Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
வணக்கம் குண்டு மல்லீஸ்❤️ நான் உங்கள் ஷிவானி செல்வம். நிஜமது நேசம் கொண்டேன் எனது முதல் நாவல். குழந்தையினால் நாயகனும் நாயகியும் சேரும் கதை உங்களுக்கு பிடிக்குமா? பழிவாங்கலை மையமாகக் கொண்டு நாயகன் நாயகி‌ திருமணம் புரியும் கதை உங்களுக்கு பிடிக்குமா? அப்ப உங்களுக்கான நாவல் தான் இது. வாங்க கதைக்குள்ள போலாம்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 1


செங்கதிரோனின் பொன்னொளி கிரணங்கள் பட்டு உயிர்களெல்லாம் ஜனித்துக் கொண்டிருந்த அச்சமயத்தில், ஆனை முகத்தோனின் சரீரம் பொன்னென மின்னி, முன்னிருந்த தடாகத்தில் எதிரொளித்தது.


அக்காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட அத்தடாகையானது தாமரை, குவளை மற்றும் அல்லி என முக்கிய மலர்களால் நிறைந்திருந்தது. அவைகளில் தாமரைகள் மட்டும் தன் காதலன் பரிதியைக் கண்ட மகிழ்ச்சியில் இதழ் விரித்திருந்தன.


அன்றைய நாளில் நடைபெறவிருக்கும் தன் செல்லப் பெயர்த்தியின் நிச்சய விழாவிற்காக அங்கு சிறப்பு பூஜை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் சங்கரப்பாண்டியன்.


பூஜையின் நடுவே கடவுளிடம், “அப்பா விநாயகா! நீ தான்பா நல்லபடியா இந்த நிச்சயத்தை கல்யாணம் வரை கொண்டுபோய் அருள் புரியனும்“ என்று தன் கன்னங்களில் போட்டுக்கொண்டார்.


பூஜையை முடித்த அர்ச்சகர் விபூதித் தட்டை நீட்ட அனைவரும் அதனை தொட்டுக் கும்பிட்டனர்.


முறையே பூஜை முடித்து அனைவரும் எதிரிலிருந்த அம்மாளிகைக்குள் புகுந்து கொண்ட சமயம், மாளிகையின் பின்புறத்தில் கொலுவீற்றிருந்த தொப்பைப் பிள்ளையார், 'டேய் தகப்பா! நானே இன்னும் ஒன்னும் அமையாம, தனியா இந்தத் தடாகையில உட்கார்ந்து தவம் கிடக்கேன். இதுல நீ வேற ஏன்டா என்னை டிஸ்டர்ப் பண்ற? உன் பேத்தி கல்யாணத்தை நல்ல முறையில நான் தான் நடத்தி வைக்கணுமா? நெவர். டேய்! நான் என்ன கடவுளா? இல்ல கல்யாண ஆர்கனைசராடா? உன் பேத்தி சம்யுக்தாவை பிரித்விராஜன் தன் ஆடிக்கார்ல வந்து தூக்கிட்டுப் போகப்போறான். அவன் கூட நீயே உன் பேத்தியை அனுப்பி வச்சிட்டு, டாட்டா காட்டப்போறப் பாரு' என நொடித்துக் கொண்டவர், வெளியே தனது அக்மார்க் புன்னகையை வீசி, தன் தும்பிக்கைக்குள் மறைத்துக் கொண்டார்.


அக்காலைப் பொழுதில் பகலவன் தன் தரிசனத்தை பண்ணைபுரத்தில் அமைந்திருந்த அம்மாளிகைக்கும் கொடுத்து ஒளிபெறச் செய்திருக்க, தன் செல்லப் பெயர்த்தியின் நிச்சய விழாவிற்காக வீட்டையே அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார் அங்காளப் பரமேஸ்வரி.


அந்த எழிலகம் மட்டுமல்லாது ஊரையே அடக்கி ஆளும் தொழில்வளம் மற்றும் அரசியல் பலம் வாய்ந்தவர் சங்கரப்பாண்டியன். அவரது பெயர்த்தியின் நிச்சயவிழா என்றால் கேட்கவா வேண்டும்? வீடே அல்லோல கல்லோலப்படுகிறது.


"பெரியம்மா, நாமெல்லாம் இப்படி அடிச்சிப் பிடிச்சி வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம். ஆனா, விழாவோட நாயகி அதிதியம்மாவை இன்னும் காணோமேம்மா?" எனக்கேட்ட பணிப்பெண்ணிடம்,


"அதிதி இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவா தனம். அதுக்குள்ள நீ இந்தப் பூவையெல்லாம் தொடுத்து முடி" என்றார் அங்காளப் பரமேஸ்வரி.


புதிதாக வாங்கிய நகைகளையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்த அவரின் மகள் ஆனந்தவதி, திடீரென தன் தாயிடம், "அம்மா, மாப்பிள்ளை ரொம்பப் பெரிய இடம் போலயிருக்கே? அப்பா கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்." என்று கூற, சுர்ரென்று கோபம் வந்தது அவருக்கு.


"அவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தா என்ன ஆனந்தி? நம்ம அதிதியைக் கல்யாணம் பண்ண அவங்க கொடுத்து வச்சிருக்கணும். ஆமா, மாப்பிள்ளையோட அப்பா எம்.பி தான். அதனால என்ன? இப்போ நமக்கு தொழில்ல ஏகப்பட்ட நஷ்டம். அது உனக்கு தெரியும் தானே? மாப்பிள்ளையோட அப்பா தான் நமக்கு இப்போ தொழில்ல உதவியா இருக்கார். உங்கப்பாவும், மாப்பிள்ளையோட தாத்தாவும் பால்ய கால சிநேகிதங்க. அவர் தான் உங்க அப்பாக்கிட்ட அதிதியைப் பொண்ணு கேட்டிருக்காரு. நாங்களும் நல்ல குடும்பம்னு சம்மதிச்சிட்டோம்." என்று கூறி அடுத்து வந்த வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.


மறுபுறம், "அந்த அனாதைக் கழுதைக்கு வந்த வாழ்க்கையைப் பார்த்தியா ஆனந்தி?" என்று தன் புறணியை துவங்கினார் மானசா. அவர் ஆனந்தவதியின் அண்ணன் மனைவி.


ஆனந்தவதி இம் கொட்டவுமில்லை. உம் கொட்டவுமில்லை.


