Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நரகமாகும் காதல் கணங்கள் - Tamil Novel

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 33​



போனை காதைவிட்டு கீழிறக்கிய ராஜ மாணிக்கத்திடம், "என்னாச்சிண்ணே? என்ன சொல்றான் அந்த விஜயாதித்தன்?" என்று தன் காது கடுக்கனை தடவியபடியே கேட்டான் மகா.

ராஜ மாணிக்கத்திடம் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. அவர் டீபாயிலிருந்த சிகரெட் பெட்டியிலிருந்து சிகரெட் ஒன்றை உருவி வாயில் வைத்து பற்றவைத்தார்.

"மாணிக்ஜி"

மகா கூப்பிட்டிருந்தால் இன்னும் மௌனியாகவே இருந்திருப்பாரோ என்னவோ கூப்பிட்டது வீசி என்பதால் நிமிர்ந்து உட்கார்ந்தார் ராஜ மாணிக்கம்.

வலப்புறம் நின்றிருந்த மகாவிடம் நாசி வழியே புகைவிட்டபடியே பொய் சொல்லத்துவங்கினார். "மகா, போன தடவை அவன் கார் ஒண்ணை எடுத்துட்டு வந்தோம் இல்லையா? அதைக் கேட்கிறான்.. ரொம்ப ராசியான காராம்.."

"ப்பூ! அது தானாண்ணே.. அது நம்ம கேரேஜ்ல தான் கிடக்குதுண்ணே.. நான் போய் வண்டியைப் போட்டுட்டு பாப்பாவை அழைச்சிட்டு வந்திடுறேண்ணே.." என்றான் மகா.

"இல்ல மகா.. அவன் காரை என்னை கொண்டுவந்து விட சொல்றான்.."

"அண்ணே! அவன் ஏதோ ஸ்கெட்ச் போட்டிருக்க மாதிரி தெரியுதுண்ணே"

"இல்ல மகா, அவன் என்னை தனியா வர சொல்லலை.. அதனால பயப்பட வேணாம்.."

"சரிண்ணே, இப்போவே போய் காரை எடுத்திட்டு வந்திடுறேன்.."

மகா வருவதற்குள் ராஜ மாணிக்கம் விஸ்கியை இரண்டு லாட்ஜ் உள்ளே ஏற்றியிருந்தார்.

செல்லூர் கிளம்பும்போது அந்தக்காரை மகா தான் ஓட்டினான். பக்கத்தில் வீசி உட்கார்ந்திருந்தான். பின்னால் ராஜ மாணிக்கம் பதட்டமாக நெற்றியைத் தடவிக்கொண்டிருந்தார். அவரது இடுப்பில் கனமான பிஸ்டல் ஒன்று உட்கார்ந்திருந்தது.

வீசி அவரை ப்ரன்ட் மிர்ரரில் பார்த்துக்கொண்டே வந்தான்.

செல்லூர் கிரானைட் குடவுனிற்கு வந்த பின்பு, காரிலிருந்தவர்களிடம், "எல்லாரும் உங்க பிஸ்டலை காருக்குள்ளேயே போட்டுட்டு வாங்க.. அவன் பொருள் எதுவும் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கான்" என்றார் ராஜ மாணிக்கம்.

"அண்ணே, கண்டிப்பா இது ஸ்கெட்ச் தாண்ணே" என்று மகா அறுதியிட்டு சொன்னான்.

"மகா உனக்கு தொழில் சொல்லிக்கொடுத்தது யாரு?"

"என்னண்ணே இப்படி கேட்குறீங்க? நீங்க தாண்ணே"

"அப்போ நான் சொல்றேன்! எல்லாத்தையும் உள்ளப்போடு!!" பதட்டத்தில் பலமாக சவுண்ட் விட்டிருந்தார் ராஜ மாணிக்கம்.

மகாவிற்கு விழுந்த அதட்டலில் மற்றவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து பொருள்களை காரினுள் தூக்கிப்போட்டார்கள்.

மகா முனைத்துக்கொண்டு முதல் ஆளாக தொழிற்சாலைக்குள் சென்றான்.

அனைவருமாக அந்த இடத்தையே அரைமணிநேரத்திற்கும் மேலாக அலசியிருப்பார்கள். ஆனால், ஒரு ஈ காக்காவும் அந்த இடத்தில் தட்டுப்படவில்லை.

அது ஏற்கனவே வீசியை கடத்திவந்து, கிரானைட் கட்டிங் மிஷினால் தடயம் போட்ட இடம் என்பதால் ஒருவித உணர்வலை கிளம்பியது அவனுக்குள். 'அன்றைய நாள் மட்டும் மாணிக்ஜியின் ஆட்கள் வராமல் இருந்திருந்தால்?' நினைக்கும் போதே குப்பென்று வியர்த்தது அவனுக்கு. தலையை உதறி தன்னை சமாளித்துப்பார்த்தான். இன்னும் ஏதோ ஒரு அபசுருதி அவனுக்குள் ஒலிப்பது போலவே இருந்தது. ஞாபக நீரோடையின் சலசலப்பு வேறு தொடர்ந்து அவனை இம்சித்தது.

பெரிய ராட்சத இயந்திரங்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த மகா, "என்னண்ணே.. மணி பத்தாகிடுச்சு இன்னும் யாரையும் காணோம்?" என்றான்.

ராஜ மாணிக்கமும் அவன் சொன்னவுடன் தனது கைக்கடிகாரத்தை தான் பார்த்தார். மணி பத்து ஐந்து.

'விஜயாதித்தன் பொல்லாதவன்.. இங்க எங்கயோ தான் ஒளிஞ்சிருக்கான்.. இனி வேற வழியேயில்ல.. வீசி உயிரோட இருக்கிறவரை என் பொண்ணு எனக்கு கிடைக்கப்போறதில்ல.. ஆனா, வீசியை என்னால சுட முடியுமா?'
விஸ்கியின் வேகத்தில் அவரின் ரத்தவோட்டம் அதிகரித்தது.

"அண்ணே.. அண்ணே" மகாவின் உலுக்கலில் சுயநினைவுக்கு வந்த ராஜ மாணிக்கம் வீசியைத் தேடினார்.

அவன் அவருக்கு பின்னே.. மேலேயிருந்து தொங்கிக்கொண்டிருந்த இரும்புச் சங்கிலியுடனான வளையங்களையே வெறித்துக் கொண்டிருந்தான்.

ராஜ மாணிக்கத்தின் முகம் வேதனையில் சுருங்கியது. கைகள் வெடவெடக்க தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை வெளியே எடுத்தார்.

தனது பதினைந்து வயதில் முதல்முதலாக அவர் பிஸ்டலை தொட்டபோது கூட அதைப் பார்த்து பயந்ததாகவோ, கைகள் நடுங்கியதாகவோ அவருக்கு நினைவில்லை.

ஆனால், இப்போது அவரின் கையிலிருந்து பிஸ்டல் நழுவும் போல் இருந்தது. வசதிக்காக தனது இரு கைகளாலும் பிஸ்டலை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். அப்படியும் கைகள் ஆட்டம் கொடுத்தது.

வீசியால் வானளாவப் பறந்தவரால் தற்போது பூமியில் உறுதியாகக்கூட காலை ஊன்ற முடியாத நிலைமை. முயன்று விசையை அழுத்தினார். க்டப்!

ராஜ மாணிக்கத்தின் வரலாற்றில் முதல்முறை புல்லட் குறி தவறியது அன்று தான்.

ஒரு இன்ச் இடைவெளியில் உயிர் தப்பிய வீசி, அவரை அரண்டுப்பார்த்தான்.

ஏனையவர்களும் ராஜ மாணிக்கத்தின் கையிலிருந்த துப்பாக்கியையே தான் கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

முன்னால் அவன் திரும்பி இருந்தபோதே சரியாக சுடமுடியவில்லை. 'அடே! முதுகில் குத்திய துரோகி!' என்றவன் நேருக்கு நேராக பார்த்துக்கொண்டிருக்கும் போதா அவரால் சுட முடியும்?

