revathy ramu
Member
- Messages
- 50
- Reaction score
- 56
- Points
- 18
அத்தியாயம் 45
துர்கா தன் வீட்டில் கலங்கி கொண்டிருந்தாள். அவன் இல்லாதது வேறு மனதிற்குள் வெறுப்பாய் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று நாளில் வருவதாக சொன்னானே! வந்த பின் அவன் காட்டும் அன்பில் நடிப்பில்லை என்பதை நான் புரிந்து கொள்வேன் என்றானே! அப்படி என்ன செய்ய போகிறான்? ஒரு வேளை ஏதாவது தவறான முடிவு எதுவும் எடுப்பானோ? அய்யோ! கடவுளே! அப்படி எதுவும் இருக்க கூடாது என்று பலவாறு சிந்தித்தபடி அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
அந்த அடியாள் ராபர்ட் இரண்டு மாதம் தலை மறைவாய் இருந்துவிட்டு பணம் அனைத்தும் செலவானதும் அன்று தான் வீடு வந்தான். இனிமேல் நமக்கு பயம் இல்லை. நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லை. இனிமேல் வெளியில் தைரியமாக செல்லலாம் என்று நினைத்துக் கொண்டே ஒளிப்பதிவு பெட்டியில் பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டு அதை ரசித்தபடியே ஓய்வு எடுத்து கொண்டிருந்தான். தீடீரென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் யாராக இருக்கும்? ஒரு வேளை எதிர்கடையில் உணவு தருமாறு சொல்லியிருந்தேன், அந்த பையன் தான் வந்திருக்கிறானோ! என்று நினைத்தபடி கதவை திறக்க, உள்ளே நுழைந்த காவலாளிகள் அவனை வெளியில் செல்லாதவாறு வளைத்து கொண்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டனர். இந்த திடீர் தாக்குதலால் அவனால் தப்பிக்க முடியவில்லை. அந்த உயர் காவல் அதிகாரி அவனை அங்கேயே வெளுத்து வாங்கி விட்டார். ஏன்டா! இனிமேல் நீ மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை கடத்துவே! எவ்வளவு கஷ்டப்பட்டு, பாடுபட்டு தாய்மார்கள் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள்! அந்த குழந்தைகளை நீங்கள் நோகாமல் எடுத்துக் கொண்டு போய் விக்கிறீங்க! அந்த பிறந்த குழந்தை என்னடா பாவம் பண்ணிச்சு! அந்த பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என கொஞ்சமாவது நினைத்தாயடா! என சொல்லி கொண்டே அவன் கையில் விலங்கு மாட்டி அவனால் எழுந்திருக்க கூட முடியாத நிலையில் அவனை இழுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு சுஹேல், கயல், டாக்டர் கௌசல்யா மற்றும் ரேச்சல் அனைவரும் அந்த காவல் அதிகாரியின் வரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். அவர் உள்ளே ராபர்ட் உடன் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் அவன் மேல் திரும்பியது. சுஹேல் அவனிடத்தில் வந்து என் குழந்தைகள் உனக்கு என்னடா பண்ணிச்சு? இல்ல நான் தான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்! என்னையும் என் மனைவியையும் தவிக்க விட்டுடீங்களடா! என்று தன்னிலை மறந்து அவன் சட்டையை பிடுத்து உலுக்க, அந்த காவல் அதிகாரி அவனிடத்தில் வந்து, அமைதியாய் இரு சுஹேல். இவனை நாங்க விசாரிக்கும் விதத்தில் விசாரிச்சு உண்மையை வரவழைக்கிறோம் என்று சொல்லி அவனை உள்ளே கொண்டு போய் அடி பின்னி எடுத்தனர்.
சிறிது நேரத்தில் அந்த அதிகாரி திரும்பி வந்து சுஹேலிடம் அவன் எல்லா விஷயத்தையும் கக்கி விட்டான். உங்களுடைய மற்றொறு குழந்தை உயிரோடு தான் இருக்கிறது. குழந்தையை மலர்வனம் என்னும் ஆசிரமத்தில் விட்டு விட்டதாக கூறுகிறான். நாம் முதலில் குழந்தையைப் போய் பார்க்கலாம். மற்றதை எல்லாம் பிறகு கவனித்து கொள்ளலாம் என்று அனைவரும் மலர்வனம் நோக்கி சென்றனர். அங்கு சென்றதும் அந்த ஆசிரமத்தை நடத்தும் விசாலாக்ஷி அம்மையார் அங்கிருக்கும் குழந்தை ஒன்றுக்கு உணவு கொடுத்து கொண்டிருக்க, இவர்களை பார்த்ததும் யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் காவல் துறையினரா? என்று பயந்தபடி கேட்க, சுஹேல் முன்வந்து அந்த அம்மையாரிடம் வணக்கம் அம்மா. என் பெயர் சுஹேல் என்று அன்று நடந்த அனைத்தையும் விவரிக்க, அந்த அம்மையார் உள்ளே சென்று சுஹேலின் குழந்தையை கொண்டு வந்து கொடுத்தார். நீங்கள் சொல்லும் நாளைக்கு மறுநாள் காலையில் தான் இந்த குழந்தை என் ஆஸ்ரமத்தில் வெளியே கிடத்தி இருந்தார்கள் என்று கூறி அந்த குழந்தையை கொடுக்க சுஹேல் அதை வாரி அணைத்து கொண்டான். ரொம்ப நன்றி அம்மா. இந்த குழந்தை இறந்து விட்டதாக நானும் என் மனைவியும் மிகவும் வருந்தி கொண்டிருந்தோம். இதுவரை பத்திரமாக என் குழந்தையை பார்த்து கொண்ட உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. பரவாயில்லை தம்பி. இங்கு இருக்கும் அனைத்து குழந்தைகளும் ஏதோ ஒரு வழியில் பெற்றோர்களை இழந்தவர்கள் தான். ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு இவர்களை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறவும், நான் கண்டிப்பாக உங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் அம்மா என்று உறுதியளித்துவிட்டு வெளியே வர அந்த அதிகாரி, சுஹேல் இந்த குழந்தையை அவனாக கடத்தவில்லை வேறு யாரோ சொல்லி கடத்தி இருப்பதாக தெரிகிறது. அதை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சில சட்ட நடைமுறைகள் உள்ளன. அதை மட்டும் நீங்கள் நிறைவேற்றிவிட்டு செல்லுங்கள் என கூற, சுஹேல் கயலிடம், கயல்! நீ இந்த குழந்தையை எடுத்து கொண்டு உன் வீட்டிற்கு செல். நான் இங்கு இருக்கும் சட்ட முறைகளை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு டாக்டர் கௌசல்யாவிற்கும் ரேச்சலுக்கும் நன்றி தெரிவித்தான். அனைவரும் தம் தம் வீடு திரும்பினர்.