"சின்ன வயசுலயிருந்தே உங்க அப்பா அம்மா தான் அவளைத் தலைல தூக்கி வச்சி ஆடி மகாராணி ஆக்கிட்டாங்க ஆனந்தி. என்னையும், எம் பொண்ணையும், ஏன் உன்னைக் கூட இந்த வீட்டுல மதிக்க ஆளில்லையே?" எனத்தன் வெறுப்பை கக்கிக் கொண்டிருந்தார்.


ஆனந்தவதியோ, "விடுங்க அண்ணி, நம்மளைப் பிடிச்சத் தொல்லை இத்தோட ஒழியப் போகுதேனு நாம சந்தோசம் தான் படணும்" என்று பதிலுரைத்ததோடு, மீண்டும் தன் நகைகள், உடைகள் ஆராயும் வேலைகளைத் தொடர்ந்தார்.


இவ்வாறு அவ்வீட்டில் ஆளாளுக்கு ஒவ்வொரு மனநிலையில் பிடித்தும் பிடிக்காமலும் நிச்சய ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டிருக்க, திடீரென ஒரு சம்பவம் நிகழ்ந்தது.


அக்கணம் அருகில் தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து வரவுசெலவு கணக்குகளை கவனித்துக் கொண்டிருந்தார் சங்கரப்பாண்டியன். தன் மகனிடம் கணக்குகளில் உள்ள சில சந்தேகங்களை கேட்டு தெளிந்துக் கொண்டிருந்தவர், திடீரென தன் வீட்டின் முன்பு வந்து நின்ற கார்களைக் கண்டு எழுந்து நின்றார்.


பல கோடிகளை விழுங்கிய அம்மாளிகையின் முன் எறும்புபோல் வரிசை வரிசையாய் வந்து நின்றது ஆடி, பென்ஸ் கார்களின் அணிவகுப்பு.


ஆடிக் காரிலிருந்து இறங்கிய ஓட்டுநர் நேராய் காரின் பின்பக்கக் கதவை திறந்து வைத்து, தன் எஜமானியின் வருகைக்காய் சிரம் தாழ்த்தி நின்றார்.


தோட்டத்தில் நின்ற சங்கரப்பாண்டியன் அக்கார்களைக் கண்டு அவ்விடம் நோக்கி நகர்ந்தார்.


அங்காளப் பரமேஸ்வரியும் வந்திருப்பது யார்? என அறியும் நோக்கில் தன் கணவரின் அருகில் சென்று நின்று கொண்டார்.


அக்காரிலிருந்து இறங்கியது செங்குளத்தின் குலதெய்வம் நாச்சியம்மை. அறுபது வயதினை தொட்டிருந்தவர் பச்சை நிற சுங்குடிச்சேலையை பின்கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார். நெற்றியில் திருநீற்றை பட்டையாகப் பூசி, கொண்டையைத் தூக்கி வாரி முடிந்திருந்தவர் மிதப்பான பார்வையுடன் அனைவரையும் அளவிட்டார்.


அவரின் வருகையில் வாயில் ஈ போகாத குறையாக நின்றிருந்தனர் சங்கரப்பாண்டியனின் குடும்பத்தினர்.


இருபது வருடங்களுக்கு முன்பு 'இந்தக் குடும்பத்தின் நிம்மதியை அழிப்பதே எனது லட்சியம்' என சூளுரைத்துச் சென்றவர் இப்போது இந்நன்னாளில் வந்திருக்கிறார் என்றால் அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைக்காதா என்ன?


அவரின் வருகையில் ஸ்தம்பித்து போயிருந்த சங்கரப்பாண்டியன், முதல் ஆளாய் சுதாரித்து அவரை வீட்டினுள் வருமாறு வரவேற்றார். ஆம், தமிழர் பண்பாட்டைக் கருதி.


வீட்டிற்குள் நுழைந்ததும் பின்னால் நின்றிருந்த தன் மூன்று மகன்களில் மூத்தவனான கண்ணனை அழைத்து, பழத்தட்டினை டீபாய் மீது வைக்குமாறு பணித்தார் நாச்சியம்மை.


அங்காளப் பரமேஸ்வரி கொண்டு வந்த பழச்சாறை நிராகரித்தவர், "சம்பந்தம் பண்ண வந்த இடத்துல நினைச்சது நடக்காம கை நனைக்கறப் பழக்கம் எனக்கில்ல" என்றார் அதிரடியாக.


அவரின் பேச்சில், "அம்மா! யாருக்கு யார் சம்பந்தம் பேச வந்திருக்கா?" என்றுக் கொந்தளித்தார் சங்கரப்பாண்டியன்.


"அய்யோ! உங்களை இப்படி டென்ஷனாக்கி பார்க்கனும்னு தான் இவ்வளவு நாள் நான் காத்திருந்தது. கொடுத்த உயிர் பலிக்கு பழி வாங்காம சம்பந்தம் பண்ண வந்திருக்கேனேனு நீங்க சந்தோசம் தான் படணும். அதை விட்டுட்டு இப்படிக் கொந்தளிக்கிறீங்க? உங்களை இன்னும் டென்ஷனாக்கிப் பார்க்கணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா, பாருங்க டைம் இல்ல. அதனால நான் வந்த விசயத்தை நேரடியாவே சொல்லிடுறேன். உங்க செல்லப் பேத்தியை என் மகனுக்கு பொண்ணுக் கேட்டு வந்திருக்கேன். என்னப் பார்க்கறீங்க? இருபது வருசத்துக்கு முன்னாடி பணம், பதவினு நீங்க எவ்வளவு ஒசரத்துல இருந்தீங்களோ, அதை விட பத்து மடங்கு நான் இப்போ ஒசந்திருக்கேன். உங்க பிசினஸ்ல இப்ப ரெண்டு வருசமா நீங்க தோல்வியை சந்திக்கிறதுக்குக் காரணமும் நான் தான். என் செல்வாக்கு தான். நீங்க எம்.எல்.ஏவா இருக்கலாம். ஆனா கவர்மெண்ட் இப்ப என் கையில. உங்களால ஒரு ஈர வெங்காயமும் புடுங்க முடியாது. ஆமா, எல்லாம் பணம் தான். இப்போ நான், ஐயா உங்கப் பொண்ணை கொடுங்கய்யானு உங்க முன்னாடி கெஞ்சிட்டு நிற்கல. இருபது வருசத்துக்கு முன்னாடி எப்படி உங்க முன்னாடி நிற்கக் கூட தகுதியில்லைனு சொன்னீங்களோ? அதையெல்லாம் உடைச்சி, என் குடும்பத்துல உங்களை சம்பந்தம் பண்ண வைக்க தான் நான் இப்ப வந்திருக்கேன்." என்று அழுத்தமாய் சொன்னதும்,


"ஏய்! யாரோட வீட்டுல வந்து என்ன பேசுற?" என சங்கரப்பாண்டியனின் இளைய மகன் ஈஸ்வரன் கை ஓங்கும் முன் மூலையில் கிடந்தான், நாச்சியம்மையின் மூன்றாவது மகன் கௌதமனின் கைவண்ணத்தால்.


