஜயம் செய்யப் புறப்பட்டுச் சென்று மகேந்திர பல்லவனை வடபெண்ணைக் கரையில் முறியடிக்க, மகேந்திரன் போரில் புறமுதுகிட்டோடிக் காஞ்சிக் கோட்டைக்குள் பதுங்கிக் கொள்ள, புலிகேசிச் சக்கரவர்த்தி மேலும் தெற்கு நோக்கித் திக்விஜயம் கிளம்பிக் காவேரி நதிக்கு யானைப்பாலம் அமைத்துக் கடந்து, அங்கே சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுவதற்குக் காத்திருந்த சேர சோழ களப்பாள பாண்டிய மன்னர்களின் சிரங்களில் தம் திருப்பாத கமலங்களை வைத்து அருள் புரிந்து, திரும்புங்காலையில், காஞ்சிக் கோட்டையைப் பலங்கொண்டு தாக்க, மகேந்திர பல்லவன் சரணாகதியடைந்து காப்பாற்ற வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்ச, அவ்விதமே மகேந்திரனுக்கு அருள் புரிந்து, அவனுடைய உபசாரங்களையும் காணிக்கைப் பொருள்களையும் ஏற்றுக் கொண்டு, தென்னாட்டின் திக்விஜயத்தைப் பூர்த்தி செய்து, ஜயபேரிகை முழக்கி, வெற்றிச் சங்கு ஊதி, வாதாபி நகரத்துக்குத் திரும்பி வந்தது சாலிவாகன சகாப்தம் நாளது ஆண்டு, திங்கள், தேதி; கடல் சூழ்ந்த நில உலகம் உள்ளவரையில் இந்த வாதாபி நகரமும் இந்த திக்விஜய ஜயஸ்தம்பமும் சளுக்க சக்கரவர்த்தி குலமும் என்றென்றைக்கும் நின்று நீடித்துப் பொருகித் தழைத்து விளங்குவதாக!"

இவ்விதம் சத்ருக்னன் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், "என்ன பொய்! என்ன கர்வம்! அந்த ஸ்தம்பத்தை இடித்துத் தள்ளாமல் விடுவதில்லை" என்றெல்லாம் கூறினார்கள். சிறிது அவர்கள் இடம் கொடுத்ததும், சத்ருக்னன் மேலும் கூறினான்; "பிரபு அந்த ஜயஸ்தம்பத்தில் இவ்விதம் நான் படித்ததும் என்னை நான் மறந்து விட்டேன். ஸ்தம்பத்தை நோக்கி ஒரு உதை விடலாம் என்று எண்ணிக் காலையும் தூக்கி விட்டேன். கடவுள் அருளால் நல்ல சமயத்தில் எதற்காக வாதாபி நகருக்கு வந்தோம் என்பது ஞாபகம் வந்தது. ஏதோ கால் தடுக்கி விழுந்தவனைப்போல் தொப்பென்று கீழே விழுந்து சமாளித்துக் கொண்டேன். வீதியில் ஜனக்கூட்டம் 'ஜேஜே' என்று இருந்தது. யாராவது பார்த்திருந்தால் விபரீதமாய்ப் போயிருக்கும்!" என்று கூறி நிறுத்தினான்.

"சத்ருக்னா! வாதாபிக்கு வந்த காரியம் உனக்கு நினைவில் இருந்தது பற்றிச் சந்தோஷம். ஆனால் அதைப்பற்றி இன்னமும் நீ சொல்லவில்லை!" என்று மாமல்லர் கோபம் தொனிக்கக் கூறினார். "பிரபு! மன்னிக்க வேண்டும்; சளுக்கர்களின் பொய் சொல்லும் திறமைக்குச் சிறந்த ஞாபகச்சின்னமான அந்த ஜயஸ்தம்பத்தை விட்டு மேலே கிளம்பிச் சென்றேன். வாதாபி நகரின் மிதமிஞ்சிய ஐசுவரிய போகத்துக்கும் வாதாபி மக்களின் படாடோப வாழ்க்கைக்கும் பல அறிகுறிகளைப் பார்த்துக் கொண்டு போனேன். இந்தப் பெரிய நகரத்தில், கிழக்கு மேற்கிலும் தெற்கு வடக்கிலும் குறைந்தது காத தூரமுள்ள இந்தப் பிரம்மாண்டமான பட்டணத்தில், சிவகாமி அம்மையை எப்படித் தேடுவது, யாரை விசாரிப்பது என்று சிந்தனை செய்து கொண்டே போனேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல், அடுத்தாற் போல் வந்த நாற்சந்தி வீதி முனையில் அம்மையைச் சந்தித்தேன்..." "என்ன? நாற்சந்தி முனையிலா?" என்று பல குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன.

"ஆம்; நாற்சந்தி முனையிலேதான் பார்த்தேன். அம்மை அங்கே செய்து கொண்டிருந்த காரியத்தைக் கேட்டால் நீங்கள் பெரும் ஆச்சரியப்படுவீர்கள். எனக்கும் பார்த்தவுடனே ஆச்சரியமாயிருந்தது; வேதனையாகக் கூட இருந்தது. ஆனால், விசாரித்து விஷயம் தெரிந்து கொண்டதும் அளவில்லாத பெருமை அடைந்தேன். பிரபு! தமிழகத்துப் பெண்குலத்தின் பெருமையைச் சிவகாமி அம்மை நிலைநாட்டி விட்டார். நூறு காத தூரத்துக்கு அப்பால் எதிரிகளின் கோட்டையில் அநாதையாகவும் தன்னந்தனியாகவும் இருக்கும் நிலைமையில் அம்மையார் தமிழகத்துப் பெண்குலத்தின் தயாள குணத்தை நிலை நாட்டியிருக்கிறார்..." "சத்ருக்னா! ஏன் இப்படி வளைத்து வளைத்துப் பேசிக் கொண்டிருக்கிறாய்? சிவகாமி என்ன காரியம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாய்?" என்று மாமல்லர் கடுமையான குரலில் கேட்டார். "பிரபு சொல்லி விடுகிறேன்; வாதாபி நகரின் நாற்சந்தியில் சிவகாமி அம்மை நடனம் ஆடிக்கொண்டிருந்தார்....." "ஆகா!", "இது என்ன?" "அவமானம்! அவமானம்!" "இதைத்தானா தமிழகத்துக்குப் பெருமை என்று சொன்னாய், சத்ருக்னா!" என்று தலைக்குத் தலை கூவினார்கள்.

"மன்னிக்க வேண்டும்; கொஞ்சம் பொறுத்துக் கொண்டு மீதியையும் கேளுங்கள். சிவகாமி அம்மை ஒரு பெருங் கும்பலுக்கு மத்தியில் நின்று ஆடுவதைப் பார்த்ததும் எனக்கும் சொல்ல முடியாத அவமானம் உண்டாயிற்று. கோபமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தன. கூட்டத்தில் நின்ற வாதாபி மக்கள் கொச்சையான பாஷையில் பேசிக் கொண்ட அருவருப்பான வார்த்தைகளைக் கேட்டதும் என் காதுகள் கொப்பளித்தன; ஓடிப் பாய்ந்து அம்மையின் முன் சென்று, 'நிறுத்துங்கள் இந்த அவமானத்தை!' என்று கூவ வேண்டும் என்பதாக ஆத்திரம் உண்டாயிற்று. நல்லவேளையாக அந்தச் சமயத்தில், நடனமாடிய அம்மைக்குப் பின்னால் நின்றவர்கள் மீது என் பார்வை விழுந்தது, ஆகா! அதை எப்படிச் சொல்வேன்? தமிழகத்தைச் சேர்ந்த ஸ்திரீ புருஷர்கள் பலரை அங்கே கையைப் பின்னால் சேர்த்துக் கட்டி நிறுத்தியிருந்தார்கள். அவர்களுக்கிடையே கையில் சாட்டை பிடித்த யமகிங்கரர் போன்ற மனிதர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டதும் பிரமித்து நின்றுவிட்டேன். பிரமை நீங்கிய பிறகு கூட்டத்திலிருந்தவர்களின் பேச்சுக்களை ஒற்றுக் கேட்டும், சந்தேகம் தோன்றாதபடி விசாரித்தும், மேற்படி அதிசயக் காட்சியின் காரணத்தை நன்கறிந்து கொண்டேன்..."

பிறகு சத்ருக்னன், சிவகாமி அம்மை நாற்சந்தியில் நடனமாட நேர்ந்தது ஏன் என்னும் காரணத்தைத் தான் தெரிந்து கொண்டபடி அவர்களுக்குக் கூறினான். "தமிழகத்து ஆடவர் பெண்டிரைக் கொடுமையான சாட்டையடித் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே சிவகாமி நடனமாடுகிறாள்" என்று தெரிந்ததும் மாமல்லர் முதலியவர்களுக்குத் தேகத்தில் புளகாங்கிதம் உண்டாயிற்று. மேலே நடந்ததைப் பற்றி ஆவலுடன் கேட்டார்கள். "இனிய கானத்தைக் கேட்ட நாகசர்ப்பத்தைப் போல் நான் சிவகாமி அம்மையின் நடனத்தைப் பார்த்துக் கொண்டு பிரமித்து நின்றேன். அம்மை நடனத்தை முடித்துச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பினார். திரும்பியதும் சில கண நேரம் அவருடைய கண்களில் சொல்ல முடியாத வியப்பும் திகைப்பும் காணப்பட்டன. "அவர் பார்த்த திசையை நானும் நோக்கினேன்; அங்கே யார் நின்றது என்று நினைக்கிறீர்கள்?" "யார்? யார்?", "புலிகேசியா?" என்று கேள்விகள் எழுந்தன. "இல்லை நம் சிநேகிதர் நாகநந்திதான்!" என்றான் சத்ருக்னன்.
 

New Threads

Top Bottom