அந்த நைன் எம்எம் அறுநூத்திபத்து கிராம் எடையுள்ள சாம்பல் வண்ண பிஸ்டலை மகாவிடம் தூக்கிப்போட்டு, "மகா, வீசியை சுடு" என்று உத்தரவிட்டார்.

வீசியின் உடலெங்கும் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.

மகா குழப்பத்தோடு கேட்டான். "அண்ணே, இவனைப்போய்?"

அவர் அதிகாரமாக இரைந்தார். "நான் சொல்றதை செய் மகா!"

"இல்லண்ணே முடியாது.. நம்ம இங்க பாப்பாவைத் தேடித்தானே வந்தோம்? வாங்க தேடுவோம்.."

"முட்டாள்! வீசியை போட்டாத்தான்டா விஜயாதித்தன் உன் பாப்பாவை அனுப்புவான்.."

இவ்விடத்தில் ராஜ மாணிக்கம் மட்டும் வித்யா கடத்தப்பட்டதில் இந்த வீசியும் விஜயாதித்தனுக்கு உடந்தை என்று சொல்லியிருந்தால், நிச்சயம் மகா யோசிக்காமல் வீசியை சுட்டிருப்பான். ஆனால், ராஜ மாணிக்கம் வேறல்லவா சொல்கிறார்.

"ஏண்ணே! நாளைக்கு கமலாக்காவை கடத்தி வச்சிட்டு என்னை போட சொன்னாலும் போட்டிருவீங்களாண்ணே?"

"மகா!"

"இல்லண்ணே.. உங்க மருமகன்னு தலைல தூக்கிவச்சி ஆடினவனுக்கே இந்த நிலைமைன்னா, எங்களை மாதிரி அனாதைப் பசங்களையெல்லாம் ஈஸியா போட்டிருவீங்கல்லண்ணே?"

"விஜயாதித்தன் சாதிச்சிட்டான் மகா.. அவன்கிட்ட நான் தோத்துட்டேன்" சொல்லிவிட்டு முகம் வேதனையை பிரதிபலிக்க திரும்பி நின்றுகொண்டார் ராஜ மாணிக்கம்.

அவனுக்கு அவரின் நிலை புரிந்தது. திரும்பி வீசியைப் பார்த்தான். அவன் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தன.

அது விரக்திப் புன்னகையா அல்லது அலட்சியப்புன்னகையா என்று இனங்காண முடியவில்லை மகாவால்.

அடுத்து வீசி பேசிய வார்த்தைகள்! மகா கற்பனை பண்ணிக்கூட பார்க்க இயலாதது!

"என்ன மகா யோசிக்கிற? சுடு என்னை.. உனக்கு இது முடியாத காரியமா என்ன? ஏன் தயங்குற? வித்யாவுக்காக தானே மாணிக்ஜி என்னை போட சொல்றாரு? இதோ இதே இடத்துல எட்டு வருஷத்துக்கு முன்னாடி தோலுரிச்ச ஆடு மாதிரி செத்துத் தொங்கியிருக்க வேண்டியவன் மகா நான்.. இந்த உயிர் அவர் போட்ட பிச்சை.. அவருக்காகப் போறதுல எனக்கு சந்தோசம் தான்.."

மகாவிற்கு வீசியின் மேல் வெறுப்பாகயிருந்தது. எப்படி இப்படி அப்பழுக்கற்றவனாக இவனால் இருக்க முடிகிறது? ஒவ்வொருமுறையும் எனக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணுவதே இவனுக்கு வேலையா? என்று முகத்தை சுளித்தான்.

இதுவரை ராஜ மாணிக்கத்தின் பேச்சை மீறிப்பழகிறாத மகா, இன்றும் அதேபோல் பிஸ்டலை வீசியை நோக்கி உயர்த்திப்பிடித்தான்.

வீசி நேர்கொண்ட பார்வையுடன், 'நீ சுடு.. நான் சாகத் தயார்' என்பது போலவே தன் இரு தோள்களையும் விரித்து நெஞ்சை நிமிர்த்திக்காட்டினான்.

ஒருவன் இப்படி நிற்பானாயின் யாரால் தான் அவனை சுட முடியும்?!

வாளையேந்திவிட்டு துர்க்கைக்கு களப்பலி கொடுக்க தயங்கிக் கொண்டிருந்தான் மகா. அவன் மனம் அலைக்கழிந்துகொண்டே இருந்தது. 'இவன் எனக்கு கீழ இருக்கணும்னு தான் நினைச்சேனே தவிர, இருக்கவே கூடாதுன்னு நினைக்கலையே.. ஆனா, வீசியை இப்ப சுடாம போனா பாப்பாவை.. ஆமா நிச்சயம் பாப்பாவை காப்பாத்த முடியாது' இவ்வெண்ணம் எழுந்ததுமே நெஞ்சை திடப்படுத்திக்கொண்டு முதல் குண்டை வீசியின் நெஞ்சை நோக்கி பாயவிட்டான் மகா.

ராஜ மாணிக்கம் போல் மகாவுக்குமே குறி தவறி குண்டு வீசியின் புஜத்திலேயே இறங்கியது.

சூடான ரத்தம் தெறிக்க வீசி கண்ணை மூடிய வேளையில்.. மகா ட்ரிக்கரை இழுத்து அடுத்தக்குண்டை பாய்ச்சவிருந்த வேளையில்.. இருவருக்கும் இடையில் வந்து நின்றாள் ஷ்ரதா.

மகா அவளைப் பார்த்ததுமே சுதாரித்து பிஸ்டலை கீழிறக்கினான்.

வீசியுமே, "தள்ளிப்போ ஷ்ரதா" என்று அவளை இடப்பக்கமாக கீழேப்பிடித்து தள்ளிவிட்டான்.

ராஜ மாணிக்கம் முதற்கொண்டு சுற்றியிருந்த அனைவருமே அதிர்ந்து அவளைப் பார்த்திருக்க, "உங்களுக்கு எட்டு வருசமா விசுவாசியா இருந்தவருக்கு நீங்க கொடுக்கிற பரிசு இது தானா?" என்று எழுந்து நின்றபடியே நியாயம் கேட்டாள் ஷ்ரதா.

ராஜ மாணிக்கம் குரலில் ஜீவனில்லை என்றாலும் உறுதியிருந்தது. "என் பொண்ணுக்காக நான் எதுவும் செய்யத் தயாராயிருக்கேன்.." என்றார்.

ஷ்ரதா, "உங்கப்பொண்ணு.. உங்கப்பொண்ணு" என்றபடியே சுற்றிமுற்றி பார்த்தவள், தரையில் பூஜைக்கூடையுடன் விழுந்திருந்த போனை எடுத்து அருண்மொழி என்றிருந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

எதிர்புறம், "ஹலோ! ஹலோ!" என்று ஒலிக்க, இவள் பதிலுரைக்கவில்லை.

மீண்டும் அழைப்பைத் துண்டிவிட்டு முயன்றாள். அதே "ஹலோ! ஹலோ!" கேட்டது. முன்புபோலவே பேசாமலிருந்தாள்.

பிறகு, போனை முழுமையாக அணைத்துவிட்டு, "இப்போ.. இப்போ உங்கப்பொண்ணு வந்துருவா" என்றாள்.

சொன்னபடியே வெளியேயிருந்து, "அப்பா" என்று அழைத்துக்கொண்டே ஓடிவந்து ராஜ மாணிக்கத்தின் நெஞ்சில் விழுந்தாள் வித்யா.

ஷ்ரதா வீசியை நெருங்கி, பரிதவித்தபடியே அவனது கைக்காயத்தைப் பார்த்தாள்.

அவன் தன் அடிபட்ட தோளைப் பிடித்துக்கொண்டே, "நீயெப்படி இங்க?" என்று விசாரித்தான்.