சங்கரப்பாண்டியன் பதற்றத்தோடு எழுந்து நின்று‌ தன் மகனை அதட்டியவர், பின் நிதானமாய், "இப்போ நான் முடியாதுனு சொன்னா என்ன செய்யறதா உத்தேசம்?" என்றார்.


அக்கேள்விக்கு பதிலாய் நாச்சியம்மை கூறியதைக் கேட்டு சங்கரப்பாண்டியனின் மொத்தக் குடும்பமும் மியூசியச் சிலைகளாகினர். இது நாச்சியம்மை ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்பதால் அலட்சியமாய் மீண்டும் குரலை உயர்த்தினார்.


"இப்ப சொல்லுங்க! இந்த நிச்சயத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே? இன்னைக்கே கல்யாணம் நடந்தாகனும். எல்லா ஏற்பாடும் செய்துட்டு தான் நான் இங்க வந்திருக்கேன். இந்தத் தட்டு கொண்டு வந்ததெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயத்துக்குத் தான். ம்! சீக்கிரம் பொண்ணை என்கூட அனுப்புங்க." என அதிகாரம் செய்தார்.


அனைவரும் நாச்சியம்மை கூறியதைக் கேட்டு அதிர்ந்திருந்த அவ்வேளை, அம்மாளிகையில் தன் காலடியை எடுத்து வைத்தாள் அழகுப்பதுமை அதிதி.


அளவான உயரத்தில் பெண்மைக்குரிய அங்க லாவண்யங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்ட அதிதிக்கு வயது இருபத்தியொன்று. மையெழுதிய நீண்ட கண்களும், இடைதாண்டிய அடர்ந்த கூந்தலும் அவளது சிறப்பம்சங்கள்.


எப்போதும் சுடிதாரிலேயே வலம் வருபவள், இன்று தன் பாட்டியின் வற்புறுத்தலால் புடவை அணிந்திருந்தாள். அதனால் அவளால் வேகமாக நடக்க முடியவில்லை. இடப்பக்கத் தோளில் கைப்பை கனக்க, மறுபக்க கையிலிருந்த பெட்டியை உருட்டிக்கொண்டே மெதுவாக நடந்து வந்தாள்.


அன்னமென வந்தவளின் அழகில் மயங்கி, அவளை வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் நாச்சியம்மையின் மூன்றாவது மகன் கௌதமன்.


வாசலில் இருந்த கூட்டத்தைக் கடந்து கூடம் நுழைந்தவள், தன் பாட்டியைக் கண்டு புன்னகை சிந்தியபடியே, மற்றவரைக் கண்டு மென்னகை சிந்தினாள்.


பின், புதிதாக இருந்தவர்களை அடையாளம் காண முயன்றாள். அதற்குள் அவளை உன் அப்பா பெயர் என்னவென்று கேட்டு திசை திருப்பினார் நாச்சியம்மை.


“உதயச்சந்திரன்” என்றவள் கூறியது தான் தாமதம் அடுத்த நொடி, "நல்லதாப் போச்சு. கல்யாணப் பொண்ணே வந்துட்டா. விக்ரமா! என் மருமகளை கூட்டிட்டுப் போய் கார்ல உட்கார வைப்பா." என்றார்.


இதுவரை அவரின் மகனென கூறியவுடன் கெட்டப் பழக்க வழக்கங்களின் தத்துப்பிள்ளையான கௌதமனுக்குத் தான் தன் பெயர்த்தியைப் பெண் கேட்கிறாரோ என கலங்கியிருந்த சங்கரப்பாண்டியனின் மனம், தற்போது விக்ரமன் என்றதும் நிம்மதி கொண்டது.


இவ்வளவு நேரம் தன் பெரியன்னையின் பேச்சை, வீட்டு நிலைக்கதவின் மேல் ஸ்டைலாக சாய்ந்து நின்றுகொண்டே கேட்டுக் கொண்டிருந்த விக்ரமன், அவரின் உத்தரவில் நிமிர்ந்து அதிதியைக் கண்டான்.


நிமிர்ந்தவனை கண்ணில் ஆர்வம் பொங்கக் கண்டார் சங்கரப்பாண்டியன்.


கூரிய மூக்கும், திருத்தப்பட்ட தாடி மீசையும், நெற்றியில் கீபோர்ட் வாசிக்கும் கேசமுமென ஆண்மையின் இலக்கணமாய் திகழ்ந்தான் விக்ரமப்பாண்டியன். ஆம், அது தான் அவனது நீண்ட நாமம்.


கையிலிருந்த ஆப்பிள் ஐபோனை பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்தவன், தன் கறுப்புநிற பிளேசரை சரி செய்தபடியே, ஆராயும் பார்வையுடன் அவளை நெருங்கினான்.


பயத்தில் வேண்டாம் எனும் விதமாய் தலையசைத்துக்கொண்டே பின்னோக்கி நகர்ந்தாள் அதிதி.


அவன் வரும் முன் வேகமாய் தன் பாட்டியிடம் ஓடியவள், "இவங்கல்லாம் யார் பாட்டி? இங்க என்ன பண்றாங்க? இங்க என்ன நடக்குது?" என அவரின் கைகளை பிடித்துக்கொண்டு பரிதவித்தாள்.


அவரோ விம்மலை மட்டுமே பதிலாய் வழங்க, சங்கரப்பாண்டியன் தன் கனத்த குரலில் அவளை திகைக்கச் செய்தார்.


"இத்தனை வருசம் உனக்கு அம்மா அப்பாவா இருந்த உன் தாத்தாப் பாட்டிக்கு நீ ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சா, இதோ உன் முன்னாடி நிற்கறாங்களே? இவங்கக் கூடப் போ அதிதி. அவங்க சொல்றதைக் கேட்டு இனிமே அவங்க குடும்பத்துல ஒருத்தியா வாழப் பழகு." என அவளின் தாத்தா கூறவும், தூக்கத்தில் நடப்பவள் போல் அவரை நோக்கிச் சென்றாள் அதிதி.


முழு உண்மையையும் கூற முடியாமல் அவளின் பாட்டியும், "ஆமா அதிதி. தயவு செஞ்சு அவங்கக் கூட போயிடும்மா." என தன் வாயை மூடி அழுதார்.


அவர்களின் கண்ணீரை காண சகிக்கவில்லை அவளுக்கு.


மனதிலெடுத்த முடிவுடன் சங்கரப்பாண்டியனை நோக்கி கைக்கூப்பியவள், "நான் போகனும், அவ்வளவு தானே தாத்தா? உங்களுக்கும் பாட்டிக்கும் அது தான் சந்தோசம்னா, நான் கண்டிப்பா அவங்கக் கூடப் போறேன் தாத்தா. உங்க மேல நான் வச்சிருக்கற நம்பிக்கையில போறேன்" எனத் திரும்பி நாச்சியம்மையைப் பார்த்தாள்.


அவள் பார்வையில் ஒரு உறுதி தெரிந்தது.


தழுதழுத்த குரலில், "ஈஸ்வரா, அதிதியோட பெட்டியை அவங்க கார்ல கொண்டு போய் வைப்பா" என்றார் சங்கரப்பாண்டியன்.


தந்தை சொல் தட்டாதப் பிள்ளையாக ஈஸ்வரும் அவளின் உடைமைகளை காரில் கொண்டுபோய் ஏற்ற, ஆனந்தவதிக்கும் மானசாவிற்கும் சந்தோசம் கூத்தாடியது.


அதிதி, நாச்சியம்மையை நெருங்கிய அடுத்த நொடி ஒரு வலிய கரம் அவள் கரம் பற்றியது.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
இந்நாவலை புத்தகமாக வாங்க விரும்புவோர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளவும் ப்ரெண்ட்ஸ்.

நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 2


அதிதியை அழைத்துச் சென்று, காரில் பின் இருக்கையில் அமர வைத்தான் விக்ரமப்பாண்டியன்.


அந்தக் காரின் ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர, பக்கத்தில் நாச்சியம்மை அமர்ந்து கொண்டார். அவர் ஆணைக்கேற்ப ஏற்கனவே பதிவு செய்திருந்த அந்த ஐந்து நட்சத்திர விடுதியை நோக்கி சீறிப் பாய்ந்தது அவனது ஆடி கார்.


கைப்பேசியில் தன் தம்பி மனைவி ராதாவிற்கு அழைப்பு விடுத்த நாச்சியம்மை, "நாங்க இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல அங்க இருப்போம் ராதா. எல்லாம் தயார் தானே?" என விசாரிக்க, சாதகமான விடை கிடைத்தவுடன் அழைப்பைத் துண்டித்தார்.


சொகுசு விடுதிக்கு வந்தவுடன் வாசலில் நின்றிருந்த விக்ரமனின் அத்தை ராதா, நேராக அதிதியிடம் சென்று அவளை தங்களது அறைக்கு அழைத்து சென்றுவிட்டார். அதன் பின் விக்ரமனும் நாச்சியம்மையும் முறையே தங்களுக்கென பதிவு செய்யப்பட்ட அறைகளுக்குள் புகுந்து கொண்டனர்.


செங்குளத்தில் ஏற்கனவே நாச்சியம்மை திட்டமிட்டபடி, திருமண ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நெருங்கிய சொந்தங்கள் மட்டும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததால் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.


அறையினுள்ளே தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமனின் சின்ன அண்ணி ஸ்ருதி, கதவு தட்டுப்படும் சத்தத்தில் எரிச்சலாக சென்று திறந்து பார்த்தாள்.


வெளியே ராதா, கீர்த்தியுடன் புதிதாக வந்திருந்த அதிதியைக் கண்டதும் அவள் முகம் அசூயைக் கொண்டது.


மூளையில் முளைத்த திடீர் பொறாமையால் அதிதியை முறைத்துக் கொண்டே, "உள்ள வாங்க" என்றாள்.


அறையினுள்ளே அதிதி நுழைந்தவுடன் இரண்டு வாண்டுகள் கூட்டு சேர்ந்துக்கொண்டு, "அம்மா, இவங்க தான் எங்களோட புது சித்தியாம்மா?" என கீர்த்தியிடம் வினவ,


அவள் பதில் உரைக்கும் முன், ஸ்ருதியின் குட்டி மகன் கிஷோர் முந்திக்கொண்டு, “ஆமா இவங்க தான் நம்மோட புது சித்தி.” என்றான்.


கீர்த்தி அவன் மழலை மொழியில் சிரித்துக்கொண்டே, "ஆமாடா குட்டி, இவங்க தான் உங்களோட புது சித்தி" என அவனைத் தூக்கி கொஞ்சினாள்.


விரைவில் சிவக்கும் மருதாணிக் கலவையை அதிதியின் இரு கைகளிலும் வைத்துவிட்ட ராதா, ஐந்து நிமிடம் கழித்து மெதுவாக அவற்றை கழுவி விட்டார். பயந்திருந்த அதிதியின் முகத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக மருதாணி சிவந்துப் பிடித்திருந்தது.


அதிதியை குளியலறைக்குள் அனுப்பிய ராதா கூடுதல் தகவலாக அவளிடம், "தலை துவட்டத் துண்டு, பாவாடை, ரவிக்கைனு எல்லாம் உள்ள வச்சிருக்கேன்டா. குளிச்சிட்டு எல்லாத்தையும் மாத்தி எங்க வீட்டுப் பொண்ணா வெளிய வா என்ன?" எனவும்,


சரியென்று தலையாட்டியவளிடம் சிறிது தயக்கத்துடனே, "உன் பேர் என்னடா?" என்றார்.