ரெபேக்கா கையில் குழந்தையுடன் கயலை பார்த்ததும், என்ன கயல் இந்த குழந்தை ஏது என்று கேட்க, கயல் நடந்த அனைத்தும் விவரித்தாள். எல்லாவற்றையும் கேட்ட ரெபேக்கா, கயல் அவர்களுக்கு ஒரு குழந்தை போதாதா? நம்மிடம் இருக்கும் குழந்தையையும் கொடுக்க வேண்டுமா? என்று ஏக்கத்துடன் கேட்க, அத்தை இது அவர்களுடைய குழந்தை. உரியவர்களிடம் ஒப்படைப்பது தானே நியாயம். என்ன செய்வது? இவ்வளவு நாள் இந்த குட்டி தேவதை நம் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்து விட்டாள். எனக்கு கூட இவளை பிரிய மனம் இல்லை தான் இருந்தாலும் பெற்றோரிடம் ஒப்படைப்பது தானே தர்மம் என்று கூறி அவளை சமாதானம் செய்தாள்.
கயல் குழந்தைகளுக்கு தேவையான உடமைகளை எடுத்து வைத்தாள். கூடவே தன்னுடைய உடைமைகளையும் எடுத்து வைத்து கொண்டிருந்தபோது அங்கே ரெபேக்கா வந்தாள். கயல் , நீ தனியாக இரண்டு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டு அவ்வளவு தூரம் செல்கிறாய் என்கிறாய், துணைக்கு நானும் உன் கூட வருகிறேன் என்று கூற, நான் தனியாக செல்லவில்லை அத்தை ! என் கூடவே சுஹேலும் வருகிறார். அவர் வந்தால் என்னம்மா! அவர் என்னதான் மருத்துவராய் இருந்தாலும் அவருக்கும் சின்ன வயதுதானே! கைக்குழந்தைகளை சமாளிக்க அனுபவம் தேவையம்மா என்று கூற, சரி அத்தை! நீங்களும் வாருங்கள்! நான் அனைவர்க்கும் பயணசீட்டு பதிவு செய்து விடுகிறேன் என்று கூறி வேளையில் ஆழ்ந்தாள்.
சிறிது நேரத்தில் சுஹேல் வர, அவனை வரவேற்ற ரெபேக்காவை அவன் நன்றியுடன் பார்த்தான். அவன் கண்கள் பனிக்க, இவ்வளவு நாள் என் குழந்தையை அன்போடு பார்த்து கொண்டதற்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன் என்றே தெரியவில்லை. அனைத்திற்கும் ரொம்ப நன்றி அம்மா என்று கூற, பரவாயில்லை தம்பி! நீயும் எனக்கு ஒரு பிள்ளை போலத்தான். நன்றி எல்லாம் எதற்கு? என்ன! இவ்வளவு நாள் எங்களிடம் இருந்த குழந்தையை பிரிய மனம் சங்கடமாய் இருக்கிறது என்று கூற, சுஹேல் ,அம்மா உங்களுக்கு எப்போது என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ ஒரு தகவல் மட்டும் சொன்னால் போதும். உங்களை நானே வந்து கூட்டி செல்கிறேன் என்று கூற ரெபெக்காவும் தலை அசைத்தாள்.
மூவரும் இரண்டு குழந்தைகளுடன் வாரணாசியை அடைந்தனர். இந்த மூன்று நாளில் துர்கா பயத்திலும் அழகையிலுமே தன் நேரத்தை கடத்தினாள். சுஹேல் எப்போது வருவான் என்று வாசலையே பார்த்து கொண்டு காத்திருந்தாள். கார் அரவம் கேட்டதும் ஓடி வந்து கதவை திறக்க, அங்கு முதலில் சுஹேலை கண்டதும் தான் அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. அவளையும் அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. பின் கயலையும், ரெபேக்காவையும் அவர்கள் கையில் இருக்கும் குழந்தைகளை பார்த்ததும் அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இது கயலின் குழந்தையா? என்று கேட்டுக் கொண்டே அதனை வாங்கி கொள்ள கயல், இது என்னுடைய குழந்தைகள் இல்லை துர்கா, நீ பெற்று எடுத்த உன்னுடைய குழந்தைகள் என்று கூறியதை கேட்ட துர்காவிற்கு ஒன்றுமே புரியவில்லை. என் குழந்தைகள் தான் பிறந்த போதே தவறி விட்டது என்று கூறினார்களே என்று இறுக்கமான முகத்துடன் கூற, கயல் அவளிடம் நடந்த சம்பவங்களை முழுவதும் விளக்கினாள்.