வித்யா ராஜ மாணிக்கத்தின் நெஞ்சிலிருந்து விலகியவள், சுற்றி அனைவரையும் பார்த்தாள்.

மகாவின் கையில் துப்பாக்கி, வீசியின் புஜத்தில் குண்டடி, உண்மை விளங்கியதுமே, "அற்புதம்பா! ரொம்ப அற்புதம்! அந்த சிவனேஸ்வரன் சொன்னப்போக்கூட நான் நம்பல.. ஆனா இப்போ நம்புறேன்பா.. நீங்களும் வீசியை கொல்லத் தயாராகிட்டீங்கல்ல?"

ஏற்கனவே மகள் புடவை இல்லாமல் யாரோ ஆண்மகன் ஒருவனின் சட்டையை அணிந்திருப்பதைப் பார்த்து துடித்துப் போயிருந்தவர், அவளின் கேள்வியில் இன்னும் இடிந்துபோனார்.

"வித்யா.."

"வேண்டாம்பா.. எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்.. ஆனா, என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. விஜயாதித்தனோட புக் ஸ்டால் பத்தி கலெக்டருக்கு தகவல் கொடுத்தது யாரு? நீங்க தானே? சொல்லுங்கப்பா நீங்க தானே? ம்ம் அப்போ நீங்க தலை குனிஞ்சி நிற்கிறதைப் பார்த்தா நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம் இல்ல? வீசியை விஜயாதித்தன் கிட்ட மாட்டிவிட்டு, நீங்களே அவரை காப்பாத்துற மாதிரி காப்பாத்தி, அவரை அவருக்கு எதிரா திருப்பிவிட்டு.. எதுக்குப்பா? ஏன் இந்த கெட்டபுத்தி உங்களுக்கு? என் ஆட்டம் பரதநாட்டியம்னா உங்க ஆட்டம் இப்படி மனுசங்களை வச்சி ஆடுறது தானாப்பா?" கண்கள் இடுங்கக்கேட்டாள் மகள்.

"வித்யா.." என்று அவளை இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டார் ராஜ மாணிக்கம்.

"போங்கப்பா உங்களை நான் என்னவோன்னு நினைச்சேன்.. நீங்க என்னடான்னா.." என்று அவரை கீழ்த்தரமான ஒரு ஆளாக ஒதுக்கிவிட்டு வீசியின் அருகில் வந்தாள் வித்யா.

வீசி, ஷ்ரதா என இருவருமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள்.

தனக்குத் தெரியாமலேயே தான் சதுரங்கத்தில் ஒரு காயாக நகர்த்தப்பட்டு கொண்டிருந்த உண்மை வீசியை குத்திக் கிழித்துப்போட்டது. மனம் செயலொடிந்து ராஜ மாணிக்கத்தை அசையாது பார்த்தான்.

ஷ்ரதா வீசியை கண்ணீர் மல்க பார்த்திருந்தாள்.

வீசியை நெருங்கிய வித்யா அதிரடியாக ஷ்ரதாவின் துப்பட்டாவை இழுத்து, வீசியின் கைக்காயத்திற்கு கட்டுப்போட்டாள்.

ஷ்ரதாவிற்கு அந்த அழுகையிலும் வித்யாவின் உரிமையான செயலில் கோபம் வந்தது.

வித்யா ஷ்ரதாவின் காரமான பார்வையை உள்வாங்கிக்கொண்டு நமட்டுச்சிரிப்பு சிரித்தாள்.

பின், வீசியிடம் ஷ்ரதாவின் சார்பில் நியாயம் கேட்டாள். "வீசி, எனக்குத்தெரிஞ்சு உங்களுக்கு ஷ்ரதா மேல கோபம்னா, நீங்க ஊரைவிட்டு ஓடிப்போக கூப்பிட்டும் அவ அன்னைக்கு பாலத்துக்குக் கீழ வராதது தானே?"

ஷ்ரதா லயம் தப்பிய இதயத்துடிப்புடன் அவனை தலையுயர்த்திப் பார்த்தாள்.

வீசி குழப்பரேகைகளுடன் வித்யாவைப் பார்க்க, வித்யா, "எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கறீங்களா வீசி? அன்னைக்கு ஷ்ரதாவை அங்க வரவிடாம தடுத்த சிவனேஸ்வரன் தான் சொன்னாரு.." என்றாள்.

இதில் ஷ்ரதா குறுக்கிட்டு, "வித்யா, நீங்க என்ன சொல்றீங்க?!" என்றாள்.

வித்யா ஞாபகம் வந்தவளாக, "ஓஹ்! உனக்கு எல்லாம் மறந்துப்போயிடுச்சில்ல ஷ்ரதா? இப்போ விலாவரியா சொல்ல நேரமில்ல.. மொத வீசியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போகனும்.. மகா! போய் வண்டியை எடு!" என்று கட்டளையிட்டபடியே அவன்புறம் திரும்பினாள்.

"அது வந்து பாப்பா.." என்று தயங்கினான் மகா.

"பாப்பா இல்ல.. எஜமானியம்மா.. என்ன புரியலையா? அப்பாவுக்கு உடம்பு முடியலை இல்லையா? இனி நான் தான் அவர் தொழிலை எடுத்துப் பார்த்துக்கப்போறேன்.. போ! போய் வண்டியை எடு!" என்று உத்தரவு தொனியில் சொன்னாள்.

செல்லாக்காசாய் புறந்தள்ளப்பட்ட ராஜ மாணிக்கம் 'செல்' என்று அவனுக்கு உடல்மொழியில் அனுமதி வழங்கினார்.

ஓட்டப்பந்தயவீரன் போல் ஓடி வண்டியின் கதவைத்திறந்தான் மகா.

ஷ்ரதா மற்றும் வித்யாவின் கைத்தாங்கலுடன் வீசி காரினுள் ஏற்றப்படும் முன், தள்ளிநின்ற காரின் டிக்கியிலிருந்து வந்த சத்தத்தில், "அது என்ன சத்தம் மகா?" என்றாள் வித்யா.

மகா ஓடிப்போய் தன் ஆட்களிடம் சாவி வாங்கிவந்து அந்தக்காரின் டிக்கியைத் திறந்தான். உள்ளிருந்து கீழே புரண்டு விழுந்தது சிவனேஸ்வரன்.

வீசியைத் தவிர்த்து மற்ற அனைவரும் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

வித்யா சிவனேஸ்வரனின் கட்டுகளை அவிழ்க்க உத்தரவிட்டவள், அவனை நெருங்கி, "உங்க தப்பு புரியாம, இப்பவும் நீங்க பிடிவாதமா இருப்பீங்கன்னா நீங்க மனுஷனே இல்ல சிவனேஸ்வரன்.." என்றாள்.

அவன் ஷ்ரதாவை அடிபட்ட பார்வை பார்த்தான். ஆனால், அவள் விழிகள் வீசியின் மீதே நிலைத்திருந்தது.

"ஷ்ரதாக்கூட இருந்தா தான் வீசி சந்தோசமா இருப்பாருன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சி சிவனேஸ்வரன்.. ஆனா, வீசியால தான் ஷ்ரதாவை சந்தோஷமா வச்சிக்கமுடியும்னு உங்களுக்கு தான் புரியலை.."

வித்யாவின் வார்த்தைகள் அவனுக்குள் மின்சாரத்தை பாய்ச்சியது போல் இருந்தது.

ஷ்ரதா இன்னும் வீசியையேப் பார்த்துக்கொண்டிருந்தது அவன் சுயமரியாதைக்கு மட்டுமின்றி காதல் மனதிற்கே பெரிய அடியாக அமைந்தது.

உண்மைகள் ஏன் இவ்வளவு கசப்பானவையாக இருக்கின்றன? முட்டிபோட்டபடியே தரையில் குத்தி அழுதான் சிவனேஸ்வரன்.

"ம்ம், காரை எடு மகா" என்றாள் வித்யா.

அனைவரையும் ஏற்றிக்கொண்ட கார் புழுதி கிளப்பிக்கொண்டு செல்ல, வெகுநேரத்திற்குப் பின்பே, ஷ்ரதா தன்னைவிட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டதை உணர்ந்தான் சிவனேஸ்வரன்.

H8xlJwyeIP9adN3CXbGO-_at_afsb-72HByCvf21Tr_r6tru1vesYJqsHGcbPFBWtf6xxc5T0a7G1OPqtoMru8rColx0RxIUOMuZsOc0SojuyDA_WjoK_maegVu8RYSAF1WeYN9d


காதல் கணம் கூடும்...​

இன்னும் சில கேள்விகளுக்கு பதில் இறுதி அத்தியாயத்தில் கிடைக்கும் ப்ரெண்ட்ஸ். விரைவில் இறுதி அத்தியாயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.


என்றும் உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
ஷிவானியோடு உரையாடு!
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

இறுதி கணம்​



தங்களின் வழக்கமான மருத்துவமனைக்கு வீசியை அழைத்து வந்திருந்த மகாவிற்கு வித்யாவின் மீதான மற்றவர்களின் உறுத்தும் பார்வை ஏதோபோல் இருந்தது. அவசரமாக மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.

உள்ளே சிகிச்சைக்கு அனுமதித்ததும், வித்யா வீசிக்கு மருத்துவம் பார்க்கப்படும் அறைக்குள் நின்றுகொண்டு சிவனேஸ்வரன் கூறிய கதையையெல்லாம் கூறினாள்.

வீசி வாயிலில் நின்றிருந்த ஷ்ரதாவின் முகத்தில் வந்துபோன மாற்றங்களையே குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான்.

சிவாவின் அவள் மீதான காதலுக்கும், தனது கேரளா திட்டத்திற்கும், ஆதீஸ்வரன் இறந்ததிற்கும் மட்டுமே அவள் முகம் உணர்ச்சிப் பிழம்பாகியதைக் கண்டு திடுக்கிட்டவனாக, 'அப்போ ஷ்ரதாவுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சா?' என்று துணுக்குற்றான்.

ஷ்ரதா தற்போது அவனது தோளிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் தோய்ந்த தோட்டாவை காண சகியாமல் இமைமூடியிருந்தாள்.

இல்லை அவள் அந்த சாக்கில் தனக்குள்ளாகவே மறுகிக் கொண்டிருந்தாள். 'அய்யோ! என்னால எத்தனை இழப்புகள் வருணத்தான்! என்னால எத்தனை பேருக்கு உபத்திரவம்! கோகிலா அத்தை சொன்னதுல தப்பேயில்ல.. எனக்கு அதிருஷ்டமிருந்திருந்தா என் அப்பாவுக்கு நான் மகளா பிறந்திருக்க மாட்டேன்.. எனக்கு ராசியிருந்திருந்தா எட்டு வருஷத்துக்கு முன்னாடியே உங்கக்கூட சேர்ந்திருப்பேன்.. விதி ஏன் நம்ம வாழ்க்கையில மட்டும் இப்படி விளையாடுது வருணத்தான்?! ஏன் நம்ம மேல மட்டும் இவ்வளவு கற்கள் விழுது? இல்ல வருணத்தான் எனக்கு எதுவுமே ஞாபகம் வராம நான் செத்துப்போயிருக்கணும்.. இன்னைக்கு காலையில எனக்கு எதுவுமே ஞாபகம் வந்திருக்கக்கூடாது' எண்ணங்களின் பரிணமிப்பில் அவள் கண்களிரண்டும் கலங்கி, வாயில் விம்மல்கள் வெடிவெடியாய் விட்டுவிட்டு வெடித்தன.

எவ்வளவோ முறை அவளின் அழுகையை பார்க்கப் பிடிக்காமல் திட்டியிருக்கும் வீசிக்கு, இன்று அவளுடன் சேர்ந்து அழ வேண்டும் போல் இருந்தது.

மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் ஷ்ரதா. உன் முன் நிர்வாணமாக நிற்பது போல் இருக்கிறது. உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மனம் தவிக்கிறது. ஆனால், உன்னிடம் மன்னிப்பு கேட்டால் என் கர்வம் சரிந்துவிடும். என் அகங்காரம் அழிந்துவிடும். என் ஆணவம் சுக்கு நூறாகிவிடும். சுற்றிவளைப்பான் ஏன்? என் உயிரே போய்விடும் என்று ரணத்தின் பளுவில் உள்ளுக்குள் கேவினான் வீசி. அவனால் அவனது நிலையிலிருந்து கீழிறங்கி வரமுடியவில்லை.

அவனுக்குப்போடும் தையல் ஒவ்வொன்றும் தன்னை குலை நடுங்கச்செய்ய வெளியே ஓடிவிட்டாள் ஷ்ரதா.

வித்யாவும், ஷ்ரதா சென்ற சிறிது நேரத்திலேயே மகா கையில் நெகிழி பைகளுடன் வரவும், அவனிடம் என்னவென்று விசாரிக்கும் பொருட்டு வெளியேறிவிட்டாள்.

மகாவிடம் உரையாடிய வித்யாவுக்கு மகாவின் செயல் விசித்திரமாக இருந்தது. அவனின் அன்பு அபரிமிதமாகப் பட்டது.

'நான் சொல்லாமலே எனக்கு ட்ரெஸ் வாங்கணும்னு எப்படி தோணுச்சு இவனுக்கு?' என்று நெகிழ்ந்து போனாள் அவள்.

மகா அவளிடம் வீசியைப் பார்க்க ராஜ மாணிக்கம் வந்திருப்பதாக சொல்லவும், அழகாய் விழிகளில் அபிநயம் பிடித்த வித்யா, "தாராளமா பாக்கட்டுமே.. பேசட்டுமே.. எனக்கென்ன வந்தது? ஆனா, என் விஷயத்துல மட்டும் அவரை எதுவும் தலையிடவேண்டாம்னு சொல்லிரு மகா.." என்று குரலில் கண்டிப்பு காட்டினாள்.

மகா, "சரிங்க பாப்பா" என்று அவளுக்கு தாழ்ந்துபோனான்.

வித்யா அவன் வாங்கி வந்த ஆடைகளோடும், தன் பிடிவாத கொள்கைகளோடும் தனிமையை நாடி சென்றுவிட்டாள்.

போகும்போதே ஒரு எண்ணம் முளைத்து அவளை உறுத்தியது. 'அப்பா மேல நான் இவ்ளோ கோபப்படுறதுக்குக் காரணம் வீசி தானே? வீசியை என்னால மறக்க முடியுமா? என் எட்டு வருஷ கனவை நினைச்சுப் பார்க்காம இருக்க முடியுமா? முடியலைனாலும் முடிஞ்ச மாதிரி நடிக்கணும்.. அது சுலபம் தானே?'

மகா பின்னாலிருந்து பார்க்கும்போது வித்யா செல்ல முடியாமல் நடந்து நடந்து நின்று நின்று போய்க்கொண்டிருப்பது போல் தெரிந்தது.

வீசியின் அறையைவிட்டு வெளியே வந்த ஷ்ரதா வராந்தாவில் உட்கார்ந்து சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஆயில் பெயிண்டிங் சட்டங்களையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அதுவரையிலும் தெரியாத பசி அப்போது தான் மேலெழுந்து வந்து கொண்டிருந்தது.

இடையே, ஒரு பகீர் உணர்வு தோன்றி அவளை புரட்டிப்போட்டது. 'இன்னைக்கு காலைல நான் செஞ்ச கொலை?'

அதன்பின், அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. கைகால்கள் எல்லாம் வியர்த்து கசகசத்து, "இன்னைக்கு பொழுது விடிஞ்சே இருக்கக்கூடாது முருகா!" என்று தழுதழுத்தாள்.

*****************

இரவு வீசி அறையைவிட்டு சென்றபின், கண்ணில் ஒரு பொட்டு தூக்கமில்லாமல் கிடந்த ஷ்ரதா விடிந்ததுமே குளித்துக் கிளம்பி கீழே வந்தாள்.

அபிராமி அவளிடம், "வருண் நைட் எங்கேயோ வெளிய கிளம்பின மாதிரி இருந்தது ஷ்ரதா?" என்று விசாரித்தார்.

அவள், "ஏதோ முக்கியமான வேலை வந்திட்டதுன்னு போய்ட்டாங்க அத்தை" என்று போலி சலிப்பாக சொன்னாள்.

அபிராமி முகத்தைத் திருப்பி அர்த்தமாய் சிரித்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவர் எதேச்சையாக இன்று பிரதோஷம் என்று சொல்ல, ஷ்ரதா முதுகை நிமிர்த்தி கண்கள் மின்ன, தான் கோவிலுக்குச் செல்ல விரும்புவதாக தெரிவித்தாள்.

அபிராமி, "நல்லது தாம்மா.. பிரதோஷம் அன்னைக்கு வெறும் வயித்தோட சிவன் கோவிலுக்குப்போய் வில்வ மாலை சாத்திட்டு, அப்படியே வெளிய மாட்டுக்கு அகத்திக்கீரை வாங்கிப்போட்டுட்டு வந்தா ரொம்ப சுபிட்சம்பாங்க.. நேத்து நீயும் வருணும் ஒண்ணா கோவிலுக்கு கிளம்பினபோது என் மனசே நிறைஞ்சிப்போயிடுச்சி.. கேட்டதை கொடுக்கிற கடவுளுக்கு நாமளும் பார்த்துப்பாராம செய்யணும் இல்லையா?" கேட்டுவிட்டு, "நீ இப்போவேவா கோவிலுக்குக் கிளம்புற?" என்று சந்தேகமாகக் கேட்டார்.

அவள் ஆமென்று தலையசைத்தாள்.

உடனே கிளம்ப முடியாத நிலையில் இருந்தவர், அவளை மட்டுமாக கோவிலுக்கு அனுப்பிவைத்தார்.

ஷ்ரதா அனைத்து கடவுள்களையும் தரிசித்துவிட்டு இறுதியில் தனது ஆஸ்தான முருகன் சன்னதிக்கு வந்தமர்ந்தாள்.

அவள் எவ்வளவு பிணக்கு கொண்டாலும் அடைக்கலம் என்னவோ அவன் தானே!

முருகன் சன்னதியில் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தவள், இடையே கண்ணைத் திறந்தபோது எதிரில் சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி முருகனை பிரார்த்தித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

முதல்முறை அவளை அலட்சியமாகப் பார்த்த ஷ்ரதா, இரண்டாம் முறை அவளை கண்களிரண்டும் வெளியே தெறித்துவிழுவது போல் பார்த்தாள். ஏனெனில், தன் கண்ணையே நம்ப முடியவில்லை அவளால்.

ஆர்வம் தாங்காமல் அவள், "தாரிணி" என்று உரக்கக் கத்தியபோது, அந்தப்பெண் கவனிக்காமல் முருகனையே சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

ஷ்ரதா திடுதிடுவென ஓடிப்போய் அவளை நிறுத்தியவள், 'ஹே! தாரிணி எப்படியிருக்க?" என்று மூச்சு வாங்கக்கேட்டாள்.

ஷ்ரதாவை ஏறயிறங்க பார்த்த அந்தப்பெண், "தாரிணியா? நான் தாரிணி இல்ல.. அவ தங்கச்சி ரோகினி" என்று பட்டென்று சொல்லிவிட்டு விலகினாள்.

ஷ்ரதா தனக்குப் பிடிக்காத பாலை குடிக்க சொன்னது போல் சங்கடமாக நின்றிருந்தாள்.

அப்போது அந்தப்பெண் திரும்பி வந்து, "நீங்க? ஷ்ரதா அக்கா தானே?!" என்று அவள் வயிற்றில் பாலை வார்த்தாள்.

பின், "உங்களுக்கு தலைல அடிபட்டு எல்லாம் மறந்திருந்ததே.. ஞாபகம் வந்திருச்சா?" என்று சந்தேகமாகக் கேட்டாள்.

ஷ்ரதா இன்னும் கூச்சமாகி, "அது.. அது.. ம்ம் வந்திருச்சிமா.." என்று பொய் சொன்னாள்.

தொடர்ந்து, "உன் அக்கா எப்படிம்மா இருக்கா?" என்று முனைப்புடன் விசாரித்தாள்.

"அக்கா, அதுவந்து உங்கக்கிட்ட சொல்லலாமா கூடாதா தெரியலை?" கோவில் என்பதாலோ என்னவோ அந்தப்பெண் தயங்கினாள்.

"என்னமா? சும்மா சொல்லுமா?" என்று ஊக்கினாள் ஷ்ரதா.

ரோகினி துக்கம் தாங்கிய குரலில், "தாரிணி நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டாக்கா.. ஆக்சிடென்டாகி ரெண்டு வருஷம் தான் எங்கக்கூட இருந்தா.. அப்புறம்.." என்று சொல்லமுடியாமல் நிறுத்தினாள்.

ஷ்ரதா, "முருகா!" என்று காதை மூடிக்கொண்டாள்.

"ஆக்சிடென்ட்ல தான் அவ உடம்பு விழுந்து போச்சிக்கா.. அந்த ரெண்டுவருசம் அவளை வச்சிட்டு நாங்க ரொம்ப சிரமப்பட்டோம்.. அந்த நாட்களை நினைச்சா எப்படி கடந்து வந்தோம்னு இப்போக்கூட கண்ணீர் வருது.." இன்னும் என்னென்ன சொன்னாளோ அவள், விபத்தில் இரண்டு வருடங்களும் உடல் கட்டிலிலேயே கிடையாக கிடந்தவளைப் பற்றி கேட்டதுமே உடல் உதறி தலை சுற்றியது ஷ்ரதாவுக்கு.

கண்கள் இருட்டிக்கொண்டு வந்ததில் எதிரில் நின்ற பெண் எப்போது சென்றாள் என்றும் தெரியவில்லை.

மூளையில் எதுவும் உரைக்கவில்லை அவளுக்கு. அருகிலிருந்த தூணைப் பற்றிக்கொண்டு அப்படியே சாய்ந்துவிட்டாள்.

கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் ஷ்ரதா அந்த நிலையிலேயே இருந்தாள்.

மூளைக்குள் மின்சாரம் செலுத்தியதுபோல் பலத்த வேகத்தில் அவள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நினைவுப்பாலங்கள் செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தது போலவே, மூடிய இமைகளை அசைத்துக்கொண்டே இருந்தாள்.

திடுக் திடுக்கென்று ஓரிரு சம்பவங்கள் அவள் நினைவு வட்டத்துக்குள் தலைகாட்டியபோது, அவளின் முகமும் அதற்கேற்றாற்போன்ற பாவனைகளை வெளிப்படுத்தியது.

தான் வீசியுடன் திருப்பரங்குன்றம் சென்றுவந்தது நினைவு வந்தபோது அவள் இதழ்கள் சிரிப்பில் நெளிந்தன. பட்டென்று தான் முத்தம் கொடுத்து வீசியிடம் அறைவாங்கிய போது அவள் முகம் வேதனையை பிரதிபலித்தது. ஆதீஸ்வரனுடனான பழக்கம் ஏற்படுகையில் அருவருப்பு காட்டினாள். மீண்டும் வீசியை கல்லூரியில் சந்தித்து, அவன் தன்னை வெறுத்து ஒதுக்கியபோது பரிதவித்துப்போனாள். தன் தந்தையின் சுயரூபத்தை அறிந்தபோது, முகம் சுருக்கி கோபத்தை வெளிப்படுத்தினாள். அன்று அந்த ஆட்டோவில் உருண்டபோது, "அம்மா" என்று பயத்தில் நெஞ்சுக்கூடு உறைய அலறியபடியே கண்விழித்தாள் ஷ்ரதா.

கோவிலில் யாரோ பலமாக மணியடித்துக் கொண்டிருந்தார்கள். ஷ்ரதாவின் திறந்த கண்கள் இரண்டிலும் மிளகாயை தேய்த்ததுபோல் கண்ணீர் மளமளவென்று கொட்டித்தீர்த்தது. "தாரு, சாரிடி" என்றே குற்றவுணர்வில் விம்மினாள்.

"அன்னைக்கு.. நான் தானேடி வேகமா போக சொன்னேன்.. அய்யோ! என்னால தான் எல்லாம்.. உன்னை நானே கொன்னுட்டேன்டி தாரு.." என்று அவளால் அந்த உணர்ச்சியின் கனத்தை தாங்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கதறினாள்.

போவோர் வருவோரெல்லாம் அவளை பாவமாக பார்த்துசென்றார்கள்.

தேற்றுவாரின்றி கரைந்து கொண்டிருந்தவள்
அன்று மருத்துவமனையில் ஆதீஸ்வரன் தன் கழுத்தில் தாலி கட்டிய தருணம் ஞாபகம் வந்தபோது, மீண்டும் ஒரு ஓலமிட்டாள். "அய்யோ! தப்பு! தப்பு! எல்லாம் என்னால தான்.. நான் ஆதி அத்தான்கிட்ட அப்படி பேசினதால தான்.." என்று தன் கன்னத்தில் அறைந்துகொண்டு அழுதாள்.

பின், கண்களைத் துடைத்துக்கொண்டு, "இப்போ.. இப்போ.. ஆதி அத்தான் எங்க? இடையில என்னாச்சி? அவங்க எங்கப் போனாங்க? எங்கப் போனாலும் சரி.. நிச்சயம் நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.. அய்யோ! வருண் அத்தானுக்கு இது தெரியுமா?! நிச்சயம் அண்ணி மூலமா தெரிஞ்சிருக்கும்.. ஒருவேளை எல்லாம் தெரிஞ்சதால தான் அவர் இப்படி என்னை டார்ச்சர் பண்றாரா? இல்ல வருணத்தான் இனி நான் உங்க முன்னாடி இருக்கப்போறதில்ல.." எடுத்த முடிவுடன் தன் பிறந்த வீட்டிற்கு சென்றாள் ஷ்ரதா.

தன் அன்னை கூப்பிட கூப்பிட நிற்காமல் ஆவேசமாக நேரே தனது தந்தையின் அறைக்குச்சென்றாள்.

அப்படி சென்றபோது தான் அவர் பேசியதனைத்தையும் கேட்க நேர்ந்தது அவளால்.

திரும்பிய விஜயாதித்தன் இவளைப் பார்த்ததும் நெருப்பை மிதித்தது போல் திகைத்துவிட்டார். ஒரு தடுமாற்றம் ஓடி மறைந்தது அவர் முகத்தில்.

ஷ்ரதா அவரை திகிலுடன் பார்த்தபடியே அடியெடுத்து வைத்தாள். "நீங்க மாறவே இல்லைல? உங்க கொடுங்குணம் மாறவே செய்யாதில்ல? உங்களை மாதிரி ஒருத்தருக்கு மகளா பிறந்ததுக்கு என்னையே எனக்கு அழிச்சிக்கணும் போலயிருக்கு.."

"என்ன ஷ்ரதாம்மா என்னென்னமோ பேசற?"

"ச்சீ! என்னைத் தொடாதீங்க.. உங்க பாவப்பட்ட கையால என்னைத் தொட வேணாம்.. எத்தனை பேர் உயிரை குடிச்சதோ இந்தக்கை?"

"ஷ்ரதாம்மா"

"எனக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.. இப்போ நீங்க பேசினதையும் நான் கேட்டுட்டேன்.. இதுக்கு மேலயும் நீங்க என்கிட்ட நடிக்க வேணாம்.."

"ஓ! ஞாபகம் வந்திடுச்சா! சரிம்மா.. நம்ம விவாதத்தை நான் வெளிய போயிட்டு வந்த பின்னாடி வச்சிக்கலாம்.."

"இல்ல.. இல்ல.. நான் உங்களை வெளியப்போக விடமாட்டேன்.."

"தள்ளிப்போ ஷ்ரதா"

"இல்ல.. இல்ல.. நீங்க போகக்கூடாது"

"நிச்சயம் நான் போயே ஆகணும்.. நான் ரொம்ப நாளா காத்திருந்த தருணம் இது"

சடுதியில் அவர் காலில் விழுந்தவள், "ப்ளீஸ்ப்பா.. அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்கப்பா" என்றாள்.

"நீ சின்ன வயசுல நான் தொழிலுக்குப் போகும்போது என் காலைக்கட்டி அழுதது தாம்மா ஞாபகம் வருது" உதாசீனமாய் அவளது பிடியிலிருந்து தனது கால்களை விலக்கிக்கொண்டார் விஜயாதித்தன்.

அவர் முன்னேற, "அப்பா நில்லுங்க!" என்று உச்சஸ்தாயில் கத்தினாள் ஷ்ரதா.

அவர் அவள் குரலில் எதையோ கண்டு திரும்பிப்பார்த்தார். கையில் துப்பாக்கியுடன் அவரை குறி பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

அவர் உடனே தனது இடுப்பை தடவிப் பார்த்தார்.

ராஜ மாணிக்கத்திடம் போன்போட்டு மிரட்டும் அவசரத்தில், தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியை டீபாயிலேயே மறந்துவிட்ட தனது மடத்தனத்தை இப்போது எண்ணி நொந்தார்.

"ஷ்ரதா துப்பாக்கியைக் கொடு!" என்று அருகில் வந்தவரிடம், 'தரமாட்டேன்' என்றவாறே துப்பாக்கியை கெட்டியாக இறுக்கிப் பிடித்துக்கொண்டாள் ஷ்ரதா.

"கொடு கழுதை" என்று ஒரே எட்டில் அவளை சமீபித்து, அவளின் கையிலிருந்த துப்பாக்கியை பலவந்தமாக பறிக்க முயன்றார் விஜயாதித்தன்.

இருவரின் வலுவிலும் துப்பாக்கி ஒவ்வொரு மூலையாக குறி வைத்துத் திரும்பியது.

இறுதியில் விஜயாதித்தனின் வலது மார்பிலேயே குண்டு இரண்டுமுறை உள்ளிறங்கியது.

விஜயாதித்தன் தான் சுடப்பட்டதை உணர்ந்ததுமே துப்பாக்கியை விட்டுவிட்டார்.

ஷ்ரதா சுட்டுவிட்டு தன் கையிலிருந்த துப்பாக்கியை ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பதுபோல் பார்த்து தூக்கி வீசிவிட்டாள்.

அவரின் மார்பிலிருந்து வழிந்த ரத்தம் அவரின் வெள்ளை சட்டை, வேஷ்டி என நிதானமாக பரவ, ஷ்ரதா இன்னும் விக்கித்தவள் விக்கித்தபடியே நின்றிருந்தாள்.

பின், வெறி பிடித்தவள் போல் அவ்விடத்தைவிட்டு ஓட முயன்றாள்.

ஆனால், அவளால் வெளியேற முடியாதபடி, அனைத்தையும் பார்த்துவிட்ட உடல்மொழியில் அவளை எதிர்கொண்டு நின்றிருந்தாள் மதுபாலா.

எப்போதும் தான் விஜயாதித்தனுக்கு ஓட்ஸ் கஞ்சி கொடுக்கும் நேரத்திற்கு கையில் கோப்பையுடன் வந்திருந்த மதுபாலாவிற்கு, விஜயாதித்தன் அருண்மொழியிடம் பேசியது அதிர்ச்சியென்றால், ஷ்ரதா அவரை சுட்டது பேரதிர்ச்சியாக இருந்தது.

ஷ்ரதா, "அண்ணி.. அண்ணி.." என்று நடுங்கியபடியே அவளருகில் வர, மதுபாலா இயந்திரம் போல் பதிலளித்தாள். "நான் செய்ய நினைச்சதை நீ செஞ்சிட்ட ஷ்ரதா.." என்று.

"இல்ல அண்ணி, நான் வேணும்னே பண்ணலை அண்ணி" என்று மதுபாலாவின் தோளில் முகம் புதைத்துத் தேம்பினாள் ஷ்ரதா.

அவளின் முதுகை நீவிவிட்ட மதுபாலா விஜயாதித்தனின் சடலத்தை வெறித்தபடியே, "நீ எப்படி பண்ணுனியோ.. ஆனா சரியா தான் பண்ணியிருக்க" என்றாள்.

அவளுக்கு எப்போதிலிருந்து விஜயாதித்தனை கொல்லும் வெறி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் ஷ்ரதாவை போல் சற்று நேரத்திற்கு முன்பு மட்டும் முளைத்ததன்று.

ஷ்ரதாவின் அழுகை நிற்பது போல் தெரியவில்லை எனவும், அவளை தன்னைவிட்டுப் பிரித்து, "போதும் ஷ்ரதா அழுகையை நிறுத்து.. இது அழறதற்கான நேரமில்ல.." என்று அவளின் தோள்களை உலுக்கினாள் மதுபாலா.

ஷ்ரதா முகம் சிவந்து, "அண்ணி, எனக்கு ரொம்ப பயமாயிருக்கு அண்ணி.." என்று மீண்டும் அவளை கட்டிப்பிடித்தாள்.

"இங்கப்பாரு ஷ்ரதா" என்று மீண்டும் அவளை பலவந்தமாக தன்னைவிட்டுப் பிரித்த மதுபாலா,

"நீ சீக்கிரம் போய் வருணைக் காப்பாத்தணும் ஷ்ரதா.. அவன் இப்போ ஆபத்துல இருக்கான்.." என்று நினைவுபடுத்தினாள்.

"ஆமா அண்ணி" என்று தலையாட்டிய ஷ்ரதா,

"வாங்க அண்ணி அவரை காப்பாத்துவோம்" என்று கூப்பிட்டபோது,

"இல்ல ஷ்ரதா, என்னால இப்போ இப்படி விட்டுட்டு வர முடியாது.. நீ போ" என்று வலுக்கட்டாயமாக மறுத்தாள் மதுபாலா.

ஷ்ரதா, ஏமாற்றமாக வெளியே செல்ல எத்தனித்தபோது, "நில்லு ஷ்ரதா" என்று தடுத்த மதுபாலா, கீழே அலங்கோலமாய் கிடந்த விஜயாதித்தனின் அருகிலிருந்த கைப்பேசியை எடுத்து வந்து, "உங்கண்ணனுக்கு இதுலயிருந்து உத்தரவு போனா தான் என் தம்பியை நீ காப்பாத்த முடியும்" என்று அதனை அவள் கையில் திணித்தாள்.

கைப்பேசியை நன்றி பெருக்குடன் வாங்கிக்கொண்ட ஷ்ரதா கதவை நெருங்கியபோது, "ஷ்ரதா, இங்க நடந்ததை மறந்திரு.. வெளிய யார்கிட்டயும் சொல்லாத" என்று எச்சரித்தாள் மதுபாலா.

அவளின் குரலிலிருந்த அதிகாரம் ஷ்ரதாவை காரணம் கேட்காமலேயே சரியென்று தலையாட்ட வைத்தது.

"சரி கிளம்பு" என்றவள் சொன்னதும் புயல் வேகத்தில் வெளியே சாடினாள் ஷ்ரதா.

வீட்டிலிருந்து கிளம்பியவள் வழியில் செல்லும்போது முழுவதும் முருகனை வேண்டிக்கொண்டே வந்தாள். "வருணத்தானுக்கு மட்டும் எதுவும் ஆகக்கூடாது முருகா" என்றே உருப்போட்டாள்.

இடம் தெரியாமல் முட்டிமோதி வந்ததால் அவள் எவ்வளவு விரைவாக வந்தும், வீசியை குண்டடியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.

அவன் தோளில் தோட்டா இறங்கிய பின்பே அவளால் அங்கு வந்தடைய முடிந்தது.

இருமுறை துப்பாக்கி சுடப்படும் ஓசைக்கேட்டதும், ஷ்ரதா விட்ட அழைப்பை தனது தந்தையின் அழைப்பாக நினைத்துக்கொண்டு வித்யாவை விடுவித்த அருண்மொழி, திடிரென புது எண்ணிலிருந்து தனக்கு அழைப்பு வரவும் ஏற்று காதில் வைத்தான்.

"ஹலோ, கிரானைட் பேக்டரி முதலாளி விஜயாதித்தனோட பையன் அருண்மொழி தானே சார் நீங்க?"

"ஆமா, நீங்க யாரு?"

"நாங்க கீரைத்துரை போலீஸ் ஸ்டேஷன்லயிருந்து பேசுறோம் சார்.. நீங்க கொஞ்சம் ஸ்டேசன்வரைக்கும் வர முடியுமா சார்?"

"சார், என்ன விஷயமான்னு சொன்னீங்கன்னா?"

"ஒண்ணுமில்ல சார், உங்க வைஃப் மதுபாலா பத்தி உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணும் அதுக்குத்தான்.."

"என் வைஃப் பத்தியா? சார் நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலை சார்.."

"உங்க வைஃப் எங்கக்கிட்ட அவங்க மாமனார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை பண்ணினதால அவரை சுட்டு கொன்னுட்டதா வந்து சரணடைஞ்சிருக்காங்க சார்.. அவங்க புத்தி சுவாதீனத்தோட தான் இருக்காங்களான்னு விசாரிக்க தான் சார் உங்களை ஸ்டேசன் வரை வரசொல்றோம்.."

அருண்மொழியின் கையிலிருந்து செல்போன் நழுவி விழுந்தது.

***************

தன் வீட்டில் நடந்த சம்பவங்களை நினைத்ததுமே தொண்டைத் தண்ணீர் வற்ற கதறியழுதாள் ஷ்ரதா.

திடுமென அவளுக்கு வலப்புறமிருந்து வந்த ராஜ மாணிக்கம், "வீசி உள்ள தானேம்மா இருக்கான்?" என்று வினவியபடியே அவளைக் கடந்து வேகநடையுடன் தன் ஆட்கள் மூவர் பின்தொடர உள்ளே சென்றார்.

ஷ்ரதா அறையின் கதவருகிலேயே நின்றிருந்து அவர்களைப் பார்த்திருந்தாள்.

வீசி ராஜ மாணிக்கத்தை கண்டதுமே உடல் இறுகிப்போனான். முகம் வெறுப்பை உமிழ்வது போல் இருந்தது.

தன்னைப் பார்த்ததும் உடல்மொழியிலேயே அவன் செலுத்தும் மரியாதை காணாமல் போயிருந்ததை அவரும் உணராமல் இல்லை.

"க்ஹும்.. எட்டு வருஷத்துக்கு முன்னாடி புத்தகக் கடையில விஜயாதித்தன் ஆட்களை போட்டு புரட்டி எடுத்தியே, அப்போ தான் வீசி உன்னைப்பத்தி எனக்குத் தெரியும்.. அன்னைக்கு உன்கிட்ட அடிவாங்கினவங்கள்ல என் ஆளும் ஒருத்தன்.. என்கிட்ட ப்ரொமோசனுக்கு சிபாரிசுக்கேட்டு வந்திருந்த கான்ஸ்டபிள் அறிவழனும் உன்னைப்பத்தி சொன்னான்.. இந்த உலகத்துல சிறந்த பொருளை எல்லாரும் தங்களதா ஆக்கிக்கிறனும்னு தானே வீசி நினைப்பாங்க? நானும் அப்படி நினைச்சதுல தப்பில்லையே?"

"தப்பில்ல மாணிக்ஜி.. ஆனா, என்னை ஒரு பொருளா நீங்க நினைச்சது தான் தப்பு" மட்டையால் தலையில் ஓங்கி அடிவாங்கியது போல் இருந்தது ராஜ மாணிக்கத்திற்கு.

"நீ என்னை துரோகின்னு நினைக்கிறியா வீசி?"

"...."

"நினைக்கிறதா இருந்தா நினைச்சிக்கோ.. ஆனா, உன்னை மாதிரி ஒருத்தனாலும் என் மனசுல இடம் பிடிக்க முடியாதுடா.. நல்லாயிரு போ!" என்று ஆசிர்வதிக்கும்போதே சிவந்த அவரது வலக்கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கோடாக இறங்கி விட்டது.

தொண்டையைச் செருமி தன்னை சமாளித்துக்கொண்டு வெளியேற முயன்றவரை, ஷ்ரதாவின் பரிதாப முகம் நிதானிக்கச் செய்தது.

"இனி அவன் உனக்குத்தான்.. அவனை நல்லா பார்த்துக்கோம்மா" என்று வலக்கை உயர்த்தி ஆசீர்வதித்து விட்டுப்போனார் ராஜ மாணிக்கம்.

ஷ்ரதா ராஜ மாணிக்கம் கிளம்பிய பின் வீசியின் அருகில் வந்தாள்.

கட்டிலில் உட்கார்ந்து அவனின் கட்டு போடப்பட்ட காயத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவருமே ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த மௌனம் வார்த்தைகளிட்டு நிரப்பக்கூடியதாகவும் இல்லை.

'மன்னிப்பு' என்ற வார்த்தை ரிப்பன் வெட்டி அவர்கள் தற்போது தங்களது உரையாடலைத் துவங்கலாம் தான். ஆனால், அதை சொல்வதற்கு அவன் தயாராகவும் இல்லை. அவள் கேட்பதற்கு ஆர்வமாகவும் இல்லை.

ஷ்ரதாவால் அவனிடம் போலியாகக்கூட முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், அவன் அவளை அவ்வாறு பழக்கவில்லை.

அவளின் அழகை ஆராதித்தவர்களில் எத்தனையோ பேர் அவளை சுற்றி சுற்றி வந்தார்கள்.

எது அவளை வீசியை மட்டுமே சுற்ற வைத்தது?

எது அவளை அவனை மட்டுமே திரும்ப திரும்ப நினைக்க வைத்தது?

எது அவளை அவனை மட்டுமே நேசிக்க வைத்தது?

அந்த எது என்ற ஒன்று இருக்கும்வரை அவளால் அவனிடம் அடிமைப்பட்டு கிடக்கும் தன் மனதை சிறை மீட்கவே முடியாது!

எப்போது வீசி ஷ்ரதாவின் கழுத்தை வளைத்து தனது வலக்கையைப் போட்டான்; எப்போது அவள் இதழ் நோக்கி குனிந்தான் என்று தெரியவில்லை. ஆனால், இதழ்கள் நான்கும் ஒன்றோடொன்று ஆயுள் கைதியாய் சிறைப்பட்டுக் கிடந்தது!

3CWJLhpHbu1E95HwGkRG-SNoDUI_Gc7hc2-obSuvaOf1KUVB9Z3Ib9VX5cxhIrvO3gniEnmXO1Ak5tPBHyiStafvsnqxHUd9n3kJDQ4swm5gQA8L4BXBDVnCEn-PIfJcr3F2HPl1


காதல் கணம் கூடிக்கொண்டேப் போகும்❣️
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
நாவலின் இறுதிவரை என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி பட்டூஸ்❣️

சிலருக்கு இம்முடிவு நிறைவு தந்திருக்கலாம். சிலருக்கு தராமல் இருக்கலாம். ஆனால், இப்படி முடிப்பது தான் சரியென்று பட்டது எனக்கு.

இப்போட்டியில் பங்குபெறவில்லையென்றால் நிறைய புதிய வாசகர்களை இழந்திருப்பேன். இந்நல்வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு என்னுடைய அன்பு கலந்த நன்றிகள் நித்யாக்கா❣️

ஒரு முக்கியமான ஆளைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும். சக போட்டியாளராக இருந்தாலும் 'ஷிவானி இந்த இடத்துல இமோசன் கம்மிம்மா, இந்த கேரக்டர் இப்படி சொன்ன இடம் சரியா புரியலை' என்று கூறி எனது எழுத்துகளை நான் திருத்திக்கொள்ள உதவியாக இருந்த தீக்ஷிதா லக்ஷ்மி அக்காவிற்கு இவ்விடத்தில் நன்றி கூற கடமைபட்டுள்ளேன். திட்டுவீர்கள் என்று தெரியும். ஆனாலும் சொல்கிறேன். ரொம்ப நன்றி தீக்ஷிக்கா❣️

இந்நாவல் எனக்கு நிறைய எழுத்தாள தோழமைகளையும், வாசக தோழமைகளையும் பெற்றுத்தந்தது. அவர்களுக்கு வெறுமனே நன்றி சொல்லி முடிக்க முடியாது என்னால்❣️

90 நாட்களில் 89 ஆயிரம் வாசிப்புகள் என்றால்... நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை❣️

ஒவ்வொருமுறை நான் நாவலை நிறைவு செய்யும் போதும் அந்நாவலுக்கு தொடர்ந்து கருத்து பதிவிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்களின் பெயர்களை குறிப்பிடுவது வழக்கம்.

ஆனால், இம்முறை நான் அவ்வாறு செய்யப்போவதில்லை. ஏனெனில் இந்நாவலுக்கு கருத்து பதிவிட்ட அனைவரையும் அவர்களது பேரைசொல்லி அழைத்து தான் நான் நன்றி நவிழ்ந்திருக்கிறேன்.

நான் இதுவரை யாருக்கும் காப்பி பேஸ்ட் செய்து நன்றி தெரிவித்ததில்லை. ஆகவே, நீங்கள் எப்போதும் என் நினைவிலிருப்பீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை ப்ரெண்ட்ஸ்.

உங்களைப் போலவே எனக்கும் வீசியையும் ஷ்ரதாவையும் பிரிவது கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால், நிச்சயம் இது நம் பயணத்திற்கான முடிவன்று.

அடுத்து நான் பாதியில்விட்ட கதையான "பழி வாங்கவா? உனை வாங்கவா?" நாவலுடன் உங்களை சந்திக்கிறேன் ப்ரெண்ட்ஸ்.

அப்புறம் ஒரு சந்தோஷமான விஷயம் ப்ரெண்ட்ஸ். நான் எழுதிய முதல் நாவல் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

புத்தகத்தின் தலைப்பு: நிஜமது நேசம் கொண்டேன்

நாயகனும் நாயகியும் பழி வாங்கலும் காதலுமாய் சிக்கித் தவிக்கும் கதை இது.

விலை: Rs.220

10% கழிவு விலையில் புத்தகம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் +91 9500986195 என்ற whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் ப்ரெண்ட்ஸ். போஸ்டல் கட்டணம் இலவசம்.

mwUbXzJ9UcbC0u3kOvUFqbf5Ol5pWbe8jt1mnjKyfLynRXhKi9QMZEcUoUfT-x0y-YixnynidY0phIRjLMKthG_hku4-o6Cx59P2M1Pt4voBItyPuLgi_FFkSlOz3ShdtUZoKFFC


என்றும் நான் உங்களிடம் சொல்வது தான் ப்ரெண்ட்ஸ். எங்கள் தரப்பிலிருந்து உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

வீசியையும் ஷ்ரதாவையும் ஏர்போர்ட் வரை வந்து வழியனுப்பி வைங்க ப்ரெண்ட்ஸ்😊

கருத்துத்திரி,​
ஏர்போர்ட்
 
Top Bottom