அரண்ட முகத்துடன் அதிதியெனக் கூறியவளைப் பார்த்து முறுவலித்தவர், "நான் விக்ரமனுக்கு தாய் மாமன் பொண்டாட்டி, உனக்கு அம்மா முறை. இதோ, ரூமுக்கு வரும்போது பாதி வழியில நம்மக்கூட ஜாயின் பண்ணிக்கிட்டாளே? இவ கீர்த்தி, விக்ரமனோட பெரிய அண்ணி. அவ ஸ்ருதி, விக்ரமனோட சின்ன அண்ணி. இவங்க ரெண்டுபேரும் உனக்கு அக்கா முறைடா. எங்களைப் பார்த்து நீ பயப்படத் தேவையில்ல. சரியா? சீக்கிரம் குளிச்சிட்டு வெளிய வா. நாங்க உனக்காகக் காத்திருக்கோம்." என்றபடியே கதவை சாற்றிவிட்டு வெளியே அவளுக்குக் காத்திருக்கலானார் ராதா.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அதிக நேரம் எடுக்காமல் சீக்கிரமே குளித்து முடித்து வெளியே வந்த அதிதிக்கு ராதாவும், கீர்த்தியும் இணைந்து புடவை கட்டிவிடத் தொடங்கினர். அவளின் பால் வண்ண மேனியை வயிற்றெரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.


குளிரூட்டப்பட்ட அறையில் நின்றிருந்தும் அதிதிக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியது.


புடவை கட்டும் போது அவள் கையில், "இந்த முந்தானை மடிப்பைப் பிடி அதிதி" என்று கீர்த்தி கொடுத்த போதுக் கூட, கை நடுக்கத்தால் இரண்டு முறை அதனைத் தவறவிட்டாள் அதிதி.


எப்படி தான் அளவு கிடைத்ததோ தெரியாது. ஆனால், இன்றைய நவயுக காலத்திற்கேற்ப தைக்கப்பட்ட அந்த ரவிக்கையானது, அதிதியின் உடல்வாகிற்கு கட்சிதமாகப் பொருந்தியிருந்தது. பொன்னிற ரவிக்கையின் மினுமினுப்பில் அவள் தேகம் கூடக்கொஞ்சம் மெருகேறியது என்றுகூட சொல்லலாம். புடவை கட்டையும் பின்னல் அலங்காரங்களையும் முடித்தப் பின், மல்லிகைப்பூ சரங்களை அவள் தோளின் இரு புறமும் வழிய விட்டாள் கீர்த்தி.


ஒரே வடிவமைப்பில் அமையப்பெற்ற கம்மல், நெற்றிச்சூட்டி, அட்டிகை, ஆரம், ஒட்டியாணம் என அனைத்தும் அதிதிக்காகவேப் படைக்கப்பட்டது போல் அவளை அடைந்ததும் கர்வப் புன்னகை சிந்தின.


அதிதியின் கருவண்டு விழிகளுக்கு நிரம்ப காஜலிட்டு, சீரான வளைந்த புருவங்களை இன்னும் வளைத்து பென்சில் போட்டு விட்ட கீர்த்தி, உதட்டுச் சாயத்தை கையிலெடுத்த போதோ, யாருக்கு வந்த விருந்தோ? என ஓரமாக அமர்ந்து அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் விக்ரமனின் சின்ன அண்ணி ஸ்ருதி.


தன் அறையிலிருந்த விக்ரமனுக்கு திடீரென எங்கிருந்தோ புது வேஷ்டி சட்டை வந்து சேர, அதனை அணிந்து கொண்டு புது மாப்பிள்ளையாக கதவைத் திறந்து வெளியே வந்தான்.


அப்போது எதேர்ச்சையாய் அவனை சந்திக்க நேரிட்ட நாச்சியம்மை அசந்துப்போய், "ராசா மாதிரி இருக்க கண்ணா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு." என்று அவன் முகத்தை வழித்து நெட்டிமுறித்தார்.


பின் தயங்கியபடியே, "வந்ததும் வராததுமா நாச்சூம்மா இப்படி பண்ணிப்போட்டாளேனு என் மேல உனக்கு கோபம் எதுவும் இல்லையே?" எனவும்,


'இல்லை' என புன்சிரிப்புடன் தலையாட்டியவன் பின், முகத்தை தீவிரமாக்கி ஆனால் என ஆரம்பித்தான்.


அந்த ஆனாலில் அவன் என்ன சொல்லப் போகிறானோ? என பீதியில் இமைச் சிமிட்டாமல் அவனையேப் பார்த்திருந்தார் நாச்சியம்மை.


"ஆனா, இந்த கௌதமன் பயலைத் தான் நீங்க கல்யாணப் பந்தத்துல மாட்டி விடப் போறீங்கனு நினைச்சேன் நாச்சூம்மா. பார்த்தா கடைசில என்னை மாட்டிவிட்டுட்டீங்க" என அவரின் இரு கன்னங்களையும் பிடித்து ஆட்டினான்.


பெருமூச்சு விட்ட நாச்சியம்மை, "சரி விக்ரமா, முகூர்த்தத்துக்கு நேரமாகிடுச்சினு இப்போ தான் ஐயர் போன் பண்ணினார். நீ நம்ம பத்ரகாளியம்மன் கோவிலுக்கு போயிடு என்ன? நான் எல்லாரையும் அழைச்சிட்டு கண்ணனோட கார்ல அங்க வந்திடுறேன்." எனவும் சரியென்று தலையாட்டிவன் புறப்பட ஆயத்தமாகவும்,


அவன் நாடியைப் பிடித்தவர், "நான் எது செஞ்சாலும் நம்ம குடும்பத்தோட நல்லதுக்குத் தான் செய்வேனு நீ என்னை நம்புறியா விக்ரமா?" எனவும்,


"நான் என் நாச்சூம்மாவை நூறு சதவீதம் நம்புறேன்." எனக்கூறி அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினான் விக்ரமன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
பின், அவர் வாத்சல்யத்துடன் பார்த்திருக்க கோவில் நோக்கிப் புறப்பட்டான்.


வெண் பட்டுடுத்தி, அதற்கென வடிவமைக்கப்பட்ட நகைகளுடன் வானத்து தேவதை மண்ணில் குதித்தது போல் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்த அதிதிக்கு, விக்ரமனின் அத்தை ராதா கண்மையால் திருஷ்டிப் பொட்டு வைக்கப் போக, திடுமென உள்ளே பிரவேசித்தார் நாச்சியம்மை.


வந்தவர் அதிதியைக் கண்டு ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், ராதாவின் கையிலிருந்த பொருளைக் கண்டு உச்சுக்கொட்டினார்.


"ப்ச்! இதெல்லாம் எதுக்கு? நல்லா ஜவுளிக்கடை பொம்மை மாதிரி தானே இருக்கா இவ? இப்படியே வெளியக் கூட்டிட்டு வா." என்று கடுகடுத்தார்.


அனைவரும் கோவிலை நெருங்கியதும் கீர்த்தி அதிதியைக் கொண்டு போய் ஏற்கனவே மணவறையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை நல்ல பிள்ளையாக கூறிக் கொண்டிருக்கும் விக்ரமனின் அருகில் சென்று அமர வைத்தாள்.


ஐயர் கொடுத்த மாலையை வாங்கி அவள் கழுத்தில் அணிவித்தான் விக்ரமன். ஐயர் கூறக்கேட்டு அவளும் அவன் கழுத்தில் மாலையை அணிவித்தாள்.


பிறகு, ஐயர் மந்திரங்களைக் கூறி திருமாங்கல்யத்தை நாச்சியம்மையிடம் கொடுக்க, அதை கையில் வாங்கியவர் மனதில் கடவுளை வேண்டிக்கொண்டு அதை விக்ரமனின் கையில் கொடுத்தார்.


"கெட்டிமேளம்! கெட்டிமேளம்!" என ஐயர் எழுப்பிய சத்தத்தில் நாதஸ்வர மேளச் சத்தம் எல்லாம் காதுகளைக் கிழிக்க, கையில் தாலியை வாங்கியவன் அவள் கழுத்தில் கட்டாமல் அவள் முகத்தையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


"ம்! தாலியைக் கட்டு விக்ரமா" என நாச்சியம்மை குரல் கொடுக்கவும், அதிதி நிமிர்ந்து அவன் முகம் கண்டாள்.


அவளைப் பார்த்துக் கண்ணடித்தவன் அவளின் சங்குக் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டான்.


அதிதி அதிர்ந்து பின், தலை குனிந்து கொண்டாள்.


நடந்த அனைத்தையும் கண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவ்விடம் விட்டு வெளியேறி விட்டான் கௌதமன்.


ஐயர் கூறக்கூற அனைத்து சடங்குகளையும் முடித்த விக்ரமன் இறுதியாக அவளுடைய காலில் சதங்கையுடன் கூடிய மெட்டி அணிவிக்க, அந்நொடியில் அவனின் தலையில் ஒரு துளி கண்ணீர் விழுந்தது.


நிமிர்ந்து அவள் முகம் கண்டவன் என்ன நினைத்தானோ அவளுடைய கரத்தினை இறுகப் பற்றிக் கொண்டான். பின், அவனுடைய பெரியம்மா நாச்சியம்மை காலில் விழுந்து ஆசி வாங்கினான்.


அப்போது, "என் நாச்சூம்மாவுக்கு இப்போ சந்தோசமா?" என்றவன் கேட்கவும்,


"ரொம்ப" எனக்கூறி அவன் நெற்றியில் முத்தமிட்டார் நாச்சியம்மை.


பின், அங்கிருந்த அவனுடைய மாமா ஹரி மற்றும் அத்தை ராதாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினான்.


அதிதியும் அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அனைத்து சடங்குகளும் நிறைவு பெற, அங்கேயே கல்யாண விருந்தும் ஆரம்பமானது. விக்ரமன் தான் உணவு உண்டு முடித்தப்பின், நாச்சியம்மையிடம் வீட்டிற்குச் செல்லலாமா? எனக்‌ கேட்க,


"இரு விக்ரமா, இனிமே தான் முக்கியமான சமாச்சாரம் ஒன்னு இருக்கு. ஒரு அரை மணி நேரம் மட்டும் பொறுத்துக்கோ. அப்புறம் கிளம்பிடலாம்." என்றவர், அவனை தன்னைவிட்டு சற்றுத் தள்ளி சென்று அமரச் சொன்னார்.


சாப்பிட்டு முடித்த அதிதி எங்கே செல்வதெனத் தெரியாமல் விழிக்க, அவளின் நிலையுணர்ந்து அருகில் வந்த ராதா, அவளின் கைப்பிடித்து விக்ரமனின் அருகில் போய் அமர வைத்தார்.


விக்ரமன் குனிந்து தன் போனைப் பார்த்துக் கொண்டிருக்க, அதிதி என்ன செய்வதென்று தெரியாமல் தன் மருதாணிக் கோலத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள்.


சாப்பிட்டு முடித்தவுடன் நாச்சியம்மையின் உறவினப் பெண்களில் சிலர், தங்கள் வீட்டில் அவர் பெண்ணெடுக்காத கோபத்தில் தங்கள் ஆதங்கத்தைக் கொட்ட, ஒருசேர அவரை நோக்கிப் படையெடுத்து வந்தனர்.


தன்னை நோக்கி வரும் கூட்டத்தை எதிர் கொள்ளும் வகையில், தண்ணீர் குடித்து தயாராக அமர்ந்திருந்தார் நாச்சியம்மை.


"நாச்சியம்மா, பொண்ணு பார்க்க லட்சணமாத் தான் இருக்கா. ஆனா பொண்ணோட சொந்தக்காரங்க யாரையுமே காணோமே?" என ஒருவர் கேட்கவும்,


மற்றொருவர், "நேத்து திடுதிப்புனு போன் பண்ணி உன் மூணாவது பையன் கௌதமனுக்கு நம்ம குலதெய்வம் கோவில்ல கல்யாணம்னு சொன்ன. முறைப்படி நேர்ல வந்து கூப்பிட முடியாததுக்கும் மன்னிப்பு கேட்ட. சரினு இங்க வந்துப் பார்த்தா நம்ம அலமேலு பையன் விக்ரமனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க. உனக்கு என்ன தான் ஆச்சு?" என குரலில் சுருதியை ஏற்றவும்,


"அதை ஏன் அண்ணி கேட்கறீங்க? இதோ சுத்திப் போட்டிருக்க சேர்ல எல்லாரும் உட்காருங்க. இந்தக் காதல் கண்றாவியால என் பொழப்பு சிரிப்பா சிரிச்சக் கதையைப் பத்தி சொல்றேன்." என சலித்துக்கொண்ட நாச்சியம்மை, வராத கண்ணீரை தன் முந்தியால் துடைத்துக் கொண்டார்.


"மூணு நாளைக்கு முன்னாடி நம்ம கௌதமன் பய என்கிட்ட வந்து, தான் ஒரு புள்ளைய லவ் பண்றதாவும், அவங்க காதல் விவகாரம் தெரிஞ்சு அந்தப் பொண்ணோட வீட்டுல அவளுக்கு வேற ஒருத்தனோட நிச்சய ஏற்பாடு பண்றதாவும் சொன்னான். கூடவே நான் கட்டுனா அவளைத் தான் கட்டுவேனு ஒத்தக்கால்ல நின்னான். நானும் நம்மப் புள்ள சந்தோசம் தான் முக்கியம்னு எல்லா ஏற்பாடும் செஞ்சேன். இதுல நேத்து சாயங்காலம் என்னாச்சினா, இந்த கௌதமன் பய திடீருனு என்கிட்ட வந்து விக்ரமன் தான் அந்தப் பொண்ண காதலிக்கிறான், நான் அவங்க காதலுக்குத் தூது தான் போனேனு சொல்றான். எங்க விக்ரமனுக்குத் தான் கல்யாண ஏற்பாடுனு தெரிஞ்சா அந்தப் புள்ளையோட வீட்டாளுக சுதாரிச்சிருவாங்கனு இப்படி என்கிட்ட பொய் சொல்லி நடிச்சிருக்கான். என்ன செய்ய சொல்றீங்க அண்ணி? நம்ம புள்ளைக சந்தோசம் தானே நமக்கு முக்கியம்?" என்றதும்,


"அது சரி நாச்சியம்மா, பொண்ணு யாரு?" என்றனர் விவரமாக.


"வேற யாரு அண்ணி? நம்ம பண்ணைபுரத்து சங்கரப்பாண்டியனோட பேத்தி தான்." என்றதும் வாயைப் பிளந்தது கூட்டம்.


"அடேங்கப்பா! அவரு பேத்தியா இது? அப்போ பொண்ணு பெரிய இடம் தான்னு சொல்லு?" எனத் தன் வயிற்றெச்சலை கொட்டிய ஒரு பெண்மணி, கூடவே, "ஆமா இந்தப் பொண்ணு சென்னையில இல்ல படிக்கிறதா கேள்விபட்டேன்? நம்ம விக்ரமனோ லண்டன்ல இருந்தான். எப்படி நாச்சியம்மா இவங்க ரெண்டு பேருக்கும் பழக்கமாச்சு?" எனத் தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டார்.


அதற்கு சாதூரியமாக விடையளித்தார் நாச்சியம்மை.


"அட! நீங்க வேற அண்ணி. செத்தவனை மட்டும் தான் பிழைக்க வைக்க முடியாது. மத்த எல்லாத்துக்கும் தான் மிஷின் கண்டுபிடிச்சு வச்சிருக்கானுங்களே. அது ஏதோ? ஆங்! பேசும் புக்காம். அதுல தான் ரெண்டும் பார்த்து பழகிருக்குதுங்க." எனவும்,


"அய்யோ! ஆமா, ஆமா, என் பேரன் கூட அது‌ கூடத்தான் தினமும் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான்" என மற்றொருவரும் அது தனக்குத் தெரியுமென பெருமை பீற்றிக் கொண்டார்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
"இந்தப்பொண்ணு நம்ம விக்ரமனுக்கு நாலு நாளைக்கு முன்னாடி போன் பண்ணி, 'நம்ம காதல் விஷயம் எங்க வீட்டுல இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சுப் போச்சு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நிச்சய ஏற்பாடெல்லாம் பண்றாங்க. உடனே வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க'னு ஓனு அழுதிருக்கு. வேற வழியில்லாம விக்ரமனும் கௌதமன் கூட கூட்டு சேர்ந்து இப்படியொரு திட்டம் போட்டு, கல்யாணத்தை நடத்தி முடிச்சிருக்கான். அதான் முறைப்படி எதையும் செய்ய முடியல. எல்லாரும் என்னை மன்னிச்சுக்கோங்க." எனவும்,


"ஓ! அப்படியா விஷயம். அதான் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாம ஓடி வந்துட்டோமேனு அந்தப் புள்ள மூஞ்சில கலையே இல்லையா?" என ஒருவர் தன் கண்டுபிடிப்பைக் கூறவும், அவரைக் கண்ணில் நன்றியுடன் பார்த்தார் நாச்சியம்மை.


கூட்டத்தில்‌ வயதானவர் ஒருவர், "இந்தக் காலத்துப் புள்ளைங்க அவசரப்பட்டு என்னென்னவோ பண்ணிடுதுங்க. என்னத்தையோ நல்லாயிருந்தா சரி தான். சரி, சின்னஞ்சிறுசுக அவசரப்பட்டு பண்ணிடுச்சிங்க. நீ ஏதும் மனசைப் போட்டு குழப்பிக்காத நாச்சியம்மா. எல்லாம் அந்த பத்ரகாளி பார்த்துக்கிடுவா என்ன?" என்று ஆறுதல் கூறிவிட்டு மணமக்களை நோக்கிச் சென்றார்.


இவ்வளவு நேரமும் தன் பெரியம்மா கூறிய கட்டுக் கதைகளையெல்லாம் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த விக்ரமன், அந்தக் கூட்டம் தன்னை நோக்கி வரவும் முகத்தை இயல்பாக்கி மரியாதைக்காய் எழுந்து நின்றான்.


அதிதியோ அவர்கள் பேசியதைக் கேட்டு கண்ணீர் உகுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.


அவளிடம் வந்தவர்கள், "கவலைப்படாதம்மா. உன் வீட்டுல இருக்கறவங்க சீக்கிரமே உங்கக்கிட்டப் பேசிடுவாங்க. பத்து மாசத்துல ஒரு சிங்கக்குட்டியோ புலிக்குட்டியோ பெத்துக் கொடுத்தா வேண்டாம்னா சொல்லிருவாங்க? நல்ல நாளும் அதுவுமா அழக்கூடாது என்ன?" எனத் தாங்களாகவே காரணம் கற்பித்து அவளை சமாதானப்படுத்தினர்.


பின், அவர்களை வாழ்த்தி அவர்கள் கையில் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை கொடுத்துவிட்டு, புறம் பேச கதைக் கிடைத்த நிம்மதியுடன் வீடு நோக்கிப் புறப்பட்டனர்.


நாச்சியம்மை அவர்கள் அனைவரையும் வழியனுப்பி வைத்து விட்டு, "ச்சே! கோவிலுக்குள்ளேயே என்னை பொய் சொல்ல வச்சிட்டாளுங்களே. இப்ப மட்டும் நான் பொய் சொல்லலைனா என்னை நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்பாளுங்க." என அவர்களை கழுவி ஊற்றினார்.


இறுதியில் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்த மணமக்களை, வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைத்து ஆரத்தி சுற்றினார் ராதா.


இவையனைத்தையும் வெறுப்புடன் தள்ளியிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. அவள் தன் தங்கையின் வாழ்வு பறிபோய் விட்டதாகவேக் கருதினாள்.


ராதாவின் சொல்படி தனது வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்த அதிதி, இனி தன் வாழ்நாள் முழுமைக்கும் இந்த வீடு தான் தனக்கு அடைக்கலம் என எண்ணி நிமிர்ந்துப் பார்த்தாள்.


எதிரில் அவளை முறைத்தபடி நின்றிருந்தார் நாச்சியம்மை.

தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
நாவல் பற்றிய கருத்துகளை பேஸ்புக்கிலும் இங்கேயும் பகிரலாம் குண்டுமல்லீஸ்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
873
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 3



அதிதியை ராதா பூஜையறைப் பக்கம் அழைத்துச் செல்ல, அங்கிருந்த கிருஷ்ணன் ராதை சிலையைக் கண்டு, மனமுருக வேண்டினாள் அதிதி.


இனி அவளுக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையெனும்படி மாடிப்படி ஏறிவிட்டான் விக்ரமப்பாண்டியன். அனைவரும் தங்களது அறைகளுக்குச் சென்றவுடன் மீன்தொட்டி மீனாய் தனித்து விடப்பட்டாள் அதிதி.


அதிதியின் நிலை கண்டு பரிதாபப்பட்டு அவளின் அருகில் வந்தார் ஜானகியம்மாள். அவர் அவ்வீட்டின் தலைமை வேலைக்காரர்.


அவர் அவளின் கையைத் தொட்டு, "வீட்டை உங்களுக்கு சுத்திக் காமிக்கிறேன் வாங்க பாப்பா." என தன்னுடன் அழைத்துச் சென்றார்.


அம்மாளிகையில் பூந்தோட்டம், ஒன்பது வார குழந்தை வடிவ நீச்சல் குளம், வாகன நிறுத்துமிடம் என அனைத்தும் தனித்தனியே சிறப்புற அமைக்கப்பட்டிருந்தது கண்டு புருவம் உயர்த்தினாள் அதிதி.


முல்லைப்பூ கொடிகள் படரவிடப்பட்டிருந்த வாயிற்கதவின் அருகில் நின்ற இரண்டு காவலர்களும் அவளைக் கண்டதும் சலாம் வைத்தனர். அனைத்தையும் சுற்றிக் காண்பித்த ஜானகியம்மாள் நைசாக நழுவப் பார்க்க, அவரின் கை பற்றியவள் ஊஞ்சலில் அமர வைக்க முயன்றாள்.


"வேண்டாம் பாப்பா. நீங்க உட்காருங்க. நான் கீழ உட்கார்ந்துக்கறேன்." என அவள் எவ்வளவோ வற்புறுத்தியும், அவள் காலருகிலேயே அமர்ந்துக் கொண்டார் ஜானகியம்மாள்.


கீழே அமர்ந்திருப்பவரைக் கண்டு வீட்டிலுள்ள மற்றவர்களைப் பற்றி கேட்கத் துவங்கினாள் அதிதி.


அவளை வாஞ்சையுடன் பார்த்தவர், "சொல்றேன் பாப்பா. கண்டிப்பா சொல்றேன். உங்கக் குடும்பத்தைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்காமலா? இந்த வீட்டுல இருக்கறவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்கப் பாப்பா. இங்க வேலைப் பார்க்கறவங்க வயித்தை ஒருநாள் கூட பட்டினிப் போட்டது கிடையாது. இந்த வீட்டுல என்னை ஜானும்மானு வாய் நிறைய கூப்பிடுற ஒரே ஆள் நம்ம விக்ரமன் தம்பி தான் பாப்பா. எதிர்த்தாப்புல போய் நின்னாலே என்னம்மா ஏதாவது உதவி தேவைப்படுதானு என் கண்ணைப் பார்த்தே கண்டுபிடிச்சிருவாரு. தங்கமான மனசும்மா தம்பிக்கு. மூணு வருஷத்துக்கு முன்னாடி தான் தம்பி ஏதோ தொழில் விஷயமா லண்டன் போனாரு. நேத்து என்னமோ திடுதிப்புன்னு திரும்பி வந்துட்டாரு. ஹால்ல ஒரு பெரிய போட்டோ போட்டு மாலை போட்டிருக்குல்ல? அந்தப் போட்டோவுல இருக்கிறது வேற யாருமில்ல, ஜெயகிருஷ்ணன் ஐயாவும் சீதாலெக்ஷ்மி அம்மாவும் தான். அவங்க தான் நம்ம விக்ரமன் தம்பியோட தாத்தா பாட்டி. அவங்களுக்கு மூணுப் பிள்ளைங்க. மூத்தவங்க நம்ம நாச்சியம்மை அம்மா. ரெண்டாவது நம்ம ஹரி ஐயா. மூணாவது நம்ம அலமேலு அம்மா. ஆங், அவங்க தான் உங்க மாமியாரும் கூட."


"என்னது மாமியாரா? அவங்க ஏன் இன்னைக்கு எங்கக் கல்யாணத்துக்கு வரல? ஒருவேளை இந்தக் கல்யாணத்துல அவங்களுக்கு விருப்பம் இல்லையோ?" - இடையில் புகுந்து தனக்குத் தோன்றிய சந்தேகத்தைக் கேட்டாள் அதிதி.


"ம்ஹீம், அவங்க இப்ப உயிரோட இல்ல பாப்பா. உங்க மாமனாரும் இப்ப உயிரோட இல்ல."


ஒரு கணம் திக்கென்றானது அதிதிக்கு.


"ஏன்? என்னாச்சு? எப்படி இறந்தாங்க?" எனக் காரணமறியும் நோக்கில் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்.


அதில் வானம் இருட்ட ஆரம்பித்ததைக் கூட அவள் கண்டு கொள்ளவில்லை.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom