Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

Status
Not open for further replies.
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-25

வீரபாண்டியன் தென்காஞ்சி தேசத்தைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான்.

புலவர் ஒருவர் வீரபாண்டியனின் ஆட்சி சிறப்பைக் கேள்விப்பட்டு, வீரபாண்டியனின் புகழ்பாடி, பரிசில்கள் பெறலாம் என்று எண்ணி, தென்காஞ்சி தேசத்திற்குச் சென்றார்.

அங்கே, பார்ப்பவர் கண்களைக் கொள்ளை கொள்ளும் பேரழகுடன் கம்பீரமாக நின்றிருந்தது வீரபாண்டியனின் அரண்மனை.

அரண்மனையின் முன் மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.

'அரண்மனையில் ஏதோ விசேஷம் போலிருக்கிறது! மக்கள் கூட்டமாக நிறைந்திருக்கிறார்கள். நல்லது! இந்தச் சந்தர்ப்பத்தில் வீரபாண்டியரைப் புகழ்ந்து பாடினால், பரிசில் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.' என்று நினைத்தபடியே அங்கு நின்றிருந்த மக்களில் ஒரு குழுவினர் அருகில் சென்று,

“இன்று என்ன விசேஷம்?" என்று கேட்டார்.

"பார்ப்பதற்குப் புலவர்போல் தெரிகிறீர்கள். தாங்கள் இந்தத் தேசத்திற்குப் புதியவரோ?" என்று ஒருவர் கேட்க,

"ஆமாம்!" என்றார் புலவர்.

"இன்று ஆலோசனைக் கூட்டம் கூடும் தினம்! அதனால் தான் மக்கள் இங்குக் குழுமி இருக்கின்றனர்" என்றார் ஒருவர்.

"ஆலோசனைக் கூட்டம் எதற்கு? உங்கள் தேசத்தில் ஏதேனும் விழா எடுக்கப் போகிறீர்களா?" என்ற புலவர் கேட்க,
"இல்லையில்லை!... தென்காஞ்சியை, திருவளர் வீரபாண்டியர் கைப்பற்றிய பிறகு, அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அறிஞர்கள், மக்களின் எண்ணங்களைத் தெரிந்து அதற்கேற்ப நாட்டை ஆள்கிறார்…"

"அருமையான யோசனையாக இருக்கிறதே!" என்ற புலவர் பாராட்ட,

"இது என்ன பெரிய விஷயம் எங்கள் தேசத்தில் நாணயங்களை மக்கள் புழக்கத்தில் வெளியிட்டு விட்டார் தெரியுமா?"

"அப்படியா?" என்று புலவர் ஆச்சரியப்பட,

"தன்னிடம் உள்ள பொருளைக் கொடுத்து, தங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களை மக்களாகிய நாங்கள், அரசர் வீரபாண்டியன் முன் எடுத்து வைத்தோம். இதையே மூத்த அமைச்சர்களும் அரசர் வீரபாண்டியனிடம் கூறினார்.

"ஒரு சாராருக்கு, தங்களிடம் உள்ள பொருளைக் கொடுத்தாலும், அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் கிடைப்பதே இல்லை என்று மக்கள் வருந்துகின்றனர்." என்றார் மூத்த அமைச்சர்களில் ஒருவர்.

"ஏன்" என்று அரசர் கேட்டதற்கு,

"அரிசி வைத்திருப்பவருக்குப் பழங்கள் தேவைப்படுகிறது என்றால், பழங்கள் வைத்து இருப்பவருக்கு அரிசி தேவைப்பட்டால் மட்டுமே, அரிசி வைத்திருப்பவர்களுக்குப் பழங்களும், பழங்கள் வைத்திருப்பவருக்கு அரிசியும் கிடைக்கிறது. அதனால் நாணயங்களைப் புழக்கத்தில் விட்டால், எல்லாத்தரப்பு மக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் பயன்பெற முடியும்" என்று மூத்த அமைச்சர் வழியுறுத்தினார் அதன்பயனாக, எங்கள் அரசர் நாணயங்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவந்தார்…"

"அருமை! அருமை!" என்று புலவர் புகழ,

முக்கியமான விஷயத்தை விட்டு விட்டோமே? தென்காஞ்சியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீர் வளம் குன்றும். அதனால், மக்கள் வாழ்வாதாரத்திற்காக மற்றத் தேசங்களுக்குச் சென்றனர். அதை ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள்மூலம் அறிந்து, பாசனத்திற்குத் தேவையான நீரைப் பலவகைகளில் சேமித்து, வளம் குன்றாமல் காக்கிறார் எங்கள் மன்னர்."

"இதெல்லாம் சரி! எங்களைப் போன்ற புலவரை உங்கள் மன்னவர் ஆதரிக்கிறாரா?" என்று புலவர் கேட்டார்.

"நிச்சயமாக! காஞ்சி தேச மக்கள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கப் புதுப்புது கல்விக்கூடங்கள் கட்டி பலதேசங்களில் இருந்தும் ஆச்சாரியார்களை வரவழைத்திருக்கிறார். கல்வி மீது இவ்வளவு ஆர்வம் காட்டுபவர், புலவரை ஆதரிக்காதவரா?"

"மக்களையும், புலவர்களையும் தினமும் நேரில் சந்தித்து, தங்கள் குறைகளைக் கூறுவதற்காகவே ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருக்கிறார்." என்று ஒருவர் மாற்றி ஒருவர் வீரபாண்டிய மன்னனைப் பற்றிப் புகழ்ந்து பேச,

"மக்களின் தேவையை ஆற்றுவதே, ஓர் அரசனின் முதல் கடமை! அதைச் செயலில் காட்டியுள்ள உங்கள் மன்னராம் வீரபாண்டியரைப் பற்றி அதிகமாகக் கவிதைகள் படைக்க ஆவலாக இருக்கிறேன்!" என்று சிறந்த மன்னனைக் காண வந்த சந்தோஷத்துடன், வீரபாண்டியனைக் காண காத்திருந்தார்.

சில திங்களுக்குப் பிறகு,

பாண்டிய பேரர்சர் குலசேகரப் பாண்டியரிடமிருந்து, அமாவாசைக்கு அடுத்த நன்நாளில் நடைபெரும் அரசவையில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஓலை வந்தது.
அரசவைக்கு, தான் வரும் விசயத்தை ஓர் ஓலையில் எழுதி, தூதுவனிடம் வீரபாண்டியன் கொடுத்தனுப்பினான்.

ஒலை கொண்டு வந்த தூதுவனிடம், “வீரபண்டியனின் ஆட்சி எவ்விதம் உள்ளது?” என்று குலசேகரப் பாண்டியர் கேட்க,

“தெய்வத்தாய், காஞ்சி மக்களுக்காக அர்ப்பணித்த, கருணை மனம் கொண்ட எங்கள் மன்னவராம், திருமகள்வளர் வீரபாண்டியரின் நல்லாட்சியில் மக்களும், காஞ்சி தேசமும் வளம் பெற்று விளங்குகிறது… வீரபாண்டியர் ஆளும் தென்காஞ்சி தேசத்தில் நீதி வழுவா நெறிமுறையும், நிலக்குலத்தகை முறையும் கடைபிடிக்கப்படுகிறது. பல கலைகள் வளர்ப்பதிலும் சிறந்து விளங்குகிறது…

மிகக்குறுகிய காலத்திலேயே காஞ்சி தேச மக்களின் மனதில் அழியாப் புகழைப் பெற்றுவிட்டார்…" என்று தூதுவன் சொல்லிக்கொண்டே போக, பெருமித்தால் நெஞ்சம் நிறைந்த குலசேகரப் பாண்டியர்,

“என் மனம் மகிழும்படி இனிய மொழி கூறினாய்...” என்று கூறி தூதுவனுக்குப் பரிசுகள் வழங்கினார்.

மதுரை பாண்டியர் அரண்மனையில் அரசவை கூடியது. பாண்டி சிம்மாசனத்தில்
குலசெகரப் பாண்டியரின் அருகில் பட்டத்தரசி வீற்றிருக்க, அடுத்து இருந்த ஆசனத்தில் இளவரசர் சுந்தரன் அமர்ந்திருந்தான்.

ஒருபுறம், பாண்டிய தேசத்தின் சிற்றசர்கள் அமர்ந்திருக்க, அவர்களில் ஒருவனாய் வீரபாண்டியன் அமர்ந்திருந்தான்.

மறுபுறம் அமைச்சர்களும், புலவர்களும் அமர்ந்திருந்தனர்.

அடுத்து, மக்கள் பிரதிநிதிகள், ஒற்றர்கள் அமர்ந்திருந்தனர்.
குலசேகரப்பாண்டியரின் தலைமை அமைச்சர் எழுந்து, "பாண்டியதேசத்தின் நலனை முன்னிட்டு, வீராதிவீரர், ஈழம்வரை சென்று மீன்கொடி பறக்கவிட்ட தென்னகத்தின் பேரரசர் குசேகரப் பாண்டியருக்குப் பின், இப்பெருமை வாய்ந்த பாண்டியப் பேரரசைச் சிறப்பாக ஆட்சிபுரிய, தலைசிறந்த அரசரைத் தேர்ந்தெடுக்க விளைகிறார் நம் அரசர்." என்று கூறியதும் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

இப்பெரும் பணியில், பாண்டிய அரசைக் கட்டியாளும் அரசர்களும், அறிஞர்களும், பெரியோர்களும் தக்க ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறிவிட்டு, அரசவைக்கு வருகை புரிந்தோரை வரவேற்கும் விதமாக அவை முழுவதையும் பார்வையால் அளந்துவிட்டு அமர்ந்தார்.

அடுத்துப் பெருங்கிள்ளிப்பாண்டியர் எழுந்து அனைவரையும் வணங்கிவிட்டு, அடுத்த அரசராகப் போகிறவர்களை அவையிலிருக்கும் தாங்களும் தேர்வு செய்ய வேண்டும் என்பதே நமது பேரரசரின் விருப்பம்…" என்றதும்,

"தேர்வு செய்வதற்கு என்ன இருக்கிறது? பட்டத்தரசியின் ஒரே புதல்வர் இளவரசர் சுந்தரர்தானே?" என்று ஒரு சிலர் கேட்டார்கள்.

இதனால், ஒவ்வொருவரும் தங்களுக்குள் விவாதம் செய்ததால், சபையில் சின்னச் சளசளப்பு உண்டானது.

பெருங்கிள்ளிப் பாண்டியரை அமரச் சொல்லிவிட்டு, பேரரசர் குலசேகரப் பாண்டியர் சபைக்கு வணக்கம் தெரிவித்தார்.

"எனக்கு அடுத்த வாரிசு என்று பார்த்தால் பட்டத்தரசியின் மகன் இளவரசர் சுந்தரனே, ஆனால் என்னுடைய விருப்பம் என்னவென்றால், எனக்குப் பின் இந்தப் பாண்டிய தேசத்தை ஆள, என்னைப் போல் ஒரு வீரன் வர வேண்டும். உங்களைப் போல் தேசத்தின் மீது பற்று இருக்க வேண்டும். வரப்போகும் அரசன் தன்னலத்தை விட மக்களின் நலத்தையேப் பெரிதாகக் கருத வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல அரசனை, என் மனம் கண்டுகொண்டது. அரசு ஏற்று நடத்தும் திறன் படைத்தவனை அரசனாக்கப் போகிறோமா? அல்லது எனக்கும் பட்டத்தரசிக்கும் பிறந்தவர் என்ற ஒரு தகுதி மட்டும் போதுமா? என்பதை அறிய, உங்கள் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பதற்காகவே தங்களை எல்லாம் அழைத்து இருக்கிறேன்." என்றதும்,

சட்டென்று தனது ஆசனத்திலிருந்து எழப்போன சுந்தரனை பட்டத்தரசியார் கண்களாளேயே அடக்கி, அமரவைத்தார்.

சபையில் இருந்த அனைவருக்குமே, பேரரசர் குலசேகரபாண்டியன். சுந்தரனை அடுத்த அரசராகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அப்படி என்றால் அவர் தேர்ந்தெடுத்தது யாரை? என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் வர, மீண்டும் சபையில் சலசலப்பு உண்டானது.

பேரரசர் குலசேகரப் பாண்டியன் தலைமை அமைச்சரைப் பார்க்க, தலைமை அமைச்சர் அரசரின் அனுமதி பெற்று, எழுந்து நின்று, இரு கரங்களையும் உயர்த்திச் சபையை அமைதி காக்குமாறு கூறிவிட்டு,

"முதலில் அவரவர் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். இதை ஆரம்பித்து வைப்பதற்குப் பேரரசர் குலசேகரப் பாண்டியரின் புதல்வரான தென் காஞ்சி சிற்றரசர் திருவளர் வீரபாண்டியன் அவர்களைக் கருத்துக்கள் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு அவருக்கான ஆசனத்தில் அமர்ந்தார்.

வீரபாண்டியன் எழுந்து, அரியணையில் வீற்றிருக்கும் குலசேகரபாண்டியன், பட்டத்தரசியாரையும் வணங்கி, பெருங்கிள்ளிப்பாண்டியர் மற்றும் அமைச்சரையும் வணங்கிவிட்டுச் சபையில் உள்ள அனைவருக்கும் வணக்கம் கூறி பேச ஆரம்பித்தான்.

"தமையனார் இருக்க, இன்னொருவரை தேர்வு செய்வது, என் மனதுக்கு ஒவப்பானதாக இல்லை. எனவே இளவரசர் சுந்தரரே அடுத்த அரசராக வெண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன்." என்று கூறிவிட்டு தனது தந்தையையும், சபையிரையும் மீண்டும் வணங்கி விட்டு அமர்ந்தான்.

பெருங்கிள்ளி பாண்டியர் சுந்தரனை, 'பார்த்தாயா மாறனை? நீ அரசாள வேண்டும் என்கிறான்!' என்பதுபோல் பார்க்க,

'அவன் என்ன சொல்வது? நான் அரசாள வேண்டும் என்று." என்பதுபோல் இளக்காரமாக ஒரு சிரிப்புச் சிரித்தான் சுந்தரன்.

கவலை தோய்ந்த முகத்துடன் பெருங்கிள்ளிப்பாண்டியர் சபையினரை கவனிக்க ஆரம்பித்தார்.

இந்த நாடகங்களைப் பேரரசர் குலசேகரபாண்டியனும், குலசேகரபாண்டியன் கவனிப்பதை, பட்டத்தரசியாரும் கவனித்தனர்.

"சபையின் முன் அமர்ந்து இருக்கிறோம் என்பதை மறந்து சுந்தரனின் செயல்கள், அவனுக்கு இருக்கும் குறைந்த அளவு வாய்ப்பையும் தவற விட்டுவிடும் போலிருக்கிறது!" என்று மிகவும் வருத்தமாகத் தன் மகனை திரும்பிப் பார்த்தார்.

அதன்பிறகு ஒவ்வொருவராக எழுந்து, சுந்தரனை ஒரு சாராரும், வேறு ஓர் அரசரைத் தேர்வு செய்யுமாறு மற்றொரு சாராரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

மாற்று அரசனாகத் திருவளர் வீரபாண்டியனைத் தேர்வு செய்யலாமா?" என்று அரசர் சபையை நோக்கி வினவவும் சபை மிகவும் அமைதியாக இருந்தது.

திடுக்கிட்டு எழுந்த வீரபாண்டியனை, தலைமை அமைச்சர் அழைத்து வந்து சுந்தரன் அருகில் இருந்த ஆசனத்தில் அமர வைத்ததும்,

சுந்தரன் கொதிநிலைக்கே சென்றான்.
குலசேகரபாண்டியன் தேர்ந்தெடுத்தது வீரபாண்டியன் என்பதை அறிந்ததும், சுந்தரனுக்கு ஆதரவாகப் பேசிய ஒரு சில சிற்றரசர்களும், வீரபாண்டியன் பக்கம் சேர, சுந்தரருக்குக் குறைந்த அளவு ஆதரவும், வீரபாண்டியனுக்குப் பெருமளவு ஆதரவும் கிடைத்தது.

முடிவு தெரிந்து விட்ட நிலையில் குலசேகரபாண்டியர், முடிவை அறிவிக்குமாறு அமைச்சரைக் கூற,

அமைச்சர் எழும் முன் வீரபாண்டியன் எழுந்தான். "அமைச்சர் அவர்களும், அரசரும், பெருங்கிள்ளி பாண்டியரும், சபையினரும் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள், என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தயைகூர்ந்து இச்சிறியவனின் வார்த்தைகளுக்கும் சற்று செவிசாயுங்கள்… வருங்காலப் பாண்டிய பேரரசை இளவரசர் சுந்தரர் ஆள்வதே பல குழப்பங்களுக்கு விடையாகும். அவ்வாறு இல்லை என்றாலும், மதுரையை ஆளும் பொறுப்பைச் சுந்தரரும், மற்ற பகுதிகளை, அவரின் பிரதிநிதியாக நானுமாக ஆள்வதே சிறந்தது எனக் கருதுகிறேன்" என்று கூறிவிட்டு அமர்ந்தான்.

மாறனின் தெளிவான பேச்சும் கூர்நோக்குப் பார்வையும் அனைவரையும் கவர, `இவனே வருங்காலத்தில் பாண்டியப் பேரரசை ஏற்று நடத்தத் தகுதியானவன்` என்று முழுமனதாக வீரபாண்டியனை அனைவரும் தேர்ந்தெடுத்தனர்.

இறுதியாக, சபையில் எழுந்து நின்ற பெருங்கிள்ளிப்பாண்டியர், "தங்களின் பேராதரவோடு பாண்டிய தேசத்தின் அடுத்த அரசராகப் போகும் தகுதியைத் திருவளர் வீரபாண்டியன் பெற்றிருப்பதால், ஒரு நன்னாளில் பட்டத்துஇளவரசன் பட்டத்தை வீரபாண்டியனுக்கு அளிக்க இருக்கிறோம். அந்த இனிய செய்தியைத் தாங்கி, எல்லோருக்கும் ஓலை வரும். இதேபோல் அனைவரும் வந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம" என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

அதிகாலை சூரியனின் செங்கதிர்கள் இதமான வெப்ப மூச்சோடு எழுந்துகொண்டிருந்தான்…
அலங்கரித்த குதிரையின் மீதேறி வரும் அந்த இரு இளைஞர்களும் காண்பதற்கு, ஒரு தேசத்தின் உயரிய குலத்தவர்கள் போல் அணிமணிகள் அணிந்திருந்தனர்… பதினைந்து வயதிற்கே உரிய இளமையும், பற்பல பயிற்சிகளின் விளைவில் முறுக்கேறிய தோள்களும், மாநிறத்தில் பளபள வென்றிருந்த தோலும்… இராச கலையுடன் கூடிய வதனமும், நெருப்புப் பறந்த கண்களும், அடர்ந்த சுருள் சிகையும், குதிரையைக் கையாண்ட லாவகமும், புல்லினங்களையே கண்ணிமைக்க மறந்து ரசிக்க வைத்தன.

அவர்களோ குதிரையை வேகமாக ஓடவிடாமல் மெல்ல நடத்தி வந்தனர்…

"இவர்கள் இப்போதைக்கு இங்கிருந்து போவது போல் தெரியவில்லை… இவ்வளவு மெதுவாக நடந்து வருவதற்கு எதற்காகக் குதிரைகள்மீது வர வேண்டும்? குதிரையை விடுத்து, இவர்கள் இருவருமே நடந்து வந்து இருக்கலாமே!" என்று தங்களுக்குள் அவ்விருவரையும் கிண்டல் செய்தபடி, "சரி வாருங்கள் நாம் கிளம்புவோம்!" என்று சொல்லிப் பறவைகள் பறந்தன…

"என்ன மாறா? எதுவும் பேசாமல் வந்து கொண்டிருக்கிறாய்?" என்று இரு இளைஞர்களில் ஒருவன் கேட்டான்.

"எப்படி ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியவில்லை விக்ரமா!"...

முகத்தில் கதிரவனின் கதிர்கள் தாக்க இந்திரன் மேல் சாய்ந்தவாறு சாய்ந்தவாறே உறங்கி, இதுவரை நடந்தவற்றை நினைத்துப் பார்த்த (மையக்கதைக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்றைக் காட்டும் பின்னிகழ்ச்சிப் பகுதி; மீள்காட்சி. அத்தியாயம் -2 ஃப்ளாஷ்பேக் ப்பா!) விக்ரமசீலன், இருவரும் தில்லியின் அருகில் இருந்த கிராமத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தான்.

இங்குச் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு நீ தில்லி நகரின் உள்ளே சென்று யாழ்நிலாவையோ, இரும்பொறையையோ, சைந்தவனையோ சந்தித்து, நான் வந்திருப்பதைக் கூறு. அடுத்து என்ன செய்யலாம்? என்பதையும் கேட்டு வா! என்று கூறி, அதையே ஓலையிலும் எழுதி இந்திரனை பகைவன் கோட்டைக்குள் அனுப்பி வைத்தான்.

இடத்திற்குத் தகுந்தவாறு, தில்லிவாழ் மக்கள் `இது யாருடைய குதிரை?` என்பதுபோல் பார்க்கும்பொழுது, இயல்பாக நடந்தும், அல்லது புற்களை உண்பது போல் நின்றும், வீரர்களைக் கண்டதும் மறைவான இடங்களில் பதுங்கியும், குதிரைப்படை கொட்டிலுக்குள் சென்றது இந்திரன்.

கொட்டிலில் நின்று கொண்டிருந்த சைந்தவன், இந்திரனைக் கண்டதும் சப்தம் வெளியே கேட்காத வண்ணம் கனைத்து, தான் இருக்கும் இடத்தை இந்திரனுக்குத் தெரியப்படுத்தியது.

இந்திரன் சைந்தவனின் அருகில் சென்று சைந்தவனோடு சேர்ந்து வரிசைப்படியே நின்றதும், தனது சிரத்தை குலுக்கி, தனது நெற்றியில் அணிந்திருந்த 'உத்திரியப் பிடி' யை மட்டும் அசைத்துக் காட்டியது.

இந்திரன் வந்ததுமே, சீலனுக்காகத் தூது வந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட சைந்தவன், இந்திரன் உத்திரியப்பிடி யை அசைத்ததும், ஓலை உத்திரியப் பிடியில் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு, இளம்பொறையைத் தன் சங்கேத ஒலியால் அழைத்தது.

அரை நாழிகைக்குள் சைந்தவன் அருகில் வந்த இளம்பொறை, இந்திரனைக் கண்டு கொண்டான்.

"ஏதேனும் முக்கியமான விஷயமா?" என்று இளம்பிறை இந்திரனிடம் கேட்க, அது "ஆமாம்!" என்பது போல் தலையை அசைத்தது.

"இளவரசர் விக்ரமசீலன் நன்றாக இருக்கிறார்தானே? உன் கண்கள் மகிழ்ச்சியைக் காட்டுவதால் இளவரசர் நலமாக இருக்கிறார் என்பது சரிதானே?" என்று கேட்டதும்,

"சரி" என்பதைப் போல் தலையசைத்தது.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்பொழுது அந்த வழியாக மற்றொரு குதிரை படை வீரன் வந்தான்.

"என்ன இளம்பொறை இங்கே தனியாக நிற்கிறாய்?" என்று அவன் கேட்டான்.

"ஏதோ சப்தம் கேட்டது. அதனால்தான் வந்து பார்த்தேன். ஆனால் எதுவும் வித்தியாசமாக இல்லை." என்று பதிலளித்தவாறே இந்திரனிடமிருந்து விலகி, வந்தவனை நோக்கிச் சென்றான்.

"யாருடனோ பேசுகிறாய் என்று நினைத்தேன்." என்று அந்தப் படைவீரன் சிரிக்க,

"யாரிடம் பேசுவது? தனியாகப் புலம்பினேன்!" என்று சிரித்தபடி அந்தப் படைவீரனுடன் சென்றான்.

ஆனால் சைந்தவனின் சங்கேத ஒலியைக் கேட்டு யாழ்நிலா குதிரை கொட்டிலுக்குள் வந்தாள்.

அவளைப் பார்த்துவிட்ட குதிரை படை வீரன், "அதோ உன் தங்கை வருகிறாள் பார்! உன்னைத் தேடி தான் வருகிறாள் என்று நினைக்கிறேன். போய்ப் பேசிவிட்டு வா!! நான் அறைக்குப் போகிறேன்." என்று கூறிவிட்டு இளம்பொறையை விட்டுச் சென்றான்.

சைந்தவனைப் பார்க்க வந்தவள், இளம்பொறையுடன் மாற்றான் ஒருவன் இருக்கக் கண்டு, நேராக இளம்பொறையை நோக்கி வந்தவள், "சைந்தவன் சத்தம் கேட்டு வந்தேன்". என்று கூறினாள்.

"இந்திரன் வந்திருக்கிறான்!" என்று இளம்பொறை கூற,

இதயம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தாலும், பகல் பொழுதில் வீண் அரட்டை கூடாது என்பது அரண்மனையின் விதி என்பதால்,

"சரி இரவு, பணி முடிந்து வந்து பேசுகிறேன். அல்லது நீங்கள் பேசிவிட்டு வந்து கூறுங்கள்." என்று கூறிவிட்டு மீண்டும் அரண்மனை நோக்கிச் சென்றாள்.

தன்னைக் கடந்து யாழ்நிலா செல்வதைப் பார்த்த இந்திரன், யாழுக்குப் புரியும் படி சங்கேத ஒலி எழுப்பினான். இந்திரனின் சங்கேத ஒலி கேட்டவளுக்குக் கண்களில் நீர் முட்டியது.

இந்திரனுடன் தான் கழித்த இன்ப காலங்கள் நினைவுக்கு வந்ததோடு, இந்திரனை, யாழ்நிலாவிற்கு வழங்கியது மாறன் ஆயிற்றே! மாறன் நினைவில் ஒரு நிமிடம் கண்மூடி நின்றவள், கண்களைத் திறந்து இந்திரனைப் பார்த்தாள்.

இந்திரன் தனது உத்திரியப் பிடியை அசைத்துக் காட்டியது.

'மிகவும் அவசரமான விஷயமாக இருக்குமோ? என்று நினைத்தவள், சுற்றிலும் பார்த்துவிட்டு, பாதத்தை அருகில் கிடந்த முள்ளில் வைத்துவிட்டு, முள் குத்தியதை எடுப்பதற்காக இந்திரன் அருகில் உள்ள திண்டில் அமர்ந்து, இந்திரனின் உத்திரியப்பிடியில் இருந்த ஓலையை எடுத்துத் தனது ஆடைக்குள் மறைத்துவிட்டு லேசாக மேல் தோளில் செருகியிருந்த முள்ளை எடுத்து, ஓர் ஓரமாகப் போட்டுவிட்டு, குளியலறை நோக்கிச் சென்றாள்.

யாழ்நிலா செல்லும்வரை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த இளம்பொறையும் தனது அறையை நோக்கி நடந்தான்.

யாழ்நிலா குளியலறைக்குள் செல்வதற்காக உள்ளே நுழையும்போதே சற்றுத் தொலைவில் ஓடி வந்துகொண்டிருந்த பணிப்பெண்,
“சமீதா! உன்னைச் சுல்தானின் பாதுகாவலர் அழைக்கிறார்! விரைந்து வா!" என்று கத்தினாள்.

ஆடையில் செருகியிருந்த ஓலையை ஒருமுறை சோதித்து விட்டு, அந்தப் பணிப் பெண்ணை நோக்கி ஓடினாள் யாழ்நிலா.

“என்ன ஆயிற்று! எதற்காக அவசரமாக அழைக்கிறார்கள்?" என்று யாழ்நிலா கேட்க,

சுல்தானுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறதாம். உன்னை அழைத்து வரச்சொன்னார்கள்" என்று கூற,

மறுக்க வழி இல்லாமல் அந்தப் பணிப்பெண்ணின் பின்னால் சென்றாள் யாழ்நிலா.

சுல்தானின் படுக்கையைச் சுற்றிலும், அவர்மீது அக்கறை கொண்டவர்கள் பதற்றமாக நின்றனர்.

யாழ்நிலா வருவதைப் பார்த்ததும், அரண்மனை வைத்தியர், "வாம்மா! சுல்தான் அவர்களின் திருமேனி முழுவதும் கொப்புளங்களாக இருக்கின்றன… என்ன காரணம் என்று அறியமுடிகிறதா பார்! நானும் எனக்குத் தெரிந்த வகையில் மருந்து கொடுத்திருக்கிறேன்." என்று கூறினார்.

சீலன் கொடுத்தனுப்பிய உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் குளிகையாலோ? இந்து ஆலயங்களை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிய பாவத்தினாலோ உடல் முழுவதும் "அம்மை" போட்டிருந்தது.

சுல்தானின் உடலில் இருந்த கொப்புளங்கள் 'அம்மை' என்பதைப் புரிந்து கொண்ட யாழ்நிலா, 'வைத்தியர் என்ன நினைக்கிறார்? அவர் என்ன மருந்து கொடுத்தார்?' என்பதை அறிய,

வைத்தியரை நிமிர்ந்து பார்த்து, "நீங்கள் என்ன மருந்து கொடுத்தீர்கள்?" என்று கேட்டாள்.

அவர், தான் கொடுத்த மருந்தின் பெயர் கூற,

'உடல் சூட்டை குறைக்கும் மருந்து தானே கொடுக்க வேண்டும்?' என்று நினைத்ததை மறைத்து,

"திடீரென்று எப்படி இவ்வளவு கொப்பளங்கள் வந்தது?" என்று அறியாதவள் போல் கேட்டாள்.

அனைவருமே, "தெரியவில்லை!" என்ற ஒரே பதிலைக் கூற,

"வைத்தியர் கொடுத்திருக்கும் மருந்து சரியானதுதான். இருந்தாலும் நானும் கசாயம் கலந்து வந்து கொடுக்கிறேன்." என்று கூறியபடி சமையலறையை நோக்கி ஓடினாள்.

"யாழ்நிலா ஓடியதைப் பார்த்த அந்த அறையில் இருந்தவர்கள், 'இந்தப் பெண்ணுக்குத்தான் சுல்தான்மீது எவ்வளவு விசுவாசம்? இப்படித் தலை தெறிக்க ஓடுகிறாளே!' என்று நினைத்தார்கள்.

அவர்களுக்கு என்ன தெரியும்? யாழ்நிலா ஓடியது சீலனின் ஓலையில் இருப்பதைப் படிக்கத்தான் என்று!!

சமையல் அறைக்குள் நுழைந்த யாழ்நிலாவுக்குப் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால் சமையல் அறை முழுவதும் பணிப்பெண்கள் நிறைந்திருந்தனர்.

'இங்கே வைத்து எப்படிப் படிப்பது?' என்று யோசித்தவள், வேறு வழியின்றிக் கைக்கு வந்த கசாயத்தைக் கலந்து, மீண்டும் வேகமாகச் சுல்தானின் அறையை நோக்கி ஓடினாள்.

ஆனால் சுல்தானின் அறைக்குள் மாலிக்காபூர் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் யாழ்நிலாவிற்குத் தனது இளவரசி நங்கையின் இறுதி நேரம் கண்களில் நிழலாட, அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்.

அவளைப் பார்த்த, அந்த அறையில் இருந்தவர்கள், "வாம்மா! இவர் படைத்தலைவர். நம் சுல்தானின் விருப்பத்திற்குரியவர். நீ பயப்படத் தேவையில்லை. வந்து உன் கசாயத்தைக் கொடு!' என்று அழைத்தனர்.

விரைந்து சென்று, வைத்தியர் கையில் கசாயத்தைக் கொடுத்துவிட்டு, மாலிக்காபூர் கண்களில் நேரடியாகப் படாதவண்ணம் சற்று மறைந்து நின்று கொண்டாள்.

வழக்கம்போல் பரிசோதனைக்காக, ஒரு பணியாளுக்கு அந்தக் கசாயத்தைக் கொடுக்க.

அதை மாலிக்காபூர் வாங்கிப் பார்த்தான். "இது என்ன புதுப் பழக்கம்?' என்று மாலிக்கபூர் கேட்டதும்,

"இந்தப் பெண் நன்றாகக் கை வைத்தியம் தெரிந்தவள். அவள் கொடுக்கும் கசாயம் சுல்தானுக்குப் பலமுறை, பல வேதனைகளைத் தீர்த்து இருக்கிறது." என்று வைத்தியரும், அமைச்சரும் ஒருங்கே கூறினர்.

உடன் நிமிர்ந்து யாழ்நிலாவைப் பார்த்தவன், "இதெல்லாம் கொடுக்கத் தேவையில்லை. அரச வைத்தியர் கொடுக்கும் மருந்துகளே போதும்!" என்று கூறி, கஷாயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

அதிர்ச்சியடைந்த மற்றவர்கள், யாழ்நிலாவை வருத்தமுடன் பார்த்து, "சரிம்மா! நீ போ! தேவைப்பட்டால் கூப்பிட்டு அனுப்புகிறோம்." என்று கூறினர்.

'தப்பித்தோம்! பிழைத்தோம்!' என்று நினைத்து, தனது அறையை நோக்கி யாழ்நில் ஓடும்பொழுது அவள் ஆடையில் செறுகி இருந்த சீலன் அனுப்பிய ஓலை, தவறிக் கீழே விழுந்தது. அதை அறியாமல் அவள் தனது அறையை நோக்கி ஓடினாள்.

அந்த ஓலையை ஒரு கரம் எடுத்தது.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1981

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-26

ஓலையைப் படிக்கும் ஆவலில் யாழ்நிலா தனது அறையை நோக்கி ஓடிய வேகத்தில், விக்ரமசீலன் கொடுத்தனுப்பிய ஓலை கீழே விழுந்தது… அதைக்கூடக் கவனிக்காமல் யாழ் ஓடுவதைப் பார்த்துவிட்டு, கீழே விழுந்த ஓலையை ஒரு ஆணின் கரம் எடுத்தது.

தனது அறைக்கு வந்த யாழ், குளியலறைக்குள் சென்று கதவுகளைத் தாளிட்டபிறகு ஓலை செருகியிருந்த இடத்தில் கை வைக்க, அங்கே ஓலை இல்லை…

பதற்றத்துடன் ஆடைகளைக் கலைந்து பார்த்தாள். `ஓலையை எடுக்கும் பொழுது கீழே விழுந்திருக்குமோ?` என்று எண்ணி குளியலறை முழுவதும் தேடினாள்.

நெற்றி முழுவதும் வியர்வை முத்துக்களால் நிறைந்தது.

தான் வந்த வழியில்லாம் ஓலையைத் தேடியபடியே ஓடினாள்.

“என் கதை முடிந்தது… அந்த ஓலையில் என்ன எழுதியிருந்தது என்று கூடத் தெரியவில்லை… யார் கையில் கிடைத்ததோ?… என்னை அறிந்துவிடுவார்களோ?" என்ற எண்ணமே நெஞ்சில் பாறையாய் அழுத்த,

`இளம்பொறையைச் சென்று பார்த்து வருலாமா?` என்று யோசித்தவள், `ஒருவேளை தான் மாட்டியிருந்தால், இளம்பொறையும் மாட்டிவிடக் கூடும்!` என்று பயந்தாள்.

பிறகு ஒரு முடிவுக்கு வந்தவள், குதிரைக்கொட்டிலுக்குச் சென்று இந்திரனைப் பார்த்தபடியே, அவனருகில் செல்லாமல் நேராக நடக்க,

இந்திரனும் யாழ்நிலாவிற்கு இணையாக யாழ்நிலாவைப் பார்த்தபடி நடந்தான்.

கொட்டிலை விட்டு வெளியேறிய பிறகும் யாழ்நிலா தன்னருகில் வராததைக்கண்டு, இந்திரனும் யாரோ போல யாழ்நிலாவைப் பின் தொடர்ந்தான்.

சில வீதிகள் கடந்த பிறகு இருந்த ஒரு சத்திரத்திற்குள் சென்றாள். இந்திரன் சத்திரத்திற்கு எதிரில் நின்று கொண்டான்.

சத்திரத்தின் சாளரம் வழியாகத் தன்னை 'யாரேனும் பின்தொடர்கிறார்களா?' என்று கவனித்தாள். `யாரும் வரவில்லை!` என்பதை உறுதி செய்து கொண்டு மெல்ல வெளியே சென்றவள், மீண்டும் இந்திரனைப் பார்த்தவாறு நடக்க,

"யாழ்நிலாவிற்கு, தில்லி குளிரில் மூளை மரத்துப் போச்சோ?" என்று நினைத்தபடி யாழைப் பின்தொடர்ந்தவன், அவர்கள் சென்று கொண்டிருந்த வீதியில் மறைவான இடம் வந்ததும், யாழ்நிலா நிற்பதைப் பார்த்தான்.

அவளைப் பின்தொடர்ந்து சென்ற இந்திரன், சற்று தொலைவிலேயே. அவனும் நின்றான்.

இந்திரன் நின்றதைப் பார்த்த யாழ்நிலா, "வா!" என்பதைப் போல் மெதுவாகத் தலையசைக்க, இந்திரன் யாழ்நிலா அருகில் சென்றான்.

யாழ்நிலா சட்டென்று இந்திரன் மேலேறி, “கொல்லிமலைக்குச் செல்” என்று கூறினாள்.

'இவள் ஏன் கொல்லிமலைக்குச் செல்கிறாள்? என்று யோசித்த இந்திரன், தன் முதுகை வேகமாகச் சிலுப்பியது. இந்திரன், இந்திரன் அவ்வாறு சிலுப்பினால் தன்னை இறங்கச் சொல்கிறான் என்பதை யாழ் அறிந்திருந்ததால் அவனிடமிருந்து இறங்கி, “என்ன ஆயிற்று? என்று கேட்டாள்.
இந்திரன் தனது நெற்றியில் அணிந்திருந்த உத்திரியப்பிடி யை அசைத்துக் காட்டியது.

“ஓலை எங்கே என்று கேட்கிறாயா? ஓலையைத் தொலைத்துவிட்டேன். அதனால்தான் கொல்லிமலைக்குச் சென்று சீலனைப் பார்க்கலாம். என்று வந்தேன்.” என்றாள்.

இந்திரன், "அடிப்பாவி!" என்பதுபோல் பார்த்தான்.

பிறகு, “சரி!” என்பது போல் யாழின் பக்கம் திரும்பி நிற்க, யாழ் இந்திரன் மீது ஏறினாள்.

இந்திரன் வேகமாகச் தில்லிக்கு அருகே உள்ள சீலன் இருக்கும் கிராமத்தில், சீலன் தங்கியிருந்த இல்லத்தின் முன் போய் நின்றது.

"ஏன் இங்கே நின்று விட்டாய்? கொல்லிமலைக்குத்தானே போகச் சொன்னேன்." என்று யாழ் பேசுவதைக் கவனித்தவன், சீலனை அழைக்கும் சங்கேத ஒலியை எழுப்பினான்.

"இது எந்த இடம்? இங்கே யார் இருக்கிறார்கள்? நீ யாரை அழைக்கிறாய்?” என்று யாழ் அடுத்தடுத்து வினவ,

யாழை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் சீலனை அழைக்கும் சங்கேத ஒலியை எழுப்பினான் இந்திரன்.

`தான் ஓலையைத் தொலைத்துவிட்ட கடுப்பில் இந்திரன் இருக்கிறான்.` என்பதைப் புரிந்து கொண்டாள். வேறு வழியின்றி,

'இந்திரன் அழைத்து, யார் வருகிறார்கள்?' என்று வீட்டின் வாயிலேயே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அரை நாழிகை கடந்தும் வீட்டின் வாயில் திறக்கப்படவில்லை. இந்திரன் அந்த வீட்டின் வாயில் நோக்கி நடந்து சென்று கதவை முட்ட, கதவு சட்டென்று திறந்து கொண்டது.

அதிர்ச்சி அடைந்த யாழ், "இந்திரா இது யார் வீடு? தெரியாத ஊரில், அறியாதார் வீட்டினுள் செல்வது தவறு!" என்று யாழ் கூறிக்கொண்டிருக்கும் போதே,

அருகில் குதிரையின் காலடி ஓசை கேட்டது.

யாழையும் இழுத்துக்கொண்டு, இந்திரன் அந்த வீட்டினுள் நுழைந்து சாளரம் வழியாக, `குதிரையில் வருவது யார்?` என்று பார்த்தான்.

இந்திரனின் செயல்கள் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்க, அவளும் சாளரத்தின் வழியே பார்த்தாள்.

அங்கே இளம்பொறை மெதுவாகச் சுற்றும் முற்றும் பார்த்தவாறு குதிரையில் வந்தவன், இந்திரனும், யாழும் இருக்கும் வீட்டின் வாசலில் குதிரையை நிறுத்தி விட்டு, வீதியை, வேடிக்கை பார்ப்பது போல் சுற்றிலும் பார்த்தான். வீதியில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு, வீட்டை நோக்கி அவன் வர, யாழே கதவைத் திறந்தாள்.

அந்த வீட்டில், யாழைப் பார்த்ததும், "நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டான் இளம்பிறை.

அதற்கு யாழ், "அதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டாள்.

“இளவரசர் விக்ரமசீலன் கொடுத்துவிட்ட ஓலையை நீங்கள் அரண்மனையில் தவறவிட்டதை நான் பார்த்து விட்டேன்… நல்லவேளை ஏதோ ஓர் உள்ளுணர்வு, இன்று நீங்கள் செல்லும் வழியெல்லாம் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் ஒலையைத் தவற விடவும், வேகமாகச் சென்று எடுத்துப் படித்துப் பார்த்தேன். அதில் இளவரசர் விக்ரமசீலன், இந்த இடத்தைக் குறிப்பிட்டு, இங்கே இருப்பதாகவும், தன்னை வந்து பார்க்குமாறும் எழுதியிருந்தார். அதனால்தான் இங்கு வந்தேன்." என்றான் இளம்பிறை.

அதைக்கேட்ட யாழுக்கு மிகுந்த ஆச்சரியம்! "சீலன் இங்கே இருக்கிறாரா?" என்று இளம்பொறையிடம் கேட்ட அதே கேள்வியை, இந்திரனிடமும் கேட்க,

இந்திரன், "ஆமாம்!" என்பதைப் போல் தலையசைத்தான்.

"ஆனால் வீடு வெறுமையாக இருக்கிறதே? யாரும் இங்கு இல்லையே? நம்மை இங்கு வரச்சொல்லிவிட்டு, சீலன் இவ்வேளையில் எங்கே சென்றிருப்பார்? என்று யாழ் கேட்க,

இளம்பொறைக்கு மட்டுமல்ல இந்திரனுக்குமே, `சீலன் எங்கே போயிருப்பான்?' என்று அறிய முடியவில்லை.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அலசி ஆராய்ந்தனர். எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் சீலன் எங்கே போயிருப்பான்? என்பதை நினைக்கும்பொழுது, மூவருக்குமே நெஞ்சினுள் பயப்பந்து வந்து உட்கார்ந்தது.

இங்குள்ள யாரேனும் விக்ரமசீலனை அடையாளம் கண்டு கொண்டுவிட்டார்களா? எந்த ஒரு தகவலோ, தடயமோ இல்லாமல் சீலன் எங்கே போயிருப்பார்?" என்று யோசித்தவர்கள், செய்வதறியாமல், மீண்டும் தில்லி அரண்மனைக்கே போய்ச் சேர்ந்தனர்.

சற்று முன் யாழை, தன் முதுகில் ஏற்றிய வீதியிலேயே இறக்கியும் விட்டு, "தான் மீண்டும் சீலன் இருந்த வீட்டிற்குச் செல்வதாகவும், சீலன் வந்து விட்டால் தகவல் சொல்ல வருவதாகவும்" சைகை பாசையில் கூறிவிட்டு, இந்திரன் வந்தவழியே மீண்டும் ஓடினான்.
இந்திரன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, வருத்தமும் பயமும் ஒன்று சேர,

`சீலனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது` என்று மதுரை மீனட்சியையும் சொக்கநதரையும் மனமுருகி வேண்டியபடி, சோர்வாக நடந்து சென்று, தான் தங்கியிருக்கு இடத்திற்குச் வந்து சேர்ந்தாள்.

அதிகாலை இருள் பிரியும் முன் மீண்டும் ஓடிச்சென்று குதிரைக் கொட்டிலில் சைந்தவனுக்கு அருகில் இந்திரன் இருக்கிறானா? என்று போய்ப் பார்த்தாள். அதேவேளையில் இளம்பொறையும் அங்கு வந்து சேர்ந்தான்.

"அந்த ஓலையில் என்ன எழுதியிருந்தது? என்று கேட்டாள் இளம்பொறையிடம்.

"இளவரசர் விக்ரமசீலன் அந்தக் கிராமத்தில் இருப்பதாகவும், நம் இருவரில் ஒருவரையாவது அங்கு வந்து பார்க்குமாறும் எழுதியிருந்தது.”

"நம்மை அங்கே வரச்சொல்லிவிட்டு, அவர் எங்கேதான் போயிருப்பார்? இரவு முழுவதும் என் கண்களில் தூக்கம் பிடிக்கவில்லை. இன்னும் இந்திரனையும் காணவில்லை. என் மனம் ஏனோ நடுங்குகிறது" என்று கவலை தோய்ந்த முகத்துடன் யாழ் கூறிக் கொண்டிருக்கையில்,

தூரத்தில் ஒரு பணிப்பெண் ஓடிவந்து, "உன்னை மகாராணியார் வரச் சொல்கிறார்" என்று கூவினாள்.

"சீலன் பற்றிய தகவல் அறிந்தால் எனக்கு உடனே தெரியப்படுத்துங்கள். அதேபோல் எனக்குத் தெரிந்தாலும் நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்." என்று கூறியபடியே வேகமாக அந்தப் பணிப் பெண்ணை நோக்கி ஓடினாள் யாழ்நிலா.

யாழ்நிலா மகாராணியார் அரண்மனைக்குச் சென்றாள். மகாராணியின் அரண்மனை வாயிலில் அத்தனை பணிப்பெண்களும் கண்ணீருடன் நின்றிருந்தனர்.

"என்ன ஆயிற்று? நீங்கள் ஏன் எல்லோரும் வெளியே நிற்கிறீர்கள்? சற்று முன். மகாராணி என்னை வரச் சொன்னாராம்?" என்று பதட்டமாகக் கேட்க,

"நீ எங்கே சென்றாய்? மகாராணியையும் இளவரசர்கள் கய்சர்கான், ஷாடிக்கான் மூவரையும் சிறையிலடைத்து விட்டார்கள்!" என்றனர்.

"மகாராணியை, சிறையிலா? யார்? ஏன்?"

"எங்களுக்கும் விபரம் ஒன்றும் தெரியவில்லை… நீ சுல்தான் அவர்களின் அறைக்குச் சென்று விபரம் அறிந்து வா. சமீதா." என்று மகாராணியின் தோழிகள் கண்ணீருடன் கதற,

மகாராணியுடனான இத்தனை நாள் பழக்கத்தில் யாழ்நிலாவிற்கும் கண்ணீர் முட்டியது.

வேகமாகச் சுல்தானின் அரண்மனைக்கு ஓடினாள். ஆனால் யாழ்நிலாவிற்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது…

'என்ன நடக்கிறது இங்கே? மகாராணியைக் கைது செய்தது யார்?' என்று எண்ணியவாறு, யாரைச் சந்தித்தால் இதற்கான விடை கிடைக்கும்?' என்று யோசித்தவள், வைத்தியர் இல்லத்திற்குச் செல்ல,

வழியில் சில குதிரைகள் எதிரில் வந்தது. உடனே தன் மேலாடையால் தலையுன் முகத்தையும் சேர்த்து மூடியபடி நடந்தாள்.

"யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்? " என்று குதிரையிலிருந்தவன், யாழை அதட்டினான்,
"நான்…" மகாராணியின் தோழி என்று சொல்வதற்குள்,

"ஆடையைப் பார்த்தால் தெரியவில்லையா? நம் அரண்மனை பணிப்பெண்… படைத்தலைவர் மாலிக்காபூர் அவசர்மாக நம்மை வரச் சொல்லியிருக்கும்போது, இங்கே நின்று நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் வாருங்கள்!" என்று கூறியவன் தன் குதிரையைச் செலுத்தவும், மற்றவர்களும் அவனுடன் சென்றனர்.

"இப்பொழுது பேசிய குரல்?!!" என்று நினைத்தவள், பின்னால் திரும்பிக் குதிரை வீரர்களைப் பார்க்க,

அதில் ஒருவன் மட்டும் யாழைத் திரும்பிப்பார்த்து, யாழ் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும், தனது இரு உள்ளங்கைகளையும் வணங்குவதுபோல் இணைத்து, நுனி விரல்களை மட்டும் மெல்ல அசைக்க,

'இந்த முத்திரை மீனைக் குறிப்பதாயிற்றே?' என்று எண்ணும் போதே, அவன் தன் கட்டைவிரலை உயர்த்தி, `வெற்றி!` என்று காட்டினான்.

"இவன்? என்ன சொல்ல வருகிறான்?" என்று மூளையைக் கசக்கியவளுக்கு,

'அவனுடைய குரல் சீலனின் குரலை ஒத்து இருந்ததை நினைத்ததும், மீனுக்கு வெற்றி என்றானா?' என்று தொன்றியதால் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தவளுக்கு வெற்று வீதிதான் காட்சியளித்தது.

நேராக மகாராணி அரண்மனைக்கு வந்தவள், தன்னைச் சுல்தானைக் காண அனுமதிக்கவில்லை என்று கூறினாள்…

மீண்டும் சில வீரர்கள் இவர்களை நோக்கி வந்து,

"இனி இங்கே யாரும் நிற்க வேண்டாம்! நாட்டின் நிலவரம் சரியில்லை… செல்லுங்கள் செல்லுங்கள்…" என்று கூறி விட்டு நகர்ந்தனர்.
அனைவரும், தங்கும் அறைக்குச் சென்றனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த பணிப்பெண் நிர்வாகி,

"சுல்தானுக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாம்… மாலிக்காபூர் மீது நம் மகாராணியாருக்கு நல்ல எண்ணம் இல்லாததால், மகாராணியைச் சூழச்சி செய்து தில்லி கொட்டையிலும், இளவரசர்களைக் குவாலியர் கோட்டையிலும் சிறை வைத்துவிட்டார்." என்றார்.

"மாலிக்காபூர் சுல்தானுக்குப் பிரியமானவர் என்றார்களே?!!' என்று யாழ்நிலா கேட்க,

"அதனால்தான் மகாராணிக்கு மாலிக்கபூரை பிடிக்கவில்லை..." என்று சிரித்தனர் சிலர்.

அடுத்துவந்த இருதினங்களும் அறையைவிட்டு யாரும் வெளியே செல்லமுடியாத நிலை… வீதியெங்கும் அரண்மனைக் காவல் வீர்ரர்கள் அங்கும் இங்கும் சென்று வந்துகொண்டிருந்தனர்.

'சீலன் என்ன ஆனான்? கோட்டை வாயில்கதவுகள் மூடப்பட்டதால் இந்திரனால் இனி இங்கே வர இயலாது… என்ன செய்யப்போகிறேன்?'' என்ற தவிப்பு யாழை வாட்டியது.

மூன்றாம்நாள் காலை, சுல்தான் அவர்கள் இறந்துவிட்டார் என்று பிரகடனப்படுத்தப் பட்ட செய்தி தில்லையைக் கிடுகிடுக்கச் செய்தது.

அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் தில்லி பல பயங்கரங்களைச் சந்தித்தது…

அரசுரிமை கோருவோர் அனைவரும் கொல்லப்பட்டனர். அரச வம்சத்தினர் மட்டுமின்றி, சுல்தானின் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர். என்று காதால் கேட்க முடியாத செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

அடுத்தநாள், அதைவிட மோசமாக, `சிறையில் இருந்த சுல்தானின் மகன்களின் கண்கள் பறிக்கப்பட்டன` என்ற செய்தி அறிந்து அனைவரும் துடித்தனர். அவர்களைச் சீராட்டி வளர்த்த பெண்கள் கதறி அழுதனர். சில பெண்கள் பயத்தில் மயக்கம் போட்டு விழுந்தனர்.

அடுத்த நாளே `சுல்தானின் மூன்றாவது மகனான ஷிஹாப்-உத்- தின் உமர் அரியணை ஏறிவிட்டார்` என்ற செய்தியும் எந்த ஒரு ஆர்ப்பாட்டமின்றிப் பிரகடனப் படுத்தப்பட்டது.

மாலிக்காபூரின் இந்தத் திடீர் மாற்றம் அனைவரையும் நிலைகுலையச் செய்தது.

இதைவிட மோசமான காட்சிகளை எல்லாம் ஏற்கனவே கண்டதாளோ என்னவோ, யாழ்நிலாவின் இதயம் இரும்பாக இறுகியிருந்தது.

'இதற்கு மேல், சீலனைப் பற்றி எதையும் அறிந்து கொள்ளாமல் அறைக்குள்ளேயே முடங்கி இருப்பது இயலாது' என்று முடிவு செய்த யாழ்நிலா,

அன்று இரவு பணிப்பெண்கள் அனைவரும் அயர்ந்து உறங்கவும், மெல்ல எழுந்து, பூனைபோல் நடந்து, குதிரைக் கொட்டிலில் இருக்கும் சைந்தவனைக் காணச் சென்றாள்.

அங்கே சைந்தவனுடன் ஓர் ஆண் உருவம் நிற்பதைக் கண்டு அருகிலிருந்த சுவற்றில் மறைந்து கொண்டு, அது யார் என்று கவனித்தாள்.

`ஒருவேளை அவன் இளம் பிழையாக இருக்குமோ?` என்று இருளில் கூர்ந்து பார்த்தபொழுது, அவனுடைய அடையாளம், இளம்பொறையைப் போல் தெரியவில்லை அவனுடைய உடைகள் இஸ்லாமிய வீரனின் ஆடை போலிருந்தது. அந்த வீரன் சரியாகச் சைந்தவனின் அருகில் நிற்கிறான்.

சைந்தவன் எதிரிகளிடம் மாட்டிக்கொண்டானா? அது எவ்வாறு சாத்தியம்? என்னை அறிந்தாலுமே, சைந்தவன் எதிரிகளிடம் மாட்ட வழியே இல்லையே?` என்று நினைத்தவள்,

அப்படியென்றால் இவ்வேளையில் அந்த வீரனுக்கு சைந்தவனிடம் என்ன வேலை இருக்கப்போகிறது. சைந்தவன் மீது சவாரி செய்யப் போவது போலவும் தெரியவ்ல்லையே? சைந்தவனிடம் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா என்ன? இப்படி ஒரே இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறானே?` என்று நினைத்தவளுக்கு, இஸ்லாமியர் பெரும்பாலானோர் மாட்டு இறைச்சி சப்பிடுவதைப் போல, இவன் குதிரை இறைச்சி உண்பவனாக இருக்குமோ? நம் சைந்தவன் வேறு நன்கு கொழுத்து, பளபளப்பாக இருப்பானே? என்ற நினைத்ததுமே பயம் வந்து நெஞ்சைக் கவ்வ,

`இனி ஒரு கணமும் தாமதிக்க இயலாது` என்று, அவள் இடுப்பில் இருக்கும் கொடுவாளை எடுத்துக்கொண்டு, அவனைக் கொன்று விடுவது என்று முடிவு செய்து பதுங்கிப் பதுங்கி மெதுவாக அந்த இஸ்லாமிய வீரனை நோக்கிச் சென்றாள். அவன் அருகில் சென்றதும், சட்டென்று கொடுவாளை எடுத்து அவன் நெஞ்சில் பாய்ச்சச் போக,

அவன் தன் வலிய கரங்களால், கொடுவாள் பிடித்திருந்த யாழின் மென்மையான கரங்களைப் பிடித்து, அவளுடைய முதுகுப்புறமாகத் திருப்பினான்.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1368

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-27

குதிரை லாயத்திலிருந்த சைந்தவனைக் கொல்லப் போகிறான் என்று நினைத்து, அவனருகில் இருந்த இஸ்லாமிய வீரனை தன்னுடைய வாளால் தாக்கச்சென்ற யாழ்நிலாவின் கைகளை மடக்கி, அவளின் முதுகுப்புறம் திருப்பினான் அந்த வீரன்.

"ஸ்ஸ்… ஆஆஆ… கையைவிடு... யார் நீ இங்கே வந்து ஏன் நிற்கிறாய்?" என்று யாழ் கேட்க,

"அதே கேள்வியை நானும் கேட்கலாம் இல்லையா? ஓர் இளம் பெண்ணானவள், இந்த நேரத்தில், இந்த இடத்திற்கு எதற்கு வந்தாய்?" என்றவனின் என் குரல் பரீட்சையமாக இருந்தாலும், வேண்டுமென்றே குரலை மாற்றிப் பேசுவதுபோலவும் தோன்றியது.

அவனிடமிருந்து கையை விடுவிக்கப் போராடியவளின் பார்வையில், சைந்தவன் தென்பட்டான்.

'எதிரியின் கையில் தான் சிக்கி இருக்கும்பொழுது அவன் கண்களில் இவ்வளவு சந்தோசம் எப்படி இருக்க முடியும்?' என்று தோன்ற,

"சைந்தவா என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்? எப்படியேனும் உனது கட்டை அவிழ்த்து வந்து, இவனிடமிருந்து என்னைக் காப்பாற்று!" என்று கூறினாள்.

ஆனால் சைந்தவனோ அவளைப் பார்த்துக் கனைத்தான்.

சைந்தவா உனக்குப் புத்தி பேதலித்து விட்டதா? உன்னைக் காப்பாற்ற நான் ஓடி வந்தேன்... ஆனால் நான் சிக்கலில் இருக்கும்பொழுது நீ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயே?"

"அதிலிருந்தே தெரிய வேண்டாம்? நீ மாட்டியிருப்பது சிக்கலில் அல்ல!" என்று அவன் சீலனின் குரலில் பேச,

"நீ முதலில் என் கையை விடு" என்று திமிறினாள்.

சட்டென்று யாழின் கையைச் சுழற்றி முன்பக்கம் கொண்டுவந்து அவளை இறுக அணைத்தான்.

ஆத்திரம் தலைக்கேற முடிந்தவரை கைகளால் அவனைத் தாக்கியவளின் நாசியில், சீலனின் வாசனை வர, தன்னை அணைத்திருந்தவனின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டுப் பார்த்தாள்.

அவள் எதிரில் நின்று சிரித்தவன் அவளுடைய சீலனே தான்.

ஓடிப்போய் விக்ரமசீலனை இறுக அணைத்து, "நீங்களா? எப்படி இங்கே வந்தீர்கள்? நான் எவ்வளவு பயந்து விட்டேன் தெரியுமா? என் உயிரே போய்விட்டது... ஆனால் நான், எண்ணிவந்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இன்றும் உயிரோடிருக்கிறேன்." என்று கூறினாள்.

"ஹாஹ்ஹஹஹா… அவ்வளவு எளிதில் மாட்டுகிறவனா உன் சீலன்? அப்படியே இருந்தாலும் இப்பொழுது நீ சொன்னாய் பார்! வந்த காரியத்தை முடிப்பதற்காகவே நான் உயிரோடிருக்கிறேனென்று. அந்தத் திடமான மனதை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டு விடாதே."

"எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று மீண்டும் யாழ் கேட்டாள்.

"இந்த இடம், நாம் இருவரும் பேசுவதற்கு ஏற்ற இடமில்லை. இங்கே ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. அது கோட்டை வாயிலுக்கு வெளியே கொண்டு போய்விடும். அங்கு சென்று, நாம் பேசலாம்!" என்று கூறிவிட்டு, சைந்தவனையும் தட்டிக்கொடுத்து, விடைபெற்றபின், சீலன் முன்னே நடக்க, அவன் பின்னே சிறிது இடைவெளிவிட்டு யாழ் நடந்து சென்றாள்.

சுரங்கப் பாதையை வழியே, கோட்டை வாயிலுக்கு வெளியே இருந்த தென்னந்தோப்புக்குள் சென்றனர்.

உங்களுக்கு ஓலை அனுப்பிவிட்டு அந்த இடத்தைப் பற்றி அறிந்த்துகொள்வதற்காக நான் உலாவிக் கொண்டிருந்தேன் அப்பொழுது மாலிக்காபூர் கோட்டை வாயிலில் நின்று யாரோ ஒருவருடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

அதேவேளையில் நான் நின்றிருந்த மரத்தில் ஒரு நாகம் இருந்தது. சட்டென்று அந்தப் நாகத்தைப் பிடித்து மாலிக்காபூரின் மேல் நான் வீச, அவனைச் சுற்றி இருந்தவர்கள் மிரண்டு ஓடினர். அந்தப் நாகமும் மாலிக்காபூரின் கழுத்தை சுற்றி வளைத்து, அவன் நெற்றியைக் குறிவைத்து நின்றது.

சர்வமும் அடங்கியவனாக நின்றிருந்தான் மாலிக்காபூர். இவன் இவ்வளவு எளிதில் இறப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அதோடு இவனை வைத்துத்தான் உள்ளிருக்கும் அரசனையும் முடிக்கவேண்டுமே? என்று கருதி, கையிலிருந்த வாளால் அந்தப் நாகத்தைப் பிடித்துத் தூர விசினேன்.

சிறுது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், என்னை யார்? என்று கேட்டான். நான் வைத்தியர் என்றும், மூலிகை பறிப்பதற்காக இந்தப் பக்கம் வந்ததாகவும் கூறினேன்.
நான் வைத்தியர் என்றதும் மாலிக்காபூரின் கண்கள் மின்னின. "இனிமேல் நாம் நண்பர்கள். எனக்கு, ஒரு மிகப்பெரிய உதவி நீ செய்தால், இறுதிவரை உன்னை என் பாதுகாவலனாக வைத்துக்கொள்வேன்" என்று கூறினான்.

"அது என் பாக்கியம்!" என்று நான் பணிந்து கூறியதும் என்னை அழைத்துக்கொண்டு அவனுடைய இல்லத்துக்குச் சென்றான்.

"சுல்தானுக்கு உடல்நிலை மிகவும் மோசமானதால். எப்பொழுதும் அவரருகில் வைத்தியர்கள் இருந்து கொண்டே இருக்கும் நிலை வந்துவிட்டது. சுல்தானை அவ்வாறு பார்த்தபிறகு, எவ்வளவு காலம் தான் நானும் படைத்தலைவனாகவே இருப்பது? நான் ஏன் சுல்தான் ஆகக் கூடாது? என்று தோன்றியது. இவ்வேளையில் நீ எனக்குக் கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. நாம் இருவரும் இப்பொழுது அரண்மனைக்குச் சென்று சுல்தானைப் பார்ப்போம். அவருக்கு ஏதேனும் விஷம் கொடுத்துக் கொன்று விடுவோம். பிறகு நான் இந்தத் தில்லி சுல்தானகத்தின் சுல்தான்! நீ எனது அந்தரங்கப் பாதுகாவலன்! எப்படி?" என்று மாலிக்காபூர் சிரித்தான்.

நான் எண்ணி வந்த வேலையை இவன் இவ்வளவு எளிதாக முடித்துக் கொடுப்பான் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. சிறிதுநேரம் அதிர்ச்சியில் நான் மலைத்து நிற்க,

"ஏன் பயப்படுகிறாய்? என்னை மீறி உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அதோடு நீ என் உயிர் காத்தவன். நான் உன்னை, என் உயிரைக் கொடுத்தும் காப்பேன்." என்று முழு நம்பிக்கையோடு பேசினான்.

"சுல்தானைக் கொன்றுவிட்டால் மகாராணியும், இளவரசர்களும் ஒதுங்கி விடுவார்களா என்ன?" என்று நான் கேட்க,

மாலிக்காபூர் யோசிக்க ஆரம்பித்தான்.
உடனே சில வீரர்களை அழைத்து,

"மகாராணியையும், குழந்தைகளையும் கைதுசெய்து சிறையில் அடையுங்கள்!" என்றான்.

பிறகே நாங்கள் இருவரும் சுல்தானை சென்று பார்த்தது.

'இன்னும் சிறிது நாள் அவஸ்தைப்பட்டுச் சாக வேண்டியவன், பரவாயில்லை! இன்று நம் கையாலேயே பரலோக பிராப்த்தி கிடைக்கட்டும்.' என்று நினைத்து, கையோடு கொண்டு வந்திருந்த விஷத்தைக் கோப்பையில் ஊற்றிக் கொடுக்க,

மாலிக்காபூர் கொடுத்ததால் பாதுகாவலனுக்குக் கொடுத்துப் பரிசோதிக்காமல், சுல்தானே குடித்தான்.

மருந்து கொடுத்த ஒரு மணி நேரத்தில் சுல்தான் இறந்த செய்தி எங்களுக்குக் கிடைத்தது.

அதன் பின் நடந்த அவனுடைய வெறியாட்டத்தை நீ கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். என்று நடந்த விபரங்களைக் கூறி முடித்தான் விக்ரமசீலன்.

"என்னை வந்து பார்த்திருக்கலாம் இல்லையா? நான் எவ்வளவு பயந்து விட்டேன் தெரியுமா? என்று யாழ் கேட்க,

"எதற்காக? நானே உன்னை மாட்டி விடவா?"

"இப்பொழுது மட்டும் மாட்டிக் கொள்ள மாட்டோமா?"

" நீ உன் திரு வாயை மூடினால் அதெல்லாம் நடக்காது."
"சரி இனி என்ன செய்வதாக உத்தேசம்?" என்று யாழ் கேட்டதும்,

"வேறென்ன? மாலிக்கபூரை வழியனுப்பி வைப்பதுதான்!"

"அவனை அவ்வளவு எளிதில் கொன்று விடக் கூடாது." என்று கூறியவளின் கண்களில், ருத்ரநங்கை, வாளால் வெட்டப்பட்டுச் சாய்ந்ததும், கோட்டை வாசலின் கொடூரமும் ஞாபகத்திற்கு வர,

"நம் இளவரசர் மாறனுக்கு நேர்ந்த கொடூரத்தை விட, மிகக் கொடூரமாக அவன் இறக்க வேண்டும் என்றாள் கண்களில் நெருப்பு பறக்க.

நிலாவின் கண்களில் பறந்த நெருப்பு, விக்கிரமனின் நெஞ்சிலும் கொதிக்க,

இருவரின் கண்களிலும், மாறனும், ருத்ராதேவியும் சிரித்தபடி வந்து அன்றைய நிகழ்வுக்கு அழைத்துச் சென்றனர்…

சுந்தரன், பட்டத்தரசி, இன்னும் சிலரின் எதிர்ப்பை மீறி, மாறன் என்ற வீரபாண்டியனுக்கு, மதுரை பேரரசின் பட்டத்து இளவரசன் என்ற பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

தனது தந்தையின் இந்த உதாசீனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத சுந்தரன் அன்று இரவே குலசேகரபாண்டியனைச் சந்தித்தான்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, அடக்கமுடியாத கோபத்தில் தன் இடையிலிருந்த வாளால் குலசேகரப் பாண்டியனின் தலையை, சீவினான்.

அடுத்தப் பதினைந்தாம் நாள், "அரசர் இறந்துவிட்டார்! அவரின் ஒரே வாரிசான நானே மதுரையின் பேரரசன்! எனது நாமம் சுந்தரபாண்டியன்." என்று தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டான்.

தன்னுடைய பட்டமளிப்புவிழா முடிந்து, தனது தேசத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வீரபாண்டியனுக்கு அவனது தந்தை குலசேகரபாண்டியன் இறந்தது தெரிய வரவே, சுந்தரம் மீது கோபத்துடன் நாடு திரும்பினார்.

"இப்போதுதான் உன் தந்தை இறந்திருக்கிறார்... சிறிது காலம் பிறகு பேசிக் கொள்ளலாம்…" என்று வேதநாயகிதேவி வீரபாண்டியனை சாந்தப்படுத்தினார்."

ஆனால் சுந்தரனோ அரசவையில் வைத்தே, வீரபாண்டியனை, "தென் காஞ்சி தேசம் என் நண்பனுக்கு உரியது. என்னுடைய நண்பன்மீது நீ போர் தொடுத்தது தேச துரோகம் ஆகும். அதனால் நீயும் உன் தாயும் பாண்டிய தேசத்தை விட்டுத் தேசாந்திரம் செய்ய ஆணையிடுகிறேன்!" என்று பதவியேற்ற அன்றே வீரபாண்டியனை வெளியே அனுப்பினார் சுந்தரன்.

தன் தந்தையைக் கொன்றவனாகிய சுந்தரன் மீது அடக்கி வைத்திருந்த கோபத்தில் கொதித்தெழுந்த வீரபாண்டியன், "நான் எதற்குத் தேசாந்திரம் செல்ல வேண்டும்? இந்த மதுரை பேரரசின் பட்டத்து இளவரசன் என்று முடிசூட்டப்பட்டவன் நான்! இருந்தும் தமயன் என்று விட்டுக் கொடுத்தேன். இப்பொழுது விடுவதாக இல்லை! என்னுடன் போருக்கு வா! நீ வெற்றி கண்டால், நான் தேசாந்திரம் செல்கிறேன். நான் வெற்றி கண்டால், நீ தேசாந்திரம் செல்ல வேண்டும்!" என்று கூறினான்.

இந்நிகழ்வை நேரில் கண்ட அமைச்சர்களும் பெரியோர்களும், "இருவரும் சேர்ந்து நாட்டை அமைதியாக ஆளவேண்டும்!" என்று வலியுறுத்தினர்.

பெருங்கிள்ளி பாண்டியர் இருவரையும் தனித்தனியே சந்தித்து, சமாதான உடன்படிக்கை செய்ய நினைத்தார். வீரபாண்டியன் போரைக் கைவிட, சம்மதித்தாலும், சுந்தரன் போரை நிறுத்துவதற்குச் சம்மதிக்கவில்லை.

சுந்தரனுக்கும் வீரபாண்டியனுக்கும் கடும் போர் நடந்தது. முப்பது நாட்கள் நடந்த போரால் பெரும் உயிர்ச்சேதம் இரு பக்கமும் ஏற்பட்டிருக்க, சுந்தரபாண்டியனை வீரபாண்டியன் தோற்கடித்தான்.

அவமானம் தாங்க முடியாமல் சுந்தரப்பாண்டியன், பாண்டிய தேசத்தை விட்டு வெளியேறினான்.

அவனிடம், பெருங்கிள்ளிப்பாண்டியரும், சிற்றரசர்களும் சென்று எவ்வளவோ சமாதானம் கூறியும் சுந்தரபாண்டியன் சமாதானமாகவில்லை.

'வீரபாண்டியனிடம் கூறி, பாண்டியப் பேரரசின் பாதியை உனக்குத் தரச் சொல்கிறேன். மீதியை அவன் ஆளட்டும்!” என்று கூற,

"என் தந்தையின் நாட்டை எனக்கேப் பிச்சை போடுகிறீர்களா?" என்று தன்வழியே சென்று விட்டான்.

பாண்டிய பேரரசு வீரபாண்டியன் கைக்கு வந்தது….

நாடு பெருவளம் நிறைந்து விளங்கியது.

வீரபாண்டியன், ஊர்தோறும் ஊரவை உருவாக்கினான். ஊராட்சியினை இது செயல்பட வைத்தது.

ஊராட்சியின், ஊர்த் தலைவரைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க, குடவோலை முறையைக் கொண்டு வந்தான்.

சொந்தமாக நிலமும், கல்வியறிவும், சொந்த மனையும், அறநெறியும் உடையவர்களை மட்டுமே, ஊரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தான்.

அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவையை நடத்தினான்.

ஊரவையில் நீதி விசாரணைக்கென்று சில வாரியங்கள் அமைத்தான்.

எல்லாவகையிலும் வீரபாண்டியனின் திட்டமிட்ட செயல்பாடுகளால். பாண்டிநாடு சுபிட்சமாக விளங்கியது.

இவ்வேளையில் ஈழத்தில், மாறவர்ம குலசேகரபாண்டியரிடம் தோற்று ஓடிய சந்திரபானு என்பவன், மீண்டும் ஈழத்தின் தென்பகுதியை நோக்கிப் படையெடுத்து வந்தான்.

வீரபாண்டியன் சந்திபானுவை எதிர்த்துப் போர்தொடுத்தான். இரண்டு ஆண்டுகள்வரை கடுமையாகப் போர் நடந்தது. இறுதியில் சந்திரபானு, வீரபாண்டியன் வாளுக்கு இரையானான்.

ஈழத்தில் பெற்ற இந்த வெற்றியின் நினைவாக வீரபாண்டியன், பாண்டியர் சின்னத்தைக் திரிகூடகிரியிலும், திரிகோணமலையிலும் பொறித்தான்.

பின்னர், சோழ நாடு மற்றும் கொங்கு நாடு போன்றனவற்றினை வென்றான்.

பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை வென்று கப்பம் கட்ட வைத்து, தில்லையில் வீராபிசேகம் மற்றும் விசயாபிசேகம் போன்றனவற்றையும் செய்தான்.

அடுத்து, கொடுவடுகு வல்லான் என்பவனையும் வென்று, தில்லையில் உள்ள சிவகாமக் கோட்டத்தின் தென்புற நூற்றுக்கால் மண்டபத்தில் வீராபிசேகம் செய்தான்.

வீரபாண்டியனின் வீரமும், போர்த்திறமையும் பல தேசங்களுக்குப் பரவியது…

அதையறிந்த சேர மன்னன், வீரரவி உதய மார்தண்டவன், பாண்டியர்களின் செல்வமான கொற்கைப்பகுதி முத்துக்களை, களவாடிச் சென்றான்.

இத்தகவல் கிடைக்க, வீரபாண்டியனின் கோபம் வீரரவி மேல் வீழ்ந்தது.

சேர நாட்டைவிடப் பாண்டியநாடு சிறிய நாடாக இருந்தபோதிலும் வீரபாண்டியன் சேர நாட்டின் மீது போர் தொடுத்தான்.

வீரபாண்டியன் தலைமையிலான ஒரு படை, வடக்கே இருந்த கோட்டாற்றுக்கரை என்னும் கோட்டையைத் தாக்கியது. அந்தப் படைக்குத் தளபதியாக, தன் காதல் மனைவி ருத்ரநங்கையை நியமித்தான்.

தம்மைவிட நான்கு மடங்கு பலம் வாய்ந்த சேர படையுடன், ருத்ரநங்கையின் பாண்டியர் படை மோதியது. இறுதியாகப் பரலியில் நடந்த போரில் வீரரவி கொல்லப்படான். வீரபாண்டியனின் படை வென்றது.

வீரபாண்டியன் அடிக்கடி போர் நடத்தியதால் பெருமையும், நாட்டின் வளமும் கூடினாலும், போரில் இறந்தவர்களின் குடும்பத்தின் துயர் துடைக்க எண்ணினான்.

போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு, வீரபாண்டியன், 'உதிரப்பட்டி' என்ற பெயரில் இறையிலி நிலம் வழங்கிக் கௌரவித்தான்.

அதுமுதல் வீரபாண்டியனின் மெய்க்கீர்த்திகள், "திருமகள்வளர்" எனத் தொடங்கி, "கொங்கு ஈழங்கொண்டு, கொடுவடுகு கோடழித்து" வென்ற வீரபாண்டியன் புகழப்பட்டன.

இவ்வாறு பாண்டியதேசத்தின் கொடியைப் பல தேசங்களில் பறக்கவிட்டு, தன் தேசத்தின் பெருமையை உயர, உயரக் கொண்டுபோவதில் கவனம் செலுத்திய வீரபாண்டியன், தோற்று ஓடிய சுந்தரபாண்டியனின் செயல்களைக் கவனிக்கத் தவறினான்.

வீரபாண்டியனின் வளர்ச்சி சுந்தரபாண்டியனின் பாண்டிய சிம்மாசனக் கனவை, சிதறடித்தது.

பெருங்கிள்ளிப் பாண்டியர் தானே முன்வந்தும், பிற சிற்றரசர்கள், அமைச்சர்கள்மூலம் சுந்தரனுக்குத் தூது அனுப்பியும், வீரபாண்டியனோடு இணைந்து நாடாள மறுத்துவிட்டான்.

அதோடு இனிமேல் தனியாகவோ, தனக்கு அதரவான நட்புதேசங்களின் அரசர்களுடனோ இணைந்து வீரபாண்டியனுடன் போரிட்டால் தோல்வியில்தான் முடியும் என்று எண்ணிய சுந்தரன் மதுரையைக் கைப்பற்றுவதற்கு வழிதேடலானான்.

அவ்வமயம் வடக்கில் பெரும்பகுதியை தன் குடையின் கீழ் கொண்டு வந்த, அலாவுதீன் கில்ஜியின், பகைவர்கள் அஞ்சி நடுங்கங்கூடய அளவிற்குப் பெரும்படையும் போர்த்திறமையும் பற்றி அறிந்தான்…

அலாவுதீன் கில்ஜி சென்ற இடமெல்லாம் தன் கொடியைப் பறக்கவிடாமல் வந்ததேயில்லை என்பதையும் அறிந்தான்.

வீரபாண்டியனை வெல்ல குறுக்குவழி தேடிய சுந்தரனுக்கு, அலாவுதீன் கில்ஜியின் படையின் முன் வீரபாண்டியனின் படை, பெரும் யானைக்கூட்டத்தின் முன் நிற்கும் சிறு எறும்பைப் போன்றது என்பது மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்க, அலாவுதீன் கில்ஜியை சந்தித்து,

"வீரபாண்டியனைத் தோற்கடித்து மதுரையை வென்று, என்வசம் ஒப்படைக்க வேண்டும்!" என்ற உதவியைக் கோர,

அலாவுதீன் கில்ஜியும் சம்மதித்தான்.

இந்த விசயம் கேள்விப்பட்ட பெருங்கிள்ளிப் பாண்டியர் நேரடியாக, சுந்தரன் இடத்திற்குச் சென்று,

"சுந்தரா நீ மிகப்பெரிய தவறு செய்கிறாய். ஆயிரம் இருந்தாலும் அண்ணன் தம்பிகளாக இல்லையென்றாலும், நாம் அனைவரும் பாண்டிய மன்னர்கள்... நமக்குள் உள்ள விரோதத்தால் பாண்டிய தேசத்திற்குத் தீங்கு விளைவித்து விடாதே. நமக்குள் உள்ள பிரச்சினைகளை நாமே தீர்த்துவிடலாம்… வீரபாண்டியனிடம் கேட்டு உனக்கு மதுரையை ஆளும் உரிமையை வாங்கித் தருகிறேன். என்னை நம்பு… நமக்குள் அந்நியனை உள்ளே விடாதே... நீ நினைப்பதுபோல் வீரபாண்டியனிடமிருந்து மதுரையைக் கைப்பற்றி, உனக்குத் தருவார்கள் என்று கனவிலும் காணாதே." என்று எவ்வளவோ எடுத்துரைத்தும் சுந்தரபாண்டியனின் செவிகளில் எதுவுமே விழுவதாக இல்லை... அதற்கு மாறாகப் பெருங்கிள்ளி பாண்டியரே நேரில் வந்து சமரசம் பேசியது, சுந்தரப் பாண்டியனுக்கு உவகைய அளித்தது.

அலாவுதீன் கில்ஜி மீது பெருங்கிள்ளிப் பாண்டியருக்கும் வீரபாண்டியனுக்கு உள்ள தோவ்வி பயமே பெருங்கிள்ளிப் பாண்டியரைத் தன்னிடம் நோக்கி வரவழைத்துள்ளது என்று நினைத்து,

"வெற்றி! வெற்றி! என்று கொக்கரித்தீர்களே... இப்பொழுது தோல்வி பயம் வந்து ஆட்டுகிறதோ? இனி உங்களுக்கு ஒரு காலும் வெற்றி இல்லை... இனி எமக்கே வெற்றி!" என்று சுந்தரம் கூற.

"சுந்தரா இது உனக்கு வெற்றி இல்லை! நம் பாண்டிய தேசத்துக்குத் தோல்வி என்னை நம்பு. அந்நியின் ஒருநாளும் உன்னிடம் மதுரையை ஒப்படைக்க மாட்டான். மாறாக, பாண்டிய தேசத்தில் மிகப்பெரிய பிரளயம் உண்டாகும். இந்தத் தேசத்தின் மீது உயிரையே வைத்திருந்த குலசேகர பாண்டியனின் ரத்தத்தாலேயே, பாண்டிய தேசம் அழிய வேண்டும் என்று இருக்கக் கூடாது. அப்படியொரு பெரும் பழியை நீ தேடி விடாதே! இதனால் கிடைப்பது உனக்கு வெற்றி இல்லை. காலத்திலும் அழியாத பலி. என்னுடன் வா மதுரையை உனக்கு நான் தருகிறேன்."

“நீங்கள் இங்கு வந்ததே என் வெற்றிக்கான அடையளமாகக் காண்கிறேன்… நீங்கள் போகலாம் மாமா...” என்று கூறிவிட்டு நடந்தவனை, தடுக்க வழி இல்லாமல் நின்றார்… அடுத்தடுத்து சுந்தரனின் நட்பு நாடுகளைத் தூது அனுப்பியும், சுந்தரன் இணங்கவில்லை…


வார்த்தைகளின் எண்ணிக்கை - 1511

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-28

சுந்தரபாண்டியன் அலாவுதீனிடம் உதவி கேட்ட விசயம் வீரபாண்டியனுக்குத் தெரிய வரவே, சுந்தரபாண்டியனுக்கு, மதுரையை சுந்தரபாண்டியனே ஆளுமாறு, தூது அனுப்பினான்.

இவையெல்லாம் சுந்தரனின் மனதை மாற்றுவதற்குப் பதிலாக, மேலும் மேலும் வீரபாண்டியனை அழித்தே தீருவது என்ற வெறியை அதிகப்படுத்தியது… தான் வெற்றிகண்டு, வீரபாண்டியன் தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுத் தேசாந்திரம் போவதாகக் கற்பனையே செய்ய ஆரம்பித்தான்.

வீரபாண்டியன் பெருங்கிள்ளிப் பாண்டியரிடம் ஆலோசனை கேட்டான்…

விக்ரமனை அவனது சேனைகளுடன் வரழைத்து, “என்னை வீழ்த்த, எமது தமையனார் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்துவிட்டான்… இப்படி எதுவும் நேர்ந்து விடக்கூடாதே என்றுதான் மதுரையை ஆளும் உரிமையை அன்றே மறுத்தேன். பெருங்கிள்ளிப்பாண்டியரே தூதுசென்றும் சுந்தரன் இணங்கவில்லையாம். இனி ஆக வேண்டிய காரியங்களை விரைவில் முடித்தாக வேண்டும்” என்று வருந்தினான்.

“என்ன செய்ய வேண்டும் கூறு, மாறா!” என்று விக்ரமன் கேட்க,

“அலாவுதீன் கில்ஜி சென்ற இடமெல்லாம் தீப்பற்றி எரிகிறது… நம் தேசத்தை அழிவிலிருந்து மீட்டாக வேண்டும்.”

“அவனை நம்மால் வீழ்த்த முடியும் மாறா!”

“அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை… நம் பெருங்கிள்ளிப் பாண்டியரை வெல்ல இனி ஒருவன் பிறந்து வர வேண்டும்… ஆனால் போர் ஆரம்பிக்கும் முன் நாம் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது.” என்றவனின் கண்களில் சோமனதபுரம் சிவன் கோயில் இடித்துத் தரை மட்டமாகிய காட்சி விரிய, கண்களை இறுக மூடியபடி,

“மீனாட்சிஈஈஈ” என்று வானம் அதிரும்படி கத்தினான்....

மாறனின் மனம் வேதனைப் படுவதைப் பார்த்துப் பொறுக்கமுடியாத விக்ரமன் “அலாவுதீன் கில்ஜி பண்டியர் வலிமை தெரியாமல் வருகிறான். நீ எதை நினைத்தும் துயரம் கொள்ளத்தேவையில்லை மாறா!” என்று தன் நண்பனின் கைகளைப் பற்றினான்.

“சரி வா!” என்று கூறி, விக்ரமனை பாண்டியர் கருவூலத்திற்கு வீரபாண்டியன் அழைத்துச் சென்றான்.

அங்கே அரண்மனை பொக்கிஷங்கள் மூட்டை மூட்டையாகக் கட்டப்பட்டிருந்தது… தங்கப் பெட்டகங்களிலும் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஆபரணங்களும், ஆவணங்களும் நிறைந்திருந்தது…

“போர் முடிந்து நிலமை சரியாகும் வரை, இவைகளை எங்காவது பத்திரமான இடத்தில் பதுக்கிவிடு” என்று விக்ரமனிடம் கூற,

அவற்றைப் தன்னுடன் வந்த பணியாட்கள் மூலமாகத் திருக்குற்றாலக் காடுகளில் ஒளித்து வைக்கக் கட்டளை இட்டான் விக்ரமன்…

அரண்மனைப் பெண்கள் அனைவரையும் இருட்டான பாதாளம் போன்ற சுரங்கப் பாதையில் இறக்கி, அவர்கள் தப்பித்து வாழ வகைசெய்யுமாறு சொல்ல, விக்ரமன் தன்னுடன் வந்த சேனைகளை அப்பெண்களுடன் பாதுகாப்பாய் அனுப்பினான்.

மதகுருமார்களை, நான்கு பக்கமும் அடைக்கப்பட்டு, மேல் பகுதி மட்டும் கம்பிகளால் அடைத்து, அதனிடையில் வானம் தெரியும்படியான, சிறைக்கைதிகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளில் ஏற்றிவிட்டு,

“இவர்களைக் கவனமாக ஈழ தேசத்திற்கு அனுப்பி வை...”

“பல்லக்கில் செல்லவேண்டியவர்களை இந்த மாதிரி அனுப்பி வைப்பது பாவம் இல்லையா மாறா?” என்று விக்ரமன் கேட்க,

“இந்துக் கோயில்களை மட்டுமல்ல, மதக்குருமார்களையும் கொல்பவனிடமிருந்து தப்பிக்க வேறு வழி இல்லை விக்ரமா? இந்த வாகனத்தில் சென்றால், உள்ளே இருப்பவர்கள் கைதிகள் என்று விட்டுவிடுவான்.” என்று மாறன் கூறினான்,

“எவ்வளவு முன் யோசனையுன் தன் தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் காக்க நினைக்கும் இவனுக்கா இப்படியொரு சகோதரன் வாய்க்க வேண்டும்?!!” என்று மனம் நொந்தான் விகரமன்.

பிறகு, விக்ரமனை மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஏற்கனவே, பெருங்கிள்ளிப் பாண்டியர், செண்பகப் பொழில் அரசர் திருவழுதி, மற்றும் முக்கிய அமைச்சர்கள் நின்றிருந்தனர்.

அனைவர் கண்களிலும் கலக்கம் இருந்ததைப் பார்த்த விக்ரமன், ”ஏன் எல்லோரும் கலங்க வேண்டும்? நம்மால் பகைவனை ஓட ஓட விரட்டி அடிக்க முடியும்.” என்று கூற,

“அந்த நம்பிக்கையில் தான் இங்கு உன்னை அழைத்து வந்துள்ளேன் விக்ரமா! மற்ற தேச கோயில்களுக்கு ஏற்பட்ட நிலை, நம் மீனாட்சிஅம்மனுக்கு ஏற்படக் கூடாது. அதனால் மீனாட்சியம்மன் விக்ரகம் முன்பும், எந்தை சொக்கனாதர் விக்ரகம் முன்பும் கல்திரை எழுப்ப உள்ளோம்…

"கல்திரையா? நீ என்ன சொல்கிறாய் மாறா? " என்று விக்ரமன் பதற,

"ஆம்! வரும் பகைவன் கையில் என் தாய் மீனாட்சியும், எந்தை சொக்கநாதரும் சிக்கிடக் கூடாது… அதானால் மீனாட்சியம்மன் சன்னதியில் உள்ள அம்மன் திருவுருவத்தின் முன்பும், சொக்கநாதர் சன்னதியில் உள்ள லிங்க திருவுருவின் முன்பும் கருங்கற்களால், அம்மனையும், எந்தையையும் மறைத்து ஒரு சுவர் எழுப்பிவிடுவோம். பிறகு மீனாட்சி அம்மனைப் போல மற்றொரு விக்ரகம் செய்து கல்திரைக்கு முன்பு வைத்துவிட்டால், எதிரியின் கையில் போலியான விக்ரகமே கிட்டும்." என்று கூறும் போதே மாறனின் கண்கள் கோபத்திலும், இயலாமையிலும் சிவக்க,

"நம்மை வென்றால்தானே மாறா, பகைவர்கள் இங்கு வர முடியும்?"

"தப்புக்கணக்கு போடாதே. பகைவர்கள் போர் அறம் இல்லாதவர்கள்… எந்தவகையிலும் போர் தர்மத்தைக் கடைபிடிக்காதவர்கள் என்பதை நீ அறியமாட்டாயா? நாம் அங்குப் போரில் ஈடுபட்டிருக்கும் சமயம் பகைவர் கூட்டம் இங்கே வரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?" என்றதும்,

ஓடிச்சென்று மீனாட்சி அம்மையின் பாதங்களில் விழுந்து கண்ணீர் சிந்தினான் விக்ரமன்.

"நாங்கள் இருக்கும்பொழுதே உனக்கு இப்படியொரு நிலையா? எங்களை மன்னித்துவிடு தாயே! நாங்கள் போர் முடித்து வரும் வரை இங்கேயே பத்திரமாக இரு தாயே… எதிரிகளை வென்றதும் உம்மைச் சிறைமீட்க வருகிறோம்!" என்று கூறி கண்ணீர் மல்க மீனாட்சிஅம்மனின் எழில் பொங்கும் வதனத்தையே பார்த்தான்.

"விக்ரமா எழுந்து வா! நமக்கு இப்போது போதுமான கால அவகாசம் இல்லை." என்று அழைத்த வீர பாண்டியன்,

“இதுவரை நான் என்னால் இயன்றவரை நம் தேசத்திற்குப் பணியாற்றி விட்டேன்… போரின் முடிவு நமக்குச் சாதகமாக இருக்கும் என்றாலும், நான் திரும்பி வர எத்தனை காலம் ஆகும் என்று தெரியாத நிலையில், அரசனற்ற என் தேசம், தந்தையற்ற குழந்தைபோல் தத்தளித்து விடக் கூடாது… ஆதனால் இன்றிலிருந்து இப்பாண்டிய பேரரசின் அரசபதவியை உனக்கு அர்ப்பணிக்கிறேன்… நான் திரும்பி வரும்வரை நம் தேசத்தைக் காப்பாயாக விக்ரமா!" என்று வீரபாண்டியன் கூறவும் அதிர்ச்சி அடைந்த விக்ரமசீலன் இரண்டு அடி பின்வாங்கி,

"இந்தச் செயல் எனக்கு உவப்பானதாக இல்லை மாறா… நீ இருக்க, நான் அரசனாவது ஒருகாலும் நடவாது…"

"நான் சொல்வதைப் புரிந்து கொள் விக்ரமா… சுந்தரனைப் பற்றி நான் புதிதாகக் கூறத்தேவையில்லை… இத்தேசத்தைக் கைப்பற்றுவதை விட என்னைச் சிறைபிடிக்கவே சுந்தரன் விரும்புவான்… அதனால் போர்கலத்தைத் தவிர என்னால் எங்கும் செல்ல இயலாது… அந்நிலையில் இதுவரை கட்டிக்காத்த நம் மக்களின் நிலையை யோசித்துப்பார்?!! யாரேனும் இங்கு இருக்க வேண்டும் விக்ரமா!" என்று வீரபாண்டியன் கூறியதும், சற்று யோசித்த விக்ரமன்,

"அதற்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்? இங்கேயே என்னைவிட அனைத்திலும் உயர்ந்தவர்கள் இருக்கிறார்களே!" என்று, பெருங்கிள்ளிப் பாண்டியரையும், செண்பகப்பொழில் அரசர் திருவழுதியைப் பார்த்தவாறு விக்ரமன் கூற,

"அதேதான் என் எண்ணமும்… வருபவன் சாதாரணமானவன் கிடையாது… உன்னைவிட உயர்ந்தவர்கள் என் அருகில் போர்க்கலத்தில் நிற்பதுதானே நலம் பயக்கும்?"

“நிஜம்தான் ஆனால் இத்தேசத்தைக் காக்க, உன் பிரதிநிதியாக நான் இருந்தால் போதாதா!"

"போதாது நண்பா!... அரசனில்லாத பிரதிநிதிக்கு எந்த அளவு சுதந்திரம் இருக்கும்? இதுவே நீ அரசனென்றால் என்னை எதிர்பார்க்கத் தேவையில்லை. அதோடு போர்க்களத்தில் நாங்கள் போரிடும்பொழுது, நாட்டிற்குள் வரும் பகையை அழிக்க இங்கே படை எடுத்து நடத்த ஒருவன் வேண்டுமல்லவா?" என்று வீரபாண்டியன் கூற்றுக்கு அனைவரும் சம்மதிக்க,

தன் சிரசை இதுநாள்வரை முத்துக்களாலும், நவமணிகளாலும் அலங்கரித்த மணிமகுடத்தை எடுத்துக் கண்குளிர பார்த்தான். பிறகு தன் அருகில் நின்ற விக்ரமசீலனின் சிரசில் பொருத்தினான் வீரபாண்டியன்.

"இனி, இத்தேசத்தின் வேந்தன் நீயே! இது வெறும் மணிமகுடம் இல்லை நண்பா! நம் தேசம்.” என்று வீரபாண்டியன் கண்கள் கலங்கினாலும், கம்பீர புன்னகை முகத்தில் தவழ, தனது மீசையை முறுக்கியபடி கூறினான்.

"என் தாயாகிய மீனாட்சி அம்மனையும், எந்தை சொக்கநாதரையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன்… எப்பாடு பட்டேனும் இக்கல்திரையிலிருந்து, இல்லையில்லை இச்சிறையிலிருந்து மீட்டுவிடு." என்று உணர்ச்சி பொங்க வீரபாண்டியன் கூற,

உணர்ச்சியின் மிகுதியால் மூச்சுக்காற்றுகூடப் போவது, வருவதை உணராமல் அனைவரும் சிலையாக நின்றனர்.

"பார்த்தாயா நண்பா நம் வழக்கத்தை மறந்துவிட்டேனே! பட்டமளிக்கும்போது நாமம் சூட்டவேண்டுமே என்று யோசித்த வீரபாண்டியன், "இன்றுமுதல் நீ சிவதாசன் என்று அறியப்படுவாய்!" என்றதும்,
பெருங்கிள்ளிப் பாண்டியர் செங்கோலைக் கொடுத்து, மனமாற வாழ்த்த,

அவர் பாதம் பணிந்த விக்ரமன், “என்னை மன்னித்தருளுங்கள். இந்த மணிமகுடம் உங்கள் தமக்கையின் மைந்தனுடையது...” என்று கூறி முடிக்கும் முன்,

“அவ்வாறு கூறாதே விக்ரமா! அவன் என் உறவினன் அல்ல… எம் பகைவன்… நம் அன்னை மீனாட்சியைக் கல் திரையின் பின் நிற்க வைக்கக் காரணமான் கொடூரன்… இன்னும் எத்தனை துன்பம் காணப்போகிறேனோ...” என்று வருந்தியவர்,

“இந்தப் பெருங்கிள்ளிப் பாண்டியன் என்றுமே பாண்டிய மணிமகுடத்தைத் தாங்கும் சிரத்திற்குரியவற்கே உரிமையானவன்.” என்று சிரித்து மீண்டும் விக்ரமை வாழ்த்தினார்.

"அரச உறுதி மொழி எடுங்கள்!" என்று பெருங்கிள்ளிப் பாண்டியர் கூற,

குலகுரு முன் வந்து விக்ரமசீலனை ஆசீர்வதித்து,

"சிவதாசன் எனும் நான்!" என்று ஆரம்பிக்க,

சிறிதுகூட முகத்தில் மகிழ்ச்சியின்றி மணிமகுடத்தை வாங்கிய விக்ரமசீலன்,

"சிவதாசன் எனும் நான்!" என்றான்.

வார்த்தைகளின் எண்ணிக்கை - 880

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-29

"சிவதாசன் எனும் நான்!"

என்ற வார்த்தை விக்ரமனின் நெஞ்சில் ஈட்டியாய்த் தாக்கப் பழைய நினைவுகளிலிருந்து சட்டென விடுபட்டான்…

ஏதொ மலையிலிருந்து குதித்தது போல் மூச்சு வாங்கியது, உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது…

விக்ரமனின் மன உளைச்சலைப் புரிந்துகொண்ட யாழ்நிலா, தனது வேதனையை மறைத்து. விக்ரமனின் நெஞ்சில் சாய்ந்தாள்.

வெகுநேரம் கடந்ததை உணர்ந்ததும், இருவரும் எழுந்து, மனம் கனத்திருந்ததால் வார்த்தைகள் இன்றிக் கண்களால் விடைபெற்றனர்.

சீலன் கோட்டைவாசல் வழியாக நடந்தும்,

யாழ்நிலா சுரங்கப்பாதை வழியாகவும் தனித்தனியே சென்றனர்.

அவளுடைய அறையின் வாசலுக்குள் செல்ல முற்படும்போது, வாயில் கதவின் அருகில் ஒரு பணிப்பெண் நின்றிருந்தாள்.

யாழ் நிலாவிற்கு, ஒரு நிமிஷம், "திக்" என்று தூக்கிப் போட்டாலும், 'என்ன இங்கே நிற்கிறீர்கள்?' என்று கேட்டாள் யாழ்நிலா.

"ஆமாம், அவன் யார்? அவனைப் பார்க்கத்தான் அடிக்கடி வெளியே செல்கிறாயா?” இந்த விஷயம் உன் அண்ணனுக்குத் தெரியுமா? என்று கேட்க,
" நீ யாரைச் சொல்கிறாய்?" என்று எதுவும் தெரியாதது போல் யாழ்நிலா கேட்டாள்.

"என்னிடம் நடிக்காதே! ஏற்கனவே பலமுறை நீ வெளியே சென்று வருவதை நான் பார்த்திருக்கிறேன். இச்சமயம், இவ்வளவு மோசமான நிலையில் நாடு இருக்கும் வேளையிலும், நீ இரவில் சென்றதும், நீ எங்குதான் சொல்கிறாய் என்பதைப் பார்ப்பதற்காகப் பின் தொடர்ந்து வந்தேன்." என்று அப்பணிப்பெண் கூறியதும்,

"இவளுக்கு எதுவரை தெரியும்?" என்று யோசித்தாள் யாழ்நிலா.

சட்டென்று யாழ்நிலாவின் முகம் வாடியதும், அந்தப் பணிப்பெண், கைகொட்டி சிரித்துவிட்டு,

"எதற்குப் பயப்படுகிறாய்? இந்த வயதில் காதல் எல்லாம் சகஜம் தான். இதைப் போய் யாரிடமாவது கூறுவேனா? வா! உறங்குவோம்." என்று உள்ளே செல்ல,

"அப்பாடி! இவள், நான் என் காதலனை பார்ப்பதற்காகச் செல்கிறேன் என்று நினைத்து விட்டாள்... மீனாட்சி தாயே! காப்பாற்றினாய்!" என்று மீனாட்சிக்கு நன்றி கூறிவிட்டு, யாழும் அறைக்குள் சென்றாள்.

அலாவுதீன் கில்ஜியின் மற்றொரு மகாராணியிடம் யாழ்நிலா பணியமர்த்தப் பட்டாள்.

ஏற்கனவே யாழ்நிலாவை அரண்மனையில் எல்லோரும் நன்கு அறிந்திருந்ததால் இப்பொழுதுள்ள மகாராணியும் யாழ்நிலா மீது பிரியமாக இருந்தார்…

அலாவுதீன் கில்ஜியின் இறப்பும், இளவரசர்களுக்கு ஏற்பட்ட கொடுமையும், மனதை மிகவும் பாதித்த காரணத்தால் எல்லா மகாராணிகளுமே சோர்ந்து காணப்பட்டனர்.

அடுத்து, மாலிக்காபூரின் கீழ் நடக்கும் ஆட்சியில், தங்களின் நிலையை எண்ணிக் கலங்கினர்.

மாலிக்காபூர், கில்ஜியின் சார்பாக, தனது ஆட்சியையும், ஒழுங்கு கொள்கைகளையும், தீர்ப்புகளையும் கையகப்படுத்த தனது முழு பலத்தோடு முயன்றார்.

அதை எதித்த, தலைமை ஆட்சியாளர்களும், ஆலோசகர்களும் தலையிட்டு, அலாவுதீன் கில்ஜிக்குப் பிறகு அவரின் மகன்கள்தான் ஆட்சியைத் தொடர வேண்டும் என்று கூறினர்.

கில்ஜியின் மூன்று வயது மகனான ஷிஹாப்-உத்-தின் உமரை அரியணையில் அமர்த்தினான்., சிறுவனைக் கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்திவிட்டு, தானே தில்லியை ஆளத் தொடங்கினார்.

அந்நிலையில் இளவரசர் முபாரக் கால் தன் ஆட்சிக்குப் பங்கம் வரும் என்று எண்ணிய மாலிக்காபூர், கிஸ்ர் கான் மற்றும் ஷாடி கான் ஆகியோரின் கண்களைப் பறித்ததுபோல். இளவரசர் முபாரக்கின் கண்களையும் பறிக்கும்படி தனது படைக்கு உத்தரவிட்டார்.

இதையறிந்த விக்ரமசீலன், மாலிக்காபூர் படை இளவரசர் முபாரக் மாளிகைக்கு வருவதற்கு முன்னரே இளவரசர் முபாரக் கை தப்பிக்க வைத்தான்.

அவர்களிடமிருந்து தப்பியோடிய இளவரசர் முபாரக், அலாவுதீன் கில்ஜிக்கு விசுவாசமாக இருந்த படையிடம் சென்றடைந்து, அவர்களிடம் நடந்ததைக் கூறினார்.

இதனால் வெகுண்ட கில்ஜியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, மாலிக் காபூர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்து, மாலிக் காபூரைக் கொன்றுவிடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.
அப்பொழுது தான் இளவரசர் முபாரக், தன்னை மாலிக்காபூரின் பாதுகாவலன் ஒருவன் தப்பிக்க வைத்தான் என்று கூற,

'அவன் யார்? அவன் ஏன் இளவரசரைக் காப்பாற்ற வேண்டும்? ஒருவேளை அலாவுதீன் கில்ஜி மீது விசுவாசம் கொண்டவனாய் இருக்குமோ?' என்றெல்லாம் எண்ணினர்.

மிகவும் ரகசியமாக, இளவரசர் முபாரக் சொன்ன மாலிக்காபூரின் பாதுகாவலனை மிகவும் தீவிரமாகத் தேடினர்.

இவ்வமயத்தில் சமீதாவாகிய யாழ்நிலா, மாலிக்காபூரின் பாதுகாவலன் ஒருவனை விரும்புவது இளைய மகாராணி செவிக்கு வந்தது.

சமீதாவைப் பற்றிப் பழைய மகாராணியின் தோழிகளிடம் விசாரிக்க, "சமீதா மிகவும் விசுவாசமானவள், மகாராணிக்காக எதையும் செய்வாள்" என்றே பதில் வந்தது.

அடுத்து வந்த நாட்களில் இளைய மகாராணி சமீதாவாகிய யாழுடன் நெருங்கிப் பழகினார்.

சமீதா மீது முழு நம்பிக்கை வந்ததும், சமீதாவை கில்ஜியின் குடும்பத்தினரிடம் அழைத்துச் சென்றார்.

ஒரளவு அலாவுதீன் கில்ஜியின் குடும்பத்தினரின் திட்டம் தெரிந்தாலும், எதுவும் தெரியாதது போல் இளைய மகாராணியுடன் சென்றாள்.

அலாவுதீன் கில்ஜியின் குடும்பத்தினர், மாலிக்காபூர் உயிருடன் இருக்கும் வரை தங்களால் வாழ முடியாது என்ற விபரத்தைச் சமீதாவிடம் கூறினர்.

"நீ மனது வைத்தால் எங்கள் குடும்பம் தப்பிப் பிழைக்கும்." என்று கூறியதும்,
" நான் ஒரு சாதாரணப் பணிப்பெண். என்னால் உங்களுக்கு எவ்வைகையில் உதவ முடியும்?" என்று கேட்டாள்.

"உன்னால் முடியாது. ஆனால் உன் காதலனால் முடியும்." என்றதும்.

ஒரு கணம் திடுக்கிட்ட யாழ்நிலா, சுதாரித்து,

"அவர் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

"அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வை. போதும்!" என்றனர்.

"நான் உதவுகிறேன். ஆனால் தாங்கள் அதற்குப் பதிலாக நான் வேண்டுவதைத் தர வேண்டும்" என்றதும், அனைவரும் திடுக்கிட்டனர்.

அனைவரும் யாழ்நிலாவை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, தங்களுக்குள் கலந்துரையாடினர். அப்பொழுது இளைய மகாராணியார்,

"என்னுடன் பழகியவரை, சமீதா மிகவும் அருமையான பெண். பெரிதாக எதையும் கேட்டுவிட மாட்டாள்." என்று நம்பிக்கை அளித்ததும் யாழ்நிவாவை வரச்சொல்லி,

"வேண்டுகோள் என்ன?" என்று கேட்டனர்

"சிறையில் இருக்கும் மகாராணியையும், இளவரசர்களையும் விடுவிக்க வேண்டும்…" என்றதும் அனைவருமே ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றனர்.

"இவள் எத்தனை விசுவாசமானவள்? இவளை முழுமையாக நம்பலாம்." என்று எண்ணியவர்கள்,

"நீ கேட்காவிட்டாலும் மாலிக்காபூரை அழித்தபிறகு, நாங்கள் செய்யவேண்டிய முக்கியப் பணிகளில் இதுவும் ஒன்று. அதனால் உன் விருப்பம் நிறைவேறும்..." என்றதும்

உண்மையான மகிழ்வுடன், முகம் மலர, "நிச்சயம் என்னவரை தங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்." என்றாள் யாழ்நிலா!

"அவர் எப்படி? உன்னைப் போல நம்பிக்கைக்கு உரியவரா?" என்று இளைய மகாராணி கேட்க,

"அவர் என்னிலும் பல மடங்கு நம்பிக்கையிலும், வீரத்திலும், கண்ணியத்திலும் உயர்ந்தவர்." என்று கூறி, அவர்களை வணங்கிவிட்டு வெளியே வந்தாள்.

'இப்பொழுது யார் மூலமாகச் சீலனை பார்ப்பது?' என்று யாழ் யோசிக்கும்போதே அவளருகில் இந்திரனின் கனைப்புச் சத்தம் கேட்டது.

இந்திரனைக் கண்டதும், இந்திரனின் கண்களைக் குறிப்பாகப் பார்த்து, தன் ஆடையில் இருந்த பச்சை வண்ண பகுதியைக் கிழித்து விட்டு, மீண்டும் இந்திரனின் கண்களைப் பார்த்து, 'சீலனிடம் கொடு!' என்பதற்கு அடையாளமாக, தனக்கு மீசை இருக்க வேண்டிய பகுதியில் மீசையை முறுக்குவதுபோல் ஜாடை காட்டி, அந்தத் துணியை அருகில் இருந்த திண்டில் வைத்து விட்டுச் சென்று விட்டாள்.

அதைக் கவனித்த இந்திரன் அந்தத் துணியை எடுத்துக் கொண்டு சீலனை நோக்கி ஓடினான்.

இளைய மகாராணியின் மாளிகை உப்பரிகையில் நின்றபடி வீதியின் திருப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் சீலன் குதிரையுடன் திருப்பத்தில் வந்து நின்றவாறு உப்பரிகையில் நின்றிருந்த யாழைப் பார்த்தான்.

உப்பரிகையில் இருந்து கீழே இறங்கியவள், சாலையில், தன் கையில் இருந்த சாமந்தி பூக்களைப் போட்டுக் கொண்டு நடந்தாள். இந்தக் குறிப்பை நன்கு உணர்ந்த சீலன், சாமந்திப்பூவைப் பின் தொடர்ந்து வர, அலாவுதீன் கில்ஜியின் உறவினர் மாளிகைக்குள் யாழ் சென்றாள்.

அந்த மாளிகையைக் கண்டதும் சீலன் ஒரு நிமிடம் திகைத்து நின்றான். மாளிகையின் உள்ளே சென்ற யாழ், அங்கிருந்த பணிப்பெண்ணிடம், "அதோ நிற்கிறாரே; அந்த வீரனை உள்ளே வரச் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

அந்தப் பணிப்பெண்ணும் சீலனிடம், உங்களைச் சமீதா வரச் சொல்கிறார்கள்." என்று கூறவும்,

சீலன் தன் குதிரையை வீதியின் திருப்பதில் விட்டுவிட்டு, கண்கள் மட்டும் தெரியும் படியாகக் கட்டியிருந்த துணியனை சரிபார்த்துக்கொண்டு மாளிகைக்குள் நடந்து வந்தான்.

அலாவுதீன் கில்ஜியின் உறவினர்கள் கூடத்திற்குள் சீலன் நுழைந்ததுமே, இளவரசர் முபாரக் சீலனை அடையாளம் கண்டு கொண்டு, ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான்.

முபாரக் சீலனை தன் உறவினர்களிடம் அறிமுகம் செய்ய, அனைவரும் சீலனுக்கு நன்றி கூறினர்.

பிறகு, யாழை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு சீலனுடன் அலாவுதீன் கில்ஜியின் குடும்பத்தினர் கலந்தாலோசித்தார்கள்.

வெளியே வந்த சீலன் யாழைப் பார்த்து, தன் வலது கையின் கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு, விடுவிடுவென்று தன் குதிரையை நோக்கிச் சென்று விட்டான்.

கில்ஜி இறந்த முப்பத்திஆறாவது நாள்.

தில்லியில் மாலிக்காபூரின் தனி அரண்மனைக்குச் சமையல் செய்யும் பெண்ணாக யாழ்நிலாவை அனுப்பினர்.

இரவு உணவில் அனைவருக்கும் மயக்கம் தரும் மூலிகையைக் கலந்து விட்டாள். நிலவு உச்சிக்கு வரும் சமயம் அலாவுதீன் கில்ஜியின் உறவினர்களோடு விக்ரம சீலன் மாலிக் காபூரின் படுக்கை அறைக்குள் சென்றான்.

நன்றாக உறங்கிக்கொண்டிருந்த மாலிக் காபூரின் தலையை அலாவுதீன் கில்ஜியின் உறவினர், வாளால் குறிவைத்து இறக்கும்போது தனது வாளால் தடுத்த விக்ரமன்,

"இது தவறு… உறங்குபவர்களைக் கொல்லுதல் அறமற்ற செயலாகும்… சற்றுப் பொறுங்கள்" என்று கூறி மாலிக்காபூரை எழுப்பினான்.

மாகிக் காபூர் எழுந்ததும், தன்னைச் சுற்றிலும் கில்ஜியின் உறவினர்கள் ஆயுதம் ஏந்தி நின்றதும், தனது பாதுகாவலர்களை அழைத்தான்.

அவர்களும் ஆயுதத்துடன் அலாவுதீன் கில்ஜி குடும்பத்தினரின் பின்னால் நின்றனர். எல்லோருக்கும் முன்னால் சீலனைக் கண்ட மாலிக்கபூர்,

"நீயா? அன்று என் உயிரைக் காத்தவன், இன்று இவர்களுடன் சேர்ந்ததேன்?" என்று மாலிக்காபூர் கேட்டதும்,

மாலிக்காபூரிடம் மற்றொரு வாளைத் தூக்கிப் போடப்போன விக்ரமனின் கரத்தைப் பற்றிய கில்ஜியின் உறவினர்கள், "என்ன காரியம் செய்கின்றாய்?" என்று ஏக வசனத்தில் திட்டவும்,

“இத்தனை பேர் இருக்கிறீர்கள்… அவர் தனி மனிதன்… இப்பொழுதும் அச்சமா? கொஞ்சம் பொறுங்கள்." என்று கூறிவிட்டு, மாலிக்காபூரிடம் வாளைத் தூக்கிப் போட்டு,

"என்னுடன் ஒற்றைக்கு ஒற்றையாக நின்று போரிடு பிறகு உன் சந்தேகத்தைத் தீர்க்கிறேன்."

"என்னை உன்னால் வெல்ல முடியாது பிறகு எப்படி என்னிடம் கூறுவாய்?" என்று தன் வாளை மாலிக்காபூர் சுழற்றிய வேகத்தில் அனைவரும் பின்வாங்க, விக்ரமனின் வாள் மாலிக்காபூரின் வாளை எதிர்கொண்டது.

தொடர்ந்து முக்கால் மணிநேரம் நடந்த போரில் மாலிக்காபூருக்கு மூச்சுவாங்க ஆரம்பித்ததும்,

"என்ன மாலிக்காபூர்? இந்தப் பாண்டியனுடன் போரிட, வலு இல்லையா?” என்று விக்ரமன் கேட்டதும் திடுக்கிட்டு, "பாண்டியனா?" என்று அலறப்போனவனின் கழுத்தில் தன் வாளை வைத்து,

"ஆம்! மதுரை பாண்டியதேசத்தின் அரசன், சிவதாசன் எனும் விக்ரமசீல பாண்டியன்!" என்று கூறியபடியே மாலிக்காபூரின் வலது கையை வாளோடு வீசி எறிந்தான்.

"வீரபாண்டியனின் அன்புத்தோழனடா…" என்று கூறியபடி இடது காலைத் தன் வாளுக்கு இறையாக்கினான்.

"உன்னைப் போல் உறங்கிக் கொண்டிருப்பவர்மீது, வாள் வீசாத வீர வம்சத்தில் பிறந்த வீரபாண்டியனின் உயிர்த்தோழன் விக்ரம பாண்டியனடா" என்று கூறியபடியே எழுந்து ஓட முயற்சித்த, மாலிக் காபூரின் மற்றொரு காலையும் சீவ,

"இவன் வீர" என்று அலாவுதீன் கில்ஜியின் உறவினரிடம், 'வீரபாண்டியனின் தோழன்!' என்று கூறப்போன மாலிக்காபூரின் தலை வெட்டுண்டு தரையில் வீழ்ந்தது.

அலாவுதீன் கில்ஜயின் குடும்பத்தினர் ஆராவரம் செய்தனர்…

அலாவுதீன் கில்ஜியின் விசுவாசப் பணியாளர்கள், ஓடிச் சென்று விக்ரமனிடம் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள, யாழைத் தேடியது சீலனின் கண்கள்…

யாருடைய ஆரவாரமும் பாதிக்காமல் தூண் அருகே நின்றபடி சீலனை கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழ்…

ஆரவாரம் சற்றே அடங்கியதும், அலாவுதீன் கில்ஜியின் குடும்பத்தினர், மகாராணியையும் இளவரசர்களையும் விடுவித்து யாழிடம் ஒப்படைத்தனர்.

“இதோ மாகராணி!” என்று யாழ், மகாராணியை அவர்களின் தோழியிடம் ஒப்படைத்தாள்.

மகாராணி மற்றும் இளயராணி இருவரும் பணியாளர்களை அழைத்து, மாலிக்காபூர் உடலின் ஒவ்வொரு பாகத்தையும், தில்லி கோட்டையின் ஒவ்வொரு வாசலிலும் தொங்கவிடும்படி ஆணையிட,

அதிர்ந்து சீலனைப் பார்த்தாள் யாழ்…

"கர்மா! எதை விதைக்கிறோமோ… அதையே அறுத்தாக வேண்டும்…
என் தாய் மீனாட்சியும் சொக்கரும் இவனுக்குச் சரியான தண்டனை கொடுத்துவிட்டனர். பார்த்தாயா? தெய்வங்கள் எப்பொழுதும் வேடிக்கை பார்ப்பதில்லை. தண்டனை வழங்கச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்." என்று கூறினான்…

கொட்டையின் வாசலில் மாலிக்காபூரின் தலை தொங்குவதை, மக்களோடு மக்களாக, சீலனும், யாழும், சைந்தவனும், இந்திரனும் பார்த்திருக்க, மாலிக்காபூர் தலை மறைந்து, கோட்டை வாசலில் மற்றொரு ஆண் உடல் தொங்கிக் கொண்டிருந்தது.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1998

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom